ஞாயிறு, செப்டம்பர் 30, 2012

பொறுமை(காத்து), மன்னிக்க(வும்)… நன்றி!!!



       பெரும்பாலும், மேலை நாடுகளில் இருக்கும் உணவு-முறைகள் மற்றும் உடை-வடிவங்கள் போன்ற சாதாரண விசயங்களை தான் நாம் பின்பற்ற முயல்கிறோம். அது போன்ற விசயங்கள் மட்டும் தான் தொடர்ந்து பேசிக்கொண்டு வந்திருக்கிறோம்; வருகிறோம். மேலும், அவ்வாறே நமக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஏதேனும் ஓர் சிலர் மற்ற நல்ல விசயங்கள் பற்றி பேசிடினும், பரவலாய் பேசப்பட்டதாய் தெரியவில்லை. எனவே, அந்த மாதிரி மேலை நாடுகள் பலவற்றில் உள்ள, எனக்கு பிடித்த விசயங்களைப் பற்றி இங்கே பகிர்ந்துள்ளேன். இந்த விசயங்களில் பல, நம் முன்னோர்களிடத்தில் சாதாரணமாய் இருந்தது; இப்போதும் அவ்வாறு சிலர் இருக்கின்றனர்; ஆனால், பெரும்பாலும் இந்த குணாதிசயங்கள் இப்போது மறைந்துவிட்டது என்பதே உண்மை. அதற்கு பலவேறு காரணங்கள் கூறப்படலாம்; அதை நியாயபடுத்த முயலலாம்; அனால், அந்த விசயங்களை பழக்கப்படுத்தினால் நமக்கு பெரும் நன்மைகள் உண்டாகும் - வாழ்க்கை இன்னும் இனிதாகும் என்பதையும் நாம் உணர வேண்டும். மேலை நாடுகளில் - பல அபத்தமான விசயங்கள் உள்ளன என்ற வாதம் வேண்டாம்; நல்ல விசயங்களும் அங்கே நிறைய உள்ளன - அவைகளை பின்பற்றுவதால் நன்மை நமக்கு தான் என்பதை உணர்தல் வேண்டும். உணவு, உடை போன்று நம் "இயற்கை சூழலுக்கு" ஒவ்வாத விசயங்களில் - அவர்களை பின்பற்ற நினைக்கும் நாம், அவர்களிடம் நிறைந்திருக்கும் இம்மாதிரி "மனிதத்தையும்" பின்பற்றுதல் அவசியம்!

   முதலில், அவர்களிடம் இருக்கும் பொறுமை குறித்து சொல்லிட எண்ணுகிறேன்; பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வள்ளுவப்பெருந்தகை "பொறை உடைமை" எனும் அதிகாரம் மூலம் பொறுமை பற்று விளக்கி இருக்கிறார். இருப்பினும், நாம் சிறிய விசயங்களில் கூட பொறுமை காத்திட தவறுகிறோம். மிக சிறந்த உதாரணம் - வங்கிகள் துவங்கி மருத்துவமனை வரை பல அரசாங்க (அல்லது தனியார்) அலுவலங்களில் "வரிசையில்" நிற்பது; மேலைநாட்டினர் இதில் மிகுந்த பொறுமை காட்டுகின்றனர்; சிறிதும்  பதட்டமோ அல்லது கோபமோ கொள்வதில்லை; எத்தனை நேரமானாலும் அவர்கள் "முறை" வரும் வரை நிதானமாய் இருக்கின்றனர். அதே போல், முன்னே சென்றவர் எத்தனை நேரம் எடுத்துக்கொண்டாலும் அமைதியாய் இருப்பர். ஆரம்ப காலத்தில் - நான் அம்மாதிரி காத்திருக்கும் போது பெருங்கோபம் அடைத்திருக்கிறேன்; இன்னமும் கூட என்னால் முழுதும்-அமைதியாய் இருக்க முடியவில்லை. இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால் ஆரம்பத்தில் நான் (மற்றும் என் போன்ற வெளிநாட்டினர்) மொழி-புரியாத காரணத்தால் மிக அதிகமான நேரம் எடுத்துக்கொண்டிருக்கிறேன் (குறிப்பாய் வங்கி மற்றும் குடியுரிமை பெரும் அலுவகங்களில்); ஒருபோதும், பின்னால் காத்திருப்பவரை பற்றி "சிறிதும்" கவலைப்பட்டதில்லை! பின் ஏன், மற்றவர் அம்மாதிரி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் போது எனக்கு கோபம் வருகிறது? ஏன் அந்த பொறுமையை "கையாள" எனக்கு தெரியவில்லை அல்லது கைகூடவில்லை??

    ஏனெனில், பெரும்பாலும் "நம் நாட்டில்" நாம் வரிசையில் நிற்பதில்லை; குறுக்கு-வழியை தான் தேடுகிறோம். இன்னமும் கூட, நான் இந்தியாவில் உள்ள வங்கிக்கு சென்றால் நேராய் "மேலாளரை" பார்த்து உடனடியாய் என் வேலையை முடிக்கத்தான் நினைக்கிறேன்; அவ்வாறே செய்கிறேன். அம்மாதிரி ஒருவர் கூட இங்கே "வரிசையை" மீறி சென்று வேலையை முடித்ததை நான் நேரில் கண்டதில்லை. தெரிந்தவர் என்றால், அலுவலர்கள் நலம்-விசாரிப்பாய் பேசுவார்களே தவிர அவர்களை வரிசையை தாண்டி வரச் சொல்வதில்லை. அதே போல், அனைத்து ஆவணங்களும் இருப்பின் - எந்த சிபாரிசும் தேவை இல்லை; அதற்கு அலுவலக நேரம் எவ்வளவோ அந்த நேரத்திற்குள் நமது வேலை முடிந்துவிடும். "கையூட்டு" என்ற ஒன்று இருப்பதற்கு எனக்கு தெளிவான சான்று கிடைக்கவில்லை; எனக்கு அந்த அனுபவமோ அல்லது நிர்ப்பந்தமோ வாய்க்கவில்லை. எங்கேனும் - "இந்தியன்" திரைப்படத்தில் கூறுவது போல் "கடமையை (அல்லது விதிமுறையை) மீறுவதற்கு வேண்டுமானால்" நடக்கக்கூடும். ஆனால், அது மாதிரி இம்மக்கள் பேசிக்கூட நான் கேள்விப்பட்டதில்லை; நாம் ஒரு காரியம் ஆகவேண்டும் என்று அவர்களின் ஆலோசனை கேட்கும்போது, ஒருபோதும் அவர்கள் இவர்களுக்கு "கையூட்டு" கொடுத்தால் காரியம் நடக்கும் என்று கூறியதில்லை. ஒருவேளை, அதனால் தான் இவர்களுக்கு (இது தவிர வேறு வழியில்லை என்பதால்) இம்மாதிரி பொறுமையாய் வரிசையில் நின்று (தான்) தங்கள் வேலைகளை முடிக்கவேண்டும் என்று இயல்பாய் வந்திருக்குமோ?

       இங்கே, ஒரு பெண்ணை ஒரு பெண்ணோ அல்லது ஆணோ சிறிது காலத்திற்கு பின் அல்லது விசேச நாளில் சந்திப்பின் கட்டியணைத்து கன்னத்தோடு-கன்னம் வைத்து முத்தம் கொடுப்பார். வந்த புதிதில் - அம்மாதிரி பார்க்கும் போது "அருவருப்பாய்" இருந்தது; உடன் பணிபுரியும் ஆண்கள் என் தலைமை அதிகாரியை (அவர் ஓர் பெண்) உடன் கூட அவ்வாறே செய்தனர். பின் தான், அது பற்றி அவர்களிடம் விளக்கம் கேட்டேன் - அது ஒரு பெண்ணை வாழ்த்தும் வழிமுறையாம்; நானும் ஒரு தயக்கத்துடன் ஆரம்பித்து இப்போது இயல்பாய் செய்கிறேன்.  முதன் முதலில் என் தலைமை அதிகாரியை அவரின் பிறந்த நாளன்று அவ்வாறு செய்ததும் - அவர் அடைந்த ஆனந்தத்தை என்னால் என்றும் மறக்க முடியாது! "வசூல் ராஜா" திரைப்படத்தில் வரும் கட்டிப்பிடி-வைத்தியம் கூட அவ்வாறே! எந்த உறவையும் - அன்புடன் கட்டியணைத்து பாருங்கள்!! அதிலிருக்கும் ஆனந்தமும், அந்த அன்பின் வலிமையையும் புரியும். பின்னர் யோசிக்கும்போது இன்னுமொரு நிகழ்வு புரிந்தது; நான் அடிக்கடி குறிப்பிடும் என் நெருங்கிய-நண்பனின் தாய் அவ்வாறே செய்வார். இன்றும் கூட, என்னை பார்த்ததும் கட்டியணைத்து "கன்னத்தில் முத்தமிடுவார்"; எனக்கு, அது மிகப்பெரிய வலிமையையும், ஆனந்தத்தையும் கொடுக்கும். என் நண்பனும் அவ்வாறே! அவனுக்கு(ம்) அது இயல்பாய் வரும்!! சில வருடங்களுக்கு பின் 2006-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் "Tampa" விமான-நிலையத்தில் என்னை பார்த்ததும் ஆரத்தழுவினானே! அது ஓர் அனுபவம்!! அனுபவித்தால் தான் புரியும்!!!

      இறுதியாய், நன்றி மற்றும் மன்னிப்பு கோருதல்! நன்றி "எப்போதும் இல்லை" எனினும், அவ்வப்போது கூறிப்பழகி இருக்கிறேன். ஏனோ, நமக்கு "நன்றியை மறக்கக்கூடாது" என்ற உணர்வு ஆழப்பதிந்தது போல், "நன்றியை சொல்லில் உரைக்கவேண்டும்" என்பது பதியவில்லை என்று தோன்றுகிறது. சிறிய, விசயமாய் இருப்பினும் கூட நன்றி என்பதை கூறிப்பழகவேண்டும்; நான் இப்போது அதிகம் அதை வார்த்தையாய் கூறி வருகிறேன்; உண்மையில், அது ஓர் உன்னதாமான உணர்வு - பழக்கம்! அடுத்தது, மன்னிப்பு கேட்பது; ஏனோ, எனக்கு இன்னமும் கூட "மன்னிப்பு" கேட்பது உடனடியாய் நிகழும் விசயமாய் கைகூடவில்லை! அது உடனடியாய், வரவேண்டும்; "விருமாண்டி" திரைப்படத்தில் வரும்  "மன்னிக்கத் தெரிந்தவன் மனுஷன்; மன்னிப்பு கேட்கத்தெரிந்தவன், பெரிய மனுஷன்"! என்ற வசனம் அனுபவத்தின் வாயிலாய் வந்திருக்கவேண்டும்; என்ன ஒரு ஒருப்புதமான செய்தி! மேலைநாட்டில், பேசத்தெரிந்த-சிறிய குழந்தைகள் கூட இவைகளை இயல்பாய் சொல்கின்றனர் - அதுவும் அவர்களின் தாய்-மொழியிலேயே!!! நாம் "Sorry and Thanks" என்று ஆங்கிலத்தில் தான் பெரும்பாலும் கூறுவோம்; ஆனால் "நன்றி மற்றும் மன்னிக்கவும்" என்று தமிழில் அவ்வளவு எளிதில் கூறமாட்டோம்! இம்மாதிரி நம்-மொழி வாரத்தைகளை உபயோகிக்க தயங்குவது - "ஐயா" என்பதற்கு பதிலாய் "Sir" என்று அழைப்பதில் துவங்குகிறது. மேற்கூறிய விசயங்கள் தவிர்த்து, கற்றுக்கொள்ள பல விசயங்கள் உள்ளன; நான் கூறியவற்றில் தவறு ஏதேனும் இருப்பின்…

    பொறுமை(காத்து), மன்னிக்க(வும்)… நன்றி!!!

பின்குறிப்பு: இம்மாதிரியான, பல விசயங்களுக்கும் காரணம் அவர்களிடம் இயல்பாய் அடுத்தவரை "பாராட்டும்" குணம் உள்ளது என்பதாய் படுகிறது. அதனால் தான், அவர்கள் எளிதாயும் அதிக அளவிலும் "I appreciate" என்று உபயோகிக்கிறார்கள் என்று தெரிகிறது. அதனால், நாம் இந்த பாராட்டும் குணத்தை தான் முதலில் அடிப்படையாய் கற்க வேண்டும் என்று தெளிவாகிறது. 

உறவல்ல; உணர்வு!!!



உறவல்ல; "உணர்வு"அது
என்று உணர்ந்திடின்;
"நட்பு"என்பது - எந்த
நல்லுறவையும் சிதைக்காது!!!

இந்தியா-பாகிஸ்தான்



வரைபடத்தில் மட்டுமல்ல;
விளையாட்டிலும் - எல்லையின்
வரையறையை; தெரிந்தே
"விதி"மீறும் இருநாடுகள்!!!

மனைவி அமைவதும், அமைதியாவதும்...


மனைவி அமைவது;
இறைவனின் வரமாகலாம்!
மனைவி அமைதியாவது;
மணாளனின் தரத்தாலமையும்!!

தீயதில் தீது…



செயலிலல்ல! எண்ணத்தில் -
சேர்ந்திருக்கும் தீமையே;
தீயதில் கொடியது!!!

பழமும் கிழமும்...


பழத்தில் துவங்கி
பலதிலும் முதிர்ச்சியை;
கேட்கும் மனிதா!
"கிழம்"ஆன பெற்றோரின்
முதிர்ச்சியை அனுபவிக்க;
மறந்த மர்மமென்ன???

திங்கள், செப்டம்பர் 24, 2012

போராட்டமும், ஆர்ப்பாட்டமும்…



         இரண்டு வாரங்களுக்கு முன், முற்றுகை போராட்டம் பற்றிய செய்தி ஒன்றை நாளிதழில் படித்தேன்.  அந்த செய்தியை தொடர்ந்து பல விதமான போராட்டங்களும், ஆர்ப்பாட்டாங்களும் நடந்த வண்ணமே இருந்து வருகின்றது. பெரும்பாலும் போராட்டம் மற்றும் கடையடைப்பு போன்ற செயல்கள்  "உணர்ச்சிவயப்பட்டு" நடக்கின்றன என்பது புரியினும் - அவை வரைமுறை மற்றும் எல்லை தாண்டி நடப்பது மட்டுமல்ல; அது நினைத்த காரியத்தை அல்லது இலக்கை நோக்கி பயணப்படாமல் திசை-மாறிச் செல்கிறது என்பது தான் கசப்பான உண்மை! இது அவர்களுக்கு புரியவில்லை என்பதைக் காட்டிலும்; அவ்வாறு புரிந்து கொள்ள முடியாமல் அவர்களை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றனர் - அவர்களின் தலைவர்கள்/ சங்கங்கள். இதை புரிந்தவர்கள் அவ்வாறு செய்யாமல் விலகி நிற்கின்றனர்; ஆனால், புரியாமல் செய்து கொண்டிருப்போர் தான் பலர். இதனால், பெரிதும் பாதிக்கப்படுவது - எந்த பொது மக்களுக்காய் இந்த ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடக்கின்றனவோ - "அவர்கள் தான்" என்பது. போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் வேண்டாம் என்று கூறவில்லை; அவை நடைபெறும் விதமும், இடமும் தான் தவறு! நான் முதலில் படித்த போராட்டத்திற்கு காரணமான நாட்டை, "ஐக்கிய நாடுகள் சபை" கூட கடுமையாய் கண்டித்து உள்ளது. எனினும், அவர்கள் கூட "அதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெறுப்பான சூழ்நிலை, ஆபத்தான நிலைமை மற்றும் தாக்குதல்கள், மத அடிப்படையிலான வன்முறைகள் ஆகியவை கவலை அளிப்பதாக" குறிப்பிட்டுள்ளனர்.

      நான் படித்த செய்தி: "அமெரிக்காவில்" ஒரு மதத்தை பற்றி தவறான செய்திகளுடன் ஓர் திரைப்படம் வெளிவந்ததால் - அந்த போராட்டங்களின் தொடர்ச்சியாய் சென்னையில் உள்ள "அந்நாட்டு" தூதரகத்தை அந்த மதத்தை சார்ந்த ஓர் கட்சியின் ஆதாரவாளர்கள் முற்றுகை இட்டு "கல்லெறிந்தனர்" என்பது தான். எவருக்கும் எந்த மதம் சார்ந்தும் தவறான தகவல் பரப்ப உரிமை இல்லை; அது கண்டிக்கத்தக்கது என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், சென்னையில் உள்ள தூதரகத்தில் கல்லெறிவதால் பாதிக்கப் படப்போவது - பெரும்பகுதி, அங்கே கால் வலிக்க நிற்கும் - அவர்களின் சக இந்தியன் என்ற உணர்வு ஏன் வரவில்லை? மேலும், அவர்கள் மதம் சார்ந்த இந்தியர்கள் கூட பாதிக்கப்பவர் தானே?? நீங்கள் அமெரிக்கா சென்று போராடவேண்டும்; அல்லது பொதுமக்களுக்கு இடையூறாக இல்லாதவாறு இருக்கவேண்டும்??? சில வருடங்களுக்கு முன், பெரும்பான்மையான மதத்தை சார்ந்த ஓர் குழு "என் கடவுளின் ஊர் இது" என்ற அடிப்படையில் வேறொரு மதத்தை சார்ந்தவர்களின் வழிபாட்டு தளத்தை இடித்து தள்ளிய சம்பவம் உங்கள் அனைவருக்கும் தெரியும். அதில், பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு மதத்தையும் சார்ந்த பொது மக்கள் தான்! அதிலும், அதில் முற்றிலும் சம்பந்தப்படாத, சம்பந்தப்பட்ட இடத்திலேயே இல்லாத இரண்டு மதத்தையும் சார்ந்த "அப்பாவி - இந்தியர்கள்" தான். கண்டிப்பாக, இவை போன்றவைகளை சாமான்ய மனிதர்கள் செய்வது இல்லை; ஒவ்வொரு அமைப்பிலும் உள்ள சில நயவஞ்சகர்கள் தான்.

         இது மாதிரி கண்டிக்கத்தக்க செயல்கள் பல உண்டெனினும், எனக்கு தவறென்று உரைத்த சில விசயங்களை பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன். சமீபத்தில், அண்டை மாநிலத்தை பிரிக்க ஆர்ப்பாட்டம் நடந்து, அதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து - பின் அதை மாற்றியதும் அதைத் தொடர்ந்து நடந்த பல கலவரங்களும் அனைவரும் அறிந்ததே. இதில் முக்கியமாய் சம்பத்தப்பட்டவர்கள் கல்லூரியில் பயிலும் இளைஞர்கள் தான்; ஏதேனும் ஓர் சிலர் தவிர, மற்ற மாணவர்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை! அவர்கள் செய்ததெல்லாம் பேருந்தை தீயிட்டு கொளுத்தியது போன்ற சம்பவங்கள் தான்!! இதனால், பாதிக்கப்பட்டது அவர்களின் சக இந்தியன் மற்றும் சக-மாநிலத்தவன் என்ற எண்ணம் எழாத வண்ணம் - அவர்களை செயல்பட வைத்தது எவர்? எரிபொருள் விலை அதிகமானால், போராட்டம்; வரி-விதிப்பு அதிகமானால் போராட்டம்; இப்படி எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்து - அதில் துளியும் சம்பந்தப்படாதவர்களை காயப்படுத்தும் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. தன் தாய்-தந்தை இறந்ததற்கு கூட செய்யாத - தடியடி, கடையடைத்தல், பேருந்தை கொளுத்துதல், போராட்டம் - போன்றவை அவனின் தலைவன் இறந்ததற்காய் ஏன் செய்ய செய்யவேண்டும்? அந்த உணர்ச்சிபந்தம் தலைவனிடம் மட்டும் எப்படி வருகிறது?? ஒருவேளை, தலைவன் என்றால் - திருப்பி அடிக்க மாட்டார்கள் என்றா???

       இந்த மாதிரி சிறு, சிறு விசயத்திற்காய் உணர்ச்சிவயப்பட்டு "தகுதியும்-வாய்ப்பும் பெற்றவர்கள்" செய்ய வேண்டிய இடத்தில் செய்யத் தவறிய - செயலை "செய்யத்தகாதவர்கள்" பலர் செய்யக்கூடாத இடத்தில் செய்யும் இழிநிலை தொடர்ந்து "மிக உச்சமாய்" பின்வருமாறு நடந்தது. நம் சக-தமிழர்கள் "இலங்கையில்" செத்து மடிந்து கொண்டிருந்த போது, "இராமேசுவரத்தில்" நின்று கோஷமிட்டது! என்னளவில், அதற்கு-பதிலாய் அவர்கள் மெளனமாய் கூட இருந்திருக்கலாம். இதில் பத்திரிக்கைகள் வேறு: "அவர்களின் கூச்சல் (விண்ணைப் பிளந்து) இலங்கையில் எதிரொலித்தது" என்று உசுப்பி-விடுவது வேறு. அது எப்படி இடையில் எந்த தடையும் இல்லாமல் எதிரொலிக்கும்? அதுவும் இலங்கையில்?? அவர்களின் உணர்வை நான் மதிக்கிறேன்; ஆனால், இதைத் தான் அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள்! ஆயின் என்ன பயன்? அதனால், எவருக்கு நன்மை?? அவ்வாறு செய்பவர்களில் பெரும்பாலும் அரசியல் சார்ந்து உள்ளவர்கள்; அவர்களுக்கு தகுதியும் ஓர் சிரிய படையும் உள்ளது. அப்படி இருக்கையில், கிளம்பி இலங்கை சென்று போராட வேண்டியது தானே? அவர்கள் அரசியல் சார்ந்தவர்கள் என்பதால், அவர்களை அவ்வளவு எளிதில் இலங்கை அரசு எதுவும் செய்திடல் இயலாது! ஏன் செய்யவில்லை? உண்மையில் - அவர்களில் பெரும்பான்மையோர் எண்ணம் இங்கே தமிழகத்தில் "ஓட்டு-வங்கியை" சேகரிப்பதில் தான் உள்ளது. அந்த இழி-செயலால் தான் எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்று கூறினேன்.

  முதன்முதலில், இம்மாதிரி ஆர்ப்பாட்டங்களைப் பார்த்து வேண்டுமானால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் நம்பிக்கை வைத்திருந்திருக்கக் கூடும். ஆனால், அதைப் பார்த்து-பார்த்து பழகிப்போய் இப்போது அவர்கள் நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள்; இன்னும் ஏன், இவர்கள் இது மாதிரியான விசயங்களை தொடர்ந்து செய்யவேண்டும்??? எரிபொருள்  விலையேற்றமோ, அதிக வரி விதிப்போ மக்கள் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வந்துவிட்டார்கள்; அது மிகச் சரியான வழிமுறையும் கூட. ஆனால், இவர்களின் போராட்டத்தால் விளையும் இழப்புகளை தான் அவர்களால் சமாளிக்க முடியாமல் போகிறது என்று எண்ணுகிறேன்! இவர்களின், போராட்டத்தால் அவர்கள் ஓர் நாள் வேலைக்கு செல்ல முடியவில்ல எனில், அதானால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பு - பன்மடங்கு பெரிதாகும். அந்த தவிப்பு தான் அவர்களுக்கு அதிகமாய் உள்ளதாய் தெரிகிறது!! மேலும், அவர்கள் நமக்கு வேண்டியதை நாமே தான் போராடி பெறவேண்டும் என்ற எண்ணத்தை  நோக்கியும் பயணிக்க தயாராகி வருகின்றனர். அதுவரை, அமைதியாய் இருப்போம் என்று தான் அவர்கள் விலகிச் செல்கின்றனர்; கண்டிப்பாய், இந்த மாதிரி கலவரம் செய்பவர்களைப் பார்த்து பயப்படுவதைக் காட்டிலும் - விலகிச் செல்வோம் என்று எண்ணுவோர் தான் அதிகம். அவர்கள் திருப்பி அடிக்கும் அந்த கணம் வரை தான் உங்கள் ஆட்டம் தொடரும்; நம்பிக்கையை மீண்டும், மீண்டும் இழந்த அவர்களின் "அடி" மிக-வளிமையானதாய் இருக்கும். அதற்கு முன், இழந்த நம்பிக்கையை மீண்டும் பெரும் முயற்சியாவது செய்யுங்கள். ஏனெனில், ஒருவரின் நம்பிக்கையை முதலில் பெறுவதைக் காட்டிலும்…

இழந்த நம்பிக்கையை பெறுதல், கடுஞ்சிரமம்!!!

பின்குறிப்பு: இப்போது, இலங்கை-அதிபர் இந்தியாவிற்கு வருவதை எதிர்த்து தமிழார்வலர்கள் (???!!!) பலர் "மிகப்பெரிய" ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்துகின்றனர். ஒருவர், தீக்குளித்து இறந்தும் விட்டார்; அவருக்கும், அவரின் குடும்பத்தார்க்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த-செயலை "வருந்தத்தக்க (தவறான) செயலாய்" இதற்கு ஆதரவான ஓர் கட்சியின் தலைவர் கூட குறிப்பிட்டிருந்தது - எனக்கு ஆச்சர்யமாகவும், ஆனந்தமாகவும் இருந்தது! அது தான் நிதர்சனம்; அதே போல், அத்தனை தமிழர்கள் மடிந்த போது - இலங்கை சென்று இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் செய்திருக்கவேண்டும் என்பதையும் அந்த தலைவர் உணரவேண்டும்!! இப்போதும், காலம் கடந்துவிடவில்லை!!! இலங்கை சென்று அங்கே எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கு ஆதரவாய் போராட முயலுங்கள்; அது தான் சரியான வழிமுறை! அது மட்டும் தான் அவர்களுக்கு ஏதேனும் ஓர் விதத்தில் உதவியாய் இருந்திட முடியும். மாறாய், நீங்கள் - இலங்கை அதிபரை - அவமானப்படுத்திவிட்டு (பொதுமக்களையும் அவதிப்படவைத்துவிட்டு) பின்பு அமைதியாய் ஆகிவிடுவீர்!! ஆனால், அது மீண்டும் அங்கே எஞ்சியிருக்கும் தமிழர்களை காயப்படுத்துவதில்-முடியும் வாய்ப்புள்ளதை அருள்கூர்ந்து உணர்ந்து செயல்படுங்கள்!!!

இழந்த நம்பிக்கை...



நம்பிக்கையை...
இழப்பதை காட்டிலும்;
பெறுவது எளிது!
ஆனால்…
இழந்த நம்பிக்கையை!!
இன்னுமொரு முறை;
பெறுவது கடுஞ்சிரமம்!!!

தோல்வி...



வெற்றிக்கு இட்டுச்செல்லும்;
படிக்கட்டாம்! இருக்கலாம் -
தோல்வியை; மனமொப்ப,
தொய்வின்றி ஏற்போர்க்கு!!!

பொறுமை...


"கருவில்" பிறக்கும்-முன்
கற்றிட்ட பொறுமையை;
மனிதன் பிறந்தபின் -
மறந்த விந்தையென்ன?

ஆசையும், மீசையும்...



"மீசை நரைத்தாலும்…"
ஆசை-ஏன் குறையவேண்டும்?

ஆசை குறையாததால்(தான்) -
அதிகம் சாதித்தோர்;
அம்"மீசை" நரைத்தோரே!
அன்புக்கு, மட்டுமல்ல!!
ஆசைக்கும் - இல்லை;
அடைக்கும் தாழ்!!!

தந்தை-மகள் உறவு...



"தாயும்ஆன" மகளிடம் -
தந்தையின் உறவு;
தொய்வின்றி தொடர்ந்திடின்!
தடைகளனைத்தும் தகர்ந்து!!
புரிதல்கள் மலர்ந்து,
புலம்பல்கள் உதிர்ந்திடும்!!!

ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

காலச்சுழற்சியால் நாம் இழந்தவை!!!


     கடந்த வாரம், வெளியிடப்பட்ட "மின்-தடை" என்ற கவிதையில் - மின்சாரத்தால் நாம் இழந்த சிலவற்றை "அடிக்கோடிட்டு" கூறியிருந்தேன். அக்கவிதை எழுதும்போது, அவ்வாறு நாம் - காலச்சுழற்சியாலும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் - பலவிதமான பொருட்களை, நிகழ்வுகளை, குணாதிசயங்களை இழந்துவிட்டதை உணர்ந்தேன். காலச்சுழற்சி நடைபெறும் ஒவ்வொரு காலகட்டத்திலும் - இந்த மாதிரியான இழப்புகள் தவிர்க்கமுடியாதது எனினும், என்னை (கண்டிப்பாய் - உங்களையும்) மிகவும் பாதித்த மாற்றங்களில் சிலவற்றை இங்கே அலசியிருக்கிறேன். இது - மீண்டும், நாம் கடந்த காலத்திற்கு செல்லவேண்டும் என்ற அடிப்படையில் அல்ல! மாறாய், (குறைந்தபட்சம்) முந்தைய-கால செயல்களின் அடிப்படையை புரிந்து, அவைகளை அவ்வப்போதாவது செய்யவேண்டும் என்பதை உணர்த்தவே!!! அந்த அடிப்படையை நாம் புரிந்து கொண்டு, அம்மாதிரி அடிக்கடி செய்ய பழகாது போனால், "மின்-தடை" இல்லாமல் பல வேலைகளை செய்ய இயலாது கடினப்படுவது போல் - பல செய்கைகளுக்காய் நாம் கடினப்பட வேண்டி இருக்கும் என்று தோன்றுகிறது. மின்சாரம் எனும் சுகம் கொடுத்த அனுபவத்தால் இன்று, "கை-விசிறி" இல்லாத வீடுகள் எத்தனை என்பதை சிறிது நினைத்து பார்ப்போம்! "எண்ணெய்-விளக்கு" இல்லாத வீடுகள் எத்தனை!! அதற்கும் மாற்றாய் கூட, battery மூலம் இயங்கும் விளக்கு தான் - அது தீர்ந்ததும் மீண்டும் இயங்க மின்சாரம் வேண்டும்; அல்லது, வேறு battery வேண்டும்; இது தான் இன்றைய நிலை!!!

       முதலில், கடிதம் எழுதுவது பற்றி குறிப்பிட விரும்புகிறேன்! கடிதம் எழுதுவது, என்பது ஓர் கலை!! எழுதுவதற்கு முன்பே, எழுத நினைக்கும் விசயம் பற்றி ஆழ்ந்து யோசிக்க வேண்டும்; பின் என்னென்ன விசயங்களை எழுதவேண்டும் - என்று அலசவேண்டும்!!! இப்போது "மின்னஞ்சலில்" இருக்கும் வசதி போல், delete & correct வசதி இருப்பதில்லை. அதிலும், "உள்-நாட்டு" கடிதம் எனில், இருக்கும் மூன்று (அரைப்)பக்கங்களில் - அனைத்தையும் எழுதவேண்டும். எழுத்துக்களை நுணுக்கி, நுணுக்கி எழுதியோர் பலரை எனக்கு தெரியும் (நான் உட்பட!). எனவே, கடிதம் எழுதுவதற்கென தனி நேரம் ஒதுக்கி ஒரு கலைபோல் பாவித்தல் அவசியமாயிருந்தது! இப்போது போல், வேலை இடையில் "மின்னஞ்சல்" அனுப்புவது போன்று சாதரண நிகழ்வல்ல! எனக்கு, "என்னப்பன்" எழுதும் கடிதங்கள் மிகவும் பிடிக்கும் (அவர் தான், எனக்கு அதிக கடிதங்கள் எழுதியவர்); அவருடைய கடிதங்கள் அனைத்தும் என்னிடம் பத்திரமாக உள்ளன!! வயது காரணமாய் விளைந்த மறதி காரணமாய், அவர் என்னிடம் சொல்ல வேண்டிய விசயங்களை பல நாட்களுக்கு அவ்வப்போது எழுதி(வைத்து) - தொகுத்தது - அனுப்பிய கடிதங்கள் நிறைய!!! "மின்னஞ்சலில்" எப்போது, எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம் என்பதால் - நாம் தனி-நேரம் ஒதுக்கி யோசித்து எழுதுவதில்லை. எனவே, கடிதம் எனும் கலையை அனுபவித்து செய்தலை; அதிலிருந்த உணர்வுப்-பரிமாற்றத்தை இழந்திருக்கிறோம். எழுதுவது - மிகவும் எளிது, என்றான பின் - எழுதுபவர்க்கும், எழுதப்படுபவர்க்கும் அதன் மகத்துவம் புரியாது போனது!!!

    அடுத்ததாய், தொலைபேசி உரையாடல்! பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, பேசியதற்கான பணத்தொகை காட்டும் "அலகை" பார்த்துக்கொண்டே பேசியது எனக்கு இன்னமும் நினைவு இருக்கிறது. கையில் இருக்கும் பணத்தின் அளவை "அலகு" நெருங்கும் போது சொல்லாமால் இணைப்பை துண்டித்த தருணங்கள் பலவுண்டு. அதற்காகவே, "கடிதம்" எழுதுவது போலவே, தொலைபேசியில் அழைக்கும் முன்னரே, பேசவேண்டிய விசயங்களை ஆழ்ந்து யோசித்து விட்டு பேசுவது வழக்கம். அந்த உரையாடலில் - ஓர் உணர்வும், உண்மையும் இருந்தது. தொலைபேசி கட்டணமும் குறைய ஆரம்பித்து, இந்த கைபேசி (அதிலும், குறிப்பாய், இலவசமான "இணையம்" மூலம் பேசும்) வசதி வந்த பின் - என்ன பேசுகிறார்கள், எதற்கு பேசுகிறார்கள் - என்று அவர்களுக்கே புரியாது பேசிக்கொண்டிருக்கின்றனர்! "அப்புறம், அப்புறம், அப்புறம்…." என்று கேட்டே மணிக்கணக்கில் பேசுவோர் பலர் அதிகரித்து விட்டனர். என்ன பேசுகிறோம், எதற்காய் பேசுகிறோம் என்ற எண்ணம் சிதைந்து, வெறுமையான உரையாடல்களே இன்று அதிகம்; அதனால், தேவையில்லாத விசயங்கள்  பேசி உறவுகளிடையே வாக்குவாதங்களும், வார்த்தை-தடித்தல்களும் அதிகரித்து விட்டது - என்பது தெரிந்த உண்மையே! பல உறவுகளுக்கு இடையே இருந்து வந்த "கலந்து-உரையாடல்" எனும் அழகியல் அழிந்துவிட்டது என்பது எத்தனை பேருக்கு புரிந்திருக்கும்? இந்த மின்னஞ்சல் மற்றும் கைபேசி போன்ற வளர்ச்சியால் தான் உறவுகளின் வலிமை குறைந்து விட்டது என்று தோன்றுகிறது!!!

      உணவு வகைகளில், நாம் இழந்தது கேழ்வரகு, கம்பு போன்ற சத்து-மிகுந்த தானியங்கள் மூலம் செய்யப்பட்ட கூழ், அடை போன்ற உணவுகள்! எளிதில் "சீரணிக்க" கூடிய அந்த உணவுகள், அசதியை தராது - வேலைகளை முனைப்புடன் செய்திட உதவிற்று. இதே குணாதிசயம் கொண்ட "கஞ்சி" கூட இப்போது அரிதான உணவாகி விட்டது. இம்மாதிரியான உணவுகள், குறைந்த பின் மனித-உழைப்பும் குறைந்து, "விவசாயம்" போன்ற மனித சக்தியை நம்பிய பல விஷயங்கள் அரிதாகிவிட்டது. அதனால், அந்த தானியங்களும் அரிதான விசயமாகி விட்டன; இப்போது, அந்த தானியங்களை எங்கோ - பணம் படைத்தவன், பண்ணை வைத்து உருவாக்கி - விவசாயம் செய்தவற்கே அதிக விலைக்கு விற்கும் நிலை உருவாகி விட்டது. இப்போது, அந்த மாதிரியான உணவு வகைகளை "பெரிய உணவு விடுதிகளில்" அதிக பணம் கொடுத்து உண்பது மட்டுமன்றி; அதை பாராட்ட வேறு செய்கிறோம். இருபது ஆண்டுகள் முன்பு வரை, எங்கள் குடும்பத்தில் எவரும் அரிசி, நிலக்கடலை, கேழ்வரகு, கம்பு போன்ற பல தானியங்களை விலைக்கு வாங்கியதே இல்லை! எங்கள் நிலத்தில் அனைத்தும் விளைந்தது. இப்போது அனைத்தையும் விலை கொடுத்து வாங்குகிறோம்; எனக்கு மிகவும் மனது வலிப்பது - எனக்கும், என்னப்பனுக்கும் பிடித்த நிலக்கடலையை விலை கொடுத்து வாங்கும் போது தான்! எங்கள் நிலத்தில் அறுவடை-செய்ய  நாளாகும் எனின், எவர் நிலத்தில் அறுவடை செய்யின் (என்னப்பன்) ஒரு வார்த்தை சொன்னதும் அன்றைய பொழுது வீட்டிற்கு வந்து கொடுத்து விட்டு செல்வர். அது ஒரு கனாக்காலம்!!!

        இறுதியாய், உறவுகளை இழந்தது பற்றி குறிப்பிட விரும்புகிறேன்! "இயந்திர மற்றும் கடும்போட்டி" நிலவும் இந்த வாழ்க்கை சூழலில் - நிற்காது (நிற்க முடியாது) ஓடி, ஓடி உழைக்க ஆரம்பித்து விட்டோம்!! இந்த காலச்சுழற்சியும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் "மாயையாய்" உருவகப்படுத்திய பல விசயங்களை அனுபவிக்க ஓட ஆரம்பித்து விட்டோம்; நம் குழந்தைகளை கூட கவனிக்க நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கிறோம்!!! இந்த ஓட்டத்தில் - உறவு எனும் இன்னுமொரு "தொப்பூழ்" கொடியை அறுத்து அந்த உறவுகளை "நசுக்கி" மிதித்துவிட்டோம். அனைத்து பண்டிகைகளின் போதும், உறவுகளுடன் கூடி அளவளாவிய தருணங்கள் மாறி - பேசினாலே, "பணம்" கேட்டுவிடுவரோ என்று அஞ்சி; அதற்காகவே பேசாது-இருக்கும் சூழலை உருவாக்கவோர் பலர். அதிகப் பணப்புழக்கம் இல்லாத அந்த காலக்கட்டத்தில் இருந்த (நானும் கண்கூடாய் பார்த்து அனுபவித்த) அந்த தருணங்கள் இப்போது அங்கொன்றும், இங்கொன்றுமாய் இருக்கிறது. இப்போது பணம் பெரும்பாலும் அனைவரிடமும் தேவையான அளவு இருப்பினும்; அந்த "சந்தோச" தருணங்கள் இல்லை; வாழ்கை-முறை, அவ்வாறு இருக்க அனுமதிக்கவில்லை. இப்படி ஓர் வாழ்க்கை, எதற்கு? சரி, அவர்களுக்காவது அந்த பணம் முழுதும் உபயோகப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை! இரண்டு, மூன்று "வீடுளாய்", இருபது - முப்பது "பவுன்" தங்க நகைகளாய், மேலும் பல விதமான சேமிப்புகளாய்  (???!!!) உள்ளன. எவர்க்காய் இவை அனைத்தும்? உங்கள் பிள்ளைகளுக்காகவா?? இது அவர்களை, அதற்கும் மேலும் "ஓடிட" எத்தனிக்காதா??? இதுபோல், காலச்சுழர்ச்சியால் நாம் இழந்தவைகள்…

சொல்லில் மட்டுமல்ல; எண்ணிலும் அடங்காதவை!!!

பின்குறிப்பு: முன்பே குறிப்பிட்டவாறு - இந்த காலச்சுழற்சி மற்றும் விஞ்ஞான-தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் உருவாகும் - மாற்றங்கள் தவிர்க்கமுடியாதவை; அவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். மாற்றங்கள் வேண்டாம் எனவில்லை! மாற்றங்கள் ஒரு வரையறைக்குட்பட்டு இருக்கட்டும்!! அந்த செயலின் அடிப்படையை தொலைத்து விடாத விதத்தில் இருக்கட்டும். மீண்டும், "மின்-தடை" என்ற கவிதையில் குறிப்பிட்ட படி, அடிப்படையை மறந்த/ தொலைத்த எந்த மாற்றமும் நிலைப்பதில்லை!!!  

என்ன கல்விமுறை இது???


மூன்றுவயது குழந்தை
3-எண்ணைத் தொடர்ந்து
தவறாய் எழுதி;
தாயிடம் அடிவாங்குவது,
எவரால் விளைந்தது?
எவரை சாடுவது??

"கழுகை விரட்டும்
கோழியாய்" - காத்திட்டவள்;
தன்பிள்ளை எண்ணெழுத
தவறியதால், தடுமாறி;
"தன்னிலை தவறிய
தாயாய்" ஆனதெவரால்?

"என்குடும்பத்தை நேசிக்கிறேன்!"
என்றோர்பதிலை  உதைவாங்கி
அருவருப்புடன் கற்கும்;
அப்பிஞ்சு உள்ளந்தனில்
எங்கனம் ஐய்யா
எழும்? நேசமும்பாசமும்??

மூத்தவர் ஒருவர்
3-என்ற எண்ணைத்
தவறாய் எழுதிடின்
"தடுமாற்றம்" என்போர்;
முகம் மாறுவதேன்,
மூன்றுவயதோர் தவறிடின்?

இப்பிஞ்சு வயதிலேயே
இத்தனை சுமைகளிருப்பின்;
இவர்கள் தொலைத்திட்ட
இளமையை எங்குதேடுவர்?
இதுதானா கல்விகற்றோர்;
இயற்றிய கல்விமுறை?

பள்ளிகளே! குழந்தைகளை
பயிற்றுவித்தல் உங்கள்கடன்!
பயிற்றுவித்தலில் பகிர்தல்(மட்டுமே)
பெற்றோர் பொறுப்பென்பதை;
மறந்தஉங்களை மருந்துக்கும்
மன்னிப்பின்றி தண்டிப்பதெவர்?

அவ்வயது ஒத்தோரின்
அறிவுக்கேற்ற விகிதத்தில்;
"சராசரி"கல்வி(யே) அவசியம்!
"சமச்சீர்" அடுத்தகட்டமே!
ஓயாது-படித்தல் மட்டுமல்ல;
"ஓடியும்-விளையாடட்டும்" பாப்பாக்கள்!

இறைவனா? இயற்கையா??


இறைவனா? இயற்கையா??
இரண்டு நம்பிக்கையும்;
இருபாலரின் இயல்புமீறிய
இயல்பின் வெளிப்பாடே!
வாழ்க்கையில் அஞ்சுவோர்;
இறைவன் என்பர்!
வாழ்க்கையில் மிஞ்சுவோர்;
இயற்கை என்பர்!

பிறை...

{கருவும், உரு(நிழற்படம்)வும் - நண்பர். அருள் சக்கரவர்த்தி)    

மாற்றத்திலும் - நிதானமும்
முழுமையும் இருப்பதால்;
வளர்தலோ தேய்தலோ
வளங்குறையா அழகு!

நம்பிக்கையும், வாழ்க்கையும்...



நம்பிக்கையெனும் "நங்கூரம்"!
அமைதியெனும் "படகை",
சந்தேகமெனும் "அலையை"
கடந்து!! வாழ்க்கையெனும் -
இலக்கிற்கு இட்டுச்செல்லும்!!!

வேண்டியவரும், வேண்டாதவரும்...


வேண்டியவர் - விலகிச்செல்வதில்லை;
விலகிடின், "வேண்டிய"வரல்லர்!
வேண்டாதவர் - நெருங்குவதில்லை;
நெருங்கிடின், "வேண்டாத"வல்லர்!!

பிரச்சனையை சமாளிக்க...



வேலைகளின் எண்ணிக்கையும்,
வாழ்க்கையின் ஓட்டமும் -
வேகமாயின்; பிரச்சனையின்
வேர்-தானாய் அறுந்திடும்!!!

திங்கள், செப்டம்பர் 03, 2012

புரளி பேசுதல்...


        புரளி பேசுதல்! சிலருக்கு சுவராஸ்யமான விசயமாகும்; அது பலருக்கு பல விதமான இன்னல்களை விளைவிக்கிறது என்று "புரளி பேசுவோர்" உணர்வதில்லை!! அவர்கள் அதை தவறென்றே உணர்வதில்லை; பின் எங்கனம் அது மற்றவருக்கு விளைவிக்கும் இன்னல்களை பற்றி உணர்வது? பெரும்பாலும் புரளி பேசுவது மற்றவரை நேரடியாய் எதிர்க்க திறனில்லாத அல்லது எதிர்க்க விரும்பாத காரணத்தினாலாயே விளைகிறது; சில சமயங்களில் அடுத்தவரின் நலனில் அக்கறை கொண்டு அதை தவறான விதத்தில், தவறான நபரிடம் - புரளி பேசுவதாய் - கூட அமைந்து விடுகிறது. இந்த புரளி பேசுவதில் - பொது வாழ்வில் உள்ளவர்களை (அரசியல், திரைப்படம் மற்றும் அரசாங்க-அலுவல் சார்ந்தவர்கள்) பற்றி பேசுவது தான் முதலிடம் வகிக்கிறது! இதில், கண்டிப்பாய் அவர்களுக்கு எந்த விதமான காழ்ப்புணர்ச்சியும் இருப்பதில்லை; மாறாய், அவர்கள் அதில் ஒரு வித சந்தோசத்தை அடைவதாய் ஒரு "மாயையை" உருவாக்கிக் கொள்கின்றனர். இதற்கு அடுத்த நிலையில் உள்ள புரளி பேசுதல் - வெகு நிச்சயமாய் நம்முடைய நெருங்கிய உறவு மற்றும் நட்பு வட்டாரத்தை சுற்றியே இருக்கிறது! நமக்கு பிடிக்காத - அல்லது நமக்கு கெடுதலை உண்டாக்கும் - எதேச்சையாய் நடக்கும் ஒரு சிறு செயலால் - உறவு மற்றும் நட்பு வட்டாரத்தை பற்றிய "புரளி பேசுதல்" நிகழ்கிறது. இல்லையேல்! நேற்று வரை உறவாடிக்கொண்டிருந்த ஒரு சுற்றத்தை அல்லது நட்பை பற்றி நாம் புரளி பேசமாட்டோம்.

   பெரும்பாலும், புரளி பேசுதல் பெண்களுக்கு கை-வந்த கலையாயும்; அவர்களுக்கு அது இயல்பிலேயே வருவது போலவும் சித்தரிக்கப்படுகிறது. புரளி பேசுதல் என்பது பெரும்பாலும் உணர்ச்சிவயப்பட்டே நிகழும் காரணத்தினாலும், பெண்கள் எளிதில் உணர்ச்சி வயப்படக் கூடியவர்கள் என்பதாலும் - இது ஓரளவிற்கு உண்மை என்றே கொள்ளலாம்! ஆனால், உண்மையில் - ஆண்களும் புரளி பேசுவார்கள் என்பது மறுப்பதற்கில்லை; ஆண்கள், புரளி பேசும் போது உணர்ச்சியை தாண்டி ஒரு பெரிய காழ்ப்புணர்ச்சியும், பழி வாங்கும் எண்ணமும் அதிக அளவில் கலந்திருக்கும். ஆண்கள் பேசும் புரளியின் அளவும், எண்ணிக்கையும் குறைவு தானெனினும், அது சம்மந்தப்பட்டவரை மிகப்பெரிய அளவில் காயப்படுத்துவதாய் இருக்கும். இதை நான் என்னுடைய அனுபவத்தின் பால் - உணர்ந்திருக்கிறேன்; புரளி பேசுதலில் எனக்கு சிறு-உடன்பாடும் இல்லை எனினும், என் நெருங்கிய வட்டத்தை சார்ந்த இருவர் பற்றி புரளி பேசும் நிலை வந்துவிட்டது. அவர்கள் என்னை அந்த அளவிற்கு காயப்படுத்தி விட்டார்கள்; நானும், என் தன்னிலை தவறி அவர்களைப் பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதும்/ அதற்காய் வாய்ப்பை உருவாக்கியும் அவர்களிருவரைப் பற்றி புரளி பேசினேன்; தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தேன். நான் அவர்களைப் பற்றி கூறியதில் எந்த பொய்யும் இல்லை எனினும், நான் அவர்களின் குறைகளை மட்டுமே கூறினேன் எனினும் - நான் ஏன் அத்தகைய கீழ்த்தரமான செயலை செய்தேன் என்பது பின்னர் (கீழே விளக்கியுள்ள படி) விளங்கிற்று. எனவே, இங்கு புரளி பேசுவது - ஆண்களா? பெண்களா?? என்ற விவாதம் வேண்டாம்!!!

     இங்கே, பொது வாழ்வில் உள்ளவர் பற்றி பேசும்போது நமக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பே இருப்பதில்லை! அவர்களை நாம் பார்த்து கூட இருக்கமாட்டோம்; அவர்களுக்கு(ம்) நம்மை யார் என்றே தெரியாது!! இருப்பினும், பேசுகிறோம்; அதை கூட பெரும்பான சமயங்களில் நாம் வேறெங்கோ "கிசுகிசு"வாகவோ அல்லது புரளியாகவோ கேள்விப்பட்டு (இது இன்னமும் கவனிக்கப்பட வேண்டியது; நாம் அதை படித்து கூட இருக்கமாட்டோம்) அதை நாம் என்னவோ அருகில் இருந்து பார்த்தவாறு பேசுவோம். உண்மையில், இந்த புரளி பேசுதலால் - சம்மந்தப்பட்டவருக்கு எந்த பாதிப்பும் இருப்பதில்லை; அவர்களுக்கு இது தெரிந்து கூட இருக்காது! அதனால் தான், பெரும்பான்மையான பிரபலங்கள் இது பற்றி கருத்து தெரிவிப்பதில்லை; அல்லது மழுப்பலாய் கூறிவிடுவர். ஆயினும், சில நேரத்தில் அது அந்த பிரபலங்களைக் கூட அதிக அளவில் பாதித்துவிடும் என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், இந்த விதமான புரளி பேசுதலால் பெரும்பாலும் எந்த எதிர்வினையும் இருப்பதில்லை. இதில் விந்தையான விசயம்! சரியான புரிதல் உள்ள மிகுந்த மனமுதிர்ச்சி உள்ள பிரபலங்கள் இந்த மாதிரியான புரளிகளை எதிர்கொள்ளும் விதம்!! இதை நாம் கண்டிப்பாய் கற்றுக்கொள்ள முயலவேண்டும். மேலும், பொது வாழ்வில் உண்மையில் தவறுகள் செய்திருக்கும் போது, அதை கண்டிக்க சரியான அமைப்புகள் உள்ளன! அவர்கள், பொது வாழ்வில் உள்ள காரணத்தால் அது பொதுமக்களை பாதிக்கக்கூடாது என்பதால் அதற்கென உரிய அமைப்புகள் உள்ளன!! தேவை எனின், நாம் நேரடியாய் அந்த அமைப்புகளுக்கு (புரளி பேசாது) உதவி செய்ய முற்படலாம்.

   ஆனால், நம் சுற்றத்தையும் நட்பையும் பற்றி புரளி பேசுவது வேறு விதமானது; இங்கே சம்மந்தப்பட்டவர்களே எதிரே நின்று போராட வேண்டும்; அல்லது, புரளி பேசுபவரும் அதை எதிர்கொள்பவரும் பிறரை சேர்த்து குழுவாய் செயல் பட வேண்டும். இங்கே தான், உறவுக்குள்ளும் நட்புக்குள்ளும் பிரிவினைவாதம் உண்டாகிறது. பொதுவாழ்வில் உள்ளோரைப் பற்றியது போலல்லாது, இங்கே நாம் நேரடியாய் தொடர்பில் உள்ளோம்! வெகு நிச்சயமாய், இந்த புரளி பேசுதலை நாம் - நம் சுற்றத்தின் அல்லது நட்பின் குறையை முதன்மைப்படுத்தியே பேசுகிறோம்; அல்லது அவர்களுக்கு நல்லது செய்வதற்காய் (என்றெண்ணி) பேசுகிறோம்!! உண்மையில், இதை உள்ளாழ்ந்து பார்த்தால் நம் சுற்றத்தின் மற்றும் நட்பின் நன்மை சார்ந்து இருப்பது புலப்படும்!!! பின் ஏன், நாம் அதை புரளி பேசுதல் மூலம் செய்ய வேண்டும்? சரி, நாம் முன்பே (பலமுறை) கூட அவர்களுக்கு புரிய வைக்க முற்பட்டு அது சுவற்றில் மோதிய பந்தாய் நம்மை திரும்பவும் காயப்படுத்தி(கூட) இருக்கும்! நான் மேற்குறிப்பிட்ட, இரண்டு புரளி பேசும் நிகழ்வுகளும் இவ்வாறே நடைபெற்றது; பிறகு நான் எனக்குள் கலந்தாய்வு செய்த போது தான் இந்த கேள்விகளும், விளக்கங்களும் என்னுள் தோன்றின! நான் ஏன், அந்த மாதிரி கீழ்த்தரமாய் அவர்களைப் பற்றி மற்றவரிடம் பேசியிருக்க வேண்டும்? மென்மேலும், நான் ஏன் முயற்சி செய்திருக்கக் கூடாது?? குறைந்த பட்சம் நான் ஏன் அமைதியாய் இருந்திருக்கக் கூடாது? என் சுற்றமும் நட்பும் அல்லவா அவர்கள்?? அவர்களுடன் உறவு கொண்டிருந்தவன் தானே நான்???

      இந்த எண்ணமும், திண்ணமும் தான் நாம் நம் சுற்றத்தையும் நட்பையும் பற்றி புரளி பேசும் போது உருவாக வேண்டும்! மேற்குறிப்பிட்ட வண்ணம், பொது வாழ்வில் இருப்போரிடம் நமக்கு நேரடி தொடர்பு இல்லை எனினும் - இதே விதமான உணர்சி(கள்) தான் அடிப்படையாய் இருக்கவேண்டும்!! பொது வாழ்வில் உள்ளோரிடம், எதிர்காலத்தில் கூட நமக்கு தொடர்பு இல்லாமால் போகக்கூடும்!!! ஆனால், நம் தொடர்பில் இருந்த உறவோடு எதிர்காலத்தில் மீண்டும் தொடர்பு-ஏற்பட நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன அல்லவா? பின் ஏன், நாம் அவர்களைப் பற்றி புரளி-பேசி அவர்களின் மதிப்பை கெடுக்கவேண்டும்? உண்மையில், நாம் அவர்களை விரும்பி இருப்பின் - தக்க சமயத்திற்காய் காத்திருந்து அவர்களுக்கு அதை விளக்கவேண்டும்; அவ்வாறு செய்திடின், அவர்கள் கண்டிப்பாய் அதை உணர்ந்து பார்ப்பர்! இல்லை, அவர்கள் உணரவே மாட்டார்கள் என்று நீங்கள் எண்ணினால் (நினைவு கொள்க! இது நமது முடிவு மட்டுமே!!) அமைதியாய் இருந்துவிடுவோம்!! நாம் கூறியே கேட்காதோர் - புரளி பேசுவதால் மட்டும் எப்படி அதை உணர்வர்? அதனால் தான் சொன்னேன்! இது உணர்ச்சி வயப்பட்டு அதனால் விளையும் தன்னிலை தவறல்!! உண்மையில், நாம் அவர்கள் மேல் உண்மையான அன்பு வைத்திருப்பின், இந்த தவறு நமக்கு உணர்த்தப்படும்!!! எனக்கு அவ்வாறு உணர்த்தப்பட்டது. புரளி பேசுவதை விட - அமைதி எப்படி அற்புதமான ஆயுதமோ, அதே போல் புரளியை எதிர்கொள்வதுற்கும் அற்புதமான ஆயுதமும் அமைதியே! எனவே, புரளி பேச நேரினும் அல்லது புரளி பேசப்படினும் - நாம் காத்திட வேண்டியது…

அமைதி! அமைதி!! அமைதி!!!     

பின்குறிப்பு: இன்னமும் கூட என்னால் "புரளி-பேச"ப்பட்டவர்களுக்கு அவர்களின் தவறுகளையும், (அவர்கள் தவறென்று எண்ணும்) என் தவறுகளையும் விளக்கி கூறும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அவர்களிடம் விளக்கிடும் சூழலே வாய்க்காது போயினும், என் தன்னிலை தவறாது "அமைதியாய்" இருப்பதில் நான் உறுதியாய் இருக்கிறேன்.

மின்தடை...




விவாதம் ஏதுமின்றி;
விதியோ, வினையோ;
என்றகேள்வி தேவையின்றி;
எல்லோரின் சகிப்புதன்மையையும்;
தற்போது தகர்க்கும்;
"தானே"புயல் - மின்தடை!

மின்சாரத்தின் "இருப்பை"யரிய
மின்விளக்கு போட்டுப்பார்த்த
காலம்போய் - சுழன்ற;
காற்றாடி நின்றதும்!
தன்னிச்சையாய், உணர்வது!!
தற்போதைய வாழ்க்கையன்றோ?

அகவை பதினாறில்(எனக்கு);
அறிமுகமான தொலைக்காட்சி!
எம்மகளுக்கு மட்டும்;
எப்படி(யோ) பிறந்த
பதினாறு நிமிடங்களுக்குள்
பதிவில் விழுந்தது???

விஞ்ஞானமும், தொழில்நுட்பமும்
வளர்ந்தது கண்டு;
பெருமைப்படுவதா? இல்லையென் -
பாரம்பரியம் மறந்து;
வாழ்வியல் தொலைந்ததற்காய்;
விசனப் படுவதா??

எதுவும் நிரந்தமரில்லை
என்ற; "கீதை"
கொடுத்த உபதேசம்
கொண்டிருந்த என்னினம்!
மின்சாரமும் நிரந்தரமில்லையெனும்
மெய்மையை மறந்த-தேனோ?

நமக்கு உதவிட;
நம்மால் தோன்றிட்ட -
ஒன்றின்று; நம்மையே
ஒடுக்கி - அடிமையாய்
ஆக்கிட்ட விந்தைக்கு
எவரை காரணமென்பது?

விசிறி-மட்டை முதல்,
விறகு-அடுப்பு தொடந்து;
ஆட்டுக்-கல் வரை;
அனைத்து மாற்றையும்
அறவே ஒழித்தது
அனைவரின் குற்றமன்றோ??

இக்கவியை எளிதாய்,
இணையதளத்தில் வெளியிடினும்;
இதற்கு மாற்றான
எழுதும் கலையைகூட
வருங்கால சந்ததியர்
வேரறுத்து விடுவரோ?

மின்சாரமெனும் - விஞ்ஞானத்தின்
மெய்-ஞானம்; உணர
மறுத்ததேன்? விஞ்ஞானமும்
மெய்ஞானமும்; வாழ்கையை -
வழிநடத்திட உதவட்டும்!
வெறுமையாக்கிட வேண்டாம்!!

கணக்கேட்டிற்கு கணினி;
கூத்துக்கு தொலைகாட்சி;
கடிதத்திற்கு மின்னஞ்சல்;
கோடி மாற்றுகள்-வரினும்!
ஆணி-வேறாய் இருப்பது;
அடிப்படை மட்டுமே!!

அடிப்படை தொடராத,
அதிசயங்கள் எப்போதும்;
வேரூன்றியதும் இல்லை!
வென்றதும் இல்லை!!
அடிப்படை தொடர்ந்திடின்;
அத்தனை-தடைகளையும் கடந்திடலாம்!!!

எப்படி இருக்க? சாப்பிட்டியா??



கட்டிய மனைவி;
கேட்க மறந்த!
கிடைத்த பிள்ளைகள்;
கேட்க தெரியாத!!
கேள்வி ஒன்றால்;
"கோடி"முறை இறப்பினும்!!!

ஓயாதுகேட்கும் அவன்-தாயவளால்...
ஒவ்வொரு முறையும்,
"உயிர்த்தெழுவான்" - வேறிடத்தில்;
உறவறுந்து-கிடக்கும் ஒவ்வொருவனும்!!!

உயிரும், உறவும்...



உயிர் நிரந்தரமில்லையென,
உணரந்தோர்க்கு - இல்லை;
உறவுச் சிக்கல்!
உறவு(ம்) நிரந்தரமில்லையென,
உணரந்தோர்க்கு - சிக்கல்;
"உது"விலும் இல்லை!!

வாடகைத்-தாய்...


தாய்மை எனும்;
தூய்மை(யை) மட்டுமல்ல!
ஈன்ற குழந்தையையும்;
ஈகை செய்யும் -
"வாடகைத்-தாயே" எல்லோரின்;
வாழ்க்கைக்கும் வழிகாட்டி!!!

அரசு-இயல்...


எல்லா இயல்களையும்
எப்படியேனும் பயின்றநாம்;
அரசு-இயலை கற்கும்
ஆர்வத்தை இழந்ததேன்?
அரசியல் சாக்கடையை
அகற்றிட முயலாததேன்??

விளையாட்டும், வாழ்க்கையும்...



விளையாட்டில்…
வேறுமாதிரி ஆடும்;
இணையால் பிரச்சனை!
வாழ்க்கையில்…
ஒரேமாதிரி "ஆடிட"வெண்ணும்;
இணையால் பிரச்சனை!!