2022-ஆம் ஆண்டு தமிழர் திருநாளை முன்னிட்டு நேற்று (13.01.2022) வெளியாகி இருக்கும் வெளியாகி இருக்கும் தமிழ் திரைப்படம் "கார்பன்". அண்ணாதுரை படத்தை இயக்கிய சீனுவாசனின் இரண்டாவது திரைப்படம். இதுதான், நான் முதல் நாள் முதல் காட்சி (FDFS) பார்த்த முதல் திரைப்படம். மேலுள்ள 3 புகைப்படங்களில் இடது பக்கம் உள்ளது, படம் பார்த்து முடித்த பின் திரையரங்கின் வெளியே எடுத்தது. முதல் FDFS நல்லதொரு அனுபவமாய் இருந்தது கூடுதல் மகிழ்ச்சி. என் மகிழ்ச்சி உங்களையும் சேரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில், என் பார்வையை கீழே பதிந்திருக்கிறேன்.
- படத்தின் உயிர்நாடியும் சிறப்பம்சமும், படத்தின் திரைக்கதை தான்! ஒரு படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணிகளில், முதன்மையானது திரைக்கதை. அது, இந்த திரைப்படத்தில் மிகச் சிறப்பாய் அமைந்திருக்கிறது. இயக்குநர் சீனுவாசனுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
- பொதுவாக, நகைச்சுவைக்கென்று தனிப்பகுதி இல்லாமல்/நகைச்சுவை நடிகர்கள் எவரும் இல்லாமல்; கதையின் மூலமே நகைச்சுவை காட்சிகளைப் புகுத்துவதென்பது மிக சவாலான செயல்! இயக்குநர் சீனுவாசனுக்கு அது கைவந்த கலையாதலால், ஆங்காங்கே நல்ல நகைச்சுவை காட்சிகள் இருக்கின்றன. தவறாமல் இரசித்து மகிழுங்கள்!
- படத்தின் நாயகன் வித்தார்த்தின் திறமையில் நம் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. மிகவும் எதார்த்தமாய், மிகவும் எளிமையாய் நடித்து நம்மை மிக எளிதாய் கவர்ந்திருக்கிறார். இவர் போன்ற நடிகர்களுக்கு, மென்மேலும் அவர்களின் திறமைக்கேற்ற பல படங்கள் வாய்க்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.
- படத்தின் நாயகி தான்யா; தமிழ் திரையுலகில், கதாநாயகியாக உயர்ந்திருக்கிறார். நல்ல திறமையான நடிகை, தமிழ் திரையுலகம் அவரை இனிமேல் நன்கு பயன்படுத்தும் என நம்புகிறேன். அவருக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
- பொதுவாய், பல தமிழ் திரைப்படங்களில்; கதாநாயகியை பாட்டுக்கும், ஆட்டத்துக்கும் மட்டும் திரையில் காண்பிப்பதே வழக்கம். கதாநாயகி எனும் சொற்றொடருக்கு ஏற்ப; கதையின் நாயகியாய் அக்கதாபாத்திரத்தை நிலைநிறுத்தும் வண்ணம் திரைக்கதை அமைக்கப்படுவது மிகவும் அபூர்வம். அவ்வகையில், கார்பன் படம் கதாநாயகியை; உண்மையில் கதையின் நாயகியாய் காண்பித்திருப்பது பாராட்டுக்குரியது.
- அம்மாவின் பெருமை பேசும் படங்கள் ஏராளமாய் இருக்கின்றன. சாதாரணமாய் சமையலறையில் சுடும் ஒரு தோசையின் மூலம் கூட, ஓர் அம்மாவின் பெருமையாய் எளிதாய்/உயர்வாய் சொல்லிவிட முடியும். ஒருவேளை, அப்படி எளிமையாய் சொல்லிவிட முடியாது என்பதால் தான்; அப்பாவின் பெருமை பேசும் படங்களின் குறைவோ? என எண்ண தோன்றுகிறது. இப்படம் அப்பாவின் பெருமையை பேசும்/உணர்த்தும் படம். திரையில், உறவுகளுக்கு உயிர் கொடுப்பது இயக்குநர் சீனுவாசனின் தனித்துவம் என்பதை அண்ணாதுரையிலேயே பார்தோம். இதில், இன்னுமொரு படி மேலே உயர்ந்து சென்றிருக்கிறார்.
- அப்பா-மகன் உறவை மிகவும் எதார்த்தமாய் ஆனால் மிகவும் ஆழமாய் சொல்லி இருக்கும் திரைப்படம். அப்பாவாக திரு. மாரிமுத்துவும், மகனாக வித்தார்த்தும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். அவர்களுக்குள் இருக்கும் ஊடலைக் கூட கவித்துவமாய் சொல்லி இருப்பது இயக்குநரின் சிறப்பு. ஓர் காட்சியில், வித்தார்த் அழுதுகொண்டே பேசுவார்; அழுதுகொண்டே பேசுவது அத்தனை எளிதல்ல! அப்படியே பேசினாலும், வார்த்தைகள் தெளிவின்றி இருக்கவேண்டும்; அழுகையும் இயல்பை மீறக்கூடாது. அதை மிகச்சிறப்பாய் செய்திருக்கிறார் வித்தார்த்; அவரின் நடிப்புத் திறனுக்கு இதுவொன்றே பெரிய சான்றாகும். திரு. மாரிமுத்து அப்பாவாக வாழ்ந்திருக்கிறார்.
- படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் கொண்டிருக்கின்றன. ஒரு சிறு கதாபாத்திரம் கூட, கதையுடன் தொடர்பின்றி இருப்பதாய் தெரியவில்லை. அதனால் தான், திரைக்கதையும் அவ்வளவு நேர்த்தியாய் வந்திருக்கிறது. அனைத்து நடிகை நடிகையர்களுக்கும் என் வாழ்த்துகள்.
- படத்தின் இடைவேளையில், படத்தில் நடித்திருந்த மூவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் திரையரங்கு வளாகத்தில் எடுத்தது தான், மேலிருப்பதில் வலது பக்கம் இருக்கும் புகைப்படம். அவர்களுடன் பேசியதில், அவர்களின் திறமையும்; சாதிக்க துடிக்கும் அவர்களின் துடிப்பும் புரிந்தது. அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
- அப்பாவின் உயர்வை பேசும் பாடலில் "அட... அப்பாவின் வேர்வை தான் சோற்றிலே; தினம் உப்பாகும் எல்லோரின் வீட்டிலே" என்றோர் வரி வரும். படத்தில் வரும் அப்பா-மகன் உறவை அப்படியே உள்வாங்கி, இந்த ஒரே வரியில் வார்த்திருக்கிறார் பாடலாசிரியர் அருண் பாரதி. அவருக்கு என் அன்பு வாழ்த்துகள்.
- இப்படிப்பட்ட ஓர் படத்திற்கு, சாம் CS இன் இசை ஒரு வரப்பிரசாதம். ஓர் இடத்தில் கூட எந்த பிசிரும் இல்லாமல், ஓர் இடத்தில் கூட கூடுதலோ/குறைவோ இல்லாமல்; படத்தின் இயல்புக்கு என்ன தேவையோ அதை மிகக் கச்சிதமாய் செய்திருக்கிறார். அவருக்கும் என் ஏழுசுவர வாழ்த்துகள்.
- படத்தின் எடிட்டர் பிரவீன் KL கூடுதல் வரப்பிரசாதம். இதற்கு மேல், இதை எப்படி சுருக்கமுடியும் என வியக்கவைக்கும் வேலைப்பாடு. அவருக்கு என் வணக்கங்கள்.
- இப்படத்தை மாநாடு திரைப்படத்தோடு சிலர் ஒப்பிடுகின்றனர்! ஒப்பீடு தவறில்லை; ஆனால், இரண்டும் ஒரே விதமானது என்பது தவறான புரிதல். மாநாடு திரைப்படத்தில் வருவது Time-Loop ஐ அடிப்படையாகக் கொண்டது. அதாவது, ஒரு குறிப்பிட்ட நாள் அல்லது தொடர் நிகழ்வு மீண்டும் மீண்டும் இயல்பாய் நடப்பது. அதில், எவருக்கேனும் இப்படியெல்லாம் நடக்குமா என சந்தேகம் கூட வரலாம். ஆனால், இதில் வருவது அதுவல்ல! இது ஒரு குறிப்பிட்ட நாள் அல்லது தொடர் நிகழ்வை மீண்டும் மீண்டும் தம் முயற்சியால் நிகழ வைப்பது. எனவே, இப்படியெல்லாம் நடக்குமா என சந்தேகம் வர வாய்ப்பில்லை. ஏன், நம்மில் பலரே சில விடயங்களை நாமே மீண்டும் மீண்டும் செய்து பார்த்திருப்போம் தானே?!
- இப்படியொரு சிறப்பான படத்தை, தவறுதலாய்; மற்றொரு படத்தை போலுள்ளது என எளிதாய் விமர்சிப்பது ஏற்புடையதல்ல! எனவே, இதை சொல்லவேண்டியது என் கடமையாகிறது.
இவ்வளவு உண்மையாய் விமர்சனம் செய்துவிட்டு, முக்கியமான சில உண்மைகளை சொல்லவில்லை எனில்; அது நேர்மையாகாது! எனவே, கீழுள்ள உண்மைகளை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்:
- படத்தின் இயக்குநர் சீனுவாசன், தயாரிப்பாளர் ஆனந்தஜோதி முருகன் இருவரும் என் பள்ளி தோழர்கள். ஆனால், அவர்கள் என் தோழர்கள் என்பதால் என் விமர்சனத்தில் எந்த சமரசமும் இல்லை. எனவே, எந்த சந்தேகமும் இல்லாமல் இந்த விமர்சனத்தை நம்பி; திரையரங்கில் படத்தைப் பாருங்கள்.
- தயாரிப்பாளர் ஆனந்தஜோதி தன் வாழ்நாள் சம்பாத்தியம் அனைத்தையும் இதில் முதலீடு செய்திருக்கிறார். மிகவும் தூய்மையான மனதுக்கு சொந்தக்காரர்; எவருக்கும் தீங்கு செய்ய கனவிலும் நினைக்காத நல்லுள்ளம் படைத்தவர். அவரின் சிறந்த குணத்துக்காகவே இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்பது எங்கள் அனைவரின் பிரார்த்தனை. எனவே, தயவுசெய்து இந்த திரைப்படத்தை திரையரங்கிலோ அல்லது விதிகளுக்குட்பட்ட கால இடைவெளி விட்டு OTT தளத்தில் வெளியாகும்போது அதிலோ பாருங்கள்.
- இவர்களின் நண்பனாய் மட்டுமல்லாமல், கலைத்துறையில் ஆர்வம் இருக்கும் ஓர் நபராகவும் படத்திற்காக என்னுடைய சிறு பங்கீடும் இருக்கிறது. அதனால் தான், படத்தின் நன்றி நவிலலில் என் பெயரும் (இளங்கோவன் இளமுருகு, திருப்பாலப்பந்தல்) இடம் பெற்றிருக்கிறது. அதுதான், மேலுள்ள புகைப்படங்களில் நடுவில் இடம் பெற்றிருக்கிறது.
மீண்டும் சொல்கிறேன், என் நண்பர்கள் எடுத்த படம் என்பதால் என் விமர்சனத்தில் எந்த சமரசமும் இல்லை! வேண்டுமெனில், படம் பார்த்துவிட்டு வாருங்கள்; நாம் விவாதிப்போம். படத்தில் குறையே இல்லையா? எனில்; ஒரேயொரு (சிறிய)விடயத்தை குறையாய் கூறலாம். அது, படத்தின் முடிவை இன்னும் எதார்த்தமாய்/ஆழமாய் சொல்லி இருக்கலாம் என்பதே! இதுவும் கூட, ஆழ்ந்து யோசித்தால் மட்டுமே தோன்றும்.
படத்தை இரசித்து பார்த்துவிட்டு வாருங்கள்! விவாதிக்க காத்திருக்கிறேன்!!