திங்கள், ஆகஸ்ட் 27, 2012

தாய்க்குப் பின் தாரம்; தந்தைக்குப் பின் யாராம்???...

(இவ்வலைப்பதிற்காய் எழுதப்பட்ட இரண்டாவது தலையங்கம்) 

     "தாய்க்குப் பின் தாரம்" என நமக்கு நீண்ட நெடுநாட்களாக சுட்டிக்காட்டப்பட்டு வரப்படுகிறது. ஆண்களுக்கு "தாய்க்குப் பின் தாரம்" என்றுரைக்கப் பட்டது போல், ஏன் பெண்களுக்கு "தந்தைக்குப் பின் யார்?" என கற்றுத் தரப் படவில்லை? இந்த எண்ணம் தோன்றியதிலிருந்து நான் அது பற்றி தீர்க்கமாக யோசிக்க ஆரம்பித்தேன். தெளிவான சான்றாக எதுவும் கிடைக்கவில்லை எனினும், எனக்கு சில நியாமான காரணங்கள் தோன்றின. "தாய்க்கு பின் தாரம்" என்பதை(யும்) ஆண்களே வகுத்திருக்க வேண்டும் என தோன்றியது!  அது கூட, ஆணுக்கு (மகனுக்கு மற்றும் கணவனுக்கு), பெண் (குறிப்பாய் தாய் மற்றும் தாரம்) அனைத்து விதத்திலும் உதவியாய், தேவையானதை செய்வதுமாய் இருக்கிறாள்/ இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடுவதற்காய் இருக்கவேண்டும். அவனின் பல தேவைகளுக்கு (திருமணத்திற்கு முன்) தன் தாயை (மற்றும் தங்கை - தமக்கை) சார்ந்தே இருந்து பழக்கப் பட்டுவிட்டான். ஆண் சில செயல்களை (குறிப்பாய் வீட்டு வேலைகளை) செய்வது இழுக்கு என சொல்லிப் பழ(க்)கிவிட்டான். உண்மையில் ஒரு பெண் (அதுவும் முதலில் தாய்) இல்லையெனில், அவனால் தன்னிச்சையாய்/ இயல்பாய் இருக்க முடியாது என உணர்ந்தே இவ்வாறெல்லாம் செய்திருக்கவேண்டும். உண்மையில், தாயின் அன்பு (தாயின் மறைவுக்கு பின்) தாரத்தின் "வடிவில்" கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூட இது சொல்ல முற்பட்டிருக்கலாம். அதன் பின் எங்கோ, எப்படியோ இது தடம் புரண்டிருக்க வேண்டும்!

     நிகழ்கால வாழ்க்கை அவ்வாறு இல்லை; தாய், தாரம் இருவரும் கூட வேலைக்கு சென்று பொருளீட்டுகின்றனர். அதன் காரணமாய், நிறைய இல்லங்களில் இன்று ஆண்கள் தன் தாய்க்கும், தாரத்திற்கும் வீட்டு வேலை உட்பட அனைத்து வேலைகளிலும் உதவியாய் இருக்கிறார்கள். இது ஏதோ, மிகப் பெரிய சாதனை என்று நான் கூறவில்லை; ஆனால், முதலில் அப்படி அணுக வேண்டியது அவசியம் என்று படுகிறது! ஆணாதிக்கத்தின் பிடியில் இருந்து மீண்டு வருவதற்கு பெண்களுக்கு மிகப் பெரிய போராட்டம் (பல சந்ததிகளின் மூலம்) தேவைப்பட்டது; அவர்களின் இழப்பு ஈடு கொடுக்க முடியாதது; அவர்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை என்பதே கசப்பான உண்மை!! எனவே, இது ஆண் - பெண்ணை புரிய ஆரம்பித்து, அவளின் வலியை உணர ஆரம்பித்து, அவனை மாற்றிக் கொண்டு வருவதன் "ஆதியாய்" உணர வேண்டும். நாம் மிகப்பெரிய "காலச் சுழற்சி" நடக்கும் இடைப்பட்ட சந்ததியில் இருக்கிறோம் என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். சமுதாயம் என்பது எப்போதும் சென்ற தலைமுறை நபர்களாகவே, அதிலும் குறிப்பாய் ஆண்களாகவே, இருந்து வருகிறது. அவர்களே, நல்லது கெட்டதை தீர்மானிப்பவராக இருக்கின்றனர்/ இருக்க விரும்புகின்றனர். இந்த காலச் சுழற்சிக்கு ஆற்பட்டிருக்கும் ஆணினம், இந்த சமுதாயத்தையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அவர்கள் தடம் புரளாமல் இருக்க - இதை அணுகும் முறையில் மாறுபாடு வேண்டும் என்று சொல்கிறேன். இது காலப் போக்கில் சரியாகி விடும்; காலம் தான் இதற்கெல்லாம் சரியான மருந்து!.

    சரி, நம் முக்கிய கருத்தாய்வுக்கு வருவோம். ஏன் "தந்தைக்கு பின் யார்" என்பது கற்பிக்க படவில்லை? ஓர் தந்தையால் (ஆண்), எனக்கு பிறகு உனக்கு "உன் கணவன் தான்" அல்லது என் நிலையில் இருக்கப் போகும் "உன் மாமனார் தான்" என்று ஏன் சொல்லமுடியவில்லை? தந்தையெனும் ஓர் ஆண், தன் மகள் இன்னுமொரு உறவு வளையத்திற்குள் செல்கிறாள்; அந்த உறவு வளர உதவியாய் இருப்பது மட்டுமே "இனி தன் வேலை" என்பதை உணர்ந்திடல் வேண்டும். அது எப்படி, ஆணுக்கு - தாய்க்கு பின், இவர் என ஒருவரை நியமித்த பின், ஒரு பெண்ணுக்கு தந்தைக்கு பின் யார் என நியமிக்க மறுத்தான்/ மறந்தான்/ மறுக்கப்பட்டது? என்னுடைய கண்ணோட்டத்தில் ஒரு பெண்ணுக்கு, அவள் தந்தைக்கு பிறகு அவளது கணவன் என்று கூறப்பட்டு இருக்க வேண்டும்!!! இந்த "தாய்க்கு பின் தாரம்" என்ற கோட்பாடு - ஒரு ஆண், அவன் தாய்க்கு பிறகு (தாய் உயிரோடு இருந்தாலும் அல்லது மறைந்திருந்தாலும்) அவனது திருமணத்திற்கு பின், அவன் தாரத்தால் பாதுகாக்கப் படவேண்டும் என்பதையே அடிப்படையாக கொண்டிருக்கவேண்டும்! அப்படியாயின், ஒரு பெண்ணுக்கு (திருமணமான பின்) தந்தைக்கு பிறகு (அவள் தந்தை உயிரோடு இருந்தாலும் அல்லது மறைந்திருந்தாலும்), அவள் கணவனே என்று கூறுவதே சரியாக இருக்க முடியும்!! அவள் கணவன் தானே, தந்தைக்கு பிறகு நல்ல பாதுகாப்பாக இருக்க முடியும்!!! இங்கே நல்ல கணவன் இருந்தால் தானே!; அதனால் தான் ஒரு தந்தை நம்பவில்லை என்று - அடிப்படை இல்லாமல் வாதிக்க கூடாது. பின், மனைவி(யும்) சரியில்லை என்ற (எதிர்)வாதத்தை அது துவக்கி வைக்கும்.

       தன் மனைவி அவளின் தந்தையை பிரிந்து வந்து தனக்கு "தாய்க்கு பின் தாரமாய்" இருக்க விரும்பும் ஓர் தந்தை, அவன் மகள் அவ்வாறு இன்னொரு ஆணுக்கு இருக்க ஏன் விரும்பவில்லை! இங்கு தான் ஆணின் சார்புத்தன்மை ஒளிந்திருப்பதாய் படுகிறது; அதனால் தான் - தாய் மற்றும் தாரம் (மட்டுமல்ல - தங்கை, தமக்கை உட்பட) தொடர்ந்து மகள் வரை - சார்புத்தன்மை நீள்கிறது!! இத்தனையையும் மீறி, பெண்ணை - அவள் எப்போதும் ஆணை சார்ந்து இருக்கவேண்டும்/ இருக்கிறாள் என்று நம்பவைத்த "தந்திரம்" தான் என்னை வியக்க வைக்கிறது!!!  "தந்தைக்கு பின் யார்" என்பதை பின்வருமாறு வரையறுக்க விரும்புகிறேன். "தந்தைக்கு பின் கணவன்" என்பதே அதன் சாரம் என்றாலும், கவித்துவமாய் இருந்தால் நலம் என்பதால்… "தந்தைக்கு பின் தன்னவன்" அல்லது "அப்பனுக்கு பின் அத்தான்"; என வரையறுக்க விரும்புகிறேன். இங்கே, முதலில் எழும் முக்கிய கேள்வி "யார் இதை யாருக்கு எடுத்துரைப்பது?" என்பதே. அதற்கு பதில்; இதை இப்போது இருக்கும் உறவு முறையில் சொல்லி நடைமுறை சிக்கல்களை உண்டு பண்ணுவதை விட, இதை எதிர் வரும் சந்ததியர்க்கு சொல்ல முற்படுவோம். நான், என்னுடைய சுய சிந்தனையின் விளைவாக, என் மகளிடம் இருந்தே இதைத் தொடங்க எண்ணுகிறேன். அவளுக்கு தகுந்த வயது வந்தவுடன் கணவன்/ துணைவன் என்பவன் எவ்வளவு முக்கியம்; அவள் அதை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என சொல்லிக் கொடுப்பேன்; நான் வேறு - கணவன் வேறு!! என்பதை அவளுக்கு நேர்த்தியாய் உணர்த்துவேன்.

       இந்த சிந்தனை வந்ததற்கு மிக முக்கியமான காரணம், இது சொல்லாது/  உணரப்படாது போனால், "மாமியார் - மருமகள்" பிரச்சனை போன்று "மாமனார் - மருமகன்" பிரச்சனை வந்து விடும் என்ற பயம் வருகிறது; உண்மையில் இந்த பிரச்சனை இப்போதே அங்கொன்றும், இங்கொன்றுமாய் உள்ளது; அதற்கு சான்றாய் வந்த ஓர் திரைப்படம் குறித்து கூட முன்பொரு தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். இது இன்னும் பலப்பட்டுவிடுமோ என்பதே என் அச்சம்! ஆழ்ந்து சிந்தித்தால் "மாமியார் - மருமகள்" பிரச்சனையின் அடிப்படை, "தன் மகன்" தன்னை விட்டு விலகி செல்கிறானே என்ற ஒரு தாயின் ஆதங்கம் என்பது அப்பட்டமாக தெரியும். இது நியாமில்லை எனினும் (பின், திருமணம் எதற்கு?) இதைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் இல்லை!! "தாய்க்கு பின் தாரம்" என்பது  ஒரு தாயின் ஆலோசனையின்றி சொல்லப்பட்டிருப்பதாய் படுகிறது; அப்படி ஒரு தாயால் சம்மதித்திருக்க முடியுமெனின், அதை இன்னொரு தாய்க்கு புரியச் செய்து இருப்பாள்; அது ஒவ்வொரு தாய்க்கும் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கும். அப்படி நடந்திருந்தால், இன்று இந்தளவிற்கு "மாமியார் - மருமகள்" பிரச்சனை வந்திருக்காது; இத்தனை காலமாக சொல்லப்பட்ட "தாய்க்கு பின் தாரம்" என்ற தாரகத்தால் "மாமியார் - மருமகள்" பிரச்சனை தீர்க்கப் படவில்லை எனில், "தந்தைக்கு பின் யார்" என்று இன்னமும் சொல்லப் படாமல் இருந்தால் "மாமனார் - மருமகன்" பிரச்சனை எப்படி தலையெடுக்காமல் இருக்கும்? இதை "இளைதுஆக முள்மரம் கொல்க" என்ற 'குறள்' போல் அடிப்படையிலேயே உடைத்தெறிய வேண்டும் என தோன்றிற்று! அதற்காகத் தான் இந்த தலையங்கம்!!

தந்தைக்கு பின் தன்னவன்!!!

பின்குறிப்பு: ஓர் தந்தையாய், என்னை முதல் நிறுத்தியே இதை துவங்கி இருக்கிறேன். இதை ஒவ்வொரு தந்தையும் உணர ஆரம்பித்து விட்டால் இந்த பிரச்னையை வரும் முன்னரே தடுத்து விடலாம் என்பதே இத்தலையங்கத்தின் தலையாய நோக்கம். இதன் மூலம் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை/ ஒரு வலிமையான உறவுப் பாலத்தை உருவாக்க முடியும் என்பது என் திண்ணமான எண்ணம். நாம் ஏன் இந்த மாற்றத்தை இப்போது துவக்கி வைத்து, அதன் பலனை எதிர் வரும் சந்ததியர்க்கு அளிக்கக் கூடாது. இது "தேவர் மகன்" திரைப்படத்தில் வரும் "மரத்திற்கான விதையிடுதல்" குறித்த விளக்கம் போல தான். அங்கே பலனாக "பழம்" குறிப்பிடப் பட்டது; இங்கே கிடைக்கும் பலன் "வலிமையான உறவுப் பாலம்". 

மொழி - ஒற்றுமையா? வேற்றுமையா??மொழி…
மனிதனும், மிருகமும்
உணர்வைப் பகிர்வதற்காய்
உருவான "வழி"!
மொழி; மிருகத்திற்கு -
மிதமான உணர்வாயிருக்கையில்;
மனிதனுக்கு மட்டுமேன்,
மமதையாய் மாறிற்று?

மொழியின் மாற்றம் -
மனிதனின் உணர்வை;
சரிவர பரிமாற்றம் -
செய்யாததன் விளைவோ!
மாநிலமும், நாடுகளும்?
மமதையான உணர்வு;
உலகையே சிதைக்குமெனின் -
உயிர்மொழி விதிவிலக்காயென்ன??

இதர நாடுகளுக்கெல்லாம்
இம்மொழியானது; புரிதலில்(மட்டும்)
தொல்லையாய் இருக்கும்போது -
"எல்லையாய்"; இந்தியனுக்கு
மட்டுமேன், மாறிப்போனது?
மொழிகள் பலவென்பதாலா??
மொழியுணர்வு வேறென்பதாலா???
மொழிமட்டுமே காரணமா!

இல்லையென்று கூச்சலிட்டு,
இறுதியாய் கதறிட்டு;
இயம்பிட தோன்றுகிறது!
இந்தியாவில் தானே;
இம்மொழி வேறுபாடு?
இலங்கைத் தமிழன்;
இனிதாய் பேசுவது -
இலக்கணத் தமிழ்தானே??

இருந்துமேன், என(நம)க்கு;
இனவுணர்வு வரவில்லை?
நாடு வேறென்பதாலா??
நா(ந)ட்டமில்லை என்பதாலா???
மொழியென்பது; ஏனின்னும்;
மனிதத்தை மட்டுமாவது -
இணைக்கவில்லை? பின்னெப்படி
இதர-கண்டங்களை இணைக்கும்??

ஓரிடத்தில் மொழியே;
ஒற்றுமையை ஒழிக்கிரதென்று!
ஓங்காரமிடும் - தமிழா!!
ஓலமிட்டு அழுதும்;
ஒன்றிட்ட மொழியிருந்தும்;
ஒன்றுபட்டு ஏனின்னும்!
ஒழிப்பவர்களை ஒடுக்க;
ஒற்றுமையோடு எழவில்லை?

வேற்று நாட்டவனென்று;
வேறுபட்டு நிற்கிறாயோ?
இருப்பின், மொழியெனும்;
இடரகற்றி - இந்தியனெனும்!
உணர்வேணும் கொள்;
உலகின் மூத்தவினம் -
தமிழினத்தின் வீர(ப்பாரம்பரிய)த்தை;
தரம்தாழ்த்தி விடாதே!!

ஆண்மை - திமிரும், உணர்வும்!!!ஆண்மையெனும் திமிர்;
ஆணவத்தின் மூலமாகும்!
ஆனந்தத்தின் ஆதிவேராம் -
ஆண்மையெனும் உணர்வின்றேல்;
ஆணவம் ஆள்-மாரும்!!
ஆகையால்; கேளீர்...
ண்மைத்"திமிர்" அகற்றி;
ஆண்மை"யுணர்வு" வளர்ப்போம்!!!

இன்னா செய்தாரை ஒறுத்தல்...


இலக்கியத் தமிழை;
இனிதே கற்றவர்க்(கு)கே!
"இன்னா-செய்தாரை" ஒறுப்பது;
இயலாது போதலை -
என்னென்று சொல்வது!!!
எவரவர்க்கு இயம்புவது???

அழுகையும், காதலும்...அழுதல்…
நிசத்தில் எளிது!
நடிப்பில்; கடுஞ்சிரமம்!!
காதல்…
நடிப்பில் எளிது!
நிசத்தில்; கடுஞ்சிரமம்!!

மறுமுகம்...எல்லாவற்றையும் சகிப்பதாய்;
எல்லோரையும் ஏமாற்றும்!
தம்பதியர்  ஒ(இ)ருவரே,
தன்னிலை உணராது;
மற்றவரிடம் {மறைந்(த்)த}தன் -
மறுமுகம் காட்டுவர்!!!

முதல் திருமணம்…
இரண்டாவதில் இன்புற்று,
இணைந்திடின்; எளிதாய் -
முயற்சியின்றி(யே) மற(றை)ந்திடும்;
முதல் திருமணம்(காதல்)!!!

ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012

இந்திய இளைஞர்களின் உண்மை முகம்...

(தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றை கருவாகக் கொண்டு எழுதப்பட்டது) 

      பெரும்பான்மையான ஊடகங்கள் - பலதரப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலமும், சில உண்மை சம்பவங்கள் மூலமும்; இந்திய இளைஞர்கள் தவறான வழி நடப்பதாயும், சமுதாய அக்கறை இன்றி இருப்பதாகவும் தான் சித்தரித்து இருக்கின்றன. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள்/செய்திகள் தொடர்ந்து வெளிவந்து, "இளைஞர்கள், அப்படித்தான்" என்ற முடிவிற்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். இரண்டு நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியை பார்க்கும் முன்னர் கூட நான் அத்தகைய எண்ணத்துடன் தான் இருந்தேன்; ஆனால், அந்த நிகழ்ச்சி என்னை புரட்டிப்போட்டது! உண்மை நிலையை சாட்டையடி போல் உணர வைத்தது!! இதை என் போன்று தவறான கண்ணோட்டத்தில் உள்ளவர்களுக்கு புரிய வைப்பதை என் கடமையாய் உணர்ந்தேன்!!! இவ்வலைப்பதிவு தொடங்கிய நாள் முதல் கிடப்பில் போட்டிருக்கும் இரு தலையங்களுள் ஒன்றை இந்த வாரம் வெளியிட வேண்டும் என்று உறுதியாய் இருந்தேன். ஆனாலும், இந்த நிகழ்ச்சியை பலரிடம் உடனடியாய் கொண்டு சேர்ப்பது என் தலையாய கடன் என்பதால், இந்த தலையங்கத்தை எழுதி விட்டேன். முதலில் - சில தகவல்களுக்காய் - அந்நிகழ்ச்சியை மீண்டும் தேவையான இடத்தில் பார்த்து மிகவும் நுணுக்கமாய் எழுதவேண்டும் என்று தீர்மானித்தேன். அது செயற்கையாய் போய்விடும் என்பதால், என்னுள் இந்நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கத்தை என் நினைவில் உள்ளது போல் எழுதவேண்டும் என்று தீர்க்கமாய் முடிவு செய்தேன்; மேலும், அதை பார்க்கவேண்டும் என்று உங்களுக்கு தூண்டினால் போதுமானது என்றுணர்ந்தேன்.

    என்னுடைய வலைப்பதிவில் மற்றவரைப் பற்றி விளம்பரம்-போல் எழுதக்கூடாது என்பதில் நான் மிகவும் கண்டிப்பாய் இருந்தேன். அதனால் தான் சில பிரபலங்களைப் பற்றி கூறும் போது, அவர்களின் பெயரை இருட்டடிப்பு செய்தேன். சமீபத்தில், "ஜெர்மனி" நாட்டில் வசிக்கும் "அருள் சக்கரவர்த்தி" என்ற நண்பன், நான் அம்மாதிரியானவர்களை கண்டிப்பாய் நேரடியாய் கூறவேண்டும் என்று விமர்சித்தான். அவனின் விமர்சனம் ஒரு முக்கிய காரணம், நான் இந்த நிகழ்ச்சியை நேரடியாய் விவரிப்பதற்கு. நான் குறிப்பிடும் நிகழ்ச்சி "நீயா நானா" விவாத நிகழ்ச்சியில் இந்த 2012 ஆம் ஆண்டு "சுதந்திர தினத்தை" முன்னிட்டு எடுத்துக்கொண்ட கலந்துரையாடல் பற்றி தான். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், இந்த "பசங்க" என்னத்த பேசிடப்போறாங்க! என்ற என் அசட்டுத்தனத்தை முதலிலேயே ஓர் இளைஞன் உடைத்தார்; "பகத்சிங்" என்ற மாவீரனின் வெளி உலகத்திற்கு தெரியாத மற்ற பரிமாணங்களை கூறியதன் வாயிலாய்! எனக்கு விழுந்த முதல் சாட்டையடி அது; அதன் பின் விழுந்தது அடி மேல் அடி. இளைஞன் - இளைஞி என்ற எந்த பாகுபாடுமின்றி அனைத்து இளைஞர்களும் அவர்களை பாதித்த "ஆளுநர்கள்"  பற்றி எடுத்து வைத்த விவாதங்கள் மெய்-சிலிர்க்க வைத்தன. கண்டிப்பாய் பேசிய அனைவரும், நிகழ்ச்சியில் பேசவேண்டும் என்பதற்காய் அவசரமாய் படித்துவிட்டு வந்து பேசவில்லை. அவரவரின் ஆளுநர் பற்றி - ஆழப்படித்து, மிக ஆழமாய் சிந்தித்து, சிறிதும் உணர்ச்சிவயப்படாது - "நிதானமாய்" பேசினார்கள். 

     மிகவும் முக்கியமான ஓர் விசயம், அனைத்து இளைஞர்களும் இன்றைய நடைமுறை வாழ்க்கையோடு மிக நேர்த்தியாய் அவரவரின் ஆளுநரின் கருத்துக்களை கோர்த்து பேசியது தான். ஓர் இளைஞி பாரதியின் "பெண் விடுதலை"-க்கு காரணியான விசயங்கள் இன்று வர்த்தக-நிறுவனங்களில் எப்படி நவீனமாய் கையாளப்படுகிறது என்பதை அருமையாய் விவரித்தார். ஓர் இளைஞன் "தந்தை பெரியாரை" பிரபலமான (தொடராய் வெளிவந்த) ஓர் திரைப்படத்தின் கதாப்பத்திரத்தோடு கச்சிதமாய் ஒப்பிட்டு, அவரைப்பற்றி எடுத்து வைத்த கருத்துக்கள் அனைத்தும் மிகவும் அற்புதம். பேசிய அனைவருள், மிகவும் பாத்தித்த இளைஞர் பேசியது "அம்பேத்கர்" பற்றியது; அவர் பேசும்போதே, வழக்கமான பரிசு அவருக்கு என்பது உறுதியாயிற்று. அவரின் ஒரு கேள்வியை மட்டும் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்; "சமுதாய விஞ்ஞானி" (Social Scientist) இருந்த போது "தொழில்நுட்ப விஞ்ஞானி" (Technological Scientist) இல்லை!; இன்று தொழில்நுட்ப விஞ்ஞானிகள் பல்கிப்பெருகி இருக்கும்போது, சமுதாய விஞ்ஞானிகள் வெளிவரமுடியாத நிலை ஏன்? என்பது தான் அவரது கேள்வி! மிகவும் எளிதான வார்த்தைகளைக் கொண்டு-எதார்த்தமாய் பேசிய அவர் ஓர் துயர செய்தியையும் கூறினார்; அது, சாதி காரணமாய் அவரின் நண்பன் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை என்ற கசப்பான உண்மை - மனம் கலங்கிவிட்டது (சற்று சிந்தியுங்கள்! சுதந்திரம் கிடைத்து எத்தனை ஆண்டுகள் கழித்து இன்னமும், இவ்வாறு நடக்கிறதென்று???).

  சிறப்பு விருந்தினர்களில் ஒருவர் மீண்டும் "அம்பேத்கர்" பற்றி பேசினார்; அவர் பெயர் "முத்துகிருட்டிணன்" என்று நினைக்கிறேன்; அவர் அடிக்கடி "நீயா நானா" நிகழ்ச்சியில் சிறப்பு-விருந்தினராக வருவதுண்டு. பலவிதமான சமுதாய காரணிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒருவர். அவர் அம்பேத்கர் பற்றி ஒரு விஷயத்தை கன்னத்தில் அறைந்தார்போர் பின்வருமாறு கூறினார்: "சேரியே வேண்டாமென்று சொன்ன மாமேதையின் படைப்புகள், நூலகத்தில் ஒரு அலமாரியில் அடுக்கி - சேரியை - போன்று ஒதுக்கி வைத்திருக்கின்றனர்" என்பது தான்; எவ்வளவு கசப்பான உண்மை. மேலும், பள்ளியில் குழந்தைகள் பயிலும் வரலாற்று நிகழ்வுகளில் அம்பேத்கரின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டிருகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார். இன்னுமொரு சிறப்பு விருந்தினரான, திரு. தமிழருவி மணியன், அவர்கள் காந்தி, நேரு போன்ற தலைவர்களைப் பற்றி சுருங்க கூறினார். அவர் காந்தி பற்றி கூறிய ஒரு விளக்கம் என்னை மிகவும் கவர்ந்தது; "காந்தி ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்று இரண்டு குணாதிசயங்கள் கொண்டவர் - ஒருபுறம் உண்மை இருக்கும்; மறு புறம் அன்பு இருக்கும்" என்றார். என்னவொரு அருமையான விளக்கம். இன்று பலவிதமான பிரச்சனைகளுக்கும் காரணம் உண்மையும், அன்பின்மையும் தான் காரணம்; ஒன்று இல்லாதிருப்பதோ அல்லது இரண்டும் இல்லாதிருப்பதோ அல்லது இரண்டும் சரிவர கலக்காததால் தான் விளைகிறது. இவ்விரண்டையும் என்னுடைய படைப்புகளில் அடிக்கடி வெளிப்படுத்தி இருக்கிறேன். 

    இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் திரு. கோபிநாத் அவர்களைப் பற்றி நிறைய கூறிக்கொண்டே செல்லலாம். பலமுறை அவரைப் பற்றி சொல்ல எண்ணியும், தனி நபர் விளம்பரம் கூடாது என்ற எண்ணத்தால் பலமுறை சொல்லாது தவிர்த்து இருக்கிறேன். பல துறைகளைப் பற்றியும் அதிக ஞானமும், கருத்து-வன்மையும் கொண்ட மனிதர்; எக்காரணம் கொண்டும் எவரும் தவறான வழியில் பேசும்போது கண்டிக்க தவறாதவர். எந்த விவாதத்தையும் அவர் நிறைவு செய்யும் போது கூறும் சொற்றொடர்கள் மிகவும் வலிமையாய் இருக்கும்; இந்த நிகழ்ச்சியும் அவ்வாறே! அவர் இறுதியாய் கூறியது "இன்றைய இளைய தலைமுறை அவரவர் ஆளுநர்கள் பற்றி சாட்டையால் அடித்தது போல் அடித்து கூறி இருக்கிறார்கள்; வலி உணர்ந்தவர்கள் இதை திருத்திக்கொள்ளவும்; வலி-தெரியாதவர்கள் இன்னுமொரு முறை அடி வாங்கலாம்" என்று கூறி முடித்தார். உண்மை தான்! நான் வலியை முழுமையாய் உணர்ந்தேன்; நான் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று தெளிவாய் விளங்கிற்று. தீண்டாமை துவங்கி - உண்மை பேசுதல் வரை அனைத்து விசயங்களையும் நானே (எனக்குள் விவாதித்து) தான் என்னுடைய சூழ்நிலையை கொண்டு  விளங்கிக் கொண்டுள்ளேன். என்னுடைய அனைத்து புரிதல்களும், எவரோ ஒருவர் விரிவாய் அனுபவ-ரீதியாய் விளக்கி இருக்கிறார் என்பது தெரியும்; ஆயினும், அவற்றை படித்து அறிய நான் பெரிதாய் முயற்சி செய்ததில்லை - ஒரு சில செய்திகள் தவிர. இந்நிகழ்ச்சியை பார்த்தவுடன், இனிமேலாவது குறிப்பிட்ட சில சிறந்த ஆளுநர்களைப் பற்றியாவது படிக்கவேண்டும் என்ற சிந்தனை வலுத்துள்ளது. ஒரு சிலர் தவறான பாதையில் செல்வதை ஒப்புக்கொண்டாலும், கண்டிப்பாய் இன்றைய இந்திய இளைஞர்கலில் பெரும்பான்மையோனோர்…

முற்போக்கு சிந்தனை கொண்டவர்களே!!!

பின்குறிப்பு: என்னுடைய ஆராய்ச்சி படிப்பின் போது (ஆராய்ச்சியாளர் சங்க தலைவராய் இருந்த சமயம்) மாணவர்களை ஒன்றிணைத்து, அவர்களின் மூலம் ஓர் கட்சி துவங்கி நாட்டிற்கு நல்லது செய்யவேண்டும் என்ற ஓர் இலட்சிய-கனவு இருந்தது; இன்னமும் கனவாகவே இருக்கிறது! அதற்கு பெயர் கூட இட்டிருந்தேன், Students Integrity Resource (மாணவர்கள் ஒருங்கிணைப்பு சக்தி) என்று! அதை SIR என்று சுருக்கி  அனைத்து உறுப்பினர்களின் பெயருக்கு முன்னாள் "அடைமொழியாய்" இடவேண்டும் என்று கூட முடிவெடுத்தேன். என்னுடைய பொருளாதாரம் மற்றும் மற்ற சூழல்கள்  என்னை அவ்வாறு செய்திட முடியாது செய்து விட்டது. எனினும், இன்னமும் கூட அந்த கனவு என்னுள் தொடர்ந்து கொண்டே தானிருக்கிறது. இந்த சிந்தனை சார்ந்த பல திரைப்படங்கள் கூட (தமிழில்) பிற்ப்பாடு வந்துள்ளது; வேறு எவரேனும் கூட இதை செய்திடின், எனக்கு சந்தோசமே!! என்னால் இயன்ற உதவிகளை கண்டிப்பாய் அவர்களுக்கு செய்திடுவேன்!!!                                

திருமணம்...திருமணம் - மறுப்பேதுமின்றி,
துருவங்கள் இரண்டை -
இனையாதென்று தெரிந்தே;
இணைக்கும் முயற்சி!
உண்மை உரைக்காது;
உணர வேண்டுமென்று!!
நிதர்சனம் தெரிந்தோர்...
நிகழ்த்தும் சூழ்ச்சி!!!

பொருத்தம் பலவிருந்தும்;
பொதுமையில் பலனென்ன?
ஒன்றுக்கொன்று பொருந்தினும்,
ஒன்றுடனொன்று பொருந்தாதன்றோ??
என்பணம்! என்னினம்!!
என்றெண்ணம் மேலோங்கின்;
இருமனங்கள் ஒன்றாய்
இணைதல் எங்கனம்???

உறவுச்சங்கிலியில் புதியதாய்;
உருவாகும் இணைப்பைவிட!
பழைய இணைப்புகள்;
பாழடைவதே அதிகம்!!
உதிரும் இணைப்புகள்;
உறவுகளை தளர்த்திடும்!!!
உறவுகள் உதறி;
உவர்ப்பாய் வாழ்வதெதற்கு??? 

ஒவ்வாதென்ற "ஓரினச்சேர்க்கை"
ஓங்கி வளர்வது;
ஒத்த துருவங்கள்
ஒன்றையொன்று கவருமென்பதாலா?
ஒவ்வாத இச்சேர்க்கை -
ஒழுக்கத்தை சிதைத்து;
ஒப்பற்ற மனிதத்தை
ஒழித்து விடாதா??

ஆயின்! திருமனமென்ற
அழகியல் அழிந்துவிடாதா?
அழிவை தடுத்து
அழகியல் வளர்க்க;
இறைவனோ, இயற்கையோ
இன்வழி ஈயவில்லையோ??
வலிமறந்து தேடிடின்;
வழியொன்று புலப்படும்!!!

குழந்தை ஒன்று,
குதூகலமாய் வந்திடின்!
பிரிவினைகள் அனைத்தும்;
பின்வாங்கிடும்; பின் -
இல்வாழ்க்கை என்றும்;
இனிதே சிறந்திடும்!!
ஆயினும், அதுவரை;
ஆணவம் ஆதிக்காதிருக்கட்டும்!!!

தந்தைக்கு தரம்...


தன்-தந்தையை தன்னவனும்;
தரமாய் நடத்திடவேண்டுமெனும்…
பெண்களே! முதலில்;
பிறரின் தந்தையை!
போற்றிட பழகுங்கள் -
பெற்ற உம்ம(க்)களின்;
"தந்தையையும்" சேர்த்தே!…
ன்தந்தைக்கு தானே-கிட்டும்!!!

தாய்க்கு தரம்...தன்-தாயை தன்னவளும்;
தரமாய் நடத்திடவேண்டுமெனும்…
ஆண்களே! முதலில்;
அடுத்தவரின் தாயை!
அரவணைக்க பழகுங்கள் -
அமுதுவிழி உம்ம(க்)களின்;
"தாயையும்" சேர்த்தே!…
தன்தாய்க்கு தானே-கிட்டும்!!!

பசுமரமும், பாலகரும்...பசுமரத்தில் ஆணியாய்,
பாலகர் நெஞ்சில்;
நஞ்சை பாய்ச்சுவது -
நிசத்தில் எளிதெனினும்;
பசுமரம்(பாலகர்) முதிர்ந்ததும் -
புறமுதுகிடும் ஆணி(நஞ்சு)!!!

பொய்யாகும் மெய்யர்...


பெய்யென பெய்யும்
பேய்மழையில் கண்ணீராய்;
பொய்யென பொய்க்கும்
பொய்யர்களின் மத்தியில்;
பொய்க்காமல் கலக்கும்,
மெய்யர்தான் பொய்யரோ?

நிலா(ப்பெண்)...இரவு நேரத்தில்
இன்ப அலைகளை
அதிர்வுறச் செய்து;
அதிகாலை விடைபெற்றாள்!
ஏதும் சொல்லாமல்;
ஏனேதும் சொல்லவில்லை?
நித்திரையில் இருந்ததால்
நினைவில் பதியவில்லையோ???

வலியை, வலியால் வெல்லலாம்...எந்த வலியும்
எளிதாகும்; வலிமையான
வலி வரின்!
வலியை, வலியால்;
வெல்லலாம்!! பெருவலி -
வாய்க்காததால் தான்,
"உச்ச"வலி என்றெண்ணி;
உயிரை துறக்கின்றனரோ???

திங்கள், ஆகஸ்ட் 13, 2012

சமையல் எனும் கலை...       சமையல் ஓர் அற்புதமான கலை! அதை அன்யோன்யமாய் அனுபவித்து செய்பவர்க்கு அக்கலையின் உன்னதம் புரியும். எனக்கு மிகவும் பிடித்த, நான் அனுபவித்து செய்யும் விசயங்களில் "சமையலும்" ஒன்று. அக்கலையின் மகத்துவத்தை என்னுடைய பார்வையில் வழக்கம் போல், நம்முடைய நடைமுறை வாழ்க்கையை கலந்து எழுதவேண்டும் என்று தோன்றியது. இத்தலையங்கம் எழுத இன்னுமொரு காரணம், சமையல் குறித்து "இவ்வலைப்பதிவில்" ஒரு பகுதி துவங்கி அதில் என்னுடைய சமையல் குறிப்புகளை வெளியிடவேண்டும் என்ற என்னவளின் கோரிக்கை. ஆம்! என் சமையலின் முதல் "விசிறி" அவள் தான்!! கூடிய விரைவில் என்னவளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்!!! நான் சமையலை வெறும் பொழுதுபோக்காய் பார்க்கவில்லை; சமையல் என்பது எனக்கு "தியானம்" போன்றது. உண்மைதான்! என்னுடைய மிக துக்கமான/வெறுமையான சூழல்களில் நான் சமைக்க ஆரம்பித்து விடுவதுண்டு; சமையல் செய்ய எண்ணமும், செயலும் ஒருமுகப்படவேண்டும். இரண்டும் ஒரு சேர இணையவில்லை எனில் சமையல் சரியாக வராது; எப்படி வேண்டுமானாலும் சமைக்கலாம் என்பது இருக்கலாம்; ஆனால் அதை கலையாய் பார்க்கும்போது, இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரைமுறை அவசியமாகிறது. மிக கவனமாய் இருத்தல் அவசியம்; அந்த கவனம் வரும்போது, இயல்பாய் நாம் அதை மனம் ஒன்றி செய்ய ஆரம்பித்து விடுவோம். என்னுடைய பல படைப்புகள், நான் சமைக்கும்போது உருவானவை/ உருமாறியவை .

   என்ன இது? சமையலுக்கும், உணவுக்கும் இத்தனை முக்கியத்துவம் வேண்டுமா?? என்று சிலர் வினவக்கூடும். எந்த இடத்தில் எந்த விதமான உணவு சுவையாய் கிடைக்கும் என்று நாம் விவாதிப்பதுண்டு; பின் சமையல் எனும் செயலை ஓர் கலையாய் அணுகுவதில் என்ன தவறு? நம்முடைய தாயும், தமக்கையும், தங்கையும் இதைத் தானே செய்தனர்?? அவர்களுக்கு உணவு இல்லை எனினும், மனமுவந்து செய்தது அத்தனையும் நமக்காய் பரிமாறுபவர்கள் தானே???  தினமும் மூன்று வேலை சமைக்கவேண்டும் என்று கட்டாயம் இருந்தபோதும், எந்த சூழ்நிலையிலும் அவர்கள் இதை மனமுவந்து செய்வது எங்கனம் சாத்தியம் ஆனது? அவர்கள் அதை கலையாய் இரசித்து, தியானம் போல் அமைதியாய் செய்ததால் தான் சாத்தியப்பட்டிரூக்கக்கூடும்! இதை எழுதும் போது ஒரு கேள்வி எழுந்தது!! "நலபாகன்" துவங்கி இன்று பெரும்பான்மையில் வணிக-ரீதியாய் ஆண் தான் சமையல் செய்கிறான்; ஆனால், வீடு என்று வரும்போது மட்டும் ஏன் பெண்தான் சமைக்கவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறான்?? வீட்டில் ஆண் சமைப்பது தவறென்று, எவர் அவனுக்கு உரைத்தது??? ஒருவேளை, சமையல் என்பதை ஓர் ஆண் கலையாய் பார்க்கத் தவறியதால் இருக்கக்கூடுமோ! ஆனால் இன்றைய தலைமுறையில் இது சற்று மாறி இருக்கிறது!! பெண்ணும் வேலைக்கு செல்வது அவசியம் என்று ஆனதால் கூட இருக்கலாம். பொருளாதாரப் பிரச்சனை ஓர் வழியில் ஆணை (குறைந்தது) இந்த விசயத்திலாவது பண்படுத்தி இருக்கிறது என்பது நல்ல விசயமே.

       சமையலில் என் குரு, என்னுடைய தமக்கை! எப்போது எந்த சந்தேகம் எனினும், உடனே அவருக்கு தான் தொ(ல்)லைபேசுவது வழக்கம்!! என்னுடைய தமக்கையின் குறிப்பில் எனக்கு எந்த தயக்கமும் இருந்ததில்லை; அவர் என்ன செய்ய சொல்கிறாரோ அதை அப்படியே செய்வேன்; அந்த அளவிற்கு நம்பிக்கை. என் தமக்கையின் சமையலில் அதிகமான வகையறாக்கள் இருக்கும்; புதிது புதியதாய் அவர் எதையாவது கற்று, கேட்டு செய்து கொண்டே இருப்பார். அவரின் மீதிருந்த நம்பிக்கையும், அவரின் சமையற்-திறமையும் தான் "சமையலை" ஓர் கலையாய் பார்க்கும் மனோபாவத்தை என்னுள் விதைத்தது. பின், என் தொழில் சார்ந்த ஆராய்ச்சி-அறிவை சமையலிலும் புகுத்த ஆரம்பித்தேன்; அதனால், நானே புதிது-புதியதாய் செய்த உணவு வகைகள் ஏராளம். சமீபத்தில் கூட, கோழி-முட்டையையும், மீனையும் இணைத்து ஒரு குழம்பு செய்ய கற்று அதை என் நண்பர்களுக்கும் ஓர் நாள் செய்து கொடுத்தேன். அதை அவர்கள் வெகுவாய் பாராட்டி சுவைத்தார்கள் (உண்மை எனவே நம்புகிறேன்!!!). ஒரு முறை, என் தமக்கை வழக்கத்திற்கும் அதிகமான நபர்களுக்கு உணவு செய்ய ஆரம்பித்து, பாத்திரம் சரியாய் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது! உடனே, நான் எத்தனை விகிதம் அரிசி மற்றும் தண்ணீர் என்று கேட்டு இரண்டையும் அந்த பாத்திரத்தில் சேர்த்து, இதற்கு மேல் உணவு வராது என்று உறுதியளித்தேன். அவர்களும் என்னை நம்பி சமைத்து அதே மாதிரி வந்தது கண்டு அனைவரிடமும் பெருமையாய் கூறினார். அதில் பெரிய விசயம் எதுவும் இல்லை; கவனம் குறையாது, ஓர் கலையாய் எண்ணி சமைக்க ஆரம்பிக்கும் போது, இது ஓர் சாதாரண விசயம் என்பது புரியும்.

      என்னுடைய ஆராய்ச்சி அறிவு மட்டுமலாது, என்னுடைய சூழலும் எனக்கு நிறைய உதவி செய்து இருக்கிறது. முதலில், தனியாக இங்கே இருப்பதால் நானே சமைக்க வேண்டிய நிர்ப்பந்தம்; அதுதான் முதலில் சமையல் செய்ய எனக்கு வாய்ப்பு அளித்தது. சமையலின் மீது ஓர் ஈர்ப்பும் பிடிமானமும் வந்த பின் இங்கே பல நாட்டவர் சமைக்கும் சமையலை காணவும், அதை சுவைக்கவும் நிறைய சந்தர்ப்பம் கிடைத்தது. நம் நாட்டில் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சமைக்கும் வித்தியாச உணவுவகைகள் மட்டுமன்றி; நம் மாநிலத்தின் பிற பகுதிகளைச் சார்ந்தவர் சமைக்கும் பலதரப்பட்ட உணவு வகைகளை அறிய முடிந்தது. ஒவ்வொரு புதிய உணவு வகையையும், நம் பழக்கத்திற்கு ஏற்றார்ப்போல் மாற்றி சமைக்கும் திறனும் வளர்ந்தது. இவ்வாறாய் என்னுடைய சமையலின் திறன் படிப்படியாய் வளர்ந்து அதை ஓர் கலையாய் பாவிக்கும் நிலையை அடைந்த பின் சமைப்பது எனும் செயல் எந்த நெருடலும் இல்லாது-இயல்பாய், இனிதான ஓர் நிகழ்வாய் மாறிற்று. எந்த ஒரு கலையின் மேலும் ஓர் ஈர்ப்பு வர முதலில் வாய்ப்பு கிடைக்கவேண்டும்; பின்பு அதில் பல்வேறு வகைகள் இருக்கவேண்டும்; அதன் பின் அந்த கலையின் மேல் நமக்கு ஈடுபாடு வரவேண்டும். இவை அனைத்தும் எனக்கு தானாய் சமையல் எனும் கலை மேல் வந்தது. எவர்க்கும் சமைப்பதர்க்காய் நான் வருந்தியதே இல்லை; எவரெவற்கோ சமைத்ததால், என்னவளுக்காய் சமைக்க நான் தயங்கியது இல்லை. நமக்கு பிடித்த வேலை செய்வதற்கு தயக்கம் எப்படி வரும்?

       என் அனுபவத்தின் வாயிலாய், நான் அடிக்கடி பிறரிடம் குறிப்பிடும் ஓர் செய்தி "சமைப்பதை விட கடினமான விசயம், சமைத்த பின் பாத்திரங்களை கழுவது" என்பது தான். சமைத்து முடித்து, பாத்திரங்களை கழுவி அனுபவித்தவர்களுக்கு இதன் அர்த்தமும், வலியும் புரியும். இதை அனுபவப்பூர்வமாய் உணரும் முன்னரே எனக்கு ஓர் பழக்கம் உண்டு; எவர் வீடாய் இருப்பினும் சாப்பிட்டு முடித்தவுடன், சாப்பிட்ட தட்டை கழுவும் வழக்கம்; அல்லது சாப்பிட்ட இலையை எடுக்கும் வழக்கம். எனக்கு தெரிந்து கிட்டத்திட்ட இருபது வருடங்களாய் இந்த பழக்கத்தை கடைபிடிக்கிறேன். எவரேனும், தட்டை கழுவ வேண்டாம் என்று கண்டிப்பாய் வற்புருத்தின் கூட "சாப்பிட்ட எச்சத்தை"-யாவது எடுத்து குப்பையில் போட நான் ஒருபோதும் தவறியது இல்லை. நாம் சாப்பிட்ட எச்சத்தை இன்னொருவர் (எவராய் இருப்பினும்) தொடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை; என் வீட்டில் எவரும் செய்யும் போது, நான் மறந்தும் அதை மறுப்பது இல்லை. முடிந்தால், இதைப் பழகிப் பாருங்கள்; இந்தப் பழக்கம் வந்ததாலோ என்னவோ, பாத்திரங்களை கழுவுவதும் எனக்கு இயல்பாய் வந்தது. நான் சமைத்து முடிக்கும் போது, நான் உபயோகித்த அத்தனை பாத்திரங்களும் சுத்தமாய் கழுவி இருக்கும். சமையலின் இடையில் அதிக நேரம் கிடைக்கும்; அப்போதே எளிதாய் பாத்திரங்களை கழுவி விட முடியும். அவ்வப்போது தேவை இல்லாமல் சமைத்து விட்டு பாத்திரத்தை கரைபிடிக்க வைத்து "திட்டு வாங்கும்" நிறைய கணவர்களை எனக்கு தெரியும்; என்னப்பன் அவ்வப்போது வாங்கிக்கொள்வார். எனவே, சமைக்க தெரியவில்லை எனினும் பரவாயில்லை! குறைந்த பட்சம் முதலில்…

பாத்திரங்கள் கழுவவாவது முயற்சிப்போம்!!!

பின்குறிப்பு: பெரும்பாலும் மனைவி/தாய் குறையாய் கூறுவது, "சாப்பிட்டுவிட்டு எப்படி இருந்தது என அவர்(சாப்பிட்டவர்) ஒரு வார்த்தை கூட கூறியது இல்லை" என்பது தான். சாப்பிட்ட உணவு நாவால் சுவைக்கப்பட்டு தொண்டையில் இருக்கும் போது இல்லையெனினும், சாப்பிட்ட பின்னாவது, சமையலைப் பற்றி பாராட்டுங்கள். வெளியே சென்று "என் மனைவி (அல்லது தாய்) எப்படி சமைப்பாள் தெரியுமா? என்று பெருமை-பேசுவது மட்டும் போதாது! அவர்களிடம் நேரிடையாய் சொல்ல வேண்டும்!! சமைக்க தெரியவில்ல எனினும், அவர்களின் கடின உழைப்பை உணர்ந்து பாராட்டியாவது பேசுங்கள்; அது தான் சமைத்தவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம்!!!

முதல் பார்வை...


 
விமானப் பயணம்!
விடிந்த நேரம்!!
தூக்கம் கண்கூடாது;
தூரமாய் சென்றது!!! 

அயர்ச்சியும், புத்துணர்ச்சியும்
அளவளாவின தருணம்;
என்ன செய்வது?
எவரிடம் பேசுவது??

சிந்தனை தொடர்ந்தது!
சிறகினை விரித்தது!!
பார்வை படர்ந்தது;
பாரபட்சமின்றி - திசைகளனைத்தும்…

பாவையொருத்தி பார்க்க;
பார்வை(கள்) பரிமாறிற்று!
எனைத்தான் பார்க்கிறாளா?
என்னையேதான் பார்க்கிறாள்!

என்ன பேசுவது?
எப்படி பேசுவது??
சிந்தனை திரும்பியது;
சஞ்சலமும் சேர்ந்து!

அவளே சிரித்தாள்!
அழகாய் சிரித்தாள்!!
அளவிலாது சிரித்தாள்;
அதிசயமாய் தெரிந்தாள்!!!

நாலாபுறமும் பார்த்து;
நானும் சிரித்தேன்!
நானா சிரித்தேன்?
நாணலாயும் வளைந்தேன்!!

சிந்தனை பின்தொடர;
சிரிப்பு தொடர்ந்தது!
சிரிப்பை தாண்டி;
செல்வது எங்கனம்?

செயலில் இறங்கினேன்,
செய்கை மூலம்;
குருகுருவென பார்த்தாள்!
குழப்பமானேன் நான்!!

தவறு செய்துவிட்டதாய்
தெரிந்து தவித்தேன்;
சிறிது நேரம் -
சன்னல்வழியாய் பார்த்தேன்!

காலம் கடத்தி
கடைக்கண் வழியே;
மனதை திடப்படுத்தி
மீண்டும் பார்த்தேன்!

பதில்-செய்கை செய்தாள்;
பயமெலாம் விலகின!
பாய்ந்து எழுந்து;
பாவையருகே சென்றேன்!!

பெண்மணி! என்றழைத்தேன்;
பக்கத்தில் இருந்தவர்,
பதட்டத்துடன் பார்த்தார்!
பாவையவள் வேண்டுமென்றேன்!!

பதட்டம் தணிந்து;
பத்திரம் என்றார்!
மெதுவாய் தொட்டு;
மெல்லமாய் தூக்கினேன்!!

என்மகள் நினைவுகள்,
என்நெஞ்சருப்பதை நிறுத்தின;
எட்டுமாதக் குழந்தையவள் -
என்மகளாய் மாறினாள்!!!

ஈழமும், "குருதி"ஈரமும்...ஈகையற்ற ஆட்சியரின் விதிமீரலால்
ஈழம் கேட்ட மண்ணின்று;
ஈரமானது, தமிழனின் குருதியால்!
ஈனமற்ற சிலரால்; நெஞ்சில் -
ஈரமற்று தொடர்கிறது அரசியல்!!
ஈழக்கொடுமையினும்; கொடுமையன்றோ இது!!!

ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012

என்ன வாழ்க்கையிது???" எங்க வீட்டுக்கு;
எப்பப்பா வருவ?"...

அனுதினமும் நெஞ்சில்
அம்பெய்தது போல்;
இருப்பது தன் -
இல்லம் இல்லையென(கூட),
தெரியாத; என்
தேன்"விழி" மகளிடம்;
சேமிக்க தவறிய
செயலால்; நமக்காய் -
இப்போது சேமிக்க,
இங்கிருக்கிறேன் மகளே;
என்றெப்படி சொல்வேன்?
என்ன வாழ்க்கையிது??

அழிவின் அறிகுறி...


அலையில்லா கடல்
அணையில்லா நதி
அன்பில்லா காதல்
அமைதியில்லா மனிதன்
அவளில்லா நான்;
அனைத்தும்...
அழிவின் அறிகுறி!

மொழியின் பரிமாணம்...மொழி…
இசைக்கு அவசியம் இல்லை!
இளஞ் சிசுக்களுக்கு தேவையில்லை!!
இதரநாட்டவருக்கு பிரச்சனை இல்லை!!!
இந்தியனுக்கு மட்டுமேன் எல்லை???

நாணலும், மூங்கிலும்...வடிவில் ஒற்றுமை!
வளைவதில் வேற்றுமை;
நாணலும், மூங்கிலும்!!
நாமும் - இரண்டின்;
தன்மைகளையும் கலந்து
தகர்ப்போம் தடைகளை!!!

"சாதியரசியல்" பிறப்பதே பள்ளியிலோ?


சாட்டையடியாய் பாரதி சொன்ன
"சாதிகள் இல்லையடி பாப்பா"வை
சாதிப்பேதம் ஏதுமின்றி கற்பித்து
சாதியொழிப்பு விதையிடும் பள்ளிகளே
சாதிச் சான்றிதழையும் கேட்பதேன்?
"சாதியரசியல்" பிறப்பதே பள்ளியிலோ?

ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2012

இந்த வாரம் என்ன எழுதுவது???


         
     கடந்த மூன்று வாரங்களாய் விடுப்பில் இந்தியா சென்று என் மகளுடன் இருந்தமையால், புதிய இடுகைகளை பதிய முடியவில்லை; பதிய முடியாது என்று முன்பே தெரியும் கூட. இயன்ற மட்டும் என்னுடைய நேரத்தை அவளுடனே இருந்து அவளுக்காய் செலவிட்டேன்; அதனால் என் பெற்றோரிடம் கூட அதிக நேரம் செலவிட இயலவில்லை; அவர்களுக்கும் தன் மகனுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று தோன்றி இருக்குமோ?; கண்டிப்பாய் இருந்திருக்கும். இதற்கு என்ன பரிகாரம் என்று தெரியவில்லை! ஆனால், இரு தரப்பையும் சமன் செய்து செல்லவேண்டும் என்ற உறுதி மட்டும் உருவாயிற்று. இவ்வாறாய், ஒவ்வொரு மணித்துளியையும் என் மகளுடன், மகளுக்காய் செலவிட்டதில், புதிய இடுகைகளை வெளியிடமுடியவில்லை. சரி, விடுப்பு முடிந்து இங்கு வந்து மூன்று வாரங்கள் ஆகின்றன; இந்த வாரமாவது புதிய இடுகைகளை வெளியிடவேண்டும் என்று முனைந்த போது, என்னுடைய கவனமும், கற்பனையும் இன்னமும் என் மகளைச் சுற்றியே இருப்பதை அறிந்தேன். அதிலிருந்து, எங்கனம் மீண்டு இந்த வாரம் படைப்புகளை இடுவது என்று ஆழ்ந்து ஓர் வழி தேடியபோது, என்னுடைய எண்ணங்களையே இந்த வாரம் - தலையங்கமாய் எழுதுவது என்ற முடிவுக்கு வந்தேன். சரி, எந்த வியத்தை எப்படி எழுதுவது என்று யோசித்த போது "இந்த வாரம் என்ன எழுதுவது???" என்ற கேள்வி எழுந்தது! சரி, என்று அக்கேள்வியையே இந்த வார தலையங்கத்தின் தலைப்பாய் இட்டுவிட்டேன். என்னுடைய இந்த இரண்டு வார விடுப்பின் அனுபவத்தை அப்படியே எழுதுவது என்று முடிவெடுத்தேன்.

     முந்தைய தலையங்கத்தில் குறிப்பிட்டது போல், என் பயணத்திற்கு முக்கிய காரணம் - என் மகளின் பிறந்த நாளன்று அவளுடன் இருக்கவே! நான் ஓர் சனிக்கிழமை காலை அவளை சென்று சேர்ந்தேன்; திங்களன்று அவளுக்கு பள்ளி - அதுவும், என்னுடைய "இருப்பில்" முதல் நாள் பள்ளிக்கு செல்லப்போகிறாள்; நானும், என்னவளும் அழைத்து செல்வதாய் முன்பே திட்டமிட்டிருந்தோம்; அன்று தான், அவளுக்கு பிறந்த நாளும்! எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனாலும் ஓர் வருத்தம்; அன்று பிறந்த நாள் என்பதால் அவள் "வண்ண உடையில்" தயாராகி இருந்தாள்; அவளை பள்ளி சீருடையில் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் நிறைவேற இன்னுமொரு நாள் காத்திருக்க வேண்டும். அது ஒரு புறமிருப்பினும், அன்றைய நாள் மிக நன்றாக கடந்தது; அவளை, முதல் முதலாய் பள்ளிக்கு கொண்டு விட்டதில் துவங்கி, அவளின் பள்ளி தலைமையாசிரியை முதல் முதலாய் சந்திப்பதில் தொடர்ந்து என் பெற்றோரும், என்னவளின் பெற்றோரும் எங்களுடன் ஒன்றாய் இருந்தது வரை, மிகவும் நன்றாய் தொடர்ந்தது. அன்றைய மாலைப்பொழுதில், அவளின் பிறந்தநாளை குறுகிய ஓர் சுற்றத்துடன் கொண்டாடியது மறக்க முடியாத அனுபவம். என் மகள் இங்கேயே பிறந்தவள் என்பதால், இந்தியாவில் விமர்சியாய் கொண்டாடிய முதல் பிறந்த நாளும் அதுவும் என்பதால் மகிழ்ச்சியின் எல்லை விரிந்து பரந்தது. அன்றைய தினம், என் வாழ்நாளின் மிகமகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாய் அமைந்தது. 

          இவ்வாறாய், ஒவ்வொரு நாளும் கடந்து கொண்டிருக்கையில் - அந்த வருத்தம் கலந்த எண்ணம் வந்து உறுத்த செய்தது! விடுப்பு முடிந்து நான் என் மகளிடம் இருந்து விடைபெற இன்னும் சில நாட்களே உள்ளது என்ற எண்ணம்!! நானும், என்னவளும் எங்கள் மகளிடம் நான் திரும்ப செல்ல வேண்டிய காரணத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம், எடுத்து சொல்ல ஆரம்பித்தோம்!!! என்னுடைய பயணத்தை அவள் எதிர்கொள்ள அவளை ஆயத்தப்படுத்த துவங்கினோம்; குறிப்பாய், நான் அதற்கு ஆயத்தமாகவேண்டுமே என்ற எண்ணமே எனக்கு மேலோங்கி இருந்தது. வேறு என்ன சொல்வது! "என்ன வாழ்க்கை இது" என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்த அதே வெறுப்பான காரணம் தான்!! உண்மையில், அத்லையங்கத்தின் தொடர்ச்சியாய் இன்னுமொரு அத்தியாயம் எழுதவேண்டும் என்று அப்போது தோன்றிற்று. எத்தனை முறை, எத்தனை விசயங்கள் குறிப்பிட்டு எழுதினும், அது முற்றுப்பெறும் தலையங்கம் அல்ல! என்று திடமாய் தோன்றியது. எங்கள் மகளும், எங்கள் விளக்கத்தை புரிந்து கொண்டதாய் அறிவித்தாள்; நான் கிளம்பும்போது "அழமாட்டேன்" என்று வாக்குறுதி (???!!!) அளித்தாள். நாட்கள் குறைந்து மணிகளாய், நிமிடங்களாய் மீதமிருக்கும் போது உண்மையில் நானும், என்னவளும் தான் அதிக பதட்டம் அடைந்தோம். எங்கள் மகள் ஏனோ, அனைத்தையும் புரிந்து கொண்டது போல் சாதாரணமாய் இருக்கத் துவங்கினாள். சரி, எல்லாம் சரியாயிற்று; என் மகள் எதுவும் ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டாள் என்று நானும் நம்ப ஆரம்பித்தேன்.

          நான் என் மகளை, என்னவளை விட்டு கிளம்ப இன்னும் ஒரு மணி நேரமே உள்ளது; அப்போது என் "மருதமையன்" (அக்காளின் கணவர்) வந்தார். சென்ற முறையும், அவருடன் கிளம்பி "மகிழ்வுந்துக்கு", எரிபொருள் நிரப்பி வருகிறோம் என்ற பொய்யை சொல்லியே கிளம்பினோம். அவரின் மேல், அவள் அளவு கடந்த பாசம் கொண்டவள்; அவருடன் சில மணித்துளிகள் மிக அன்னியோன்மையாய் விளையாடிக்கொண்டிருந்தாள். பின் அவளுக்கு நாங்கள் சென்ற முறை கிளம்பி சென்றது நினைவுக்கு வந்திருக்கும் என்று எண்ணுகிறேன்; குறிப்பிட்ட நேரத்திற்கு பின் என் மேல் வந்து அமர்ந்து விளையாட துவங்கியவள் எக்காரணத்திற்காயும் என்னை விட்டு விலகவில்லை. நான் வீட்டை விட்டு கிளம்பி "காலனி அணியக்கூட என்னை விடவில்லை; என்னை விட்டு அகலவில்லை; காலனியை அப்படியே தூக்கி மகிழ்வுந்தில் வைக்க சொல்லிவிட்டேன். வெளியே வந்து, என்னவளிடன் என் மகளை கொடுக்கையில் ஆரம்பமானது அவளின் அழுகை! அப்பா, என்னை விட்டு போகாதே!! "என்னையும் போர்ச்சுகலுக்கு கூட்டிக்கிட்டு போ" என்று தொடர்ந்து அழுகையுடன் கூறிக்கொண்டே இருந்தால். அப்போது நான் திடமாய் இருந்தேன் எனினும், இங்கே வார்த்தையை அதை விவரிக்கும் போது, என் கண்கள் "ஈரமாகின்றன". ஒரு வழியாய், என் மகளை என்னவளிடம் "விடாப்பிடியாய்" கொடுத்துவிட்டு திரும்பிக் கூட பார்க்காமல், அங்கிருந்து கிளம்பிவிட்டேன். இது அநேகமாய், எல்லாக் குழங்கைகளும் செய்வது தான் என்று எனக்கு தெரியும்! ஆனால், அதை அப்படி பொதுவாய் பார்ப்பது தவிர்த்து, என் மகளின் நிலையிலிருந்து அதை யோசிக்க ஆரம்பித்தேன். அவளின், இந்த இழப்பை நான் எப்படி, எவ்வாறு ஈடு செய்திட முடியும்???

      ஒரு வழியாய், அங்கிருந்து கிளம்பி ஒவ்வொரு மணித்துளிகளையும் கடினப்பட்டு கடத்தி விமானத்தில் அமர்ந்தும் விட்டேன். என் மகளின் சோகம் தந்த சுமையிலும், அயர்ச்சியிலும் எப்போதும் அல்லாது விமானத்தில் சில மணி நேரங்கள் ஆழ்ந்து உறங்கிவிட்டேன். விமானப்பயணத்தின் போது ஒரு "ஆங்கில வார இதழில்" ஒரு கூற்றை காண நேர்ந்தது! "கலிபோர்னியா" மாகாணத்தில் ஓர் இதழில் வந்த செய்தியை குறிப்பிட பட்டிருந்தது; அதன் சாரம் - "உங்கள் குழந்தை நல்ல விதமாய் உருவாக, நீங்கள் அவர்களுடன் செலவிடும் நேரத்தை இரட்டிப்பாக்க வேண்டும்; மேலும் அவர்களுக்காய் செலவிடும் பணத்தை பாதியாய் குறைக்கவேண்டும்" - என்பதே!! இதை எவர் முதலில், எங்கு கூறினார் என்பது தெரியவில்லை; ஆனால், எனக்காய் கூறப்பட்டதாய் உணர்ந்தேன்; இல்லையேல், அந்த செய்தியை அந்த தருணத்தில் நான் ஏன் படிக்க நேர்ந்தது? வெளிநாட்டில் இருக்கும் பலர் போல், நானும் என் மகளுக்கு தேவையானதை எல்லாம் வாங்கி கொடுக்கிறேன் - அளவுக்கு அதிகமாயும் கூட!!!. ஆனால், என் மகளுடன் என்னால் நேரம் செலவிட முடியவில்லையே என்ற ஏக்கத்தை எப்படி நிறைவு செய்வது; அதே ஏக்கம் தானே என் மகளுக்கும் இருக்கும்; பின் எப்படி, அதை நான் எல்லாக் குழந்தையும் அப்படித் தான் அழும் என்று பொதுப்படையாய் எண்ணி உதறிவிட முடியும்? அதனால், தான் அவளின் நிலையிலிருந்து அவளின் இழப்பை யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்; அதன் விளைவு தான், இத்தலையங்கத்தின் பிறப்பும். ஆழ்ந்து யோசித்ததில் எனக்குள் தோன்றிய உறுதியான முடிவு - எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில்…

என் மகளுடன் சேர்ந்து இருக்கவேண்டும் என்பதே!!!

பின்குறிப்பு: "பெயரை எப்படி வைத்தல்/எழுதுதல் வேண்டும்" என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது போல், பல தடைகளை தாண்டி என் மகள் பள்ளியில் சேர்ந்து இப்போது ஒரு மாத காலமாய் பள்ளி சென்று கொண்டிருக்கிறாள். எந்த மாற்றமும் இன்றி அவள் பெயர் எங்கள் விருப்பப்படியே "விழியமுதினி வேனில் இளங்கோவன்" என்றே பள்ளி ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி, நான் முன்பே குறிப்பிட்டது போல் - இது போன்ற தடைகளை சந்திப்பவருக்கு - உதவியாய் இருக்கும் என்று நம்புகிறேன்.   
                       

மணமுடித்துப் பார்...மணமுடித்துப் பார்…
இளமையின் "எட்டாக்கனி" - காதல்;
இம்சையில்லாது இனித்து வரும்!
இசைபோல் இசைந்து வரும்!!
இதற்கென "புரிந்தும்" வரும்!!!

மணமுடித்துப் பார்…
இளமையின் "எட்டிக்காய்" - கோபம்;
இருந்த தடமறியா(து) மறையும்!
இவனிடமா, இருந்ததென? வினவும்!!
இப்போதிருக்கும் நிலையே "மாயை"யாகும்!!!

மணமுடித்துப் பார்…
இளமை "சுட்டிக்காட்டா" - உறவுக்கொடி;
இருமனங்கள் இணைவதிலிருப்பது தெரியும்!
இல்வாழ்க்கையை இனிக்கவைப்பது புரியும்!!
இயலாததை இயலவைப்பதும் புரியும்!!!

மணமுடித்துப் பார்…
இல்லறத்தின் "விழியமுது" - குழந்தை;
இப்பிறப்பின் முழுமையென்று விளங்கும்!
இனிதென்பது யாதென விளங்கும்!!
இவ்வாழ்வே "அதற்கென்பதும்" விளங்கும்!!!

இல்லையெனாது "கற்பனைக்கெட்டா" - துன்பங்கள்;
இல்வாழ்க்கையில் உண்டென்பது உண்மை!
இல்லறமின்றேல் ஏதுமில்லையென்பது(ம்) உண்மை!!
இல்லறம் -இன்பத்தின் "உச்சமென்பதும்" உண்மை;
(என்பதால்) மணமுடித்துப் பார்!!!  

வெற்றி தம்பதியர்...தந்தையை - தன்னவனுடனும்!
தாயை - தன்னவளுடனும்!!
மறந்தும் ஒப்பிடாத;
மனைவியும், கணவனுமே...
வெற்றி தம்பதியர்!!!

குழந்தையின் வெற்றி...


("இந்த வாரம் என்ன எழுதுவது" என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்த செய்தியே இப்புதுக்கவிதையின் கரு)


குழந்தைகளுக்காய் செலவிடும்…
நேரத்தை இரட்டிப்பதிலும்,
பணத்தை "அரை"யாக்குவதிலும் - உள்ளது;
குழந்தையின் வெற்றி!!!

பேச்சு சுதந்திரம்...பேச்சு சுதந்திரம்…
பிறர் சுதந்தரத்தை
கட்டுபடுத்தாது, மற்றவரை
காயப்படுத்தாது; இருக்கட்டும்!!!