வெள்ளி, ஜனவரி 27, 2017

பொ(று/ரு)க்கி...


         வசைபாட உபயோகிக்கப்படும் "பொறுக்கி" என்ற சொல்லைப் பற்றி, சில விடயங்களை அலசி ஆராய்ந்து; அவற்றில் தேவையானவற்றைப் "பொருக்கி" எடுத்து - என் புரிதலை விளக்கி இருக்கிறேன். அருள்கூர்ந்து உங்கள் புரிதலைப் பகிருங்கள்.
  1. "பொறுக்கி" என்ற சொல்லுக்கு வல்லின "ற" எழுத்தே சரியென்று அறிகிறேன். அப்படியெனில், இந்த "பொறுக்கி" என்ற சொல் எப்படி வந்திருக்க வேண்டும்? "பொறுமையை இறுக்கி (அல்லது) இருத்தி" வைத்திருப்பவன் என்ற பொருளில் வந்திருக்க வேண்டும். பின் ஏன், இந்த சொல் தவறானப் பார்வையில் பார்க்கப்படுகிறது? சரி, ஒரு புரிதலை நோக்கி பயணிப்போம்.
  2. வேலை ஏதும் இல்லாமல், ஊர் சுற்றிக்கொண்டு இருப்போரை "பொறுக்கி" என்று அழைப்பது வழக்கமே! இந்த சொல்லாடல் எப்படி வந்திருக்க வேண்டும்? ஒருவேளை... அவசரப்பட்டு எந்த வேலையையும் ஏற்காமல்; (பள்ளி/கல்லூரி) படிப்பை முடித்து, தன் தகுதி/திறனுக்கு ஏற்ற வேலைக்காக "பொறுமையை இறுக்கி" இருப்போர் என்ற பொருளில் உருவாகி இருக்கலாம். 
  3. அதுதான், தன் பிள்ளைகள் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதை பார்த்து "பொறுமையை இறுக்க" முடியாத பெற்றோர், "இவ்வளவு பொறுமையை இறுக்கிக் கொண்டிருக்கிறாயே?!" என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நோக்கில் "பொறுக்கி" என்று கோபமாய் திட்ட வித்திட்டிருக்க வேண்டும். அதுதான், அப்படி சரியான/முறையான வேலையை செய்யாத சமூக விரோதிகளையும் "பொறுக்கி" என்றழைப்பதற்கு காரணமாய் அமைந்திருக்கும்.
  4. ஒருவேளை...! இந்த "பொறுக்கி" என்ற வசைபாடும் சொல் "பொருக்கி" என்று இடையின "ர" எழுத்தைக் கொண்டு உதயமாகி இருக்கும் என்று வாதத்திற்காய் எடுத்துக் கொண்டால் - அதையும் அருமையான சொல்லாகவே தெரிகிறது. அது தேடலையும்; அதன் மூலமாய் நல்லதை தேர்ந்தெடுக்கும் திறனையும் குறிப்பதாகிறது.
  5. மீண்டும் மேற்குறிப்பிட்ட உதாரணத்தையே எடுத்துக் கொண்டால், தன் தகுதி/திறன் இவற்றிற்கு பொருத்தமான ஒரு "நல்ல" வேலையை தேடிக் கொண்டிருப்போர் என்ற அடிப்படையில் பிறந்திருக்க வேண்டும். காய்கறி போன்ற பொருட்கள் வாங்கும்போது "பார்த்து, பொருக்கி எடுங்கள்" என்று சொல்வது நாம் அனைவரும் அறிந்ததே.
  6. இப்படி வல்லினம் (அல்லது) இடையினம் என்று எந்த எழுத்தைக் கொண்டு இந்த சொல் இருப்பினும், நல்ல புரிதல்களைத் தானே கொடுக்கின்றன? பின் ஏன், இந்த சொல் "மெல்லினத்தாரை" காயப்படுத்த/வசைபாட "வல்லினத்தாரால்" பயன்படுத்தப் படுகிறது?
  7. "மயிர்" என்ற அருமையான தமிழ் வார்த்தையைக் கொச்சைப் படுத்தியது போல், "பொறுக்கி" என்ற வார்த்தையையும் கொச்சைப்படுத்தி விட்டோமா? மயிர் போன்றே சில உறுப்புகளையும் கொச்சைப்படுத்தி இருக்கிறோம்!
  8. இவ்வளவு ஏன்... "ஆத்தா" என்ற அன்புமிகு சொல்லக் கூட கொச்சைப்படுத்தி இருக்கிறோம்.
  9. இப்படி, நாம் கொச்சைப்படுத்திய "நல்ல தமிழ்ச்சொற்கள்" பற்பல! அதில், இந்த "பொறுக்கி" என்ற வார்த்தையும் இணைந்துவிட்டதோ?
  10. பெரும்விந்தை என்னவென்றால்... "பொறுக்கி" என்ற இந்த தமிழ்ச்சொல்லை சமீபத்தில் ஒருவர், தமிழர்களை நோக்கி பொதுமையில் சொல்ல; அதை மையப்படுத்தி, தமிழ்ச் சூழலில் பலரும் "பொறுக்கி" என்ற பொருளில் (பதிலுக்கு) திட்டிட, வார்த்தைகளைத் தேடிப் "பொருக்கி'க் கொண்டிருப்பது தான்! 
சிதைந்த நற்சொற்களை "பொருக்கி" எடுப்போமா???

பதிந்தவர்: விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு
நாள்:         27.01.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக