ஞாயிறு, நவம்பர் 25, 2012

உலகம் அழியப்போகிறதா(மே)???!!!



      சமீபத்திய தகவலின் படி, உலகம் "2012 ஆம் ஆண்டு, திசம்பர் மாதம், 21 ஆம் நாள்" அன்று அழியப்போகிறதாய் சொல்கிறார்கள். இதை சிலர் நம்புகின்றனர்; சிலர் நம்புவதில்லை; மற்றும் சிலர் அது பற்றிய எண்ணமே இல்லாது இருக்கின்றனர். பல்வேறு சமூக-வலைதளங்களில் கூட இது குறித்தான விவாதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள், உலக-அழிவு பற்றி வெளியான திரைப்படங்களை தொடர்ந்து காண்பித்துக்கொண்டிருக்கின்றன; அதிலும், சில பிரபலமான படங்களை குறுகிய கால இடைவெளியில் மீண்டும்-மீண்டும் காண்பிக்கின்றன. இவ்வாறு பலதரப்பட்ட மக்களும், பலதரப்பட்ட ஊடகங்களும் பல்வேறு விதத்தில் உலக-அழிவு பற்றி செயல்பட்டுக்கொண்டிருக்கும் போது - அது குறித்தான என்னுடைய பார்வையை பதிவது அவசியம் என்று உணர்ந்தேன். இன்னமும், உலகம் உண்மையில் அழியப்போகிறதா அல்லது எவ்வாறு அழியப்போகிறது என்பது குறித்தான நம்பகமான தகவல்கள் இல்லை! எப்படி இருக்கமுடியும்? என்னைப்பொறுத்த வரை உலக-அழிவு என்பது கூட மனிதர்களின் மரணம் போல தான்!! மரணத்தைப் போல் உலகம் என்பது கூட ஓர் நாள் அழியக்கூடும், அழியவேண்டும்; இங்கே அழிவில்லாதது என்ற ஒன்று இருப்பதாய் எனக்கு தெரியவில்லை!!! அதிக ஆயுட்காலம் உடையது என்று வேண்டுமானால் இருக்கலாமே தவிற, அழிவில்லாதது என்ற ஒன்று இருக்க வாய்ப்பில்லை. எனவே, உலகம் ஓர் நாள் அழியும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை!

         "புலி-வருகிறது" என்ற கதையை போல் இந்த உலக-அழிவு குறித்தான காலக்கெடுவும் தொடர்ந்து குறித்து வரப்பட்டு; பின் வெறும் கதை என்று நிரூபிக்கப்பட்டுக்கொண்டே வரப்படுகிறது. திடீரென்று ஓர் நாள் (புலிபோல்) உலக-அழிவு கூட வரலாம்! இந்த உலக அழிவு குறித்து - என்னறிவுக்கு எட்டிய வகையில் நடைபெறும் நிகழ்வுகளை இங்கே விளக்கலாம் என்று தோன்றுகிறது!! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு - நண்பர் ஒருவரின் வீட்டில் விருந்து முடித்துவிட்டு இது பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்; அப்போது - தம் வருமானத்தில் மிகப்-பெரும்பகுதியை சேமிக்கும் ஓர் தம்பதியர் - இந்த உலக அழிவு மட்டும் வெகு-நிச்சயம் என்று தெரிந்துவிட்டால், நாங்கள் சேமித்து வைத்திருக்கும் அனைத்தையும் "மிக-மகிழ்ச்சியாய்" செலவிட்டுவிட்டு உலக-அழிவை எதிர்கொள்வோம் என்றனர்!!! எனக்கு, பெருத்த-சிரிப்பு வந்தது; ஆயினும், அதை வெளிக்காட்டாது மறைத்துவிட்டேன். இது தான், நம் பிரச்சனை - குறிப்பாய் இந்தியர்கள்! சேமிப்பு வேண்டியது தான்; இல்லையெனவில்லை! ஆயினும், நிகழ்-கால வாழ்க்கையை வாழாது, சேமித்து என்ன பயன்? மரணத்தை ஏற்காததுதான், உலகம்-அழியுமெனின் மகிழ்ச்சியாய் செலவிடவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்தது!! மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும், எவருக்கு வேண்டுமானாலும் நிகழலாம்; நமக்கு முன்னாள் பிறந்தோரும், நம்முடன் பிறந்தோரும், நமக்கு பின் பிறந்தோரும் இறப்பதை தொடர்ந்து பார்த்துகொண்டு தான் இருக்கிறோம். மரணம் உறுதி என்பது மட்டுமல்ல; எப்போதென்று எவராலும் கணிக்க(வும்)முடியாதது!

         புகழ்-பெற்ற மருத்துவர் கூட உடலின் நிலையை வைத்து மரணத்தை ஓரளவிற்கு கணிக்க-முடியுமே ஒழிய, மரணத்-தேதியை "மிகச்சரியாய்" கணிக்க முடியாது. விபத்தால் இறப்பவரை எப்படி கண்டறிவது! கொலை செய்யப்பட போவதை முன்னரே எப்படி அறிவது!! மரணம் எந்த உருவில் வரும் என்று கூட எவரும் மிக-நிச்சயமாய் கூறமுடியாது. மரணம்-பற்றிய பயம் அனைவருக்கும் உண்டெனினும், மரணம் நிரந்தரமானது என்ற நம்பிக்கை இல்லை! அதனால் தான், வாழ்க்கையை வாழாது எப்போதும் பொன், பொருள், பதவி என்ற ஆசையில் அலைந்து கொண்டிருக்கிறோம். ஆனால், உலக-அழிவு - ஓர் பேரழிவு, எல்லோருக்கும் பொதுவானது என்றறியும் போது பதறுகிறோம்; வாழ்க்கையை வாழ்ந்துவிட துடிக்கிறோம். பலருக்கும் உலக-அழிவிற்கு முன், தாம் அனுபவிக்காததை - அனுபவித்து விட வேண்டும்; இல்லாத தீய-பழக்கத்தை பழகவேண்டும்; அல்லது நிறுத்தி-வைத்திருக்கும் தீய-பழக்கத்தை ஆரம்பிக்கவேண்டும் போன்ற எண்ணங்கள் தான் உள்ளன. இந்த நிலையில் கூட, இருப்பதில் ஒரு பகுதியை-யாவது (உலகம் அழியாவிட்டால், பிறகு என்ன செய்வது?) எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு சாகலாம் என்ற "நல்லெண்ணம்" உருவாவதில்லை!! அது ஓர் நாளில் நிகழ்ந்து விடப்போகிறது; நடந்த பின் எதுவும் தெரியப்போவதில்லை; அந்த நிலையிலாவது - "சிறிது நல்லெண்ணங்களையும், நற்செயலல்களையும்" செய்ய பழகலாமே!!! ஒருவேளை, உலகம் அழியவில்லையெனில் - ஓர் புதிய-மனிதனாய் வாழ்வை துவங்கிட அது வழிவகுக்குமே!

     இரண்டு நாட்களுக்கு முன் இது குறித்தான செய்தி ஒன்றை படித்தேன். அதில், "பிரான்ஸ்" நாட்டிலுள்ள "புகாரச்" என்ற கிராமத்தில் உள்ள ஒரு மலை பிளக்குமாம்; அதிலிருந்து வேற்றுக்கிரக விண்கலன் ஒன்று வருமாம் - அதில் ஏறிக்கொள்வோர் மட்டும் உயிர் தப்புவராம் (திரைப்படங்களின் பாதிப்பு போலும்). இதை கேள்விப்பட்டு, அங்கே சென்ற எண்ணற்றவரை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினரை இப்போதே அனுப்பிவிட்டனாறாம். அடப்பாவிகளா!!! உலகம் அழியப்போகிறதோ இல்லையோ! ஆனால், இங்கு குவியும் மக்களால், ஓர் பேரழிவு துவக்கப்பட்டுவிடும் போல் தெரிகிறதே!!! மரணம் எப்படி நிகழும் என்பது தெரியாதது போல், உலக-அழிவும் இப்படிக் கூட இப்படித்தான் துவங்குமோ? எப்படியோ, அப்படி ஓர் அழிவு வந்து - உலகம் அழிந்து மீண்டும் பிறக்குமேயானால், நல்லதுதான்! இங்கே, பொய்யர்களும் - கயவர்களும் அதிகமாகி விட்டனர்; மீண்டும், ஓர் மனித இனம் உருவாகினால் நல்லது தான் என்று எண்ணத்தோன்றுகிறது!! கடைசியாய் கொடுக்கப்பட்ட நாளிற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே உள்ளாதால் - இன்னும் என்னென்ன கதைகள் எல்லாம் கிளம்பப்போகிறதோ? இன்னும், எத்தனை பகுதிகள் இது மாதிரி முற்றுகை இடப்பட போகிறதோ?? என்னென்ன, குற்றங்கள் அதிகரிக்கப்போகிறதோ??? ஒரு முறை "தண்ணி அடித்துப்" பார்க்கலாம் என்பது போல் - பலரும் ஓர் முறை "கொலை செய்து" பார்க்கலாம் என்று துவங்கிவிடுவரோ? அதன்பின், இது மாதிரி நம்முடைய செயல்களே(தான்) உலக-அழிவிற்கு வித்திடுமோ??

           எனக்கு இதில் துளியும் நம்பிக்கையில்லை; சிறிய விசயத்திற்கு கூட பலவாறு யோசிக்கும் நான் - இந்த "உலக-அழிவு" குறித்து எந்த கவலையும் அடையவில்லை! மரணத்திற்கு பின் என்ன என்பதற்கே எனக்கு விடை தெரியவில்லை! மரணம் என்பது "உண்மை; இறுதியானது" என்பது உணர்ந்ததாலே, என்னால் அதற்கு பின் என்ன என்று யோசிக்க முடிந்ததாய் தோன்றுகிறது. எனவே, உலக-அழிவால் என் மரணம் நிகழ்வதைப் பற்றி எனக்கு கவலை(யே) இல்லை; இன்னமும் கூட என் சிந்தனை அதற்கு பிறகு என்ன என்பதாய்-தான் இருக்கிறது. ஒருவேளை, எல்லோரும் தானே இறக்கப்போகிரார்கள் என்பதாலா? என் உறவும், நட்பும், சுற்றமும் எல்லாரும் தான் அழியப்போகிறோம்! பின் எதற்கு கவலை வரவேண்டும்?? நான் இல்லையென்றால், என் மகள் என்ன செய்வாள்? என்ற கேள்வி தான் என்னை வதைக்கமுடியும்! அவளும் இருக்கமாட்டாள் எனும்போது நான் ஏன் கவலை கொள்ளவேண்டும்?  என்று கூட இருக்கலாம். இருப்பினும், எனக்கும் ஓர் ஆசை உள்ளது (நானும் மனிதன் தானே)! அதை என்னவென்று பின்குறிப்பாய் எழுதியிருக்கிறேன். எனக்கு இப்போதிருக்கும் எண்ணமெல்லாம் ஒன்று தான்; கண்டிப்பாய் அழியக்கூடும் என்று நான் நம்புவதால், அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டதால் - முன்பை விட, நான் இன்னமும் உண்மையாய் இருக்கவேண்டும் - எல்லோரையும் அரவணைத்து செல்லவேண்டும் என்பதே. நான் இறுதியாய் கூற விரும்புவது எல்லாம்; உலக-அழிவை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வளர்த்து, நாம் நம்முடைய எண்ணங்களை, செயல்களை, மேலும்…

உண்மையானதாய், உயர்வானதாய் ஆக்கிட முயல்வோம்!!!

என்னுடைய ஆசை (பின்குறிப்பு): ஒன்றே-ஒன்றுதான்; அது, இந்த உலகம் அழியும்போது நான் என்மகளுடன் இருக்கவேண்டும் என்பதே! மூன்று வயதானவளுக்கு மரணம் என்பது என்னவென்று தெரியாவிட்டாலும், அந்த அழிவு நடக்கும்போது பயம் எழும்!! அந்த சமயம் கண்டிப்பாய் "அப்பா" என்று அழைப்பாள்!!! அப்படி அழைக்கும்போது அவளுடன் இருந்து "நானிருக்கிறேன் மகளே! என்று கூறி - அவளை என்நெஞ்சோடு அனைத்து, அவளுக்கு அத்தனை தைரியத்தையும் கொடுத்து - இருவரும் ஒருசேர உயிர் துறக்கவேண்டும்!!!" இப்போது 'நாளை உலகம் இல்லை என்றானால்…" என்ற  பாடலை கேளுங்கள்; அந்த பாடல், ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்!                    

தந்தையுமானவள்...




தடுமாறும் போதெல்லாம்!
தவறாது-தன் செயலால்,
நினைவால்; வாழ்வை
நிலைப்படுத்தி!! தெளிவை -
எனக்களிக்கும், "தாயான"
என்மகள் "தந்தையுமானவள்"!!!

இறப்பின் முன்னுரை ஏனில்லை???


பிறப்பின் முன்னுரையை!
பாகுபாடின்றி, எல்லோர்க்கும்;
அறிவிக்கும், இறையே!!
இறப்பின், முன்னுரையை;
எவர்க்கும் - அறிவிக்காததேன்???

பாதுகாத்து, பயனென்ன???



புரியாது புறந்தள்ளிய!
"புருஷனிடம்" பெற்ற;
'பொருள்' பரிசை(மட்டும்);
பாதுகாத்து, பயனென்ன???

மரணிக்கும் நாள் தெரிந்தால்???




மரணத்தை ஏற்கும்;
மனப்பக்குவம்  வந்திடின்!
மரணிக்கும் நாளை;
மறுப்பின்றி தெரிந்து!!
மகிழ்ச்சியாய் வாழ(வும்)முடியும்!!!

மனது-வலிக்கிறது, தமிழா!!!




"மொழியால்" மட்டுமல்ல!
மதத்தால், சாதியால்-கூட;
"மமதையாய்" பிரிந்திருக்கிறாயே!!
மனது-வலிக்கிறது தமிழா!!!

ஞாயிறு, நவம்பர் 18, 2012

தீபாவளியும், பட்டாசும்…



(இந்த ஆண்டும், கடந்த ஆண்டுகளிலும் "பட்டாசு-விபத்தால்" இறந்த குழந்தைகள் உட்பட அனைவருக்கும் சமர்ப்பணம்)

      தீபாவளி என்றாளே - பெற்றோருக்கும், குழநதைகளுக்கும் - முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான்! பெற்றோருக்கு எப்படி பொருளாதாரத்தை சமாளித்து பட்டாசுகளை குழந்தைகளுக்கு வாங்கித் தருவது என்ற "கவலையான" சிந்தனைகள்!! குழந்தைகளுக்கு, எந்த மாதிரியான பட்டாசுகளை வாங்குவது, எவருடன் சேர்ந்து வெடிப்பது என்ற "சந்தோசமான" சிந்தனைகள்!!! எது எப்படியாயினும், எல்லோருக்கும் பரவலாய் நினைவுக்கு வருவது "பட்டாசாய்"த்தான் இருக்கமுடியும். வழக்கமாய், ஒவ்வொரு ஆண்டும் இந்த தீபாவளி பண்டிகையின் போது - "வெடிவிபத்துகள்" தவிர்க்கமுடியாததாய் இருந்து வருகிறது. பட்டாசு உற்பத்தி செய்யும் கிடங்குகளில் அல்லது பெரிய-கடைகளில் - இது தொடர்ந்து நடந்தவண்ணமே வருகிறது. இதில் பெரும்பாலும், பலியாகுவது குழந்தைத் தொழிலாளர்கலான சிறுவர்கள் தான்; இது கண்டிப்பாய் வருந்தத்தக்க, கண்ணீரை-வரவைக்கும் நிகழ்வு தான்! இது, கண்டிப்பாய் கட்டுப்படுத்தவேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! ஆனால், அதற்காய் என்னென்ன காரணங்களை மற்றும் ஆலோசனைகளை, சமூக-சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள் என்பதையும் - அவைகளின் மீதான என்னுடைய பார்வையையும் இங்கே விளக்கியுள்ளேன். என்னுடைய சிந்தனைகள் இந்த விபத்துக்களை பெருமளவில் குறைக்கும் என்று நம்புகிறேன். ஆனால், வழக்கம்போல், இதை எவர் நடைமுறைப்படுத்துவது? எவர் இதை முதலில் துவக்குவது என்ற கேள்விகளே இதற்கும் முட்டுக்கட்டையாய் இருக்கக்கூடும். 

      முதலில், இதில் பல உயிர்கள் பலியாகிறது என்பதற்காய் - பட்டாசு வெடிப்பதையே தடுக்கலாம் என்று பலர் வாதிடுகின்றனர். மேலே, குறிப்பிட்டது போல் - உயிர் இழப்புகள் தவிர்க்கப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! ஆனால், பட்டாசு வெடிப்பதை ஏன் தவிர்க்கவேண்டும்? விபத்துக்களை தடுக்க என்னென்ன விதமான பாதுகாப்பு-செய்முறைகளை அதிகப்படுத்துவது என்று தான் யோசிக்கவேண்டும்; அது தான் முக்கியம்! எல்லா, செயல்களிலும் உயிர்-பலி என்பது இருந்து கொண்டு தான் வருகிறது! மீன்-பிடிக்க செல்லும் மீனவர்கள் எல்லையை தாண்டினார்கள் என்பதற்காய் (உண்மையாகவோ, பொய்க்காரணம் காட்டியோ) கொல்லப்படுவது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது; அதனால், மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று எவரும் வாதிடுவதில்லை; அது தொழிலாகிறது! அடிக்கடி குழந்தைகள் பயிலும் பள்ளியிலோ அல்லது வாகனத்திலோ விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படினும் - எவரும் பள்ளிகளோ, வாகனங்களோ வேண்டாம் என்று வாதிடுவதில்லை; அது தேவையாகிறது!! விளையாட்டு மைதானங்களில் விபத்து ஏற்பட்டு உயிரழப்புகள் ஏற்படுவதால் - எவரும் மைதானமும், விளையாட்டும் வேண்டாம் என்று வாதிடுவதில்லை; அது திறமையாகிறது!!! அது போல் தான், தீபாவளியின் போது - பட்டாசு வெடிப்பது என்பது பாரம்பரியமாகிறது; மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளின் போது - எங்கனம் எல்லோரும் பாதுகாப்பு அதிகமாக்கப்படவேண்டும் என்று வாதிடுகின்றனரோ - அது போல் தான், இங்கும் பாதுகாப்பு அதிகமாக்குவதை பற்றி பேசவேண்டும்!

   அடுத்ததாய், சமூக ஆர்வலர்கள் பலரும் வாதிடுவது - சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்பது! மறுப்பேதுமில்லாமால், இதை ஒப்புக்கொள்ளவேண்டும்! ஆயினும், இது ஆண்டுக்கு ஓர் முறை - சில தினங்கள் - நடைபெறும் செயல்; வாகனங்களின் புகை ஏற்படுத்தும் மாசு-பற்றி பல அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் அறியப்படினும், நாள்தோறும் ஓர் புதுவாகனம் உருவாகிக் கொண்டு தான் வருகிறது (சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வாகனங்கள் வந்திடினும், அவற்றின் விலை எல்லோருக்கும் உகந்தது அல்ல); தொடர்ந்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு தான் வருகிறது!! தினந்தோறும் வெளியேற்றப்படும் இந்த அளவுக்கு அதிகமான "வாகனக்-கழிவுகள்" ஏற்படுத்தும் மாசை கட்டுப்படுத்த என்ன செய்கிறோம்? எத்தனை வாகனங்கள், அதற்குரிய பரிசோதனையை முழுதுமாய், முறையாய் செய்து இயங்குகின்றன?? ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியேறி ஆங்காங்கே தேங்கி நிற்கும் சாக்கடை-கழிவுகளை கட்டுப்படுத்த என்ன செய்கிறோம்? ஒவ்வொரு தொழிற்சாலையும் வெளியேற்றும் "வேதியியல்-கழிவுகளை" கட்டுப்படுத்த என்ன செய்கிறோம்? இந்த கழிவுகள் அனைத்தும் குளங்களையும், ஆறுகளையும், கடலையும் சென்று சேர்கிறதே; அதற்கு என்ன செய்தோம்? அவை விலை-நிலங்களையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகின்றனவே; அதற்கு என்ன செய்தோம்/ செய்கிறோம்? இது போன்று - எத்தனை, எத்தனை காரணிகள், தினந்தோறும் - சுற்றுச்சூழலை மாசு படுத்துகின்றன?? இவையாவும், உடனடியாய் தடுத்து நிருத்தப்படவேண்டியவை அல்லவா???

     முதலில், இந்த மாதிரியான மிகமுக்கியமான, சிக்கலான காரணிகளை சரிசெய்ய முயலுவோம்; இதை செய்தாலே, இன்னமும் பல தலைமுறைகளுக்கு சுற்றுச்சூழல் மாசு குறித்து எந்த கவலையும் தேவை இராது! அப்படி செய்தும், இன்னமும் தேவைப்படின் - பட்டாசு வெடிப்பதை/ விற்பனையை தடை செய்வது குறித்து ஆலோசிக்கலாம்!! இத்தனை தலைமுறைகள், கொண்டாடிய "தீபாவளி" எனும் ஓர்   திருநாளை - அதன் சிறப்பம்சமான "பட்டாசு-வெடிப்பதை" - மேற்கூறிய அல்லது வேறு பல காரணங்களுக்காய் எப்படி திடீரென விட்டுவிட முடியும்? பட்டாசு வெடிப்பதை நிறுத்தி/ அந்த எண்ணமே அற்றுப்போய் பல ஆண்டுகள் ஆயினும் - என் 3 வயது மகள் பட்டாசை பார்த்து காட்டிய பரவசத்தால் என்னுடைய நினைவுகள் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றனவே! அது எத்தனை முக்கியம்; அந்த நினைவுகள் எத்தனை அதிசயமானது? இந்த நினைவுகள் என்னுடைய மகளுடன் - சில ஆண்டுகள் கழித்து பரிமாறப்படும்போது - இன்னும் எத்தனை பெரிய நினைவாய் மாறும்? இந்த மாதிரியான நினைவுகள் தானே, நம்முடைய வாழ்க்கையின் மைல்கற்களில் ஒன்றாய் இருக்க முடியும்? அதை எப்படி, இழந்து விடமுடியும்?? மாறாய், இதை எப்படி சமாளிப்பது அல்லது கட்டுப்படுத்துவது என்றல்லவா யோசிக்க வேண்டும்??? அதை விடுத்து, பண்டிகையின் சிறப்பம்சத்தையே மாற்றவேண்டுமெனில் - அது அந்த பண்டிகையையே சிதைத்து விடாதா? மேலும், இது மாதிரி யோசிக்க ஆரம்பிப்பின் - ஒவ்வொரு பண்டிகையும் கூட மாற்றம் கண்டு அழிந்துவிடாதா??

      பட்டாசு வெடிப்பதை தடுக்க முயல்வதை விட்டுவிட்டு பாதுகாப்பு குறித்த செயல்களை எவ்வாறு  அதிகப்படுத்துவது, என்று யோசிக்கவேண்டும். ஏன், தீபாவளி நேரத்தின் போது மட்டும் - அத்தனை தொழிற்சாலைகளும்  அவசரம், அவசரமாய் - பட்டாசு உற்பத்தியை செய்ய/அதிகரிக்க வேண்டும்? தேவைக்கேற்ப, முன்பே தயாரித்து அதை பல ஊர்களில், பல இடங்களில் பிரித்து வைத்து பாதுகாக்கலாமே? ஆட்கள் குறைவாய் (அதுவும், கிடங்கின் வெளியில்) இருந்து பாதுகாக்கும்போது - விபத்து ஏற்பட்டால், உயிர்ச்சேதம் அறவே இராதே? விற்பனையை ஏன் வழக்காமான - இறுக்கமான சூழல் உள்ள, மக்கள் அதிகம் புழங்கும் - இடங்களில்/கடைகளில் செய்யவேண்டும்? ஊருக்கு வெளியே, தனித்தனி (ஒரே இடமென்றால், விபத்துகள் பெருத்த சேதத்தை உருவாக்கும்) இடங்களில் தீபாவளிக்-கால தற்காலிக-கடைகள் அமைத்து விற்கலாமே? உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், பல்வேறு இடங்களில் (குறிப்பாய், இம்மாதிரி காலங்களில்) கிளைகளை உருவாக்கி உற்பத்தி செய்யலாமே? அவ்வாறு செய்யும்போது, போக்குவரத்து மூலம் நிகழும் விபத்துகளையும் தவிர்க்கலாமே? இம்மாதிரி, பல காரணங்கள் உள்ளன - விபத்துகளை அறவே தடுக்க; அல்லது, மிகக்குறைந்த அளவில் விபத்துகள் நடக்கும் வண்ணம் பார்த்துக்கொள்ள! விபத்தே இல்லாத எந்த நிகழ்வும் சாத்தியம் இல்லை; நடந்து செல்லும்போது இடறி-விழுவது கூட விபத்துதான்!! நடைபாதையில் நடப்பவர்கள்/இருப்பவர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்துகள் நிகழ்கின்றன!!! என்னுடைய பார்வையில், தீபாவளியும் - பட்டாசும்…

பிரிக்க-முடியாதவை; பிரிக்க-வேண்டாதவை!!!


பின்குறிப்பு: சில கிராமங்கள் பட்டாசு வெடிப்பதால் தங்கள் ஊரிலுள்ள பறவைகள் சிரமப்படுகின்றன என்றும், மேலும் சில காரனகளுக்காகவும் - தீபாவளி காலங்களில் கூட பட்டாசு வெடிப்பதில்லை என்ற செய்திகளை படித்திருக்கிறேன்; அவர்களுக்கு என்னுடைய மதிப்பு கலந்த வணக்கங்கள்! பெருத்த கட்டுப்பாடு வேண்டுமானால், இதை சாத்தியப்படுத்தியிருக்கலாம்!! ஆனால் - அந்த ஊர்களில் இருக்கும் சிறார்களின் ஆசைகள்/மன-உளைச்சல்கள் பற்றி ஏதும் தகவல்கள் இல்லையே???                                          

பணமெனும் நஞ்சு.




தீப்பெட்டி அட்டை!
புளியம்பழ கொட்டை!!
கோலிகுண்டு ஆட்டம்!!!
எல்லாம் மாற்றி…

"பணப்பந்தயம்" என்று;
பணமெனும் நஞ்சை;
பாலகர் நெஞ்சில்…
பாய்ச்சியது எவர்-குற்றம்???

இறை-நம்பிக்கை...




நம்பிக்கை வளர்த்திட!
நம்மால் உரு-கண்டு;
எண்ணிக்கை அதிகமாகி!!
எல்லோரையும் குழுப்படுத்தி;
இடர்களை அதிகரித்ததும்!!!
"இறைவனின்" திருவிளையாடலோ???

அழுகையும், அழகும்…




"அசிங்கம்" கலவாது!
அழகாய் இருக்கும்;
"அழுகை" - எல்லாமும்,
அசத்தியம் ஆனது!!!

உயர்ந்த குணம்...



இழிவானோர் செய்யும்!
ஈன-செயல்களை பொறுப்பதும்;
அவைகளை மறப்பதும்(கூட);
உயர்ந்த குணமே!!!

ஒப்பீடு...



ஒப்பீடு என்பதை;
ஒழித்திடின் - உறவுகளின்,
ஒற்றுமை; மறுப்பின்றி
ஓங்கிடும் - பலப்படும்!!!

ஞாயிறு, நவம்பர் 11, 2012

இரண்டாம் ஆண்டு துவக்கம்...



      இந்தப்பதிவு வெளியாகியுள்ள இதே தினம் - சென்ற ஆண்டு (11.11.11) - "விழியப்பன் பார்வை" என்ற இந்த வலைப்பதிவு உருவானது. "வலைப்பதிவை சார்ந்தது" என்ற பிரிவின் கீழ், ஒரு தலைப்பில் - எவ்வாறு பல முயற்சிகளுக்கு பின், சில நபர்களின் உதவியுடன் இவ்வலைப்பதிவு உருவானது என்று முன்பே விளக்கி இருந்தேன். அதே தலைப்பில் விளக்கியபடி இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட "முதல்  தலையங்கத்தை" இந்த வாரம் வெளியிட்டிருக்கிறேன். கடந்த ஆண்டு, 38 வாரங்கள் பதிவுகளை வெளியிட்டிருக்கிறேன்; பதிவுகள் வெளியாகாத 14 வாரங்களுக்கு, பெரும்பான்மையான காரணம் - விடுப்பில் இந்தியா சென்று "என் மகளுடன்" இருந்ததே.

        என்னுடைய வலைப்பதிவு ஏதோ மிகப்பெரிய அளவில் சாதித்துவிட்டதாய் எண்ணம் ஏதும் இல்லை; மிகக்குறுகிய பார்வையாளர்கள் இருப்பினும் தொடர்ந்து படித்து வருவது - வலைப்பதிவின் "புள்ளி-விவரங்கள்" மூலம் அறிய முடிகிறது. ஒரு சிலரையாவது என்னுடைய பார்வை சென்று சேர்ந்திருக்கிறது என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி; இந்த ஆதரவு மேலும், மேலும் தொடர்ந்து எழுதிட - என்னை வழி நடத்தி செல்லும். என்னால் இயன்ற மட்டும், இந்த வலைப்பதிவை தொடர்ந்து நடத்திட திண்ணமாய் உள்ளேன். நான், மீண்டும்-மீண்டும் கேட்டும், இது வரை 10 பின்னூட்டங்கள் கூட வராதது ஓர் குறையே! எல்லாவிதமான பின்னூட்டங்களும் என்னுடைய பார்வையை வலிதாக்கும் என்று நம்புகிறேன்.

        நான் அடிக்கடி குறிப்பிடும் என்-நெருங்கிய நண்பன் என்னுடைய முயற்சியை கண்டு - அவனின் "கன்னிக்-கவிதையை" எழுதினான். அவனுள் அப்படியொரு தமிழ்-திறன் இருப்பது அவனுக்கே கூட அப்போதே தெரிந்தது - எழுதி ஓராண்டாகியும், இன்னமும் அவன் அதை வெளியிடவில்லை. சமீபத்தில் கூட தமிழ் ஈழம் பற்றிய என் தலையங்கத்தை பாராட்டி ஒரு புதுக்கவிதை எழுதியிருந்தான். என்னுடைய தம்பி (சித்தப்பா மகன்) "வினோத்"-உம் - என்னுடைய முயற்சியும் ஓர் காரணமாய் இருக்க - பல கவிதைகள் எழுதி விரைவில், அவனும் ஓர் வலைப்பதிவு ஆரம்பிக்க உள்ளான். இவ்விருவரையும் என்னுடைய இவ்வலைப்பதிவு முயற்சி, அவர்களின் திறனை அறிய செய்ததில் எனக்கு ஓர் திருப்தி.

    இவ்விருவர் மட்டுமல்லாது - மேலும் சில நண்பர்களும் அவர்களுடைய படைப்புகளை ஓர் வலைப்பதிவு துவங்கி வெளியிடுவதாய் கூறினர்; அது பற்றிய மேற்கொன்டு தகவல்கள் ஏதும் இல்லை. அவர்களும், விரைவில் அவ்வாறு செய்திடுவர் என்று நம்புகிறேன். இதுவரை, உங்களின் ஆதரவை தெரிவித்தமைக்கும் - இன்னமும் தொடர இருப்பதற்காகவும் என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். இவ்வலைப்பதிவின் துவக்க-அழைப்பதில் குறிப்பிட்ட படி, இவ்வலைப்பதிவை எழுதுவது நானாயிருப்பினும்…

இதை எழுச்சி பெறச் செய்(யப்போ)வது நீங்களே!!! 

என்னுடைய திருத்தங்களுடன் - என் நண்பனின் புதுக்கவிதை:

"மப்பு" போடாத  "மாப்பு"
தப்பாது வைக்கிறாயே "ஆப்பு"
அரசியவாதிகளுக்கு கொடுத்தாயே "சூப்பு"
"அப்ரிசியேட்" பன்றான் "(சுரேஷ்)பாபு"        

மரணத்திற்கு பிறகு, என்ன…???


(இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட முதல் தலையங்கம்) 

        நம்மில் எத்தனை பேர் "மரணத்திற்கு பிறகு என்ன...?" என்று, எந்த வயதில் யோசித்திருப்போம் என எனக்கு தெரியவில்லை. எனக்கு முதலில் இந்த கேள்வி எழுந்தது சுமாராக 4-ஆவது வயதில். எதற்கு அந்த வயதில் அந்த கேள்வி எழுந்தது என எனக்கு விளங்கவில்லை, இன்னமும் அதற்கு பதிலும் கிடைக்கவில்லை; ஆனால், ஒன்று மட்டும் புரிகிறது - நம் உடம்பில் உயிர் இருக்கும் வரை தான் உணர்வு, உறவு, நட்பு எல்லாமும்! "நிலையில்லாத வாழ்க்கையிது" என்பதை உணராமல் நாம் என்னென்ன தவறுகள் செய்கிறோம் என்ற ஒரு சிறிய தன்னிலை அலசலாக இதை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், மரணத்திற்கு பிறகு என்ன என்பது, இன்னமும் ஒரு பெரிய கேள்விதான்!!! எனக்கு அதற்கு விடை தெரியவில்லை; நான் அக்கேள்விக்கு பதிலளிக்கவும் முனையவில்லை; அந்த கேள்வியால் என்னுள் எழுந்த மாற்றங்களையே இங்கே அலசி இருக்கிறேன். ஒருவேளை, அதற்கு விடை தெரியக் கூடாது என்பது தான் இறைவன் அல்லது இயற்கையின் கட்டளையோ என்னவோ? இதை, இறைவன் (அல்லது இயற்கை) எதேச்சையான, இயல்பான ஒரு விசயத்தால் மறைமுகமாக உணர்த்தி இருப்பதாய் தோன்றுகிறது. ஆம்! மரணத்திற்கு பின் நாம் என்ன ஆவோம் என்பது, தொண்டைக்கு பிறகு நாம் அருந்திய உணவின் "சுவை" எங்கே போகிறது?! என்பது போல் தான் தோன்றுகிறது. எந்த நாட்டு உணவாயினும், எத்தனை பெரிய உணவகத்தில் வாங்கிடினும், எவர் சமைத்திடினும் - அந்த "சுவை" எனும் (கோபம், பழி வாங்குதல் போன்ற) உணர்வு - எங்கே போகிறது?

      என்னுள் எழுந்த இந்த கேள்வியை முதலில் என் தாயிடம் கேட்டேன்: அம்மா! என்றழைத்தவுடன் விரைவாக என்னிடம் வந்தவரிடம்,  "இறந்தவுடன் நாம் என்ன ஆவோம்" என வினவினேன் (எனக்கும் இன்னமும் அந்த நிகழ்ச்சி என் மனக் கண்ணாடியில் தெரிகிறது - ஆம்! நான் சரியாக கேட்டது "செத்த பிறகு என்னம்மா ஆவோம்"). அவர் வந்த வேகத்தில் என்னை அறைந்துவிட்டு சென்றார். கேள்விக்கு பதில் தெரியாத குழப்பத்திலும், அறைதல் தந்த வலியிலும் அழுதேன். அதன் பிறகு, சில/பல முறைகள் கேட்டேன்; பதிலாக கிடைத்தது, அதே அறை தான் - மீண்டும் அழுகைதான். ஏனோ, இதை என் தந்தையிடம் கேட்கவில்லை; அவரின் அடி பற்றி முன்பே "கும்பிடறேன்பா" என்ற தலையங்கத்தில் விளக்கியுள்ளேன்!!! அவரிடம் மட்டுமல்ல; வேறு எவரிடமும் இன்னமும் கேட்டதில்லை. சற்றே வளர்ந்தவுடன் எவரிடமும் கேட்க கூடாது என முடிவு செய்தேன். என் அம்மாவின் செய்கையில் ஒன்று மட்டும், பின்னால் - என்னால் ஓரளவு நிகழ்வுகளை அலசிப் பார்க்க முடிந்த போது, புரிந்தது! அது அவர்களுக்கு விடை தெரியவில்லை என்பது மட்டுமல்ல - நம்மில் பலர் மரணத்தை ஏற்க மறுப்பது மட்டுமன்றி; அது உண்மை என்பதை ஏற்கவோ அல்லது அதற்கு பிறகு என்ன என்பதை பற்றி யோசிக்கவோ தயங்குகிறோம். இதை பற்றி யோசிக்க ஆரம்பித்து, அதன் உண்மையை உணர்ந்து விட்டால், நம்முடைய பல பிரச்சனைகளை நாம் மிக எளிதாய் அணுகுவோம் என திடமாக நம்புகிறேன்; அதையே என்னுடைய பார்வையில் இங்கே விளக்கியுள்ளேன்.

     நான் அதிகம் பாதிக்கப்படுவது, எவரும் பொய் சொல்கிறார்கள் என தெரிய வரும்போது தான்.  அதிலும், நான் செய்யாத ஒன்றை செய்ததாக கூறும்போதோ அல்லது சொல்லாத ஒன்றை சொன்னதாக கூறும்போதோ தான். அம்மாதிரி தருணங்களில், நான் என்னிலை தவறிவிடுகிறேன்; என்னையே நான் வருத்திக்கொள்வதும் உண்டு. பல தருணங்களில் என் கோபத்தை உடனடியாக அவர்களிடம் காண்பித்திருக்கிறேன்; ஆனால், என்னுடைய கோபம் அவர்களையும் கோபப்படுத்தி, சூழ்நிலையை மேலும் துன்பமாக மாற்றி விடுகிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் என் கோபம் குறைந்து நானே பிரச்னையை தீர்க்கும் வழியை செய்துவிடுவேன்.  மேலும், என் மனதில் அந்த கேள்வி மீண்டும் எழுந்துவிடும் - "மரணத்திற்கு பிறகு என்ன...?". இந்த சிந்தனை வந்தவுடன், நான் என்னுடைய காழ்ப்புணர்ச்சிகள் அனைத்தையும் மறந்து விடுவேன். நிகழ்வுகளின் பாதிப்பு அதிகமாய் இருப்பின், இந்த சிந்தனைக்கு பிறகும் என்னுள் ஒரு கலந்துரையாடல் ஒரு சில நாட்கள் நடக்கும். அவர்கள், இவ்வளவு செய்த பின்னும் நான் ஏன் அவர்களை மன்னிக்க வேண்டுமென்று அல்லது அவர்களை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று! முடிவில் நான் எவர் செய்த தவறையும், துரோகத்தையும் மறந்து விடுவேன். இதில் என்ன, பெரிய ஆச்சர்யம்!? நம்மில் பல பேர் அதைத் தான் செய்கிறோம் எனலாம்! நான் சொல்ல முனைவது, என்னுள் நான் நிகழ்த்திய கலந்துரையாடல் மூலமே, நான் அதை செய்வேன்; மற்றவர்கள் மன்னிப்பு கோருவதற்காய் நான் காத்திருப்பதில்லை.        

          இதைப் படிக்கும் சிலர், என்னுடைய மிக நெருங்கிய உறவு மற்றும் நட்பு வட்டாரங்கள் சொல்வது போல், நான் ஒரு கோழை, திடமில்லாதவன் எனலாம். என்னை, நானே  "நீ என்ன திடமில்லாத கோழையா?" என்று கேட்டதுண்டு. பல குழப்பங்களுக்கும், அலசல்களுக்கும் பிறகு, என் மனதில் மீண்டும் எழும் கேள்வி "மரணத்திற்கு பிறகு என்ன...?". இறந்த பிறகு என்ன?, எப்போது இறப்போம்?? என்ற கேள்விகளுக்கே விடை தெரியாது, என் சுற்றத்தையும்/ நடப்பையும்  "பழிக்கு பழி" வாங்கி என்ன சாதிக்கப் போகிறேன்? இம்மாதிரி சமயத்தில் வள்ளுவப்பெருந்தகையின் "ஊழிற் பெருவழி யாவுள?…" குறள் எனக்கு நினைவு வந்து விடும். இல்லையெனினும், என்னப்பன் இதை எனக்கு நினைவூட்ட தவறமாட்டார்.  அவர் அடிக்கடி உபதேசிக்கும் குறள்களில் இதுவும் ஒன்று. இது நினைவுக்கு வந்தவுடன்/ நினைவூட்டப் பட்டவுடன் என் "துன்ப-மேகங்கள்" விலக ஆரம்பித்து என் "மனமெனும் வானம்" இலகுவாக ஆரம்பித்து விடும். இதை விடுத்து, நான் அவர்களை காயப்படுத்துவதால், அவர்கள் மீண்டும் என்னைக் காயப் படுத்த எத்தனிப்பார்கள்! இந்த தொடரல் எது வரை தொடரும்? எது வரை தொடர வேண்டும்?? எதற்காக தொடர வேண்டும்???  முடிவில், எவரோ ஒருவர் இதை நிறுத்தவேண்டும், அல்லவா? அதைத்தான் "நானே" செய்கிறேன்/ செய்ய முயல்கிறேன். இதை நான் பின்பற்ற எனக்கு "மரணத்திற்கு பிறகு என்ன...?" என்ற கேள்வி மட்டுமல்ல,  மிகப்பெரிய போராட்டங்களும், மிகப் பெரும் இழப்புகளும் தேவைப்பட்டன; இன்னும் தேவைப் பட்டுக் கொண்டு தானிருக்கின்றன. 

        இங்கே வலி பற்றி எழுதும் போது, ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். எல்லா வலிகளும், ஒரு நாள் மகிழ்ச்சியான அனுபவமாய் மாறும் என்பது மனித வாழ்வியலில் ஒரு மறுக்கமுடியாத உண்மை. என் அம்மா அடித்ததின் வலி கூட இன்று எனக்கு ஒரு இன்ப-அனுபவம் தான்; எனக்குள்ளே விவாதித்து வாழ்க்கை பற்றிய ஒரு தெளிவை அடைவதற்கு அந்த அனுபவமே உதவியது. சரி, "மரணத்திற்கு பிறகு என்ன?" என்பதற்கு மீண்டும் வருவோம். இதற்கு மருத்துவ ஆராய்ச்சியின் மூலம் சில காரணங்களை (உடல் என்னவாகும், உயிர் என்னவாகும்) ஓரளவிற்கு விளக்க முடியும் என்றே வைத்துக் கொள்வோம். அறிவியல் மூலமாயும் சில விளக்கங்களை கூற முடியும் எனவும் வைத்துக் கொள்வோம். நான் என்னவாகப் போகிறேன்? நம் முன்னோர் விதைத்த நம்பிக்கையின் விளைவாய், பேய், பிசாசு அல்லது ஆவியாய் அலைவோம் என்றும் வைத்துக் கொள்வோம். இவையாவும்/சிலவாயினும் உன்மையாயினும், அதற்கு தெளிவான சான்றோ அல்லது முழுமையான விளக்கமோ இல்லை. அப்படியிருக்கையில், நான் எந்த சித்தாந்தத்தை நம்பி (இந்த நிலையில்லா வாழ்க்கையில்) என்னுடைய பொறுமையை கடைப்பிடித்து இந்த சூழ்நிலையிலிருந்து மீண்டு வருவேன்? அதற்குள் என் வாழ்வே முடிந்துவிட்டால், என்னுடைய கோபமும், பழி வாங்கும் செயலும் என்னவாகும் என்பதே என்னுடைய கேள்வி! என்னுடையது என நினைத்திருக்கும் எல்லாமும் என்னவாகும் என்பதும் என் கேள்வி!! இவர் எனக்கு பகை என்று எண்ணி, (இறந்த) பிறகு என்ன சாதிக்கப் போகிறேன் என்பதே என் கேள்வி!!!

     மாறாய், நான் அவர்களின் செய்கைகளை மறந்து - ஏன் மீண்டும் என் வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதே என் கேள்வி? இதை செய்வதால், தோற்றதாய் ஆகிவிடுமோ?? என் உறவு அல்லது நட்பு வட்டாரத்தை என்னுடனே வைத்திருக்க நான் ஏன் தோற்கக் கூடாது??? இதை அவர்கள் உணரும்போது, அவர்களுக்குள்ளும் ஒரு  மாற்றம் நிகழும் தானே! அது எனக்கு மிகப் பெரிய வெற்றியாய் அமையும் தானே. ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் ஒரு தோல்விச் சரித்திரம் தொடர்ந்து வந்து கொண்டு தானே இருக்கிறது? எனக்கே பொய் கூறுவது பிடிக்காது எனினும், சூழ்நிலை காரணமாய் என்னிலை தவறி நான் அப்படி செய்ய நேரும் போது, முடிந்த அளவு உடனடியாக தொடர்புடையவர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுவேன். இல்லையெனில், என்னால் நிம்மதியாக என்னுடைய வேலைகளில் கவனம் செலுத்த முடிவதில்லை; உறங்கக்கூட முடிவதில்லை. ஏதோ இழந்ததை போன்ற உணர்வுடனே செயல்படுவேன். என் சுற்றத்தில் உள்ளவர்கள் எளிதில் என்னை உணர்ந்து கேட்பார்கள் "என்ன ஆயிற்று என்று?"; இது தான் என் இயல்பு. இது என் சுய விளம்பரமல்ல; நான் என்னுடைய குறைகளை உடனுக்குடன் சரி செய்கிறேன்/செய்ய முயல்கிறேன். அடுத்தவர் குறைகளையும் பொறுத்து அவர்களை அனுசரித்து செல்கிறேன்/செல்ல முயல்கிறேன். இறுதியாய் ஒன்று தெளிவாய் விளங்கிற்று; அது "மரணத்திற்கு பின் என்ன?" என்பதற்கு பதில் கிடைக்காவிடினும், நாம் கண்டிப்பாய் எந்த தடையுமின்றி யோசிக்க வேண்டியது, மேலே விளக்கியுள்ள படி...


மரணத்திற்கு முன் என்ன செய்வது என்பதே!!!

தீபாவளி...




பாட்டாசும், பட்டாடையும்!
"பட்டாம்பூச்சியாய்" என்மகள்;
பறக்கிறாள் - என்னினைவுகளும்!!
பறக்கின்றன; பின்னோக்கி!!!

எவ்வளவு கடினப்படினும்;
எத்தனை மன-நிறைவு?
என்-பெற்றோரின் - நிறைவுகளை;
ஏனறியவில்லை, இதுவரை???

இப்போதேனும் - உரைத்ததே,
இச்சிரியேனுக்கு; காலம்கடந்து;
இப்போதேனும் - என்பெற்றோருக்கு
இயம்பிடனும் "நன்றிகளை"!

தீப-ஒளி திருநாளது;
தெரியாது - என்மனதே!
தங்கிட்ட - இருளதையும்;
தெளிவாய் அகற்றிற்றே!!!

எத்தனை, ஆச்சர்யங்கள்!
எத்தனை, மகிச்சிகள்!!
எல்லாமும் - கடந்திடினும்;
என்-மகளால், மீண்டன-மீண்டும்!!!

"நாற்பது" அகவையாயினும்;
நான்பெற்ற மகளவள்!
நானறியாத உண்மைகளை;
நாளொவ்வொன்றும் - உணர்த்துகிறாள்!!

இதையுணர்த்திட்ட - என்;
இனியமகளுக்கு மட்டுமல்!
இவ்வையகத்தோர் - அனைவருக்கும்;
இனியதீபாவளி வாழ்த்துக்கள்!!!

பிரிவில், "இதயம்"….




முதன்முதலில்…
பெற்றோரை பிரிந்தபோது;
"விட்டு-விட்டாவது" துடித்தது!
என்னவளை பிரிந்தபோது;
"விடாது" துடித்தது!!

ஆனால்...
என்-மகளை பிரிந்தபோதேன்?!;
"பிய்த்தெறிந்தது-போல்" வலித்தது???

இறைவன் இருக்கின்றான்…



இத்தனையிருந்தும் - இன்னமும்;
இருப்பவைகளை(யே) முழுமையாய்
புரிந்துகொள்ள முடியவில்லையே?
பிரபஞ்சத்தையே - உருவாக்கிடுதல்!

இயற்கை தவிர்த்து,
இன்னுமோர் அறிவு;
இல்லையெனில் - எப்படிசாத்தியம்??
"இறைவனே" - அவனென்கிறேன்!!!

அரசியலார்...


அரசாள இயலாதோர்
என்பதால்(தான்);
இன்றிருக்கும் அரசியலார்...
"அரசு-இயலாரோ?"

அனாவசியமான சிந்தனை...



அனாவசியமான சிந்தனை!
அழைப்பிதழே இல்லாது;
இல்லாத "பிரச்சனயை"யும்
இழுத்து வந்திடும்!!!

தொட்டிக்குளியல்...



விவசாயத்திற்கு பாயும்;
வரப்பில் - ஓடும்தண்ணீரில்,
குளித்த - அந்தஅனுபவம்!
"குளுகுளு" வசதியில்!!
தேங்கிய தண்ணீரின்;
"ஜச்குசியில்" கிடைத்திடுமா???  

ஞாயிறு, நவம்பர் 04, 2012

என்ன விதமான அரசியல் இது???




        சமீபத்தில், தமிழக-எதிர்க்கட்சி தலைவர் "நிருபர்களை தரக்குறைவாய்" பேசியதாய் வெளிவந்த செய்திகள் குறித்து அனைவரும் படித்திருப்பீர்கள்! அவரின் பேச்சை (மட்டும்) பத்திரிக்கைகள் பரவலாய் திரித்து "பரபரப்பான" செய்திகளை வெளியிட்டிருப்பினும், அந்த தலைவர் பேசியது எந்த விசயத்திலும் நியாயமானது அல்ல. நானும், இயன்ற அளவில் அது சம்பந்தமான "வீடியோ" ஆதாரங்களை பலமுறை பார்த்தேன்! அதைப் பார்த்த பின் - அது பற்றி வெகுவாய் யோசிக்க ஆரம்பித்தேன்; அதன் பின் இந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள - சில நியாயங்களை விளக்குவது என்னுடைய கடைமையாய் உணர்ந்தேன். இது எவரையும் ஆதரித்து பேசவோ அல்லது தூற்றவோ எடுத்திருக்கும் முயற்சி அல்ல; ஏனெனில், அரசியல் என்பது எப்போதும் "பொதுமக்களுக்கு" நிரந்தரமான ஒன்றாய் இருக்க முடியாது! அப்படி இருப்பின், பலவேறு கட்சிகள் தேவைப்படாது! அவர்கள், எல்லோரிடமும் உள்ள நடுநிலையை எடை போடுகிறார்கள். அதனால் தான், அவர்கள் "பெரும்பாலான தேர்தலின்" போது "மாற்று ஆட்சியை" தேர்ந்தெடுக்கிறார்கள். நானும், பொதுமக்களில் ஒருவன் என்பதால் - அந்த நடுநிலையுடனே இந்த தலையங்கத்தை அணுகியுள்ளேன். இதே போன்று, வேறொரு நிகழ்ச்சியும் நடந்து - ஓர் பிரதான கட்சியின் தலைவர் கொடுத்துள்ள அறிக்கையும் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது! இது போல், அவர் அடிக்கடி செய்வது தான் எனினும் -  மேற்கூறிய நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டு பார்த்தவுடன் என்னுள் எழுந்த கேள்வி தான் "என்ன விதமான அரசியல் இது???".

      முதல் நிகழ்ச்சியில் - எதிர்க்கட்சி தலைவர் "நாய்" என்று நிருபரை திட்டியிருப்பது தெளிவாய் விளங்கி இருக்கிறது. இது அவரின் "அரசியல்-முதிர்ச்சியின்மையை" காட்டுவதாய் பலரும் விமர்சிக்கின்றனர்; எனக்கும், அவர் மீதிருந்த நம்பிக்கையும் - மரியாதையையும் குறைந்து, அவ்வாறே எண்ணிட தோன்றிற்று! அவர் தன்னிலை தவறாது - அந்த சூழ்நிலையை சமாளித்திருக்க வேண்டும்!! அவர் மீது தவறிருக்கிறது என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், நாம் இங்கே இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும்!!! எல்லா செய்தியிலும் (அல்லது "வீடியோ" ஆதாரத்திலும்), நிருபர்கள் கேட்ட கேள்விகள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன! அவைகளையும் - சம்பத்தப்பட்ட ஊடகங்கள் தெளிவாய் வெளியிட்டிருக்கவேண்டும். அந்த அரசியல்கட்சி தலைவர் "சிறிது, சிறிதாய்" தன் கோபத்தை உயர்த்தி இறுதியில் அவ்வாறு திட்டியது தெள்ளத்தெளிவாய் தெரிகிறது! ஏன், அந்த கேள்விகள் "தெளிவாய்" நமக்கு கேட்கவில்லை?? அந்த கேள்விகளில் - அவரை "வேண்டுமென்றே" கோபப்படுத்தும் நோக்கம் இருந்ததா??? இது மாதிரி, பல நிருபர்கள் "எல்லை-மீறி" பல கேள்விகளை, பலரிடம்-பலத்தருனங்களில் கேட்கின்றனர் என்பது பலருக்கும் தெரியும். "கற்பு" பற்றி பேசி சர்ச்சைக்குள்ளான "நடிகை" விசயத்தில் கூட, எவரும் "ஏன் அந்த நிருபர் அப்படியொரு கேள்வியை கேட்டார்" என்று எவரும் யோசிக்கவில்லை என்பதை அவ்வப்போது குறிப்பிட்டிருக்கிறேன். அரசியலிலுள்ள தம்-பெரும்பங்கை, தமது கடமையை "உணர்ந்து" ஊடகங்கள் செயல்பட வேண்டும்!!!

      எனவே, ஏன் அந்த தலைவரை கோபப்படுத்தும் விதமாய் கேள்விகள் கேட்கப்பட்டன என்பதை ஆராய வேண்டும்! இச்சம்பவத்தின் போது அந்த தலைவர் "ஆளும் கட்சி தலைவியை, சென்று கேள்" என்று மீண்டும், மீண்டும் கோபமாய் கேட்டிருக்கிறார்!! "இச்சம்பவத்தின்" பின்னணியில் தொடர்புள்ளபோது - அந்த தலைவியை ஏன் அவர்கள் கேள்வி கேட்கவில்லை??? அப்புறம் என்ன, "பத்திரிகை தர்மம்"? இதை சார்ந்து பதியப்பட்ட ஓர் வழக்கிற்காய் - அவசரப்பட்டு ஏன் அந்த தலைவர் "முன்-ஜாமீன்" எடுத்தார் என்பது எனக்கு புரியவில்லை! எதிர்க்கட்சி தலைவராய் இருந்தும் ஏன் அவருக்கு அதை சமாளிக்கும் திறன் இல்லாமல் போனது? அல்லது ஏன் பயந்தார்?? இதை, ஓர் நல்ல பாடமாய் எடுத்துக்கொண்டு அவரின் "பொறுப்பு மற்றும் கடமை"-யை அவர் உணர்ந்திடுதல் வேண்டும்! இச்சம்பவம் முடிந்தபின் கூடிய "சட்டமன்ற" கூட்டத்தில் எதிர்க்கட்சியை சார்ந்த எம்.எல்.ஏ ஒருவர் "அஞ்சாநெஞ்சம் கொண்ட தலைவர்" என்ற அடைமொழியுடன் ஏதோ-கேள்வியை முடிக்கும் முன்னரே, "ஆளும்கட்சி தலைவி" இடைமறித்து "அஞ்சாநெஞ்சன் என்றால், ஏன் முன்-ஜாமீன் வாங்கினார்" என்று கேட்டாராம்! இந்த செய்திகளை படிக்கும் போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை? முதலில், "அஞ்சாநெஞ்சன்" என்ற அடைமொழி ஏன் "அவைக்கூட்டத்தின்"போது வந்தது? இதுவே, அபத்தம் எனில், அதை இடைமறித்து "கிண்டல்" செய்த ஆளும்-கட்சி தலைவியின் செயலை என்ன சொல்வது?? இங்கே, அடிப்படையில் ஏதோ தவறிருப்பதாய் உணர ஆரம்பித்தேன்.

       இவ்விரண்டு கட்சிகளும் - இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் போது - "முன்னாள் ஆளும் கட்சியின்" தலைவர் தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தார் பற்றியும் ஓர் வார-இதழ் "ஏதோ, உண்மையை" எழுதி விட்டதென்பதற்காய், அதற்கு ஏதும் பதில் கூறாமல், என் மனைவியும், மகளும் "பார்ப்பன-சாதி"-யில் பிறந்திருந்தால் அப்படி கேள்வி "எழுப்புவார்களா" என்று மறு-கேள்வி கேட்கிறார்! இதைப் படித்தவுடன் - உண்மையில் நான் கூனிக்குறுகி போனேன்!! எந்த விதத்தில் இந்த கேள்வி நியாயமாகும்? அதுவும், "பகுத்தறிவு-வாதி" என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் ஓர் "பழுத்த-அரசியவாதி" இதை கேட்கிறார்! அவர் போன்று பலரின் இந்த ஓர்-சாதியை குறிப்பிட்ட சாடலை முன்பே என் தலையங்கம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். இது தரம்-தாழ்ந்த கேள்வி அல்லவா? இது மாதிரி, "சாதியை" வைத்து அரசியல் நடத்தும் பல அரசியல் கட்சிகள் உள்ளன என்பது எல்லோருக்கும் தெரியும்! பெரும்பாலும், அவைகள் அந்தந்த சாதிகளை ஆதரிப்பதாய் தான் காட்டிக்கொள்ளும்! ஆனால், இம்மாதிரி "ஓர்-குறிப்பிட்ட" சாதியை சாடுவதற்கல்ல!! என்றோ, உயர்-சாதி எனும் எண்ணத்தில் எவரோ செய்த கொடுமைகளுக்காய் - இன்னமும் அந்த சமூகத்தை அப்படியே பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? அதுவும், "பாரம்பரியம்-மிக்க" ஓர் அரசியல் கட்சியின் தலைவர் அவ்வாறு கூறுகிறார்! இதுவும், நான் அடிக்கடி குறிப்பிடும் "என்றோ, நடந்த ஆணாதிக்க" கொடுமைகளுக்காய் - இப்போதிருக்கும் ஆணினம், தண்டனையை அனுபவிப்பது போல் தான்!

         மேற்குறிப்பிட்ட மூன்று கட்சிகளும் தான் - மாறி-மாறி (அல்லது கூட்டணியுடன்) ஆட்சிக்கு வரும் நிலை; குறைந்தது இன்றைய சூழலில்!! ஆனால், இவர்கள் "எத்தனை தரமற்ற அரசியல்" செய்கிறார்கள் என்பதை மேலே கோடிட்டு காண்பித்துள்ளேன்!!! இவர்கள் மூவரும், ஒருவரை ஒருவர் தனியாகவோ, இன்னொருவருடன் கூட்டு-சேர்ந்தோ "தனி-நபர் சாடலை" தான் செய்கின்றனர். இல்லையெனில், சாதி-மதம் போன்ற "இரண்டாம்-தர" காரணிகள்! கடைமையை, இருக்கும் பிரச்சனைகளை மறந்த (குறிப்பாய், மின்சாரம்) அவர்களின் செயலை எவர் உணர்த்துவது? அடுத்த 3 ஆண்டுகளுக்கான மின்-திட்டமொன்றை முதல்வர் கூறியவுடன், "இது சாத்தியமல்ல" என்று துளியும் சிந்திக்காது - மறுத்திடும் "(அடிக்கடி, கூட்டணி மாற்றும்)ஓர் சாதிக்கட்சி தலைவர்". மறுபுறம், முன்னால்-முதல்வர் "மின்-திட்டத்தில்" பெரும்பகுதி தாங்கள் செய்தது என்கிறார்; எவரெவர் எதை செய்தனர் என்பதற்கு ஆதாரம் இல்லாமல் எப்படி போகும்? எவர் மக்களிடம் பொய்-கூறி ஏமாற்றப் பார்க்கின்றனர்? மின்சாரப்-பிரச்னைக்கு அனைத்து-கட்சிகளும் ஒன்றுபட்டு ஓர் தீர்வை அடைந்திட பாடுபடவேன்டாமா?? இதில் என்ன, எவரின் பங்களிப்பு அதிகம் என்ற போட்டி??? இதைப்பார்க்கும் போது முன்பொரு தலையங்கத்தில் குறிப்பிட்டது போல் நமக்கு இயல்பாய் பாராட்டும்-குணம் இல்லாதது தான் காரணமோ என்று என்னிட தோன்றுகிறது!  இன்னமும் கூட "தமிழின் சிறப்பாய்" பண்டை-இலக்கியங்களையே கூறிக்கொண்டிருக்கும் செயல் போல், "சிறந்த அரசியல்வாதியாய்"…

இறந்துபோனவர்களை அடையாளம் காண்பிக்க வேண்டுமா???

பின்குறிப்பு: இத்தலையங்கத்தை "இறுதி-சரிபார்க்கும்"போது நாளிதழில் படித்த செய்தி - "ஆந்திர மாநில" அமைச்சர் ஒருவர் "அரசாங்க பணத்தை" கையாண்டு தன்-மகளின் "திருமண மேடைக்கு" மட்டும் 1 கோடி உரூபாய் செலவிட்டாராம். மனது மிகவும் வலித்து-கனத்து விட்டது!  அளவுக்கு அதிகமாய்(கூட) சொத்து சேருங்கள்!! அதில் ஒரு பகுதியையாவது "மக்களுக்காய்" கொடுத்துவிட்டு பின் சேருங்கள்!!! நிலையில்லாத இந்த வாழ்க்கையில் - (பதவி)இருக்கும்போதே ஏதேனும் செய்திட வேண்டாமா - என்ன விதமான அரசியல் இது???                         

பணத்தாசை...




உண்பதற்கு உணவும்;
உழுவதற்கு நிலமும்!
இல்லையென்ற போதுதான்;
இறந்திடுமோ "பணத்தாசை"???

பிரச்சனைகள், பிரச்சனையல்ல!


பேச்சையும், மௌனத்தையும்;
பொருத்தமான இடத்தில்
பொதிக்கும் திறனிருப்பின்;
பிரச்சனைகள், "பிரச்சனையல்ல"!

உறவும், உணர்வும்...



உறவும், நட்பும்;
உண்மை இல்லையெனில்!
உரிமையும், உணர்வும்;
உலா வருவதில்லை!!!

காலத்தே கிட்டாதது!!!



இளமையில் பயிலாத கல்வி!
காலத்தே கிடைக்காத கலவி!!
தாமத்தித்தும் துவங்காத தாம்பத்யம்!!!

தாகத்தால் உயிர்விட்டவனுக்கு - கிடைக்கும்;
தண்ணீர் "ஊற்றைப்" போன்றது!

காலாவதியான காதல்!!!



காதலும், காதலரும்;
காலாவதியாகும் வரை!
காதலென்பது என்னவென்று;
"கடுகளவும்" புரிவதில்லை!!!