ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014

விழியப்பனோடு விவாதிப்போம் (23082014)




விழியப்பனோடு விவாதிப்போம் (23082014):

நேற்று "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கம்" என்ற குறள் பற்றி ஓர் சிந்தனை எழுந்தது! உடனொரு விவாதமும் வந்தது.

அறத்துப்பாலில் "மக்கட் பேறு" எனும் அந்த 7-ஆம் அதிக்காரத்தில் மேற்குறிப்பிட்ட குறள் (எண் 69) மற்றும் "தந்தை மகற்காற்றும் உதவி"{எண் 67; பெரும்பான்மையில் இது மகன் என்றே பார்க்கப்படுகிறது!}; "மகன் தந்தைக்காற்றும் உதவி" (எண் 70) என்று நம் வள்ளுவப் பெருந்தகை "ஆண்"பாலை குறிப்பிட்டு சொல்ல என்ன காரணம்? என்பதே அந்த சிந்தனை.

"குழலினிது யாழினிது என்பர்தம்..." உட்பட மீதமுள்ள 7 குறள்களிலும் உள்ளது போல்; "மக்கள்"என்று பொதுப்பாலில் ஏன் கூறவில்லை?! என்பதே அந்த வாதம்.

அந்த காலகட்டத்தில் ஆணாதிக்கம் உயர்ந்திருந்ததாய் வரலாறு கூறுகிறது. "ஜான் பிள்ளையானாலும்; ஆண் பிள்ளை" போன்ற கூறுகளும் பல்கிபெருகி இருந்த காலம் என்பதால் - "சில செயல்களில் மட்டும்" இப்படி "ஆண்"என்று குறிப்பிட்டு சொல்லப்பட்டதா?! என்றோர் ஐயம் வந்தது. ஆனால், நம் பெருந்தகை அப்படி எண்ணியிருக்க வாய்ப்பேயில்லை என்பதும் திண்ணமாய் புரிந்தது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வாங்களேன்... விவாதிப்போம்!!!

காதலியும்! மனைவியும்!!


ஓர் ஆணுக்கு பிடித்த "இளம்"பெண்களை மட்டும்; அந்த பொண்ணு(ங்க) சரியில்லை என்று, அவர்களைப் பற்றி குறை கூறிக்கொண்டே இருந்தால் - அந்த பெண் "காதலி".

ஓர் ஆணுக்கு பிடித்த "வயதான"பெண்மணிகளையும் "சேர்த்தே" - அந்த பெண்மணி(கள்) சரியில்லை என்று, அவர்களைப் பற்றி குறை கூறிக்கொண்டே இருந்தால் - அந்த பெண் "மனைவி".

- என்ன நாஞ்சொல்றது?! :)

(நல்லா/அழகா) இருக்கீங்க...



           நான் பெரும்பாலும் உடைக்கும்; ஒப்பனைக்கும் - அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், தேவையான போது (அல்லது) குறிப்பிட்ட நாட்களில் இவைகளை கருத்தில் கொள்வதுண்டு. ஓஹோன்னு இல்லைன்னாலும்; ஓரளவிற்கு "இந்த 2 சென்ஸ்"-உம் உண்டு.

  என் பிறந்த-நாள் அன்று (ஆகஸ்ட் 11) "தாடியை நன்றாக"மழித்துவிட்டு; நல்ல உடை அணிந்திருந்தேன். எப்போதும் வணக்கம் பரிமாறிக்கொள்ளும் ஒரு-செக்யூரிட்டி இன்று "Nice dress! You looking good!!" என்றார். புன்முறுவலுடன் அதை ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவித்துவிட்டு வந்தேன். 

      "உண்மையோ?! பொய்யோ??!!" - நம்மைப் பார்த்து எவரேனும் நீங்க "(நல்லா/அழகா) இருக்கீங்க" என்று சொல்லக்கேட்பது ஒரு சந்தோசத்தைக் கொடுக்கத்தான் செய்கிறது!!!

42-இல் நான்...



       I have completed 42 on August 11th. I am not sure as how many I am going to count more; and I do not want to count on that.

       But - Both the "Almighty"; and "All-mighty" wishes of you have definitely played a huge role in what I have counted so far.

       Thank you ALL.

*******

      ஆகஸ்ட் 11-ஆம் தேதியன்று நான் 42-ஐ கடந்து இருக்கிறேன். இன்னமும் "எண்ண" எத்தனை இருக்கிறதென்று தெரியவில்லை; அதைப் பற்றிய எண்ணமும் எனக்கில்லை.

      ஆனால், "எல்லாம் வல்ல" அந்த இறையும்; "எல்லாம் வெல்லும்" உங்கள் வாழ்த்துகளும் - இந்த எண்ணிக்கையில் "வெகு நிச்சயமாய்"பெரும் பங்கு வகித்திருக்கிறது.

        அனைவருக்கும் நன்றிகள்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்...



      "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்" என்ற குறளை ஆழ்ந்து பார்த்தால்; நம் வள்ளுவப் பெருந்தகை "உவகையின் உச்சமாய்" தாய் ஒரு-குழந்தையை ஈனும் தருணத்தை பார்த்திருப்பது புலப்படும். அதனால் தான், தன்-மகன் சான்றோன் என்று அழைக்கப்படும் போது கிடைக்கும் உவகையை; அந்த நிகழ்வோடு ஒப்பிட்டு இருக்கிறார்.

          - இன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான பெண்கள்; அத்தகைய உயரிய "உவகையை" ஒருமுறை (ஒரே குழந்தை!) அனுபவிப்பதோடு போதும் என்று நினைப்பதை என்னவென்று சொல்வது?! 

{ஈதலின் போது ஒரு தாய் அடையும் வழியையும்/வேதனையையும் உணராதவர் அல்ல வள்ளுவர்! ஆனால், அந்த சில கணங்கள் அடையும் "அழுகை"யை விட; அதன் பின் அந்த நிகழ்வு பற்பல ஆண்டுகள் தரும் "உவகை"யை உயர்வாய் பார்த்திருக்கிறார் என்பதே பேருண்மை!!!}  

சனி, ஆகஸ்ட் 23, 2014

என்னுடைய உணர்வில் - அப்பெருமகள்...

{பாவேந்தர் பாரதிதாசனின் இளைய-மகளும்; என்னவளின்-பாட்டியுமான 
திருமதி. வசந்தா அவர்கள் 13.08.2014 அன்று இயற்கை எய்தினார்.
இன்றும் (23.08.2014), நாளையும் அவரின் இறுதிக் காரியங்கள் நிகழவுள்ளன. 
என்னுடைய உணர்வில் அவர்...
குறிப்பு: இடது புகைப்படம் என் கரங்களால் எடுக்கப்பட்டது;
வலது புகைப்படம் என்-திருமணத்தின் போது எடுக்கப்பட்டது}    

*******

பெருமகளாம்! தமிழ்தனையும் சுவாசம் கொண்ட;
       திருமகளாம்! அகவையின்ஓர் அரசன் என்னும்
பெருமகன்;நம் "பாரதி"தாசனின் மகளும் ஆம்!நாம்
       கருத்தினில்கொள் மறந்தசீர்பெண்; "வசந்தா" என்னும்
திருமகளை இயற்கையும்;தன் வசத்தே ஈர்த்து
       சுருக்கிசேர்த்து கணக்கையும்-நேர் முடித்தும்; இன்னும்
இருக்குமே!பார் மறைந்துதான்போய் விடினும் அத்தாய்
       கருத்துணர்ந்து தமிழ்வளர்த்த செயலும் என்றும்!       

குறள்கொடுத்த பெருந்தகையும், இயம்பும் - அப்பேர்
       சிறப்புகொள்-"ஈன் றபொழுதி"னை அறியேன்! ஆயின்,
அறம்நிறைந்த உனதரும்இன் முகத்தைப் பார்த்தென் 
      பிறப்பினையும் முழுமைசெய்த "பொழுதை" நன்றாய்!
இறப்பெனக்கும், துணை-உனக்காய் நிகழும் வண்ணம்
      பிறந்திடும்;வன் எமனவனின் விதியும் என்றேல்?!...
திறந்துவைத்த மனதுடன்,நல் சிரிப்பும் கூத்தும்;
      சிறப்புசேர்த்தே கரம்இரண்டும் வணங்கி ஏற்பேன்!

தமிழ்பயின்ற சிறியனிவன் கொடுத்த வாக்கும்
     குமிழ்அதுவாய் எனதுதொண்டை இடையில்! ஆம்;உன்
"தமிழச்சியின் கத்தி"உரையை கரங்கள் கொண்டு
     அமிழ்தமாய்-சீர் செதுக்கியேஎன் இடம்ஓர் நன்னாள்
     சிமிழ்விளக்காய் அனுதினமும் எரியும் என்னுள்,
தமிழ்ததும்பும் செயலதுவும் விரைந்தே செய்வேன்;
     தமிழ்எனக்கும் அளித்தஓர்நன் பரிசும் என்பேன்!

இறுதியாம்உன் நிகழ்ச்சியில்நான் இணையும் வாய்ப்பும்;
      உறுதியாய்பல் முயற்சிகளால் இணைத்தே பார்த்தும்,
சிறியனும்நான் கொடுத்துவைக்க இலையே; தாயே!
      மறுப்பெதுவும் இருப்பதுவும் முறையோ?! உந்தன்
பிறப்பதுவும்!; இறப்பதையும் இறக்கக் செய்தே;
      பறப்பதுவும், நடப்பதுவும் - நிலைக்கச் செய்தல்?!
பிறகெதற்காய் இறுதியென்றாய் நினைக்க வேண்டும்?
      பறந்துவிடும் அனைத்துலகில் புகழ்பேர் அன்றோ??

இயற்கையின்மேல் உனக்கிருக்கும் இமயம் ஒத்த
      செயற்கையற்ற சுயஒழுக்கம்; அதன்பால் சேரும்
இயற்கையையும் படைத்தவன்-என் இறையின் அருளும்
      செயற்கறியா வகையிலுமாய் கலந்தே உந்தன்
வியத்தகுப்பேர் புகழ்பரப்பும் செயலும்; யார்க்கும்
      பயத்தகும்ஓர் நெறிவழியால் நடக்கும் ஓர்நாள்
சுயம்எதுவும் கலந்திடாமல் திடமாய் நானும்;
      ஈயத்தையும்போல் - சிறியதாய்ஓர் துளையும் காப்பேன்!!!    


                           -          "விழியப்பன்" எனும் இளங்கோவன் இளமுருகு
                                                       மற்றும் குடும்பத்தினர்
                             {வேனில் பாண்டியன்; விழியமுதினி வேனில் இளங்கோவன்}

ஞாயிறு, ஆகஸ்ட் 10, 2014

இறைவன் இருக்கிறாரா? இல்லையா?? (பாகம் - 2)...




        கடந்த சில மாதங்களாகவே "இறைவன் இருக்கிறாரா? இல்லையா??" என்ற தலையங்கத்தின் இரண்டாம் பாகம் எழுத யோசித்தும்; என்ன காரணத்தினாலோ தள்ளிக்கொண்டே சென்றது. சில தினங்களுக்கு முன், முகநூலில் ஒருவர் "இப்படியொரு விபத்து, அப்படியொரு கற்பழிப்பு, சின்னஞ்சிறு குழந்தைகள் என்ன செய்தது, இன்னும் பிற..." காரணங்களைக் கூறிவிட்டு; பிறகு என்ன "...."க்கு நீ கடவுள்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். உண்மையில், அவர் கேட்டிருந்த கேள்விகள் என்னையும் பாதித்திருக்கிறது எனினும், என்னுடைய பார்வை வேறு மாதிரியாய் இருக்கிறது. என்ன "...."க்கு என்ற கேள்வி என்னை வியப்படையச் செய்ததுடன்; வெறுப்படையவும் செய்தது. உடனே, மேற்குறிப்பிட்ட தலையங்கத்தின் இரண்டாம் பாகம் எழுதவேண்டிய தருணம் வந்துவிட்டதாய் தோன்றியது; அதுதான் இத்தலையங்கம். என்னுடைய காமெண்ட்டாய் கொடுத்த பதில்களை இங்கே சுருங்க சொல்லி இருக்கிறேன். இங்கே இருப்பது என்போன்றோர் நம்பிக்கை என்பதை நினைவில் கொள்க. 

        நன் முதலில் கேட்டது இதுதான்: இவையெல்லாம் நடக்கும்போதே "இறைவன்" அல்லது "உயர் சக்தி" என்ற ஒன்றின் மேல் நம்பிக்கை வரவில்லையே?!...அது ஏன்? தவறுகள் நடக்கக்கூடாது என்பதால் தான் மனிதனுக்கு "ஆறாம் அறிவு"கொடுக்கப்பட்டு இருக்கிறது. அப்படி இருந்தும்... என்ன "-----"க்கு சட்டமும்/நீதிமன்றங்களும்?... எதற்கு சிறைச்சாலையும்/காவல் துறையும்?? இதுபோல் இன்னும் பலவும்! மிக முக்கியமாய் "முதியோர் இல்லங்கள்"பெருகியதற்கு எவர்/என்ன காரணம்? என்றேன். அவர் கேள்விகளுக்கான நேரடியான பதில்களாய் நான் அங்கே கொடுத்தவை கீழே: 
  1. பாலியல் தொல்லைகள்: "காமம்" என்பது என்னவென்று ஒரு பாடமாய் கற்பிக்கப்படும் வரை இம்மாதிரியான கயவர்கள் "அந்த இழிசெயலை" செய்யத்தான் நினைப்பார். இது தனி-மனித ஒழுக்கமின்மை. 
  2. விபத்து: இத்தனை ஆர்.டி.ஓ அலுவலகங்கள் இருந்தும்; முறையான-ஓட்டுனர் உரிமமின்றி; ஒரு-சிறிய சாலை விதி கூட தெரியாமல்/ஒரு-சிறிய விதியை கூட மதிக்காமல்; மது அருந்திவிட்டு ஓட்டுவது யார்? தூக்கம் வந்தால், தூங்கி-எழுந்து ஓட்டவேண்டும் என்ற உணர்வில்லாதது எவர் தவறு?
  3. உணவில்லாது போனது: எல்லா விளை-நிலங்களையும் அழித்து; "பிளாட்"போட ஆரம்பித்தது யார்? முன்பெல்லாம் "கூழ்/கஞ்சி" என்று இருந்தாலும், அனைவருக்கும் எளிதாய் கிடைத்த உணவு இன்று கிடைக்காமல் போனதற்கு யார் காரணம்? எவரின் பேராசை காரணம்? ஓசோன்-ஓட்டை விழுந்து நீர்-குறைந்து விவசாயம் அழிந்ததற்கு யார் காரணம்?
  4. பாதுகாப்பின்மை: தீயவர்களை எதிர்க்க துணியாத; எதற்கெடுத்தாலும் "நமக்கென்ன" என்று நம்-போன்றே எல்லோரும் இருப்பதற்கு என்ன/எவர் காரணம்?
  5. மரணம் அறியாத சிறார்களின் மரணம்: மரணத்தை என்னவென்று நன்கறிந்த "பெற்றோர்களை"தனியே தவிக்கவிட்டு; இறக்கவைபப்து - எவர் செய்வது???
            நீதிமன்றங்கள்/நீதிபதிகள் இருந்தும்; பல குற்றவாளிகள் சுதந்திரமாய் திரிவதைப் பார்த்து என்ன "----"க்கு நீதிமன்றங்கள் என்று நாம் கொதித்தேழுவதே இல்லை! இன்னமும் நம்புகிறோம்... இறைவன் இருக்கிறார் என்பது(ம்) அம்மாதிரியான "வெறும்-நம்பிக்கையாய்" இருக்கவேண்டும். எல்லாமும் "கடவும் பார்த்துப்பார்" என்பதும்; எல்லாவற்றையும் கடவும் ஏன் பார்த்துக்கொள்ளவில்லை? என்று கேட்பதும் - தவறான எண்ணம். நாம் கடவுள்/ஒரு-உறவின் மேல் நம்பிக்கை வைக்கிறோம் என்றால்; அது வெறும்-நம்பிக்கையாய், எந்த பிரதிபலனும் இல்லாத நம்பிக்கையாய் இருக்கவேண்டும். அதுதான் நம்பிக்கை; பிரதிபலன் கிடைத்தால் ஏற்றுக்கொள்ளவும்; இல்லையெனில் பொறுத்துக்கொள்ளவும் வேண்டும். வயாதான பின்னும் "நம் பெற்றோர்களால்"இன்னமும் ஆதாயம் இருந்தால், அவர்களை நன்றாய் கவனித்துக் கொள்வது; இல்லையெனில் அவர்களை அனாதையாய் விட்டுவிடுவது - போன்றே "இறைவனையும்"நாம் பார்ப்பது - ஆறாம்-அறிவுள்ளோருக்கு அழகன்று.

         நான் அங்கே இதையும் சொன்னேன்: மனிதனும்/மனிதமும் முழுமைப் பெற்றுவிட்டால் - இறைவன் என்ற நம்பிக்கை(கூட) அறுந்துபோகும். அதை நோக்கி நம்மை இட்டுசெல்வதற்காய் கூட இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கலாம். என்ன...?! அதை நாம் ஒவ்வொருவரும்; ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு செயல் மூலமும் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும். இது மாத்திரம் சாத்தியம் ஆயின், இறைவன் என்ற சொல்லே மறைந்துவிடும். பின் எங்கே அப்படியொருவர் இருக்கிறாரா? இல்லையா?? என்ற வாதம் வருவது என்றேன். அவர் \\\குற்றங்களை தடுக்க நீதி மன்றங்கள் நிறைய இருக்குதான், ஆனா உண்மைல தடுக்குதா.. ஒரு நாள் கோர்ட்டுக்கு போய் பார்த்தா தெரிஞ்சுடும்... நிதி இருந்தா நீதி கிடைக்கும் நிலைதான் இருக்கு இங்க. உண்மைல கடவுள் சக்தின்னு ஒன்னு இருந்தா தப்பு பண்ண அனைவரையும் தண்டிக்க வேண்டாம், நூறு பேர் நூறே பேர் ஊரறிய தண்டிக்கப்பட்டாவே போதும்.. நீதிமன்றங்களின் தேவையே இருக்காதே...//// என்றோர் கேள்வியை கேட்டார். 

      என் பதில்: இது என்னங்க நியாயம்? "கரெண்டு"வரைக்கும் கண்டுபிடிச்சாச்சே?!... பின்ன ஏன் "ஸ்விட்ச்" போட்டா தான் அனைத்தும் வேலை செய்யவேண்டும்? அது பாட்டுக்கும் வேலை செய்துவிட்டு; அதுபாட்டுக்கும் "ஆஃப்" ஆகவேண்டியது தானே?!-ங்கறது போல இருக்கு! உங்கள் கூற்று என்றேன். இதுபோல், வேறு சில வாதங்களும் எங்களுக்குள் நிகழ்ந்தது. அதை மேற்கொடுத்துள்ள இணைப்பில் காணலாம். நான் இறுதியாய் "சவுதி, அரபு மற்றும் அது போன்ற" நாடுகள் நம்மை விட "அதீத-இறைபக்தி" கொண்டுள்ளன. அந்த நாடுகளில் அந்த பதிவர் கேட்டிருந்தது போல அனைத்து குற்றங்களும் மிக-மிக குறைந்த அளவிற்கு (இல்லை என்றும் சொல்லும் அளவில் கூட!) இருக்கிறதே; அதற்கு என்ன காரணம்?! என்றேன். அதற்கு நீங்கள் சொல்லும் பதிலே; உங்கள் கேள்விகளுக்கான விடைகள் என்றேன். ஏனோ, மீண்டும் ஓர்முறை நினைவு படுத்தியும் அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை. சரி... அதை இந்த பதிவில் விளக்கிவிடலாம் என்று நானும் விட்டுவிட்டேன்.

        நம் நாட்டில் இம்மாதிரியான செயல்களுக்கு; இறைவன் தன் கடமையை செய்யாதது தான் காரணம் எனின் - இந்த நாடுகளில் குற்றங்கள் மிகப்பெருமளவில் குறைந்திருப்பது "அவர்களின் அதீத-பக்தி"தான் காரணம் என்று கூறுவதே நியாயம். அதாவது, அந்த அதீதத்தால் இறைவன் அனைத்தும் செய்கிறார்! கண்டிப்பாய்... அவர்கள் அப்படி சொல்லப்போவதில்லை; அப்படி சொல்லிவிட்டால் "கடவுள் இருக்கிறார்" என்று ஒப்புக்கொண்டதாகிவிடும்; நாம் அனைவரும் பக்தியுடன் இல்லை என்பதே காரணம் என்றாகி விடும். இன்னொரு காரணம் (நியாயமான காரணம் கூட!) - இந்த நாடுகளில் இருக்கும் "தனி-மனித"ஒழுக்கம். கடவுள் இருக்கிறார் என்ற ஒழுக்கத்தைப் போலவே; இது தவறு - இதை செய்யக்கூடாது என்றால் செய்யமாட்டார்கள். அப்படி செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றால் - தண்டிக்கப்பட்டே ஆவார்கள். அதை செய்யவேண்டிய அலுவலர்களும் தனி-மனித ஒழுங்குடனே இருப்பர். தண்டனை கடுமையானது மட்டுமல்ல; விரைவிலும் நிறைவேற்றப்படும். 

           நம் நாட்டில் கடவுள் நம்பிக்கையும் "உண்மையாய்" இல்லை. மனிதனும்/மனிதமும், உண்மையாய் இல்லை. சாமி-கண்ணைக் குத்திவிடும் என்றால்; ஓ! நமக்கு மேல் ஒரு உயர்-சக்தி உள்ளது - அது தண்டிக்கும் என்று நம்பவேண்டும்; அப்படி நம்பினால் உண்மை அதிகமாகும் என்பதுதான் அடிப்படை. நம் கடனை சரியாய் செய்யாது; நம் தவறை பிறரின்-தவறாய் எளிதாய் சுட்டிக்காட்டிவிட்டு தப்பிவிடும் "நம் எதார்த்த இயல்பை" போலவே - "இதெல்லாம்; கடவுள் செய்ய தவறியதால்"விளைந்தது; அதனால், கடவுள் இல்லை; பின் என்ன "----"நீ கடவுள் என்று கேட்கிறோம். நம் தவறை - நாம் உணராமலேயே தொடர்ந்து பயனப்பட்டதன் விளைவு. மூன்றவதாய் - மேற்குறிப்பிட்ட நாடுகளில் மன்னராட்சி உள்ளது; அதனால் தான் - அவை எல்லாம் சாத்தியம் என்றும் ஒரு வாதம் வரும். ஆனால், அப்படி மன்னராட்சி வேண்டாம் என்று போரிட்டு மனித-உரிமையை கோரியதும் நாம் தானே?! ஒரு-குடும்ப அரசியலையே நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை; பின் எங்கே மன்னராட்சியை அனுமதிப்போம்?!...

        இவையனைத்தையும் பார்த்துணர்ந்து தான் இறைவனை நம்புவோர் "அரசன் அன்றே கொல்வான்! தெய்வம் நின்று கொல்வான்!!" என்றனர். அரசன் என்னவென்பதை நாம் உணர்ந்து/அனுபவித்து விட்டோம்; அது வேண்டாம் என்று ஒழித்தும் விட்டோம். சரி... அப்படியே உடனடியாய் தண்டிக்காமல் இருக்கட்டும் என்றால், நின்று-கொல்லும் தெய்வமும் வேண்டாம் என்கிறோம். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருந்து "தண்டிக்க வேண்டிய; நீதி/காவல் துறைகளையும்" அவர்களின் கடனை செய்யமுடியாமல்; "கையூட்டால்" கை-கட்டி போட்டு விடுகிறோம். பின், என்ன தான்யா வேண்டும்?!... அரசனோ/அரசோ/இறைவனோ - எது வேண்டும்; எது நம் நம்பிக்கை - என்பதெல்லாம் இருக்கட்டும். முதலில், நாம் ஏதாவது ஒன்றுக்கு கட்டுப்படும் மனத்தை பழக வேண்டும்! அது மனிதனையும்/மனிதத்தையும் மேம்படுத்தும். பின்னர் தான், நாம் எதன் மீதும் (அல்லது) ஏதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை கொண்டு; நம் செயல்களை நாமே நெறிப்படுத்துதல் சாத்தியமாகும். அதுவரை...


என்போன்றோர் நம்பிக்கையில்; இறைவன் இருக்கிறார்!!!

பின்குறிப்பு: அறிவும்/அறிவியலும் - இதுவரை உள்ளவற்றை(மட்டும்) கண்டுபிடித்து; அதை அறியும் முயற்சியில் மட்டுமே இருக்கிறது. ஆனால், இவை எல்லாமே இந்த வையகத்தில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய் இருந்து வருபவை. இன்றைய காலகத்தில், மிக வேகமாய் வளர்ந்து வரும் அறிவியல்-தொழில்நுட்பம் பலதையும் வேகமாய் கண்டுபிடிக்கிறது எனினும் - அது, இன்னமும் எதையும் உருவாக்கவில்லை! இந்த பிரபஞ்சத்திற்கு இணையான; இன்னுமோர் பிரபஞ்சத்தை - மனிதன் உருவாக்கும் வரை; நமக்கும் மேலான உயர்-சக்தி இருக்கிறது என்பதை நாம் மறுக்கமுடியாது. உங்கள் அகராதியில் எப்படியோ?!... என்னுடைய அகராதியில் அதற்கு பெயர் "இறைவன்". இந்த தலைப்பில் மேலும் சில பாகங்கள் தொடரும்...   

பேரீச்சம்-பழமும்; சில புரிதல்களும்...




            நான் தற்போது குடியிருக்கும் வீட்டில் 5-க்கும் மேற்பட்ட பேரீச்சம்-பழ மரங்கள் இருக்கின்றன. அவைகளை சாப்பிடலாமா? நமக்கு சாப்பிட அனுமதி உண்டா?? என்ற குழப்பங்கள்! எவரும் பறிக்காமல் பழங்கள் கீழே விழுந்து வீணாவதை காண முடிந்தது. அதனால், சென்ற-வாரத்தில் ஓர் நாள் - ஒரு பழத்தை பறித்து சாப்பிட்டால்.... அட! அட!! அட!!! என்ன ஒரு சுவை?! இதை எழுதும்போதே... நாவில் எச்சில் ஊறுகிறது. அரபு மற்றும் வளைகுடா நாடுகளில் பேரீச்சம்-பழம் பிரசித்து பெற்றது என்பது அனைவர்க்கும் தெரியும். ஆனால், மரத்திலிருந்து அப்படியே பறித்து சாப்பிடுதலில் உள்ள சுவையை; அதை உணர்ந்தோருக்கு மட்டுமே புரிய வாய்ப்பிருக்கிறது. முதன்முதலில் சாப்பிட்ட கணம் முதல்... அதற்கு இணையான இன்னுமொரு பழத்தை எனக்கு நினைவூட்டியது. என்னவென்பதை... கொஞ்சம் சஸ்பென்ஸ்!!?? இருக்கட்டும் என்று பின்குறிப்பில் கொடுத்துள்ளேன். பின்னர், ஒரு கைப்பை நிறைய பறித்து கொஞ்சம், கொஞ்சமாய் வைத்து சாப்பிட ஆரம்பித்தேன்.

            என்மகள் எல்லா பழங்களையும் விரும்பி சாப்பிடுவாள் என்று முன்பே குறிப்பிட்டுள்ளேன். ஆனால்,    பல தரம்-வாய்ந்த பேரீச்சம் பழங்களை பலமுறை வாங்கி சென்றும்; அவள் அதை மட்டும் சாப்பிடுவதில்லை. அதன் காரணம், சென்ற வாரம் புரிந்தது. மரத்தில் இருந்து பழத்தை பறித்து, பின் 3/4 நாட்கள் ஆனவுடன் சுவை மாறிவிடுகிறது. அதாவது, பழத்தில் இருக்கும் நீர் வெளியேறியவுடன் - அது இறுக்கமாகி விடுகிறது (கடைகளில் கிடைப்பது போல்!). மேலும், நீரின் அளவு குறைந்து விடுவதால்; திகட்டும்-அளவிற்கு இனிப்பின் அளவு கூடிவிடுகிறது. இதுதான், என்மகள் சாப்பிடாததற்கு காரணம் என்று தெரிந்தது. பின்னர், ஓர்நாள் அந்த பழங்களை கழுவி - சாப்பிடாமல் வைத்துவிட்டேன். என்ன விந்தை? அடுத்த நாள், கழுவியதன் மூலம் கிடைக்கப்பெற்ற நீரை உள்வாங்கி பழங்கள் சுய-சுவையை அடைந்துவிட்டது. இதுபோல், முன்பொரு முறை மணிலா-அவித்ததை எழுதியது நினைவிருக்கலாம். என்னவளிடம் "அம்மாதிரி செய்து" செய்ய சொல்லியிருக்கிறேன். பார்ப்போம்...

நீரும்-இனிப்பும் அளவாய் இருக்கும் பழங்களை என்மகள் விரும்புகிறாளா?! என்று!!!

பின்குறிப்பு: அந்த பழம்... "சப்போட்டா"பழம்! ஆம்... நன்கு கனிந்த சப்போட்டா-பழத்தை, தோலை-நீக்கி வாயில் போட்டவுடன் ஒரு-சுவை வருமே?! அதே சுவைதான், மரத்திலிருந்து பறிக்கப்பட்ட பேரீச்சம்-பழத்தில் இருக்கின்றது. மேலும், சப்போட்டா போலவே; பேரீச்சம்-கொட்டை தானாய் பழத்தில் இருந்து பிரிந்து தனியாய் வரும் பாருங்கள்! ம்ம்ம்... அதை சுவைத்தால் தான் அந்த அனுபவம் கிடைக்கும்!! முயன்று பாருங்களேன்... 

ஷ்ருதியைப் பார்க்கும் என் மனநிலை...


     பல-நடிகைகளின் "சாதாரண போஸ் கொண்ட" புகைப்படங்களை(கூடப்) பார்க்கும்போது வரும் "அந்த மாதிரியான எண்ணங்கள்"; ஸ்ருதி(ஹாசன்)-யின் அதீத-போஸ் கொண்ட புகைப்படங்களைப் பார்க்கும்போது வருவதில்லை! உண்மையில், அந்த பெண்ணின் அம்மாதிரியான புகைப்படங்களைப் பார்க்கவே முடிவதில்லை; பார்க்கவேண்டும் என்ற எண்ணம் கூட எழுவதில்லை!! கமலின் மேல் எனக்கிருக்கும் அபிமானம், ஸ்ருதியை என்மகள் போல் பார்க்கும் மனநிலையை கொடுத்திருக்கிறது. என்னதான், நடிப்பு/திரைப்படம் என்றாலும் - இதை "என்னால்" நியாயப்படுத்த முடியவில்லை.

இதை யோசிக்க ஆரம்பித்தவுடன் - பின் ஏன் மற்ற நடிகைகளை; அம்மாதிரியான எண்ணங்களுடன் பார்க்கவேண்டும்?! என்று என்னுள் ஓர் கேள்வி!! 

பதில்?!... 

வேறென்ன? மற்ற நடிகைகளையும் அம்மாதிரியான எண்ணத்துடன் பார்ப்பது(ம்) தவறு(தான்) என்பதை ஒப்புக்கொள்வதை தவிர?!

புருவ-முடி...



சென்றவாரத்தில் ஒரு காலை-நேரத்தில் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டிருந்த போது; என்னுடைய புருவத்தில் "ஒரேயொரு"முடி மட்டும் சற்றே-நீண்டு இருப்பதை பார்த்தேன்! உடனே அதை நறுக்கியபோது பின் வருபவை தோன்றின:
  1. புருவ-முடி மட்டும் ஏன் எப்போது "தானாகவே"ஒரேயளவோடு வளர்ந்து நின்றுவிடுகிறது? இமாதிரி எல்லா முடிகளும் இருந்தால் எப்படி இருக்கும்?? ஒருவேளை... அசிங்கமாய் ஆகிவிடுமோ?!
  2. பெண்கள் மட்டும் ஏன் அடிக்கடி "புருவ திருத்தம்", "புருவ நிறமேற்றம்" போன்ற பலதும் செய்கின்றனர்? அவர்களுக்கு  புருவ-முடி அதிகமாய் வளர்கிறதா?! அல்லது இருப்பதை அவர்கள் அழகுபடுத்திக் கொள்கின்றனரா?!

"சீன வீட்டு-மனை" மற்றும் "சீன ஃபிளாட்"



சென்ற-வாரம் தினமலரில் "சீனப்பாட்டாசு விவகாரம்" குறித்து ஒரு செய்தியைப் படித்தேன். அதைப் படித்ததும்; எனக்குள் பின்வரும் இரண்டு விசயங்கள் தோன்றின:
  1. தமிழில் "பார்லிமெண்டில்" உரையாடியது குறித்தான மகிழ்ச்சியும் அதற்கான பாராட்டும்!
  2. "அடப்பாவி(சீனப்பசங்)களா"! பட்டாசு வரைக்கும் வந்துட்டீங்களா?!

சரி... சரி... அப்படியே "சீன வீட்டு-மனை" மற்றும் "சீன ப்ளாட்" கொண்டு வந்தீங்கன்னா "செத்த; புண்ணியமா போகும்யா"! கண்டிப்பா, நீங்க உள்ள-வந்தீங்கன்னா "இந்த விலையேற்றம்" தானா குறைஞ்சிடும்!! 

ஞாயிறு, ஆகஸ்ட் 03, 2014

வாடகைத் தாய்...



        "எத்தனை குழந்தைகள் வேண்டும்???" என்ற என் முந்தைய தலையங்கத்தை  பலரும் படித்திருக்கக்கூடும். அங்கே கூறியது போல், அது 05.05.2013 அன்று ஒளிபரப்பான "நீயா நானா" நிகழ்ச்சியை அடிப்படையாய் கொண்டது. ஒரு-குழந்தை போதும் என்று சொன்னவர்கள் அனைவரும் பெண்கள் (மனைவிகள்); மறுபக்கம் இரண்டு-குழந்தையாவது வேண்டும் என்றவர்கள் ஆண்கள் (கணவன்கள்). பொருளாதார-நெருக்கடியை தான் பலரும் காரணம் காட்டினர் என்பதை அங்கேயே குறிப்பிட்டு இருந்தேன். உடல்-நிலை சார்ந்த சில நியாயமான காரணங்கள் கூறப்பட்டாலும், பெரும்பான்மையில் கூறப்பட்டது "பொருளாதாரம்" என்ற காரணமே! எனக்கு அது மிகவும் அபத்தமாய் தெரிந்தது. அந்த நிகழ்வு சார்ந்த என்னுடைய பார்வையைத்தான் மேற்குறிப்பிட்ட தலையங்கத்தில் எழுதி இருந்தேன். அதனை தழுவிய பார்வைதான் இந்த தலையங்கமும்! ஆனால், இது எத்தனை குழந்தைகள் வேண்டும் என்ற கேள்வி அல்ல. 

       அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆண்கள் எல்லோருக்கும் இன்னுமொரு குழந்தையாவது வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது. அதைப்பற்றி எவரும் பெரிதாய் பேசவில்லை; அவர்களின் ஏக்கமும்/வேண்டலும் அங்கே சரியான விதத்தில் விவாதிக்கப்படவில்லை. அவர்கள் - அதே எண்ணத்துடன் ஏங்கிக்கொண்டு இருக்கும் பல்லாயிரக் கணக்கான நபர்களின் பிரதிநிதிகள். ஒரு பெண்ணின் பிரசவ-வேதனை தெரியாத/அதைப் புரிந்து கொள்ளாத கணவனை விரல் விட்டு எண்ணிவிடலாம்! அதைப்புரிந்தும், ஏன் இந்த ஆண்கள் இப்படி "பிடிவாதமாய்" இருக்க வேண்டும்?! ஏனெனில், குழந்தை பிறக்க ஒரு பெண்ணின் பங்கும் முக்கியமாய் தேவைப்படுகிது; அவளின் கருப்பை தேவைப்படுகிறது. நான் அடிக்கடி குறிப்பிடுவது போல் இறைவன்/இயற்கை தானே பெண்களுக்கு அளித்திட்ட வரம் அது; பெண்களாய் வேண்டி பெறவும் இல்லை! ஆண்கள், வெறுத்து மறுக்கவும் இல்லை!! இது இயல்பாய் நிகழ்ந்தது. கருப்பை இல்லாததால் தான், ஒரு ஆணால் கருவை சுமக்க இயலாது என்பதே நிதர்சனம்.

         கர்ப்பப்பை இல்லாததால், ஆண்களுக்கு குழந்தைகளின் எண்ணிக்கையை வரையறுக்கும் உரிமை இல்லை என்பதும் முறையல்ல! அந்தப்பை இருப்பதால், பெண்கள் தான் அதை நிர்ணயிக்கவேண்டும் என்பதும் முறையல்ல!! இது இருவரும் உடன்பட்டு செய்யவேண்டிய ஒன்று; இங்கே இருவருக்கும் சரி-சமமான உரிமை உண்டு. திடீரென பெருகிவிட்ட பொருளாதாரத்தால் - சென்ற தலைமுறைகள் "குழந்தை வளர்ப்பில்" சிறிது தள்ளாடினார் என்பதை மறுப்பதற்கில்லை! ஆனால், இன்று பொருளாதாரத்திற்கு இணையான வருமானம் இருக்கிறது; மேலும், பெரும்பான்மையில் இருவரும் வேலைக்கு செல்கின்றனர். அதிக வருமானமும் கிடைக்கிறது; மேலும், சென்ற தலைமுறைகள் சொத்து என்ற ஒன்றை (பணம்/நிலம்/பொன்/வீடு இப்படி பல வகையில்) தன் மகளுக்கும்/மகனுக்கும் கொடுக்கின்றனர். இப்படி எந்த விதத்தில் பார்ப்பினும், சென்ற தலைமுறையை விட இந்த தலைமுறையினருக்கு; பொருளாதாரத்திற்கும் அதிகமான வருமானமும்/பொருளும் இருக்கின்றன.

         அப்படி இருக்கையில், சென்ற தலைமுறையினர் பெரும்பான்மையில் குறைந்தது 3 குழந்தைகள் என்று இருந்த நிலையில்; இன்றைய தலைமுறையினர் அதிகபட்சம் 3 குழந்தைகள் என்றாவது இருக்கவேண்டாமா? நான் முந்தைய தலையங்கத்திலேயே குறிப்பிட்டது போல் உடல்-நிலை கோளாறு போன்ற காரணிகள் கொண்டோரை நான் இங்கே கணக்கில் கொள்ளவில்லை. இன்னுமொரு குழந்தையை வளர்க்கும் திராணி இல்லாத கணவன் அல்லது குடும்பம் வேண்டுமானால்; ஒன்றோடு நிறுத்திக்கொள்ளட்டும். அந்த திராணி இருப்போர் செய்யலாமே? அப்படி இருப்போரையும்; பலதையும் சொல்லி அந்த பெண்ணின் மனதை சிதைக்கும் சமுதாயத்தை என்ன செய்வது? சரி, எல்லாம் இருக்கட்டும்; இன்னுமொரு குழந்தை வேண்டும் என்றே ஏங்கும் அந்த கணவன் என்ன செய்யவேண்டும்?? ஒரு பெண்ணின் கர்ப்பப்பைக்கு சரியான திறன் இல்லாதபோது "டெஸ்ட்-டியூப்" என்ற மருத்துவ முறையில் கருத்தரிக்கும் செயலுக்கு அந்த பெண்ணும் தானே ஆதரவு தருகிறாள்?

        அதுபோல, இன்னுமொரு குழந்தை வேண்டும் என்று ஏங்கும் ஒரு கணவன்; ஏன் "வாடகை தாய்" மூலம் பெறக்கூடாது?! இதை ஆதரிக்கும் சட்டங்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. சட்டங்களை தாண்டி; எனக்கு இங்கே இருக்கும் நிபந்தனை ஒன்றேயொன்று தான். முதல் குழந்தை நன்கு வளர்ந்தவுடன்; அந்த குழந்தையின் முழு சம்பந்தத்துடன் இது நடக்கவேண்டும். அப்போது தான், முதல் குழந்தையின் சகோதரன்/சகோதரி-ஆய் "வாடகைத் தாய்" மூலம் பிறக்கும் குழந்தை வளரும். இதற்கு ஒரு "குழந்தையை தத்தெடுக்கலாமே?!" என்ற தத்துவ-வாதம் எழும்; என்னுள்ளும் எழுந்தது! எனக்கு பிறக்கும் குழந்தை என்-வித்தாய் இருக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கே இருக்கும்போது; மற்றவரிடம் எவருடையதாய் இருந்தால் என்ன?! என்று எப்படி வாதிட முடியும்? ஒரு குழந்தையை தத்தெடுத்து நாளை; ஒவ்வொரு பிரச்சனைக்கும் இந்த சமுதாயம்... அவன் உங்க அப்பன்தானான்னு?! கேளுன்னு சொல்லுமே! ஏனோ, "யார் தாய்; என்பதை" இந்த சமூகம் பெரிதாய் ஆராய்வதில்லை!!

    ஒருவரின் வித்து "டெஸ்ட்-டியுப்" மூலமாய் கருவாக்கப்பட்டு பின்னர் அவரின் மனைவியின் கருப்பையை அடையும் போது; அது சட்டத்தாலும்/மனோ-தர்மத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதேதான் "வாடகைத் தாய்" எனும் செயலிலும் அல்லவா? இரண்டிலும் ஒருவரின் வித்து நேரடியாய் மனைவியை சென்றடையவில்லை தானே? டெஸ்ட்-டியூப் எனும் முறையில்; ஒரு பெண்ணின் கருப்பை வெறும்-தங்குமிடமாய் தானே?! பார்க்கப்படுகிறது? அங்கே உணர்வும்/உறவும் இல்லை என்பது உண்மையானால்; வாடகைத் தாய் விசயத்திலும் அப்படியே இருக்கவேண்டும். ஏன், இரண்டிலும் மாறுபட்ட கருத்துகள்/உடன்பாடுகள்?. எனக்கென்னவோ?! இரண்டாவது குழந்தைக்கு பொருளாதாரம் மட்டுமே ஒரு பெண் காரணம் என்று கூறும்போது; அங்கே அவள் கணவனின் ஆசையும்/ அவனின் உரிமையும் மறுக்கப்படுகிறது. இது தவறில்லை என்றால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதும் தவறில்லை என்றே தோன்றுகிறது. மேலே குறிப்பிட்ட வண்ணம்...

முதல் குழந்தையின் மனப்பூர்வமான சம்மதம் மட்டுமே முக்கியம் என்று தோன்றுகிறது!!!

(திருட்டு)கல்யாண சாப்பாடு...



  இளங்கலை-அறிவியல் சென்னை மாநிலக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரமது. அப்போதெல்லாம், என்னப்பனின் பணத்தில், செலவு செய்து கொண்டிருந்த காரணத்தால் - நான் "உணவிற்கு கூட" அதிகம் பணம் செலவழிப்பதில்லை! எங்கள் விடுதியில் "குத்தகை அடிப்படியில்"தான் உணவு-விடுதி நடக்கும்; குத்தகைக்காரர் பணம் போதவில்லை என்று உணவு-விடுதியை "அடிக்கடி" மூடி விடுதல் சர்வ-சாதாரணமாய் நடக்கும் ஒன்று. அப்படி மூடிவிடும் வேலையில்; வெளியில் உணவகத்தில் சாப்பிட வேண்டும்; திருவல்லிக்கேணியில் "முரளி கஃபே" என்ற ஒரு உணவகம் மிகவும் பிரசித்தி பெற்றது. இன்றும் இருக்கிறதா? என்று தெரியவில்லை! அங்கே தான் உணவு-விடுதி மூடப்படும் நாட்களில் சாப்பிடுவது வழக்கம்; ஒரு நாளைக்கு 10-உரூபாய் என்பது என் கணக்கு. காலை/இரவு "ஒரு ப்ளேட்" சாம்பார்-இட்லி! மாலை "ஒரு ப்ளேட்" பரோட்டா! சாம்பார்-இட்லி 2.50 உரூபாய்; பரோட்டா 5 உரூபாய். 10 உரூபாய் கணக்கு சரியாகிவிடும்; எத்தனை நாளானாலும், இதேதான் என் உணவு முறை. 

        விளையாட்டாய் ஓர்நாள் ஒரு திருமண-மண்டபத்தில் சாப்பிடலாம் என்று நானும்; என் நண்பர்களும் முடிவெடுத்து உள்ளே சென்று "மிகுந்த பயத்துடன்" சாப்பிட்டுவிட்டோம். எங்களுக்கும், அந்த திருமணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை! இப்படியாய், தொடர்ந்து அடிக்கடி ஏதாவது ஒரு திருமணத்தில் சென்று சாப்பிடும் வழக்கம் அதிகமானது. ஒருமுறை, என் நண்பனின் - தந்தையின்; நண்பரின், நண்பர் வீட்டு - முகம்மதியர் திருமணம் ஒன்று! மட்டன்-பிரியாணி என்றான் நண்பன்!! வாயில் எச்சில் ஊறிற்று!! பலவிதமான ஆலோசனைகளுக்கு பிறகு அங்கு சென்று சாப்பிடவும் ஆரம்பித்து விட்டோம். அருமையான சாப்பாடு! சாப்பிட ஆரம்பித்ததும், வீடியோ-எடுப்பவர் தொடர்ந்து எங்களையே எடுப்பதாய் ஒரு உணர்வு! அவசர, அவசரமாய் சாப்பிட்டுவிட்டு; பயத்துடன் ஒருவழியாய் அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டோம். அன்று - எங்கள் அனைவரின் மனதிலும் அப்படியொரு குற்ற உணர்வு; பெருத்த அசிங்கமாய் தோன்றியது. அந்த முகம்மதியர் வீட்டு பிரியாணிதான்...

நாங்கள் திருட்டுத்தனமாய் சாப்பிட்ட இறுதி கல்யாண சாப்பாடு!!!     

"சென்று சேருமிடம்" பொறுத்தே சிறப்பு!!!



       சமீபத்தில் எங்கள் "நிறுவன-தேநீர் அறையில்" பணி புரியும் ஒருவர்; என்னிடம் கடனாய் ஒரு தொகை கேட்டார். பெரிதாய், ஒன்றுமில்லை - நம் மதிப்பில் 8,500 உரூபாய். ஒரு குறிப்பிட்ட தேதியில் தருவதாய் சொன்னார்; நான் அன்று ஊரில் இருக்கமாட்டேன் என்பது எனக்கு தெரியும். என்மகளின் பிறந்த நாளை கொண்டாட முன்பே பயணச்சீட்டு எல்லாம் வாங்கியாகி விட்டது. நான், அதை சொல்லவில்லை; அவர் கேட்ட ஒரு மணி-நேரத்தில் கொடுத்துவிட்டேன். அவர் மலையாளம் பேசும் அன்பர்; அவன் என்னிடம் மலையாளத்தில் தான் பேசுவார் - நான் பதிலுக்கு தமிழில் பேசுவேன். இருவரும், முடிந்த அளவிற்கு புரிந்து கொள்வோம் - இப்படித்தான் நாங்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாய் உரையாடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவரின் தேவை மிக-முக்கியம் என்பது அவரின் குரலில் தெரிந்தது; பணம் வாங்கிய பின் அவரின் முக-மலர்ச்சியில் தெரிந்தது - மொழிக்கு அங்கே வேலையே இல்லை! மனிதனும், மனிதமும் மேலோங்கி நின்ற தருணம் அது.

       கண்டிப்பாய், அந்த பணம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல; ஆனால், அதே தொகை ஒருவருக்கு எந்த அளவிற்கு பெரிதாய் இருக்கிறது என்று நினைத்து பெருத்த ஆச்சர்யம்! அப்போது தான், பணம் மட்டுமல்ல; எந்த பொருளானாலும்/உறவானாலும் சென்று சேருமிடம் பொறுத்தே - அது கையாளப்படுவதும்/ சிறப்பு பெறுவதும் உள்ளது என்று தோன்றியது. அவர் செய்யும் "சுவை-நீர்" மிகவும் நன்றாய் இருக்கும்; ஆரம்ப காலத்தில் எனக்கும் செய்து கொடுப்பார். பின்னர், வேலைப்பளுவால் - நான் சில முறை கேட்டும் "கொறைச்சி பிசி! சேட்டன் உண்டாக்கி கொள்ளும்!!" என்று புன்னகையுடன் கூறுவார். அதன் பின், அவர் செய்வது போலவே நானும் முயற்சி செய்து ஓரளவிற்கு பழகி கொண்டேன். அவர் என்னிடம் பணம் வாங்கிய அன்றிலிருந்து; என்னிடம் "செய்து கொடுக்கட்டுமா?!" என்று கேட்க வருவார்; எனக்கும் தெளிவாய் புரியும். ஆனால், நான் எந்த சூழலிலும் அதை கவனித்ததாய் காட்டிக்கொண்டதில்லை. கேவலம்! சிறிய பணத்திற்க்காய்...

அவரின் சுயத்தை; அவர் இழப்பதில் எனக்கு எந்த நாட்டமும் இல்லை!!!

பின்குறிப்பு: அவர் சொன்ன தேதியும் கடந்து - இன்று மேலும் ஒரு மாதம் கூட ஆகிவிட்டது. நான் இன்னமும், அவரிடம் பணம் பற்றி கேட்கவில்லை! இந்த பதிவின் முதல்-பிரதி எழுதும் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் கூட அவரை சந்தித்தேன். எப்போதும் போல், பேசிவிட்டு வந்துவிட்டேன். கண்டிப்பாய், கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கும்; மேலும், அந்த தொகை எனக்கு நெருக்கடியாய் மாறும் சூழல் இன்னமும் வரவில்லை. பின்னர் ஏன், நான் அவரை கேட்கவேண்டும்?!    

நீயா நானா கோபிநாத்தின் பொறுமை...




"நீயா? நானா?" புகழ் கோபிநாத் அவர்களை போற்றியும்/தூற்றியும் பலரும் இரு பிரிவுகளாய் பேசுவதுண்டு...

எனக்கு, அடிக்கடி திரு. கோபிநாத்தைப் பார்த்து பரிதாபம் தான் எழும். பின்னர், அவரின் பொறுமை தான் என்னை மெய்சிலிர்க்க வைக்கும்! 


ஆம்! பல விவாதங்களில் பலர் பேசுவது "பலரையும் போல்" என்னையும் வெகுவாய் கோபமுற செய்யும்! பல நேரங்களில் - தொலைக்காட்சியை நோக்கி (நான் தனியே இருப்பது அதற்கு ஒரு செளகர்யமும் கூட!) "கண்ணா-பின்னாவென்று" அவர்களை திட்டி இருக்கிறேன். 

அப்படி பேசுபவர்களை - எதிரணியில் இருப்போர் கூட "எதிர்த்து; வாதிக்க" பேசமுடியும். ஏன்?! "சிறப்பு விருந்தினராய்" வருபவர் கூட; அவர்களின் கூற்றை எதிர்த்து/தவறென்று பேசமுடியும். இப்படி, எல்லோரும் - அவரவர் உணர்வுகளை வெளிக்காட்டி பேசும்போது; திரு. கோபிநாத் மட்டும் இறுதி-வரை "இரு சாராரையும்" அனுசரித்து நடுநிலையோடு மட்டுமே பேசவேண்டும் என்ற நிர்ப்பந்தம். பட்டி-மன்றம்/மண்டபம் - இவை போன்றவற்றில் கூட நடுவராய் இருப்போருக்கு அவரின் கருத்தை கூறி தீர்ப்பு வழங்க வாய்ப்பு இருக்கிறது. 

ஆனால், திரு. கோபிநாத் நிலைமை - அதனால், அவரின் "பொறுமை"தான் {என்னதான், அதுதான் அவரின் கடமை எனினும்...} என்னை; அவரை எப்போதும் உயர்வாய் பார்க்கத் தூண்டும்!

காதலும், காமமும் - 2...



"பெரும்"காதலோடு ஒரு ஆணோ/பெண்ணோ இன்னொருவரை நெருங்கும்போது; அதை மற்றொருவர்...

"வெறும்"காமத்தோடு எதிர்கொள்வது/அணுகுவது...

மகா-பாவம்!!!

அனையா விளக்கு மட்டுமா???



"அனையப்"போகும் விளக்கு மட்டுமல்ல...
"கொளுத்தி"யவுடன் எரிய ஆரம்பிக்கும்; 
விளக்கும், " பிரகாசமாய்"தான் எரியும்! 

ஆனால், அது முக்கியமாய் படுவதில்லை! - இது எனக்குள் உதித்தது! அதற்கு நானே கொடுக்கும் நீதி/விளக்கம் பின்வருவது:


"இறப்பை"பற்றி சதா-சர்வ காலமும் சிந்திக்கும் நாம்; நம் பிறப்பு பற்றியும் (பிறந்த நாள் என்ற ஒரு நாள் தவிர!); பிறப்புக்கும்/இறப்புக்கும் - இடைப்பட்ட காலத்தைப் பற்றியும் பெரிதாய் கவனம் கொள்வதில்லை!!

காதலும், காமமும் - 3


.....
நாடகம் முடிந்த பின்னாலும்;
நமைப் பின்னும் தொடர்வது என்ன?
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே!
உயிர் போகும் மட்டும் உன் நிழலே கண்ணே!!
உயிரே....வா.....!!!
.....

யோவ்! கமலு(ஹாஸா)!!...


எத்தனை பேர் அசிங்கம்/ஆபாசம் என்று "புரியாமல்"பிதற்றினாலும்; காதலையும்/காமத்தையும் சரியான விகிதத்தில் கலந்து

 "உணர/அனுபவிக்க/உணர்த்த" 
தெரிந்த 
"மகான்"யா நீ!!!