ஞாயிறு, ஜூலை 31, 2016

குறள் எண்: 0364 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 037 - அவா அறுத்தல்; குறள் எண்: 0364}

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்

விழியப்பன் விளக்கம்: மனத்தூய்மை என்பது, ஆசையற்ற தன்மையாகும்; அந்த தன்மை, வாய்மையை உணரும் ஆசையால் விளையும்.
(அது போல்...)
மனிதம் என்பது, மிருக-குணமற்ற நிலைப்பாடாகும்; அந்த நிலைப்பாடு, உயிர்களை நேசிக்கும் குணத்ததால் சாத்தியமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, ஜூலை 30, 2016

கபாலியின் குறைகள் - என் பார்வையில்...


       சமீபத்தில் வெளியான "கபாலி" திரைப்படம் குறித்து இருவேறு வகையான விமர்சனங்கள் வந்தன. இது கொண்டாடப்பட வேண்டிய படம் என்பதை என் முதல் விமர்சனத்திலேயே சொல்லி விட்டேன். எனவே, இது "சமுதாயத்திற்கு அவசியமான/சிறந்த படம்" என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. என் முந்தைய விமர்சனத்தில் சொன்னபடி, இரண்டாவது முறையும் பார்த்தாகிவிட்டது. கபாலியைப் பற்றிய என் புரிதல் மேலும் அதிகமாகியது. அதை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இத்தலையங்கம்.

"முக்கியத்துவம் இல்லாத" குறைகள்:

       \\\ ரஜினி படத்திற்கு உரிய விறுவிறுப்பான காட்சிகள் இல்லை! காட்சிகளில் வலுவில்லை! திரைக்கதை மேலும் சிறப்பாய் இருந்திருக்கவேண்டும்! /// - என்பன போன்ற பல விமர்சனங்கள் உள்ளன. என்னளவில், படத்தின் விறுவிறுப்பிற்கு எந்த குறையும் இல்லை; ஒருவேளை, அவர்களின் எதிர்பார்ப்பு மிக-அதிகமாய் இருந்திருக்கக் கூடும். இருப்பினும், அந்த விமர்சனங்களை ஆழ யோசிக்கலானேன். இந்தப் படத்தை நான் இயக்கி இருந்தால் - என்ன செய்திருப்பேன் என்று யோசித்தேன். எனக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைத்திருந்தால், காட்சிகளின் வரிசையை மட்டும் மாற்றி அமைத்து இருப்பேன் என்று தோன்றியது - அதாவது எடிட்டிங் வேலை போன்று. திரைக்கதையில் பெருத்த தொய்விருப்பதாய் நான் உணரவில்லை. எனவே, என் பார்வையில் - காட்சியின் வரிசைகளை பின்வருவது போல் அமைத்திருப்பேன்:
  1. படத்தின் துவக்கம், கபாலி என்ற தலைமையின் கீழ் நடக்கும் "மறுவாழ்வு/சீர்திருத்த பள்ளியில்" துவங்கி இருக்கவேண்டும். அந்த பள்ளியின் ஆசிரியரான குமரன் பாடம் எடுப்பது போலவும்; அவர் கபாலி என்ற ஒரு தலைவனின் சிறப்பைப் பற்றிய வகுப்பை எடுப்பதாய் துவங்கி இருக்கவேண்டும்.
  2. மாணவர்கள் கபாலி என்பவர் யார்? என்ற கேள்வியைக் கேட்க; அந்த ஆசிரியர் கபாலியின் பின்புலத்தை விளக்குவதாய் காட்சிகள் விரியத் துவங்கி இருக்கவேண்டும்.
  3. "கபாலி ஏன் சிறைக்கு சென்றார்?" என்ற தொடர்-கேள்வியை அவர்கள் எழுப்பியிருக்க வேண்டும். அதற்கு அந்த ஆசிரியரே - மிகவும் உணர்ச்சி பொங்க - தமிழ்மாறன் என்ற பாத்திரத்தின் "கீழ்த்தரமான நயவஞ்சகத்தை"ப் பற்றி இழிவாய் சொல்லி, கபாலி சிறை சென்றதன் பின்புலத்தை விளக்கியிருக்க வேண்டும்.
  4. எண் 3-இல் சொல்லப்பட்டது போல் காட்சி அமைந்திருப்பின் - பின்வரும் காட்சியில், ஆசிரியர் குமரனே - கபாலியை கொலை செய்ய முனைவது நம்மைப் பெரிதும் ஈர்த்திருக்கும். பின்னர், குமரனை அவரின் தாய் கண்டித்து - தன் கணவரும்; குமாரின் தந்தையுமான தமிழ்மாறன் செய்த துரோகத்தை விளக்கி; உனக்கு அவர் அப்பத்தான் டா! எனக்கு புருஷன்!! நானே அதை தாங்கி/மறந்துவிட்டேன் என்றால் - அது உங்க அப்பனோட துரோகத்தால் தான் டா! கபாலி பெரிய மனிதர் டா! - என்பது போல் விளக்கம் கொடுத்திருக்க வேண்டும்.
  5. இந்நிலையில் "அப்பா என்று அழைக்கும்" அந்த பெண் பாத்திரம், ஆத்திரத்தில் "கருவுற்றிருந்த பெண்ணை கைவிட்ட கெட்டவரா கபாலி?!" என்று கேட்டிருக்கவேண்டும். அதற்கு, அந்தப் பெண்ணைப் பற்றி தெரிந்த அன்வர் போன்ற கதாபாத்திரம் உருக்கமாய்/ஆதங்கமாய் - "உன்னை ஏமாற்றிவிட்டு போனவன் மாதிரி நினைச்சுட்டியா?; கபாலியை அவர் நண்பனே துரோகத்தால் வீழ்த்திவிட்டான்!" என்று விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். அதை உணர்ந்த அந்தப் பெண், "ஆமாம். ஒரு பெண்ணை அம்மா ஆக்கறவன் ஆம்பளை இல்லை! பிறக்கும் குழந்தைக்கு நல்ல அப்பனா இருக்கறவன் தான் ஆம்பளை!!" என்று பேசுவது போல் வசனம் இருந்திருக்க வேண்டும் {இந்த சிந்தனையை தான் "ஆண்மையின் மகத்துவம்" என்ற தலைப்பில் - என்னுள் உதித்தது என்ற பிரிவில் - இன்று பகிர்த்தேன்}.
  6. இப்படியாய் - படத்தின் பின்வரும் எல்லா "நினைவு காட்சிகளும்" ஒவ்வொன்றாய் சொல்லி - கபாலியை விவரித்து; கபாலியின் மீதான எதிர்பார்ப்பை "படிப்படியாய் அதிகரித்து" இருக்கவேண்டும்! அப்போது, மாணவர்கள் "பெருத்த ஆர்வத்தோடு" - கபாலி எப்போது வெளியே வருவார்? - என்று கேட்க; அதற்கு அன்வரோ அல்லது மற்றெவரோ உரக்க-சிரிக்க...
  7. "முதல் காட்சியான" - மலேஷிய அரசின், கபாலியின் விடுதலை குறித்த விவாதம் - அடுத்த காட்சியாக தொடர்ந்திருக்க வேண்டும். அப்போது பற்றியிருக்கும் - பலரும் எதிர்பார்க்கும் படத்தின் விறுவிறுப்பு!
  8. தொடர்ந்து, கபாலியின் விடுதலைக் காட்சி வந்திருக்கவேண்டும். இதற்கிடையில், கபாலியைக் கொலை செய்ய ஒப்பந்தமாகும் "யோகி" பாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்திருக்கவேண்டும்.
  9. சிறையில் இருந்து வெளிவரும் கபாலி - அந்த முதல் துவம்சத்தை செய்துவிட்டு - சீர்திருத்தப் பள்ளிக்கு சென்றிருக்கவேண்டும். அதுவரை கபாலியை "மனத்திரையில், கபாலியைக் கண்ட மாணவர்கள்" - தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தி இருக்கவேண்டும்.
  10. அதைத் தொடர்ந்து, மனைவின் நினைவு "நிகழ் கால காட்சிகளோடு" ஒப்பிட்ட "கற்பனைக் காட்சிகள்" சொல்லப்பட்டு இருந்தால் - கபாலியின் "மனைவி மீதான காதல்/அன்பு" - நம்மையும் தொற்றியிருக்கும். நம்மை, கபாலியோடு சேர்ந்து மனைவி என்ற கதாபாத்திரத்தை உள்வாங்கச் செய்திருக்கும்.
  11. பின்னர், அடுத்த காட்சியில் தைவானில் அந்த நபரைத் தேடிச்செல்லும் நிகழ்வு; கபாலியைக் கொலை செய்ய, யோகியுடன் வரும் "கபாலியால் துவம்சம் செய்யப்படட" அந்த நபரை - யோகியே கொலை செய்யும் திருப்பம் - அற்புதமாய் உணரப்பட்டு இருக்கும். அப்படி இருந்தால், யோகி யார் என்ற உண்மை நம்மையும் பரவசப்படுத்தி இருக்கும். அதன் பின்னர், மனைவி உயிரோடு இருக்கும் தகவல் சொல்லப்பட்டு இருக்கவேண்டும்.
  12. இப்படி காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தால் - கபாலி தன் மனைவியைத் தேடிச் செல்லும் காட்சி - "எல்லோராலும், எந்த மறுப்புமின்றி" இரசிக்கப்பட்டு இருக்கும்; அதை, படத்தின் விறுவிறுப்பைக் குலைத்துவிட்டதாய் உணரப்பட்டு இருக்காது. உண்மையில், அந்த காட்சிகள் - மிகவும் அழகானவை/அற்புதமானவை.
  13. இறுதியாய் - டோனியை துவம்சம் செய்யும் இறுதிக் காட்சி!
  14. படம் பார்த்தவர்கள் - இந்த வரிசையில் காட்சிகளை எண்ணிப் பாருங்கள்! பலரும் எதிர்பார்க்கும் அந்த விறுவிறுப்பு உணரப்படும். இதைக் கூட - பலரும் விமர்சித்ததால் தான், வரிசைப் படுத்தி இருக்கிறேன். இல்லையேல்... முன்பே சொன்னது போல் - இந்தப் படத்தை நான் கொண்டாடினேன் - என்பதே உண்மை. இன்னும், படம் பார்க்காதவர்கள் - பார்த்துவிட்டு; இந்த வரிசைப்படி எண்ணிப் பாருங்கள். 
"மிகமுக்கியமான" குறைகள்:

   மேலுள்ளவை குறைகளே இல்லை! என்னளவில், மிகமுக்கியத்துவம் வாய்ந்த குறைகள் பின்வருபவையே:
  • கபாலி - யாருக்காகப் போராடுகிறார்? இந்தக் கேள்விக்கு சரியான/நியாயப்படுத்தும் விளக்கம் இல்லை! கபாலி "தமிழர்" எனும் பொது இனத்துக்காகப் போராடுகிறாரா? அல்லது "ஒரு குறிப்பிட்ட" இனத்துக்காகப் போராடுகிறாரா? - இதைத் தெளிவாய்/நேரடியாய் சொல்வதில் என்ன குழப்பம்?
  • இயக்குனரின் முந்தையப் படங்களை ஆழ்ந்து கவனித்தோர்க்கு - அவரின் "தலைசிறந்த சமூகப் போராட்டம்" தெரியும். அப்படங்களில் கூட, அவர் நேரடியாய் - தன் போராட்டத்தை வெளிக்காட்டவில்லை! ஆனால், ரஜினி எனும் நடிகர் என்ற அடிப்படையில் பார்த்தாலும் சரி; இல்லை... அயல்நாட்டில் நடக்கும் "சர்வதேச பிரச்னையை மையப்படுத்திய கதை" என்ற அடிப்படையில் பார்த்தாலும் சரி - இந்தப் படத்தின் தன்மையின் அடிப்படையில் பார்த்தால் - கதையின் மையக்கருத்தை "தெளிவாய்/நேரடியாய்" சொல்லி இருக்கவேண்டும்!
  • கபாலி - தமிழர் எனும் பொது இனத்திற்காக போராடுவதாய் இறுதிக் காட்சியில் சில வசனங்கள் வருகின்றன: "எங்க போனாலும், தமிழன் அடிமையாய் தான் இருக்கவேண்டுமா? தமிழன் கோட்டு-சூட்டு போடக்கூடாதா? தமிழன் ஆளக்கூடாதா?" என்பன போன்றவையே அவை. ஆனால், இந்த பொதுப் பிரச்சனையா படத்தின் கரு? அல்லவே!
  • "உலகம் ஒருவனுக்கா?!" என்ற முதல் பாடலில் வரும் பின்வரும் வரிகளைக் கவனியுங்கள்:
  1. \\\ கலகம் செய்து “ஆண்டவரின்” கதை முடிப்பான்! /// - "ஆண்டவர்" என்ற சொல், எந்த இனத்தில் பயன்படுத்தப்படும், என்பதை நான் விளக்கத் தேவையில்லை.
  2. \\\ பம்பரம் போல சுத்திக்கிட்டு; பறையிசை அடித்து நீ பாட்டுக்கட்டு! /// - பறையிசை என்பது உன்னதமான இசை. ஒரு மனிதனின் இறுதி யாத்திரையின் போதும் ஒலிக்கும் - அற்புதமான/உன்னதமான இசை. அந்த இசையை, இவ்வளவு "ஆழமாய்/ஆனந்தமாய்" பாடியது மிகுந்த பாராட்டுக்கு உரியது. ஆனால், இது போதாதே?!
  3. \\\ நாங்க எங்க பொறந்தா, உனக்கென்ன போடா?! தமிழனுக்காக வந்து நின்னவன் தான் உள்ளடா!! /// - மேற்கொண்ட உன்னத வரிகளை சொல்லிவிட்டு, பின்னர் ஏன் "தமிழன்" எனும் பொது இனத்தைக் குறிக்கும் வரி? தமிழர் எனும் பொது இனத்திற்குள் தான் - எல்லா இனமும் வருகிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை! ஆனால், மிகத்தவறான வகையில் ஒரு இனம் ஒடுக்கப்படும் போது - அதை நேரடியாய் சொல்வது மிக அவசியம். இப்படிப் பொதுமைச்சாயம் தேவையில்லை! என்பது என் புரிதல்.
  4. \\\ வந்தவன/போனவன வாழவச்சவன் - இனி வாழ்ந்து காட்டப்போறன்! வாயை மூடி கவனி /// மற்றும் \\\ அலைகடல் அடங்குமோ…? அதிகாரக் குரலுக்கு, எப்போதும்… நீர்வீழ்ச்சி நீ தானே?! உனை நீந்திக் கடக்க முடியாதே?! /// - என்பன பிற வரிகள்.
  5. \\\ மேட்டுக்குடியின் கூப்பாடு - இனி, நாட்டுக்குள்ள கேட்காது! “இன” முகவரி - இனி விழி திறந்திடுமே!! /// - இந்த வரி எந்த இனத்துக்காக சொல்லப்பட்டது?
  6. இந்த அற்புதமான வரிகள் கூட "தேவையற்ற/தெரிந்தே அமைத்த அதீத இசையால்" மறைக்கப்பட்டு இருக்கிறது. இடையிடையே "கடுப்பேற்றும் வகையில் ஆங்கில வரிகள் வேறு!" வெகுநிச்சயமாய் - இந்த வரிகள், நேரடியாய் எவரையும் சென்று சேரக்கூடாது! என்ற முனைப்பு இருந்திருக்கிறது - என்பது என் பார்வை. அதற்கான காரணத்தையே, நான் ஆராய முற்படுகிறேன்.
  • அந்தப் பாடலைத் தவிர - காட்சிகளிலும் ஒரு இனத்தைக் குறிக்கும் வண்ணம் - கபாலி மற்றும் அவரைச் சார்ந்தோரின் உடைகள் துவங்கி; கபாலியின் உடல் நிறத்தை வர்ணிக்கும் வண்ணம் ஒரு பெண் கேட்கும் கேள்வியும், அதற்கு கதாநாயகி கொடுக்கும் விளக்கம் - போன்ற பல காட்சிகள் வருகின்றன. "தமிழர்கள் கருப்பு என்ற பொதுமையை" நான் மறுக்கவில்லை. ஆனால், கதாநாயகி தவிர்த்து - கபாலியை சுற்றியுள்ளோர் எல்லோரும் அப்படியோர் கருப்பாய் காண்பிக்க என்ன காரணம்? பிறகேன், கதாநாயகிக்கு மட்டும் "வெள்ளைத் தோல்?!"
  • \\\ இனிமேல், இந்த மாதிரி உடைகள் போடாதீர்கள்! கோட்டு தான் போடவேண்டும்; உடல்தான் சிலவற்றை நிர்ணயிக்கிறது /// - போன்ற வசனங்களால்; கபாலியை அற்புதமாய் மாற்றுவார் கதாநாயகி. ஒரு மாணவர் கூட, உடை சார்ந்த கேள்வியை கேட்கிறார்; வில்லன்கள் கூட அதைக் குறிப்பிட்டு கேட்கிறார்.
  • இப்படி ஒரு இனம் சார்ந்த அடையாளங்களை "வீரமாய்/அழகாய்/இயல்பாய்" - சில காட்சிகளிலும்; ஒரு பாட்டின் சில வரிகளிலும் "மறை"விளக்கிய இயக்குனர் - ஏன், "பொட்டில் அறைந்தாற் போல்" இந்த இனத்துக்காகத்துக்கான போராட்டம் தான் இந்த கதை என்று சொல்லவில்லை?! ஆனால், பல ஊடகப் பெட்டிகளிலும் - அந்த இனம் சார்ந்த போராட்டத்தை விவரிப்பதை; தொடர்ந்து தன் படங்களில் செய்வேன் என்று கூட சொல்கிறார் இயக்குனர். பின்னர், ஏன் - அதை கபாலியில் நேரடியாய் சொல்லவில்லை!
  • வெகுநிச்சயமாய் - இது கவனக்குறைவால் நேர்ந்தது அல்ல! \\\ காந்தி சட்டையைக் கழட்டியதற்கும்; அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் பெறிய காரணம் இருக்கு! அது, பெரிய அரசியல் /// - என்ற ஒற்றை வசனத்தில் "ஒரு இனப் போராட்டத்தை" அறிவார்ந்த வகையில் விளக்கிய இயக்குனர் - அதை வலுவான காட்சிகளால்/வசனங்களால் ஏன் சொல்லவில்லை? இந்த ஒற்றை வரி எல்லோருக்கும் "எல்லாவற்றையும் விளக்கிவிடாது!" எனவே, இது தெரிந்தே நடந்திருக்கிறது என்பதாய் நான் பார்க்கிறேன்.
  • இயக்குனருக்கு பயம் ஏதும் இருப்பதாய் தெரியவில்லை! முந்தைய படங்களில் கூட இதையே கையாண்டிருக்கிறார் - ஆனால், அவற்றிலும் நேரடியாய் சொல்லவில்லை. அப்படி "பொட்டில் அறைந்தாற் போல்" சொல்ல எது தடையாக இருக்கிறது? காரணம் என்னவென்பது முக்கியமில்லை. ஆனால், இதை இனிமேலாவது அந்த இயக்குனர் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று வேண்டுகிறேன். அப்போது தான், இதன் வீரியம் பலரையும் சென்று சேரும். அந்த வீரியம் தான் - குறைந்த அளவே எனினும், ஒரு இனம் இன்னமும் அடக்கப்படுவதை - மாற்றுவதற்கான, மாற்றத்திற்கு வழிவகுக்கும். என் வேண்டுதல் - இயக்குனரைச்  சென்று சேருமா?    
பின்குறிப்பு: முதல்முறை பார்த்தபோதே, உடன் வந்த நடப்பிடம் சொன்னேன்! "கபாலி 2.0" வருவதற்கான வாய்ப்பிறக்கிறது என்று. இப்போது படத்தின் இயக்குனரும் அதை உறுதி செய்திருப்பதாய், தகவல்கள் வருகின்றன. அப்படி ஓர் எண்ணம் இருப்பின்... இயக்குனருக்கு பின்வரும் இரண்டு வேண்டுகோள்களை விடுக்க ஆசைப்படுகிறேன்: 1. இந்த இனத்துக்கான போராட்டம் என்பதை "பொட்டில் அறைந்தாற் போல், தெளிவாய் - விளக்கமாய்" சொல்லுங்கள். தமிழர் என்ற பூச்சு வேண்டாம்; குறிப்பாய், ரஜினியை வைத்து "தமிழர் எனும் பொதுச்சாயம் வேண்டாம்! அதை மேற்குறிப்பிட்ட என் முதல் விமர்சனத்தில் தெளிவாய் சொல்லி இருக்கிறேன். 2. இந்தியாவில்; அதிலும் குறிப்பாய் தமிழ்நாட்டில் கதைக்களத்தை அமையுங்கள். எந்த வெளிநாட்டிலும், "இன்றைய காலக்கட்டத்தில்" இப்படியோர் இனப்பிரச்சனை இருப்பதாய் தெரியவில்லை! மேலும், ரஜினிக்காக மற்றவற்றில் சமரசம் செய்துகொள்ளாத நீங்கள் - சர்வதேச பிரச்சனை என்ற "பிரம்மாண்ட மாயையில் மட்டும்" ஏன் சமரசம் செய்துகொள்கிறீர்கள்?

என் பார்வை இயக்குனரைச் சென்று சேருமா என்று தெரியவில்லை! 
எவர் மூலமாவது சென்றால் சந்தோசமே! "கபாலி 2.0" ஆவது - எடுத்துக்கொண்ட 
பிரச்னையை இயல்பாய்/தெளிவாய்/நேரடியாய் பேசட்டும்! வாழ்த்துகள்!!!

குறள் எண்: 0363 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 037 - அவா அறுத்தல்; குறள் எண்: 0363}

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்

விழியப்பன் விளக்கம்: ஆசையற்ற நிலைப்பாட்டைப் போன்ற உன்னத செல்வம், இவ்வுலகில் இல்லை; அதற்கு இணையான ஒன்று, அவ்வுலகிலும் இல்லை.
(அது போல்...)
பரஸ்பர புரிதலைப் போன்ற மகத்தான வலிமையாக்கி, இல்லறவுறவில் இல்லை; அதற்கு நிகரான ஒன்று, எவ்வுறவிலும் இல்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஆண்மையின் மகத்துவம்...

வெள்ளி, ஜூலை 29, 2016

குறள் எண்: 0362 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 037 - அவா அறுத்தல்; குறள் எண்: 0362}

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்

விழியப்பன் விளக்கம்: ஆசைப் படும்போது, பிறப்பறுக்க ஆசைப்பட வேண்டும்; ஆசையில்லாமல் இருக்க ஆசைப் படும்போது, பிறப்பறுத்தல் சாத்தியமாகும்.
(அது போல்...)
இனவெறியை அழிக்க, மொழிவெறியை அழித்திட வேண்டும்; வெறியில்லாமல் இருக்க வெறி கொள்ளும்போது, இனவெறி அழியக்கூடும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், ஜூலை 28, 2016

குறள் எண்: 0361 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 037 - அவா அறுத்தல்; குறள் எண்: 0361}

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து

விழியப்பன் விளக்கம்: ஆசை என்பது, எல்லா உயிர்களுக்கும் எல்லாக் காலத்திலும்; தவறாமல், அவர்களின் ஆசைக்குரிய பிறப்பை அளிக்கும் விதையாகும்.
(அது போல்...)
கடவுள் என்பது, எல்லா மனிதர்களுக்கும் எல்லா யுகங்களிலும்; மறுக்காமல், அவர்களின் அறத்திற்குரிய பயத்தை விதைக்கும் காரணியாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், ஜூலை 27, 2016

அதிகாரம் 036: மெய்யுணர்தல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்

0351.  பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
           மருளானாம் மாணாப் பிறப்பு

           விழியப்பன் விளக்கம்: மெய்யற்றவற்றை மெய்யென்று நம்பும் அறியாமைமாட்சியமையற்ற 
           துன்பம் சூழ்ந்தபிறவிப்பயனுக்கு வழிவகுக்கும்.
(அது போல்...)
           அறமற்றவற்றை அறமென்று வாதிடும் மூர்க்கம்; மனிதமற்ற அரக்கம் நிறைந்த, 
           செயல்பாட்டிற்கு வித்திடும்.

0352.  இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
           மாசறு காட்சி யவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: மயக்கம் நீக்கிய, குற்றமில்லாத பகுத்தறிவை உடையவர்க்கு; 
           அறியாமை எனும் இருள் மறைந்து, இன்பம் விளையும்.
(அது போல்...)
           இரசாயனம் அகற்றிய, அழிவில்லாத விவசாயம் செய்வோர்க்கு; வீட்டுமனை என்ற
           பேராசை விலகி, வாழ்வியல் எளிதாகும்.
           
0353.  ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
           வானம் நணிய துடைத்து

           விழியப்பன் விளக்கம்: ஐயங்களைக் களைந்து, தெளிவுடன் மெய்யைப் 
           பகுத்தறிந்தோர்க்கு; புவியுலகை விட, விண்ணுலகம் மிக அருகாமையில் இருக்கும்.
(அது போல்...)
           தடைகளைக் கடந்து, மகிழ்வுடன் பணியை மேற்கொள்வோர்க்கு; சம்பளத்தை விட, 
           வெகுமானம் மிக மகிழ்ச்சியானதாய் இருக்கும்.

0354.  ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
           மெய்யுணர்வு இல்லா தவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: எல்லாவற்றையும் பகுத்தறிந்து, மெய்யுணரும் திறம் 
           இல்லாதோர்க்கு; ஐவகை உணர்வுகளை அடக்கியாளும் திறனிருந்தும் பயனில்லை.
(அது போல்...)
           குடும்பத்தினரை அரவணைத்து, அன்புக்கு அடிபணியும் வீரமற்றோர்க்கு; பஞ்ச
           பூதங்களைக் கட்டுப்படுத்தும் வலிமையிருந்தும் வாழ்வில்லை.

0355.  எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
           மெய்ப்பொருள் காண்பது அறிவு

           விழியப்பன் விளக்கம்: எந்த பொருளெனினும், எவ்வகை மயக்கத்தைக் 
           கொடுப்பதெனினும்; அப்பொருளின் உண்மையான தன்மையை உணர்வதே, பகுத்து 
           அறிவதாகும்.
(அது போல்...)
           எந்த தொழிலெனினும், எவ்வளவு வருமானத்தை அளிப்பதாயினும்; அத்தொழிலின் தார்மீக 
           அம்சங்களை ஆராய்வதே, தொழில் தர்மமாகும்.

0356.  கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
           மற்றீண்டு வாரா நெறி

           விழியப்பன் விளக்கம்: அனைத்தையும் கற்றறிந்து, மெய்ப்பொருளை உணர்ந்தோர்; 
           மீண்டும் மண்ணுலகில் பிறக்காத, உயரிய நிலையை அடைவர்.
(அது போல்...)
           சிக்கல்களை ஆராய்ந்தறிந்து, உறவுகளைப் பேணுவோர்; மீண்டும் சிக்கல்களைச் 
           சந்திக்காத,  உன்னத வாழ்வைப் பெறுவர்.

0357.  ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
           பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

           விழியப்பன் விளக்கம்: உள்ளத்தில் பகுத்தறிந்து, மெய்ப் பொருளை உறுதியாய் 
           உணர்ந்தால்; நமக்கு இன்னுமோர் பிறவித்துன்பம் உண்டென்ற, நம்பிக்கைத் 
           தேவையில்லை.
(அது போல்...)
           மனிதத்தில் ஒருங்கிணைந்து, மனித தத்துவத்தை முழுவதுமாய் அறிந்தால்; நமக்கு 
           மற்றுமோர் பரிணாமவளர்ச்சி தேவையென்ற, எண்ணம் அவசியமில்லை.

0358.  பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
           செம்பொருள் காண்பது அறிவு

           விழியப்பன் விளக்கம்: பிறவியெனும் அறியாமையை அழித்திட; புகழ் என்னும் மெய்ப்  
           பொருளை உணர்தலே, அறிவுடைமை ஆகும்.
(அது போல்...)
           பகையெனும் மனநோயை நீக்கிட; மன்னிப்பு என்னும் நல் மருத்துவரை நாடுவதே,
           அருமருந்து ஆகும்.

0359.  சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
           சார்தரா சார்தரு நோய்

           விழியப்பன் விளக்கம்: பொய்யின் தொடர்புகளை உணர்ந்து, அத்தொடர்பை அறுத்து 
           வாழ்ந்திடின்; அதையும் கடந்து துன்பத்தை அளிக்கும் தொடர்பை, வேறொரு தொடர்பு 
           உருவாக்காது.
(அது போல்...)
           தீயறத்தின் காரணிகளைக் கண்டறிந்து, அக்காரணியை அகற்றப் பழகிடின்; அதையும் 
           தாண்டி தீயறத்தை உயிர்ப்பிக்கும் காரணியை, மற்றோர் காரணித் தூண்டாது.

0360.  காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
           நாமம் கெடக்கெடும் நோய்

           விழியப்பன் விளக்கம்: விருப்பு/வெறுப்பு/தெளிவின்மை - இம்மூன்று காரணிகளின் 
           உண்மையான விளைவுகளை உணர்ந்து, அவற்றை அழித்துவிட்டால்; நம் துன்பங்களும் 
           அழிந்துவிடும்.
(அது போல்...)
           மொழி/இனம்/மதம் - இம்மூன்று வெறிகளின் அபாயமான தீவிரவாதங்களை உணர்ந்து, 
           அவற்றை நீக்கிவிட்டால்; அனைத்து மிருகத்தன்மையும் நீங்கிவிடும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

குறள் எண்: 0360 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்; குறள் எண்: 0360}

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்

விழியப்பன் விளக்கம்: விருப்பு/வெறுப்பு/தெளிவின்மை - இம்மூன்று காரணிகளின் உண்மையான விளைவுகளை உணர்ந்து, அவற்றை அழித்துவிட்டால்; நம் துன்பங்களும் அழிந்துவிடும்.
(அது போல்...)
மொழி/இனம்/மதம் - இம்மூன்று வெறிகளின் அபாயமான தீவிரவாதங்களை உணர்ந்து, அவற்றை நீக்கிவிட்டால்; அனைத்து மிருகத்தன்மையும் நீங்கிவிடும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், ஜூலை 26, 2016

"சார்புணர்ந்து சார்புகெட" மற்றும் "சார்தரா சார்தரு" (குறள் எண்: 0359)


         இன்று பதிந்த குறள் எண்: 0359-இற்கான என் விளக்கவுரையைப் படித்திருப்பீர். அதற்கான விளக்கவுரையை எழுதி 22 நாட்கள் ஆகின்றன. அதை எழுதி முடித்தவுடன் என்னுள் பரமத்திருப்தி; எதையோ பெரியதாய் சாதித்தது போன்றோர் உணர்வு. வெகுநிச்சயமாய் - இதுவரை எழுதிய விளக்கவுரைகளுள், மிகப்பெரிய சவாலாய் இருந்த ஒன்று. என் மகிழ்ச்சியை உடனடியாய் "குறளும் வாழ்வியலும்" என்ற எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் கீழ்வருமாறு பகிர்ந்தேன்: 

\\\\ அட... அட... அட... இன்னும் 22 நாட்களில் பதியப்போகும்; குறள் எண் 0359-இற்கான விளக்கவுரையை எழுதுவதற்குள் - அடேங்கப்பா! என் சித்தம் கலங்கி தெளிந்தது!

தற்பெருமையில்லை! என்னளவில், "அந்த குறளை இப்படி உள்வாங்கி பொருள் தந்தோர் - இதுவரை எவருமில்லை!" என்றே நம்புகிறேன். எல்லாம், பெருந்தகையின் அருள். அதைப்பற்றியே தனியே - ஒரு பதிவெழுதவேண்டும்.

யோவ் வள்ளுவரே! ஏன்யா? எப்படியா? எப்படியா இப்படியெல்லாம் யோசித்தீர்?! ////

         முன்பு குறிப்பிட்ட "யோவ் வள்ளுவரே!" என்ற ஆனந்தக்கதறல், இந்த குறளில் - பன்மடங்கு அதிகமானது. என்னவிதமான மனிதர் அவர்? எப்படி இவ்வாறெல்லாம் அவரால், யோசிக்க முடிந்திருக்கிறது? எந்த அளவுக்கு ஆழமாய் யோசித்து இருந்தால்; இப்படி "ஒரே வார்த்தையை, நான்கு முறை சொல்லி" அடக்கமுடியும்?! ஐன்ஸ்ட்டின் (சொன்னதாய்)கூற்று ஒன்றுண்டு: "உன்னால் சுருக்கமாய் விளக்க முடியவில்லை எனில்; நீ அதை தேவையான அளவுக்கு புரிந்து கொள்ளவில்லை!" என்பதே அது (மேலுள்ள கருத்துப்படத்தை கவனிக்க!); மிகப்பெரிய விடயம் இது. அதுதான், திருக்குறளின் தனிச்சிறப்பே! ஆனால், அதை "ஆழமாய்" புரிந்துகொள்ள - திருக்குறளை படிப்போரும்; பெரிய புரிதலோடும்/தேடலோடும் இருத்தல் அவசியமாகிறது. ஆனால், அவ்விரண்டும் இன்று மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது. அதனால்தான், பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்த - கவிதை நடை மாறி - இன்று உரைநடைகள் முக்கியமாயின.

     "எழுதுவது சிரமம்" என்ற காரணத்தினாலேயும் கவிதைகள் குறைந்துவிட்டன! அதிலும், வெண்பா போன்ற இலக்கணம் கொண்ட கவிதைகள், மிகப்பவரவலாய் குறைந்துவிட்டன. படிப்போர் பலரும், எல்லாவற்றையும் விளக்கமாய் சொல்லவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். அதனால் தான், திரைப்படமும்/நாடகமும் நம்மை "வெகுவாய்" ஈர்க்கிறது. சமயங்களில், அவையும் சரியாய் புரிந்து கொள்ளப்படுவதில்லை; அதற்கு மிகசிறந்த உதாரணம் தான் சமீபத்தில் வெளியான கபாலி திரைப்படம். அதுவே, சில புதுக்கவிதைகள்/கவிதைகளை; நான் தலையங்கமாகவும் எழுதக் காரணம். புதுக்கவிதை புரியவில்லை என்போரும் உண்டு; தலையங்கம் நீளமாய் இருக்கிறது என்போரும் உண்டு. எனவே, முக்கியமானவற்றை இரண்டு வடிவங்களிலும் எழுகிறேன். அதை மேலும் சுருக்கி, "என்னுள் உதித்தது" என்ற பிரிவில் "கருத்துப் படமாயும்" பதிகிறேன். அவரவர்க்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளட்டும். இதே அடிப்படையில் தான், நம் பொதுமறையாம்...

       திருக்குறளுக்கு விளக்கவுரைகள் தேவைப்படுவதும்! இத்தனைக்கும், இப்போது இருக்கும் திருக்குறள் பலவும் - மிகவும் "எளிதாய் சீர் பிரித்து எழுதப்பட்ட வடிவமே!"; அதற்கே விளக்கவுரைகள் தேவைப்படுகிறது. அதனால், வள்ளுவர் "ஆழப் புரிந்து; சுருங்க சொல்லவில்லை!" என்று பொருளல்ல! அதை உள்வாங்கும் அளவிற்கு; நம் புரிதலும்/தேடலும் இல்லாமல் போனதே காரணம். அவ்விரண்டையும் செய்ய - எல்லோருக்கும் போதிய நேரமும்/வாய்ப்பும் கிடைப்பதில்லை - என்ற உண்மையும் எனக்குப் புரிகிறது. இவற்றையும் மீறி - திருக்குறளில் உள்சென்று ஆழப் பார்க்க - பல்வகை விடயங்கள் புதைந்து இருக்கின்றன; அதுதான், நான் விளக்கவுரை எழுதக் காரணம். அந்த அடிப்படையில், மேற்குறிப்பிட்ட திருக்குறள் - ஒரு மிகப்பெரிய உவமானம். அதில் பொதிந்திருக்கும் "அதி ஆழமான கருத்தை; இப்படி ஒரே வார்த்தையை 4 முறை சொல்லி" வேறெவராலும் விவரிக்கமுடியாது. ஆனால், நம் பெருந்தகைக்கு - அது மிக எளிதான ஒன்று.

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
                                           சார்தரா சார்தரு நோய்

           இதுதான், அந்த குறள். இக்குறளுக்கு முக்கியமான ஆசிரியர்கள் என்ன விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள் என்று பார்ப்போம்:
  • மணக்குடவர் உரை: தன்னைச் சார்வனவற்றையறிந்து அவையிற்றின் சார்வுகெட ஒழுகுவானாயின் அவ்வொழுக்கத்தினையழித்துச் சார்தலைச் செய்யா: சாரக்கடவனவாய துன்பங்கள். 
  • பரிமேலழகர் உரை: சார்பு உணர்ந்து சார்புகெட ஒழுகின் - ஒருவன் எல்லாப் பொருட்கும் சார்பாய அச்செம்பொருளை உணர்ந்து, இருவகைப் பற்றும் அற ஒழுகவல்லனாயின்; சார்தரும் நோய் அழித்து மற்றுச் சார்தரா - அவனை முன் சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ்வுணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின் சாரமாட்டா. 
  • மு. வரதராசன் உரை: எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.
  • மு. கருணாநிதி உரை: துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்.
  • சாலமன் பாப்பையா உரை: எல்லாப் பொருள்களுக்கும் இடமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து பற்றின்றி வாழ்ந்தால், பற்ற வரும் துன்பங்கள் ஒழுக்க உணர்வை அழி்த்துப் பற்ற மாட்டா.
      மேற்குறிப்பிட்டுள்ள விளக்கவுரைகள் - சில குறுகியதாகவும்; சில நீண்டும் - இருக்கின்றன! அவர்கள் எல்லோரும், மிக்கபெரிய சான்றோர்கள்; அவர்களுடன், ஒப்பிட்டால் - நான் மிகச்சிறியன்! ஒரு கற்றுக்குட்டி. இந்தப் பதிவு, அவர்களின் விளக்கவுரையை குறை காணும் முயற்சியல்ல! இந்த தலைப்பில் குறிப்பிட்டிருக்கும் - "சார்புணர்ந்து சார்புகெட" மற்றும் "சார்தரா சார்தரு" - இந்த 4 வார்த்தைகளை, மணக்குடவர் தவிர்த்து மற்றவர்கள் சரியாய் கையாண்டிருப்பதாய் டெஹ்ரியவில்லை! சார்பு என்ற வார்த்தை - சார்ந்திருப்பது/தொடர்புடையது; சார்ந்து-விளைவது/தொடர்ந்து-விளைவது; தொடர்ச்சி - போன்ற பலவகைகளில் பொருள்படும். இங்கே, துன்பதிற்கு காரணமானவைகளை - அதாவது, எவையெவை எல்லாம்; துன்பத்தோடு தொடர்புடையவையோ - அவற்றை ஒழிக்க வேண்டும் என்ற கரு, சரியாய் கையாளப்படவில்லை என்பதே என் புரிதல். எனவே, என்னுடைய விளக்கம் கீழ்வருவதே:

விழியப்பன் விளக்கம்: துன்பத்தின் தொடர்புகளை உணர்ந்து, அத்தொடர்பறுத்து வாழ்ந்திடின்; அவ்வொழுக்கத்தை அழித்து, நம்மைத் தொடராது - அத்தொடர்பு தரும் துன்பம்.

(அது போல்...)

தீய-அறத்தின் வேர்களைக் கண்டறிந்து, அவ்வேரறுத்துப் பழகிடின்; அப்பழக்கத்தை ஒழித்து, நம்முள் வேரூன்றாது - அவ்வேர் உயிர்ப்பிக்கும் தீய-அறம்.

        இக்குறளுக்கு விளக்கவுரை எழுதவே - அயர்ச்சி வெகுவானது. நிகர்விளக்கம் எழுத மேலும் பெருத்த சிரமமானது.  இவற்றைத் தாண்டி, கருத்துப்படம் ஒன்றை இடவேண்டும்; என் மனம் "யோவ் வள்ளுவரே! ஏன் யா? ஏன் யா இப்படி? - என்று கதறியது!" 2 நாட்களுக்குப் பின் "ஓரளவுக்கு இணையான" கருத்துப்படத்தையும் கண்டுபிடித்துவிட்டேன். அதன் பின்னர், இந்தப்  பதிவிற்கு(ம்) ஒரு கருத்துப்படம் வேண்டும் என்று யோசித்தபோதே மயக்கமே வந்துவிட்டது. ஒருவராய், இந்தப் பதிவின் முதல் வடிவம் எழுதும் போது - இதற்கு தொடர்புடைய ஐன்ஸ்டினின் கூற்று ஒன்று நினைவுக்கு வந்தது; அதையும் இந்தப் பதிவோடு தொடர்புபடுத்தி எழுதி - அந்த கருத்துப் படத்தை, இந்தப் பதிவிற்கு இட்டுவிட்டேன். எப்படியோ... ஐன்ஸ்டின் காப்பாற்றி விட்டார். இருப்பினும், இந்தக் கேள்வியை கேட்டே ஆகவேண்டும்:

யோவ் வள்ளுவரே! ஏன் யா? ஏன்?? முடியலை யா...!!!

குறள் எண்: 0359 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்; குறள் எண்: 0359}

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்

விழியப்பன் விளக்கம்: பொய்யின் தொடர்புகளை உணர்ந்து, அத்தொடர்பை அறுத்து வாழ்ந்திடின்; அதையும் கடந்து துன்பத்தை அளிக்கும் தொடர்பை, வேறொரு தொடர்பு உருவாக்காது.
(அது போல்...)
தீயறத்தின் காரணிகளைக் கண்டறிந்து, அக்காரணியை அகற்றப் பழகிடின்; அதையும் தாண்டி தீயறத்தை உயிர்ப்பிக்கும் காரணியை, மற்றோர் காரணித் தூண்டாது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், ஜூலை 25, 2016

குறள் எண்: 0358 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்; குறள் எண்: 0358}

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு

விழியப்பன் விளக்கம்: பிறவியெனும் அறியாமையை அழித்திட; புகழ் என்னும் மெய்ப் பொருளை உணர்தலே, அறிவுடைமை ஆகும்.
(அது போல்...)
பகையெனும் மனநோயை நீக்கிட; மன்னிப்பு என்னும் நல் மருத்துவரை நாடுவதே, அருமருந்து ஆகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, ஜூலை 24, 2016

குறள் எண்: 0357 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்; குறள் எண்: 0357}

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

விழியப்பன் விளக்கம்: உள்ளத்தில் பகுத்தறிந்து, மெய்ப் பொருளை உறுதியாய் உணர்ந்தால்; நமக்கு இன்னுமோர் பிறவித்துன்பம் உண்டென்ற, நம்பிக்கைத் தேவையில்லை.
(அது போல்...)
மனிதத்தில் ஒருங்கிணைந்து, மனித தத்துவத்தை முழுவதுமாய் அறிந்தால்; நமக்கு மற்றுமோர் பரிணாமவளர்ச்சி தேவையென்ற, எண்ணம் அவசியமில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

"சாதி" பிரச்சனையும்; "மத" பிரச்சனையும்...


   நம்மில் பலரும், சாதிப்பிரச்சனையும்/மதப்பிரச்சனையும் - தொடர்பற்றவை என்றே புரிந்து கொள்கிறோம். ஆனால், இரண்டிற்கும் தொடர்புண்டு என்றே தோன்றுகிறது. இவ்விரண்டையும் - "மாமியார்/மருமகள்" போன்ற உறவுச்சண்டையுடன் தொடர்பு படுத்தலாம் என்றும் தோன்றுகிறது. எப்படி என்கிறீர்களா?!
  • "மாமியார்/மருமகள்" போன்ற உறவுச்சிக்கலில் - பிரச்சனையின் வீரியம் சம்பந்தப்பட்ட "மாமியார் (அல்லது) மருமகள்" என்ற தனிநபரோடு நின்றுவிட்டால் - அது "சாதி"ப் பிரச்சனை போன்றது.
  • தனிநபரையும் தாண்டி, பிரச்சனையின் வீரியும் - "மாமியார் (அல்லது) மருமகள்" சார்ந்த சொந்த/பந்தம் வரை தொடர்ந்தால் - அது "மத"ப் பிரச்சனை போன்றது.
பிரச்சனை (எதுவா/எப்படியா)யினும் - இதற்கு தீர்வு; 
தனிமனிதரின் "ஒழுக்கம்/புரிதல்" போன்றவற்றில்தான் இருக்கின்றது!!!

சனி, ஜூலை 23, 2016

குறள் எண்: 0356 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்; குறள் எண்: 0356}

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி

விழியப்பன் விளக்கம்: அனைத்தையும் கற்றறிந்து, மெய்ப்பொருளை உணர்ந்தோர்; மீண்டும் மண்ணுலகில் பிறக்காத, உயரிய நிலையை அடைவர்.
(அது போல்...)
சிக்கல்களை ஆராய்ந்தறிந்து, உறவுகளைப் பேணுவோர்; மீண்டும் சிக்கல்களைச் சந்திக்காத,  உன்னத வாழ்வைப் பெறுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கபாலி (2016)...


    கபாலி திரைப்படத்தைப் பற்றி "எதிர்மறையான விமர்சனங்கள்" நிறைய இருக்கின்றன. என்னளவில் - ரஜினி படம் என்ற அடிப்படையில் - இப்படி எதிர்க்கும் அளவிற்கு ஏதுமில்லை! இம்மாதிரியான விமர்சனங்கள் - ஒவ்வொருவரின் தேவையற்ற/தனிப்பட்ட எதிர்பார்ப்பின் விளைவு என்பதாகவே நான் பார்க்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே இப்படத்தின் இயக்குனர் திரு. ரஞ்சித் அவர்கள் - இது, வழக்கமான ரஜினியின் திரைப்படம் அல்ல! - என்பதை வெளிப்படையாய் சொல்லி இருக்கிறார் (இதுவரை பார்க்காதோர், இனியாவது - அவரின் பேட்டியைப் பாருங்கள்). இந்த படம் "பாஷாவும்/நாயகனும்" கலந்த கலவை என்று கூட சொல்லி இருந்தார். இதற்குமேல், இந்த படத்தில் "என்ன எதிர்பார்க்கக் கூடாது?!" என்பதை எவர்/எப்படி தெளிவாய் சொல்ல முடியும்? அதையும் மீறி, இப்படிப்படட எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன என்றால் - இது நிச்சயம், இயக்குனரின் தவறல்ல! இது ரஜினி என்ற மாயையில் நாமும் சிக்கி...

    ரஜினியையும் சிக்கவைத்து இருக்கும் - நம் ஒவ்வொருவரின் தவறே! என்னளவில், இதில் திரைப்படத்தைப் பற்றியோ; இயக்குனரைப் பற்றியோ; ரஜினியைப் பற்றியோ - எதிர்மறையாய் சொல்ல ஏதுமில்லை. இதற்கு, முழுக்க/முழுக்க - ரஜினியைப் பற்றி நாம் கொண்டிருக்கும் எண்ணமே - காரணம், என்பது என் புரிதல். இந்த அடிப்படையிலேயே, கபாலி பற்றிய என் பார்வையை எழுதி இருக்கிறேன். நான் கமலின் அபிமானி என்பது என்னை அறிந்தோருக்கு, தெளிவாய் தெரியும். அதையும் கடந்து, ரஜினி எனும் நடிகரை/மனிதரை எனக்கு மிகவும் பிடிக்கும். ரஜினியை - அணு/அணுவாய் இரசித்துப் பார்ப்பவன் நான்; ரஜினி ஒரு சகாப்தம். ரஜினிக்கு முன்னும், ரஜினி  போல் யாருமில்லை! ரஜினிக்கு பின்னும், ரஜினி போல் யாரும் வரப்போவதில்லை! - ரஜினி ரஜினிதான். என்னைப் பொறுத்த அளவில், ரஜினியின் திரைப்பட வரலாற்றில் - இந்தப்படம் போற்றி கொண்டாடப்பட வேண்டும்.

  • படத்தில் இருக்கும் "ஒரேயொரு" எதிர்மறையான விடயம் என்றால் - அது, படத்தின் மையக்கரு! ஆனால், அதைப்பற்றி இப்போது பேசி எந்தப் பயனும் இல்லை. இன்றைய சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இது தேவையற்றது என்ற அடிப்படையிலேயே - அதையும் கூட, எதிர்மறையாய் பார்க்கிறேன். இருப்பினும், நாம் தெரிந்துகொள்ள வேண்டிய கதை என்பதால், அந்த எதிர்மறையும் - நேர்மறை ஆகிறது.
சரி, என் பார்வை இப்போது:

ரஜினி என்பவர் யார்?  ரஜினியை எப்படி அணுகவேண்டும்?
  • ரஜினி எனும் "ஸ்டையில் நடிகரை"த் தாண்டி - ரஜினி எனும் அற்புத நடிகரை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால், அதைத் தொடர்ந்து நாம் மறுத்துவிட்டு - ரஜினி எனும் நடிகரை "உச்ச நடிகர்" எனும் அந்தஸ்த்தில் வைத்து பழகிப்/பார்த்துவிட்டோம். அதனால் தான், ரஜினி எனும் நடிகர் "இணையற்ற சூப்பர் ஸ்டாராய்" இதுவரை இருக்கிறார்; இனியும் இருப்பார்! எப்போதும் அவர் ஒருவரே "சூப்பர் ஸ்டார்!".
  • இடையிடையே "6-இலிருந்து 60 வரை/புவனா ஒரு கேள்விக்குறி/தர்மதுரை" போன்ற எண்ணற்ற நடிப்பை/கதையை மையப்படுத்திய படங்களையும் கொடுத்திருக்கிறார். நாம் அதையும், மறுக்காமல் தொடர்ந்து இரசித்து வந்திருக்கிறோம்.
  • எனவே, ரஜினி என்ற நடிகரை இதுவரை நாம் சரியாய் அணுகியே வந்திருக்கிறோம் என்றே நம்புகிறேன். ஆனால், இப்போது - நாம் வேறொரு விதத்தில் ரஜினியை அணுகவேண்டியது அவசியம் ஆகிறது. நமக்கு மட்டுமல்ல! ரஜினிக்கும் இது அத்தியாவசியமானது.

ரஜினியிடம் நம்முடைய தவறான அணுகுமுறை
  • மேற்குறிப்பிட்ட வண்ணம், சில படங்களில் நாம் ரஜினியை அணுகியிருப்பினும் - ரஜினி எனும் அந்த "ஸ்டார் அந்தஸ்த்தை" அடைந்த பின்; ரஜினியை நாம் பெரிய அளவில் மாற்று முயற்சியை செய்ய அனுமதிக்கவில்லை! அதனாலேயே, நாம் இன்னும் பல அற்புதமான ரஜினி படங்களை பார்க்கும் அனுபவத்தை இழந்திருக்கிறோம். இதற்கு - முழுக்க/முழுக்க நம் தவறான அணுகுமுறையே காரணம்.
  • இந்த அணுகுமுறைக்கு - மிகசரியான உதாரணம் சொல்லவேண்டும் எனில் - சச்சின் டெண்டுல்கர்! ஒருகாலத்தில், சச்சின் என்பவர் "ஒன் மேன் ஆர்மி!" - ரசித்தோம்/கொண்டாடினோம். தவறில்லை! ஆனால், 10/15 ஆண்டுகள் கடந்த பின்னும் - அதையே நாம் எதிர்பார்த்தோம். சச்சின் என்றாலே "சென்ச்சுரி" அடிக்கவேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பாய் ஆகிவிட்டது. மேலும், அவர் "அவர் ஸ்டையிலில், அதிரடியாக" அடிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும். அதனால் தான், பிற்பாதியில் "40/60/70" என்று அவர் ரன்கள் எடுத்த அற்புதமான ஆட்டங்களைக் கொண்டாடத் தவறிவிட்டோம். ஆடும் காலத்திற்கேற்ப, அருமையாய் தன் ஆட்டத்தை மாற்றி/மேம்படுத்திய அற்புதமான ஆட்டக்காரர் அவர். இல்லையெனில், வீரேந்தர் சேவாக்குக்கு என்ன நேர்ந்ததோ! - அதுவே, சச்சினுக்கு நேர்ந்திருக்கும். உண்மையில், சேவாக் மாத்திரம் - சச்சினைப் போல், தன் ஆட்டத்தை மாற்றி/மேம்படுத்தி இருந்தால் - சச்சினை விட "அதிக உயரம்" தொட்டிருப்பார். 
  • இதேவிதமான எதிர்பார்ப்பு தான் - 93 வயதிலும் ஒரு முதியவர், ஒரு அரசியல் கட்சியைத் தன் கட்டுப்பாட்டிலேயே  வைத்திருக்க உந்தப்பட்டு இருப்பதற்கான அடிப்படையும். அந்த முதியவர், 60 வயதைக் கடந்துவுடனே - கட்சியில் தன் நிலைப்பாட்டை மாற்றி இருக்கவேண்டும். இனிமேல், அவர் தன் நிலைப்பாட்டை மாற்றினாலும் - அது எந்த அளவுக்கு வெற்றி தரும் என்பது நிச்சயமில்லை. ஏனெனில், காலம் மிகவும் கடந்துவிட்டது.
  • ரஜினியும் 60 வயதைக் கடந்துவிட்டார்; இனியும், ரஜினி முந்தைய படங்கள் போல் நடித்துக் கொண்டிருந்தால் - நாமே ரஜினியை "நாம் வைத்திருக்கும் இந்த நிலையில் இருந்து - அதலபாதாளத்தில் தள்ளிவிடுவோம்!". எனவே, ரஜினி சரியான நேரத்தில் எடுத்திருக்கும் - இந்த சரியான முடிவை - நாம் பெரிதும் கொண்டாடவேண்டும். இல்லையேல், சச்சினைக் கொண்டாட மறந்தது போல் - ரஜினியையும் கொண்டாட தவறிவிடுவோம். இந்தி திரைப்பட உலகம் தற்போது "அமிதாப்பைக் கொண்டாடுவது" போல், நாமும் கொண்டாடவேண்டும். எனவே, நம்முடைய அணுகுமுறையை மாற்றவேண்டிய தருணம் இது.

நாம் இதுவரை இழந்ததை; ரஜினி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்
  • இதுவரை, நாம் ரஜினியை - இப்படி  மாற அனுமதிக்காததே தவறு! அதை, இப்போது - ரஜினி துணிந்து செய்திருக்கிறார்; அதைச் சரியாய் ஆமோதித்து/அனுமதித்து நாம் "ரஜினியை இரசிக்கும் நம் இரசனையை" மாற்றிக் கொள்ளவேண்டும். சிவாஜி என்ற மாபெரும் நடிகரை, (சில படங்கள் தவிர்த்து) அவரின் இறுதிக்காலத்தில் கொண்டாடத் தவறிவிட்டோம். அந்தத் தவறு, ரஜினி விடயத்தில் நடக்கக்கூடாது; அதற்கு, நிச்சயம் நாம் காரணமாய் இருக்கக்கூடாது.
  • கமல் போன்ற நடிகருக்கு - இம்மாதிரியான சூழல் நேராது! எந்த வட்டத்திலும் சிக்காத நடிகர் அவர். ஆரம்பத்தில் இருந்தே, அவர் அந்த முடிவில் தெளிவாய் இருந்து - அவரை நோக்கி, நம்மை நகர்த்திய நடிகர் அவர்.
  • ஆனால், ரஜினி நமக்காகவே - அவரின் சுயத்தை/விருப்பத்தை விட்டுவிட்டு - இந்த வட்டத்தில் விருப்பமுடன் சிக்கிக் கொண்டவர். சுருக்கமாய் சொல்லவேண்டும் எனில், கபாலி படத்தில் வரும் "ஒன்னோட கருணை, அதனோட சாவை விட கொடுமையானது!" என்ற வசனம் - அவருக்காக"வும்" எழுதபட்டதாய் உணர்கிறேன். ஆம், பறவையைக் கூண்டில் அடைத்து வைப்பதை - பறவை மேல் நமக்கிருக்கும் அன்பு என்பதாய்; தவறாய் புரிந்து கொள்கிறோம்.
  • இல்லை... அது பறவையின் சுதந்திரத்தைப் பறிப்பது! இதுவரை, ரஜினியைக் கூண்டில் அடைத்தது போதும். வெளியே போனால் "வாழ்வா? சாவா?" என்ற போராட்டம் வருமே? என்ற படத்தில் வரும் வசனம், நமக்கும் கேள்வியாய் வரும்; அதற்கும் படத்திலேயே பதில் வசனம் வருகிறது - "வெளியே திறந்துவிடு; வாழ்வா? சாவா? என்பதை பறவை முடிவு பண்ணட்டும்!" என்று. எனவே, ரஜினி என்ற பறவையையும் "கூண்டில் இருந்து வெளியே விடவேண்டிய தருணம் இது!".
  • இதை அந்த காட்சியின் மூலம் - படத்தின் கதைக்கு மட்டும் அல்லாமல்; நமக்கும் சொல்லி இருப்பதாய் நான் பார்க்கிறேன். எனவே, ரஜினி துணிந்து அந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று நம்புவோம். 
  • "ரஜினிக்கு துணையாக" அவரின் மகளாக வரும் ஒரு பெண் இருப்பதா?! என்ற கேள்வி எழுந்தால் - அது நம் தவறு. ஒரு தலைவனின் மகளும் - போராட்டத்தில் பங்குகொள்வாள்! என்ற கதைப்படியான உண்மையும் அதில் இருக்கிறது. மேலும், ரஜினி எனும் அந்த ஸ்டார் - தன் இயல்பிலிருந்து வெளியே வரவேண்டிய தருணம் இது! என்ற யதார்த்தமும் அதில் இருக்கிறது. இதில் எந்த காரணத்தை நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியமில்லை! ஆனால், ரஜினிக்கு இந்த சுதந்திரத்தை நாமே "மகிழ்ச்சியாய்" அளிக்கவேண்டும்.
  • "நிறைய ஆக்க்ஷன் சீன்கள் இல்லையே?!" - என்ற ஆதங்கம் புரிகிறது. ஆனால், அதைத் தாண்டி வரவேண்டும். ஆக்க்ஷன் சீன்கள் மட்டும் முக்கியமில்லை! என்ற உண்மை நிலைக்கு நாமும் வரவேண்டும். மேலும், இந்தப் படத்தின் கதைக்கு "அதிகப்படியான" ஆக்க்ஷன்கள் தேவையில்லை. இது, ஒரு இனத்தின் பிரச்சனையைப் பேசும் படம். அதில், ரஜினி எனும் ஸ்டாரே ஆனாலும் "ஒன் மென் ஷோ தேவையில்லை!". 
  • இவ்வளவு ஏன்? இப்போதெல்லாம் - ஜேம்ஸ் பாண்ட் படங்களிலேயே - ஆக்க்ஷன்கள் குறைவு. என்னதான், ரஜினி என்றாலும் - ஜேம்ஸ் பாண்டுடன் ஒப்பிட்டால், ரஜினியின் வீச்சு குறைவு என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அப்படி குறைந்ததால் தான், ஜேம்ஸ் பாண்ட் - இந்த காலக்கட்டத்திற்கும் பொறுத்தமாய் - அந்த ஈர்ப்புடன் இருக்கிறார். ஏன் "அகில உலக சூப்பர் ஸ்டார்" ஜாக்கி ஜான் கூட, தன் ஆக்க்ஷன்களை வெகுவாய் குறைத்துவிட்டார்.
  • இது இயல்பாய் - ஒவ்வொரு தனி மனிதனுக்கும் நிகழும் மாறுபாடு! இதற்கு - ரஜினி/ஜாக்கி ச்சான்/ஜேம்ஸ் பாண்ட் - என்று எந்த விதிவிலக்கும் இல்லை. இந்த மாற்றம் இல்லாத எதுவும் - நிரந்தரமாய் இருக்கிறது. அதற்கு இருவேறுபட்ட உதாரணங்கள் தான் - மேற்குறிப்பிட்ட சச்சினும்/சேவாக்கும். ஒரு நல்ல ஆன்மீகவாதியாக ரஜினி, இதை எப்போதோ உணர்ந்திருக்கக் கூடும். ஆனால், அவரை அப்படி செய்யமுடியாமல் போனதற்கு - நாம் தான் காரணம். நமக்காய் - நிறைய செய்துவிட்ட அந்த ஸ்டாருக்கு - இந்த மாற்றத்தின் போது, துணை நிற்கவேண்டியது; அவரைக் கொண்டாட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

படத்தில் ரஜினி-ஸ்டையிலே இல்லையா? நிறைய இருக்கின்றன!!!
  • ரஜினி என்ற "அந்த மேஜிக்கே" இல்லாதது போல்; பல எதிர்மறை விமர்சனங்கள் எழுகின்றன! இது - நம் பார்வையில் மிகப்பெரிய கோளாறு இருப்பதை உணர்த்துகிறது. முதல் காட்சியில், சிறையில் இருந்து வெளியேறும் போது "கோட்டை ஸ்டையிலாய் போடுவது, பின்னால் இருந்து காட்சியாய் காண்பிக்கப்படும்!". அங்கே ஆரம்பிக்கிறது! - ரஜினி ஸ்டையில்; படம் முழுக்க ரஜினி ஸ்டையிலும் இருக்கிறது.
  • படத்தில் அவர் பேசும் முதல் வார்த்தை - மகிழ்ச்சி. அந்த வார்த்தையில் இருக்கிறது/துவங்குகிறது - நாம் எதிர்பார்க்கும் அதே "ரஜினி ஸ்டையில்". பின் என்ன, நாம் எதிர்பார்த்து ஏமாந்தோம்? இன்னொரு "பாஷா"வா? இன்னொரு பாஷா கொடுக்க, ரஜினி ஏன்? பாஷா என்பதும் - ரஜினி கொடுத்த அடையாளமே! அதேபோல் தான் - கபாலி என்கிற இந்த அடையாளமும். தனக்கு "ஃபேவரைட்டான"; தனக்கே உரிய முத்திரையான "ஒரு ஷாட்டை" இனிமேல் ஆடவே மாட்டேன் என்று சச்சின் எடுத்த உறுதியைப் போன்றது தான் இதுவும்.
  • "ஒவ்வொரு பறவையும் ஒரு விதையை சுமந்து செல்கிறது! ஒவ்வொரு விதைக்குள்ளும் ஒரு காடு இருக்கிறது!!" என்ற வசனத்தை ரஜினி தவிர வேறு யாரால் பேசமுடியும்? "காந்தி சட்டையை கழட்டியத்துக்கும்; அம்பேத்கார் கோட்டு போட்டதுக்கும் பின்னாடி காரணம் இருக்கு; அது மிகப்பெரிய அரசியல்!" - இப்படியொரு வசனம் பேச "ரஜினி என்ற ஸ்டார் தவிர வேறு யாரால் முடியும்?" என்னவொரு ஆழமான வசனம் அது. அதுதான், இந்த படத்தின் மைய்யக்கரு! அந்த செய்தி, பலரையும் சென்று சேரவேண்டும்; அதை ரஜினி சொன்னால் தான் "சரியாய் சென்று சேரும்!" என்பதே இப்படத்தின் அடிப்படை. இதை விட, பெரிய அங்கீகாரத்தை, எவரால் ரஜினிக்கு கொடுக்கமுடியும்? அதனால் தான், இது ரஜினி படம்.
  • முதல் பாட்டு முடியும் போது, ஒரு சின்ன "ரஜினி டேன்ஸ்" வரும். அங்கே இல்லையா? ரஜினி டச்? "மலேஷியாவுல... சரக்குன்னா பொம்பளை மேட்டர்!"னு சொல்லி சிரிக்கிறதுல; ரஜினி மேஜிக் இல்லையா?
  • படம் முழுக்க மகிழ்ச்சி என்ற வார்த்தையை; வெவ்வேறு உணர்வால் வெளிப்படுத்தும் விதத்தில் ரஜினி டச் இல்லையா? ரஜினிக்கே உரித்தான "சென்ட்டிமென்ட்" சீன்கள் இல்லையா? மனைவியைத் தேடி, புதுச்சேரி செல்லும் வரை - நிறைய இருக்கின்றனவே? அதைக் கூட "நீளம் அதிகம்!" என்று சிலர் சொல்கின்றனர். என்னளவில், இந்த கதைப்படி; தன் குடும்பத்தைக் கூட மறந்துவிட்டு - ஒரு இனத்தைக் காக்க போராடிய ஒரு தலைவனுக்கு; தன் குடும்பம் அழிந்தேவிட்டது! என்று நம்பும் ஒரு மனிதனுக்கு - தன் தவறை உணர்ந்து; தான் செய்ய மறந்ததை நினைத்துப் பார்க்க - அத்தனை நீண்ட காட்சி தேவை. அதுதான், அப்படிப்பட்ட ஒரு மனிதனின் நிலைப்பாடு; அதுதான், ஆழ்ந்த புரிதலைக் கொடுக்கும்; அதை அப்படியே நமக்கு கடத்தும் முயற்சிதான் அந்த காட்சிகள்! அதில், அந்த கதாப்பாத்திரம் மட்டுமல்ல; அந்த இயக்குனரும் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கிறார். தன்மகள் உயிரோடு இருப்பது தெரிந்தது முதல், தன் மனைவி உயிரோடு இருப்பது தெரிந்து - அவரின் நடிப்பு அபாரம். மேற்குறிப்பிட்ட சில படங்களில் - நாம் அனுபவித்த, ரஜினி எனும் மாறுபட்ட நடிகரின் முடித்திரை.
  • தினேஷின் நடிப்பு அற்புதமானது! நகைச்சுவையாய் இருக்கும் அதே வேளையில், அவரின் உழைப்பு நிறையத் தெரிகிறது. தினேஷிற்கு என் பாராட்டுக்கள். அதுபோல், கிஷோர் துவங்கி பலரின் பங்களிப்பு அதிகம். அவற்றைத் தனிப்பதிவாய் எழுத எண்ணம்.

ரஜினி "உடனடியாய்" நிறுத்தவேண்டும்!
  • "தமிழ்/தமிழன்" என்ற அரசியலை ரஜினி உடனடியாய் நிறுத்தவேண்டும்! இல்லை, இது தமிழர்கள் பற்றிய கதை! அதனால் தான்; "தமிழன்னா, எப்போதும் அடிமையாய் தான் இருக்கவேண்டுமா?! தமிழன் கோட்டு-சூட்டு போட்டு ஆளக்கூடாதா?!" மற்றும் "நான் ஆளப்பிறந்தவன் டா!" - போன்ற வசனங்கள் - என்று ரஜினியோ/வேறெவரோ தவறாய் வாதிடக்கூடாது! 1996-இல் இருந்து, (அதே வீரியத்தில் இல்லையெனினும்...)இன்றுவரை ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்! என்ற எதிர்பார்ப்பு இருப்பதை; அறியாவதவர் எவரும் இருக்கமுடியாது.
  • "இம்மாதிரியான வசனங்கள் - படத்திற்கு மட்டுமே பொருத்தமானது! அது வாழ்வியலுக்கு ஏற்றதல்ல!!" - என்ற புரிதல் இல்லாத/அதை உணரமுடியாத மக்கள் இன்னமும் இருக்கின்றனர். துரதிஷ்ட்டவசமானது எனினும், இன்னமும் அப்படி இருப்பர் பலர் என்பதே கசப்பான உண்மை. எப்படி, ரஜினியின் இம்மாதிரியான படத்தில் நடிக்கும் நிலைப்பாட்டை சரியென்றேனோ?! - அதே அடிப்படையில் - இம்மாதிரியான வசனங்கள் மிகப்பெரிய மோசடி.
  • "இவை போன்ற வசனங்கள் கூடாது!" என்று நிச்சயமாய் ரஜினியால் மறுக்கமுடியும்; ஏன், கட்டளையாய் கூட இடமுடியும்! அதை மீறும் தைரியம் இங்கே எந்த திரைப்பட நிர்வாகிக்கும் இல்லை! 
  • ரஜினியால் தான் அவர்கள்! அவர்களால் ரஜினி இல்லை!!
  • மேலும், இந்தத் திரைப்படத்தின் மையக்கரு - தமிழரில் ஒரு குறிப்பிட்ட இனத்தை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு, ஒட்டுமொத்த தமிழர்களையே பொதுமைப் படுத்தும் படியான - மேற்குறிப்பிட்டது போன்ற வசனங்கள் தேவையே இல்லை! 
  • மாறாய், கதைக்கு ஏற்புடையதே எனினும் - ரஜினியிடம் இன்மும் இருக்கும் அந்த "அறியாமையான எதிர்பார்ப்பால்" - ரஜினி இவற்றை அறவே தவிர்க்கவேண்டும்.
  • அரசியலுக்கு வருவதும்/பொதுவாழ்வை ஏற்பதும் - அவற்றை மறுப்பதும்; ரஜினியின் தனிப்பட்ட உரிமை. அதில் தலையிட/அவரை வற்புறுத்த - எவருக்கும் உரிமையில்லை! ஆனால், அப்படியோர் எதிர்பார்ப்பை - திரைப்படம் மூலம் விதைப்பது - சமுதாயக் குற்றம்! அதையும், ரஜினி தொடர்ந்து செய்துவருவது! - வேதனைக்குரியது. இதை, எவரேனும் அவரிடம் சென்று சேர்ப்பார்களா?! 
  • வியாபாரம் செய்ய/பணம் சம்பாதிக்க ஆயிரமாயிரம் வழிகள் உண்டு - அதில், இம்மாதிரியான போலியான/சமுதாயத்தை சிதைக்கும் விஷத்தன்மைகள் இருக்கக் கூடாது.
  • "இம்மாதிரியான காரணிகளால் தான் "என் உரிமைக்காக நீ என்னடா போராடுவது! நானே போராடிப் பெற்றுக்கொள்கிறேன்!!" - என்று ஒருவர் உணர்ச்சிபொங்க பேசி, அரசியல் செய்ய உந்தப்படுகிறார்" - என்பதை ரஜினி உணரவேண்டிய தருணம் இது. 
  • இதை ரஜினி உடனடியாய் நிறுத்தாவிட்டால்... தமிழ்/தமிழனை வைத்து - ரஜினி தந்தது திரைப்படங்கள் மூலம் "மறைமுக அரசியல்" செய்கிறார் என்ற குற்றச்சாட்டு உண்மையாகி விடும். ரஜினி என்றும் உன்னத ஆத்மாவுக்கு இந்தக் களங்கம் தேவையற்றது.

       சரி, கபாலி படத்தைப் - படம் பார்க்கலாமா? வேண்டாமா?? என்றால் - முன்பே சொல்லி இருப்பதுபோல்; இது நாம் அனைவரும் கொண்டாடப் படவேண்டிய படம்! நேற்று படம்  பார்த்தபோது, இந்த பதிவிற்கான குறிப்பெடுத்தலையும்/அதற்கான தொடர் சிந்தனைகளையும் - இணையாய் செய்தால் - படத்தைச் சரியாய் அனுபவித்துக் கொண்டாட முடியவில்லை. எனவே, இன்னுமோர் முறை, மீண்டும் திரையரங்கம் சென்று பார்ப்பேன்! அதன் பின்னர், சிலமுறை பதிவிறக்கம் செய்தும் பார்ப்பேன்; இது என் "வழக்கமான" நிலைப்பாடு. இந்தப் படத்தை, ஒவ்வொருவரும் நிச்சயம் ஒருமுறையேனும் பார்க்கவேண்டும்! - என்பது என் பார்வை.

நான் இரண்டாம் முறை பார்ப்பதற்கு, திடடமிடவேண்டும் என்பதால்;
உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்...

மகிழ்ச்சி!!!

வெள்ளி, ஜூலை 22, 2016

குறள் எண்: 0355 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்; குறள் எண்: 0355}

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

விழியப்பன் விளக்கம்: எந்த பொருளெனினும், எவ்வகை மயக்கத்தைக் கொடுப்பதெனினும்; அப்பொருளின் உண்மையான தன்மையை உணர்வதே, பகுத்து அறிவதாகும்.
(அது போல்...)
எந்த தொழிலெனினும், எவ்வளவு வருமானத்தை அளிப்பதாயினும்; அத்தொழிலின் தார்மீக அம்சங்களை ஆராய்வதே, தொழில் தர்மமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், ஜூலை 21, 2016

குறள் எண்: 0354 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்; குறள் எண்: 0354}

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு

விழியப்பன் விளக்கம்: எல்லாவற்றையும் பகுத்தறிந்து, மெய்யுணரும் திறம் இல்லாதோர்க்கு; ஐவகை உணர்வுகளை அடக்கியாளும் திறனிருந்தும் பயனில்லை.
(அது போல்...)
குடும்பத்தினரை அரவணைத்து, அன்புக்கு அடிபணியும் வீரமற்றோர்க்கு; பஞ்ச பூதங்களைக் கட்டுப்படுத்தும் வலிமையிருந்தும் வாழ்வில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

இரயில்நிலையக் கொலை...


ஓர்தாயின் மகனாய்…
ஓர்மனைவியின் கணவனாய்…
ஓர்மகளின் அப்பனாய்…

ஓர்மொழி கண்ட-உயிரினமாய்...
"ஓர்அறிவு" மிகுந்த-மிருகமாய்...
ஓர்சமுதாயக் காவலனனாய்…

இப்படி எந்தவகையில்
இயன்றாலும் - என்னால்;
இரயில்நிலையக் கொலையைத்

“தொடர்வண்டி” போல்;
ஓர்உணர்வற்ற ஜடப்பொருளாய்...
கடக்க முடியவில்லை!!!

புதன், ஜூலை 20, 2016

குறள் எண்: 0353 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்; குறள் எண்: 0353}

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து

விழியப்பன் விளக்கம்: ஐயங்களைக் களைந்து, தெளிவுடன் மெய்யைப் பகுத்தறிந்தோர்க்கு; புவியுலகை விட, விண்ணுலகம் மிக அருகாமையில் இருக்கும்.
(அது போல்...)
தடைகளைக் கடந்து, மகிழ்வுடன் பணியை மேற்கொள்வோர்க்கு; சம்பளத்தை விட, வெகுமானம் மிக மகிழ்ச்சியானதாய் இருக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

நீ என்னவாக ஆசை?


கல்லைக் கும்பிடுவோரும் இங்குண்டு!
"காலி"யைக் கும்பிடுவோரும் இங்குண்டு!!
          - நீ என்னவாக ஆசை?

உருவத்தை நம்புவோரும் இங்குண்டு!
உயர்சக்தியை நம்புவோரும் இங்குண்டு!!
         - நீ என்னவாக ஆசை?

நியாயத்தைக் கொல்பரும் இங்குண்டு!
அநியாயத்தைக் காப்பவரும் இங்குண்டு!!
         - நீ என்னவாக ஆசை?

"காமராஜரை வீழ்த்தியோரும்" இங்குண்டு!
"கயவர்களை வாழ்விப்போரும்" இங்குண்டு!
         - நீ என்னவாக ஆசை?

காந்தியைத் தூற்றுபவரும் இங்குண்டு!
கோட்சேயைப் போற்றுபரும் இங்குண்டு!!
         - நீ என்னவாக ஆசை?

காதலில் வீழ்ந்தோரும் இங்குண்டு!
காமத்தில் விழுந்தோரும் இங்குண்டு!!
         - நீ என்னவாக ஆசை?

"ஒருவருக்கு ஒருத்(தியு/தனு)ம்" இங்குண்டு!
"பலருக்கு ஒருத்(தியு/தனு)ம்" இங்குண்டு!!
         - நீ என்னவாக ஆசை?

"ஒருதலை"க்காக கழுத்தறுப்போரும் இங்குண்டு!
"ஒருதலை"க்காக காத்திருப்போரும் இங்குண்டு!!
         - நீ என்னவாக ஆசை?

மண்ணைக் "காசாக்கு"வோரும் இங்குண்டு!
மண்ணைக் "கடவுளாக்கு"வோரும் இங்குண்டு!!
         - நீ என்னவாக ஆசை?

பெண்-சிசுவைச் சிதைப்போரும் இங்குண்டு!
பெண்-நினைவைச் சுமப்போரும் இங்குண்டு!!
         - நீ என்னவாக ஆசை?

மதத்தை விதைப்போரும் இங்குண்டு!
மனிதத்தை விதைப்போரும் இங்குண்டு!!
         - நீ என்னவாக ஆசை?

வள்ளுவரை அரசியல்-ஆக்குவோரும் இங்குண்டு!
வள்ளுவரை அகிலப்பொது-ஆக்குவோரும் இங்குண்டு!!
         - நீ என்னவாக ஆசை?

செய்து செத்து-மடிந்தோரும் இங்குண்டு!
செய்யாமல் செத்து-மடிந்தோரும் இங்குண்டு!!
         - நீ என்னவாக ஆசை?

என்னைப் போலும்-பலர் இங்குண்டு!
அவனைப் போலும்-பலர் இங்குண்டு!!
         - நீ என்னவாக ஆசை?

செவ்வாய், ஜூலை 19, 2016

குறள் எண்: 0352 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்; குறள் எண்: 0352}

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு

விழியப்பன் விளக்கம்: மயக்கம் நீக்கிய, குற்றமில்லாத பகுத்தறிவை உடையவர்க்கு; அறியாமை எனும் இருள் மறைந்து, இன்பம் விளையும்.
(அது போல்...)
இரசாயனம் அகற்றிய, அழிவில்லாத விவசாயம் செய்வோர்க்கு; வீட்டுமனை என்ற பேராசை விலகி, வாழ்வியல் எளிதாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், ஜூலை 18, 2016

குறள் எண்: 0351 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்; குறள் எண்: 0351}

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு

விழியப்பன் விளக்கம்: மெய்யற்றவற்றை மெய்யென்று நம்பும் அறியாமைமாட்சியமையற்ற துன்பம் சூழ்ந்தபிறவிப்பயனுக்கு வழிவகுக்கும்.
(அது போல்...)
அறமற்றவற்றை அறமென்று வாதிடும் மூர்க்கம்; மனிதமற்ற அரக்கம் நிறைந்த, செயல்பாட்டிற்கு வித்திடும்.
*****

ஞாயிறு, ஜூலை 17, 2016

அதிகாரம் 035: துறவு (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 035 - துறவு

0341.  யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
           அதனின் அதனின் இலன்

           விழியப்பன் விளக்கம்: ஒருவர் எவ்வொன்றின் மேலும், எல்லாப்பற்றையும் துறப்பதால் 
           விளையும் துன்பம்; அப்பொருட்கள் இல்லாத துன்பத்தைவிட குறைவேயாகும்.
(அது போல்...)
           ஒருவர் எந்த-உறவின் மீதும், நெருக்கத்தைக் குறைப்பதால் விளையும் அழுகை; அவ்வுறவுகள்
           பிரிந்துதரும் அழுகையைவிட நன்றாகும்.

0342.  வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் 
           ஈண்டுஇயற் பால பல

           விழியப்பன் விளக்கம்: ஒருவர் துன்பமின்றி இருக்க - ஒன்றின் மீதான பற்றை, அது 
           இருக்கும்போதே துறக்கவேண்டும்; அப்படித் துறந்தபின், பற்பல இன்பங்கள் கூடும்.
(அது போல்...)
           ஓர்அரசு தோல்வியின்றி தொடர - ஊழலின் ஆணி வேரை, ஆட்சி உள்ளபோதே
           களையவேண்டும்; அப்படிக் களைந்தபின், பெரிய வெற்றிகள் சேர்ந்திடும்.
           
0343.  அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் 
           வேண்டிய வெல்லாம் ஒருங்கு

           விழியப்பன் விளக்கம்: ஆசைக்கு காரணமான ஐம்புலன்களை அடக்க விரும்பினால்; 
           அவற்றிற்கு ஆதியான பொருட்களின் மீதான, பற்றுகளைத் துறக்கவேண்டும்.
(அது போல்...)
           அழிவுக்கு ஆதாரமான ஐம்பூதங்களை அடக்க எண்ணினால்; அவைகளைக் காக்கும் 
           இயற்கையைச் சிதைக்கும், காரணிகளைத் தவிர்க்கவேண்டும்.

0344.  இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை 
           மயலாகும் மற்றும் பெயர்த்து

           விழியப்பன் விளக்கம்: பற்றுகளைத் துறப்பதே, தவத்தின் இயல்பாகும்; பற்றுகள் இருப்பின்,
           பிறவற்றின் மீதான மயக்கத்தை மீண்டும் அளிக்கும்.
(அது போல்...)
           அகங்காரத்தை அழிப்பதே, அன்பின் அடிப்படையாகும்; அகங்காரம் இருப்பின், உறவுகளின்
           மீதான ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டும்.

0345.  மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் 
           உற்றார்க்கு உடம்பும் மிகை

           விழியப்பன் விளக்கம்: பிறப்பெனும் துன்பத்தை அறுக்க எண்ணுவோர்க்கு; உடம்பே 
           அதீதமாகும்! பின்னெதற்கு, உடம்போடு தொடர்புடைய பற்றுகள் எல்லாம்?
(அது போல்...)
           தானெனும் அகந்தையை அழிக்க விரும்புவோர்க்கு; சுய-சிந்தனையே போதுமானது!
           பிறகெப்படி, சிந்தனையை வியாபாரமாக்கும் நிறுவனங்கள் வளர்கின்றன?

0346.  யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
           உயர்ந்த உலகம் புகும்

           விழியப்பன் விளக்கம்: என்னுடைய உயிர், என்னுடைய பொருள் என்னும் பிடிப்புகளை 
           அறுப்போர்; தேவர்களின் உலகத்தைவிட, சிறப்பான உலகத்தை அடைவர்.
(அது போல்...)
           என்னுடைய அரசு, என்னுடைய கஜானா என்னும் கர்வமற்ற ஆட்சியாளர்; ஞானிகளின் 
           நிலையைவிட, உன்னத நிலையைப் பெறுவர்.

0347.  பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் 
           பற்றி விடாஅ தவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: பல்வகைப் பற்றுகளை, விடமுடியாமல் பற்றிக்கொண்டு உழல்வோரை; 
           துன்பங்களும், விடாமல் பற்றிக்கொண்டிருக்கும்.
(அது போல்...)
           பல்வேறு தீவினைகளை, விலக்கமுடியாமல் பழக்கிக்கொண்டு வாழ்வோரை; 
           தீக்குணங்களும், விலகாமல் சூழ்ந்துகொண்டிருக்கும்.

0348.  தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி 
           வலைப்பட்டார் மற்றை யவர்

           விழியப்பன் விளக்கம்: அனைத்தையும் துறந்தவரே உயர்ந்தோவர்ர் ஆவர்; ஆசைவலையில் 
           மயங்கி சிக்கியோர், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்போராவர்.
(அது போல்...)
           அனைவரையும் பாதுகாப்பவரே நல்லாட்சியாளர் ஆவர்; குடும்பநலனில் நிலைத்தவறிச்
           சிதறியோர், அவர்களுக்கு தாழ்ந்த நிலையில் உள்ளவராவார்.

0349.  பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று 
           நிலையாமை காணப் படும்

           விழியப்பன் விளக்கம்: பற்றுகளைத் துறந்தோரே, பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவர்; 
           மற்றவர்கள், நிலையற்ற வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருப்பர்.
(அது போல்...)
           சாதிவெறி இல்லாதோரே, மிருகத் தன்மையிலிருந்து விலகிடுவர்; மற்றவர்கள், பரிணாம 
           வளர்ச்சியின்றி மிருகத்தன்மையோடு இருப்பர்.

0350.  பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
           பற்றுக பற்று விடற்கு

           விழியப்பன் விளக்கம்: பிறவற்றின் மீதான பற்றை விட்டொழிக்க; பற்றுகள் இல்லாதவரின் 
           மீதான பற்றை, இறுகப் பற்றிக்கொள்ளவேண்டும்.
(அது போல்...)
           பலவற்றின் மேலான வன்முறையை அழித்திட; அஹிம்சையைப் பழகியவரின் உன்னத 
           அனுபவத்தை, உணர்ந்து பின்பற்றவேண்டும்.