திங்கள், டிசம்பர் 03, 2012

விவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன???



    இரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள "விவாகரத்து வழக்குகள்" குறித்தது. அதில், நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவகாரத்து வழக்குகள் நிலுவையில்(மட்டும்); உள்ளன என்றும், பெரும்பாலும் "பெண்கள் தான் அதிகம்" விவகாரத்து கோருகின்றனர் என்ற புள்ளிவிவரமும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த செய்தியை படித்தவுடன், பல நாட்கள் என்னுள் உரையாடிக்கொண்டிருக்கும் விசயங்களில் ஒன்றான இந்த விவாகரத்து விசயமாய் ஓர் தலையங்கம் எழுதவேண்டும் என்று தோன்றியது. கணவன், மனைவி இருபாலரும் தான் விவகாரத்து வழக்குகளுக்கு காரணம் எனினும் - பெண்கள் தான் அதிகம் விவாகரத்து கோருகின்றனர் என்ற புள்ளிவிவரத்தை ஆழ ஊடுருவ வேண்டும் என்று தோன்றியது. பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்/ கொடுமைக்கு ஆட்படுகின்றனர் என்று எண்ண தோன்றினாலும், உண்மை-நிலை அதுவல்ல. வறுமைக்கோட்டிற்கு கீழிருக்கும் தம்பதையர்களுள் வேண்டுமானால் - அதிகமான பெண்கள் அடக்கப்படுகின்றார்கள் என்று ஒப்புக்கொள்ளலாம். ஆனால், மத்திய மற்றும் மேல்தட்டு வர்க்கத்தை சார்ந்த தம்பதியர்க்குள் இந்த உண்மை முற்றிலும் மாறுபடுகிறது. மேலும், வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளோரில் மிகக் குறைந்தோரே - விவகாரத்து வரை செல்கின்றனர் என்பதே பேருண்மை; அவர்கள், சமுதாயம், நியாயம்/தர்மம் இவற்றை "இன்னமும்" நம்பிக்கொண்டிருப்பதால் வாழ்க்கையை சகித்து வாழ்கின்றனர்; அவர்களுக்கு விவாகரத்தை எதிர்கொள்ளும் சக்தியில்லை.

         ஆனால், மத்திய மற்றும் மேல்தட்டு மக்களிடையே இந்த நம்பிக்கைகள் அதிகம் இருப்பதில்லை; அவர்கள் வசதிகள் படைத்தோர் மட்டுமல்ல - பெரும்பான்மையான பெண்கள் "நல்ல" வேலைக்கு சென்று சம்பாதிக்கின்றனர். "பாரதி" போன்றோர் (கணவாய்)வேண்டிட்ட பெண்-விடுதலை "நாட்டின்-சுதந்திரம்" போன்றே சரியாய் புரிந்து கொள்ளாது போனது "துரதிஷ்டமானது". சம்பாதிப்பதும், திருமணமான பின்னும் தந்தை வீட்டில் இருப்பதும்-தான் வாழ்க்கை என்று தவறுதலாய் புரிந்துகொண்டுள்ளனரோ என்ற பயம் வருகிறது. அதனால் தான், எதற்கெடுத்தாலும் "விவாகரத்து" என்கின்றனர்; ஆரம்பத்தில், கணவனை பயமுறுத்த/தன்வழிக்கு-கொண்டுவர "என்று" துவங்கினாலும் - பின் மனதளவில் பெரிய-ஆயுதம் போல் "மாயையாகி" நீதிமன்றம் வரை செல்வதை தான் மேற்குறிப்பிட்ட புள்ளிவிவரம் உணர்த்துகிறது. இந்த பெண்கள் அடிப்படையான ஒன்றை மறந்து விடுகின்றனர்; திருமணத்திற்கு (அல்லது பெரும்பாலும் வேலைக்கு செல்லும்) முன்னர் அவர்கள் "தந்தை" எனும் ஆணை சார்ந்திருந்ததை உணருவதே இல்லை. ஆனால், திருமணமான உடனேயே கணவன் தன்னை ஆட்படுத்த முயல்கிறான் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. அதன் பின், எந்த பிரச்சனை ஆனாலும் - பெற்றோர் வீடு சேர்ந்து மீண்டும் கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடக்க சித்தமாகின்றனர். அவர்கள் கண்டிப்பாக பாதுகாப்பாகவும், சந்தோசமாகவும் இருப்பர்; ஆனால், கணவனை விடுத்து அனுபவிக்கும் அந்த வாழ்க்கை எத்தனை நாட்கள் நீடிக்க முடியும்? அல்லது நீடிக்கவேண்டும்??

     ஒருவேளை, தன் தந்தையிடம் கிடைக்காத சுதந்திர-உணர்வை "கணவனிடம்" வெளிக்காட்ட நினைக்கின்றனரோ? சிறு விசயத்திற்கு கூட விட்டுக்கொடுக்காது; ஏன், தந்தையின் இல்லம் செல்லவேண்டும்?? நன்றாய் நினைவில் கொள்ளுங்கள்; கணவனை உதறிவிட்டு - தன்னிடம் மீண்டும் வரும் ஓர் பெண்ணின் தந்தையின் பொறுப்பு; பல மடங்குகள் அதிகமாகிறது (அந்த பெண்ணின் தாய்க்கும்; அவளின் மறு-தாய்க்கும் இடையேயும் இதுபோன்ற ஒப்பிடுதல் வேண்டும்!!!). தன் உயிர் என்பதால் "அந்த தந்தை" காண்பிக்காது மறைக்க எண்ணினாலும்; அவர்களின் கவலை "கட்டுப்பாடுகளாய்"தான் வெளிப்படும்! அதையும் அந்த பெண்கள் ஏற்கிறார்கள்! அதில், மிகக்குறைந்த விழுக்காட்டை தன் கணவனிடம் காட்டலாமே? இந்த மாதிரி ஓர் சூழ்நிலையை "திருமதி ஒரு வெகுமதி" திரைப்படத்தில் ஓர் அற்புதமான தந்தை அருமையாய் சமாளிப்பார். அந்த மாதிரி தான் "தந்தை" என்பவர் செயல்படவேண்டும்; அது பல விவாகரத்து வழக்குகளை அடியோடு அழித்துவிடும். திருமணமான பின், என் தமக்கை எப்போது வீட்டிற்கு வரினும் - எனக்கு அது பேரானந்தம்; எப்படியாயினும் விடுப்பில் வீடு சென்றுவிடுவேன். ஆனால், என் மறு-தமையன் கூறிய நேரத்திற்கு ஓர்-நாழிகை அதிகமாயினும் "எப்போது கிளம்புகிறாய்" என்று நான் கேட்கத்தவறியதே இல்லை! என் தமக்கையின் குடும்பம் தான் என் நினைவுக்கு வரும். ஆனால், இன்று வரை - எங்கள் உறவில் சிறு கீறல் கூட விழுந்ததில்லை. என் "மகளிடமும்" கண்டிப்பாய் அதுபோன்றே இருப்பேன்!!! 

        இப்போது பல மனைவிகள் - திருமணமான உடனே கணவன் என்பவன் தன் சொந்தம்; தன்னை தவிர அவன் குடும்ப உறுப்பினர்கள் எவரிடமும் உறவு கொள்ளக்கூடாது; அவர்களுக்கு பொருளுதவி ஏதும் செய்யக்கூடாது என்று விரும்புகின்றனர். "இது மாதிரி நினைக்கும் ஆண்களும் உண்டெனினும்", கண்டிப்பாய் அந்த மாதிரி நினைக்கும் பெண்கள் தான் அதிகம். இது எந்த விதத்திலும் நியாயம் இல்லை எனினும், பெரும்பான்மையான ஆண்கள் அதை செய்ய முயல்கின்றனர்; ஆனால், உடனடியாகவோ அல்லது முழுமையாகவோ செய்தல் எல்லோராலும் இயலாது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இதற்கிடையில், எதற்கெடுத்தாலும் - பெண்கள் மட்டும் அவர்களின் "தாய்-தந்தை" வீட்டிற்கு செல்வது எந்த விதத்தில் நியாயம்? அவர்களும் - "தான்-தன்" கணவனுக்கு மட்டும் தான்; என்று தானே இருக்கவேண்டும்?? பின் ஏன் புகுந்த வீடு செல்கின்றனர்? மாறாய், ஏதேனும் ஓர் விடுதியை சென்று சேரலாமே! ஆக, பெண்களுக்கு அவர்களின் பெற்றோரிடம் எப்போதும் நல்ல உறவு வேண்டும்; அவர்கள் எப்போது நினைத்தாலும் அவர்களிடம் தஞ்சம் புகலாம்; அவர்களின் பெற்றோரும் அவர்களை நல்வழிப்படுத்தி திருப்பி அனுப்புவதில்லை! அந்த கணவனின் நிலையை உணர்வோரும் எவருமில்லை! இங்கு ஏனோ எனக்கு, ஆண் தான் "மிகுந்த பொறுமைசாலி" மற்றும் "துரதிஷ்டவாதி" என்று பறைசாற்றிட தோன்றுகிறது; அவன் பெற்றோரிடமும் செல்வதில்லை; மனைவியும் உடனில்லை; அவனைப் பற்றி வருத்தப்பட அவனுடைய பெற்றோர் தவிர யாரும் இருப்பதில்லை.

          இப்படி பிரிந்து செல்லும் மனைவிக்கு ஓர் குழந்தை மட்டும் இருந்துவிட்டால், அந்த கணவனுக்கு வாழ்க்கை என்பது வெகுநிச்சயமாய் "நரகம்" - இறக்காமலே நரகத்தை காண்போர் அவர்! அந்த மனைவியும், பெற்றோர் வழிகாட்டுதல் இல்லாது தவறுமேல் தவறு செய்து கொண்டே செல்வாள். மிகச்சமீபத்தில் என் நண்பனின் வாழ்வில் நிகழ்ந்தது, கீழ்வருவது: அவனின் மகள் - ஓர் அற்புதம்! அவளை நான் கடைசியாய் சந்தித்தபோது அவளுக்கு 4 வயதிருந்திருக்கும்; அப்படி ஓர் அருமையான, மரியதையான பேச்சு; நடத்தை! உண்மையில், என் மகளை விட அந்தப்பெண்ணை உயர்த்தி சொல்ல நான் (எப்போதும்)தயங்கமாட்டேன்; அப்படி ஓர் அருமையான பெண்குழந்தை அவள். என்னுடைய, இன்னுமொரு நண்பன் ஓர்-நாள் அந்த குழந்தையை விட்டுவிட்டு அவனால் எப்படி விவாகரத்து செய்ய முடிந்தது? என்று வாதிட்டான்; அவனைப்போல் பல நண்பர்களும் வாதிட்டிருக்கக்கூடும். ஆனால், நான் நினைத்தது வேறு! என் மகளை விட, நானே அந்தக்குழந்தையை உயர்த்தி நினைக்கும்போது; அவளின் தந்தையாகிய என் நண்பன் எப்படியெல்லாம் எண்ணி இருப்பான்! அப்படிப்பட்டவனை - தன் தாயுடன் சேர்ந்துகொண்டு "விவாகரத்து" செய்யும் அளவுக்கும் ஓர் மனைவி செய்திருக்கிறாளே!! என்று தான் விக்கித்த்து போனேன்; 5 ஆண்டுகள் தன் மகளைப் பிரிந்து எத்தனை "வலிகளை" அவன் அனுபவித்து இருப்பான்? அதையெல்லாம் கடந்து - அவன் விவாகரத்து செய்திட "ஓர்முறை இறந்து - இன்னுமொரு முறை அவன் பிறந்து வந்திருப்பான்" என்று நான் உறுதியாய் நம்புகிறேன். 

      மனைவியர்களே! உங்கள் தந்தையிடம் காட்டும் அந்த உறவில் ஓர் பகுதியை உங்களின் கணவனிடம் காட்டுங்கள். இதை விளக்கிடுதல் கடினமாயினும், என்னால் இயன்ற வரை விளக்கி உள்ளேன்; இதை ஏற்றுக்கொள்ளுதல் மேலும் கடினம் எனினும் - கண்டிப்பாய் இது, "இயலாததல்ல"! முயற்சி செய்யுங்கள்; கண்டிப்பாய் "பிரசவ வேதனையை" விட கணவனின் எந்த செயலும் கொடிதாய் இருக்கமுடியாது; இது உங்கள் இருவர் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல - உங்களின் "உயிரான மகள் மற்றும் மகன்" சம்பத்தப்பட்ட விசயம் மற்றும் வாழ்க்கை. 
     கனவன்களே! உங்களின் மனைவியின் எந்த செய்கையையும் மன்னிக்க தயாராகுங்கள்!! உங்கள் மகளிடம் காட்டும் உறவின் வலிமையில் ஓர் பகுதியை உங்கள் மனைவியிடன் காட்டுங்கள். இந்த பிரச்சனை காரணமாய் நீங்கள் உங்கள் மகள் (அல்லது மகனை) பிரிந்து அனுபவிக்கும் சங்கடங்கள் "பிரசவ வேதனைக்கு" சற்றும் குறைவில்லாதது என்பது புரிகிறது! ஒன்று "உடல்" சம்பந்தப்பட்டது; இன்னொன்று "மனம்"     சம்பந்தப்பட்டது - வித்தியாசம் அவ்வளவே!! வேதனை ஒன்றிற்கொன்று சற்றும் குறைந்தது அல்ல; எனினும் வாழ்க்கை தான் முக்கியம்!!! எனவே... 

உறவை நமக்குள்ளும் பகிர்ந்து, விவாகரத்துகளை குறைப்போம்!!!         

தந்தையின் வளர்ச்சி...


என்மகள் மட்டுமல்ல!
என்னையும் அறியாது;
வளர்கிறேன் நானும்...
இணையாய், தந்தையாய்!!

ஏனில்லை, இப்போது???



எவரும் கற்றுக்கொடுக்காது!
எல்லோரையும் அனுசரிக்கும்;
எல்லா சூச்சுமங்களையும்!!
"இளமையில்" கொண்டிருந்தோமே?
எங்கேயவை?? இப்போதிருப்பின்;
எத்தனை உதவியாயிருக்கும்???

சத்தியமான சுதந்திரம்...



சுயத்திற்காய், எல்லாவற்றையும்!
செய்திடுதல் மட்டுமன்றி;
எல்லோருக்கும், எண்ணத்தாலும்!!
எல்லையின்றி, வழங்கிடுதலே;
"சத்தியமான" சுதந்திரம்!!!

அன்றும், இன்றும்: பணம்!!!


அன்று…
உறவு, உணர்வு
உண்மை, உவப்பு
எல்லாமும் இருந்தது;
"பணத்தை" தவிர!

இன்று…
எதுவுமே இல்லை;
"பணத்தை" தவிர!!

உலக-அழிவு பொருட்டேயல்ல...



உலக அழிவு?
உன்-அனல் கண்முன்!
எந்த அழிவும்;
எனக்கோர் பொருட்டேயல்ல!!!