வியாழன், அக்டோபர் 20, 2022

பொன்னியின் செல்வன்-1 (2022)

 


பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் குறித்து விமர்சனம் எழுதவேண்டும்!

எங்கே ஆரம்பிப்பது? எப்படி ஆரம்பிப்பது? இது ஒரு சாதாரண நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு சாதாரண திரைப்படம் எனில், எங்கேனும் எப்படியேனும் ஆரம்பிக்கலாம்! ஆனால், இது ஒரு சரித்திரத்தை சரீரமாக கொண்டு சரித்தரம் படைத்த நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட; சரித்திரம் படைக்கப்போகும் திரைப்படம்! எனவே, இத்திரைப்படத்தை விமர்சிக்கும் முன், என் விமர்சனத்தையே என்னுள் விமர்சித்து பார்த்துவிட்டே எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

பல ஜாம்பவான்கள் (குறிப்பாக எம்.ஜி.ஆர். மற்றும் கமல்ஹாசன்) இச்சரித்திர நாவலை திரைப்படமாக எடுக்க முயன்று முடியாமல் போயிருக்கிறது. அது தோல்வியல்ல! மாறாய், அந்நாவலின் கதையாழம் மற்றும் அதில் அமரர் கல்கி கையாண்ட உவமையும் விளக்கவுரைகளும் அத்தகையன! 1950-களின் ஆரம்பத்தில் எப்படி இப்படியோர் சரித்திர நாவலை எழுத முடிந்தது? அதற்கு அவர் எத்தனை வினைக்கெடல்களை மேற்கொண்டிருப்பார்? நாவலை படித்தோர்க்கும், நாவலை கேட்டறிந்தோர்க்கும் அப்படியே கடத்துவது என்பது அத்தனை எளிதல்ல!

ஆனால், இயக்குநர் மணிரத்னம் அதை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார் என நம்புகிறேன். முதலில், அவருக்கு என் மரியாதையும் பாராட்டுகளும். இங்கிருந்தே இதை ஆரம்பிக்க விரும்புகிறேன்.

நிறைகள்:

  • வந்தியத்தேவன் வல்லவரையன்: உண்மையில், இக்கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடிக்கிறார் என்பதை அறிந்து சுனங்கிப் போனேன். ஆனால், அவர் சிறப்பாக நம் கற்பனையில் இருக்கும் வந்தியத்தேவனை கிட்டத்திட்ட அதற்கு நிகராய் நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார். வந்தியத்தேவன் கதாபாத்திரம், ஒரு கதாபாத்திரக்கலவை! அதில் வீரம், கனிவு, இரக்ககுணம், பயமின்மை/பயம், காதல், வெகுளித்தனம், நகைச்சுவை போன்ற குணாதியசங்களுடன் கோழைத்தனம் கலந்த மூர்க்கமும் அடக்கம். நாவலை படித்து, கல்கியின் எழுத்தை அப்படியே உள்வாங்கியோர்க்கு இக்கதாபாத்திரத்தின் பரிமாணங்கள் மிகவும் பரிச்சயமாய் இருக்கும். அதை மிகச்சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்; வாழ்த்துகள் கார்த்தி.
  • ஆதித்த கரிகாலன்: விக்ரம் எனும் நடிப்பு யானையின் பசிக்கு சரியான தீனி இட்டிருப்பதாகவே சொல்ல வேண்டும். பின் என்ன? அந்த நடிப்பு யானை தீனியை துவம்சம் செய்திருக்காதா என்ன? கரிகாலனை நம் கண்முன்னே அப்படியே உலாவ விட்டிருக்கிறார் மனிதர். உடல்மொழியும் உச்சரிப்புமொழியும் அற்புதம். விக்ரம் எப்படி செய்திருப்பார் என்பதை இதைவிட விளக்கமாய் சொல்லவும் வேண்டுமோ?
  • அருள்மொழி வர்மன் எனும் பொன்னியின் செல்வன்: ஜெயம் ரவி, நல்ல தேர்வு. வந்தியத்தேவன்  உடனான வாற்போரில் அவரின் உடல் மொழி அபாரம். முகபாவனைகளில் இன்னும் தேர்ச்சி தேவை. எனினும், முதல் பாகத்தில் அவருக்கு அதிகம் பாத்திரப்படைப்பு இல்லை; இரண்டாம் பாகத்தில் அது முழுமை அடையும் என நம்புகிறேன். 
  • ஆனால், அதுதான் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின் தனிச்சிறப்பு! "பொன்னியின் செல்வன்" என நாவலுக்கு தலைப்பு இட்டிருந்தாலும், தனியொரு கதாபாத்திர துதி என்பது அறவே இல்லை. ஏனெனில், இது ஒரேயொரு அரசனின் ஒரேயொரு கதையல்ல! ஒட்டுமொத்த ஒரு அரச வம்சத்தின் கதை; இங்கே அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. இப்படைப்பில்; வீரநாராயண ஏரியில் ஆரம்பித்து, முதலை தொடர்ந்து, இலங்கை கடல் கடந்து, தஞ்சை கோட்டையில் இருக்கும் மரத்தின் உயரம் அளந்து, சேந்தன் அமுதனின் குதிரை வரை இதில் வரும் அஃறிணைகள் கூட உயர்திணை பாத்திரப் படைப்புகளே. பார்ப்போம், பொன்னியின் செல்வன் அடுத்த பாகத்தில் என்ன செய்கிறார் என!
  • குந்தவை, நந்தினி, சுந்தரசோழர், வானமா தேவி, செம்பியன் மாதேவி, கந்தமாறன், மந்திரவாதியாக வரும் இரவிதாசன், ஊமை இராணி, சேந்தன் அமுதன், பார்த்திபேந்திரன், ஆபத்துதவிகள், மதுராந்தகத் தேவர் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்பகள் நன்று. "அநிருத்தப் பிரம்மராயர்" என்ற பாத்திரப் படைப்பு - எல்லா பாத்திரப் படைப்புகளுக்கும் உச்சத்தில் இருப்பது. அவரறியாமல் எதுவும் நடக்காது என்பதை கல்கி பல இடங்களில் விவரித்து இருப்பார். அப்படியொரு அமைச்சகத்தை மிகச்சிறப்பாய் நடத்தி; நாவல் நெடுகிலும் பயனித்த ஒரு கதாபாத்திரத்தைப் போகிற போக்கில் காண்பித்து கடந்து இருப்பது மிகப்பெரிய வியப்பு! அவ்வியப்பு இன்னமும் அகலவில்லை! மேலும், அநிருத்த பிரம்மாராயருக்கான நடிகர் தேர்வு எப்படி இருந்திருக்க வேண்டும்? அவரின் கம்பீரத்தில் கொஞ்சமாவது திரையில் கடத்தி இருக்கவேண்டும் அல்லவா?
  • இவர்களுள், மிகக்குறிப்பாய் மிகக்கச்சிதமாய் அமைந்திருப்பது ஆழ்வார்க்கடியான் நம்பியின் பாத்திரம் தான். நகைச்சுவை கலந்த பாத்திரம்; ஜெயராம் எனும் நடிகனின் கோட்டை! பிரம்மாதப் படுத்தி இருக்கிறார். உண்மையில் அனைத்து கதாபாத்திரங்களுள் - ஆழ்வார்க்கடியான் நம்பிதான் நம் கற்பனைக்கு உண்மையான வடிவம் கொடுத்திருக்கிறார் என தோன்றுகிறது.
  • பின்னணி இசை: பொதுவாய், பின்னணி இசை மிகச் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாய் போர்க்களங்களில் போர்க்கருவிகள் எழுப்பும் ஓசைகள். IMAX போன்ற திரையரங்கில் பார்க்கும்போது, நாமே போர்க்களத்தின் நடுவில் இருப்பது போல் இதை கூடுதலாய் அனுபவிக்கலாம். அதற்காகவே, காத்திருந்து வேளச்சேரியில் இருக்கும் IMAX-இல் முன்பதிவு செய்து நேற்றிரவு பார்தேன் (நேற்று தான் இறுதி நாள் என்பதை இன்றறிந்து அதிசயித்தேன்; இன்னும் பலருக்கும் இவ்வனுபவம் கிடைத்திருக்கலாம்!). ஆந்தயின் குரல், அரண்மனை மணிகளின் ஒலி மற்றும் அனைத்து ஓசைகளிலும் - A true Immersive Experience! வாய்ப்பிருப்போர் அதுபோன்றதோர் திரையில் திரையரங்கில் காண்க!
குறைகள்:

என்னதான் எப்படித்தான் பாராட்டினாலும்; இதிலுள்ள குறைகளை சுட்டிக்காட்டுவது மிகவும் அவசியமாகிறது. ஒவ்வொரு குறையை சுட்டும் முன்னர் "சொல்லுதல் யார்க்கும் எளிய" என்னும் என் ஐயன் வள்ளுவப் பெருந்தகையின் வாழ்வு-நெறியியல் குறளை நினைவு கூர்ந்த பின்னரே சொல்கிறேன். என் நோக்கம் இதில் குறை காண்பதல்ல! இதை எப்படி மென்மேலும் செதுக்கி இருக்கலாம் எனும் உயர்நோக்கத்தில் தான் இவைகளை பட்டியலிடுகிறேன்.
  1. வீரநாரயாண ஏரி: "ஆடித்திருநாள்" எனும் தலைப்பில் நாவலின் முதல் அத்தியாயத்தை; அமரர் கல்கி ஆழ்ந்த ஆலோசனைக்கு பின்னரே ஆரம்பித்திருப்பார் என திடமாக நம்புகிறேன். வீரநாராயண ஏரி (வீராணத்து ஏரியென இப்போது அழைக்கப்படுகிறது) குறித்த விவரிப்பில்; எடுத்த எடுப்பிலேயே நம் கற்பனைக் குதிரைக்கு இலகான் பூட்டி பறக்க வைத்தது ஒரு கைதேர்ந்த திட்டம். அதை அப்படியே நம்முள் திரைப்படத்திலும் கடத்தி இருக்கவேண்டும். உண்மைதான்! எழுத்தை அப்படியே நம்முள் கடத்துவது "சொல்லுதல் யார்க்கும் எளிய" போன்றது தான். ஆனால், அதை ஒரு பின்னணி குரல் மூலமோ அல்லது இருவரின் உரையாடல் மூலமோ செய்திருக்க வேண்டும். வீரநாராயண ஏரியின் பிரம்மாண்டத்தை நம்முள் கடத்தி இருக்கவேண்டும். இது தான் தலையாய குறை.
  2. மேலும், இந்த ஏரியில் இருந்து அவர் ஆரம்பித்ததன் பின்னணியில் இப்படைப்பில் எந்தவொரு கதாபாத்திரமும் உயர்ந்ததும் இல்லை/தாழ்ந்ததும் இல்லை என்பதை உணர்த்தவே என திடமாக நம்புகிறேன். ஏரியை அப்படியே விவரிக்காதது மிகப்பெரிய பிழை. சம்பந்தமே இல்லாமல், படத்தை ஒரு போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனை முன்னிறுத்தி ஆரம்பித்தது பெரிய நெருடல். ஆதித்த கரிகாலனின் வீரமும் ஆண்மையும் யாவருமறிவர். ஆனால், இப்படைப்பு அதில் ஆரம்பித்து இருக்கக்கூடாது!
  3. வீரநாராயண ஏரியை தவறவிட்டது போலவே, பழுவேட்டரையர்களுக்கான நடிகர்கள் தேர்வும்; அப்பாத்திரங்களும் நம்முள் கடத்தப்படவில்லை! இதுபோன்றதோர் சரித்திரப் படைப்பில், ஒரு நடிகன் அல்லது நடிகையின் இயல்பு எந்த நிலையிலும் வெளிவரவே கூடாது! ஆனால், இவர்கள் இருவரும் தம் இயல்பை விட்டு வெளியே வந்து பாத்திரங்களுக்குள் ஐக்கியமாகாததால்; ஆதித்த கரிகாலனைப் போல் நம்முள் ஆதிக்கம் செலுத்தவில்லை; இது மிகப்பெரிய குறை. சதிசெய்யும் கும்பல் எனினும்; பழுவேட்டரையர்கள் இப்படைப்பின் மிகப்பெரிய பலம் - அது தவறவிடப்பட்டு இருக்கிறது. என்னதான் வந்தியத்தேவனை நம்முள் கடத்தினாலும், ஆங்காங்கே அந்த நடிகரின் இயல்பு வெளிப்படுவதும் இதுபோன்றோர் குறையே!
  4. இளையபிராட்டி எனும் குந்தவை: குந்தவை பிராட்டியின் அறிவும்/வீரமும்/அரசியல் சாணக்கியத்தனமும் சரியாக கடத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது. அழகுப் பதுமையாய் ஒரு "சாதாரண திரைப்படத்தில் வரும் நாயகி போல" இருப்பது மிகப்பெரிய வேதனை. குந்தவை பிராட்டியைப் பற்றி நாவல் நெடுகிலும் கல்கியின் வரிகளில் வார்த்த வர்ணனைகள் யாவும் இமாலய இலக்காய் போய்விட்டது போல் தோன்றுகிறது. "சொல்லுதல் யார்க்கும் எளிய" எனினும், இது மிகப்பெரிய குறை.
  5. நந்தினி: என்னதான் அழகில் குந்தவைக்கே பொறாமையை வரவைக்கும் பாத்திரப்படைப்பு எனினும், வெறும் அழகுக்காக மட்டுமே நந்தினியின் கதாபாத்திர தேர்வு நடந்திருப்பது போல் தோன்றுகிறது. பெயர் குறிப்பிட விரும்பவில்லை - ஆனால், நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த தமிழ் நன்கறிந்த ஒரு நடிகை இருக்கிறார். அவர் போன்றோர் இங்கே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும்! ஓரிடத்தில் நந்தினி உரைவாளை சுழற்றும் முறையை கல்கி விவரித்து இருப்பார். அதுதான், நந்தினியின் பலம்! மேலும், என்னதான் எதிர்மறை பாத்திரப் படைப்பு எனினும்; நந்தினி ஓர் வியப்புமலை. அம்மலையின் அடிவாரம் கூட நம்முள் கடத்தப்படாதது மனதை வருத்துகிறது.
  6. பூங்குழலி: குந்தவை, நந்தினி, வானதி - இப்படி எந்த பெண்பால் பாத்திரத்திற்கும் சற்றும் குறைவில்லாதது, பூங்குழலியின் பாத்திரப் படைப்பு. ஏன், வீரம்/அறிவு/ஆற்றல்/அழகு இவற்றில் அவர்களை விட சற்று அதீதமானவள் கூட. அப்படிப்பட்ட ஓர் பாத்திரப் படைப்பை, பத்தோடு பதினொன்றாக போகிறப் போக்கில் காண்பித்து இருப்பது நெருடல். அடுத்த பாகத்தில், பூங்குழலியின் கதாபாத்திரம் இன்னும் மற்ற பாத்திரங்களுடன் நெருங்கி இருக்கும் என்பது தெரியும். ஆனால், எடுத்த எடுப்பில் பூங்குழலி யாரென நாவலில் இருப்பது "பூங்குழலியின் நங்கூரம் இடும் திறம் போல்" அப்படியே கடத்தி இருக்கவேண்டாமா? இப்படி பூங்குழலியின் கதாபாத்திரத்தை அடிக்கோடிட்டு காட்ட என்னை தூண்டியது, என் தங்கை ஒருத்தி; பூங்குழலியை உள்வாங்கிய விதத்தை என்னுள் விதைத்தது தான். நன்றி தங்கையே!
  7. அருள்மொழியின் யானை ஓட்டும் திறன்: தஞ்சை நோக்கி விரையும் போது, அருள்மொழி யானையின் காதில் அம்மந்திரத்தை சொன்ன பின்; யானை ஓடிய விதத்தை கல்கி விவரித்தது இன்னும் மனதின் ஆழத்தில்! யானையின் ஓட்டதிறன் பற்றி அவரின் விளக்கம், அப்பப்பா....! நாவலில் யானை எழுப்பிய புழுதியில் கிளம்பிய காற்றுதூசியில் அகன்ற திரை இன்னும் கூட என் மனக்கண்ணை மறைக்கிறது என்றால் மிகையல்ல! அதுபோலவே, யானைப்பாகன் வேடத்தில் அருள்மொழியைப் பார்த்தால்; வினைக்கெட்டு மாறுவேடம் செய்ததாகவே தெரியவில்லை. இரண்டாம் பாகத்தில், தஞ்சை அரண்மனையில் நுழையும் போதும் இதுபோன்ற மாறுவேடம் ஏற்பார்; அதுவாவது, சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். 
  8. பூங்குழலி-வந்தியத்தேவன் அறிமுகம்: இவர்களின் அறிமுக நிகழ்வுகள், நாவலுக்குள் ஒளிந்திருக்கும் இன்னுமோர் அழகிய உள்நாவல்! இந்த அழகியல் முற்றிலுமாக சிதைக்கப்பட்டு இருக்கிறது! வந்தியத்தேவனின் அசட்டுத்தனமான செய்கைகள், மற்ற காட்சிகளில் விட, இந்த அறிமுகத்தில் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கும். திடீரென நடுக்கடலில் அவர்களை எடுத்த எடுப்பில் காட்டுவது மிகப்பெரிய நெருடல்! இதுபோன்ற அழகியல்கள் தான் - எல்லா பாத்திரங்களையும் கடந்து - பொன்னியின் செல்வனின் சிறப்பு. அதுபோலவே, சேந்தன் அமுதன்-வந்தியத்தேவன் அறிமுகப்படலம்! அது இன்னுமோர் அழகியல் - அதுவும் போகிறப்போக்கில் காட்டப்பட்டிருக்கிறது. இவற்றை எல்லாம் சொன்னால், இன்னுமோர் பாகம் தேவை எனும் சிரமம் எனக்கும் புரிகிறது! ஆனால், அந்த சிரமங்களை எல்லாம் மேற்கொண்டு அதை செய்யத்தான் வேண்டும். ஏனெனில், அதுதான் பொன்னியின் செல்வன் எனும் சரித்திரம்!
  9. ஊமை இராணி, இலங்கை வீதியில் பொன்னியின் செல்வனைக் காப்பாற்றுவதும் ஓர் அழகியல்; அதை காட்சிப்படுத்தவே இல்லை. ஊமை இராணியின் பாத்திரப்படைப்பு நாவலில் இருப்பது போலவே நம்முள் நங்கூரம் இட்டிருக்கவேண்டும். குறிப்பாய், குகையில் காண்பிக்கப்படும் ஓவியங்கள் நம்மை சலசலக்க வைக்கவே இல்லை! இதற்கு முக்கிய காரணம், ஊமை இராணியின் பாத்திரப்படைப்பு நம்முள் சரியாக கடத்தப்படாததே!
  10. என்னதான், வால்நட்சத்திரம் குறித்த பின்னணியை திரு. கமலின் குரல் மூலம் ஆரம்பத்தில் அற்புதமாய் சொல்லி இருந்தாலும் "குடந்தை சோதிடர்" அத்தியாயம் நிச்சயமாய் சொல்லப்பட்டு இருக்கவேண்டும். அப்போது தான், வானதி மற்றும் குந்தவையின் நெருங்கிய உறவும்/நட்பும் சரியாக சொல்லப்பட்டு இருக்கும். அவர்களின் உறவை வலுவாய் சொல்வது அடுத்த பாகத்தின் காட்சிகளுக்கு மிகவும் முக்கியம்! அதைச் செய்திருப்பின், குந்தவை-வந்தியத்தேவன் முதல் சந்திப்பும் சரியாக சொல்லப்பட்டு இருக்கும். அற்புதமான வர்ணனைகள் அந்த அறிமுக காட்சியில் இருக்கும்! மேலும், "குடந்தை சோதிடர்" அத்தியாயத்தின் முன்னும் பின்னும் நிறைய அழகிய கதைகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் விடுத்தது; என்னவோ சோழ வீரவரலாற்றை மட்டுமே சொல்லவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது!
  11. ஆனால், இவற்றிற்கெல்லாம் பின்வருவது காரணமாய் இருக்குமோ என்ற என் புரிதலை மட்டும் சுட்டிக்காட்டி முடிக்க எண்ணுகிறேன். பொன்னியின் செல்வன் எனும் நாவல் முழுக்க முழுக்க வந்தியத்தேவன் வல்லவரையன் எனும் செய்திசொல்பவன் போன்ற ஒரு கதாபாத்திரத்தின் மூலம் சொல்லப்பட்ட ஒரு சரித்திர நாவல். அதைச் செய்யாமல் பாத்திரங்களை நேரடியாக சொல்ல எத்தனித்து இருப்பதும்; பாத்திரங்களை உடனடியாய் நம்முள் கடத்தவேண்டும் என்ற அவசரமும் இவற்றிற்கெல்லாம் காரணம் என நினைக்கத் தோன்றுகிறது. மேலும், வந்தியத்தேவனை ஒரு பெண் வாசகி உள்வாங்கும் விதமும்; ஒரு ஆண் வாசகி உள்வாங்கும் விதமும் வேறு மாதிரியாக இருக்கும். கரிகாலன், அருள்மொழி, பூங்குழலி, குந்தவை, நந்தினி போன்ற மற்ற பாத்திரங்களுக்கும் இது பொருந்தும். இருபாலினத்தினரின் கற்பனைகளை காட்சிப்படுத்துவதில் உள்ள சிரமம் எனக்கு தெரிந்தாலும்; மேற்சொன்ன குறைகள் எல்லாம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு, நாவலில் நேரடியாய் விளக்கப்பட்டு இருப்பவை! அவற்றை அப்படியே காட்சிப்படுத்தி இருக்கலாம் என்பதே என் கூற்று.
இதுபோல், இன்னும் பல சின்னஞ்சிறு அழகியல்கள் கடத்தப்படவில்லை. கொல்லிவாய் பிசாசு கற்பனை, அதற்கு கந்தக அமிலத்தை வைத்து கல்கி சொன்ன விளக்கம் போல் பல விடயங்களைக் குறிப்பிட தோன்றினாலும்; குறைகளைப் பகிர்வது என் எண்ணமில்லை என்பதால் - இத்துடன் கடக்கிறேன்.

நாவலை முன்னரே படித்துவிட்டு படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு:
  • யோவ்... நம்புங்கய்யா! நீங்க மட்டும் இல்லை, எங்களைப் போல் பலரும் நாவலைப் படித்துவிட்டுதான் படம் பார்க்க வந்திருக்கிறோம். என்னமோ நேத்திக்கு ரிலீஸான நாவலை நீங்க மட்டும் வாங்கிப் படிச்சுட்டு; இன்னைக்கு ரிலீஸான படத்தை பார்க்க வந்தவங்க போல இப்படி பேசி பேசி; ஆராய்ச்சி செஞ்சு எங்களை ஏன்யா கொல்லுறீங்க! அடுத்தவங்க செளகரியம் பத்தியும் கொஞ்சம் யோசிங்கய்யா! உங்க பேச்ச கேக்கவாய்யா நாங்க படம் பார்க்க வர்றோம்?! உங்க ஆர்வக்கோளாரு எங்களுக்குப் புரிகிறது. ஆனால், அதை உங்க காதுகளுக்கும் கேக்கற மாதிரி பாத்துக்கோங்க!
  • என் பக்கத்தில் ரெண்டு பேரு போட்டு படுத்தி எடுத்துட்டாய்ங்க! தொனதொனக்காதிங்கன்னு சொல்லிடலாமான்னு யோசிச்சேன், அதைக் கேட்டு இன்னும் நெறைய பேசினா என்ன பன்றதுன்னு யோசிச்சு சும்மா விட்டுட்டேன். நம்ம மொத்த நிம்மதியும் போயிடுமே!?
  • இதுல, உள்ள நுழையும் போதே பெரிய தட்டு முழுக்க நொறுக்குத்தீனிகள்! போதாதுன்னு, இடைவேளையில் இன்னுமொரு பெரிய தட்டு! வாய்க்கு இத்தனை வேலை கொடுக்கவாய்யா தியேட்டருக்கு வர்றீங்க! உங்களை...
  • எல்லாத்துக்கும் மேல, இதையெல்லாம் செய்ய இவ்வளோ செலவு செஞ்சு IMAX-க்கு வந்து எங்களை ஏன்யா சோதிக்கிறீங்க? நீங்க வாங்கலைன்னா; வேற யாராவது அமைதியா படம் பார்க்கவறங்களுக்கு டிக்கெட் கிடைச்சிருக்குமேய்யா!
  • கூடுவாஞ்சேரியில் ஒரு தியேட்டர் இருக்கு! தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும்; இடைவேளை தவிர மத்த நேரத்துல எந்த ஸ்னாக்ஸும் விக்கமாட்டாங்க! இந்த மல்ட்டிஃபிளக்ஸ் தியேட்டர்லயும் அப்படியொரு ரூல்ஸ் போட்டா என்ன? 
  • என்னங்க... சரியா கேக்கலை என்ன சொல்றீங்க...? ஓஹோ... அப்படி ரூல்ஸ் போட்டா யாரும் மல்ட்டிஃபிளக்ஸ் தியேட்டருக்கு வர்றமாட்டங்கன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான்! இப்போ நாம "டிஸ்ட்டபர்ஸா பாத்து திருந்தாவிட்டால்... டிஸ்ட்டபர்ன்ஸை ஒழிக்க முடியாதுன்னு" அழுதுசிரிச்சுக்கிட்டே பாட வேண்டியது தான் போல்! திருந்துங்கய்யா...!!!
எதெப்படியோ... 
எல்லா குறைகளையும்; எல்லா டிஸ்ட்டபர்ன்ஸையும் தாண்டி...
பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தைப் பார்ப்பது...
நம் ஒவ்வொருவரின் கடமை!
எப்படியாயினும்...
இதுவோர் நல்ல அனுபவம்!!

வெள்ளி, ஜனவரி 14, 2022

கார்பன் (2022)



2022-ஆம் ஆண்டு தமிழர் திருநாளை முன்னிட்டு நேற்று (13.01.2022) வெளியாகி இருக்கும் வெளியாகி இருக்கும் தமிழ் திரைப்படம் "கார்பன்". அண்ணாதுரை படத்தை இயக்கிய சீனுவாசனின் இரண்டாவது திரைப்படம். இதுதான், நான் முதல் நாள் முதல் காட்சி (FDFS) பார்த்த முதல் திரைப்படம். மேலுள்ள 3 புகைப்படங்களில் இடது பக்கம் உள்ளது, படம் பார்த்து முடித்த பின் திரையரங்கின் வெளியே எடுத்தது. முதல் FDFS நல்லதொரு அனுபவமாய் இருந்தது கூடுதல் மகிழ்ச்சி. என் மகிழ்ச்சி உங்களையும் சேரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில், என் பார்வையை கீழே பதிந்திருக்கிறேன்.
  • படத்தின் உயிர்நாடியும் சிறப்பம்சமும், படத்தின் திரைக்கதை தான்! ஒரு படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணிகளில், முதன்மையானது திரைக்கதை. அது, இந்த திரைப்படத்தில் மிகச் சிறப்பாய் அமைந்திருக்கிறது. இயக்குநர் சீனுவாசனுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
  • பொதுவாக, நகைச்சுவைக்கென்று தனிப்பகுதி இல்லாமல்/நகைச்சுவை நடிகர்கள் எவரும் இல்லாமல்; கதையின் மூலமே நகைச்சுவை காட்சிகளைப் புகுத்துவதென்பது மிக சவாலான செயல்! இயக்குநர் சீனுவாசனுக்கு அது கைவந்த கலையாதலால், ஆங்காங்கே நல்ல நகைச்சுவை காட்சிகள் இருக்கின்றன. தவறாமல் இரசித்து மகிழுங்கள்!
  • படத்தின் நாயகன் வித்தார்த்தின் திறமையில் நம் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. மிகவும் எதார்த்தமாய், மிகவும் எளிமையாய் நடித்து நம்மை மிக எளிதாய் கவர்ந்திருக்கிறார். இவர் போன்ற நடிகர்களுக்கு, மென்மேலும் அவர்களின் திறமைக்கேற்ற பல படங்கள் வாய்க்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.
  • படத்தின் நாயகி தான்யா; தமிழ் திரையுலகில், கதாநாயகியாக உயர்ந்திருக்கிறார். நல்ல திறமையான நடிகை, தமிழ் திரையுலகம் அவரை இனிமேல் நன்கு பயன்படுத்தும் என நம்புகிறேன்.   அவருக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
  • பொதுவாய், பல தமிழ் திரைப்படங்களில்; கதாநாயகியை பாட்டுக்கும், ஆட்டத்துக்கும் மட்டும் திரையில் காண்பிப்பதே வழக்கம். கதாநாயகி எனும் சொற்றொடருக்கு ஏற்ப; கதையின் நாயகியாய் அக்கதாபாத்திரத்தை நிலைநிறுத்தும் வண்ணம் திரைக்கதை அமைக்கப்படுவது மிகவும் அபூர்வம். அவ்வகையில், கார்பன் படம் கதாநாயகியை; உண்மையில் கதையின் நாயகியாய் காண்பித்திருப்பது பாராட்டுக்குரியது.
  • அம்மாவின் பெருமை பேசும் படங்கள் ஏராளமாய் இருக்கின்றன. சாதாரணமாய் சமையலறையில் சுடும் ஒரு தோசையின் மூலம் கூட, ஓர் அம்மாவின் பெருமையாய் எளிதாய்/உயர்வாய் சொல்லிவிட முடியும். ஒருவேளை, அப்படி எளிமையாய் சொல்லிவிட முடியாது என்பதால் தான்; அப்பாவின் பெருமை பேசும் படங்களின் குறைவோ? என எண்ண தோன்றுகிறது. இப்படம் அப்பாவின் பெருமையை பேசும்/உணர்த்தும் படம். திரையில், உறவுகளுக்கு உயிர் கொடுப்பது இயக்குநர் சீனுவாசனின் தனித்துவம் என்பதை அண்ணாதுரையிலேயே பார்தோம். இதில், இன்னுமொரு படி மேலே உயர்ந்து சென்றிருக்கிறார்.
  • அப்பா-மகன் உறவை மிகவும் எதார்த்தமாய் ஆனால் மிகவும் ஆழமாய் சொல்லி இருக்கும் திரைப்படம். அப்பாவாக திரு. மாரிமுத்துவும், மகனாக வித்தார்த்தும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். அவர்களுக்குள் இருக்கும் ஊடலைக் கூட கவித்துவமாய் சொல்லி இருப்பது  இயக்குநரின் சிறப்பு. ஓர் காட்சியில், வித்தார்த் அழுதுகொண்டே பேசுவார்; அழுதுகொண்டே பேசுவது அத்தனை எளிதல்ல! அப்படியே பேசினாலும், வார்த்தைகள் தெளிவின்றி இருக்கவேண்டும்; அழுகையும் இயல்பை மீறக்கூடாது. அதை மிகச்சிறப்பாய் செய்திருக்கிறார் வித்தார்த்; அவரின் நடிப்புத் திறனுக்கு இதுவொன்றே பெரிய சான்றாகும். திரு. மாரிமுத்து அப்பாவாக வாழ்ந்திருக்கிறார்.
  • படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் கொண்டிருக்கின்றன. ஒரு சிறு கதாபாத்திரம் கூட, கதையுடன் தொடர்பின்றி இருப்பதாய் தெரியவில்லை. அதனால் தான், திரைக்கதையும் அவ்வளவு நேர்த்தியாய் வந்திருக்கிறது. அனைத்து நடிகை நடிகையர்களுக்கும் என் வாழ்த்துகள்.
  • படத்தின் இடைவேளையில், படத்தில் நடித்திருந்த மூவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் திரையரங்கு வளாகத்தில் எடுத்தது தான், மேலிருப்பதில் வலது பக்கம் இருக்கும் புகைப்படம். அவர்களுடன் பேசியதில், அவர்களின் திறமையும்; சாதிக்க துடிக்கும் அவர்களின் துடிப்பும் புரிந்தது. அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
  • அப்பாவின் உயர்வை பேசும் பாடலில் "அட... அப்பாவின் வேர்வை தான் சோற்றிலே; தினம் உப்பாகும் எல்லோரின் வீட்டிலே" என்றோர் வரி வரும். படத்தில் வரும் அப்பா-மகன் உறவை அப்படியே உள்வாங்கி, இந்த ஒரே வரியில் வார்த்திருக்கிறார் பாடலாசிரியர் அருண் பாரதி. அவருக்கு என் அன்பு வாழ்த்துகள்.
  • இப்படிப்பட்ட ஓர் படத்திற்கு, சாம் CS இன் இசை ஒரு வரப்பிரசாதம். ஓர் இடத்தில் கூட எந்த பிசிரும் இல்லாமல், ஓர் இடத்தில் கூட கூடுதலோ/குறைவோ இல்லாமல்; படத்தின் இயல்புக்கு என்ன தேவையோ அதை மிகக் கச்சிதமாய் செய்திருக்கிறார். அவருக்கும் என் ஏழுசுவர வாழ்த்துகள்.
  • படத்தின் எடிட்டர் பிரவீன் KL கூடுதல் வரப்பிரசாதம். இதற்கு மேல், இதை எப்படி சுருக்கமுடியும் என வியக்கவைக்கும் வேலைப்பாடு. அவருக்கு என் வணக்கங்கள்.
  • இப்படத்தை மாநாடு திரைப்படத்தோடு சிலர் ஒப்பிடுகின்றனர்! ஒப்பீடு தவறில்லை; ஆனால், இரண்டும் ஒரே விதமானது என்பது தவறான புரிதல். மாநாடு திரைப்படத்தில் வருவது Time-Loop ஐ அடிப்படையாகக் கொண்டது. அதாவது, ஒரு குறிப்பிட்ட நாள் அல்லது தொடர் நிகழ்வு மீண்டும் மீண்டும் இயல்பாய் நடப்பது. அதில், எவருக்கேனும் இப்படியெல்லாம் நடக்குமா என சந்தேகம் கூட வரலாம். ஆனால், இதில் வருவது அதுவல்ல! இது ஒரு குறிப்பிட்ட நாள் அல்லது தொடர் நிகழ்வை மீண்டும் மீண்டும் தம் முயற்சியால் நிகழ வைப்பது. எனவே, இப்படியெல்லாம் நடக்குமா என சந்தேகம் வர வாய்ப்பில்லை. ஏன், நம்மில் பலரே சில விடயங்களை நாமே மீண்டும் மீண்டும் செய்து பார்த்திருப்போம் தானே?!
  • இப்படியொரு சிறப்பான படத்தை, தவறுதலாய்; மற்றொரு படத்தை போலுள்ளது என எளிதாய் விமர்சிப்பது ஏற்புடையதல்ல! எனவே, இதை சொல்லவேண்டியது என் கடமையாகிறது. 
இவ்வளவு உண்மையாய் விமர்சனம் செய்துவிட்டு, முக்கியமான சில உண்மைகளை சொல்லவில்லை எனில்; அது நேர்மையாகாது! எனவே, கீழுள்ள உண்மைகளை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்:
  • படத்தின் இயக்குநர் சீனுவாசன், தயாரிப்பாளர் ஆனந்தஜோதி முருகன் இருவரும் என் பள்ளி தோழர்கள். ஆனால், அவர்கள் என் தோழர்கள் என்பதால் என் விமர்சனத்தில் எந்த சமரசமும் இல்லை. எனவே, எந்த சந்தேகமும் இல்லாமல் இந்த விமர்சனத்தை நம்பி; திரையரங்கில் படத்தைப் பாருங்கள்.
  • தயாரிப்பாளர் ஆனந்தஜோதி தன் வாழ்நாள் சம்பாத்தியம் அனைத்தையும் இதில் முதலீடு செய்திருக்கிறார். மிகவும் தூய்மையான மனதுக்கு சொந்தக்காரர்; எவருக்கும் தீங்கு செய்ய கனவிலும் நினைக்காத நல்லுள்ளம் படைத்தவர். அவரின் சிறந்த குணத்துக்காகவே இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்பது எங்கள் அனைவரின் பிரார்த்தனை. எனவே, தயவுசெய்து இந்த திரைப்படத்தை திரையரங்கிலோ அல்லது விதிகளுக்குட்பட்ட கால இடைவெளி விட்டு OTT தளத்தில் வெளியாகும்போது அதிலோ பாருங்கள்.
  • இவர்களின் நண்பனாய் மட்டுமல்லாமல், கலைத்துறையில் ஆர்வம் இருக்கும் ஓர் நபராகவும் படத்திற்காக என்னுடைய சிறு பங்கீடும் இருக்கிறது. அதனால் தான், படத்தின் நன்றி நவிலலில் என் பெயரும் (இளங்கோவன் இளமுருகு, திருப்பாலப்பந்தல்) இடம் பெற்றிருக்கிறது. அதுதான், மேலுள்ள புகைப்படங்களில் நடுவில் இடம் பெற்றிருக்கிறது.
மீண்டும் சொல்கிறேன், என் நண்பர்கள் எடுத்த படம் என்பதால் என் விமர்சனத்தில் எந்த சமரசமும் இல்லை! வேண்டுமெனில், படம் பார்த்துவிட்டு வாருங்கள்; நாம் விவாதிப்போம். படத்தில் குறையே இல்லையா? எனில்; ஒரேயொரு (சிறிய)விடயத்தை குறையாய் கூறலாம். அது, படத்தின் முடிவை இன்னும் எதார்த்தமாய்/ஆழமாய் சொல்லி இருக்கலாம் என்பதே! இதுவும் கூட, ஆழ்ந்து யோசித்தால் மட்டுமே தோன்றும்.

படத்தை இரசித்து பார்த்துவிட்டு வாருங்கள்! விவாதிக்க காத்திருக்கிறேன்!!

சனி, நவம்பர் 09, 2019

என்னப்பனின் எண்பது (80)...


எண்பது” என்பது
எம்பலருக்கும் எட்டாதது!
எண்பதை” என்புஅதை
எச்சிதைவும் இன்றியே
எட்டியிருக்கும் என்னப்பனே!

ஒன்பது - நவம்பரின்று
"எண்பது" முடிந்தது
என்பது, எம்யார்க்கும்
எண்ணிலங்கா பெருமையே!
எண்ணிக்கை தொடரட்டும்!

எமைப்பெற்ற எம்மப்பனே
எஞ்சியிருக்கும் எந்நாளும்
எக்கவலையும் இன்றியே
எழுச்சியுடன் வாழ்வீர்!
எழுபிறப்பிலும் எம்மப்பனாவீர்!

ஞாயிறு, ஜூலை 28, 2019

இஃக்லூ (2019)

  • சிறப்பான படங்களின் பட்டியலில், இப்படம் இணைந்திருக்கிறது. துணைப் பாத்திரங்களில் வரும் ஒரிருவரைத் தவிர, மற்ற எவரையும் இதுவரை பார்த்ததில்லை! ஆனாலும், படம் மனதில் ஆழ பதிந்திருக்கிறது. கதையும்/திரைக்கதையும் "மட்டும்தான்" நிரந்தர நாயக/நாயகிகள் என்பதை - இப்படம் ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறது.
  • “இந்திய திரைப்பட வரலாற்றிலேயே, முதல் முறையாக...” போன்ற எந்த பிரம்மாண்டமும் இல்லை. இதுவரை “சொல்லாத கதை! சொல்லப்படாத திரைக்கதை!” என்ற எந்த அம்சமும் இல்லை. ஆனாலும், படம் மனதை முழுதாய் ஆட்கொள்கிறது. முக்கியமான எல்லா உறவுகளையும் இணைத்து சொல்லப்பட்டு இருக்கும் கதை. திரைக்கதை - ச்சும்மா பின்னி பெடல் எடுத்திருக்காங்க - என கலோக்கியலாய் சொல்வதே சிறந்தது.
  • உறவுகளையும் காட்சிகளையும் - மிக மிக இயல்பாய்/யதார்த்தமாய் - படைத்திருப்பது; திரையுலகம் மற்றும் பிற துறையில் இருக்கும் பலருக்கும் ஒரு படைப்பிலக்கணம்.
  • மெய்சிலிர்க்கும் சண்டை, கண்ணைக் கவரும் வெளிநாட்டுப் படப்பிடிப்பு, உலகத்தரம் வாய்ந்த கிராஃபிக்ஸ் - என எந்த பிரமாண்ட முயற்சியும் இல்லை! ஏன்... “காமெடி டிராக்” எனும் பெயரில் - இப்போதைய நகைச்சுவை மற்றும் கதாநாயகர்கள் செய்யும் காமெடிக் கொடுமை கூட இல்லை. ஆனாலும், அருமையான நகைச்சுவை காட்சிகள் இருக்கின்றன.
  • ஹீரோ என்றாலே - கதையின் பாத்திரப்படைப்பு எப்படி இருந்தாலும் - ஸ்டைலாய் ஆடை அணியவேண்டும் என்ற போலி-இலக்கணம் இல்லை. வெகு இயல்பாக, சட்டையை கால்சட்டைக்குள் திணித்து காட்சியளிக்கும் அழகிய/அடக்கமான கதையின் நாயகன்!
  • ஹீரோயின் என்றாலே - கதையின் பாத்திரப்படைப்பு எப்படி இருந்தாலும் - கவர்ச்சியாக உடல் அங்கங்களைக் காண்பித்தே ஆகவேண்டும் என்ற போலி-இலக்கணமும் இல்லை. வெகு இயல்பான உடையில், நம் உறவுக்குள் இருக்கும் ஏதேனும் ஒரு பெண்ணை நினைவூட்டும் கதையின் நாயகி!
  • "நாயகன்/நாயகி இருவருள் எவரின் பாத்திரப்படைப்பு சிறந்தது?" என ஒரு பட்டிமன்றமே நடத்தும் அளவுக்கு - இருவருக்கும் சமமான/சவாலான பாத்திரப் படைப்புகள்! இருவரின் நடிப்பும் அற்புதம் - தேர்ந்த நடிப்பு.
  • நாயகன்/நாயகி மட்டுமல்லாமல், படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் அருமை. ஒவ்வொருவரும் அவரவர் பாத்திரப்படைப்பை - இயல்பாய்/இனிமையாய் செய்திருப்பது படத்தின் மற்றொரு பலம்.
  • ஒரு பிரச்சனையை, இவ்வளவு ஆழமாய்; அடுக்கடுக்காய் தொடர்ந்து சொல்லி அதன் வீரியத்தை, எந்த செயற்கைத்தனமும் இல்லாமல்; நம்முள் இயல்பாய் கடத்துவது என்பது மிகப்பெரிய சவால்! என்னளவில், அவ்வாறு என்னை ஆட்கொண்டது என் மானசீக குரு எழுத்து சித்தர் பாலகுமாரன் மட்டுமே! அப்படியோர் திரைக்கதை. க்ளைமாக்ஸ் கூட - எவ்வித தேவையற்ற நீட்சியும்/சினிமாத்தனமும் இல்லாமல் - வெகு இயல்பாய் அமைந்து இருக்கிறது. 
  • இஃக்லூ - இதன் பொருள் என்ன? படம் முடிந்தவுடன், கூகுளில் தேடவேண்டும் என்ற எண்ணத்துடனேயே, படத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். உங்களுக்கு கூட அதன் பொருள் குறித்த ஆவல் எழக்கூடும். நமக்கு எந்த சிரமத்தையும் தராமல், அது மிகச் சுருக்கமாய்; ஆனால் மிக ஆழமாய் சொல்லப்பட்டு இருக்கிறது. அதைப் பார்த்ததும் - நிச்சயமாய் நீங்களும் “அடடா! என்னவொரு அற்புதமான படத்தலைப்பு?!” என உணர்வீர். படைப்பாளிகளே! உங்கள் கற்றலை "ஹீரோ அல்லது ஹீரோயின் கதாப்பாத்திரப் பெயரை வைப்பதைத் தவிர்த்து" படத்திற்கு தலைப்பை எப்படி இடுவது என்பதில் துவங்குவீராக!
  • கலர்ச்சட்டை முதல், பல அடையாளங்களுடன் “பெரிய ஹீரோக்கள்/பெரிய பட்ஜெட்" படங்களை முதல் காட்சியே பார்த்துவிட்டு விமர்சிக்கும் பிரபலமான விமர்சகர்கள் யாரும் இப்படத்தை விமர்சித்ததாய் தெரியவில்லை! அவர்கள் இப்படத்தை விமர்சித்தால், இது பலரையும் சென்றடையும். என்னளவில், விமர்சனக் கடமையென்பது ஒன்றுதான்: பிடிக்காத படத்தைப் பற்றி விமர்சனம் செய்து, எல்லோரின் நேரத்தையும் வீணடிக்கக் கூடாது; அதுபோல், என்னை ஆட்கொண்ட ஒரு படத்தை விமர்சிக்கத் தவறவே கூடாது!
  • என்னை அறிந்த சிலரையாவது, இந்த விமர்சனம் சேரவேண்டும்! அவர்கள் மூலம், பலரையும் அடைந்தால் மேலும் சிறப்பு. உங்களுக்கு கிடைக்கும் எந்த வாய்ப்பின் மூலமாவது - இப்படத்தை ஒருமுறை(யாவது) பாருங்கள்; வாழ்க்கையின் பல நிகழ்வுகளை பிரதிபலித்து நினைவூட்டும்.
இப்படம் - ஏதோவொரு விதத்தில்; நம் வாழ்க்கையை ஒத்திருக்கும்!!!

ஞாயிறு, மார்ச் 31, 2019

வாட்ஸ்ஆப் வாழ்க்கை...



“அவனுக்கென்ன? வெளிநாட்டு வாழ்க்கை!”
அப்படியென சொல்வோர்க்கு தெரியுமா,
வெளிநாட்டு வாழ்க்கையின் சிரமங்கள்?

இந்தியாவில் மட்டுமல்ல! இங்கேயும்
பணம் மரத்தில் காய்ப்பதில்லை!
பணத்திற்காக இரத்தமே காய்கிறது!

தோசையோ சோறோ, குடும்பத்துடன்
உண்பதே இன்பம்! பீட்ஸாவும்
பாஸ்த்தாவும் தனிமையில் கொடுமையே!

கேட்கமுடியா  சொல்லும்; மகிழ்வில்லா
வேலையும்; கேவலம் இப்பணத்திற்காக
அல்லவா, மனமுவந்து ஏற்கிறோம்?

இதையெல்லாம் தாண்டியேன் இங்கே
இருக்கிறோம் என்கிறீரா? இதுவோர்,
புலிவால் பிடித்த கதையே!

பிடித்த காரணத்தை விடவும்,
விடுக்கும் காரணம் முக்கியமானது!
விடுக்கும் வழிதெரியாது விழிக்கிறோம்!

பணமா வாழ்க்கை? இல்லையே!
பணத்துடன் குடும்பமும் இருப்பதுதானே
வாழ்க்கை? புலிவாலை விடமுடியாமல்;

வாட்ஸ்ஆப்பில் வாழ்கிறோம் இப்பாவிகள்!
குழந்தையுடன் கொஞ்சலும் பேச்சும்;
பொண்டாட்டியுடன் ஊடலும் சாடலும்;

பெற்றோரின் பாசமும் நேசமும்;
பிறந்தாரின் அன்பும் ஆதரவும்;
சுற்றத்தாரின் உறவும் நட்பும்;

எல்லாம் வாட்ஸ்ஆப் வாழ்க்கையே!
வாட்ஸ்ஆப் இல்லாத தருணமெல்லாம்;
வாழ்வை இழந்த தருணங்களே!

“அவனுக்கென்ன? வெளிநாட்டு வாழ்க்கை!”
அப்படியென அடுத்தமுறை சொல்லும்முன்,
இப்பதிவை நினைத்திடுங்கள் மனங்களே!

“அவனுக்கேன் இப்பரிதாப வாழ்க்கை?”
அப்படியென ஒருவர் பேசினாலும்,
அப்படி வாழ்வோர்க்கு அருமருந்தாகும்!

- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு 

செவ்வாய், டிசம்பர் 04, 2018

அதிகாரம் 122: கனவுநிலை உரைத்தல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 3 - காமம்இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்

1211.  காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
           யாதுசெய் வேன்கொல் விருந்து

           விழியப்பன் விளக்கம்: காதற்பிரிவால் வாடும் எனக்கு ஆறுதலாக, காதலரின் தூதுச் 
           செய்தியோடு வந்த நல் கனவுக்கு; நன்றி விருந்தாக, எதைச் செய்வேன்?
(அது போல்...)
           பேரிடரால் வாடும் எமக்கு உறுதியாக, மீள்வாழ்வின் ஆரம்ப உதவியோடு வந்த புது 
           தலைவருக்கு; உரிய கைம்மாறாக, எதைச் செய்வோம்?
      
1212.  கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
           உயலுண்மை சாற்றுவேன் மன்

           விழியப்பன் விளக்கம்: நான் இரந்ததும், துன்பத்தில் உழலும் கண்கள் உறங்குமாயின்; 
           கனவில் வரும் என்னில் கலந்தவர்க்கு, இறப்பின் விளிம்பில் இருக்கும் என் நிலையை 
           எடுத்துரைப்பேன்!
(அது போல்...)
           யாம் கேட்டதும், பதவியில் இருக்கும் ஆட்சியர் வருவாரெனின்; நேரில் வரும் எம்மை 
           ஆள்பவர்க்கு, பேரிடரின் பிடியில் வாழ்விழக்கும் எம் நிலையை எடுத்துரைப்போம்!
           
1213.  நனவினால் நல்கா தவரைக் கனவினால்
           காண்டலின் உண்டென் உயிர்

           விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், அன்பைப் பகிராத என்னவரை; கனவு வாழ்விலாவது 
           காண்பதால் தான், என் ஆன்மா இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதோ?
(அது போல்...)
           ஆட்சி காலத்தில், மக்களைக் காணாத அரசியலாரை; தேர்தல் நேரத்திலாவது காண்பதால் 
           தான், நம் வாழ்க்கை இன்னும் நம்பிக்கையுடன் தொடர்கிறதோ?

1214.  கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
           நல்காரை நாடித் தரற்கு

           விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில் அன்பைப் பகிராத காதலர், அளித்த காம உணர்வுகள்; 
           கனவு வாழ்வில் எழக் காரணம், அவரைத் தேடிப் புரிய வைத்திட தானோ?
(அது போல்...)
           நிகழ் ஆட்சியில் மக்களைக் காக்காத அரசியலார், தந்த நம்பிக்கைத் துளிகள்; பேரிடர் 
           காலத்தில் நினைவெழக் காரணம், அவர்களைப் பார்த்து எதிர்ப்பை தெரிவித்திட தானோ?

1215.  நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
           கண்ட பொழுதே இனிது

           விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், காதலரைக் கண்டதும் ஆங்கே அளித்தது போலவே; 
           கனவு வாழ்வு கூட, அவரைக் கண்ட நொடிப்பொழுதே இனிமை அளிக்கிறதே!
(அது போல்...)
           நாட்டிற்கு சென்று, குடும்பத்தைக் கண்டதும் உடனே எழுவது போலவே; வெளிநாட்டு 
           வாழ்வு கூட, அவர்களை நினைத்த அப்பொழுதே மகிழ்ச்சி எழுகிறதே!

1216.  நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
           காதலர் நீங்கலர் மன்

           விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வு என்பது, கனவு வாழ்விலிருந்து மாறுபட்டது 
           இல்லையெனில்; கனவில் என்னுள் கலந்து வாழும் என்னவர், என்னை விட்டு பிரியமாட்டார்!
(அது போல்...)
           நிகழ் ஆட்சி என்பது, தேர்தல் களத்திலிருந்து வேறுபட்டது இல்லையெனில்; தேர்தலில் 
           நம்மைக் கும்பிட்டுப் பணியும் அரசியலார், பேரிடரில் நம்மைக் கைவிடமாட்டார்கள்!

1217.  நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
           என்எம்மைப் பீழிப் பது

           விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், அன்பைப் பரிமாறாத கொடியவர்; என்ன 
           காரணத்தால், காணும் கனவிலும் என்னைத் தொடர்ந்து வருத்துகிறார்?
(அது போல்...)
           அரசியல் வாழ்வில், கடமையைச் செய்யாத அரசியலார்; என்ன ஆதாயத்தால், நிகழும் 
           பேரிடரிலும் எம்மைத் தொடர்ந்து வதைக்கின்றனர்?

1218.  துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
           நெஞ்சத்தர் ஆவர் விரைந்து

           விழியப்பன் விளக்கம்: உறங்கும் போது, கனவில் தோள்தழுவிப் படரும் என்னவர்; விழிக்கும் 
           போது, விரைவாக என்னை விலகி நெஞ்சினுள் வாழ்பவர் ஆகிறார்!
(அது போல்...)
           தேர்தலின் போது, தெருவில் கும்பிட்டுப் பணியும் அரசியலார்; ஆட்சியின் போது, புதிராக 
           மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவோர் ஆகின்றனர்!

1219.  நனவினால் நல்காரை நோவர் கனவினால்
           காதலர்க் காணா தவர்

           விழியப்பன் விளக்கம்: கனவு வாழவில் கூட, காதலர் கலந்திருப்பதை உணராதோர் தான்; 
           நடைமுறை வாழ்வில் அன்பைப் பரிமாறவில்லை என, காதலரை விமர்சிப்பர்!
(அது போல்...)
           தனிக் குடும்பத்தில் கூட, பெற்றோர் பயிற்றுவிப்பதை அறியாதோர் தான்; கூட்டுக் 
           குடும்பத்தில் பிள்ளைகளை வளர்க்கவில்லை என, பெற்றோரை விமர்சிப்பர்!

1220.  நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
           காணார்கொல் இவ்வூ ரவர்

           விழியப்பன் விளக்கம்: நடைமுறை வாழ்வில் எம்மை விட்டுப் பிரிந்தார், என தூற்றும் 
           இவ்வூரார்; அதே காதலர், கனவில் கலந்து அன்பைப் பரிமாறுவதைக் காண மாட்டாரோ?
(அது போல்...)
           கூட்டுக் குடும்பத்தில் எம்மை விட்டுப் பிரிந்தனர், என விமர்சிக்கும் சுற்றத்தார்; அதே 
           பிள்ளைகள், எங்களைப் பேணி உறவை வளர்ப்பதை அறிய மாட்டாரோ?

குறள் எண்: 1220 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1220}

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்

விழியப்பன் விளக்கம்: நடைமுறை வாழ்வில் எம்மை விட்டுப் பிரிந்தார், என தூற்றும் இவ்வூரார்; அதே காதலர், கனவில் கலந்து அன்பைப் பரிமாறுவதைக் காண மாட்டாரோ?
(அது போல்...)
கூட்டுக் குடும்பத்தில் எம்மை விட்டுப் பிரிந்தனர், என விமர்சிக்கும் சுற்றத்தார்; அதே பிள்ளைகள், எங்களைப் பேணி உறவை வளர்ப்பதை அறிய மாட்டாரோ?

திங்கள், டிசம்பர் 03, 2018

குறள் எண்: 1219 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1219}

நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்

விழியப்பன் விளக்கம்: கனவு வாழவில் கூட, காதலர் கலந்திருப்பதை உணராதோர் தான்; நடைமுறை வாழ்வில் அன்பைப் பரிமாறவில்லை என, காதலரை விமர்சிப்பர்!
(அது போல்...)
தனிக் குடும்பத்தில் கூட, பெற்றோர் பயிற்றுவிப்பதை அறியாதோர் தான்; கூட்டுக் குடும்பத்தில் பிள்ளைகளை வளர்க்கவில்லை என, பெற்றோரை விமர்சிப்பர்!

ஞாயிறு, டிசம்பர் 02, 2018

குறள் எண்: 1218 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1218}

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து

விழியப்பன் விளக்கம்: உறங்கும் போது, கனவில் தோள்தழுவிப் படரும் என்னவர்; விழிக்கும் போது, விரைவாக என்னை விலகி நெஞ்சினுள் வாழ்பவர் ஆகிறார்!
(அது போல்...)
தேர்தலின் போது, தெருவில் கும்பிட்டுப் பணியும் அரசியலார்; ஆட்சியின் போது, புதிராக மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவோர் ஆகின்றனர்!

சனி, டிசம்பர் 01, 2018

குறள் எண்: 1217 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1217}

நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது

விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், அன்பைப் பரிமாறாத கொடியவர்; என்ன காரணத்தால், காணும் கனவிலும் என்னைத் தொடர்ந்து வருத்துகிறார்?
(அது போல்...)
அரசியல் வாழ்வில், கடமையைச் செய்யாத அரசியலார்; என்ன ஆதாயத்தால், நிகழும் பேரிடரிலும் எம்மைத் தொடர்ந்து வதைக்கின்றனர்?