சனி, மே 12, 2018

குறள் எண்: 1014 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 102- நாணுடைமை; குறள் எண்: 1014}

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை

விழியப்பன் விளக்கம்: நாணுடைமை தானே சான்றோர்க்கு அணிகலன்? அவ்வணிகலன் இல்லை எனில்; அவர்களின் கம்பீர நடை, நோயுற்றது தானே?
(அது போல்...)
அன்புடைமை தானே இல்லறத்திற்கு கேடயம்? அக்கேடயம் இல்லை எனில்; இல்லறத்தின் உன்னத மாண்பு, பாகாப்பற்றது தானே?

வெள்ளி, மே 11, 2018

குறள் எண்: 1013 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 102- நாணுடைமை; குறள் எண்: 1013}

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு

விழியப்பன் விளக்கம்: உயிர்கள் அனைத்துக்கும், உடம்பே அடிப்படை ஆகும்! அதுபோல் நாணம் என்னும் நன்மையை அடிப்படையாகக் கொண்டதே, உயர்குணம் ஆகும்!
(அது போல்...)
தொழில்கள் அனைத்துக்கும், முதலீடே அடிப்படை ஆகும்! அதுபோல் நேர்மை என்னும் அறத்தை அடிப்படையாகக் கொண்டதே, தொழில்தர்மம் ஆகும்!