புதன், செப்டம்பர் 30, 2015

குறள் எண்: 0059 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 006 - வாழ்க்கைத் துணைநலம்குறள் எண்: 0059}

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் 
ஏறுபோல் பீடு நடை

விழியப்பன் விளக்கம்: புகழ் சேர்க்கும் இல்லத்தவள் இல்லாதவர்க்கு, தம்மை இகழ்வோர் முன்பு; சிங்கம்போல், இன்பத்திமிருடன் நடத்தல் சாத்தியமில்லை.
(அது போல்...)
மனத்தூய்மை அளிக்கும் அறநெறி அற்றோர், தம்மீதான விமர்சங்களை எதிர்த்து; சான்றோர்போல், தலைநிமிர்த்தி வாதிடுதல் இயலாது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், செப்டம்பர் 29, 2015

குறள் எண்: 0058 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 006 - வாழ்க்கைத் துணைநலம்குறள் எண்: 0058}

பெற்றார் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் 
புத்தேளிர் வாழும் உலகு

விழியப்பன் விளக்கம்: தன்னை மனைவியாகப் பெற்றவரின், அரவணைப்பைப் பெறும் பெண்கள்; வானவர் வாழும் விண்ணுலகின் பெருஞ்சிறப்பைப் பெறுவர்.
(அது போல்...)
தன்னை தலைவனாக ஏற்றோரின், பேரன்பைப் பெறும் தலைவர்கள்; சரித்திர நாயகர்களின் பட்டியலில் முன்னிலை வகிப்பர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், செப்டம்பர் 28, 2015

குறள் எண்: 0057 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 006 - வாழ்க்கைத் துணைநலம்குறள் எண்: 0057}

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

விழியப்பன் விளக்கம்: சிறைவாசம் போன்ற காவல் என்ன விளைவிக்கும்? எண்ண-விடுதலையே, பெண்களை முழுமைப்படுத்துவதன் முதன்மையாகும்.
(அது போல்...)
கடுமையான சட்டங்கள் மட்டும் எவற்றை மாற்றும்? சுய-ஒழுக்கமே, மனிதத்தை விதைப்பதன் முதற்படியாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, செப்டம்பர் 27, 2015

குறள் எண்: 0056 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 006 - வாழ்க்கைத் துணைநலம்குறள் எண்: 0056}

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற 
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

விழியப்பன் விளக்கம்: தன்னையும், தன்னை கொண்டவனையும் பேணிக்காத்து; குடும்பத்தின் புகழையும் காத்து, சோர்வற்று இருப்பவளே மனைவியாவாள்.
(அது போல்...)
தன்னையும், தனைச்சார்ந்த மக்களையும் பாதுகாத்து; ஜனநாயக நீதியை நிலைநாட்டி, தடுமாறாது ஆள்பவரே ஆட்சியாளர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, செப்டம்பர் 26, 2015

குறள் எண்: 0055 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 006 - வாழ்க்கைத் துணைநலம்குறள் எண்: 0055}

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் 
பெய்யெனப் பெய்யும் மழை

விழியப்பன் விளக்கம்: தெய்வத்தைத் தொழாமல், கணவனைத் தொழுது; காலையில் எழும் குணமுடையவள், பெய்யென்று சொன்னால் மழை பொழியும்.
(அது போல்...)
பணத்தை மதிக்காமல், குணத்தை மதித்து; உறவுகளைப் பேணுவோர் சொல்வதை; அவர் சுற்றம் மந்திரம்போல் கடைபிடிக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, செப்டம்பர் 25, 2015

குறள் எண்: 0054 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 006 - வாழ்க்கைத் துணைநலம்குறள் எண்: 0054}

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் 
திண்மையுண் டாகப் பெறின்

விழியப்பன் விளக்கம்: உள்ளத்தால் கற்புடனிருக்கும், நிலையைக் கடைப்பிக்கும் உறுதியிருப்பின்; பெண்ணை விட உயர்ந்தவை வேறெவை உள்ளன?
(அது போல்...)
ஒழுக்கநெறியில் பயணிக்கும், அடிப்படையை நிலைநாட்டும் வைராக்கியமிருப்பின்; மனிதனை விட உயர்சக்தி வேறெது இருக்கும்?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், செப்டம்பர் 24, 2015

குறள் எண்: 0053 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 006 - வாழ்க்கைத் துணைநலம்குறள் எண்: 0053}

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் 
இல்லவள் மாணாக் கடை

விழியப்பன் விளக்கம்: நல்லறமும்/நற்பண்பும் கொண்ட இல்லத்துணை அமைந்தால், ஓர் இல்லத்தில் இல்லாததென்ன? அப்படி அமையாமல், இருப்பதுதான் என்ன?
(அது போல்...)
நல்மண்ணும்/நீர்வளமும் இணையும் வாய்ப்புக் கிடைத்தால், ஓர் நிலத்தில் விளையாததென்ன? அப்படி இணையாமல், விளைவதுதான் என்ன?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், செப்டம்பர் 23, 2015

குறள் எண்: 0052 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 006 - வாழ்க்கைத் துணைநலம்குறள் எண்: 0052}

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினு மில்

விழியப்பன் விளக்கம்: பெருமைசேர் இல்ல-அறம் இல்லாதவரை, வாழ்க்கைத்துணையாய் கொண்ட இல்வாழ்க்கை; பல்வித பெருமைகள் உடையினும் சிறப்படையாது.
(அது போல்...)
மகிழ்ச்சிசேர் மனித-நேயம் இல்லாதவரை, முன்னுதாரணமாய் கொண்ட இளைஞர்கள்; பல்வேறு திறமைகள் இருந்தும் பயனில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், செப்டம்பர் 22, 2015

குறள் எண்: 0051 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 006 - வாழ்க்கைத் துணைநலம்குறள் எண்: 0051}

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

விழியப்பன் விளக்கம்: இல்லறத்தின் மாண்பை உணர்ந்து, மணந்தவரின் வருவாய்க்குள் குடும்பம் நடத்தும் தகுதியே - வாழ்க்கைத் துணையின் சிறப்பம்சமாகும்.
(அதுபோல்...)
தொழில் தர்மத்தை மதித்து, நுகர்வோரின் நன்மைக்காகவும் பெருந்தொழில் செய்யும் அறமே - தொழில் அதிபர்களின் இயல்பாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், செப்டம்பர் 21, 2015

அதிகாரம் 005: இல்வாழ்க்கை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 005 - இல்வாழ்க்கை

0041.  இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
           நல்லாற்றின் நின்ற துணை
  
           விழியப்பன் விளக்கம்: குடும்பத்தின் அடிப்படையான - பெற்றோர்/உடன்பிறந்தோர்/
           மனைவி-மக்கள் - இம்மூவர்க்கும் அறவழியில் துணைநிற்பவனே; சிறந்த
           குடும்பத்தன் ஆவான்.
(அது போல்...)
           அரசியலின் அடிப்படியான - மனிதம்/மாட்சிமை/மக்களாட்சி - இம்மூன்றையும்
           நேர்மையுடன்  தொடர்பவனே; சரித்திர தலைவன் ஆவான்.

0042.  துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் 
           இல்வாழ்வான் என்பான் துணை

           விழியப்பன் விளக்கம்: துறவிகள்/பசித்திருப்போர்/ஆதரவற்றோர் - இவர்களுக்கு 
           இல்லற-வாழ்க்கை வாழ்பவன் துணையாவான்.
(அது போல்...)

           விவசாயம்/விலைவாசி/பாதுகாப்பு - இவற்றிற்கு அரசு-இயந்திரத்தை நிர்வகிப்போர் 
           பொறுப்பாவர்.

0043.  தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
           ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

           விழியப்பன் விளக்கம்: இறந்து-தெற்கில் இருப்போர்/கடவுள்/விருந்தினர்/சுற்றம்/
           தானெனும்-சுயம் - இவர்கள் ஐவரிடத்தும், அறநெறியை தவறாமல் பேணுதல் 
           சிறப்பாகும்.
(அது போல்...)
           மரம்/செடி-கொடி/சுற்றுச்சூழல்/சிற்றுயிர்/பேருயிர் - இவையைந்தின் வளமும்; 
           அடிப்படையை மறக்காமல் காத்தல் மனிதமாகும்.

0044.  பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை 
           வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்


           விழியப்பன் விளக்கம்: தீவினைக்கு அஞ்சி, அறமுணர்ந்து சேர்த்ததைப் பகிர்ந்துண்ணும்
           தன்மையிருப்பின்; நம்வாழ்வு, என்றைக்கும் முடிந்து போவதில்லை.
(அது போல்...)
           மனசாட்சிக்குப் பணிந்துப், பொதுநலத்துடன் அதிகாரத்தைப் பகிரும் இயல்பிருப்பின்;
           ஓர்அரசாட்சி எந்த தேர்தலிலும் தோற்காது.
          
0045.  அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
           பண்பும் பயனும் அது

           விழியப்பன் விளக்கம்: அன்பும்/அறநெறியும் இருக்குமேயானால்; அந்த இல்வாழ்க்கையின், 
           சிறந்த பண்பும்/பயனும் அவைவேயாகும்.
(அது போல்...)
           மனிதமும்/தன்னொழுக்கமும் கொண்டிருப்பின்; ஒரு தலைவனின், சிறந்த ஆற்றலும்/
           பொதுநலமும் அவையேயாகும்.

0046.  அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் 
           போஒய்ப் பெறுவ எவன்


           விழியப்பன் விளக்கம்: அறநெறியில் பயணிக்கும் இல்லற வாழ்வில் கிடைக்கும் 
           பேறுகளை-விட, சிறந்ததாய்; வேறு நெறியில் பயணிப்பதில் கிடைப்பதேது?
(அது போல்...)
           நேர்மையான வழியில் பணிசெய்வதால் கிடைக்கும் மனநிறைவை-விட, நிறைவானதாய்;
           மாற்று வழியில் பணிசெய்து அடையமுடியுமா?

0047.  இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
           முயல்வாருள் எல்லாம் தலை

           விழியப்பன் விளக்கம்: அறநெறியோடு இயல்பான இல்வாழ்க்கையை வாழ்பவன் 
           என்பவன்; அங்ஙனம் வாழ முயற்சிப்போருக்கு முதன்மையாவான்.
(அது போல்...)
           பொதுநலனோடு முறையான மக்களாட்சியை நடத்தும் தலைவரே; அதுபோல்
           ஆட்சியமைக்க முனைவோருக்கு உதாரணமாவார்.

0048.  ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 
           நோற்பாரின் நோன்மை உடைத்து

           விழியப்பன் விளக்கம்: தானும் அறநெறி தவறாது; குடும்பத்தாரும் அறநெறி தவறிடாது 
           காத்திடுவோரின் இல்வாழ்க்கை; துறவிகளின் மனவலிமையை விட உயர்ந்ததாகும்.
(அது போல்...)
           தானும் ஊழல் செய்யாது; கட்சியினரும் ஊழல் செய்யாது காத்திடும் தலைவன்; 
           உயிர்காக்கும் மருத்துவரை விட மேன்மையானவன்.

0049.  அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் 
           பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

           விழியப்பன் விளக்கம்: அறமென்று வரையறுப்பதே, இல்வாழ்க்கை ஆகும்! அதுவும், எவரும் 
           குறைகாண முடியாதிருப்பின் - சாலச்சிறந்தது.
(அது போல்...)
           பொதுச்சேவை என்பதே, தலைமைப்பண்பு ஆகும்! அதுவும், எதிர்கட்சியும் விமர்சிக்க 
           இயலாதிருப்பின் - சரித்திரமாகும்.

0050.  வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
           தெய்வத்துள் வைக்கப் படும்

           விழியப்பன் விளக்கம்: மண்ணுலகில், இயல்புடைய இல்வாழ்க்கையை வாழ்பவன்;  
           விண்ணுலகில் இருக்கும் தெய்வத்துக்கு இணையாக கருதப்படுவான்.
(அது போல்...)
           ஓர்ஊரில், முறையான சமூக-உறவை நிலைநாட்டுவோர்; தேச-எல்லையைக் 
           காத்திடும் இரானுவத்தினருக்கு ஒப்பாக மதிக்கப்படுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

குறள் எண்: 0050 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 005 - இல்வாழ்க்கைகுறள் எண்: 0050} 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்

விழியப்பன் விளக்கம்: மண்ணுலகில், இயல்புடைய இல்வாழ்க்கையை வாழ்பவன்; விண்ணுலகில் இருக்கும் தெய்வத்துக்கு இணையாக கருதப்படுவான்.

(அது போல்...)

ஓர்ஊரில், முறையான சமூக-உறவை நிலைநாட்டுவோர்; தேச-எல்லையைக் காத்திடும் இரானுவத்தினருக்கு ஒப்பாக மதிக்கப்படுவர்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, செப்டம்பர் 20, 2015

குறள் எண்: 0049 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 005 - இல்வாழ்க்கைகுறள் எண்: 0049} 

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

விழியப்பன் விளக்கம்: அறமென்று வரையறுப்பதே, இல்வாழ்க்கை ஆகும்! அதுவும், எவரும் குறைகாண முடியாதிருப்பின் - சாலச்சிறந்தது.

(அது போல்...)

பொதுச்சேவை என்பதே, தலைமைப்பண்பு ஆகும்! அதுவும், எதிர்கட்சியும் விமர்சிக்க இயலாதிருப்பின் - சரித்திரமாகும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, செப்டம்பர் 19, 2015

குறள் எண்: 0048 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 005 - இல்வாழ்க்கைகுறள் எண்: 0048} 

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து

விழியப்பன் விளக்கம்: தானும் அறநெறி தவறாது; குடும்பத்தாரும் அறநெறி தவறிடாது காத்திடுவோரின் இல்வாழ்க்கை; துறவிகளின் மனவலிமையை விட உயர்ந்ததாகும்.

(அது போல்...)

தானும் ஊழல் செய்யாது; கட்சியினரும் ஊழல் செய்யாது காத்திடும் தலைவன்; உயிர்காக்கும் மருத்துவரை விட மேன்மையானவன்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, செப்டம்பர் 18, 2015

இழந்த நம்பிக்கையும், இமாலய இலக்கே!


இனியவுறவின் நம்பிக்கையை
இழந்திடல் எளிதாம்!
இமையத்தைத் தொட்டிடும்,
இலக்கையும் போன்றதாம்
இழந்த நம்பிக்கையை;
இயல்போடு மீட்டெடுப்பதும்!!

குறள் எண்: 0047 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 005 - இல்வாழ்க்கைகுறள் எண்: 0047} 

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
முயல்வாருள் எல்லாம் தலை

விழியப்பன் விளக்கம்: அறநெறியோடு இயல்பான இல்வாழ்க்கையை வாழ்பவன் என்பவன்; அங்ஙனம் வாழ முயற்சிப்போருக்கு முதன்மையாவான்.

(அது போல்...)

பொதுநலனோடு முறையான மக்களாட்சியை நடத்தும் தலைவரே; அதுபோல் ஆட்சியமைக்க முனைவோருக்கு உதாரணமாவார்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், செப்டம்பர் 17, 2015

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் (குறள் எண்: 0046)        "அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்" என்ற  குறள் எண்: 0046-இற்கான விளக்கவுரையை எழுதுவது பெருத்த சிரமமாய் இருந்தது. "படிப்பதற்கு மட்டுமல்ல! பொருளும் கூட எளிதானது!!" என்று நம்மை ஒரு பொய்-நம்பிக்கைக்கு உள்ளாக்கும் பல குறள்களில் இதுவும் ஒன்று. இந்த குறளுக்கு "ஒழுக்கமா குடும்பம் நடத்துறத விட; வெளியில போயி என்னத்த காணமுடியும்?" என்று மிகச்சுருக்கமாய் பொருள் சொல்லிவிட முடியும். ஆனால், அப்படி சொல்லிவிட்டால் அது "திரு"க்குறளாக இருக்கமுடியாது! அது சமுதாயத்தில் கேட்கும் "தெரு"க்குரலாக ஆகிவிடும். சரி, இருக்கும் விளக்கவுரைகளில் எவரும் சுருக்கமாய் எழுதி இருக்கிறார்களா?! என்று தேடினால், இல்லை என்ற உண்மையே பதிலாகக் கிடைத்தது. குறளிலுள்ள வார்த்தை எதையும் விடுபடாது கவனம் கொண்டு - சுருங்கவும் இல்லாமல்/தேவைக்கு மிகாமலும் விளக்கவுரை எழுதவேண்டும் என்பதே என் சுய-நிபந்தனை. ஆனால், இந்த குறளில் நம் பெருந்தகை...

       "அறத்தாற்றின்" என்ற வார்த்தையை சொல்கிறார்; அதை நீக்கினால், குறளின் மகிமையே கெடும். எனவே, அதையும் உட்கொண்டு விளக்கவுரை எழுதவேண்டும். மேலும் "போஒய்ப் பெறுவ எவன்" என்று கேட்டு முடித்திருக்கிறார். அப்போது, கண்டிப்பாக, எதை விட வெளியில் பெற முடியாது என்பதைச் சுட்டிக்காட்டுவது விளக்கவுரையின் கடமையாகிறது. பலரும் "வேறு நெறியில் சென்று பெறுவது என்ன?" என்று மட்டுமே சொல்லி இருக்கிறார்கள். எதை? என்று குறிப்பிட விரும்பினேன்; எதை சொல்வது? என்ற குழப்பமும்! ஏற்பட்டது. குடும்பத்தில் கிடைக்காத ஒன்றென்று எதுவும் இருக்கமுடியுமா? என்று நம் பெருந்தகை கேட்ட கேள்வியே, எதிர்கேள்வியாய் வந்தது. இறுதியாய் "பேறு" என்ற வார்த்தை நினைவிற்கு வந்தது. ஆம்! குழந்தைப்பேறு முதல் செல்வப்பேறு வரை எல்லாவற்றையும் கொடுப்பது குடும்பம் தானே?! எனவே, பேறு என்பதே சரியென்று தோன்றியது. எனவே, என் விளக்கவுரையை, பின்வருவருமாறு எழுதினேன்:

அறநெறியில் பயணிக்கும் இல்லற வாழ்வில் கிடைக்கும் பேறுகளை-விட, 
சிறந்ததாய்; வேறு நெறியில் பயணிப்பதில் கிடைப்பதேது?
       

குறள் எண்: 0046 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 005 - இல்வாழ்க்கைகுறள் எண்: 0046} அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் 
போஒய்ப் பெறுவ எவன்

விழியப்பன் விளக்கம்: அறநெறியில் பயணிக்கும் இல்லற வாழ்வில் கிடைக்கும் பேறுகளை-விட, சிறந்ததாய்; வேறு நெறியில் பயணிப்பதில் கிடைப்பதேது?

(அது போல்...)

நேர்மையான வழியில் பணிசெய்வதால் கிடைக்கும் மனநிறைவை-விட, நிறைவானதாய்; மாற்று வழியில் பணிசெய்து அடையமுடியுமா?

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், செப்டம்பர் 16, 2015

குறள் எண்: 0045 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 005 - இல்வாழ்க்கைகுறள் எண்: 0045}


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது

விழியப்பன் விளக்கம்: அன்பும்/அறநெறியும் இருக்குமேயானால்; அந்த இல்வாழ்க்கையின், சிறந்த பண்பும்/பயனும் அவைவேயாகும்.

(அது போல்...)

மனிதமும்/தன்னொழுக்கமும் கொண்டிருப்பின்; ஒரு தலைவனின், சிறந்த ஆற்றலும்/பொதுநலமும்  அவையேயாகும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

அரபுநாடும்! அன்னை-நாடும்!!


அரபு-நாட்டில்...
மாளிகையை மாற்றி;
விவசாயம்!

அன்னை-நாட்டில்...
விவசாயத்தை வதைத்து;
மாளிகைகள்!!

செவ்வாய், செப்டம்பர் 15, 2015

குறள் எண்: 0044 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 005 - இல்வாழ்க்கைகுறள் எண்: 0044} 

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை 
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

விழியப்பன் விளக்கம்: தீவினைக்கு அஞ்சி, அறமுணர்ந்து சேர்த்ததைப் பகிர்ந்துண்ணும் தன்மையிருப்பின்; நம்வாழ்வு, என்றைக்கும் முடிந்து போவதில்லை.

(அது போல்...)

மனசாட்சிக்குப் பணிந்துப், பொதுநலத்துடன் அதிகாரத்தைப் பகிரும் இயல்பிருப்பின்; ஓர்அரசாட்சி எந்த தேர்தலிலும் தோற்காது.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், செப்டம்பர் 14, 2015

உறவினரா? உடன்பிறந்தோரா?? (குறள் எண்: 0041)       குறள் எண் 0041-இற்கான என் விளக்கவுரையை நீங்கள் படித்திருப்பீர்கள்.  அதில், நம் பெருந்தகை குறிப்பிடும் அந்த "இயல்புடைய மூவர் எவர்?" என என்னுள் எழுந்த குழப்பங்களையும்; அதை நான் தெளிந்துகொண்ட விதத்தையும்(கூட) ஒரு பதிவாய் எழுதியிருந்தேன். அந்த பதிவில், என் நட்பொன்று "உறவினரில் உடன் பிறப்புகளும் அடக்கம்! உடன் பிறப்புகள் அல்லாதோர் நிலை? மேலும் நட்பு, மற்றும் சுற்றத்தாரை ஏன் நிராகரிக்க வேண்டும்?" என்று கேட்டிருந்தது. அதேபோல், இன்னுமோர் நட்பொன்றும் "உறவினர்" சார்ந்த அதே கேள்வியை எழுப்பியிருந்தது.  இந்த சந்தேகமும்/கேள்வியும் உங்களில் பலருக்கும் இருக்கக்கூடும் என்பதால், அவர்களுக்கு கொடுத்த விளக்கத்தையும்; என்னுள் இருக்கும் மற்ற புரிதல்களையும் இப்படியொரு பதிவாய் எழுத நினைத்தேன். முதலில், நான் "உறவினர்"களை நிராகரிக்கவில்லை என்பதைத் தெளிவுபட கூற  விழைகிறேன். உறவினர் பற்றி, நானும் நிறைய ஆலோசித்த பின்னரே...

        என் விளக்கவுரையை அப்படி எழுதியிருந்தேன். உறவினர் என்பது பொது சொல்; அதனால் தான், உடன்பிறந்தோர் என்று தனித்து/தீர்க்கமாய் குறிப்பிட எண்ணினேன். ஏனெனில், நம் பெருந்தகை குறிப்பிடுவது "இயல்புடைய மூவர்" என்பதே. இயல்புடைய என்றால் என்ன? தன்மையுடைய என்று பொருள்; அதாவது சுயம். மேலும், உற்று நோக்கினால் அதற்கு "அடிப்படை" என்ற பொருள் வருவதை(யும்) உணரலாம். எனவே, ஒரு குடும்பத்தின் அடிப்படை எவர் என்றே நம் பெருந்தகை வரையறுத்து சொல்கிறார். ஒரு குடும்பத்திற்கு எவரெவர் அடிப்படையாய் இருக்கமுடியும்? முதலில் நம்மை ஈன்று/வளர்த்த தாயும் தந்தையும்! பின் நம்முடனே வளர்ந்து; நம் வளர்ச்சியிலும் பங்கு கொண்ட உடன்பிறந்தவர்கள். அதன் பின், நமக்கென ஒரு குடும்பத்தை உருவாக வழிவகுக்கும் "வாழ்க்கைத்-துணையும்/மக்களும்". இங்கே, பெருந்தகை ஆண்பாலைப் பற்றி சொல்வதால் "மனைவி-மக்கள்"!. அதனால் தான், என் விளக்கவுரையை...

   ஒரு "குடும்பத்தின் அடிப்படையான - பெற்றோர்/உடன்பிறந்தோர்/மனைவி-மக்கள் - இம்மூவர்க்கும் அறவழியில் துணை நிற்பவனே; குடும்பத்தன் ஆவான்" என்று எழுதினேன். உடன்பிறப்பிற்கு மாறாய், உறவைப்பற்றி கேள்வி எழுப்புவதால், நட்பும் துனைக்கேள்வியாய் வருகிறது. பரந்து பட்ட உறவும்/நம் சுற்றமும்/உலகளாவிய நட்பும் - வேறு இணைப்பில் வருபவை. நம் பெருந்தகை உறவு மட்டுமல்ல; நட்புக்கும் தனி அதிகாரங்கள் வகுத்திருக்கிறார். அவர் ஒவ்வொன்றாய்/படிப்படியாகத்தான் வரையறுக்கிறார்.  அதனால்தான், 133 அதிகாரங்கள் தேவைப்பட்டன. எனவே, நம் பெருந்தகை, எங்கே/எதைக் குறிப்பிடுகிறார் என்பதை ஆழ்ந்து கவனித்தல் மிக-முக்கியம். ஒரு குடும்பம்; முதலில், இம்மூன்றின் அடிப்படையில் தான் துவங்கவேண்டும். அக்குடும்பம் நன்முறையில் தழைத்து, வளர்ந்த பின் தான் உறவு, சுற்றம், நட்பு முதலான மற்றவை தனி இணைப்புகளாய் இணைய வேண்டும். மேலும், உறவுகள்...

           என்பதே, பல குடும்பங்கள் சேர்ந்ததுதான். எனவே, ஒரு குடும்பம் என்று வரையறுக்கும்போது; அங்கே, உறவுகள் என்ற பொதுமை சேர்தல் முறையானதல்ல. இங்கே, நான் இன்னொன்றையும் கவனிக்கிறேன்! ஏன் "இல்வாழ்வான்" என்ற ஆண்பால்? ஏன் "இல்வாழ்வார்" என்று பொதுவிலோ; அல்லது "இல்வாழ்வாள்" என்று பெண்பாலையோ குறிப்பிடவில்லை?! என்பதே அக்கவனம். ஏனெனில், ஆண்தான் எப்போதும் "இப்படி பொதுமை" என்று பேசி குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்கிட வல்லவன். இயல்பிலேயே, பெண்கள் "தன் பிள்ளை/தன் கணவன்/தன் பெற்றோர்" என்பதைத் தெளிவாக வரையறுக்கக் கூடியவர்கள். பெண்களுக்கு, அவர்கள் மட்டும்தான் குடும்பம்; அவர்களே பெண்களின் உலகமும்! இது மேலோட்டமாகப் பார்த்தால், சுயநலம் என்பதாக தெரியும். ஆழப்பார்த்தால், அது எத்தனை உண்மை என்பது விளங்கும். ஆனால், அதை சரியாகப் புரிந்து கொள்ளுதல் அத்தனை எளிதல்ல. இக்காலப் பெண்கள், உடன்பிறப்பைக் கூட...

      விலக்கி வைக்கின்றனர் என்பது வேறு விடயம்! அது சிறுபான்மைக் கூட்டம். அடிப்படை குடும்பம் எதுவென ஆணுக்கு புரிவதில்லை. திருமணமான புதிதில் பல கணவன்-மனைவிக்குள்ளும் பல பிரச்சனைகள் ஏற்பட இந்த மாறுபட்ட சிந்தனையே காரணம். பெண், உறவுகளைப் பிரிக்க நினைக்கிறாள்! என்ற பொதுப்படையான குற்றச்சாட்டு இருப்பதும்; இப்புரிதல் இல்லாததால்தான். இந்த விதத்தில், சரியான புரிதல் ஆண்களுக்கு வரவேண்டும் என்பதோடு; பெண்களும், கணவனின் குடும்பமும் முக்கியம் என்பதை உணரவேண்டும்!; என்பதையும் பதிவு செய்வது, என் கடமையாகிறது. அதேபோல், தன் குடும்பம் என்று வரும்போது உறவு/நட்பு போன்ற பொதுமையை சேர்த்து, பார்த்து குழம்பக் கூடாது என்பதை "ஆண்களுக்கு"; அடிக்கோடிட்டு வலியுறுத்த விரும்புகிறேன். அதனால்தான்,  நம் பெருந்தகை "இல்வாழ்வான்" என்று குறிப்பிட்டிருப்பதாய் நான் நம்புகிறேன். எனவே, என்னளவில் இயல்புடைய மூவர் என்ற பட்டியலில் சேர்வது...


உடன்பிறந்தோரே! உடன்பிறந்தோரே!! உடன்பிறந்தோரே!!!

பின்குறிப்பு: {யோவ் வள்ளுவரே! - "இல்வாழ்வான்? & இயல்புடைய மூவர்??' (குறள் எண்: 0041)}என்ற பதிவில் சொன்னதை மீண்டும் வலியுறுத்துகிறேன். இல்வாழ்க்கை என்பது சாதாரணமான விடயம் இல்லை என்பதைத்தான்; இல்வாழ்க்கையின் முதல் குறளான, குறள் எண் 0041 நமக்கு உணர்த்துகிறது.

குறள் எண்: 0043 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 005 - இல்வாழ்க்கைகுறள் எண்: 0043}

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

விழியப்பன் விளக்கம்: இறந்து-தெற்கில் இருப்போர்/கடவுள்/விருந்தினர்/சுற்றம்/தானெனும்-சுயம் - இவர்கள் ஐவரிடத்தும், அறநெறியை தவறாமல் பேணுதல் சிறப்பாகும்.

(அது போல்...)

மரம்/செடி-கொடி/சுற்றுச்சூழல்/சிற்றுயிர்/பேருயிர் - இவையைந்தின் வளமும்; அடிப்படையை மறக்காமல் காத்தல் மனிதமாகும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, செப்டம்பர் 13, 2015

குறள் எண்: 0042 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 005 - இல்வாழ்க்கைகுறள் எண்: 0042} 

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் 
இல்வாழ்வான் என்பான் துணை

விழியப்பன் விளக்கம்: துறவிகள்/பசித்திருப்போர்/ஆதரவற்றோர் - இவர்களுக்கு இல்லற-வாழ்க்கை வாழ்பவன் துணையாவான்.

(அது போல்...)

விவசாயம்/விலைவாசி/பாதுகாப்பு - இவற்றிற்கு அரசு-இயந்திரத்தை நிர்வகிப்போர் பொறுப்பாவர்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, செப்டம்பர் 12, 2015

யோவ் வள்ளுவரே! - "இல்வாழ்வான்? & இயல்புடைய மூவர்??' (குறள் எண்: 0041)


         
          "யோவ் வள்ளுவரே!" என்றழைத்திருப்பது உங்களில் பலருக்கும் மரியாதையின்மை என்பதாய்  தோன்றக்கூடும். நான் பல பதிவுகளில் சொல்வது போல், இது அதீத "அன்பின் வெளிப்பாடு!". இதை உணர்ந்தோர்க்கு/புரிந்தோர்க்கு - நான் சொல்வதன் அடிப்படை புரியும். சுருக்கமாய் சொல்லவேண்டும் எனில், நம்மில் பலரும் நம் தாயை "வா/போ/நீ" என்று ஒருமையில் அழைப்போம்; ஆனால், தந்தையை அப்படி அழைக்கமட்டோம்! அதனால், அப்பனின் மேலிருக்கும் மரியாதை அம்மையிடம் இல்லை என்று அர்த்தமல்ல. அது அம்மையின் மேலிருக்கும் ஒருவித "தனிப்பாசத்தில்" வருவது - அது அதீத அன்பின் வெளிப்பாடு! குணா திரைப்படத்தைப் பார்த்துவிட்டு; சென்னைக்கே உரித்தான சொல்லை சொல்லி "---- புள்ள பின்னிட்டாண்டா!" என்று நானும் என் நட்பும் பேசினோம். அது, கமலின் மேலிருக்கும் எங்கள் அதீத அன்பின் வெளிப்பாடு. சமீபத்தில் திரு. வைரமுத்துவின் கலாம்-கவிதைக்கும் அப்படி தலைப்பிட்டேன்.

      சரி, வள்ளுவரை அப்படி அழைக்க என்ன காரணம்?! இல்வாழ்க்கை என்பது எத்தனை சிரமமானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். வாலிப வயதில், பலரும் அதற்கு பயந்து, திருமணமே வேண்டாம் என்று கூட நினைத்திருப்போம் (விதி வலியது என்பது வேறு விடயம்!). இல்வாழ்க்கையை புரியவைத்தல் எத்தனை பெரிய விசயம்? அதிலும் "இல்வாழ்க்கை"-கென தனி அதிகாரமே படைத்து?! நான், இதுவரை எழுதிய 40 விளக்கவுரைகளில் - இருந்த சிரமம்/சிறப்பு பற்றி சிலாகித்து எழுதி இருக்கிறேன். அந்த வகையில், இந்த அதிகாரத்தின் முதல் குறளின் (எண்: 0041), முதல் வார்த்தையே பிரம்மாண்டம் - இல்வாழ்வான்! அதே சொல்லை குறள் எண் 0042-இலும் பயன்படுத்தி இருக்கிறார். ஒரேயொரு வார்த்தை - அதன் பொருள் "இல்லற வாழ்க்கையை வாழ்பவன்" என்ற பெரும்பொருள். திருக்குறளுக்கு விளக்கவுரை எழுத முடிவெடுத்தவுடன், நான் கொண்ட ஒரேயொரு நிபந்தனை: என்னுடைய விளக்கவுரை சுருங்கி இருந்து, எந்த...

           பொருளையும் சொல்லாமல் விட்டுவிடக்கூடாது; அதே சமயம், மிக நீண்டிருந்து பொருளை நீர்த்துவிடவும் செய்துவிடாக்கூடது! என்பதே. எனவே அதற்கு, குடும்பஸ்தன் என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுத்து அதை குடும்ப"த்"தன் என்று எழுதி இருக்கிறேன்; இச்சொல் சரியாய் இருக்கும் என்று நம்புகிறேன். இந்த ஆச்சர்யம் ஆழ்ந்து அடங்குவதற்குள் "இயல்புடைய மூவர்" என்ற சொற்றொடர். யார் இந்த மூவர்? என்ற பலத்த சிந்தனை. பல விளக்கவுரைகளை ஆய்ந்ததில்...   
 • மூவர்-மாணவர், தொண்டர், அறிவர் - திரு. சி. இலக்குவனார்
 • மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் - திரு. சாலமன் பாப்பையா
 • பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் - திரு. கருணாநிதி
மேலுள்ள விளக்கங்கள் கிடைத்தன. இதில் திரு. இலக்குவனார் அவர்களின் பட்டியல் இந்த குரலுக்கு நேரடி சம்பந்தம் இல்லை என்பதால், அதை விடுவித்தேன். திரு. சாலமன் பாப்பையா மற்றும் திரு. கருணாநிதி இருவரின் பட்டியல் சரியாய் இருப்பதாய் தோன்றியது. இருப்பினும், அதில் ஏதோ ஒன்று விடுபட்டிருப்பதாய் இருப்பதாய் ஒரு நம்பிக்கை. என்னவென்று தீர யோசித்ததில் - உடன்பிறந்தோர் பற்றி எவரும் குறிப்பிடவில்லை என்பதை உணர்ந்தேன். எனவே என்னுடைய விளக்கவுரையை அதன் அடிப்படையில் மாற்றி எழுதினேன். என் விளக்கவுரை...

குடும்பத்தின் அடிப்படையான - பெற்றோர்/உடன்பிறந்தோர்/மனைவி-மக்கள் - இம்மூவர்க்கும் அறவழியில் துணை நிற்பவனே; குடும்பத்தன் ஆவான்

பின்குறிப்பு: இல்வாழ்க்கையின் முதல் குறளிலேயே "யோவ் வள்ளுவரே!" என்று வியக்கவைத்து இருக்கிறார் நம் பெருந்தகை. இனி வரும் குறள்களில், என்னை "என்னவெல்லாம் வியந்து-சொல்லி "பேச வைக்கப் போகிறாரோ?! தெரியவில்லை. அய்யனே! என்னுடைய அன்பு மென்மேலும் பெருகினால், இச்சிறுவனைப் பொருத்தருள வேண்டுகிறேன். 

குறள் எண்: 0041 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 005 - இல்வாழ்க்கைகுறள் எண்: 0041}


இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை

விழியப்பன் விளக்கம்: குடும்பத்தின் அடிப்படையான - பெற்றோர்/உடன்பிறந்தோர்/மனைவி-மக்கள் - இம்மூவர்க்கும் அறவழியில் துணைநிற்பவனே; சிறந்த குடும்பத்தன் ஆவான்.

(அது போல்...)

அரசியலின் அடிப்படியான - மனிதம்/மாட்சிமை/மக்களாட்சி - இம்மூன்றையும் நேர்மையுடன்  தொடர்பவனே; சரித்திர தலைவன் ஆவான்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, செப்டம்பர் 11, 2015

மெளனம் என்பது என்ன???        "மெளனம் - இயலாமையா? ஆளுமையா??" என்ற தலையங்கத்தில் மெளனத்தை எப்படி வகைப் பிரிக்கலாம் என்று; என் பார்வையில் விளக்கி இருந்தேன். அதற்கு கீழ்க்காணும் இரண்டு கருத்துமிக்க பின்னூட்டங்கள் வந்தன. 1. என்தம்பி-ஒருவன் சொன்னது: மௌனம் ஆளுமையா என்று தெரியவில்லை; ஆனால், நிச்சயம் அதை இயலாமையாக கருதவில்லை. 2. (நான்)முகமறியா நட்பு சொன்னது: வாய் திறவாமல் இருப்பது மெளனம் அல்ல, மனம் திறவாமல் இருப்பதே மெளனம். என் தம்பிக்கு "மெளனம் - ஆளுமை என்பது உனக்கு புரியும் காலம் வரும்; அதுவரை, மெளனித்து காத்திருக்கிறேன்" என்று பதில் கூறி இருந்தேன். "இயலாமை" அல்லது "ஆளுமை" என்ற வார்த்தைகள் - மெளனத்தை வகைபிரிப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்டவை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அதாவது எந்த சூழலால்(இயலாமையால்) மெளனம் நிகழ்கிறது?; ஒருவர் மெளனத்தை எப்படி கையால்கிறார்(ஆளுமை-செய்கிறார்)?? என்பதை உணர்த்தும்...

            என்பதை விளக்க, வகைப்பிர்க்கப்பட்டவை. மேலும், அவை ஒவ்வொன்றின் அடிப்படையும்/புரிதலும்/விளையும்-நன்மையும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை - என்பதை உணர்த்தும் வண்ணம் வரையறுக்கப்பட்டவை. எனவே "இயலாமை" மற்றும் "ஆளுமை" என்ற இரண்டு தனிப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு - வகைப்பிரித்தலைக் குழப்பிக்கொள்ளவேண்டாம் என்று "அமைதியாய்" கேட்டுக்கொள்கிறேன். இப்போது, 2-ஆவது பின்னூடத்தைப் பார்ப்போம்: வார்த்தைகளற்று இருப்பது மெளனம் அல்ல! என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தும் இல்லை. நான் அப்படிப்பட்ட மெளனங்களை வரையறுக்கவில்லை. அதுபோல் "மனம் திறவாமல் இருக்கும் மெளனத்தில்" இரண்டு உட்பிரிவுகளைப் பார்க்கிறேன். ஒன்று: வார்த்தைகளற்று, மனதால்  "எந்த ஆரவாரமும்" இல்லாமல், மெளனத்தின் விளைவுகளை ஆராய்வது. மனம் மெளனமாய்/இயல்பாய் இருக்கும் - ஆனால், ஏதுமற்று இருக்காது. ஆனால், எதிர்பார்ப்பின் பலன் குறித்து ஆராயும். 

          இரண்டாவது: மனதை முழுமையாய் அடக்கி; எதைப்பற்றியும் யோசிக்காமல் மெளனமாய்/அமைதியாய் இருப்பது. என்னளவில், இந்த உட்பிரிவில் உடன்பாடில்லை. எனக்கென்று குடும்பம் இருக்கிறது; "காமம்" துவங்கி முழுமையாகாத, பல ஆசைகள் உள்ளன! முழுமை ஆனாலும், குடும்பத்தைத் தாண்டி, அனைத்தையும் மனதால் "முழுமையாய் மெளனித்துப்" பார்த்தல் இயலாது! அப்படி பார்ப்பது "அறனே இல்லை!" என்பதால், அதை ஆலோசனைக் கூட செய்வதில்லை. என் குடும்பம், சிறு ஆட்டம் கண்டாலும்; என் மெளனம் சிதைந்து - என்னையும் சிதைக்கும். இருப்பினும், தியானம் போன்ற குறுகியக்கால மெளனத்தில் எனக்கு உடன்பாடுண்டு. தொடர்ச்சியாய் இல்லையெனினும், தாங்கொண்ணா துயரம் வரும்போது நிச்சயம் தியானிப்பேன். அதுபோல், முதல் உட்பிரிவில் வரும் மன-மெளனத்தில் எனக்கு பெருத்த நம்பிக்கையும்/ஊடன்பாடும் உண்டு.  சரி, வார்த்தைகளால் "மட்டும்" மெளனத்தல் என்பது என்ன? என்றால், அப்படிப்பட்ட... 

          மெளனத்தால், (பெரும்பான்மையில்)மெளனம் கடைபிடிப்போருக்கு எந்த சிரமும் இல்லை. ஏனெனில், அதனால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை! இழப்பும் இல்லை!! அதை எதிர்கொள்பவருக்கு; "தற்காலிக"ஏமாற்றம் அல்லது வேறொரு எதிர்மறை-விளைவை உண்டாக்கக் கூகும். ஆனால், மெளனத்தின் அடிப்படை - மெளனிப்பவருக்கும் அதில் ஏதோவொரு சம்பந்தம் இருக்கவேண்டும் - என்பது என் பார்வை. அதற்கு சில உதாரணங்கள் கீழே:
 • விமானம் அல்லது வேறு பயணத்தில் - நான் அருகில் இருப்பவருடன் பேசுவதே இல்லை! அவர்களாய் ஏதும் கேட்டாலும், பதிலுக்கு "நீங்க எந்த ஊர்?" போன்ற மறு-கேள்வி கூட கேட்பதில்லை. அது எனக்கு தேவையற்றது; அதை நான் மெளனம் என்றே கருதுவதில்லை.
 • மனித வள (Human Resource) துறையில் இருப்போர்; நம் கேள்விகளில் எத்தனை நியாயமும்/எதிர்பார்ப்பும் இருப்பினும் - எந்த பதிலும் கொடுக்கமாட்டார்கள். ஆரம்பத்தில், அதில் எனக்கு பெருத்த ஆற்றாமையும்/மறுப்பும் உண்டெனினும் - பின்னர், அமைதியாய் யோசித்ததில்; அதுதான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணி என்பது புரிந்தது. எனவே, அவர்கள் பதிலற்று இருப்பதை(யும்); நான் மெளனம் என்று வரையறுக்கவில்லை.
 • எனக்கிருக்கும் புரிதலை விட, மெளனம் பற்றி, அதிகமான புரிதல் கொண்டோர் ஏராளாம்! ஆனால், அவர்களில் பலரும், இதுபோல் மற்றவருக்கும் புரிதலைக் கொண்டு சேர்ப்பதில்லை.  அவர்களின் அமைதியையும், மெளனம் என்ற எல்லைக்குள் வரையறுக்க விரும்பவில்லை.
 • "இவர் வந்தால் நன்றாக இருக்கும்! அவர் இருந்தால் நன்றாக இருக்கும்!!" என்று பல ஆலோசனைகளை "இலவசமாக" கொடுத்துவிட்டு; அரசியல் போன்ற விடயங்களில் "நாம் ஏன் அதை செய்யக்கூடாது?!" என்று - நம்மை நாமே கேட்காமல் அமைதியாய் இருப்பவர்கள் தான் - நம்மில் பலரும். இதை மெளனம் என்றால் ஏற்போமா?!
           என்னளவில், மெளனம் என்பது என்ன??? - என்பதில் பெரும் புரிதலுண்டு. அதை "இயன்ற அளவில்" விளக்கவும் முயற்சி செய்கிறேன். என்-உறவு என்பதால்(மட்டும்) "ஆளுமை" என்ற பிரிவில் என்னவள்/என்மகள் சார்ந்த உதாரங்களைக் கொடுக்கவில்லை. உங்களுக்கு சரியாய் புரியவில்லை எனில் - அது, புரியவைக்க முடியாத என் இயலாமையைக் காட்டுகிறது என்பதாய் நான் பார்க்கிறேன். மேலும் விரிவாய் நான் சொல்ல விரும்பவில்லை! என்பதும் அடக்கம். ஆனால், அந்த மெளனங்கள் என்னுள் ஏற்படுத்திய புரிதல்கள் ஏராளம் என்பதைத்தான் நான் அடிக்கோடிட விரும்புகிறேன்: மெளனிப்பவர்/மெளனத்தை-எதிர்கொள்பவர்/அல்லது இருவருக்கும் - இப்படி, எந்த விதத்திலும் பலன் அளிக்காத, எந்த செயலும் "மெளனம் அல்ல"!!! என்பது என் புரிதல். என் முந்தைய பதிவில் வரையறுக்கப்பட்ட அனைத்து மெளனங்களும்; அந்த அடிப்படை கொண்டவையே! மெளனத்தை எதிர்கொள்ளுதலும்/பின்பற்றுதலும் இருக்கட்டும்...

அதற்கு முன், மெளனம் என்றால் என்னவென்பதை உணர்வோம்!!!

மற்றெல்லாம் புறத்த புகழு மில (குறள் எண்: 0039)      குறள் எண்: 0039-இல் வரும் "மற்றெல்லாம் புறத்த புகழு மில" என்ற சொற்றொடரைப் படித்ததும், வழக்கம்போல் - நம் பெருந்தகை என்னுள் ஒரு சிந்தனைச் சுடரை ஏற்றினார். மேற்பார்வையில், இந்த குறள் "அறம் தருவதே இன்பம்; மற்றதெல்லாம் வேறு; புகழ் கூட இல்லை" என்ற பொருள் தரும். அதன் அடிப்படையில்தான் பல விளக்கவுரைகளும் - "மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது" என்பது போன்ற பொருளில் - இருக்கின்றன. என்னுடைய கேள்வி "இன்பம் பற்றி பேசும்போது; எதற்காக, நம் பெருந்தகை, அங்கே புகழை" குறிப்பிடவேண்டும்?!  என்பதே. அறத்தால் வருவது இன்பம் - ஆம், சரிதான்; மற்றவை "புகழ் ஆகாது" என்பது சரியாகும்? இன்பத்தின் எதிர்ப்பதம் "துன்பம்/இன்னல்/இடும்பை/..." போன்றவை தானே? - பின்னெப்படி "புகழ் ஆகாது (அல்லது) புகழ் கூட இல்லை" என்பது சரியாகும்? சிந்தனைகள் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தது.

      தொடர்ந்து பயணித்ததில், நம் பெருந்தகை என்ன சொல்ல வருகிறார்?! என்று யூகிக்க முடிந்தது. என்னுடைய புரிதல் பின்வருவதுதான்: "புகழு மில" என்றால் - முதலில், புகழும் இல்லை என்றுதான் பொருள் வரும். தொடர்ந்து யோசித்தால்; மற்றவை, வேறானவை/துன்பமானவை - புகழும் கூட என்று புரியும். மேலும், ஆழ்ந்து யோசித்தால் "அது புகழே ஆனாலும் கூட" என்ற முழுப்பொருள் விளங்கும். சரி, புகழ் எதற்கு வந்தது? புகழ் ஒருவருக்கு "இன்பம்" அளிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே! எனவே, அறத்தால் வருவது மட்டுமே "உண்மையான" இன்பம்; மற்றவை எல்லாம் வேறானவை - அவை இன்பங்கள் அல்ல. அது, புகழால் கிடைக்கும் இன்பமே ஆனாலும் கூட! என்பதைத்தான் நம் பெருந்தகை சொல்கிறார். அதனால் தான் என்னுடைய விளக்கவுரையை "அறத்தின் வழியால் கிடைப்பவையே இன்பம்; மற்றவை எல்லாம் துன்பங்களாகும், அது புகழாய் இருப்பினும் கூட" என்று எழுதினேன்.

ஆம், புகழே ஆனாலும் கூட; அது இன்பத்தில் சேராது!!!

பின்குறிப்பு: என் நட்புகள் சில, ஒவ்வொரு நாளும் - ஒரு குறளுக்கு விளக்கவுரை பதிவதற்கு பதில்; வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது நேரம் கிடைக்கும்போதோ "ஒவ்வொரு அதிகாரமாய்" பதியலாம் என்றனர். ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை! நம் பொதுமறையில் - மேலும், மூழ்கி எடுக்க பல முத்துக்கள் கிடைக்கும் என்பதே - என் அசாத்திய நம்பிக்கை. ஒவ்வொரு நாளாய் - ஒவ்வொரு குறளாய் - ஆ(ய்/ழ்)ந்து யோசித்தால் தான்; அப்படிப்பட்ட முத்துக்களை கண்டெடுக்கமுடியும்! மேலும், நான் தொடர்ந்து நம் போதுமரைக்கும் மூழ்கி இருக்க விரும்புகிறேன். ஆனால், எல்லோருக்கும் அப்படி நேரம் கிடைக்காது என்பதையும் நானறிவேன்; அவர்களை, அருள்கூர்ந்து, தனியாய் பதியப்படும்  "ஒவ்வொரு-முழு' அதிகாரத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.
அதிகாரம் 004: அறன் வலியுறுத்தல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 01 - பாயிரவியல்;  அதிகாரம்: 004 - அறன் வலியுறுத்தல்

0031.  சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு 
           ஆக்கம் எவனோ உயிர்க்கு

           விழியப்பன் விளக்கம்: புகழ்/பெருமையோடு பொருளும் தந்து, நம்மை மென்மேலும்
           உயர்த்துவதில்; அறத்தை விட, சிறந்தது வேறெதுவோ?
(அது போல்...)
           உடல்/உயிரோடு தாய்ப்பாலும் தந்து, நம்மை தொடர்ந்து உயிர்ப்பிப்பதில்; தாயை விட, 
           உன்னதமான-உறவு வேறெதுவோ?

0032.  அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை 
           மறத்தலின் ஊங்கில்லை கேடு

           விழியப்பன் விளக்கம்: அறத்தைப்போல் நமக்கு நன்மையப்பதும் எதுவுமில்லை; அறத்தை 
           மறப்பதால் விளையும் அழிவைவிட, வீரியமானதும் எதுவுமில்லை.
(அது போல்...)
           நல்நட்பைப்போல் நம்மை ஊக்குவிப்பதும் ஏதுமில்லை; அந்நட்பை இழப்பதால் விளையும் 
           ஊக்க-குறைவைவிட, பாதிப்பும் ஏதுமில்லை.

0033.  ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே 
           செல்லும்வாய் எல்லாம் செயல்

           விழியப்பன் விளக்கம்: செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும், காரணமேதும் கற்பிக்காமல்; 
           இயன்ற அளவில், தவறாமல் அறச்செயல்களைச் செய்யவேண்டும். 
(அதுபோல்...)
           இருக்கும் உறவுகள் அனைத்திலும், குறைகளேதும் சொல்லிடாமல்; முடிந்த மட்டும், 
           தவறாமல் அன்பைப் பேணவேண்டும். 

0034.  மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் 
           ஆகுல நீர பிற

           விழியப்பன் விளக்கம்: எல்லாவற்றிலும் அறத்துடன் இருப்பதால் மட்டுமே உள்ளத்தூய்மை 
           அடையமுடியும்; மற்றவை ஆரவாரத் தன்மையுடையவை.
(அது போல்...)
           எந்தநிலையிலும் நீதி/நேர்மை கடைபிடிப்பவர்களே சிறந்த ஆட்சியாளர்கள் ஆவர்;
           மற்றவர்கள் வாய்ச்சொல் வீரர்களாவர்.

0035.  அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
           இழுக்கா இயன்றது அறம்

           விழியப்பன் விளக்கம்: பொறாமை, பேராசை, கோபம், தீய-வார்த்தைகள் - இவை 
           நான்கையும்; கடினப்பட்டு விலக்கிவைப்பதே அறமாகும்.
(அது போல்...)
           மண், பொன், மது, மாது - இந்நான்கு ஆசைகளையும்; சிரமப்பட்டு விலக்கிவைப்பதே,
           மனிதத்தை நிலைநிறுத்தும் வழியாகும்.

0036.  அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது 
           பொன்றுங்கால் பொன்றாத் துணை

           விழியப்பன் விளக்கம்: நாளை ஆலோசித்து செய்யலாம் என்றெண்ணாமல், இன்றே 
           செய்யும் அறமே; நாம் இறக்கும் காலத்தில், இறவாத் துணையாகும்.
(அது போல்...)
           முதிர்ச்சிக்காக காத்திராது, நம் குழந்தைகளின் குறைகளை அவ்வப்போது களைதலே; 
           அவர்களின் வருங்காலத்தை வளமாக்கிட உதவும்.

0037.  அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 
           பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

           விழியப்பன் விளக்கம்: பல்லக்கைத் தூக்குவோர் மற்றும் அதில் பயணிப்போரை ஒப்பிட்டு - 
           இதுதான் அறவழி என ரையறுப்பது வேண்டாம்.
(அது போல்...)
           தண்டனைப் பெறுவோர் மற்றும் தண்டனையை அளிப்போரை ஒப்பிட்டு - இதுதான்
           சரியென  என நிர்ணயித்தல் தவறானது.

0038.  வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் 
           வாழ்நாள் வழியடைக்கும் கல்

           விழியப்பன் விளக்கம்: வீணான நாளொன்றே இல்லாமல் நல்லது செய்தால்; அதுவே, 
           ஒருவனின் மறுபிறப்பின் பாதையை அடைக்கும் கல்லாகும்.
(அது போல்...)
           ஒருநாளும் தவறாமல் உடற்பயிற்சி செய்தால்; அதுவே, ஒருவரை முதுமை-
           நோய்களில் இருந்து காக்கும் மருந்தாகும்.

0039.  அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
           புறத்த புகழு மில

           விழியப்பன் விளக்கம்: அறத்தின் வழியால் கிடைப்பவையே இன்பம்; மற்றவை எல்லாம் 
           துன்பங்களாகும், அது புகழாய் இருப்பினும் கூட.
(அது போல்...)
           ஊழலற்ற வழியில் சம்பாதிப்பவையே மனநிறைவைத் தரும்; மற்றவை எல்லாம் இன்னல்கள்,
           அது மாளிகையே ஆயினும் கூட. 

0040.  செயற்பால தோரும் அறனே ஒருவற்கு 
           உயற்பால தோரும் பழி

           விழியப்பன் விளக்கம்: ஒருவர் பகுத்தறிந்து செய்யத்தக்கது அறச்செயல்களாகும்; 
           அதுபோல், ஆராய்ந்துணர்ந்து ஒழிக்கத்தக்கது பழிச்செயலகளாகும்.
(அதுபோல்...)
           ஓர்கட்சி அறமுணர்ந்து தொடரக்கூடியது பொதுநலமாகும்; அதுபோல், 
           உண்மையறிந்து நிறுத்தவேண்டியது சுயநலமாகும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை 

குறள் எண்: 0040 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 004 - அறன் வலியுறுத்தல்; குறள் எண்: 0040}


செயற்பால தோரும் அறனே ஒருவற்கு 
உயற்பால தோரும் பழி

விழியப்பன் விளக்கம்: ஒருவர் பகுத்தறிந்து செய்யத்தக்கது அறச்செயல்களாகும்; அதுபோல், ஆராய்ந்துணர்ந்து ஒழிக்கத்தக்கது பழிச்செயலகளாகும்.

(அதுபோல்...)

ஓர்கட்சி அறமுணர்ந்து தொடரக்கூடியது பொதுநலமாகும்; அதுபோல், உண்மையறிந்து   நிறுத்தவேண்டியது சுயநலமாகும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், செப்டம்பர் 10, 2015

மெளனம் - இயலாமையா? ஆளுமையா??


முன்குறிப்பு: மெளனத்தைப் புரியவைத்தல் அத்தனை எளிதல்ல! என்பதால்; இங்கே விரிவாய் எழுதவேண்டிய நிர்ப்பந்தம்!! அதனால், தலையங்கத்தின் நீளம் அதிகமானது!!! }


            இன்று காலை என் முகநூல் நட்பொருவரின் \\\\மௌனம் என்பது தனி மொழி அல்ல. எல்லா மொழிகளிலும் இருக்கும் இயலாமை//// என்ற பதிவிற்கு நான் கீழ்வருவம் இரண்டு கருத்துகள் இட்டேன்: 1. நன்று. ஆனால், அது இயலாமை மட்டுமல்ல அண்ணாச்சி. சரியாயன இடத்தில், முறையாய் பயன்படுத்தப்பட்டால், அது மிகப்பெரிய ஆளுமை! {எனக்கு சில மெளனங்கள் நிறையக் கற்றுக் கொடுத்திருக்கின்றன!} 2. அதுபோல், பல மெளனங்கள் - களைக்கப்பட வேண்டும் என்பதும் உண்மை! என்னை முதன்முதலில் மெளனத்தால் புரட்டிப்போட்டவள் என்னவள்! அவளின் மெளனம் தான்; மெளனம்-சார்ந்த என் பல புரிதல்களுக்கு அடிப்படை! அவளின் மெளனங்கள் எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்ததோடு; என்னையும், மெளனம் பயில வைத்திருக்கிறது. என்னுடைய பதிவுகள்/விவாதங்கள்-இன் அடிப்படியில் நான் அதிகம் பேசக்கூடியவன் என்ற தவறான புரிதல் இருக்கக்கூடும். என்னுடைய குடும்பத்தாருடன் பேசினால் சொல்வார்கள்; நான்...

          எப்படிப்பட்ட மெளனவாதி! என்று - முக்கியமாய், என் தமக்கை. "ஏண்டா, எதுக்கேட்டாலும் - சாமியார் மாதிரியே அமைதியா இருக்க?!" என்று அடிக்கடி கேட்பார். அதற்கும் மெளனம் தான் பதிலாய் கிடக்கும் என்பது வேறு விடயம்; ஆனால், தொடர்ந்து கேட்பார். நான் இங்கு விளக்கியிருக்கும் புரிதலின் அடிப்படையில், என் குடும்பத்தாரிடம் மெளனம் கடைப்பிடிக்கவில்லை. ஏனோ, அவர்களிடம் நிறையப் பேசவேண்டும் என்று எனக்குத் தோன்றியதே இல்லை. அது, எனக்கே தெரியாமல்/புரியாமல் கடைபிடிக்கப்பட்ட மெளனம். நான் இங்கே சொல்ல முனைவது, என் சுய-சிந்தனையால், எனக்கு தெரிந்த/புரிந்த - மெளனம்! மேற்குறிப்பிட்ட பதிவையும்; என் பதிலையும் அடிப்படையாகக் கொண்டு, இத்தலையங்கத்திற்கு "மெளனம் - இயலாமையா? ஆளுமையா??" என்று தலைப்பிட்டேன்! இதுதான், பொருத்தமானது என்று நம்புகிறேன். என் புரிதலின் மூலம், மெளனத்தை கீழ்வருவது போல், வகைப்பிரிக்க விரும்புகிறேன்:


இயலாமை-மெளனம்

    இயலாமையின் கீழ் வரும் மெளனத்தை, 2 உட்பிரிவுகளாய் வகுத்துள்ளேன். இவற்றை "இயலாமை" என்று சொல்லக் காரணம் - இவையனைத்தும் - சொற்ப வார்த்தைகளைக் கொண்டு மெளனம் களை(ந்/த்)து, பேச்சால் விளக்கக்கப்படக் கூடியவையே! ஆயினும், சிலர் காக்கும் இவ்வகை மெளனத்தால் - அவர்கள் வேண்டுமானால் நிம்மதியாய் இருக்கலாம். ஆனால், அவர்களின் மெளனம் மற்றவர்களை ஆரோக்கியமற்ற சூழலுக்கு உட்படுத்துகிறது என்பதை உணரவேண்டும். இதைத் தெரிந்தும் செய்பவர்கள் இருக்கிறார்கள்! தெரியாமல் செய்பவரும் இருக்கிறார்கள்!! இவ்வகை மெளனங்கள், அவர்களின் ""இயலாமை"யை உணர்த்துகிறது.   

சரியான-இயலாமை:
 • நாம் பேசுவதை, சரியான விதத்தில் - அதிலுள்ள மெய்ப்பொருளை மற்றவர்கள் உணரவில்லையே?! என்ற ஆதங்கத்தில் ஏற்படும் மெளனம். அதை மேற்கொண்டு எப்படி விளக்கவேண்டும் என்று தெரியாத இயலாமையால் நிகழும் மெளனம்.
 • நம் பேச்சு, ஒருவரை தவறென்று சுட்டிக்காட்டி வரை வருத்தக்கூடுமே என்பதால் விளையும் மெளனம். பேசாததால், வேறொருவர் வருத்தம் அடைவார் எனினும் "பொய்மையும் வாய்மை இடத்த" என்பது போல், இதை சரியான இயலாமை-மெளனமாக ஏற்கலாம்.
தவறான-இயலாமை:
 • நாம் சொல்லும் உண்மையால் - ஒரு ஆரோக்கியமற்ற சூழல், அறவே களையப்படும் என்று தெரிந்தும், எவரையும் காயப்படுத்த வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் காக்கப்படும் மெளனம். அது மற்ற பலரையும் கலவரத்திற்கு உட்படுத்துவதால், தவறான-இயலாமை ஆகிறது.
 • மனைவி போன்ற உறவுகள் இடத்தே; நாம் ஏதாவது சொன்னால் - பிரச்சனையாய் ஆகிவிடுமோ?! என்றஞ்சி காக்கும் மெளனம். இது ஒரு சுயநலம்-ஆன மெளனம் என்பதால், இதை தவறான-மெளனம் என்கிறேன்.
 • ஒரு குழுவில் இருக்கும்போது; ஒருவருடன் தனிப்பட்ட முறையில் இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாய் (எக்காரணம் ஆனாலும்!) நேரடியான உரையாடலில், காக்கப்படும் மெளனம்.
 • கருத்து சார்ந்து ஒரு பிரச்சனை உருவாகி, அப்பிரச்சனையின் தடமே மறைந்த பின்னரும்; நாம் சார்ந்த உறவு/நட்பு - இடையில் கடைப்படிக்கும் மெளனம். 

ஆளுமை-மெளனம்

         சில மெளனங்கள் நாம் எதிர்பார்த்த பலனை, நமக்கு கொடுப்பதோடு மட்டுமல்லாமல் - நம் மெளனத்தைச் சந்தித்தவருக்கும் பல புரிதல்களை கொடுக்கும். செயல்படுத்தும் விதத்தில்/கடைப்பிடிக்கும் பொறுமையில் - அவர்களின் மெளனத்தில், ஆளுமை இருக்கும். இதை சரியாய்-உணர்வது மிக-மிக கடினமானது; ஏனெனில், அதற்கு நிறைய இழப்புகளை சந்திக்க வேண்டும்! பல தியாகங்களை செய்யவேண்டும். அவற்றை, விரைவில் உணர்தல் இன்னும் சிறப்பானது - ஆனால், அது கிட்டத்திட்ட சாத்தியம் இல்லாதது. சரி, ஆளுமையான மெளனங்கள் எவை?
 • நான் சந்தித்த முதல் ஆளுமை-கொண்ட மெளனம், என்னவள் காட்டியது! அவளின் பல மெளனங்கள் என்னை திகைக்க வைத்தன; இன்னமும் திகைக்க வைக்கின்றன! ஒருவரின் மெளனத்தை உற்று கவனிக்கவேண்டும் என்ற புரிதலை என்னுள் விதைத்தவள் அவளே. இதைக் கண்டிப்பாக நானே சுயமாய் உணரவேண்டும் என்று அவள், தெரிந்தே செய்திருக்க வேண்டும். இயல்பாய், அது எனக்கு கைகூடவும் செய்தது.
 • ஆளுமையான-மெளனங்களை; சரியா? தவறா?? என்ற அடிப்படையில் அணுகவே கூடாது. அப்படிப்பட்ட மெளனங்களில் வெகுநிச்சயமாக இரண்டும் கலந்தே இருக்கும். ஆனால்,  தவறுகளையும் தாண்டி; குறிப்பிட்ட அந்த உறவை மட்டும் (மைய/முதன்மை)ப்படுத்தி பார்ப்பது அவசியம். அப்படிப் பார்த்தால், அதில் இருக்கும் தவறுகள் மன்னிக்கப்படலாம் என்பது புரியும். ஆனால், அது அத்தனை எளிதல்ல! மேற்குறிப்பிட்டது போல், பல இழப்புகளைச் சந்தித்து, தியாகங்களையும் செய்வது மிகவும் அவசியம்.
 • இதுவரை நான் சந்தித்த ஆளுமை-மெளனங்களில்; என்னளவில் "உயர்ந்த/அசாத்திய ஆளுமை" என்றால் அது 6-வயதான என்மகள் காட்டியதே!!! ஆம், படிக்கும்போது அவள் கடைப்பிடிக்கும் மெளனம். அவள் படிப்பின் மீது ஆர்வமில்லாமல் அதைச் செய்யவில்லை; மாறாய், படிக்கும் முறை அவளுக்கு பிடிக்கவில்லை என்பது வெகு-நிச்சயமாய் எனக்கு தெரியும். இப்போதைக்கு, எங்களுக்கு, வேறு வழியில்லை! அவள் இந்த படிப்பு-முறையைக் கடைப்பிடித்து தான் ஆகவேண்டும். சென்றமுறை விடுப்பில் சென்றபோது, அப்படியொரு படிக்கும் சந்தர்ப்பத்தில் - அவளை முதுகில் ஒருமுறை அடித்தும் விட்டேன். ஆம்! ஆளுமையான் மெளனங்கள் நம்மை, இப்படித்தான் தடம்புரட்டும்! என் ஆற்றாமை பெருகுகிறது; ஆனால், அவள் மெளனத்தை சிறிதும் களையவில்லை! என் ஆற்றாமை உச்சத்தைத் தொட்டது; மீண்டும் "வேறு வழியே இல்லாமல்" நானே, என் இயல்பு நிலைக்கு திரும்பினேன். சிரித்து அவளை சமாதானம் செய்ய எத்தனித்தேன். ஆனால், அவளோ, அப்போதும் சிலை-போல் மெளனித்தே இருந்தேன். "சாரிம்மா! அப்பாவை மன்னிச்சுடு!!" என்பது போன்று பலவற்றையும் செய்த பின்தான் அவளின் மெளனத்தைக் களைத்தாள். அவ்வளவு-அதிகமாய் பேசக்கூடியவள் மெளனம் காக்கிறாள் என்றால், தெரிந்தே தான் செய்கிறாள் - என்று அர்த்தம்! எனவே, என்னளவில், இதுவரை நான் சந்தித்த மெளனங்களில், அவளின் மெளனம் தான் ஆளுமையின்-உச்சம்!
 • மீண்டும் எச்சரிக்கிறேன்! ஆளுமையான-மெளனங்கள், நம்மை எளிதில் தடம்புரளச் செய்யும்! அப்படிப் தடம் புரண்டதால் தான் - நான் என்மகளை அடித்தேன். இதுவே, வேறொரு உறவாய் இருந்திருப்பின்; அல்லது, என்மகளே 20 வயதானவள் என்றிருந்தால் - அது பெரிய-பிரச்சனைக்கு ஆரம்பமாய் இருந்திருக்கக்கூடும். எனவே, அப்படிப்பட்ட ஆளுமைகளை அணுகுவதில் பெரும்-எச்சரிக்கையும்/பொறுமையும் தேவை. 
       எப்படிப்பட்ட மெளனங்களை எதிர்கொள்கிறீர்கள் என்பதும், அவற்றை எப்படி வகைப்பிரித்து அணுகுகிறீர்கள் என்பதும் உங்கள் புரிதலில் இருக்கிறது! அதுபோலவே, எப்படிப்பட்ட ஆளுமைகளை கையாளவேண்டும் என்பதற்கும், உங்களின் புரிதலே அடிப்படை. பெரும்பாலும், நான் இயலாமை-மெளனத்தைக் கடைப்பிடிப்பதில்லை. அதுபோல், இதுவரை இரண்டே முறைதான் ஆளுமையான-மெளனத்தைக் கடைப்பிடித்து இருக்கிறேன். 1. அவரே "தன் வளர்ச்சிக்கு என்னையே முழுக்காரணம்!" என்று சொன்ன ஒருவரை, நானே விலக்கி வைக்கவேண்டிய சூழலால் நிகழ்ந்தது. அந்த நட்பை என்னுடைய எண்ணத்தில்-இருந்தே விலக்கிவிட்டேன். 2. இப்போது, இன்னுமோர் நட்பிடம் அப்படிப்பட்ட ஆளுமையான-மெளனத்தைக் கடைப்பிடித்து வருகிறேன். மிக-மோசமான வார்த்தைகள் கொண்டு என்னைப்-பலமுறை விமர்சித்தும் - என் மெளனம், இதுவரைக் களைக்கப்படவில்லை! இந்த நட்பை(யும்) முழுதாய் விலக்குவதும்/மீண்டு(ம்) ஏற்பதும் - அந்த நட்பு என் மெளனத்தை சரியான-விதத்தில் எதிர்கொண்டு; தன் குறைகளைக் களைவதில் இருக்கிறது.

எதிர்கொள்ளும் மெளனத்தையும்; காட்டவேண்டிய மெளனத்தையும் - வகைப்படுத்துதல்... 
நம் கடனே! நம் கடனே!! நம் கடனே!!!