ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013

பாவேந்தர் பார்த்ததா? பார்க்க விரும்பியதா??       முதன்முதலாய் - சென்ற வாரம்தான் தலையங்கம் எழுதாமல் என் பதிப்புகளை வெளியிட்டிருந்தேன். முழுமுதற்காரணம் - நேரமின்மை; மேலும், இது என்னுடைய 50-ஆவது தலையங்கம் என்பதால் - ஓர் அருமையான களமாய் இருந்திட வேண்டும் என்று எண்ணினேன்! பல மாதங்களாய் - படிக்க வேண்டும் என்று எண்ணி தள்ளிக்கொண்டே சென்ற "பாவேந்தரின், குடும்ப விளக்கு" படைப்பை கடந்த வாரம் தான் நிறைவேற்ற முடிந்தது! என்ன ஓர் அருமையான படைப்பு? குடும்பத்தின் பெருமையையும் - அதற்கு ஆதியாய் இருப்பது ஓர் பெண்தான் எனவும் - அதிலும், அந்த வீட்டிற்கு விளக்கேற்ற வரும் பெண் (மருமகள்) என்பதை(முன்னிறுத்தி) ஆணித்தரமாய் உணர்த்தி இருக்கிறார்!! அதாவது, ஓர் குடும்பத்தின் விளக்கு - அந்த வீட்டு மருமகள் என்று பொருள் கொள்ளலாம்!!!  உடனே, அவரும் பெண்ணை அடிமை எண்ணத்துடன் பார்த்ததாய் தவறாய் எண்ணாதீர்கள்; அவருடைய பார்வை -  பெண்ணும், பெண்ணின் தன்மையும் சார்ந்த பார்வை. மேலும், ஆண்கள் எவ்வாறு இல்லத்தரசிகளுக்கு உதவியாய் இருக்கவேண்டும் என்பதையும் - "சாற்றையடியாய்" சொல்லிட மறக்கவில்லை. ஓர் வீட்டின் விளக்காய் விளங்கும் "மருமகளின்" பலபரிமாணங்களை தனக்கே உரிய பாணியில் எளிதான "விருத்தப்பாக்களால்"விளக்கி இருக்கிறார்! அதுமட்டுமா? 3 தலைமுறையினரை காட்டிடுகிறார்!! வேறு எவரும் - இத்தனை இயல்பாய், இத்தனை எளிதாய், புரட்சி என்பது போன்ற போர்வை இல்லாது ஓர் பெரிய/கூட்டு குடும்பத்தை - விளக்கி இருக்கின்றனரா என்று எனக்கு தெரியவில்லை. 

      குடும்ப விளக்கை - முழுதாய் படித்தவுடன் எனக்குள் எழுந்த கேள்வி! இந்த விளக்கை ஏற்ற காரணமாய் இருந்தது "பாவேந்தர் பார்த்ததா? பார்க்க விரும்பியதா??" என்பது தான். அதாவது, பாவேந்தர் அவர் வீட்டிற்கு வந்த மருமகள் அப்படி இருந்ததை பார்த்து எழுந்ததா அல்லது அவர் வீட்டுப்பெண் வேறொருவர் வீட்டில் அப்படியொரு "மருமகளாய்" வாழ்ந்ததை பார்த்து விளைந்ததா?? இல்லையெனில், அவர் தன் மனதில் ஓர் மருமகள் எப்படி இருக்கவேண்டும் என்று கற்பனை செய்ததன் விளைவா??? வெகு-நிச்சயமாய், இது வேறொரு வீட்டு மருமகளை பார்த்து வந்திருக்காது! ஏனெனில், குடும்ப-விளக்கில் ஓர் உயிர்ப்பு இருக்கிறது; ஓர் உண்மை இருக்கிறது; கண்டிப்பாய், அவர் அருகிருந்து கண்டிருக்கவேண்டும்! அல்லது, அவ்வாறு காணவேண்டும் என்றவர் "கனவுகண்டு" இருக்கவேண்டும். இதுமாதிரி, எவரும் ஓர் பட்டிமன்றம் நடத்தி இருக்கின்றனறா என்று தெரியவில்லை; இல்லை எனில், அப்படி ஒன்றை இனியாவது நடத்துங்கள்: முடிந்தால், என்னையும் அழையுங்கள்! பாவேந்தரின் நேரடி-உறவு இல்லை எனினும், ஏதோ ஓர் வகையில் அவர் தலைமுறையோடு உறவு இருப்பதால், எனக்கு ஓர் கடமையும் இருக்கிறது - இதை சார்ந்து பேச!! பட்டிமன்றத்தின் தீர்ப்பு கண்டிப்பாய்; பார்க்க விரும்பியது என்பதாய் தான் இருக்கமுடியும். அதை என்னால் இயன்ற அளவில் சுருக்கமாய் எழுதி இருக்கிறேன். அதற்கு முன், அவரது படைப்பில் என்னைக் கவர்ந்திட்ட சில விசயங்கள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்; நான் குறிப்பிட்டிருப்பவை நூற்றில் ஓர் பங்கு கூட இல்லை!!

         குடும்ப விளக்கின் முதற்பகுதி - முழுதும், ஓர் மருமகளின் திறமையையும், அவளின் சாதுர்யத்தையும் பறைசாற்றுவதே! அப்பப்பா... எத்தனை, எத்தனை வேலைகள் அந்த பெண்மணி செய்வது; அதிகாலை எழுவது முதல் பின்னிரவு தூங்க செல்வது வரை! குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, கணவனுக்கு பணிவிடை செய்வது, வீட்டை சுத்தம் செய்வது, முதியோர்களை (குறிப்பாய் மரு-தந்தை மற்றும் மரு-தாய் இருவருக்கும் சிறு-மனத்துயரமும், மனக்குறையும் இன்றி) பேணுவது, பின்னர் பிள்ளைகளை மாலையில் வரவேற்று அவர்களுக்கு தேவையானது செய்து அவர்களுக்கு கல்வி புகட்டுவது என்று எத்தனை, எத்தனை!! இடையில், உணவருந்தி அமரும் கணவனுக்கு "வெற்றிலை" கொடுப்பது; அங்கே அழகிய காதல் சடு-குடு வையும் வைக்கிறார், பாவலுக்கு-அரசர்! ஆம்; "கையிற் கொடுப்பதைக் காட்டிலும் சுருளை வாயிற் கொடுத்திடு மங்கையே" என்கிறான் கணவன்!! ஆங்கே கொடுக்கவரும் சநிகழ்வை - அழகியதொரு உவமை தந்து - அவளின் தளிர்க்கைக்கு  முத்தம் கொடுத்து வாங்கியதாய் சொல்கிறார் அவர்!!! புரிந்திடுவீர் யாவரும்; இது சாதரணமான விளக்கு அல்ல! அழகிய, அதிசய, அபூர்வ-குடும்ப விளக்கு. அதுமட்டுமல்ல; கணவன் சிறிது அயர்ந்திருக்க எண்ணினால், அவள் கடை-சென்று சாமர்த்தியமாய் வியாபாரம் செய்வாள் என்கிறார். இதுதான், பாவேந்தரின் பகுத்தறிவு; அவள், வீட்டு வேலை(க்கு) மட்டுமல்ல - ஆண் செய்யும் வேலையை, ஆணை-விட சிறப்பாகவும் செய்வாள் என்பதை சொல்கிறார். அதனால் தான், முன்பே சொன்னேன் - அவசரப்படாதீர் என்று!!!

         பெற்றவர் தன மருமகளை - தம்மகளாய் எண்ணி, அவளின் பெருமையை - தம் மகனிடம் சொல்லி, உன்னால் மட்டுமல்ல - உன் மனைவியாலும் நாங்கள் கவலை கொள்ள ஏதுமில்லை என்கிறார்கள். அந்த அபூர்வ மருமகள் - பொதுநலம் வேண்டும் என்று தன் கணவனையே தூண்டுகிறாள்; அதை அவன் செய்யவில்லை என்று துடிக்கிறாள்; பின் அவனின் பொதுநலத் தொண்டு கேட்டு மகிழ்கிறாள்! ம்ம்ம்ம்ம் இப்போதைய பெண்கள்... சரி, அதைப்பற்றி இப்போது எதற்கு என்கிறீர்களா? அதுவும் சரிதான். சம்பந்தியையே சட்டை செய்யாத சனங்கள் இருக்கும் இந்த காலத்தில் "பரிசாய் சம்பந்தி தந்த பாதாளச் சுரடு, தேங்காய்" என்று கூறி "சம்பந்தி-உறவையும்" குறிப்பிட மறக்கவில்லை அரசர்! இரவின்-இனிமையை விளக்கும் விருத்தப்பாவை இனிதாய் "தொண்டையினில் ஒன்றுமே அடைக்க வில்லை; துணைவனவன் சிறுகனைப்புக் கனைக்க லுற்றான்" என்று துவங்குகிறார். வெளிக்கதவின் தாழ் அடைக்கும் சத்தம் கேட்டு - அவன் பிள்ளைகள் கேட்காவண்ணம் - நான் இன்னமும் தூங்கவில்லை என்று துணைவிக்கு விளக்குகிறான்! ஆகா...என்ன ஒரு கற்பனை?! கவனம் கொள்ளுங்கள் - "காணொளி" ஏதுமின்றி தன் எழுத்து மூலம் மட்டும் இந்த அழகியலை விளக்குகிறார். இப்படி எத்தனை, எத்தனை - நான் வியந்த விசயங்கள்?? அதனால் தான், அரசரவர் இந்த இளவரசனையும்(இளங்கோ) விருத்தப்பா எழுத தூண்டிவிட்டார்! இந்த அற்புத விளக்கை - என்னப்பன் செதுக்கிய என்னறிவு கொண்டு - என்னுடைய "கன்னி விருத்தப்பா"வாய் எழுதியருக்கிறேன்!

       தமிழ்ப்பற்றுள்ள ஓர் பொதுவனாய் மட்டுமல்ல; மேற்கூறிய வண்ணம் - பாவலரசரின் குடும்பத்தில் எனக்குள்ள ஓர் உறவின் மூலமும், நான் கண்டவரையில் - கண்டிப்பாக, பாவேந்தரவர் தான் பார்த்ததை "விளக்காய்" ஏற்றவில்லை என்றே தோன்றுகிறது. தான் காண விரும்பியதை எல்லாம் - தம் கண்ணில் காட்சிகளாய் நிறுத்தி, அதற்கு "அவர் மட்டுமே சாட்சியாய்" நின்று எழுதி இருக்கவேண்டும். ஏனெனில், இப்போதிருக்கும் பாவேந்தர் உறவுகள் இடையே அவர் விவரித்திருக்கும் அளவில் "உறவு-வலிமை" இல்லை! அங்கே, பாவேந்தர் படைத்திட்ட "குடும்ப விளக்கு" தரவேண்டிய "ஒளி-வீச்சின்" அடர்த்தி இல்லை என்றே நான் கருதுகிறேன். உண்மையில், அப்படியோர் ஒளி-வீச்சை அவர் கண்டிருந்தால்; அவரின் 3-ஆவது தலைமுறை தான் இப்போது நடக்கிறது (4 வது தலைமுறை அனைத்தும் சிறு-பிள்ளைகள்) - அதற்குள் அந்த ஒளி-வீச்சின் அடர்த்தி குறைந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே தான் சொல்கிறேன்; இது கண்டிப்பாய், பாவேந்தர் நிசத்தில் பெரிய அளவில் - ஒளிவீச ஆசைப்பட்டு, ஏற்றிட்ட "கற்பனை விளக்கு" என்று! "குடும்ப விளக்கு" முழுதும் படித்தவுடன் எனக்கு தோன்றியது "இப்படி ஓர் குடும்பம் - அதுவும் 3 தலைமுறை தொடர்ந்து அதே அன்புடனும், காதலுடனும் இருப்பது எத்தனை அசாத்தியம்?" என்பதுதான். உடனே, என்னுள் நானே - "பாவேந்தரின் குடும்ப விளக்கு - அவர் பார்த்ததா? அல்லது பார்க்க விரும்பியதா??" என்று பட்டிமன்றம் நடத்தி; நானே பேச்சாளர்களாயும், நடுவராயும் இருந்து விவாதித்தேன். என்னுடைய தீர்ப்பு இது தான்...

பாவேந்தரின் குடும்ப விளக்கு - அவர் பார்க்க விரும்பியதே; பார்க்க விரும்பியதே!!!

பின்குறிப்பு: அருள்கூர்ந்து, இது ஏனோ "பாவலரசரின், (சொந்த)குடும்ப விளக்கு" என்று தவறாய் உணர்ந்து விடாதீர்கள்! அவர் ஏற்றிவைக்க எண்ணியது - எல்லா குடும்பத்திலும் தான்; அப்படி ஓர் மருமகள் ஒவ்வொரு வீட்டிற்கும் வேண்டும் என்பது தான் அவரது ஆசை!! அதனால்தான், என்னுடைய "கன்னி விருத்தப்பா"வில் பாவேந்தரின் விளக்கு "ஆர்க்கும் பொதுவாம்" என்றேன்!!!          

வாழ்க்கை என்பது...


கடந்த காலத்தின் - கசப்பில்;
"காலை"வாரிட லன்று!
நிகழ்கால செயல்கள் உணர்ந்து;
"நெஞ்சை"வருடி விடுதல்!!

கொலைகாரன்...(நான் எழுதியது)

கோடியில் ஒருவனை கொன்று;
       பெற்ற பெயர்கொலை காரன்!
கொடிஉயி ரணுக்களை கொன்று,
       ஒருவன் ஆய்உயிர்த் தவன்!!
கோடிப் புண்ணியம் செய்து;
       பெற்ற பிள்ளை யென்று,
ஆடப் படுகிறான்; சொல்வீர்
       நீவிர்!!! யாரோ கள்வன்???


*******

(என்னப்பன் உருமாற்றியது)


கோடிமக் கள்இடை யினில்ஓர்;
       உயிர்கொன் றால்கொலை காரன்!
கோடி உயிரணுக் களிலே,
       ஒன்றால் வந்தமனிதன் மட்டும்
தீடு நடைபோட் டிங்கே
       பேரறி வால்புகழ் பெற்றான்!!
மாடு புகழ்செல் வத்தால்
       தெள்ளமுதாய் வாழ்ந்தார் காணீர்!!!


பாவேந்தரின் "பொது-விளக்கு"

(பாவேந்தரின் "குடும்ப விளக்கு" ஏற்றிவைத்தது, என்னுள் "விருத்தப்பா" எனும் "சுடர்விளக்கு"!
என்னப்பனின் தமிழறிவு-எண்ணெய்க்கிணறால்; ஆகிடுமிது "அணையா விளக்கு"!!
தெளிந்திடுங்கள் யாரும் - வேந்தரது யார்க்கும் "பொது விளக்கு"!!!)
*******

(என்னப்பனிடம் இலக்கணம் பயின்று, நான் "பலமுறை" மாற்றி எழுதியது!)

பாவேந்தர் தம்புகழ்சேர் விளக்கு; நீத்த
       பல்இருளும் புரிந்தோரே நிசமாய் மேதை;
பாவலர்க்கோ அம்மாபெரும் விளக்கு - கீதை!
       பேரிருளின் போர்வையில் இருக்கும் இந்நாள்
பாவையரோ?! இல்வழியால்; தமிழர் மாண்பாம்
       பெருவிளக்கை இருள்சூழஓர் வழிசெய் கின்றார்!!
பாவலாண்டார் ஏற்றிவைத்த விளக்கு; ஆர்க்கும்
       "பொதுவாம்"என் பதைமறத்தல், தகுமோ? சொல்வீர்!!!

*******

(என்னப்பன் உருமாற்றியது....)

பாவேந்தர் ஏற்றிவைத்த விளக்கால்; நாட்டின்
       பைந்தமிழர் பண்புதனை உணர்ந்தோர் கோடி!
பாவலரின் பொதுவிளக்கால் வெளிச்சம் பெற்ற
       பாத்திறனை உணராதோர் இணைத்து இந்நாள்
பாவையரும்; குடும்பத்தை புரிந்தார் இல்லை!
       பாரிடையில் விதிவிலக்காய் வாழ்ந்தே நாளும்
பாவத்தைச் செய்கின்றார்; பயன்தான் உண்டோ?
       பாமரராய் வாழ்ந்திடுதல் முறையோ? சொல்வீர்!!!

*******

முன்னுரை - என் "விருத்தப்பா" விருட்சமான விவரம்...        பலமாதங்களாய் முயன்று - இப்போது தான் பாவேந்தரின் "குடும்ப விளக்கு" முழுவதையும் படிக்க முடிந்தது. பாவலை-ஆண்ட அவரின் "விருத்தப்பா"க்களை கண்டு என்னுள் எழுந்தது ஓர் தீப்பொறி; அப்பொறி என்னுள் ஏற்றியது ஓர் சுடர்விளக்கு. உடனே, குடும்ப விளக்கை பற்றிய என்னுடைய பார்வையையே; என் "கன்னி - விருத்தப்பா"வாய் எழுதினேன். நான் முதலில் எழுதியது - என்னறிவுக்கு இப்படித்தான் என்று தோன்றிய - "அறுசீர் விருத்தம்". இலக்கணம் ஏதும் என் நினைவில் இப்போது இல்லை என்பது தெளிவாய் தெரிந்ததால் - என்னப்பனுக்கு என்னுடைய விருத்தப்பாவை சொல்லி அவர் கருத்து வேண்டிட்டேன். அவர் என்னப்பனாய் இராது - எனக்கு பாடம் நடத்திய அதே தமிழாசிரியராய் இருந்திருந்தால் என்றோ நிறுத்திவிட்ட "கும்பிடறேன்பா" என்ற என் கண்டுபிடிப்பை மீண்டும் ஓர்முறை சொல்லவைத்திருப்பார் என்பது பின்னால் தெளிவாய் புரிந்தது. ஆனால், அவர் மிக எளிதாய் ஆரம்பித்தார்; முதலில் நீ கூற வருவதை "அறுசீர் விருத்தமாய்" கூறிடல் ஆகாது என்றார்! இதை "எண்சீர் விருத்தமாய்" எழுதினால் தான் சரியாய் வரும் என்றார். என்னுடைய விருத்தப்பாவின் "கரு" இதுதான்: "பாவேந்தரின் குடும்ப-விளக்கு உணர்த்திட்ட அனைத்தும் உணர்ந்து வாழ்வோரே - சான்றோர்! அதை விடுத்து - இன்றைய பெண்கள் அந்த குடும்ப-விளக்கையே அணைத்துவிட்டார்கள்; மேலும், பாவல்-அரசரின் விளக்கு, "அவர்"குடும்பத்துக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் பொதுவானது!!" இதுதான் என்னுடைய பாடலின் பொருள்(இன்றைக்கு என் முதல்-விருத்தப்பா வெளியாகிறது)!!! 

         அறுசீர் விருத்தத்தில் சொல்லமுடியாது என்பதை முதலில் கூறியாவர், பின்பு - மெதுவாய் அறுசீரில் "ஓர் சீரில் - இரண்டு அசை-மட்டும் தான் வரவேண்டும்"; எப்போதேனும் 3 வரலாம்; ஆனால், உன் பாடலில் 3 அசைகள் அதிகம் உள்ளன! 4 அசைகள் வரவே கூடாது; அதுவும் இருக்கிறது" என்றார்!! நான், "சீரா? அசையா??" என்று மயங்கினேன்; இந்த "மடையனுக்கு" எட்டிய அறிவு "சீர்" என்பது ஓர் வார்த்தை அல்லது பல-வார்த்தைகள் ஒன்றுசேர்ந்தது என்பதுதான். சரி, அசை பற்றி கொஞ்சம் சொல்லிடுங்கள் என்றேன்! "நேரசை, நிரையசை" என்ற 2 உண்டென்றார்; "குறில்(அ) தனித்தும், குறில் ஒற்றடுத்தும் (அம்); நெடில் தனித்தும் (ஆ), நெடில் ஒற்றெடுத்தும் (ஆம்) - வருவது "நேரசை"; குறில் இணைந்தும், குறில் இணைந்து ஒற்றடுத்தும்; குறில்-நெடில் இணைந்தும், குறில்-நெடில் இணைந்து ஒற்றடுத்தும் வருவது "நிரையசை"! என்றார். அடடா, எங்கேயோ; எப்போதோ படித்திருக்கிறோமே என்றுணர்ந்தேன். பல தமிழ் மன்ற தேர்வுகளில் கலந்துகொண்டு "முதல் பரிசு" பெற்று என்னப்பனுக்கு புகழ்-தேடி தந்திருக்கிறேன். என்ன பயன்? தெளிவில்லாத "மனனம்" மூலம் படித்து முதல்-மதிப்பெண் எடுப்பதில் எந்த பயனும் இல்லை என்று பலமுறை கூறி இருக்கிறேன்; நான் படித்த அசைகளை உணர்ந்து ஓர் "விருத்தப்பா"-ஆவது எழுதி இருந்தால் நான் அதை மறந்திருக்க சாத்தியமே இல்லை. இதே போல் தான், அத்தனை படைப்பும்! செயல்முறை அனுபவம் இல்லாத "வெறும்-படிப்பு" மட்டும் நிலைப்பதற்கு சாத்தியமே இல்லை!!

       பிறகு, சீர்-இலக்கணம் இவ்வாறென்று நினைவூட்டினார்:  "நேர்/நேர் - தே/மா; நிரை/நேர் - புளி/மா; நிரை/நிரை - கரு/விளம்; நேர்/நிரை - கூ/விளம்". அட, இதையும் படித்திருக்கிறோமே என்று நினைவு கொண்டேன். சரி என்று, என்னுடைய பாடலை - "எண்சீர் விருத்தமாய்" மாற்றி அவரிடம் படித்து காட்டினேன்; அவர், இப்போது பரவாய் இல்லை; ஆயினும், பொருள் தெளிவில்லை என்றார்! என்னுள் "சொல்லில் குற்றமில்லை; இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம்! ஆனால், பொருளில் தான் குற்றம் இருக்கிறது" என்று நக்கீரன் பேசினார்! என்னப்பன் பின்-தொடர்ந்தார்: எண்சீர்-இலக்கணத்தின் மரபு வேறு என்று விவரித்தார்: "எண்சீர்-விருத்தத்தில், 8 சீர்களில் - முதலிரண்டு சீர்கள், 3 அசைகள் கொண்டிடவேண்டும்; 3, 4 வது சீர்கள் - 2 அசைகள் கொண்டிடவேண்டும் - அதிலும் 3-வது சீர் "புளிமா"வாய் இருத்தல் நலம்; 4 ஆவது சீர் "தேமா"வாய் இருத்தல் வேண்டும்; இதே விதி 5 முதல் 8 வரியிலான அடுத்த 4 சீர்களுக்கும் பொருந்தும் (7 ஆவது சீர் "புளிமா"வாய் இருக்கலாம்) என்றார்!! என் மயக்கம் அதிகமானது;  ஆனால், ஓர் காரியத்தை செய்ய துணிந்துவிட்டால் - அதை செய்து முடிக்காமல் நான் ஓய்வதில்லை!! முயன்றேன், பலமுறை! எழுதினேன் மாற்றி, மாற்றி!! ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஓர் இலக்கணத் தவறு! பொருள் குற்றம் தொடர்ந்து கொண்டே இருந்தது!! என்னப்பன், நான் தளர்வுருவது கண்டு "இது ஆரம்பம்-பா; அப்படித்தான் இருக்கும்! குழந்தை உடனேவா நடந்து விடுகிறது? என்றார்". அவருக்கு, என்மேல் நம்பிக்கை இருந்தது!!

    அவர் நம்பிக்கை(யை), வீணா(க்)கவில்லை! ஓர்நாள் - நான் மாற்றியெழுதி படித்திட்ட ஒன்றை; பொருள் மிகச்சரியாய் இருக்கிறது; இலக்கணம் நன்றாக இருக்கிறது; சிறு-மாற்றம் தான் வேண்டும் என்றார்! அவரே, இது சிறப்பாய் வந்திருக்கிறது என்றார்!! அந்த கணம் -  முதன்-முதலில்; என்மகளை அவள்-பிறந்து 10ஆவது நிமிடத்தில் என்கரங்களில் சுமந்த - பரவசம் போல் உணர்ந்தேன்!!! இதற்கிடையில், அவர் என்னுடைய பாடலை (பொருள் மாறாது)வேறொரு வடிவில் கொடுத்தார்; என்ன ஓர் புலமை அது! என்ன ஓர் பொருட்செறிவு அது!! என்னுடைய பொருளின்-கணம் கூடியதை உணர்தேன்; அந்த மாற்றத்தை என் பொருளில் கொண்டுவந்தேன். பின், அந்த பொருளை உள்வாங்கி என்னுடைய பாடலை முழுதுமாய் மாற்றி எழுதினேன். அதில், அவர் செய்திட்ட சில-மாற்றம் கொண்டு வந்திட்ட பாடலைத்தான் இன்னும் சில மணிநேரங்களில் பதியவிருக்கிறேன். முதலில், அவர் கொடுத்த பாடலைத்தான் பதியலாம் என்றிருந்தேன்! ஆனால், (என்னப்பனே, எனினும்!!) என்-சுயம் அதற்கு இடமளிக்கவில்லை. அதனால், என்னுடைய பாடலையே பதிவு செய்யப்போகிறேன்; ஆயினும், அவரின் பாடலை நிராகரிக்க விரும்பவில்லை; அதனால், என்னுடைய பாடலின் கீழே என்னப்பன் எழுதிய அந்த பாடலையும் வெளியிடுகிறேன்! என்னப்பனின், பாடலில் இருந்து ஓரிரு சொற்களை பயன்படுத்தி இருக்கிறேன்; அதில், எந்த தவறும் இல்லை; அவரின் வித்து தானே, நான்?! ஆனால், பாடல் நன்றாக வந்திருப்பதை நீங்களும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

          இறுதியான - பாடல் வெளிவரும் முன்; நான் எழுதிட்ட முதல் வடிவத்தை இங்கே கொடுக்கிறேன்:

                             பாவேந்தரின் "குடும்ப விளக்கு",
                                      "பா"க்களை புரிந்த "பார்போற்றும்;
                             பாவலர்க்கு "பொது விளக்கு!
                                      "பா"க்களை உணரா "பார்வை"யிலர்க்கு,
                             பாவைவளர்க்கும் "பந்த பாசத்தின்"
                                       பாங்குகள் புரிவது, "விதி-விலக்கு"!!
                             பாவமே செய்யவில்லை யெனினும்;
                                       பாமரரவர்கள், பலியாவரே "இன்னலுக்கு"!!!

தமிழ்-இலக்கணம் தெரிந்தோருக்கு இதில் எத்தனை பிழைகள் உள்ளன என்பது தெளிவாய் தெரியும்; எனக்கே(??!!) இப்போது தெளிவாய் தெரிகிறது!! என்னப்பன் கூறிய பின்தான் - நான் சொல்லவந்ததை தெளிவாய் சொல்லவில்லை என்று உணர்ந்தேன். இதை உணர்ந்த பின், என் பாடல்-திறன் தானே செம்மையானது. இங்கே, ஒன்றை கூறிட விரும்புகிறேன்! என்னப்பன், எழுதிய வடிவத்தில் - நான் எண்ணிட்ட பொருள் வரவில்லை என்று ஒன்றிரண்டு மாற்றங்கள் செய்தேன்; அதை, என்னப்பன் வடிவாய் பாராட்டி - அந்த சொற்கள் வலிமையாயும் இருக்கின்றன! என்றார்; நான் அகமகிழ்தேன்.

என்னுடைய கன்னி-விருத்தப்பா; உங்களை கவரும் என்று நம்புகிறேன்!!!

பின்குறிப்பு: என்னப்பன் கூறியதாய் நான் எழுதி இருக்கும் இலக்கணத்தில் தவறு எதுவும் இருப்பின் - அருள்கூர்ந்து அதை என் பிழை என்பதை உணருங்கள்! அப்படி ஏதும் இருப்பின் எனக்கு தெரிவியுங்கள்; என்னப்பனிடம் தெளிவு-படுத்திக்கொண்டு பிழையை சரிசெய்கிறேன்.

ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2013

21 ஆண்டுகளுக்கு பிறகு...     21 ஆண்டுகளுக்கு பின் - இளங்கலை-யில் என்னுடன் படித்த நண்பன் ஒருவனுடன் நேற்று தொடர்பு கொள்ள முடிந்தது! வெகுநிச்சயமாய், என்னுடைய மகிழ்ச்சியான நாட்களில் ஒன்றிது!! என்னுடன் படித்தவர்களில் பலருடன் எனக்கு தொடர்பு இல்லை எனினும் - இவனை தொடர்பில் கொண்டு வர நான் மிகவும் முயன்றேன். எனக்காய் பலதும் (நான் ஏதும் செய்யாத நிலையிலும்) செய்த நண்பன்! அவன் பெயர் மோகன் சைபர்சாத் (Mohun Cyparsade) - மொரீஷியஸ் நாட்டை சேர்ந்தவன்!! அவன் என்னுடைய இளங்கலை "தற்காலிக பட்டத்தை (Provisional Certificate)" பெற்று அனுப்பிய அஞ்சல்-உரையை பல ஆண்டுகள் என்னுடன் வைத்திருந்தேன்; இறுதியாய் ஓர் ஆண்டுக்கு முன்பு கூட பார்த்தேன்! இன்னமும் இருக்கவேண்டும்; அடுத்த முறை இந்தியா செல்லும்போது உறுதி செய்யவேண்டும். எதற்கு என்று தெரியவில்லை! அந்த உரையை வைத்திருக்கவேண்டும் என்று தோன்றியது. அந்த நண்பனை தான் "முக-நூல் (Facebook)" மூலம் தொடர்பு கொண்டேன்.

    பின்னர், இணையதளம் மூலம் 70 நிமிடங்களுக்கு மேல் பேசினோம்! அவனுடைய குடும்பத்தை எனக்கு அறிமுகப்படுத்தினான்.  "மீன் குழம்பு" - டின்னில் அடைத்த(ம்) கிடைக்கும் என்பதை 1990-இல் எனக்கு காட்டியவன். மற்றவருக்கு எப்படியோ, அன்றைய தினம் எனக்கு அந்த விசயம் - பெருத்த ஆச்சர்யம்; அந்த குழம்பின் சுவையும், தரமும் கூட! இது மாதிரி, பல விசயங்களை கூறிக்கொண்டே போகலாம். இன்று, எங்கள் இருவருக்கும் பொதுவான ஓர் நெருங்கிய-நண்பனுக்கும் (அவர்களின் உறவு இன்னமும் வலிது); மேலும் ஓர் நண்பனுக்கும் தகவலையும் தொடர்பு-மூலத்தையும் கொடுத்தேன். என் மகிழ்ச்சியும், பரவசமும் அவர்களையும் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. இதுதான், நட்பு என்ற உறவின் உணர்வு/வலிமை!! எந்த எதிர்பார்ப்பும் இல்லை; இங்குதான் எதிர்பாராமலே அனைத்தும் கிடைக்கிறதே. இப்போது, எனக்கு ஓர் ஆசை எழுகிறது; நாங்கள் எல்லோரும் இளங்கலை-முடித்து ஒருவரை ஒருவர் பிரியும்போது, பெருத்து-அழுதோமே; அந்த பாரிஸ்-கார்னர்...

 "பழைய பேருந்து-நிலையத்தை" எல்லோரும் ஒன்றுசேர்ந்து காணவேண்டும்!!!       

இதுதான் விதி என்பதா???     சென்ற வாரம் "இரமதான்-விடுமுறையில்" என் தம்பியை காண கத்தார் நாட்டிலுள்ள "தோஹா" நகரத்திற்கு செல்ல விமான-சீட்டு எல்லாம் வாங்கிக்கொண்டு  துபாய்-விமான நிலையம் சென்றடைந்தேன்! விமானத்தில் ஏற நுழை-வாயிலை நெருங்கிய போது - தடுத்து நிறுத்தப்பட்டேன் - "விசா" இல்லை என்பதற்காய்!! அவசரப்படாதீர்; நான், முன்பே "கத்தார்-தூதரகத்தை" தொடர்பு கொண்டு கேட்ட போது - நான், விண்ணப்பிக்க வேண்டாம்; இறங்கிய பின் விசா (Visa on Landing) கிடைக்கும் என்று ஓர் அலுவலர் கூறினார்! அதனால்தான், விமானச்-சீட்டு வாங்கி நுழை-வாயில் வரை சென்றேன்; என்ன செய்வதென்றே புரியவில்லை - பெருத்த ஆற்றாமை! அவர்கள் முடியவே-முடியாது என்று சொல்லிவிட்டனர்; விமானமும் புறப்பட்டுவிட்டது. பின்னர், என்னை நானே தேற்றிக்கொண்டு சரி வெளியே செல்கிறேன் என்றேன்; அவர்கள், விமானம் சேரும்-இடத்தில் தரையிறங்கும் வரை என்னை வெளியில் அனுப்பமுடியாது என்று கூறிவிட்டனர் - " வெந்த புண்ணில் வேல்???!!!"

       ஒருவாறாய், 4 மணி நேரத்திற்கு பின்னர் - என்னை அவர்கள் வெளியே விடும்போது மணி 23:30! அன்று வியாழக்கிழமை - நாள் முழுதும் விரதம்; உடல் மிகவும் சோர்ந்து விட்டது!! விமான-நிலையத்திற்கு வந்த என் நண்பர் ஒருவர் - என்னை பேருந்து நிலையத்தில் 00:01 மணிக்கு விட்டார்; சிறு-நீர் வேறு முட்டிக்கொண்டு நின்றது! பேருந்து-சீட்டை வாங்கிவிட்டு, நடத்துனரிடம் உணவு வாங்கி (சிறு-நீரையும் விடுதலித்து) வருகிறேன் என்றேன்; அவரோ, வண்டி நிரம்பியதும் - எடுத்துவிடுவோம்; இதுவே கடைசி-வண்டியாய் இருக்கக்கூடும் என்றார். உள்ளேயும்(உணவு) அனுப்பாது; வெளியேயும்(சிறுநீர்) அனுப்பாது  அமர்ந்துவிட்டேன். ஒருவாறாய், இரண்டையும் சமாளித்து வீடு சேர்ந்த போது மணி 03:30!! ஆற்றாமையிலும், மனதயற்சியிலும் "விடுமுறையை" வீட்டிலேயே கழித்துவிட்டு, அடுத்த அலுவலக-நாளில் "கத்தார்-தூதரகத்திற்கு" சென்று நேரில் விசாரித்தால் - எந்த வருத்தமுமின்றி "எவரோ ஓர் அலுவலர்" தொலைபேசியில் தவறான-தகவலை கொடுத்துவிட்டதாய் தெரிவித்தனர்...

எவரின் குற்றம் என்பது? இதுதான் விதி என்பதா???!!!   

ஏனோ கோவிலின் பரவசம் கிடைக்கவில்லை!!!      நேற்றுமுன்தினம் - என் தமக்கை-மகன் மற்றும் அவன் குடும்பத்தாருடன் - துபாயில் உள்ள கோவிலை காணும் வாய்ப்பு கிடைத்தது. எப்போதோ செல்ல எத்தனித்தது; என்னுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் - என் கற்பனை திரையில் காட்சிகளாய் ஓடிக்கொண்டே இருந்தது! என்னுடைய ஆவல் அதிகமானது!! கூடவே - போர்த்துக்கல் நாட்டில் இருக்கும் "வெறும்"பிரம்மாண்டமான "ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா" கோவில் போல் இருந்துவிடுமோ என்ற பயம்!!! உண்மையில், அந்த கோவிலுக்கு அதிகபட்சமாய் 7 முறைகள் (8 ஆண்டுகளில்!) தான் சென்றிருப்பேன் - அதிலும், ஓர் முறை கூட - கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற முனைப்போடு செல்லவில்லை - ஏனோ அம்மாதிரி உள்ளவைகளை என்னால் கோவில் என்றே ஒப்புக்கொள்ள முடியவில்லை! ஓர் வழியாய் கோவிலை அடைந்தோம்; அது ஓர் சாதாரண வீட்டை போன்று தான் இருந்தது - அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை; இங்கு கோவில் ஒன்று இருப்பதே பெரிய-விசயம்  அல்லவா? 

   உள்ளே சென்று பார்த்தால் - கோவில் என்பதற்கான உணர்வு எதுவும் எனக்கு எழவில்லை! போர்த்துக்கல் நாட்டிலாவது ஓர் பிரம்மாண்டம் இருந்தது; இங்கு அது கூட இல்லை! "இவர்களுக்கு (மட்டும்) உருவிலா வழிபாடு எப்படி சாத்தியமாயிற்று???" தலையங்கத்தில் குறிப்பிட்ட என்னுடைய ஆச்சர்யம் மேலும் விரிவடைந்தது. கோவில் என்பதில் நம்மை மயக்கும், நம்மை கவரும், நம்மை பரவசப்படுத்தும் சிலைகளை பார்த்தே பழகியவன் ஆயிற்றே?! சபரிமலை ஐயப்பன் கோவிலில் எந்த பிரமாண்டமும் இல்லை; ஆனால், 48 மைல் தொலைவு நடந்து அங்கு சேரும்போது - ஓர் பரவசம் கிடைக்கும்! திருப்பதியில் - பிரம்மாண்டத்துடன் பரவசமும் கிடைக்கும்!! சமயபுரத்தில் - பிரம்மாண்டம் ஏதுமில்லை; ஆனால், அந்த அம்மனின்-சிலையில் ஓர் உயிர்ப்பு இருக்கும்!!! இதே உயிர்ப்பு பெங்களூர்-மஹாலக்ஷ்மி நகரில் இருக்கும் "ஆஞ்சநேயர் சிலையில்" மற்றும் "கோகர்ணா" முருடேஷ்வர்-சிவனிடம் இருக்கும்!! "தென்னிந்திய-வடஇந்திய" வேறுபாடு இதிலும் இருக்கிறதா??? எது, எப்படியோ...

      இம்மாதிரி - உயிர்ப்பும், பரவசமும் கிடைக்கும் கோவில்களே என்-விருப்பம்!!!

ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2013

சமையலும், ஆணாதிக்கமும்!!!

          கடந்த முறை, என் மரு-பெற்றோர் வீட்டில் நான் "பிரியாணி" சமைத்த போது முதல் முறையாய் - என்மகள் "அப்பா, உங்களுக்கு சமைக்க தெரியுமா? நீங்களா சமைக்க போறீங்க??" என்று அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் கேட்டாள்! எனக்கும் அதிர்ச்சி தான் அவளின் கேள்வி!! அதன்பின் 3 சமயங்களில் அவள் அதே கேள்வியை கேட்டாள்!!! அவள், இறுதியாய் அவ்வாறு கேட்டது; இங்கே அபு-தாபி வந்திருந்த போது; அப்போது, என்னவள் "ஏன் அவர் சமைத்தால் என்ன? எல்லோரும் கலந்து தான் செய்யவேண்டும்" என்றாள். என்னவள் அவ்வாறு கூறியதில் எந்த தவறும் இல்லை! ஆனால், அவள் கூறிய தோரணம் என்னை திகிலடையச் செய்தது. இந்நிகழ்வு பற்றி இதுவரை என்னவளுடன் விவாதித்ததில்லை; அது, தேவையுமில்லை! ஆனால், என்னுள் என்மகளின் கேள்வி பெருத்த ஆலோசனையை உருவாக்கியது!! ஓர் 3 வயது பெண்குழந்தை அப்படி கேட்க காரணம் என்னவென்று யோசிக்க ஆரம்பித்தேன். அந்த கேள்விக்கும், ஆணாதிக்கத்திற்கும் - ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண்-வர்க்கத்திற்கும் தொடர்பு உள்ளதை போல் தோன்றியது. இது பற்றிய ஓர் தலையங்கத்தை எழுதவேண்டும் என முடிவெடுத்தேன்; இந்த தொடர்பை பற்றி என்னுடைய பார்வையை பதிவு செய்யவேண்டும் என்று எண்ணினேன். என்மகள் அந்த கேள்வியை திரும்ப-திரும்ப கேட்க, என்ன காரணம் என்று முதலில் யோசிக்க ஆரம்பித்தேன். அதற்கு எனக்கு கிடைத்த விடை - அவள் வளரும்  சூழலும், அவள் காணும் நடைமுறையும் தான் காரணம் என்று புரிந்தது. 

        ஆம்! என் பெற்றோர் வீடு, என் மரு-பெற்றோர் வீடு, என் தமையன் வீடு, என் தமக்கை வீடு என்று எல்லா வீடுகளிலும் - பெண் எனும் உறவே சமைப்பதை காண்கிறாள். அவள் எந்த ஆணும் சமைப்பதை கண்டதில்லை; எனவே, அவளுக்கு-அவளின் தந்தை சமைப்பது புதியதாய்/புதிராய் தெரிந்திருக்கிறது. இங்கே அவள் சந்தித்த வீடுகளை - இரண்டாய் பிரித்து பார்க்க எண்ணுகிறேன்; என் பெற்றோர் வீடும், என் தமக்கை வீடும் ஓர் பிரிவு என்று வைத்துக்கொள்வோம்! என் மரு-பெற்றோர் வீடும், என் தமையன் வீடும் மற்றோர் பிரிவு! காரணம்; என் அம்மாவும், தமக்கையும் வேலைக்கு செல்லவில்லை - இல்லத்து-மனைவிகள். என் மரு-தாயும், என் மரு-தமக்கையும்(அண்ணி) வேலைக்கு செல்பவர்கள். பெண்கள், பொருளாதார நெருக்கடி காரணமாய் அல்லது விருப்பம் காரணமாய் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பிறகுதான் - இம்மாதிரியான பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன என்பதால் தான் இரண்டு பிரிவுகளாய் வகுத்துள்ளேன். பெண்கள் வேலைக்கு செல்லாத/செல்லமுடியாத காலகட்டத்தில் - வீட்டில் இருந்துகொண்டு எல்லா வீட்டு வேலைகளையும் செய்தனர்; ஆண் பொருளீட்டும் வேலையை மட்டும் கவனிக்க ஆரம்பித்தான் என்பது தான் முதலில் இயல்பாய் இருந்திருக்கிறது; நானும், அதை வாய்ப்பு கிடைக்கும்போது கூறியிருக்கிறேன். இவையெல்லாம், என்மகளுக்கு முழுதாய் புரிந்திருக்க வாய்ப்பில்லை எனினும் - அவளின் பார்வையில் எல்லா ஆண்களும் (அல்லது அந்தந்த வீட்டு தந்தைகள்) சமைக்கவில்லை; ஏன் என்னப்பன் (ஓர் ஆண்) சமைக்கவேண்டும் என்று தோன்றியிருக்கலாம். 

         ஏனெனில், கண்டிப்பாய் என்மகளுக்கு ஆண், பெண் - பாலின வேறுபாடு தெரியும்; அதை அவளின் பள்ளியே கூட சொல்லிக் கொடுத்திருக்கிறது. அவளும், வீட்டுக்கு வந்தவுடன் நீ-ஆண், நீ-பெண் என்று வேறுபடுத்தி கூறியிருக்கிறாள். எனவே, அவளின் பார்வையில் - ஆண் சமைப்பதில்லை/சமைக்க-கூடாது      என்று புரிந்து கொண்டிருக்கிறாள்; எனவே தான் அந்த கேள்வி வந்தது! இதை நம்முடைய பார்வையில் இருந்து பார்த்தால் - வேலைக்கு செல்லும்/செல்லாத பெண்கள் இருக்கும் இரண்டு வீடுகளிலும், பெண்(தாய்) தான் சமைக்கிறாள் என்று எடுத்துக்கொள்ளலாம். என் மரு-தமக்கை கூட பரவாயில்லை; அவர் பள்ளி-ஆசிரியை; பகல் நேர வேலை மட்டும்தான். ஆனால், என் மரு-தாய் தலைமை செவிலியர் (Head Nurse); 3 சுழற்சி (shift) முறைகளிலும் வேலை செய்பவர். வீட்டில் பணிப்பெண் இருந்தால் கூட, அவர் அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு மேல் தூங்கி நான் பார்த்ததே இல்லை! என்னவளிடம் மட்டுமல்ல; என் மரு-தாயிடமே இது பற்றி உயர்வாய் கூறியதுண்டு - என்னை மிகவும் பிரம்மிக்கவைத்த  இல்லத்தரசி அவர்!!! அவருக்கு சமையலறையில்/வீட்டில் பெரும்பான்மையான உதவிகள் செய்பவர் - என்னவளின் தாய் மாமா. அவர் ஆண்தானே; ஆனால், வேலை செய்கிறாரே என்பதை என்மகள் உணரவில்லை போலும்! ஒருவேளை, அவள் அந்தந்த வீட்டில் தந்தையாய் இருக்கும் ஆணை மட்டும் தான் அப்படி பார்த்தாலோ? எது, எப்படியோ - கண்டிப்பாய் என்மகளின் கேள்விக்கும் ஆணாதிக்கத்திற்கும் ஓர் தொடர்பு இருப்பது நிச்சயம் என்றுணர்ந்தேன்.

          இங்கே, ஆண்களுக்கு நான் சொல்ல விரும்புவது: வேலைக்கு செல்லும் பெண்களோ அல்லது வீட்டில் இருக்கும் பெண்களோ - அவர்களுக்கு வீட்டு வேளைகளில் உதவியாய் இருக்கவேண்டும் என்பதே! என்மகள் பார்த்த இந்த தருணங்களில்தான் நான் வேலை செய்தேன் என்பதில்லை; என்மகள் என்னுடன் இருந்தது - அவளின் ஒன்றரை வயது வரைதான். எனவே-அவளுக்கு, நான் என்னென விதத்தில் சமைப்பேன்; எந்தெந்த வீட்டு வேலைகளை செய்வேன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லாது போயிற்று. அதே போல், திருமணமாகி என்னவள் என்னுடன் இருந்தது - 3 ஆண்டுகள் மட்டுமே; அதன் பின்னர் அவர்கள் இருவரும் என் மரு-பெற்றோர் வீட்டில் உள்ளனர். அந்த 3 ஆண்டுகளில் - 95 %-க்கு மேல் காலையில் எழுந்து சுவைநீர் கலப்பது, என்மகள் பிறந்த பின் அவளுக்கு பால் காய்ச்சுவது, பாலுடன் கலந்த உணவு தயார் செய்வது என்பது போன்ற வேலைகளை நான் தான் செய்வேன் - பின்னர் தான் என்னவளை எழுப்புவேன். மற்ற வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்தே செய்துள்ளோம். இது என்மகளுக்கு தெரியாமல் போயிற்று; ஆனால், என்னவளுக்கு தெரியும்!! இவைகளை என் பெருமை-கூறிட கூறவில்லை என்பது "அடுத்த-பத்தியை" படிக்கும்போது புரியும். என்னை விட அதிகமாய் என்னுடைய மரு-தமையன் என் தமக்கைக்கு செய்வார்/செய்துகொண்டிருக்கிறார். இதையும், என்மகள் கவனிக்க அவளுக்கு "போதிய-வாய்ப்பு" கிடைக்கவில்லை. ஆக, மேற்கூறிய இரண்டு  பிரிவுகளை இப்போதைய தலைமுறையுடன் ஒப்பிடும்போது பின்வருவதை புரிந்துகொள்ளலாம். 

    ஆணாதிக்கம் என்பது மாறியிருக்கிறது, என்பதே அந்த புரிதல்! என்னுடைய பெற்றோர்/மரு-பெற்றோர் தலைமுறையில் - வேலைக்கு செல்லும்/செல்லாத பெண்கள் - இரண்டு வீடுகளிலும் வீட்டு வேலைகளை அவர்களேதான் செய்தார்கள்/செய்கிறார்கள். இப்போதைய தலைமுறையில் - இரண்டு வீடுகளிலும் (நான் மற்றும் என் மரு-தமையன் போன்று) பெரும்பான்மையான ஆண்கள் வீட்டு-வேலைகளில் உதவியாய் இருக்கிறார்கள்! அதவாது, ஆணாதிக்கம் என்ற திமிர்/அகம்பாவம் மாறி, அழியத் துவங்கி இருக்கிறது. ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்கியிருந்த பெண்களின் வரலாறு மிக-நீண்டது; அதிலிருந்து அவர்கள் மீண்டு வர இன்னும் பல-தலைமுறைகள் வேண்டும்; நாம் இடைப்பட்ட காலத்தில் இருக்கிறோம் என்று முன்பே கூறி இருக்கிறேன். இந்த-தலைமுறை ஆண்கள் பெரும்பாலானோர் வீட்டு வேலைகளில் உதவியாய் இருக்கின்றனர்; ஆனால், அவர்கள் முழுவதுமாய் மாற அல்லது முழுவதுமாய் உதவிட - பெண்கள், பொறுமை காத்திட வேண்டும்! என்னவளுக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை! என்மகளை கருவறையில் சுமந்திருந்தபோது - ஓர் அதிகாலை எழுந்து மிகக்கடுமையாய் "இன்னுமா சுவை-நீர் போடவில்லை? அப்படி என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்??" என்றாள்! அவளின் உடலும், மனமும் சோர்ந்திருந்த காலமது என்பது புரிந்தாலும் - எனக்கு செய்வதறியா கோபம் வந்தது உண்மை! ஆனால், அதை இன்றுவரை அவளிடம் கூறியதில்லை!! இம்மாதிரி தருணங்களை - இருவரும் - எதிர்கொள்வது மிகவும் முக்கியம்!!! 

          என்னவளோ, என்-தமக்கையோ, என் மரு-தமக்கையோ, என் மரு-தாயோ; ஏன், என் தாயே-கூட - அவருடைய தந்தை ஏன்; அவரின் தாய்க்கு உதவியாய் இல்லை என்று கேட்டதில்லை/கேட்பதில்லை! இந்த உறவுகளில், எவரேனும் ஒருவரிடம் "உங்கள் தந்தை, உங்களின் தாய்க்கு உதவியாய் இல்லையே?" என்று கேளுங்கள்! உடனே, "எங்கப்பா வெளியில் சென்று அனைத்து வேலைகளையும் செய்கிறார்; செய்துவிட்டு, மிகுந்த-அயர்ச்சியுடன் வருகிறார்..." என்று சொல்லிக்கொண்டே போவார்கள்!! என்னவோ, இவர்களின் கணவன்கள் மட்டும், "காலை முதல், மாலை வரை..." ஊர் சுற்றிவிட்டு; மாதமானதும் "சம்பளத்தை... களவாடிக்கொண்டு வருவதைப்போல்" கூறுவர்!! ஆணாதிக்கத்திற்கு எதிராக போர்க்கொடி பிடிக்கும் அனைத்து பெண்களும்; அதை செய்வது "தன்னுடைய கணவன் மட்டுமே" என்றெண்ணுவதாய் படுகிறது. இதை, அவரவர் தந்தையிடமும் எதிர்பார்த்(திருந்)தால் - ஆணாதிக்கத்தின் தடமே மறைந்திடும்!  அதேபோல்தான், என்மகளும்; அவள்-தந்தை சமைப்பது தவறு என்பது போல் பார்க்கிறாள்! மற்றபெண்களின் தந்தை அவர்களுக்கு எவ்வளவு முக்கியமோ; அதற்கு சற்றும் குறையாத(ஏன் மிகுந்தே கூட) முக்கியத்துவம் என்மகள் போன்ற குழந்தைகளுக்கும் - அவர்களின் தந்தையிடம் இருக்கும் - என்பதை உணரவேண்டும். அக்குழந்தைக்கு பொறுமையும், நிதானமும் கொண்டு வரலாறு-மொத்தத்தையும் விளக்கிட வேண்டும்! ஏனெனில், ஆணாதிக்கத்தை முற்றிலும் ஒழிப்பது என்பது; உடனடி-உணவு (Instant Food) அல்ல. மாறாய்...

அது பாரம்பரிய-உணவு; நிதானமாய் தான் (த/தா)யாராகும்!!!

பின்குறிப்பு: சமையல் மற்றும் வீட்டு-வேலை இரண்டையும் உதாரணத்திற்காய் தான் எடுத்துக்கொண்டேன்! அதே போல், என்மகளின் கேள்வி சமையல் குறித்ததாய் மட்டும் நின்றுவிடாது!! அவள், வளரவளர - அவளது கேள்வியின் பரிமாணங்களும் வளரும்; அவையனைத்தையும் - இதே அடிப்படையில் - எதிர்கொள்ளவேண்டும்!!!

பிறந்தநாள் வாழ்த்து...


பிறந்தநாள் வாழ்த்தென்பது...
பரஸ்பரத்திற்காய் மட்டுமன்றி;
பரந்த-மனதோடு(ம்) வேண்டும்!
பெற்றவள் வாழ்த்துபோல்!!
"பொன்-பொருள்-பணம்" பற்றில்லாது;
"பேரன்பு-கலந்திடல்" வேண்டும்!!!

கடன் அடைத்தான் - நெஞ்சம் போல்!!!       "கடன் பட்டான் நெஞ்சம் போல், கலங்கினான் இலங்கை வேந்தன்" என்ற சொற்றொடரை பலரும் கேட்டிருப்பீர். கடன்பட்டவர்களின் மனநிலையே - ஒருவர் அடையும் மிக-அதிகமான துயரம் என்று(ம்) அர்த்தம் கொள்ளலாம். சென்ற வாரம், நானே-எனக்காய் "வட்டிக்கு" வாங்கிய பணத்தை முழுதும் அடைத்தேன்;  கடந்த 4 ஆண்டுகளாய் என்னைத் (துரத்தி/துன்புறுத்தி)வந்த சில காரணிகளுள் - ஒன்றை முழுதுமாய் அழித்துவிட்டேன் என்பதில் எனக்கு பரம-திருப்தி. உண்மையில், நாம் கடினப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை எவருக்கோ வட்டியாய் விரயம் செய்வது - மிகக்கொடுமையான விசயம். இந்த சந்தோசமான சூழலில், எனக்கு நினைவுக்கு வந்தது - மேற்கூறிய சொற்றொடர் தான்!! உடனே, எனக்கு கடன்பட்டவரின் நிலையை இப்படி ஆழ விளக்கியது போல் - கடனடைத்தவரின் மனநிலையை எவரும் விளக்கி இருக்கின்றனரா என்று எண்ணி பார்த்தேன்; என்னறிவுக்கு எதுவும் எட்டவில்லை! எவரேனும், அப்படி ஓர் விளக்கத்தை கண்டிருப்பின், எனக்கு பின்னூட்டம் அனுப்பவும். 

    என் தந்தையின் கடனை எல்லாம் - முழு(மன)தாய் அடைத்துவிட்டேன் என்று முன்பே கூறி இருக்கிறேன். அவரின் இறுதிப்பகுதி கடனை அடைக்க ஒருவரின் "பெரிய-மனத்தால்" வங்கிக்கடன் பெற்று அடைத்தேன் - நான் வாங்கிய முதல் கடன்! ஓர்சூழலில், அந்த கடன் நெருக்கடி தர - இரண்டாமவரிடம் "வட்டிக்கு" பணம் வாங்கி சரிசெய்தேன். அந்த கடன் முழுதும் தீர்ந்து போகவிருந்த நிலையில் - இந்த பணிமாற்றத்திற்கு இடையில் வேலையில்லாது இருந்தபோது, மேலும் இரண்டாமவரிடமே கடன் வாங்கும் நிலைவந்துவிட்டது. இப்படியாய், 4 ஆண்டு காலமாய் என்னை உருத்திக்கொண்டிருந்த கடனிலிருந்து வெளிவந்துவிட்டேன். 4 ஆண்டுகளுக்கே இப்படி எனில், சிலர் 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் என வீடு அல்லது வீடு/வீட்டு-மனை வாங்குவதற்காய் கடன் பெருகின்றனரே??!! அவரின் மனநிலையெல்லாம் எப்படி இருக்கும்? யப்ப்ப்ப்பா...! யோசிக்கவே பயங்கரமா இருக்கு!! எப்படியெனினும், என்னுடைய இப்போதைய மனநிலையில்...

"கடன் அடைத்தான் நெஞ்சம் போல் - மகிழ்கிறான் இந்த இளங்கோ"           

இன்று, என் முதல் பிறந்த நாள்!          இன்று (11.08.2013), என் முதல் பிறந்த நாள்!  என்ன, ஆச்சர்யமாய் இருக்கிறதா? உண்மைதான், 41 அகவை கடந்து 42-வது அகவையில் காலடி எடுத்து வைப்பினும் - என்மகள் இந்த பிறந்தநாளின் போது தான், முதன்முதலில் பிறந்தநாள் வாழ்த்தினை கூறினாள். கண்டிப்பாக, என்னவள் கூறிதான் "என்மகளுக்கு இன்று, எனக்கு பிறந்தநாள் என்று" தெரிந்திருப்பினும் - அவளின் வாழ்த்தும், விசாரிப்பும் எனக்கு பெருத்த-வியப்பை தந்தது. மேலும், அவள் விசாரித்த விதம் என் அம்மாவை நினைவுபடுத்தியது; "என் தாய்க்கு பின் அவள்தான்" என்பதை உணர்ந்தேன்! ஆம், "தாய்க்கு பின் தாரம்" என்பது வெற்றி பெற்றதாய் தெரியவில்லை - அது பல பிரச்சனைகளைத் தான் உருவாக்கி இருக்கிறது; மேலும், "தந்தைக்கு பின் யார்" என்பதும் கூறப்படவில்லை என்பதை முன்பொரு தலையங்கத்தில் விளக்கி இருக்கிறேன். எனவே, "தாய்க்கு பின் தன்மகள்" என்பதே பொருந்தும் என்று உணர்கிறேன்; இதை உணர்ந்தவுடன் நான் - மீண்டும் பிறந்ததாய் நம்பினேன்! எனவே,  இது முதல் பிறந்தநாள் தானே?

        என்மகள் - முதலில், அப்பா! "ஹாப்பி பர்த்டே" என்றாள்; பின், உங்களுக்கு இன்னைக்கு "ஹாப்பி பர்த்டே"வா? என்றாள்; ஆம், என்றேன்!! "கேக்" வாங்கிட்டீங்களா? என்றாள்! இல்லை என்றேன்; ஏன் என்றாள்!! நீ தான் என்னுடன் இல்லையே! என்றேன். பின் - தீபா-அக்கா, அரவிந்த், தென்னவன் (என் தமக்கை மற்றும் தமையன் பிள்ளைகள்) எல்லாம் வந்திருக்காங்களா?? என்றாள்! இல்லை என்றேன்; ஏன் என்றாள்? அவளின் பிறந்த-நாளுக்கு எல்லோரும் வந்து வாழ்த்தியது போல் (அல்லது உடனிருந்தது போல்) தன்-தந்தையின் பிறந்த நாளுக்கு எல்லோரும் இருப்பார்கள்/இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்த்திருக்கிறாள்! என் அம்மாதான் ஒவ்வொரு முறையும் - சாப்பிட்டியா? என்ன சமைச்ச?? என்று உணர்வும், உறவும் சார்ந்து விசாரிப்பார்! அதன் பின், என் தமக்கை - அவ்வப்போது விசாரிப்பார்!! நான், என்னுடைய எல்லா உறவுகளையும் - இம்மாதிரி அவ்வப்போது விசாரிப்பினும் - இவ்விருவர் தவிர வேறெந்த உறவும் என்னை இப்படி விசாரித்ததில்லை - இப்போது, என்மகள் சேர்ந்திருக்கிறாள்!

என்மகளுக்காகவாவது - இனி, என்னுடைய பிறந்தநாளை கொண்டாடவேண்டும்!!!

ஞாயிறு, ஆகஸ்ட் 04, 2013

காதலும், காமமும்...

(காதலை, காமத்தால் உணர்த்தலாம்! காமத்தை, காதலால் உணர்த்தமுடியாது!!)

      காதலும், காமும்! இத்தலையங்கத்தை எழுதவேண்டும் என்று முடிவெடுத்து பலமாதங்கள் ஆகின்றது!! சில, மிகவும் ஆழமான கருத்துக்கள் கொண்ட தலையங்கங்கள் எழுதிய பின்னும் - இதை எழுத மட்டும் ஓர் இனம்புரியாத தயக்கமும், பயமும் கலந்து  இருந்து வந்தது. இதற்கு முதற்காரணம், காமம் என்பதை ஏதோ ஒர்-தவறான விசயம் போன்று பார்க்கும் ஓர் சமுதாயத்தில் நாம் இருப்பதே. நாம் என்னதான் முற்போக்கு சிந்தனைகளை வளர்த்துக்கொன்டாலும் - இம்மாதிரி சில விசயங்களில் இன்னமும் வெளிப்படையாய் இல்லை. நான் சொல்ல வந்த விசயத்தை சரியாய் சொல்லி இருக்கிறேன் என்று நம்புகிறேன்; இல்லையெனில், என் பார்வையை சரி செய்யுங்கள். இங்கே நான் எடுத்துக்கொண்டிருக்கும் "காமம்" வரையறைக்கு உட்பட்ட ஓர் ஆணுக்கும்-பெண்ணுக்கும் இடையே நடக்கும் ஓர் விசயம்; அதற்கு திருமணம் ஆகியிருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை! ஆனால், அடுத்தவரின் கணவன்/மனைவி-யாய் இல்லாதிருத்தல் வேண்டும்!! பெண்ணுக்கு உடன்பாடு இல்லாது அடையப்பெறும் காமம் பற்றி நான் இங்கே விவரிக்கவில்லை - மனைவியே ஆனாலும், அது கற்பழிப்பிற்கு சமம்!!! அதனால் தான் "வரையறைக்கு உட்பட்ட" என்று குறிப்பிட்டேன். காமம் என்பதை ஆழப்-புரியாது அல்லது காமத்தை வெல்லாது - காதல் என்பது இருவருக்குள் உண்மையாய், உறுதியாய் இருக்க வாய்ப்பேயில்லை. இதைத்தான் என்னுடைய புதுக்கவிதை ஒன்றில் "காதலும், காமமும் கலக்கும் கலவை" முக்கியம் என்று குறிப்பிட்டேன்.

         வெறும் காதல் மட்டுமே கொண்டு - காதலர்கள் வெற்றிபெற முடியாது என்பது என் அபிப்பிராயம்! காமம் அங்கே கலக்கவேண்டும்; அப்போது தான் காதல் நிரந்தரமாகும்!! இங்கே, காமம் என்றவுடன் "உச்சகட்டமான-நிகழ்வு" என்று தவறாய் எண்ணிவிடாதீர்கள்; அப்படி இருப்பினும் தவறில்லை!!!  சாதாரண தழுவலில், சாதாரண பேச்சில், சாதாரண தொடுதலில், சாதாரண பார்வையில் - இப்படி எதில் வேண்டுமானாலும் - நம்மை கவர்ந்த பெண்ணிடம்/ஆணிடம் காமத்தை கலக்கமுடியும். "காதலாகி, காதலாகி..." என்ற தமிழ்த்திரைப்பாடலை - இத்தலையங்கத்தை படித்த பின் மீண்டுமோர்-முறை கேளுங்கள்; ஆயிரம அர்த்தங்கள் சொல்லும்; அதில் கூறியிருப்பவை அனைத்தும் காமத்துடன் தொடர்புடைய செயல்கள் - ஆனால், காதலை வெளிப்படுத்த/விளக்க கூறப்பட்டவை.  கண்டிப்பாய், இந்த உணர்வு காதலி/மனைவி என்ற உறவிடத்தில் மட்டும் தான் கிடைக்கும். வேறு-விதமான பெண்களிடம் "கூடுதலாய்(கூட)" எளிதில் காமம் கிடைத்துவிடும்; ஆனால், "காதல்(சிறிதும்)" கிடைக்காது! கண்டிப்பாய், இங்கே "காதலுடன் கூடிய காமத்தை" விரும்பும்/வேண்டும் ஆண்-மக்களே அதிகம்!! இல்லையெனில், ஆண்களை விட அதிக எண்ணிக்கையிலல்லவா "விலைமாதர்கள்" இருக்கவேண்டும்? திருமணத்திற்கு முன் "காதல் தலைதூக்கி இருக்கவேண்டும்"; திருமணமான பின், "காமம் தலைதூக்கி இருக்கவேண்டும்" என்பது என் எண்ணம். ஆனால், இது முரண்பட்டு நடக்கும் போது தான் காதல், திருமண-வாழ்க்கை இவையிரண்டிலும் பிரச்சனைகள் பெரிதாகின்றன.

         இங்கே, இயற்கையால் அல்லது இறைவனால் - இன்னுமொரு முரண்பாடான விசயம் நடக்கிறது!  ஆணுக்கு காதல் என்பதை உணரத்தெரிந்த அளவிற்கு அதை உணர்த்த தெரிவதில்லை! பெண்ணுக்கு காமம் என்பதை உணர/அனுபவிக்க தெரிந்த அளவிற்கு அதை தேவையான நேரத்தில் பகிர்ந்தளிக்க தெரிவதில்லை!! ஆண், பெண் இருவரில் காதல் யாருக்கு அதிகம் என்ற போட்டி இருக்கலாம்!!! ஆனால், காமத்தில் அப்படி இருக்கக்கூடாது/இருக்கமுடியாது; காமம் என்பது கொடுப்பதுமல்ல; பெறுவதுமல்ல; அது பகிரப்படுவது! அதனாலேயே, அதில் இருவரின் மனமொத்த சம்மதமும் தேவைப்படுகிறது. காதலை - காமத்தை முன்னிறுத்தி பார்க்க ஆணுக்கும், காமத்தை - காதலை முன்னிறுத்தி பார்க்க பெண்ணுக்கும் இயற்கையா(ய்/ல்) விதிக்கப்பட்டிருக்கிறது. திருமணத்திற்கு முன், காதலர்கள் திருமணம் ஆகிவிட்டதை போன்றே பழகுகிறார்கள் - ஆனால், மேற்கூறிய காமம் மற்றும் காதல் இவையிரண்டின் முதன்மை (priority) ஆணுக்கும், பெண்ணுக்கும் வெவ்வேறாய் இருப்பதால் தான் பல பிரச்சனைகள் வருகிறது. திருமணம் ஆகாத இருவருக்குள் இப்பிரச்சனை வரும்போது - அது எளிதில்(தவறான வழியில்) தீர்க்கப்பட்டு விடுகிறது - அதவாது, பிரிந்துவிடுகின்றனர்!  திருமணமான இருவருக்குள் இப்பிரச்சனை வரும்போது கடிந்துகொண்டு(தவறான வழியில்) ஒன்றாய் வாழ முயற்சிக்கின்றனர் - ஒன்று குழந்தையை முன்னிறுத்தி அல்லது குடும்பத்தை முன்னிறுத்தி!! ஆக, இரண்டு சூழலிலும் இது பெரும்பான்மையில் தவறாகத்தான் போகிறது!!!

       திருமணமாகும் முன் - இப்பிரச்சனை வரும்போது, அவர்கள் பெரும்பாலும் பிரிந்துவிடுவதால் - "நீண்ட கால" அடிப்படையில்  அதன் பின் பிரச்சனைகள் எழ பெரிதும் வாய்ப்பில்லை. ஆனால், ஏதேனும் ஓர் காரணத்திற்காய் ஒன்றுசேர்ந்து இருக்கும் திருமண-வாழ்க்கையில் தான் பெரிதும் பிரச்சனைகள் வருகின்றன! இயல்பிலேயே பெண்கள் "காமம் வேண்டும்" என்பதை நேரடியாய் கேட்காதவர்களாய் இருக்கிறார்கள்; பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வளர்க்கப்பட்டதால் கூட இருக்கலாம்! அல்லது, ஆண் தானே வருவான் என்பதால் கூட இருக்கலாம்!! அதனால்தானோ என்னவோ, பிரச்சனை என்று வரும்போது - முதலில், அவர்கள் காமத்தை மறுத்துவிடுகின்றனர்! அதன் விளைவுதான், பிரச்சனை என்றவுடன் பிறந்த-வீட்டிற்கு சென்று விடுவது - அது அவர்களின் பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை; ஆனால், காமம் என்பது அவர்களுக்கு இரண்டாம்-பட்சம் என்பதால் தான் அதை செய்கிறார்கள்!!! ஒருவேளை, காமம் முதன்மையானது என்பதால் தான் - ஆண்  தன்னுடைய பிறந்த-வீட்டிற்கு செல்வதில்லையோ???!!! இங்கே, "மனைவி அமைவதெல்லாம்..." என்ற பாடல் நினைவிற்கு வருகிறது; அதில் ஓர் வரி வரும் "கணவனின் துணையோடு தானே, காமத்தை வென்றாக வேண்டும்..." என்று! ஆனால், இந்த வரி "மனைவியின் துணையிருந்தால் தானே, காமக்கழிவு வெளியாதல் கூடும்" என்றிருந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. மேற்கூறிய ஒன்றை மீண்டும் கூற விழைகிறேன் - காமம் என்பது பகிரப்படுவது!!!

    காதல் சார்ந்த பிரச்சனை எனில், இங்கே முதலில் சொதப்புவது ஆண்கள் தான்! காமம் கிடைக்கவில்லை எனின், அவனுக்கு முன்பே-தெரிந்த அளவில் கூட காதலை வெளிப்படுத்துவதில்லை!! வாதத்திற்காய் சொல்லவில்லை - அவனுக்கென்று ஓர் பெண் இருக்கும்போது (திருமணமான பின்னோ அல்லது திருமணத்திற்கு முன்னோ) - ஓர் ஆண் காமத்தை வேறொரு பெண்ணிடம் தேடி செல்வதில்லை;  அவனுக்கு அந்த தைரியமும் குறைவு!! காமம் பகிரப்படாததால், கோபம் அடைகிறான்.  ஆணுடைய கோபம், பிரச்சனையை பெரிதாக்கிவிடுகிறது; அவனுடைய கவலை மேலும் விரிவடைகிறது! ஆனால், இங்கே கவனிக்கவேண்டியது - காமத்துடன் சேர்ந்து, காதலும் குறைகிறதென்ற பேருண்மை!!! காதல்(உம்) குறைந்தவுடன், அந்த உறவு ஒன்றாய் சேர்ந்து இருப்பினும் முறிந்ததற்கு சமம்!  இங்கே ஆண்களை 4 வகைப்படுத்தலாம்: 1. வெகு-சிலரே எனினும், காமத்தை - வன்முறையைக் கொண்டாவது  அடைபவர்; 2. வேறு வழியில்லை என்று இருப்பவர்; 3. வேறொரு பெண் மூலம் அடைபவர்; 4. 2 அல்லது 3-ல் எதை தேர்ந்தெடுப்பது என்று அல்லாடுபவர். சிறிதும் யோசிக்காது, என்னால் ஒன்று சொல்லமுடியும் - ஓர் 50 அகவையை தாண்டிய பிறகு - காமத்தை பின்னிறுத்தி பார்ப்பது இருவருக்கும் சாத்தியம்! அது இயல்பும் கூட!! ஆனால், 50 அகவைக்கு முன் எக்காரணத்திற்காகவும் காமத்தை மறுப்பது - இந்த உறவுகளுக்கு நல்லதல்ல!!! காதலை, காமத்தால் உணர்த்தலாம்; காமத்தை, காதலால் உணர்த்தமுடியாது. ஏனெனில், காதல் என்பது உணர்வு; ஆனால், காமம் என்பது உணர்ச்சி! மேலும்...

காதலின் வெற்றி - காமத்தை வெல்வதிலுள்ளது!!!

பின்குறிப்பு: முதலில், தலைப்பை "காமமும், காதலும்" என்று தான் யோசித்திருந்தேன்! தலையங்கத்தை எழுதும்போது தான் - முதலில், காமம் என்றிருப்பின் தவறாய் போய்விடுமோ என்றோர் அச்சம்!! அதனால், காதல் முதலில் வந்துவிட்டது; உண்மைதானே, காதல் இல்லையெனில் - அங்கே, காமம் உணர்ச்சியாய் இருப்பதில்லை - மாறாய், "வெறியாய்" இருக்கும்!!!

காதலின் சிகரம்???


காதல் - காமத்தின் அகரம்!
காமம் - காதலின் சிகரம்!!
அகரமில்லா, சிகரமும்;
சிகரமில்லா, அகரமும்;
"அஸ்த்திவாரம்" அற்ற
"அழகு-மாளிகை" - ஆபத்தானது!!!

கடனடைத்தான் நெஞ்சம்???


“கடன்பட்டான் நெஞ்சம்” - தெரியும்!
“கடனடைத்தான் நெஞ்சம்” ... ??
கவலைகளைக் கருவறுத்த
களிப்பு-அம்புகளின் தஞ்சமது!!!

நண்பர்கள் தினம்!!!        இன்று நண்பர்கள் தினம்! பலரும், இன்று தங்களது நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் கூறியவண்ணம் உள்ளனர். எனக்கும், சில வாழ்த்துக்கள் வந்தன; அவற்றிற்கு நன்றிகளும் தெரிவித்தேன்!! சமூக-வலைதளங்களிலும் இது சார்ந்த பல வாழ்த்துக்களையும், செய்திகளையும் காண முடிந்தது. இதுபற்றி என்னுடைய பார்வையை எழுதவேண்டும் என்று தோன்றியது; ஒரு மணி நேரத்திற்குள், இந்த சிந்தனை வந்து அதை மனதங்கமாய் எழுதி பதிவும் செய்துவிட்டேன். இது என்னுடைய பார்வை தான்! இதில் எவருக்கு மாற்றுக்கருத்து இருப்பினும் - நான் மறுப்பின்றி ஏற்றுக்கொள்கிறேன். மிகப்பெரிய என்ற அளவில் இல்லை எனினும் - எனக்கும் ஓர் நெருங்கிய நட்பு வட்டம் உள்ளது; அதிலும் என்னுடைய முக்கிய நண்பர்கள் என்று சிலரை அவ்வப்போது என்னுடைய வலைப்பதிவில் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறேன். நானோ அல்லது என் நட்பு-வட்டத்தில் எவரோ இதுவரை "நண்பர்கள் தினம்" என்று சொல்லப்படும் இந்த நாளில் - இதுவரை வாழ்த்துக்கள் சொல்லியதில்லை. ஓரிரு முறை, எதேச்சையாய் தொலைபேசியில் உரையாடிய போது -  நானும், சுரேசும் "ச்சும்மா" வாழ்த்து சொல்லியிருக்கிறோம். 

      "அன்பே சிவம்" படத்தில் வருவது போல் "இது என்ன, காதலா? அடிக்கடி சொல்லிக்கொண்டு இருக்க??" என்றே வினவத் தோன்றுகிறது. எனக்கு இந்த வாழ்த்துக்கள் கூறுவது பிடிக்கவில்லை என்பதை காட்டிலும், இதை சார்ந்த ஓர் பயம் எழுகிறது. காதலுக்கு அடுத்து அல்லது நிகராக - நாம் அனைவரும் நட்பை பார்க்கிறோம் என்பதை ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். என்னுடைய பயம் எல்லாம், இதுமாதிரி வாழ்த்துக்கள் சொல்லி - நட்புவட்டத்திற்குள்ளும் பெரிய எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கி விடுவோமா! என்பதுதான்; எதிர்பார்ப்பு இல்லாதது தானே நட்பு!! அதனால் தான், பிறந்தநாள் வாழ்த்து சொல்லாததால் காதலர்கள் இடையே வரும் பிரச்சனைகள் போல் - "நண்பர்கள் தின" வாழ்த்து சொல்லவில்லை என்று நண்பர்களிடையே பிரச்சனை வந்துவிடுமோ என்ற ஐயம் வருகிறது. இது போல், அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற பல தினங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. நம்முடனே, நாமாய் இருக்கும் நண்பர்களை...

வாழ்த்துவதற்கு - தனியே எதற்கோர் தினம்???      

தமிழ் இனி...     என் நண்பர் - ஜனார்தன் ஜெயராமன் - பரிந்துரை செய்ததன் பேரில், சமீபத்தில் "தமிழ் இனி" என்றொரு குறும்படத்தை பார்த்தேன். பெரும்பாலும், உங்களில் நிறைய பேர் அதை பார்த்திருக்கக்கூடும்! இரண்டு தலைமுறை கடந்து வெளிநாடு-வாழ்  தமிழ்குடும்பம் எப்படி இருக்கும் என்பதை அழுத்தமாய் பதிவு செய்திருக்கின்றனர்.  ஆனால், இதனால் தமிழ் அழிந்துவிடும் என்ற கூற்றும் அது சார்ந்த கவலையும் தேவையற்றது. ஏனெனில், தமிழ் வாழ என்ன செய்யவேண்டும் என்று முன்பே கூறியிருக்கிறேன்.  வெளிநாட்டில் வாழும் பெற்றோர் மற்றும் அவர்களின் குழந்தைகள் வளரும் சூழல் அவ்வாறு உள்ளது என்பதை எள்ளளவும் மறுப்பதற்கில்லை!! அங்கே, தமிழ் தேவையில்லை என்பதும் ஒப்புக்கொள்ளக்கூடியதே!!! அந்த பெற்றோருக்கோ அல்லது குழந்தைகளுக்கோ தமிழில் எழுத/படிக்க தெரியவில்லை என்பதை வேண்டுமானால் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், உடைந்து போன-நிலையிலாவது தமிழில் பேசத்தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவே முடியாது. 

   அந்த குறும்படத்திலேயே, வேற்றுமொழி பேசும் ஓர் தாயும் அவரின் மகனும் - அவர்களின் தாய்மொழியில் உரையாடும் ஓர் சிறிய-காட்சி வரும்! அதைப்பற்றி இயக்குனர் பெரிதாய் விளக்கிடவில்லை; அது தேவையுமில்லை என்றே தோன்றுகிறது - எங்கிருந்தாலும், விருப்பமிருப்பின் தாய்மொழியில் கண்டிப்பாய் பேசிடமுடியும் என்று எடுத்துக்கொள்ளலாம்! அல்லது, தாய்மொழி உரையாடல்தான் சிறந்தது என்றும் எடுத்துக்கொள்ளலாம். இங்கே, தாய்மொழி மீது பெற்றோருக்கு ஓர் மதிப்பும், ஈர்ப்பும் இருப்பின் - எந்த தேசத்திலிருப்பினும் தாய்மொழியில் தடையின்றி பேசமுடியும் என்று தோன்றுகிறது. என் மச்சானின் மகளும், அது போன்று பல குழந்தைகளும் - "சௌதாம்ப்டன்" நகரில் இருந்துகொண்டே எப்படி தமிழை கற்கிறார்கள் என்பதை முன்பே விளக்கி இருந்தேன். அம்மாதிரி, தமிழில் எழுத/படிக்க கூட அவசியமில்லை; குறைந்தபட்சம் தமிழில் பேச வைக்கவாவது முயலலாமே?!  ஏனெனில், தாய்மொழி தெரியாத குழந்தையின் சிந்தனை...

சிறப்பாய் அமைந்திடுதல் சாத்தியமன்று!!!