என்னப்பன் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என்னப்பன் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 28, 2017

வளர்க! வாழ்க!

{என்னப்பனின் கவிதை}

“யாதும்ஊர் யாவரும்நம் கேளீர்” என்னும்
     ஏகாந்த தத்துவத்தின் உண்மை எங்கே?
சேதமின்றி உரிமைநலன் காப்போம்! நாமும்
     சேர்ந்துழைப்போம்! மற்றவர்கள் உயர்வை வேண்டி
பேதங்கள் இங்கேஏன் எழுதல் வேண்டும்?
     பேய்முகங்கள் நமக்கொன்றும் சொந்தம் இல்லை!
வாதங்கள் செய்திங்கே வெற்றி காண்போம்!
     வளர்ச்சியினை நாம்பெறுவோம்! வளர்வோம்! வாழ்வோம்!

சாதிமத பேதமின்றி இந்தி யத்தின்
     சிறப்பொன்றே நம்மிதய வேள்வி என்ற
போதிமர புத்தனைப்போல்! வள்ளுவன் போல்!
     பொதுமைமன முகமதுபோல்! இயேசு வைப்போல்
சோதிமனம் கொண்டிங்கே மக்கள் வாழ்வில்
     சுந்தரனாய்! சுகபோகம் தவிர்க்கும் வண்ணம்
மோதிரமாய் நம்உடம்பைச் சூழ்தல் வேண்டும்!
     முழுமனதும் உலகநலம் கொள்ளல் நன்றாம்!

ஆண்டாண்டு காலமென அரசின் திட்டம்
     அத்தனையும் வீணாச்சு; ஏழ்மை வெள்ளம்!
கண்டபடி பாய்கிறது; படித்தோர் எல்லாம்
     கணக்கின்றி அலைகின்றார்! சமுதா யப்போர்!
மண்டியதால் நக்சலைட்நோய் பரவிப் போச்சு!
     மனம்வளர்த்த பெரியீரே! மக்கள் வாழ்வில்
கொண்டாட்டம் போடுகின்ற வகையில் நாமும்
     கூடிடுவோம்! ஓர்முடிவு காண்போம்! வெல்வோம்!

“பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்”; பின்னர் ஏனோ?
     பெருக்கெடுக்கும் கலவரங்கள்? சட்டம் தன்னால்
சிறக்கின்ற பணமுதலை அழிப்போம்! யார்க்கும்
     சீரான கல்விதனைக் கொடுப்போம்! இங்கே
உறக்கத்தில் சிரிக்கின்ற அதிகா ரத்தின்
     உரிமைதனை மாற்றிடுவோம்! உலகம் வாழ
திறமையுடன் உழைத்திடுவோம்! மேன்மை; செல்வம்
     தினம்பெறுவோம்! வெற்றிப்பண் பாடி வாழ்வோம்!

யார்என்ன ஆனாலும் எங்கள் உள்ளம்
     எப்போதும் கலங்காது; பிறரை வீழ்த்தல்
போர்முறையே தீவிரம்தான்; எண்ணம், மூச்சு
     பொதுவுடைமை என்பதெல்லாம் போயே போச்சு!
வேரறுக்கும் குறுக்குவழி, பொய்மை வெள்ளம்
     விளைநிலத்தில் எலிவளையாய்! வேண்டு மட்டும்
பேர்கெட்டுப் போனதனால் என்ன லாபம்?
     பொன்மனத்தின் பெரியோரே! உண்மை காண்பீர்!

ஆண்டுபல அரசியலார் போட்ட திட்டம்
     அணுவளவும் மக்களிடம் செல்லக் காணோம்!
நீண்டபல நாட்களிலும் முதலைப் பேய்கள்!
     நீள்வசதி பெற்றுயர்ந்தார்! எனினும் இந்நாள்
வேண்டுமட்டும் கல்விகற்ற பெரியீர்! இங்கே
     வேதவழி அறிஞர்பலர் நிறைந்த போதும்!
தீண்டாத உள்ளமுடன் மழையும் இந்த
     திருநாட்டில் பொய்த்ததுஏன்? சொல்வீர்! இன்றே!

வந்தாரை வாழவைக்கும் பெம்மா னாக
     வளர்த்த வகை போகட்டும்! இனியும் நாட்டோர்;
சிந்தனையை ஒன்றாக்கி சிறப்பாய் ஏற்றம்!
     சிலையாக வடித்திடுவோம்! நமைஎ திர்க்கும்
அந்நியரை விரட்டிடுவோம்! நமது மானம்
     அழியாமல் காத்திடுவோம்! உலகில் யார்க்கும்
இந்தியர்கள் இளைத்தவர்கள் இல்லை என்றே
     இமயத்தில் அறைகூவல் விடுப்போம்! வாரீர்!

தேன்மணக்கும் திருவிடத்தீர்! தெளிந்த ஞானம்
     தேர்ந்திட்ட மனவளத்தீர்! உண்மை பேசும்
மான்பார்வை இளைஞர்களே! நமது நாட்டில்
     மானமிகு அப்துல்கலாம் எண்ணம் ஏற்று
ஏன்நாமும் வல்லரசாய் கூடா தா?என்
     ஏக்கத்தை உடன்களைந்து இந்தி யத்தாய்
கூன்மனத்தில் மகிழ்ச்சிதனைப் பெறவே! சிங்க
     “கர்ஜனையாய்” கிளர்ந்தெழுக! வளர்க! வாழ்க!    

{புலவர். இளமுருகு அண்ணாமலை}

வெள்ளி, பிப்ரவரி 24, 2017

காண்போம் வாரீர்!


ஐந்தெழுத்தன்; ஆறுமுகன்; பெருமாள்; போற்றி
     ஆறுகால பூசைவிழா எடுத்த போதும்!
வந்ததுவா வான்மழையும்? பலனும் உண்டோ?
     வாயுலர மந்திரங்கள் "செ"பித்த நல்லோர்;
வெந்துமனம் வீழ்கின்றார்; விளைச்சல் நாட்டில்
     வெலவெலத்துப் போயிற்று; மக்கள் கண்ணீர்
சிந்துகின்றார்; காரணம்என்? பக்தி எல்லாம்
     சுயநலமே! பொதுமையில்லை! உண்மை காணீர்!

வாழ்க்கைத் துணைதேடு கின்ற செயலா;
     வரதட்சணை உயர்ந்துள்ளது; அறிவைத் தேடும்
தாழ்வில்லா கல்வியகம் தன்னில் காசு
     தளர்வின்றி தருவார்க்கே இடமாம்! பின்னர்
வீழ்ந்திடுமா வேலையதும்? கையூட் டின்றி;
     விழிபிதுங்க அனைவருமே வெதும்பிச் சாக
பாழ்பட்டுப் போனதுவே! குமுகா யத்தின்
     பற்பலவும் மாய்ந்தொழிந்தால்; வாழ்க்கை எங்கே?

நாடிங்கே உரிமைதனைப் பெற்று இந்நாள்
     நாலைந்து ஆண்டுடனே ஐந்து பத்தும்
ஓடியதும் மறைந்ததுவே! அரசின் திட்டம்
     ஓர்நாளும் மக்களிடம் சேரக் காணோம்!
பாடிவைத்தார் பாரதியும் தாசன் தானும்
     பயன்உண்டோ? சமுதாயப் பார்வை தன்னில்
கூடியதா ஒருமைமனப் பார்வை? எங்கும்
     குலைந்ததுவே பண்பாடு! பயன்தான் என்ன?  

நமக்குள்ளே பிரிவினைகள் இருந்த தாலே
     நாம்அடிமை அன்றானோம்! காந்தி போன்றோர்
தம்முடைய தியாகத்தால் வாழ்வில் மீண்டும்
     தன்னுணர்வு வரப்பெற்றோம்! சுதந்தி ரத்தால்
“தும்”முவதும் “இரு”முவதும் பொதுமை அன்றோ?
     துடிப்பதுவும் கண்ணியற்கை; என்ப தெல்லாம்
நிம்மதியாய் மறந்ததனால்; மீண்டும் தொல்லை
     நிகழாமல் காத்திடவே; எழுவோம்! வாரீர்!

“வான்சிறப்பு” தந்ததிரு வள்ளு வத்தின்
     வார்த்தையினை இன்றுணர்ந்த நாட்டோர்; இங்கே
வீணாகா நிலைதனிலே நிலத்தில் நீரை
     வேண்டுமட்டும் சேகரிப்போம்! நதிகள் தம்மை
தான்இணைத்தால் இந்தியத்தின் நிலங்கள் யாவும்
     தானியங்கள் பலவிளையும் பூமி ஆகும்!
“கான்”வளரும்; “கவின்”மலரும்; கவலை போகும்
     காதலுடன் இந்தியத்தாய் வளர்வாள்! வாழ்வாள்!

அளப்பரிய இலக்கியங்கள்; ஆன்றோர் வேதம்;
     அத்தனையும் சொல்லியசொல் மறந்து; நாட்டோர்
திளைக்கின்றார் மகிழ்ச்சியினில்; பொதுந லந்தான்
     திசைமாறிப் போனதுவோ? இலஞ்சப் பேய்கள்
விளைக்கின்ற தீமையினால்; நாடே பாழாம்!
     விபத்துதனைத் தடுப்பதுவே அறிவின் மாட்சி!
களைத்துவிட்ட இளைஞர்களே! எழுக! உங்கள்
     கருத்துவளம் பெருகட்டும்! வெல்க நாடு!

எங்கெங்கும் கொலைகொள்ளை; வறுமை; காமம்
     எழுப்புகின்ற அவக்கூச்சல்; பெண்மை காக்க
இங்கெழுந்த சட்டங்கள் எல்லாம்; இந்நாள்
     இருக்கிறதா இந்நாட்டில்? என்னும் கேள்வி
தங்குதடை இல்லாமல் எழுதல் காண்பீர்!
     தவப்பெருமை இளைஞர்களே! கார ணத்தை
சங்கெடுத்து முழங்கிடுவீர்! நமக்குள் நாமே
     சத்தியத்தை மனம்கொள்வோம்! வெல்வோம்! வாழ்வோம்!

இந்தியத்தாய் பெற்றமக்கள் எல்லாம், இங்கே
     இனத்தாலும் மொழியாலும் பிரிந்த போதும்!
சொந்தமுடன் நாம்இணைந்து பேத மின்றி
     சுகம்தன்னைப் பெற்றிடுவோம்! எதிலும் எங்கும்
எந்திரமாய் ஒருமையுடன் நாம்உ ழைப்போம்!
     எல்லாமும் எப்படியும் பெறுவோம்! நம்மின்
சிந்தனையை உயர்த்திடுவோம்! வலிமை பெற்ற
     சிறப்பான பாரதத்தை காண்போம்! வாரீர்!

{புலவர். இளமுருகு அண்ணாமலை}

செவ்வாய், ஜனவரி 24, 2017

காளைப் பிரச்சனையும்; காளையர் எழுச்சியும்...


காடுறையும் விலங்குகளை மக்கள் முன்பு
     காட்டிஅதன் காட்சியினில் வருவாய் ஈட்டும்
பீடுநிறை செயல்தன்னால் உரிமை மாளும்
     பொய்மைமிகு எண்ணத்தால் "ஆர்வ லர்கள்"
தேடிட்டார் தடைச்சட்டம்; அதனால் மூன்று
     தேய்ந்திட்ட ஆண்டுகளில் தமிழர் வீரம்
மாடுபுகழ் "ஜல்லிக்கட்டு" காட்சி மாய்த்தார்!
     முடிந்ததெனில் நடத்துவீர்என கூவல் விட்டார்!

ஐங்கரத்தன் ஆனைமுகன் தெய்வம் தானே!
     ஆனாலும் மனத்தில்ஒரு கலக்கம் இன்றி
இங்கிருக்கும் பாகனவன் யானை தன்னை;
     இருமாப்பாய் நடத்திஅதை தெருக்கள் தோறும்
பங்கமதை இழைக்கின்றான்; பிச்சை தானும்
     பசியுடனே எடுக்கின்ற காட்சி தன்னால்
அங்கத்தை வருத்திஅதன் உரிமை போக்கும்
     அசிங்கத்தை யார்உணர்ந்து தடுப்பார்? கேளீர்!

உரத்தகுரல் எழுப்பிடுவேன்; பலரும் நாட்டில்
     உரிமையுடன் தன்னலத்திற் கென்றே நாளும்
பரந்திட்ட எண்ணமுடன் பண்பில் லாமல்
     பழக்கமென தன்வாழ்வில்; மனதில் ஈவு
இரக்கமின்றி ஆடுமாடு பறவை கோழி
     இரையாக்கும் வன்மனத்தீர்! வதைத்தல் ஏனோ?
சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்! உண்மை சொல்வீர்!
     செவ்வியநல் திறமாமோ? பதில்தான் என்ன?

தொடர்ந்துவரும் நாட்களிலே தொல்லை இன்றி
     தூர்வாறும் அரசியலார்; "பீட்டா" போன்ற
இடர்கூட்டும் தொல்லைகள் தொடரா வண்ணம்
     இனக்கவலை தீரட்டும்;  இதுபோல் நாட்டில்
படர்கின்ற பெருந்துன்பம் ஏது மின்றி
     பரவலென ஆட்சிநலம் பெறுதல் வேண்டும்!
சுடர்நாளும் மக்கள்மனம் ஆளும் போக்கால்
     சொந்தமென அனைவருமே சண்டை மாய்ப்போம்!

கற்புநிறை மனத்துடனே உணவுச் சாலை
     கண்டதிரு வள்ளலார் வழியில் செல்வோம்!
எண்ணத்தின் தூய்மைதனில்; உண்மை! நேர்மை!
     எழுவதனால் மாந்தருக்குள் மாண்பு கூடும்!
உண்மையுடன் நான்சொல்வேன்; உறுதி அந்த
     உயர்வாக்கும் புகழுலகம் ஒளிரும்! வாழும்!
கண்ணியத்தில் கடமையுடன் கவிதை சேர்ப்போம்!
     கட்டுப்பா டாய்இணைந்து உரிமை காப்போம்!

எந்தஒரு தூண்டுதலும் இன்றி, இந்நாள்
     எப்படித்தான் நடக்கிறதோ! கட்டுக் கோப்பாய்;
சொந்தமென மனத்திருத்தி மாண வர்கள்
     சுடர்விட்டார் உரிமையுடன்! கட்டுக் கோப்பாய்
இந்நிலத்தில் இருமூன்று நாட்க ளாக
     இளைஞருடன் சிறுவர்களும் தாயும் ஒன்றாய்!
வந்திங்கே ஆயிரமாய் கூடி நின்றார்!
     வார்த்தையிலை; பாராட்டு கூற என்னால்!

ஆயிரத்து தொள்ளாயிரத் தறுபத் தைந்தில்
     ஆர்வமுடன் இந்தியினை எதிர்த்த போரில்
உயிரழந்தோர் ஏராளம்! பள்ளிக் கூடம்
     உருப்படியாய் நாற்பத்தைந் துநாட்கள் மூடி
தயிராக உரைந்துவிட்ட நாளில் அன்று
     தளமாக தூண்டுதலால் வெற்றி கண்டார்!
பயிராகும் இளைஞரின்று தானாய் கூடி
     பண்பழிய கண்ணியத்தால் வாழ்ந்து நின்றார்!

இந்நாளில் அரசியலார் "ஜல்லிக் கட்டு"
     இனிதாக நடப்பதற்கு சட்டம் போட்டார்!
எந்நாளும் இதைஏலோம்! "பீட்டா" என்னும்
     எதிரிக்கு தடைபோட வேண்டும்! எங்கள்
சொந்தத்தை காத்திடவும் சூளு ரைப்போம்!
     சுரண்டவந்த அந்நியரின் வழிஅ டைப்போம்!
எந்தஒரு கருத்துக்கும் இடம்இங் கில்லை
     எல்லார்க்கும் மதிப்பளிப்போம்! இதயம் கொள்வீர்!

இன்றிருக்கும் சூழ்நிலையே வளர வேண்டும்!
     இனிமையுடன் இளைஞர்களின் எண்ணம் சூழல்
குன்றொளிரக் காட்டிடவே; அறிஞர், நல்லோர்!
     குறையாமல் அறம்கூறி வளர்த்தல் வேண்டும்
அன்றந்த காந்திகண்ட "அகிம்சை" முற்றும்
     அழியாமல் மடைமாற்றம் செய்தலே நாட்டில்
குன்றாமல் வெளிநாட்டின் ஆதிக் கத்தை
     குறைத்திடலாம்! தாயகத்தை காப்போம்! வாரீர்!

இன்றிந்த இளைஞருடன் மாண வர்கள்
     இணைந்து வெற்றிபெற்ற செய்கை; அந்நாள்
குன்றமர்ந்த தகப்பனுக்குச் சாமி யான
     குமிழ்சிரிப்பின் முருகன்அவன் அருளோ? அன்றி
"அன்னையிடம் பாலுண்டு" பண்பாய் வாழும்
     "அறிவாலே" விளைந்ததுவோ? எதுவா னாலும்
நின்றொளிரக் காத்திடுவோம்! புகழும் நீண்டு
     நிலைத்திடவே வாழ்த்திடுவோம்! மானம் காப்போம்!

அழிந்தொழிந்த தமிழர்தம் பண்பு; மாண்பு
     அகழ்ந்தெடுக்கும் வாய்ப்புத்தான் இந்த நேரம்
விழித்திட்ட இளைஞர்களின் எழுச்சி தன்னால்
     விலைபோகா ஒருவழியைக் காண்போம்! நம்மில்
இழந்திட்ட புகழ்பாதை காத்தல் நன்றாம்!
     இதுவன்றோ "நல்லநேரம்" நாமும் திட்டம்
செழிப்புடனே தீட்டிடுவோம்! "காம ராசர்!"
     செதுக்கிட்ட பாதையிலே நடத்தல் செய்வோம்!

என்னுடைய இதயத்தில் உறுதி ஆக
     எழிலிடத்தைப் பெற்றிருக்கும் வெற்றி வாகை;
புன்முறுவல் முகத்துடன் கூடி நிற்கும்;
     புதுமைமிகு இளைஞர்களே! முதிர்ந்த நெல்லும்
இன்முகத்தில் வளைந்திடுதல் போல; நீங்கள்
     இதயத்தில் ஏற்றிடுவீர்! முதல்வர் மற்றும்
குன்றொளிரும் பிரதமரும் கொடுக்கும் அந்த
     குணம்நிறைந்த வாக்குறுதி ஏற்றல் நன்றாம்!

"மெரினா"வில் மட்டுமன்று; திருச்சி சேலம்
     மதுரையுடன் மாடுபுகழ் "அலங்கா நல்லூர்"
உரிமையுடன் "ஜல்லிக்கட்டு" நடக்க வில்லை
     உறுதியான உள்ளத்தில் மறுத்து விட்டார்!
செரிந்திட்ட நல்மனத்தில் அரசு இந்நாள்
     சிதறாமல் சட்டத்தை கொடுத்த போதும்
புரியாத புதிரல்ல; நிலையாய் "சட்டம்"
     போடும்வரை ஒய்வில்லை; தொடர்ந்தார் போரை;

இதையேநாம் முதலாய்க் கொள்வோம்! நம்மின்
     இதயத்தின் மகிழ்ச்சிஒலி நிலைத்து நாளும்
சிதையாமல் தமிழகத்தின் வாழ்வு காப்போம்!
     சிறிதளவும் சிதறாமல் சிறப்பு சேர்ப்போம்!
கதையாக இதையாக்கல் வேண்டாம்; போற்றும்
     கவிதையினில் வரலாறாய் போற்றிக் காத்து;
விதையாக "புறத்தோடு" "அகமும்" கூறும்
     விதியாக்கி நூல்படைப்போம்; புனிதம் வாழும்!

எனக்கெந்தன் தந்தைவைத்த பெயரை மாற்றி
     இளமுருகுவாய் வலம்வந்தேன்; தமிழுக் காக
அன்றெனக்கு மொழிப்போர்தான் தூண்டு கோலம்!
     அதுபோன்ற நிலைஎதுவும் இன்றில் லாமல்
தன்மனத்தில் அனைவருக்கும் இனிதாய் தோன்றி
     தழைத்திட்ட ஆலமர விழுதாய் வாழும்
என்றிந்நாள் உணர்வதனால்; இனிதாய் சொல்வேன்
     இனிநம்மின் நாட்டினிலே நேயம் வாழும்!

{புலவர். இளமுருகு அண்ணாமலை}

வியாழன், ஜனவரி 19, 2017

மனிதம் காப்போம்!

{என்னப்பனைத் தொடர்ந்து வற்புறுத்தியதன் விளைவாய்... 
"77 வயதில்" பல ஆண்டுகளுக்குப் பின் 
மீண்டும் எழுத ஆரம்பித்து இருக்கிறார். 
இரண்டு நாட்களுக்கு முன் அவரெழுதிய படைப்பு கீழே}
*******

கவிபாட புதுவையினில் "கவிஞர் தாகூர்"
      கல்லூரி முகப்பினிலே நின்று; நானும்
புவிவாழ்த்தப் பிறந்தகவி, அறிஞர் தம்மை
      பெருமையுடன் மனத்திருத்தி, புகழின் மேன்மை
செவிநிறையச் செய்யவேண்டும் என்றே! எந்தன்
      சிந்தனையில் தமிழ்வாழ்த்தி; சிறப்பு கூறும்
தவவாழ்வுப் பெரியோரின் வழியில் செல்வேன்!
      தமிழே!நீ என்வழியில் பயணம் செய்வாய்!

செந்தமிழே! உன்னால்தான் பெருமை பெற்றேன்!
      செங்கரும்பின் சாறெனவே இனிதாய் வாழ்ந்தேன்!
இந்நிலத்தில் ஒருமொழிதான் உன்போல் உண்டோ?
      இதுஉண்மை; "கால்டுவெல்" "மு.வ." போன்றோர்
விந்தையுடன் எடுத்துரைத்தார்! நாமும் நம்மின்
      விருப்பத்தை வெளிக்கொணர வேண்டும்; போற்றும்
சிந்தையினில் இனியேனும் உறுதி ஏற்போம்!
      சிறப்புடனே தமிழகத்தை வாழச் செய்வோம்!

"தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செய்தல் வேண்டும்!"
      தெளிவாக பாரதியார் சொன்ன தாலே;
உருவான தமிழ்ப்பலகை புதுவை மண்ணில்,
       உயிரோடு மணக்கிறது! எனினும் நம்மின்
ஒருமையிலா உள்ளத்தால்; தமிழ கத்தில்
       உருப்படியாய் அதுபோன்ற வாய்ப்பே காணோம்!
பெருமையுடன் தமிழர்களே ஆண்ட போதும்;
       பெயரளவும் தமிழ்ப்பண்பே மலர வில்லை!

எங்கெங்கு காணினும் பொய்மை வீசும்!
      யாரிடத்தும் மனத்திரையில் உண்மை இல்லை;
பொங்கிவரும் அன்பினிலே ஒளியைக் காணோம்!
      பொறுப்பற்ற பெரும்போக்கு மலர்தல் காண்பீர்!
பங்கம்தான் விளைந்திடுமோ தமிழர் வாழ்வில்?
      பதைத்தெந்தன் மனஓலம் பலமாய் இங்கே
சங்கொலியாய் கேட்கலையோ? காத்தல் யாரோ?
      சத்தியமாய் வேண்டுகிறேன்; மனப்புண் போமோ?

நான்எழுதும் கவிதையினால் நாட்டில் என்ன
     நலம்விளையப் போகிறது? மழையும் இந்நாள்
வான்மணக்க வரவில்லை! புயலால் வீணே
     வளர்மரத்தைச் சாய்த்ததுதான் மிச்சம்! பஞ்சம்
தானாக படிப்படியாய் பெருகி நாளை
     தமிழகத்தை தாக்கவும் கூடும்! இன்றே
மானத்தைக் காப்பதற்கு விரைவாய் நாமும்
     மாற்றுவழி சிந்திப்போம்! வாரீர்! காண்போம்!

தருமத்தை சூதழித்தால் மீண்டும் வெற்றி
     தவறாமல் பாரதியும் கிடைக்கும் என்றார்!
கருமத்தை எண்ணிடுவோம்! விரைந்து நாட்டில்
     கணக்கின்றி புதியவழி காண்போம்! நாளை
உருவாக்கும் அணைகளிலே நீரைச் சேர்ப்போம்!
     உருப்படியாய் திட்டமிட்டு பயிர்தான் காப்போம்!
திருவளர்க்கும் தலைவர்களால்; தேனும் பாலும்
     தெருவெல்லாம் பாயும்வழி காண்போம்! வாரீர்!

எண்ணத்தில் தெளிவுதனை என்றும் காணும்
     ஏற்றத்தை இளம்பிறையாய் வளர்த்தல் வேண்டும்!
திண்ணையில் தினம்கூடி வெற்றுப் பேச்சை
     தீமையுடன் வளர்க்காத பொதுமை வேண்டும்!
பண்ணையினில் கூட்டாக பயிர்வ ளர்க்கும்
     பாசம்தான் தவறாமல் தழைத்தல் வேண்டும்!
கண்ணெனவே விடுதலையைக் காத்து நாட்டில்
     காலமெல்லாம் உரிமைதனைப் பெறுதல் வேண்டும்!

துறைதோறும் பணம்ஒன்றே கொள்கை யாக
     துயர்நெஞ்சில் கொண்டதனால் மக்கள் யாரும்;
சிறைபோட்ட மனத்தினனாய் வாழ்தல் ஆமோ!
     சிரம்தாழ்ந்து கழிவினமாய் ஆதல் நன்றோ?
மறைஒன்றை மறவாமல் வகுத்தல் செய்தால்
     மனம்மீண்டும் உயர்வளத்தைப் பெற்றே; நாளும்
பறைகொட்டி தமிழினத்தின் மானம் காப்போம்!
     பலதிக்கும் உயிரோட்டம் செய்வோம்! வாழ்வோம்!

நான்எழுதும் பாடலினால் தமிழ கத்தில்
     நலம்வளரப் போகிறதா என்ன? இந்நாள்
வான்மழைதான் பொய்த்ததனால் தஞ்சை மண்ணில்
     வாடிவிட்ட உயிர்களினால் ஒன்று சொல்வேன்!
தேன்மணந்த நாட்டிலின்று; எதிலும் எங்கும்
     தெருமணக்கும் அவலம்தான்; இனிமே லேனும்
"மாண்புடைய அரசியலார்" ஒருமை எண்ணம்
     மறவாமல் கொள்வதனால் மனிதம் காப்போம்!


{புலவர். இளமுருகு அண்ணாமலை}

வெள்ளி, பிப்ரவரி 17, 2012

கோதுமை தந்த குணம்...

{1958-59 ஆம் ஆண்டில், கண்ணதாசன் அவர்களின் "தென்றல்" இதழில்
ஈற்றடி - "கோதுமை தந்த குணம்"
என்ற தலைப்பில் நடந்த "ஈற்றடி வெண்பா" போட்டியில் முதல் பரிசைப் பெற்ற
"என்னப்பனின் முதல் கவிதை"}

நாடாளும் பண்டிதர்; "நான்சென்ஸ்" எனச்சொல்லி
தேடாத செல்வம் திராவிடத்தின் - மாட்சியாம்!
தீதில் பெரியாரைத் திட்டியது; வேறல்ல
கோதுமை தந்த குணம்

                                                                          {புலவர். இளமுருகு அண்ணாமலை}