வெள்ளி, பிப்ரவரி 24, 2012

வீட்டின் விலையுயர்வை யார் நிர்ணயிக்கிறார்கள்?...



       மிக சமீபத்தில் ஒரு வீடு அல்லது வீட்டு மனை வாங்கலாம் என்று தீவிரமாய் முயற்சி செய்து - என்னுடைய தெளிவான திட்டமிடாத செயலால் - அதை தள்ளிப்போடவேண்டிய சூழல் நேர்ந்து விட்டது.   எனக்கு ஏற்பட்ட தடைகளையும் அவற்றிற்கான காரணங்களையும், என்னுடைய பார்வையில் விளக்க முயற்சித்துள்ளேன். இயல்பிலேயே, எனக்கு பணத்தின் மீது ஈடுபாடு கிடையாது; அதற்கு ஏன் இத்தனை மதிப்பும், முதன்மையும் கொடுக்கவேண்டும் என்ற கோபம் எப்போதும் உண்டு. திருமணம் நடந்த பின்னும், என்னவளையும் என் மகளையும் மிக நன்றாக பார்த்துக்கொண்டாலும் - எங்களுக்காய் ஒரு வீடு வாங்கவேண்டும் அல்லது சிறிதாவது பணம் சேமிக்கவேண்டும் என்று எனக்கு தோன்றியது இல்லை. இது எனக்கு வலிமையாய் உணர்த்தப்பட்ட பின் தான், அப்படியொரு செயல் செய்ய வேண்டும் என்று எண்ணி துவங்கினேன்; வங்கியில் கடன் வாங்கி வாங்கிவிடலாம் என்று அதற்கான முயற்சிகளை ஆரம்பித்துவிட்டேன்; ஆனால், அதற்கு முன் பணம் எப்படி செலுத்துவது? நிலை குலைந்து போனேன்! ஒரு சிறிய சுயநல உணர்வோடு நான் எனக்காய் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகை சேமித்து வைத்திருப்பினும், எத்தனை உதவியாய் இருந்திருக்கும். என்னுடைய தவறு புரிந்தது! சரி, அதை வேறெவரிடமாவது வாங்கி வங்கிக்கு முன்பணம் செலுத்தி வாங்குவது என்பது "மிகப்பெரிய முட்டாள்தனம்" என்று உணர்ந்ததும் தான் - மேற்கூறிய வண்ணம் அந்த செயலை தள்ளிப்போட வேண்டும் என்ற சூழல் வந்தது. 

         ஏற்கனவே பணத்தின் மீதிருந்த என் அவமதிப்பு, இந்த வீடு அல்லது வீட்டு மனை விலை அறிந்ததும் மேலும் அதிகரித்தது!!! யார் இந்த விலையேற்றத்தை நிர்ணயம் செய்கிறார்கள்? என்ற கேள்வி எழுந்தது. நாம் அனைவரும் நகரத்தில் - குறிப்பாய் - நகரின் மையத்தில் வசிக்கவேண்டும் என்று தான் விரும்புகிறோம். எல்லோருக்கும் நகரின் மையத்தில் வீடு அல்லது வீட்டு மனை வேண்டுமெனில், எப்படி சாத்தியமாகும்? அப்போது இருக்கும் ஒரு சில இடங்களுக்கு மிகப்பெரிய போட்டி இருப்பின், வேறு என்ன தான் வழி இருக்க முடியும்?? நகரில் வசிக்கிறேன் என்பதையே ஒரு "பாணி அறிக்கையாய்" (style statement) சொல்கிறோம். நகரத்தில் வசித்தால் தான், காய்கறி வாங்குவதில் தொடங்கி அனைத்து வேலைகளையும் எளிதில் முடித்துவிடலாம் என்பது மிகமுக்கிய காரணம். இது பெருநகரத்திற்கு மட்டுமல்லாது சிருகரங்களுக்கும் பொருந்தும். இது பற்றி தீவிரமாய் யோசிக்கும் போது, எனக்கு ஒரு கேள்வி எழுந்தது! ஏன், நாம் மேலை நாடுகளில் இருப்பது போன்று மிகப்பெரிய பல்பொருள் அங்காடிகளை (supermarket) புறநகர்ப் பகுதியில் அமைக்கக்கூடாது? இப்போது, பெருநகரங்களில் அங்காடி தெருக்களில் ஒரு சிறிய நான்கு சக்கர வாகனம் மட்டும் அல்ல - ஒரு இரண்டு சக்கர வாகனத்தை கூட  நிறுத்த முடிவதில்லை. இந்த பல்பொருள் அங்காடி தளங்களை புறநகர் பகுதிக்கு கொண்டுசென்றால், மிகப்பெரிய நிறுத்துத்-தளங்கள் அமைக்கலாம். அனைவருக்கும், நேர விரயம் கூட மீதமாகும்.

       சரி, முக்கியமான விளைவுக்கு வருவோம்; இவ்வாறு புறநகர்ப் பகுதிகளுக்கு இத்தளங்கள் தடம் பெயர்ந்தால், கண்டிப்பாய் நகரத்தின் மையம் அல்லது அருகில் என்ற எண்ணமே கண்டிப்பாய் (படிப்படியாய்) மறைந்துவிடும். மேலை நாடுகளில் ஒரு தொழில் நிறுவனமோ அல்லது பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனமோ நகரத்தில் இருந்து தள்ளி இருப்பின், அதனை சுற்றி சகல வசதிகளுடன் ஒரு சிறுநகரத்தை உருவாக்கி விடுகிறார்கள். ஆனால், நம் நாட்டில் புறநகர் பகுதியில் இருக்கும் எத்தனை தொழில்நிறுவனம் அல்லது பலகலைக்கழகம் அதிக இட வசதிகளுடன் உள்ளது? அவைகளைச் சுற்றி தேவையான வசதிகள் அனைத்தும் ஏற்ப்படுத்தி கொடுத்தால் மக்கள் அங்கே வசிக்க ஆரம்பித்து விடுவார்கள்; ஏதும்   இல்லை என்பதால் தான் அவர்கள் அருகில் உள்ள நகரத்திற்கு செல்கிறார்கள். இதில், விதிவிலக்காய் சில நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் உண்டு என்பதை ஒப்புக்கொள்கிறேன். இந்த வசதி பெருகிவிடின், மக்கள் பரவலாய் வசிக்க ஆரம்பித்துவிடுவார். மேலும், அவர்கள் நிதானமாய் தத்தம் பணியிடங்களுக்கு செல்ல முடியும்! போக்குவரத்து நெரிசல் குறையும்; அவர்களுக்கு நேர விரயமும், பண விரையமும் குறையும். மிகக் குறைந்த விலையில் அங்கே வீடுகளையும் - வீட்டு மனைகளையும் வாங்குவார்கள். சரி, இதை யார் செய்வது? கண்டிப்பாய், பணபலமும் அதிகார பலமும் உள்ளவர்கள் தான் இந்த முயற்சியை துவங்கவேண்டும்! சரி, அவர்களே, இந்த இடம் சம்பந்தமான வியாபாரத்தில் மும்மரமாய் இருக்கும் போது - இந்த யோசனை தெரிந்தும் கூட எப்படி செய்ய முனைவார்கள்?

           இந்த வசதி வாய்ப்பை பரவலாய் விரிவாக்கின், இட மதிப்பு குறையும் என்று தெளிவாய் தெரிந்தும் கூட செய்ய வேண்டியவர்கள் செய்யா எத்தனிக்காத சூழல் இல்லை என்று உணர்ந்த போது - இதை நான் வேறொரு பரிமாணத்தில் யோசித்தேன். கண்டிப்பாய், வீடு அல்லது வீட்டு மனை வாங்குவது என்பது நல்ல விசயம் தான்; நமக்கென்று ஒரு சொத்தாகவோ அல்லது சேமிப்பாகவோ இருக்கும்! நம் நாட்டின் பொது சேமிப்பென்பது "பொன்-நகை" வாங்குவது! பொன் விலையேற்றத்தையும் மிஞ்சி ஏன் இந்த வீட்டின் விலையுயர்வு உள்ளது என்பதற்கு ஓர் காரணம் தெரிந்தது!! இங்கே உளவியல் சம்பந்தமான ஒரு விசயம் உள்ளதை தெளிவாய் உணர்ந்தேன்!!! நாம் வீடு அல்லது வீட்டுமனை வாங்கும்போதே நாளை "நல்ல இலாபம்" கிடைக்கும் என்ற கணக்கு போடுகிறோம்; வியாபாரிகளால் அந்த சிந்தனை வலிய தோற்றுவிக்கப்படுகிறது. அதாவது, நாம் ஒவ்வொருவரும் வியாபாரியாய் யோசிக்க ஆரம்பித்து விடுகிறோம். இதில் தான், இந்த விலையேற்றத்திற்கான "ஆணி-வேர்" உள்ளது என்று தோன்றுகிறது. என்னிடம், பலர் இந்த யோசனையை சொன்னதுண்டு "எப்படியாவது வாங்கிப் போடு; இன்னும் சில ஆண்டுகளில் பெரிய இலாபம் கிடைக்கும்" என்று. எனக்கு அளவில்லாத கோபம் வரும்; இவ்வளவு சிரமப்பட்டு, வாங்குவதை விட கிட்டத்திட்ட மூன்று மடங்கு நான் வங்கிக்கு திரும்ப செலுத்தவேண்டியதையும் பொருட்படுத்தாது, ஒரு வீட்டை அல்லது இடத்தை வாங்குவதற்கு முன்னரே - நான் ஏன் அதை - விற்பது பற்றி யோசிக்கவேண்டும்?; எவ்வளவு அபத்தம் இது!!!

       இந்த எண்ணம் தான் இப்படியொரு விலையேற்றத்திற்கு மிகமுக்கிய காரணம். அதை வாங்கிவிட்டு, என் சம்பளத்தில் மிகப்பெரும்பான்மையான தொகையை நான் வங்கிக்கு கட்டவேண்டும்; அந்த தொகை போன பின் மீதமுள்ள சம்பள பணத்தில் நான் எவ்வாறு என்னவளுடனும், என் மகளுடனும் நிம்மதியாய் வசதியாய் வாழ முடியும்? இத்தனையும் சமாளித்து, நான் ஏன் ஓர் வியாபாரி போல் விலையேற்றத்தை பற்றி யோசிக்கவேண்டும்?? நான் தீர்மானதாய், இறுதியாய் நினைத்திருப்பது இது தான்; கண்டிப்பாய் எங்களுக்கென்று ஓர் வீடு அல்லது இடம் தேவை. அதை கண்டிப்பாய் என்னிடம் அடிப்படை தேவைக்கு (வங்கியின் முன்பணம் உட்பட) பணம் இருக்கும்போது தான் செய்வேன். நான் ஏன் வேறேவரிடம் கடனாவது வாங்கி அப்பொருளை வாங்க முயற்சிக்கவேண்டும்? ஒரு வீடு அல்லது இடத்தை வாங்கிவிட்டு, ஒரு பதினைந்து அல்லது இருபது ஆண்டுகள் என்னுடைய நிகழ் கால வாழ்க்கையை - என்னுடைய சுயத்தை - இழந்து வாங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. மிகச் சுருக்கமாய் கூறினால், வீடு வாங்குவது என்பது நமக்கென்று ஒரு "துணி" வாங்குவது போன்று சந்தோசமான நிகழ்வாய் இருக்கவேண்டும். துணி வாங்கியதால் பணப்பிரச்சனை எனில் ஒரு மாதத்தில் சமாளித்து விடலாம்; ஆனால், பெரும்பணம் கடன் வாங்கி - வீடோ அல்லது வீட்டு மனையோ வாங்குவதால் பணப்பிரச்சனை வந்தால் அது பல ஆண்டுகள் நீடித்திருக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.

வாழ்க்கை - இடத்தை வாங்குவதிலில்லை !
இன்றைய தினத்தை - வாழ்வதிலுள்ளது!!!


பின்குறிப்பு: என் வருவாய்க்கேற்ற தொகையில் வாங்கி, மீதமுள்ள வருமானத்தில் என்னுடைய நிகழ்கால வாழ்க்கையை எப்போதும் போல் (நிம்மதியாய்; என்னவளுக்கும் - என் மகளுக்கும் தேவையானதை எப்போதும் போல் நிறைவேற்றி) வாழ ஆசைப்படுகிறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக