ஞாயிறு, நவம்பர் 09, 2014

மூட-நம்பிக்கை என்பது என்ன???



   சென்ற வாரம் நண்பனொருவன் "வாட்ஸ்-ஆப்"பில் பற்பசை-குழாயின் மேல் இருக்கும் நிறப்பிரிகைக்கும்; பசையிலுள்ள பொருட்களின் குனாதிசியங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாய் கூறும் ஒரு புகைப்பத்தை அனுப்பினான். அது தவறான தகவல் என்று முன்பே தெரியும்; இன்னொரு நண்பன் அதை தவறென்று சுட்டிக்காட்டினான். என்னைத்தவிர, அந்த குழுவில் அனைவரும் மருத்துவம்/உயிரியல் சார்ந்து ஆராய்ச்சி செய்திருந்ததால், அவர்கள் அதை மையப்படுத்தி அலசினார்கள். எனவே, என்னால் அங்கே அதிகம் பங்கேற்க முடியவில்லை. அது சார்ந்த தொடர்ந்த உரையாடலின் போது, இரண்டாவது நண்பன் - இணையத்தில் இது போன்ற பல வதந்திகள் உள்ளன. அதை பலரும் "மூட-நம்பிக்கை" போன்றே நம்புகின்றனர் என்றான். உண்மை தான்! இங்கே, ஆயிரம் பொய்களும்/வதந்திகளும்/இது போன்ற மூட-நம்பிக்கைகளும் - இணையத்தில் நிறைந்துள்ளன. உடனே, எனக்கு "மூட-நம்பிக்கை என்பது என்ன???" என்ற தலையங்கம் எழுதவேண்டும் என்று தோன்றியது.

       வெகு சமீபத்தில், தில்லி மிருகக்காட்சி சாலையில் நடந்த விபத்தை பற்றி, தவறான தடயவியல் அறிக்கை ஒன்றை உண்மையென்று நம்பி முக-நூலில் பகிர்ந்திருந்தேன். பின்னர், வேறொரு நட்பு அதை தவறென்று சுட்டிக் காட்டியதும், மன்னிப்பு கோரியிருந்தேன். தொடர்ந்து யோசிக்கையில், 1992-இல் இளங்கலை நட்புகளோடு திருமலை சென்றிருந்த போது; நானும், இரமேசு என்ற என் நண்பனும் சேர்ந்து ஒரு விளையாட்டு-குரும்பை செய்தோம். இன்று, அது ஒரு "மூட-நம்பிக்கை"! ஆம்; பெரிய-உண்டி அருகே உள்ள மண்டபத்தின் ஒரு தூணில், ஒரு சிலை இருந்தது. அது எவரென்று, எங்களுக்கு (இன்னமும்)தெரியாது. நாங்கள் இருவரும், அந்த சிலையின் காலை தொட்டு வணங்கி ஒரு கும்பிடு போட்டோம். நாங்கள் மொத்தம் 19 பேர் சென்றிருந்தோம். அனைவரையும், அவ்வாறு செய்ய சொன்னோம்; மீண்டும், மீண்டும் செய்து பலரின் கவனமும் எங்கள் மேல் படும்படி செய்தோம். இன்று, அவ்வாறு செய்யாதவர்களை விரல்-விட்டு எண்ணிவிடலாம்!

         நாங்கள் செய்தது பெரிய தவறு என்பதை இப்போது உணர்கிறேன். அவ்வப்போது, சிலையின் அந்த பகுதி மட்டும் தேய்வதால், அதை மாற்றியும் வருகிறார்கள். அதை இனிமேல் தடுப்பது/நிறுத்துவது சிரமம்! இன்று, அது வரலாறு ஆகிவிட்டது. அதற்கு, பலரும் - பலவாறாய் விளக்கம் கொடுத்திருக்கக் கூடும்! பல கதைகள் புனையப்பட்டு இருக்கும்; ஒவ்வொரு கதையும் பலத்த நம்பிக்கையை உருவாக்கி இருக்கும். ஆனால், அதில் எந்த உண்மையும் இல்லை; அது, வெறும் "மூட-நம்பிக்கை"! ஆனால், இதை தெரிந்த எனக்கும்; இனிமேல், இதை படித்து தெரிந்துகொள்ள போவோர்க்கும் தான் அது "மூட-நம்பிக்கை". மற்றவர்களுக்கு அது நம்பிக்கையாய் தான் தொடர்ந்து கொண்டு இருக்கும். இதுபோல், பல நம்பிக்கைகள் "மூட-நம்பிக்கை"களாய் இருப்பதை நான் எதைக்கொண்டும் "மூடி"மறைக்க விரும்பவில்லை. "மூட-நம்பிக்கை" என்றால் என்ன? என்பதை தொடர்ந்து உண(ர/ர்த்த) தான் முயன்று வருகிறேன். எல்லா நம்பிக்கைகளிலும், இப்படிப்பட்ட மூட-நம்பிக்கைகள் இருக்கும்.

      ஆனால், காரணமே தெரியாமல் எல்லாவற்றையும் "மூட-நம்பிக்கை" என்பது பகுத்தறிவல்ல என்பதை நான் சமீபத்தில் கூட ஒரு தலையங்கத்தில் வலியுறுத்தி இருந்தேன். உலகெங்கும் விவாதத்தில் இருக்கும் கடவுள் நம்பிக்கையையே உதாரணமாய் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு! எனக்கு கடவுள் நம்பிக்கை வந்ததே; "உபவாசம்" என்ற விரதத்தின் மேல் இருக்கும் நம்பிக்கையால் தான். 1983-இல் என் அண்ணன் ஒருவரைப் பார்த்து, வியாயக்கிழமை விரதம் இருக்க ஆரம்பித்தேன். விரதம் இருப்பது; உடல் உறுப்பு ஒய்வு பெற என்ற நம்பிக்கையே காரணம். ஆனால், அதை "ஒழுக்கமாய்" கடைப்பிடிப்பதில் சிரமம் இருந்தது! விரதத்தை, கடவுளை நினைத்து செய்தால் எளிது என்பதால்; அந்த நம்பிக்கையை நம்ப ஆரம்பித்தேன். இன்றும், அந்த விரதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஐயப்பன் கோவிலுக்கு செல்லும்போதெல்லாம், 48 நாட்களும் ஒருமுறை மட்டுமே உண்பது வழக்கம் என்பதை ஐயப்பன் பற்றிய தலையங்கத்தில் கூறியிருக்கிறேன்.

         கடவுளை மையப்படுத்தலை தவிர்த்து, நான் பலமுறை விரதம் இருக்க முயன்று என் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறேன்; முடியவில்லை! எனவே, விரதத்தின் மேல் எனக்கிருந்த நம்பிக்கையை நிலை நாட்ட நான் கடவுளை நம்ப ஆரம்பித்தேன். என்னுடைய தெளிந்த பகுத்தறிவால், கடவுள் வழிபாட்டில் நா(ன்/ம்) செய்யும் தவறை கூட உணர முடிந்தது. அதனால் தான், கடவுள் என்ற பெயரில் "மூட-நம்பிக்கைகள்" இருக்கின்றன என்பதை "இறைவன் இருக்கிறாரா? இல்லையா??" என்ற தலையங்கத்திலேயே ஒப்புக்கொள்ள முடிந்தது. கடவுள் நம்பிக்கையும்; அந்த பயமும் தான் என்னைப்போன்ற பலரையும் பல தவறுகளையும் செய்ய விடாமல் தடுக்கிறது என்பதில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அப்படி, ஒரு மனிதனை "நல்ல மனிதத்துடன்" இருக்க "ஒரு நம்பிக்கை" உதவுமேயானால்; அந்த நம்பிக்கையை எதற்காய் மற்றவர் எதிர்க்கவேண்டும்? அவர்களுக்கு நம்பிக்கை "இல்லை" என்றால், இருந்துவிட்டு போகட்டும். பிறர் நம்பிக்கையை ஏன் காரணமே-தெரியாமல் தொடர்ந்து தூற்ற வேண்டும்?!

   ஒரு "தவறான நம்பிக்கை" சரியான விதத்தில் நிரூபிக்கப் பட்டால் மட்டுமே வேரரும்! மேற்குறிப்பிட்டது விளையாட்டென்று எனக்கும், என் நட்புகளுக்கு மட்டும் தான் தெரியும்! இதைப் படித்தும் கூட, எல்லோரும் அதை நம்பி மாற்றிக்கொள்வரா என்பது பெருத்த சந்தேகமே; அதற்கு தகுந்த ஆதாரம் வேண்டும்! இதை நாங்கள்தான் செய்தோம் என்பதற்கு என்னிடமே ஆதாரம் இல்லையே! ஆனால், நான் சொல்வது சத்தியம்!! ஒன்றை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம். நம்புவதற்கு எந்த நிரூபணமும் தேவையில்லை! ஒரு நம்பிக்கையை பொய்யென்று நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் வேண்டும்!! எல்லா நம்பிக்கைகளும் தவறானவை அல்ல என்பதையும் உணரவேண்டும். "இவர்தான் உன் தந்தை!" தாய் சொல்வதை பிள்ளைகள் நம்புவது போல்; சில நம்பிக்கைகளை "அப்படியே" நம்பவேண்டும். இன்று வேண்டுமானால், தந்தையை உறுதி செய்யும் விஞ்ஞானமும்/அவநம்பிக்கையும் வந்திருக்கலாம். ஆனால், அது காலங்காலமாய் தொடர்ந்து வந்த/வரும் நம்பிக்கை!!!

        கெடுதல் செய்யாமல், நல்லது மட்டுமே செய்யும் ஒரு நம்பிக்கை எப்படி "மூட-நம்பிக்கை ஆகும்??? கடவுள் நம்பிக்கையில்; சில மூட நம்பிக்கைகள் இருக்கலாம்! ஆனால், கடவுள் நம்பிக்கையே "மூட-நம்பிக்கை" என்பது அர்த்தமற்ற பகுத்தறிவு!! "பூனை குறுக்கே சொல்லுதல்" போன்ற பல அர்த்தமற்ற நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கிறது. நம் "தெளிவான-சுய" பகுத்தறிவு முக்கியம்! அதனால் தான், பெரியார்; அன்றிருந்த சூழலில் எதிர்த்த இரண்டு கொள்கைகள் இன்று தேவையில்லை! என்றேன். பெரியார் போன்றோர்க்கு மனிதமும்/மனிதனும் வஞ்சிக்கப்படுவதை தாங்கமுடியாத துயரமே அடிப்படையாய் இருந்தது. அதுதான் முக்கியம்! பெரியாரின் பெயரில் "கொடி"பிடிக்கப்படும் "கண்மூடித்தனமான" கொள்கைகளை; இன்று, பெரியார் இருந்தால், அவரே எதிர்ப்பார். அவர் இல்லை என்பதால் தான், என்போன்ற "சிறியார்" அதை உண(ர/ர்த்த) முயல்கிறோம். எனவே, என்னுடைய மேற்கூறிய அனுபவம் மற்றும் என் புரிதலின் அடிப்படையில் எது பற்றியும்/எவர் கூறுவதையும்... 

கண்மூடித்தனமாய் நம்புவதே; "உண்மையான" மூட-நம்பிக்கை!!!

முத்தத்தை வட்டிக்கு விடும் கற்பனை...



         ஆலமரம் என்ற திரைப்படத்தில் "தேரேறி வர்றாரு சாமியாடி; தேருக்கு முன்னால கும்மியடி" என்ற பாடலில் "முத்தத்தை வட்டிக்கு தந்தவள! முந்தானை காசாக்கி கொண்டவளே!!" வரும் வரியைக் குறிப்பிட்டு, அந்த கவிஞனின் "கற்பனை வளத்திற்கு" என் வாழ்த்துகளை துணுக்குகள் பகுதியில் பதிந்திருக்கிறேன். அங்கே, குறிப்பிட்டபடி இதனை அக்கவிஞன் நடைமுறையில் சந்தித்து கூட இருக்கக்கூடும். இன்று பல தம்பதியருக்குள் இயல்பாய் கூட "முத்தமிடுதல்" நடப்பதில் பல பிரச்சனைகள் உள்ளன. அவர்களின் உறவுகளுக்குள் இருக்கும் விரிசல் காரணமாய், இம்மாதிரியான செயல்களைப் பற்றி கற்பனையாய் எண்ணிப்பார்ப்பது கூட அவர்களுக்கு இயலாமல் போகிறது. இருப்பினும், வெகுசிலருக்கு அம்மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை; அதற்கு உதாரணம்தான் இந்த வரி! அந்த கவிஞன் ற்பனையாய் கூறி இருப்பினும்; இதை கூர்ந்து கவனித்து பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. அதனால், இந்த மனதங்கமும்!

     இந்நிகழ்வை என்னுடைய கற்பனையில் "உன்னுடைய சக்திக்கும் மீறிய அளவில், அசல் இருக்கட்டும்! எவ்வளவு வட்டி ஆனாலும், அசல் அதிகமாய் இருக்கட்டும்; அப்போது தான் உனக்கு வட்டியே அதிகம் கிடைக்கும்!!" என்று காதலன்/கணவன் தன் காதலி/மனைவி இடம் கூறுவதாய் ஒரு கற்பனை செய்தேன். அதற்கு அப்பெண் "டீலக்ஸ் வட்டி" என்று பதில் சொல்வதாய் கற்பனை நீண்டது. அதன் பின், அவன் "சரி! டவுன்-பேமெண்ட் எவ்வளவு?" என்று கேட்பதாயும்; அதற்கு அவள் "100 முத்தங்கள்" என்பதாயும்; பின்னர், அவ்வளவு தானா? என்று அவன் மீண்டும் கேட்பதாயும் என் கற்பனை தொடர்ந்தது. என்னுடைய கற்பனைக்கு முக்கிய காரணம் அக்கவிஞனின் கற்பனையே! இம்மாதிரியான கற்பனைகளை தொடர்ந்து அவ்வப்போது நம் தமிழ் திரைப்பாடல்களில் கேட்டு வருகிறோம். மிக அபூர்வம் எனினும், அவைகளை நாம் தவறாமல் கவனிக்க வேண்டும் என்று தோன்றியது. அட... அட... அட... "முத்தத்தை வட்டிக்கு தருதல்!" - என்னவொரு கற்பனை?!     

குறையொன்றுமில்லை (2014)...


     
     கடந்த வெள்ளியன்று வழக்கம் போல் இணையத்தில் என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருந்தபோது, குறையொன்றுமில்லை என்ற படம் கண்ணில் பட்டது. எவர் நடித்தது என்று தெரியவில்லை; பெரும்பாலும் புதுமுகங்கள்! இந்த நிமிடம் வரை கூட தெரியாது. தெரிந்துகொள்ளவும் தோன்றவில்லை; எவர் என்று தெரியாமலேயே அந்த படத்தைப் பற்றிய உயர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது. என்னுடைய பார்வை கீழே:
  • முதலில் குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. படத்தின் ஆரம்பத்தில், பார்வையாளர்கள் தான் "தயாரிப்பாளர்கள்" என்பது மிகவும் பொருத்தம். ஆனால், தொடர்ந்து சொன்னது போல் என்னால் திரையரங்கில் அல்லது முறையான-குறுந்தட்டில் பார்க்க இயலவில்லை! இங்கே அந்த படம்  வெளியாகவில்லை. அதற்காய், அவர்கள் பொறுத்தருளவும்! வாய்ப்பு கிடைத்தவர்கள், இப்படத்தை திரையரங்கில் காணுங்கள்.
  • இம்மாதிரி புதுமுகங்கள் கொண்டு; குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் படங்கள் சொல்ல வந்த விசயத்தை விட்டு விலகாமல் அந்த கருத்தில் மையம் கொண்டிருக்கும் என்பதற்கு இந்தப்படம் ஒரு சாட்சி. சமீபத்திய, கத்தி திரைப்படமும் இம்மாதிரி ஒரு கருத்தை மையப்படுத்தியது எனினும், அதில் சில சறுக்கல்கள் இருப்பதை குறிப்பிட்டிருந்தேன். தேவையற்ற கதாநாயகி; அதனால், வலுக்கட்டாயமாய் திணிக்கப்பட்ட பாடல்கள்; தேவையற்ற இன்னொரு கதாபாத்திரம் என்று?! இந்தியன், அந்நியன் போன்ற படங்கள் வேண்டுமானால் - இந்த வகையில் விதிவிலக்குகளாய் இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையில் குறைந்த தயாரிப்பில் வரும் படங்கள் அதிக தரம் வாய்ந்தே இருக்கின்றன என்பது என் கணிப்பு.
  • படம் ஆரம்பித்து 10 நிமிடம் கூட இல்லை! படத்தின் மையக்கரு ஆரம்பித்து விட்டது. எந்த "பில்ட்-அப்"பும் இல்லை; மையக்கரு வரவேண்டும் என்ற நோக்கத்தில் எந்த "ஃபிளாஷ் பேக்"கும் இல்லை. கதை இயல்பாய், மையக்கருவிற்குள் செல்கிறது. கதாநாயகனும், அவ்வாறே!
  • கார்ப்பரேட் நிர்வாகம் என்றால் என்ன? என்பதை மிக எளிமையான திரைக்கதை/காட்சிகள் கொண்டு விளக்கி இருப்பது மிகமுக்கியமாய் பாராட்டப் படவேண்டும்.
  • எடுத்துக்கொண்டிருக்கும் சவாலான விசயத்தை கதையின் நாயகன், வழக்கமான திரைப்பட-பிரம்மாண்டத்தில் இருந்து பெருமளவில் விலகி "மிக எதார்த்தமாய்" நிகழ்த்துவதாய் காண்பித்து இருப்பது தனி சிறப்பு!
  • வள்ளியூர் என்றொரு கிராமத்தை சுற்றி படம் நகர்கிறது. அது உண்மைப் பெயரா என்று தெரியவில்லை. ஆனால், அந்த ஊர் அவ்வளவு இயற்கையாய்/அழகாய் இருக்கிறது. பச்சைப்-பசேல் என்ற வயல்கள், அருமையான மலை சூழ்ந்த பகுதி, உண்மையான கிராம மக்களின் தோற்றம் - அனைத்தும் அருமை. வழக்கமாய் திரைப்படங்களில் இருப்பது போல், கதையின் நாயகன் வீடு மட்டும் "அரண்மனை"போன்ற அழகுடன் தனித்து தெரியவில்லை!
  • படத்தில் "அனல் பறக்கும் பஞ்ச்" வசனங்கள் இல்லை. கதாநாயகன் ஒரேயொரு இடத்தில் "நான் அமைதியா இருக்கறதுனால; என்கிட்ட பதில் இல்லைன்னு அர்த்தம் இல்லை! சொன்னால், உங்களுக்கு புரியாது!!" என்பது போல் ஒரு வசனம் இயல்பாய் பேசுவார். அடுத்த காட்சியில், தானே "கதையின்"நாயகியிடம் "இப்போ தான் ஒரு பஞ்ச் டையலாக்" பேசினேன் என்று இயல்பாய் கூறுவார். உண்மையில், அது ஆர்ப்பாட்டமில்லாத அருமையான பஞ்ச்!
  • கதாநாயகனின் நண்பனாய் வரும் கதாபாத்திரம் அருமை! இயல்பான தோற்றம்; அமைதியான நடிப்பு! அவரின் நண்பனாய் வருபவர் கூட "இயல்பான வசனங்களால்" நகைச்சுவை உண்டாக்குகிறார். தேர்ந்த நடிகர்கள் போல் நடித்திருக்கின்றனர்.
  • இந்த படத்திலும் கதாநாயகி உண்டு. ஆனால், ச்சுமா கதாநாயகனை சுற்றி வரும் அழகுப்பதுமையோ?! "சதைப்பிண்டாமோ"! அல்ல; கதையில் ஒரு பாத்திரமாய் வருகிறாள். அவளும், கதையின் மையக்கருவான விவசாயம் மற்றும் கிராமங்களுக்கு உதவுவது என்று கதியினூடே வருகிறாள்.
  • இயல்பான விதத்தில் வரும் காதல்(கள்)! வெகு இயல்பாய் வரும் காதலர் சண்டைகள்/ஊடல்கள். திரைப்படம் என்பதற்காய் பல அபத்தங்கள் இல்லை! ஆபாசங்கள் இல்லை. ஆனால், காதல் இருக்கிறது. கதையின் நாயகனும்/நாயகியும் தங்களின் வேலை/சமுதாயக்கடமை - இதில் இருந்து எள்ளளவும் மாறாமல் காதலிக்கின்றனர். மிகமுக்கியமாய் "வாழ்வை ஒட்டிய காதல்" என்ற அளவிலேயே காண்பிக்கப் பட்டு இருக்கிறது.
  • இந்த படத்திலும் பாடல்கள் வருகின்றன. ஆனால், திணிக்கப்பட்ட பாடல்கள் அல்ல! கதாநாயகியின் ஆடை குறைக்கப்படவேயில்லை! ஏன், ஆடையே மாற்றப்படவில்லை! காட்சிகளின் பின்னணியில் தான் பாடல்கள் வருகின்றன. குறுகிய நேரத்தில்; அழகிய உணர்வில் - வரும் பாடல்கள். பாடல்களுக்காய் எவரும் விமானம் ஏறி; வேறு நாடுகளுக்கு செல்லவில்லை! ஏன், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கூட சுற்றித் திரியவில்லை. இருக்கும் இடத்தில்;  இருக்கும் வண்ணமே உள்ள பாடல்கள்.
  • படத்தில் ஒருவர் கூட மற்றொருவரை "ச்சும்மா" கூட அடிக்கவில்லை! பூஜை/கத்தி படங்களில் மற்றும் பல படங்களில் வருவது போல், எவரும் இன்னொருவரிடம் "அவனை; செதில், செதிலாய் வெட்டனும்!" என்று இரைச்சல் இடுவதில்லை!  ஒருவரும், இன்னொருவரை பார்த்து "முஷ்ட்டி" மடக்குவதில்லை. இவ்வளவு ஏன்? படத்தில் வில்லன் என்று யாருமே இல்லை! ஆம்; இங்கே நாம் எல்லோருமே "விவாசியிக்கும்/கிராமத்திற்கும்" வில்லன்! என்பது தெளிவாய் இருக்கும்போது, தனியே எதற்கு வில்லன்?!  
  • இப்போது, எனக்கு மிகப்பெரிய குழப்பம் வருகிறது! இம்மாதிரி பாடல்கள், ஆடைக்குறைப்பு, அடிதடி என்பனவற்றை "திரைப்படத் துறையினர்" தொடர்ந்து சொல்லி வருவது போல்; நாமா எதிர்பார்க்கிறோம்?! இல்லையென்றே தோன்றுகிறது; குறைந்த பட்சம், இந்த சூழலில் இல்லை. ஒரு காலத்தில் "நாக்கை தொங்கப்போட்டு" பார்த்து; ஒரு-கூட்டம் ஏங்கி இருக்கக்கூடும். ஆனால் அது(வும்) "இலைமறை; காய்மறை"ஆய் இருந்தபோது, இருந்திருக்கவேண்டும். இப்போது "இலையே" இல்லையே அய்யா! பின் எப்படி, அதில் நம் விருப்பம் இருக்கும்? கலைத்துறையினர் இந்த விசயத்திற்கு செவி-சாய்க்க வேண்டும்!!
  • என்னளவில், அந்த படத்தில் "வேலைக்காரியாய்" வரும் நடிகையை வேறேதோ படத்தில் பார்த்ததாய் நினைவு! அதே வேலைக்காரி போன்ற கதாபாத்திரம் என்று நினைக்கிறேன். "வேலைக்காரி"வேடத்திற்கு மட்டும் "படத்தின் பட்ஜெட்"உடன் எந்த சம்பந்தமும் இல்லை போலும்!
  • சில குறைகள் இருந்தாலும்; மேற்குறிப்பிட்ட போல் இன்னும் இருக்கும் பல நிறைகளினால் - அவைகள் நமக்கு பெருசாய் தெரிவதில்லை! உண்மையில், அவைகளை குறைகளாய் பார்க்கவேண்டிய அவசியமே இல்லை என்பதால்; அவைகளைக் குறிப்பிடவில்லை!
குறிப்பு: இம்மாதிரியான படங்கள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன! ஆனால், இம்மாதிரியான படங்களை நாம் தான் கொடுக்கவேண்டிய "அங்கீகாரம்"கொடுத்து வரவேற்காமல் போய்விடுகிறோம். அதனால் தான் "பல குப்பைகள்" இங்கே வந்துகொண்டிருக்கின்றன. அந்த குப்பைகளை நாம் மறுக்க/தடுக்க முடியவில்லை என்பதால் தான் "ஆடைக்குறைப்பு" போன்ற பல அசிங்கங்களை நாம் தான் எதிர்பார்க்கிறோம் என்ற "பொதுவான குற்றச்சாட்டு" இருக்கிறது. ஏதேனும் ஒரு "ஈனக்கும்பல்" வேண்டுமானால், அம்மாதிரி(மட்டும்) எதிர்ப்பார்க்கலாம். தொடர்ந்து நாம் அமைதியாய் இருப்பாதால் தான் அது "பொதுக் குற்றச்சாட்டாய்" வைக்கப்படுகிறது என்று தோன்றுகிறது.

இம்மாதிரியான படங்களை ஆதரிப்போம்! தவறான படங்களை எதிர்ப்போம்!!

முத்தத்தை வட்டிக்கு விடுதல்...



      ஆலமரம் என்ற திரைப்படத்தில் "தேரேறி வர்றாரு சாமியாடி; தேருக்கு முன்னால கும்மியடி..." என்ற பாடலில்...

"முத்தத்தை வட்டிக்கு தந்தவள! முந்தானை காசாக்கி கொண்டவளே!!" 

என்றொரு வரி வரும்! முத்தத்தை வாடகை விடுவது! ஆஹா... என்னவொரு கற்பனை வளம்? உண்மையில் அப்படியொன்று நிகழ்ந்திருந்து அந்த கவிஞன் எழுதியிருப்பினும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை! 

அந்த கவிஞனின் "கற்பனை வளத்திற்கு" என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!