கடந்த மூன்று வாரங்களாய் விடுப்பில் இந்தியா சென்று என் மகளுடன் இருந்தமையால், புதிய இடுகைகளை பதிய முடியவில்லை; பதிய முடியாது என்று முன்பே தெரியும் கூட. இயன்ற மட்டும் என்னுடைய நேரத்தை அவளுடனே இருந்து அவளுக்காய் செலவிட்டேன்; அதனால் என் பெற்றோரிடம் கூட அதிக நேரம் செலவிட இயலவில்லை; அவர்களுக்கும் தன் மகனுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று தோன்றி இருக்குமோ?; கண்டிப்பாய் இருந்திருக்கும். இதற்கு என்ன பரிகாரம் என்று தெரியவில்லை! ஆனால், இரு தரப்பையும் சமன் செய்து செல்லவேண்டும் என்ற உறுதி மட்டும் உருவாயிற்று. இவ்வாறாய், ஒவ்வொரு மணித்துளியையும் என் மகளுடன், மகளுக்காய் செலவிட்டதில், புதிய இடுகைகளை வெளியிடமுடியவில்லை. சரி, விடுப்பு முடிந்து இங்கு வந்து மூன்று வாரங்கள் ஆகின்றன; இந்த வாரமாவது புதிய இடுகைகளை வெளியிடவேண்டும் என்று முனைந்த போது, என்னுடைய கவனமும், கற்பனையும் இன்னமும் என் மகளைச் சுற்றியே இருப்பதை அறிந்தேன். அதிலிருந்து, எங்கனம் மீண்டு இந்த வாரம் படைப்புகளை இடுவது என்று ஆழ்ந்து ஓர் வழி தேடியபோது, என்னுடைய எண்ணங்களையே இந்த வாரம் - தலையங்கமாய் எழுதுவது என்ற முடிவுக்கு வந்தேன். சரி, எந்த விசயத்தை எப்படி எழுதுவது என்று யோசித்த போது "இந்த வாரம் என்ன எழுதுவது???" என்ற கேள்வி எழுந்தது! சரி, என்று அக்கேள்வியையே இந்த வார தலையங்கத்தின் தலைப்பாய் இட்டுவிட்டேன். என்னுடைய இந்த இரண்டு வார விடுப்பின் அனுபவத்தை அப்படியே எழுதுவது என்று முடிவெடுத்தேன்.
முந்தைய தலையங்கத்தில் குறிப்பிட்டது போல், என் பயணத்திற்கு முக்கிய காரணம் - என் மகளின் பிறந்த நாளன்று அவளுடன் இருக்கவே! நான் ஓர் சனிக்கிழமை காலை அவளை சென்று சேர்ந்தேன்; திங்களன்று அவளுக்கு பள்ளி - அதுவும், என்னுடைய "இருப்பில்" முதல் நாள் பள்ளிக்கு செல்லப்போகிறாள்; நானும், என்னவளும் அழைத்து செல்வதாய் முன்பே திட்டமிட்டிருந்தோம்; அன்று தான், அவளுக்கு பிறந்த நாளும்! எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனாலும் ஓர் வருத்தம்; அன்று பிறந்த நாள் என்பதால் அவள் "வண்ண உடையில்" தயாராகி இருந்தாள்; அவளை பள்ளி சீருடையில் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் நிறைவேற இன்னுமொரு நாள் காத்திருக்க வேண்டும். அது ஒரு புறமிருப்பினும், அன்றைய நாள் மிக நன்றாக கடந்தது; அவளை, முதல் முதலாய் பள்ளிக்கு கொண்டு விட்டதில் துவங்கி, அவளின் பள்ளி தலைமையாசிரியை முதல் முதலாய் சந்திப்பதில் தொடர்ந்து என் பெற்றோரும், என்னவளின் பெற்றோரும் எங்களுடன் ஒன்றாய் இருந்தது வரை, மிகவும் நன்றாய் தொடர்ந்தது. அன்றைய மாலைப்பொழுதில், அவளின் பிறந்தநாளை குறுகிய ஓர் சுற்றத்துடன் கொண்டாடியது மறக்க முடியாத அனுபவம். என் மகள் இங்கேயே பிறந்தவள் என்பதால், இந்தியாவில் விமர்சியாய் கொண்டாடிய முதல் பிறந்த நாளும் அதுவும் என்பதால் மகிழ்ச்சியின் எல்லை விரிந்து பரந்தது. அன்றைய தினம், என் வாழ்நாளின் மிகமகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாய் அமைந்தது.
இவ்வாறாய், ஒவ்வொரு நாளும் கடந்து கொண்டிருக்கையில் - அந்த வருத்தம் கலந்த எண்ணம் வந்து உறுத்த செய்தது! விடுப்பு முடிந்து நான் என் மகளிடம் இருந்து விடைபெற இன்னும் சில நாட்களே உள்ளது என்ற எண்ணம்!! நானும், என்னவளும் எங்கள் மகளிடம் நான் திரும்ப செல்ல வேண்டிய காரணத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம், எடுத்து சொல்ல ஆரம்பித்தோம்!!! என்னுடைய பயணத்தை அவள் எதிர்கொள்ள அவளை ஆயத்தப்படுத்த துவங்கினோம்; குறிப்பாய், நான் அதற்கு ஆயத்தமாகவேண்டுமே என்ற எண்ணமே எனக்கு மேலோங்கி இருந்தது. வேறு என்ன சொல்வது! "என்ன வாழ்க்கை இது" என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்த அதே வெறுப்பான காரணம் தான்!! உண்மையில், அத்லையங்கத்தின் தொடர்ச்சியாய் இன்னுமொரு அத்தியாயம் எழுதவேண்டும் என்று அப்போது தோன்றிற்று. எத்தனை முறை, எத்தனை விசயங்கள் குறிப்பிட்டு எழுதினும், அது முற்றுப்பெறும் தலையங்கம் அல்ல! என்று திடமாய் தோன்றியது. எங்கள் மகளும், எங்கள் விளக்கத்தை புரிந்து கொண்டதாய் அறிவித்தாள்; நான் கிளம்பும்போது "அழமாட்டேன்" என்று வாக்குறுதி (???!!!) அளித்தாள். நாட்கள் குறைந்து மணிகளாய், நிமிடங்களாய் மீதமிருக்கும் போது உண்மையில் நானும், என்னவளும் தான் அதிக பதட்டம் அடைந்தோம். எங்கள் மகள் ஏனோ, அனைத்தையும் புரிந்து கொண்டது போல் சாதாரணமாய் இருக்கத் துவங்கினாள். சரி, எல்லாம் சரியாயிற்று; என் மகள் எதுவும் ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டாள் என்று நானும் நம்ப ஆரம்பித்தேன்.
நான் என் மகளை, என்னவளை விட்டு கிளம்ப இன்னும் ஒரு மணி நேரமே உள்ளது; அப்போது என் "மருதமையன்" (அக்காளின் கணவர்) வந்தார். சென்ற முறையும், அவருடன் கிளம்பி "மகிழ்வுந்துக்கு", எரிபொருள் நிரப்பி வருகிறோம் என்ற பொய்யை சொல்லியே கிளம்பினோம். அவரின் மேல், அவள் அளவு கடந்த பாசம் கொண்டவள்; அவருடன் சில மணித்துளிகள் மிக அன்னியோன்மையாய் விளையாடிக்கொண்டிருந்தாள். பின் அவளுக்கு நாங்கள் சென்ற முறை கிளம்பி சென்றது நினைவுக்கு வந்திருக்கும் என்று எண்ணுகிறேன்; குறிப்பிட்ட நேரத்திற்கு பின் என் மேல் வந்து அமர்ந்து விளையாட துவங்கியவள் எக்காரணத்திற்காயும் என்னை விட்டு விலகவில்லை. நான் வீட்டை விட்டு கிளம்பி "காலனி அணியக்கூட என்னை விடவில்லை; என்னை விட்டு அகலவில்லை; காலனியை அப்படியே தூக்கி மகிழ்வுந்தில் வைக்க சொல்லிவிட்டேன். வெளியே வந்து, என்னவளிடன் என் மகளை கொடுக்கையில் ஆரம்பமானது அவளின் அழுகை! அப்பா, என்னை விட்டு போகாதே!! "என்னையும் போர்ச்சுகலுக்கு கூட்டிக்கிட்டு போ" என்று தொடர்ந்து அழுகையுடன் கூறிக்கொண்டே இருந்தால். அப்போது நான் திடமாய் இருந்தேன் எனினும், இங்கே வார்த்தையை அதை விவரிக்கும் போது, என் கண்கள் "ஈரமாகின்றன". ஒரு வழியாய், என் மகளை என்னவளிடம் "விடாப்பிடியாய்" கொடுத்துவிட்டு திரும்பிக் கூட பார்க்காமல், அங்கிருந்து கிளம்பிவிட்டேன். இது அநேகமாய், எல்லாக் குழங்கைகளும் செய்வது தான் என்று எனக்கு தெரியும்! ஆனால், அதை அப்படி பொதுவாய் பார்ப்பது தவிர்த்து, என் மகளின் நிலையிலிருந்து அதை யோசிக்க ஆரம்பித்தேன். அவளின், இந்த இழப்பை நான் எப்படி, எவ்வாறு ஈடு செய்திட முடியும்???
ஒரு வழியாய், அங்கிருந்து கிளம்பி ஒவ்வொரு மணித்துளிகளையும் கடினப்பட்டு கடத்தி விமானத்தில் அமர்ந்தும் விட்டேன். என் மகளின் சோகம் தந்த சுமையிலும், அயர்ச்சியிலும் எப்போதும் அல்லாது விமானத்தில் சில மணி நேரங்கள் ஆழ்ந்து உறங்கிவிட்டேன். விமானப்பயணத்தின் போது ஒரு "ஆங்கில வார இதழில்" ஒரு கூற்றை காண நேர்ந்தது! "கலிபோர்னியா" மாகாணத்தில் ஓர் இதழில் வந்த செய்தியை குறிப்பிட பட்டிருந்தது; அதன் சாரம் - "உங்கள் குழந்தை நல்ல விதமாய் உருவாக, நீங்கள் அவர்களுடன் செலவிடும் நேரத்தை இரட்டிப்பாக்க வேண்டும்; மேலும் அவர்களுக்காய் செலவிடும் பணத்தை பாதியாய் குறைக்கவேண்டும்" - என்பதே!! இதை எவர் முதலில், எங்கு கூறினார் என்பது தெரியவில்லை; ஆனால், எனக்காய் கூறப்பட்டதாய் உணர்ந்தேன்; இல்லையேல், அந்த செய்தியை அந்த தருணத்தில் நான் ஏன் படிக்க நேர்ந்தது? வெளிநாட்டில் இருக்கும் பலர் போல், நானும் என் மகளுக்கு தேவையானதை எல்லாம் வாங்கி கொடுக்கிறேன் - அளவுக்கு அதிகமாயும் கூட!!!. ஆனால், என் மகளுடன் என்னால் நேரம் செலவிட முடியவில்லையே என்ற ஏக்கத்தை எப்படி நிறைவு செய்வது; அதே ஏக்கம் தானே என் மகளுக்கும் இருக்கும்; பின் எப்படி, அதை நான் எல்லாக் குழந்தையும் அப்படித் தான் அழும் என்று பொதுப்படையாய் எண்ணி உதறிவிட முடியும்? அதனால், தான் அவளின் நிலையிலிருந்து அவளின் இழப்பை யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்; அதன் விளைவு தான், இத்தலையங்கத்தின் பிறப்பும். ஆழ்ந்து யோசித்ததில் எனக்குள் தோன்றிய உறுதியான முடிவு - எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில்…
என் மகளுடன் சேர்ந்து இருக்கவேண்டும் என்பதே!!!
பின்குறிப்பு: "பெயரை எப்படி வைத்தல்/எழுதுதல் வேண்டும்" என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது போல், பல தடைகளை தாண்டி என் மகள் பள்ளியில் சேர்ந்து இப்போது ஒரு மாத காலமாய் பள்ளி சென்று கொண்டிருக்கிறாள். எந்த மாற்றமும் இன்றி அவள் பெயர் எங்கள் விருப்பப்படியே "விழியமுதினி வேனில் இளங்கோவன்" என்றே பள்ளி ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி, நான் முன்பே குறிப்பிட்டது போல் - இது போன்ற தடைகளை சந்திப்பவருக்கு - உதவியாய் இருக்கும் என்று நம்புகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக