"விருத்தப்பா"க்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
"விருத்தப்பா"க்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 23, 2014

என்னுடைய உணர்வில் - அப்பெருமகள்...

{பாவேந்தர் பாரதிதாசனின் இளைய-மகளும்; என்னவளின்-பாட்டியுமான 
திருமதி. வசந்தா அவர்கள் 13.08.2014 அன்று இயற்கை எய்தினார்.
இன்றும் (23.08.2014), நாளையும் அவரின் இறுதிக் காரியங்கள் நிகழவுள்ளன. 
என்னுடைய உணர்வில் அவர்...
குறிப்பு: இடது புகைப்படம் என் கரங்களால் எடுக்கப்பட்டது;
வலது புகைப்படம் என்-திருமணத்தின் போது எடுக்கப்பட்டது}    

*******

பெருமகளாம்! தமிழ்தனையும் சுவாசம் கொண்ட;
       திருமகளாம்! அகவையின்ஓர் அரசன் என்னும்
பெருமகன்;நம் "பாரதி"தாசனின் மகளும் ஆம்!நாம்
       கருத்தினில்கொள் மறந்தசீர்பெண்; "வசந்தா" என்னும்
திருமகளை இயற்கையும்;தன் வசத்தே ஈர்த்து
       சுருக்கிசேர்த்து கணக்கையும்-நேர் முடித்தும்; இன்னும்
இருக்குமே!பார் மறைந்துதான்போய் விடினும் அத்தாய்
       கருத்துணர்ந்து தமிழ்வளர்த்த செயலும் என்றும்!       

குறள்கொடுத்த பெருந்தகையும், இயம்பும் - அப்பேர்
       சிறப்புகொள்-"ஈன் றபொழுதி"னை அறியேன்! ஆயின்,
அறம்நிறைந்த உனதரும்இன் முகத்தைப் பார்த்தென் 
      பிறப்பினையும் முழுமைசெய்த "பொழுதை" நன்றாய்!
இறப்பெனக்கும், துணை-உனக்காய் நிகழும் வண்ணம்
      பிறந்திடும்;வன் எமனவனின் விதியும் என்றேல்?!...
திறந்துவைத்த மனதுடன்,நல் சிரிப்பும் கூத்தும்;
      சிறப்புசேர்த்தே கரம்இரண்டும் வணங்கி ஏற்பேன்!

தமிழ்பயின்ற சிறியனிவன் கொடுத்த வாக்கும்
     குமிழ்அதுவாய் எனதுதொண்டை இடையில்! ஆம்;உன்
"தமிழச்சியின் கத்தி"உரையை கரங்கள் கொண்டு
     அமிழ்தமாய்-சீர் செதுக்கியேஎன் இடம்ஓர் நன்னாள்
     சிமிழ்விளக்காய் அனுதினமும் எரியும் என்னுள்,
தமிழ்ததும்பும் செயலதுவும் விரைந்தே செய்வேன்;
     தமிழ்எனக்கும் அளித்தஓர்நன் பரிசும் என்பேன்!

இறுதியாம்உன் நிகழ்ச்சியில்நான் இணையும் வாய்ப்பும்;
      உறுதியாய்பல் முயற்சிகளால் இணைத்தே பார்த்தும்,
சிறியனும்நான் கொடுத்துவைக்க இலையே; தாயே!
      மறுப்பெதுவும் இருப்பதுவும் முறையோ?! உந்தன்
பிறப்பதுவும்!; இறப்பதையும் இறக்கக் செய்தே;
      பறப்பதுவும், நடப்பதுவும் - நிலைக்கச் செய்தல்?!
பிறகெதற்காய் இறுதியென்றாய் நினைக்க வேண்டும்?
      பறந்துவிடும் அனைத்துலகில் புகழ்பேர் அன்றோ??

இயற்கையின்மேல் உனக்கிருக்கும் இமயம் ஒத்த
      செயற்கையற்ற சுயஒழுக்கம்; அதன்பால் சேரும்
இயற்கையையும் படைத்தவன்-என் இறையின் அருளும்
      செயற்கறியா வகையிலுமாய் கலந்தே உந்தன்
வியத்தகுப்பேர் புகழ்பரப்பும் செயலும்; யார்க்கும்
      பயத்தகும்ஓர் நெறிவழியால் நடக்கும் ஓர்நாள்
சுயம்எதுவும் கலந்திடாமல் திடமாய் நானும்;
      ஈயத்தையும்போல் - சிறியதாய்ஓர் துளையும் காப்பேன்!!!    


                           -          "விழியப்பன்" எனும் இளங்கோவன் இளமுருகு
                                                       மற்றும் குடும்பத்தினர்
                             {வேனில் பாண்டியன்; விழியமுதினி வேனில் இளங்கோவன்}

ஞாயிறு, ஜூன் 15, 2014

என்மீதான என்காதல்...

(உன் காதலுக்கு; என் "வெண்பா" பரிசும்/பதிலும்!!!)


எழுத்துகளின் உயிர்ப்பினில்;என் அகத்தை கண்டாய்!
       விழித்தெழுந்தாய்!! கவலைகள்சூழ் யுகமும் ஓர்நாள்
ஒழிந்தழிந்தே சுகம்தழுவும் கனாக்கள் யாவும்
       முழுமையாய்உள் செலல்உணர்ந்தாய்; அனைத்தும் எந்தன்
எழுத்துயிரால் நிகழ்ந்தது!ஆம் உரைப்பது யாவும்
       "அழகுசேர்நம் தமிழ்மொழிபோல்" நிலைத்த ஒன்றாம்!
"பழகலாமோ; ஒருவருடன் ஒருவர்?" என்றாய்
        மொழியதன்பால் எனக்கிருந்த உறவால் நானும்;

சரியெனவே தயக்கமேதும் சிறிதும் அற்றே;
        புரிதலையும் உயர்த்தலாம்;வா சிநேகம் என்றேன்!
உரிமையும்;நம் சிநேகமும்-ஓர் விகிதம் என்றாய்;
        சரிசமமாய் "நகமுடன்சேர் சதையும்" போலாம்
கரியினால்,வார் வெளிச்சமாய்;நம் உறவின் பலமும்
         உரியதாம்ஓர் உயரமும்;பேர் உரம்சேர் அன்பால்
அரியதொரு நிகழ்வினால்;சீர் மிகும்ஓர் நாளின்
         சிரிப்புடன்பல் சிறப்புடனும் வளர்ந்து நின்ற;

பொழுதுஒன்றில் தயக்கமாய்ஓர் கலக்கம் வந்தே;
         அழுக்ககன்ற உனதுளத்தின் அடியில் எந்தே;
அழுந்தியூன்றி கிடக்கிறதாம்? எனவே கேட்டேன்!
         அழகிநீயும்! மறுப்பெதுவும் அறவே அற்று
மொழியைகாதல் புரிபவன்;என் அகத்தே "காதல்"
         செழித்துஓங்கும் சுகத்தை;நீயும் சுவைத்தே நிற்கும்
அழகியதோர் கதையுமொன்றை கதைத்தாய்; கேட்டேன்
         "பழிபலவும் புரிந்தவன்போல்" இரும்பன் நானும்!

இனியவள்!என் சிநேகமுன்னை மறந்தும் அஃதாய்
        கனவதிலும் உணர்வுஅற்றும் நினைத்தேன் இல்லை;
எனக்கிருக்கும் குடும்பமே-என் உயிரும், மெய்யும்!
        "எனதவளும்; அழகுசேர்என் மகளும்" போதும்!
எனையுமே;நான் சுயத்துடன்இன் களித்தல்; மேல்சொல்
        எனதிருவர் மிகுந்துஏதும் கொடுத்தால் உண்டாம்!
வினையோ?நீ தயக்கமாய்கேட் டதுவும் சொல்வாய்!
        எனக்கிருக்கும் எனதுமேலாம் "என்காதல்" போதும்!

உனக்குமோர்நல் குடும்பமொன்றும் இருத்தல் உண்டாம்!
       உனதவனும்; உனதரும்-இன் மகனும் கேட்பர்
தினந்தோறும் முனைசிரிதும் குறையா உந்தன்
       இனியதோர்நல் இமயஅன்பை! உணர்வாய் தோழி!
கனத்திடும்-உன் இதயமும்;நல் மனமும் கண்டேன்!
        எனக்கிதையும் கடந்துசெய்தல் எதிலும் இல்லை;
இனக்கமாய்ஓர் உடன்படுதல்! மறந்தும் இஃதால்
        எனைதொடர்தல் தவிர்த்தலாம்!நீ எனக்கும் செய்வாய்!

ஞாயிறு, டிசம்பர் 01, 2013

திருமணம்...




(என்னுடைய முந்தைய-கிறுக்கல்; இப்போது, முறைபயின்ற-ஓவியமாய்!)
*****


எதிரெதிராம் துருவங்கள் இரண்டை ஒன்றாய்
         இணைப்பதேயாம் திருமணம்!ஆம் தெரிந்தே செய்யும்
விதிவினையாம் இந்நிகழ்வும்! இணைப்போர் சூழ்ச்சி
         செய்தேதான் உண்மைதனை மறைப்பர்; ஆங்கே
துதிபுரிந்தே கைகொடுப்போர் பலரும்! பத்தும்
          இருந்தென்ன பயன்?பத்தில் எதுவும் பந்தம்
புதிதில்சேர் மணமக்கள் குணத்தில் இன்றேல்;
          ஓங்கிடுதல் எங்கனமாம் குடும்பம் ஒன்றும்?

என்பணம் என் இனம்என்ற முதன்மை வந்தால்
          எவர்மனம்தான் ஒக்கும்?யார் உரைப்பர் ஆர்க்கும்?
இன்பங்கள் பலவிருந்தும் புதிதாய் சேர்தல்
          இல்லையாம்ஓர் உறவுமரம் விருத்தம் கூட்ட!
துன்பங்கள் சிலவிருந்தும் கழிதல் மட்டும்
          அதிகரிக்கும் மர்மமும்என்? எவர்தான் சொல்வர்??
இன்னல்கள் துடைக்கும்நம் உறவும் கொன்று
          உவர்ப்பாய்வாழ் தல்எதற்காம்? உணர்தல் நன்றாம்!

குழந்தையும்ஓர் குதூகலமாய் வரும்நாள் எல்லாம்
          மாறிடும்!காத் திருப்போம்அந் தநாளும் ஓர்நாள்
அழகியலாய் வந்திடுமாம்! விருப்பம் சேர்ந்தும்
          வெறுப்பனைத்தும் கலைந்தும்ஓர் தெளிவும் பூக்கும்!
அழுகையையும் அழித்தேநாம் குடும்பம் ஓங்கும்
          ஓர்வழியும் கண்டுணர்ந்து உரைப்போம்! நம்மால்
அழகியல்சேர் திருமணம்நாம் மடிந்தும் என்றும்
          வாழ்ந்திடவே! முயற்சியொன்றும் பயின்றே வீழ்வோம்!!! 

ஞாயிறு, நவம்பர் 24, 2013

பெண் சமுதாயம்...


(என்னுடைய முந்தைய-கிறுக்கல்; இப்போது, முறைபயின்ற-ஓவியமாய்!)
*****

பெண்களுக்கு யார்எதிரி? யுகங்கள் நூறாய்
          ஆணாதிக்கம் எனும்திமிரால் மடமை கொண்ட
ஆண்களுமோ; மனம்திருத்தி மகளிர் தம்பேர்
          பெருமையையும் முழுவதுமாய் உணர்ந்தார்! இன்றோ;
தூண்களுக்கு ஒப்பாய்பெண் அவள்வேண் டியாய்,
          இல்லறங்கள் பெற்றனவாம் அவள்நல் உள்ளம்!
பெண்களேதான் அவர்கட்கு தடைகற் கள்ஆம்;
           என்பதுவே என்னுள்ளம் உணர்த்தும் உண்மை!!      

கணவனவன்  இழந்தபெண்ணை வையகம் எங்கும்
          "கோவலன்"கள் எவனும்;கீழ் தரமாய் பாரான்!
கண்ணகிகள் அவர்தம்மே அதுபோல் செய்வர்!!
          மலர்,பொட்டு இரண்டுமட் டுமா?பெண் கள்தம்
கண்கள்?அல் லவே!என்றேல்; அவர்கள் ஆர்க்கும்
          வருமேஇந் நிலை;என்றே உணர்ந்தார் இல்லை??
குணங்கள்அல் லவா?பெண்கள் அவர்கள் கண்கள்
          என்றாங்கே உணரவில்லை??? சரியா இஃதும்?   

மருமகன்தம் மகளின்பால் காட்டும் பாசம்
          எனும்உரத்தின் வீரியம்பல் கிடவேண் டும்பெண்;
மருமகள்தம் மகனிடம்ஓர் உரமும் வேண்டல்
          தவறென்றாய்; உரைப்பதுவும் முறையோ? இல்லப்
பெரும்புகழ்சேர் திருவிளக்காம் "புகுந்தாள்" இன்பம்
          காப்பதையேன் மறந்துபோனர்? முகங்கள் பல்கொள்
பெருமகள்;தம் மகளவளின் வடிவம் என்றாய்
          உணரமறுப் பதேன்?உணர்வீர் பெண்கள் யாரும்!!       

அண்ணனிடம் உரிமைகோரும் தங்கை ஆங்கே;
         புதுஉறவாம் அண்ணியவள் அவனுள் பங்கும்
கொண்டவள்என் பதைஉணர்தல் மறந்தர்! என்தூண்,
         என்கனவன்; என்றென்னும் தமக்கை யாரும்
தூண்வேண்டல் பெண்கள்தம் இயல்பாம் என்றே;
         ஏன்உணர்தல் மறந்தர்?யார் உரைப்பர் பெண்கள்
அண்டமே;பெண் குலத்திற்கோர் தடைகள் என்றே?!
         புரிந்திடுமோ பெண்ணியத்தை பரிவோர் யார்க்கும்??
    
பொன்நகைக்காய் புன்னகையை அழித்தல் போலாம்
         பெண்ணினங்கள் அழிவதையும் உணர்ந்தார் இல்லை!
துன்பஅம்பும் தொடுக்கும்ஆண் இனங்கள் உண்டாம்;
         தந்தையாய்! தமையனாய்!தம் பியாய்!வன் காமம்
தன்னுள்சூழ் மாமனாராய்! கொழுந்தன் என்றோர்
         கொடியனாய்!எப் புத்தியற்ற கணவன் என்றாய்;
தன்னிலையில் இருந்திடாத பல,ஆண் கள்சேர்
         உலகொன்று உண்டெனினும்; இருப்போர் சிற்றோர்!!!              

"குறிஞ்சிபூ"வாய் அங்குமிங்கும் இருத்தல் உண்டாம்;
         பூவையர்அண் டம்காப்போர்! "ரோஸ்"பூக் கள்போல்
செறிந்துபூத்தல் என்றாம்?பின் எவர்க்காம்?? "காளான்"
         போலெங்கும் முளைத்திருக்கும் மகளிர் "சங்கம்"?
ஆறிடுமோ! பெண்களே,பெண் களுக்குள் ஆக்கும்
         இரணங்கள் தரும்இப்பேர் வடுக்கள்? சொல்வீர்;
அறிவையும்;காத் திடும்பெண்கள் யாரும்! நீவிர்
         இதைஉணரின் வேண்டிடுமோ? சங்கம் ஏதும்???

பெண்குலத்தை பெண்களேநல் வழியில் போற்றும்
         வகைசெய்வீர்! வாழ்க்கைதானே இயல்பாய் மாறும்!
உண்மையில்பின் எவர்சொல்வர்? பெண்கள் யாரும்
         நிகரில்லை ஆணுக்கென்று?? எதற்காய் பின்னர்
வேண்டும்முப் பதைஒட்டும் விழுக்கா டுக்காய்
          போராட்டம்?! நிரந்தரமாய் வராதோ! நல்ல
பண்பாடும்? உணர்வரோ!நல் இதயம் கொண்ட
          பெண்டிரும்?? உணர்தலேயாம் உயர்ந்த உள்ளம்!!!

ஞாயிறு, செப்டம்பர் 08, 2013

தமிழ் வளர...


பாவேந்தருக்கு சமர்ப்பனம்!
(என்னுடைய முந்தைய-கிறுக்கல்; இப்போது, முறைபயின்ற-ஓவியமாய்!)

*****


தமிழ்இனி மெல்லச் சாகும்
       என்றனர் தமிழ்ச்சான் றோராம்!
உமிழ்வதாய் உணரப் பெரினும்
       இல்லையென் றிடதுணி வில்லை!
அமிழ்தமாய் இருந்தஎம் தமிழும்
       தொய்ந்து தான்உள் ளதின்று!
குமிழ்தேக் குபோன்றே எந்தமிழ்
       செழித்திடல் யாங்கனம் சொல்வீர்!!!

திரைப்படப் பெயர்மாற் றுவதால்
        செழிக்குமோ? இல்லை சிறார்தம்
துறைப்பா டப்புத் தகத்தை
        தமிழில் படிப்பதால் மாறுமோ??
அரசுசார் அலுவலர் கையொப்பம்
        இடுவதால் மாறுமோ? இல்லைநம்
அரசியலார் "வாய்ச்சொல் வீரராய்"
        முழங்குவ தால்தான் மாறுமோ???
  
முகங்கள் முப்பது கோடியாம்;
        அகங்கள் ஆயினும் ஒன்றென!
யுகங்கள் பலவாய் சொன்னதை
        மதங்கள் பலவும் ஏற்றன!
தேகங்கள் அவைதம் நிறத்தில்
        மட்டுமே பேதம்! அல்லவே?
நகங்கள் அடியினில் ஓடிடும்
        இரத்த அணுக்கள் தம்மில்!

ஏனையும் தமிழில் என்பதும்!
        வேற்றுமை தகர்த்து ஒற்றுமை
"ஆனை"யும் காத்தநம் நாட்டை;
        "ஆற்றினை இழந்த கடல்அது
வானையும் மண்ணையும் மழைநீர்
        அற்றதாய் மாற்றி; உலகப்
பானையை வெப்பம யமாய்செய்
        ததுபோல்" மயானமாய் ஆக்கிடும்!!

"தமிழ்வள ர"தமிழைப் பயிலல்
       வேண்டும்! மாறாய் பலதையும்
தமிழில் படித்தல் முறையோ?
        சங்கத் தமிழ்நூல் களையே
தமிழென வெறுமே வாதிடல்
        தொடர்ந்து; தங்கிடத் தவிக்கும்
தமிழனைத் தாங்கிடச் செய்வோம்!!
        மொழியினும் முதன்மை மனிதமாம்!!!

மொழி-ஆய் செய்யும் அறிஞரை
        ஊக்கம் கொடுத்தே; அவரை
பழிப்பதை குறைப்போம்! அவர்தம்
        சுயத்தைக் காப்போம்! அவர்பின்
மொழியை மட்டுமா? மனிதமும்
        சேர்த்தே காப்பர்! ஆங்குமோர்
செழிப்புறும் நாட்டையும் காப்பர்!
        உணர்வரோ இதையும் படிப்பர்??

இவைகளை செய்திடின் இனிவரும்
        தலைமுறை யரேனும்; தமிழ்தனை
அவையினில் வெறுப்புடன் அன்றிலாம்
       விருப்புடன் கற்பரே! கேட்பரோ;
அவைதனில் வீற்றமர்ந் திருப்போர்??
       கேட்டிடின்! வருவரே நம்தமிழ்ச்
சுவையினில் திளைக்கவே பற்பலர்!
       கோட்டையில் இருப்போர் கேட்பரோ???

மொழியது உணர்வாய்; ஒட்டிவாழ்
       உறவாய் இருத்தல் அவசியம்!
பழியாய் பிறர்மேல் வஞ்சகம்
       உறைந்தே இருத்தல் அசிங்கம்!!
ஊழியாய் எவர்மொழி அதுவையும்
       எண்ணிடல் இழுக்காம் என்பதாம்;
மொழிமேல் ஈர்ப்புகொள் "தமிழ்மொழி
       கதைக்கும் இந்தியன்" விருப்பமாம்!!!

ஞாயிறு, செப்டம்பர் 01, 2013

மகளே! விழியமுதினி...

(முன்பு "கவிதை என்று நான் கிறுக்கியது" - இப்போது "விருத்தப்பா"வாய்!
என்னப்பனின் கருத்து கேட்டிட வேண்டும்!!)

அமிழ்ததினும் இனியவள்என் மகளாம்! எல்லா
       விழிகளிலும் அழகாம்அ வளின்ஈர் கண்கள்!
தமிழ்அளிக்கும் அமுததுவாம் அவள்நல் உள்ளம்;
       வழிநடத்தும் ஆலயமாம் அவள்பேர் ஞானம்!!
குமிழ்ந்திடுமாம் அண்டமெலாம் அவள்கால் கீழாம்
       விழிதிறக்கும் முன்னெழுத நினைத்த இப்பேர்
தமிழ்க்கவியோ! தாமதமாய் முடிந்தும்; யாரும்
       விழிவிரிக்கும் வண்ணமாய்வந் ததும் காணீர்!!!

கருவறையில் நுழைந்தவுடன் உறுதி கொண்டேன்;
       விந்தணுவில் வென்றதுஎன் மகள்தான் என்றே!
தெருவறையில் துவங்கிபின் சமையற் கட்டில்
       சாந்தமாகும் இளந்தென்றல் எனவே பெற்றோர்
இருவர்எம் மனமுழுதும் பெயர்என்? என்ற
       சிந்தனையும் மகிழ்தென்றல் உருவில் கண்டோம்!!
ஒருவாறாய் கண்டிட்டேன் எனைசார் மொத்த
       சொந்தமெலாம் கொண்டாடும் புகழ்பேர் ஒன்றாம்!!!

"விழியமுதி னி"யென்றபொன் பெயராம்! அந்த
       பெயர்கண்ட வரலாற்றின் விளக்கம் கேளீர்!!
மொழியதுவின் பால்கொண்ட உயர்ந்த பண்பால்;
       உயர்கண்டம் ஆசியாவின் உயிர் காக்கும்
மொழியாம்நம் தமிழதுவின் "ய/ழ"வும் கொண்டு
       துயர்க்கஞ்சேன் என்றெண்ணி பெயர் கண்டேன்;
"ழ,ய"கரம்ஒன் றாய்சேர்ந்தே! இதுவும் சொல்லும்;
       உயர்குணமும் "எண்ணித்து ணிககர்  மம்"என!!!

கர்வமொன்று முளைத்ததுஎன் மனதில் கேளீர்!
       என்னுயிராம் மகளின்பேர் தனித்து வேண்டி;
ஆர்வமொன்று சூழ்ந்ததென்னுள் - தேடினேன் எங்கும்
       எண்பதுக்கு மேற்பட்டும் தொகுப்பில் மூழ்கி;
ஆர்க்குமிங்கு இல்லையென்றே துருப்பும் கண்டேன்!!
       எண்ணித்து ணிந்தகர்மம் அதுவும் பொய்த்தல்;
சர்வசத்தி யமாய்சாத்தி யமில்லை! என்றே
       என்னய்யன் வள்ளுவன்சொன் னதுவும் மெய்யே!!!     

என்றுநான்கேட் பேன்?மகளும் இசையாய் இப்பேர்
       உரைப்பதையும்! அவளோர்நாள் இசைவாய் சொல்லும்
அன்றுதான்என் மகிழ்திருநாள்!! வருமே அந்நாள்
       விரைவினிலே! "விழியப்பன் கணக்கும்" பொய்த்தல்     
நன்றன்றாம்  எனஉணர்ந்த மகளும் இன்றே
       விரைந்திடுவாள்! எவ்வுலகு(ம்) அழிந்தும் எஞ்சும்  
ஒன்றென்றே இட்டபெயர் வையத்தோர் யார்க்கும்
       பறையறைந்தே செப்பிடுவாள்; அவள்பேர் காப்பாள்!!! 

ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013

கொலைகாரன்...



(நான் எழுதியது)

கோடியில் ஒருவனை கொன்று;
       பெற்ற பெயர்கொலை காரன்!
கொடிஉயி ரணுக்களை கொன்று,
       ஒருவன் ஆய்உயிர்த் தவன்!!
கோடிப் புண்ணியம் செய்து;
       பெற்ற பிள்ளை யென்று,
ஆடப் படுகிறான்; சொல்வீர்
       நீவிர்!!! யாரோ கள்வன்???


*******

(என்னப்பன் உருமாற்றியது)


கோடிமக் கள்இடை யினில்ஓர்;
       உயிர்கொன் றால்கொலை காரன்!
கோடி உயிரணுக் களிலே,
       ஒன்றால் வந்தமனிதன் மட்டும்
தீடு நடைபோட் டிங்கே
       பேரறி வால்புகழ் பெற்றான்!!
மாடு புகழ்செல் வத்தால்
       தெள்ளமுதாய் வாழ்ந்தார் காணீர்!!!


பாவேந்தரின் "பொது-விளக்கு"

(பாவேந்தரின் "குடும்ப விளக்கு" ஏற்றிவைத்தது, என்னுள் "விருத்தப்பா" எனும் "சுடர்விளக்கு"!
என்னப்பனின் தமிழறிவு-எண்ணெய்க்கிணறால்; ஆகிடுமிது "அணையா விளக்கு"!!
தெளிந்திடுங்கள் யாரும் - வேந்தரது யார்க்கும் "பொது விளக்கு"!!!)
*******

(என்னப்பனிடம் இலக்கணம் பயின்று, நான் "பலமுறை" மாற்றி எழுதியது!)

பாவேந்தர் தம்புகழ்சேர் விளக்கு; நீத்த
       பல்இருளும் புரிந்தோரே நிசமாய் மேதை;
பாவலர்க்கோ அம்மாபெரும் விளக்கு - கீதை!
       பேரிருளின் போர்வையில் இருக்கும் இந்நாள்
பாவையரோ?! இல்வழியால்; தமிழர் மாண்பாம்
       பெருவிளக்கை இருள்சூழஓர் வழிசெய் கின்றார்!!
பாவலாண்டார் ஏற்றிவைத்த விளக்கு; ஆர்க்கும்
       "பொதுவாம்"என் பதைமறத்தல், தகுமோ? சொல்வீர்!!!

*******

(என்னப்பன் உருமாற்றியது....)

பாவேந்தர் ஏற்றிவைத்த விளக்கால்; நாட்டின்
       பைந்தமிழர் பண்புதனை உணர்ந்தோர் கோடி!
பாவலரின் பொதுவிளக்கால் வெளிச்சம் பெற்ற
       பாத்திறனை உணராதோர் இணைத்து இந்நாள்
பாவையரும்; குடும்பத்தை புரிந்தார் இல்லை!
       பாரிடையில் விதிவிலக்காய் வாழ்ந்தே நாளும்
பாவத்தைச் செய்கின்றார்; பயன்தான் உண்டோ?
       பாமரராய் வாழ்ந்திடுதல் முறையோ? சொல்வீர்!!!

*******

முன்னுரை - என் "விருத்தப்பா" விருட்சமான விவரம்...



        பலமாதங்களாய் முயன்று - இப்போது தான் பாவேந்தரின் "குடும்ப விளக்கு" முழுவதையும் படிக்க முடிந்தது. பாவலை-ஆண்ட அவரின் "விருத்தப்பா"க்களை கண்டு என்னுள் எழுந்தது ஓர் தீப்பொறி; அப்பொறி என்னுள் ஏற்றியது ஓர் சுடர்விளக்கு. உடனே, குடும்ப விளக்கை பற்றிய என்னுடைய பார்வையையே; என் "கன்னி - விருத்தப்பா"வாய் எழுதினேன். நான் முதலில் எழுதியது - என்னறிவுக்கு இப்படித்தான் என்று தோன்றிய - "அறுசீர் விருத்தம்". இலக்கணம் ஏதும் என் நினைவில் இப்போது இல்லை என்பது தெளிவாய் தெரிந்ததால் - என்னப்பனுக்கு என்னுடைய விருத்தப்பாவை சொல்லி அவர் கருத்து வேண்டிட்டேன். அவர் என்னப்பனாய் இராது - எனக்கு பாடம் நடத்திய அதே தமிழாசிரியராய் இருந்திருந்தால் என்றோ நிறுத்திவிட்ட "கும்பிடறேன்பா" என்ற என் கண்டுபிடிப்பை மீண்டும் ஓர்முறை சொல்லவைத்திருப்பார் என்பது பின்னால் தெளிவாய் புரிந்தது. ஆனால், அவர் மிக எளிதாய் ஆரம்பித்தார்; முதலில் நீ கூற வருவதை "அறுசீர் விருத்தமாய்" கூறிடல் ஆகாது என்றார்! இதை "எண்சீர் விருத்தமாய்" எழுதினால் தான் சரியாய் வரும் என்றார். என்னுடைய விருத்தப்பாவின் "கரு" இதுதான்: "பாவேந்தரின் குடும்ப-விளக்கு உணர்த்திட்ட அனைத்தும் உணர்ந்து வாழ்வோரே - சான்றோர்! அதை விடுத்து - இன்றைய பெண்கள் அந்த குடும்ப-விளக்கையே அணைத்துவிட்டார்கள்; மேலும், பாவல்-அரசரின் விளக்கு, "அவர்"குடும்பத்துக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் பொதுவானது!!" இதுதான் என்னுடைய பாடலின் பொருள்(இன்றைக்கு என் முதல்-விருத்தப்பா வெளியாகிறது)!!! 

         அறுசீர் விருத்தத்தில் சொல்லமுடியாது என்பதை முதலில் கூறியாவர், பின்பு - மெதுவாய் அறுசீரில் "ஓர் சீரில் - இரண்டு அசை-மட்டும் தான் வரவேண்டும்"; எப்போதேனும் 3 வரலாம்; ஆனால், உன் பாடலில் 3 அசைகள் அதிகம் உள்ளன! 4 அசைகள் வரவே கூடாது; அதுவும் இருக்கிறது" என்றார்!! நான், "சீரா? அசையா??" என்று மயங்கினேன்; இந்த "மடையனுக்கு" எட்டிய அறிவு "சீர்" என்பது ஓர் வார்த்தை அல்லது பல-வார்த்தைகள் ஒன்றுசேர்ந்தது என்பதுதான். சரி, அசை பற்றி கொஞ்சம் சொல்லிடுங்கள் என்றேன்! "நேரசை, நிரையசை" என்ற 2 உண்டென்றார்; "குறில்(அ) தனித்தும், குறில் ஒற்றடுத்தும் (அம்); நெடில் தனித்தும் (ஆ), நெடில் ஒற்றெடுத்தும் (ஆம்) - வருவது "நேரசை"; குறில் இணைந்தும், குறில் இணைந்து ஒற்றடுத்தும்; குறில்-நெடில் இணைந்தும், குறில்-நெடில் இணைந்து ஒற்றடுத்தும் வருவது "நிரையசை"! என்றார். அடடா, எங்கேயோ; எப்போதோ படித்திருக்கிறோமே என்றுணர்ந்தேன். பல தமிழ் மன்ற தேர்வுகளில் கலந்துகொண்டு "முதல் பரிசு" பெற்று என்னப்பனுக்கு புகழ்-தேடி தந்திருக்கிறேன். என்ன பயன்? தெளிவில்லாத "மனனம்" மூலம் படித்து முதல்-மதிப்பெண் எடுப்பதில் எந்த பயனும் இல்லை என்று பலமுறை கூறி இருக்கிறேன்; நான் படித்த அசைகளை உணர்ந்து ஓர் "விருத்தப்பா"-ஆவது எழுதி இருந்தால் நான் அதை மறந்திருக்க சாத்தியமே இல்லை. இதே போல் தான், அத்தனை படைப்பும்! செயல்முறை அனுபவம் இல்லாத "வெறும்-படிப்பு" மட்டும் நிலைப்பதற்கு சாத்தியமே இல்லை!!

       பிறகு, சீர்-இலக்கணம் இவ்வாறென்று நினைவூட்டினார்:  "நேர்/நேர் - தே/மா; நிரை/நேர் - புளி/மா; நிரை/நிரை - கரு/விளம்; நேர்/நிரை - கூ/விளம்". அட, இதையும் படித்திருக்கிறோமே என்று நினைவு கொண்டேன். சரி என்று, என்னுடைய பாடலை - "எண்சீர் விருத்தமாய்" மாற்றி அவரிடம் படித்து காட்டினேன்; அவர், இப்போது பரவாய் இல்லை; ஆயினும், பொருள் தெளிவில்லை என்றார்! என்னுள் "சொல்லில் குற்றமில்லை; இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம்! ஆனால், பொருளில் தான் குற்றம் இருக்கிறது" என்று நக்கீரன் பேசினார்! என்னப்பன் பின்-தொடர்ந்தார்: எண்சீர்-இலக்கணத்தின் மரபு வேறு என்று விவரித்தார்: "எண்சீர்-விருத்தத்தில், 8 சீர்களில் - முதலிரண்டு சீர்கள், 3 அசைகள் கொண்டிடவேண்டும்; 3, 4 வது சீர்கள் - 2 அசைகள் கொண்டிடவேண்டும் - அதிலும் 3-வது சீர் "புளிமா"வாய் இருத்தல் நலம்; 4 ஆவது சீர் "தேமா"வாய் இருத்தல் வேண்டும்; இதே விதி 5 முதல் 8 வரியிலான அடுத்த 4 சீர்களுக்கும் பொருந்தும் (7 ஆவது சீர் "புளிமா"வாய் இருக்கலாம்) என்றார்!! என் மயக்கம் அதிகமானது;  ஆனால், ஓர் காரியத்தை செய்ய துணிந்துவிட்டால் - அதை செய்து முடிக்காமல் நான் ஓய்வதில்லை!! முயன்றேன், பலமுறை! எழுதினேன் மாற்றி, மாற்றி!! ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஓர் இலக்கணத் தவறு! பொருள் குற்றம் தொடர்ந்து கொண்டே இருந்தது!! என்னப்பன், நான் தளர்வுருவது கண்டு "இது ஆரம்பம்-பா; அப்படித்தான் இருக்கும்! குழந்தை உடனேவா நடந்து விடுகிறது? என்றார்". அவருக்கு, என்மேல் நம்பிக்கை இருந்தது!!

    அவர் நம்பிக்கை(யை), வீணா(க்)கவில்லை! ஓர்நாள் - நான் மாற்றியெழுதி படித்திட்ட ஒன்றை; பொருள் மிகச்சரியாய் இருக்கிறது; இலக்கணம் நன்றாக இருக்கிறது; சிறு-மாற்றம் தான் வேண்டும் என்றார்! அவரே, இது சிறப்பாய் வந்திருக்கிறது என்றார்!! அந்த கணம் -  முதன்-முதலில்; என்மகளை அவள்-பிறந்து 10ஆவது நிமிடத்தில் என்கரங்களில் சுமந்த - பரவசம் போல் உணர்ந்தேன்!!! இதற்கிடையில், அவர் என்னுடைய பாடலை (பொருள் மாறாது)வேறொரு வடிவில் கொடுத்தார்; என்ன ஓர் புலமை அது! என்ன ஓர் பொருட்செறிவு அது!! என்னுடைய பொருளின்-கணம் கூடியதை உணர்தேன்; அந்த மாற்றத்தை என் பொருளில் கொண்டுவந்தேன். பின், அந்த பொருளை உள்வாங்கி என்னுடைய பாடலை முழுதுமாய் மாற்றி எழுதினேன். அதில், அவர் செய்திட்ட சில-மாற்றம் கொண்டு வந்திட்ட பாடலைத்தான் இன்னும் சில மணிநேரங்களில் பதியவிருக்கிறேன். முதலில், அவர் கொடுத்த பாடலைத்தான் பதியலாம் என்றிருந்தேன்! ஆனால், (என்னப்பனே, எனினும்!!) என்-சுயம் அதற்கு இடமளிக்கவில்லை. அதனால், என்னுடைய பாடலையே பதிவு செய்யப்போகிறேன்; ஆயினும், அவரின் பாடலை நிராகரிக்க விரும்பவில்லை; அதனால், என்னுடைய பாடலின் கீழே என்னப்பன் எழுதிய அந்த பாடலையும் வெளியிடுகிறேன்! என்னப்பனின், பாடலில் இருந்து ஓரிரு சொற்களை பயன்படுத்தி இருக்கிறேன்; அதில், எந்த தவறும் இல்லை; அவரின் வித்து தானே, நான்?! ஆனால், பாடல் நன்றாக வந்திருப்பதை நீங்களும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

          இறுதியான - பாடல் வெளிவரும் முன்; நான் எழுதிட்ட முதல் வடிவத்தை இங்கே கொடுக்கிறேன்:

                             பாவேந்தரின் "குடும்ப விளக்கு",
                                      "பா"க்களை புரிந்த "பார்போற்றும்;
                             பாவலர்க்கு "பொது விளக்கு!
                                      "பா"க்களை உணரா "பார்வை"யிலர்க்கு,
                             பாவைவளர்க்கும் "பந்த பாசத்தின்"
                                       பாங்குகள் புரிவது, "விதி-விலக்கு"!!
                             பாவமே செய்யவில்லை யெனினும்;
                                       பாமரரவர்கள், பலியாவரே "இன்னலுக்கு"!!!

தமிழ்-இலக்கணம் தெரிந்தோருக்கு இதில் எத்தனை பிழைகள் உள்ளன என்பது தெளிவாய் தெரியும்; எனக்கே(??!!) இப்போது தெளிவாய் தெரிகிறது!! என்னப்பன் கூறிய பின்தான் - நான் சொல்லவந்ததை தெளிவாய் சொல்லவில்லை என்று உணர்ந்தேன். இதை உணர்ந்த பின், என் பாடல்-திறன் தானே செம்மையானது. இங்கே, ஒன்றை கூறிட விரும்புகிறேன்! என்னப்பன், எழுதிய வடிவத்தில் - நான் எண்ணிட்ட பொருள் வரவில்லை என்று ஒன்றிரண்டு மாற்றங்கள் செய்தேன்; அதை, என்னப்பன் வடிவாய் பாராட்டி - அந்த சொற்கள் வலிமையாயும் இருக்கின்றன! என்றார்; நான் அகமகிழ்தேன்.

என்னுடைய கன்னி-விருத்தப்பா; உங்களை கவரும் என்று நம்புகிறேன்!!!

பின்குறிப்பு: என்னப்பன் கூறியதாய் நான் எழுதி இருக்கும் இலக்கணத்தில் தவறு எதுவும் இருப்பின் - அருள்கூர்ந்து அதை என் பிழை என்பதை உணருங்கள்! அப்படி ஏதும் இருப்பின் எனக்கு தெரிவியுங்கள்; என்னப்பனிடம் தெளிவு-படுத்திக்கொண்டு பிழையை சரிசெய்கிறேன்.