ஞாயிறு, ஜூன் 22, 2014

"பகுத்தறிவுக்கும்"; "பார்ப்பனர்-எதிர்ப்புக்கும் மற்றும் கடவுள்-மறுப்புக்கும்" என்ன தொடர்பு???



     இத்தலையங்கத்தை படிக்க ஆரம்பிக்கும் முன் ஒரு கனிவான-வேண்டுகோள்! அருள்கூர்ந்து தலைப்பை நன்றாக படியுங்கள். ஆம், இது "பார்ப்பனர் சரியா? தவறா??" அல்லது "கடவுள் இருக்கிறாரா? இல்லையா??" என்ற வாதம் அல்ல. நான் இங்கே எடுத்திருக்கும் களம் "பகுத்தறிவு என்பது என்ன?" மற்றும் "பகுத்தறிவு என்பது ஏன் இவ்விரண்டு எதிர்ப்புகளோடு மட்டும் ஆழமாய் தொடர்பு படுத்தி இருக்கிறது?" என்பதே. மிக அண்மையில் பகுத்தறிவு இயக்கம் ஒன்று பார்ப்பனர்களுக்கு எதிராய் நடத்திய நிகழ்வொன்றை தமிழ் நாளிதழில் காண நேர்ந்தது. அதன் சாராம்சம் இதுதான்: ஒரு உணவகத்தின் பெயர் பலகையில் "... பிராமினாள் கபே" என்று இருந்ததாம்; அது சாதீய-சிந்தனையை தூண்டுவது போல் இருந்ததாம். உங்களுக்கு எப்படியோ! எனக்கு இதைப் படித்தவுடன் பலத்த-சிரிப்பு வந்தது; அதன் பின் ஏன் இவர்கள் பிராமிணர்களை மட்டும் குறிவைத்து தாக்குகிறார்கள் என்ற கேள்வி வந்தது. 

      முன்போர் தலையங்கத்தில் கூட (மற்றும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்) இதுபற்றி இன்னுமோர் அரசியல் கட்சியின் தலைவர் பேசுவதை குறிப்பிட்டு இருக்கிறேன். இந்த பார்ப்பனர்-எதிர்ப்பு போன்றே இவர்கள் கொண்டிருக்கும் இன்னுமொரு அங்கவஸ்த்திரம் "கடவுள்-எதிர்ப்பு".     இந்த பகுத்தறிவுவாதிகள் "அதி-பெரும்பான்மையில்"; "பார்ப்பனரையும்; கடவுளையும் எதிர்ப்பதை" மட்டுமே பகுத்தறிவின்-பிரதானமாய் கடைபிடித்து வருவது நம்மில் பலருக்கும் தெரியும். இதை தொடர்ந்து யோசித்து வந்ததன் விளைவாய் இரண்டு நாட்கள் முன்பு இந்த பகுத்தறிவுவாதிகளுக்கும்; "இவ்விரண்டு பிரதான எதிர்ப்புகளுக்கும்" உள்ள தொடர்பு எனக்கு புரிந்தது. பின் என்னவளிடம் இது பற்றி கேட்டேன்; அவள் இதுசார்ந்தவற்றிலும், மற்றும் எல்லா பொது-அறிவிலும் அபார அறிவுடையவள். நிறைய படிப்பவள்; அவள் கொடுத்த தகவல்களையும், சிறு குறிப்பாய் இங்கே கொடுத்துள்ளேன். முன்பே எவரும் இப்படி விளக்கி இருக்கின்றனரா என்பது எனக்கு தெரியவில்லை.

       பார்ப்பனர் எதிர்ப்பு என்பதில் இருந்து துவங்குகிறேன். இங்கே "பிராமினர்" என்பதை விடுத்து "பார்ப்பனர்" என்று உபயோகிப்பதற்கு அந்த பெயர் எனக்கு கொடுக்கும் (முன்பு எவரேனும் கொடுத்திருக்கலாம்!) விளக்கமே, காரணம். பார்ப்பனர் என்ற சொல்லின் ஒருமை "பார்ப்பனன்" அல்லது "பார்ப்பனள்". வந்தனன்/வந்தனள் என்ற சொற்கள் போல் இதை புரிந்துகொள்ளலாம். பார்ப்பனன்/பார்ப்பனள் என்றால் "பார்ப்பவன்/பார்ப்பவள்" என்று பொருள் கொள்ளலாம். அதாவது, கடவுளை பார்ப்பவன்/பார்ப்பவள். அதாவது கோவிலில் இருக்கும் கடவுளை பார்ப்பவன்/பார்த்துக்கொள்பவன். ஆம்! அவர்கள் கடவுளை பத்திரமாய் பார்த்துக்கொள்பவர்கள். கடவுளுக்கு என்ற மொழியாய் அவர்கள் வைத்திருந்தது "சமஸ்கிருதம்"; அந்த மொழியை அவர்கள் கடவுளிடம் உரையாட (பூசை செய்ய) உபயோகித்தனர். வேதம்/மந்திரம் போன்றவைகளையும் அவர்கள் உபயோகித்தனர். அப்படியானால், கடவுளை பார்ப்பது/பாதுகாப்பது அவர்களின் "முக்கிய குலத்தொழில்".

       ஆம்! பல-நூற்றாண்டுகளுக்கு முன்பு தொழிலை/குலத்தொழிலை முன்னிறுத்தி தான் எல்லா இனங்களும் வகுக்கப்பட்டன. அப்படியிருக்க, ஏன் பார்ப்பனர்களை மட்டும் சிலர்/பலர் எதிர்க்க ஆரம்பித்தனர்? ஏன் இன்னமும் அவர்களை எதிர்க்கிறார்கள்?? - இதுதான் என்னுள் விளைந்த முதல் கேள்வி? பார்ப்பனன் என்ற சொல்லை ஒரு காலகட்டத்தில் "கடவுளை நேரடியாய் பார்ப்பவன்" அல்லது  தாம்-மட்டும் தான் "கடவுளை காண(பார்க்க)முடியும்" என்பதாய் அவர்கள் வரையறுக்க ஆரம்பித்திருக்கக் கூடும். சில இனத்தவர் தரக்குறைவான/தாழ்வான தொழில் புரிபவர்கள்; அவர்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது. சில இனத்தவர் உள்-பிரகாரம் வரை வரலாம்; சிலர் கடவுள்(சிலை எனக்கூட இருக்கட்டும்!) அருகில் வரை வரலாம். ஆனால், நாங்கள் மட்டும் தான் கடவுளுடன் இருப்போம்; நாங்கள் தான் கடவளுக்கு தேவையானது அனைத்தும் செய்வோம். உங்கள் கோரிக்கைகளை/வேண்டுதல்களை நீங்கள் எங்களிடம்தான் சொல்லவேண்டும்.

         இங்கே தான் என்னவள் குறிப்பிட்டதை சொல்ல விழைகிறேன். நான் இன்னமும் பாலகுமாரனின் "உடையார்" படிக்கவில்லை. அதில், அவர் பார்ப்பனர்கள் கோவில்/கடவுள் பராமரிப்பு மட்டுமன்றி பல துறைகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாய் குறிப்பிட்டுள்ளாராம். அதில், மிக முக்கியமானது மருத்துவம்; தங்களுக்கு கிடைத்த ஓலைச்சுவடி மற்றும் பல ஆதாரங்களை படித்து தெரிந்து கொண்டு, மக்கள் முன் "மந்திர ஜபம்" மூலம் மருந்தளிப்பதாய் சொல்வராம். அரசவையிலும் பல முக்கிய பதவிகளில் அவர்களே தொடர்ந்து இருந்தனராம். இருந்த அனைத்து ஆவணங்களையும் அவர்கள் மட்டுமே படிக்கும் திறன் கொண்டிருந்தனராம். மற்றவருக்கு சொல்லிக்கொடுக்க மறுத்தனராம். இது போல் பல விசயங்களை பார்ப்பனர்கள் கற்றறிந்து; அதை தம் இனத்திற்கு மட்டும் சொல்லிகொடுத்து வந்தனராம். அதில், சிலர் மற்ற இனங்களுக்கும் சொல்லிக்கொடுக்க முனைய அதை பார்ப்பனர்கள் தடுக்க; பின் மற்ற இனத்தவர் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற உரிமையை பேச ஆரம்பித்தனராம்.

        சரி, இப்போது என் பார்வை. இப்படியான நெருக்கடியான-கட்டுப்பாடுகள் மற்றவர்களை தம் உரிமை பற்றி பேச வைத்திருக்கும். எங்களுக்கும் அந்த மொழி/மந்திரம்/வேதம் சொல்லித் தாருங்கள்; நாங்களும், அதை பயின்று பல தொழில்களையும் செய்கிறோம். அப்போது, எங்களாலும் கடவுளிடம்(கூட) தொடர்பு கொள்ள முடியும் என்று ஆரம்பித்திருக்க வேண்டும். அங்கே தான் பிரச்சனை ஆரம்பித்திருக்க வேண்டும்! மனிதன் என்றால் எல்லாரும் மனிதன்; இதில் உயர்வென்ன? தாழ்வென்ன?? என்ற வாதம் வந்திருக்க வேண்டும். சமத்துவம் வேண்டும் என்ற புரட்சி வந்திருக்கவேண்டும். இதைத்தான் நமக்கு இருக்கும் சான்றுகள்: "குருகுலம்" ஒருவருக்கு மட்டுமாய் இருந்தது; அவர்களே அங்கே கோலேச்சினார்கள் போன்ற செய்திகள். எனவே, பார்ப்பனர்களுக்கும்; தரம்குறைந்த வேலைகள் செய்தோருக்குமான இடையில் இருந்தவர்கள் "பார்ப்பனர்" என்றவர்களை எதிர்க்க ஆரம்பித்திருக்க வேண்டும். எந்த சந்தேகமும் இன்றி பார்ப்பனர்கள் செய்தது சரியில்லை தான்.

            அவர்களை எதிர்க்கத்தான் வேண்டும்! எப்போது? அந்த காலகட்டத்தில்! ஆம்; எதிர்த்தார்கள். அவர்களை ஒருகட்டத்ததில் முற்றிலும் அடக்கியே விட்டார்கள்/விட்டோம்! சரி! இப்போது அவர்களின் நிலை என்ன? அப்படியா இருக்கிறார்கள்?! பல கோவில்களும் இன்று அரசுடமையாக்கப்பட்டு விட்டது. கோவில்களே எங்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று கொண்டாடி; அனுமதிக்கமுடியாத பல கட்டுப்பாடுகளையும் செய்தவர்களுக்கு - கோவில் மீதிருந்த பிடியே போய்விட்டது. எங்கள் கிராமத்தில் (எங்கள் தெருவின் கடைசியில்) இருந்த ஒரேயொரு பார்ப்பன குடும்பம் இன்றில்லை! அவர்கள் வீட்டினுள் கூட எவரும் நுழையமுடியாது; ஆனால், எனக்கு அந்த சலுகையுண்டு. ஏனெனில், என்தாத்தா சுற்றியிருந்த பல கிராமங்களுக்கும் சேர்த்து "மணியகாரர்"! அவருடைய செல்வாக்கும்/அதிகாரமும் அவர்கள் வீட்டினுள் கூட நுழைய எனக்கு அனுமதி கிடைத்தது. ஆனால், இன்று அந்த "பெரிய பார்ப்பனர்" குடும்பம் இருந்ததற்கான தடமே இல்லை.

           அவர்கள் இருந்த வீட்டு-மண்ணை கூட வேறொருவர் வாங்கிவிட்டார். அந்த குடும்பத்தில் எவரும் பெரிதும் படிக்கவில்லை; என்னுடன் படித்த அந்த வீட்டு பெண்ணொருவள் படும் துயரத்தை என்தாயின் மூலம் கேட்டறிந்திருக்கிறேன். இதேதான் மற்ற பார்ப்பனர் குடும்பங்களுக்கும் நேர்ந்தது. இன்று பல ஊர்களில் "அக்ரஹாரம்" என்ற அவர்களுக்கே சொந்தமான பகுதியில்; அவர்கள் மிகக்குறைந்த அளவிலேயேஉள்ளனர். மற்றவர்கள் போலவேதான் அவர்களும் படிக்கவேண்டும்; அதுவும் "பொது போட்டியில் (OC)" மோதவேண்டும். ஒருகாலத்தில் மற்றவர்களுக்கு இன்னென்ன சலுகைகள் தான் என்று வரையறுத்தவர்களுக்கு இன்று "ஒரு சலுகையும்" இல்லை! என்றோ நிகழ்ந்த ஆணாதிக்கத்தின் விளைவை நாம் அனுபவிக்கிறோம் என்று நான் அடிக்கடி சொல்வது போலவே, இதை எதையும் செய்யாத இவர்கள் அனுபவிக்கிறார்கள். இன்று அவர்களின் நிலை முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது; இன்னுமேன் அவர்களை தண்டிக்க/எதிர்க்க வேண்டும்?! சிந்திப்பீர்...

          சரி! உண்மையிலேயே "சாதி"யத்தை; அதாவது, அவர்களின் குலத்தொழிலை எதிப்பதுதான் இவர்கள் இலட்சியமானால்... இன்று அந்த தொழிலே (பரவலாய்)செய்யாதோர்; அந்த சாதியே இல்லையே ஐயா! அதனால் தானே, உணவகம் நடத்துகின்றனர்?! வேறெவரும் சாதிய அடிப்படையில் கடைகளுக்கு பெயரே வைக்கவில்லையா? அவ்வளவு ஏன்யா?! இருக்கிற ""சாதிக்"கட்சிகளை எல்லாம் கலைக்க போராடுங்களேன்! முடியாது.... ஏன்னா அவர்கள்  பெருமபான்மையில் கைகோர்ப்பது "இந்த சாதியக்"கட்சிகள் உடன்தான்! ஓட்டு-வங்கி கலைந்துவிடுமே! அப்போ, இப்போதைக்கு "இளிச்சவாயன்" யாரு?! தொழிலும்/சாதியும் இல்லாத "பார்ப்பனன்"! சரி... அவனை (மட்டும்)எதிர்! அடப்பாவிகளா!!... இதுவாய்யா "நம்-முன்னோர்கள்" பாடுபட்டு வளர்த்த "பகுத்தறிவது"? அவர்கள் பார்ப்பனர்களை எதிர்த்தது: கடவுளை அடையும் மொழியும் அனைவருக்கும் பொது! எனவே, இதை பகுத்தறிந்து பாருங்கள்; என்ற "எதிர்ப்பய்யா"! அது பகுத்தறிவது! ஆனால், நீங்கள் செய்வது???...

           சரி! இங்கே கடவுள்-எதிர்ப்பு எப்படி வந்திருக்கக்கூடும்?! இங்கே மறுக்கப்பட்டது எது? கடவுள்!    மறுப்பவன் யார்?? பார்ப்பனன்?? ஓஹோ! அப்படியா?!... சரி! கடவுளே இல்லையடா!! அது மூட நம்பிக்கை... உன் கடவுளுக்கு சக்தி இருந்தா; இப்பவே என்னை சாகடிக்க சொல் பார்ப்போம்! என்று சீண்டியிருக்க வேண்டும். இது மணித இயல்பு! எங்கே ஒருவரின் உரிமைகள் மறுக்கப்படுகிறதோ/ஒடுக்கப்படுகிறதோ; அங்கே எதிராளியின் நம்பிக்கை/பலம் கேள்வியாகும்! எதிராளியின் நம்பிக்கையை/பலத்தை அறுத்தெறிய/உடைத்தெறிய முயலப்படும். மிகச்சிறந்த உதாரணம்: கணவன் மேல் கோபமா?! சரி... கணவனின் நம்பிக்கை/பலம் என்ன?!... குழந்தை; சரி! குழந்தையை எடுத்துக்கொண்டு பிறந்த வீடு சொல் - மனம் சொல்லும்! இது மனித இயல்பு!... சரி! மனைவி மேல் கோபமா?! சரி... மனைவியின் நம்பிக்கை/பலம்? அட... "கணவன்"எனும் உறவு! அப்படியா?... "வீட்டை விட்டு வெளியே போடி"என்று கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவது?! ஆம்... இதுவும் மனித இயல்பு!!

       சரி அய்யா! ஒருவரின் நம்பிக்கையை/பலத்தை அழிப்பது/அறுப்பது தவறில்லையா?! - மனம் கேட்கும்! ஓஹோ... அப்படியா? "அவரு சரியில்லம்மா! கொழந்தைய கொன்னுடுவார் போலிருக்கு!" - மனம் பின்னடைந்து "புத்தி கூச்சமின்றி" பொய் சொல்லும்! மறுபக்கம்: "அவ சரியில்லப்பா! வேறெவனையோ நெனசுக்கிட்டிருக்கா போல!". "குழந்தை/கணவன்" என்ற நம்பிக்கையும்/பலமும் - "பொய்த்து போக" பொய் சொல்வது; அதை பொய்யாய் ஆக்குவது! இங்கேயும் மனிதர்கள் தானே?! சரி... அவனின் ஒரே-நம்பிக்கையான கடவுளை "பொய்" என்று 'சொல்; கடவுள் இல்லையென்று சொல்! அது வெறும் கல்லடா! என்று சொல். இன்னமும் கேட்கவில்லையா?! கடவுளை நம்புவன் மூடன் என்று சொல்; அவர்களின் நம்பிக்கை "மூட நம்பிக்கை" என்று சொல். சொல்...சொல்...சொல்... சொல்லிக்கொண்டே இரு! கணவன்-மனைவி ஒரு நாள் இல்லையென்றாலும்; ஒருநாள் சேர்ந்துவிடுவர் - இருவரும் ஒருவரின் நம்பிக்கையை மற்றவர் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதிகொள்ள உடன்படுவர்.

        இங்கே... இரண்டு மாறுபட்ட இனங்கள்! கணவன்-மனைவி போல் சேர்ந்து இருக்கவேண்டும் என்ற நியதியில்லை. என்னால் உனக்கு ஒன்றுமில்லை; உன்னாலும் எனக்கு ஒன்றுமில்லை - பிறகு நாமேன் ஒன்றுபடவேண்டும்?! சரி... என்னதான் வழி/முடிவு? ஒன்றுமேயில்லை... உன்னால் முடிந்ததை நீ செய்! என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்!! சரியப்பா... அவர்களால் தான் இன்றைக்கு எதுவும் செய்யவில்லையே?! செய்யும் சூழலிலும் இல்லையே??!! ஆனால்... ஒரு காலத்தில் செஞ்சீங்க இல்ல?! இது தவறில்லையா?!... இல்லையே! - இதுவும் மனித இயல்பு! கணவனோ/மனைவியோ மற்றவரை பார்த்து "ஏன் இப்படி செய்யற?"; பதில் "ஏன்?! அன்னைக்கு நீ செய்யலியா?" - இந்த உறவிற்கு பதில் இல்லாமல் போகலாம். ஆனால்... இந்த இரண்டு இனங்களுக்கு உண்டு! எப்படி?! இவர்களில் ஒருவர் தங்களை "பகுத்தறிபவர்கள்" என்று பறைசாற்றுவோர். அவரிடம்: இன்றைய காலத்தில் "பார்ப்பனர்/கடவுள்" எதிர்ப்பு தவறு என்பது தான் நாம் பகுத்தறிந்து பார்க்கும் போது தெரிகிறதே? அதனால்...

    நீங்கள் விட்டுக்கொடுங்களேன்?! இல்லையில்லை... முடியாது!; ஏன்?! இவையிரண்டையும் எதிர்க்கவேண்டும் என்று எங்களுக்கு சொல்லப்பட்டு இருக்கிறது!; யார்? எங்கள் முன்னோர்...!; சரி... எப்போது?! ரொம்ப-காலமாவே...; அட! என்னைய்யா இது?! இப்போது தான் அம்மாதிரி எதுவும் இல்லையே; இன்னுமேன் எதிர்ப்பு?!... எங்களுக்கு தெரியாது! சொல்லப்பட்டு இருக்கிறது... செய்வோம்!; அடப்பாவிகளா... "அடி மடியிலேயே" கைய்ய வைக்கறீங்களே?! சூழலுக்கு/நிகழ்வுகளுக்கு ஏற்ப எல்லாவற்றையும் பகுத்தறியவேண்டும் என்பது தானே "மாபெரும் முன்னோர்களின்" எண்ணம்?; இருக்கலாம்... எங்களுக்கு இது மட்டும்தான் தெரியும். அப்போ?! பகுத்தறிவுன்னா என்ன? அதான் சொன்னமே... இவை இரண்டையும் "கண்டிப்பாய்" எதிர்ப்பது! அய்யகோ... இவர்களை என்ன செய்வது? பகுத்தறிவுக்கும் "இவ்விரண்டு எதிர்ப்புகளுக்கும்" உள்ள தொடர்பு கூட தெரியவில்லையே!!... நான் இப்போது; இவர்களுக்கு என்ன சொல்லவேண்டும்?? இதுதான்...

 மற்றவர்களின் மூட-நம்பிக்கைகளை எதிர்ப்பது/அழிப்பது இருக்கட்டும்!
உங்களுள் "அதிபயங்கரமான" மூட-நம்பிக்கைகள் "கோவில்(???!!!)" கொண்டுள்ளன!!
அதை முதலில் கவனியுங்கள்!!!

ஞாயிறு, ஜூன் 15, 2014

"குட்டைப்"பாவாடையும்; (சில)குழப்பங்களும்...



       கடந்த-வாரம் தினமலர் நாளிதழில்திரைப்பட விழா ஒன்றின் புகைப்படத்தை காண நேர்ந்தது! அதில் ஒரு நடிகை மிகக்குறுகிய பாவாடை ஒன்றை அணிந்து, உட்காரும் போது வேறெதையோ மறைக்க கால்-மேல் கால் போட்டு உட்கார, அது மிகவும் ஆபாசமாய் வந்திருந்தது. இதை என்னுடைய முக-நூலில் பகிர்ந்து என் கருத்தை இட்டிருந்தேன்; வழக்கம்போல், என்னுடைய மற்ற நல்ல சிந்தனைகள் போல் - இதுவும் பலரால் தவறாக நினைக்கப்பட்டு எவரும் கருத்திடவில்லை. என்னுடைய 3 நண்பர்கள் மட்டும் "லைக்"கிட்டிருந்தனர்; அதில் இருவர் விவாதித்தனர். என்னுடைய "நண்பி" ஒருவளும் விவாதித்தாள். நான் சொல்ல வந்ததன் பின்னணியை அங்கே சரிவர விளக்க முடியாமல் போனது வருத்தமே! உடை அணிவது பெண்களின் "சுதந்திரமாய் மட்டும்" பார்க்கப்படுவதாய் உணர்ந்தேன். உடனே, இந்த மாதிரி உடை மற்றும் அதை சார்ந்த குழப்பங்களை ஒரு தலையங்கமாய் பதியவேண்டும் என்று தோன்றியது. அதன் விளைவு தான் இந்த தலையங்கம்!

        அதன் பின் 2 நாட்கள் இதுசார்ந்தே சிந்தித்ததில் - எனக்கு முதலில் தோன்றிய கேள்வி இதை ஏன் ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட வேண்டும்? சரி, இம்மாதிரியான புகைப்படங்கள் சம்பந்தப் பட்டவருக்கு ஒரு நேரத்தில் தெரியும் தானே?! அவர்கள் ஏன் இதை தடுப்பதில்லை? என்றொரு கேள்வியும் வந்தது. சரி, இதை ஏன் நான் வெளியிடவேண்டும்; எனக்கென்ன உரிமை இருக்கிறது? என்ற கேள்வி வந்தது. அவர்களின் முகங்களை மறைத்துவிட்டு வெளியிட்டு இருக்கிறேன். முக-நூலில், அந்த புகைப்படத்தை மாற்றமுடியவில்லை! தவறுக்கு வருந்துகிறேன்!! எனக்கு முக-நூலில் அதிகம் லைக்குகள் கிடைக்கவில்லை; எவரும் அதை ஆதரிக்கவில்லை! என்பது வருத்தமே. ஆனால், அதற்காய் கவலை கொள்ளும் நிலையை எல்லாம் நான் கடந்து விட்டேன். என்னுடைய பதிவுகள் வெறும் லைக்குகளுக்காக அல்ல! என் கருத்துகளும், சிந்தனைகளும் தான் முக்கியம் என்ற உண்மை மீண்டும் புரிந்தது. ஏன், இவர்கள் இதை ஆதரிக்கவில்லை என்று யோசிக்க ஆரம்பித்தேன். 

        பெரும்பான்மையில் ஒவ்வொரு ஆணும் "தந்தையாய்/தமையனாய்/தம்பியாய்/கணவாய்..." இப்படி பல உறவு-முறையில் தன் குடும்பத்தில் உள்ள பெண்கள் இம்மாதிரி ஒரு உடை அணிவதை தொடர்ந்து தடுத்துக் கொண்டு; அவர்களை கண்டித்து கொண்டே தான் இருக்கிறான். எங்கள் வீட்டு ஆண் அப்படியில்லை என்ற வாதம் வேண்டாம்; சிறுபான்மையினர் எனினும், அவர்களை தலைவணங்குகிறேன். ஏன் இவர்கள் எவரேனும் ஒருவர் பொதுவில் குரலெழுப்பும் போது அமைதியாய் இருக்கின்றனர்? என்று யோசிக்க ஆரம்பித்தேன். "3 விதமானோர் தெரிந்தனர்: 1. எவர் எப்படி போனால் எனக்கென்ன?! என்போர்; 2. "அழகு பெண்ணின் தாயார் என்றால், அத்தை என்றே அர்த்தம்" என்பதாய் மற்ற பெண்களை இரசிப்பவர்கள்; 3. எவரேனும் ஒரு பெண் சண்டைக்கு வந்து "தம் இமேஜ்" போய்விடுமோ என்று எண்ணுவோர்". நான் ஒன்றும் ஞானி அல்ல; நானும் அழாகான பெண்களை இரசித்து கொண்டு தான் இருக்கிறேன். ஆனால், இது அழகல்லவே! இது ஆபாசம்...இது ஒழுக்கமின்மை...இது ஆபத்து!

       சரி பெண்கள் ஏன் அப்படி யோசிப்பதில்லை என்று யோசித்தேன். பெரும்பான்மையானோர், இப்படி உடை அணிவது தம்-உரிமை என்பதாய் நினைப்பது புரிந்தது. இல்லை எனவில்லை; இது அவர்கள் உரிமை/சுதந்திரம். ஆனால், மேலிருக்கும் புகைப்படத்தில் உள்ள உடையை மீண்டும் பாருங்கள். மன்னிக்கவும்! ஒரு-குறிப்பிட்ட உறுப்பை மறைத்தால் போதுமானது என்ற தவறான-புரிதலை தவிர வேறென்ன நோக்கம் இருக்க முடியும்? அப்படியாயின், இலையும்/தழையும் போதுமென்று இருந்திருக்கலாமே? ஆடைகள் எதற்கு?. இது முற்போக்கு/மேற்கத்திய சிந்தனை என்று வாதிடுவோர் உண்டு; ஏன், மேலை நாட்டில் இப்படி பெண்கள் உடையணிவதை பார்க்கவில்லையா?! என்பர். இல்லை எனவேயில்லை! மேலை நாடுகளில் 6 மாதங்களுக்கும் மேலாய் குளிரும்/பனியும் மட்டுமே; அவர்களால் குறைந்தது 3-உடைகள் (முக்கியமாய் பெண்கள்) இல்லாமல் இருக்கமுடியாது. அதுவும் முழுக்க முழுக்க உடம்பை மறைத்த ஆடைகள்; முகத்தையே(கூட) முழுதாய் பார்க்கமுடியாது. 

    அதனால், கோடை காலம் அவர்களுக்கு - இம்மாதிரியான கடினமான உடைகளில் இருந்து கிடைக்கும் விடுதலையாய் பார்க்கப்படுகிறது. "கார்னிவால்" போன்ற பெயரில் அவர்கள் கோடையின் ஆரம்பத்தையே ஒரு விழாவாய் கொண்டாடுகின்றனர்! அதுவும் வெய்யிலை தங்கள் உடம்பில் உள்வாங்கிக் கொள்ளவே (Sun Bath)! அது அவர்களின் "மெலனின்" குறைப்பாட்டினால் இருக்கும் "மிக வெள்ளையான" தோலை "நிறமாற்றம் (Toning)" செய்ய ஒரு மருத்துவம் போல் செய்கின்றனர். இங்கே, வருடம் முழுதும் வெய்யில் கொளுத்துகிறதே ஐய்யா! (இறை/இயற்கை)யருளால், நம் தோல் ஏற்கனவே நிறமாற்றம் செய்யப்பட்டு "குறையற்று" இருக்கிறதே ஐய்யா!! அந்நாடுகளின் தட்பவெப்ப-நிலை மற்றும் அந்நாட்டவர்கள் தோல்-குறைப்பாடு சார்ந்தது! நம் பெண்கள் ஏன் கடைபிடிக்க வேண்டும்? அந்த பெண்கள் செய்வது அனைத்தையும் இவர்கள் செய்யமுடியுமா? "கடற்கரையில்" அப்பெண்கள் இருப்பது போன்று இருக்கமுடியுமா?! என்று கீழ்த்தரமாய் கேட்கவில்லை!

          குறிப்பிட்ட வயதிற்கு மேல், தன் தந்தை/தமையன்/காதலன்/கணவன் என்று எவருடன் வெளியில் சென்றாலும் தான் சாப்பிடும் சாப்பாட்டிற்கு தானே பணம் கொடுப்பது முதல் எவ்வளவு இருக்கின்றன?!  எனக்கும் மேற்கத்திய சிந்தனை தெரியும் என்பதை முன்பே எழுதி இருக்கிறேன். அவை நம் வாழ்க்கை முறைக்கும்/வாழ்க்கை சிக்கலுக்கும் எத்தனை பயனுள்ளதாய் இருக்குமே? எங்கே... நம் ஊரில் ஒரு கணவன் (மற்றவரை விடுங்கள்!) தன் மனைவி சாப்பிட்டதற்கு அப்பெண்ணை பணம் கொடுக்க சொல்லிவிட்டு அன்றிரவு நிம்மதியாய் தூங்கிவிட முடியுமா?! மீண்டும் விதிவிலக்கானவர்களை தலைவணங்குகிறேன்! "தேவைக்கு அதிகமாய்" தன் கணவனிடம் பணம் வாங்கும் பல பெண்களை எனக்கு தெரியும் - "என் அம்மா/ என் தமக்கை/ என்னவள்/ என் நண்பிகள்" உட்பட! அக்காலத்தில் வேலைக்கு செல்லாத பெண்கள் (என் அம்மா/ என் தமக்கை போன்று) அப்படி செய்தது மட்டுமல்ல; இப்போது நிரம்ப சம்பாதிக்கும் பெண்களும் அதையே செய்கிறார்கள்! இதை தவறெனவில்லை! 

       ஆனால், இங்கே ஏன் மேற்கத்திய/முற்போக்கு சிந்தனை வரவில்லை? என்பதே என் கேள்வி! உண்மையான மேற்கத்திய சிந்தனையில், ஒரு-குழந்தைக்கு சொத்து சேர்க்கவேண்டும் என்பதால் 2-ஆவது குழந்தை வேண்டாம் எண்ணமே வராது! அங்கே, குழந்தைகளை படிக்கவைப்பதோடு சரி! பின்னர் அவர்கள் வாழ்க்கை அவர்களுடையது! நாம் அந்த சிந்தனையுடனா இருக்கிறோம்? அங்கே, முன்பின் தெரியாத பெண்ணின் பக்கத்தில் பேருந்திலோ/பொதுவிடத்திலோ அமரமுடியும்! இங்கே? "அக்கா/தங்கையோட பிறக்கவில்லையா?" என்று கேள்வி வரும். தாம் அண்ணன்/தம்பியோட பிறக்கவில்லையா?? என்று யோசிப்பதேயில்லை?! எனக்கு தெரிந்து மேலை-நாட்டு பெண்கள்; "இது என்கனவனின் குழந்தை!" என்று எந்த முகமாற்றமும் இல்லாமல் "மாறா அன்போடு" சொல்வர்! இங்கே... "என் சக்களத்தி" குழந்தை! தனக்கு சாதகமான விசயங்களில் மட்டும் இம்மாதிரி சிந்திப்பது மேற்கத்திய சிந்தனையோ/முற்போக்கு சிந்தனையோ அல்ல என்பதை அருள்கூர்ந்து உணருங்கள்.

        அந்த நாட்டில் (நீங்கள்) சகித்து கொள்ளவில்லையா? ஆம்! உண்மைதான்; நீங்களும் அங்கே எந்த ஆண்-மகன் பக்கத்தில் உட்கார்ந்தாலும் அமைதியாய் தானே இருக்கிறீர்கள்? நல்ல விசயங்களை எடுத்துக்கொள்ளுங்கள் - தவறில்லை! சாதகமான விசயங்களை எடுத்துக்கொள்வது தவறு மட்டுமல்ல; ஆபத்தானது! அடுத்து, "பார்ப்பவரின் பார்வையில் கோளாறு!" என்ற வாதம்; மறுக்கவில்லை! இம்மாதிரி உடை அணியும் 100 பெண்களில் 0.5 % தான் அம்மாதிரி சிதைக்கப்படுகிறார்கள் என்போம்! நம் நாட்டில் சுமார் 30 கோடி இளம்பெண்கள் இருக்கின்றனர்; அதில் சுமார் 15 கோடி மாதிரி பெண்கள் இம்மாதிரி உடைகள் அணிகின்றனர் என்போம்! மொத்தத்தில் 0.5 % எத்தனை பெண்கள் என்று கணக்கிடுங்கள்; உண்மையை சொல்லுங்கள்! மனது பதறவில்லையா?! அந்த பதட்டம்தானைய்யா என்னை இப்போது சூழ்ந்துள்ளது! இது வெறும் "உடலால்" கற்பழிக்கப் படுபவர்கள் பற்றிய ஒப்பீடு. கண்ணால்/கனவால்/கற்பனையால்/மனதால் கற்பழிக்கப்படுவோர் எண்ணற்றோர்!  

        நான் 99.5 % சதவிகிதம் பெண்களில் பாதுகாப்பாய் இருக்கிறேன்; தவறில்லை! என்று ஒரு பெண் நினைப்பதும், 0.5 % சதவிகிதத்தில் என்வீட்டு பெண்ணில்லை; தவறில்லை! என்று ஒரு ஆண் நினைப்பதும், மிகவும் ஆபத்தானது. எல்லா ஆண்களுக்கும் "காம உணர்ச்சிகள்" வருவதில்லை!; எல்லா பெண்களும் அப்படியான உணர்வுகளை தூண்டுவதுமில்லை!! "ராஜ ராணி" திரைப்பட விமர்சனத்தில் குட்டைப்பாவாடை நயன்தாராவுக்கு அழகாய் இல்லை என்பதை விட; அசிங்கமாய் இருக்கிறது என்று விமர்சித்து இருந்தேன். அந்த காட்சியில் அஞ்சலி இருந்திருந்தால் என்னுடைய விமர்சனம் வேறுமாதிரி இருந்திருக்கும். அதுவே, ரம்பா போன்ற நடிகை இருந்திருந்தால் "அடடே! பாவாடையை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாமே!!" என்றிருந்திருக்கும். ஒரே பாவாடை! பார்ப்பவன் நான் ஒருவனே!! - பார்க்கப்படும் பெண்களும்; என் எண்ணங்களும் வேறுமாதிரியானவை! அதே போல், என்-வரிசையை மாற்றி அமைத்து யோசிக்கும் ஆண்கள் உண்டென்பதையும் உணரவேண்டும்.

    இதையே இங்கே வலியுறுத்த கடமைப்பட்டிருக்கிறேன். இப்படி உடையணிந்தும் எத்தனை பெண்கள் பாதுகாப்பாய் இருக்கின்றனர்?! என்பதல்ல என் கவலை! இம்மாதிரியான உடைகளால் எத்தனை பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் என்பதே என் பெருத்த கவலை!! 5 வயது குழந்தைகள்; 50 பெண்களின் கற்பழிப்புகளுக்கும் ஆடையா காரணம்? எனலாம்; கண்டிப்பாய், அங்கே ஆடைகள் காரணமே இல்லைதான்! அது "மிகக் கொடிய கொடூர-மிருகத்தின் செயல்". கற்பழிப்புக்கான பல காரணங்களில்; இம்மாதிரியான உடைகளும் ஒன்று! என்பதே நான் இங்கே எடுத்துக்கொண்டிருக்கும் களம். ஒருபெண்ணின் உடையை பார்த்து "காம வெறிகொண்டு"; அப்பெண்ணை அடையமுடியாமல் கிடைக்கக்கூடிய பெண்களை நாசப்படுத்தும் வேலைகளும் இங்கே நடைபெறுகின்றன. அப்போது... நீங்கள் நலமாய் இருந்தாலும்; உங்களால் இன்னுமோர் பெண் பாதிக்கப்படுகிறாள் என்பதை(யும்) உணரவேண்டும். அதில் ஒன்றாய் கூட "இந்த 5-உம்; 50-உம் இருக்கக்கூடும்!.

இது பெண்களின் உரிமையை ஒடுக்க முனையும் குரல் அல்ல! 
      பெண்களின் உன்னதத்தை காக்க முனையும் குரல்!!      

பின்குறிப்பு: மீண்டும் ஓர்முறை தலையங்கத்தின் நீளம் அதிகமாகிவிட்டது! ஆனால், எடுத்துக் கொண்டிருக்கும் உன்னத விசயத்திற்காய் இதை பொறுத்தருள்வீர்கள் என்ற நம்பிக்கை நிறைந்திருக்கிறது. 

என்மீதான என்காதல்...

(உன் காதலுக்கு; என் "வெண்பா" பரிசும்/பதிலும்!!!)


எழுத்துகளின் உயிர்ப்பினில்;என் அகத்தை கண்டாய்!
       விழித்தெழுந்தாய்!! கவலைகள்சூழ் யுகமும் ஓர்நாள்
ஒழிந்தழிந்தே சுகம்தழுவும் கனாக்கள் யாவும்
       முழுமையாய்உள் செலல்உணர்ந்தாய்; அனைத்தும் எந்தன்
எழுத்துயிரால் நிகழ்ந்தது!ஆம் உரைப்பது யாவும்
       "அழகுசேர்நம் தமிழ்மொழிபோல்" நிலைத்த ஒன்றாம்!
"பழகலாமோ; ஒருவருடன் ஒருவர்?" என்றாய்
        மொழியதன்பால் எனக்கிருந்த உறவால் நானும்;

சரியெனவே தயக்கமேதும் சிறிதும் அற்றே;
        புரிதலையும் உயர்த்தலாம்;வா சிநேகம் என்றேன்!
உரிமையும்;நம் சிநேகமும்-ஓர் விகிதம் என்றாய்;
        சரிசமமாய் "நகமுடன்சேர் சதையும்" போலாம்
கரியினால்,வார் வெளிச்சமாய்;நம் உறவின் பலமும்
         உரியதாம்ஓர் உயரமும்;பேர் உரம்சேர் அன்பால்
அரியதொரு நிகழ்வினால்;சீர் மிகும்ஓர் நாளின்
         சிரிப்புடன்பல் சிறப்புடனும் வளர்ந்து நின்ற;

பொழுதுஒன்றில் தயக்கமாய்ஓர் கலக்கம் வந்தே;
         அழுக்ககன்ற உனதுளத்தின் அடியில் எந்தே;
அழுந்தியூன்றி கிடக்கிறதாம்? எனவே கேட்டேன்!
         அழகிநீயும்! மறுப்பெதுவும் அறவே அற்று
மொழியைகாதல் புரிபவன்;என் அகத்தே "காதல்"
         செழித்துஓங்கும் சுகத்தை;நீயும் சுவைத்தே நிற்கும்
அழகியதோர் கதையுமொன்றை கதைத்தாய்; கேட்டேன்
         "பழிபலவும் புரிந்தவன்போல்" இரும்பன் நானும்!

இனியவள்!என் சிநேகமுன்னை மறந்தும் அஃதாய்
        கனவதிலும் உணர்வுஅற்றும் நினைத்தேன் இல்லை;
எனக்கிருக்கும் குடும்பமே-என் உயிரும், மெய்யும்!
        "எனதவளும்; அழகுசேர்என் மகளும்" போதும்!
எனையுமே;நான் சுயத்துடன்இன் களித்தல்; மேல்சொல்
        எனதிருவர் மிகுந்துஏதும் கொடுத்தால் உண்டாம்!
வினையோ?நீ தயக்கமாய்கேட் டதுவும் சொல்வாய்!
        எனக்கிருக்கும் எனதுமேலாம் "என்காதல்" போதும்!

உனக்குமோர்நல் குடும்பமொன்றும் இருத்தல் உண்டாம்!
       உனதவனும்; உனதரும்-இன் மகனும் கேட்பர்
தினந்தோறும் முனைசிரிதும் குறையா உந்தன்
       இனியதோர்நல் இமயஅன்பை! உணர்வாய் தோழி!
கனத்திடும்-உன் இதயமும்;நல் மனமும் கண்டேன்!
        எனக்கிதையும் கடந்துசெய்தல் எதிலும் இல்லை;
இனக்கமாய்ஓர் உடன்படுதல்! மறந்தும் இஃதால்
        எனைதொடர்தல் தவிர்த்தலாம்!நீ எனக்கும் செய்வாய்!

டே! அப்பா!!



          சென்ற வியாயக்கிழமை மாலை வழக்கம்போல் என்னவளை அலைபேசியில் அழைத்து பேசிவிட்டு; பாப்பா எங்கே? என்றேன். எப்போதும் "தோ... கொடுக்கறேன் இருங்க!" என்பவள், உடனே கொடுத்து விட்டால் போலும்! என்னவளிடம் பேசுவதாய் தொடர்ந்து பேசினேன்; என் கேள்வியை முடிக்கும் வரை அமைதியாய் இருந்துவிட்டு திடீரென்று... "டே! அப்பா!!" என்ற குரல் வந்தது. என்மகளுக்கு அவளிடம் பேசாது யாரிடமோ பேசுவது போல் பேசியது கண்டு சினம் வந்துவிட்டது; அவள் எதையும் சொல்லாமல் அனைத்து கோபத்தையும் "டே! அப்பா!!" என்ற இரண்டு சொற்களில் சொல்லியது புரிந்தது. என்மகள் முன்பு கூட ஓரிருமுறை அப்படி சொல்லி இருக்கிறாள்.  ஆனால், அன்று அவளின் உணர்வை வெளிப்படுத்த அப்படி சொல்லியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது; வெகுவாய் இரசித்தேன். கண்டிப்பாய் இந்த "டே!" என்பதை என்மருதந்தையிடம் இருந்து அவள் கற்றிருக்கவேண்டும்; அவர் தான் அவளை அப்படி அழைப்பார். எதெப்படியோ, அவள் அப்படி அழைத்தது எனக்கு பிடித்திருந்தது. 

      இம்மாதிரி நமக்கு மிகவும் பிடித்த சிலரால் இப்படி அழைக்கப்படுவதும் அல்லது நமக்கு மிகவும் பிடித்த சிலரை இப்படி அழைப்பதும் ஒரு பரம-சுகம்! இதை அனுபவிப்பர்களுக்கு தான் புரியும்; எனக்கு நினைவுகள் மலர்ந்தன! "டே! புருஷா!!" என்று எழுத்துக்களால் எழுதப்பட்டும்; வார்த்தைகளால் கேட்கப்பட்டதுமான நாட்கள் நினைவுக்கு வந்தன. அப்போதெல்லாம் என்னவளுக்கு மின்னஞ்சல் அனுப்பும் போது "Hi di HP!" என்று தான் ஆரம்பிப்பேன்; ஆம்! HP என்றால் "Honey Pondaatti" என்று நான் வரையறுத்தது! திடீரென்று ஒருநாள் அவளிடமிருந்து "Hi da HP!" என்று வந்தது; என்னவென்றால்?! "Honey Purushaa"; என்னவள் தந்த பதில். ம்ம்ம்... அதுவெல்லாம் "இப்போது ஒரு கனாக்காலம்"!. இம்மாதிரி அடைமொழிகளுடன் நான் அழைக்கும்/அழைக்கைப்படும் பல உறவுகள் உண்டு. என்னவளை இன்னமும் "பாப்பா!" என்றுதான் அழைப்பேன்; ஆம், (உடன்பிறந்த)தங்கை இல்லாத குறை இன்றும் எனக்குண்டு - அதன் வெளிப்பாடுதான் "பாப்பா"!. ஆனால்...

எந்த தயக்குமும் இல்லாமால் "டே! அப்பா!!" எனக்கு மிகவும் உயர்வானது!!!

வெள்ளையரும்! கருப்பரும்!!


அத்துமீறிய வெள்ளையனை
அடக்கிட நினைத்தது;
அப்பாவியான கருப்பரிருவரின்
அழிவில் முடிந்தது!

ம்ம்ம்...
மீசையின் ஒழுங்கை
மீறிய வெண்முடியதுவே
மடைமாற்றிய அவ்வெள்ளையன்!!

ஞாயிறு, ஜூன் 08, 2014

உனது கண்களில்; எனது கனவு...


         
      கடந்த ஜூன்-4 ஆம் தேதி - காலை அலுவலகம் செல்லும்போது; வழக்கம் போல் என்னுடைய மகிழ்வுந்தில் "என்னை எப்போதும் கவர்பவை" என்ற தொகுப்பில் இருக்கும் பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருந்தன. அப்போது, "ஒன்றாய்? இரண்டாய்?... ஆசைகள்!" என்ற பாடல் ஒலித்தது; அதில் வந்த ஒரு வரி... என்னை "மறுதலித்து" திகைக்க வைத்தது; எப்போதும் கேட்கும்/கேட்ட பாடல் தான்! ஆனால், அன்று மட்டும் அந்த வரி - உடனடியாய்/நேரடியாய் என் மூளையை சென்றடைந்தது என்று எண்ணத் தோன்றுகிறது; அதற்கு முன் அந்த வரியை நான் மனதால் மட்டுமே பார்த்திருக்க வேண்டும். அந்த வரியில் நிறைய முரண்பாடுகள் உள்ளன; என்னதான் அந்த கற்பனையை நான் "இன்னமும்" இரசிப்பினும்/பாராட்டிடினும் - முரண்பாடுகள் தெரிந்த பின் அதை ஒப்புக்கொள்ள முடியவில்லை!  அந்த வரியின் மீதான என் பார்வை இங்கே. உண்மையில், விவாதத்துக்கு உண்டான இந்த வரியைத் தவிர மற்ற எல்லா வரிகளிலும்; அருமையான கற்பனையும்/காதலும் தெரியும்.

         "உனது கண்களில்... எனது கனவினை; காணப் போகிறேன்!" என்பதே அந்த வரி. மேலே குறிப்பிட வண்ணம் - இது அற்புதமான கற்பனை; அன்பு-மிகுந்த, அளவு-கடந்த ஆசை! கேட்பதற்கு சந்தோசமாய் தான் இருக்கிறது - இன்னமும். ஆனால், முரண்பாடுகள்?... முதலில், கனவு என்பது கண்களால் காண்பது அல்ல; உண்மையில், கண்களுக்கு "கனவில்" எந்த தொடர்பும் இல்லை என்று எனக்கு ஆணித்தரமாய் தோன்றியது. கனவு என்பது நம் மனதில்; அதுவும் ஆழ்மனதில் நடக்கும் செயல் என்று வெகு-நிச்சயமாய் உணர்ந்தேன். மேலும், கண்கள் திறந்திருக்கும்போது கனவு சாத்தியமே இல்லை; அதனால் தான் உறங்கும்போது கனவு வருகிறது. இத்தலையங்கம் எழுதும் முன் "கனவு" என்பதன் சரியான அர்த்தத்தை இணையத்தில் படித்தும் தெரிந்து கொண்டேன். மேலும், மருத்துவத் துறையிலும் ஆராய்ச்சி செய்யும் என் நண்பனையும் தொடர்பு கொண்டு விவாதித்தேன்; அவனும் அதை உறுதி செய்தான். அதன் பின்னர் தான் கனவு சார்ந்த; நான் பலமுறை பலவிதங்களில் யோசித்த விசயங்களும் நினைவுக்கு வந்தன.

        ஆங்கிலத்தில் "dream" எனும் கனவிற்கு இது தான் வரையறை: Dreams are successions of images, ideas, emotions, and sensations that occur involuntarily in the mind during certain stages of sleep. இதிலிருந்து, கனவு என்பது முழுக்க முழுக்க மனதோடு சம்பந்தப்பட்டது என்பது தெளிவாகிறது. கண்களுக்கு இங்கே எந்த பணியும் இல்லை. அப்படி இருக்கையில், இந்த வரி எப்படி சரியானதாகும்?! இதை மேலும் என்னுடைய சிந்தனையில் இப்படி சொல்ல ஆசைப்படுகிறேன்: இதை படிக்கும் இந்த சமயம் கூட நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். சிறிதுநேரம் கண்ணை மூடி; உங்களுக்கு மிகவும் பிடித்த ஒருவரின் முகத்தை உருவகப்படுத்தி பார்க்க முயலுங்கள் - எந்த உறவாய் வேண்டுமானால் இருக்கட்டும். ஓரளவிற்கு வேண்டுமானால் ஒரு-உருவம் கிடைக்கும் எனினும், முழுக்க முழுக்க உருவகம் தெரிய "பெரும்பான்மையில்" வாய்ப்பே இல்லை. ஆனால், அதே நபரின்; உங்களுக்கு பிடித்த புகைப்படம் ஒன்றை நினைவுபடுத்தி முயலுங்கள்; உடனே, சாத்தியம் ஆகும்.

         நான் பலமுறை இப்படி பல உறவுகளை பார்க்க முயற்சித்து இருக்கிறேன். ஒன்று விளங்கியது; கண் என்பது பார்பதற்கு மட்டுமே! கண்ணால், ஒரு பொருளை பார்த்து அப்படியே உள்வாங்க முடியும். ஆனால், ஒரு உயிரை அப்படி உள்வாங்க முடியாது என்று தோன்றியது; பொருள் (புகைப்படம் உட்பட) அசைவற்றது; மாறுபாடு இல்லாதது. ஆனால், ஒரு நபர் அப்படியல்ல; அவரின் உருவம் (மனமும் கூட) சமயத்திற்கு தகுந்தார்ப்போல் மாறுபடும். குளிக்கும் முன்னர் ஒரு மாதிரியும், குளித்த பின் வேறு மாதிரியும்; நோயுற்ற போது வேறு மாதிரியும்; இப்படி பல உருவகங்கள் இருக்கும். அதனால், நாம் நினைக்கும் போது உடனே ஒரு உருவகம் தெரிவதில்லை. ஆனால், அவரின் ஒரு புகைப்படத்தை பல முறை பார்த்து உள்வாங்கிக் கொள்ள முடியும். நாம் பெரும்பாலும் ஒருவரின் முகத்தை/கண்களைப் பார்த்து பேசுவதில்லை (நான் முகத்தை/கண்களைப் பார்த்து பேசுவதை ஒரு பயிற்சியாகவே செய்கிறேன் - ஆயினும், அடிக்கடி கவனம் சிதையும்); இது கூட காரணமாய் இருக்கலாம்.  

       ஆனால், யாரை வேண்டுமானாலும் நம் கனவில் "அப்படியே" பார்க்க முடியும்; நம் ஆழ்மனது அனைத்தையும் அப்படியே கிரகரித்து திரும்ப-கொடுக்கும் தன்மை கொண்டது; அதனால் அங்கு சாத்தியம் ஆகிறது. எனவே, கனவு என்பது முழுக்க முழுக்க மனதோடு சம்பந்தப்பட்டது; கண்களுக்கு அங்கே வேலையில்லை என்பது தெளிவாகிறது. சரி! இப்போது விஞ்ஞானம் தாண்டி மெய்ஞானம் சார்ந்து யோசிப்போம். ஒருவரின் கனவு என்பது அவரின் "தனிப்பட்ட இடம் (Personal Space); தனிப்பட்ட சுதந்திரம் (Personal Space)"; அங்கே, வேறெவருக்கும் இடமே இல்லை - எந்த உறவாக இருப்பினும். ஏனெனில், கனவில் மட்டுமே எவர் ஒருவரும் - அவராகவே எந்த நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகாமல் இருத்தல் சாத்தியம். அதனால் தான், சிலருக்கு கனவின் ஊடே - அவரின் (ஆழ்)மனதில் இருக்கும் விசயங்கள் பேச்சாய்(கூட) வெளிப்படும்; அவையெல்லாம், அவரின் மனதுள் அழுத்தப்பட்ட/ அமுக்கப்பட்ட விசயங்கள். அங்கேயும், இன்னொருவர் நுழைய நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?

       நம் கனவு; நம்மோடு சம்பந்தப்பட்டது! அங்கே, வேறெவருக்கும் எந்த உரிமையும்/வேலையும் இல்லை என்பதை உணரவேண்டும். பல பெற்றோர்கள் எம்மால் முடியவில்லை; எம் பிள்ளைகளாவது செய்யவேண்டும் என்று - குழந்தைகள் மீது திணிப்பது கூட; இந்த உணர்தல் இல்லாததால் தான். பின், அந்த குழந்தைகளின் கனவுகள் என்னாவது? என்று யோசிக்க தவறுவது - கனவு என்பதன் இந்த அடிப்படை புரியாததால் தான் என்று தோன்றுகிறது. மன்னிக்கவும்!... ஆனால், நான் இதை சொல்லியே ஆகவேண்டும். இந்த கனவு திணிப்பில்... பெண்களே முதன்மை வகிக்கிறார்கள் என்பதே என் எண்ணம். ஒருவேளை, ஆண்களைக் காட்டிலும்; அவர்களின் சுதந்திரம் மிகவும்-ஒடுக்கப்பட்டதாய் இருப்பதால் கூட இருக்கலாம். அதிலும், காதலி அல்லது மனைவியாய் இருக்கும் பெண்களுக்கு இது அதிகம் இருப்பதாய் படுகிறது. இந்த வரியை எழுதிய அந்த பெண்-கவிஞருக்கு இந்த தாக்குதல் கூட இப்படியொரு கற்பனையை கொடுத்திருக்கக்கூடும்.

      ஒருவரின் கனவை இன்னொருவர் தெரிந்து கொள்வதற்கே உரிமை இல்லை எனும்போது; ஒருவரின் கனவை இன்னொருவர் மூலம் காண எண்ணுவது (சாத்தியமே எனினும்) எப்படி சரியாகும்?! காதலில் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கின்றன; எதிர்பார்ப்பு தெரிந்ததும், அது சாத்தியமா என்று ஆராய வேண்டும். சாத்தியம் இல்லை எனில், வெறும் கனவோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்; அதுவும் தன்-மனதின் மூலமாய் காணும் கனவாய் இருக்கவேண்டும். இந்த புரிதல் இல்லாததால் தான் காதலில்/தாம்பத்யத்தில் ஒருவர் வெகு-எளிதாய், மற்றவரைப் பார்த்து "உன்னை எனக்கு அணு-அணுவாய் தெரியும்" என்கிறார். அடப்போங்கப்பா!... விஞ்ஞானமே "அணு"வை முழுதாய் அறியவில்லை; நீங்கள் எப்படி?! என்றே கோபமாய் கேட்கத் தோன்றுகிறது. இன்னொருவரின் கனவை கூட; அவரே சொல்லாத வரை எவராலும் தெரிந்து கொள்ளமுடியாது! பிறகெப்படி... அணு-அணுவாய் தெரிந்து கொள்ள முடியும்?! இவையாவும் வேண்டாம்... ஒருவரின் கனவு அவரின் சுதந்திரம் என்பது துவங்கி

ஒருவரின் இயல்போடு இருக்க; அவரை அனுமதித்து - நாமும் நம் இயல்போடு இருப்போம்!!! 

உண்மை மேலோங்கட்டும்...




உறவின் பெயரல்ல;
உண்மையின் உயரமே!
உறவின் ஆயுளை;
உறுதி செய்கிறது!!!

எப்படியெல்லாம் வேதனை வருது?!...



         இன்று காலை என்னுடைய மகிழ்வுந்தின் "வாகன உரிமையை" புதுப்பிக்க சென்றிருந்தேன். நம் ஊரிலும், போர்ச்சுக்கல் நாட்டிலும் ஓட்டுவது போல் "ஆரம்பத்தில்" உச்ச-வேகத்தை பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லமால் வெகு-வேகமாய் ஓட்டிக்கொண்டு இருந்தேன். இங்கெல்லாம்... "அபராதம்" விதிப்பார்களாமே? திடீரென்று என் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது; வந்து கப்பம் கட்ட சொல்லி! நம் ஊர் பணத்தில் 5100 உரூபாய் - 3 முறை கட்டினேன். காவலர்கள் தான் "ரேடாரை" வைத்துக்கொண்டு இதை கண்டுபிடிக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களைப் பார்த்த பின்னர் மட்டும் ஒழுங்காய் ஓட்ட ஆரம்பித்தேன். அப்படியிருந்தும் இன்னுமொரு முறை ஓலை வந்தது! இங்கே "ஸ்பீட் கேமரா" எல்லாம் இருக்காமே; முன்ன-பின்ன செத்து இருந்தா தானே சுடுகாடு தெரியும்? சிலர் துபாயில் அபராதம் விதித்திருந்தால் உரிமையை புதுப்பிக்கும் போது வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்றும்; துபாயில் 1 கி.மீ. தூரத்துக்கு ஒரு "கேமரா" உண்டென்றும் பீதியை கிளப்பி இருந்தனர்.

       அதனால் கடந்த சில நாட்களாகவே, துபாயில் எத்தனை ஓலைகளோ?! என்ற திகிலுடனே இருந்தேன். எல்லாம் நல்லபடியாய் முடிந்து வந்தால் எவனோ-ஒரு புண்ணியவான் கதவு-பிடியின் மீது "கீரலை" உண்டாக்கி சென்றிருந்தான் (முதல் படம்). அந்த வண்டியின் கதவில் என் வண்டியின் "பெயிண்ட்" ஒட்டியிருந்தது; ஒரே-நேர்க்கோட்டில் 2 தடங்களும் இருந்தன. கண்ணில் கண்ணீரே வந்துவிடும் அளவுக்கு வேதனை! 20 நிமிடங்கள் அவனுக்காய் காத்திருந்து, புகைப்படங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். நானும் ஒரு முறை இன்னொருவரின் வண்டியில் இதுமாதிரி செய்துள்ளேன்; ஒருவேளை, அதற்கான தண்டனையாய் இருக்கும் என்று எண்ணினேன். என்னவள் ஒருமுறை "என்மகள்" என்மருதந்தையின் வண்டியில் "செங்கல்லை" வைத்து தேய்த்து கீறலை உண்டாக்கினாள் என்று சொன்ன குற்றசாட்டு நினைவுக்கு வந்தது. இது அதற்கான, பிரதிபலனாய் கூட இருக்கலாம்; என்மருதந்தையும் அப்படிதானே துடித்திருப்பார்.

ம்ம்ம்... எப்படியெல்லாம் வேதனை வருது???

செல்லாக்காசுக் "காதல்"


தக்க சமயத்தில்;
கிடைக்காத "காசு"
மட்டுமல்ல...

திருமணத்திற்கு பின்;
கிடைக்கும் "காதலும்"
"செல்லாக்காசே!"

பாலைவனத்தில் ஒரு "சோலைவனம்"...



      இரண்டு வாரங்களுக்கு முன், நண்பரின் 4-wheel drive (தமிழில் மொழிபெயர்த்தால் அபத்தமாய் தெரிந்ததால், அப்படியே விட்டுவிட்டேன்) மகிழ்வுந்தில் நெடுந்தூர-பயணம். எனக்கு அம்மாதிரி வண்டியை ஓட்டி எந்த அனுபவமும் இல்லை; வீட்டில் இருந்து கிளம்பும்போதே, அவர் என்னிடம் சாவியை கொடுத்து விட்டார். எனக்கு பெருத்த பயம்; சாவியை வேறு கொடுத்துவிட்டார் - கெளரவ பிரச்சனை! சரியென்று அதில் ஏறி உட்கார்ந்தால் - ஏதோ யானை மீது ஏறி உட்கார்ந்தது போல் இருந்தது; அப்போதே கொஞ்சம்-உதர ஆரம்பித்து விட்டது. இருப்பினும், அதை வெளிக்காட்டாது வண்டியை நகர்த்தி சாலையில் சென்றுவிட்டேன்; நெடுஞ்சாலையை அடைந்தவுடன் கொஞ்சம் பதட்டம் குறைந்தது. ஒரு 30 கி.மீ. தொலைவு கடந்ததும், வெகு-இயல்பாய் எப்போதும் போல் ஒற்றை கையால் ஓட்ட ஆரம்பித்து விட்டேன். நல்ல அனுபவமாய் தான் இருந்தது; ஆங்காங்கே நிறுத்தி சில புகைப்படங்கள் எடுத்தோம்.   

          ஒருவாறாய், மலைகள் நிறைந்த பாலைவனம் எல்லாம் கடந்தோம். இடையில் பார்த்தால், சிறு-சிறு கிராமங்கள்; இந்தியாவில் இருப்பது போன்றே பேரு-நகரங்களில் இருந்து மிகவும் மாறுபட்டு! அதே யதார்த்தமான வாழ்க்கை முறையோடு - எனக்கு பெருத்த் ஆச்சர்யம். அரபு, அமெரிக்கா போன்ற பெரு-நாடுகளை; அழகிய நகரங்கள் மூலமாய் மட்டும் கணிப்பது எத்தனை தவறென்று புரிந்தது. ஆங்காங்கே, பாலைவன மலைகளில் நிலத்தை சமப்படுத்தி பேரிச்சம் பழம் போன்று விவசாயம் செய்கின்றனர். வெப்பத்தை தாங்கும் வண்ணம் அப்பயிர்கள் "குளிர்பதனப்"படுத்தப்பட்டும் வளர்க்கப்படுமாம். அம்மாதிரி ஒன்றை புகைப்படம் எடுக்க தவறி விட்டேன்; பார்த்து இரசித்ததோடு சரி. என்ன ஒரு முயற்சி/முனைப்பு? பாலைவனத்தில் ஒரு சோலைவனம்... என்று  தோன்றியது. அந்த சிறு கிராமத்தில் நம் நாட்டை போன்றே தெருவோர கடைகளை; அத்தனை வெப்பத்திலும் இயற்கையோடு ஒன்றி யதார்த்தமாய் பார்ப்பதற்கே ஆனந்தமாய் இருந்தது. 

சூழல்கள் வெவ்வேறாயினும் மனிதர்களின் இயல்புகள் ஒன்றேயென்பது புரிந்தது!!!

பின்குறிப்பு: நான் கூட, இம்மாதிரியான வாகனங்களில் என்ன இருக்கப்போகிறது என்று மேம்போக்காய் யோசித்ததுண்டு; ஆனால், அம்மாதிரி வாகனத்தை ஓட்டுவது பரம சுகம்; சிறிதும், அலுப்பு தெரியவில்லை - அன்றைய தினம் மட்டும் சுமார் 450 கி.மீ. ஓட்டினேன். இதை விட ஜாம்பவான்கள் எல்லாம் இருக்கிறது என்றார் என் நண்பர். இதை விடவா?! என்ற ஆச்சர்யம் எனக்கு!!

மேலிருக்கும் புகைப்படத்தில் இருக்கும் - நிறைய காற்றடைத்த பலூன்-பொம்மைகளை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது இதுதான். அடுத்த முறை என்மகள் இங்கு வரும்போது - அந்த கடைகளுக்கு அவளை அழைத்து சென்று - அவள் எல்லாவற்றையும் கை-நீட்டி கேட்பதை பார்த்து இரசிக்க வேண்டும் என்பதே!   

எல்லோரும் இராமனும் கண்ணகியுமே!!!


சந்தர்ப்பமும், சூழலும்
சரியான விகிதத்தில்;
சாதகமான நேரத்தில்
சேர்ந்தடையாத வரை;
இங்கே எல்லோரும்
இராமனும் கண்ணகியுமே!!!

ஞாயிறு, ஜூன் 01, 2014

என்மகளின் அலைபேசி உரையாடல்...



     என் வீட்டார் அனைவரும் - என்மகள் "அலைபேசியில்" சரியாய் உரையாடுவதில்லை என்று எப்போதும் சொல்வதுண்டு. அவர்களிடம் மட்டுமல்ல; என்னிடம் கூட அவள் அதிக நேரம் அலைபேசியில் உரையாடுவதில்லை. இணையத்தில் வேண்டுமானால், அதிக நேரம் உரையாடுவாள்; இதைப்பற்றி என்நண்பனிடம் கூட விவாதித்ததுண்டு. அவன், குழந்தைகள் பெரும்பாலும் (அலை/தொலை)பேசியில் அதிகம் உரையாடுவதில்லை; அது, அவர்களின் இயல்பு என்பான். உண்மைதான்; என்மகளும் அவ்வாறே! ஒருமுறை, அவள் அலைபேசியில் என்னிடம் பேசாததால் - நான் "அறிவிலி"யாய் கோபம் கொண்டதை-கூட முன்பொரு தலையங்கத்தில் எழுதி இருக்கிறேன். ஆனால், அதன்பின் எனக்கு அவள் அலைபேசியில் அதிகம் உரையாடவில்லை என்பதில் பெரிய-கவலையேதும் இல்லை. என்னுடைய கோபம் தவறு எனினும், அவள் என்னிடம் அதிகம் உரையாடவேண்டும் என்ற ஆசை எனக்குள் எப்போதும் இருந்தது. அதே எண்ணம்தான் என்வீட்டில் உள்ளவர்களிடமும் இருந்தது.

       அப்படிப்பட்டவள், சமீபகாலமாய் அலைபேசியில் நீண்ட-நேரம் உரையாடுகிறாள் என்று என் வீட்டார் கூறினர். என்னால் நம்பமுடியவில்லை; ஏனெனில், எனக்கு தெரிந்து அவள் என்னைத்தவிர வேறெவரிடமும் அதிக நேரம் அலைபேசியில் உரையாடுவதில்லை! என்னவளிடம் உரையாடுவதற்கான வாய்ப்பே தேவைப்படுவதில்லை; அவள் என்மகளுடனே இருக்கிறாள். இந்நிலையில் மே-20 ஆம் தேதியன்று என்னவள் "விழி ஒங்ககிட்ட ஏதோ சொல்லனுமாம்; உங்கள ஃபோன் பண்ண சொன்னா!" என்று சொன்னாள்; என்மருதந்தை வீட்டில் இருப்பதாயும், அவர் அலைபேசிக்கு அழைக்கும்படியும் கூறினாள். நான் அப்போது தான் எழுந்து அலுவலகம் கிளம்பிக்கொண்டு இருந்தேன். சரி, அவள் எவ்வளவு நேரம் பேசிவிடப்போகிறாள்?!; அவளிடம் பேசிவிட்டு கிளம்பலாம் என்று அலைபேசியில் அழைத்தேன். இன்னமும், என்னால் அவள் அத்தனை நேரம் பேசியதை நம்பமுடியவில்லை; ஆம்! மேலிருக்கும் புகைப்படங்களைப் பாருங்கள், தெரியும்!

            ஒரு-நிலைக்கு மேல் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை! என்மகளோ அலைபேசியை துண்டிக்கக்கூடாது என்கிறாள்; நானோ, அலுவலகம் கிளம்பவேண்டும். அதிலும், அதற்கு 2 நாட்கள் முன்புதான் என்-மேலதிகாரியிடம் கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்தது. நானும், சரி என்மகளும் நானில்லாமல் துன்பப்படுகிறாளே - வேலையை விட்டுவிட்டு சென்றுவிடலாமா?! என்று ஆலோசித்துக் கொண்டிருந்த தருணங்கள் அவை. எங்களுக்கென்று இப்போதுதான் பணம் சேமிக்க ஆரம்பித்திருக்கிறேன் என்று வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இங்கே எழுதியுள்ளேன். ஆனால், இன்னமும் ஒரு திடமான பொருளாதார-நிலை வரவில்லை! எனவே, நான் இங்கு இன்னும் சிலகாலம் இருந்தே ஆகவேண்டும்; குறைந்தது, அடுத்த வேலை கிடைக்கும் வரையாவது இருக்கவேண்டும். இந்த சூழலில், நான் காலதாமதமாய் செல்ல விரும்பவில்லை. என்னுடைய இந்த நிலையை என்னவளிடமே நான் விவாதிக்கவில்லை; பின் எங்கனம்/எப்படி என்மகளிடம் கூறுவது?

           எனவே, என்மகளிடம் "அப்பா ஆஃபிசுக்கு போகனும் குட்டி! அப்பா லேட்டா போனா, வீட்டுக்கு போக சொல்லிடுவாங்க; அப்புறம் பாப்பாவுக்கு தேவையானதெல்லாம் வாங்க அப்பாக்கிட்ட பணம் இருக்காதுடி.." அப்படி, இப்படியென்று என்னென்னவோ சொல்லி பார்க்கிறேன். அவளோ "அப்பா! உங்ககிட்ட இப்படி பேசறது ஜாலியா இருக்குதுப்பா; இன்னும் கொஞ்ச நேரம் பேசுங்கப்பா..." என்று சொல்கிறாள். இதைக்கேட்டவுடன், எப்படி அலைபேசியை துண்டிக்க முடியும்? சரியென்று, சிறிது நேரம் பேசிவிட்டு - மீண்டும் "அப்பா ஆஃபிசுக்கு போயிட்டு பேசறன் குட்டி..." என்று சொன்னால், அவள் மீண்டும் அதேவிதமாய் இன்னும் சிறிது நேரம் பேசுங்கள் என்கிறாள். துண்டித்துவிட்டு செல்ல ஒரு-வினாடி தான் ஆகும்; ஆனால், என்மகளின் அந்த-சந்தோசத்தை/அந்த-எதிர்பார்ப்பை அது சிதைத்துவிடும். நான், எப்போதும் முன்கூட்டியே செல்வேன் என்பதால் சரி அவளிடம் பேசிவிட்டு செல்வோம் என்று  தொடர்வேன்; பின், மீண்டும் நான் நேரம் ஆகிறதம்மா என்று சொல்வேன்.

            இப்படியாய், நேரம் செல்ல செல்ல நான் செய்வதறியாது அவளிடமான உரையாடலை "ஸ்கிரீன் ஷாட்" எடுக்க ஆரம்பித்தேன்; அதுவும், "ஃபேன்சி நம்பர்" வரும்வண்ணம் எடுத்த பல "ஷாட்"களில் சிலதான் மேலுள்ளவை. இந்த நேரத்தில்... அவள் சொல்ல, சொல்ல நான் "ம்...ம்...ம்... என்று கொட்டிவிட்டு; அப்புறம்..." என்று கேட்க ஆரம்பித்தேன். அவளோ "அப்பா! நான் என்ன கதையா சொல்றேன்? அப்புறம்; அப்புறம்...ங்கறீங்க?!" என்று கேட்டுவிட்டு சிரிக்கிறாள். நானோ... அப்பா அவசரமாய் கழிவறை செல்லவேண்டும்; பிறகு பேசுகிறேன் என்றால், அவளோ அலைபேசியை எடுத்துக்கொண்டு பேசிக்கொண்டே செல்லுங்கள் என்கிறாள். எனக்கோ அவளின் அறிவார்ந்த பேச்சை இரசிப்பதா? இல்லை நேரம் தவறுகிறதே என்று பதறுவதா?? என்று தெரியவில்லை. இப்படியாய்... அவளிடமான அன்றைய உரையாடல் முடியும்போது நேரம் 63 நிமிடங்களுக்கு சற்று குறைவாய் ஆகி இருந்தது. என்னதான்... என்சூழல் சிறிது பதட்டத்தை கொடுத்திருப்பினும்;

முதன்முதலாய், என்மகள் அவ்வளவு நேரம் பேசியது எனக்கு பெருத்த மகிழ்ச்சியே!!!

பின்குறிப்பு: அன்றைய தினம் முதல் என்மகள் என்னுடன் அதிக-நேரம் அலைபேசியில் பேச ஆரம்பித்து இருக்கிறாள். இப்போதெல்லாம்... மிகக்கவனமாய், தேவையான நேரம் இருக்கும்போது மட்டுமே என்மகளுடன் அலைபேசியில் பேசி வருகிறேன். நான் எதிர்பார்த்து, அவள் அதிகம் பேசவில்லை என்றாலும் கவலை இல்லை... அப்படியும் சில முறைகள் இந்த இடைவெளியில்-கூட நடந்தது. ஆனால், இனியொரு-முறை அவள் எதிர்பாத்து நான் பேசமுடியாத சூழலில் இருக்க எனக்கு விருப்பமில்லை. நேற்று என்னவள் சொன்னது போல், அதிக-நேரம் அலைபேசியை காதோடு வைத்து பேசுவது முறையல்ல... என்பதும் உண்மை! எனவே, சென்ற அக்டோபர்-மாதம் நான் வாங்கிக் கொடுத்த  "ஹெட்-ஃபோனை" என்மகள் உபயோகிக்க பழக்குமாறு என்னவளிடம் கூறினேன்;  அவளும், ஆமோதித்து இருக்கிறாள். இங்கு தான், பெரும்பான்மையில் ஒரு-தந்தையின் சிந்தனையும்; ஒரு-தாயும் சிந்தனையும் "மாறுபடுகின்றன" என்ற உண்மை விளங்கியது. என்னுடையது வெறும் "உணர்வு சார்ந்தது!"; ஆனால், என்னவளின் சிந்தனை "உணர்வுடன்; எம்மகளின் உடல்நலனும்" சேர்த்தது!!

என் கன்னி ஓட்டுப்பதிவு...



          மேலுள்ள புகைப்படத்தில் உள்ளது; என் கன்னி ஓட்டுப்பதிவு நடந்து அதற்கான "மை தடவப்பட்ட" விரல்! இதில் பெருத்த ஆச்சர்யம் இல்லை தான்; ஆனால், நான் இந்த புகைப்படத்தை எடுத்தது மே-30 ஆம் தேதி. வாக்களித்து 1-மாதத்திற்கும் மேலாகியும் இன்னமும் அந்த மை அகலவில்லை. ஒருமுறை, என்சித்தப்பா "ஊராட்சி தேர்தலில்" போட்டியிட்ட போது வாக்களித்து இருக்கிறேன். ஆனால், எந்த பொதுத்தேர்தலிலும் வாக்களித்ததில்லை. 10 ஆண்டுகளாய் வெளிநாட்டில் இருப்பதால் மட்டுமல்ல; அதற்கு முன், இந்தியாவில் இருந்தபோது கூட ஊருக்கு சென்று வாக்களித்ததில்லை. ஆனால், கடந்த முறை விடுப்பில் இந்தியா சென்ற போது தேர்தலும் நடந்ததால் - வாக்களித்தேன். ஆனால், இந்த மை இத்தனை நாட்களா இருக்கும்?! என்று எனக்கு தெரியவில்லை; எந்த முன் அனுபவமும் இல்லை. கடந்த வாரம், நண்பர் ஒருவரிடம் பேசியபோது இது சார்ந்த உரையாடலின் போது இதை தெரிவித்தேன்; அவர், எனக்கு அடுத்த நாளே அழிந்துவிட்டது என்றார். 

          அடுத்த நாளேவா? பின் ஏன் எனக்கு மட்டும் இன்னமும் போகவில்லை?! என்ற கேள்வி எழுந்தது. ஒருவேளை, ஓட்டுப்பதிவு என்பது நம்-கடமை என்று பலரும் சொல்வது எனக்கு சரியாய் விளங்கவில்லை; என்மனதில் அது, ஆழப்பதிய வேண்டும் என்பதாலா? என்று தோன்றியது. அப்படி இருக்குமா?! என்பது பற்றி கவலையில்லை; ஆனால், இது என்-கடமை என்று மட்டும் எனக்கு புரிந்தது. இந்தியாவில் இருந்தபோது கூட "யாருமே இங்கே சரியில்லை; அதனால் வாக்களிக்கவில்லை" என்று கடமை-தவறிய "வாய்ச்சொல்" வீரனாய் பேசுபவர்களில் நானும் ஒருவனாய் தான் இருந்தேன். இனிமேல், எந்த நிலையிலும் என்னுடைய வாக்கை-பதியும் கடமையில் இருந்து தவறக்கூடாது என்ற உறுதி பூண்டேன். இந்தியாவில் இல்லை எனினும், முறையாய்... "அஞ்சல் வழி" வாக்குபதியும் வசதியை பயன்படுத்த வேண்டும் என்ற உறுதி உண்டாயிற்று. இல்லையெனில், எந்த பொது-வாழ்வு சார்ந்த பிரச்சனைகள் குறித்து பதிவுகள் பதிய எனக்கு அருகதை இல்லை என்று தோன்றிற்று...

"மை" ஏன் அழியவில்லை என்று தெரியவில்லை! ஆனால், நான் செய்யவேண்டியது புரிந்தது...

பின்குறிப்பு: இதை பதியும் சில மணித்துளிகள் முன் என்னப்பனை அழைத்து இது பற்றி விவாதித்தேன்; ஏனெனில், எனக்கு 1 நிமிடம் முன்னர் தான் அவர் விரலிலும் அதே-மை தடவப்பட்டது. அவர், இன்னமும் சிறிது இருப்பதாய் கூறிவிட்டு; ஒரு விளக்கத்தை கொடுத்தார். பெரும்பாலும், "புள்ளி"யாய் வைப்பது தான் வழக்கம்; அனால், இவர்கள் "கோடு"போல் போட்டுவிட்டதால் தான் இன்னமும் அழியவில்லை என்ற உண்மையை விளக்கினார். எப்படியாயினும், வாக்களிக்கும் என் கடமை பற்றி உணர்வதற்கு அந்த மை உதவியாய் இருந்ததற்காய் மகிழ்கிறேன்.

உடற்பயிற்சியும் பண-செலவும்...



       சமீபத்தில் ஒரு தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது போல், 2 மாதங்களுக்கு முன்னர் தான் வாடகை-வீட்டை மாற்றினேன். முன்பிருந்த இடம் மிகப்பிரம்மாண்டமானது; அங்கே பெரிய நீச்சல்-குளம், உடற்பயிற்சி மையம் என்று சகல வசதிகளும் இருந்தன. வாடகையும் அவைகளுக்கும் சேர்த்தே வசூலிக்கப்பட்டது; ஆயினும், அங்கே என்மகள் வந்திருந்தபோது (சென்ற/செல்வ)தோடு சரி. அவள் இல்லாமல், ஒரு நாளும் சென்றதில்லை; செல்லவேண்டும், செல்லவேண்டும் என்று நினைப்பேன். நினைப்பதோடு சரி; முனைப்பேதும் செய்(வ/த)தில்லை. இப்படியாய், அந்த வீட்டையும் காலி செய்தாகி விட்டது; புதிய வீட்டிற்கு சென்ற பின், அங்கே கிடைத்த 2 நட்புகளுடன் சேர்ந்து ஒரு "கிளப்பில்" சேர்ந்து இருக்கிறேன். அபுதாபிக்கு நான் வந்த அடுத்த நாள் வாங்கிய "டென்னிஸ்-ராக்கெட்டை" ஒருவழியாய் அந்த கிளப்பில் சேர்ந்தவுடன் உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன் - 13 மாதங்கள் கழித்து! அப்படியே, ஒருவழியாய் அங்கிருக்கும் உடற்ப்பயிற்சி மையத்திற்கும் செல்ல ஆரபித்திருக்கிறேன். 

         மேலிருக்கும் புகைப்படங்கள் அங்கே எடுக்கப்பட்டவையே! இப்போது 15 கி.மீ. தொலைவு சென்று பயிற்சி மேற்கொள்ளும் செயலை; முன்பு வீட்டின் அருகிலேயே இருந்தும் ஏன் செய்யவில்லை?! என்ற கேள்வி எழுந்தது. ஒருவேளை, இப்போது பணம் கட்டி சேர்ந்திருப்பதால் இருக்குமோ?! என்ற கேள்வியும் எழுந்தது. அப்படி என்றால், அது தவறில்லையா?! உடல்நிலையை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தானே மேலோங்கி இருக்கவேண்டும்? ஏன், பணம் கட்டிவிட்டோம் என்பதால் மட்டும் செய்ய தோன்றியது? ஏன் உடல்நலன் மேல் ஒரு பற்றும்/அக்கறையும் இல்லாமல் போயிற்று? ஏன், நம் வளர்ப்பு முறை அதற்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறது? ஒருவேளை, எனக்கு மட்டும்தான் இப்படியா? என் சுற்றம் சார்ந்து மட்டும் தான் இப்படியா? உடல்நலன் பேணுதல் - ஒரு ஒழுக்கமாய் கற்பிக்கப்பட்டு இருக்கவேண்டாமா? என்று பல கேள்விகள் எழுந்ததன. இனிமேல், இதை ஒரு ஒழுக்கமாய் செய்யவேண்டும் என்று தோன்றியது...

எதனால் ஏற்பட்டது என்பதைக் காட்டிலும்; கடைபிடித்தல்தானே முக்கியமானது?!

பின்குறிப்பு: 7 ஆண்டுகளுக்கு பிறகு, நான் மீண்டும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்ததற்கு கீழுள்ள 2 காரணிகள்-தான் மிகமுக்கியம்.
  1. "அப்பா! என்னை மாதிரி 'ஸ்லிம்'மா ஆகுங்கப்பா; நீங்க 'குண்டா' இருக்கறீங்க" என்று அடிக்கடி என் மகள் சொல்வது.
  2. என் 2-ஆம் தாய் என்று நான் சொல்லும் என் நண்பனின் தாய், வெகு சமீபத்தில் இப்படி சொன்னது: "ஒடம்ப பாத்துக்க கண்ணு! முதல்ல ஒடம்ப கொற; நம்மள நம்பி ஒரு பொண்ணு இருக்குதுங்கறத மனசுல வச்சுக்க!!" என்று அவர்கள் சொன்னதும் தூக்கிவாரிப்போட்டது!    

மாதுளம்-பழ "ஜூஸ்"...



          என்மகளுக்கு மாதுளம்-பழம் மிகவும் பிடிக்கும் என்பதை சமீபத்தில் ஒரு மனதங்கத்தில் குறிப்பிட்டு இருந்தேன். என்மகள் போல் எனக்கு பழங்கள் மேல் அவ்வளவு பிரியம் இல்லை எனினும், ஏனோ மாதுளம்-பழம் மீது மட்டும் தனி அதிருப்தி உண்டு! அதில் இருக்கும் கொட்டையை சாப்பிட்டே ஆகவேண்டும்; அந்த கொட்டை கசப்பாய் இருக்கும் என்பதால் கூட இருக்கலாம். ஆனால், மாதுளம்-பிஞ்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்; அது மிகுந்த துவர்ப்பாய்/கசப்பாய் இருக்கும் எனினும், எனக்கு பிஞ்சு மிகவும் பிடிக்கும். ஆனால், என்மகளுக்கோ எல்லாப்பழமும் பிடிக்கும் எனினும்; மாதுளம்-பழம் மீது மட்டும் தனி பிரியம். இங்கே அபுதாபி உட்பட்ட பல அரபு-நாடுகளில் கிடைக்கும் பழ-ஜூஸ் (பழ-ரசம்) மிகவும் அருமையாய்; முழுக்க, முழுக்க பழத்தில் செய்தது போன்று அடர்த்தியாய் இருக்கும் என்பது அதை பார்த்தோருக்கு தெரியும். நானும், பலவிதமான் ஜூஸ்கள் வாங்குவேன்; எல்லாப்பழமும் கலந்த கலவை-ஜூஸ் கூட வாங்குவேன். 

     ஆனால், மாதுளம்-பழம் ஜூஸ் மட்டும் வாங்கியதில்லை. ஏனோ, ஒரு வாரத்திற்கு முன் அதை வாங்கவேண்டும் என்று தோன்றியது; என்மகளுக்கு பிடித்தது எனக்கு எப்படி பிடிக்காமல் இருக்கலாம்?! சரி, பரிசோதிப்போம் என்று வாங்கினேன். முதலில், பிடிக்கவில்லை எனினும்; பிறகு அதன் சுவை எனக்கு(ம்) பழக ஆரம்பித்தது. விளைவு?! 4 நாட்களில் அதை தீர்த்துவிட்டு இன்னுமொன்று வாங்கினேன்; அவை இரண்டையும் தான் ஒரு-சேர புகைப்படம் எடுத்து மேலே பதிந்துள்ளேன். நான் ஏன் இப்படி செய்கிறேன்?! என்ற கேள்வி எழுந்தது. இது என்மகள் மேலிருக்கும் "பாசமா (அ) பைத்தியக்காரத் தனமா?" என்ற கேள்வியும் வந்தது. இதிலென்ன இருக்கிறது? என்ற பதிலும்; கேள்வியாய் வந்தது. என்மகளுக்கு பிடிக்கும் என்பதால், அதை முயன்று எனக்கும் இப்போது பிடித்தாய் ஆகி இருக்கிறது. அடுத்த முறை என்மகள் வரும்போது இருவரும் சேர்ந்தே பருகுவோம், அவ்வளவு தான்; இதில் பெரிதாய் தவறேதும் இல்லை என்ற உண்மையும் விளங்கியது.

என்மகளுக்காய் இதை கூட நான் செய்யக்கூடாதா என்ன???