மனதங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனதங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், நவம்பர் 29, 2017

வாழ்க்கை இவ்விதமே...!


     மகள்மேல் கோபம் வருமா? அதிலும், 8 வயது மகள்மேல் கோபம் வருமா?? அப்படி வந்தால், நானெப்படி அப்பனாக இருக்கமுடியும்?! ஆனால், ஆற்றாமை வரும்! வரலாம்...

      ஆமடி மகளே! உங்களுக்காக/உங்களைவிட்டுப் பிரிந்து தனித்திருக்கும் நான், அலைபேசியில் அழைக்கும்போது; 1 நிமிடம் கூட பேசமுடியாமல், நீ "பிசி"யாக இருப்பதைக் காணும்போது; உன்மேல் ஆற்றாமை எழுகிறதடி! "பள்ளி/படிப்பு/வீட்டுப்பாடம்/விளையாட்டு/பொழுதுபோக்கு/ஓய்வு" என; என்னைவிடவும், நீ அதிகம் பிசியாக இருப்பது நிச்சயமாய் புரிகிறது மகளே! இருப்பினும், அந்த 1 நிமிடம்...

     எனக்கு மட்டுமல்ல! ஊரிலிருக்கும் உன் "அப்பத்தாவும்/அப்பப்பாவும்" அழைக்கும் போது கூட, உனக்கு அந்த 1 நிமிடம் கிடைக்காதது கவலையே! நாளை நீ வளர்ந்த பின்பு, பேச ஆசைப்படும் போது; எங்களில் எவரெவர் உயிரோடிருப்போம் என்பதை எவர் அறிவர்?

    சரி...! 8 வயது மகள், இந்தப் பதிவைப்  படிப்பாளா? இல்லை, நிச்சயமாக படிக்கமாட்டாள், வாய்ப்பில்லை! படித்தாலும், புரியுமா?... புரியாது! பின்னெதற்கு, இதை எழுதவேண்டும்?! அவள் நாளை வளர்ந்து ஆளான பின், நிச்சயம் படிப்பாள்! சரி, அப்போது படிப்பதால்; எவருக்கென்ன பயன்?...

  இருக்கிறது! மிகப்பெரிய பயனிருக்கிறது! அவளின், மகளுக்கு/மகனுக்கு இதை அவள் கற்பிப்பாள்! அவளின் மகள்/மகனின், அப்பனுக்கு இந்த வாய்ப்பும்/வரமும் கிடைக்கும்! அதுவரை உயிரோடிருப்பின் "அம்மப்பனாய்" எனக்கும் அந்த வாய்ப்பும்/வரமும் கிடைக்கும்!

 வாழ்க்கை இவ்விதமே! "நாளையும்/நாளைய தலைமுறையும் நலமடையும்" என்னும் நம்பிக்கையில் தான்; பலரின் வாழ்வும் நகர்ந்து கொண்டிருக்கிறது! "தேவர் மகன்" படத்தில் சொல்லப்படுவது போல் "இந்த விதை நான் போட்டது!" என்ற நிறைவு இது! ஆம்...

வாழ்க்கை இவ்விதமே...!

சனி, நவம்பர் 11, 2017

ஃபிஃப்த்தக்காஸ்?!


        ஆமாம்... உங்களுக்கு "ஃபிஃப்த்தக்காஸ்"னா என்னன்னு தெரியுமா? - என்னது, தெரியாதா?! - அப்பாடா!... எனக்கும் தெரியாது - நான்கு நாட்களுக்கு முன்பு வரை! அன்று என் மகள் "அப்பா! உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா?" என்றாள்; சொல்லடி என்றேன். இது "ஃபிஃப்த்தக்காஸ் பத்தின கதைப்பா!" என்றாள். உடனே, என்னுள் "ஃபிஃப்த்தக்காஸ்" என்றால் என்ன? என்ற கேள்வி எழுந்தது. அவள், அவளுக்கே உரித்தான மழலை கலந்த மொழியோடு "இன்னைக்கு ஆட்டோவுல போய்க்கிட்டு இருந்தோம் பா!" என்றபடி ஆரம்பித்தாள். நானும் கேட்க ஆரம்பித்தேன்; இடையில் ஓர் முறை, சரி... "ஃபிஃப்த்தக்காஸ்"னா என்னடின்னு கேட்டேன்! அவள் "ஃபிஃப்த்தக்காஸ் பா!" என்று பதில் சொல்லிவிட்டு தொடர்ந்தாள். மீண்டும் ஒருமுறை இடையில், "ஃபிஃப்த்தக்காஸ்"னா என்னம்மான்னு கேட்டேன்; அவளும் "ஃபிஃப்த்தக்காஸ் பா!!"வென சொல்லிவிட்டு தொடர்ந்தாள்! அவள் இரண்டு முறை சொல்லியும் என்னறிவுக்கு எட்டவில்லை!

       அதற்கு மேல் கேட்டால், என்னைக் கேலி செய்வாள் என்ற பயம்! ஏனெனில், அவள் படிக்கும் பள்ளி அம்மாதிரி; அவர்களின் ஆங்கில வார்த்தை உச்சரிப்புகள் அப்படி! அடிக்கடி, அவளுக்கும்/என்னவளுக்கும்; என் உச்சரிப்பைக் கேலி செய்வது வழக்கம்! நான் அரசுப் பள்ளியில் படித்தவன் தானே?! எனவே, அதற்கு மேல் கேட்டு, அவமானப் படவேண்டாம்னு "என் யோசனையைத் தொடர்ந்து கொண்டே" அவள் கதையைத் தொடர்ந்து கேட்கலானேன்! அவள் கதையைச் சொல்லி முடிப்பதற்கு, சற்று முன்னர்தான், "ஃபிஃப்த்தக்காஸ்"னா என்னவென்று புரியலாயிற்று! - என்னது? அப்படின்னா, என்னன்னு கேட்கிறீர்களா?! - அப்படின்னா, அதாங்க "ஃபிஃப்த்தக்காஸ்". ஹலோ... ஹலோ...! இருங்க, திட்டாதீங்க! அவள் சொல்லியது போல், நானும் சரியாகத்தான் பதில் சொல்லி இருக்கேன்! அப்படின்னா "Fifth படிக்கும் அக்காs = fifthஅக்காஸ் = ஃபிஃப்த்தக்காஸ்!" இப்போது, உங்களுக்கும் புரிந்திருக்குமே; ஆங்... அதேதான்!

"பிள்ளைமொழி" ஆச்சரியங்களில் இதுவும் ஓர்வகை!!!

பின்குறிப்பு: இந்த "ஃபிஃப்த்தக்காஸ்"னா என்னனு புரிஞ்சப்போ, எனக்கு பயங்கர சிரிப்பு; ஆனால், சிரிக்கவில்லை! ஏனெனில், அவள் கதை சொல்லும்போது, எவரும் சிரித்தால்; அவளுக்கு கோபம் வரும்! அதனால், பவ்யமாய் கேட்டு முடித்தேன்! - என்னது...? ஓ...! - அந்த கதை என்னன்னு கேட்கிறீர்களா?! யாருக்கு தெரியும்?! இந்த "ஃபிஃப்த்தக்காஸ்"னா என்னன்னு யோசிச்சதுல; அவள் சொன்ன கதையைக் கேட்கவே இல்லை! உஷ்ஷ்ஷ்... இதை அவள்கிட்ட சொல்லாம; இரகசியமா வச்சுக்கோங்க ப்ளீஸ்!

"புலாலை மறுக்கமுடியாமல்" மீண்டும் அசைவம்!


       18.04.2016 அன்று "புலால் மறுத்தல்" எனும் அதிகாரம் 026-இற்கான விளக்கவுரை எழுதும் முன், புலால் உண்பதை நிறுத்தியி. ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்னர் நிறுத்தி இருப்பினும் ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னர் "மீண்டும் புலால் உண்ணும்" எண்ணம் எழுந்தது. புலாலை மறுக்கும் முடிவெடுத்தவுடன், அது சார்ந்து நண்பர்களுடன் நிறைய விவாதித்தேன். மிக அதிகமாய் விவாதித்தது, காதர் எனும் நண்பனிடம்! எனவே, மீண்டும் உண்ணும் முடிவெடுத்தவுடன் அவனிடம் தெரிவித்தேன்; வரவேற்று, மகிழ்ச்சியென பதிலளித்தான். இன்னமும், புலாலை மறுப்பதே சிறந்தது என்றே நம்பினாலும்; சூழல் காரணமாய் இன்று (11.11.2017) மீண்டும் புலால் உண்ண ஆரம்பித்தேன். எதைச் சொல்லியும், இதை நியாயப்படுத்த விரும்பவில்லை! இடைவெளிக்குப் பின், முதன் முதலாய் சாப்பிட்ட உணவுதான் மேலுள்ள புகைப்படத்தில் இருப்பது. இம்முயற்சியில், தோற்றிருக்கிறேன் என்பதை இங்கே பதிவு செயகிறேன்!

சில முடிவுகள் இப்படித்தான்! முடிவெடுக்கும் போது இருக்கும் உறுதி... 
அதன் பின்னர் இல்லாமல் போகும்!!

வெள்ளி, பிப்ரவரி 24, 2017

"டூ-வீலர்" கனவு மகிழ்வு தந்ததா?


     02.03.2014 அன்று "டூ-வீலர்" கனவு... என்றோர் மனதங்கத்தில், கிட்டத்திட்ட 20 ஆண்டு நிறைவேறாக் கனவான; ஒரு "டூ-வீலர்' வாங்கமுடியாத என் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தேன். அன்றிலிருந்து சரியாய் 32 மாதங்கள் கழித்து; 02.11.2016 அன்று அந்த கனவு நிறைவேறியது (பார்க்க: மேலுள்ள படம்). மேற்குறிப்பிட்ட பதிவில் சொன்னது போல், இதுவரை; வண்டியை நிறுத்த ஓர் நிரந்தர இடமின்றி இருந்தது. அதனால் தான், இந்த வண்டிக்கான முன்பணத்தைக் கட்டி ஓராண்டுக்கு மேலாகியும் - வாங்காமல் தவிர்த்து வந்தேன். இப்பொது, ஓர் நிரந்தர இடம் கிடைத்துவிட்டதால்; மறுசிந்தனை ஏதுமின்றி உடனே வாங்கிவிட்டேன். என்னுடைய கனவு நிறைவேறியது உண்மை தான்! ஆனால், மகிழ்வை தந்ததா என்றால்?... இல்லையென்றே தோன்றுகிறது! "டூ-வீலர்" வாங்கத் துடித்த, அந்த வயதைத் தாண்டியதால் - மகிழ்வு இல்லையா? அல்லது இந்தியாவிலேயே இருந்து, விரும்பிய வண்ணம்...

     அதிக நேரம்/தூரம் ஓட்டமுடியவில்லை என்பதால் - மகிழ்வு இல்லையா? தெரியவில்லை! ஆனால், பெருத்த மகிழ்வு ஏதுமில்லை! அந்த நிகழ்வை இப்படியோர் பதிவாய் எழுத கூட, 3 மாதங்களுக்கு யோசித்து; இன்றுதான் எழுதி இருக்கிறேன். உடனே எழுதும் அளவில் மகிழ்ச்சி இருக்கவில்லை என்பதாய் தோன்றுகிறது. காரணம் புரியவில்லை; ஆனால், மகிழ்வு இல்லை! நான் அங்கிருந்த 15 நாட்களில், கிட்டத்திட்ட 580 கி.மீ. தூரம் ஓட்டினேன்! முதல் "இலவச பராமரிப்பு வேலைக்கு" வண்டியை விடவேண்டும் என்பதால்; அதற்கான இலக்கு தூரத்தை ஓட்டுவதற்காய் - புதுவையில் இருந்து ஒரு முறை "வெண்ணாங்கப் பட்டினம்" வரை சென்றேன்; பின் திண்டிவனம் வரை சென்று வந்தேன்! இருப்பினும் ஏனோ... அந்த மகிழ்வோ/திருப்தியோ எழவில்லை. நான் அங்கிருந்து வந்த பின்; 2 மாதங்கள் வரை, என் மருதந்தை ஓட்டிக்கொண்டு இருந்தார். இப்போது, 3 வாரங்களுக்கு மேல் வண்டி சும்மாதான் நின்று கொண்டிருக்கிறது.

         மூப்பு காரணமாய், என்னப்பனால் அந்த வண்டியை ஓட்ட முடியாது! எனவே, வெறுமனே நின்று கொண்டிருக்கிறது. கடந்த 3 வாரங்களுக்கும் மேல், நின்ற இடத்திலிருந்து நகராமல் இருக்கிறது! "முழு பணத்தையும் ஒரே தவணையில் செலுத்தி; வாங்கியது தவறோ?" என்றுகூட சில நேரங்களில் யோசனை எழும். ஆனால், கடன் வாங்கி ஒரு பொருள் வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை! இருப்பினும், ஒரு பெரும் மதிப்புடைய பொருளொன்றை; கடனில் தான் வாங்கி இருக்கிறேன்! கடன் முடிந்த பின்னர்தான், அப்பொருளால் உண்மையான மகிழ்வு என்னுள் எழும்! அன்றுதான், அதைச் சார்ந்த பதிவையும் எழுதவேண்டும் என்று இருக்கிறேன். ஆனால், அப்படி கடன் ஏதுமின்றி வாங்கியும்; கிட்டத்திட்ட 20 ஆண்டு கால கனவு நிறைவேறியும், மகிழ்ச்சி மட்டும் இல்லை! ஒருவேளை இந்தியாவில் நிரந்தரமாய் தங்கும்போது; மகிழ்வு கிடைக்கக்கூடும்! இப்போதைக்கு, அதை வாங்கியதால் எந்த சலனமும் இல்லாத; என் மனதைப் போலவே...

"Classic 350" மாடலான, அந்த புல்லட்டும் "எந்த சலனமுமின்றி" நின்று கொண்டிருக்கிறது!!!

ஞாயிறு, பிப்ரவரி 19, 2017

நல்லவர்களில் "ஓர் வகை!"

நல்லவர்களில் "ஓர் வகை!"


       நான்  உடன் இருந்ததோடு சரி! கத்தி எடுத்து கொடுத்தேன்! அரிவாள் எடுத்து கொடுத்தேன்!  ஆனால், கொலை செய்யவே இல்லை! என்னைக் கொலை செய்ய சொன்னார்கள்! ஆனால், நான் மறுத்துவிட்டேன்!

நான்(ஏ) நல்லவன்!

நான் எடுத்து கொடுத்த; கத்தி/அரிவாளைக் கொண்டு, வெட்டியோர் தான் குற்றவாளிகள்! நான் வெட்டவே இல்லை; அதனால், நான் குற்றவாளி இல்லை! அதுபோல், தப்பித்துச் செல்லும் திறமை இல்லாமல், கொலைகாரர்களுக்கு உடந்தையாய் இருந்து; கொலை செய்யப்பட்டோரும் குற்றவாளிகளே!

ஆனால், நான் நல்லவன்!
  1. குடும்பத்தில்/உறவில்/சமூகத்தில் - இப்படிப்பட்ட ஓர் வகையினரைப் பார்த்திருப்போம்!
  2. இன்றைய தமிழக "அரசியல் சூழ்நிலை" நாளை மாறும்போது; இவ்வகையான நல்லவர்களை அடையாளம் காண நேரலாம். அரசியல்வாதிகள் மட்டுமல்ல! வாக்காளர்களும், அதில் ஒரு வகையினராய் வாதிடக் கூடும்! 😊
- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு

வெள்ளி, ஜனவரி 27, 2017

பொ(று/ரு)க்கி...


         வசைபாட உபயோகிக்கப்படும் "பொறுக்கி" என்ற சொல்லைப் பற்றி, சில விடயங்களை அலசி ஆராய்ந்து; அவற்றில் தேவையானவற்றைப் "பொருக்கி" எடுத்து - என் புரிதலை விளக்கி இருக்கிறேன். அருள்கூர்ந்து உங்கள் புரிதலைப் பகிருங்கள்.
  1. "பொறுக்கி" என்ற சொல்லுக்கு வல்லின "ற" எழுத்தே சரியென்று அறிகிறேன். அப்படியெனில், இந்த "பொறுக்கி" என்ற சொல் எப்படி வந்திருக்க வேண்டும்? "பொறுமையை இறுக்கி (அல்லது) இருத்தி" வைத்திருப்பவன் என்ற பொருளில் வந்திருக்க வேண்டும். பின் ஏன், இந்த சொல் தவறானப் பார்வையில் பார்க்கப்படுகிறது? சரி, ஒரு புரிதலை நோக்கி பயணிப்போம்.
  2. வேலை ஏதும் இல்லாமல், ஊர் சுற்றிக்கொண்டு இருப்போரை "பொறுக்கி" என்று அழைப்பது வழக்கமே! இந்த சொல்லாடல் எப்படி வந்திருக்க வேண்டும்? ஒருவேளை... அவசரப்பட்டு எந்த வேலையையும் ஏற்காமல்; (பள்ளி/கல்லூரி) படிப்பை முடித்து, தன் தகுதி/திறனுக்கு ஏற்ற வேலைக்காக "பொறுமையை இறுக்கி" இருப்போர் என்ற பொருளில் உருவாகி இருக்கலாம். 
  3. அதுதான், தன் பிள்ளைகள் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதை பார்த்து "பொறுமையை இறுக்க" முடியாத பெற்றோர், "இவ்வளவு பொறுமையை இறுக்கிக் கொண்டிருக்கிறாயே?!" என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நோக்கில் "பொறுக்கி" என்று கோபமாய் திட்ட வித்திட்டிருக்க வேண்டும். அதுதான், அப்படி சரியான/முறையான வேலையை செய்யாத சமூக விரோதிகளையும் "பொறுக்கி" என்றழைப்பதற்கு காரணமாய் அமைந்திருக்கும்.
  4. ஒருவேளை...! இந்த "பொறுக்கி" என்ற வசைபாடும் சொல் "பொருக்கி" என்று இடையின "ர" எழுத்தைக் கொண்டு உதயமாகி இருக்கும் என்று வாதத்திற்காய் எடுத்துக் கொண்டால் - அதையும் அருமையான சொல்லாகவே தெரிகிறது. அது தேடலையும்; அதன் மூலமாய் நல்லதை தேர்ந்தெடுக்கும் திறனையும் குறிப்பதாகிறது.
  5. மீண்டும் மேற்குறிப்பிட்ட உதாரணத்தையே எடுத்துக் கொண்டால், தன் தகுதி/திறன் இவற்றிற்கு பொருத்தமான ஒரு "நல்ல" வேலையை தேடிக் கொண்டிருப்போர் என்ற அடிப்படையில் பிறந்திருக்க வேண்டும். காய்கறி போன்ற பொருட்கள் வாங்கும்போது "பார்த்து, பொருக்கி எடுங்கள்" என்று சொல்வது நாம் அனைவரும் அறிந்ததே.
  6. இப்படி வல்லினம் (அல்லது) இடையினம் என்று எந்த எழுத்தைக் கொண்டு இந்த சொல் இருப்பினும், நல்ல புரிதல்களைத் தானே கொடுக்கின்றன? பின் ஏன், இந்த சொல் "மெல்லினத்தாரை" காயப்படுத்த/வசைபாட "வல்லினத்தாரால்" பயன்படுத்தப் படுகிறது?
  7. "மயிர்" என்ற அருமையான தமிழ் வார்த்தையைக் கொச்சைப் படுத்தியது போல், "பொறுக்கி" என்ற வார்த்தையையும் கொச்சைப்படுத்தி விட்டோமா? மயிர் போன்றே சில உறுப்புகளையும் கொச்சைப்படுத்தி இருக்கிறோம்!
  8. இவ்வளவு ஏன்... "ஆத்தா" என்ற அன்புமிகு சொல்லக் கூட கொச்சைப்படுத்தி இருக்கிறோம்.
  9. இப்படி, நாம் கொச்சைப்படுத்திய "நல்ல தமிழ்ச்சொற்கள்" பற்பல! அதில், இந்த "பொறுக்கி" என்ற வார்த்தையும் இணைந்துவிட்டதோ?
  10. பெரும்விந்தை என்னவென்றால்... "பொறுக்கி" என்ற இந்த தமிழ்ச்சொல்லை சமீபத்தில் ஒருவர், தமிழர்களை நோக்கி பொதுமையில் சொல்ல; அதை மையப்படுத்தி, தமிழ்ச் சூழலில் பலரும் "பொறுக்கி" என்ற பொருளில் (பதிலுக்கு) திட்டிட, வார்த்தைகளைத் தேடிப் "பொருக்கி'க் கொண்டிருப்பது தான்! 
சிதைந்த நற்சொற்களை "பொருக்கி" எடுப்போமா???

பதிந்தவர்: விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு
நாள்:         27.01.2017

வெள்ளி, ஜனவரி 20, 2017

முதல் முறையாய் ஒரு போராட்டம்

{2017 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி;
தமிழகம் முழுவதும் "ஏறு தழுவுதல்" சார்ந்து நடந்த போராட்டக் காட்சிகள்}

நானறிந்த வகையில்...
  1. முதல் முறையாய் ஒரு போராட்டம் - மனதுக்கு எந்த நெருடலையும் அளிக்காமல்; சரியாய்/முறையாய் நடத்தப்படுகிறது.
  2. முதல் முறையாய் ஒரு போராட்டம் - மக்களுக்காக, மக்களால் முன்னின்று நடத்தப்படுகிறது.
  3. முதல் முறையாய் ஒரு போராட்டம் - அரசியலை விலக்கி வைத்து நடத்தப்படுகிறது.
  4. முதல் முறையாய் ஒரு போராட்டம் - அரசியல்வாதிகளை விலக்கி வைத்து நடத்தப்படுகிறது.
  5. முதல் முறையாய் ஒரு போராட்டம் - எல்லா அரசியல் கட்சிகளையும் விலக்கி வைத்து - மக்களால் நடத்தப்படுகிறது.
  6. முதல் முறையாய் ஒரு போராட்டம் - மாணவர்களால்/இளைஞர்களால்/பொதுமக்களால்; எவ்விதமான அரசியல் சார்பும் இன்றி முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது.
  7. முதல் முறையாய் ஒரு போராட்டம் - "எந்தப் பிரிவினையும் இல்லாமல்" - ஒட்டுமொத்த இனத்திற்காய்; ஒட்டுமொத்த இனத்தால் - நடத்தப்படுகிறது.
  8. முதல் முறையாய் ஒரு போராட்டம் - எந்த சுயஇலாபமோ/சுயநலமோ இல்லாமல் நடத்தப்படுகிறது.
  9. "மிக முக்கியமாய்"... முதல் முறையாய் ஒரு போராட்டம் - "எந்த தலைமையும் இல்லாமல்/எந்த தலைமையையும் எதிர்பார்க்காமல்" எல்லோரையும் முதன்மைப்படுத்தி நடத்தப்படுகிறது.
  10. முதல் முறையாய் ஒரு போராட்டம் - "எல்லோரும் எதிர்பார்க்கும் மாற்றம் வந்தே தீரும்!" என்ற நம்பிக்கைப் பெருக்கி இருக்கிறது.
என் சார்பிலும் நடக்கும் இந்தப் போராட்டத்தில், கலந்துகொண்டு கலாச்சாரம் காக்கப் போராடும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் மதித்து, என் தலை வணங்குகிறேன்.

தொடரட்டும்! வளரட்டும்!!

புதன், செப்டம்பர் 14, 2016

வெங்காயச் சட்னியால் ஓர் பதிவு...


       "புலால் மறுத்தல்" அதிகாரத்திற்கான என் விளக்கவுரையை எழுதும்போது, அதற்கு தகுதி உடையவனாய் ஆக்கிக்கொள்ள; புலால் உண்பதை மறுத்துவிட்டதையம் ஒரு பதிவில் சொல்லி இருந்தேன். அதுமுதல், அப்பதிவில் வெளியிட்டிருந்த படத்தில் இருப்பது போல், பெரும்பாலும் என் உணவு "அவித்த காய்கறிகள்" தான். எவரேனும் விருந்தினர் வந்தால், மற்ற உணவுகளைச் சமைப்பது வழக்கம். நேற்று ஒரு விருந்தினர் வருவதாய் இருந்தது; எனவே வெங்காயச்-சட்னி அரைத்து; இட்லி சமைப்பதாய் ஒரு திட்டமிருந்தது. ஆனால், சூழல் காரணமாய் அந்த திட்டம் கைவிடப்பட்டது. சரி, வாங்கிவைத்த பொருட்களை என்ன செய்வது? சமைத்து தானே ஆகவேண்டும்? வெங்காயச் சட்னி அரைக்கும் முறைப் பற்றி எனக்கு ஓர் அறிவு இருப்பினும்; நான் இதுவரை செய்ததில்லை. சமைத்து பழக்கமில்லாத உணவைச் சமைக்க கூட, எனக்கு எந்த தயக்கமும் இருப்பதில்லை. அதற்கு காரணம்...

        "சமையல் எனும் கலை..." தலையங்கத்தில் குறிப்பிட்டது போல்; "என் சமையல் குருவான" என் தமக்கை.  எனக்கு மட்டுமல்ல; பலருக்கும் - அவரே சமையல் குரு. அவரிடம் என்னென்ன பொருட்கள் தேவை என்பதை உறுதிசெய்து கொண்டு நேற்றிரவு, வெங்காயச் சட்னியை அரைத்தேன். மேலிருக்கும் புகைப்படங்கள் அந்த நிகழ்வைத்தான் விளக்கமாய் காண்பிக்கின்றன. வெங்காயச்-சட்னிக்கு ஆலோசனை தேவையா? என்ற கேள்வி எழலாம். என் தமக்கையும், என்னம்மையும் செய்யும் வெங்காயச் சட்னிகள் - இருவகை அருமையான சுவை கொண்டவை. எல்லோரையும் போல், எனக்கும் பழக்கப்பட்ட சமையல் முறை மேல் ஓர் பிரியம். அதேபோல், இருக்க வேண்டுமென்று என் தமக்கையின் ஆலோசனைப்படி செய்தேன். சட்னியின் நிறத்தைப் பார்த்தவுடன் - சுவை அதேபோல் இருக்கும் என்ற நம்பிக்கை எழுந்தது; அந்த நம்பிக்கைப் பொய்க்கவில்லை. வெங்காயச் சட்னியோ/வெஜிடபிள் பிரியாணியோ...

நமக்கு பழக்கப்பட்ட சுவையும்; அதை நம்முள் விதைப்பவரும் - என்றுமே சிறப்புதான்!!!

வியாழன், செப்டம்பர் 08, 2016

ஈகைப் பெருநாள் விடுமுறையும் என் இயலாமையும்


            நாளை முதல் 9 நாட்களுக்கு தொடர் விடுமுறை. ஈகைப் பெருநாள் கொண்டாட்டத்திற்காக இங்கே கொடுக்கப்படும் விடுமுறை. 4 வருட அபுதாபி வாழ்க்கையில், ஈகைப் பெருநாள் கொண்டாட்டத்திற்காக கொடுக்கப்படும் 8-ஆவது ஈகைப் பெருநாள் விடுமுறையாகும் இது. இவற்றில் 5 முறை 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்திருக்கிறது. என்ன காரணமோ தெரியவில்லை! இதுவரை, ஒரு விடுமுறையில் கூட வெளியே பயணிக்க முடியவில்லை. 2013-ஆம் ஆண்டு - என் மகளின் பிறந்தநாளைக் கொண்டாட இந்திய சென்றுவிட்டு வந்த குறுகிய வாரத்தில் - முதல் ஈகைப் பெருநாள் விடுமுறைத் துவங்கியதால்; சரியாய் திட்டமிட்டு அதை உபயோகிக்க முடியவில்லை.  அந்த விடுமுறையின் போது, கத்தாரில் இருக்கும் என் தம்பியைக் காண திட்டமிட்டு பயணச்சீட்டும் வாங்கியிருந்தேன். ஆனால், பயணத்தை மேற்கொள்ள முடியாமல் விமான நிலையத்தில் இருந்து திரும்பிவரும் ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டது. 

     அம்முதல் அனுபவம் துவங்கி, ஏதேனும் ஒரு வகையில் ஈகைப் பெருநாள் விடுமுறையைப் பயன்படுத்த முடியாத சூழல் தொடர்கிறது. சென்ற சூலை மாதம் கிடைத்த 9 நாட்களில் கூட - இந்தியாவில் ஒரு முக்கிய வேலை இருந்தும் - பயணம் செய்ய முடியாத சூழல். இந்த முறையும் அவ்வாறே நிகழ்ந்திருக்கிறது. சிலருக்கு விடுப்பு இல்லை (அல்லது) பணப்பிரச்சனை போன்ற கரணங்கள் இருக்கும். அப்படி ஏதும் இல்லையெனினும், இதுவரை ஒரு பயணம் கூட சாத்தியப்படவில்லை. இதுவே, நான் இங்கிருக்கும் இருந்து ஆண்டாய் இருக்கும் என்பதால் - இனியும், இந்தப் பெருநாள் விடுமுறையில் பயணிக்கும் அனுபவம் வாய்க்காது. ஒருவேளை, இந்தக் கொண்டாட்ட காலத்தில் இந்த மண்ணில்தான் நான் இருக்கவேண்டும் என்ற நிபந்தனையோ என்னவோ?  விடுமுறையைக் கழிப்பதில் எனக்கு எந்த சிரமும் இருக்காது; என் சிந்தனைக்கும்/எழுத்துக்கும் - இந்த தொடர் விடுமுறை மியாகப்பெரிய வரம். இருப்பினும்...

பயணத்தில் விடுமுறையைக் கழிக்கமுடியவில்லை என்ற எண்ணம் மட்டும்...   

ஞாயிறு, ஜூலை 03, 2016

நவீனமும், பாரம்பரியமும்...


       மேலுள்ள புகைப்படம், சமீபத்திய "நீயா? நானா?" நிகழ்வின் போது எடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், இந்த சம்பவத்தைக் கண்டிருக்கக் கூடும். நவீன-மயமான இந்த தலைமுறை பெண்ணுக்கும்; பாரம்பரியத்தை மதிக்கும் சென்ற தலைமுறை ஆணுக்கும் இடையே "உரையாடலே இல்லாமல்" நடந்த ஒரு மெளன-நாடகம் அது. மிக சுவராஸ்யமான நாடகம் அது; இந்தப் பதிவு - எவரையும் குறை கூறவோ; அல்லது உயர்த்தி சொல்லவோ - முயற்சிப்பது அல்ல. மாறாய், அவர்களின் இயல்பை விவரிக்கும் ஒரு மனதங்கம். படத்தில் இருக்கும் அந்த பெண், மூன்றாவது சிறப்பு விருந்தினராய் - சிறிது நேரம் கழித்து வந்தார். அவருக்கு அந்த இருக்கையின் ஓரத்தில் தான் இடமிருந்தது; அந்த இருக்கையின் இடப்படக்கம் சிறிது இடமிருந்தும் - அந்த இரு ஆண்களும் தள்ளி உட்காரவில்லை! அது, அவர்களின் தவறும் அல்ல; ஏனெனில், அவர்கள் நிகழ்ச்சியோடு ஒன்றி  இருந்தனர். எனவே, அந்தப் பெண் இருந்த/கிடைத்த இடத்தில்...

     வெகு-இயல்போடு அமர்ந்தார்; அதே இயல்போடு, கால்மேல் கால் போட்டு அமர்ந்தார்! அருகிலிருந்த அந்த ஆணுக்கு ஏதோ ஒரு இயல்பற்ற உணர்வு - அது உடனடியாய் தெரிந்தது. அவர் அந்த பெண்ணின் காலை "பார்த்தும் பார்க்காதவாறு" பார்த்தார். ஆனால், அந்த பெண்ணிற்கு இதுபற்றிய எந்த உணர்வும் இல்லை - ஏனெனில், அவர் அமரும்போது அந்த ஆடவர்கள் இருந்த - அதே இயல்போடு அவரும் நிகழ்சசியோடு ஒன்றியிருந்தார். ஓரிரு நிமிடங்கள் கடந்தன - அந்த இடைவெளியில், அந்த ஆடவர் தன் "அசைவது தெரியாமல் அசைந்து" பார்த்தார். பின் ஒருவழியாக, எவரின் கவனத்தையும் சிதைக்காத வண்ணம் அவர் தள்ளி உட்கார்ந்துவிட்டார்; அவர் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது. இங்கே - எவரின் மேலும் தவறில்லை! என் வசதிக்கேற்ப அமர்வதே சிறந்தது - என்ற சிந்தனையில் ஒரு தலைமுறை; அடடே... இது எனக்கு பொருந்தாத விடயமாயிற்றே?! என்ற சிந்தனையில் ஒரு தலைமுறை. ஆனால், அவர்களில்... 

           எவரும் அடுத்தவர் - சுதந்திரத்தில் தலையிடவில்லை! ஆனால், இருவரும் தத்தம் இயல்போடு இருந்தனர். அடுத்த காட்சியில் - அந்த பெண் இரண்டு கால்களையும் கீழூன்றி அமர்ந்திருந்தார். இடையில் என்ன நடந்தது என்பது தெரியாது - அது அவசியமும் இல்லை. காலில் ஒருவித வலி வந்து - மீண்டும் தன் இயல்போடு கூட அந்தப் பெண் அப்படி அமர்ந்திருக்கலாம்! ஆனால், அதுவொரு சுவராஸ்யமான நாடகம் - எந்த வசனமும் இல்லாமல், எவரின் இயல்பும் கெடாமல் "நவீன தலைமுறைக்கும்; பாரம்பரிய தலைமுறைக்கும்" இடையே நடந்த அற்புதமான நாடகம். இப்படித்தான், தலைமுறை இடைவெளிகள் அணுகப்படவேண்டும். எனக்கும், இம்மாதிரியான உணர்வு உண்டு; எனக்கும், இம்மாதிரியான நிகழ்வுகள் நேர்ந்ததுண்டு - அடுத்தவரின் கால் என் மேல் பட்டுவிடுமோ (அப்படி பட்டால் தான் என்ன? என்ற உணர்வு அப்போது வருவதில்லை!) என்ற எண்ணத்தில் தள்ளி அமர்ந்திருக்கிறேன். ஆனால், ஒருபோதும் - பிறரிடம் என் இயலாமையைச் சொல்வதில்லை! சொன்னால்... என் இயலாமை அவருக்கு கடத்தப்படும். இம்மாதிரி...

தலைமுறை இடைவெளிக்குள் நடக்கும்; இயல்பான நிகழ்வுகள் - அற்புதமானவை!!!

சனி, ஜூன் 04, 2016

நம் தமிழ் படும் பாடு...



     "தமிழ்த் தாய்" என்று ஒரு அரசியல்வாதியை அவரது கட்சிக்காரர்கள் துதிபாடும் போது - எல்லோரையும் போல், ஒரு சாமான்யனாய் நானும் தலைகுனிந்து இருக்கிறேன். அந்த துதிபாடலைத் "தவறென" சுட்டிக்காட்டிய அந்தக் கட்சியின் "எதிர்கட்சிக்காரர்கள்" அவரது தலைவரை(யே) "தமிழ்" என்கின்றனர்! மற்றவர் குறையைச் சரியாய் கண்டறியும் இவர்களால், அவர்களின் குறையைக் கண்டறிய முடியாதது, எப்படி சாத்தியமாகிறது?! அவர் தமிழுக்காக ஆற்றிய அரும்பணியை மறுக்கும் எண்ணம் "துளியும்" எனக்கில்லை! ஆனால், அவரையே தமிழ் என்பது எப்படி முறையாகும்?! தமிழ்ப்பால் குடித்து, தமிழால் வளர்ந்த ஒருவரையே "தமிழ்" என்று சொல்லும்போது - இன்னொருவரை "தமிழ் தாய்" என்றால் ஏன் தவறு என்கின்றனர்? "தாய்" எனும் சொல் "தாய்மை" எனும் உணர்வு வெளிப்படும் எல்லா இடங்களிலும் பொருந்தும். அதனால் தான், ஒரு ஆண் "தாயும் ஆனவன்!" ஆகிறான். இந்த அடிப்படையில் பார்க்கும்போது...

       "தமிழ்" ஆகவே ஒருவர் ஆகும்போது; இன்னொருவர் "தமிழ் தாய்" ஆக ஆவதில் பெருத்த சிரமம் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை; தெரிந்தோர் சொல்லுங்கள்! இவர்கள் இருவருக்கும் - இவர்களைச் சார்ந்தவர்களுக்கும் இந்த அதிகாரத்தை எவர் கொடுப்பது? இப்படிச் சொல்பவர்களுக்கு பெருத்த ஆதாயம் இருக்கக்கூடும்! அதனால், அவர்களின் சுயத்தை அழித்துவிட்டு, இப்படிக் கூக்குரல் இடுவது எளிதாகலாம்! ஆனால், இதை ஏற்பவருக்கு சிறிதளவு கூடவா மனசாட்சி இருக்காது? குறிப்பாய், தமிழால் வளர்ந்து, தமிழுக்கு "சின்னஞ்சிறு" தொண்டு ஆற்றிய ஒருவருக்கு?! இவர்களே "தமிழ் தாய்" மற்றும் "தமிழ்" ஆகினால் - பழந்தமிழ் இலக்கியங்களைப் படைத்தவர்கள் எல்லாம் என்ன ஆவார்கள்? அதிலும், உலகப் பொதுமறையையே "நம் தமிழில்" படைத்த நம் பெருந்தகையை, எப்படி அழைப்பது? தமிழை வைத்து இவர்கள் செய்யும் அரசியலைக் கூடப் பொறுக்கலாம். ஆனால்...

இவர்களே - தமிழ் மற்றும் தமிழுக்கு தாய் - என்பதை அறவே அழிக்கவேண்டும்!!! 

வெஜிடபிள் பிரியாணியில் - பாகற்காய்



       திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதும் பணியின்போது "புலால் மறுத்தல்" அதிகாரம் எழுத ஆரம்பிக்கும் முன் - இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தியதை ஒரு பதிவாய் எழுதி இருந்தேன். அதைப் பலரும் படித்திருக்கக் கூடும். அதில் குறிப்பிட்டிருந்த வண்ணம், அன்று முதல் - அவித்த காய்கறிகள் தான் பெரும்பான்மையில், என் உணவாய் இருக்கிறது. இறையருளால், இன்றுவரை எந்த சிரமமும் இல்லாமல் - ஆரோக்கியமாகவே இருக்கிறேன். சமீபமாய், இடையிடையே - "காய்கறி"பிரியாணி போன்று (மீண்டும்)சமைக்கத் துவங்கி இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன், அதற்கான காய்கறிகளை வாங்க சென்றிருந்த போது "பாகற்காய்" கண்ணில் பட்டது. பாகற்காயை "வெஜிடபிள்"பிரியானில் எவரும் சமைத்து நான் பார்த்ததில்லை; எவரேனும் சமைத்து இருந்தால் சொல்லுங்கள். இருப்பினும், பாகற்காயைச் சேர்த்து சமைக்கலாம் என்று முடிவெடுத்தேன். 

    இதுமாதிரி, சில புதுமைகளை சமையலில் புகுத்தும் என் முயற்சியை முன்பே பதிந்து இருக்கிறேன். "பாகற்காய் குழைந்து விடுமோ?!" என்றோர் ஐயம். எனவே, அதை வறுத்து/வதைத்து - சமைக்கப்பட்ட பிரியாணியுடன் சேர்ப்பது என்று முடிவெடுத்தேன். அந்த வரிசைப்படி தான், மேலுள்ள புகைப்படங்கள் அமைந்துள்ளன. நான் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக அமையவில்லை. ஏனெனில், பாகற்காயின் சுவையும்/சாரும் - சோற்றுடன் சேரவில்லை! என்னுடைய சமையல் குரு - என் தமக்கைதான் என்பதை முன்பே குறிப்பிட்டு இருக்கிறேன். அவர் பல்வேறு வகை சமையலைச் செய்பவர்; அவர் இப்படி முயற்சித்தாரா?! என்று வினவவேண்டும். இதற்கிடையில், அடுத்த முறை - மற்ற காய்கறிகளை வதக்கிய பின் - அரிசியைப் போட்டபின், பாகற்காயை "வதக்காமல்" நேரடியாய் சேர்ப்பது என்று முடிவெடுத்துள்ளேன். நீங்கள் என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்?

உங்கள் அனுபவத்தைப் பகிருங்களேன்!   

சனி, ஏப்ரல் 16, 2016

இது மொழி வெறியல்ல! "மொழி உணர்வு"...



     தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஓர் விளம்பரம்; பலரும் பார்த்திருப்பீர்கள். அதில் வரும் உரையாடலைக் கவனியுங்கள்:

பேட்டி காண்பவர்: Sir உங்க mass of theme?
பேட்டி கொடுப்பவர்: Tough and Stylish.

      "உங்க" என்ற அந்த ஒற்றைச்சொல் தவிர, மற்ற எல்லா சொற்களும் ஆங்கிலம். அதைத் தொடர்ந்து பின்னணியில் சொல்லப்படும் வசனம் முழுக்க முழுக்க "ஆங்கிலச் சொற்கள்". நான் பல “ஆங்கிலம் தாய்மொழி அல்லாத” மேலை நாடுகளில் கவனித்து இருக்கிறேன். அவர்களின் எல்லா “வியாபார விளம்பரங்களும்” முழுக்க/முழுக்க அவர்களின் தாய்மொழியிலேயே இருக்கும். தவிர்க்கமுடியாத காரணத்தால், தாய்மொழியில் விளம்பரம் கொடுக்கமுடியவில்லை எனில்…

       தவறாமல், அவர்கள் மொழியில் கீழே “எழுத்து வடிவில்” மொழி பெயர்க்கப்படும்!

        ஏனோ... நிச்சயமாய், இது "தொலைக்காட்சி நிறுவனங்களின் தவறு மட்டும்" என்று நான் உணரவில்லை. நம் உணர்வுகளை/செயல்களைத் தான் அவர்கள் பிரதிபலிக்கிறார்கள் என்றே நம்புகிறேன். இதை நாம் எல்லோரும் ஒன்றுசேர்ந்து பழகினால் மட்டுமே மாற்ற முடியும்.

இது மொழி வெறியல்ல! இது "முழுக்க முழுக்க" மொழி உணர்வு!!

சனி, பிப்ரவரி 20, 2016

எவர் அறியாமை இது???



         ஒரு வாரத்திற்கு முன்னர், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்; 1 கோடி மதிப்பிலான "வைர கிரீடத்தை" காணிக்கையாக... 

இல்லையில்லை!!!

"பரிசாக" அளித்தாராம்!
  • "பரிசு" தொகையே இவ்வளவு என்றபின்; இவ்வளவு இலாபத்தை "கொள்முதல் மூலம்" அளித்தவர்களின் அறியாமை என்பதா?
  • தன்னை நம்பி "தொழிலை" ஊக்குவித்த மக்களின் வயிற்றில் அடித்து - இப்படி "பயனற்ற" பரிசை "கடவுளுக்கு" அளித்த அறியாமையை! எண்ணி வருந்துவதா??
  • குறைந்த விலையில் விற்று நுகர்வோரின் "மேன்மையான ஆசிகளை" நேரடியாய்/உடனடியாய் பெற்று இருக்கலாமே? என்று ஆதங்கப்படுவதா???
இல்லை...
  • எல்லாவற்றையும் "பொறுப்பதோடு மட்டும் " நிற்காமல் "பொறுப்பில்லாமல்" இந்த பரிசையும் ஏற்ற "கடவுளின் அறியாமையை" குற்றம் சொல்வதா????
அடப் போங்கய்யா!!!

திங்கள், அக்டோபர் 19, 2015

தும்மலில் ஓர் ஒழுக்கம்...



       மேலுள்ள வாசகத்தை நண்பனொருவன் வாட்ஸ்-ஆப்பில் பகிர்ந்தான். அதனைப்பாராட்டி விட்டு, நான் எனக்குள்ள புரிதலை கீழ்வருமாறு விளக்கினேன்: ஆம்! ஒருவர் தும்மும்போது அவரின் முகத்தை "கைகளால் மறைத்து" தும்மும் வழக்கத்தை, நான் முதன்முதலில் போர்ச்சுக்கல் நாட்டில் தான் பார்த்தேன். அந்த வழக்கம் எனக்கு பிடித்திருந்தது; ஏனெனில், நானோ அல்லது மற்றவரோ தும்மும்போது - தெறிக்கும் எச்சிலால் - முகம்-சுழிக்கப் படுவதைப் பார்த்திருக்கிறேன். எனவே, மற்றவருக்கு இடையூறாக இல்லாத வண்ணம் "வாய்/மூக்கு" போன்ற உறுப்புகளை மறைத்து தும்மும் வழக்கம் எனக்கு, ஓர் ஒழுக்காமாகத் தெரிந்தது. அன்று முதல் இந்தப் பழக்கத்தை நானும் தொடர்ந்து வருகிறேன் - இன்றுவரைக் கூட அப்படியே செய்கிறேன்.  

           அது போல், நம் தும்மலால் எழுந்த சத்தம் அல்லது நம் மறைப்பையும் மீறி அடுத்தவர்கள் மேல் எச்சில் ஏதேனும் தெறித்திருக்குமோ என்ற ஐயம் - இவை போன்றவற்றின் அடிப்படையில்; போர்ச்சுக்கல் நாட்டு மக்கள் - தம் அருகில் இருப்போரிடம் "மன்னிக்க!" என்று கோருவர்.  அதுவும், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையும், நான் இன்றுவரை கடைபிடித்து வருகிறேன். இதுதான், நான் அங்கே பகிர்ந்த என் புரிதல். எனவே, நான் தும்மும்போது சம்பந்தப்பட்ட உறுப்புகளை மூடிக்கொண்டு; தும்மிவிட்டு தன்னிச்சையாக "Sorry" என்று சொல்வதுண்டு. வேண்டுமானால், நான் அடுத்தமுறை தும்மும்போது - நீங்கள் அருகில் இருந்தால்; இதைச் சரிசெய்து பாருங்களேன்.  நல்ல விசயங்கள் எங்கிருந்து வந்தாலும்; ஏற்பது என் வழக்கம்! அப்போ நீங்க...?!

உங்களுக்கும் இது பிடித்திருந்தால்; இக்கணம் முதல், கடைபிடியுங்களேன்!!!

புதன், செப்டம்பர் 02, 2015

திரும"ண"மா? திரும"ன"மா??


திருப்பாலப்பந்தால் (TPL) மணியக்காரர் வம்சத்து இளைய மகன்-மருமகள்
{இடது: மணியக்காரர் தம்பதிகளுடன்}


         இன்று என் இளைய சித்தப்பா-சின்னம்மா அவர்களின் திருமன-நாள் என்பதை; எங்கள் வம்சத்து (TPL மணியக்காரர் வம்சம்) வாட்ஸ்-ஆப் குழுவில் அறிந்தேன். உடன், அவர்களுக்கு அங்கே வாழ்த்தை தெரிவித்தேன்.  வழக்கம் போல், எங்கள் குழுவின் தலைப்பு அவர்களுக்காய் தற்காலிகமாக மாற்றப்பட்டது. ஆனால், அது ஆங்கிலத்தில் இருந்ததால்; நான் "இளைய மகன்-மருமகள் திருமன நாள்" என்று மாற்றினேன். என் தம்பி (பெரிய சித்தப்பா மகன்) ஒருவன், அண்ணா! தலைப்பில் "ண" வரவேண்டும் அண்ணா! என்றான். நான் இல்லையடா! "ன" தான் வரவேண்டும்; திரும"ன"த்தில், இரண்டு மனங்கள் இணைவதால் அதை திரும"ன"ம் என்பதே சரி என்றேன். இருப்பினும் இணையத்தில் துழாவினேன்; இரண்டு விதத்திலும் இந்த நிகழ்வை எழுதும் வழக்கம் இருப்பதைப் பார்த்தேன். உடனே, என்னுள் ஒரு விளக்கம் பிறந்தது. இதனிடையே இன்னுமோர் தம்பியும் (மன-நாள் கொண்டாடுவோரின் மகன்) - இரண்டும் சரி அண்ணா! என்றான்.

      என்னுள் எழுந்த புரிதலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு. என்னளவில், திரும"ன"ம் என்று சொல்வதே சரியாகவும்/பொருத்தமாகவும் இருப்பதாய் பார்க்கிறேன்; இரண்டு வேறுபட்ட மனங்கள் ஒன்றாய் இணையும் நிகழ்வாதலால் - திரும"ன"ம் என்பதே சரியென்று எண்ணினேன். ஆனாலும், இல்லை! திரும"ண"ம் என்று சொன்னாலும்; மணம் (அதாவது) நறுமணம் என்று பொருள் கூட வருகிறதே?! இந்த நிகழ்வின் நடைபெறும் இடத்தில், பல்வேறு வகையான வாசனை கொண்ட பூக்கள் முதல்; சந்தனம், பன்னீர் என்று பலவிதமான நறுமணப் பொருட்களும் சங்கமித்து இருப்பது நம் அனைவர்க்கும் தெரிந்ததே. எனவே, இந்த பொருட்கள் எல்லாம் நிகழ்ச்சி நடைபெறும் அந்த இடத்தையே "மணம் மிக்கதாய்" மாற்றி அமைப்பதால்; அந்த நிகழ்வை திரும"ண"ம் என்று சொல்வது கூட பொருத்தமாய்த்தான் இருப்பதாய் தோன்றியது. இரண்டுமே சரியென்ற போதிலும்; என்னளவில், இந்நிகழ்வை இரண்டு மனங்கள்...

இணையும் நிகழ்வு என்ற பொருளில்; திரும"ன"ம் என்றே வரையறுக்க விரும்புகிறேன்!!!

வியாழன், ஆகஸ்ட் 27, 2015

அ"ற"வுரை...



      என்னப்பன் எப்போதும் அ"ற"வுரை என்றே கூறுவார். அவரிடம் இருந்து நானும் அதைக் கற்றுக்கொண்டேன்; நானும் அறவுரை என்று கூறுவதே வழக்கம். சென்ற வாரம் என் நண்பன் ஒருவன் நான் சொன்னவற்றை அ"றி"வுரை என்றெண்ணி; அப்படி சொல்லவேண்டாம் என்று சொன்னான். நானும் அது அறவுரை அல்ல! என்று பதிலளித்தேன். பின்னர், அவன் அறிவுரை என்கிறான்; நான் அறவுரை என்றேன் - இவற்றுள் என்ன வேறுபாடு? என்ற சிந்தனை  எழுந்தது. என்னப்பன் கூறுவதால்; நானும் அப்படியே பழகினேனேத் தவிர; அதுவரை அதன் உட்பொருள் என்னவென்று ஆராய்ந்ததில்லை. அப்போது இரண்டுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் எனக்கு புரிந்தது. அறிவுரை என்று சொல்லும்போது; அது ஒருவருக்கு அறிவு (அறியும் திறன்) குறைவாய் இருப்பது போலவும் - அதை சுட்டிக்காட்டி அறிவை விசாலமாக்க சொல்லப்படுவது - என்றும் பொருள் படக்கூடும். அந்த அடிப்படையில், எவரேனும் தம் தவறை...

     சுட்டிக்காட்டும் போதோ; அல்லது நமக்கு ஏதேனும் விளக்கும்போதோ ஒரு ஆற்றாமை வருகிறது; இது மனித இயல்பே! ஆனால், அறவுரை என்பது "அறத்தைச் சார்ந்த உரை" என்று பொருள். அதாவது, எது - சரியான/உண்மையான/நேர்மையான - அறம் என்பதை விளக்குவது என்ற  பொருள் வருகிறது. இங்கு எல்லோருக்கும் அறிவு சமமாய் தான் இருக்கிறது! நம் செயல்பாடுகள் அறத்தை தழுவி இருக்கிறதா?! என்பதே முக்கியம். அதனால் தான் "அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்" என்று; முதல் அதிகாரத்தில் {குறள் எண்: 0008} துவங்கி; ஆங்காங்கே "அறம்" என்ற வார்த்தையை நம் பெருந்தகை பயன்படுத்தினார் என்பதும்; அதனாலேயே ஒரு பிரிவையே அறத்துக்கென ஒதுக்கினார் என்பதும் புரிந்தது. என்னப்பன் என்னையோ அல்லது என் உடன்பிறப்புகளையோ "படி"யென்று திட்டியதேயில்லை. அறிவு இல்லாதவர்கள் என்று சொன்னதே இல்லை! அவர் சொல்லியதெல்லாம் "இந்த வயதில் படிப்பது உன் கடமை! நீ படித்தால்...

       நீ நன்றாக இருப்பாய்! உன் வாழ்க்கை நன்றாக இருக்கும்!" போன்ற சொற்றொடர்களே! படிப்பு வரவில்லை என்பதற்காக, எங்கள் எவரையும் அவர் கடிந்து கொண்டதே இல்லை. எங்கள் மூவருக்குள்ளும்; வெவ்வேறு அளவிலான படிப்புத்திறன் இருந்தும் - ஒருபோதும் அவர் எங்களை ஒப்பிட்டுப் பேசியதேயில்லை! ஆம்! அவருக்கு அறம் என்னவென்பது தெளிவாய் தெரியும். இன்றும் அப்படித்தான்; அவரின் தவறை நான் சுட்டிக்காட்டினாலும் ஏற்றுக்கொள்வார் - மன்னிப்பும் கோருவார்! அதன் வெளிப்பாடு தான் அவர் இன்றுவரை அறவுரை என்ற வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்துவதன் பின்புலன் என்று இப்போது விளங்குகிறது. இந்த புரிதலோடு என் பதிவுகளை/விமர்சனங்களை/வாதங்களை; நான் இதுவரை செய்ததில்லை! எனினும், ஒன்று மட்டும் நிச்சயம்: "மற்றவர்களுக்கு தெரியாது" என்ற ஆணவத்தில் நான் எதையுமே செய்ததில்லை; இது சத்தியம்! எனவே, இங்கே கூறியிருப்பவையும்; நான் முன்பு பதிந்தவைகளும் என்னுடைய...

அ"றி"வுரை அல்ல! அது அ"ற"வுரையைத் தவிர வேறொன்றும் இல்லை!!

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2015

அப்பா... நான் இதோட மூனு தடவ விஷ் பண்ணியிருக்கேன்!



   இரண்டு தினங்களுக்கு முன் என்மகள் "அப்பா! உங்க பர்த்டேக்கு புது டிரெஸ் வாங்கிட்டீங்களா?!" என்று கேட்டாள். இளவயதில் என்னப்பன் விசேடங்களுக்கு புதுத்துணி எடுத்து கொடுத்ததோடு சரி. அந்த வயதில் - தீபாவளி, பொங்கல் போன்ற விசேட காலங்களில் புதுத்துணி இல்லையென்றால் பெருத்த சோகம் சூழ்வது எல்லோருக்கும் இயல்புதான். ஆனால், என்னப்பன் எங்கள் மூவருக்கும் எந்த விசேடத்திற்கும் அப்படியொரு குறை வைத்ததில்லை. வளர்ந்த பின் அப்படியொரு எதிர்பார்ப்பும் இல்லை; அது தேவையாகவும் இருந்ததில்லை. அதன் பின்னர் விசேடத்திற்கென்று புதுத்துணி எடுப்பது ஒரு வழக்கமாகவும் இல்லை! ஆனால், என்னவளுக்கோ என்மகளுக்கோ விசேட காலம் மட்டுமல்ல; வழக்கமான நாட்களில் கூட புதுத்துணிகள் எடுத்துக் கொடுப்பேன். என்னவளும் "நீங்களும் எடுத்துக்கொள்ளுங்கள்" என்று பலமுறை கூறியும் நான் வாங்கிக் கொள்ளாததால்; பின், அப்படி சொல்வதையே நிறுத்திவிட்டாள்.

          இருப்பினும்... என் மகளின் 3-ஆவது பிறந்த நாளில் இருந்து அன்றைய தினத்தில் புதுத்துணி அணிவதை "கட்டாய" வழக்கமாய் கொண்டுள்ளேன். அதிலும், அவளின் 4-ஆவது பிறந்த நாளில் இருந்து, அந்த புதுத்துணியை சில மணி நேரங்கள் அணிந்து விட்டு; ஒரு மாத இடைவெளியில் வரும் என் பிறந்த நாளுக்கு அதையே-அணிவதை வழக்கமாய் கொண்டிருக்கிறேன். கடந்த மாதம் என்மகளின் பிறந்த நாளுக்காய்; என்னவள் வாங்கிக் கொடுத்த உடைதான் மேலுள்ள புகைப்படத்தில் உள்ளது. இதை சுருக்கமாய் என்மகளுக்கு பதிலாய் சொன்னேன்; அவளுக்கு என்ன புரிந்தது என்று தெரியவில்லை. ஆனால் "ஓஹோ" என்றாள். இம்முறை, இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே "ஹாப்பி பர்த்டே ப்பா!" என்று வாழ்த்திக் கொண்டு இருந்தாள். நானும் "த்தேங்க்ஸ் சொல்லிவிட்டு, இன்னைக்கு இல்லடின்னு" சொல்லி வந்தேன். பிறந்த நாளான இன்றும் வாழ்த்தினாள்; நானும் "த்தேங்க்ஸ் டி விழிக்குட்டி"ன்னு சொன்னேன். உடனே, அவள்...

       "அப்பா! நான் இதோட மூனு தடவ விஷ் பண்ணியிருக்கேன் என்றாள்". நான் ஒருகணம் சந்தோசத்தில் செயலற்று போனேன். இதுதான் குழந்தைகளின் உலகம்! ஒரே நாளில் 3 முறை வாழ்த்தக்கூடாது என்று நினைத்தாளோ? அல்லது பள்ளிக்கு சென்றுவிட்டால் அப்பனுக்கு 3 முறை வாழ்த்தமுடியாது என்று நினைத்தாளோ?? - அது அவளுக்கே தெரியும். ஆனால், தன்னப்பனுக்கு 3 முறை வாழ்த்து சொல்லவேண்டும் என்ற அந்த எண்ணம்! அந்த எண்ணத்தை, தன்னப்பன் "இன்னைக்கு இல்லடின்னு சொல்லி"யபோது கூட தெரிவிக்க-மறுத்த சாதுர்யம்! அட... அட... அட...! ஆம், இதுதான் குழந்தைகள் உலகம். அதனால் தான், குழந்தை வளர்ப்பில் சிறந்து விளங்கிட; குழந்தையாய் மாறுதல் வேண்டும் என்று முன்பொரு புதுக்கவிதையில் சொல்லி இருந்தேன். என்மகள் இப்படிக்கூட யோசிப்பாள் - என்பதைக்கூட யோசிக்கமுடியாதது என் இயலாமை. அதற்கு நான் அவள் தளத்தில் இருந்து யோசிப்பது அவசியமாகிறது. அதனால் தான்...

குழந்தைகள் உலகம் மிகவும் அழகாய் - வேறொரு தளத்தில் பயணிக்கிறது!!!          

திங்கள், ஆகஸ்ட் 10, 2015

மதிப்பிற்குரிய பெண்மணி - திருமதி. குஷ்பு


  
          ஆகஸ்ட் 8-ஆம் தேதி திருமதி. குஷ்பு அவர்கள் தந்தி டி.வி. யின் "கேள்விக்கென்ன பதில்" நிகழ்ச்சியில் பேசினார். தெளிவான/நாகரீகமான/நேர்மையான பேச்சு; அதிலும், நல்ல தமிழில் நேர்த்தியான பேச்சு. ஆங்காங்கே, ஆங்கிலம் வெளிப்பட்டாலும் - பொதுவில் பாராட்டும் விதமான அளவில் அவரது தமிழ் இருந்தது. பொதுவாய் இந்நிகழ்ச்சி அல்லது ஆயுத-எழுத்து நிகழ்ச்சியில் திரு. ரங்கராஜ் பாண்டே அல்லது திரு. ஹரிஹரன் - இருவரில் எவர் பேட்டி எடுப்பினும்; நமக்கே எரிச்சல் வரும் விதத்திலேயே பல-கேள்விகள் கேட்பர். அவற்றை மிகச்சரியான விதத்தில், நேரடியாய் பதில் அளித்தது மட்டுமல்ல! கேள்வியை கூர்ந்து கவனிக்கும் அவரின் பன்பும்; எந்த நேரத்திலும் மாறாத புன்னகையும் - மிகுந்த பாராட்டுக்கு உரியது. சில துளிகள்: 1. ஏன் "காங்கிரஸ்" ஆளும் மாநிலத்தின் விவசாயிகளை திரு. ராகுல் காந்தி சந்திக்கவில்லை? என்ற கேள்விக்கு திரு. ரங்கராஜை வறட்சிக்கு உள்ளான மாநிலங்கள் எவை என கேள்வி கேட்க... 

        திரு. பாண்டேயின் பதிலை வைத்தே அவர்களைத்தானே பார்க்கவேண்டும்; அதைத்தான் செய்தார் என்ற பதில். பேட்டி காண்போர் எதிர்காலத்தில் இப்படி நடக்குமா? அப்படி நடக்குமா?? எனக் கேட்பது வழக்கம். அதற்கு 2. You are thinking by fast-farwarding everything Mr. Pande என்றார்; "சபாஷ்" சொல்லவேண்டிய பதில்! 3. நீங்கள் தானே கட்சியின் செய்தி தொடர்பாளர்; உங்களிடம் தானே யூகங்கள் கேட்கப்பட வேண்டும் என்று கேட்ட போது; ஆம்! ஆனால், கட்சி மேலிடம் முடிவு எடுத்த பின்னர் தான் நான் சொல்லவேண்டும் என்ற விளக்கம். இப்படிப்பட்ட அறிவார்ந்த பதில்கள் ஆகட்டும்; அரசியல் நிகழ்வுகளின் பற்றய ஆழ்ந்த புரிதல் ஆகட்டும் - திருமதி. குஷ்பு பாராட்டுக்குரியவர். என் போலவே... சிலர் குஷ்புவின் இந்த பேட்டியைப் பாராட்டி இருப்பதை முக-நூலில் காண முடிந்தது. ஆனால், வழக்கம் போல் சில பதிவர்கள் அவரைப் பற்றி கீழ்த்தரமாய் கருத்து தெரிவித்திருந்தனர். அப்படிப்பட்ட பதிவுகளில், பலரும்... 

        "தே--யா!" என்று சொல்லி அவரைத் தூற்றுவதைப் பார்த்தபோது செய்வதறியா கோபம் எழுந்தது. அதே கோபத்தில் ஏதாவது எழுதவேண்டும் என்று எண்ணி... நானும் அத்தவறை செய்யவேண்டாம் என்று நகர்ந்து விட்டேன். பொதுவாழ்வில் உள்ளவரை விமர்சிக்கும் உரிமை நமக்கு இருப்பதை நான் மறுக்கவில்லை! ஆனால், எந்த நிலையிலும் நாகரிகம் இழந்து; ஒருவரைத் தனிப்பட்ட முறையில் தூற்றுதல் பெருந்தவறு, அதற்கு எவருக்கும் உரிமையில்லை! இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆங்கே, திருமணத்திற்கு முன் உடலுறவு பற்றிய கேள்விக்கான அவரின் பதிலையும் சிலர் குறிப்பிட்டு பேசியிருந்தனர். அதை ஒரு நிருபர் ஒரு பெண்மணியிடம் கேட்டது தவறென்றோ/அநாகரீகமென்றோ எவரும் யோசிக்கவில்லை; ஆனால், அதற்கும் துணிச்சலாய் பதில் சொன்ன ஒரு பெண்மணியைத் "கீழ்த்தரமான" வார்த்தைகள் கொண்டு தூற்றுகின்றனர். இதைக் கூட நான் முன்பே எழுதி இருக்கிறேன். எவர் எப்படி சொன்னாலும்...

என்னளவில் - திருமதி. குஷ்பு அவர்கள் "மதிப்பிற்குரிய பெண்மணி"!!!

பின்குறிப்பு: இந்த பேட்டியின் பிரதி "யூ-டியூபில்" இருப்பதாய் சில பதிவுகள் குறிப்பிடுகின்றன. விருப்பமும்/நேரமும் இருப்போர் ஒருமுறை அந்த பேட்டியைக் காணுங்கள்.

திங்கள், ஆகஸ்ட் 03, 2015

மேலும் எத்தனை ஆண்டுகள் வேண்டும்???


          கண்டிப்பாக நாம் எல்லோரும் "பல்லாண்டுகள் வாழ்க!" என்று பிறருக்கு சொல்லியிருப்போம்; அல்லது பிறர் நமக்கு சொல்ல கேட்டிருப்போம். இன்று (ஆகஸ்ட் 3) என்னவளுக்கு பிறந்த நாள் என்பதால் "பல்லாண்டுகள் வாழ்க" என்று வாழ்த்தினேன். பின்னர்... "பல்லாண்டுகள்" என்றால், சரியாய் எத்தனை ஆண்டுகள் என்றொரு கேள்வி என்னுள் எழுந்தது. "சாகாமல்" எப்போதும் இருக்கவேண்டும் என்று எடுத்துக்கொள்ளலாமா? இல்லை... சாகாவரம் போல் ஒரு சோகம் இருக்கமுடியாது. சரி, 5/10 ஆண்டுகள் என்று கொள்ளலாமா? மீண்டும் இல்லை... எந்த வயதினர் ஆயினும் அது மிகக்குறைந்த எண்ணிக்கையை படும். இருப்பின், எத்தனை ஆண்டுகள் சரியாகும்? என்று யோசிச்சபோது என்னவளைப் பொருத்தவரை ஒன்று புரிந்தது. 
       
        ஆம், மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால், என்னவளைப் பொருத்தவரை, அவளின் ஒழுக்கம் மற்றும் வைராக்கியத்தின் அடிப்படையில் பின்வருமாறு வாழ்த்தினேன். எம்மகள் "அம்மா! போதுமம்மா. இதுநாள் வரை வாழ்ந்தது போதும். இத்தனை துன்பப்பட்டு என்னைப் பார்த்துக்கொள்ள கடினைப்படுவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது!" என்று சொல்லும் நாள் வரையிலாவது வாழவேண்டும் என்று வாழ்த்தினேன். ஆம், என்னவள் குறைந்தது "அத்தனை ஆண்டுகள்" ஆவது மீண்டும் மீண்டும் இந்த பொன்னாளை கண்டிடவேண்டும். நேரடியாக இல்லை எனினும், நம் மனதிற்குள்ளாவது, இனி மற்றவரை வாழ்த்தும்போது எத்தனை ஆண்டுகள் வேண்டும் என்பதை நினைத்துக்கொள்வோம்.  


எனவே, எத்தனை ஆண்டுகள் என்பதில் கவனமாய் இருப்போம்!!!