திங்கள், ஆகஸ்ட் 31, 2015

குறள் எண்: 0029 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 003 - நீத்தார் பெருமை; குறள் எண்: 0029}
                          

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி 
கணமேயும் காத்தல் அரிது

விழியப்பன் விளக்கம்: குணமெனும் குன்றின் உச்சியில் ஏறி நின்றவரின் கோபம்; ஒரு கணம் கூட நிலைத்திருத்தல் அரிதானது.

(அது போல்...)

மதமெனும் யானையின் கழுத்தில் ஏறி, சம்மணமிட்டு அமர்ந்திருப்பவரின் சாதிய-உணர்வு; ஒரு கணம் கூட வெளிப்படுதல் அரிது.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2015

குறள் எண்: 0028 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 003 - நீத்தார் பெருமை; குறள் எண்: 0028}                          


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

விழியப்பன் விளக்கம்: மொழித்திறன் நிரம்பிய சான்றோர்களின் பெருமையை; இப்பூமியில் நிலைத்திருக்கும் அவர்களின் அறம்-சார்ந்த நூல்கள் பிரதிபலிக்கும்.

(அது போல்...)

வளர்ப்புத்திறன் மிகுந்த பெற்றோர்களின் பெருமையை; இவ்வுலகில் தொடர்ந்திடும் அவர்களின்  ஒழுக்கம்-நிறைந்த சந்ததியர்கள் பிரதிபலிப்பர்.

சனி, ஆகஸ்ட் 29, 2015

குறள் எண்: 0027 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 003 - நீத்தார் பெருமை; குறள் எண்: 0027}
                        

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின் 
வகைதெரிவான் கட்டே உலகு

விழியப்பன் விளக்கம்: சுவை, ஒளி, தொடுதல், ஒலி மற்றும் மணம் - இவை ஐந்தையும்; ஆராய்ந்து தெளிந்தருக்கு, இவ்வுலகம் எளிதில் வசப்படும்.

(அது போல்...)

அன்பு, பண்பு, உறவு, அறம், மற்றும் நட்பு - இவை ஐந்தையும்; ஆழ்ந்துணர்ந்த அன்னைக்கு, குடும்பம் முழுதாய் கட்டுப்படும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, ஆகஸ்ட் 28, 2015

குறள் எண்: 0026 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 003 - நீத்தார் பெருமை; குறள் எண்: 0026}
                           

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் 
செயற்கரிய செய்கலா தார்

விழியப்பன் விளக்கம்: சான்றோர்கள் செயற்கரிய செயல்களை செய்வர்; சிறியவர்கள், செயற்கரிய செயல்களை செய்ய முடியாதவராவர்.

(அது போல்...)

கூட்டுக்குடும்பங்கள் பெருஞ்சிக்கல்களைச் சமாளித்து வெல்லும்; தனிக்குடும்பங்கள், பெருஞ்சிக்கல்களைச் சமாளித்து வெல்லும் திறனற்றவை.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், ஆகஸ்ட் 27, 2015

அ"ற"வுரை...      என்னப்பன் எப்போதும் அ"ற"வுரை என்றே கூறுவார். அவரிடம் இருந்து நானும் அதைக் கற்றுக்கொண்டேன்; நானும் அறவுரை என்று கூறுவதே வழக்கம். சென்ற வாரம் என் நண்பன் ஒருவன் நான் சொன்னவற்றை அ"றி"வுரை என்றெண்ணி; அப்படி சொல்லவேண்டாம் என்று சொன்னான். நானும் அது அறவுரை அல்ல! என்று பதிலளித்தேன். பின்னர், அவன் அறிவுரை என்கிறான்; நான் அறவுரை என்றேன் - இவற்றுள் என்ன வேறுபாடு? என்ற சிந்தனை  எழுந்தது. என்னப்பன் கூறுவதால்; நானும் அப்படியே பழகினேனேத் தவிர; அதுவரை அதன் உட்பொருள் என்னவென்று ஆராய்ந்ததில்லை. அப்போது இரண்டுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் எனக்கு புரிந்தது. அறிவுரை என்று சொல்லும்போது; அது ஒருவருக்கு அறிவு (அறியும் திறன்) குறைவாய் இருப்பது போலவும் - அதை சுட்டிக்காட்டி அறிவை விசாலமாக்க சொல்லப்படுவது - என்றும் பொருள் படக்கூடும். அந்த அடிப்படையில், எவரேனும் தம் தவறை...

     சுட்டிக்காட்டும் போதோ; அல்லது நமக்கு ஏதேனும் விளக்கும்போதோ ஒரு ஆற்றாமை வருகிறது; இது மனித இயல்பே! ஆனால், அறவுரை என்பது "அறத்தைச் சார்ந்த உரை" என்று பொருள். அதாவது, எது - சரியான/உண்மையான/நேர்மையான - அறம் என்பதை விளக்குவது என்ற  பொருள் வருகிறது. இங்கு எல்லோருக்கும் அறிவு சமமாய் தான் இருக்கிறது! நம் செயல்பாடுகள் அறத்தை தழுவி இருக்கிறதா?! என்பதே முக்கியம். அதனால் தான் "அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்" என்று; முதல் அதிகாரத்தில் {குறள் எண்: 0008} துவங்கி; ஆங்காங்கே "அறம்" என்ற வார்த்தையை நம் பெருந்தகை பயன்படுத்தினார் என்பதும்; அதனாலேயே ஒரு பிரிவையே அறத்துக்கென ஒதுக்கினார் என்பதும் புரிந்தது. என்னப்பன் என்னையோ அல்லது என் உடன்பிறப்புகளையோ "படி"யென்று திட்டியதேயில்லை. அறிவு இல்லாதவர்கள் என்று சொன்னதே இல்லை! அவர் சொல்லியதெல்லாம் "இந்த வயதில் படிப்பது உன் கடமை! நீ படித்தால்...

       நீ நன்றாக இருப்பாய்! உன் வாழ்க்கை நன்றாக இருக்கும்!" போன்ற சொற்றொடர்களே! படிப்பு வரவில்லை என்பதற்காக, எங்கள் எவரையும் அவர் கடிந்து கொண்டதே இல்லை. எங்கள் மூவருக்குள்ளும்; வெவ்வேறு அளவிலான படிப்புத்திறன் இருந்தும் - ஒருபோதும் அவர் எங்களை ஒப்பிட்டுப் பேசியதேயில்லை! ஆம்! அவருக்கு அறம் என்னவென்பது தெளிவாய் தெரியும். இன்றும் அப்படித்தான்; அவரின் தவறை நான் சுட்டிக்காட்டினாலும் ஏற்றுக்கொள்வார் - மன்னிப்பும் கோருவார்! அதன் வெளிப்பாடு தான் அவர் இன்றுவரை அறவுரை என்ற வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்துவதன் பின்புலன் என்று இப்போது விளங்குகிறது. இந்த புரிதலோடு என் பதிவுகளை/விமர்சனங்களை/வாதங்களை; நான் இதுவரை செய்ததில்லை! எனினும், ஒன்று மட்டும் நிச்சயம்: "மற்றவர்களுக்கு தெரியாது" என்ற ஆணவத்தில் நான் எதையுமே செய்ததில்லை; இது சத்தியம்! எனவே, இங்கே கூறியிருப்பவையும்; நான் முன்பு பதிந்தவைகளும் என்னுடைய...

அ"றி"வுரை அல்ல! அது அ"ற"வுரையைத் தவிர வேறொன்றும் இல்லை!!

சாலுங் கரி (குறள் எண்: 0025)...       "ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு" என்ற குறள் எண் 0025-இற்கான விளக்கவுரையைப் படித்திருப்பீர்கள். அதில் "சாலுங் கரி" என்றொரு சொற்றொடர் - இறுதியில் வரும். அதைப் படித்ததும்; அதன் பொருளைத் தேடும்போது ஒரு அருமையான விளக்கம் எனக்கு கிடைத்தது. அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு. இச்சொற்றொடரில் "சாலும்" என்பதற்கு "அமையும்" என்று பொருள்; ஆகும்/கொள்ளும் என்றும் பொருள் படும். தகைசால் என்றொரு வார்த்தை நமக்கு தெரியும். நான் என்னப்பனுக்கு கடிதம் எழுதும்பொதெல்லாம் "தகைசால் தந்தைக்கு" என்றுதான் ஆரம்பிப்பேன்.  இங்கு, தகை என்றால் பண்பு; எனவே தகைசால் என்பது "சிறந்த பண்பு கொண்ட" என்ற பொருளில் வருகிறது. ஆம்! பல பதிவுகளில் வெளிப்படுத்தி இருக்கும் வண்ணம்; என்னப்பன் அந்த வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர். அந்த பொருளில்தான் "பெருந்தகை" என்று அய்யன் வள்ளுவனை அழைக்கிறோம். அதற்கு...

             பெரும்-பண்பு கொண்டவர்; மாண்புமிகு பண்புடையார் - என்றெல்லாம் பொருள் படும். "கரி" என்பதற்கு என்ன பொருள் என்று தேடும்போது "சான்று" என்று இருந்தது. என்னப்பனிடம் விளக்கம் கேட்கலாமா?! என்றெண்ணி; பின் நானே யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது, ஒன்று புலபட்டது; நம் எல்லோருக்கும் அடுப்புக்"கரி" என்றால் என்னவென்று தெரியும். அது நினைவுக்கு வந்தது; ஏன் அது கரி என்றானது என்று யோசித்தேன்! முதலில், அது என்ன? என்ற கேள்வி எழுந்தது; ஒரு விறகு எறிந்த பின் எஞ்சுவது என்று பதில் வந்தது. பின், ஏன் "சான்று" எனவும் சொல்லப்பட்டது? என்று யோசிக்க பின்வருவது விளங்கியது: அதாவது, முன்பிருந்த விறகு இப்போதில்லை! ஆனால், இருந்த விறகு எரிந்து முடிந்துவிட்டது என்பதற்கு சான்றாக இருப்பதால் - அது "கரி" எனப்பட்டது என்ற விளக்கம் கிடைத்தது. எனவே கரி = சான்று! அட... அட... அட...! நம் பெருந்தகை; என்னை எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறார்?!

என் பணியே ஆராய்ச்சி என்பதால்; இந்த பணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!!!

குறள் எண்: 0025 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 003 - நீத்தார் பெருமை; குறள் எண்: 0025}

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் 
இந்திரனே சாலுங் கரி

விழியப்பன் விளக்கம்: ஐம்புலன்களை அடக்கியவரின் ஆற்றலுக்கு; விரிந்த வானத்தில் உள்ளவர்களின் மன்னனான, இந்திரனே சான்று.

(அது போல்...)
ஐந்து-குணங்களை காப்பவரின் மகிழ்ச்சிக்கு; இன்பக்கடலில் மிதக்கும் அக்குடும்பத் தலைவனான, தகப்பனே சான்று.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், ஆகஸ்ட் 26, 2015

இதற்கு எவர் காரணம்???


      சமீபத்தில் வாட்ஸ்-ஆப் குழுவில் ஒரு விவாதத்தின் போது; நான் ஏன், இந்தியாவில் வந்து வேலை செய்யக்கூடாது?! என கேட்கப்பட்டது. என் மனதில் இருந்ததை வெளிப்படுத்த அருமையான வாய்ப்பு கொடுத்த கேள்வி என்பதால் - அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அங்கே, சிலவற்றை சுருங்கக் கூறினேன். கண்டிப்பாக, நான் வெளிநாட்டில் வேலை செய்ய முக்கிய-காரணம், நான் அடிக்கடி குறிப்பிடுவது போல் - என் பொருளாதாரத் தேவையே! சமீபத்தில், என்னுடைய தேவையைக் கூட வரையறை செய்திருப்பதை ஒரு பதிவில் எழுதியிருந்தேன். இருப்பினும், 2 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலும் வேலை தேடினேன். ஆனால், அங்கு சில அரசு பல்கலைக்கழகங்களில் இருக்கும் நடைமுறை என்னைப் பெரும் அதிர்ச்சிக்கும்; மன உளைச்சலுக்கும் உண்டாக்கியது. ஆம்! விரிவுரையாளர்/பேராசிரியர் பணியில் ஒருவரை அமர்த்த "இவ்வளவு பணம்" என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரடியாக உயர்பதவியில்...

         உள்ளவர்கள் கேட்கவில்லை எனினும், அவர்களின் கட்டளையின்படி கீழ்-மட்டத்தில் உள்ள ஊழியர்களால் வெளிப்படையாகவே நடைபெறுகிறது. எனக்கு முதலில் எழுந்த ஆற்றாமை, நான் ஏன் பணம் கொடுக்கவேண்டும்? எனக்கு தகுதி இல்லையா?! என்பதே! உண்மையில், எனக்கு தகுதி இல்லையெனில்; நான் பணம் கொடுக்க "ஆலோசனையாவது" செய்யலாம். ஆனால், துரதிஷ்டவசமாய் எனக்கு தேவையான தகுதிகள் இருக்கின்றன! பின் ஏன், நான் பணம் கொடுக்க வேண்டும்?! அவர்கள் ஏன் பணம்-கேட்கிறார்கள் என்று கூட என்னால் யூகிக்க முடிகிறது. அவர்கள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அந்த பதவியை அடைகின்றனர் என்பது அப்பட்டமான உண்மை. எனவே, உயர்பதவியில் இருப்பவர்கள்; அவர்களின் பதவியைத் தாண்டி, முதலீட்டாளர்கள் என்றும் அங்கம் வகிப்பவர். அவர்கள் செய்த முதலீட்டுக்கும் மேலாய், சம்பாதிப்பது அவர்களைப் பொருத்தவரையிலாவது "தார்மீகக் கடமை" ஆகிறது.

           எனவே, அவர்களின் நிலையைக் கூட என்னால் புரிந்து கொண்டு; விலக முடிகிறது. ஆனால், அப்படி கொடுப்பதற்கு வரிசையில் நின்று காத்திருப்பவர்களை என்ன செய்வது? என்ற கேள்வியே மேலோங்கி நிற்கிறது. உயர்பதவியை அடைய பணம் கொடுக்க தயாராய் இருப்பினும்; அதை வாங்கிக்கொண்டு பணியில் அமர்த்தும் அரசியல்வாதிகளை என்ன செய்வது? என்ன செய்வது என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. ஆனால் "இது வாங்குவோர் குற்றமா? அல்லது கொடுப்பவர் குற்றமா??" - என்றால், பெருங்குழப்பமே எஞ்சும். இந்தியன் திரைப்படத்தின் "நீங்க கேக்கறதால தானே நாங்க கொடுக்கறோம்?! நீங்கள் கொடுக்கறதால தானே நாங்க வாங்கறோம்?!" என்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது. எனவே, இதைத்தாண்டி பின்வருமாறு யோசிக்கிறேன்: பேராசிரியர் பதவிக்கு பணம் கொடுப்பவர்களில்; பெரும்பான்மையோர் திறமை இல்லாதவர்களே! தகுதியும்/திறமையும் இருந்தும்; பணம் கொடுத்து பணியில் அமர்வோரும் உண்டு...

    என்பதை மறுப்பதற்கில்லை! அப்படி தகுதியும்/திறமையும் இல்லாத ஒருவர் பணத்தின் அடிப்படையில் வேலைக்கு வந்தால்; அவரிடம் நேர்மையான/முறையான கற்பித்தல் எப்படி இருக்கும்? பின் மாணாக்கர்கள் எப்படி நன்கு படித்து நேர்வழி நடப்பது?! இது நம் உடலில் முதலில் உருவாகும் ஒரு நோய்க்கிருமி போல! "இளைதாக முள்மரம் கொள்க" என்பது போல் அந்த கிருமியை அழிக்காவிட்டால்; அது மற்ற நல்ல கிருமிகளையும் கெடுத்துவிடும். அதுதான், இப்போது பெருமளவில் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, மதிப்பெண்ணின் அடிப்படையில் மாணாக்கர்களின் தகுதி/திறமையை "தவறாய்" கணிக்கும் பள்ளி கல்வி முறை! அந்த தவறான அடிப்படையில் வளர்ந்து; மேல்கல்விக்கு வந்தால், இப்படிப்பட்ட நேர்மையற்ற பேராசிரியர்களால் கற்பிக்கப்படுவது. மீண்டும் சொல்கிறேன்; எல்லோரும் நேர்மையற்றவர்கள் என்பதல்ல என் வாதம். இத்தலையங்கம் நேர்மையற்ற வழியில் பணி-நியமனம் பெறுவோர் குறித்தே!

           சாமான்யர்கள் போல், முதலில் கையூட்டைப் பெறுகின்ற அரசியல்வாதிகள் தான் தவறென்று யோசித்து; பின், இல்லை கொடுப்பவர் தான் முதல் குற்றவாளி என்றுணர்ந்தேன். ஆம்! ஒரு பதவிக்கு பலர் போட்டியிடும் நிலையில்; அதில் சிலர் சென்று நான் இவ்வளவு பணம் தருகிறேன் என்று சொல்லும்போது தான் - அதிலும் "இன்னுமோர்" போட்டி இருப்பதைப் பார்த்து அதற்கேற்ப "விலையும்" நிரனயிக்கப்படுகிறது. எரிவதைப் பிடுங்கினால்; கொதிப்பது அடங்கும் என்பது போல் - எல்லோரும் கொடுக்க மாட்டோம் என்ற உறுதிமொழி கொண்டால் - இந்த வசூல்-வேட்டை எப்படி நடக்கும்?! இதை எண்ணும்போது தான்; தனிமனித ஒழுக்கம் தறிகெட்டு இருப்பதைக் கண்டு  வெகுண்டெழுகிறேன். அதுதான், என் பார்வையின் பிரதிபலிப்பு! இந்த பணம் கொடுக்கும் விசயத்துக்கு அடுத்த தகுதி - நல்ல-பரிந்துரை(யாளர்) தேவைப்படுவது. இவ்விரண்டும் ஒரு பதவிக்கான விளம்பரம் செய்யப்படும்போதே; எவரை நிரனயிக்கவேண்டும்...

      என்பதையும் தீர்மானித்து விடுகிறது; மற்றதெல்லாம் கண்துடைப்பு. விளைவு?! தகுதியும்/திறமையும் இருந்தும்; நேர்முகத் தேர்வுக்கு கூட அழைக்கப்படாமல் போவது. இது ஏனோ, என்னுடைய அனுபவம் என்று மட்டும் எண்ணவேண்டாம்; மனதுக்குள்ளேயே தம் குமுறல்களை அடக்கிக்கொண்டு இருப்போர் ஏராளம். என்னைப்போன்று முனைவர் பட்டம் பெற்றோர் வெளிநாடுகளில் இருப்பதற்கு, இதுவும் ஒரு மிகமுக்கியமான காரணம். என்னுடைய கேள்வி இது மட்டும்தான்: எனக்கு தேவையான தகுதி இருந்தும், நான் ஏன் பணம் கொடுக்கவேண்டும்? அந்த தொகையை நான் வங்கியில் வைப்பு-நிதியில் வைத்தாலே; எந்த சிரமும் இல்லாமல் எனக்கு நல்லதொரு தொகை "வட்டியாய்" கிடைக்குமே?! இதில் வேதனையான விசயம் என்னவென்றால்; பெரும்பாலோர் அந்த தொகையை வட்டிக்கு வாங்கிக் கொடுப்பது தான் - அவர்களை என்ன செய்வது?! இது தவிர்த்து, அப்படி பணம் கொடுத்து அரசாங்க வேலை வாங்கினால்...


         அதை வைத்து நிறைய-வரதட்சனை வாங்கலாம்! என்றொரு கூட்டமும் இருக்கிறது. நான் ஏதோ விளையாட்டுக்காய் சொல்கிறேன் என்று நினைக்காதீர்... இது வேதனையான உண்மை. உயர்பதவியில் இருப்போர் எப்படி; ஒரு முதலீடு-செய்து அந்த பதவிக்கு வருகிறார்களோ?! - அதே அடிப்படையில் பேராசிரியர் போன்ற கீழ்-மட்ட பணி புரிபவரில் பலரும் "முதலீடு" செய்கின்றனர். பாருங்கள்! ஒருவரால் "கையூட்டு" கொடுத்து பெறப்படும் பதவி; தொடர்வினையாய் சென்று எத்தனை பேரை அதே தவறை செய்ய வைக்கிறதென்று?! நான் இங்கே சொல்லி இருப்பது; எனக்கு தெரிந்த துறை பற்றி மட்டுமே! இப்படி ஏராளமான துறைகள் உள்ளன. எல்லாவற்றிலும், அரசாங்கம் அத்தனை பேரை நியமித்து கண்காணிக்க முடியாது; இது ஒரு தனி மனிதனின் தன்னொழுக்கம் தவறுவதில் துவங்குகிறது! அதுதான் "கெயாட்டிக்(Chaotic)" கோட்பாட்டின் படி மற்ற தொடர் வினைகளுக்கு காரணமாகிறது! அதனால் தான், நான் இதை முதலில்...

           தனிமனித ஒழுக்கம் என்ற அடிப்படையில் இருந்தே பார்க்க விரும்புகிறேன். நான் என்னவோ அரசாங்கம்/ஆட்சியாளர்களை ஆதரிப்பதாய் பொருள் கொள்ளவேண்டாம்! இன்னும் எத்தனை காலத்திற்கு தான், எல்லாவற்றிற்கும், அரசையும்/ஆட்சியாளர்களையும் குறை கூறிக்கொண்டே "எதுவுமே மாறமால்; அதே ஏமாற்றத்துடன்" இருக்கப்போகிறோம்?! இப்படி பணம் கொடுத்து பதவி வகிப்போர் உயர்மட்டத்தில் இருந்து; கடைநிலை ஊழியர் வரை இருக்கும்போது - எப்படி எல்லாமும் ஒழுங்காகும்?! பணம் கொடுத்தும் நடக்கவில்லை எனில்; ஒரு அரசியல்வாதி/சம்பந்தப்பட்ட-ஊழியரை "ஆள் வைத்து அடிக்கும்" கொடுமையை  செய்வது எவர்?! தனியொரு மனிதன் தானே??!! அந்த அடிப்படையை மாற்றாமல்; ஆட்சியாளர்கள் மட்டும் மாறவேண்டும் என்று நினைப்பது சரியா?! அவர்களின் எண்ணிக்கை ஊழியர்களின் எண்ணிக்கையை விட மிகக்குறைவு. எனவே, என்னளவில், தனிமனித ஒழுக்கம் சீர்பெறாத வரையில்...


இதுமாதிரியான குற்றங்களும்/ஊழல்களும் அகற்றப்படுவது சாத்தியமேயில்லை!!!

பின்குறிப்பு: என் மனதை ரணமாக்கிய நிகழ்வு ஒன்றை பகிர ஆசைப்படுகிறேன். ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகத்தை வேலைக்காக அணுகியபோது; அதன் இயக்குனர் என்னுடைய "Curricular Vitae"-இன் வடிவத்தை, அதாவது Format-ஐ மாற்ற சொன்னார். எனக்கு உடன்பாடே இல்லையெனினும்; அதை மாற்றிக் கொடுத்தேன். பின்னர், அடுத்த முறை சந்தித்தபோது; மீண்டும் நான் முன்பே கொடுத்த வடிவத்தில் கொடுக்க சொன்னார். இப்படியா ஒருவரின் "Curricular Vitae"-வை தரம் பார்ப்பது? இன்றுவரை, மீண்டும் என்னுடைய "Curricular Vitae"-வை கொடுக்கவே இல்லை. அப்படிப்பட்ட ஒருவரின் கீழ் வேலை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை!!! 

குறள் எண்: 0024 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 003 - நீத்தார் பெருமை; குறள் எண்: 0024}  

                       
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

விழியப்பன் விளக்கம்: மனவலிமை எனும் அங்குசத்தால் "யானை-போன்ற" ஐம்புலன்களை அடக்குபவரே; துறவறமெனும் நிலத்திற்கு உயிர்ப்புள்ள விதையாவர்.

(அது போல்...)

ஒழுக்கம் எனும் கேடயத்தால் "இமயம்-போன்ற" ஐந்துகுணங்களை காப்பவரே; இல்லறமெனும் விவசாயத்திற்கு தரம்வாய்ந்த உரமாவர்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், ஆகஸ்ட் 25, 2015

கோபம் எப்படி வெளிப்படும்...???
      நம்மில் பலருக்கும் கோபம் எப்படி வெளிப்படும்? என்பதில் பெருத்த குழப்பதாய் தெரிகிறது. இதற்கு, நமக்கு கோபத்தை எப்படி வெளிப்படுத்துவதென்று தெரியாததே காரணமோ? என்று எண்ணத் தோன்றுகிறது. கோபம் என்றால் என்ன/கோபத்தை எப்படி வரையறுப்பது/கோபத்தை எப்படி வெளிப்படுத்துவது - என்பது போன்ற விசயங்களில் நான் புரிந்துகொண்டதை; உங்களிடம் பகிரவே இத்தலையங்கம்.
 • "ஒருவர் உரக்கப் பேசினால்" - அது கோபத்தின் வெளிப்பாடு என்றே பெரும்பாலோர் நினைக்கின்றனர். இல்லை! அப்படி இருக்கவேண்டிய அவசியம் இல்லை; என்னைப் போன்றோருக்கு இயல்பிலேயே குரலின்-ஒலி அதிகமாய் இருக்கும். ஒரு சிறு மனக்கவலையோ/ஆற்றமையோ/இயலாமையோ ஏற்பட்டாலும் - குரலின் ஒலி மேலும் அதிகமாகும். என் சுற்றமும்/நட்பும் பல சமயங்களில் இந்த ஒலி-அதிகரிப்பைக் கோபம் என்றே நம்புகின்றனர். "அப்படி இல்லை; எனக்கு கோபம் இல்லை" என்று கூறினாலும், அதை நம்பாமல் அவர்கள் மேலும் விவாதிக்கும் போதுதான்; உண்மையில், எனக்கு கோபம் வந்துவிடுமோ?! என்ற அச்சம் ஏற்படுகிறது!
 • குரலின் ஒலியை உயர்த்துவது - கோபத்தின் வெளிப்பாடாய்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அது நிரந்தர இயல்பு நிலையிலிருந்து, "தற்காலிக இயல்பற்ற" நிலைக்கு மாறி இருப்பதை உணர்த்துவதன் வெளிப்பாடு. அது, அந்த குறுகிய-காலத்து நிலைப்பாடு, அவ்வளவே!
 • உரக்கப்பேசிய அடுத்தகணம் நான் என் இயல்பு நிலைக்கு திரும்பி - மற்ற விசயங்களைப் பற்றி தொடர்ந்து விவாதிப்பேன். ஆனால், பெரும்பாலும் மற்றவர்கள் அந்த நிகழ்வைத் தாண்டி வராமல், குரல் உயர்த்தியதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது - என்னை மேலும் நிலைகுலையச் செய்யும். பின், மெளனம் காப்பது அல்லது அமைதியாய் கடந்து விடுவதைத் தவிர வேறு வழியில்லை. {இதற்கு ஒரு உதாரணம்: நான் போர்ச்சுக்கல் நாட்டில் இருந்த போது, ஒருநாள், பக்கத்து வீட்டினர் இருவர் உரக்கப் பேசிக்கொண்டிருந்தனர்; எனக்கு அம்மொழி பரிச்சயம் இல்லாத காலகட்டம் அது! நான் அவர்கள் கோபத்தில் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள், என்று கடந்து சென்றுவிட்டேன். சிறிது நேரத்தில், நான் வெளியே வந்தபோது - அவர்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். வேறொரு சமயத்தில் தான் தெரிந்தது; அவர்கள் நம் ஊர் வரப்பு-சண்டை மாதிரி - வீட்டு தோட்டத்தில் ஏற்பட்ட ஒரு மனக்கசப்பால் அப்படி பேசினர் என்றும்; பின் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர் என்றும். அவர்களிடம் இருந்தது கோபம் இல்லை; உணர்ச்சி மிகுந்த விவாதம், அவ்வளவே! இப்படி பல நேரங்களில், நான் பல இடங்களில் அங்கே கண்டதுண்டு! என் பணியிடத்தில்; எங்கள் தலைமை கூட பொதுவில் எல்லோரிடமும் குரலை-உயர்த்தி அதிர்ந்து பேசுவதுண்டு! முதல் முறை, என் சக-பணியாளர்களிடம் என்ன இப்படி கத்துகிறார்? நான் வேறு வேலையைத் தேடப்போகிறேன் என்று சொன்னபோது "அவர்கள், தம்பி! ரொம்ப அலட்டிக்காத! இதெல்லாம் ரொம்ப சாதாரணம்" என்றனர். ஆம், அவர்கள் சொன்னது 100 % உண்மை; அடுத்த கணம் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவர்} எனவே, குரல் உயர்த்தி பேசுவதற்கும்; கோபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
 • சரி... இப்படி குரலை உயர்த்திப் பேசுவதே, கோபம் எனில்; அடிப்பது/காயப்படுத்துவது/கொலை செய்வது போன்ற செயல்கள் - எதனுடைய வெளிப்பாடு? உண்மையில், ஒருவரை அடிப்பதை நான் "கோபம்" என்பதையும் தாண்டி; ஒரு முட்டாள்தனமான செயல் என்றே பார்க்கிறேன். முன்பே சொன்னது போல்; என் தமக்கை மற்றும் தமையன் பிள்ளைகளைப் பலமுறை அப்படி அடித்திருக்கிறேன். என்னவளைக் கூட 3 நிகழ்வுகளில் கன்னத்தில்; ஒவ்வொரு அடியென்று 3 முறை அடித்திருக்கிறேன். ஏன், 2 வயது கூட ஆகாத என்மகளைக் கூட 2 முறை அடித்ததை முன்பே பதிவு செய்திருக்கிறேன். என்னளவில், ஒருவரை அடிப்பதென்பது "கோபத்தைத் தாண்டிய" முட்டாள்தனத்தின் வெளிப்பாடு.
 • அதுபோலவே ஒருவரைக் காயப்படுத்திக் கொலை-செய்வதும்/கொலையின் எல்லை வரை செல்வதும்! அது கோபத்தை தாண்டிய முட்டாள்தனத்தின் உச்சம்; அது ஒருவிதமான கோழைத்தனத்தின் வெளிப்பாடும் கூட. அதனால் தான், அதைப் பலரும் செய்வதில்லை. அப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களை, ஏதோ அரசாங்க வேலை-செய்வதாய் பாவித்து; அப்படி செய்பவர்களை "அடியாள்" தொழில் செய்வதாய் சொல்கிறோம்.
 • சரி... அப்படியெனில் - கோபம் என்றால் என்ன? அதை எப்படி வரையறுப்பது? கோபத்தின் வெளிப்பாடு எப்படி இருக்கும்? மற்றவர்கள் விசயத்தில் எனக்கு திண்ணமாய் தெரியாது. ஆனால், என்விசயத்தில் என்னுடைய கோபம் எதுவென்று நானே; தெளிவாய் வரையறை செய்திருக்கிறேன். அதைத்தான் பின்வரும் விதத்தில் எடுத்துக் கூறியுள்ளேன்.    
 • என் "உண்மையான கோபத்தின்" வெளிப்பாடு பின்வரும் 3 வகைகளில் தான் இருக்கும். 1. ஓரிரு முறைகள் நிகழ்வது தவறு என்று சுட்டிக்காட்டுவேன்; அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் சரி. மீண்டும், மீண்டும் தொடர்ந்தால்; நான் அங்கிருந்து அமைதியாய்-விலகி விடுவேன்.
 • 2. அதையும் தாண்டிய கோபம் எனில், என்னுடைய கோபத்தை என்மீதே காண்பித்துக் கொள்வேன். ஆம், என்னைக் குத்திக்கொள்வது/சுவற்றில் குத்துவது/அல்லது வேறு கடினமான பொருளின் மீது குத்துவது - என்பது போன்று தான் என் கோபத்தின் வெளிப்பாடு இருக்கும். ஒருமுறை, மூன்று ஜன்னல்-கண்ணாடிகளை என் கையை-முறுக்கி உடைத்ததை என் நண்பர்கள் அறிவர் - அது என் உயிர்நண்பனை அடித்து; அவனைக் காயப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் நிகழ்ந்தது. இருப்பினும், என் கோபத்தை வெளிக்காட்டிய ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தால் அப்படி செய்தேன்.  இதை இப்போது படிக்கும் அந்த நண்பர்கள் கூட்டம்; அந்த சம்பவத்தைக் கண்டிப்பாக, நினைவு கூர்ந்து சிரிப்பர். {அதன் பின், மருத்துவமனை சென்று என் கையில் தையல் போடப்பட்டது (அந்த சுவடு இன்னமும் என் கையில் இருக்கிறது. மேலும், அதே நண்பன் என்னை மருத்துவமனை வந்து பார்த்ததும்; நாங்கள் இருவரும் கட்டிப்பிடித்து அழுததும் வேறு கதை! ஹா... ஹா... ஹா...}
 • 3. மூன்றாவது மற்றும் அதிகப்படியான கோபம் வந்தால் - எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு; நிம்மதியாய் உறங்கிவிடுவேன். இப்படி, பலமுறை நான் செய்ததுண்டு. என்மகளிடம் கோபித்துக்கொண்டு அப்படி செய்ததைக் கூட இங்கே பகிர்ந்திருக்கிறேன். ஆம், தூக்கம் நல்ல மருந்து என்பதை அதுபோன்ற நிகழ்வுகள் எனக்கு தெளிவாய் புரிய வைத்திருக்கின்றன. இது நடந்து ஓராண்டுக்கும் மேல், திரு. கமல்ஹாசன் அவர்களும் "நீங்களும், வெல்லலாம் ஓர் கோடி" நிகழ்ச்சியில் விஸ்வரூபம் படப் பிரச்சனையின் போது;  தானும் தூங்கிவிட்டதாய் சொன்னார். அப்போது, உச்சபட்ச கோபத்தின் வெளிப்பாடு - தூக்கம் தான்! என்ற என் புரிதல் மிகச்சரியென தெரிந்தது. 
 • எனவே, என்னுடைய கோபத்தின் வெளிப்பாடு இந்த 3 வழிகளில் தான் இருக்கும். என் நெருங்கிய சுற்றமும்/நட்பும் இதை நன்கு அறிவர். 1-ஆவது வழி இப்போது தேவைப் படுவதில்லை! ஒரு நிகழ்விலிருந்து விலாகமலேயே "அமைதியாய்" இருந்து - என் கோபத்தை செயலிழக்க செய்ய பழகி வருகிறேன். 2-ஆவது வழியைப் பின்பற்றி கிட்டத்திட்ட 6 ஆண்டுகள் ஆகிறது. 3-ஆவது வழியைப் பின்பற்றும் சூழல் மேற்குறிப்பிட்ட என்மகள் மீதான கோபத்திற்கு பின் வந்ததிதில்லை.
 • அதாவது, என் கோபத்தை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்க பழகி வருகிறேன் என்றுதான் தெரிகிறது. அதனால் தான், அதிகப்படியான கோபம் உருவாகி 2 & 3-ஆம் நிலைகளுக்கு செல்வது தேவையில்லாமல் போய்விட்டது என்று நினைக்கிறேன். 
 • வெகு நிச்சயமாய், நமக்கு மிகவும் பிடித்த உறவுகள்/நண்பர்கள் மீது; நாம் எளிதில் கோபப்பட மாட்டோம். அப்படி கோபப்பட்டால், அது கண்டிப்பாக வெறும்-குரல் உயர்த்தலாய் இருக்காது என்பதில் எனக்கு மிகுந்த-நம்பிக்கை இருக்கிறது. எனவே, கோபம் என்பதன் வெளிப்பாடு நிச்சயம் வெறும் குரல்-உயர்த்தி பேசுவது இல்லை. இதை உணர்ந்ததால் தானோ என்னவோ; நான் எவரையும் "என்ன கோபமாக இருக்கிறீர்களா?!" என்று எளிதில் கேட்பதில்லை.
திரு. கலாம் அவர்கள் அடிக்கடி சொல்லும் "இடும்பைக்கு இடும்பைக் கொடு" என்பதன் அடிப்படியில் சொல்லவேண்டுமெனில்...

கோபத்தை; கோபப்படவைக்க நான் பழகி வருவதாகவே உணர்கிறேன்!!!

பின்குறிப்பு: உண்மையில், இத்தலையங்கத்தை என் வாட்ஸ்-ஆப் குழுவில் எனக்கு மிகவும் பிடித்த நண்பன் ஒருவன்; நான் குரல்-உயர்த்தியதைக் கோபம் என்று தவறுதலாய் புரிந்துகொண்டதைக் கண்டு - நான் மேலும், ஆற்றாமையும்/வருத்தமும் கொண்டு விளக்க முற்பட்டேன். அது, பலன் அளிப்பதற்கு மாறாக; எங்கள் விவாதத்தை அதிகமாக்கி விட்டது. அன்றே, இந்த தலையங்கத்தை எழுதினேன்; ஆனால், கடந்து 4 வாரமும் அதைப்பற்றியே சிந்தித்து - என் கருத்துகளை மேலும் செம்மையாக்கி இன்றுதான் பதிந்திருக்கிறேன். இத்தலையங்கம் கூட என்னுடைய கோபமாய் பார்க்கப்பட்டு விடக்கூடாது என்ற கவனமே அதற்கு காரணம்!!!

குறள் எண்: 0023 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 003 - நீத்தார் பெருமை; குறள் எண்: 0023}  

                       
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் 
பெருமை பிறங்கிற்று உலகு

விழியப்பன் விளக்கம்: செயல்களின் இருவகை சாத்தியக்கூறுகளை அறிந்து; இப்பிறவியில் அறத்தைப் பின்பற்றுவோரின் பெருமையே இவ்வுலகில் உயர்ந்தது.

(அது போல்...)

நடந்தவை அனைத்தையும் நடுநிலையோடு விவாதித்து; எந்நிலையிலும் நேர்மையைக்  கடைப்பிடிப்போரின் நீதியே இவ்வுலகில் சிறந்தது.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், ஆகஸ்ட் 24, 2015

என்னுடைய தேவை எது? எவர் நிர்ணயிப்பது??         என்மகளைப் பிரிந்து, நான் இங்கே தனித்திருக்க காரணம் - என்னுடைய பொருளாதாரத் தேவை என்பதை பலமுறை பதிந்திருக்கிறேன். ஆனால், சமீப காலமாய் "என்னுடைய தேவை எது? எவர் நிர்ணயிப்பது??" என்ற கேள்விகள், குழப்பங்கள். உண்மையில், என்னுடைய தேவை எது என்பதை சரிவர நிர்ணயிக்க எனக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது; பலவற்றை புரிந்து கொள்ள வேண்டியிருந்தது! எப்போதும், என்னுள் இருக்கும் ஒரேயொரு வைராக்கியம்: என்னப்பனின் கடனால் நான் இப்படி தனித்திருப்பது போல் - எந்த நிலையிலும், என்மகளுக்கு அப்படி நேரக்கூடாது என்பதே. ஆம், அதற்காகத்தான் அத்தனையையும் தாங்கிக்கொண்டு; நான் இங்கே தனித்திருக்கிறேன். அவளுக்கு "பணம் என்ற காகிதக் குப்பையின்" பின்னால் சென்று; வாழ்வின் மற்ற அழகியல்களை அனுபவிக்க-முடியாத நிலை வரவே கூடாதென்ற திண்ணம். இங்கே சமுதாய சூழலையும் ஆராய்ந்து புரிந்து கொள்ளவேண்டி இருக்கிறது. தான் சம்பாதிப்பது தனக்கும்...

           தான் சார்ந்த "உடனடி (Immediate)"குடும்பத்திற்கு மட்டுமே! என்ற இயல்பு-நிலை - இங்கே பலருக்கும் இல்லை. அப்படி இருக்குமானால்; எல்லோர் வாழ்வும் இன்ப-மயமாய் இருக்கும். அப்படியோர் நிலை இங்கேயில்லை என்பதால்தான், மேலைநாடுகளைப் பார்த்து நாம் "மயங்கிப்" போகிறோம்! அங்கே, எவரும் - தம் பிள்ளைகளுக்காகக் கூட - சம்பாதிப்பதே இல்லை. பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரைதான்; பெற்றோர் நிழலில்! பின்னர், அவர்கள் தனித்து விடப்படுவர். அதனால் தான், அங்கே உறவுகள் அவ்வளவு அற்புதமாய் இருக்கிறது. அங்கே, நம் மனிதமற்ற அரசியல்வாதிகள் போல், எவரும் "அறிவிலித்தனமாய்" 20-தலைமுறைகளையும் தாண்டி சொத்து சேர்ப்பதில்லை! அதில், அர்த்தமே இல்லை என்பதை அவர்கள் நன்கறிவர். நம் நாட்டில் மட்டுமே இப்படியொரு சமமின்மை!!! ஒருவேளை சாப்பாட்டிற்கே கடினப்படுவோரும் உண்டு! 20-தலைமுறைக்கு மேலும் சொத்து சேர்ப்பவரும் இங்குண்டு!! அரசியல்வாதிகள் மட்டுமல்ல...

          ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள்/சொத்துகள் வைத்திருக்கும் மத்தியத்தர வர்க்கம் முதல் - எல்லா நிலையிலும் இந்த சமமின்மை இருக்கிறது. இவற்றுக்கு அரசாங்கத்தை (மட்டும்) குறை கூறி பயனில்லை; ஏனெனில் - ஒரே வீட்டில்; ஒரே வயிற்றில் பிறந்த பிள்ளைகளிடையேயும் - இந்த சமமின்மை உண்டு. எனவே, அரசாங்கம் மட்டும் இதற்கு பொறுப்பல்ல! எங்கள் மூவரையும் எந்த குறையும்/வேறுபாடும் இல்லாமல் தான் என்னப்பன் வளர்த்தார். ஆனால், விதியுடன் என் திறமையும் சேர; நான் மட்டும் நன்கு-வளர்ந்து ஒரு சமமின்மையை உருவாக்கிவிட்டேன். அதில் என் பங்கும் உண்டென்றே கருதுகிறேன். என்னவளுக்கு நான் கொடுத்த வாக்குறுதியில் இன்று வரை நிறைவேறாத ஒன்றேயொன்று - வீடு வாங்குவது. இன்றே கூட, வங்கிக்கடன் வாங்கி அதை நிறைவேற்றமுடியும். ஆனால், அப்படி கடன் வாங்கி இன்றைய வாழ்வை; தொலைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மேலும், அது இன்னுமொரு சமமின்மையை, என்கடனால்...

        என்மகள் மூலம் உருவாக்கிட வழிவகுக்கும்; அதிலும் எனக்கு உடன்பாடில்லை! வீடைக் கேட்டு துன்புறுத்தாத என்னவளின் நிலைப்பாடும் அதற்கு பேர்துனை; அவளுக்கு என் சூழலும்/முடிவும் நன்கு தெரியும். சரி, வீட்டைத் தவிர; எனக்கு வேறென்ன தேவை? இதுவரை என்னவளின்/என்மகளின் மற்ற எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்தது போல்; இனியும் செய்யவேண்டும் - அதற்கான தேவை. சரி, மேலும்? அடுத்த முக்கியமானது; இந்தளவிற்கு வளர்ந்து இப்படியொரு சமமின்மையை என் வீட்டில் உருவாக்க - நான் ஏறிய ஏணியின் சில படிகள். ஆம்! அப்படி உதவிய என் உடன்பிறப்புகளுக்கு நான் செய்யவேண்டிய கடமையுண்டு. அவர்களுக்கு எல்லாமும் செய்யமுடியுமா?! என்றால், வெகுநிச்சயமாக இல்லை; என்னால் எல்லாமும் செய்யமுடியாது! ஆனால், நான் அவர்களுக்கு ஒரு படியாய் இருக்க முடியும். எப்படி? எங்கனம்? அவர்களின் தேவையும்; என்-சூழலும் அதை நிர்ணயிக்கும். அதற்கு தேவையான வகையிலும்...

          என்னைத் தயார் செய்து கொள்ளவேண்டி இருக்கிறது. நாம் ஏறிய ஏணியின் சில படிகளாய் இருந்தவர்களை; நாமேன் திரும்பிப் பார்க்கவேண்டும்? என்ற மனிதமற்ற கேள்வி எழலாம்! அப்படி நினைத்து, தங்கள் வாழ்க்கையை மட்டும் பிரதானமாய் எண்ணி வாழ்வோரும் உண்டு. அவர்களால் குறுகிய காலத்தில் தம் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளவும் முடியும். ஆனால், அது என் சுயமல்ல! என்னை இந்த நிலைக்கு கொண்டு சேர்த்துவிட்டு, இன்றும் கீழே இருப்போரை - அப்படியே விட்டுவிட, என்னால் இயலாது! மேலும், என் வளர்ச்சிக்கு வித்திட்ட அவர்களுக்கு - என்னுடைய கடனைத் திரும்ப செய்து - அதனால் ஏற்பட்ட சமமின்மையை சரி செய்ய முயல்வது என் கடமை அல்லவா? ஆம், நம் ஊரின்/மாநிலத்தின்/நாட்டின் சமமின்மையை சரிசெய்வதென்பது - நம் வீட்டை சமன் செய்வதில் இருந்தே துவங்க வேண்டும்! அதை நாமே செய்துகொள்ள வேண்டும்; அரசாங்கம் இதற்கு "நேரடியாக" எதுவும் செய்ய முடியாது! அப்படி செய்தாலும்...

          அது நிரந்தரமாய் இருக்காது! அப்படி, என்வீட்டை சரி செய்வதற்கான அடித்தளங்களை நான் அமைத்து கொடுத்திருக்கிறேன். இனி, அந்த சமமின்மையை முற்றிலும் அகற்றுவது அவர்களின் பொறுப்பாகும். எனவே, இப்போது எஞ்சியிருப்பது என்மகளும்/என்னவளும் ஆன என்-உடனடி குடும்பத்தை நிலைநிறுத்துதல் மட்டுமே! சரி... அதற்கு எவ்வளவு காலம் தேவை? இது தான் இறுதிக்கெடு என்று ஒரு கால-வரையறை செய்திருக்கிறேன்; அதுவரை, என் மூச்சிருக்கும் என்று நம்புகிறேன். அப்படியிருப்பின், என் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு; இந்த ஓட்டத்தில் இருந்து விலகிவிடுவேன்! இந்த ஓட்டத்தை என்மகளோ/என்னவளோ தொடரக்கூடாது என்ற எண்ணமே என் சிந்தனை முழுக்க நிறைந்திருக்கிறது. என்மகளும், என் மற்ற சந்ததியனரும் ஆவது - இப்படி மூச்சிரைக்க ஓடாமல், நிதானமாக நடந்து; இந்த உலகத்தின் பல்வேறு அழகியல்களை அனுபவித்து வாழவேண்டுமென ஆசைப்படுகிறேன். எனவே, என்னுடைய தேவைகளை...

நானேதான் முடிவு செய்து, நிர்ணயித்து - நிறைவேற்றியும் வருகிறேன்!!!

குறள் எண்: 0022 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 003 - நீத்தார் பெருமை; குறள் எண்: 0021}
                         
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

விழியப்பன் விளக்கம்: பற்றற்றவர்களின் பெருமையை அளவிட முயல்வது; இவ்வுலகில், இதுவரை இறந்தவர்களைக் கணக்கிட முனைவது போன்றதாகும்.

                                                               (அது போல்...)

குடும்பத்-தலைவரின் தியாகங்களை மதிப்பிட நினைப்பது; விண்ணுலகில், தோன்றும் நட்சத்திரங்களை எண்ணிட முனைவது போன்றதாகும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2015

என்ன விதமான அரசியல் இது??? (பாகம் 2)...

           இன்று முகநூலில் ஒரு காணொளியைக் காண நேர்ந்தது. அதைப் பகிர்ந்தவர் "இதைவிடவா அவர் கேவலமாக பேசிவிட்டார்?!" என்று தலைப்பிட்டு கேட்டிருந்தார். அக்காணொளி, தற்போது தமிழகத்தில் நடந்து வரும்; ஆளும்கட்சி போராட்டத்தைத் தொடர்பு படுத்தியது. இப்போராட்டம் நிச்சயம் முறையானது அல்ல! ஒருவர் கொச்சையாய் பேசியதை சட்டரீதியாக எதிர்கொள்ள பல வழிகள் இருக்கிறது என்பதில் எனக்கு(ம்) மாற்றுக்கருத்தில்லை. ஆனால், காலம் கடந்து நடந்தாலும் - போராட்டத்திற்கான மூலத்தை "முதலில்" பார்க்கவேண்டும். பள்ளிகள் துவங்கி, எல்லா இடங்களிலும் "ஒரு ஆணும்/பெண்ணும் பேசுவது எதார்த்தம்; முந்தைய தலைமுறைகள் போல் எந்த அடிப்படையும்-இன்றி, அதைத் தவறாய் பார்க்கவோ/சித்தரிக்கவோ கூடாது" என்ற மிகப்பெரிய சமுதாய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே! இந்த சூழலில், ஒரு மாநில முதல்வரும்; நாட்டின் பிரதமரும் சந்தித்து பேசியதை அநாகரீகமாய்...

        "ஒரு ஆணும்/பெண்ணும்" சந்தித்து பேசியதைப் போல கொச்சையாய் ஒரு அரசியல்வாதி பேசுவதே தவறு!" அதிலும், மேற்கூறிய வண்ணம் ஒரு மிகப்பெரிய சமுதாய மாற்றம் நிகழும் வேளையில் அப்படி "கொச்சையாய்" பேசுவது ஒழுங்கீனத்தின் உச்சமல்லவா?! மேலும், எந்த குற்ற உணர்வும் இல்லாது; தான் பேசியது சரியென்று இன்னமும் நியாயப்படுத்திக் கொண்டிருப்பது எத்தனை பெருந்தவறு?! அப்பேச்சை; ஆளும்கட்சியினர் சில நாட்கள் கழித்து போராட்டங்கள் மூலம் எதிர்த்து வருவது - அரசியல் ஆதாயத்தைக் காட்டுகிறதோ? என்ற சந்தேகம் எனக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அப்படி ஒருவர் கொச்சையாய் பேசியது தவறு என்பதையே நாம் முதலில் பார்க்கவேண்டும். இந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது; என்ன விதமான அரசியல் இது??? என்ற தலையங்கத்தின் இரண்டாவது பாகம் எழுதவேண்டிய தருணமிது என்று உணர்தேன். இப்போராட்டத்திற்கான காரணம் அந்த பேச்சு தான் என்பதால், முதலில் அதை நிவர்த்தி...

       செய்ய முயலவேண்டும்! எரிவதைப் பிடுங்கினால், கொதிப்பது அடங்கும் என்பது போல் - பின்னர் "இந்த முறையற்ற" போராட்டமும் நின்று போகும்; நின்றே ஆகவேண்டும்! ஆனால், அதை  விடுத்து; அப்படி பேசியவர் அதை நியாப்படுத்த முனையும் போதும்; அவருக்கு ஆதரவாய் மேற்கூறிய வண்ணம் எவரேனும் பதிவுகள் இடும்போதும்; என் மனம் இன்னும் கலங்குகிறது! ஏன் இவர்கள் தன்னொழுக்கம்/மனிதநேயத்திலிருந்து விலகி இருக்கிறார்கள்? என்ற ஆற்றாமை அதிகமாகிறது. ஒரு அசிங்கத்தை விவாதிக்கும் போது; அதைவிடவா அசிங்கம்?! என்று கேட்பது குறைபாடுள்ள-மனநிலையையே காட்டுகிறது. மேலே விவரித்த நிகழ்வை விட அந்த கானொளியில் இருக்கும் பேச்சு; ஆண்களையே முகம் சுளிக்க வைக்கும்! என்னால், அக்காணொளியை முழுதாய் காணமுடியவில்லை. அக்காணொளி பின் என் வாட்ஸ்ஆப் குழுவிலும் பகிரப்பட்டது. அங்கே, அக்காணொளி தவறென்று சுருக்கமாய் சுட்டிக்காட்டிவிட்டு, என் மனக்குமுறலை...

             இங்கே எழுத்துகளா(ய்/ல்) வடித்துக் கொண்டிருக்கிறேன். அக்கானொளியில் உள்ள பேச்சு "ஆபாசத்தின் உச்சம்!". அதனாலேயே அது உதாசீனப் படுத்தப் பட்டிருக்கும். ஆம்! எந்த ஒரு செயலின்/நிகழ்வின் இரண்டு எல்லைகளை (Extremes) நாம் உற்று-நோக்குவதில்லை; அது மனித இயல்பும் கூட. உதாரணத்திற்கு மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளை(யே) எடுத்துக் கொள்வோம்; இந்த நிகழ்வுகளின் மூலம் "தனிமனித ஒழுக்கம்!". எல்லாவற்றையும் போல, இதிலும் இரண்டு எல்லைகள் உண்டு: 1. தனிமனித ஒழுக்கத்தை உயிராய் கடைபிடிப்போர் 2. துளியும் தனிமனித ஒழுக்கம் இல்லாமல் இருப்போர். முதல் எல்லைக்கு உதாரணம் - திரு. கலாம் போன்ற உயர்ந்த மனிதர்கள். அவர்களை நாம் நெருங்கி/உற்றுநோக்கி கவனிக்காமல்; உயரிய நிலையில் வைத்து நாம் விலகி நிற்போம் - இது "உயரிய மரியாதை"யால் வருவது. இதற்கு, நேரெதிர்-எல்லை அந்த கானொளியில் பேசியவர் (அல்லது இன்னும்-கூட கொச்சையாய் பேசுவோர்)...

      போன்றவர்கள் - அவர்களையும் நாம் நெருங்காமல் தள்ளி வைப்போம்! ஆனால், இது "அசிங்கத்தை நாம் நெருங்கக்கூடாது" என்ற அருவருப்புடன் விலகி நிற்பது! இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை சரியாய் புரிந்து கொள்ளவேண்டும். எனவே, நாம் எப்போதும் நெருங்கி பேசி ஒரு பரஸ்பரமான-உறவில் வைத்திருக்க முயற்சிப்பது; இடைப்பட்ட நிலையில் உள்ளவர்களையே! அதாவது, முதல் நிகழ்வில் பேசிய நபர் போன்று! அவரிடம் எடுத்துக் கூறினால், புரிந்து கொள்வார்; ஒரு புரிதல் ஏற்பட்டு அந்த நிகழ்வை முடிக்கலாம் என்ற நம்பிக்கையில் கூட இப்போராட்டம் இருக்கலாம். இவையிரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அந்த கானொளியில் "ஒழுங்கீனத்தின் எல்லையில்" இருந்து பேசுபவர், கும்பிடுவதைப் பற்றி பேசியதைக் கேட்டதும்; நான் எனக்கு பிடித்த மனிதர்களின் காலை என் மிகுதியான-அன்பினால், தொட்டு வணங்குவது நினைவுக்கு வந்தது. அந்த அன்பை புரியாமல் கொச்சையாய்...

      விவாதிக்கும் அந்த அநாகரீகமான பேச்சை என்னால் தொடர்ந்து கேட்கமுடியவில்லை! பெற்றோர் காலில் விழுவதற்கே கூச்சப்படுபவர் பலருண்டு - ஏன்?! நாமே கூட அப்படி ஒருவராய் இருப்போம்! நிதர்சனம் இப்படியிருக்க, பொதுவெளியில் ஒரு-தலைவியின் காலில் விழுந்து வணங்கும் ஒருவருக்கு; எத்தனை அன்பு-மிகுதி இருக்கும்?! அதற்கு, ஏதேனும் ஆதாயம் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை! நம் பெற்றோரால் இனியும் ஆதாயம் இல்லை என்று நினைக்கும் கயவர்களால்-தானே? முதியோர் இல்லங்கள் பெருகுகின்றன?! ஒரு ஆதாயத்தால் கூட, அப்படி ஒரு அன்பின் வெளிப்பாடு இருந்துவிட்டு போகட்டுமே! அதனால், பிறருக்கு நேரடியாய் எந்த கெடுதலும் இல்லாதபோது, ஏன் இப்படி ஒழுங்கீனத்தின் உச்சத்தில் நின்று கொச்சைப்படுத்த வேண்டும்?! அப்படி பேசுவதே "3-ஆம் தர ஒழுக்கம் கெட்ட செயல் எனும்போது" எனில், நடந்து கொண்டிருக்கும் அசிங்கத்தை; அதை வைத்து மறைக்க முயற்சிப்பதை என்னவென்பது?!

        இப்படி ஒப்பிட்டு பேசுவதும் - இன்றைய தலைமுறைப் பெண்களிடம் "அப்படி என்ன, நீங்க பெரிதாய் கொடுமை கண்டீர்கள்?! சென்ற தலைமுறைப் பெண்கள் உடன்கட்டை கூட ஏறி இருக்கிறார்கள் தெரியுமா??!!" என்று அறிவிலித்தனமாய் வினவுவதும் ஒன்றே!!! வெகு நிச்சயமாய், என்றோ நிகழ்ந்த ஆணாதிக்கத்தால், இன்றைய ஆண்கள் பலவிதத்திலும் பாதிக்கப் படுகிறார்கள்! என்பதை நானேக் கூட பதிவு செய்து இருக்கிறேன். ஆனால், உடன்கட்டையோடு ஒப்பிட்டு கேள்வி கேட்பது முறையற்றது! ஏனெனில், இரண்டும் வெவ்வேறு சூழல்களில் நடந்தவை. அன்றைய ஆண்கள் போல், அத்தனைக் காட்டுமிராண்டித் தனமாய் இன்றைய ஆண்கள் இல்லை! இருக்கவும் முடியாது!! எனவே, அந்த காட்டுமிராண்டித் தனத்துடன் ஒப்பிட்டு நாம் கேள்வி கேட்கமுடியாது. அப்படித்தான், மேற்கூறிய ஒப்பீட்டுக்-கேள்வியையும் நான் பார்க்கிறேன். ஏன், இவற்றையெல்லாம் எவரும் யோசிப்பதில்லை?! இதுபோன்று நியாயமானவற்றை யோசிக்க முடியாத...

அளவிலா; தனிமனித ஒழுக்கம் இங்கே சீர்குலைந்து இருக்கிறது???

பின்குறிப்பு: சமீபத்தில் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுத ஆரம்பித்திருக்கும் என் பணியை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். 3-ஆம் அதிகாரமான "நீத்தார் பெருமை"யை ஆரம்பித்திருக்கும், இன்றைய தினத்தில் - தன்னொழுக்கம் பற்றி இப்படி ஒரு தலையங்கம் எழுத ஒரு வாய்ப்பு கிடைத்ததை; நம் பெருந்தகையின் ஆசிர்வாதமாகவே கருதுகிறேன்.         

குறள் எண்: 0021 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 003 - நீத்தார் பெருமை; குறள் எண்: 0021}

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

விழியப்பன் விளக்கம்: ஒழுக்கத்திற்காக, ஒழுங்கீனத்தைத் துறந்தவர்களின் பெருமையை; சிறப்பிக்கும் வண்ணம் - நூல்களின் பொருளும்/துணிவும் இருக்கவேண்டும்.

(அது போல்...)

பொதுநலனுக்காக, சிறு-ஊழலையும் மறுத்தோரின் கொள்கையை; வளர்க்கும் எண்ணத்தில் - மக்களின் ஆதரவும்/செயல்பாடும் இருக்கவேண்டும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, ஆகஸ்ட் 22, 2015

அதிகாரம் 002: வான் சிறப்பு (விழியப்பன் விளக்கவுரை)

             பால்: 1 - அறம்; இயல்: 01 - பாயிரவியல்;  அதிகாரம்: 002 - வான் சிறப்பு

0011.  வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
           தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

           விண்ணிலிருந்து இடையறாத பொழிதலால், உலகைக் காத்து வருதலால்; மழையை,
           சாகாமருந்தென உணர்தல் தன்மையாம்.
(அது போல்...)
           வீட்டிலிருந்து ஓயாத அக்கறையால், குடும்பத்தை உயிர்ப்பித்து வருவதால்; தாயை,
           உயர்சக்தியென நினைத்தல் சிறந்ததாம்.

0012.  துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
           துப்பாய தூஉம் மழை 

           விண்ணிலிருந்து தூறும் மழை - உண்பவர்களுக்குத் தேவையான உணவை,  உற்பத்தி செய்ய
           உதவுவது மட்டுமல்ல; தானுமே ஓர் உணவாகிறது.
                                                                        (அது போல்...)
           குடும்பத்திலிருந்து உழைக்கும் தாய் - உயிர்ப்பவர்களுக்குத் தேவையான அணுக்களை,
           கருவறை கொடுத்து உயிர்ப்பிப்பது மட்டுமல்ல; தானுமே ஓர் அணுவாகிறாள்.

0013.  விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
           உள்நின்று உடற்றும் பசி

           விண்ணிலிருந்து பொழியும் மழை பொய்த்துவிட்டால், பரம்பிய கடல் நீரால் சூழ்ந்த இந்த
           அகன்ற உலகத்தில்; உணவேதுமின்றி பசி வருத்தும்.
(அது போல்...)
           மனிதனிலிருந்து உதிக்கும் மனிதம் மரித்துவிட்டால்,  பெருகிய மனித இனத்தால் நிரம்பிய
           இந்த அகன்ற மண்ணுலகில்; அறமேதுமின்றி பயம் ஆக்கிரமிக்கும்.

0014.  ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
           வாரி வளங்குன்றிக் கால்

           விவசாயத்தால் கிடைக்கும் வருவாய் வளம், மழைக்குறைவால் பாதிக்கப்பட்டால்; உழவர்கள்
           நிச்சயமாய் ஏர்கொண்டு உழமாட்டார்.
(அது போல்...)
           வரிமூலமாய் உயரும் அரசாங்க கருவூலம், வரிஏய்ப்பால் குறைந்துவிட்டால்; அரசு-
           இயந்திரங்கள் கண்டிப்பாக அறம்சார்ந்து இயங்காது.

0015.  கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
           எடுப்பதூஉம் எல்லாம் மழை

           பொய்த்து துன்பப்படுத்துவது; மேலும், அப்படி துன்பப்பட்டோர்க்கு துணையாய் நின்று
           மீட்டுயர்த்துவது - இப்படி யாவுமாய் மழை இருக்கிறது.
(அது போல்...)
           ஆண்களை உயிர்ப்பிப்பது; தேவையெனில், அப்படி உயிர்ப்பித்தவர்களை திண்ணமாய்
           இருந்து அழிப்பது - இப்படி எல்லாமுமாய் பெண் இருக்கிறாள்.

0016.  விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
           பசும்புல் தலைகாண்பு அரிது

           விண்ணிலிருந்து விழும் மழைத்துளி இல்லையென்றால்; பின் இவ்வையகத்தில் ஒரு
           பச்சைப்புல் முளைப்பதைக் கூட பார்க்கவியலாது.
(அது போல்...)
           அடிமனதிலிருந்து வெளிப்படும் உன்னத-அன்பு இல்லையெனில்; பின் இவ்வுலகில் ஒரு
           உண்மையான ஊறவைக் கூட பார்க்கமுடியாது.

0017.  நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி 
           தான்நல்கா தாகி விடின் 

           மேகமானது பூரிப்புடன், மழையைப் பொழியாது போனால்; நீண்ட ஆழமான கடலும், தன்
           தன்மையை இழக்கும்.
(அது போல்...)
           குருவானவர் மனப்பூர்வமாய், ஆசிர்வாதத்தை வழங்கத் தவறினால்; நிகரில்லா வல்லவர்
           ஆயினும், தன் வல்லமையை இழப்பர்.

0018.  சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
           வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

           வானம்(மழை) வறண்டு போனால்; வானுலகத்தில் உள்ளவர்களுக்காக செய்யப்படும்
           விழாக்களும்/வழிபாடுகளும் நின்றுபோகும்.
(அது போல்...)
           மனிதன்(வயிறு) பசியில் வாடினால்; குடும்பத்தில் இருப்போர்க்காக திட்டமிட்ட
           பயணங்களும்/பொழுதுபோக்குகளும் வலுவிழக்கும்.

0019.  தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
           வானம் வழங்கா தெனின்

           வானம் மழையை வாரி வழங்காவிடின்; தானம் செய்வதும், நோன்பு நோற்பதும்  - இந்த
           அகன்ற உலகத்தில் நிலைக்காது.
(அது போல்...)
           உள்ளம் அறத்தை ஆழ்ந்து உணராவிடின்; மனிதம் நேசிப்பதும், ஒழுக்கம் பேணுவதும் - இந்த
           வலிமையான சமூகத்தில் தொடராது.

0020.  நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
           வான்இன்று அமையாது ஒழுக்கு

           நீரில்லாமல் உலகின் வாழ்வியல் கோளாறடையும் என்பதால்; மழை இல்லாமல்,
           எப்படிப்பட்டவருக்கும்  ஒழுக்கம் தவறும்!
(அது போல்...)
           தாயின்-கருவறையின்றி மனிதனின் பிறப்பு முழுமடையாது என்பதாய்; தாயின்
           அன்பில்லாமல், எவருக்கும் மனிதமும் நிறைவடையாது!

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை 

குறள் எண்: 0020 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 002 - வான் சிறப்புகுறள் எண்: 0020}
                             

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

விழியப்பன் விளக்கம்: நீரில்லாமல் உலகின் வாழ்வியல் கோளாறடையும் என்பதால்; மழை இல்லாமல், எப்படிப்பட்டவருக்கும்  ஒழுக்கம் தவறும்!

(அது போல்...)

தாயின்-கருவறையின்றி மனிதனின் பிறப்பு முழுமடையாது என்பதாய்; தாயின் அன்பில்லாமல், எவருக்கும் மனிதமும் நிறைவடையாது!

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015

குறள் எண்: 0019 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 002 - வான் சிறப்புகுறள் எண்: 0019}
                             

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

விழியப்பன் விளக்கம்: வானம் மழையை வாரி வழங்காவிடின்; தானம் செய்வதும், நோன்பு நோற்பதும்  - இந்த அகன்ற உலகத்தில் நிலைக்காது.

(அது போல்...)

உள்ளம் அறத்தை ஆழ்ந்து உணராவிடின்; மனிதம் நேசிப்பதும், ஒழுக்கம் பேணுவதும் - இந்த வலிமையான சமூகத்தில் தொடராது.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், ஆகஸ்ட் 20, 2015

பயணத்தில் கொடியது... விமானப்பயணம்!!!      தலைப்பைப் பார்த்தவுடன் எதைப்பற்றி எழுதப்போகிறேன் என்பது தெரிந்திருக்கும். ஆம்! விமானப்பயணம் எத்தனை கொடியது என்பதை என் பார்வையில் விளக்கவே இத்தலையங்கம். பெரும்பாலானோர், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பல சுகங்களை அனுபவிப்பதாய் கருதுவர். உண்மையில், குடும்பத்தோடு இருப்பவர்கள் தவிர்த்து, என்போன்று தனிமையில் இருப்போர்க்கு "பணம், அதிகமாய் கிடைக்கிறது என்ற ஒன்றைத்தவிர" வேறொன்றும் பெரிதாய் இல்லை. அதைக்கூட சுகமென்று நான் கருதுவதில்லை! என்னுடைய தேவையும்; பொருளாதாரக் குறைபாடு காரணமாய், என்னுடைய நாளைய தலைமுறை வெளிநாடுகளுக்கு சென்று அவதிப்படக்கூடாது என்ற முனைப்பாடும் தான் - முக்கிய காரணிகள். இதைத் தவிர்த்து பார்த்தால், என்னைப்போல் இங்கே இருப்பவர்களில் பெரும்பான்மையோருக்கு வேறெந்த விசயமும்/சுகமும் இல்லை. என் பெற்றோர்களை உடனிருந்து கவனிக்க முடியாத கலக்கத்தில் துவங்கி; என்மகளை...

           தினந்தோறும் பள்ளிக்கு கொண்டுசென்று விடமுடியாத ஏக்கம் வரை, பட்டியல் மிக நீண்டது. அந்த பட்டியலுக்கும் அப்பார்ப்பட்டு இருக்கும் கொடிய அனுபவம்தான் விமானப்பயணம். பலருக்கும், விமானப்பயணம் என்றால் பேர் சொகுசானப் பயணம் என்ற கற்பனையே இருக்கும். அதில் அடிக்கடி பயணம் செய்வோர்க்குத் தெரியும், அது எவ்வளவு கொடிய பயணம் என்று! ஆம், விமானப் பயணம் போல் மிக-பாதுகாப்பான பயணமும் ஏதுமில்லை; அதைப்போன்று மிக-ஆபத்தான பயணமும் ஏதுமில்லை. இப்படித்தான் நான் பலரிடமும் விமானப் பயணத்தை வரையறுப்பேன். நேற்று கூட ஆய்வக-நட்புகளிடம் இதுசார்ந்து பேசியபோது அதையே குறிப்பிட்டேன்; அவர்களும் அதை வெகுவாய் ஆதரித்தனர். அடிக்கடி விமானப் பயணம் மேற்கொள்ளும் பலரும் அதை ஆதரிப்பர்; அதுதான் உண்மையும் கூட. ஒன்று, சேரவேண்டிய இலக்கை முழுமையாக சென்றடைவோம்! இல்லையேல், எந்த தடமும் இல்லாமல் அழிக்கப்படுவோம். இதற்கு, சென்ற வாரம் நிகழ்ந்த...

        இந்தோனேசியா விமான விபத்து வரை பல ஆதாரங்கள் உள்ளன.  சமீபத்திய மலேசிய விமானம் போல், மர்மமான முறையில் மாயமான விமானங்களே பலவுண்டு! ஒவ்வொரு முறை விமானம் மேலேறும்போது இறைவனைத் தொழுவதற்கும், கீழே இறங்கிய பின் இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதற்கும் நான் தவறியதே இல்லை. இறைவன் காப்பற்றுகிரா? என்ற குதர்க்கம் வேண்டாம்; நான் அப்படி நம்புகிறேன், அவ்வளவே. அதிலும், சமீப காலமாய் "எத்திஹாட்"விமான சேவையில் விமானம் கிளம்பும் முன் "இறைவனைத் தொழுவதை" ஒலிபரப்பு செய்கின்றனர்; எனக்கு அந்த மொழியில் எதுவும் தெரியாது எனினும், அந்த நேரத்தில் மனமுருக வேண்டுவேன் - அல்லாவையும் சேர்த்தே! உண்மையில், நான் அதிகம் வேண்டுவது - இங்கிருந்து கிளம்பி போகும் போது தான். அதற்கு முழுக்காரணம் என்மகளைப் பார்க்காமல் நான் இறந்துவிடக்கூடாது என்ற ஆசைதான். என்வரவை எதிர்நோக்கிக்  காத்திருக்கும் அவளை ஏமாற்றிவிடக்கூடாது...

    என்ற வைராக்கியம்; அவளுக்காக வாங்கியவற்றைக் கொடுத்து, அவள் சந்தோசத்தை அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை. அதனால், இந்தியாவுக்கு செல்லும்போது என்னுடைய வேண்டுதல் மிகப்பலமாக இருக்கும். வரும்போது, அவளுடன் இருந்த சந்தோசத்-திமிரால் வேண்டுதல் பெரியதாய் இருக்காது. இருப்பினும், அவளுக்கு 20 அகவை ஆகும் வரையாவது உயிரோடு இருக்கவேண்டும் என்ற ஆசையுண்டு. என் அம்மா - எனக்கு திருமணம் ஆக தாமதமாகிக் கொண்டிருந்த போது - "உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்த்துட்டா போதும்டா!" என்று சொல்வதைக் கேட்டு அவரைக் கேலி செய்திருக்கிறேன். பின்னர் "உனக்கு ஒரு புள்ளை பொறந்து; அதை தூக்கி கொஞ்சிட்டு அதற்கப்புறம் போனாப் பரவாயில்லை!" எனும்போது அதிகமாய் கேலி செய்வேன். இப்போது "அவ வயசுக்கு வந்து தண்ணி ஊத்தறத பார்க்கணும்டா!" என்பார். ஆனால், இப்போதெல்லாம் அவரைக் கேலி செய்வதே இல்லை! ஏனெனில், நானே அதைத்தானே...

          செய்து கொண்டிருக்கிறேன்?! நிச்சயமாக, 20 அகவை கழிந்த பின், அவளின் திருமணம் வரை இருக்கவேண்டும்! என்று எனக்கும் தோன்றும். வாழும் ஆசையையும் தாண்டி - ஒவ்வொரு பெற்றோரும் (குறிப்பாய் தாய்க்கு) - தம் பிள்ளைகளுக்கு தாமே உடனிருந்து எல்லாமும் செய்ய ஆசைப்படுவதே அதன் மூலம். இது தவிர்க்கமுடியாதது; சச்சின் ரன்-குவிப்பை செய்யும்போது முதலில் ஒரு இலக்கை அடைந்து பின்னர் அடுத்தது - பின் அதற்கடுத்தது என்று கடக்க வேண்டும் என்பாரே; அது போன்ற ஒரு நிலைப்பாடு! ஒவ்வொரு இலக்காய் அடைய தொடர்ந்து எதிர்பார்த்து ஆசைப்படுவோம். எதிர்பார்ப்பு மட்டுமே நம்மிடம் உள்ளது! முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளை எல்லாம், ஒவ்வொரு விமானப்பயனமும் தகர்த்துவிடுமோ?! என்ற பரிதவிப்பு ஒவ்வொரு முறையும் இருக்கும். சாலையில் கூட விபத்து ஏற்படும்; நடந்து செல்வோர் கூட அடிபட்டு இறப்பதுண்டு என்று வாதிக்கலாம்!

       நானும், அப்படி வாதிப்பவன்தான்; ஆனால், அவற்றில் "பிழைப்பதற்கான சாத்தியக் கூறுகள்" அதிகம். ஆனால், விமானப்பயணத்தில் "ஒன்று கரணம்! இல்லையேல் மரணம்!!"; அதைத்தான் மேலே "மிக-பாதுகாப்பானதும்/மிக-ஆபத்தானதும்!" என்றேன். பயணம் பாதுகாப்பாய் முடியும் வரை, பயணிப்பரின் குடும்ப உறுப்பினர்கள் (மிக முக்கியமாய், ஒருவரின் தாய்/இல்லறத்-துணை) அடையும் வேதனையை/ஓய்வின்மையை சொல்லில் விவரிக்க முடியாது. இவையனைத்தையும் உணர்ந்து தான் கொடிய-பயணம் என்கிறேன். மேலுள்ள கருத்துப்படத்தில் உள்ளது போல், விமானப் பயணம் நடைமுறைக்கு வந்தால், எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்?! ம்ம்ம்.... எல்லாவற்றையும் மீறி விமானப் பயணத்தை மேற்கொண்டு தான் ஆகவேண்டும். வரும் நவம்பர் இறுதியில் அமெரிக்கா செல்லவேண்டும்; தொடர்ந்த 17-மணி நேரப் பயணம். பின் இன்னொரு சிறிய பயணம். இதுவரை 10 மணிக்கு மேல் தொடர்ந்து பயணித்தது இல்லை. அந்தப் பயணத்தை நினைத்து, இப்போதே...

என்மனம் பீதியடைகிறது! ஆனால், வாழ்க்கையை வாழ்ந்துதானே ஆகவேண்டும்??!!

குறள் எண்: 0018 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 002 - வான் சிறப்புகுறள் எண்: 0018}
                           

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

விழியப்பன் விளக்கம்: வானம்(மழை) வறண்டு போனால்; வானுலகத்தில் உள்ளவர்களுக்காக செய்யப்படும் விழாக்களும்/வழிபாடுகளும் நின்றுபோகும்.

(அது போல்...)

மனிதன்(வயிறு) பசியில் வாடினால்; குடும்பத்தில் இருப்போர்க்காக திட்டமிட்ட பயணங்களும்/பொழுதுபோக்குகளும் வலுவிழக்கும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், ஆகஸ்ட் 19, 2015

CSK-வும் என் மனநிலையும்...           CSK  என உச்சரிக்கும் போது தமிழ் பேசும் இந்தியர்களுக்கு வரும் அந்த உணர்வுபூர்வமான பரவசம் எனக்கு ஏற்படுவதில்லை. ஐ.பி.எல். துவங்கியதில் இருந்தே அதே நிலைப்பாடு தான் இருந்து வருகிறது. அந்த அணியில் ஆடும் அத்தனை பேருமே தமிழகத்தைச் சார்ந்தவர்கள் இல்லை என்பதே என்னுடைய நிலைப்பாட்டுக்கு காரணம். மேலுள்ள கருத்து படத்தில் சொல்லி இருப்பது போல், ஓரிரு ஆட்டக்கரர்களைத் தவிர, மற்றவர்களை "The pride of Chennai"-யாய் பார்க்க முடியவில்லை; அதானால் தான், கருத்துப்படம் கூட வீரர் எவரும் இல்லாமல் பொதுவாய் இருக்குமாறு செய்தேன். இது மொழி சார்ந்த வேறுபாடு இல்லை; என்னையே நான் தமிழ்-பேசும் இந்தியன் என்றுதான் "தமிழ் வளர" என்ற விருத்தப்பாவில் கூறியது போல் வரையறுப்பேன். தமிழ் மேல் எனக்கு பெரும் காதல் இருந்தும்; அந்த உணர்வு என்றுமே வெறி-உணர்ச்சியாய் மாறியதில்லை. எனக்கும் "தமிழ் தெரியுமாடா!" என்ற கர்வமும், இறுமாப்பும் எப்போதும் உண்டு.

        ஆனால், அது என் மனதோடு சம்பந்தப்பட்ட விசயம். மற்ற மொழி பேசுவோர் மேல் எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் எப்போதும் இருந்ததில்லை. நான் இங்கே சொல்ல முனைவது மொழி சார்ந்து அல்ல! சென்னை அணி என்று சொன்னால் - அதில் சென்னை மற்றும் தமிழகத்தைச் சார்ந்தோர் மட்டும் இடம்பெறவேண்டும்; இல்லையேல், அந்த அணியின் உரிமையாளர் பெயரில் "---- சிமெண்ட் கிங்க்ஸ்" என்று வைத்துக் கொள்ளட்டும். அந்த அணியைத் தமிழோடோ/தமிழகத்தோடோ தொடர்புப் படுத்தவேண்டாம். ஆனால், சென்னை என்று வைத்துக்கொண்டு அதில் ஓரிரு ஆட்டக்கார்கள் தவிர மற்ற எவரும் தமிழகத்தோடு தொடர்பு இல்லாதவர்கள்; என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வெளிநாட்டவர்கள் ஆடுவதைப் பற்றி எந்த குற்றச்சாட்டும் இல்லை; ஏனெனில், வெளிநாட்டவர்க்கு என்று ஒரு ஒதுக்கீடு உள்ளது; அதில் அவர்கள் மட்டும் தான் ஆடமுடியும். எனவே, அதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை.

       அணியில் ஆடும் மற்ற 7 பேர்களைப் பற்றியும்; அந்த குழுவில் இடம்பெறும் மற்ற நபர்கள் குறித்துதான் என் வாதம். ஏன் தமிழகத்தில் ஆட்டக்காரர்களே இல்லையா?! கண்டிப்பாக அவர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஆடினால், வெற்றி பெறுவது இமாலய இலக்காய் இருக்கும் என்பதில்; எனக்கு(ம்) எந்த ஐயமும் இல்லை. ஆனால், அவர்களைத் தொடர்ந்து ஆடவைத்தால் கண்டிப்பாக அவர்கள் வெற்றி பெரும் விதத்தில் வளர்வர். அப்படிப் பார்த்தால், ஏதாவது ஒரு அணி மட்டுமே தொடர்ந்து வெற்றி பெறவேண்டும் அல்லவா? ஆனால், நடைமுறை வேறு. CSK-வின் அணித்தலைவர், இந்திய அணியின் தலைவரும் கூட என்பதால் மட்டும் அந்த அணியை நான் ஆதரிக்க முடியுமா? அப்படி பார்த்தால், மற்ற அணியில் விளையாடுவோரும் இந்திய அணி வீரர்களே! அவர்களை நான் எப்படி எதிர்த்து புறம்-தள்ள முடியும்? இந்திய அணி ஒரு சாதாரண நாட்டு அணியோடு விளையாடும்போது கூட; பெருத்த எதிர்பார்ப்போடு/ஆரவாரத்தோடு ...

          பார்ப்பவன் நான். ஆனால், CSK வை குறைந்த அளவு ஆரவாரத்தோடும் என்னால் ஆதரித்து பார்க்க முடிவதில்லை. மற்ற ஐ.பி.எல். அணிகள் எதையும் கூட என்னால் ஆதரிக்க முடியாது; நான் தனித்து நின்று பொதுமையில், எல்லா அணிகளையும் இரசிக்கவே விரும்புகிறேன். சிறிதளவு ஆர்வம் வேண்டுமானால் சச்சின் விளையாடிய வரை அந்த அணியின் பால் இருந்தது; அவரின் திறமைக்காக மட்டுமல்ல! அவர் சார்ந்த மொழி/மாநிலத்தின் பால் அவருக்கு இருந்த பற்றுக்காக! அவர் நினைத்திருந்தால், எந்த அணியிலும் விளையாடி இருக்க முடியும். ஆனால், மும்பை தவிர மற்ற அணிக்கு விளையாட நினைத்தது கூட இல்லை. அதுபோலத்தான் CSK-விலும் தமிழகத்தைச் சேர்ந்தோர் மட்டுமே விளையாட வேண்டும் என்ற என் வாதமும். அப்படி நடந்தால், தமிழகத்தில் உள்ள பல இளம் வீரர்களை நாம் அடையாளம் காண முடியும். திறமை இருந்தும் இதுபோன்ற தளங்களில் தம்மை வெளிக்காட்ட முடியாத பல வீரர்களை; இப்படிப்பட்ட வாய்ப்புகள் நமக்கு...

          அடையாளம் காட்டும்! அவர்களை இனம்கண்டு மென்மேலும் மெருகேற்றி இந்திய அணியில் இடம்பெறச் செய்ய முடியும். அப்படி ஒரு வெளிப்பாடான நிலை வந்துவிட்டால் சமீபத்தில் ஒரு தமிழ் திரைப்படத்தில் சுட்டிக்காட்டிய வண்ணம்; ஒரே-இனத்தைச் சார்ந்தவர்களை மட்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யும் முறைகேடும் ஒழிக்கப்படும். உடனே, CSK அணியிலும் அப்படியே இனம் சார்ந்து தேர்வு செய்யப்பட்டால் என்ன செய்வது? என்ற வாதம் வரலாம். அப்படி எளிதில் செய்ய முடியாது; இந்திய அளவில் வேண்டுமானால் அப்படி இனம் சார்ந்து நடப்பது நம்மில் பலருக்கு தெரியாது போகலாம். ஆனால், ஒரு மாநில அளவில் அப்படி எளிதில் செய்ய முடியாது; அப்படி நடந்தால்; நம் மாநிலத்தில் இருக்கும் ஜாதிய-கட்சிகளை நாடலாம். அவர்கள் - குறைந்த பட்சம் அவர்களின் ஆதாயம் கருதியாவது - அதை எதிர்த்து போராடுவர். ஆனால், நடைமுறையில் அப்படி செய்வது சாத்தியம் இல்லை! ஏனெனில், சக தமிழக வீர்கள்... 

     அது பற்றி வெளியே எளிதில் பேசி அடையாளம் காட்டிடுவர்! இங்கே எனக்கு மற்றுமோர் ஆற்றாமை உண்டு. "தாங்கள் மட்டும்தான் தமிழர்கள்; தங்களுக்கு மட்டும் தான் தமிழைக் காக்கும் திறன் உள்ளது" என்ற அளவில் ஈன-அரசியல் செய்யும் சில அரசியல் கட்சிகள் ஏன் இன்னும் CSK அணியில் முழுக்க/முழுக்க தமிழ் பேசும் இந்திய வீரர்கள் இல்லை, என்று போராடவில்லை?!  ஒருவேளை, இதில் அதிக அரசியல் ஆதாயம் இல்லையோ! அல்லது, இதை எதிர்த்தால் கிரிக்கெட்-இரசிகர்கள் கொந்தளிப்பார்கள் என்றும் பின்வாங்கி விட்டனரா? எவர் தட்டிக் கேட்காவிட்டால் என்ன? என்னால், எவரையும் தட்டிக் கேட்க முடியாது! ஆனால், என் எண்ண ஓட்டத்தை வெகு சிலரிடமாவது கொண்டு சேர்க்க முடியும். அப்படி பலரையும் சேர்ந்திட்டின் - தமிழகத்தில் உள்ள பல இளம் வீரர்களுக்கு தங்களின் திறமையை மெருகேற்ற சரியான வாய்ப்புகள் கிடைத்து; தேசிய அணி அளவில் விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்த்திட, வாய்ப்பு கிடைக்கும். பார்ப்போம்...

எப்போது, CSK தமிழக வீரர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்க போகிறதென்று!!!   

தடிந்தெழிலி தான்நல்கா (குறள் எண் 0017)      "நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்" என்ற குறள் எண்  0017-இல் வரும் "தடிந்தெழிலி தான்நல்கா" எனும் சொற்றொடரைக் கவனியுங்கள். அட... அட... அட...! நம் பெருந்தகையின் மீதான என் பெருமிதம் - குறளுக்கு, குறள் உயர்ந்து கொண்டே செல்கிறது. மழையின் சிறப்பை சொல்லுதலே, சிறப்பு! மழைக்கென ஒரு அதிகாரம் வகுத்ததிலேயே பெருந்தகை மழைக்கு கொடுக்கும் முக்கியத்துவமும்/சிறப்பும் தெளிவாய் விளங்குகிறது. அதையும், மென்மேலும் சிறப்பாய் சீர்பட சொல்வதற்கு இதுபோன்ற சொற்றொடரை மிக இலாவகமாக கையாண்டிருக்கிறார். சரி, அதில் அப்படியென்ன சிறப்பு என்று பார்ப்போம். இந்த குறளின் பொதுப்பொருள்: "மேகம் கடலில் இருந்தே உருவாவதால், அது மீண்டும் மழையாய் பெய்யாது போனால், கடலும் வற்றும்" என்பதே! இந்த பொருள்படும்படி பெருந்தகை எளிதாய் இக்குறளை சொல்லி இருக்கமுடியும். ஆனால், அவர் நெடுங்கடல் என்கிறார்; கடலே பெரியது! நெடுங்கடல் என்றால்?! 

       நீண்ட/ஆழமான கடல்; அதாவது, பெருங்கடல். மேலும், "தடிந்து" என்கிறார்; அதென்ன? 'தடிந்து' என்ற சொல்லுக்கு மணக்குடவர் 'மின்னி' என்றும்; காலிங்கர் 'பூரித்து' என்றும்; பரிமேலழகர் 'குறைத்து' என்றும் பொருள் கூறுகின்றனர். ஏறக்குறைய மின்னி/பூரித்து இரண்டும் ஒரே பொருள் தரும்; குறைத்து என்பதைக் கூட பூரிப்பைக் குறைத்து என்று பொருள் கொள்ளலாம். "தான்நல்கா" என்று தொடர்வதைப் பார்க்கும் போது, பூரித்து என்பதே மிகவும் பொருத்தமானதாய் எனக்கு தோன்றியது. அதாவது, மழை பெய்யாது போனால் மட்டுமல்ல! அப்படி பொழிவது பூரிப்புடனும் இருக்கவேண்டும் என்கிறார். அதாவது, பூரிப்புடன் இருப்பது அவசியம் என்று எச்சரித்து சொல்வதாய் புரிந்தது. எந்த விளக்கவுரையிலும், பூரித்து என்ற சொல் உபயோகிக்கப்பட வில்லை. எனவே "மேகமானது பூரிப்புடன் மழையைப் பொழியாது போனால்; நீண்ட ஆழமான கடலும், தன் தன்மையை இழக்கும்" என்று என்னுடைய விளக்கவுரையை எழுதி இருக்கிறேன்.

இது வெறும் 0017-ஆவது தான்! இன்னும் நெடுந்தூரம் "தடிந்து" பயணிக்கவேண்டும்!!    

குறள் எண்: 0017 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 002 - வான் சிறப்புகுறள் எண்: 0017}
                           

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி 
தான்நல்கா தாகி விடின்

விழியப்பன் விளக்கம்: மேகமானது பூரிப்புடன், மழையைப் பொழியாது போனால்; நீண்ட ஆழமான கடலும், தன் தன்மையை இழக்கும்.

(அது போல்...)

குருவானவர் மனப்பூர்வமாய், ஆசிர்வாதத்தை வழங்கத் தவறினால்; நிகரில்லா வல்லவர் ஆயினும், தன் வல்லமையை இழப்பர்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், ஆகஸ்ட் 18, 2015

அசைந்தசைந்து செல்லும் வாத்து...       விடுமுறையில் இந்தியா செல்லும்போது, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்மகளைப் பள்ளியில் கொண்டு விடும் ஒவ்வொரு முறையும் என்னுள் எழும் எண்ணம், பின்வருவது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாய் இந்த எண்ண-ஓட்டம் என்னுள் ஓடிக்கொண்டு தானிருக்கிறது. மற்ற நேரங்களில் என்மகள் நன்கு வளர்ந்து வருவது போல் தோன்றினாலும், பள்ளி சீருடையில் இருக்கும் போது மட்டும் அவள் இன்னும் வளராமல் மழலையாய் இருப்பது போல தோன்றும். மற்ற பிள்ளைகளுடன் சேர்த்து பார்க்கும்போது அவள் மிகவும் சிறியதாய் தெரிவாள். ஆனால், அதில் ஒரு தனித்துவமான/அபாரமான அழகு இருப்பதை நான் கண்டு மகிழ்கிறேன். ஆம்! 4 வயதுக்கு மேல் உள்ள பிள்ளைகளை - இளம்-மழலை போலவே நாம் பார்ப்பதில்லை. அவர்களைக் கண்டிப்பதில் துவங்கி, அறவுரை சொல்வது வரை - இப்படி பல மாற்றங்கள் நம்மையும் அறியாமல் நிகழும். ஆனால், என்மகளின் உருவம் - இன்னமும் அவளை மழலைப் போலவே....

        பாவிக்க தூண்டுகிறது; குறிப்பாய் பள்ளி சீருடையில் பார்க்கும்போது! எனவே, சீருடையோடு அவளைப் பள்ளியில் விடும் ஒவ்வொரு முறையும் - நான் பள்ளி வாசற்கதவு வரை சென்று, புத்தக-மூட்டையை (ஆம்! அதை பை என்று சொல்லிட எனக்கு தோன்றுவதே இல்லை! அது நிச்சயமாய் "தேவையற்ற எடையுடைய" மூட்டை!!) அவளின் முதுகுப்புறம் தொங்கும் வண்ணம் மாட்டிவிட்டு; கையில் மதிய உணவுப்-பையை கொடுத்துவிட்டு, அவளுக்கு ஒரு முத்தம் கொடுப்பேன். பின், அவள் எனக்கு கன்னத்தின் இருபுறமும் ஒவ்வொன்று, நெற்றியில் 1,  கீழ்த்தாடையில் 1 என - மொத்தம் 4 கொடுப்பாள். சென்ற சூலையில் சென்றபோது வரை இப்படியே தொடர்கிறது; தொடரும். பின்னர், அவளுக்கு விடை கொடுத்து அனுப்புவேன். ஆனால், நான் அங்கேயே நின்று கொண்டிருப்பேன்; அவளும் அடிக்கடி திரும்பி எனக்கு கையை அசைத்துவிட்டு நடக்கத் துவங்குவாள். எப்படியும், 200 மீட்டருக்கும் மேல் நடக்க வேண்டும் என்பதால், வெகு நேரம்...

     மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நின்று கவனிப்பேன். அந்த மூட்டை கொடுக்கும் அழுத்தத்தால் என்மகள் அசைந்து, அசைந்து நடப்பாள். பார்ப்பதற்கே என் நெஞ்சம் கனக்கும்; இந்த வயதில் எதற்கிந்த "தேவையற்ற எடை???" என்ற கோபமும்; நம் கல்வி முறை மீதான, நான் பதிந்த என் பார்வையும் - அந்த குறுகிய இடைவெளியில் மின்னலாய் எரிந்து அடங்கும். ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி என்மகள் அசைந்து, அசைந்து நடக்கும் அழகு இருக்கிறதே! அட... அட... எத்தனைக் கொடுத்தாலும் கிடைக்காத பேரின்பம் - அந்த சில நிமிட நடைப்பயணம். அதை நான் ஆழ கவனித்து அனுபவிக்கத் தவறியதே இல்லை. இன்று வரை ஒரு நாள் கூட சலிப்பு ஏற்பட்டதே இல்லை. ஒரு அழகிய சின்னஞ்சிறு வாத்து நடப்பது எவ்வளவு நளினமாய்/அழகாய் இருக்கும்?! அதைக் கற்பனை செய்து பாருங்கள். ஆம், என்மகள் அப்படித்தான் நடப்பாள்! அவள் என் கண்ணிலிருந்து மற்ற பிள்ளைக்கடலில் கலந்து மறையும் வரைப் பார்த்துவிட்டு பின்தான்...

      அங்கிருந்து நகர்வேன். பல தந்தைகளும் இருசக்கர வாகனத்தில் வந்து சாலையிலேயே இறக்கி விட்டுவிட்டு செல்வதைப் பார்க்க நேரிடும். வாகனத்தைக் கூட ஓரமாக நிற்க வைப்பதில்லை. அவர்களின் அவசரம் எனக்குப் புரிந்திடினும், மேற்குறிப்பிட்டதை எல்லாம் அவர்கள் காணத் தவறுகின்றனரே! என்ற ஆதங்கம் என்னுள் எழும். நான் விடுப்பில் இருப்பதால், அத்தனை நிதானமாய் என்னால் அங்கிருந்து இரசிக்க முடிகிறது என்பதை நான் மறுக்கவில்லை. அவ்வாறு யோசித்துப் பார்த்து என்னை நானே "நீ இங்கு வந்து பணியாற்றும்போது; இப்படித்தான் செய்வாயா?!" என்று கேட்டிருக்கிறேன். நன்கு யோசித்தபின் ஒரு தெளிவான பதில் கிடைக்கும். இல்லை! எந்த நிலையிலும், நான் இந்த அனுபவத்தை/அழகியலை இழக்கமாட்டேன் என்ற உறுதியான பதில் கிடைக்கும். ஆம்! வெகு நிச்சயமாய் எனக்கு தேவையான அந்த சில நிமிடங்களை வைத்துக்கொண்டு தான் என்மகளைப் பள்ளிக்கு அழைத்து செல்வேன். எந்த...

       காரணத்திற்காகவும் நான் அந்த சுகத்தை இழக்கமாட்டேன். எத்தனை நாள் தொடர்ந்து பார்த்தாலும்; நித்தம் நித்தம் அது ஒரு புது அனுபவமாகவே இருக்கும். அதற்காக சில நிமிடங்களை ஒதுக்கி செலவிடுவேன்; என் வேலையை அதற்கேற்றார்ப்போல் மாற்றி அமைப்பேன். பெரும்பான்மையில், அவர்களுக்கு இப்படியொரு அழகியல் இருப்பது தெரிவதில்லை; இல்லையேல், அவ்வளவு அவசரமாக சாலையிலேயே இறக்கிவிட்டு செல்லமாட்டார்கள். அவர்களில் ஒருசிலராவது இந்த தலையங்கத்தைப் படித்து, இந்த அழகியலைக் காண வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம். என்னைப்போல் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், அவர்களுக்கு இப்படி ஒரு பதிவை எழுதி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எத்தனித்தாலும், நேரம் கிடைக்காது போகக்கூடும்.  வெகுநிச்சயமாய் அப்படியொரு அழகியலை அனுபவிக்க மட்டுமல்ல; உங்களுடன் பகிரவும் எனக்கு நேரம் கிடைத்திருப்பது...

எல்லாம் வல்ல அந்த இறையருளால் தான் என்பதை மறுப்பதற்கில்லை!!!         

பசும்புல் தலைகாண்பு (குறள் எண்: 0016)           "விசும்பின் துளிவீழின்" என்று துவங்கும் குறள் எண் 0016-இல் "பசும்புல் தலைகாண்பு" என்ற சொற்றொடரில் வரும் "தலை" என்ற சொல்லிற்கு பசும்புல்லின் தலை/பசும்புல்லின் நுனி/பசும்புல்லின் தோற்றம் என்பது போன்றே எல்லோரும் பொருள் படுத்தி இருக்கின்றனர். எனக்கென்னவோ, இவற்றை எல்லாம் விட வேறேதேனும், இன்னும் கருத்து செறிந்த பொருள் இருக்கக்கூடும் என்று தோன்றியது. மேற்குறிப்பிட்டவை அல்லாமல், வேறேதேனும் ஒரு தனித்த/அழுத்தமான காரணம் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

       தொடர்ந்து யோசித்ததில், நம் பெருந்தகை "தலை" என்ற சொல்லை "முளைத்தல்" என்ற பொருளிலேயே எழுதி இருப்பார் என்றி தோன்றியது. ஆம் "பசும்புல் முளைப்பதை"க் கூட பார்க்க முடியாது என்று சொல்லும்போது, மழையின் அவசியத்தை அவர் எத்தனை ஆழமாய் சொல்ல வருகிறார் என்பதை உணர முடிகிறது. எனவே, என்னுடைய விளக்கவுரையில் "ஒரு பச்சைப்புல் முளைப்பதைக் கூட பார்த்தல் இயலாது" என்றே கூறியிருக்கிறேன். நம் பொதுமறையில் மேலோட்டமாய் பார்க்கும்போது பல சொற்கள் மிகச் சாதாரணமாய் தோன்றும். ஆனால்...

அவற்றை ஆழ ஆராய முனைந்தால், பற்பல பொருள்-குவியல்கள் கிடைக்கும்!!!