திரைப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், அக்டோபர் 20, 2022

பொன்னியின் செல்வன்-1 (2022)

 


பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் குறித்து விமர்சனம் எழுதவேண்டும்!

எங்கே ஆரம்பிப்பது? எப்படி ஆரம்பிப்பது? இது ஒரு சாதாரண நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு சாதாரண திரைப்படம் எனில், எங்கேனும் எப்படியேனும் ஆரம்பிக்கலாம்! ஆனால், இது ஒரு சரித்திரத்தை சரீரமாக கொண்டு சரித்தரம் படைத்த நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட; சரித்திரம் படைக்கப்போகும் திரைப்படம்! எனவே, இத்திரைப்படத்தை விமர்சிக்கும் முன், என் விமர்சனத்தையே என்னுள் விமர்சித்து பார்த்துவிட்டே எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

பல ஜாம்பவான்கள் (குறிப்பாக எம்.ஜி.ஆர். மற்றும் கமல்ஹாசன்) இச்சரித்திர நாவலை திரைப்படமாக எடுக்க முயன்று முடியாமல் போயிருக்கிறது. அது தோல்வியல்ல! மாறாய், அந்நாவலின் கதையாழம் மற்றும் அதில் அமரர் கல்கி கையாண்ட உவமையும் விளக்கவுரைகளும் அத்தகையன! 1950-களின் ஆரம்பத்தில் எப்படி இப்படியோர் சரித்திர நாவலை எழுத முடிந்தது? அதற்கு அவர் எத்தனை வினைக்கெடல்களை மேற்கொண்டிருப்பார்? நாவலை படித்தோர்க்கும், நாவலை கேட்டறிந்தோர்க்கும் அப்படியே கடத்துவது என்பது அத்தனை எளிதல்ல!

ஆனால், இயக்குநர் மணிரத்னம் அதை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார் என நம்புகிறேன். முதலில், அவருக்கு என் மரியாதையும் பாராட்டுகளும். இங்கிருந்தே இதை ஆரம்பிக்க விரும்புகிறேன்.

நிறைகள்:

  • வந்தியத்தேவன் வல்லவரையன்: உண்மையில், இக்கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடிக்கிறார் என்பதை அறிந்து சுனங்கிப் போனேன். ஆனால், அவர் சிறப்பாக நம் கற்பனையில் இருக்கும் வந்தியத்தேவனை கிட்டத்திட்ட அதற்கு நிகராய் நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார். வந்தியத்தேவன் கதாபாத்திரம், ஒரு கதாபாத்திரக்கலவை! அதில் வீரம், கனிவு, இரக்ககுணம், பயமின்மை/பயம், காதல், வெகுளித்தனம், நகைச்சுவை போன்ற குணாதியசங்களுடன் கோழைத்தனம் கலந்த மூர்க்கமும் அடக்கம். நாவலை படித்து, கல்கியின் எழுத்தை அப்படியே உள்வாங்கியோர்க்கு இக்கதாபாத்திரத்தின் பரிமாணங்கள் மிகவும் பரிச்சயமாய் இருக்கும். அதை மிகச்சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்; வாழ்த்துகள் கார்த்தி.
  • ஆதித்த கரிகாலன்: விக்ரம் எனும் நடிப்பு யானையின் பசிக்கு சரியான தீனி இட்டிருப்பதாகவே சொல்ல வேண்டும். பின் என்ன? அந்த நடிப்பு யானை தீனியை துவம்சம் செய்திருக்காதா என்ன? கரிகாலனை நம் கண்முன்னே அப்படியே உலாவ விட்டிருக்கிறார் மனிதர். உடல்மொழியும் உச்சரிப்புமொழியும் அற்புதம். விக்ரம் எப்படி செய்திருப்பார் என்பதை இதைவிட விளக்கமாய் சொல்லவும் வேண்டுமோ?
  • அருள்மொழி வர்மன் எனும் பொன்னியின் செல்வன்: ஜெயம் ரவி, நல்ல தேர்வு. வந்தியத்தேவன்  உடனான வாற்போரில் அவரின் உடல் மொழி அபாரம். முகபாவனைகளில் இன்னும் தேர்ச்சி தேவை. எனினும், முதல் பாகத்தில் அவருக்கு அதிகம் பாத்திரப்படைப்பு இல்லை; இரண்டாம் பாகத்தில் அது முழுமை அடையும் என நம்புகிறேன். 
  • ஆனால், அதுதான் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின் தனிச்சிறப்பு! "பொன்னியின் செல்வன்" என நாவலுக்கு தலைப்பு இட்டிருந்தாலும், தனியொரு கதாபாத்திர துதி என்பது அறவே இல்லை. ஏனெனில், இது ஒரேயொரு அரசனின் ஒரேயொரு கதையல்ல! ஒட்டுமொத்த ஒரு அரச வம்சத்தின் கதை; இங்கே அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. இப்படைப்பில்; வீரநாராயண ஏரியில் ஆரம்பித்து, முதலை தொடர்ந்து, இலங்கை கடல் கடந்து, தஞ்சை கோட்டையில் இருக்கும் மரத்தின் உயரம் அளந்து, சேந்தன் அமுதனின் குதிரை வரை இதில் வரும் அஃறிணைகள் கூட உயர்திணை பாத்திரப் படைப்புகளே. பார்ப்போம், பொன்னியின் செல்வன் அடுத்த பாகத்தில் என்ன செய்கிறார் என!
  • குந்தவை, நந்தினி, சுந்தரசோழர், வானமா தேவி, செம்பியன் மாதேவி, கந்தமாறன், மந்திரவாதியாக வரும் இரவிதாசன், ஊமை இராணி, சேந்தன் அமுதன், பார்த்திபேந்திரன், ஆபத்துதவிகள், மதுராந்தகத் தேவர் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்பகள் நன்று. "அநிருத்தப் பிரம்மராயர்" என்ற பாத்திரப் படைப்பு - எல்லா பாத்திரப் படைப்புகளுக்கும் உச்சத்தில் இருப்பது. அவரறியாமல் எதுவும் நடக்காது என்பதை கல்கி பல இடங்களில் விவரித்து இருப்பார். அப்படியொரு அமைச்சகத்தை மிகச்சிறப்பாய் நடத்தி; நாவல் நெடுகிலும் பயனித்த ஒரு கதாபாத்திரத்தைப் போகிற போக்கில் காண்பித்து கடந்து இருப்பது மிகப்பெரிய வியப்பு! அவ்வியப்பு இன்னமும் அகலவில்லை! மேலும், அநிருத்த பிரம்மாராயருக்கான நடிகர் தேர்வு எப்படி இருந்திருக்க வேண்டும்? அவரின் கம்பீரத்தில் கொஞ்சமாவது திரையில் கடத்தி இருக்கவேண்டும் அல்லவா?
  • இவர்களுள், மிகக்குறிப்பாய் மிகக்கச்சிதமாய் அமைந்திருப்பது ஆழ்வார்க்கடியான் நம்பியின் பாத்திரம் தான். நகைச்சுவை கலந்த பாத்திரம்; ஜெயராம் எனும் நடிகனின் கோட்டை! பிரம்மாதப் படுத்தி இருக்கிறார். உண்மையில் அனைத்து கதாபாத்திரங்களுள் - ஆழ்வார்க்கடியான் நம்பிதான் நம் கற்பனைக்கு உண்மையான வடிவம் கொடுத்திருக்கிறார் என தோன்றுகிறது.
  • பின்னணி இசை: பொதுவாய், பின்னணி இசை மிகச் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாய் போர்க்களங்களில் போர்க்கருவிகள் எழுப்பும் ஓசைகள். IMAX போன்ற திரையரங்கில் பார்க்கும்போது, நாமே போர்க்களத்தின் நடுவில் இருப்பது போல் இதை கூடுதலாய் அனுபவிக்கலாம். அதற்காகவே, காத்திருந்து வேளச்சேரியில் இருக்கும் IMAX-இல் முன்பதிவு செய்து நேற்றிரவு பார்தேன் (நேற்று தான் இறுதி நாள் என்பதை இன்றறிந்து அதிசயித்தேன்; இன்னும் பலருக்கும் இவ்வனுபவம் கிடைத்திருக்கலாம்!). ஆந்தயின் குரல், அரண்மனை மணிகளின் ஒலி மற்றும் அனைத்து ஓசைகளிலும் - A true Immersive Experience! வாய்ப்பிருப்போர் அதுபோன்றதோர் திரையில் திரையரங்கில் காண்க!
குறைகள்:

என்னதான் எப்படித்தான் பாராட்டினாலும்; இதிலுள்ள குறைகளை சுட்டிக்காட்டுவது மிகவும் அவசியமாகிறது. ஒவ்வொரு குறையை சுட்டும் முன்னர் "சொல்லுதல் யார்க்கும் எளிய" என்னும் என் ஐயன் வள்ளுவப் பெருந்தகையின் வாழ்வு-நெறியியல் குறளை நினைவு கூர்ந்த பின்னரே சொல்கிறேன். என் நோக்கம் இதில் குறை காண்பதல்ல! இதை எப்படி மென்மேலும் செதுக்கி இருக்கலாம் எனும் உயர்நோக்கத்தில் தான் இவைகளை பட்டியலிடுகிறேன்.
  1. வீரநாரயாண ஏரி: "ஆடித்திருநாள்" எனும் தலைப்பில் நாவலின் முதல் அத்தியாயத்தை; அமரர் கல்கி ஆழ்ந்த ஆலோசனைக்கு பின்னரே ஆரம்பித்திருப்பார் என திடமாக நம்புகிறேன். வீரநாராயண ஏரி (வீராணத்து ஏரியென இப்போது அழைக்கப்படுகிறது) குறித்த விவரிப்பில்; எடுத்த எடுப்பிலேயே நம் கற்பனைக் குதிரைக்கு இலகான் பூட்டி பறக்க வைத்தது ஒரு கைதேர்ந்த திட்டம். அதை அப்படியே நம்முள் திரைப்படத்திலும் கடத்தி இருக்கவேண்டும். உண்மைதான்! எழுத்தை அப்படியே நம்முள் கடத்துவது "சொல்லுதல் யார்க்கும் எளிய" போன்றது தான். ஆனால், அதை ஒரு பின்னணி குரல் மூலமோ அல்லது இருவரின் உரையாடல் மூலமோ செய்திருக்க வேண்டும். வீரநாராயண ஏரியின் பிரம்மாண்டத்தை நம்முள் கடத்தி இருக்கவேண்டும். இது தான் தலையாய குறை.
  2. மேலும், இந்த ஏரியில் இருந்து அவர் ஆரம்பித்ததன் பின்னணியில் இப்படைப்பில் எந்தவொரு கதாபாத்திரமும் உயர்ந்ததும் இல்லை/தாழ்ந்ததும் இல்லை என்பதை உணர்த்தவே என திடமாக நம்புகிறேன். ஏரியை அப்படியே விவரிக்காதது மிகப்பெரிய பிழை. சம்பந்தமே இல்லாமல், படத்தை ஒரு போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனை முன்னிறுத்தி ஆரம்பித்தது பெரிய நெருடல். ஆதித்த கரிகாலனின் வீரமும் ஆண்மையும் யாவருமறிவர். ஆனால், இப்படைப்பு அதில் ஆரம்பித்து இருக்கக்கூடாது!
  3. வீரநாராயண ஏரியை தவறவிட்டது போலவே, பழுவேட்டரையர்களுக்கான நடிகர்கள் தேர்வும்; அப்பாத்திரங்களும் நம்முள் கடத்தப்படவில்லை! இதுபோன்றதோர் சரித்திரப் படைப்பில், ஒரு நடிகன் அல்லது நடிகையின் இயல்பு எந்த நிலையிலும் வெளிவரவே கூடாது! ஆனால், இவர்கள் இருவரும் தம் இயல்பை விட்டு வெளியே வந்து பாத்திரங்களுக்குள் ஐக்கியமாகாததால்; ஆதித்த கரிகாலனைப் போல் நம்முள் ஆதிக்கம் செலுத்தவில்லை; இது மிகப்பெரிய குறை. சதிசெய்யும் கும்பல் எனினும்; பழுவேட்டரையர்கள் இப்படைப்பின் மிகப்பெரிய பலம் - அது தவறவிடப்பட்டு இருக்கிறது. என்னதான் வந்தியத்தேவனை நம்முள் கடத்தினாலும், ஆங்காங்கே அந்த நடிகரின் இயல்பு வெளிப்படுவதும் இதுபோன்றோர் குறையே!
  4. இளையபிராட்டி எனும் குந்தவை: குந்தவை பிராட்டியின் அறிவும்/வீரமும்/அரசியல் சாணக்கியத்தனமும் சரியாக கடத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது. அழகுப் பதுமையாய் ஒரு "சாதாரண திரைப்படத்தில் வரும் நாயகி போல" இருப்பது மிகப்பெரிய வேதனை. குந்தவை பிராட்டியைப் பற்றி நாவல் நெடுகிலும் கல்கியின் வரிகளில் வார்த்த வர்ணனைகள் யாவும் இமாலய இலக்காய் போய்விட்டது போல் தோன்றுகிறது. "சொல்லுதல் யார்க்கும் எளிய" எனினும், இது மிகப்பெரிய குறை.
  5. நந்தினி: என்னதான் அழகில் குந்தவைக்கே பொறாமையை வரவைக்கும் பாத்திரப்படைப்பு எனினும், வெறும் அழகுக்காக மட்டுமே நந்தினியின் கதாபாத்திர தேர்வு நடந்திருப்பது போல் தோன்றுகிறது. பெயர் குறிப்பிட விரும்பவில்லை - ஆனால், நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த தமிழ் நன்கறிந்த ஒரு நடிகை இருக்கிறார். அவர் போன்றோர் இங்கே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும்! ஓரிடத்தில் நந்தினி உரைவாளை சுழற்றும் முறையை கல்கி விவரித்து இருப்பார். அதுதான், நந்தினியின் பலம்! மேலும், என்னதான் எதிர்மறை பாத்திரப் படைப்பு எனினும்; நந்தினி ஓர் வியப்புமலை. அம்மலையின் அடிவாரம் கூட நம்முள் கடத்தப்படாதது மனதை வருத்துகிறது.
  6. பூங்குழலி: குந்தவை, நந்தினி, வானதி - இப்படி எந்த பெண்பால் பாத்திரத்திற்கும் சற்றும் குறைவில்லாதது, பூங்குழலியின் பாத்திரப் படைப்பு. ஏன், வீரம்/அறிவு/ஆற்றல்/அழகு இவற்றில் அவர்களை விட சற்று அதீதமானவள் கூட. அப்படிப்பட்ட ஓர் பாத்திரப் படைப்பை, பத்தோடு பதினொன்றாக போகிறப் போக்கில் காண்பித்து இருப்பது நெருடல். அடுத்த பாகத்தில், பூங்குழலியின் கதாபாத்திரம் இன்னும் மற்ற பாத்திரங்களுடன் நெருங்கி இருக்கும் என்பது தெரியும். ஆனால், எடுத்த எடுப்பில் பூங்குழலி யாரென நாவலில் இருப்பது "பூங்குழலியின் நங்கூரம் இடும் திறம் போல்" அப்படியே கடத்தி இருக்கவேண்டாமா? இப்படி பூங்குழலியின் கதாபாத்திரத்தை அடிக்கோடிட்டு காட்ட என்னை தூண்டியது, என் தங்கை ஒருத்தி; பூங்குழலியை உள்வாங்கிய விதத்தை என்னுள் விதைத்தது தான். நன்றி தங்கையே!
  7. அருள்மொழியின் யானை ஓட்டும் திறன்: தஞ்சை நோக்கி விரையும் போது, அருள்மொழி யானையின் காதில் அம்மந்திரத்தை சொன்ன பின்; யானை ஓடிய விதத்தை கல்கி விவரித்தது இன்னும் மனதின் ஆழத்தில்! யானையின் ஓட்டதிறன் பற்றி அவரின் விளக்கம், அப்பப்பா....! நாவலில் யானை எழுப்பிய புழுதியில் கிளம்பிய காற்றுதூசியில் அகன்ற திரை இன்னும் கூட என் மனக்கண்ணை மறைக்கிறது என்றால் மிகையல்ல! அதுபோலவே, யானைப்பாகன் வேடத்தில் அருள்மொழியைப் பார்த்தால்; வினைக்கெட்டு மாறுவேடம் செய்ததாகவே தெரியவில்லை. இரண்டாம் பாகத்தில், தஞ்சை அரண்மனையில் நுழையும் போதும் இதுபோன்ற மாறுவேடம் ஏற்பார்; அதுவாவது, சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். 
  8. பூங்குழலி-வந்தியத்தேவன் அறிமுகம்: இவர்களின் அறிமுக நிகழ்வுகள், நாவலுக்குள் ஒளிந்திருக்கும் இன்னுமோர் அழகிய உள்நாவல்! இந்த அழகியல் முற்றிலுமாக சிதைக்கப்பட்டு இருக்கிறது! வந்தியத்தேவனின் அசட்டுத்தனமான செய்கைகள், மற்ற காட்சிகளில் விட, இந்த அறிமுகத்தில் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கும். திடீரென நடுக்கடலில் அவர்களை எடுத்த எடுப்பில் காட்டுவது மிகப்பெரிய நெருடல்! இதுபோன்ற அழகியல்கள் தான் - எல்லா பாத்திரங்களையும் கடந்து - பொன்னியின் செல்வனின் சிறப்பு. அதுபோலவே, சேந்தன் அமுதன்-வந்தியத்தேவன் அறிமுகப்படலம்! அது இன்னுமோர் அழகியல் - அதுவும் போகிறப்போக்கில் காட்டப்பட்டிருக்கிறது. இவற்றை எல்லாம் சொன்னால், இன்னுமோர் பாகம் தேவை எனும் சிரமம் எனக்கும் புரிகிறது! ஆனால், அந்த சிரமங்களை எல்லாம் மேற்கொண்டு அதை செய்யத்தான் வேண்டும். ஏனெனில், அதுதான் பொன்னியின் செல்வன் எனும் சரித்திரம்!
  9. ஊமை இராணி, இலங்கை வீதியில் பொன்னியின் செல்வனைக் காப்பாற்றுவதும் ஓர் அழகியல்; அதை காட்சிப்படுத்தவே இல்லை. ஊமை இராணியின் பாத்திரப்படைப்பு நாவலில் இருப்பது போலவே நம்முள் நங்கூரம் இட்டிருக்கவேண்டும். குறிப்பாய், குகையில் காண்பிக்கப்படும் ஓவியங்கள் நம்மை சலசலக்க வைக்கவே இல்லை! இதற்கு முக்கிய காரணம், ஊமை இராணியின் பாத்திரப்படைப்பு நம்முள் சரியாக கடத்தப்படாததே!
  10. என்னதான், வால்நட்சத்திரம் குறித்த பின்னணியை திரு. கமலின் குரல் மூலம் ஆரம்பத்தில் அற்புதமாய் சொல்லி இருந்தாலும் "குடந்தை சோதிடர்" அத்தியாயம் நிச்சயமாய் சொல்லப்பட்டு இருக்கவேண்டும். அப்போது தான், வானதி மற்றும் குந்தவையின் நெருங்கிய உறவும்/நட்பும் சரியாக சொல்லப்பட்டு இருக்கும். அவர்களின் உறவை வலுவாய் சொல்வது அடுத்த பாகத்தின் காட்சிகளுக்கு மிகவும் முக்கியம்! அதைச் செய்திருப்பின், குந்தவை-வந்தியத்தேவன் முதல் சந்திப்பும் சரியாக சொல்லப்பட்டு இருக்கும். அற்புதமான வர்ணனைகள் அந்த அறிமுக காட்சியில் இருக்கும்! மேலும், "குடந்தை சோதிடர்" அத்தியாயத்தின் முன்னும் பின்னும் நிறைய அழகிய கதைகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் விடுத்தது; என்னவோ சோழ வீரவரலாற்றை மட்டுமே சொல்லவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது!
  11. ஆனால், இவற்றிற்கெல்லாம் பின்வருவது காரணமாய் இருக்குமோ என்ற என் புரிதலை மட்டும் சுட்டிக்காட்டி முடிக்க எண்ணுகிறேன். பொன்னியின் செல்வன் எனும் நாவல் முழுக்க முழுக்க வந்தியத்தேவன் வல்லவரையன் எனும் செய்திசொல்பவன் போன்ற ஒரு கதாபாத்திரத்தின் மூலம் சொல்லப்பட்ட ஒரு சரித்திர நாவல். அதைச் செய்யாமல் பாத்திரங்களை நேரடியாக சொல்ல எத்தனித்து இருப்பதும்; பாத்திரங்களை உடனடியாய் நம்முள் கடத்தவேண்டும் என்ற அவசரமும் இவற்றிற்கெல்லாம் காரணம் என நினைக்கத் தோன்றுகிறது. மேலும், வந்தியத்தேவனை ஒரு பெண் வாசகி உள்வாங்கும் விதமும்; ஒரு ஆண் வாசகி உள்வாங்கும் விதமும் வேறு மாதிரியாக இருக்கும். கரிகாலன், அருள்மொழி, பூங்குழலி, குந்தவை, நந்தினி போன்ற மற்ற பாத்திரங்களுக்கும் இது பொருந்தும். இருபாலினத்தினரின் கற்பனைகளை காட்சிப்படுத்துவதில் உள்ள சிரமம் எனக்கு தெரிந்தாலும்; மேற்சொன்ன குறைகள் எல்லாம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு, நாவலில் நேரடியாய் விளக்கப்பட்டு இருப்பவை! அவற்றை அப்படியே காட்சிப்படுத்தி இருக்கலாம் என்பதே என் கூற்று.
இதுபோல், இன்னும் பல சின்னஞ்சிறு அழகியல்கள் கடத்தப்படவில்லை. கொல்லிவாய் பிசாசு கற்பனை, அதற்கு கந்தக அமிலத்தை வைத்து கல்கி சொன்ன விளக்கம் போல் பல விடயங்களைக் குறிப்பிட தோன்றினாலும்; குறைகளைப் பகிர்வது என் எண்ணமில்லை என்பதால் - இத்துடன் கடக்கிறேன்.

நாவலை முன்னரே படித்துவிட்டு படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு:
  • யோவ்... நம்புங்கய்யா! நீங்க மட்டும் இல்லை, எங்களைப் போல் பலரும் நாவலைப் படித்துவிட்டுதான் படம் பார்க்க வந்திருக்கிறோம். என்னமோ நேத்திக்கு ரிலீஸான நாவலை நீங்க மட்டும் வாங்கிப் படிச்சுட்டு; இன்னைக்கு ரிலீஸான படத்தை பார்க்க வந்தவங்க போல இப்படி பேசி பேசி; ஆராய்ச்சி செஞ்சு எங்களை ஏன்யா கொல்லுறீங்க! அடுத்தவங்க செளகரியம் பத்தியும் கொஞ்சம் யோசிங்கய்யா! உங்க பேச்ச கேக்கவாய்யா நாங்க படம் பார்க்க வர்றோம்?! உங்க ஆர்வக்கோளாரு எங்களுக்குப் புரிகிறது. ஆனால், அதை உங்க காதுகளுக்கும் கேக்கற மாதிரி பாத்துக்கோங்க!
  • என் பக்கத்தில் ரெண்டு பேரு போட்டு படுத்தி எடுத்துட்டாய்ங்க! தொனதொனக்காதிங்கன்னு சொல்லிடலாமான்னு யோசிச்சேன், அதைக் கேட்டு இன்னும் நெறைய பேசினா என்ன பன்றதுன்னு யோசிச்சு சும்மா விட்டுட்டேன். நம்ம மொத்த நிம்மதியும் போயிடுமே!?
  • இதுல, உள்ள நுழையும் போதே பெரிய தட்டு முழுக்க நொறுக்குத்தீனிகள்! போதாதுன்னு, இடைவேளையில் இன்னுமொரு பெரிய தட்டு! வாய்க்கு இத்தனை வேலை கொடுக்கவாய்யா தியேட்டருக்கு வர்றீங்க! உங்களை...
  • எல்லாத்துக்கும் மேல, இதையெல்லாம் செய்ய இவ்வளோ செலவு செஞ்சு IMAX-க்கு வந்து எங்களை ஏன்யா சோதிக்கிறீங்க? நீங்க வாங்கலைன்னா; வேற யாராவது அமைதியா படம் பார்க்கவறங்களுக்கு டிக்கெட் கிடைச்சிருக்குமேய்யா!
  • கூடுவாஞ்சேரியில் ஒரு தியேட்டர் இருக்கு! தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும்; இடைவேளை தவிர மத்த நேரத்துல எந்த ஸ்னாக்ஸும் விக்கமாட்டாங்க! இந்த மல்ட்டிஃபிளக்ஸ் தியேட்டர்லயும் அப்படியொரு ரூல்ஸ் போட்டா என்ன? 
  • என்னங்க... சரியா கேக்கலை என்ன சொல்றீங்க...? ஓஹோ... அப்படி ரூல்ஸ் போட்டா யாரும் மல்ட்டிஃபிளக்ஸ் தியேட்டருக்கு வர்றமாட்டங்கன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான்! இப்போ நாம "டிஸ்ட்டபர்ஸா பாத்து திருந்தாவிட்டால்... டிஸ்ட்டபர்ன்ஸை ஒழிக்க முடியாதுன்னு" அழுதுசிரிச்சுக்கிட்டே பாட வேண்டியது தான் போல்! திருந்துங்கய்யா...!!!
எதெப்படியோ... 
எல்லா குறைகளையும்; எல்லா டிஸ்ட்டபர்ன்ஸையும் தாண்டி...
பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தைப் பார்ப்பது...
நம் ஒவ்வொருவரின் கடமை!
எப்படியாயினும்...
இதுவோர் நல்ல அனுபவம்!!

வெள்ளி, ஜனவரி 14, 2022

கார்பன் (2022)



2022-ஆம் ஆண்டு தமிழர் திருநாளை முன்னிட்டு நேற்று (13.01.2022) வெளியாகி இருக்கும் வெளியாகி இருக்கும் தமிழ் திரைப்படம் "கார்பன்". அண்ணாதுரை படத்தை இயக்கிய சீனுவாசனின் இரண்டாவது திரைப்படம். இதுதான், நான் முதல் நாள் முதல் காட்சி (FDFS) பார்த்த முதல் திரைப்படம். மேலுள்ள 3 புகைப்படங்களில் இடது பக்கம் உள்ளது, படம் பார்த்து முடித்த பின் திரையரங்கின் வெளியே எடுத்தது. முதல் FDFS நல்லதொரு அனுபவமாய் இருந்தது கூடுதல் மகிழ்ச்சி. என் மகிழ்ச்சி உங்களையும் சேரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில், என் பார்வையை கீழே பதிந்திருக்கிறேன்.
  • படத்தின் உயிர்நாடியும் சிறப்பம்சமும், படத்தின் திரைக்கதை தான்! ஒரு படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணிகளில், முதன்மையானது திரைக்கதை. அது, இந்த திரைப்படத்தில் மிகச் சிறப்பாய் அமைந்திருக்கிறது. இயக்குநர் சீனுவாசனுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
  • பொதுவாக, நகைச்சுவைக்கென்று தனிப்பகுதி இல்லாமல்/நகைச்சுவை நடிகர்கள் எவரும் இல்லாமல்; கதையின் மூலமே நகைச்சுவை காட்சிகளைப் புகுத்துவதென்பது மிக சவாலான செயல்! இயக்குநர் சீனுவாசனுக்கு அது கைவந்த கலையாதலால், ஆங்காங்கே நல்ல நகைச்சுவை காட்சிகள் இருக்கின்றன. தவறாமல் இரசித்து மகிழுங்கள்!
  • படத்தின் நாயகன் வித்தார்த்தின் திறமையில் நம் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. மிகவும் எதார்த்தமாய், மிகவும் எளிமையாய் நடித்து நம்மை மிக எளிதாய் கவர்ந்திருக்கிறார். இவர் போன்ற நடிகர்களுக்கு, மென்மேலும் அவர்களின் திறமைக்கேற்ற பல படங்கள் வாய்க்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.
  • படத்தின் நாயகி தான்யா; தமிழ் திரையுலகில், கதாநாயகியாக உயர்ந்திருக்கிறார். நல்ல திறமையான நடிகை, தமிழ் திரையுலகம் அவரை இனிமேல் நன்கு பயன்படுத்தும் என நம்புகிறேன்.   அவருக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
  • பொதுவாய், பல தமிழ் திரைப்படங்களில்; கதாநாயகியை பாட்டுக்கும், ஆட்டத்துக்கும் மட்டும் திரையில் காண்பிப்பதே வழக்கம். கதாநாயகி எனும் சொற்றொடருக்கு ஏற்ப; கதையின் நாயகியாய் அக்கதாபாத்திரத்தை நிலைநிறுத்தும் வண்ணம் திரைக்கதை அமைக்கப்படுவது மிகவும் அபூர்வம். அவ்வகையில், கார்பன் படம் கதாநாயகியை; உண்மையில் கதையின் நாயகியாய் காண்பித்திருப்பது பாராட்டுக்குரியது.
  • அம்மாவின் பெருமை பேசும் படங்கள் ஏராளமாய் இருக்கின்றன. சாதாரணமாய் சமையலறையில் சுடும் ஒரு தோசையின் மூலம் கூட, ஓர் அம்மாவின் பெருமையாய் எளிதாய்/உயர்வாய் சொல்லிவிட முடியும். ஒருவேளை, அப்படி எளிமையாய் சொல்லிவிட முடியாது என்பதால் தான்; அப்பாவின் பெருமை பேசும் படங்களின் குறைவோ? என எண்ண தோன்றுகிறது. இப்படம் அப்பாவின் பெருமையை பேசும்/உணர்த்தும் படம். திரையில், உறவுகளுக்கு உயிர் கொடுப்பது இயக்குநர் சீனுவாசனின் தனித்துவம் என்பதை அண்ணாதுரையிலேயே பார்தோம். இதில், இன்னுமொரு படி மேலே உயர்ந்து சென்றிருக்கிறார்.
  • அப்பா-மகன் உறவை மிகவும் எதார்த்தமாய் ஆனால் மிகவும் ஆழமாய் சொல்லி இருக்கும் திரைப்படம். அப்பாவாக திரு. மாரிமுத்துவும், மகனாக வித்தார்த்தும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். அவர்களுக்குள் இருக்கும் ஊடலைக் கூட கவித்துவமாய் சொல்லி இருப்பது  இயக்குநரின் சிறப்பு. ஓர் காட்சியில், வித்தார்த் அழுதுகொண்டே பேசுவார்; அழுதுகொண்டே பேசுவது அத்தனை எளிதல்ல! அப்படியே பேசினாலும், வார்த்தைகள் தெளிவின்றி இருக்கவேண்டும்; அழுகையும் இயல்பை மீறக்கூடாது. அதை மிகச்சிறப்பாய் செய்திருக்கிறார் வித்தார்த்; அவரின் நடிப்புத் திறனுக்கு இதுவொன்றே பெரிய சான்றாகும். திரு. மாரிமுத்து அப்பாவாக வாழ்ந்திருக்கிறார்.
  • படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் கொண்டிருக்கின்றன. ஒரு சிறு கதாபாத்திரம் கூட, கதையுடன் தொடர்பின்றி இருப்பதாய் தெரியவில்லை. அதனால் தான், திரைக்கதையும் அவ்வளவு நேர்த்தியாய் வந்திருக்கிறது. அனைத்து நடிகை நடிகையர்களுக்கும் என் வாழ்த்துகள்.
  • படத்தின் இடைவேளையில், படத்தில் நடித்திருந்த மூவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் திரையரங்கு வளாகத்தில் எடுத்தது தான், மேலிருப்பதில் வலது பக்கம் இருக்கும் புகைப்படம். அவர்களுடன் பேசியதில், அவர்களின் திறமையும்; சாதிக்க துடிக்கும் அவர்களின் துடிப்பும் புரிந்தது. அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
  • அப்பாவின் உயர்வை பேசும் பாடலில் "அட... அப்பாவின் வேர்வை தான் சோற்றிலே; தினம் உப்பாகும் எல்லோரின் வீட்டிலே" என்றோர் வரி வரும். படத்தில் வரும் அப்பா-மகன் உறவை அப்படியே உள்வாங்கி, இந்த ஒரே வரியில் வார்த்திருக்கிறார் பாடலாசிரியர் அருண் பாரதி. அவருக்கு என் அன்பு வாழ்த்துகள்.
  • இப்படிப்பட்ட ஓர் படத்திற்கு, சாம் CS இன் இசை ஒரு வரப்பிரசாதம். ஓர் இடத்தில் கூட எந்த பிசிரும் இல்லாமல், ஓர் இடத்தில் கூட கூடுதலோ/குறைவோ இல்லாமல்; படத்தின் இயல்புக்கு என்ன தேவையோ அதை மிகக் கச்சிதமாய் செய்திருக்கிறார். அவருக்கும் என் ஏழுசுவர வாழ்த்துகள்.
  • படத்தின் எடிட்டர் பிரவீன் KL கூடுதல் வரப்பிரசாதம். இதற்கு மேல், இதை எப்படி சுருக்கமுடியும் என வியக்கவைக்கும் வேலைப்பாடு. அவருக்கு என் வணக்கங்கள்.
  • இப்படத்தை மாநாடு திரைப்படத்தோடு சிலர் ஒப்பிடுகின்றனர்! ஒப்பீடு தவறில்லை; ஆனால், இரண்டும் ஒரே விதமானது என்பது தவறான புரிதல். மாநாடு திரைப்படத்தில் வருவது Time-Loop ஐ அடிப்படையாகக் கொண்டது. அதாவது, ஒரு குறிப்பிட்ட நாள் அல்லது தொடர் நிகழ்வு மீண்டும் மீண்டும் இயல்பாய் நடப்பது. அதில், எவருக்கேனும் இப்படியெல்லாம் நடக்குமா என சந்தேகம் கூட வரலாம். ஆனால், இதில் வருவது அதுவல்ல! இது ஒரு குறிப்பிட்ட நாள் அல்லது தொடர் நிகழ்வை மீண்டும் மீண்டும் தம் முயற்சியால் நிகழ வைப்பது. எனவே, இப்படியெல்லாம் நடக்குமா என சந்தேகம் வர வாய்ப்பில்லை. ஏன், நம்மில் பலரே சில விடயங்களை நாமே மீண்டும் மீண்டும் செய்து பார்த்திருப்போம் தானே?!
  • இப்படியொரு சிறப்பான படத்தை, தவறுதலாய்; மற்றொரு படத்தை போலுள்ளது என எளிதாய் விமர்சிப்பது ஏற்புடையதல்ல! எனவே, இதை சொல்லவேண்டியது என் கடமையாகிறது. 
இவ்வளவு உண்மையாய் விமர்சனம் செய்துவிட்டு, முக்கியமான சில உண்மைகளை சொல்லவில்லை எனில்; அது நேர்மையாகாது! எனவே, கீழுள்ள உண்மைகளை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்:
  • படத்தின் இயக்குநர் சீனுவாசன், தயாரிப்பாளர் ஆனந்தஜோதி முருகன் இருவரும் என் பள்ளி தோழர்கள். ஆனால், அவர்கள் என் தோழர்கள் என்பதால் என் விமர்சனத்தில் எந்த சமரசமும் இல்லை. எனவே, எந்த சந்தேகமும் இல்லாமல் இந்த விமர்சனத்தை நம்பி; திரையரங்கில் படத்தைப் பாருங்கள்.
  • தயாரிப்பாளர் ஆனந்தஜோதி தன் வாழ்நாள் சம்பாத்தியம் அனைத்தையும் இதில் முதலீடு செய்திருக்கிறார். மிகவும் தூய்மையான மனதுக்கு சொந்தக்காரர்; எவருக்கும் தீங்கு செய்ய கனவிலும் நினைக்காத நல்லுள்ளம் படைத்தவர். அவரின் சிறந்த குணத்துக்காகவே இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்பது எங்கள் அனைவரின் பிரார்த்தனை. எனவே, தயவுசெய்து இந்த திரைப்படத்தை திரையரங்கிலோ அல்லது விதிகளுக்குட்பட்ட கால இடைவெளி விட்டு OTT தளத்தில் வெளியாகும்போது அதிலோ பாருங்கள்.
  • இவர்களின் நண்பனாய் மட்டுமல்லாமல், கலைத்துறையில் ஆர்வம் இருக்கும் ஓர் நபராகவும் படத்திற்காக என்னுடைய சிறு பங்கீடும் இருக்கிறது. அதனால் தான், படத்தின் நன்றி நவிலலில் என் பெயரும் (இளங்கோவன் இளமுருகு, திருப்பாலப்பந்தல்) இடம் பெற்றிருக்கிறது. அதுதான், மேலுள்ள புகைப்படங்களில் நடுவில் இடம் பெற்றிருக்கிறது.
மீண்டும் சொல்கிறேன், என் நண்பர்கள் எடுத்த படம் என்பதால் என் விமர்சனத்தில் எந்த சமரசமும் இல்லை! வேண்டுமெனில், படம் பார்த்துவிட்டு வாருங்கள்; நாம் விவாதிப்போம். படத்தில் குறையே இல்லையா? எனில்; ஒரேயொரு (சிறிய)விடயத்தை குறையாய் கூறலாம். அது, படத்தின் முடிவை இன்னும் எதார்த்தமாய்/ஆழமாய் சொல்லி இருக்கலாம் என்பதே! இதுவும் கூட, ஆழ்ந்து யோசித்தால் மட்டுமே தோன்றும்.

படத்தை இரசித்து பார்த்துவிட்டு வாருங்கள்! விவாதிக்க காத்திருக்கிறேன்!!

ஞாயிறு, ஜூலை 28, 2019

இஃக்லூ (2019)

  • சிறப்பான படங்களின் பட்டியலில், இப்படம் இணைந்திருக்கிறது. துணைப் பாத்திரங்களில் வரும் ஒரிருவரைத் தவிர, மற்ற எவரையும் இதுவரை பார்த்ததில்லை! ஆனாலும், படம் மனதில் ஆழ பதிந்திருக்கிறது. கதையும்/திரைக்கதையும் "மட்டும்தான்" நிரந்தர நாயக/நாயகிகள் என்பதை - இப்படம் ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறது.
  • “இந்திய திரைப்பட வரலாற்றிலேயே, முதல் முறையாக...” போன்ற எந்த பிரம்மாண்டமும் இல்லை. இதுவரை “சொல்லாத கதை! சொல்லப்படாத திரைக்கதை!” என்ற எந்த அம்சமும் இல்லை. ஆனாலும், படம் மனதை முழுதாய் ஆட்கொள்கிறது. முக்கியமான எல்லா உறவுகளையும் இணைத்து சொல்லப்பட்டு இருக்கும் கதை. திரைக்கதை - ச்சும்மா பின்னி பெடல் எடுத்திருக்காங்க - என கலோக்கியலாய் சொல்வதே சிறந்தது.
  • உறவுகளையும் காட்சிகளையும் - மிக மிக இயல்பாய்/யதார்த்தமாய் - படைத்திருப்பது; திரையுலகம் மற்றும் பிற துறையில் இருக்கும் பலருக்கும் ஒரு படைப்பிலக்கணம்.
  • மெய்சிலிர்க்கும் சண்டை, கண்ணைக் கவரும் வெளிநாட்டுப் படப்பிடிப்பு, உலகத்தரம் வாய்ந்த கிராஃபிக்ஸ் - என எந்த பிரமாண்ட முயற்சியும் இல்லை! ஏன்... “காமெடி டிராக்” எனும் பெயரில் - இப்போதைய நகைச்சுவை மற்றும் கதாநாயகர்கள் செய்யும் காமெடிக் கொடுமை கூட இல்லை. ஆனாலும், அருமையான நகைச்சுவை காட்சிகள் இருக்கின்றன.
  • ஹீரோ என்றாலே - கதையின் பாத்திரப்படைப்பு எப்படி இருந்தாலும் - ஸ்டைலாய் ஆடை அணியவேண்டும் என்ற போலி-இலக்கணம் இல்லை. வெகு இயல்பாக, சட்டையை கால்சட்டைக்குள் திணித்து காட்சியளிக்கும் அழகிய/அடக்கமான கதையின் நாயகன்!
  • ஹீரோயின் என்றாலே - கதையின் பாத்திரப்படைப்பு எப்படி இருந்தாலும் - கவர்ச்சியாக உடல் அங்கங்களைக் காண்பித்தே ஆகவேண்டும் என்ற போலி-இலக்கணமும் இல்லை. வெகு இயல்பான உடையில், நம் உறவுக்குள் இருக்கும் ஏதேனும் ஒரு பெண்ணை நினைவூட்டும் கதையின் நாயகி!
  • "நாயகன்/நாயகி இருவருள் எவரின் பாத்திரப்படைப்பு சிறந்தது?" என ஒரு பட்டிமன்றமே நடத்தும் அளவுக்கு - இருவருக்கும் சமமான/சவாலான பாத்திரப் படைப்புகள்! இருவரின் நடிப்பும் அற்புதம் - தேர்ந்த நடிப்பு.
  • நாயகன்/நாயகி மட்டுமல்லாமல், படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் அருமை. ஒவ்வொருவரும் அவரவர் பாத்திரப்படைப்பை - இயல்பாய்/இனிமையாய் செய்திருப்பது படத்தின் மற்றொரு பலம்.
  • ஒரு பிரச்சனையை, இவ்வளவு ஆழமாய்; அடுக்கடுக்காய் தொடர்ந்து சொல்லி அதன் வீரியத்தை, எந்த செயற்கைத்தனமும் இல்லாமல்; நம்முள் இயல்பாய் கடத்துவது என்பது மிகப்பெரிய சவால்! என்னளவில், அவ்வாறு என்னை ஆட்கொண்டது என் மானசீக குரு எழுத்து சித்தர் பாலகுமாரன் மட்டுமே! அப்படியோர் திரைக்கதை. க்ளைமாக்ஸ் கூட - எவ்வித தேவையற்ற நீட்சியும்/சினிமாத்தனமும் இல்லாமல் - வெகு இயல்பாய் அமைந்து இருக்கிறது. 
  • இஃக்லூ - இதன் பொருள் என்ன? படம் முடிந்தவுடன், கூகுளில் தேடவேண்டும் என்ற எண்ணத்துடனேயே, படத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். உங்களுக்கு கூட அதன் பொருள் குறித்த ஆவல் எழக்கூடும். நமக்கு எந்த சிரமத்தையும் தராமல், அது மிகச் சுருக்கமாய்; ஆனால் மிக ஆழமாய் சொல்லப்பட்டு இருக்கிறது. அதைப் பார்த்ததும் - நிச்சயமாய் நீங்களும் “அடடா! என்னவொரு அற்புதமான படத்தலைப்பு?!” என உணர்வீர். படைப்பாளிகளே! உங்கள் கற்றலை "ஹீரோ அல்லது ஹீரோயின் கதாப்பாத்திரப் பெயரை வைப்பதைத் தவிர்த்து" படத்திற்கு தலைப்பை எப்படி இடுவது என்பதில் துவங்குவீராக!
  • கலர்ச்சட்டை முதல், பல அடையாளங்களுடன் “பெரிய ஹீரோக்கள்/பெரிய பட்ஜெட்" படங்களை முதல் காட்சியே பார்த்துவிட்டு விமர்சிக்கும் பிரபலமான விமர்சகர்கள் யாரும் இப்படத்தை விமர்சித்ததாய் தெரியவில்லை! அவர்கள் இப்படத்தை விமர்சித்தால், இது பலரையும் சென்றடையும். என்னளவில், விமர்சனக் கடமையென்பது ஒன்றுதான்: பிடிக்காத படத்தைப் பற்றி விமர்சனம் செய்து, எல்லோரின் நேரத்தையும் வீணடிக்கக் கூடாது; அதுபோல், என்னை ஆட்கொண்ட ஒரு படத்தை விமர்சிக்கத் தவறவே கூடாது!
  • என்னை அறிந்த சிலரையாவது, இந்த விமர்சனம் சேரவேண்டும்! அவர்கள் மூலம், பலரையும் அடைந்தால் மேலும் சிறப்பு. உங்களுக்கு கிடைக்கும் எந்த வாய்ப்பின் மூலமாவது - இப்படத்தை ஒருமுறை(யாவது) பாருங்கள்; வாழ்க்கையின் பல நிகழ்வுகளை பிரதிபலித்து நினைவூட்டும்.
இப்படம் - ஏதோவொரு விதத்தில்; நம் வாழ்க்கையை ஒத்திருக்கும்!!!

வெள்ளி, டிசம்பர் 01, 2017

அண்ணாதுரை (2017)


       அண்ணாதுரை - என் பள்ளி நண்பன் திரு. G. சீனுவாசன் அறிமுகமாகி இயக்கியிருக்கும் படம். நேற்று (நவம்பர் 30, 2017) வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்திற்கான முன்னோட்டத்தில்  குறிப்பிட்டு இருந்ததுபோல்; இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். இது படத்தின் விமர்சனம் எழுதும் தருணம்; என்முன் இருப்பவை இரண்டு சவால்கள்:
  1. சில நேரங்களில், அலுவல் சார்ந்த பரிந்துரைக் கடிதத்தை சிலரிடம் கேட்கும்போது; நம்மையே "ஓர் வடிவமாய் எழுதி" கொடுக்க சொல்லிவிடுவார்கள். பிறரைப் பற்றி எதை வேண்டுமானாலும் எழுதமுடிந்த நமக்கு, நம்மைப் பற்றி எழுதுவது எத்தனை சிரமானது என்பது; மேற்குறிப்பிட்ட நிலை வாய்ப்பின் புரியும். இப்படத்திற்கு விமர்சனம் எழுதுவதும் அதே நிலைதான் - அவனைப் பற்றி எழுதுவது, என்னைப்பற்றி எழுதுவதைப் போலத்தான்.
  2. ஸ்கிரிப்டைப் படிக்கும்போது, என்னுள் எழுந்த கற்பனைகளை; படத்தின் காட்சிகளுடன் ஒப்பிடாமல் இருப்பது சாத்தியமே இல்லை! ஆனால், என் திருப்தியின்மை; எக்காரணம் கொண்டும் விமர்சனத்தில் வெளிப்படக்கூடாது.
   இவ்விரண்டு சவால்களையும், மிகக்கவனமாய்/மிகச்சரியாய் எதிர்கொண்டு; நேர்மையான விமர்சனத்தை இங்கே கொடுத்திருக்கிறேன் என்றே நம்புகிறேன். 😊🙏


நிறைகள்:
  • கந்துவட்டிக் கொடுமையால், திரைத்துறையைச் சார்ந்த ஒருவர் தன்னுயிரை இழந்திருக்கும் வேளையில்; ஓர் "சராசரியான முதலீட்டில்" படத்தைத் தயாரிக்கும் வண்ணம்; கதையை, ஓர் அறிமுக இயக்குனர் கையாண்டிருப்பது சிறப்பு. முதல்படத்தில் தன்னை நிரூபிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் "பிரம்மாண்டம் என்னும் மாயையில் சிக்காமல்"; சிக்கனமாய் படத்தை முடித்திருக்கும் இயக்குனருக்குப் பாராட்டுகள். இதுபோன்ற திரைக்கதைகள் பெருகி, இயல்பான தயாரிப்பாளர்கள் பெருகட்டும்/வளரட்டும்! "வளமும்/பலமும்" இருப்போர் மட்டும் பிரம்மாண்டத்தின் பின்னே செல்லட்டும்!
  • சிக்கனத்திற்கு மிகச்சிறந்த உதாரணம் - படத்தின் ஆரம்பக் காட்சிகள்! சமீபத்திய படங்கள் பலவற்றில், டைட்டிலின் "கிராஃபிக்ஸ்" மாயாஜாலங்களில் பணத்தை செலவிடுகிறார்கள். சில படங்களில், கதையின் சாராம்சத்தை விளக்குவதாய் அமைந்தாலும் - அவை தேவையா? என்ற கேள்வி எழும். அப்படியேதும் இல்லாமல்; படத்தின் காட்சிகளைப் பின்னணியில் வைத்திருப்பது சிறப்பு. இதை ஏதோ "தமிழ்த்திரை வரலாற்றிலேயே, முதன் முதலாக" என்பதாகச் சித்தரிக்கவில்லை! ஆனால், அப்படியிருந்த எதார்த்தத்தை; மீண்டும் கொண்டு வந்திருப்பதும்/செலவைக் குறைத்திருப்பதும் - குறிப்பிடப் படவேண்டியவை!
  • "டைட்டில்" காட்சியின் போது; மதுக்கடைக்கு மதுவருந்த செல்லும் கதாநாயகன், அங்கு மதுவருந்தும் மாணவர்களை விரட்டியடிப்பார். அதுபோன்ற காட்சிகளை, நிஜவாழ்வில் பார்த்துவிட்டு  வெறுமனே கடப்போர் பலரும்; அதைக் காணொளியாய் எடுத்து "காமெடி கருத்து" சொல்லும் சிலரும் சேர்ந்ததாய் - இச்சமூகம் இருக்கும்போது - மதுவருந்த செல்லும் ஒருவர், அங்கேயே/அப்போதே கண்டிக்கும் காட்சி(யி/யா)ல்; மதுவின் விளைவை உணர்த்தும் - கதாநாயகப் பாத்திரப் படைப்பில் வெளிப்படுகிறது, இயக்குனரின் அக்கறை! ஆரம்பக்கட்ட காட்சிகள் (10/15 நிமிடங்கள் வரை) - இயக்குனராய், அவனின் திறமையை - அழுத்தமாய்/ஆழமாய் உணர்த்தி இருக்கிறது.
  • முதல் காட்சியில் துவங்கி, இறுதிவரை - எதார்த்தமான காட்சிகளுடன்; எந்த "செட்"டிங்கும் இல்லாமல்; இன்னமும் இயற்கையோடும்/இயல்போடும் என் கிரமாத்தின் அருகிலிருக்கும் "திருக்கோவிலூர்" நகரை - அப்படியே காட்டியிருப்பது - அவனின் படமாக்கும் திறமையை கூர்மையாய் விவரிக்கிறது. கிராமமோ/நகரமோ/பெருநகரோமோ - இவ்வித இயல்புதான் நிலைத்து எஞ்சும். அதில், நிலையாய் இருந்திருக்கும் இயக்குனருக்குப் பாராட்டுகள். இம்மாதிரி, இயல்போடு வெளிவரும் படங்கள் மிகவும் குறைவு. ஓர் உதாரணம்: ஓர் காட்சிக்கு, திரு. ஜனார்த்தனன் என்ற எங்கள் நண்பனொருவனின் வீடு பயன்படுத்தப் பட்டிருக்கும்  - நேரில் காணும் அதே இயல்பு/அழகு!
  • தமிழ்த் திரையுலகமே "பேய்" மற்றும் "(எரிச்சலூட்டும்)ஹீரோயிசத்தை" நம்பி படங்களை எடுக்கும் வேளையில்; என்றும் பசுமையான "உறவுகளையும்/உணர்வுகளையும்" முன்வைத்து, ஓர் திரைக்கதையை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.
  • "இந்த உலகத்துக்கு... பழி சொல்லத்  தெரியுமே தவிர; வழி சொல்லத் தெரியாது!" - படத்தின் துவக்கத்தில் வரும் வசனத்தின் கூர்மை; படம் தொடரத் தொடர மென்மேலும் கூர்மை அடைகிறது. வெறும் "பன்ச் டையாக்குகளாய்" கேட்டு சலித்த நம்மில் பலருக்கும்; இவ்வித "வசனங்களின் உண்மையான வாசம்" ஓர் புது அனுபவத்தை அளிக்கும். "வசனம் எழுதுவது ஓர் கலை!" என்பதை முதல் படத்திலேயே நிலைநாட்டி இருப்பது இயக்குனருக்கு கிடைத்திருக்கும் வரம்; அவ்வரம் தொடரட்டும்!
  • பல காட்சிகளிலும், வழக்கமான திரைப்படங்கள் போல், அடுத்த காட்சியை நம்மை யோசிக்க வைத்து; அதுபோலவே தொடரவும் செய்து, ஆனால் அடுத்தக் காட்சியிலேயே அதைத் தகர்த்து; வேறொரு கோணத்தில் நகர்த்துவது அருமை. படம் முழுவதும், இம்மாதிரியான காட்சிகள் நிறைந்திருக்கின்றன. "சுவராஸ்யமான திரைக்கதையை" இப்படியும் அமைக்கலாம் என்பதற்கு இப்படமோர் உவமை!
  • தொடர்ந்து "செண்டிமெண்ட்" படங்களில் நடித்திருந்தாலும், திரு. விஜய் ஆண்டனிக்கு இந்தப் படம் மிகப்பெரிய சவாலாய் இருந்திருக்கும்! அவருடைய நடிப்புத்திறன் பல இடங்களில், மேம்பட்டு வெளிப்படுகிறது. இயக்குனரும்/நடிகரும் ஒருங்கிணைந்து இதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் - இருவருக்கும் வாழ்த்துகள்.
  • "கதாநாயகியின் அப்பாவின்" கதாபாத்திரம் மிக அருமை! "மனிதமும்/அன்பும்/எதார்த்தமும்" நிறைந்த; அவற்றை உணர்ந்த சராசரி மனிதனின் சாயல். ஒரு சராசரி மனிதன் இப்படித்தான் இருப்பான்! அவனுள், வெளியுலக உணர்வுகளும்/உணர்ச்சிகளும் திணிக்கப்படும்போது தான், அவனின் செயல்பாடுகள் - உறவு/உணர்வு/உணர்ச்சி - இவைகளைக் கடந்து செல்லும். அந்த கதாபாத்திரத்தைக் கூர்ந்து கவனியுங்கள் - நம்மில் பலரும், வெளியுலகத் தாக்கத்தால் தான்; இயல்பில் இருந்து மாறி நிற்கிறோம் என்பதை உணர்த்தும்.
  • "கதாநாயகனின் தாயின்" கதாபாத்திரமும் - எதார்த்தமும்/தாய்மையும்/மனிதமும்/கண்டிப்பும் - நிறைந்த கதாபாத்திரம்! "கிளீஷேவான" திரை-அம்மாக்களையே பார்த்த நமக்கு; இந்தப் படம் - நம் ஒவ்வொருவரின் தாயையும் நினைவுக்கு கொண்டுவரும். நிஜவாழ்வில் ஒரு தாய் இப்படியே இருப்பாள். அன்பை - அலையாய்/கடலாய், பரந்து/விரிந்து காட்டும் அவளேதான்; கண்டிப்பை - நெருப்பாய்/எரிமலையாய் உமிழ்ந்து/பொழிந்து கொட்டுவாள்! திரையிலும், நம் நிஜவாழ்வு அம்மாக்களை - மீண்டும் கொண்டு வர, இப்படம் அடிக்கல் இட்டிருக்கிறது என நிச்சயமாய் சொல்லலாம். உடையில் கூட - சீரியல் சாயலோ/சினிமா சாயலோ இல்லை. சபாஷ் டா சீனுவாசா!
  • தயவுசெய்து, இந்த விமர்சனத்தைப் படித்த பின்னர் படம் பார்ப்போர்; இவ்விரண்டு கதாபாத்திரங்களை - மனதில் இருத்தி, ஆழ்ந்து கவனியுங்கள். இதைக் குறிப்பிட காரணம் - ஒவ்வொரு மனிதனின் வாழ்வுக்கும்; அவனுடைய தாயும்/மருதந்தையும்(மாமனார்) இரண்டு அதிமுக்கியமான உறவுகள். இவையிரண்டும் - இல்லற வாழ்வில் இணையும்; ஓர் ஆண்/பெண் இருவரின் முக்கியமான வழிநடத்தும் உறவுகள். இவ்விரண்டு உறவுகளின் அன்பும்/அரவணைப்பும்/அடித்தளமும் - கிடைக்கும் மனிதனின் வாழ்வியல் சிரமங்கள், பெருமளவில் குறையும்!
  • சண்டைக் காட்சிகள் அனைத்தும், பெரும்பான்மையில், மிகவும் யதார்த்தமாய்/சுருக்கமாய்/சிறப்பாய் இருக்கின்றன! இவ்விதமான இயல்பான சண்டைக் காட்சிகளைப் பார்ப்பது - இப்போது அபூர்வமாய் ஆகிவிட்டது. இன்னமும் சிறப்பாய் அமைந்திருக்க ஓர் பரிந்துரை உண்டு; அதை இயக்குனருக்கு தனியே தெரிவிக்கிறேன்.
  • முதல் அனுபவம் எனினும், திரு. விஜய் ஆண்டனி "எடிட்டிங்கை" சிறப்பாய் செய்திருக்கிறார் என்பது என் புரிதல். என்னறிவுக்கு எட்டிய வகையில், எப்பிழையும் இல்லை; இசையிலும், குறிப்பிட்டு சொல்ல எப்பிசகும் இல்லை - அவருக்கும் என் வாழ்த்துகள்.
  • ஒவ்வொரு காட்சியும், இயக்குனரின் படமாக்கும் திறத்தை பளிச்செனப் பறைசாற்றுகிறது. ஒளிப்பதவி இயக்குனர், திரைக்கதை இயக்குனரின் மனதை/தேவையை ஆழப் புரிந்திருப்பது விளங்குகிறது. அவர்கள் இருவரும், காட்சிகளை இருகண்களாய் பார்த்து செதுக்கி இருப்பது புரிகிறது. அவருக்கும் வாழ்த்துகள்.
  • பாடல்வரிகள் அருமை! படத்தின் கதையோடு ஒத்துப்போகும் வண்ணம், பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைப்பதும் ஓர் வரம்! ஒரு பாடலைத் தவிர (விளக்கம் கீழே), மற்றனைத்தும் படத்தோடு இணைந்து பயணிப்பவை. பாடலாசிரியருக்கு என் அன்பும்/வாழ்த்துகளும்.

குறைகள்:
  • இதைச் சொல்லாமல் தவிர்த்துவிடலாம் என ஆழ்ந்து யோசித்தும்; என் மனம் ஒப்பவில்லை.  அண்ணாதுரையின் மிகப்பெரிய பலம் - ஸ்கிரிப்ட்டின் தரம்! திரு. விஜய் ஆண்டனி சிறந்த நடிகர் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. ஆனால், ஸ்கிரிப்டின் உயிர்ப்பு, பார்வையாளனுக்குக் கடத்தப்படவில்லை என்பதை பின்வரும் உதாரணத்தால் விளக்க விரும்புகிறேன்: மகாநதி திரைப்படத்தில், கதாநாயகன் சிறையில் இருப்பார்; "கைதிகளைச் சந்திக்கும் தினம்" ஒன்றில் கதாநாயகனின் மகள் "தாவணி" அணிந்து, தன் பாட்டியின் பின்னே ஒளிந்திறந்து - பின், மெதுவாய் கதாநாயகனுக்கு தெரியும் வண்ணம் நகர்வாள். தன் மகளை "முதன்முதலாய், தாவணியில் பார்க்கும் தகப்பனின் சந்தோசத்தை" மிகச்சிறப்பாய் வெளிப்படுத்தும் அதே நேரத்தில்; மகள் பருவமடைந்து விட்டதை உணர்ந்த ஆதங்கமும் வெளிப்படும். தன் மருதாயை(மாமியார்) நோக்கி சைகையால் அதை உறுதி செய்துவிட்டு; "எப்போ?!" என வினவுவார்; அழுகையும்/ஆற்றாமையையும் இணைந்து உணர்வும்/உணர்ச்சியும் வெளிப்படும். அது - பார்வையாளனுக்கு, அப்படியே பரிமாற்றப்படும். அந்தக் காட்சியின் பலம் - அந்த ஸ்கிரிப்ட்! அதை, நம்மிடம் கொண்டு சேர்த்தது - அந்த நடிப்பு! அவ்விரண்டும் ஒருபுள்ளியில் மிக அருமையாய் இணைந்திருக்கும்.
  • அதற்காக, அதையே எதிர்பார்க்கிறேன் என்பதல்ல இங்கே பொருள்: அண்ணாதுரையில் - "மிகக்கூரிய வசனத்தால், அண்ணனின் ஒட்டுமொத்த ஒழுக்கத்தையும்" - சந்தேகத்தால் தம்பி கலங்கப் படுத்தும் காட்சியொன்று இருக்கிறது! எத்தனை வாய்ப்புகள் அந்த காட்சியில்? அந்த காட்சி ஆரம்பிக்கும் போது, வீட்டினுள் நுழையும் தம்பி "வழியில் இருக்கும் வாலியை, எட்டி உதைக்கும்" அந்த உணர்ச்சி கூட - அக்கேள்வியைக் கேட்கும் போது, தம்பியின் முகத்தில் இல்லை! கேள்வியை எதிர்கொண்ட அண்ணனின் உணர்ச்சியும்/உணர்வும் எப்படி வெளிப்பட்டு இருக்கவேண்டும்?! - இரண்டுமே தவறியிருக்கிறது. அவ்விரண்டு உணர்வுகளும்/உணர்ச்சிகளும் நமக்கு சரியாய் பரிமாற்றப்பட்டு இருந்தால் - நம்மைக் கட்டிப்போட்டு இருக்கும்! படம் முழுவதிலும், இம்மாதிரியான நிறையக் காட்சிகள் இருந்தும்; தவறி இருக்கிறது.
  • "கதாநாயகியின் நடிப்பு" மேலும் ஏமாற்றம் அளிக்கிறது. மேற்குறிப்பிட்ட முன்னோட்டத்தில் "அழகான குறும்பு செய்யும் பெண்களால் கவரப்படாத - பெண்களோ/ஆண்களோ இருக்கமுடியாது! இப்படத்தின், கதாநாயகி, அனைவரையும் நிச்சயம் கவர்வார்!" - என எழுதி இருந்தேன்! ஆனால், பெருத்த ஏமாற்றம்; நிச்சயமாய், முன்பே அறிமுகத்தில் இருக்கும் "இந்த குறும்புள்ள" மற்றும் அதிக சம்பளம் எதிர்பார்க்காத ஒரு கதாநாயகியைத் தேர்வு செய்திருக்கலாம் என்பது என் புரிதல். ஆனால், மேற்குறிப்பிட்டது போல்; கதாநாயாகியின் அப்பா & கதாநாயகனின் அம்மா துவங்கி, மற்ற கதாப்பாத்திரங்கள் அனைத்தும் மிகச்சிறப்பாய் உணர்வுகளை/உணர்ச்சிகளைப் பரிமாற்றி இருக்கிறார்கள். கதாநாயகனும்/கதாநாயகியும் சளைத்தவர்கள் அல்ல எனினும்; அவை இன்னும் மேம்பாட்டு இருக்கலாம்.
  • "EMI ஆய் மாறிப்போன, GST பாடல்" - தேவையற்ற இடைச்செருகல்! என்னதான் "பாடல் காட்சியிலும், ஓர் இயக்குனரின் தரத்தை சிறப்பாய் உணர்த்துவதாய் இருப்பினும்" அப்பாடல், நிச்சயமாய் தவிர்க்கப்பட்டு இருக்கவேண்டும். மற்ற அனைத்துப் பாடல்களும், கதையின் உயிர்ப்பைக் குலைக்காமல்; நம்மோடும்/கதையோடும் இனிதே/இணைந்து பயணிக்கும் போது - இப்பாடல் மட்டும் திருஷ்ட்டி!
  • அண்ணனும்/தம்பியும் ஒரேமாதிரியாய் இருப்பதான "தோற்ற மாற்றங்கள்" இருவேறு இடங்களில், இருவேறு விதங்களில் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன! "அண்ணாதுரை என்பதை உறுதி செய்யும்" அடையாளத்தை, ஒரு காட்சியில்; நண்பனிடம், அண்ணாதுரையே குறிப்பால் உணர்த்துகிறான். வேறு காட்சியில், அதை அண்ணாதுரையை ஒருதலையாய் காதலிக்கும் பெண்ணொருவள் அறிகிறாள். எல்லோருக்கும் தெரியும்படி, அந்த அடையாளம் இருப்பதால்; முடிவுக்காட்சி மனதில் நெருடலை உருவாக்குகிறது! 
  • இந்த குறைகள் எல்லாம், எளிதில் தெரிபவை; படம் முடிந்து "முதல் வடிவத்தை" பார்க்கும்போதே, இவை உணரப்பட்டு; களையப்பட்டு இருக்க வேண்டும்! எப்படி தவற விட்டார்கள் என்பது வியப்பாய் இருக்கிறது; பல படங்களிலும், இந்த வியப்பு இருக்கவே செய்கிறது. "நம் பிள்ளை" என்ற சார்பைக் கடந்து; அதே வேளையில் "நம் பிள்ளை" என்ற அன்போடு அணுகும் பெற்றோர்களை போல்; நம்முடைய படைப்புகளையும் நாம் அணுகுதல் மிக முக்கியம். வெகு நிச்சயமாய், இதை அடுத்த படத்தில்; என் நண்பன் மிகச் சிறப்பாய் கையாள்வான், கையாள வேண்டும்! அதற்கு என், முற்கூட்டிய வாழ்த்துகள்.
  • முதல்படம் என்பதால், மேற்குறிப்பிட்ட குறைகளை எளிதில் மறக்கலாம்! இயக்குனருக்கு இருந்த நெருக்கடியால் கூட, இவை நிகழ்ந்திருக்கும். அடுத்தப் படத்தில் இம்மாதிரியான குறைகள் நிச்சயம் களையப்படவேண்டும். "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்" மட்டுமல்ல; நண்பனும் கெடுவான். எனவே, நண்பனாய் மட்டுமல்லாது, ஓர் பார்வையாளனாய் ஆகவும் இவற்றைக் குறிப்பிடுவது என் கடமையாகிறது.

தீர்ப்பு:
  • படம் முடிந்தபின், பின்வரிசையில் அமர்ந்திருந்தோரில் ஒருவர் உரத்த குரலில் "இந்தப் படத்தால், சமுதாயத்துக்கு என்ன கருத்து சொல்ல வருகிறார்கள்?" என்ற விமர்சனம் வைத்தார். அதே கேள்வியை, நேற்று காலை படம் பார்க்கும் முன் என்னையே கேட்டுக் கொண்டதால், என்னிடம் பதில் தயாராய் இருந்தது! திரும்பி அவருக்குப் பதில் சொல்லும் ஆவல் எழுந்தது; இங்கே விமர்சனத்தில் சொன்னால் போதுமானது எனத் தவிர்த்து விட்டேன்.
  • இந்தப்படம் சொல்லும் கருத்து என்ன? - முதலில், இல்லற/சமூக வாழ்வில்; நாம் இழந்து கொண்டிருக்கும் உறவுகளை/உணர்ச்சிகளை/உணர்வுகளை - நமக்கு நினைவூட்டும். வாழ்க்கை ஓட்டத்தில், எதற்கு ஓடுகிறோம் என்ற தெளிவு கூட இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கும் நமக்கு; இந்த நினைவூட்டல் மிக அவசியமாகிறது! "உறவுகளை எப்படி அணுகவேண்டும்?" என்பதைப் பல கட்சிகளின் மூலம் நமக்கு, நினைவூட்டி இருக்கிறார் இயக்குனர்! அவற்றை உணர்ந்து, நாம் இழந்தவற்றை நாமே மீட்டெடுக்க முயல்வோம். இதுதான், இந்தப்படம் நமக்கு சொல்லும் கருத்து.
  • தயவுசெய்து, வாய்ப்புக் கிடைப்போர் இப்படத்தைத் திரைப்படத்தில் "உறவுகளோடும்/ஊரோடும்" சேர்ந்து பாருங்கள்! அப்படி இணைந்து பார்ப்பதில், நம்முடைய மீட்டெடுத்துதல் துவங்கட்டும். மேலும், படத்தில் இருக்கும் "உணர்வு/உணர்ச்சி" பரிமாறப்படும் காட்சிகள்; நமக்கு அருகில் இருப்போர் வெளிப்படுத்தும் பல்வித உணர்ச்சிகளும்/உணர்வுகளும் நமக்கும் பரிமாறப்படும். வெகு நாட்களுக்குப் பின், ஒரு திரைப்படம் முழுவதிலும் "எவ்வித சலசலப்பும்; காமெண்ட்டும்" இல்லாமல்; ஒட்டுமொத்த பார்வையாளருக்கு அமைதியாய் படம் பார்த்ததை உணர்ந்தேன். அதுவோர் மிகப்பெரிய சாதனை! அந்த அமைதி, பார்வையாளர்கள் படத்தோடு ஒன்றியிருந்ததை உணர்த்தியது.
  • மேலுள்ள குறைகளைச் சுட்டிக்காட்டியது கூட; சில காட்சிகள் "உணர்வு/உணர்ச்சி" பரிமாற்றங்களை அளிக்க தவறினாலும், ஸ்கிரிப்டில் இருந்தது எனக்குப் பரிமாற்றப்பட்டது போல்; உங்களுக்கும் பரிமாறப்படவேண்டும் என்ற அக்கறையில் தான்! எனவே, காட்சிகளின் அடிப்படையை ஆழ உள்வாங்கிப் பாருங்கள். ஆம்... உங்களைப் போலவே; நானும், இந்த விமர்சனத்தைப் படித்துவிட்டு, இன்னுமோர் முறைப் பார்த்து அனுபவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்.
தவறாமல் படத்தைப் உறவோடும்/ஊரோடும் இணைந்து 
திரையரங்கில் பார்ப்போம்... 
இழந்த உணர்வு/உணர்ச்சி இன்னபிறவற்றை மீட்டெடுப்போம்!!!   

வியாழன், செப்டம்பர் 07, 2017

அண்ணாதுரை - ஓர் முன்னோட்டம்


     அண்ணாதுரை - உயர்நிலைப் பள்ளியில், என்னுடன் பயின்ற என் நண்பன் திரு. சீனுவாசன் அறிமுக-இயக்குநராக இயக்கி; விரைவில், வெளிவர இருக்கும் தமிழ்த் திரைப்படம். இணையாக "இந்திரசேனை" என்ற பெயரில், தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. தேர்ந்தெடுத்தத் திரைப்படங்களுக்கு மட்டும், விமர்சனம் எழுதும் நான்; முதன்முதலாய், ஒரு திரைப்படத்திற்கு முன்னோட்டம் எழுதியிருக்கிறேன். விமர்சனங்களில், கதையைப் பற்றி எதையும் குறிப்பிடக் கூடாது என்பதில் உறுதியாய் இருப்பேன். ஆனால், விமர்சனம் சுவராஸ்யமாய் இருக்கவேண்டும் என்ற அக்கறையுண்டு. அதே அடிப்படையிலேயே, இந்த முன்னோட்டம் எழுதப்பட்டு இருக்கிறது.
  • இம்முன்னோட்டத்திற்கு முதற்காரணம் - என் நண்பன் சீனிவாசனின் திரைப்படம் என்பதில், எந்த மாற்றுக்கருத்தும் இல்லை; ஆனால், அது மட்டும் காரணம் அல்ல! இத்திரைப்படத்தின் முழு "ஸ்கிரிப்ட்"டையும் படித்து; அது என்னை உண்மையாய் கவர்ந்ததால் தான், இதை எழுதியிருக்கிறேன்.
  • ஏறக்குறைய 27 ஆண்டுகளுக்குப் பின்னர், ஓர் நாள் வாட்ஸ்-ஆப்பில் தொடர்பு கொண்டோம். உடனே, தொலைபேசியில் உரையாடினோம்! உரையாடல் முடியும்போது "இளங்கோ! உனக்கு ஸ்கிரிப்டை அனுப்புகிறேன்; படிச்சுட்டு சொல்லேன்!" என்றான். என்னால், இன்னும் அதை நம்பமுடியவில்லை!
  • 27 ஆண்டுகளாய், ஒரு வார்த்தைக் கூட பேசாமல் இருந்த நிலையில், எந்த நம்பிக்கையில் அப்படி சொன்னான்? அவன் நம்பிக்கையைக் காக்கும் வண்ணம், எனக்கு ஸ்கிரிப்டை அனுப்பியதை; என்னவள் மற்றும் என் நண்பன் சுரேஷ் பாபு மட்டுமே அறிவர். அவர்களுக்கு கூட, அதைச் செய்தியாய் தான் சொல்லி இருக்கிறேன்; அதைப் பகிரவில்லை. அதுதான், அவன் நம்பிக்கைக்கு நான் செய்த மரியாதை!
  • "ஸ்கிரிப்ட்டை" அனுப்புகிறேன் என, அவன் சொன்ன பிரம்மிப்பு அடங்குவதற்குள், அனுப்பியும் விட்டான். அதே பிரம்மிப்போடு, படிக்க ஆரம்பித்தேன். இன்றைய காலக்கட்டத்தில், 90 விழுக்காடு திரைப்படங்களில்; பார்வையாளர்களால், அடுத்தடுத்த காட்சிகளைக் கணிக்க முடிகிறது. இதைப் பார்வையாளனின் திறமை என்பதா? அல்லது படைப்பாளியின் திறமையின்மை என்பதா?? - தெரியவில்லை! அந்த "பார்வையாளனின்" திறமையோடு, திமிரும் கலக்க; 2-ஆவது காட்சியிலேயே, என் கணிப்பு தலைதூக்கியது! அதை அதே காட்சியிலேயே, சுக்குநூறாய் உடைத்ததில் துவங்கியது - அவனின் இராஜாங்கம்! ஸ்கிரிப்ட்டை எனக்கு அனுப்பியதில் இருந்த பிரம்மிப்பு, இப்போது அவனின் ஸ்கிரிப்ட்டின் மேல் கடந்தது.
  • படம் முழுவதுமுள்ள, இம்மாதிரியான திரைக்கதை பார்வையாளர்களைக் கவர்ந்து, படத்தின் சுவராஸ்யத்தைக் கூட்டும். சில காட்சிகள், நாம் கணித்தது போலவே தொடரும்; ஆனால், ஓரிரு நிமிடங்களில் அதைத் தகர்த்து, வேறொரு தளத்தில் இருந்து கதைப் பயணிக்கும். திரைக்கதை தான் அவனின் பலம்; அதுதான், படத்தின் பலமும்!
  • 5 காட்சிகள் வரைப் படித்துவிட்டு, அன்றிரவு உறங்கினேன்; அதிகாலை 02:30 மணியளவில், உறக்கம் களை(ந்/த்)து; தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அன்றே, முழு ஸ்கிரிப்ட்டையும் படித்துவிட்டு, என் எண்ணங்களைத் தொகுத்து; ஓர் மின்னணுக் கோப்பாய் அனுப்பினேன். பெரும்பாலும், பல இயக்குனர்களின் முதல் படத்தில் - அதீத திறமை வெளிப்படும். அதைத் தொடர்ந்து, வெளிப்படுத்தி வெற்றியடைவோர் - மிகச் சிலரே! அந்த பட்டியலில், என் நண்பன் சேர்வான், என்ற நம்பிக்கை மிகுந்தது! அனுபவமான வசனங்கள் மற்றும் இயல்பான/உணர்வுப்பூர்வமான காட்சி அமைப்புகள்.
  • ஆழ்ந்த அர்த்தத்துடன் எழுதுவதோடு, குசும்பாயும் வசனங்கள் எழுதும் திறமை; இதுவோர், கொடை! படைப்பாளியின் வெற்றி, படைப்பைப் படிக்கும்போதே; வாசகனைக் கற்பனையில் காட்சிப்படுத்த வைத்து, சிந்தனையைத் தூண்டுவதில் இருக்கிறது. அதை மிகக் சிறப்பாய் செய்திருக்கிறான். இதை செய்யமுடியும் ஒரு படைப்பாளியால், வெகு நிச்சயமாய், அதை அற்புதமாய் காட்சிப் படுத்தமுடியும்; அதுதான் ஒரு படைப்பாளியின் வெற்றி! அந்த வகையில், என்னளவில், என் நண்பன் வெற்றியடைந்து இருக்கிறான்.
  • பல திரைப்படங்களில், (மன்னிக்கவும்!) கதாநாயகியைக் "காட்சிப்பொருளாய்" தான் காண்பிக்கிறார்கள். அதனாலேயே, அந்த நடிகைகளை நான் வெறுப்பதுண்டு! நிச்சயமாய், அவர்களின் தவறல்ல; அது, படைப்பாளியின் தவறு! அப்படிப்பட்ட படங்களில், கதாநாயகியே தேவையில்லை என்பதே என் எண்ணம். 2013-ஆம் ஆண்டு, அப்படியோர் அபூர்வ திரைப்படம் வெளிவந்தது; அதன் கதாநாயகியின் பாத்திரப்படைப்பு பற்றி, விமர்சனத்தில் சிலாகித்து எழுதி இருக்கிறேன். அவ்வகையில், அண்ணாதுரை படத்தில் - கதாநாயகியின் பாத்திரப் படைப்பு, மிக அருமை! "அழகான குறும்பு செய்யும்" பெண்களால் கவரப்படாத - பெண்களோ/ஆண்களோ இருக்கமுடியாது! இப்படத்தின், கதாநாயகி, அனைவரையும் நிச்சயம் கவர்வார்!
  • திரு. விஜய் ஆண்டனி நல்ல நடிகர் என்பது தெரியும்! ஆனால் "அவரின்  நடிப்புத் திறனுக்கு; இதுவரை, மிகச் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை!" என்பது என் புரிதல். அக்குறை, இப்படத்தில் பெரிதும் நிவர்த்தி செய்யப்படும். ஸ்கிரிப்ட்டைப் படிக்கும் போது, என்னுள் காட்சிகளாய் விரிந்த... இல்லையில்லை! என்னுள் காட்சிகளாய் விதைத்த, என் நண்பனின் எதிர்பார்ப்புகளை; நிவர்த்தி செய்யும் அனைத்து திறமைகளும், அவரிடம் இருக்கிறது. "அதை மிகச் சிறப்பாய் செய்திருப்பார்!" என நம்புகிறேன். வெகு நிச்சயமாய், இத்திரைப்படம் வெளிவந்த பின்; திரு. விஜய் ஆண்டனி "நல்ல நடிகர் என்பதிலிருந்து, சிறந்த நடிகர்" என்ற எண்ணத்தில், நம் மனதில் இருப்பார். அவருக்கும் என் வாழ்த்துகள்.
  • கதாநாயகன்/கதாநாயகி மட்டுமன்றி; அவர்களின் குடும்பம், அவர்களுடன் பயணிப்போர் மற்றும் பிற பாத்திரப் படைப்புகளும் அருமையாய்/இயல்பாய் இருக்கின்றன. அந்த இயல்பான பாத்திரப்  படைப்புகள், இயல்பான வசனங்களோடு நம்மை வசீகரிக்கும். இப்படம், கொஞ்சம்/கொஞ்சமாய் நாம் இழந்து கொண்டிருக்கும் உறவுகளை/உணர்வுகளை; நமக்கு, நினைவாய் மீட்டுத் தரும். 
*******
  • "படைப்பின் தரத்துடன் சேர்ந்து, தனிமனிதனாய் ஒரு படைப்பாளி எப்படி இருக்கிறான்?!"  என்பதிலும் ஒரு படைப்பாளியின் வெற்றி இருக்கிறது! அவ்வகையில், மேற்குறிப்பிட்டது போல்; தன் முதல் படைப்பையே, எனக்கு அனுப்பும் அந்த நம்பிக்கையில் துவங்குகிறது, அவனின் தனிமனிதத் தரம்.  பள்ளிப் பருவத்தில், நண்பர்கள் எங்களை எப்படி கவனித்து இருக்கிறான் என்பதை; அவன் விவரிக்கும் போது, அவனை மேலும் பிரம்மிக்கிறேன். அந்தப் பருவத்தில், என் போன்றோர் விளையாட்டாய் வாழ்ந்து கொண்டிருந்த போது; இவனெப்படி அதுபோல் ஆழ்ந்து கவனித்து இருக்கிறான்? அது தான் ஒரு படைப்பாளியின் திறன்! ஆம், நடப்பவற்றை ஆழ்ந்து கவனிப்பது, படைப்பாளியின் மிகப்பெரிய பலம். அவன் அப்போதே படைப்பாளியாய் தான் இருந்திருக்கிறான், என்பது இப்போது புரிகிறது.
  • அவனுக்கிருந்த வேலைப்பளு காரணமாய் (கடந்த சூலையில், இந்தியா சென்றபோது), படக்குழுவினர் தங்கியிருந்த; விடுதிக்கு சென்றும், அவனைக்  காணமுடியவில்லை! நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து, ஏறக்குறைய 27 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இப்போது நல்ல தொடர்பில் இருக்கிறோம்; இப்பதிவை, வரைவாய் எழுதும் முன் கூட; நாங்கள் வாட்ஸ்-ஆப்பில் உரையாடினோம். அத்தனை வேலைப்பளுவிலும், நட்புகளுக்காய்; நேரம் ஒதுக்கி உரையாடும், அவனின் இயல்பு அவனை இன்னும் உயரத்திற்கு இட்டுச்செல்லும்.
படைப்புடன், சீனுவின் தனிமனித தரமும் இணைந்து...
"அண்ணாதுரையை" வெற்றிப்படமாக்கும் என்பதில், எந்த மாற்றுக்கருத்தும் இல்லை!

"அண்ணாதுரையை" படைத்தவனுக்கும்...
"படைப்பில் துணைபுரிந்த அனைவருக்கும்" என் வாழ்த்துகள்!!

*******

- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு 
07092017
www.vizhiyappan.blogspot.com

{பதிவரைப் பற்றி: இளங்கோவன் இளமுருகு, இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சியாளர். தமிழ்ப் புலவரும், ஓய்வுப் பெற்ற ஆசிரியருமான; தன் தந்தை திரு. இளமுருகு அண்ணாமலை அவர்களால், தமிழ்ப்பால் ஊட்டப்பட்டு தமிழ்-பால் நாட்டம் கொண்டவர். "விழியமுதினியின் அப்பன்" என்ற பொருளில் "விழியப்பன்" எனும் புனைப்பெயரில் "விழியப்பன் பார்வை" எனும் தமிழ் வலைப்பதிவையும் (https://vizhiyappan.blogspot.com); "Vizhiyamudhini's Father Views" எனும் ஆங்கில வலைப்பதிவையும் (https://vizhiyappan-en.blogspot.com) எழுதி வருகிறார். சமூகம்/வாழ்வியல் சார்ந்த பார்வைகள் மற்றும் புரிதல்களை; தலையங்கம்/மனதங்கம் உட்பட பல பிரிவுகளில் எழுதி வருகிறார். குறிப்பிடப் படவேண்டியது - "திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை" என்ற பிரிவில், தமிழில் திருக்குறள் விளக்கவுரை மற்றும் "Thirukkural - Vizhiyappan's Translation" என்ற பிரிவில், ஆங்கிலத்தில் மொழியாக்கம் & விளக்கவுரை எழுதி வருவது ஆகும். இரண்டு வலைப்பதிவுகளில் "தினம் ஒரு குறள்" என பதிந்து வருகிறார். அவரைப் பற்றியும், அவரின் பதிவுகள் பற்றிமும் மேலும் அறிய விரும்புவோர்; மேலுள்ள இணைய இணைப்புகளைச் சுட்டவும்.}

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

திரு. பார்த்திபன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு...


           திரு. பார்த்திபன் அவர்களே,

      மேலுள்ள புகைப்படத்தைப் பார்த்தவுடன், எதைப்பற்றி எழுதப் போகிறேன் என்பது புரியும். எனவே, எழுதவிருப்பதைப் பற்றிய முன்னுரை அவசியமில்லை! ஆனால் உங்களின் மீதான என்னைப் போன்றோரின் அபிமானத்திற்கு, ஓர் முன்னுரை கொடுப்பது  அவசியமாகிறது:
  • உங்களின் தனித்தன்மை மட்டுமே, என்னைப் போன்றோர் உங்களின் அபிமானியாக இருக்க காரணம். உங்கள் தன்மையிலிருந்து நீங்கள் "சாதாரணனாய்" மாறிட விரும்பினால், அது உங்கள் உரிமை! அதை, எங்கள் எவராலும் தடுக்க முடியாது. ஆனால், அதைத் தவறென; முறையாய் சுட்டிக் காட்டவேண்டிய கடமை எங்களுக்குள்ளது. என் விமர்சனம் கூட  - "இதுவரை, உங்களைக் கண்ணியம் இழந்து விமர்சிக்காத" மற்ற அன்பர்களை போன்று, உங்கள் மேலிருக்கும் "அக்கறையோடே" எழுதப்படுகிறது.
  • திரைப்படங்கள் மட்டுமல்ல! நடைமுறை வாழ்க்கையிலும் என் போன்றோரை, உம் பால் ஈர்த்தவர் நீங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு, தாய்/தந்தை இருவரின் முதழெழுத்தைச் சேர்த்து "P.S" என்பதை இணைத்து பெயரிட்டது துவங்கி; உங்களின் பொதுசேவை உட்பட, பலவற்றை அதற்கு காரணமாய் சொல்லலாம். அதனால் தான்; திரையுலகில் இருக்கும் பலரின் நடைமுறை வாழ்வுப் பிரச்சனையை, வெறும் செய்தியாய் கடக்கும் பலரால், உம் வாழ்க்கையில் ஓர் பிரச்னை என்றால் "செய்தியாய் கடக்காமல், மனம் வருந்திட" செய்கிறார்கள்.
*******
  • சரி... மேற்குறிப்பிட்ட முன்னரையுடன், விடயத்திற்கு வருகிறேன். ஓர் திரைப்படத்தின் இசை-வெளியீட்டு விழாவில், நீங்கள் பேசிய காணொளியொன்றை மூன்று தினங்கள் முன் முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தீர்கள். அன்று காலையில் அதைப் படித்தத்தில் இருந்தே; மனது அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. நான் மட்டுமல்ல! அந்தப் பதிவின் பின்னூட்டங்கள்; ஆயிரக் கணக்கானோர் அதுபோலவே வருந்தியதை உணர்த்தியது. இன்னமும் கூட "நீங்களா, அப்படிப் பேசினீர்கள்?!" என்று நம்பமுடியாமல் வியந்து கொண்டிருக்கிறேன்.
  • பிரபலமான திரைப்படத்தின் இசை-வெளியீடு என்றால், அதில் உங்களின் பேச்சின்றி இருக்க வாய்ப்பே இல்லையெனும் அளவில்; எண்ணிக்கையற்ற இசை-வெளியீட்டு விழாக்களில் நீங்கள் பேசியிருக்கிறீர்கள்! ஆனால், இதுவரை எந்த பேச்சுக்கும் இப்படிப்பட்ட விமர்சனத்தை எவரும் பார்த்ததில்லை! "அதிமேதாவித் தனமாய் பேசுகிறார்!" என்பதே, சிலரின் அதிகப்படியான விமர்சனமாய் இருக்கும். அதைக்கூட, உங்கள் "தனித்துவமான சிந்தனை"க்கு கிடைக்கும் பாராட்டாக(வே) நினைக்கலாம்!
  • "அப்படியிருக்க, உங்களின் அந்தப் பதிவைப் பார்த்தவுடன்; அத்தனை விமர்சனங்கள் ஏன் எழுந்தன?!" - இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?! "அந்த மேடையில் பேசும்போதே உணர்ந்திருக்க வேண்டிய" நீங்கள்; பின் "உங்கள் முதல் பதிவுக்கான" விமர்சனங்களை படித்தவுடனாவது உணர்ந்திருக்க வேண்டும். அதையும் செய்யாமல் "கொடுத்த காசுக்கு மேல் கூவினேனா?!" என்ற தலைப்பிட்ட வேறோர் பதிவையும் இடுகிறீர்கள். இரண்டாவது பதிவைப் படித்தப் பின்னர்தான்; இந்த திறந்த-மடலை "நிச்சயம் எழுதியே ஆகவேண்டும்!" என்ற முடிவுக்கு வந்தேன்.
  • "கொடுத்த காசுக்கு(மட்டும்) கூவுவதும்" அல்லது "கொடுத்ததுக்கும் மேலாய் கூவுவதும்" உங்கள் விருப்பம்! ஆனால் "கூவுதல் என்ற அந்த இயல்புக்கும்/இலக்கணத்துக்கும்" உட்பட்டு கூவ வேண்டாமா? இப்படியா "டையனோசர் கர்ஜிக்கும் அளவுக்கும், சத்தமாய் கூவுவீர்கள்?!"
  • இன்னமும், உங்களுக்கு "அதிகமாய் கூவியது புரியவில்லை எனில்!" - அந்த "முட்டைப் பொடிமாஸ்" செய்தியை உதாரணமிட விரும்புகிறேன். உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்! அந்த செய்தியைச் சொன்ன பிறகு "ஆவது" சூப்பர்-ஸ்டார் போன்ற "மாஸ்"கள் நினைவில் வரவில்லையா?!" அந்நடிரை வைத்து "மாஸ்" படம் உருவாக்கலாம்! என்றால் தவறில்லை! ஆனால், அவரை "வைத்து மட்டும்தான், மாஸ்" படம் உருவாக்க முடியும்! என்பது எப்படி முறையாகும்?
  • "சூப்பர் ஸ்டார் எனும் மாஸை"க் கூட விடுங்கள்! "மாஸ்" படங்கள் என்றால், அவை வெற்றி பெற்ற பின், மற்றவர்கள் கூவ-வேண்டும்! சமீபத்திய உதாரணம் - "பாகுபலி 2"!. அப்படியோர்  "உலக மகா மாஸ்" கொடுத்தவர்கள் கூடவா நினைவுக்கு வரவில்லை?! அவர்களே, எந்த "கூவலும் இல்லாமல்" அத்தனை அமைதியாய் இருக்கும்போது; இப்படிப்பட்ட கூவல் அவசியம்தானா? - அதிலும் "இசை வெளியீட்டு விழா" மேடையில்?!
  • அதே நடிகரின், இரண்டெழுத்து படம் ஒன்றிற்கு "அடுக்குமொழியார்" கூவியதற்கு; கிடைத்த விமர்சனம் நினைவிருக்கிறதா? அதில் கூட, பெருமளவில் "அந்த நடிகரின், போட்டி-நடிகரின் இரசிகர்களின்" விமர்சனங்களே அதிகம்! என்னைப் போன்ற நடுநிலையானோர் கூட "அந்தக் கூவலை" விமர்சிக்க விரும்பவில்லை! ஆனால், உங்களை இப்போது விமர்சிப்போர் - வேறெவரின் இரசிகர்களும் இல்லை! உங்களை இரசிக்கும், உங்கள் இரசிகர்களே! இந்த வேறுபாடு புரிகிறதா? அப்படிப் புரிந்தால், உங்கள் கூவலைப் பற்றி; இனி வேறெவரும் "கூவி"த் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை!
  • நீங்கள் பேசியதை; நீங்களே திரும்பக் கேட்டீர்களா? கேட்டிருப்பினும், எங்களுக்காய் இன்னும் ஒருமுறை "நல்ல மனநிலையில் இருக்கும்போது" கேளுங்கள். நிச்சயமாய் சொல்கிறேன்: {பன்ச் ஸ்டைலில் வேண்டுமெனில்} நீங்க ஒருதடவை அந்த பேச்சைக் கேட்டீங்கன்னா; அப்புறம், உங்க பேச்சை நீங்களே இரசிக்க மாட்டீங்க!
  • "நீங்கள் அப்படிப் பேசியதே அபத்தமானது!" அதையும் சமாளிக்க, அவரின் போட்டி-நடிகரைப் பற்றி, ஒரு செய்தியை சொல்லி விளக்கம் சொன்னீர்கள் பாருங்கள்... அதை எப்படி விமர்சிப்பதே என்றே தெரியவில்லை! வெறுமனே சிரிப்பு தான் எஞ்சியது! அந்த தடுமாற்றமே "உங்கள் செயலின் தாக்கத்தை, நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள்!" என உணர்த்தியது. 😊
  • கீழ்வரும் கருத்தை உங்களுக்கு மட்டும் சொல்லவில்லை! இனி "இசை வெளியீட்டு விழா" நடத்தும் அனைவருக்கும் சொல்கிறேன். "இசை வெளியீட்டு விழா" என்பது பாடலையும்/இசையையும்/நடனத்தையும் இணைத்த ஒரு விழா! அதில், பாடல் ஆசிரியருக்கும்/இசை அமைப்பாளருக்கும்/நடன இயக்குனருக்கும் - பாராட்டுகளைச் சொல்லிப் பழகுங்கள்! பாடல் வரிகளின் உன்னதம் குறித்துப் பேசுங்கள்! இசையின் மகத்துவம் குறித்துப் பேசுங்கள்! நடன அசைவுகளை பற்றி சிலாகியுங்கள்! அறிமுக பாடலாசிரியர்/இசையமைப்பாளர்/நடன-ஆசிரியர் எனில் - அவர்களைப் பற்றி, அதிகம் பேசுங்கள். அப்படிப் பேசப் பழகினால் "இம்மாதிரியான கூவல்கள்" குறையத் துவங்கும்! பின், "எந்த"க் கூவலும் அவசியமற்றுப் போய், "பேசப் பழகுவீர்கள்!".
*******
  • இதை எழுதும் முன், உங்கள் மேலிருக்கும் மரியாதைக்காவது, அப்பாடல்களைக் கேட்காமல் எழுதுவது, முறையற்றது என்பதால் எல்லாப் பாடல்களையும் குறைந்தது 5 முறையாவது கேட்ட பின்னே, இதை எழுதியிருக்கிறேன். வழக்கமாய், அந்நடிகரின் படப் பாடல்கள்; விரைவில் பிரபலமாகும்; கேட்கவும் நன்றாக இருக்கும். இறுதியாய் வெளிவந்த படத்தின் பாடல்கள் கூட அப்படித்தான். அதில், கவியரசு அவர்கள் "டப்பாங்குத்து" பாடலைக் கூட மிக அருமையாய் எழுதியிருப்பார். இப்படத்தின் பாடல்களில், எதை இரசித்தீர்கள்? நீங்கள் சொல்வது போல் "ஆளப்போறான் தமிழன்" என்ற பாடல்; பொதுவாய் தமிழர்களுக்கானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை! ஆனால், அந்தப் பாடலின் முன்னுரையைக் கேட்டீர்களா?! அது "பொதுவான தமிழர்களுக்கானதா?!" - அதை ஏன் ம(றந்/றைத்)து போனீர்கள்? "ஏன் இந்த தமிழ் அரசியல்?!" தமிழையும்/தமிழர்களையும் "முதலீடு செய்து" அரசியல்-"வியாபாரம்" செய்ய பலர் இருக்கின்றனர். ப்ளீஸ்... அவர்களின் பிழைப்பில் மண் அள்ளிப் போடாதீர்கள்!
  • குறைந்தபட்சம், பாடல்கள் இரசிக்கும் படியாய் இருந்திருப்பின் கூட; உங்கள் "கூவலை" கொஞ்சம் மறந்திருக்கலாம்! ஆனால்...
*******
  • "திரைத்துறையில் ஊழல் இருக்கிறது!" எனத் திரு. கமல் சொன்ன பிறகு, திரையுலக ஜாம்பவான்கள் அனைவரும்; "இன்றுவரை, மௌனித்து தியானத்தில்" இருக்க, அதை "தைரியத்துடன்" முதல் ஆளாய் உறுதி செய்த "அந்த நேர்மையான" பார்த்திபனைத் தான் நாங்கள் இன்னமும் விரும்புகிறோம். எனவே, இதுவே உங்களின் "முதலும்/இறுதியும்" ஆன கூவலாய் இருக்கவேண்டும் என்பதே எங்கள் ஆவல். ஆனால், முதலிலேயே குறிப்பிட்டது போல்; உங்களின் உரிமையை எங்கள் எவராலும் தடுக்கமுடியாது! நாங்கள், உங்களை (இன்னமும்)நேசிக்கிறோம் திரு. பார்த்திபன்! வாழ்த்துகளுடன், வணங்கி விடைபெறுகிறேன்.
பின்குறிப்பு: தயவு செய்து "கூவு/கூவி/கூவுதல்/கூவிய" என்பன போன்ற வார்த்தைகளை "பேசு/பேசி/பேசுதல்/பேசிய" என்ற வார்த்தைகளால் "பரிமாற்றிப் புரிந்துகொள்ளுங்கள்". மிகத்தெளிவாய் தெரிந்தே செய்த "அச்சுதட்டி"ப் பிழைக்காகக்(கூட), வருத்தம் தெரிவிக்கிறேன். 🙏

- விழியப்பன் (எனும்)  இளங்கோவன் இளமுருகு 
25082017
www.vizhiyappan.blogspot.com 

செவ்வாய், ஆகஸ்ட் 22, 2017

கசிந்திடும் கண்ணீரைத் "திரும்பிடச்" செய்யய்யா...


        "கசிந்திடும் கண்ணீரைத் திரும்பிடச் செய்யய்யா...!" - பாகுபலி 2 திரைப்படத்தின் "வந்தாய் அய்யா!" எனத் துவங்கும் பாடலின் இந்த மிக ஆழ்ந்த அர்த்தமுள்ளது. பாடலாசிரியர் திரு. மதன் கார்க்கி எந்த எண்ணத்தில், இந்த வரியை எழுதினார் என்று தெரியவில்லை! "திரும்பிட செய்யய்யா" என்பதை, வெகு நிச்சயமாய் "துடைத்து விடய்யா" என்ற சாதாரண அர்த்தத்தில் எழுதி இருக்க மாட்டார் என்றே  எண்ணுகிறேன். ஆம்... "துடைத்து விடுவதற்கும்" மற்றும் "திரும்பிட வைப்பதற்கும்" நிறைய வித்தியாசம் உண்டு. எந்தவொரு துன்பத்தின் போதும், எவரேனும் கண்ணீரைத் துடைத்து; அத்துன்பத்திலிருந்து விடுபட வைக்கமுடியும். ஆனால், அது அந்த நேரத்திற்கான மாற்று மட்டுமே; பல துன்பங்கள், நம்மை மீண்டும்/மீண்டும் நினைவலைகள் மூலம் புரட்டிப்போடும். சரி, இது இயல்புதானே? ஆம்... இயல்புதான்! அடியோடு மாற்றிட முடியுமா?! என்றால்... மாற்றிட முடியும்! ஆனால், சாமான்யர்களால் முடியாது! பின் எவரால்...?

     பாகுபலி போன்ற ஒருவரால்! ஆம், கதைக்களத்தின் அடிப்படையில்; பாகுபலி மிகப்பெரிய பலசாலி! அவனால், முடியாதது எதுவுமே இல்லை; அதுதான், அந்தப் பாத்திரப்படைப்பின் பிரம்மாண்டம்! அதுதான், படத்தின் பிரம்மாண்டமும்! எனவே, அப்படியொருவனிடம் சாதாரணர் போன்று "வெறுமனே, துடைத்து விடய்யா!" என்று வேண்டாமல்; திரும்பிடச் செய்யய்யா என்று வேண்டுகின்றனர் மக்கள். ஆம்... கண்ணீரை மீண்டும் திரும்பிட வைத்து; அத்துன்பம் நேரும் முன்; அத்துன்ப நிகழ்வையே அழித்து விடய்யா! என வேண்டுவதாய் தோன்றுகிறது. அதுதான், பாகுபலியை சாதாரணர்கள் இடமிருந்துப் பிரித்து, வெகு உயரத்தில் வைக்கும்! இந்த அர்த்தத்தில் தான் பாடலாசிரியர் எழுதியிருப்பார் என்று தோன்றுகிறது. "புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?" என்பது போல்; திரு. வைரமுத்துவின் மகனான திரு. மதன் கார்க்கி இப்படியோர் அர்த்தத்தில் எழுதி இருப்பின், அதில் வியப்பேதும் இருக்கமுடியாது. தொடரட்டும் அவரின் சிந்தனைகள்!

*******

பின்குறிப்பு: முதன்முதலாய், இப்பாடலை என்னவள் மற்றும் என்மகளோடு கேட்கும்போது; இதை விளக்கி "எப்படி எழுதியிருக்கார் பாரு! என்னவொரு சிந்தனை?" என்று, என்னவளிடம் சிலாகித்தேன். அதன் பின், ஒவ்வொரு முறை இப்பாடல் ஒலிக்கும்போது; என்மகள், என்னவளிடம் "கசிந்திடும் கண்ணீரைத் திரும்பிடச் செய்யய்யா!"; அம்மா! எப்படி எழுதியிருக்கார் பாரேன்! என்று சொல்லி, அவளும் சிலாகிப்பாள்! அவளுக்கு என்ன புரிந்தது என்பது சரியாய் தெரியவில்லை! ஆனால், அதை அவள் சொல்லும் அழகே - அதீத சிலாகிப்புக்கு உரியது.

- விழியப்பன் (எனும்) இளங்கோவன் இளமுருகு 
22082017

சனி, ஏப்ரல் 29, 2017

பாகுபலி 2 (2017)


     பெரும்பான்மையில் பலரும் எதிர்பார்த்த "பாகுபலி 2" திரைப்படம் நேற்று (மே 28, 2017) வெளியாகியது. வளைகுடா நாடுகள் போன்ற இடங்களில், 27-ஆம் தேதியே வெளியாகிவிட்டது. அபுதாபியில் 27-ஆம் தேதியே வெளியாகிய நிலையில், நேற்று "மேக்ஸ் (MAX)" திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுபோன்ற திரைப்படங்களுக்கு, "மேக்ஸ்" திரையரங்கம் கூட சிறியது தான்! "ஐமேக்ஸ் (IMAX)" மிகப் பொருத்தமாய் இருக்கும். "இது ஓர் மிகப் பிரம்மாண்டமான திரைப்படம்" என்ற வழக்கமான விமர்சனத்தைத் தாண்டி, ஒரு மாறுபட்ட கோணத்திலானா விமர்சனம் கீழே:
  • படத்தில் பேசப்படும் தமிழ்!  முதலில் குறிப்பிடவேண்டியது, படத்தில் கையாளப்பட்டு இருக்கும் தமிழ் உரையாடல்கள்! எனையொத்த தலைமுறையினர் பலருக்கும் கூட, இந்த தமிழ் உரையாடல்கள் ஓர் புதுமையான அனுபவமாய் இருக்கும். மூத்த தலைமுறையினர், இதுபோன்ற தமிழ் உரையாடல்களை நிறைய, இன்னும் ஆழமாய்/அழகாய் கேட்டிருப்பர்; அவர்களுக்கு இந்த உரையாடல்கள் அதிக ஆர்வத்தை அளிக்காமல் போகக்கூடும். ஆனால், வெகு நிச்சயமாக "இன்றைய தலைமுறையினருக்கு, இது ஓர் வரப்பிரசாதம்!". மொழியின் உச்சரிப்பு கூடுதல் பலம். இந்த அனுபவம், மற்ற இந்திய மொழிகளிலும் இருக்கும் என்றே நம்புகிறேன்; வாய்ப்பு கிடைக்கும்போது, தெலுங்கு/கன்னடம் போன்று நானறிந்த மொழிகளில் பார்த்து இரசிக்கவேண்டும்.
  • திரு. ராஜமெளலி! இம்மனிதரை எப்படி பாராட்டுவது? கதையை எழுதிய திரு. விஜயேந்திர பிரசாத் அவர்களின் பங்களிப்பை, மறுக்கவே முடியாது எனினும்; ராஜமெளியின் திரைக்கதை அமைக்கும் திறம் "இம்மாதிரியான காணொளி ஊடகங்களின்" மிகப்பெரிய பலம்! எளிதாய் சொல்ல வேண்டுமெனில், ஒரு பாடலில் வருவது போல்; இதுவும் ஒரு "ஒரு ஊரில் ஒரு ராஜா" என்பது போன்ற கதைதான்! ஆனால், சொல்லப்பட்டு இருக்கும் விதமும்; காட்சிப் படுத்தப்பட்டு இருக்கும் விதமும் தான், படத்தை இந்த உயரத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறது. சபாஷ் யா ராஜமெளலி!!
  • பின்னணி இசை: எனக்கு பெரிய இசை ஞானம் இல்லை. பலரும், இவர் இசை அமைத்திருக்கலாம்/ அவர் இசை அமைத்திருக்கலாம் என பரிந்துரைக்கக் கூடும். ஆனால், என்னளவில் வேறொருவர் பற்றி யோசிக்க ஏதுமில்லை! அவ்வளவு அபாரமாய் இருக்கிறது! மேலும், இங்கே - இசையோ/நடிகரோ/நடிகையோ - இரண்டாம் பட்சம் தான். இந்த படத்தைப் பொறுத்த வரையில்; "கதைதான்" நாயகன்/நாயகி/சூப்பர்ஸ்டார் எல்லாமும்! சொல்லி இருக்கும் விதமும், காட்சிப்படுத்தி இருக்கும் விதமும் தான் இங்கே எல்லாமும்! எனவே, எவர் இசை அமைத்திருப்பினும் - இசை தனித்து வெளிப்பட்டு இருக்க வாய்ப்பே இல்லை! ஒருவேளை, பொருந்தாமல் இருப்பின்; தனித்து வெளிப்படக்கூடும். எனவே, பின்னணி இசையில் குறை சொல்ல எதுவுமே இல்லை.
  • நினைவுக் காட்சிகள் (Flash-back Scenes): திரைப்படமோ/நடைமுறை வாழ்வியலோ, நினைவுகளை "மலரும் நினைவுகளாய்" கூறுவது சரியாய்/முறையாய் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், அது பார்வையாளர்களை ஈர்க்க தவறிவிடும்! {சுமார் 30 நிமிட இறுதிக் காட்சிகள் தவிர}  இந்த இரண்டாம் பாகம், முழுக்க முழுக்க  நினைவுக் காட்சிகள் தான்! ஆனால், எந்த தொய்வும் இல்லை! படத்தின் "தலைப்பு அட்டைகள் (Title Cards)" ஓடும்போது கூட, முந்தைய பாகத்தை வசனங்களால் சொல்லாமல், சிலை-போன்று "நிற்பிம்பங்களால் (Still Images)" சொல்லி இருப்பது மிகவும் அருமை. "வேறு படங்களில், இதுபோன்று வந்திருக்கிறதா?" என்ற புரிதல் எனக்கில்லை! ஆனால், இதுவோர் அற்புதமான முயற்சி/செயல்! என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். இந்த நினைவுக்காட்சிகள் முந்தைய படத்தைப் பார்த்தவருக்கு, நினைவூட்டும் அடிப்படையில் செய்யப்படுவது தான்! பிறகு, அதற்கேன் வசனங்கள்? என்றோர் கேள்வியும்/புரிதலும் என்னுள் எழுந்தன. எனவே, நினைவுக் காட்சிகளை வரையறுக்கும் திறன், தலைப்பு அட்டைகளிலேயே துவங்கி இருக்கிறது. படம் பார்ப்போர், மறக்காமல் அவற்றை அனுபவியுங்கள்.
  • நகைச்சுவை: இம்மாதிரியான கதைகளில், நகைச்சுவையைக் கையாள்வதில், மிக அதிகமான கவனம் தேவை! அளவுக்கதிமான, கதையோடு ஒட்டாத நகைச்சுவைகள் - படத்தின் அனுபவத்தை நீர்த்துப் போகச் செய்யும். முற்பாதியில், கட்டப்பாவை மையப்படுத்திய நகைச்சுவைக் காட்சிகள் அவ்வளவு சிரிப்பை அளித்தும், கதையின் பயணத்தைக் குலைக்காத நகைச்சுவைக்கு காட்சி அமைப்புகள்; நம்மை கதாபாத்திரங்களுடன் சேர்ந்து பயணிக்கும் பிரம்மிப்பை, நம்மையும் அறியாமல் நம்முள் புகுத்துகின்றன.
  • அன்னம் போன்ற கப்பல்: கப்பலை அன்னம் போன்று வடிமைத்து இருப்பது, மிகுந்த பாராட்டுக்குரியது. அந்த காட்சிகள் அனைத்தும் பார்வைக்கு "இராஜவிருந்து!". சிலர், இது போன்ற காட்சிகள் அந்தப் படத்தில் வந்திருக்கின்றன/இந்தப் படத்தில் வந்திருக்கின்றன என்று வாதிக்கக் கூடும்! அதையொத்த கற்பனைகள் வேறு படங்களில் இருந்திருக்கலாம். ஆனால், அதை இந்திய சூழலுக்கு ஏற்ற கற்பனையுடன்; தமிழ் செறிந்த வரிகளுடன் கூடிய பாடலால் காட்சிப்படுத்தி இருப்பதை - வேற்று நாட்டு/மொழி திரைப்படங்களில் பார்க்க முடியாது. அதுதான், இங்கே முக்கியம்; அதுதான் இங்கே அசல். எனவே, அந்த காட்சிகளை பார்த்து மகிழுங்கள்.
  • போர்க்கால நிகழ்வுகள் மற்றும் போர் தந்திரங்கள்: முதலில் குறிப்பிட்ட தமிழ் மொழியைக் கையாண்டிருப்பது போல், போர்க்கால நிகழ்வுகள் மற்றும் போர் தந்திரங்கள் குறித்த காட்சிகள், குறிப்பாய் இன்றைய தலைமுறையினருக்கு - மிகப்பெரிய வரப்பிரசாதம்! நம் தேசத்தை ஆண்ட மன்னர்களின் சிறப்பைக் குறித்து, பிரம்மிப்பாய் உணர வழிவகுப்பவை.
  • வசனங்கள்: மதன் கார்க்கியின் வசனங்கள் மிகவும் அபாரம்! வசனங்கள் ஆழ்ந்த உயிர்ப்பைப் பெற்று; நம்மைக் கவர்வதற்கு கூடுதல் காரணம் - பின்னணி இசையும், அதை நடிகர்கள் உடல் மொழியோடு சொல்லும் விதமும். உதாரணங்கள்: 1. "நீ கூறிய சொல்லால், கூரிய வாளால்" - இந்த வசனத்தை படிக்கும்போதோ, வேறெவரும் சொல்லும் போதோ - அதன் பிரம்மிப்பை உணரமுடியாமல் போகலாம்! காட்சிகளாய் பார்க்கும்போது, நிச்சயமாய் புரியும். 2. நாசர் "சிவகாமியை, சவ-காமி" என்று சொல்லும் தமிழும்/அழகும்! இப்படி பட்டியலிட, நிறைய வசனங்கள் உண்டு! பாடல் வரிகள் - பின்னணி இசையோடு, நெஞ்சை வருடவும்; காமநஞ்சாய் இன்பத்தாக்குதல் நடத்தவும் செய்கின்றன.
  • என்னுடைய ஆவல்: படத்தின் வசனங்களும்/பாடல் வரிகளும் - என்னுடைய எழுத்துகளும், ஓர்நாள் இதுபோல் கேட்கப்பட வேண்டும் என்ற உத்வேகத்தை எழுப்பின! சாத்தியமா? தெரியவில்லை; நிகழ்ந்தால் மகிழ்ச்சியே!! வசனங்களின் பாதிப்பு என்னவென்பதை, இதைப் படிப்போருக்கு கடத்தப்பட வேண்டும்; என்ற முனைப்பில் தான், என் ஆவலை இங்கே தெரிவித்திருக்கிறேன். என்னளவில், இம்மாதிரியான வாய்ப்புகளை, நம் பெருந்தகை குறிப்பிடும் "ஊழ்" வினையாகவே பார்க்கிறேன். ஆம், இம்மாதிரியான வாய்ப்புகள் - ஓர் வரம். "மதன் கார்க்கி" வரம் பெற்றவர்; அவரை மனப்பூர்வமாய் வாழ்த்துகிறேன்.
  • அனுஷ்காவின் பாத்திரப் படைப்பு: முதல் பாகத்தில், அனுஷ்கா போன்ற ஒரு திறமை மிக்க நடிகையின் பாத்திரப்படைப்பு மிகவும் சுருக்கமாய் இருந்தது,  பலரையும் போல் எனக்கும் வருத்தமே! ஆனால், திரு. ராஜமெளலி அப்போதே சொல்லிய வண்ணம்; இப்பாகாதில், அனுஷ்காவின் பாத்திரப் படைப்பு சிறப்பு! "மகிழ்மதிக்கு சென்ற பின், அவரின் பாத்திரப் படைப்பு" நீர்த்து இருப்பினும், ஆண்-ஹீரோக்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் இந்திய திரைப்படங்களோடு ஒப்பிடும்போது; இன்னமும் சிறப்பே!
  • ரம்யாகிருஷ்ணனின் பாத்திரப்  படைப்பு: ரம்யாகிருஷ்ணனின் பாத்திரப்  படைப்பு, மிகவும் அருமை! அவரும் திறம்பட நடித்து இருக்கிறார்! இருப்பினும் "நீலாம்பரியின் தாக்கமா என்னவோ?!" அவர் இன்னும் சிறப்பாய் செய்திருக்கலாமே?! என்றோர் ஏக்கம். இது, அவரின் நடிப்பைக் குறை கூறும் முயற்சி இல்லை! மாறாய், மேலும் சிறப்பாய் வெளிப்படுத்தி இருக்கலாமே என்ற ஆவல்.
  • பிரபாஸின் பாத்திரப் படைப்பு: பிரபாஸின் பாத்திரப் படைப்பு பற்றி ஏதும் சொல்லத் தேவையில்லை! அமரேந்திர பாகுபலியோ/மகேந்திர பாகுபலியோ! - அவர் தான் கதையின் மையம்/படத்தின் தலைப்பு. எனவே, அதைப் பற்றி "தனியே சிலாகிக்க" ஏதுமில்லை. சத்யராஜ், நாசர் உட்பட பிறரின் பாத்திரப் படைப்புகளும் மிக அருமை.
*****

  • இந்திய சினிமா: பலரும் "உலக சினிமா" என்ற கனவில் மூழ்கி, சிலாகித்துக் கொண்டிருக்க; ஒருவர் சத்தமில்லாமல் "இந்திய சினிமா" என்ற வரையறையை நிகழ்த்தி இருக்கிறார்! ஆம், தமிழில் வெளியாகி இருப்பதால்; இது தமிழ் சினிமா(வும்) இல்லை! கதையாசிரியரும்/இயக்குனரும் "தெலுங்கு மொழி" பேசுவோர் என்பதால், இது தெலுங்கு சினிமா(வும்) இல்லை! இந்தியாவில் பரவலாய் பேசப்படும் மொழி என்பதால், இது ஹிந்தி சினிமா(வும்) இல்லை! வெளியாகி இருக்கும் மற்ற மொழிகளுக்கும், இதுவே பொருந்தும்! இது முழுக்க/முழுக்க "இந்திய சினிமா!" - ஆம், ஓர் சரித்திரம் எழுதப்பட்டு இருக்கிறது!
  • ஆங்கில மொழியாக்கம்: இது "இந்திய சினிமா" என்பதால், முதன்முதலாய் திரைப்படம் சார்ந்த என் பதிவை; ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க இருக்கிறேன் {மொழிபெயர்ப்பை வெளியிட்டதும், இங்கே இணைப்பைத் தருகிறேன்}. "இப்படியோர் பிரம்மாண்டப் படைப்பு சார்ந்த விமர்சனம், மற்ற மொழி பேசுவோரையும் சேரவேண்டும்!" என்ற தூண்டுகோலே இப்படத்தின் சிறப்புக்கு ஓர் சான்றாகும்.  

*****
  • திரையரங்க அனுபவம்: இன்னும் சில தினங்களில், மீண்டும் ஓர் முறை திரையரங்கில் பார்க்கவிருக்கிறேன். இதைக் குறிப்பிட காரணம், இம்மாதிரியானத் திரைப்படங்களைத், திரையரங்கில் பார்க்கவேண்டும் என்பதை வலியுறுத்தவே! அதிலும், MAX (அல்லது) IMAX வாய்ப்பு இருப்போர், நிச்சயம் அதில் பார்த்து அனுபவியுங்கள். நானும், துபாயில் "தமிழ் வடிவில்" IMAX-இல் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா, என்பதை ஆய்ந்து கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு, ஹிந்தியில் தான் இருக்கிறது {"ஹிந்தி எதிர்ப்பைத் திணித்த" அந்த மொழிவிரோதிகளைச் சபிக்கிறேன். 😊}. எனினும், தமிழில் காண்பதற்கும்/கேட்பதற்கும் இணை ஏது? இல்லையெனில், மீண்டும் MAX-இலாவது பார்க்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். இம்மாதிரியான அனுபவங்களைத் தொடர்ந்து அளித்தால், நிச்சயம் "திருட்டு வி.சி.டி. க்களை வெகுவாய் குறைக்கவாவது செய்யலாம்! இது திரைத்துறையினரை எட்டுமா?!" அதுபோல் "திரையரங்க கட்டணக் கொள்ளையை" குறைக்கும் நடவடிக்கையையும் திரைத்துறையினர் மேற்கொள்ள வேண்டும்!
                                                                            *****
  • குறைகள்: {படத்தின் ஆரம்பக்காட்சியில், யானை ஒன்று ஓடி வரும் காட்சியின் "வரைகலை (graphics)" மேலும் சிறப்பாகச் செய்யப்பட்டு இருக்கலாம்; அவ்வளவு பட்டவர்த்தனமாய் தெரிவது சரியல்ல! என்பது போன்று...} சில குறைகளைச் சொல்லலாம்! அதைக்கூட "சொல்லில் குற்றமில்லை! {என்று மனமுவந்து பாராட்டி விட்டு} ஆனால், பொருளில் தான் குற்றமிருக்கிறது!!" என்ற நக்கீரர் போல்; கதையில் எந்தக் குற்றமும் இல்லாமல் மிகப் பிரமாண்டமாய் இருப்பதால், இம்மாதிரியான சிறிய விடயங்களில் கோட்டை விட்டிருப்பது நெருடலாய் இருக்கிறது என்ற அளவிலேயே குறிப்பிடத் தோன்றுகிறது.
இது...
 "மகிழ்மதி" சாம்ராஜ்யத்தில் நிகழும் நிகழ்வுகளை 
மகிழ்ந்துணர்ந்து கொண்டாடப்பட வேண்டிய தருணம்! 
மறவாமல் (பிரம்மாண்ட) திரையரங்குகளில் (கண்டு/கொண்டு)ஆடுங்கள்!!

சனி, ஆகஸ்ட் 20, 2016

கத சொல்லப் போறோம் (2016)...


     இன்று "கத சொல்லப் போறோம்" என்ற தமிழ்ப்படத்தைப் பார்த்தேன். பெரியதாய் ஏதும் விளம்பரம் இருந்ததாய் தெரியவில்லை; பலரும் இந்தப் படத்தின் பெயரைக் கேட்டிருக்கக்கூட வாய்ப்பில்லை. படம் பார்த்த பின்னர் தான் "2016 மே மாதம்" வெளிவந்ததைத் தெரிந்து கொண்டேன். குழந்தைகளை மையப்படுத்திய அற்புதமான படம்! எந்த ஊடகத்திலும் இது சார்ந்த விளம்பரம்/விமர்சனம் பார்த்தாதான் நினைவில்லை. படம் பார்த்த பின்னர் தான் "Behindwoods" இணையதளம் நல்ல விமர்சனத்தைக் கொடுத்திருப்பதைப் பார்த்தேன். இம்மாதிரியானப் படங்களை விமர்சித்து, மேலும் சிலருக்கு கொண்டு செல்வது என் கடமையென உணர்ந்தேன். படத்தைப் பற்றிய என் பார்வை கீழே:
  • பல படங்களைப் பார்க்கும் போது, ஒரு பார்வையாளனாய் - நம் மனது அடுத்த காட்சியை யூகிக்கும். பெரும்பான்மையான படங்களில், அதிக அளவில் நம் யூகங்கள் சரியாய் இருக்கும். ஆனால், மிக எளிமையான கதைக்களம் கொண்ட இந்த படத்தில் - முதல் காட்சியில் இருந்தே - நம் யூகங்களை "கிட்டத்திட்ட முழுதுமாய்" இயக்குனர் தகர்த்திருக்கிறார். ஒரு பார்வையாளனின் நிலையிலிருந்து அவர் அதிகம் யோசித்திருப்பதாய் உணர்கிறேன். எளிமையான காட்சி அமைப்புகள் தான்; ஆனால், நம் யூகங்கள் தவறாகின்றன; அவற்றை, என்னவென்று குறிப்பிட்டு உங்கள் அனுபவத்தைக் குறைக்க விரும்பவில்லை. படம் பார்த்து, நீங்களே உணருங்கள்.
  • சிறுவர்களை மையப்படுத்திய படம் - குறிப்பாய் ஆதரவற்ற சிறார்களை மையப்படுத்திய படம். சிறுவர்களை மையப்படுத்தி பல படங்கள் வந்திருப்பினும் - வணிக நோக்கத்தை முன்னிறுத்தாத - சிறுவர்களின் எதார்த்தத்தை முன்னிறுத்தி திரைக்கதையை அமைத்திருப்பது தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். சமரசம் செய்யாத படைப்பும்/படைப்பாளியும் - ஒரு சமுதாயத்திற்கு கொடுப்பினை. 
  • சிறார்களின் உணர்வுகளை, அதிலும் குறிப்பாய் ஆதரவற்ற சிறார்களின் உணர்வுகளை - இயக்குனர் யதார்த்தமாய்/அழகாய் காட்சிப்படுத்தி இருக்கிறார். காட்சிகளின் யதார்த்தத்தை உணர்ந்து; குழந்தைகளோடு பயணித்தது, காட்சிகளை கவனமாய் உள்வாங்குதல் மிக அவசியம். 
  • நகைச்சுவை, சிறார்களின் உணர்வுகள், மற்ற கதாபாத்திரங்களின் உணர்வுகள் - என்று பல்வகை நிகழ்வுகளை - மிகச்சரியான விதத்திதில்; திரைக்கதையில் புகுத்தி இருக்கும் இயக்குனரின் திறன் கவனிப்புக்கும்/பாராட்டுக்கும் உரியது.
  • படத்தின் வசனங்கள் மிகவும் கூர்மையாய் இருக்கின்றன. என்ன காரணமோ - முதல் 30 நிமிடங்களில் வரும் வசனங்களை, பின்னணி இசையால் சரியாய் கேட்கமுடியவில்லை. தணிக்கை காரணமென தெரியவில்லை - ஏனெனில், தணிக்கை செய்யும் விடயங்கள் அந்த வசனங்களில் நிச்சயம் இல்லை. ஆனால், அதன் பின்னர் பின்னணி இசை சரியாய் கையாளப்பட்டு இருக்கிறது.
  1. நீ கொடுத்து வச்சவ பிரியா - அம்மாவைப் பார்க்க முடியல்லைன்னாலும்; அம்மா மாதிரி இருக்கறவங்களையாவது பார்க்கமுடியுது!
  2. எங்களை மாதிரி குழந்தைகளை கடவுளின் குழந்தைன்னு சொல்வாங்க; ஆனால், அம்மாங்கற கடவுளோட இருக்கற நீங்கள் தான் கொடுத்து வைத்தவர்கள்.
  3. எனக்கு ஒரேயொரு ஆசைதான் - என்னை அனாதையாய் விட்டுவிட்டுப் போன, என் அம்மாவைப்  பார்த்து ஒரு முத்தம் கொடுக்கனும்.
  4. மேலுள்ளவை சில உதாரணங்கள்.
  • பிரியா, அருண் மற்றும் அனிதா என்பன படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். மேலும் - அர்ஜுன், சீனு, ஜெனி - என்பன படத்தின் பிற முக்கிய கதாபாத்திரங்கள். 
  • "எங்க மாஸ்ட்டர் கூட அம்மாதான்!" என்று அனிதா பேசும்போது - நம் கண்ணீர் நீரை வர வைப்பது மட்டுமல்ல! ஒரு ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் "பசுமரத்தாணி போல்" பதிய வைக்கிறார் இயக்குனர். 
  • "மாயவித்தை (Magic)" செய்யும் கலைஞர்கள் பெரும்பான்மையை மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பர்; அவரைக் கூட, அனிதா தன் ஏக்கத்தைக் கேள்வியாய் கேட்டு அவரை நெகிழவைக்கும் காட்சி - நம் கண்ணிலும், கண்ணீரை வரவைக்கிறது.
  • அருணின் பாத்திர படைப்பு மிக அருமை; அந்த சிறுவன் அருமையாய் நடித்திருக்கிறான். சில இடங்களில் "சராசரி படங்களில் வருவது போல், பெரிய மனித தனமாய் பேசுவது" எரிச்சலைக் கொடுத்தாலும் - அவற்றையெல்லாம் மீறி அந்த சிறுவனின் பாத்திர படைப்பும், அவனின் நடிப்பும் பெருத்த பாராட்டுதலுக்கு உரியது.
  • பிரியாவின் நடிப்பு பாராட்டுதலுக்கு உரியது; இயல்பான/முதிர்ச்சியான நடிப்பு. அந்தக் குழந்தைக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துகள் மகளே!
  • அருண் - சீனு இடையே நடக்கும் "குழந்தைகளுக்கே உரித்தான சண்டைகள்" மிக யதார்த்தமாய் காட்சி படுத்தப்பட்டு இருக்கின்றன. உண்மையில், குழந்தைகளின் சண்டைகள் இப்படித்தான் இருக்கும். எந்த "வணிக"சாயமும் இல்லாமல் இயல்பான காட்சிகள்.
  • சிறார்களை மையப்படுத்திய, பல திரைப்படங்களில் வருவது போல் - "குழந்தைகளைச் சார்ந்த பெரியவர்கள் இடம்பெறுவது; அவர்களில் இடையே நடக்கும் உறவு/உரிமை பிரசனைகள்" - போன்றவை இந்தப் படத்தில் அறவே இல்லை. குழந்தைகளைச் சார்ந்த பெரியவர்களும், சிறார் கதாப்பாத்திரங்களுடன் இணைபிரியாமல் பயணிக்கின்றனர்.
  • சிறுவர்களை மையப்படுத்திய எல்லா திரைப்படங்களிலும் - வலுக்கட்டாயமாய் இளைஞன்/இளைஞி என்ற கதாபாத்திரங்களை உருவாக்கி; அவர்கள் இடையே ஒரு "காதல் கதையை" தனியே உருவாக்கி - வியாபாரப் புத்தியைக் காண்பிப்பது, தமிழ் திரைப்படத்தின் சாபக்கேடு. என் நினைவில் இருக்கும் வண்ணம், இதற்கு எந்த படமும் விதிவிலக்கில்லை.
  • இந்த படத்திலும் "அரவிந்த் - அஞ்சலி" என்ற ஆசிரியர்கள் இடையே ஒரு காதல் கதை இருக்கிறது. ஆனால், அவர்கள் இருவரும் - குழந்தைகளை விடுத்து; தனியே எங்கும் பயணிக்கவில்லை! மிக குறிப்பாய் "டூயட்" பாடவில்லை; அதுபோல், அவர்கள் இடையே ஒரு உறவு இருப்பதை - குழந்தைகளை மையப்படுத்திய காட்சிகளாலேயே நம்முள் விதைப்பது - இயக்குனரின் சாமர்த்தியம் (சபாஷ் கல்யாண்!).
  • அருண் - ஜெனி இடையே "சிறார் காதல்" போல் சித்தரித்து இருப்பது மிகவும் அழகு! எல்லாக் காலத்திலும், இவ்வயதொத்த சிறார்களுக்கு "சிறார் காதல்" எழுவது மிகவும் இயல்பான ஒன்றே!! அதை மிகச் சரியாய் இறுதிவரை காட்டிய இயக்குனர், இறுதியில் தடுமாறி இருப்பது சறுக்கல்!
  • அருண் - சீனு இடையில் நடக்கும் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதாய், அந்த சறுக்கலை இயக்குனர் செய்திருப்பது புரிகிறது. ஆனால், அதை வேறு விதத்தில் "மேலும் அழகாய்" செய்திருக்கலாம் என்பது என் பார்வை.
  • "வடை சுடும் பாட்டி" அற்புதமான - நகைச்சுவை கலந்த கற்பனை; வெகு கவனமாய், அதை சில வினாடிகளுக்குள் காட்சியாக்கி நகர்ந்திருப்பது - இயக்குனரின் திறனை வெளிப்படுத்துகிறது.
  • படத்தில் வரும் "சம்மர் கேம்ப்பை" கூட - எந்த பிரம்மாண்டமும் இல்லாமல், யதார்த்தமாய் நம்மை அந்த சூழலோடும், நிகழ்வுகளோடும் ஒன்றவைத்து அமைத்திருப்பது பாராட்டுதலுக்கு உரியது. 
  • ஒவ்வொரு முறையும், சீனுவுக்கு பிரச்சனை எழும்போது - "அங்க பார்ரா வெள்ளைக் காக்கா பறக்குது!" - என்றபடி வசனம் பேசி சீனுவின் நண்பர்கள் "விலகி நகரும்" காட்சிகள் - மகிழ வைக்கின்றன.
  • "குழந்தைகள் காப்பக விடுதி"யின் காவலாளி கதாபாத்திரமும் அருமை; அவரின் நடிப்பும் பாராட்டுக்குரியது. 
  • பல திரைப்படங்களிலும், தேவையில்லாமல் "காவலர்களை வில்லன் போல்" சித்தரிக்கும் காட்சிகள் இல்லாதது - மிகவும் சிறப்பானது/பாராட்டுக்குரியது. அதிலும், பல படங்களிலும் வில்ல-காவலராய் வரும் அந்த நடிகரையையே நடிக்க வைத்திருப்பது - சிறப்பு!
  • அஞ்சலியாய் வரும் அந்த ஆசிரியர், இறுதிக்கு காட்சியில் அணிந்திருக்கும் "ஜாக்கெட்டின்" பின்புற வடிவமைப்பைக் கண்ணில் தெரியாதவாறு காட்சி படுத்தி இருக்கலாம். சிறார்களை மையப்படுத்திய பல படங்களில், இதைவிட "கீழ்த்தரமான ஆடைகளை" படத்தில் வரும் இளைஞிகள் அணிந்திருப்பதைப் பார்த்து பழக்கப்பட்டவர்கள் தான் நாம் என்னும் - இம்மாதிரியான ஒரு தரமான படத்தில்; அப்படியொரு காட்சி வருவதைக் கூட மனம் ஏற்க மறுக்கிறது
  • "படத்தின் முடிவை" இயக்குனர் ஏன் இப்படி வைத்திருக்கிறார் என்பது புரிந்தாலும்; அதை வேறொரு விதமாய் - மேலும் சிறப்பாய் சொல்லி இருக்கலாம் என்பது என் பார்வை. ஒருவேளை, இயக்குனர் - இங்கும் நம் எதிர்பார்ப்பைத் தகர்க்க எண்ணியிருப்பாரோ?
  • படம் மொத்தமும் "1 மணி நேரம் 43 நிமிடங்களில்" காட்சிப் படுத்தப்பட்டு இருக்கிறது; அதற்குள், நம்மை முழுதாய்/புதியதாய் ஒரு அனுபவத்தை உணர வைத்திருப்பது - இயக்குனரின் சிறப்பு.

பின்குறிப்பு: "கபாலி மற்றும் கமல் படங்களை" கொண்டாடுவது அவசியமானதே! நானும் அப்படி கொண்டாடி இருக்கிறேன். நாம் கொண்டாட மறந்தாலும், பெரும்பான்மையான ஊடகங்கள் - நமக்கு நினைவூட்டி கொண்டாட வைத்துவிடும். ஆனால், இம்மாதிரியான தரமான படங்களை "நாம்தான் தேடிச் சென்று" கொண்டாட வேண்டும்! நாம் கொண்டாடுவதோடு மட்டும் நில்லாமல்; பிறருக்கு கொண்டு சேர்ப்பதும் - நம் கடமையாகிறது. என் கடமையை நான் செய்துவிட்டேன்; உங்கள் கடமையையும் தவறாமல் செய்திட வேண்டுகிறேன். 

                      வாய்ப்பு கிடைப்போர்; தவறாமல் அவரவர் குழந்தைகளோடு பாருங்கள்! 
உறுதியாய் - உங்கள் அனுபவம்; மேலும் ஒரு கூடுதல் பரிமாணத்தைக் கொடுக்கும்!!

சனி, ஜூலை 30, 2016

கபாலியின் குறைகள் - என் பார்வையில்...


       சமீபத்தில் வெளியான "கபாலி" திரைப்படம் குறித்து இருவேறு வகையான விமர்சனங்கள் வந்தன. இது கொண்டாடப்பட வேண்டிய படம் என்பதை என் முதல் விமர்சனத்திலேயே சொல்லி விட்டேன். எனவே, இது "சமுதாயத்திற்கு அவசியமான/சிறந்த படம்" என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. என் முந்தைய விமர்சனத்தில் சொன்னபடி, இரண்டாவது முறையும் பார்த்தாகிவிட்டது. கபாலியைப் பற்றிய என் புரிதல் மேலும் அதிகமாகியது. அதை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இத்தலையங்கம்.

"முக்கியத்துவம் இல்லாத" குறைகள்:

       \\\ ரஜினி படத்திற்கு உரிய விறுவிறுப்பான காட்சிகள் இல்லை! காட்சிகளில் வலுவில்லை! திரைக்கதை மேலும் சிறப்பாய் இருந்திருக்கவேண்டும்! /// - என்பன போன்ற பல விமர்சனங்கள் உள்ளன. என்னளவில், படத்தின் விறுவிறுப்பிற்கு எந்த குறையும் இல்லை; ஒருவேளை, அவர்களின் எதிர்பார்ப்பு மிக-அதிகமாய் இருந்திருக்கக் கூடும். இருப்பினும், அந்த விமர்சனங்களை ஆழ யோசிக்கலானேன். இந்தப் படத்தை நான் இயக்கி இருந்தால் - என்ன செய்திருப்பேன் என்று யோசித்தேன். எனக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைத்திருந்தால், காட்சிகளின் வரிசையை மட்டும் மாற்றி அமைத்து இருப்பேன் என்று தோன்றியது - அதாவது எடிட்டிங் வேலை போன்று. திரைக்கதையில் பெருத்த தொய்விருப்பதாய் நான் உணரவில்லை. எனவே, என் பார்வையில் - காட்சியின் வரிசைகளை பின்வருவது போல் அமைத்திருப்பேன்:
  1. படத்தின் துவக்கம், கபாலி என்ற தலைமையின் கீழ் நடக்கும் "மறுவாழ்வு/சீர்திருத்த பள்ளியில்" துவங்கி இருக்கவேண்டும். அந்த பள்ளியின் ஆசிரியரான குமரன் பாடம் எடுப்பது போலவும்; அவர் கபாலி என்ற ஒரு தலைவனின் சிறப்பைப் பற்றிய வகுப்பை எடுப்பதாய் துவங்கி இருக்கவேண்டும்.
  2. மாணவர்கள் கபாலி என்பவர் யார்? என்ற கேள்வியைக் கேட்க; அந்த ஆசிரியர் கபாலியின் பின்புலத்தை விளக்குவதாய் காட்சிகள் விரியத் துவங்கி இருக்கவேண்டும்.
  3. "கபாலி ஏன் சிறைக்கு சென்றார்?" என்ற தொடர்-கேள்வியை அவர்கள் எழுப்பியிருக்க வேண்டும். அதற்கு அந்த ஆசிரியரே - மிகவும் உணர்ச்சி பொங்க - தமிழ்மாறன் என்ற பாத்திரத்தின் "கீழ்த்தரமான நயவஞ்சகத்தை"ப் பற்றி இழிவாய் சொல்லி, கபாலி சிறை சென்றதன் பின்புலத்தை விளக்கியிருக்க வேண்டும்.
  4. எண் 3-இல் சொல்லப்பட்டது போல் காட்சி அமைந்திருப்பின் - பின்வரும் காட்சியில், ஆசிரியர் குமரனே - கபாலியை கொலை செய்ய முனைவது நம்மைப் பெரிதும் ஈர்த்திருக்கும். பின்னர், குமரனை அவரின் தாய் கண்டித்து - தன் கணவரும்; குமாரின் தந்தையுமான தமிழ்மாறன் செய்த துரோகத்தை விளக்கி; உனக்கு அவர் அப்பத்தான் டா! எனக்கு புருஷன்!! நானே அதை தாங்கி/மறந்துவிட்டேன் என்றால் - அது உங்க அப்பனோட துரோகத்தால் தான் டா! கபாலி பெரிய மனிதர் டா! - என்பது போல் விளக்கம் கொடுத்திருக்க வேண்டும்.
  5. இந்நிலையில் "அப்பா என்று அழைக்கும்" அந்த பெண் பாத்திரம், ஆத்திரத்தில் "கருவுற்றிருந்த பெண்ணை கைவிட்ட கெட்டவரா கபாலி?!" என்று கேட்டிருக்கவேண்டும். அதற்கு, அந்தப் பெண்ணைப் பற்றி தெரிந்த அன்வர் போன்ற கதாபாத்திரம் உருக்கமாய்/ஆதங்கமாய் - "உன்னை ஏமாற்றிவிட்டு போனவன் மாதிரி நினைச்சுட்டியா?; கபாலியை அவர் நண்பனே துரோகத்தால் வீழ்த்திவிட்டான்!" என்று விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். அதை உணர்ந்த அந்தப் பெண், "ஆமாம். ஒரு பெண்ணை அம்மா ஆக்கறவன் ஆம்பளை இல்லை! பிறக்கும் குழந்தைக்கு நல்ல அப்பனா இருக்கறவன் தான் ஆம்பளை!!" என்று பேசுவது போல் வசனம் இருந்திருக்க வேண்டும் {இந்த சிந்தனையை தான் "ஆண்மையின் மகத்துவம்" என்ற தலைப்பில் - என்னுள் உதித்தது என்ற பிரிவில் - இன்று பகிர்த்தேன்}.
  6. இப்படியாய் - படத்தின் பின்வரும் எல்லா "நினைவு காட்சிகளும்" ஒவ்வொன்றாய் சொல்லி - கபாலியை விவரித்து; கபாலியின் மீதான எதிர்பார்ப்பை "படிப்படியாய் அதிகரித்து" இருக்கவேண்டும்! அப்போது, மாணவர்கள் "பெருத்த ஆர்வத்தோடு" - கபாலி எப்போது வெளியே வருவார்? - என்று கேட்க; அதற்கு அன்வரோ அல்லது மற்றெவரோ உரக்க-சிரிக்க...
  7. "முதல் காட்சியான" - மலேஷிய அரசின், கபாலியின் விடுதலை குறித்த விவாதம் - அடுத்த காட்சியாக தொடர்ந்திருக்க வேண்டும். அப்போது பற்றியிருக்கும் - பலரும் எதிர்பார்க்கும் படத்தின் விறுவிறுப்பு!
  8. தொடர்ந்து, கபாலியின் விடுதலைக் காட்சி வந்திருக்கவேண்டும். இதற்கிடையில், கபாலியைக் கொலை செய்ய ஒப்பந்தமாகும் "யோகி" பாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்திருக்கவேண்டும்.
  9. சிறையில் இருந்து வெளிவரும் கபாலி - அந்த முதல் துவம்சத்தை செய்துவிட்டு - சீர்திருத்தப் பள்ளிக்கு சென்றிருக்கவேண்டும். அதுவரை கபாலியை "மனத்திரையில், கபாலியைக் கண்ட மாணவர்கள்" - தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தி இருக்கவேண்டும்.
  10. அதைத் தொடர்ந்து, மனைவின் நினைவு "நிகழ் கால காட்சிகளோடு" ஒப்பிட்ட "கற்பனைக் காட்சிகள்" சொல்லப்பட்டு இருந்தால் - கபாலியின் "மனைவி மீதான காதல்/அன்பு" - நம்மையும் தொற்றியிருக்கும். நம்மை, கபாலியோடு சேர்ந்து மனைவி என்ற கதாபாத்திரத்தை உள்வாங்கச் செய்திருக்கும்.
  11. பின்னர், அடுத்த காட்சியில் தைவானில் அந்த நபரைத் தேடிச்செல்லும் நிகழ்வு; கபாலியைக் கொலை செய்ய, யோகியுடன் வரும் "கபாலியால் துவம்சம் செய்யப்படட" அந்த நபரை - யோகியே கொலை செய்யும் திருப்பம் - அற்புதமாய் உணரப்பட்டு இருக்கும். அப்படி இருந்தால், யோகி யார் என்ற உண்மை நம்மையும் பரவசப்படுத்தி இருக்கும். அதன் பின்னர், மனைவி உயிரோடு இருக்கும் தகவல் சொல்லப்பட்டு இருக்கவேண்டும்.
  12. இப்படி காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தால் - கபாலி தன் மனைவியைத் தேடிச் செல்லும் காட்சி - "எல்லோராலும், எந்த மறுப்புமின்றி" இரசிக்கப்பட்டு இருக்கும்; அதை, படத்தின் விறுவிறுப்பைக் குலைத்துவிட்டதாய் உணரப்பட்டு இருக்காது. உண்மையில், அந்த காட்சிகள் - மிகவும் அழகானவை/அற்புதமானவை.
  13. இறுதியாய் - டோனியை துவம்சம் செய்யும் இறுதிக் காட்சி!
  14. படம் பார்த்தவர்கள் - இந்த வரிசையில் காட்சிகளை எண்ணிப் பாருங்கள்! பலரும் எதிர்பார்க்கும் அந்த விறுவிறுப்பு உணரப்படும். இதைக் கூட - பலரும் விமர்சித்ததால் தான், வரிசைப் படுத்தி இருக்கிறேன். இல்லையேல்... முன்பே சொன்னது போல் - இந்தப் படத்தை நான் கொண்டாடினேன் - என்பதே உண்மை. இன்னும், படம் பார்க்காதவர்கள் - பார்த்துவிட்டு; இந்த வரிசைப்படி எண்ணிப் பாருங்கள். 
"மிகமுக்கியமான" குறைகள்:

   மேலுள்ளவை குறைகளே இல்லை! என்னளவில், மிகமுக்கியத்துவம் வாய்ந்த குறைகள் பின்வருபவையே:
  • கபாலி - யாருக்காகப் போராடுகிறார்? இந்தக் கேள்விக்கு சரியான/நியாயப்படுத்தும் விளக்கம் இல்லை! கபாலி "தமிழர்" எனும் பொது இனத்துக்காகப் போராடுகிறாரா? அல்லது "ஒரு குறிப்பிட்ட" இனத்துக்காகப் போராடுகிறாரா? - இதைத் தெளிவாய்/நேரடியாய் சொல்வதில் என்ன குழப்பம்?
  • இயக்குனரின் முந்தையப் படங்களை ஆழ்ந்து கவனித்தோர்க்கு - அவரின் "தலைசிறந்த சமூகப் போராட்டம்" தெரியும். அப்படங்களில் கூட, அவர் நேரடியாய் - தன் போராட்டத்தை வெளிக்காட்டவில்லை! ஆனால், ரஜினி எனும் நடிகர் என்ற அடிப்படையில் பார்த்தாலும் சரி; இல்லை... அயல்நாட்டில் நடக்கும் "சர்வதேச பிரச்னையை மையப்படுத்திய கதை" என்ற அடிப்படையில் பார்த்தாலும் சரி - இந்தப் படத்தின் தன்மையின் அடிப்படையில் பார்த்தால் - கதையின் மையக்கருத்தை "தெளிவாய்/நேரடியாய்" சொல்லி இருக்கவேண்டும்!
  • கபாலி - தமிழர் எனும் பொது இனத்திற்காக போராடுவதாய் இறுதிக் காட்சியில் சில வசனங்கள் வருகின்றன: "எங்க போனாலும், தமிழன் அடிமையாய் தான் இருக்கவேண்டுமா? தமிழன் கோட்டு-சூட்டு போடக்கூடாதா? தமிழன் ஆளக்கூடாதா?" என்பன போன்றவையே அவை. ஆனால், இந்த பொதுப் பிரச்சனையா படத்தின் கரு? அல்லவே!
  • "உலகம் ஒருவனுக்கா?!" என்ற முதல் பாடலில் வரும் பின்வரும் வரிகளைக் கவனியுங்கள்:
  1. \\\ கலகம் செய்து “ஆண்டவரின்” கதை முடிப்பான்! /// - "ஆண்டவர்" என்ற சொல், எந்த இனத்தில் பயன்படுத்தப்படும், என்பதை நான் விளக்கத் தேவையில்லை.
  2. \\\ பம்பரம் போல சுத்திக்கிட்டு; பறையிசை அடித்து நீ பாட்டுக்கட்டு! /// - பறையிசை என்பது உன்னதமான இசை. ஒரு மனிதனின் இறுதி யாத்திரையின் போதும் ஒலிக்கும் - அற்புதமான/உன்னதமான இசை. அந்த இசையை, இவ்வளவு "ஆழமாய்/ஆனந்தமாய்" பாடியது மிகுந்த பாராட்டுக்கு உரியது. ஆனால், இது போதாதே?!
  3. \\\ நாங்க எங்க பொறந்தா, உனக்கென்ன போடா?! தமிழனுக்காக வந்து நின்னவன் தான் உள்ளடா!! /// - மேற்கொண்ட உன்னத வரிகளை சொல்லிவிட்டு, பின்னர் ஏன் "தமிழன்" எனும் பொது இனத்தைக் குறிக்கும் வரி? தமிழர் எனும் பொது இனத்திற்குள் தான் - எல்லா இனமும் வருகிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை! ஆனால், மிகத்தவறான வகையில் ஒரு இனம் ஒடுக்கப்படும் போது - அதை நேரடியாய் சொல்வது மிக அவசியம். இப்படிப் பொதுமைச்சாயம் தேவையில்லை! என்பது என் புரிதல்.
  4. \\\ வந்தவன/போனவன வாழவச்சவன் - இனி வாழ்ந்து காட்டப்போறன்! வாயை மூடி கவனி /// மற்றும் \\\ அலைகடல் அடங்குமோ…? அதிகாரக் குரலுக்கு, எப்போதும்… நீர்வீழ்ச்சி நீ தானே?! உனை நீந்திக் கடக்க முடியாதே?! /// - என்பன பிற வரிகள்.
  5. \\\ மேட்டுக்குடியின் கூப்பாடு - இனி, நாட்டுக்குள்ள கேட்காது! “இன” முகவரி - இனி விழி திறந்திடுமே!! /// - இந்த வரி எந்த இனத்துக்காக சொல்லப்பட்டது?
  6. இந்த அற்புதமான வரிகள் கூட "தேவையற்ற/தெரிந்தே அமைத்த அதீத இசையால்" மறைக்கப்பட்டு இருக்கிறது. இடையிடையே "கடுப்பேற்றும் வகையில் ஆங்கில வரிகள் வேறு!" வெகுநிச்சயமாய் - இந்த வரிகள், நேரடியாய் எவரையும் சென்று சேரக்கூடாது! என்ற முனைப்பு இருந்திருக்கிறது - என்பது என் பார்வை. அதற்கான காரணத்தையே, நான் ஆராய முற்படுகிறேன்.
  • அந்தப் பாடலைத் தவிர - காட்சிகளிலும் ஒரு இனத்தைக் குறிக்கும் வண்ணம் - கபாலி மற்றும் அவரைச் சார்ந்தோரின் உடைகள் துவங்கி; கபாலியின் உடல் நிறத்தை வர்ணிக்கும் வண்ணம் ஒரு பெண் கேட்கும் கேள்வியும், அதற்கு கதாநாயகி கொடுக்கும் விளக்கம் - போன்ற பல காட்சிகள் வருகின்றன. "தமிழர்கள் கருப்பு என்ற பொதுமையை" நான் மறுக்கவில்லை. ஆனால், கதாநாயகி தவிர்த்து - கபாலியை சுற்றியுள்ளோர் எல்லோரும் அப்படியோர் கருப்பாய் காண்பிக்க என்ன காரணம்? பிறகேன், கதாநாயகிக்கு மட்டும் "வெள்ளைத் தோல்?!"
  • \\\ இனிமேல், இந்த மாதிரி உடைகள் போடாதீர்கள்! கோட்டு தான் போடவேண்டும்; உடல்தான் சிலவற்றை நிர்ணயிக்கிறது /// - போன்ற வசனங்களால்; கபாலியை அற்புதமாய் மாற்றுவார் கதாநாயகி. ஒரு மாணவர் கூட, உடை சார்ந்த கேள்வியை கேட்கிறார்; வில்லன்கள் கூட அதைக் குறிப்பிட்டு கேட்கிறார்.
  • இப்படி ஒரு இனம் சார்ந்த அடையாளங்களை "வீரமாய்/அழகாய்/இயல்பாய்" - சில காட்சிகளிலும்; ஒரு பாட்டின் சில வரிகளிலும் "மறை"விளக்கிய இயக்குனர் - ஏன், "பொட்டில் அறைந்தாற் போல்" இந்த இனத்துக்காகத்துக்கான போராட்டம் தான் இந்த கதை என்று சொல்லவில்லை?! ஆனால், பல ஊடகப் பெட்டிகளிலும் - அந்த இனம் சார்ந்த போராட்டத்தை விவரிப்பதை; தொடர்ந்து தன் படங்களில் செய்வேன் என்று கூட சொல்கிறார் இயக்குனர். பின்னர், ஏன் - அதை கபாலியில் நேரடியாய் சொல்லவில்லை!
  • வெகுநிச்சயமாய் - இது கவனக்குறைவால் நேர்ந்தது அல்ல! \\\ காந்தி சட்டையைக் கழட்டியதற்கும்; அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் பெறிய காரணம் இருக்கு! அது, பெரிய அரசியல் /// - என்ற ஒற்றை வசனத்தில் "ஒரு இனப் போராட்டத்தை" அறிவார்ந்த வகையில் விளக்கிய இயக்குனர் - அதை வலுவான காட்சிகளால்/வசனங்களால் ஏன் சொல்லவில்லை? இந்த ஒற்றை வரி எல்லோருக்கும் "எல்லாவற்றையும் விளக்கிவிடாது!" எனவே, இது தெரிந்தே நடந்திருக்கிறது என்பதாய் நான் பார்க்கிறேன்.
  • இயக்குனருக்கு பயம் ஏதும் இருப்பதாய் தெரியவில்லை! முந்தைய படங்களில் கூட இதையே கையாண்டிருக்கிறார் - ஆனால், அவற்றிலும் நேரடியாய் சொல்லவில்லை. அப்படி "பொட்டில் அறைந்தாற் போல்" சொல்ல எது தடையாக இருக்கிறது? காரணம் என்னவென்பது முக்கியமில்லை. ஆனால், இதை இனிமேலாவது அந்த இயக்குனர் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று வேண்டுகிறேன். அப்போது தான், இதன் வீரியம் பலரையும் சென்று சேரும். அந்த வீரியம் தான் - குறைந்த அளவே எனினும், ஒரு இனம் இன்னமும் அடக்கப்படுவதை - மாற்றுவதற்கான, மாற்றத்திற்கு வழிவகுக்கும். என் வேண்டுதல் - இயக்குனரைச்  சென்று சேருமா?    
பின்குறிப்பு: முதல்முறை பார்த்தபோதே, உடன் வந்த நடப்பிடம் சொன்னேன்! "கபாலி 2.0" வருவதற்கான வாய்ப்பிறக்கிறது என்று. இப்போது படத்தின் இயக்குனரும் அதை உறுதி செய்திருப்பதாய், தகவல்கள் வருகின்றன. அப்படி ஓர் எண்ணம் இருப்பின்... இயக்குனருக்கு பின்வரும் இரண்டு வேண்டுகோள்களை விடுக்க ஆசைப்படுகிறேன்: 1. இந்த இனத்துக்கான போராட்டம் என்பதை "பொட்டில் அறைந்தாற் போல், தெளிவாய் - விளக்கமாய்" சொல்லுங்கள். தமிழர் என்ற பூச்சு வேண்டாம்; குறிப்பாய், ரஜினியை வைத்து "தமிழர் எனும் பொதுச்சாயம் வேண்டாம்! அதை மேற்குறிப்பிட்ட என் முதல் விமர்சனத்தில் தெளிவாய் சொல்லி இருக்கிறேன். 2. இந்தியாவில்; அதிலும் குறிப்பாய் தமிழ்நாட்டில் கதைக்களத்தை அமையுங்கள். எந்த வெளிநாட்டிலும், "இன்றைய காலக்கட்டத்தில்" இப்படியோர் இனப்பிரச்சனை இருப்பதாய் தெரியவில்லை! மேலும், ரஜினிக்காக மற்றவற்றில் சமரசம் செய்துகொள்ளாத நீங்கள் - சர்வதேச பிரச்சனை என்ற "பிரம்மாண்ட மாயையில் மட்டும்" ஏன் சமரசம் செய்துகொள்கிறீர்கள்?

என் பார்வை இயக்குனரைச் சென்று சேருமா என்று தெரியவில்லை! 
எவர் மூலமாவது சென்றால் சந்தோசமே! "கபாலி 2.0" ஆவது - எடுத்துக்கொண்ட 
பிரச்னையை இயல்பாய்/தெளிவாய்/நேரடியாய் பேசட்டும்! வாழ்த்துகள்!!!