வலைப்பதிவை சார்ந்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலைப்பதிவை சார்ந்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, நவம்பர் 11, 2012

இரண்டாம் ஆண்டு துவக்கம்...



      இந்தப்பதிவு வெளியாகியுள்ள இதே தினம் - சென்ற ஆண்டு (11.11.11) - "விழியப்பன் பார்வை" என்ற இந்த வலைப்பதிவு உருவானது. "வலைப்பதிவை சார்ந்தது" என்ற பிரிவின் கீழ், ஒரு தலைப்பில் - எவ்வாறு பல முயற்சிகளுக்கு பின், சில நபர்களின் உதவியுடன் இவ்வலைப்பதிவு உருவானது என்று முன்பே விளக்கி இருந்தேன். அதே தலைப்பில் விளக்கியபடி இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட "முதல்  தலையங்கத்தை" இந்த வாரம் வெளியிட்டிருக்கிறேன். கடந்த ஆண்டு, 38 வாரங்கள் பதிவுகளை வெளியிட்டிருக்கிறேன்; பதிவுகள் வெளியாகாத 14 வாரங்களுக்கு, பெரும்பான்மையான காரணம் - விடுப்பில் இந்தியா சென்று "என் மகளுடன்" இருந்ததே.

        என்னுடைய வலைப்பதிவு ஏதோ மிகப்பெரிய அளவில் சாதித்துவிட்டதாய் எண்ணம் ஏதும் இல்லை; மிகக்குறுகிய பார்வையாளர்கள் இருப்பினும் தொடர்ந்து படித்து வருவது - வலைப்பதிவின் "புள்ளி-விவரங்கள்" மூலம் அறிய முடிகிறது. ஒரு சிலரையாவது என்னுடைய பார்வை சென்று சேர்ந்திருக்கிறது என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி; இந்த ஆதரவு மேலும், மேலும் தொடர்ந்து எழுதிட - என்னை வழி நடத்தி செல்லும். என்னால் இயன்ற மட்டும், இந்த வலைப்பதிவை தொடர்ந்து நடத்திட திண்ணமாய் உள்ளேன். நான், மீண்டும்-மீண்டும் கேட்டும், இது வரை 10 பின்னூட்டங்கள் கூட வராதது ஓர் குறையே! எல்லாவிதமான பின்னூட்டங்களும் என்னுடைய பார்வையை வலிதாக்கும் என்று நம்புகிறேன்.

        நான் அடிக்கடி குறிப்பிடும் என்-நெருங்கிய நண்பன் என்னுடைய முயற்சியை கண்டு - அவனின் "கன்னிக்-கவிதையை" எழுதினான். அவனுள் அப்படியொரு தமிழ்-திறன் இருப்பது அவனுக்கே கூட அப்போதே தெரிந்தது - எழுதி ஓராண்டாகியும், இன்னமும் அவன் அதை வெளியிடவில்லை. சமீபத்தில் கூட தமிழ் ஈழம் பற்றிய என் தலையங்கத்தை பாராட்டி ஒரு புதுக்கவிதை எழுதியிருந்தான். என்னுடைய தம்பி (சித்தப்பா மகன்) "வினோத்"-உம் - என்னுடைய முயற்சியும் ஓர் காரணமாய் இருக்க - பல கவிதைகள் எழுதி விரைவில், அவனும் ஓர் வலைப்பதிவு ஆரம்பிக்க உள்ளான். இவ்விருவரையும் என்னுடைய இவ்வலைப்பதிவு முயற்சி, அவர்களின் திறனை அறிய செய்ததில் எனக்கு ஓர் திருப்தி.

    இவ்விருவர் மட்டுமல்லாது - மேலும் சில நண்பர்களும் அவர்களுடைய படைப்புகளை ஓர் வலைப்பதிவு துவங்கி வெளியிடுவதாய் கூறினர்; அது பற்றிய மேற்கொன்டு தகவல்கள் ஏதும் இல்லை. அவர்களும், விரைவில் அவ்வாறு செய்திடுவர் என்று நம்புகிறேன். இதுவரை, உங்களின் ஆதரவை தெரிவித்தமைக்கும் - இன்னமும் தொடர இருப்பதற்காகவும் என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். இவ்வலைப்பதிவின் துவக்க-அழைப்பதில் குறிப்பிட்ட படி, இவ்வலைப்பதிவை எழுதுவது நானாயிருப்பினும்…

இதை எழுச்சி பெறச் செய்(யப்போ)வது நீங்களே!!! 

என்னுடைய திருத்தங்களுடன் - என் நண்பனின் புதுக்கவிதை:

"மப்பு" போடாத  "மாப்பு"
தப்பாது வைக்கிறாயே "ஆப்பு"
அரசியவாதிகளுக்கு கொடுத்தாயே "சூப்பு"
"அப்ரிசியேட்" பன்றான் "(சுரேஷ்)பாபு"        

ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

தமிழ் அடுத்தாண்டு வாழ்த்து...



     இவ்வலைப்பதிவை பின்பற்றும் அன்பர்களுக்கும் மற்ற தமிழ் அன்பர்களுக்கும் என்னுடைய உளம் கனிந்த "தமிழ் அடுத்தாண்டு வாழ்த்துக்கள்". எல்லோரும், எல்லா வளமும் பெற்று இந்த ஆண்டு முழுதும் (மட்டுமல்லாது; எப்போதும்) இன்பமுடன் இருக்க, அதற்கான முயற்சிகளும் - செய்கைகளும் சரியாய் அமைய, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இந்த ஆண்டு துவங்கும் முதல் நாள் மட்டுமல்ல; எல்லா நாட்களிலும் இதே புத்துணர்ச்சியும், உணர்வும் - உறவுகள் துவங்கி அனைவர் இடத்திலும் தொடர்ந்திட என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். என்னுடைய நெருங்கிய வட்டத்திற்கு தெரியும்; நான் பல ஆண்டுகளாய் அடுத்து வரும் ஆண்டை "புத்தாண்டு" என்று அழைப்பதில்லை என்பது. புதியதாய், எந்த ஆண்டிலும் ஏதும் இல்லை என்பதே என் எண்ணம். நாம் எப்படி கடந்த ஆண்டுகளை "பழைய ஆண்டு" என்று அழைப்பதில்லையோ, அவ்வாரே வருகிற ஆண்டையும் "புத்தாண்டு" என்று அழைப்பதில் எந்த அர்த்தமும் இருப்பதாய் எனக்கு படவில்லை. வருகிற எந்த ஆண்டிலும், நாம் முன்பே பழகிய நாட்கள் (தேதிகள்) தான் வரப்போகின்றன; அனுபவம் கண்டிப்பாய் மாறுபடும்; அதற்காய் இதை "புத்தாண்டு" என்றழைக்கவேண்டியதில்லை. அப்படி பார்ப்பின், ஒவ்வொரு "நிமிடத்துளி" கூட புதியது தான். மேலும் வரப்போகிற நாளுக்கான வேலையை முன் கூட்டியே முடிவு செய்யும் நாம், அதை ஏன் புதியதாய் பார்க்கவேண்டும். இந்த எண்ணம் மாறினாலேயே, ஆண்டின் துவக்க நாளில் தோன்றும் ஒழுக்கமும், புத்துணர்ச்சியும் என்றென்றும் தொடரும் என்று தோன்றுகிறது.

        இந்த மகிழ்ச்சியான நேரத்தில், "ஆண்டு துவக்கத்தை" விளம்பர நோக்காய் பார்க்கும் சில அரசியல்வாதிகள் பற்றியும் குறிப்பிடுதல் அவசியம் என்று படுகிறது. தமிழில் துவங்கும் ஆண்டு மட்டுமல்ல; வேறு எந்த மொழி அல்லது மதம் சார்ந்த ஆண்டும் துவங்குவது, அம்மொழியில் உள்ள படி, முதல் மாதத்தின் முதல் நாள் தான். இது தான் காலம் காலமாய் பின்பற்றப்பட்டு வரும் ஒன்று. இதை ஏனோ, தன்னை "பகுத்தறிவு வாதி" என்று (தானே)அழைத்துக்கொள்ளும் ஓர் அரசியல்வாதி "பகுத்துணராது" தை மாதம் முதல் தேதியை ஆண்டின் துவக்கமாய் அறிவித்து மிகப்பெரிய குழப்பத்தை உருவாக்கினார். அதை சட்டமாய் அறிவித்து, அனைவரையும் அவ்வாறே பழகவும் கட்டளையிட்டார். அதற்கு அவர் கூறிய காரணம், எப்போதும் போல் - தமிழும், தமிழனும். அதாவது, தமிழர் திருநாள் தான் ஆண்டின் துவக்கமாய் வேண்டுமாம். எவர் கேட்பது? தமிழ் என்று சொல்லிக்கொண்டு இது மாதிரி செய்யப்படும்  தேவையில்லாத செய்கைகளை?? நமக்கு முன் எத்தனையோ சந்ததிகள் தொடர்ந்து செய்து வந்த ஒரு விசயத்தை மாற்றும் அதிகாரத்தை, யார் அவருக்கு கொடுத்தது??? இதை, அந்த கட்சியின் பிரதான எதிர்கட்சி மட்டும் எதிர்த்தது! பெரும்பாலோனார்களால் அதை எதிர்க்க முடியவில்லை; அல்லது எதிர்க்க அனுமதிக்கப்படவில்லை. ஏன் இந்த விளம்பர எண்ணமும், குழப்பமும்? இதை பெரும்பாலோனோர் பின்பற்றவில்லை என்பது உண்மை தான்; இருப்பினும், ஏன் இந்த தேவை இல்லாத மாற்றம்??

           இந்த ஆண்டு, ஆட்சிக்கு வந்த அந்த பிரதான எதிர்கட்சி அந்த சட்டத்தை மாற்றி மீண்டும் முதல் மாத முதல் நாளான, "சித்திரை முதல் நாளை" ஆண்டின் துவக்கம் என்று அறிவித்தார். முன்பு ஓர் அரசியல்வாதி தவறான மாற்றம் செய்தபோது குரல் கொடுக்காதவர்கள் கூட, இப்போது ஏன் மீண்டும் மாற்றி அமைக்கவேண்டும் என்று வாதிடுகின்றனர். பின் மாற்றாமல் என்ன செய்வது! ஏதும் செய்ய இயலாத என்னைப்போன்றோர் பலரின் எண்ணத்தை எவர் எப்படி நிறைவேற்றுவது? இவ்விரு கட்சிகளும், பல்வேறு விசயங்களில் இது மாதிரி ஆட்சி மாற்றம் வந்ததும், முந்தைய அரசு செய்ததை மாற்றுவதை தொடர்ந்து செய்து வருவது மறுக்கமுடியாத உண்மை! ஆனால், தமிழ் ஆண்டு துவக்கத்தை மற்ற விசயங்களைப் போல், அவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது; இது நம்முடைய உணர்வு, பழக்கம், பாரம்பரியம்!!! இந்த நல்ல சட்ட மாற்றத்தை அரசியல் சாயம் கொண்டு பார்ப்பது நிச்சயம் தவறு! என்னைப்போல் அரசியல் சாராத ஒருவருக்கு இதன் உண்மை நிச்சயம் தெரியும். மேலும், இதை மீண்டும் மாற்றியமைத்த அரசியல் வாதி "சித்திரை முதல் நாள்" தான் ஆண்டின் முதல் துவக்கம் என்பதை வரலாறு மற்றும் தமிழ்க் காவியங்கள் கொண்டு சான்றுகள் கொடுத்து வேறு விளக்கியுள்ளார். முதலில், முதல் சட்ட மாற்றமே தேவை இல்லாத ஒன்று; அதற்கு இம்மாதிரி சான்றுகள் காட்டி வேறு, ஒருவர் விளக்க வேண்டி இருக்கிறது. எனவே, எல்லா மொழிகளிலும் மதங்களிலும் இருப்பது போல் தமிழ் ஆண்டும், முதல் மாதம் முதல் நாள் துவங்குவது தான் சிறந்தது; அது தான் நியாயமும் கூட. எனவே,

சித்திரை முதல் நாளே, ஆண்டின் துவக்க நாளே!!!                       

வெள்ளி, மார்ச் 02, 2012

பாண்டிய மன்னனுக்கு பிழை தெரியுமா? தெரியாதா??...



"என் கருத்துக்களை அப்படியே (பிழை தெரியாமலும்/ பிழை பொருத்தும்) ஏற்றுக்கொள்ளும் "பாண்டிய மன்னர்களுக்கும்", அதில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டும் "நக்கீரர்களுக்கும்" என் நன்றியை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்". 

        இது என்னுடைய வலைப்பதிவின் விளக்கமாய், வலைப்பதிவின் பெயரின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம். இதை எழுதும் போது, இதில் உள்ள ஒரு புதுமையான செய்தி எனக்கு தெரிய வந்தது; அது ஒரு புதிய "பட்டிமன்ற/ பட்டிமண்டப" தலைப்பாய் உபயோகிக்கலாம். என்னறிவுக்கு எட்டிய வரையில், அந்த மாதிரி தலைப்பில் பட்டிமன்றமோ/ பட்டிமண்டபமோ நடந்திருப்பதாய் தெரியவில்லை. அவ்வாறு எவருக்கு தெரிந்திருப்பின்/ தெரியவரின் எனக்கு தெரிவிக்க வேண்டுகிறேன்; அது என் தவறான கருத்தை மாற்றிக்கொள்ள உதவும். மேற்கூறிய விளக்கம், சிவனின் "திருவிளையாடல்" கதையை ஒன்றி வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் வரும் சிவனின் வாதமான "பெண்களுக்கு இயற்கையிலேயே கூந்தலில் மனமுண்டா, இல்லையா?" என்பதின் அடிப்படியில் கூட வாதம் செய்து கேட்டிருக்கிறேன். தருமிக்கு சிவன் அப்பரிசை பெற்றுத்தந்தது சரியா, தவறா என்ற அடிப்படையில் கூட வாதம் நடந்திருக்கிறது. நக்கீரன்-ஐ பற்றி சொல்லவே வேண்டாம்; அவரைப் பற்றி பலவித வாதங்கள் நடந்திருக்கிறது.

         இந்தப்புது விளக்கத்தை எண்ணிப்பார்க்கையில், நம் செம்மொழியாம் "தமிழ்" எத்துனை வலிமையானது என்று மேலும் உறுதியாய் எண்ணத் தோன்றியது. ஒரு சிறு வார்த்தை மாற்றத்தைக் கொண்டு தமிழில், எத்துனை பெரிய வித்தியாசம் அதன் பொருளில் தோற்றுவிக்கக்கூடும் என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. இதுவும், அப்படிப்பட்ட ஒன்று தான்; ஒரு கவித்துவத்திற்கு தான் முதலில் அடைப்புக்குறிக்குள் இருக்கும் அந்த வார்த்தைகளை வைத்தேன். அதன் பொருள், உண்மையில், அந்த விளக்கத்தை உண்டாக்கும் போது எனக்கு விளங்கவில்லை. அதுதான், நம்மொழியின் தனிச் சிறப்பு; அதனால் தான், வள்ளுவப்பெருந்தகை வெறும் "ஏழு வார்த்தை"களைக் கொண்டு 1330 குறள்-களை எழுத முடிந்தது. வள்ளுவர் கூறாத ஒன்றைக் கூட (எது சம்மந்தமாயினும்) திருக்குறளில் இல்லையென சுட்டிக்காட்ட முடியாது! எங்கனம் முடிந்தது அப்படி செய்ய, அதும் வெறும் ஏழு வார்த்தைகளைக் கொண்டு? அது தான், நம் செம்மொழியின் சொல்வன்மை. அதை உபயோகிப்பவர் திறமையில் உள்ளது; அதில் ஆயிரமாயிரம் அர்த்தங்களை கொண்டு வருவது.        

         சரி, திருவிளையாடலில் வரும் அக்கதையின் அடிப்படையில் பார்க்கும்போது, அதில் சம்மந்தப்பட்ட பாண்டிய மன்னனுக்கு தமிழ்ப்புலமை மிகுந்து இருந்தது தெரியவருகிறது. அவரின் தமிழ்ப்புலமையை எடுத்துரைக்கும் வகையிலும் சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, பாண்டிய மன்னனுக்கு தமிழ்ப்புலமை இருந்தது என்பதை எவரும் மறுக்கமுடியாது. சரி, ஒரு முறை "பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உண்டா, இல்லையா?" என்ற சந்தேகம் வர, அவர் அதை தீர்க்கும் புலவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என்று அறிவிக்கிறார். அதையறிந்து, "தருமி" என்னும் வறுமையில் வாடும் புலவன் அதைப் பெற கடவுளிடம் முறையிடும்போது, சிவன் வந்து உதவுகிறார். அப்போது, அவர் மன்னனின் சந்தேகம் தீர்க்கும் பாடலை இயற்றி தருமியுடன் கொடுத்து, பாண்டிய மன்னன் பரிசு வழங்க ஆயத்தமாகும் வரை செல்கிறது. அப்போது தான், நக்கீரன் அப்பாடலில் "பொருட்குற்றம்" உள்ளதை கண்டறிந்து, பரிசு கொடுப்பதை தவறு செய்கிறார். பின், சிவன் வந்து நக்கீரனின் தமிழ்ப்புலமையுடன் விளையாடி, அவர் புகழை உலகறிய செய்யத்தான் அத்திருவிளையாடல் என்று கூறி முடிக்கிறார்.

                   சரி, இப்போது தான் என் சிந்தனையில் அந்த கேள்வி எழுகிறது! அது, தமிழ்ப்புலமை  கொண்ட பாண்டிய மன்னர் ஏன் பரிசளிக்க ஆணை பிறப்பித்தார்? அவரின் தமிழ்ப்புலமை எங்கே போனது?? அல்லது ஏன் அது மறைக்கடிக்க/ மறைக்க பட்டது??? உண்மையில், அவர் பொருட்குற்றம் உணராமல், அவசரப்பட்டு பரிசளிக்க ஆணையிட்டரா? அப்படியாயின் அவரின் தமிழ்ப் புலமை சந்தேகத்துக்குரியதாய் ஆகிவிடும்; இருக்கக்கூடும், மன்னனுக்கு அனைத்தும் தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லைதான்; மேலும், அதற்காகத்தான் "புலவர் சபை" இருந்திருக்கக் கூடும். இதை அரசனாய் இருந்து பார்க்கையில், அரசனின் கடமையை கருத்தில் கொண்டு ஒரு ஏழைக் குடிமகனுக்கு உதவியாய் இருக்க வேண்டிக் கூட "அந்த சிறு" தவறையுணர்ந்தும் , அதைப் பொருட்படுத்தாமல் அந்த தவறை மன்னித்து ஆணைப் பிறப்பித்திருக்க சாத்தியம் உண்டு தானே? இதில், எது உண்மை?? இதை எவர் எடுத்துரைப்பது??? அதனால் தான், இது (இதுவரை உண்மையில் இல்லை எனின்) ஒரு புதிய விவாத தலைப்பாய் ஆகக்கூடும் என்றுரைத்தேன். ஒருவேளை, இதையும் சிவன் வேண்டுமென்றே (வெளியில் சொல்லாமல்) தன் திருவிளையாடல்களில் ஒன்றாய் சொல்லாமல், விட்டுவிட்டாரோ? அதை நாமே உணரவேண்டும் என்று ஒதுக்கிவிட்டாரோ?? அது அந்த சிவனுக்கே வெளிச்சம்.

          குறிப்பு: எல்லாம் வல்ல சிவனுக்கும், எல்லாம் தெரிந்த தமிழரிஞற்கும் ஒரு வேண்டுகோள்! இத்தலையங்கத்தில், ஏதேனும் "பொருட்குற்றம்" இருப்பின் தண்டனையின்றி சுட்டிக்காட்டுங்கள். என் தவறைத் திருத்திக் கொள்கிறேன்.

வெள்ளி, நவம்பர் 18, 2011

நன்றி நவிலல்...


(நன்றி "சொல்ல" மறப்பது"ம்" நன்றன்று!!!)
*******

              என்னை ஊக்குவித்தவர்களுக்கும், இன்னும் ஊக்குவிக்கப் போகிறவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும் என உணர்ந்தேன்; அதனால், "வலைப்பதிவை சார்ந்தது" என்ற இப்பிரிவு உண்டானது.  எனக்கு மின்னஞ்சல் மூலம் வந்த சில வாழ்த்து செய்திகளை வாசித்தபோது, மிகவும் ஊக்குவிப்பதாய் இருந்தது. அதில் சில என்னை மிகவும் பாதித்தது (நல்ல விதத்தில் தான்); அது என்ன, எவர் என்பது இங்கு அவசியம் இல்லை என படுகிறது! அவைகளை அறிந்த பின், என்னை இதுவரை ஊக்குவித்தவர்களுக்கும், ஊக்குவிக்க நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும், ஊக்குவிக்க போகிறவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டுமெனப் பட்டது. அது சரியானதும் கூட; என்னுடைய வார்த்தைகளை கவனித்தால் நான் "பாராட்டு அல்லது அங்கீகாரம்" என்ற வார்த்தையை அறவே நீக்கி இருப்பது புரியும். என்னளவில் ஒரு படைப்பாளனும் , அவனது படைப்புகளும் இந்த "பாராட்டு அல்லது அங்கீகாரம்" தரும் இன்ப மயக்கத்தால் பதிக்கப்படும் என திடமாக நம்புகிறேன். உங்களுடைய கருத்துக்களை (எப்படி இருப்பினும்) நான் "என்னை ஊக்குவிக்க" என்ற அடிப்படையிலேயே பார்க்க விரும்புகிறேன்; இதை நான் செய்யவில்லை எனில் என்னுடைய அடிப்படை கோட்பாட்டிலிருந்து நான் விலகிச் செல்லக்கூடும். சரி, இப்போது நன்றி சொல்லவதற்கு வருவோம்; இந்த வலைப்பதிவு வெளியான பின் உங்களிடமிருந்து வந்த ஊக்கக் கருத்துக்களுக்கு நன்றி சொல்லும் முன், இந்த வலைப்பதிவு உருவாகிக் கொண்டிருக்கும் போது (அல்லது உருவாகக் காரணமாய்) என்னை ஊக்குவித்த நபர்கள் பற்றி சொல்ல வேண்டும் என படுகிறது! அதை என் கடமையாகவும் கருதுகிறேன். 

              முதலில், என் மனைவி. எங்கள் மகளின் எதிர்காலத்திற்காய் இந்தியாவில் இப்போது தனியாய் எங்கள் மகளுடன் இருக்கிறாள். அவளின் பெற்றோரும் உதவியாய் இருப்பினும், அவள் மிகுந்த சிரமத்துடன் இந்த சூழ்நிலையை சமாளித்துக் கொண்டிருக்கிறாள்! அவளின் படிப்பையும், உத்தியோகத்தையும் தாற்காலிகமாய் நிறுத்தி வைத்துவிட்டுதான் இதை செய்து கொண்டிருக்கிறாள்!! இந்த நிலையில், என்னுடைய இம்முயற்சியை அவளிடத்தில் சொன்ன போது ஒரு சிறு மனக்குரைவுமின்றி (நான் இங்கே கடினப்படுகிறேன்; உங்களுக்கு இதெல்லாம் தேவையா? என்பது போல் கூட அல்லாமல்) அதை வரவேற்றாள்; என்னை ஊக்கப்படுத்தினாள். ஒருவேளை, நானும் இங்கே அவர்கள் இல்லாமல் கடினப்படுகிறேன் என்ற புரிதலின் அடிப்படையில் கூட இருக்கலாம். மேலும், நான் இவ்வலைப்பதிவை வெளியிடும் முன் என்னவளுக்கு என்னுடைய படைப்புக்களை அனுப்பி கருத்து கேட்டேன். நன்றாய் இருப்பதாய் கூறினாள்; அவள் ஒரு தமிழ்ப் பாரம்பரியக் குடும்பத்தில் இருந்து வந்தவள் என்பதை என் முதல் தலையங்கமான "எம்மகள் (அவள் பெயரும்) தோன்றிய கதை" என்பதில் குறிப்பிட்டிருக்கிறேன். அவளின் தமிழ் திறமை அசாத்தியமானது; ஆனால் அவ்வளவு எளிதில்  எவரிடத்திலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டாள். அவளிடம் இருந்து நிறைய கருத்துக்களையும், குறைகளையும் எதிர் பார்த்தேன்; ஆனால் அது கிட்டவில்லை. முதலில், அவளின் வேலைச் சுமை காரணம் என்று எண்ணினேன். பின், அவள் எதற்கோ தயங்குவதை உணர்ந்தது; அவளிடம் மேலும், மேலும் விசாரித்தபோது, அதிலுள்ள குறைகளை சுட்டிக்காட்டி என்னுடைய முயற்ச்சியை வீணடிக்கக் கூடாது என்று கருதியிருந்தது விளங்கியது. அதிலும், அந்த குறையை எனக்கு சுட்டிக்காட்டியவர், இன்னொருவர்; அவர் தான் இரண்டாமவர். அதனால் தான், என்னவளின் மனதில் இருந்ததை வெளிக்கொண்டு வர முடிந்தது.

            இரண்டாவது நபர், என் மிக நெருங்கிய நண்பனான முனைவர். சுரேசு பாபு; அமெரிக்காவில் "பிட்சுபர்கு" நகரில் வசிப்பவன். இங்கே, "அவன்" என்று குறிப்பிடுவதற்காய் எவரும் சங்கடப்படவேண்டாம். "அவர்" என்று குறிப்பிடும்போது அவன் அன்னியப்பட்டு போவதாய் தோன்றும்; மாறாய், அவனும் இதைத் தான் விரும்புவான். அவனிடமும், என்னுடைய படைப்புக்களை வெளியிடம் முன் தெரிவித்திருந்தேன். அதில், என்னுடைய முதல் தலையங்கமாய் வைத்திருந்தது வேறு ஒரு பார்வை; எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது கூட. ஆனால், அவன் தீர்க்கமாய், மூர்க்கமாய் மறுத்தான்; அதை என் போன்ற வளரும் எழுத்தாளர்கள் அதுவும் முதல் பதிப்பிலேயே எழுதுவது சரியில்லை என்றான். முதலில் அவனிடம், சமாதானம் சொல்ல முயன்றேன்; அவன் விடாப்பிடியாய் வாதிட்டு (அதாவது, வழக்கம் போல் கடிந்து திட்டி) என்னைப் புரிந்து கொள்ளச் செய்தான். இது தெரிந்த பின் தான் என்னவளிடம், அதைப் பற்றி விளக்கம் கூறி அவள் கருத்தை கேட்டேன். அவள், ஆமாம்! அது ஓர் மிகக் கருத்தாழம் உள்ள விசயம்; அதுவும் அது சரியாய் மற்றவர்களை சென்றடைய, முதலில் மற்றவர்கள் "உங்களுடைய" பார்வையை புரிந்து கொள்ளச் செய்வது அவசியம் எனறாள்! அப்போது தான் எனக்கு புரிந்தது; அவள் என் முயற்சியை குறைத்து விடக்கூடாது என்பதற்காய் அதை மறைத்திருக்கிறாள் என்று. இங்கே, இன்னொரு விசயம் புரிகிறது மனைவி என்பவள் நடுநிலையாய்  இருக்க விரும்பினும் சிலவற்றை வேண்டும் என்றே விட்டுக் கொடுக்கிறாள் என்று (அதிலும், எதையும் தீர்க்கமாய் யோசிக்கும் என்னவளே அப்படி நடந்திருக்கிறாள்). ஆனால், ஒரு நெருங்கிய நண்பன் இதை மறைக்க வேண்டியதில்லை; ஏனெனில், அது வேறொரு உறவு முறை; இதுவே, வேறொருவர் எழுதி அதை என்னவள் படித்திருந்தால், எடுத்தவுடனே "அதிகப்பிரசங்கித்" தனமாய் எழுதுகிறானே! என்று  விமர்சித்திருப்பாள். எப்படியாயினும், அது தடுக்கப்பட்டுவிட்டது; அதன் பின் தான், நான் வேறொரு தருணத்தில் எழுத எண்ணியிருந்த "எங்கள் மகள்" பற்றிய விசயத்தை முதல் தலையங்கமாய் எழுதினேன். அதற்கு முக்கிய காரணம் என் நண்பன்; பிறகு அதை ஆமோதித்து என்னை தீர்க்கமாய் உணரச் செய்த என் மனைவி. அதற்காய் தான் அவர்கள் இருவருக்கும் முதலில் நன்றியை தெரிவிக்க விரும்பினேன்.

       இதனிடையில், எனக்கு இந்த மாதிரி பகிர்தலை செய்யவேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாய் இருந்தது எனினும், நான் அதிகம் அதிகமாய் கற்பனை செய்த ஊடகம் "திரைப்படம்". நாம் நிறைய, அதிபலசாளியான நாயகனை (Super Hero) பார்த்துபழக்கப்  பட்டதினால் கூட இருக்கலாம். மேலும், என்னுடைய கற்பனைகள் அந்த "அதிபலசாளியான நாயகனை" போன்று ஒரு வன்முறை கலந்த வடிவத்தில் தான் இருந்து வந்துள்ளது. நான் சொல்ல வந்த விசயத்தை "சாட்டையால் அடித்து" கூறவேண்டும் என்றே கற்பனை செய்து கொண்டிருப்பேன். அவ்வாறு ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பின் கூட, வன்முறை கலந்த செயலாக்க எண்ணத்தால், என்னுடைய கருத்துக்கள் திசை தெரியாமல் போயிருக்கக் கூடும்! அதற்கு மாறாய், எனக்கு "வலைப்பதிவை" ஆரம்பிக்கும் சிந்தனை வர காரணமாய் இருந்தவர்கள் முனைவர். பெரியசாமி, முனைவர். ராசா என்ற இரண்டு தமிழ் பேசும் இந்தியர்கள்! (அதிலும் குறிப்பாய், முனைவர். பெரியசாமி). என்னை போல் கடல் கடந்து வந்து இங்கே வாழ்பவர்கள். அவர்களிடம் ஒரு மூன்று வாரங்களுக்கு முன் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது, தளம் "தமிழ்" என்பதை வந்தடைந்தது! அப்போது அவர்களிடம் என்னுடைய "தமிழ் வளர" என்ற கவிதையை பகிர்ந்துகொள்ள வேண்டிய சூழல் வந்தது; அப்போது அவர்கள் தந்த ஊக்கம் தான் என்னை "வலைப்பதிவு" எனும் ஊடகத்தை நோக்கி பயணிக்க வைத்தது. என்னுடன் இருப்பவர்கள் என்னுடைய கருத்தை ஊக்குவிக்கும்போது, நான் ஏன் திரைப்படம் எனும் துறையில் வாய்ப்புக்காக போராட வேண்டும் என்ற கேள்வி எழுந்தது! (போராடியும் வெற்றி கிடைக்குமா என்பது இன்னுமொரு கேள்விக்குறி! அதற்கு ஒரு வேள்வியும் கூட வேண்டும் என்ற எண்ணமும் வந்தது; இதையும் தாண்டி அதற்கான முயற்சியை கூட இன்னும் துவக்கவில்லை; பின் எங்கே வாய்ப்பு கிடைப்பது?) உடனே, அதற்கு மாற்றாய் தோன்றியது தான் இந்த எண்ணம். அதற்கு பின், "வங்காள" மொழி பேசும் "முனைவர். சுமன் நந்தி" எனும் இந்திய(நண்ப)ர், எனக்கு வலைத்தளம் பற்றி விளக்கி சொல்லிக் கொடுத்தார். கணினி-அறிவியலில் ஆராய்ச்சி செய்யும் என்னவள், என்னுடன் இருந்திருப்பின் இதை இன்னமும்  கூட சிறப்பாய் அளித்திருக்கக் கூடும் என எண்ணத் தோன்றுகிறது!! இவர்கள் எல்லோரும் தான் என்னுடைய பார்வையை இவ்வலைப்பதிவின் மூலம் துவக்க வலிமையான அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்கள்.

          இப்போது, உங்களுக்கு நன்றி சொல்லும் நேரம். நான் "அழைப்பிதழில்" குறிப்பிட்டிருந்தது போல், இந்த வலைப்பதிவை "எழுச்சிப் பெறச்" செய்வது உங்களிடம் தான் உள்ளது. உடனே, கிடைத்த உங்களின் ஊக்கமளிக்கும் செய்திகளுக்காய், என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான், இங்கே "பல பரிமாணங்களின்" மீதான என் பார்வையை  பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது சார்ந்த பார்வை உங்களில் பலருக்கும் இருக்கும் என்று திடமாக நம்புகிறேன். என்னுள் உணர்ந்ததை, உங்களுக்கு தெரிவிக்கும் போது அது விருச்சமாய் வளரும். நான் எனக்குள் உள்ள பலவிதமான தீய-எண்ணங்களுக்கான, தீய-செயல்களுக்கான "வேரை" கண்டறிந்து,  "வேரறுக்கும்" முயற்சியில்/ பயிற்சியில் இருக்கிறேன். அதை உங்களிடம் கொண்டு சேர்த்து, அது உங்களுக்குள் இருக்கும் "வேரை" அறுக்க உதவியாய் இருக்க முயல்கிறேன். இது "புரட்சி" அல்ல; இது "புரிதல்". மேலும், நான் என்னுள் இருக்கும் பல வேர்களை அறுக்க முயன்று கொண்டிருக்கும் போது, எப்படி புரட்சி செய்ய முடியும்? மேலும், புரட்சி என்பதே ஒரு அழிவை அழிக்க, இன்னொரு அழிவை செய்யும் செயலாய் எனக்கு படுகிறது; இதற்கு பல உதாரணங்களை "மேற்கோள்" காட்டி கூற முடியும். என்னுடைய முயற்சி ஒரு அழிவை (நம் தீய-எண்ணம் மற்றும் தீய-செயல் மூலம் உண்டாகும் அழிவை), அதன் ஆதியை அழிப்பதில் இருந்து தொடங்க எண்ணுகிறேன். இது செய்யப்படின் பல அழிவுகள் அறவே தடுக்கப்படும் என்பதற்காய் தான் இந்த முயற்சியை, புரிதலை உங்களையும் சென்று சேர பிரியப்படுகிறேன். என்னுடைய பார்வையில் குறை இருப்பின் அதை சுட்டிக்காட்டுவது உங்களின் கடமை; அது தெரிவிக்கப்படின் என்னுடைய பார்வை குறைவு நீங்கி, பார்வை இன்னும் தெளிவு பெரும். அதற்கு உங்களின் ஆதரவை வேண்டுகிறேன்; இந்த வலைப்பதிவில் உள்ள குறைகளையும், நிறைகளையும் சுட்டிக்காட்டுவதன் மூலம் என்னுடைய பார்வை விசாலமாகும். இந்த வலைப்பதிவை  நீங்கள் விரும்பும் பட்சத்தில், உங்களுக்கு தெரிந்த (எனக்கு தெரியாத) உறவு மற்றும் நட்பு வட்டாரத்திற்கு இதைக் கொண்டு செல்லுங்கள். நீங்கள் இதுவரை படித்து பாராட்டியதற்காயும், இனி மற்றவர்களை சென்றடைய உதவப் போவதற்காயும், மீண்டும் ஒரு முறை என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

        முயன்ற வரை, புதிய படைப்புக்களை ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பதிவிக்க முயல்கிறேன். நீங்கள் என்னுடைய படைப்புக்களை உடனுக்குடன் அறிய விருப்பமிருப்பின், வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள "மின்னஞ்சல் மூலம் தொடர்க (Follow by E-mail)" என்ற பிரிவில் உங்கள் "மின்னஞ்சலை" பதிவதன் மூலமாய் செய்யலாம். முடிக்கும் முன், மீண்டும் ஒரு முறை, இதுவரை என்னை ஊக்கப்படுத்தி கருத்துக்கள் அனுப்பியவருக்கும், அனுப்ப எண்ணிக் கொண்டிருக்கிறவர்களுக்கும், இனிமேல் அனுப்பப் போகிறவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், உங்களின் கருத்துக்கள் தான் என்னை, என்னுடைய படைப்பை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்ல உதவும் என்ற உண்மையை கூறி முடிக்கிறேன். உங்களுக்கு விருப்பமிருக்கும் பட்சத்தில், உங்களுடைய கருத்துக்களை வலைப்பதிவில் பொதுப்படியாய் பதிய வேண்டுகிறேன். நீங்கள், எனக்கு மட்டும் மின்னஞ்சல் அனுப்பும் பட்சத்தில் சில கடுமையான கருத்துக்களை நான் மறைக்கக் கூடும்/ அல்லது அது போல் முயற்சிக்க கூடும். மாறாய், பொதுப்படியாய் வெளிப்படும் பட்சத்தில், அது அனைவரையும் சென்று சேரும். அதன், தாக்கம் இன்னும் அதிகமாகும்; அதனால் என்னுடைய சிந்தனை இன்னும் தெளிவும்/ வளமும் பெரும்.