ஞாயிறு, ஜூன் 16, 2013

அம்மா...




       அம்மா…! இதுவரை எழுதிய தலையங்கம் அனைத்திற்கும் கருவை உணர்த்தும் வகையில் தலைப்பிட - பல வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளேன்!! பல சமயங்களில், தலைப்பை பற்றி நிறைய (என்னுள்ளே)விவாதித்திருக்கிறேன்; பெரும் சிரமப்பட்டிருக்கிறேன். முதல் முதலாய், ஒரேயொரு வார்த்தையில் ஓர் தலையங்கத்தை மிக-எளிதில் தலைப்பிட்டுள்ளேன்!!! ஆம், நான் எழுத எடுத்திருக்கும் தலையங்கத்தின் கருவை உணர்த்த "அம்மா" என்ற ஒற்றை வார்த்தையை தவிர வேறெதுவும் தேவையில்லை என்று நம்புகிறேன்! "…ஓர் சொல்லில் ஓர் உலகம்; அம்மா! அம்மா!! - உலகெங்கும் ஓர் சொல்லே, அம்மா!!!…" என்ற பாடல்-வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது. எத்தனை பேர் அந்த பாடலை கேட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை! நான் குறைந்தது நூற்றுக்கணக்கான முறை கேட்டிருக்கிறேன். இது மட்டுமல்ல; "அம்மா பாடல்கள்" என்ற பெரிய-தொகுப்பே என்னிடம் உள்ளது - இத்தலைப்பை எழுத ஆரம்பித்த அன்று காலை கூட அந்த தொகுப்பை முழுதும் கேட்டேன் - எப்போதும் போல் எல்லாப் பாடல்களின் எல்லா வரிகளையும் "சத்தமாய்" பாடிக்கொண்டே!! அது தான் அம்மா என்ற சொல்லின் மகிமை!!! வேறெந்த உறவையும்/அந்த-உறவை சார்ந்த விசயங்களையும் இத்தனை எளிதாய் "ஓர் வார்த்தையில்" தலைப்பிட்டு உணர்த்திட முடியுமா என்று எனக்கு தெரியவில்லை! ஆனால், வெகு நிச்சயமாய் அம்மா என்ற உறவைப்பற்றி என்ன எழுதிட எத்தனித்தாலும் இவ்வாறு ஓர் வார்த்தையில் சுருக்கிட முடியும் என்று திடமாய் நம்புகிறேன். 

    "என் அம்மாவை, எனக்கு பிடிக்காது" எனும் எவரையும் நான் எந்த விளக்கமும் தேவைப்படாது, அவர்களின் கூற்று தவறு என்று உரைத்திட முடியும். வெகு நிச்சயமாய், அம்மா என்ற அந்த உறவின் மேல் மட்டும் விருப்பு, வெறுப்பு என்ற இரண்டு தேர்வுகளுக்கு இடமே-இல்லை! எப்படி இருப்போம் என்றேதும் தெரியாது நம்மை கருவான-நாள் முதல், நாம் உருவாய் ஆகிட - எல்லாம் செய்த/செய்துகொண்டிருக்கிற அம்மா என்ற உறவை ஒவ்வொருவரும் விரும்பித் தான் ஆகவேண்டும்.  ஏதேனும் சூழ்நிலையால்/சூழ்ச்சியால் அம்மா என்பவள் தவறாக சென்றிடினும் அல்லது தவறாக சித்தரிக்கப்பட்டாலும்… கண்டிப்பாய் அந்த உறவை வெறுக்கிறேன் என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று எண்ணுகிறேன். அம்மாவை விமர்சியுங்கள்; அவளின் செய்கைகளில் உடன்பாடில்லை எனினும், அவளுடன் வாதாடுங்கள்! தவறு என்று புரிய செய்யுங்கள்; ஆனால், அவளைப் பிடிக்காது என்று ஒதுங்கிவிடாதீர்கள்! நமக்காய்/ நமக்கே நமக்காய் எல்லாமும், எப்போதும் செய்திட்ட நம் அம்மாவுக்காய் அதைத்தான் நாம் செய்திடுதல் வேண்டும். நான், என் தாயிடம் எத்தனையோ முறை எத்தனையோ விசயங்களுக்காய் சண்டையிட்டு இருக்கிறேன்; வெகு நிச்சயமாய், எனக்காய்/ என்-மகிழ்ச்சிக்காய் என் அம்மாவிடம் எப்போதும் சண்டையிட்டதில்லை. சிறுவயதில், அறியாமல் அவரை அடித்திருக்கிறேன் என்று கூட ஓர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளேன்; ஆனால், அம்மா என்ற உறவு என்னவென்று எனக்கு எல்லாமும் விள(ங்/க்)கிய பிறகு எப்போதும் அவ்வாறு நடந்ததில்லை. 

       என் மற்ற உறவுகளுக்காய் இப்போது கூட என் அம்மாவிடம் சண்டை போடுவதுண்டு; ஆனாலும், என் அம்மாவை நான் ஒரு போதும் வெறுத்ததில்லை. வாலிபத்-திமிறில் என் அம்மா பற்றி நானே தவறாய் மற்றவரிடம் (மற்ற உறவுகள் சார்ந்த நிகழ்வுகளால்) சொல்ல ஆரம்பித்தபோது - சரியான நேரத்தில் நண்பனாய் கிடைத்தான், நான் எப்போதும் உயர்வாய் குறிப்பிடும் என் நண்பன். எங்கள் உறவின் பலத்திற்கு "அவனின் அம்மா" ஓர் பெரிய வரம்; உரம்.  அதனால் தான், அந்த-அம்மாவை என் இரண்டாம் தாய் என்று சொல்வேன். அவர்கள் இருவரின் உறவைப் பார்த்து வியந்து, சிந்தித்து தான் என் அம்மாவின் மேலிருந்த என் பிணைப்பும்/பாசமும் அதிகமாயிற்று. அந்த அம்மாவை மிகநெருங்கி பழக ஆரம்பித்தபின் எந்த வாதமும் இல்லாது என் அம்மாவை, அப்படியே ஏற்க ஆரம்பித்தேன். அந்த தாய் என்னை எப்போதும் பிரித்து பார்த்ததில்லை - அவரின் ஆரத்தழுவும் குணம் பற்றி முன்பே ஓர் தலையங்கத்தில் விளக்கி இருக்கிறேன். என் நண்பனுக்கு அவன் அம்மாவிடம் இருக்கும் உறவுப்பாசத்தை பொறாமையாய்(கூட) பார்ப்பதுண்டு! இங்கே, அம்மா என்ற உறவை மட்டும் தான் எந்த பிரச்சனையும் இன்றி பகிர்ந்து கொள்ள முடியும் என்று கூறிட தோன்றுகிறது! "உங்க அம்மா, உனக்கு மட்டுமா அம்மாவா இருந்தாங்க? ஊருக்கே அம்மாவை இருந்தாங்க..." என்று எளிதில் கூறிவிட முடியும்!! ஆனால், தந்தை என்ற உறவையோ அல்லது மகள் என்ற உறவையோ அல்லது வேறு எந்த உறவையோ அப்படி எளிதில் கூறிவிட முடியாது!!! அம்மா என்ற உறவுக்கு நாம் கொடுக்கும் அங்கீகாரம் அது!!!!

      "மறந்துவிடாதே, என் அம்மா!!!" என்ற என்-கவிதையை பலரும் படித்திருப்பீர்! அந்த கவிதையையும் தாண்டி அதில் மறைந்திட்ட/மறைத்துவிட்ட உண்மை ஒன்றிருக்கிறது!! என் அம்மா, எத்தனையோ முறை அழைத்தும் நான் இருக்கும்/இருந்த எந்த வெளிநாட்டிற்கும் இதுவரை வந்ததே இல்லை!!! அதனால், அவர்கள் வராத கோபத்தால்/ஆதங்கத்தால் அவர்களை பலமுறை சாடியிருக்கிறேன். அந்த கோபமும், வருத்தமும் இன்னமும் எனக்கு இருக்கிறது. அவர் எனக்கு தெரிந்து பெங்களூர் சென்றிருக்கிறார்; திருப்பதி சென்றிருக்கிறார்; வேறு எந்த மாநிலமும் சென்றதில்லை! ஏன், தமிழகத்தில் காணாத நகரங்களே பலவுண்டு. 16 வயதில் திருமணம் நடந்து ஓர் சிறிய கிராமத்தில் இருந்து - அதைவிட "சற்று பெரிதான ஓர் சிறிய-கிராமத்தில்" வாழ்க்கையை ஆரம்பித்தவர். அவருக்கு, இரண்டாவது கிராமம்(தான்) இரண்டாவது உலகம்! அவரை எப்படியாவது இம்மாதிரி இடங்களுக்கு கூட்டிவந்து காண்பிக்கவேண்டும் என்று எவ்வளவோ முயன்றும் (என் மகள் பிறந்த போதும் கூட) இயலாமல் போய்விட்டது. ஆனாலும், அந்த எல்லா கோபத்தையும் தாண்டி என்னுள் நானே அவர் இங்கு வந்தால் என்னென்ன செய்திருப்பார் - நான் எப்படி, எப்படி அவரை கடிந்துகொண்டிருப்பேன் என்று என்னுள்-எழுந்திட்ட கற்பனை-காட்சிகளின் தொகுப்பு அது! அவர் "காலனி" கூட அணிவதில்லை; பல ஆண்டுகளுக்கு முன்பே அதை அணிவதை தவிர்த்துவிட்டார்;  அப்படிப்பட்ட அவரின் செயல்கள் எப்படி இருக்கும் என்ற கற்பனை_கவிதை - அவர் மீதிருந்த அன்பினால் விளைந்தது!

     இங்கே இன்னுமொன்றை கூற கடமைப்பட்டிருக்கிறேன்; அது நாம், நம் அம்மாவை நேசிப்பது/மதிப்பது போல் மற்றவர் அம்மாவையும் - நிகராய் நடத்திடுதல் வேண்டும். நான், பெரும்பாலும் வேறொருவரின் அம்மாவை தவறாய் விமர்சிப்பது இல்லை. ஆனால், சூழல் காரணமாய் - என்னுடைய பிரச்சனைகள் காரணமாய் - ஓர்சமயத்தில் என் "மரு-தாயை" மற்றவரிடம் தவறாய் விமர்சித்து விட்டேன். அது,  சமீபத்தில் அவருக்கு(ம்) தெரிந்துவிட்டது! அது தெரிந்த பின் அவரால் என்னிடம் இயல்பாய் இருக்கமுடியவில்லை; என்னாலும்தான்!! 2 நாட்கள் கடினப்பட்டு தான் இயல்பானோம்! என் அம்மாவை விமர்சிக்கவே எனக்கு உரிமையில்லை எனும்போது - எனக்கு மனைவி ஆகிவிட்ட காரணத்தால் - அவளின் அம்மாவை எதற்காகவும் விமர்சிக்க எனக்கு எந்த உரிமையும் இல்லை! விருமாண்டி படத்தில் ஓர் வசனம் வரும்: "மன்னிக்கத் தெரிந்தவன் மனுஷன்; மன்னிப்பு கேட்கத் தெரிந்தவன் பெரிய-மனுஷன்..." என்று! தவறு என்று தெரிந்துவிட்டால் - மன்னிப்பு கோர நான் தயங்கியதே இல்லை என்பதை ஓர் தலையங்கத்தில் கூட வெளிப்படுத்தி இருந்தேன். என் செயலை எந்த காரணம் கூறியும் நியாயப்படுத்த விரும்பவில்லை - அவர்களிடம் மானசீகமாய் மன்னிப்பு கோருகிறேன்!!! இப்போது புரிகிறதா! ஆரம்பத்தில் சொன்னது எத்தனை உண்மை என்று?! இத்தலையங்கத்தில் நான் பெரிதாய் எந்த செயலையும்/நிகழ்ச்சியையும் எடுத்துக் கொள்ளவில்லை! ஆனால், "அம்மா" என்ற ஓர் வார்த்தை இவ்வளவு எழுத வைத்துவிட்டது; இன்னமும் எழுதமுடியும் - ஆனால், அது அவசியமில்லை. ஏனெனில்...

"…ஓர் சொல்லில் ஓர் உலகம்; அம்மா! அம்மா!! - 
உலகெங்கும் ஓர் சொல்லே, அம்மா!!!…"

குறை - சொல்லிலா, பொருளிலா???



காதலை, கவிதையாய்;
காமமும் - கலந்திட்டு!
கன்னியவளிடம் கொடுத்தேன்!!
"கா(ளி/ளை)யாய்-சீறிடுவாளோ?" என்றஞ்சி;
கண்ணைக்கூட அசைக்காது;
காத்திருந்தேன் - பதிலுக்காய்!!!

கண்ணியவளும், கம்பீரமாய்!
கண்ணை அசைக்காது;
கூறிட்டாள் - "ஒத்துவராதென்று"!!
கதறி-அழக்கூட நேரமின்றி;
கேட்டேன் கேள்வியொன்றை;
"குறையேதும்" உண்டோவேன்று!!!

குறை-சொல்லிலாலா, பொருளிலா?
கேள்வியின் - கருப்பொருளை;
கூடுதலாய், விளக்கிட்டேன்!
காலதாமதமின்றி சொல்லிட்டாள்;
குறை-என் பொருளிலென்று!!
குறையா? பொருளிலா??

கேள்வியின்-க(ண/ன)ம் நீண்டது!
குறையேதும் இல்லையே-என்;
கவிதையில்! என்றேன்;
குறை-கவிதையில் அல்லவென்றாள்!!
கண்ணை-திறக்கவே முடியாது;
கண்ணயர்ந்து நின்றேன்!!!

குறை-பின் எதிலில்?
கேள்வி-எழுந்தது; என்னுள்ளே!
குறையிருப்பது - இதுவென்று;
கண்ணுயர்த்தி - கூறிட்டாள்!!
"காரும்; பங்களாவும்"
குறைகிறது என்றாள்!!!

காதலும் - காமமும்;
கவிதையும்(கூட) அழிந்தது!
குறை - "இப்"பொருளிலா?
காதலின் - இல்லக்கணம்;
"கிடக்கட்டும்"!! - அடிப்படை;
"கூடவா" மறந்துபோனது???

குறை-என்னவென்று புரிந்தது!
காதலில் - காமத்தில்;
கவிதையில்(கூட) அல்ல!!
"காதலியவள்" - குறையென்று;
கண்ணை -  மட்டுமல்ல;
கழுத்தையும்  உயர்த்தினேன்!!!

கணமும்; தாமதிக்காது!
கன்னியவளுக்கு - விடைசொல்லி;
கண்ணியமாய் - விலகிட்டேன்!!
காதலில் - காமத்தில்;
கவிதையில்(கூட) - எப்போதும்;
குறை-வர வாய்ப்பேயில்லை!!!

மழை - வெறுப்பும், வரவேற்பும்...


"சாம்பியன்ஸ்-ட்ராபி" பார்க்க;
மழையே! "எப்போ-நிற்பாய்?" -
விரக்தியில்; "இரசிகர்கள்"!!
"சாண்-வயிறு" நிர(ம்/ப்)ப;
மழையே! "எப்போ-வருவாய்?" -
இறக்கத்தில்; "விவசாயிகள்"!!!

ஞாயிறு, ஜூன் 09, 2013

எத்தனை குழந்தைகள் வேண்டும்???



      மீண்டும் ஓர் முறை "நீயா நானா" விவாதித்த தலைப்பின் அடிப்படையில் இந்த தலையங்கத்தை எழுதி இருக்கிறேன். சமீபத்தில் - ஒரு குழந்தை போதும் என்று ஓர் பிரிவினரும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் வேண்டும் என்றோர் பிரிவினரும் - வாதாடும் நிகழ்ச்சியை (05.05.2013)  கண்டேன். ஓர் குழந்தை வேண்டும் என்றவரில் பெரும்பான்மையோர் கூறியது "பொருளாதார நெருக்கடி" என்பது தான் - இது என்னளவில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. சிலர் உடல்நிலை சரியில்லை என்ற வாதத்தை வைத்தனர் - இது உண்மையான காரணியாய் இருக்கும் நிலையில், மருத்துவமும் ஏதும் செய்யமுடியாது எனும்போது கண்டிப்பாக மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளக்கூடியதே!!! முதல் குழந்தையே பிறக்கவில்லை எனின் - அவர்கள் எந்த மருத்துவத்தையும் எதிர்கொண்டு குழந்தை பெற்றிட தயாராயிருப்பர் தானே?! அதனால் தான், அப்படி சொன்னேன்!! யாராவது ஒருவர் ஒரு-குழந்தை மட்டும் இருந்து - அந்த குழந்தை "ஏதேனும் ஓர் காரணத்தால் இறந்துவிட்டால்" என்ற கோணத்தில் பேசுவர் என்று எதிர்பார்த்து வெறும் ஏமாற்றமே மிஞ்சியது! ஆனால், இறுதியில் சிறப்பு விருந்திர். திரு மோகன் அவர்கள் இது பற்றி ஆழ்ந்து பேசினார் - முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் "உயிரியல் முன்னோக்கு (Biological Perspective)" என்ற அடிப்படையில் விளக்கினார்; எனக்கு அந்த அறிவியல் சார்ந்து போதிய அறிவில்லை எனினும் - அதன் அடிப்படை தெளிவாய் புரிந்தது; மேலும் எனக்கு அது பெருத்த அதிர்ச்சியாய், அதிசயமாய் தெரிந்தது; அதை கீழே சுருங்க விளக்கியுள்ளேன்.

     அவர் முதலில் கூறியது ஓர் குழந்தை என்பது DEATH-WISH என்று! அதாவது, மனித இனத்தை அழிக்க முனையும் விஷயம் என்று கூறினார். "தசம செயல்முறை (Decimation Process)" அடிப்படையில், பிறக்கும் 10 குழந்தைகளில் 9 குழந்தைகள் இறப்பதற்காகவே பிறக்கின்றனவாம்! அதாவது ஒரேயொரு குழந்தைக்கு(மட்டும்) தான், அனைத்து விதமான எதிர்ப்பு சக்தி மற்றும் உயரிய உயிரணுக்கள்  இருக்குமாம். இப்போதைய விஞ்ஞானம் மற்றும் மருத்துவ வளர்ச்சி காரணமாய் தான் அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகளை உயிர்த்திருக்க செய்திருக்கிறார்களாம்! அதாவது, இறப்பு சதவிகிதம் குறைக்கப்பட்டிருக்கிறதாம்! ஏதேனும் ஓர் சூழலால், இந்த இறப்பு விகிதம் சிறிது உயர்ந்தாலும் கூட அது மனித குலத்திற்கே மிகப்பெரிய கேடாகுமாம்! அதனால், "சரியான வித்து கொண்ட குழந்தை" என்று உருவாகும்போது வேண்டுமானால், ஓர் குழந்தை என்பது சரியாய் வருமாம். "சென்டினல்" என்ற அந்தமான் & நிகோபார் தீவுகளில் ஒன்றான ஓர் தீவில் ஓர் இனத்தையே தனியாக வைத்து மருத்துவ-ஆராய்ச்சி செய்து வருகின்றனராம்! எவரும் அங்கு செல்லக்கூட அனுமதி கிடையாதாம்!! அப்படி இருக்கையில், பொருளாதாரம் மற்றும் அது போன்ற ஆதா(ர/ய)மற்ற காரணிகளால் - ஓர் குழந்தை போதும் என்று வரையறுப்பது எப்படி நியாயமாகும்? அது மனித இனத்திற்கு நாம் செய்யும் துரோகமாய் ஆகிவிடாதா?? என்னுடைய பல முந்தைய தலைமுறைகளின் ஆணிவேர் நான்! அதை தொடர்ந்திட எனக்கு 2 குழந்தைகளாவது வேண்டும் - என்று தானே நாம் யோசிக்கவேண்டும்!!

       மேலும், அப்படி நாம் ஓர் குழந்தை என்று வரையறுத்து - ஏதேனும் ஓர் சூழ்நிலையில் அந்த குழந்தை இறந்துவிட்டால்?! அதிலும் பெற்றோர்களுக்கு 50-ஐ தாண்டிய அகவை ஆகும்போது அவ்வாறு நேர்ந்திடின்?? நாங்கள் 3 பிள்ளைகள் இருந்தும் - "ஒன்றரை" வயதில் இறந்துவிட்ட தன் மூத்த குழந்தையை (நாங்கள் பார்த்திடாத எங்கள் அண்ணனை - அவரின் பெயர் "செம்பியன்") எண்ணி இன்றும்கூட கண்ணீர் வடிக்கின்றார் - என் தாய்! நாங்களும் இல்லை என்ற நிலையிருந்திருப்பின் என் பெற்றோரின் நிலை என்னவாய் இருந்திருக்கும்? சமீபத்தில் நான் இந்தியாவில் விடுப்பில் இருந்த சமயம் 30 அகவை கடந்த என் நண்பனின் இளைய-தம்பி விபத்தில் இறந்துவிட்டான் - மிகவும் திடமானவான் தான்! அந்த பெற்றோர் அழுதது இன்னும் நெஞ்சில் பசுமையாய் நினைவிருக்கிறது!! எதுவும் நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையில், ஒன்று மட்டும் போதும் என்று எப்படி வரையறுக்கமுடியும்? மேலும், திரு. மோகன் அவர்கள் கூறிய இன்னுமொன்றை நினைவு கூறுகிறேன்: ஒரு பெண்ணால் இத்தனை குழந்தைகள் தான் பெறமுடியும் என்ற எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறதாம் - இயற்கையாய்!!! அது ஒர்சூழலில் ஒன்றேயொன்று அல்லது இல்லவேயில்லை என்ற இலக்கை தானே அடையுமாம்! அது மனித குளம் அழிவதற்கான ஆரம்பமாய் கூட இருக்கலாம்!! அப்படி இருக்கையில், இயற்கையை எதிர்த்து ஒரேயொரு குழந்தை - எத்தனை உயரிய வித்து என்பதை அறிந்திடாது - என்று, நாமே அப்படி வரையறுப்பது எப்படி நியாயமாகும்?

        சென்ற தலைமுறையினர் 7, 8 என பிள்ளைகள் பெற்றது மேற்கூறிய "உயிர் பொறிமுறையனை" நிகழ்வால் கூட இருக்கலாம்! இப்போது, மருத்துவ வசதி பல உள்ளதால் அவ்வளவு குழந்தைகள் தேவையில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை!! ஆனால், இன்னமும் இயற்கையாய் தரமான-வித்துள்ள குழந்தை அமையாத நிலையில், 2 குழந்தைகளாவது வேண்டும் என்பதே ஏற்றுக்கொள்ளக் கூடியதாய் இருக்கமுடியும்!!! அந்த நிகழ்ச்சியில் ஒர்குழந்தை போதுமென்று பேசியவர்களில் பெரும்பான்மையோனோர் பெண்கள்; இதில் அவர்களின் கணவன்களுக்கு முழு சம்மதம் இருக்கிறதா என்று தெரியவில்லை! பலபெண்கள் - தங்களுக்கு மட்டும் தான் குழந்தை பெறுவதற்கு இயல்பு இருக்கிறது; தங்கள் கணவனை பழிவாங்க இது ஓர் வாய்ப்பு என்ற அடிப்படையில் கூட - மறுக்கின்றனர். குழந்தை பெரும் இயல்பு இல்லாதது ஆண்கள் தவறல்ல!! அல்லது அவர்கள் அதிலிருந்து விலகிடவில்லை!!! தாயுமானவன் என்ற புதுக்கவிதை கூட இம்மாதிரி ஆதங்கத்தின் மறு-வெளிப்பாடே!!!! என்றோ, பெண்கள் என்பவர்கள் குழந்தைப் பெறுவதற்கு தான் என்று நடந்திட்ட கொடுமைகளின் "எதிர்-வினையாய்" இதைப் பார்க்க தோன்றுகிறது. இம்மாதிரி ஓர் எதிர்வினை நிகழ்கிறது என்பதை நான் திடமாய் நம்புகிறேன்; அதனால் தான் இதை தொண்டர்ந்து வலியுறுத்திக்கொண்டே வருகிறேன். அது இன்னும் பரவலாய் தெரியவில்லை அல்லது தெரிந்தாதாய் காட்டிக்கொள்ள பலரும் விரும்பவில்லை என்பதே இப்போதைய நிலைமை என்று எண்ணுகிறேன்.

     என்னப்பன் எங்கள் மூவரையும் சிரமப்பட்டு வளர்த்ததாய் எங்களுக்கு நினைவே இல்லை! அவர் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி கடனாளியாய் ஆனார் என்பது உண்மை!! அந்த கடனை அடைக்க வெளிநாடு வந்து - அதை முழு(மன)தாய் செய்துவிட்டு, இப்போது என்-மகள் மற்றும் என்னவளுக்காய் பொருளீட்ட இப்போது இங்கிருக்கிறேன் என்று பலமுறை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். முக்கியமாய், என்-மகளை பிரிந்திருப்பது பெருத்த வேதனை தான். ஆனால், என் மகளுக்கு 3 வயது இருக்கும்போதே நான் இந்த உயர்ந்த நிலையில் இருக்கிறேன்; என்னப்பன் போல் கடனாளியாய் ஆகக்கூடாது என்பதில் மட்டுமல்ல; என்-குழந்தைகளுக்கு எந்த கடன்-சுமையும் கொடுக்கக்கூடாது என்பதிலும் மிகத்தெளிவாய் இருக்கிறேன்; அதற்காய் கடினமாய் உழைக்கிறேன். இதையனைத்தையும் தாண்டி - என்னப்பன் எங்கள் மூவருக்கும் நிலம் கொடுத்திருக்கிறார்; என் தமையனுக்கு வீடும் கொடுத்திருக்கிறார். அவர் சிறிது சிறிதாய் சேர்த்தது! எனக்கு நிலம் கொடுத்தது மட்டுமல்லாது - என் நிலத்தில் - 20 ஆண்டுகள் கழித்து மிகப்பெரிய-பலன் தரும் மரங்களை வளர்த்துள்ளார். இப்போது நாம் செய்யும் தவறு - உடனடியாய் எல்லா சொத்துக்களும் வேண்டும் என்று நினைப்பது! அதுதான் ஓர் குழந்தை போதும் என்ற பொருளாதார-நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது!! என்னப்பன் 3 பிள்ளைகள் பெற்று - எங்களை தாராளமாய் வளர்த்து - இத்தனை சொத்துக்கள் கொடுத்தார் என்றால்; நான் 2 பிள்ளைகளாவது பெற்று அதையே செய்திடுதல் வேண்டாமா?

      வாழ்க்கையை நாம் தொடர்ந்து "ஊக்கமாய்" நடத்திட பொருளாதாரம் மாதிரியான சிக்கல்கள் வேண்டும்! ஒர்குழந்தை மட்டும் இருந்துவிட்டால்; பெற்றவர்கள் நாமும் ஓர் உந்துதல் இல்லாமல், இயந்திரமாய் வாழ்க்கையை வாழ்ந்திடுதல் வேண்டும். என்னுடைய பிரச்சனைகள் தான் என்னை இவ்வலைப்பதிவை ஆரம்பித்திட வைத்தது - தொடர்ந்து எழுதிடவும் செய்கிறது! இது ஒருசிலரையாவது சென்றடைகிறது அல்லவா? இதைவிட, எந்த சொத்து பெரிதாய் ஆகிவிடும்?? மேலும், பெற்றோர்கள் இயந்திரம்-போல் இருக்கும்போது - அந்த ஒர்குழந்தையும் எதிலும் பற்றற்று/ மற்றவர்களுக்கு உரித்தான அங்கீகாரத்தை கொடுக்காது "பகிர்தல்" என்றால் என்னவென்றே தெரியாது வளரும்; ஏனெனில், அவர்களுக்கு எல்லாமும் கிடைத்துவிடும். அவர்களுக்கு தங்கள் மனைவி/ கணவனிடம் கூட பகிர்தலை செய்யத்தெரியாது; பின், எல்லா சொத்துக்களும் இருந்தும் அவர்கள் வாழ்க்கை(யும்) பற்றற்று கடந்திடும்!! பிரச்சனையே வேண்டாம் என்றால் - திருமணமே செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது!!! இதுபோல், பலதும் சொல்லிக்கொண்டே போகலாம் - ஆனால், அது இத்தலையங்கத்தின் நோக்கமல்ல! இவையனைத்தையும் தாண்டி, அந்த ஒரேயொரு குழந்தை ஏதவாது ஓர் சூழலில் - இறந்துவிட்டால், என்ன செய்ய முடியும்? எல்லோரும் இறந்துவிடுவார்கள் என்று வாதிக்கவில்லை! அதேநேரம், எல்லோரும் உயிர்த்திருப்பர் என்றும் உறுதியாய் கூறமுடியாது அல்லவா? எனவே, விஞ்ஞானம் அல்லது மெய்ஞானம் என்று எப்படி பார்த்திடினும்…

ஒரேயொரு குழந்தை எனும் முடிவு மிகவும் தவறானது!!!

பின்குறிப்பு: "என்-மகள்" தனியாய் இருப்பதில்/வளர்வதில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை! என்னவளிடமும் அதை தெளிவுபட கூறியிருக்கிறேன்!! அவள் இப்போதைக்கு அந்த எண்ணமில்லை என்று கூறியிருக்கிறாள்; இத்தலையங்கத்தை என்னவளிடம் வைக்கும் ஓர் பொதுக்கோரிக்கையாய் கூட கருதலாம்!!! இத்தலையங்கம், ஒரேயொரு பெற்றோரை மறு-பரிசீலனிக்க வைத்து - அதனால், "ஒரேயொரு உயிர்" பிறந்திடும் எனின்; அது கண்டிப்பாய் எனக்கு பெருத்த மகிழ்ச்சியே!!!!

அம்மா...



சமயத்தில்...
ஆயிரம் வார்த்தைகள்-கூட;
ஒர்-விளக்கத்தை கொடுப்பதில்லை!
அம்மா… இந்த-ஓர்வார்த்தை;
ஆயிரம் விளக்கத்தை;
அளிக்கும், எச்சமயத்திலும்!!!

விரலும், உறவும்...


விரல்கள் ஐந்தை-போல்;
உறவுகளில் ஏற்றத்தாழ்வு!
உண்டென்போர்; அவையிரண்டும்;
பயனளிப்பது ஒன்றுசேர்வதில்!!
என்பதையும்; உணர்வாரோ???

குழந்தைகளின் எண்ணிக்கை...



பொருளாதாராம் அல்ல!
போராடும் குணமே;
பிள்ளைகளின் எண்ணிக்கையை!!
பிழையின்றி தீர்மானிக்கவேண்டும்!!!

ஞாயிறு, ஜூன் 02, 2013

இவர்களுக்கு(மட்டும்) உருவிலா வழிபாடு எப்படி சாத்தியமாயிற்று???



      மேலிருக்கும் புகைப்படமும்; தலைப்பும், யாரை பற்றி எழுதப்போகிறேன் என்பதை விளக்கியிருக்கும் என்று நம்புகிறேன். ஆம்! கடவுளுக்கு "உருவே" (இன்றுவரை)கொடுக்காது எப்படி நம் "முகம்மதிய சகோதர/ சகோதரிகளால்" ஒருங்கிணைந்து வழிபட முடிகிறது?! உலகில், பெருவாரியான மக்கள் கொண்ட வேறு எந்த மதமும் இவ்வாறு வழிபாடு செய்கின்றனரா என்பது எனக்கு தெரியவில்லை! இவர்களால் மட்டும் இது எப்படி சாத்தியமாயிற்று என்று நான் வியக்க துவங்கி பல ஆண்டுகள் ஆயிற்று!! இதுபற்றி ஓர் தலையங்கம் எழுதவேண்டும் என்று எண்ணி அது தள்ளிக்கொண்டே சென்றது; கடந்த தலையங்கத்தில் குறிப்பிட்டதுபோல், நான் இப்போது அபு-தாபியில் பனி செய்வதால் அவர்களை மிக அருகில் இருந்து "பெரும்பான்மையினராய்" பார்க்க கிடைத்த வாய்ப்பு - வியப்பை அதிகமாக்கியுள்ளது. இந்த சூழல் தான், இத்தலையங்கத்தை இப்போதாவது எழுத என்னை உந்திச்சென்றது; உடனே சாத்தியமும் ஆயிற்று. இங்கு "மாமசூதி (Grand Mosque)" என்றொன்று உள்ளது; இங்கு மட்டுமல்ல - எல்லா அரபு நாடுகளிலும் இதுபோன்று உண்டென அறிந்தேன்! இதை அந்தந்த அரபுநாட்டை சேர்ந்த அரசர்கள் கட்டியிருப்பதாய் அறிந்தேன்; அங்கே என்னவளையும், என்-மகளையும் கூட அழைத்து சென்றிருந்தேன். அதைப் பார்த்த பின் என்னுடைய மேற்கூறிய வியப்பு பன்மடங்கு பெருகியது! என் வியப்பு விரிவடைந்ததற்கு காரணம், அதன் பிரம்மாண்டமான அளவு(மட்டும்) அல்ல!! மாறாய், கீழ்வரும் உவமையும்; அதிலிருக்கும் உண்மையும்!!!

   ஒரு சிறிய "Tube-light"-ஐ பரிசளித்துவிட்டு, நம் கோவில்களில் உபயம் என்று பெயர் (சிலர் புகைப்படங்கள் கூட) பதித்து  தம்பட்டம் அடிப்பவர்கள் மத்தியில் - நாட்டில் எல்லா இடங்களிலும் இந்த நாடுகளை உருவாக்கிய அரசர்கள் புகைப்படங்கள் மற்றும் பெயர் இருக்கையில், இம்மாமசூதியில் மட்டும் பெயரோ/புகைப்படமோ இல்லை! ஒருவேளை, கடவுளுக்கே "உருவில்லை"; நம் உருவம் எங்கே அதற்கு என்று மறுத்திருப்பரோ!!! ஏற்கனவே, அநேக ஆயுதங்களையும் கையில் கொண்டிருந்தும் "சாமி கண்ணைக் குத்திவிடும்" என்று "பேச்சிலும்" பயமுறுத்தி நம்பிக்கையை அதிகரிக்க பல முயற்சிகள் மற்ற மதங்களில் (குறிப்பாய், நம் இந்து மதத்தில்) நடந்துகொண்டிருக்க இவர்களுக்கு எப்படி இது சாத்தியமாயிற்று? நம்பிக்கை என்பதன் உச்சமும், உதாரணமும் இவர்கள் தானோ?? இங்கே, ஒரு சிறு நிகழ்ச்சியை கூறிட விழைகிறேன்: என் பள்ளி நண்பனொருவன் இன்னுமொரு "முகம்மதிய நண்பன்" ஒருவனுடன் ஓர் விவாதத்த்தின் போது "செவுத்த(சுவற்றை)ப் பார்த்து கும்பிடற(வழிபடுகிற) உனக்கே அவ்வளவுன்னா; செலையை(சிலையை)ப் பார்த்து கும்பிடற எனக்கு எவ்வளோ இருக்கும்" என்று கூறினானாம்: அவனின் சமயோகித வசனத்தைக் கேட்டு நான் இரசித்தேன்; இதை என் மிகநெருங்கிய முகம்மதிய-நண்பனிடம் கூட கூறியிருக்கிறேன்; அவனும் அதை இரசித்தான்; ஓர்முறை எங்களுடன் 48 மைல் எங்களுடன் நடந்தே சபரி-மலை வந்தவன் - எங்களின் சோற்று-மூட்டையையும் சுமந்தவாறே! அவனின் பொறுமைக்கும், பெருந்தன்மைக்கும் நிகர் அவன் ஒருவனே!!!   

    மேற்கூறிய வசனத்தை நான் பலமுறை என்னுள் எண்ணி சி(ரி/ந்தி)த்திருக்கிறேன்; என் நண்பர்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறேன். ஆனால், உருவிலா-வழிபாடு என்பதை ஆழ யோசிக்கும் போது - மேற்கூறிய வசனம் எனக்கு வேறொரு உண்மையை உரைத்தது. ஆம்! முகம்மதிய சகோதர/ சகோதரிகளின் ஒருங்கிணைந்த மன-உறுதியை, நம்பிக்கையை அந்த வசனம் பறைசாற்றியதாய் உணர்ந்தேன். பல கடவுள்கள் பலவித ஆயுதங்களுடன் இருக்கும் என் இந்து மதத்தில் - எனக்கு கடவுளின் மீது நம்பிக்கையும்/ மரியாதையும் வருவதற்கு "சாமி, கண்ணைக் குத்திவிடும்" என்பது போன்று பலவிதங்களில் சொல்லி/பயமுறுத்தி வளர்த்தும்; முழுநம்பிக்கை வரவில்லை என்பதே உண்மை! ஒருவேளை, கடவுளுக்கு உருவே இல்லை என்பதால் தான், இது அவர்களுக்கு சாத்தியமாயிற்றோ? இவ்வளவு உருவகங்களை காட்டியும், பயமுறுத்தியும் எனக்கு வராத அந்த நம்பிக்கை; அவர்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று?? ஒருவேளை, ஆரம்பத்தில் அவர்களை மிக-வன்மையாய் கண்டித்து கடவுள் மீது நம்பிக்கை வரவைத்திருப்பரோ? இருந்திருக்கக் கூடும்; இருப்பின், அந்த வன்மை உகந்தது தானே! அதையும் தாண்டி, அதை இன்றுவரை ஒருங்கிணைந்து தொடர்ந்து கொண்டிருக்கும் நம் முகம்மதிய சகோதர/ சகோதரிகள் இன்னமும் உகந்தவர்கள் தானே? ஆம், முழுமையாய்/உண்மையாய் நம்பிக்கை கொண்டு இறைவனிடம் (அல்லது வேறொரு நபரிடமோ) சரணடைந்த பின் - நம்பிக்கையின்மை என்பது வருவதற்கு சாத்தியம் இல்லை தானே?? 

        சரி! இது ஏன், என் இந்து-மதம் உட்பட மற்ற அனைத்து மதத்தினருக்கும் வரவில்லை? ஒருவேளை,   மற்ற அனைவருக்கும் இது வன்மையாய் போதிக்கப்படவில்லையா?? போதித்தவர்களுக்கு பொறுமை போதவில்லையா அல்லது போதிக்கப் பட்டவர்களுக்கு நம்பிக்கை போதவில்லையா??? இந்த நம்பிக்கை இல்லாததால் தான், கடவுள் இப்படித்தான் இருப்பார் என்று உருவகப்படுத்தப்பட்டதா? ஏனெனில், இந்துமதத்தில்(கூட) கடவுள் உருவற்றவர் என்பது இருக்கிறது! அதனால் தான், "தூணும், துரும்பும், சாணமும், சாம்பலும்; இப்படிப் பலவும்..." கடவுள் என்று சொல்லப்பட்டிருக்கிறது!! ஒருவேளை, மற்ற நம்-அனைவருக்கும் உருவிலாத ஒன்றில்(வெறுமையில்) நம்பிக்கை இல்லையா? தெருவில் சென்று கொண்டிருக்கும் போது அல்லது தொலைவில் இருக்கும் கோவிலை நோக்கி கும்பிடுபவரைக் கண்டு நான் சிரித்திருக்கிறேன்; ஏன், என்னப்பன் அவ்வாறு செய்யும் போது கூட நகைத்திருக்கிறேன். இது போன்ற நகைச்சுவை காட்சிகள் திரைப்படங்களில் கூட வந்திருக்கின்றன! ஆனால், இப்போது ஒன்று புரிகிறது; அது என்னப்பன் மற்றும் அது-போல் செய்யும் அனைவரின் நம்பிக்கையை உணர்த்துவதாய் படுகிறது! இதைத்தானே நம் முகம்மதிய சகோதர/சகோதரிகள் செய்கிறார்கள்! மேலிருக்கும் "மக்கா-தொழுகை" புகைப்படத்தை உற்று கவனியுங்கள்! எத்தனை பேர் எத்தனை மைல்-பரப்பளவில் ஒருங்கிணைந்து தொழுகிறார்கள்? இப்போது சொல்லுங்கள்! உருவிலா வழிபாட்டால் தானே, இது சாத்தியம் ஆகியிருக்கவேண்டும்?? 

      இங்கே, ஓர் பேருண்மை என்னவெனில் - கடவுள்-படமே இல்லையெனினும் நான் வெறுமனே நின்று வணங்குவேன்; இப்போது(ம்) கூட, அபு தாபியில் என்-வீட்டில் அப்படித்தான் செய்கிறேன்! அப்படி இருந்து(ம்) நான் ஏன், மேற்கூறிய வண்ணம் என்னப்பன் செயல் கண்டு நகைத்தேன்? இங்கே, இன்னுமொன்று புரிந்தது; உருவிலா-கடவுள் மேல் எனக்கு(ம்) முழுதாய் நம்பிக்கையில்லை என்பதாய் படுகிறது; அதனால் தான் மற்றவரின் நம்பிக்கையை கண்டு நான் நகைத்திருக்கிறேன். இந்த "ஒருங்கிணைந்த" நம்பிக்கையைத்தான் முகம்மதிய சகோதர/சகோதரிகள் மேற்கூறிய புகைப்படம் மூலம் விளக்குகிறார்கள் என்று படுகிறது! ஆம், அதில் அவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல; மற்றவர் நம்பிக்கை மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையும் தெரிகிறது!! அதனால் தான் "ஒருங்கிணைந்து" என்ற வார்த்தையை அழுந்தப்பதிவு செய்திருக்கிறேன். இந்த ஒருங்கிணைந்த நம்பிக்கை இல்லாததால் தான், நமக்கு பல கடவுள்கள் தேவைப்படுவதாய் படுகிறது! அதன் விளைவாய் தான், ஒவ்வொருவரும் ஓர் குறிப்பிட்ட கடவுளை நோக்கி பயணப்பட்டு, பலவகையில் பணமும் செலவு செய்து "ஜருகண்டி, ஜருகண்டி" என்று தள்ளிவிட்டாலும் அந்த "கடவுள்(எனும்) சிலையை" காண உந்துகிறது! அதற்காக பெருவாரியான நேரத்தையும் செலவிட வைக்கிறது; இதைத்தான் வேறொரு கோணத்தில் முன்பொரு தலையங்கத்தில் விளக்கியிருந்தேன். அந்த பார்வை கூட, உருவழிபாட்டில் எனக்கில்லாத உடன்பாட்டின் மறு-வெளிப்பாடே! இப்படிப்பட்ட பல வியப்புகளின் விளைவே, இந்த கேள்வி…


இவர்களுக்கு(மட்டும்) உருவிலா வழிபாடு எப்படி சாத்தியமாயிற்று???

பின்குறிப்பு: விஸ்வரூபம் திரைப்படத்தில் கிருத்துவ பெண்மணி ஒருவர் இந்து-பெண்மணியை "நீங்கள், உங்கள் கடவுளை சிலுவையில் அறைவீர்களா" என்று கேட்பார்! அதற்கு அந்த இந்துப்பென்மணி சிறிது யோசித்துவிட்டு "இல்லை, கடலில் வீசிவிடுவோம்" என்பார். ஒருவேளை, அளவுக்கதிகமான கடவுள்கள் இருப்பதால் தான் கடலில் வீசுகிறோமா? அதைத்தான் கமல், எடுத்துரைக்க எண்ணினாரா?? அல்லது, நம் முகம்மதிய சகோதர/சகோதரிகளின் உருவிலா-வழிபாட்டின் உன்னதத்தை விளக்கிட எண்ணினாரா??? 

கருவும், கடவுளும்...


"கருவில்" அருவம்;
மழலையின் மகிமை!
"கடவுளில்" அருவம்;
மனிதனின் மகிமை!!!

ஒழுக்கம்…



ஒழுக்கத்தின் அளவை;
ஒழுக்கத்தை போதிப்பவர்!
ஒர்முகமாய் வரையறுப்பது;
ஒழுங்கீனம் அன்றோ!!!