வெள்ளி, மார்ச் 30, 2012

இன்றுமா, இல்லத்தரசிகள் இளைத்தவர்கள்?...


         தலைப்பை பார்த்தவுடனே புரிந்திருக்கும் - எதைப்பற்றி எழுதப்போகிறேன் என்று! "ஆணாதிக்கம்" தலைவிரித்தாடிய கோரக்கதைகளை எல்லாம் நாம் கேட்டிருக்கிறோம் அல்லது அது பற்றி படித்திருக்கிறோம். ஆனால், இப்போது நிலைமை அப்படித்தான் இருக்கிறதா? என்று எவரேனும் கேட்டால் சிறிதும் யோசிக்காமல் இல்லை என்று தீர்மானமாய் மறுத்து விடலாம்!!. ஆணாதிக்கமே இல்லை என்று கூறவில்லை; இன்னமும் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால், பெரும்பான்மையாய்  அது குறைந்திருக்கிறது என்பதில் எவருக்கும் இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது! ஆணாதிக்கத்தின் விளைவாய் பூவையர்கள் இழந்தது சொல்லில் அடக்கமுடியாதவை. ஆனால், ஆணாதிக்கத்தின் பால் எழுந்த எதிர்வினை பல சந்ததிகளாய் பெண்களால் அடுத்த தலைமுறைக்கு சொல்லப்பட்டு, இன்று சம்பந்தமே இல்லாமால் வேறொரு ஆணுலகத்தை "அந்த எதிர்வினை" பாதித்துக்கொண்டிருப்பதாய் படுகிறது. அதைத்தான் சமீபத்தில் என்னுடைய புதுக்கவிதையில் வெளிப்படுத்தியிருந்தேன். நாம் கவனிக்க வேண்டியது, இன்றும் பெண்கள் அடக்கிவைக்கப்பட்டிருப்பதாய் என்றெண்ணி, என்றோ எவர்க்காகவோ உருவாக்கப்பட்ட "சட்டங்களை" இன்னமும் ஏன் மாற்றாமல் கடைபிடிக்கிறோம் என்பது தான்; அதை எவ்வாறெல்லாம் பெண்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் தவறான விதத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பது தான். இதை யோசித்தபோது எழுந்த கேள்வி தான் "இன்றுமா, இல்லத்தரசிகள் இளைத்தவர்கள்?".

   ஆணாதிக்கத்தின் பாதிப்பிலிருந்து பெண்களை பாதுகாக்க இயற்றப்பட்ட சட்டங்களுள் மிக முக்கியமானதாய்  கருதப்படுவது "வரதட்சனை ஒழிப்பு சட்டம்". வரதட்சனை என்பது பொருளாதாரத்தை மையமாய் கொண்டுதான் ஆரம்பித்திருக்க வேண்டும். நம் நாட்டில், திருமணம் முடிந்ததும் பெண் வீட்டார் "குடும்பம் நடத்துவதற்காய்" பொருட்கள் கொடுப்பது வழக்கம். அதுவும், திருமணம் நடக்கும் இடத்திலேயே அனைவர் முன்னிலையிலும் கொடுப்பர். அதாவது, தங்கள் பெண்ணின் கணவனுக்கு உதவுவதற்காய் என்று எடுத்துக்கொள்ளலாம். இதனால் தான் அந்த கணவனோ அல்லது அவனை சார்ந்தவர்களோ திருமணத்திற்கு பின்னரும் கேட்க ஆரம்பிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. தயைகூர்ந்து நான் வரதட்சனையை ஆதரிப்பதாய் தவறாய் எண்ணி விடாதீர்கள்; நான், வரதட்சனையை முழுமையாய் ஆராய்ந்தறிய முயற்சிக்கிறேன். சரி, இங்கே தவறு எங்கே நடக்கிறது என்றால் - திருமணத்திற்கு பின்னரும் கணவனோ அல்லது அவன் குடும்பமோ மீண்டும், மீண்டும் கேட்கும்போது - இருப்பவர்கள் கொடுத்துவிடுகிறார்கள். எதுவும் இயலாதவர்களால் எதையும் செய்ய முடியவில்லை; அப்போது பல குடும்பங்களில், நான் "ஆணைப் பெற்றவன்" என்னும் திமிர் தலை தூக்க ஆரம்பிக்கிறது. இது தான் வரதட்சனை கொடுமையாய் உருமாறுகிறது; பெரும்பாலும் இது பொருளாதாரத் தேவைக்காய் இருப்பினும் பொருளாதரத்தையும் தாண்டிய காரணங்களும் நிறைய இருக்கத் தான் செய்கின்றன. 

      சரி, நாம் நம்முடைய தலையங்கத்தின் கருவிற்கு வருவோம். இன்று மிகப்பெரும்பான்மையான பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள்; அதனால் பொருளாதாரத் தரம் உயர்ந்திருக்கிறது. கணவன்-மனைவி இருவரும் சேர்ந்தே குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்துவிடுகின்றனர்; பெண் வீட்டாரை தொல்லை செய்வது "மிகப்பெரிய" அளவில் குறைந்திருக்கிறது என்பது கண்கூடாய் தெரிகிறது. பொருளாதராத் தரம் உயர்ந்திருக்கிற காரணத்தினால், வரதட்சனை கொடுமை மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது. இதன் விளைவாய் தான், வரதட்சனைக்-கொடுமையை காரப்படுத்தி நடந்த "பெண் சிசுக்கொலை" பெருமளவில் குறைந்திருக்கிறது!!! பின் ஏன் "வரதட்சனை ஒழிப்பு சட்டம்" என்பது மாறவில்லை? நான், அந்த சட்டத்தை நீக்கவேண்டும் என்று கூறவில்லை! ஏன் அந்த சட்டத்தின் கடுமை(கூட) குறையவில்லை?? எல்லா சட்டங்களும் ஒரு சமுதாயத்தை பிரதிபலிப்பவை தான்; சமுதாயத்தில் உள்ள குறைகளை நீக்கி சமுதாயத்தை சீர்படுத்த தான். அப்படியாயின், சமுதாயம் தன் குறையை களைந்து தன்னை சீர்படுத்திக் கொண்ட பின் அதை மதித்து சட்ட மாற்றமும் வரவேண்டும் தானே??? இன்று நம் நாட்டில் "மரண தண்டனை" ஒழிக்கப்படவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. உச்சபட்ச தண்டனையே ஒழிக்கப்படவேண்டும் எனின், இந்த சட்டம் மட்டும் தொடர்ந்து அவ்வாறே இருப்பது எங்கனம் நியாயமாகும்? ஏன், சம்மந்தப்பட்டோர் இதை செய்ய எத்தனிக்கவில்லை??

       இந்த சட்டத்தை நீக்கினால் அல்லது கட்டுப்பாட்டை தளர்த்தினால், "வரதட்சணை கொடுமை" மீண்டும் தலைதூக்கும் என்று எவரும் வாதிட்டால், நான் அதை தீர்க்கமாய் மறுப்பேன். இந்த சமூக-மாற்றம் சட்டத்தின் கொடுமையால் நிகழவில்லை என்பதை உணர்த்த தான், வரதட்சணையின் ஆதாரத்தை நான் விளக்கமாய் எழுத வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டது. இது ஓர் காலச்சுழற்சி!  மேலும், சட்டமும் அதன் தண்டனையும் குற்றத்தை முழுமையாய் ஒழிக்க உதாவாது. அப்படியாயின், உலகம் முழுதும் ஏன் "தீவிரவாதம்" துவங்கி பல குற்றங்கள் தொடர்ந்து நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்து கொண்டே போகவேண்டும்? மேலும், இந்த குறிப்பிட்ட சட்டம் இப்போது தவறான முறையில் உபயோகிக்கப்படுகிறது என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன், "இந்திய நிர்வாக சேவை (IAS)" தேர்வு வென்ற உயர்ந்த அதிகாரி ஒருவர் (மற்றும் அவர் குடும்பம்) அவரின் மருமகளை வரதட்சனை கொடுமை செய்ததாய் ஊடகங்கள் மூலம் பெரிதுபடுத்தப்பட்டது. அதன் பின், அது உண்மையா பொய்யா என்ற செய்தியை எந்த ஊடகமும் உறுதி செய்யவில்லை! அதே போல், உச்ச நடிகர் ஒருவரின் காதல் திருமணம் செய்த மகள் மிகக்குறுகிய காலத்தில் "வரதட்சணை புகார்" அளித்தது பரபரப்பான செய்தியை உண்டாக்கியது. ஆனால், அதன் பின் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஒன்று மட்டும் உண்மை! இவை போன்றவை உண்மை செய்தி அல்ல!! இல்லையேல், இந்த ஊடகங்கள் அதன் தொடர்ச்சியை வெளியிட்டிருக்கும்.

    பெரும்பாலும், வரதட்சணை-கொடுமை சட்டத்தை "தவறாய் பயன்படுத்தும்போது", அந்த கணவனுக்கு - மனைவி என்பவளிடம் இருந்து எந்த ஆதரவும் இல்லாமல் இருக்கும் கொடுமை வேறு. இதில் வேண்டுமென்றே ஆதரவு தராமல் இருக்கும் பெண்களும் உண்டு; பெற்றவர்களால் அந்த ஆதரவு மறுக்கப்படும் பெண்களும் உண்டு; பெண்ணின் பொய்யை உணராது (சில சமயத்தில் உணர்ந்தும் கூட, உணர்ச்சிவயப்பட்டு) அவளை ஆதரிக்கும் "நல்ல பெற்றோர்களும்" உண்டு. செய்யாத தவறுக்காய் தண்டனையும் அனுபவிக்கவேண்டும் - மனைவி மற்றும் குழந்தையை (இருப்பின்) பிரிந்திருக்க வேண்டும். இந்த சூழ்நிலையை ஓர் இயக்குனர் "அழகான தலைப்பில்" தமிழ்ப் படமாய் பத்து ஆண்டுகளுக்கு முன் கொடுத்திருந்தார்; எவர் மனதையும் உருக்கும் திரைக்கதை. அந்த திரைப்படம் மட்டும் இப்போது வெளியிடப்பட்டிருக்குமேயானால், மிகப்பெரிய வெற்றியை ஈட்டியிருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை. மேற்கூறிய திரைப்படத்தில் நாயகன் இறுதியில் குடும்பத்துடன் சேர்ந்ததாய் காண்பிக்கப்பட்டிருக்கும். ஆனால், நடைமுறையில் அந்த மாதிரியான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. தவறான பொய் புகார் கொடுக்கும்போதோ அல்லது அதைத் தொடர்ந்து மேற்கூறிய திரைப்படத்தில் வருவது மாதிரி நிகழ்சிகள் நடக்கும்போதோ அத்தகைய தவறு செய்பவர்களை (மனைவி எனும் பெண் உட்பட) அது பாதிக்காதா? இது எப்படி சாத்தியமாகிறது!!! இந்த எல்லா பொய்களையும், தவறுகளையும் தாண்டி வாழ்க்கை என்று ஒன்று உள்ளதை, அதுவும் குழந்தை இருந்தால் அதன் வாழ்க்கையும் பாதிக்கும் என்பதை எப்படி உணராமல் போகிறார்கள்?

         இங்கே எவர் வாழ்க்கையும் நிரந்தரமில்லை; கணவன் முன்பே இறந்துவிட்டால், பரவாயில்லை; சரி பெண்ணின் பெற்றோர்கள் அவர்கள் இருக்கும் வரை பார்த்துக்கொள்வார்கள். ஒருவேளை, அந்த பெண்ணின் பெற்றோர்கள் முன்பே இந்துவிட்டால்? ஏன், ஒரு பெண்ணால் தனியாய் வாழ முடியாதா? என்ற கேள்வி எழலாம்!! முடியலாம்; சரி, பொய்யும் தவறும் கலந்து செய்த ஓர் வினையால் ஏன் வாழ்க்கை அறுபடவேண்டும்? அதற்கு ஏன் திருமணம் செய்யவேண்டும்?? தனியாகவே இருந்து விடலாமே??? இதைப் பற்றி எந்தப் பிரக்ஞையும் இல்லாத அளவிற்கு பெண்ணும் அவரை சார்ந்தவர்களும் செய்கைகள் செய்ய எது காரணம்? உயர்ந்த பொருளாதார தரம் என்று எடுத்துக் கொள்ளலாமா?? உண்மையாய் இந்த சித்தரவதைக்கு ஆட்படுத்தப்படும் "சகோதரிகளை" பற்றி நான் இங்கே கூறவில்லை; மேலும் அம்மாதிரி பாதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையோனோர் "குடும்பம்" என்பதை முன்னிறுத்தி பிரச்சனைகளை சமாளித்து தான் பயணப்படுகிறார்கள். இதை எல்லாம் யார், எப்படி தவறு செய்பவர்களுக்கு எடுத்துரைப்பது! இம்மாதிரி, அப்பாவியான ஆண் தண்டிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று "வரதட்சனை தடுப்பு சட்டம்" என்பதில் உள்ள ஒரு விதி; உண்மை தெரியாத முன்னரே தண்டிக்கும் அதிகாரம். அதனால் தான் இது மாற்றப்படவேண்டும் என்கிறேன். இது போன்று பல சட்டங்களால் பல விதத்திலும் இன்று ஆண்கள் தவறேதும் செய்யது தண்டிக்கப்படுகிறார்கள். எனவே, அனைத்து விதத்திலும், என்னுடைய பார்வையில், இன்று...

இல்லத்தரசிகள் இளைத்தவர்கள் இல்லை!!!

பின்குறிப்பு: இத்தலையங்கம் வெளியிடும் சில தினங்களுக்கு முன் நாளிழதில் ஒரு செய்தி படித்தேன். விவாகரத்து வழக்கில் உடனடியாய் "விவாகரத்து" பெறுவதற்கு வசதியாய் ஓர் திருத்தம் வந்துள்ளதாம்; அந்த பிரிவின் கீழ் கணவன் விண்ணப்பித்ததால், அதை எதிர்த்து மனைவி விண்ணப்பிக்கமுடியுமாம்! ஆனால், மனைவி விண்ணப்பித்தால், கணவன் மறுத்து விண்ணப்பிக்கமுடியாதாம்!! என்ன விதமான நியாயம் இது? அதற்கு, கணவன் அந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க முடியாது என்று கூறிவிடலாமே?? அல்லது, மனைவி விண்ணப்பித்தால் (மட்டுமே) கண்டிப்பாய் விவாகரத்து கிடைக்கும் என்று அர்த்தமா, அதுவும் உடனடியாய்??? ஒருவேளை, சட்டம் தெரிந்தவர்களுக்கு இதன் உண்மை நிலை புரியுமோ????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக