10 வரியில் ஒரு கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
10 வரியில் ஒரு கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 28, 2015

ஒரு மரணம் (திருத்தப்பட்டது)...


{நல-விரும்பிகள் சிலரது விமர்சனத்தால் "நன்றிகளுடன்" திருத்தப்பட்ட வடிவம்...!}
   
        கூடியிருந்தவர்கள் எப்படி? என்ன?? என்று விசாரிக்க; உறுதியாய் எதுவும் சொல்லமுடியாமல் மூர்ச்சையாகிறாள் - மரணித்து கிடந்தனின் அருகில் தொடர்ந்து அழுதுகொண்டிருந்த மனைவி. கூடியிருந்தோர் தெரிந்தவர்களுக்கு தகவல் கொடுக்க அப்பெண்ணின் அலைபேசி கேட்டனர். அவள் தன் 4-வயது மகளை காட்டினாள். எதையோ ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்த அவளிடமிருந்து ஒருவர் அலைபேசியை வாங்கி அதிர்ச்சியுடன் பார்த்தார். வெளியே சென்று ஒரு எண்ணை அழைத்து பேசினார். ஒரு மணி நேரத்தில், காவலர்கள் வந்து கணவனை கொலை செய்ததற்காக அப்பெண்ணை கைது செய்தனர். அப்பெண் தன்-கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவள் கணவனை கீழே தள்ளி ஏதோ செய்தது; 4-வயது மகள் எதேச்சையாய் பதிந்த "10 வினாடியில் ஒரு காணொளி" - யில் தெளிவாகியது. காவலர்களின் "முறையான" விசாரிப்பில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவனை கொலை செய்ததை அப்பெண் ஒப்புக்கொண்டாள்.

*******

பின்குறிப்பு: "ஒரு மரணம்" கொலையென்று நிரூபிக்கப்பட்டு "சட்டம் நிலைநாட்டப்பட்டதை" எண்ணி மகிழ்வதும்; தன்னை(யும்) அறியாமல் பதிந்த காணொளியால் "யாருமற்று தனித்திருக்கும்" 4-வயது குழந்தையைப் பற்றி கவலைப்படுவதும் - உங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுதந்திரம்!

திங்கள், ஜூலை 27, 2015

ஒரு மரணம்...


     
        மரணித்து கிடக்கிறான்! மனைவி அழுது புலம்புகிறாள். உறவும்/சுற்றமும் எப்படி? என்ன?? - வித விதமாய் கேட்கிறார்கள். அவளால் உறுதியாய் எதுவும் சொல்லமுடியவில்லை! மீண்டும், மீண்டும் அழுகிறாள்; மூர்ச்சையாகிறாள். உறவும்/சுற்றமும் தெரிந்தவர்களுக்கு தகவல் அனுப்புகிறார்கள். தெரியாதவர்களின் தொடர்பை பெற அப்பெண்ணிடம் அலைபேசி கேட்கிறார்கள்; அவள் கையை காண்பிக்கிறாள். 4 வயது மகள் அலைபேசியில் எதையோ பார்த்து கொண்டிருக்கிறாள். ஒருவர் அலைபேசியை வாங்கி பார்க்கிறார்; வெளியே சென்று ஒரு எண்ணை அழைத்து பேசுகிறார். சிறிது நேரத்தில் காவலர்கள் வருகிறார்கள்; கணவனை கொலை செய்ததற்காக அப்பெண் கைதாகிறாள்.உடனிருந்த ஆணைப்பற்றிய விபரம் தெரியவில்லை; இருவரும் சேர்ந்து அந்த கணவனை கீழே தள்ளி ஏதோ செய்கிறார்கள். 4 வயது மகள் ஏதோ ஒரு பொத்தனை அழுத்த "10 வினாடியில் ஒரு காணொளி" பதிவாகி இருந்தது. காவலரின் விசாரிப்பில்; ஒப்புக்கொண்டாள்...

கள்ளக்காதலுக்காய்... கணவனை கொன்றுவிட்டேன் என்று!!!  

10 வரியில் ஒரு கதை - முன்னுரை


       திடீரென ஒரு எண்ணம்; குறும்படம் போன்று ஒரு "குறுங்கதை" எழுதவேண்டும் என்று! அது சிறுகதை என்ற வட்டத்துக்குள் வரக்கூடாது என்று எண்ணினேன். அதுபோல், பாக்யா-இதழில் வெளிவருவது போல் "ஒரு பக்க கதை" என்றும் இருக்கக்கூடாது என்று தோன்றியது. பின்னர் எப்படி? என்றொரு கேள்வி எழுந்தது; ஒரு தனித்துவம் வேண்டும் என்ற பதில் வந்தது. உடனே "10 வரியில் ஒரு கதை" என்றொரு எண்ணம் உதித்தது; அது சரியெனப்பட்டது. உடனே ஒரு புது-பகுதி துவங்கி அதை "10 வரியில் ஒரு கதை" என்று தலைப்பிட்டு இந்த முன்னுரை எழுதி இருக்கிறேன். 10 வரியில் சுவராஸ்யமாய் ஒரு கதை சொல்லமுடியுமா?! என்றொரு ஐயம்; ஊடே... ஏன் எழுதமுடியாது என்ற வாதமும்! இதோ முன்னுரை எழுதி, ஒரு கதையும் எழுதி இருக்கிறேன்; சாதாரண கதைதான். ஆனால், 10 வரியில் சொல்லி இருக்கும் விதத்தில் ஒரு சுவராஸ்யம் இருக்கிறது என்று நம்புகிறேன்; நீங்களும் அப்படியே நம்புவீர்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.