ஞாயிறு, மே 26, 2013

சில நிகழ்வுகளும், பல புரிதல்களும்...



        நீண்ட இடைவெளிக்கு பின், வலைப்பதிவை தொடர ஆரம்பித்திருக்கிறேன்! இந்தியா அல்லது இந்தியாவுக்கு அருகில் பணியிடத்தை மாற்றவேண்டும் என்ற கனவு நிறைவேறி 2 மாதங்களுக்கு முன் "அபு-தாபியில்" பணிக்கு சேர்ந்திருக்கிறேன். இடையில், விருப்பப்பட்டே எடுத்த இரண்டரை மாத கால இடைவெளியில் "என்-மகளுடனும்", என் குடும்பத்துடனும் இருந்தேன். 4 தினங்களுக்கு முன்பு கூட என்னவளும், என்-மகளும் 2 வார காலம் இங்கு என்னுடன் இருந்துவிட்டு சென்றனர்; எனினும், மேற்கூறியவண்ணம் எப்போது "நீண்ட-காலத்திற்கு" உடனிருக்கப்போகிறேன் என்பது  தெரியவில்லை; ஆனால்/அதனால், அவளுடன் இருந்த ஒவ்வொரு மணித்துளியையும் "முழுமையாய்" அனுபவித்தேன். அவளின் எல்லா (செய்கை/சேட்டை)களையும் பொருத்து, அவளின் குழந்தைத்தனத்தை இரசித்தேன்; என்னுடைய தமையன் மற்றும் தமக்கை பிள்ளைகளை எத்தனையோ சிறு-விசயத்திகாய் அடித்திருக்கிறேன். ஆனால், அதைவிட எத்தனை பெரிய செய்கைகள் செய்தும் என்-மகளை அடிக்கவில்லை - கண்டிப்பாய், இது என் மகள்; என் இரத்தம் என்பதால்(மட்டும்) வந்தது அல்ல! அகவை மட்டுமல்லாது என்னுடைய அனுபவமும், அறிவும் கூடுவதால் வந்த மாற்றம் என்பது தெளிவாய் தெரிகிறது. எந்த தயக்கமும் இல்லாது, என் தமையன் மற்றும் தமக்கையிடம் நான் அவர்களின் பிள்ளைகள அடித்த ஒவ்வொரு நிகழ்வுக்கும் என்னை மன்னிக்க வேண்டினேன்; இன்னமும் வேண்டுகிறேன் - ஆம்! அந்த நிகழ்வுகளை அவர்கள் எப்படி பொறுத்தார்கள்???

        இந்த இடைவெளியில் - மீண்டும் ஓர் முறை எனக்கு பிடிக்காத அந்த "பணம் எனும் பொருள்" என்னை பல விதத்தில் சோதனை செய்தது. கண்டிப்பாக ஒருமாதம் "வேலையும், சம்பளமும்" இன்றி இருக்கப்போகிறேன் என்பது எனக்கு தெளிவாய் தெரியும்; அதை அறிந்தே தான் என்னுடைய முந்தைய வேலையை முன்கூட்டியே "இராஜிநாமா" செய்துவிட்டு வந்தேன். அந்த ஒரு மாதத்தை என் மகளுடன் கழிக்கவே அவ்வாறு செய்தேன்; ஆனால், புதிய பணிக்கு சேர்வதற்கான ஆவணங்கள் அனைத்தும் தயாராக மேலும் ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டது. கையில் இருந்த பணம் அனைத்தும் கரைந்து - இடையில் ஓர் நாள் என்னிடம் சரியாக இருந்தது "ஆயிரத்து ஐந்நூறு" உரூபாய். என் மகள் காலால்-உந்தி தள்ளும் வாகனம் (scooter skatting) வேண்டும் என்றாள்! என்னவளை கேட்டபோது - எப்படியும் ஆயிரம் உருபாய்-க்கு மேல் இருக்கும் என்றாள்!! அப்போது - என்னுடைய இதயம் ஓர்கணம் நின்றவாறு உணர்ந்தேன்; என் மகளுக்கு (அல்லது வேறு எவருக்கும் கூட) எந்த செலவு செய்யவும் தயங்காதவன், அந்த கணம் "தயங்கி, மயங்கி" நின்றேன். என் மகளிடம் பிறகு வாங்கலாம் என்று சமாதானம் செய்யலாம் என்று பார்த்தால் அவள் விடுவதாய் இல்லை; சரி-என்று, என்னவளும் நானும் அவளை அழைத்துக்கொண்டு கடைக்கு சென்றால் அதன் விலை சரியாய் 1199 உரூபாய். எப்போதும், என் மகளுக்கு வேறென்ன வேண்டும் என்று கேட்டு-கேட்டு செய்யும் நான் அன்று அவசர, அவசரமாய் அவளை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினேன்; "வேறெதுவும் கேட்டுவிடுவாளோ" என்ற பயம்!!!

      சரியாய், இந்த நிகழ்வு நடந்து இரண்டு நாட்கள் கழித்து எனக்கு வரவேண்டிய ஓர் கணிசமான தொகை வந்தது! அதன் பின் நிறைய "வட்டிக்கு-பணம்" கூட வாங்கினேன்; என் மகளுக்கு தேவையானது அனைத்தும் செய்தேன். ஆனால், அந்த நிகழ்வு மட்டும் இன்னமும் என்னை விட்டு அகலவில்லை!!! என்னுடைய மறு-தமையன்/மறு-தந்தையின் மகிழ்வுந்தில்தான் பெரும்பாலும் சமீபத்திய ஆண்டுகளில் பயணம் செய்வேன். என்னுடைய செலவுகளை குறைக்கவேண்டும் என்று ஓர் நாள் பேருந்தில் பயணம் செய்ய தயாரானேன்; ஆனால், என் தமையனின் மனம் அதற்கு இடம் தரவில்லை. நான் வேண்டாம் என்று தடுத்தும், எனக்கு தெரியாது நான் புறப்படும் நேரம் "டாக்ஸி"யை அனுப்பிவைத்து விட்டார். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், நான் சென்ற தூரத்தை காட்டிலும் - அதிக தூரமான பயணத்தை தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் பேருந்தில் பயணம் செய்யும் என் தமையன் - நான் அவ்வாறு செல்லக்கூடாது என்பதற்காய் அப்படி செய்தார் என்பது தான்! அவரின் மேல் எனக்கு இருந்த அன்பின்-எல்லை மேலும் விரிந்தது; எனக்கு "டாக்ஸி" அமைத்துக்கொடுத்தார் என்பதற்காய் (மட்டும்)அல்ல!!! அவருக்கும், அவர் குடும்பத்திற்கும் கூட அப்படி செய்துகொள்ளாத அவர் எனக்காய் செய்த அந்த நல்ல எண்ணத்திற்காய். எனினும், மேற்கொண்டு பலமுறை பேருந்தில் தான் பயணம் செய்தேன் - ஒவ்வொரு பயணமும் மிகப்பெரிய அனுபவம் மட்டுமல்ல; பலதும் புரிந்தது! இந்த அனுபத்தை மட்டும்கூட ஓர் தலையங்கமாய் எழுதலாம்.

       இம்மாதிரி, பல நிகழ்வுகள் என்னிடம் பணம் இல்லை என்பதற்காய் நிகழ்ந்தது; ஆனால், ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு "பெருத்த மனவலியை" கொடுப்பினும் - பல புரிதல்கள் எனக்கு தோன்றின. வெகு-நிச்சயமாய், என் மகளுக்கு "ஓர் பொருளை" நான் தயங்கி வாங்கிக்கொடுத்த அந்த கணம் என்னை பலமுறை-என்னுள் புரட்டிப்போட்டது. என் நிலையில் இருக்கும் ஓர் தகப்பன் என் மகளின் வயதுக்கு என்ன சேமித்து வைத்திருக்க எண்ணுவானோ - அதற்கு சற்றும் குறைவில்லாது நான் அவளுக்காய் சேமித்து வைத்திருப்பினும், ஏன் எனக்கு அந்த சூழல் வந்தது? இனி அவ்வாறு வராது இருக்க என்ன செய்யவேண்டும் என்று எண்ணத் துவங்கினேன். "இனியாவது, சற்று சுயநலமாய்" இருக்க பழகவேண்டும் என்பது புரிந்தது; எனக்காய், எனக்கே-எனக்கு மட்டுமாய் என்று நான் சேமிக்க ஆரம்பிக்க/பழக வேண்டும் என்பது புரிந்தது. இதிலென்ன பெரிய விஷயம்? பலரும் அப்படித்தானே செய்கிறார்கள் எனலாம்; அது உண்மையும் தான்! ஆனால், "பணம் எனும் அந்த பொருள்" மேல் எனக்கு எந்த நாட்டமும் இல்லை. பலரும் எனக்கு உதித்த சிந்தனை போல்(தான்) இருக்கிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், எனக்கு அந்த சிந்தனை வந்தது எனக்கு நேர்ந்த நிகழ்வுகளால்! அந்த நிகழ்வுகள் தந்த புரிதல்களால்!! அதற்கு நான் இழந்தது அதிகம்; சந்தித்த அவமானங்களும் அதிகம்; அதனால் தான், இந்த எண்ணத்தை அழுந்த சொல்கிறேன்; இது வெகு நிச்சயமாய், பலருக்கும் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாய் நம்புகிறேன்.

      இந்த வயதில், என் மகளுக்கு அந்த நிகழ்வும் - அதன் விளைவுகளும் புரிந்திருக்க வாய்ப்பில்லை; ஆனால், அவள் வளர்ந்த பின் - இம்மாதிரி ஓர் சூழல் "மீண்டும்" நேரக்கூடாது என்பதில் நான் உறுதியாய் இருக்கிறேன். பல மாதங்கள், என்னப்பனின் "சம்பள-உரையை" அப்படியே வாங்கிசென்றிருக்கிறேன்; ஒரு முறை கூட அவர் முகம் சுளித்ததில்லை! என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையின் விளைவாய் கூட இருக்கலாம்!! அதை இப்போது நான் மகளிடம் காட்டவேண்டும் அல்லவா? அதற்கு நான் அவரைக்காட்டிலும் அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் அல்லவா?? அதற்காகத் தான் மேற்கூறிய-வண்ணம், ஓர்-எண்ணம் வந்தது! இதில் விந்தையான விஷயம் என்னவெனில் - என்ன தான் நான் எனக்கே, எனக்கென்று சேமிக்க எண்ணிடினும் - அந்த சேமிப்பும் என் மகளுக்கும்; என் குடும்பத்தார்க்கும் தான் என்பதே பேருண்மை. ஆழ்ந்து நோக்கிடின், இந்த சுயநலத்திலும் ஓர் பொதுநலம் இருப்பது புரியும். இதே எண்ணத்துடன் தான் பெரும்பாலும் அனைத்து தகப்பன்களும் இருக்கிறார்கள்.  என்-மகளுடன் நான் கழித்த அந்த நாட்களை எண்ணிடும்போடு எனக்கு நேர்ந்த நிகழ்வுகளும், அவமானங்களும் "பெரிதில்லை எனினும், நான் முன்பே வீடு வாங்குவது குறித்து எழுதிய தலையங்கத்தில் குறிப்பிட்டது போல், மீண்டும் ஓர் முறை இந்த "பணமெனும் பொருள்" - எனக்கு அதில் விருப்பும், நாட்டமும் இல்லை எனினும் - என்னை "கடின சோதனைக்கு" உள்ளாக்கி இன்னுமொரு பெரிய புரிதலை உருவாக்கியிருப்பதை அழுத்தமுடன் பதிவு-செய்து இத்தலையங்கத்தை முடிக்கிறேன்.

நிகழ்வுகள் எப்படியாயினும், அவைகளின் மூலம் உருவாகும் புரிதல்களே முக்கியம்!!!

பின்குறிப்பு: அபுதாபியில் பணிமாற்றமடைந்து 2 மாதங்கள் ஆகிடினும், 1 மாதத்திற்கு முன்பே இத்தலையங்கத்தை எழுதி முடித்தும், இப்போது தான் வெளியிட முடிந்தது. முக்கிய காரணம், 4 நாட்களுக்கு முன்பு கூட என்-மகள் என்னுடன் இருந்துவிட்டு சென்றிடினும், அவளை பிரிந்திருக்கும் இந்த சூழலில் இருந்து நான் மீளவில்லை என்பதே! கூடவே, இன்னமும் நான் இந்த புதிய இடத்தில் முழுதுமாய் "செட்டில்" ஆகவில்லை என்பதே! என்ன விந்தை? "settle" என்ற வார்த்தைக்கு, சரியான "தமிழ்ச்சொல்" கிடைக்கவில்லையே???!!! என் தந்தையிடம் கூட விவாதித்தேன் - அவரும் அதற்கு நேரிடையான ஓர்சொல் இருப்பதாய் தெரியவில்லை என்றார்! இருப்பினும் நாம் அனைவரும் இந்த சொல்லாய் அடிக்கடி பயன்படுத்துகிறோம் என்பது எவ்வளவு அப்பட்டமான உண்மை??? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக