வெள்ளி, டிசம்பர் 23, 2011

கலையை எப்படி வளர்ப்பது?

             

("இத்தலையங்கத்தையும்"  எழுத தூண்டிய என் நண்பர்களுக்கு சமர்ப்பணம்)

*******

          இத்தலையங்கத்தின் கரு கிடைத்ததும், முந்தைய தலையங்கமான "தமிழை யார் வளர்ப்பது?" -ன் கரு கிடைத்த அன்று தான். மேலும், அந்த விவாதம் நடக்கும் முன்னரே இந்த விவாதம் நடந்தது! ஆனால், இதைப் பற்றி மிகத் தெளிவாய் எழுதவேண்டும் என்பதால் தான், சற்று காலம் கடந்து எழுதுகிறேன். அன்று, பேச்சுக்கிடையில் ஒரு தமிழ்த் திரைப்படத்தின் மூலம் வெளியுலகிற்கு நன்கு அடையாளம் காட்டப்பட்ட "போதி தர்மர்" பற்றிய என் ஆதங்கத்தை கூறினேன். நான் கூறியது, நாம் இப்படிப்பட்ட ஒரு மாமனிதனை எப்படி தெரிந்து கொள்ள தவறினோம் என்ற அடிப்படையில் பேசினேன். அவரைப் பற்றியான முழு சரித்திரமும் தெரியவில்லை என்றாலும், ஒரு செய்தியாய் கூட தெரிந்து கொள்ளமுடியாமல் போனது எங்கனம்? என்ற அடிப்படையில் என்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். நம்முடைய கலையை, நம் முன்னோர் ஒருவர் மூலம் தெரிந்துகொண்டு இன்று வேறு ஒரு நாடு தன்னுடையதாய் பறைசாற்றும் "அவல நிலை" எவ்வாறு உருவானது? அந்த கலையை ஏன் நம்மால் தொடர்ந்து பயிற்றுவிக்க முடியவில்லை??  என்ற கேள்விகளை எழுப்பினேன். அந்த கலை ஏன் நம் நாட்டில் பரவலாய் பரவவில்லை என்றும் கேள்வியை எழுப்பினேன். உடனே என் நட்பு வட்டாரங்கள், அதற்கு அளித்த விளக்கம் என்னை திடுக்கிட வைத்தது; நாம் ஏன் நம்மை நாமே தாழ்த்திக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணத் தோன்றியது! அதை, ஒரு சமுதாயப் பார்வையுடன் என் கோபமும் கலந்து இங்கே விளக்கி இருக்கிறேன். 

     என் நண்பர்கள் ஒரு சேர, அந்தக் கலையை வளர்த்தவர்கள் அதை சரியாய் மற்றவருக்கு சொல்லிக்கொடுக்கவில்லை என்றனர்; ஒப்புக் கொள்ளக் கூடிய காரணம் தான். நான், அவர்களுக்கு வேண்டுமான சன்மானம் கிடைத்திருக்காது; அதனால், அவர்கள் சரிவர சொல்லிக் கொடுக்க முடியாமல் போய் இருக்கலாம் என்றேன். மேலும், அதை ஆர்வமுடன் கற்க ஆட்கள் இல்லாத  காரணத்தால் கூட இருக்கலாம் என்றேன். என்னுடைய சிறுவயதில், எங்கள் கிராமத்தில் பார்த்த "தெருக்கூத்து" கலை இன்னும் என் மனக்கண்ணில் தோன்றுகிறது. அந்த கலை செய்தவர்களின் அடுத்த தலைமுறை இன்னும் கூட எங்கள் கிராமத்தில் இருக்கிறார்கள். நான், இதனை எல்லாம் நினைவு கூர்ந்து, தெருக்கூத்து எனும் கலை "தொலைகாட்சி" பெட்டியில் திரைப்படம் காண்பிக்க ஆரம்பித்ததால் நலிங்க ஆரம்பித்தது என்றேன். எனக்கு, நன்றாய் நினைவிருக்கிறது! இந்த "தொலைகாட்சி" பெட்டி ஆரபமானதும் தான் "தெருக்கூத்து" குறையத் துவங்கியது. இதன் காரணமாய், அவர்களை "அடிமாட்டு" விலைக்கு கூத்து செய்ய அழைத்தார்கள்; இதன் காரணமாய், முதலில் கூத்து குறையத் தொடங்கியது. பின், அவர்களால் குறைந்த வருமானத்தில் பிழைக்க வழியில்லாததால், வேறு வேலை செய்ய சென்னை போன்ற பெருநகரங்களை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். நான், என் கண் முன்னாள் நிகழ்ந்த இந்த அழிவை மனதில் கொண்டு, "வர்மக்கலை" போன்றதை சொல்லிக்கொடுத்தவர்களுக்கு கூட, இம்மாதிரி பொருளாதாரப் பிரச்சனை வந்திருக்க வாய்ப்புண்டு என்றேன்.

        இங்கே தான் என் மனதை பாதிக்கும் அந்த கருத்து ஒரு சேர வந்த சேர்ந்தது. அது, கலையை வளர்ப்பவர்கள் இலவசமாக சொல்லிக் கொடுக்க வேண்டும்; அப்போது தான், அது வளரும் என்று கூறினர்; அது தான் "போதி தர்மரை" தெரிந்து கொள்ளாததற்கும் காரணம் என்றனர். எனக்கு, கடுங்கோபம் வந்தது; அது எப்படி இலவசமாக ஒருவரால் கலையை கற்றுக் கொடுக்க முடியும்? அது அவர்கள் தொழில் சார்ந்தல்லவா இருக்கிறது?? வாதத்திற்காகவே கூறப்பட்டதாய் இருப்பினும் இது மிகத் தவறான ஒரு பார்வை. ஏனெனில், நான் உட்பட அனைவரும் கடல் கடந்து வந்தவர்கள் தான்; இங்கு வந்ததற்கு பல காரணங்கள் சொல்லிக்கொண்டாலும், முதன்மையான காரணம் "அதிக வருவாய்" வேண்டுமென்று தான். நம்முடைய அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த அறிவை/ திறமையை இவ்வுலகிற்கு கொண்டு சேர்க்க, இந்தியாவில் நல்ல வருவாய் இருப்பினும், அதிக வருவாய் வேண்டும் என்பதற்காய் கடல் தாண்டி வந்திருக்கிறோம். நம்மில் எத்தனை பேர், நமக்கு தெரிந்த கணினி-அறிவை இந்தியாவில் உள்ள ஏழை குழைந்தைகளுக்கு இலவசமாய் எடுத்து செல்ல முயன்று இருக்கிறோம் அல்லது அது பற்றி நினைத்து இருக்கிறோம்? மிகப் பெரும்பான்மையோனோர் அதை ஒரு முதலீடாகக் கொண்டு பொருளீட்டவே விரும்புகிறோம். இதே நிலைப்பாடு தானே அவர்களுக்கும் பொருந்தும்; ஒரு வேலை, நாம் ஒரு மாமனிதனைப் பற்றி தெரிந்து கொள்ளாதது தவறு என்று உணர மறுக்கிறோமா? இதற்கு ஏன் சற்றும் நியாயமில்லாத ஒரு வாதம் செய்ய வேண்டும்?

         இதை விட மிக அதிர்ச்சியான இன்னுமொரு விளக்கம் வந்து சேர்ந்தது! அது மேற்கூறியதினும் அபத்தமாய் பட்டது. அது, "போதி தர்மர்" ஒரு குறிப்பிட்ட மதத்தை பரப்புவதற்காய் சென்றவர்!! அதனால் தான், அவரை எவருக்கும் தெரியாமல் போனது என்றனர். எனக்கு செய்வதரியாத கோபம் வந்தது; உடனே, சில நண்பர்கள் எதற்கு இந்த கோபம், இது விளையாட்டான விவாதம் தானே என்றனர். என்னால் அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை. சராசரி, ஆயுளில் பாதியை கடந்துவிட்டேன் - இதே போல் விளையாட்டாய்! இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காய் தான் இந்த வலைப்பதிவை துவக்கியுள்ளேன். நம்முடைய வாதம் தார்மீகத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்; நாமும், நம் சக இந்தியர்களும்  இந்தியாவில் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு அதை வேறு நாடுகளில் பரப்பத்தான் கடல் கடந்து வந்தோம் என்றால், நாம் ஒப்புக் கொள்வோமா? அதனால் நம்மை நினைவில் வைத்துக்கொள்ளக்கூடாது (இந்தியாவில் வசிக்கும்) இந்தியர்கள் கூறினால் அதை எவ்வாறு எடுத்துக்கொள்வோம்?? அதே தான், "போதி தர்மர்" அக்கலையை அல்லது ஒரு மதத்தை பரப்புவதற்காய் வேறு நாடு சென்றார் என்றால் அது அவருடைய கடமை. மேலும், என்னுடைய பார்வை அவர் கற்றிருந்த கலை மீது தான்; மதத்தை பற்றி கற்றறிந்த நாம் விமர்சிப்பது தவறு. என்னுடைய வாதத்தின் அடிப்படை, இந்த விசயம் தெரியாதது தவறு என்பதைக் குறிப்பிடவும் மற்றும் இப்போதாவது அதை வெளியுலகிற்கு கொண்டு சேர்த்த அந்த இயக்குநரை பாராட்டவும் தான்.

       நம்முடைய கலையை நாம் தொடர்ந்து கற்க/ கற்றுவிக்க தவறியதன் விளைவாய், நாம் அந்த கலையை இழந்தது மட்டுமல்ல அதை இன்னொரு நாடு தனதாய் கொண்டாடும் அவல நிலையும் எழுந்துள்ளது. விருட்சமாய் வேரூன்றி இருக்கவேண்டிய ஒரு கலையை, இப்போது விதையிட நாமே முயன்று கொண்டிருக்கிறோம். இதை மீண்டும் நிலைநாட்ட முயற்சிக்கும் ஒருவரை பற்றி இங்கே குறிப்பிடுவது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன். கோவையில் "Sri Ramakrishna Mission Vidyalaya College"-ஐ சார்ந்த தமிழ்ப்-பேராசிரியர் ஒருவர் பழைய தமிழ் வேதங்களை உதவியாய் கொண்டு "வர்மம் சார்ந்த சிகிச்சை அளிப்பது குறித்தான ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார். மேலும், அவர் தமிழ்நாடு மற்றும் "கேரளா" மாநிலங்களில் எஞ்சியிருக்கும் குருக்களின் மூலமும் வர்மம் சார்ந்த  தமிழில் மருத்துவத்தை கற்றிருக்கிறார். அவரின் இந்த மகத்தான சேவை பற்றி மேலும் தெரிந்துகொள்ள விருப்பமெனின் இந்த இணைப்பை அழுத்துவதன் மூலம் அறியலாம். இந்த மாதிரி ஒரு மகத்தான முயற்சி செய்பவரையும், அவர் பணம் வாங்கிக்கொண்டுதான் கற்றுக்கொடுக்கிறார் என்று உதாசீனப்படுத்தாமல் அவரின் உன்னதமான நோக்கத்தைப் புரிந்துகொண்டு அவரையும் அவரைப் போன்றவர்களையும் பாராட்ட கற்றுக்கொள்வோம். மேலும், அம்மாதிரி செய்பவர்களைப் பற்றி நம்மால் முடிந்த அளவிற்கு மற்றவருக்கு தெரியப்படுத்த முயற்சி செய்வோம். கலையை வளர்ப்பவரை…

பாராட்டி ஊக்குவிக்க கற்றுக்கொள்வோம்! 

பின்குறிப்பு: இலவசம்  கொடுக்கும் அரசாங்கத்தை குறை கூறும் நாமே இன்னொரு புறம் ஒரு கலையை இலவசமாய் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தவறான விமர்சனத்தையும் செய்யாதிருப்போம். இலவசமாய் கொடுக்கப்படும் "உயிரில்லாத" ஒரு பொருளே ஒருவரை சோம்பலாய் ஆக்கும், அதன் மதிப்பு இலவசமாய் பெறுபவருக்கு தெரியாது போய்விடும் எனும் நாமே "உயிரோட்டமுள்ள" ஒரு கலையை இலவசமாய் கொடுக்கவேண்டும் என்று எப்படி கூறமுடியும்? கலையின் மதிப்பும் தெரியாது போய் விடாதா??

ஏனிந்த வாழ்க்கை?...


*******

மனிதா! பணமே
முதன்மையாய் எண்ணி
முடிந்தது அத்துனையும்
முயன்று - எண்ணிலடங்கா
சொத்து குவித்து
சொந்தபந்தம் தவிர்த்து

சேர்த்தது போதாதென்று
சேர்த்ததை (கரை)சேர்க்க
போராடி (நடை)தள்ளாடி
போகும்போது ஏதும்
பற்றிசெல்ல லாகாதென்ற
பொருள் புரியாது

வாழவே மறந்து
வாழ்க்கை தொலைத்து
எதற்கும் பயனற்று
என்ன வாழ்க்கையிது?
எவர்க்காய் வாழ்கிறாய்??
எதற்கு(தான்) வாழ்கிறாய்???

குழந்தை வளர்க்க...


*******

முள்ளை முள்ளால்
முறித்தெடுப்பது போல்
குழந்தையாய் மாறி
குழந்தை வளர்ப்பில்
விவேகம் காண்பின்
வெற்றி நிச்சயம்!!!

குழந்தையும் தெய்வமும்


*******

குழந்தையும் தெய்வமும்
ஒன்று! சரி
குழந்தை தெய்மாவதை
கண்டிருக்கிறோம்!! ஆனால்
தெய்வம் குழந்தையாவதை?
ஏனில்லை?? அதனாலேதான்
பலவழிகளில் மனித
உயிர்களுடன் விளையாடுகிறது!!!

வெள்ளி, டிசம்பர் 16, 2011

சாலை (வீ/வி)திகள்...



*******

   நம் தேசத்தில், என்னை மிகவும் பாதிப்பவைகளில் ஒன்று,  சாலை விதிகளை பெரும்பான்மையோனோர் மதிக்காதது! இதைக் காணும்போது, எனக்கு கடுங்கோபம் வரும். என்ன இது! என்னவோ அவர்கள் வீடுகள் இருக்கும் "வீதியில்" நடப்பது போன்று எவர் பற்றியும் அக்கறையும்  இல்லாமல் நடக்கிறார்களே என்று தோன்றும்; அதனால் தான் இந்த தலைப்பு. மேற்கத்திய நாட்டில் இருப்பது போல், நம் நாட்டிலும் அனைத்து "சாலை விதிகளும்" உள்ளன. அப்படி இருக்கையில், சாலை விதிகளை மதிக்கவேண்டும் என்ற ஒரு எண்ணம் ஏன் மிகக் குறைந்த அளவில் உள்ளது? ஆரம்ப காலத்தில் நம் நாட்டில் மிக, மிக குறைந்த அளவில் வாகனங்கள் இருந்தது ஒரு காரணமாய் இருக்கலாம்; சாலையில், வாகனங்களே குறைவு எனும்போது அது பற்றிய பிரக்ஞையே இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், இப்போது நிலமை வேறு; மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் அளவிற்கு வாகனங்கள் பெருகி விட்டன. ஆனால், சாலை விதி பற்றிய ஞானம் மட்டும் அப்படியே உள்ளது. இதுமாதிரியான ஒழுக்கக்கேடுகள் பல்வேறு விசயத்தில் இருப்பினும், இந்த சாலை விதிகளை மீறுவது சார்ந்த ஒழுங்கீனம் என்னை மிகவும் பாதிக்கக்கூடியவைகளில் ஒன்று. எதெதெற்கோ (நமக்கு சற்றும் ஒவ்வாத - உணவு, உடை போன்ற தட்பவெப்பநிலை சார்ந்த விசயத்தில் கூட) மேலை நாட்டு மோகம் கொண்டு செயல்படும் நாம் இது போன்ற ஆக்கபூர்வமான செயல்களிலும் அவர்களைப் பின்பற்றுவதில் என்ன தவறு இருக்கமுடியும்?

     நம் நாட்டில் சர்வசாதாரணமாய், வாகனம் ஓட்டும் "உரிமம்" எந்தவித கடின சோதனையும் இல்லாமல் கிடைத்து விடுகிறது. இதில் வேதனையான விசயம் "பணம்" கொடுத்தால் எதுவும் செய்யாமலே கூட உரிமம் கிடைக்கக் கூடிய வழிமுறைகள் உள்ளது தான். மேலை நாட்டில் இருப்பது போல் நம் நாட்டிலும் "எழுத்துமுறை" மற்றும் "செய்முறை" தேர்வுகள் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலும், அவை ஒரு கண்துடைப்பு போலவே உள்ளன; இதில் அந்த துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட பலரின் பங்கு உள்ளது. அப்படி இருக்கையில், அந்த மாதிரி உரிமம் பெற்றவருக்கு எப்படி சாலை விதிகள் பற்றிய அக்கறை/ ஞானம் இருக்கும்? மேலும், சாலை விதி மீறியதற்காய் உண்டான தண்டனையை அனுபவிக்க (அ) அபராதம் செலுத்த நாம் தயாராக இல்லை. மேலை நாடுகளில் முறையான  தேர்வுகள் செய்து பயிற்சி பெறாத வரை, ஓட்டுனர் உரிமம் பெறுவது சாத்தியமே இல்லை; அதுவும், என் போல் ஆங்கிலம் நடைமுறையில் இல்லாத நாட்டில் வாங்குவது கிட்டத்திட்ட சாத்தியமே இல்லை. நான், என்னுடைய இந்திய ஓட்டுனர் உரிமையை இங்கே முறையான விதிப்படி "மாற்றம்" செய்து என் உரிமத்தை பெற்றேன். உரிமம் பெரும் முன் என் விருப்பத்தின் பால் "ஓட்டுனர் பயிற்சி பள்ளியில்" சில நாட்கள் பழகிக்கொண்டேன்.  எனினும், இப்போது தான் ஓரளவு எளிதாய் ஓட்ட பழகி இருக்கிறேன். இங்கே, சாலை விதிகள் மீறப்பட்டால் தண்டனை மிகக் கடினமாய் இருக்கும்; அதனால் தான் இங்கே சாலை விதிகள் கடைபிடிப்பது ஓர் ஒழுக்கமாய் செய்யப்படுகிறது.

       என்னால் ஒப்புக்கொள்ளவே முடியாத விதி மீறல், விவசாயிகள் சாலையில் "களப்"பணிகள் செய்வது; நெற்பயிர் போன்றவற்றை சாலையில் போட்டு தங்கள் பனி மேற்கொள்வது. சரியாக ஓட்டத் தெரியாத ஒருவர் "இரு சக்கர" வாகனத்தில் செல்வது மிகக்கடினம் - வாகனம் சறுக்கிக்கொண்டு செல்லும்; சாலையை விட்டு கீழே இறங்கினால் எங்கு பள்ளம் இருக்கும் என்பதை எவராலும் கணிக்க முடியாது. பிறகு, எப்படி வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச் செல்வர்? சமீபத்தில், மிகப் பிரபலமான தொலைகாட்சி தொடர் ஒன்றின் "நடுவராய்" இருப்பவர் இதை நியாயப்படுத்தி (சற்று கோபமாயும்) பேசியதை கண்டு எனக்கு பெரும் அதிர்ச்சி! "களம் இல்லையென்றால்" விவசாயி எங்கே செல்வான்? என்பது தான் அவர் கேள்வி. நான், விவசாயிக்கு எதிராய் பேசவில்லை; "களம்" இல்லையென்றால் அதற்காய் போராடவேண்டிய "தளம்" வேறு. பின் எதற்கு, வாகன ஓட்டிகள் "சாலை வரி" கட்டவேண்டும்? சமீபத்தில் "தேசிய நெடுஞ்சாலையில்" இங்கே உள்ளது போல், வாகனம் பழுதுபார்ப்பதற்காய் "சேவை சாலை" அமைக்கப்பட்டுள்ளது கண்டு பேரானந்தம் அடைந்தேன். ஆனால், அதில் பெரும்பானவை "களப்பணி" செய்யவும், அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர் "வீட்டு விலங்கினங்களை" அங்கே கட்டவும் மற்ற வேலைகளுக்கும் பயன்படுத்துவதை கண்டு ஆராத்துயர் அடைந்தேன். இவர்களை யார், எப்படி திருத்துவது? மேலும், என் போன்றவர்கள், இந்த மாதிரி செயல்களைக் கண்டு அடையும், "கோபத்தை" குறைக்கவேண்டும் என்பதும் தெளிவாய் தெரிகிறது.

            இரண்டாவதாய், என்னை மிகவும் சங்கடப்படுத்துவது, எந்த ஒரு "சமிக்ஞை"யும் இல்லாமல், நம் முன்னே செல்பவரும், பின்னால் வருபவரும் சாலையை கடப்பது. இதற்கு ஒரு நல்ல உதாரணம் உண்டு; நான் திருமணத்திற்கு பின் தான் முறையாய் "நான்கு சக்கர வாகனம்" ஓட்ட கற்றுக்கொண்டு ஓட்டுனர் உரிமம் பெற்றேன். உரிமம் பெற்ற புதிதில், நான் என்னுடைய மனைவியுடன் வாகனம் ஓட்டி சென்று கொண்டிருந்தேன்; அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் திடீரென என்னைத் தாண்டி குறுக்கே வந்துவிட்டார். எனக்கே அதிக பயிற்சி இல்லாத பயத்தில், அருகில் புது-மனைவி உட்கார்ந்திருக்கும் ஒரு வறட்டு-கௌரவத்தில் உரக்க "ஏய்" என்று கத்திவிட்டேன். அவருக்கு, ஐம்பது வயதிருக்கும்; அவர் உடனே, நிறுத்திவிட்டு கோபமாய் என்னவென்று கேட்டார்; நானும், ஒருமையில் "எதற்கு எந்த சமிக்ஞையும் இல்லாமல்" குறுக்கே வந்தாய்? என்றேன்; அவர் நிதானமாய், என் மனைவியை பார்த்துவிட்டு அதற்கு என்ன? தவறுதான், அதற்காய் "ஏய்" என்பாயா! என்றார். என் தவறு உணர்ந்து வெட்கப்பட்டாலும், சரியாக மன்னிப்பு கூட கோராமல், அந்த சூழ்நிலையை சமாளித்து கடந்துவிட்டேன். நான், கோபப்பட்டது  தவறு என்று தீர்க்கமாய் உணர்ந்தேன்; நானும், நிதானமாய் வண்டியின் வேகத்தை குறைத்து "பார்த்து போகக் கூடாதா? ஐயா!" என்று வினவியிருந்தால், அவர் தவறு உணர்ந்து வேறு விதமாய் பேசி இருப்பார்; என் குற்ற உணர்வு அவருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கும்.

            இது போல் நிறைய தவறுகள் சாலை விதிகளை மீறுவதால் உண்டு எனினும், இறுதியாய் ஒன்று மட்டும் சொல்லி முடிக்க எண்ணுகிறேன். அது, வாகனங்களில் செல்பவர்களில் பெரும்பாலோனோருக்கு  நடந்து செல்பவர்களுக்கு என சந்திப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள குறியீடு பற்றி தெரியாதது; அது வரி-வரியாய் பட்டையாய் "வெள்ளை" வர்ணம் தீட்டப்பட்டிருக்கும் (அதன் தமிழாக்கம் சரியாய் தெரியவில்லை); நான் இப்போது கூர்ந்து கவனிக்கும் போது சிறிய நகரங்களில் கூட அந்த "சமிக்ஞை" இருப்பது தெரிகிறது. அவ்வாறு இருப்பின், அங்கு சாலையை கடக்க எவராயினும் நின்றிருப்பின் கண்டிப்பாய் வாகன ஓட்டிகள், வாகனத்தை நிறுத்தி அவர்களுக்கு வழி விடவேண்டும் என்பது பொருள். ஒருமுறை, நான் புதுச்சேரியில் வாகனம் ஓட்டும்போது, ஒரு முக்கிய சாலையில் வாகனத்தை நிறுத்தி "ஒரு தாய் மற்றும் சேய்க்கு" வழி கொடுத்து காத்திருந்தேன். பின்னால் வந்த ஒரு "இரு சக்கர" ஓட்டுனர் என்னை அசிங்கமாய் பார்த்தது மட்டும் அல்லாமல், என்னை ஏதோ திட்டிக்கொண்டே சென்றார்; நான் தொடர்ந்து அது போன்று செய்து கொண்டு தானிருக்கிறேன்; இங்கு ஓட்டும்போது கடைபிடிக்கும் அத்துனை விதிகளையும் கடைப்பிடித்து தான் ஓட்டுகிறேன். இதில் எனக்கு, எந்த சிரமும் இல்லை! ஆனால், நம் நாட்டில் வாகனங்கள் ஓட்டுபவர்களை எப்படி திருத்துவது என்ற என் கவலை மட்டும் குறையவே இல்லை. எப்போது குறையும் என்றும் தெரியவில்லை. இத்தலையங்கம் ஒரு சிலரையாவது பண்படுத்தி ஒரு சில விதிமீறல்களையாவது திருத்திக்கொண்டால் அதுவே இந்த முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாய்க் கருதுவேன்.

சாலை விதிகளை மதிப்போம்! போக்குவரத்து நெரிசலை குறைப்போம்!!            

ஏன் பின்னோக்கிய பயணம்?


அகந்தையால் - (பேர்)அழகால்
ஆணவத்தால் - (அரசு)ஆட்சியால்
இனத்தால் - (சாதி)சனத்தால்
உறவால் - (உள்)உணர்வால்
எழிலால் - (பல)எல்லையால்
நிலத்தால் - (மெய்)நிறத்தால்
பணத்தால் - (படை)பலத்தால்
பெண்ணால் - (பசும்)பொன்னால்
மதத்தால் - (மமதை)மனிதனால்
மொழியால் - (பெரும்)மடமையால்
நடந்தது கடந்து
உப்பாகப் போகும்
"தண்ணீரை"ப் பகிர்வதில்
இன்றைய அரசியல்!


இதுதானா வேற்றுமையில்
இந்தியா கண்டிட்ட
பொதுமை? பயணிப்பது
பின்னோக்கிய பாதையிலோ?

உணர்வு(ம்) பந்து(ம்)...



*******

"பந்து" போன்றதே
மனித "உணர்வுகள்"!
வெளிப்படும் விதத்திற்கும்
அதன் தன்மைக்கும்
எதிர்கொள்வதன் திறனுக்குமேற்ப
திரும்ப தாக்கும்!!

சமாதானம்...


எங்கெங்கோ எவரெவரிடமோ
எத்தயக்கமும் இன்றிசெய்யும்
"சமாதான"த்தை நம்மை
சார்ந்த சுற்றத்திடமும்
உறவுகளிடமும் செய்வதற்கேன்
உறுதியாய் மறுக்கிறோம்???

"உயிர்-பொய்" உயிரனம்...


பொய்யே மெய்யாய்
பொதுவாய் தன்னியல்பாய்
மாற்றிவிட்ட மானிடரின்
"மெய்"யதுவும்  பொய்தானோ?
பொய்யர்அவரில் உலவிடும்
"உயிர்"கூட பொய்யோ?அவர்
"உயிர்-பொய்" உயிரினமோ?

விடுகதை...


"உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை"
உணர்வோமா நாமும்;
உண்மையில் இரண்டுமின்று
விடையறிய முடியா
"விடுகதை" ஆனதை?

"வள்ளுவன்-வாசுகி" போல்...


தமிழ்த் திருமணம்
தன்மரியாதைத் திருமணம் -
இவற்றில்நான் கேட்டவகையில்;
இதுவரைப்பல ரும்வாழ்த்தியது
"வள்ளுவன்-வாசுகி" போல்
வாழவேண்டும் என்பதே!
வாழ்த்துவோரையும் சேர்த்து;
வேறெவரும் அவர்போல்
வாழவில்லையா? ஏனப்படி??

கூடா நட்பு...



முகநக நட்பது
முறையான நட்பன்று
சரி... முகத்தில்(கூட)
சந்தோசம் காட்டிட
எத்தனிக்காத நட்பு
எந்த வகையாம்?

வெள்ளி, டிசம்பர் 09, 2011

சிறந்த கணவன் ⇔ சிறந்த தந்தை



(எனக்கு தெரிந்த/ தெரியாத சிறந்த கணவன்-மனைவிக்கும், தாய்-தந்தைக்கும், இந்த உறவுகளை சரி செய்யும் "என் மகள்" போன்ற குழந்தைகளுக்கும் சமர்ப்பணம்)
*******

    என்னுடைய அனுபவம் மற்றும் சிந்தனையின் அடிப்படையில், சிறந்த கணவனால் தான் சிறந்த  தந்தையாயும் இருக்கமுடியும் என்று தோன்றுகிறது. இதை உணர்ந்தவர்களுக்கு இது பெரிதாய் படாமல் போகலாம்; இதை மேலோட்டமாய் அல்லாமல் வேறொரு பரிமாணத்தில் ஆழ்ந்து பார்க்க முயற்சித்திருக்கிறேன். நான் மிக சிறந்த (நல்ல) தந்தைகளை சந்தித்துள்ளேன்; அவர்கள் அனைவரும் சிறந்த (நல்ல) கணவன்களாகவும் இருப்பதை அறிந்துள்ளேன்.  நான் சந்தித்த நபர்களின் வாழ்க்கை முறையை கொண்டே "சிறந்த கணவன் = சிறந்த தந்தை" என்பதை அறிந்துகொண்டேன். இதை என் சுய அனுபவத்தின் பால் தெரிந்துகொண்டது, என் மகள் பிறந்ததற்கு பின்; ஆனால், நான் பின்னோக்கி சென்று இதை உணர்ந்திருக்கிறேன். அதாவது, நான் சிறந்த தந்தையாய் செய்த செயல்களின் அடிப்படையில் என்னை அலசிப்பார்த்தபோது அதே மாதிரி விசயங்களை, அதே அடிப்படையில் (அதாவது உணர்வுபூர்வமாய்) என்னவளுக்காய் செய்யவில்லை என்பதை உணர்ந்தேன். நான் என்னவளை  எத்தனை நன்றாய் பார்த்துக்கொண்டாலும், எவ்வளவு விசயங்கள் செய்திருப்பினும் சில விசயங்களை உணர்வு-ரீதியாய் செய்ததில்லை என்பது தெளிவாய் தெரிந்தது. இது என் போன்ற சிறந்த தந்தைக்கு அவர்களின் நிலையை உணர்ந்து, அவர்களை சிறந்த கணவனாயும் வெளிப்படுத்த என்ன செய்வேண்டும் என்பதை உணர்த்த உதவும் என்று நம்புகிறேன். அதிலும், இன்னமும் திருமணமாகாதவர்களுக்கு இது மிகப்பெரிய புரிதலை உருவாக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை!!!

   இந்த புரிதலை, என் மகளுக்காய் (இதுவரை) நான் செய்தவைகளில் மிகவும் முக்கியமானதாய், எனக்கு தலையானதாய் தோன்றும் ஒரு செய்கையின் மூலமாய் விளக்க விரும்புகிறேன். அது! நான் "புகைப்பிடிக்கும்" பழக்கத்தை அறவே நிறுத்தியது தான். நான் சாதரணமாய், ஒரு நாளைக்கு 4 அல்லது 5 "வெண்சுருட்டு" மட்டுமே புகைப்பது வழக்கம். வேறொரு தவறு (என்னவென்று வேறொரு சமயத்தில் எழுத முடிவு செய்துள்ளேன்) செய்யும் நாளில், எண்ணிக்கை அதிகமாகும். எத்தனையோ முறை, எதற்கு புகைக்கிறோம் என்ற "ஞானோதயம்" வந்ததுண்டு; உடனே "அவசர சட்டம்" இயற்றி  ஓரிரு நாட்கள் அல்லது ஓரிரு வாரங்கள் (அதிகபட்சமாய்) நிறுத்தியதுண்டு. ஆனால், நிரந்தரமாய் நிறுத்தியதில்லை/ நிறுத்த முடியவில்லை. இப்படியாய் கிட்டத்திட்ட 16 ஆண்டுகள் நான் கொண்டிருந்த பழக்கத்தை ஒரு சில மாதங்களில் என் மகள் அறவே விட்டுவிடச் செய்தாள். நான்  வீட்டில் இருக்கும் நாளில் (குறிப்பாய் வார இறுதி நாட்களில்), வீட்டின் "நுழைவுக்கதவை" மூடிவிட்டு வெளியில் (மாடிப்படிக்கட்டில்) அமர்ந்து புகைப்பது வழக்கம். என் மகள் தவழ்ந்து வந்து "கதவை" தட்டிக்கொண்டே இருப்பாள்; நான் அதற்கு அசராமால், புகைத்துவிட்டு பின்னர் தான் கதவை திறப்பது வழக்கம். இந்த கதவைத் தட்டும் சத்தம் ஏதேனும் வேலை செய்துகொண்டிருக்கும் என்னவளை தொந்தரவு செய்ய ஆரம்பித்த பின், அவள் வந்து கதவைத் திறந்துவிட்டு விடுவாள். என் மகள் வந்து என்னருகில் உட்கார்ந்து கொள்வாள்; அதற்கும் அசராது புகையை கையால் தட்டிவிட்டு (அதாவது, புகையை திசை திருப்பினேனாம்!!!???) புகைப்பிடித்துக் கொண்டிருந்தேன்.

     இதனிடையில், ஒவ்வொரு முறையும் என் மகள் என்னருகில் உட்காரும்போதும் இப்பழக்கத்தை நிறுத்திவிட எத்துனையோ முறை முயன்று நிறுத்தியும் பயனில்லை. இவ்வாறாய், ஓரிரு மாதங்கள் கழிந்த பின் திடீரென ஓர் நாள் எங்கோ படித்தது நினைவிற்கு வந்தது; அது "புகைப்பிடிப்பவரை விட அருகில் இருப்பவரை அந்த புகை அதிகம் பாதிக்கும் என்பது". இது நினைவிற்கு வந்தவுடன் கூட, உடனடியாய் நிறுத்தவில்லை; என்னவளை அழைத்து "எங்கள் மகளை" உள்ளே அழைத்துக்கொண்டு சொல்வேன். என்னவள் தெளிவாய் சொல்வாள்: "நீங்களாயிற்று, உங்கள் மகளாயிற்று; வேண்டுமானால் புகைப்பிடிப்பதை விட்டுவிட்டு அவளைப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்பாள். இவ்வாறாயும், ஓரிரு வாரங்கள் ஓடிற்று. பின்தான் அந்த "வலி(மை)-மிகுந்த" சிந்தனை வந்தது! நாம் ஏன் புகைப்பிடிக்கவேண்டும்? புகைப்பிடித்து, நம் உடம்பை கெடுத்துக்கொள்வதோடு அல்லாமல், ஏன் ஒரு தவறும் செய்யாத என் மகளின் உடல்நிலையையும் கெடுக்கவேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது. இந்த யோசனை வந்தவுடன் 2010 ஆம் ஆண்டு "ஆகஸ்ட்டு" மாதம் 27 ஆம் நாள் (வெள்ளிக்கிழமை) இரவு தான் கடைசியாய் புகைப்பிடித்தது. இந்த நிமிடம் வரை புகைப்பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் மீண்டும் வந்ததே இல்லை; ஒரு முறை கூட வந்ததில்லை. ஒவ்வொரு முறை நிறுத்தும்போது, ஏதேனும் ஒரு சிறு பிரச்சனை காரணமாய் மீண்டும் "புகைக்க" ஆரம்பித்துவிடுவேன்; மாறாய், இம்முறை எத்துனை பெரிய பிரச்சனை(கள்) வந்தபோதும் மீண்டும் புகைக்கும் எண்ணம் வந்ததே இல்லை. 

   இதை யோசிக்கும்போதெல்லாம் நான் பெருமிதம் கொள்வது மறுக்கமுடியாதது! ஆனால், ஒரு சமயத்தில் நான் வேறொரு வடிவில் இந்த நிகழ்ச்சியை யோசிக்க ஆரம்பித்தேன். என்னவள், எத்தனையோ முறை அப்பழக்கத்தை விடுமாறு கேட்டும், நீண்ட காலத்திற்கு நிறுத்தமுடிந்ததில்லை. நாம், திருமணத்திற்கு முன் "நம் குடும்பம்" என்பதை நம் பெற்றோரை முன்னிறுத்தி யோசிக்கிறோம். அதே போல், குழந்தைப் பிறந்தவுடன் (அதுவும் பெண் எனில்) குழந்தையை முன்னிறுத்தி யோசிக்கிறோம். ஆனால், திருமணமானவுடன் குறைந்தபட்சம் குழந்தைப் பிறக்கும் வரையாவது, "குடும்பம் என்பதை மனைவியை  முன்னிறுத்தி யோசிக்க வேண்டும் என்பதை" இந்த சமுதாயம் கற்றுக்கொடுக்கவில்லை; இன்னும் மேலே போய், இச்சமூகம் அதை தடுத்திருக்கிறது என்று கூட குற்றம் சாற்றத் தோன்றுகிறது. அதனால், என் போன்ற பலரால் (குறிப்பாய்  கிராமத்து சூழ்நிலையில் அதிகமாய் வளர்ந்திருப்பின்) மனைவி என்ற உறவை உணர்வுப்பூர்வமாய் (தன்னிச்சையாய் கூட) உணர முடியாமல் போனதாய் படுகிறது. இல்லையேல், என் மனைவியை எல்லா விதத்திலும் நல்ல விதமாய் கவனித்துக் கொண்ட என்னால் ஏன் அவளை உணர்வுப்பூர்வமாய் அணுக முடியவில்லை? அவ்வாறு, அணுகியிருப்பின் நான் இந்தப் புகைப்பழக்கம் போன்ற பல விசயங்களை அவளுக்காய் (முன்னரே) செய்திருப்பேன் என்று தோன்றுகிறது. நான் வேண்டுமென்றே எதையும் அவளுக்காய் செய்யக்கூடாது என்றிருக்கவில்லை; உண்மை என்னவெனில், அவ்வாறு தோன்றவில்லை!

   இவ்வாறாய், என் மகள் எனக்கு கற்றுக்கொடுத்த விசயங்கள் பற்பல; ஒவ்வொரு நிகழ்வையும், என்னுள் நானே அலசிப்பார்க்கும்போது என்னவளை எப்படி உணர்வுப்பூர்வமாய் அணுகுவது என்ற வழிமுறையும் தோன்றுகிறது. நான் அதைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறேன்; நான் உண்மையில் நல்ல கணவன் எனினும், என்னை உணர்வுப்பூர்மாய் (என் மகளிடம் இருப்பது போல்) என்னவளிடம் வெளிக்காட்டவில்லை என்பது கசப்பான உண்மை; இதை எனக்கு உணர்த்தியவள் என் மகள். அதாவாது, ஒரு தந்தையின் நிலையிலிருந்து "ஒரு கணவனாய்" எப்படி என்னை மேலும் சிறந்த வழியில் வெளிக்காட்டமுடியும் என்பதை உணர்ந்திருக்கிறேன். இதை உணர்ந்த போது, ஒரு சிறந்த கணவன் கண்டிப்பாய் சிறந்த தந்தையாய் இருப்பார் என்பதை போல், "ஒரு நல்ல தந்தையும், கண்டிப்பாய் நல்ல கணவனாய்த் தான் இருக்க முடியும்" என்பது புரிந்தது. இந்த இரண்டு உறவும், ஒன்றுடன் ஒன்று மிகுந்த தொடர்புடையது என்பது பொருள்பட வேண்டும் என்பதால் தான் "தலைப்பில்" இந்தக் குறியீட்டை "⇔" வைத்தேன். மிகத்தவாறன பழக்கம் கொண்ட ஒரு ஆண்மகனால் மனைவியிடம் சரியாய் இருக்க முடியாது; அப்போது, கண்டிப்பாய் நல்ல தந்தையாய் இருக்கமுடியாது. இங்கே விதிவிலக்குகள் கண்டிப்பாய் உண்டு! ஒரே ஒரு தவறான பழக்கவழக்கத்தால் நல்ல கணவன் என்ற நிலையில் சிறிது தவறி இருப்பினும், சிறந்த தந்தையாய் இருக்கும் விதிவிலக்கு உண்டு. அதே மாதிரி மனைவியின் புரிதலில்லாததால், நல்ல கணவன் என்ற நிலையிலிருந்து தவற நிர்ப்பந்திக்கப்பட்ட ஒருவர் மிகச்சிறந்த தந்தையாய் இருக்கும் விதிவிலக்கும் உண்டு.

சிறந்த பெற்றோர்க(ளை)ளாய்   உறுவா(க்)க முயற்சிப்போம்!!!                              

பின்குறிப்பு: இத்தலையங்கத்தை முடிக்கும் போது வேறொரு கேள்வி எழுந்தது! அப்படியாயின் "சிறந்த மனைவி ⇔ சிறந்த தாய்" எனலாமா என்று? நிச்சயமாய், ஆம் என்பேன்; அதற்கு முதல் உதாரணம் என் மனைவி. அதன் பின் என்னை வயிற்றில் சுமந்த என் தாய் மற்றும் என்னை நெஞ்சில் சுமந்துகொண்டிருக்கும்  என் நெருங்கிய நண்பனின் தாய் (அவர் எனக்கு இரண்டாவது தாய்).  அதே போல், இங்கும் மேற்கூறிய இரண்டு விதிவிலக்குகளும் பொருந்தும். ஒரு தாயின் நிலையிலிருந்து என்னால் இதை விளக்கமுடியுமா எனத் தெரியவில்லை! அப்படி முடியும் எனில் தக்கதொரு சமயத்தில் "சிறந்த மனைவி ⇔ சிறந்த தாய்" என்ற தலையங்கத்தை நிச்சயமாய் எழுதுவேன்.

சமநிலையற்ற வளர்ச்சி...



எழுத்தானி - எழுதுகோலாய்
ஓலைச்சுவடி - நூல்களாய்
நூலகம் - இணையதளமாய்
கணிதம் - கணினியாய்

எத்தனை எத்தனை
மதியால் வளர்ந்தவை?
மனிதனையே வளர்த்த
மாமொழியாம்; சர்வதேச
மெய்மொழியாம் - எந்தன்
செம்மொழி வளர்ச்சியில்
சமநிலை ஏனில்லை???

கல்வி...


தமிழ் தாயன்பாய்
ஆங்கிலம் ஆசிர்வாதமாய்
எம்மொழியும் எழுச்சியாய்
இயற்பியல் இயல்பாய்
வேதியியல் வேதமாய்
கணிதம் கணிப்பாய்
கணினியியல் கண்ணிமையாய்
வரலாறு வரமாய்
புவியியல் புன்னகையாய்
சமூகவியல் சுமுகமாய்

கற்பதெல்லாம்  களிப்பாய்,
கல்வி மாறுமாய்;
கடவுளே (நீ)வாழ்த்துவாய்!
குழந்தைகளை காப்பாற்றுவாய்!!

திருமணம்...



எங்கு நிச்சயமாகிறது
என்பதிலல்ல; மாறாய்
எங்கனம் நிலைக்கிறது
என்பதிலிலுள்ளது வாழ்க்கை!
"இரு"மணம் இணைந்தாலன்றி
"திரு"மணம் நிலைக்காது!!
மறுப்பேதும் இல்லாதிது
"மரு"மத்திலும் சாத்தியம்!!!
இருக்கிறதோ இதனில்
இருவேறு சத்தியம்???

வெள்ளி, டிசம்பர் 02, 2011

வேண்டியது கண்மணிகள்! "கணினிகள்" அல்ல!!...




*******


       சமீபமாய், இரண்டரை வயது கூட ஆகாத என் மகளுக்கு ஒரு பள்ளியில் சேர்வதற்காய், நேர்முகத் தேர்விற்கான அழைப்பு வந்திருந்தது. எனக்கு, மிக்க மகிழ்ச்சி; கூடவே, ஆச்சரியமும், அதிர்ச்சியும் - இந்த வயதிலேயே நேர்முகத் தேர்விற்கு செல்கிறாளே என்று! இந்நிகழ்ச்சியை இங்கிருக்கும் என் நண்பர் ஒருவரிடம் பகிர்ந்து கொண்ட போது, அவர் சிரித்துக் கொண்டே நமக்கு இந்த வயதில் கூட "ஒரு அழைப்பு வரவில்லை" என்றார். அவர் சொல்லும் போது, நானும் சிரித்தேன்; ஆனால், பிறகு அதைப் பற்றி சிந்திக்கும்போது பேரதிர்ச்சி அடைந்தேன். அதை, தலையங்கமாய் எழுதுவது மிக அவசியமாய் பட்டது. பள்ளிக்கூடம் என்பது உருவில்லாத ஒரு "பொருளை", அதன் தன்மை மற்றும் தரம் அறிந்து பொருத்தமான "அச்சில்/ உருவில்" வார்க்கும் பட்டறை போன்றது. அவர்கள், எந்த குழந்தையையும் அதன் தகுதிக்கேற்ப மெருகேற்ற வேண்டியவர்கள்; அது தான் அவர்களின் கடமை மற்றும் தொழில்-தர்மம். ஆனால், அவர்களே தகுதியான குழந்தைகளை தேர்ந்தெடுக்கும் ஓர் "அவல நிலை" எதனால் வந்தது? இது நம் நாட்டின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்காதா?? மேலும், இந்த வயதில் ஒரு குழந்தையிடம் எந்த கேள்வியை கேட்டு அவர்களின் தரத்தை அறிய/ பிரிக்க முடியும்?   இதைப் பற்றி யோசித்தபோது, நாம் குழந்தையின் படிப்பு எப்படி இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் ஒரு தெளிவில்லாமல் இருப்பதாய் எனக்கு பட்டது. அதைப் பற்றியும் மற்றும் இந்த நேர்முகத்தேர்வு குறித்தும் இங்கே அலசுவது முக்கியம் எனப் படுகிறது.   

      இதற்கு பள்ளியை குறை கூறுவதை விட, பெற்றோர்களையே பெரிதும் குறை கூறவேண்டும் என்று எனக்கு தெளிவாய் தெரிகிறது. பெற்றோர்கள், அதிக மதிப்பெண் பெறுவதை மட்டுமே "அளவுகோலாக" கொள்ளக்கூடாது என்பதே என் வாதம். அதிக மதிப்பெண்கள் (மட்டும்)  வாங்குவதால் என்ன பயன்? ஒரு புத்தகத்தில் இருப்பதை அப்படியே படித்து, மனனம் செய்து, தேர்வெழுதி அதிக மதிப்பெண்கள் வாங்குவது மட்டும் எப்படி அறிவாக ஆக முடியும்? அதற்காய் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டாம் என்று கூறவில்லை! ஆனால், "நடைமுறை அறிவு (Practical Knowledge)" மற்றும் படிப்பதை சிந்தித்து அதன் பொருளை உணருவது தான் "மிக, மிக முக்கியம்". உணர்ந்து படிப்பது பழக்கமாயின், ஒவ்வொரு குழந்தையும் தாம் படிப்பது என்னவென்று உணர்ந்து படிப்பர்; படிப்பது என்னவென்று தெளிவாய் தெரியும் போது, படிப்பது எதற்கு, அதை அங்கு எப்படி எவ்வாறு உபயோகிக்கவேண்டும் என்ற அறிவும் தானாய் வ(ள)ரும். இது வ(ளர்)ந்துவிட்டால், படிப்பது மறப்பது என்பது சாத்தியமே இல்லை; இங்கு பெரும்பான்மையான குழந்தைகள் குறைவாய் மதிப்பெண்கள் பெறுவதற்கு மறதியே காரணம். இந்த மறதிக்கு, மிக முக்கியாமான காரணம் அவர்கள் படிப்பதை புரிந்து கொள்ளாதது தான்; அதாவது அதை சரிவர தெளிவுபடுத்தாத நடைமுறையில் உள்ள பாடத்-திட்டம் மற்றும் தேர்வு-முறையே. எனவே, இந்த அடிப்படையை சரி செய்யாமல் நாம் குழந்தை படிக்கவில்லை - அதிக மதிப்பெண் பெறவில்லை என்றே (இன்னமும்) குறை கூறிக்கொண்டு இருப்பது தவறு.   

      ஒரு சில பள்ளிகள் மிக நல்ல பாடத்-திட்டங்களையும், தேர்வு-முறையையும் கொண்டுள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை; அந்த பள்ளிகளில் மதிப்பெண்ணை குறிப்பிட்டு சான்றிதழ்களை கூட கொடுப்பதில்லை. இத்தனை ஆண்டுகளாய், "உயர் வகுப்பில்/ உயர்நிலை வகுப்பில்" மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் எவரேனும் ஒருவர் அதற்கு மேல் என்ன சாதித்தார்கள் என்பதை எந்த மாணாக்கரோ, பள்ளியோ, பெற்றோரோ (அல்லது ஊடகமோ) கவனித்து வெளியிட்டு இருக்கிறார்களா? இங்கு கண்டிப்பாய், ஏதேனும் விதிவிலக்கான மாணாக்கர் இருந்திருக்கக் கூடும் - இருக்க வேண்டும். என்னுடைய கேள்வி, அவர்களனைவரும் மேற்கொண்டு சாதித்தது என்ன? பெரும்பான்மையாய் சாதனை செய்பவர்கள் முதல் மதிப்பெண் எடுக்காத மற்றவர்கள் தானே?? இன்னும் சொல்லப்போனால் சராசரியான மாணவர்கள் தான் அதிகம் என்று கூட கொள்ளலாம். அப்படியாயின், பெற்றோர்கள் முதற்கொண்டு ஏன் அனைவரும் அனைத்து மாணாக்கர்களையும் அதிக மதிப்பெண் எடுக்க நிர்ப்பந்திக்க வேண்டும்? மதிப்பெண் குறைந்து விடுமோ என்ற ஐயத்தில், முடிவு வரும் முன்னே தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அவலங்களும் நம் நாட்டில் (மட்டும்) அல்லவா நடக்கின்றது!!! மேலை நாடுகளில், இந்த கொடுமை இல்லை; ஏனெனில், அவர்கள் ஆறு வயது வரை - மேற்சொன்ன நடைமுறை-அறிவை வளர்க்கும் செயல்களையே போதிக்கின்றனர். இதை அனைவரையும் போல், நானும் முதலில் தவறாய் பார்த்தேன்; ஆனால், இங்கிருக்கும் பத்தாம் வகுப்பு மாணவனின் அறிவாற்றலை(கூட) பார்க்கும் போது என் எண்ணம் "பெருந்தவறு" என்று புரிந்தது.

    எனக்கு, இந்த வயது குழந்தையிடம் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது எவ்வளவு யோசித்தும் விளங்கவே இல்லை. "உன் பெயர் என்ன?; உன் தாய் பெயர் என்ன?? உன் தந்தை பெயர் என்ன???" என்பன போன்ற கேள்விகளாகவே இருக்கவேண்டும் என நினைக்கிறேன். அப்படி இருப்பின், அந்த அடிப்படையே தவறு என்பேன்; இங்கே(யே) குழந்தைகளின் "சிந்தனை மற்றும் செயலாக்கத் திறன்" அழிக்கப்படுகிறது என்பேன். ஒருவேளை, பின்னால் அதிக மதிப்பெண் வாங்கமுடியுமா என்ற அடிப்படையில், மனனம் செய்யும் திறன் தான் சோதிக்கப்படுகிறதோ??? நான், ஒரு பள்ளியின் நிர்வாகியாய்  இருப்பின் என்னுடைய சோதனை வேறு மாதிரி  இருக்கும்! "நேர்முகத்" தேர்விற்கு வரும் குழந்தையிடம் விளையாட்டு பொருட்களை கொடுப்பேன்; 1. அப்பொருளை, அப்படியே வைத்து விளையாடும் குழந்தை "மனனம்" செய்யும் குழந்தையை போன்றது - கற்றுக்கொடுக்கப்பட்டதை மட்டுமே செய்யும். 2. அப்பொருளை விளையாடுவதை நிறுத்திவிட்டு அதை திருப்பி பார்த்து உற்று நோக்கும் குழந்தை, சிந்தனை திறன் கொண்ட குழந்தை. 3. அப்பொருளை கடினமாய் கையாண்டு (வேகமாய் உபயோகித்து) அதை உடைக்கும் செயலை செய்யும் குழந்தை "வலிவாற்றல்" மிக்கக் குழந்தை. அதை விளையாட்டு போன்ற துறை சார்ந்தவைகளில் திறமை மிகுதியாய் உள்ளவாறு உருவாக்கமுடியும். நான் இந்த மூன்று குழந்தைகளையும் தேர்ந்தெடுப்பேன்; அனைத்து திறனையும் கொண்ட வெவ்வேறு மாணாக்கர்கள் கிடைப்பார்கள். 

   பெற்றோர்களே! மதிப்பெண் மட்டுமே முக்கியம் என்ற தங்களின் எண்ணத்தை தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள்; அதை மட்டுமே நீங்கள் சிந்தித்து அதை நோக்கியே நீங்கள் பயணிக்கும் போது கண்டிப்பாய் நீங்கள் உங்கள் குழந்தையின் தனித்திறனை கண்டறிய தவறி விடுவீர்கள்/ விடுகிறீர்கள். இந்த "அதிக மதிப்பெண்" என்ற பார்வை மாறி வரத் துவங்கி உள்ளது என்பதை நான் கண்டிப்பாய் ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும்.  இந்த பார்வை மாறவில்லையெனில், ஒரு மாணாக்கர் அதிக மதிப்பெண்ணும் வாங்க முடியாமல், அவரின் தனித்திறமையையும் உணரப்படாமல் "இரண்டும் கெட்டவராக" ஆகிவிடுவார்கள். பள்ளிகளே! குழந்தைகளை தேர்ந்தெடுக்கும் உங்கள் "நேர்முகத்தேர்வு" வேண்டாம் எனவில்லை! வரும் விண்ணப்பங்களில் இருந்து பத்து சதவிகிதம் தான் நீங்கள் தேர்வு செய்ய முடியும் எனில், உங்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்பதை என்னால் உணர முடிகிறது. அதை நடைமுறைப்படுத்துவதில்  மாற்றம் வேண்டும் என்றே கூறுகிறேன்!  எல்லா பள்ளிகளும் முதல் மதிப்பெண் வாங்குவது என்பது சாத்தியமே இல்லை என்ற உண்மை அனைவருக்கும் தெரியும்; அதே மாதிரி எல்லா மாணாக்கர்களும் முதல் மதிப்பெண் பெறுவதும் சாத்தியம் இல்லை. ஆனால் எல்லோரையும் அவரவர் திறனறிந்து (அதற்கு தகுந்தாற்போல்) வெற்றிப் பெறச் செய்வது நிச்சயமாய் சாத்தியம்!  நாம் உருவாக்கவேண்டியது (மாணவக்) கண்மணிகளை! சொன்னதை மட்டும் செய்யும் (சிந்தனையற்ற) கணினிகளையல்ல!! என்பதை தெளிவாய் புரிந்துகொள்வோம்.                                

மகளே! விழியமுதினி...





என் மகளே விழியமுதினி!
உன் முகம் காணும்
முன்னே எழுதிட நினைத்ததிது!!
பெண்ணே! நீ பிறந்த
பின்னே எழுதுகிறேன் இக்கவியை!!
என்னே, எங்கு தொடங்க?

உன் தாய் கருவுற்றவுடனே
என் உள்ளம் உறுதியளித்தது
கருவிலிருப்பது பெண் தானென்று
உருவில்லை அப்போது எனினும்
ஒவ்வொரு இரவிலும் நாங்கள்
எவ்வாறு உனக்கு பெயரிட்டிட
என்றே சிந்திக்கலானோம் - சிந்தித்து
வென்றே விட்டேன் ஓர்நாளில்!

விழியமுதினி!!! - பிடித்திருக்கிறதா மகளே?

உன் பெயர் பிறந்த
முன்னுரை அறிய வேண்டாமோ
நான் கொண்ட நிபந்தனை
நம் செம்மொழி தமிழின்
சிறப்பு எழுத்துக்களாம் - "ழ" கரமும், "ய" கரமும்
இருப்பு கொளல் வேண்டுமென்பதே
என்னே அதிசயம்! இரண்டும்
ஒன்றி அல்லவா அமைந்தன! 

எனக்குள் ஒரு கர்வம்
உனக்கு வைக்கும் பெயர்
முதன்மையாய் இருக்க வேண்டுமென
முழுமையாய் தேடினோம் ஊடகங்களனைத்தும்
எங்கும் கண்டிலோம் இத்திருநாமத்தை
எவர்க்கும் இருந்ததாய் அல்லது 
இப்போது இருப்பதாய் எங்களுக்கு
இன்னமும் சான்று இல்லை!

எப்போது நீ இந்த
என் கண்டுபிடிப்பான
இத்திருநாமத்தை தெளிவாய் - உன்
இனிமை மொழியால்
உச்சரிப்பாய் என
உணர்ச்சி பொங்க
காத்திருக்கிறேன்! விரைவில்
காலம் கனியப்போகிறது!
கனவாய் காணுகிறேன்
கலை மகளே!
உந்தன் செம்மொழி
உச்சரிப்பு எப்படியென?
தமிழச்சி மட்டுமல்ல!
தமிழுடன் மட்டற்ற
உறவும் (பிறப்பால்)கொண்ட
உம்மொழி எங்கனம் 
பிழையாகும்? மாறாய்
பிறரை வசீகரிக்கும்!

கண்டிப்பாய் இக்கவியை
கடிந்த மனதுடனே
முடிக்கிறேன்! இல்லை
மன்னிப்பாய், மகளே!!
எப்படி முடிவுறும்?
என்றுமழியா எம்மகள்
பற்றிய கவிதை??
வற்றாத நதியை
போல வாயிற்றே??
பொன் மகளே!
இக்கவியை அதனால்
இங்கே துவக்கியுள்ளேன்!
இது தொடருமென்பதை
இயம்பவும் வேண்டுமோ?
இல்லை, இதற்கு
இறுதியில்லை என்பதை
இச்சிறியேன் இன்பமுடன்
இறுதியாய் கூறவும் வேண்டுமோ!!! 
  

2010 ஆம் ஆண்டின் பிறந்த நாளுக்காய்...

2010

தேவாரப் பாட்டெனவே தமிழின் தாக்கம்
     தேரோடும் வீதியெலாம் ஒலிக்கச் செய்த
பாவேந்தர் குலத்துதித்த பாவாய்! உந்தன்
     பண்பாட்டால் உலகிலுள்ள தமிழர் எல்லாம்
நாவசைத்து புகழ்பெருமை பேச வேண்டும்!
     நானிலமும் மதிக்கின்ற புரட்சிப் பாடல்
மாவலிமை பெற்றிங்கே அனைவ ராலும்
     மதித்தொன்றாய் போற்றட்டும்! அமுதைக் காப்போம்!

காசேதான் கடவுள்எனும் கருத்து கொண்டோர்
     கலங்காமல் ஆட்சியினில் இருப்ப தால்தான்
ஈசலென ஊர்தோறும் பலவாய் "கான்வென்ட்"
     இயங்கிடுதே! தமிழுக்கு தடையே அன்றோ?
பேசுவது தமிழ்வாழ்க! புலவர் சொல்லே
     போயிங்கு வந்ததுபார்! "பி.லிட்" காணீர்!
வீசுபுகழ் கவிக்கோமான் இருந்தி ருந்தால்
     வெளிப்படையாய் கேட்டிருப்பார்! தமிழைக் காக்க!

புன்னகையின் பேரரசி! புதுமைப் பெண்ணே!
     புகழ்"குடும்ப விளக்கு"தந்த கவிஞர் தம்மின்
பொன்னகையே! புறப்பாட்டே! பொதுவாம் எண்ணம்:
     பூத்தவளே! சுறுசுறுப்பாய் மின்னும் கண்கள்
கொண்ட"விழி அமுதினி"யைத் தந்த பேரே!
     குலமகளே! கொள்கையினால் "இளங்கோ" உள்ளம்
மென்மையுடன் ஆட்சிசெய்யும் மலரே! உன்னை
     இதயத்தால் வாழ்த்துகிறோம்! வளர்க! வாழ்க!

                                                            {புலவர். இளமுருகு அண்ணாமலை}

பாதாளம் வரை பாய்வது...



பணம்...
பாதாளம் வரை பாயுமாம்!
தெரியவில்லை;

என்அனுபவத்தில்
பாதாளமும் கடந்து பாய்வது
பணத்தைச் சார்ந்தெழும்
பயம்!!! 

விழியமுதினி பிறக்கும் முன்...

என்னப்பன் எனக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்ட தேதி: 24.02.2009
*******

நல்லறத்தின் நாயகியே! இளங்கோ! உங்கள்
      நலம்வளர வாழ்த்துகிறோம்! குழந்தைப் பேறு
இல்லறத்தில் இனிதமைய இறையை வேண்டி
      இதயத்தால் வேண்டுகிறோம்! பலவாய் நாளும்
சொல்லறத்தை வளர்த்திடுக! சுற்றம் நட்பு
      சொந்தத்தை அரவணைத்து மகிழ்ச்சி இன்பம்
தொல்லறத்தால் பெற்றிடுக! தொடரும் வாழ்வில்
      தொடங்கட்டும் தேரோட்டம்! பொதுமை வாழ்க

கண்ணொளியாய்! கடல்முத்தாய்! தமிழின் ஊற்றாய்
      காலமெலாம் நாடுபோற்றும் மழலைச் செல்வம்
தண்ணிலவாய் மலரட்டும்! புரட்சிப் பாடல்
      தந்ததிரு பாவேந்தர் எண்ணம் போல
பெண்ணரசே! பெருமகளே! ஆனோ! பெண்ணோ! 
      பாசத்தைப் பொழியட்டும்! நல்லோர் வாழ்த்த
மண்ணுலகில் மணிமுத்தாய்! காதல் நாளும்
     மலரட்டும்! மணக்கட்டும்! இனிமை வாழ்க!

நல்லகுடும் பம்பலகலைக் கழகம் என்றார்!
     நாவேந்தர்! வழிநடத்து மேலும் மேலும்
கல்விவளம் பெறுவதுடன் காலம் காலம்
     கைப்பிடித்த நீங்கள்மணம் வாழ்வில் பெற்றே 
பல்வளமும் பெருமைகளும் பெறுக! என்றும் 
     பார்முழுதும் தினம்வாழ்த்த பண்பை அன்பை
இல்லறமாம் இதயத்தின் உடமை ஆக்கி
     இன்குளாய்! தேன்தமிழாய்! வளர்க! வாழ்க!

                                                                        {புலவர். இளமுருகு அண்ணாமலை}