ஞாயிறு, ஜனவரி 26, 2014

யார் இந்த சமூக ஆர்வலர்கள்???



      "திருக்கோவிலூர் அருகே 21 குரங்குகள் இறந்தன!" என்ற செய்தியை நாளிதழில் பார்த்ததும் ஆர்வமாய் படிக்க ஆரம்பித்தேன். அங்கிருந்து 9 கி.மீ. தொலைவில் தான் "திருப்பாலப்பந்தல்" என்ற என் கிராமம் உள்ளது. வேளாண்-துறையின் "இருப்புக் கிடங்கின்" உடைந்திருந்த கண்ணாடி-ஜன்னல் வழியே சென்ற குரங்குகள் அங்கு வைத்திருந்த "எலிக்கொல்லி மருந்து" தடவிய "பிஸ்கட்டை" தின்றதால் இறந்தனவென பின்னர் தெரிய-வந்ததாம்! இன்னும் எத்தனை குரங்குகள் பாதிப்படைந்துள்ளன என்பதை கண்டறியும் முயற்சி நடைபெறுகிறதாம். பின்னர் அந்த குரங்குகளை  அடக்கம் செய்தனராம்.  உடனே, சமூக ஆர்வலர்கள் (???!!!) சிலர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் கோரிக்கை வைத்தனராம். இதைப்படித்தவுடன் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை; பெரிய-நகைப்பு தான் வந்தது. யார் இந்த சமூக-ஆர்வலர்கள்? எங்கிருந்து வந்தனர், இவர்கள்?! இவர்களின் நியாயமும்/ புரிதலும் தான் என்ன??

          இப்படி பல கேள்விகள் எழுந்தன! சரி, இவர்கள் ஏன் "எலிக்கொல்ல மருந்தா???" என்ற கேள்வி  எழுப்பவில்லை! என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், அது அவர்களுக்கு முக்கியம்! எலிகள் பெருகி தானியங்கள் அழிந்துவிட்டால்? என்ற பயமாய் இருக்கலாம். எலியை கொல்வது அவர்களுக்கு இலாபம்! அதாவது, தெரிந்தே எலியைக் கொல்வது அவர்களுக்கு நியாயம்!! ஆனால், தெரியாமல் குரங்குகள் இறந்துவிட்டால் இவர்களின் "சமூக ஆர்வம்" தலைதூக்கும்! ஏன்னா? காலைல தெம்பா "ஆட்டுக்கறி-குழம்பு" சாப்பிட்டு வந்துதானே பெரும்பாலோர் இந்த "சமூக ஆர்வமே" கொள்கின்றனர்?!. இல்லை எனவில்லை! எந்தெந்த விலங்குகள் கொல்லப்படலாம் என்பதையும் "மனித-விலங்குகள்"ஆகிய நாம் தான் முடிவு செய்கின்றோம்; நமக்கு தானே "ஆறறிவு??!!" இருக்கிறது? அதில் எந்த தவறும் இல்லை எனக்கூட கொள்வோம்! வன-விலங்குகளை தேவை இல்லாமல் "வேட்டையாடுவதை" தவறென்பதில் இருக்கும் நியாயம் புரியாமல் இல்லை!

      இந்த குரங்குகள் திருக்கோவிலூர் மற்றும் அதை சுற்றியுள்ள என்-கிராமம் போன்ற பல கிராமங்களை பாடாய்ப் படுத்துவதற்கு என்ன நடவடிக்கை? இதுபோல் பல ஊர்கள் உள்ளன; உண்மையில் இவைகளை கொல்லவேண்டும் என்ற வெறி என்னுள் பலமுறை எழுவதுண்டு! குரங்கு-கடியும் நாய்க்கடியும் ஒருபோன்ற பாதிப்பை கொடுப்பவை. ஒன்றரை வயதில் தனக்கு "ரோசாப்பூ" பிடிக்கும் என்று என்மகள் சொன்னதற்காய் "பெரிய ரோசா" தோட்டத்தையே 73-வயதில் கடினப்பட்டு வளர்த்து அதை குரங்குகள் நாசம் செய்வதை பார்த்து நொந்த என்னப்பன் போன்றோருக்கு இவர்களில் எவர் பதில் சொல்வர்? என்மகளுக்காய் அவர் பராமரித்த "வாழைத் தோட்டத்திற்கும்" அதே நிலை தான்! இவர்கள் ஏன் குரங்கு-பண்ணை அமைத்து அந்த குரங்குகளுக்கு வாழ்வாதாரமும்/ பொருளாதாரமும் ஏற்படுத்தி கொடுக்கக்-கூடாது?! அப்படி செய்திருந்தால், அக்குரங்குகள் இப்படி முறை தவறி செய்திருக்காதே?! இப்படி ஏன் அந்த ஆர்வலர்கள் யோசிப்பதில்லை?!

       இதேபோல் தான் தெரு-நாய் தொல்லைகளும்! அவ்வப்போது அப்படி கடிபட்டு "அவதிப்பட்டு இறக்கும்" சிறார்கள் பற்றி படிக்கும்போது மனம் எளிதில் "கனக்கும்"! அதற்கு இவர்கள் என்ன வரைமுறை செய்திருக்கிறார்கள்?! அதை-பிடித்து கொல்லும் நடைமுறையையும் எதிர்த்து நிறுத்தி விட்டார்கள்! அந்த நாய்களால் என்ன பயன்? அவைகளால் மற்றவர்களுக்கு தான் தொல்லை! அவைகளுக்கு "குடும்பக்கட்டுப்பாடு" செய்து "பின், விட்டு" விடவேண்டுமாம்! "ஏன்யா?! இது மாத்திரம் இயற்கைக்கு எதிரானது இல்லையா??!!". பின்னர், அவைகளுக்கு "ஆன்டி-ரேபிஸ்" மருந்து அளிக்கவேண்டுமாம்! இதற்கெல்லாம் எவர் பணம் செலவழிப்பது?! "இந்த ஆர்வலர்கள் ஏன் ஆளுக்கொரு நாயாய் எடுத்து சென்று வளர்க்கக்கூடாது?!". ம்ஹூம்! அதெல்லாம் அவர்கள் செய்ய மாட்டார்கள்: அவர்களின் "ஜிம்மியும்; டாமியும்" வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும்; அவைகள் "குளிரூட்டப்பட்ட அறையில்" வளரும். ஆனால், அவர்கள் தெரு-நாய்க்காய் இப்படி பேசுவர்.

      ஏனெனில், கடிபடப்போவது அவர்களின் குழந்தைகள் அல்லவே?! இதுபோல் பல விலங்குகள் சார்ந்த பிரச்சனைகள் உள்ளது எனினும், சமீபத்தில் ஊட்டியில் "பிடிக்க முயன்று பலனற்று போய்; இருதியார் அந்த ஆட்கொல்லி-புலியை சுட்டுக்கொன்ற" சம்பவமும் அதற்கான எதிர்க்குரல்களும்! அந்த பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் என் முக-நூல் நண்பர் திரு. பத்ரசாமி சின்னசாமி யும் ஒருவர். 2  வார காலம் குடும்பத்தையும்/ பண்டிகையையும் விட்டு காட்டில் அலைந்து-திரிந்த அவரை(யும்) பலர் சாடி  வருகின்றனர். காட்டில் நடக்கும் அனைத்து முயற்சிகளையும் ஆதாரத்தோடு அவ்வப்போது வெளியிடும் நல்ல அதிகாரி அவர். அவரை இப்படியா காயப்படுத்துவது?! அவரைப்போன்றோர் இல்லாமலா; வனமும்/ வன-விலங்குகளும் காப்பாற்றப்படுகின்றன? அவர்(களு)க்கு தெரியாத விலங்கின் உயிரா?/உயர்வா?? ஏன் சற்றும் சிந்திப்பதில்லை இந்த "ஆர்வலர்கள்" எனும் "ஆர்வக்கோலாறுகள்?". சரி, நாய் போலவே புலியையும் "பிடிக்கக்கூட" வேண்டாம் என்று வாதிட வேண்டியது-தானே?? அந்த அலுவலர்கள் பட்ட வலிகளும்/ வேதனைகளும்-ஆவது எஞ்சியிருக்கும்! ஏன்னா?! நான் முன்பே கூறிய-வண்ணம்...

அவர்களுக்கு எந்த விலங்குகள் பற்றி எப்படி பேசவேண்டும் என்பது தெளிவாய் தெரியும்!!!

பின்குறிப்பு: விலங்குகள் என்று மட்டுமல்ல! திருமணத்திற்கு முன் பாலுறவு கொள்வதில் தவறில்லை என்ற பதிலை சொன்னதற்காய் - "கேள்வி கேட்டவரை விட்டுவிட்டு" பதில் சொன்ன நடிகையை சாடும் இதுபோன்ற ஆர்வலர்கள் பலர் உள்ளனர். இவர்களுக்கு எல்லாம், இந்த நியதிகளை எவர் எந்த விதத்தில் எடுத்து சொல்வது???

திருமண-நிகழ்ச்சியின் மகத்துவம் என்ன???



        பலநாட்களாய்/சில ஆண்டுகளாய் எண்ணியிருந்த "என் திருமண"புகைப்படங்களைப் பார்க்கும் செயல் 2 நாட்கள்-முன் நடந்தேறியது. அதில் என்னை மிகவும் கவர்ந்த ஓன்று மேலிருப்பது! அதில் என்னுடன் இருப்பது என் தமக்கை-மகன். அவன் அத்தனை இளையதாய் இருப்பது மட்டுமன்றி அவன் என்னுடன் இருக்கும் புகைப்படங்களின் எண்ணிக்கையும் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. அவற்றில் இருக்கும் பலரை அவனுக்கு தெரியாது; ஏன், எனக்கு தெரியாதவர்களே அதிகம்! அப்படி இருந்தும் அவன் என்னுடன் இருக்கவேண்டும் என்ற ஒரேயொரு காரணத்திற்காய் மட்டும் அத்தனை நேரம் இருந்ததை உணர்ந்தேன். அவன் என்னை மிகவும் நேசிப்பது தெரியும்; ஆனால், அத்தனை நேசிப்பதை இப்போது தான் உணர்ந்தேன். அவனை மனமுவந்து பாராட்டுகிறேன்! இதிலென்ன? எல்லாக்குழந்தைகளும் அப்படித்ததான் இருக்கும் எனலாம்! ஆனால், அவனின் குணம் அதுவல்ல; எல்லோரிடமும் அவன் அப்படி இருந்துவிடுவதில்லை.

        "சிலர் அர்த்தமில்லாது திருமண-நிகழ்ச்சி என்பது பண-விரயம்/ நேர-விரயம்" என்று சொல்வதில் எந்த உடன்பாடும் இல்லை! உண்மையில், இதுபோன்ற நிகழ்ச்சியில் வாழ்க்கைக்கான பாடங்கள் நிறைய உள்ளன! அதுதான் திருமண-நிகழ்ச்சியின் கருவாயும் இருந்திருக்கவேண்டும்; இதை நம்மில் பலர் உணராதது துரதிஷ்டமே! என் தமக்கை-மகன் அப்படியொரு நேசத்துடன் என்னிடம் இருப்பதை ஓர் உதாரணத்திற்காய் கூறினேன்; இது போல் எத்தனை எத்தனை உறவுகள்? நேசங்கள்?? எத்தனை நெஞ்சங்களின் வாழ்த்துக்கள்??? எந்த பிரச்சனையை சந்தித்துக்கொண்டிருக்கும் எந்தவொரு தம்பதியரும் - தத்தம் திருமணம் போன்ற நிகழ்வுகளின் புகைப்படங்கள் மற்றும் அவை சார்ந்தவற்றை பார்த்தால் போதும்! எத்தனை உறவுகள் அவர்களின் திருமண-பந்தம் நீடிக்க வாழ்த்தியது/விரும்பியது தெரியும்; அவர்களின் எந்த சிக்கலும் தீரும்; மனம் இலகுவாகும்! ஆனால், அதை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வேண்டும்; எப்போதும் வேண்டும். நான் எல்லா புகைப்படங்களையும்/ காணொளிகளையும்...

மிகவும் ஆழமாய் பார்க்கப்போகிறேன்!... அப்போ நீங்க???

இந்திய-கிரிக்கெட்டின் இன்றைய-நிலை...



          நேற்று 3-ஆவது ஒரு-நாள் கிரிக்கெட்டின் 40-ஆவது ஓவர் முடிந்த நிலையில் இந்த மனதங்கத்தை எழுத ஆரம்பித்தேன். தோல்வியை நோக்கி இந்தியா விளையாடிக்கொண்டு இருந்தது; ஆனால், 2 "பௌலர்களின்" திடீர்-தாக்குதலால் அந்த போட்டியை "டை" செய்தது. சமீபத்தில் 5-போட்டிகளில் (தென்னாப்ரிக்கா உட்பட) "டாஸ்" வென்ற தோணி "ஃபீல்டிங்" தேர்வேடுத்துள்ளார். அதில், 2-ல் படுதோல்வி! இப்போதைய தொடரின் முதல் 2 போட்டிகளில் "நிரந்தர-கோலி"யுடன் தோணியும் கைகொடுக்க "குறைந்த"ரன் வித்தியாசத்தில் தோற்றது. நேற்றைய போட்டியில் கோலி-விரைவில் "அவுட்டாக" அடுத்தது "ரைனா" வந்ததைப் பார்த்து நான் "அவுட்டிங்" சென்றுவிட்டேன் - 40ஆவது ஓவர் நடைபெறும்போது மீண்டும் இல்லம் வந்தேன்! நேற்றும் தோணி சிறப்பாய் ஆடினார். தொடர்ந்து இப்படி தோணி "ஃபீல்டிங்" தேர்ந்தெடுக்க என்ன காரணம்? நம் சமீபத்திய "பேட்ஸ்மென்கள், சேசிங்கில்" சிறந்தவர்கள் என்பது இருக்கட்டும் - ஆனால், அதுவும் இந்தியாவில் மட்டும் தான்!

          நல்ல "பேட்ஸ்மென்கள்" இருப்பதால் முதலில் "பேட்டிங்" செய்து அதிக-ரன்கள் எடுப்பதுதானே "வலுவற்ற நம் பௌலர்களுக்கு" உதவியாய் இருக்கும்?! என்னவோ? நம் "பௌலர்கள்" எந்த "டீமையும்" 25-ஓவர்களுக்குள் சுருட்டி விடுவார்கள்; நாம் 15-ஓவர்களுக்குள் இலக்கை அடைந்து, 60-ஓவர்கள் மீதம் பண்ணி "ரெஸ்ட்"எடுக்கலாம் என்பது போல் ஓர்-கேப்டன் செயல்படுவது ஏன்? ஒன்றிரண்டு போட்டிகளில் முதலில் "பேட்டிங்" எடுக்கலாம்; அது(வும்) தொடர்ந்து தோல்வியை கொடுக்கும்போது மாற்றிக்கொள்ள வேண்டாமா? ஏன் இந்த பிடிவாதம்?? நல்ல கேப்டன்/வெற்றி கேப்டன் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை! அதற்காய் இப்படியொரு பிடிவாதம் வேண்டுமா? தொடர்ந்து "அவருக்கு பிடித்த வீரர்களுக்கு" வாய்ப்பளிப்பதிலும் இதே நிலைப்பாடு! இவர்களுக்கு பின்னால் (முன்போல் இல்லையெனினும்) ஒரு தேசமே "மனதால் விளையாடிக்கொண்டிருப்பது" இவர்களுக்கு தெரியாதா என்ன? இந்திய கிரிக்கெட்டின் இன்றைய நல்லது/கெட்டது...

என்ற இரண்டு நிலைகளும் ஒரு கேப்டன் கையில் இருப்பது துரதிஷ்டவசமோ???      

இராசி-பலன்கள் பார்ப்பது சரியா???



        எனக்கு ஜோதிடம்/குறி-பார்ப்பது அல்லது எதிர்காலத்தை கணிப்பது என்பதில் எந்த நம்பிக்கையும் இல்லை. ஆனால், நடப்பது எல்லாம் முன்பே திட்டமிடப்பட்டு விட்டது என்பதில் ஓர் அலாதி-நம்பிக்கை உண்டு. ஆனால், அது என்னவென்று தெரிந்துகொள்வதில் எந்த ஆர்வமும் இல்லை; அதை உறுதியாய் சொல்வோர் எவரும் இருத்தல் சாத்தியமில்லை என்றும் ஓர் நம்பிக்கை உண்டு. என்ன வந்தாலும், சந்தித்துதான் ஆகவேண்டும் என்ற எண்ணம் மிகுந்திருக்கிறது; என்னை அப்படியே புரட்டிப்போட்ட விசயங்கள் என்று 2 உண்டு; இரண்டும் என் வாழ்க்கையையே முடித்துக்கொள்ளும் அளவிற்கு கூட என்னை இட்டுச்சென்றிருக்க வேண்டிய விசயங்கள். ஆனால், தற்கொலை என்ற முட்டாள்தனமான ஓர்-முடிவில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை; அதை சில புதுக்கவிதைகள் மூலமாய் கூட வெளிப்படுத்தி இருக்கிறேன். ஆனாலும் கூட, எந்த விசயத்திற்காகவும் ஜோதிடம்/குறி-செல்வது என்ற விசயங்களை நாடிச் சென்றது இல்லை.

         ஆனாலும், சில ஆண்டுகளாய் "அன்றைய இராசிப்பலன்" பார்க்கும் பழக்கம் உள்ளது. ஏனென்று தெரியவில்லை! என்மகளுடன் இருக்கும் எந்த நாளிலும் நான் இராசிப்பலன் பார்ப்பதே இல்லை. இணையத்தில் நாளைய பலனை முதல்-நாள் நள்ளிரவே (இந்திய நேரப்படி) பார்க்கும் வழக்கம். அதில் மேலோட்டமான செய்திகள் தான் இருக்கும்; பல அறிவுரைகள் போன்றும் இருக்கும். உதாரணத்திற்கு, சில நாட்கள் முன் "இன்று பின்-விளைவை எண்ணி பேசுதல் நலம் என்று" இருந்தது; அது போல், என் மேலதிகாரியிடம் ஓர் வாக்குவாதம் நிகழ்ந்தது. அந்த இராசிப்பலனை நான் படிக்காமல் இருந்திருந்தால் இன்னும் அதிகமாய் பேசி, பின்விளைவு ஏதேனும் உருவாகியிருக்கும். அது, தடுக்கப்பட்டது; நான் பெரும்பான்மையனவற்றை பொது-அறிவுரையாய் எண்ணி எல்லா-நாட்களிலும் தொடரவே விரும்புகிறேன். மீண்டும் மேற்கூறிய உதாரணம்தான்; எப்போதும் எவரிடமும் பின்-விளைவை எண்ணிப்பார்த்து பேசுதல் நல்லது தானே??!! என்னைப்பொருத்தவரை, இராசிப்பலன் பார்த்து...

அதிலுள்ளவை போன்று நம் செய்கைகளை வரையறுப்பது மிகவும் சரியே!!! 

பின்குறிப்பு: சில நாட்களில் "இன்று புத்திரர் விரும்பியப் பொருள் வாங்கித்தந்து மகிழ்வீர்கள்/ அல்லது இல்லறத்துனை கேட்ட பொருள் வாங்கித்தருவீர்கள்" என்பன போன்று சில விசயங்கள் வரும். அதைப் படித்தவுடன் நான் சிரித்துக்கொள்வேன்; என்னுடைய உறவு/ நட்பு எல்லோருக்கும் தெரியும், நான் அவர்கள் கேட்கும்-முன்னே கூட வாங்கித்தரும் பழக்கம் உள்ளவன் என்று! இதை சொல்ல ஒரு இராசிப்பலனா??!! என்று தோன்றும். ஆனால், உண்மையில் அதில் பல நல்ல விசயங்கள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.  

எல்லாவற்றிற்கும் ஆண்கள்தான் காரணமா???



         மேலுள்ள புகைப்படத்தையும், அது சார்ந்த சர்ச்சையையும் பலரும் படித்திருக்கக்கூடும். இப்படி ஓர் பெண்ணை (நடிகையை) ஓர் ஆணின் (நடிகனின்) காலடியில் நடந்து வருவது-போல் சித்தரிப்பது பலருக்கும் அருவருப்பாய் இருந்திருக்கக்கூடும்! இதை தவிர்த்திருக்கலாம் என்ற வாதத்திலும் எவருக்கும் பெரிதாய் முரண்பாடு இருக்காது என்றே நம்புகிறேன். ஆனால், இதைப் பார்த்த இன்னொரு நடிகை கொதித்துப்போய் அந்த நடிகனை விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயம்? அந்த நடிகையோடு சேர்ந்து சில-நடிகர்களும் எதிர்த்ததாய் செய்தி! என்னுடைய கேள்வி; ஏன் இவர்கள் சம்பந்தப்பட்ட அந்த நடிகையை (முதலில்)கேட்கவில்லை?? அப்படி அந்த நடிகையை காலடியில் நடக்க சொல்லி அந்த நடிகரோ/அல்லது வேறெவரோ நிர்ப்பந்தப்படுத்தி இருப்பின் அந்த நடிகரை சாடுவது சரியென்றே ஒப்புக்கொள்ளலாம். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாய் தெரியவில்லை. அப்படி எவரும் இதுவரையும் சொல்லவே இல்லை.

    பின்ஏன், அந்த நடிகை-உட்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட நடிகரை(மட்டும்) குறிவைத்து தாக்கவேண்டும்? எதற்கெடுத்தாலும் ஆண்களை குறை-கூறும் போக்கு பெரிதாய் வளர்ந்து வருவதையே இந்த சம்பவம் காட்டுகிறது. இந்த சமுதாயமும், பெண்ணியம் பேசுபவர்களும் இன்னமும் "பெண்கள் ஆண்களிடம் அடிமைப்பட்டு" இருப்பதைப் போன்ற "மாயையுடனேயே" இருக்கின்றனர். ஆனால், இன்றைய சூழல் அப்படியில்லை என்ற அப்பட்டமான உண்மையை அறியாதார் எவரும் இருக்க வாய்ப்பில்லை; அதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நான் சுட்டிக்காட்டி வருகிறேன். அதனால் தான் எதிர்-பெண்ணியம்(Anti-Feminism) என்ற கோட்பாடும் நடைமுறையில் வந்திருக்கிறது. எந்த-எதிர்ப்பும் தேவையான அளவிற்கும் மேலாய் தொடரும்போது அதையும் "எதிர்க்கும் எதிர்வினை" ஒன்று உருவாவது தவிர்க்க முடியாதது! எனவே, பெண்ணியம் என்ற நிலைப்பாடு இன்னமும் ஆணை எதிர்ப்பது என்ற தவறான-கொள்கையில் இருந்து மாறுபடவேண்டும். இன்னமும்...

எல்லாவற்றிற்கும் ஆண்கள்தான் காரணமா???

ஞாயிறு, ஜனவரி 19, 2014

என்மகளும்; "பாவேந்தர்"மகளும்...




         மேலுள்ள படத்தில் என்மகளுடன் இருப்பது "பாவேந்தர்" அவர்களின் மகள். ஆம்! அவர் பெயர் திருமதி. வசந்தா; அவர் என்னவளின் - அப்பத்தா!! ஒவ்வொரு விடுமுறைக்கு இந்தியா செல்லும்போது எப்படியாவது அவரையும், என்மகளையும் இணைத்து ஒரு-புகைப்படமாவது எடுத்துவிடுவேன். அப்படி இரண்டு வாரங்களுக்கு முன் விடுப்பில் சென்றபோது எடுத்த புகைப்படம் தான் இடது-மேற்புறம் உள்ளது. என்ன காரணமோ?! அவரிடம் என்மகளுக்கு பெரிய-அளவில் பிணைப்பு இல்லை; ஒருவேளை, அவர் என்மகளுடனே இல்லாதது காரணமாய் இருக்கலாம். ஆனால், என்மகள் அப்படி இருப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவளை நான் கண்டிக்கும் மிகச்சில விசயங்களில் - இப்படி அப்பெருமகளின் பக்கத்தில் அமரச்செய்வதும் ஒன்று! 4-வயதே ஆன என்மகளுக்கு 80-களில் இருக்கும் அப்பெருமகளின் "உயர்வும்; பெருமையும்" தெரியாது இருக்கலாம். ஆனால், 40-ஐ கடந்த நான் அங்ஙனம் இருத்தல் தகுமோ??!!

          என்னால் இயன்ற அளவிற்கு என்மகளிடம் அவ்வப்போது (வெளிநாட்டில் இருந்து அலைபேசியில் பேசும்போது கூட) - "பெரிய பெரிய-ஆயா" வந்தால் (ஏனெனில், என்னம்மாவை என்மகள் பெரிய-ஆயா என்று அழைப்பது வழக்கம்!) அவர்களிடம் ஒழுங்காய் பேசவேண்டும்; மரியாதையாய் நடந்து கொள்ளவேண்டும் என்று சொல்வேன். அவர்களுக்கு உறவாய் பிறப்பதற்கு நீ கொடுத்து வைத்திருக்கவேண்டும் (மகளே)என்று சொல்வேன்; அவளுக்கு எந்த அளவிற்கு  புரியும்/புரிந்தது பற்றி எனக்கு கவலை இல்லை.  ஆனால், அப்படி சொல்லவேண்டியது என் கடமை! என்னவளுக்கு(மற்றும் அவள் குடும்பத்தார்க்கு) வேண்டுமானால் எம்மகள் அவர்களின் "எல்லுப்பெயர்த்தி" என்பதில் பெரிய-ஆச்சர்யம் (அல்லது பெருமை) இல்லாதிருக்கலாம்; ஏனெனில், அவர்கள் குடும்பத்தில் அதுபோல் பல பெயர்த்திகள்/பெயரன்கள் இருக்கிறார்கள். ஆனால், என்குடும்பத்தில் என்-தமையன் மற்றும் தமக்கை மக்களுக்கு கிடைக்காத பெருமை என்மகளுக்கு கிடைத்திருக்கிறது என்பது பெரிய-விசயம் தானே??

         என்மகள் வளர்ந்தவுடன் கண்டிப்பாய் அப்பெருமகளின் அருமையும்/பெருமையும் புரியும்; அப்போது அந்த பெருமகள் இருப்பாரா?! என்பது எனக்கு தெரியவில்லை; கடந்த 2 பயனங்களின் போது அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதை என்னால் உணர முடிகிறது! நீங்களே மேலுள்ள புகைப்படங்களை பார்க்கும்போது அதை உணரலாம். அந்த 4 புகைப்படங்களும் 3 வெவ்வேறு காலத்தில் எடுக்கப்பட்டவை. கடந்த இருமுறையும் அப்பெருமகளின் மூத்தமகனிடம் (என் மருதந்தை) இதுபற்றி விவாதித்துள்ளேன். அப்பெருமகள் நீண்ட-காலம் வாழவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையும்; அனால், உண்மை நிலை அவ்வாறு இல்லை! எது-எப்படியோ அப்பெருமகள் இருக்கும் வரையும்; என்மகள் இவைகளை உணரும் வரையும், இது போல் புகைப்படங்களாவது எடுத்து பாதுகாப்பது என் தலையாய கடமை! அதற்காய், என்மகளை எந்த விதத்தில் நிர்ப்பந்திக்கவும் எனக்கு எந்த வருத்தமும் இல்லை!! அதன் முழுப்பொருளை என்மகள் வளர்ந்தவுடன் உணர்வாள்!!!

            இளையமகனுடன் வசித்து வருவதால் அப்பெருமகளும் சில-ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல் என்மகளுடன் தொடர்ந்து இருக்கமுடியவில்லை (அப்போது என்மகள் சிறு-மழலை)! அப்படி இருந்திருப்பின் என்மகள் அவருடன் மிக-நெருக்கமாய் இருந்திருக்கக்கூடும். அப்பெருமகளின் தமிழுணர்வும்/ தமிழ்த்திறனும் என்மகளுக்கு பரிமாறப்பட்டு இருக்கும்; என்மகளுக்கு அது பேரிழப்பு தான்! குறைந்தது, என்-தமையன் மற்றும் தமக்கை மக்களைப்போல் என்னப்பனிடம் கூட நெருக்கமாய் இல்லாததும் ஒரு-குறையே! அம்மக்களைப்போல் என்னப்பனின் தமிழறிவும் என்மகளுக்கு பரிமாரப்படாதது இன்னுமொரு வருத்தம். அந்த விதத்தில் என்-தமையன் மற்றும் தமக்கை மக்கள் கொடுத்து வைத்தவர்கள்! என்னப்பனிடம் இளைய-வயது முதல் தமிழ் கற்ற அவர்கள் பள்ளி-பொதுத்தேர்வின் போது என்னப்பனை உடன்வைத்திருக்க தவறியதே இல்லை; குறிப்பாய் என் தமக்கையின் மகள்!! என்ன செய்வது? எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விடுவதில்லை!!!

        என்னவோ தெரியவில்லை?! அப்பெருமகளுக்கு என்மேல் அளவுகடந்த அன்பு! "ஏதோ தமிழில் கிறுக்குகிறேன்" என்பதால் கூட இருக்கலாம். "இளங்கோவன்" என்று என் முழுப்பெயரை சொல்லி-அழைக்கும் மிகச்சிலரில் ஒருவர் அவர். அந்த உச்சரிப்பு மட்டும் போதும்; அவரின் ஆசி எனக்கு எப்போதும் கிட்டும்! ஆனால், இந்த முறை அவர் அப்படி அழைக்கவில்லை; முதுமை அவரை அப்படி மாற்றி இருந்தது! ஆனால், என்னைப்பார்த்ததும் மலரும் அந்த சிரிப்பு தவறவில்லை; அதே சிரிப்பு. எனக்கு கிடைத்த மிகப்பெரிய பேரு, அப்பெருமகள் பாவேந்தரின் "தமிழச்சியின் கத்தி" என்ற படைப்பை "உரைநடையாய்" எழுதி என்னிடம் கொடுத்து அச்சடிக்க சொன்னது; என்ன காரணமோ?! அவரால் அதை முடிக்கமுடியவில்லை; ஆனால், அவர் கையால் எழுதிக்கொடுத்த கொடுத்த அந்த தாள்களை பத்திரமாய் வைத்துள்ளேன். இப்போது அவரிருக்கும் நிலையில் அதை அவரால் தொடர்வது சாத்தியமில்லை; எனவே, அவரின் காலத்திற்கு பின் அதை முடித்து வெளியிடுவதே என் நோக்கம்!...

அப்பெருமகளுக்கு, பேர்-நன்றியாய் என்னுடைய அந்த செயல் இருக்கும்!!!

பின்குறிப்பு: "நான் ஏன் எழுதுகிறேன்???" என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டது போல் - இந்த படைப்பும் என்மகள் வளர்ந்தவுடன் (நான் இல்லாதிருப்பினும்) அவளப்பனை முழுதுமாய் புரிந்து கொள்ள உதவும் என்ற ஓர் சிறிய "சுயநலம்" கலந்தே இருக்கிறது!

உண்மையில் இப்படி ஓர்-அதிகாரம் இருக்கிறதா???



      சமீபத்தில் மாவட்ட-ஆட்சியர் ஒருவரின் காலணியை டபேதார்(உதவியாளர்) அரை-மணி நேரத்திற்கு மேலாகவும் சுமந்திருந்தாயும், ஆட்சியர் "கிராம சபைக்கூட்டம்" முடிந்து வந்ததும் - காலணியை அணிந்துகொண்டு சென்றதாயும் செய்தி வந்தது. 65 ஆண்டுகால சுதந்தரத்தின் பலனாய் கிடைத்த தனி-மனித உரிமையையும்/மரியாதையையும் அச்செயல் பின்னுக்கு தள்ளியுள்ளதாய் "தி ஹிந்து" தமிழ்-நாளிதழ் தெரிவித்து இருந்தது! "மாவட்ட-ஆட்சியர் அப்படி செய்ய சொன்னாரா? அல்லது டபேதார் அப்படி செய்தாரா என்பது விவாதம் அல்ல! அதை ஏன் அந்த ஆட்சியர் ஏன் தடுக்கவில்லை?!" என்றும் கேட்டிருந்தது அந்த நாளிதழ்! பின்னர், அந்த டபேதார் வேலைக்கு சேர்ந்து 2 மாதமே ஆனதால் - ஆட்சியரிடம் நல்ல-பெயர் எடுக்க அப்படி செய்ததாயும் செய்திகள் வந்தனவாம்!  ஆனால், டபேதார் ஆட்சியர் காலணியை மகிழ்வுந்தில் வைக்க சொன்னார்; அதை எடுத்துசெல்லும்போது தான் இப்படி புகைப்படம் எடுத்தனர்; நான் அரை-மணி நேரம் எல்லாம் வைத்திருக்கவில்லை என்றாராம்!

          எனக்கு இங்கே ஒரேயொரு கேள்விதான்: காலணியை சுமக்க சொல்ல ஆட்சியருக்கு அதிகாரம் இருக்கிறதா? அப்படி "விதிமுறை" இருக்கிறதா?? அப்படியே இருப்பினும், எப்படி ஆட்சியராய் இருக்கும் ஒருவருக்கு "ஒரு சகமனிதனிடம்" அப்படி செய்ய சொல்ல மனம் வந்தது? அவரின் பொதுவறிவும்/ ஞானமும் எங்கே போனது?? ஏன் அதை அவர் மகிழ்வுந்திலேயே விட்டு சென்றிருக்கலாமே? மனிதன் என்ன பிறந்தது முதலா "காலணி"யை இடையறாது அணிந்து கொண்டிருக்கிறான்?? வீட்டிற்கு-வெளியே உள்ள கழிவறை போகக்கூட "காலணி"உபயோக்கிகாத பழக்கம் உள்ளவர் தானே நாம்? பின்னெப்படி, மகிழ்வுந்தில் இருந்து விழா-மேடை வரை செல்லக்கூட காலணி தேவைப்படுகிறது?? சரி, அதை விழா-மேடை அருகிலேயே விடவேண்டியது தானே?! அப்படி தொலைந்து  போனாலும், கண்டிப்பாய் "புதியதொன்றை" அவர் பணத்தில் வாங்குவார?! என்பது சந்தேகமே! பிறகு ஏன், அப்படி அந்த டபேதாரிடம் சொல்லவேண்டும்?...

இந்த செயலை - எப்படி கண்டிப்பது என்றே எனக்கு தெரியவில்லை!!!     

குடும்ப-உறவுகள் எதிர்காலத்தில் பலமடையுமா? பலவீனமடையுமா??



        பொங்கல்2014-சிறப்பு பட்டிமன்றம் பலரும் பார்த்திருக்கக்கூடும்! சாலமன்-பாப்பையா அவர்களின் தலைமையில் "குடும்ப-உறவுகள் எதிர்காலத்தில் பலமடையுமா? பலவீனமடையுமா??" என்ற பட்டிமன்றம் ஒன்றும் நடந்தது! எங்கே, நடுவர் "பலமடையும்" என்ற பலவீனமான! முடிவை கூறிவிடுவாரோ என்று (பலரையும் போல்)பதபதைப்புடனே பார்த்தேன். அதில் பேசிய ஒருவர் "இப்போதெல்லாம் ஒரேயொரு பிள்ளை" என்ற கொள்கையுடன் வாழ்கிறார்கள்; எனவே, வருங்காலத்தில் தமிழகத்தில் "தமையன், தமக்கை, தமையன்-பிள்ளைகள். தமக்கை-பிள்ளைகள்" என்ற சொற்களே-கூட அழிந்துவிடும் என்று பேசினார். அப்படியே என்னுடைய உணர்வை பிரதிபலிப்பது போல் இருந்தது! இந்த கொள்கைக்கு பலரும் "பொருளாதாரத்தை" காரணமாய் கூறுவதைத் தான் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை! அந்த ஆற்றாமையாய் தான் "எத்தனை குழந்தைகள் வேண்டும்???" என்ற தலைப்பில் முன்பொரு தலையங்கத்தில் எழுதி இருந்தேன். 

     என்மகளும் தனியாய் இருப்பதையும் என்னுடைய பார்வையையும் அந்த தலையங்கத்தில் கூறியிருந்தேன். என்மகளுக்காவது பெரியப்பா-பிள்ளைகள், அத்தை-பிள்ளைகள் என்ற உறவுகள் இருக்கின்றன. ஒரேயொரு பிள்ளையாய் இருக்கும் கணவன்/மனைவிக்கு (அல்லது இருவருக்கும்) ஒரேயொரு பிள்ளை என்ற குடும்பங்கள் பலவும் உள்ளனவே?! அவை எல்லாம் எதை நோக்கி வளர்கின்றன?? எத்தனையோ தலைமுறைகள் வளர்த்திட்ட குடும்ப-உறவுக்கொடிகளை அறுத்தெறிய எவர் தந்தது அந்த உரிமையை?! இந்த சூழலில், அப்படி இருக்கும் சின்ன-சின்ன குடும்பங்கள் கூட இருக்கும் அந்த-சிறிய உறவுகளிடம் எந்த பிணைப்பும் இல்லாமல் இருப்பதை என்னவென்று சொல்ல? பாரம்பரியமான நம் குடும்ப உறவுகள் பின்னெப்படி பலமடையும்? நடுவரும், இப்போதுள்ள உண்மை-சூழலை எடுத்து சொல்லி "இதை நான் மறைத்து முடிவை சொன்னால்" என்னுடைய மனசாட்சி என்னை கொல்லும் என்றாரே?! எத்தனை உண்மை அது! ஒருவேளை...

இப்படியாய் உறவுகள் அழிந்துசென்று தான் உலகமும் அழியுமோ???!!!    

மனதின் நிறமும்; "மயிரின்" நிறமும்...



மனதில்(கூட) - அதீத
வெண்மையை கலந்த
என்னால்...
மயிரில்(ஏன்) - சிறிதும்
வெண்மையை கலக்க
முடியவில்லை???

(குறிப்பு: முடிவெட்டி ஒருவாரம் அமைதியாய் இருந்த நான், இன்று "டை" அடித்துவிட்டேன்!!!)