கற்பவை யாவும் கல்வியே!
கற்பிப்போர் யாவரும் ஆசிரியரே!
செப்டம்பர் ஐந்தின்று,
ஆசிரியர் தினத்தன்று;
கற்பித்தோரை வணங்குதல் முறையே!
சைகை மொழியில் துவங்கி,
மழலை மொழியில் தொடர்ந்து,
கருணை மொழியால் அனுதினமும்;
தந்தை இலக்கணம் கற்பிக்கும்
எம்மகளுக்கு அன்பு வணக்கம்!
கருவறையில் சுவாசம் துவங்கி,
கைமடியில் தாய்ப்பால் தொடர்ந்து,
ஈன்றபொழுது போலவே இக்கணமும்;
உயிரூட்டி வாழ்வியல் கற்பிக்கும்
என்னம்மைக்கு உயிர் வணக்கம்!
உயிரணு தந்து உயிர்ப்பித்து,
தமிழறிவு புகுத்தி புதுப்பித்து,
அவையத்துள் முந்தி இருந்திடவே;
மனதுலகில் இருந்தும் வழிநடத்தும்
என்னப்பனுக்கு தமிழ் வணக்கம்!
பார்த்திட்ட நாள் துவங்கி,
பழகிட்ட நாள் தொடர்ந்து,
உரமிட்டு எனை திடமூட்டும்;
எண்ணிலா உறவுக்கும் நட்புக்கும்
எல்லையிலா நன்றி வணக்கம்!
அகரம் எழுதுவதில் துவங்கி,
ஆயிரம் பயிற்சிகள் அளித்து,
சிகரம் அடையும் வித்தையை;
பயிற்றுவித்த ஆசிரியர் யாவருக்கும்
சிரம்தாழ்ந்த குரு வணக்கம்!