ஞாயிறு, ஜூன் 16, 2013

அம்மா...




       அம்மா…! இதுவரை எழுதிய தலையங்கம் அனைத்திற்கும் கருவை உணர்த்தும் வகையில் தலைப்பிட - பல வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளேன்!! பல சமயங்களில், தலைப்பை பற்றி நிறைய (என்னுள்ளே)விவாதித்திருக்கிறேன்; பெரும் சிரமப்பட்டிருக்கிறேன். முதல் முதலாய், ஒரேயொரு வார்த்தையில் ஓர் தலையங்கத்தை மிக-எளிதில் தலைப்பிட்டுள்ளேன்!!! ஆம், நான் எழுத எடுத்திருக்கும் தலையங்கத்தின் கருவை உணர்த்த "அம்மா" என்ற ஒற்றை வார்த்தையை தவிர வேறெதுவும் தேவையில்லை என்று நம்புகிறேன்! "…ஓர் சொல்லில் ஓர் உலகம்; அம்மா! அம்மா!! - உலகெங்கும் ஓர் சொல்லே, அம்மா!!!…" என்ற பாடல்-வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது. எத்தனை பேர் அந்த பாடலை கேட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை! நான் குறைந்தது நூற்றுக்கணக்கான முறை கேட்டிருக்கிறேன். இது மட்டுமல்ல; "அம்மா பாடல்கள்" என்ற பெரிய-தொகுப்பே என்னிடம் உள்ளது - இத்தலைப்பை எழுத ஆரம்பித்த அன்று காலை கூட அந்த தொகுப்பை முழுதும் கேட்டேன் - எப்போதும் போல் எல்லாப் பாடல்களின் எல்லா வரிகளையும் "சத்தமாய்" பாடிக்கொண்டே!! அது தான் அம்மா என்ற சொல்லின் மகிமை!!! வேறெந்த உறவையும்/அந்த-உறவை சார்ந்த விசயங்களையும் இத்தனை எளிதாய் "ஓர் வார்த்தையில்" தலைப்பிட்டு உணர்த்திட முடியுமா என்று எனக்கு தெரியவில்லை! ஆனால், வெகு நிச்சயமாய் அம்மா என்ற உறவைப்பற்றி என்ன எழுதிட எத்தனித்தாலும் இவ்வாறு ஓர் வார்த்தையில் சுருக்கிட முடியும் என்று திடமாய் நம்புகிறேன். 

    "என் அம்மாவை, எனக்கு பிடிக்காது" எனும் எவரையும் நான் எந்த விளக்கமும் தேவைப்படாது, அவர்களின் கூற்று தவறு என்று உரைத்திட முடியும். வெகு நிச்சயமாய், அம்மா என்ற அந்த உறவின் மேல் மட்டும் விருப்பு, வெறுப்பு என்ற இரண்டு தேர்வுகளுக்கு இடமே-இல்லை! எப்படி இருப்போம் என்றேதும் தெரியாது நம்மை கருவான-நாள் முதல், நாம் உருவாய் ஆகிட - எல்லாம் செய்த/செய்துகொண்டிருக்கிற அம்மா என்ற உறவை ஒவ்வொருவரும் விரும்பித் தான் ஆகவேண்டும்.  ஏதேனும் சூழ்நிலையால்/சூழ்ச்சியால் அம்மா என்பவள் தவறாக சென்றிடினும் அல்லது தவறாக சித்தரிக்கப்பட்டாலும்… கண்டிப்பாய் அந்த உறவை வெறுக்கிறேன் என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று எண்ணுகிறேன். அம்மாவை விமர்சியுங்கள்; அவளின் செய்கைகளில் உடன்பாடில்லை எனினும், அவளுடன் வாதாடுங்கள்! தவறு என்று புரிய செய்யுங்கள்; ஆனால், அவளைப் பிடிக்காது என்று ஒதுங்கிவிடாதீர்கள்! நமக்காய்/ நமக்கே நமக்காய் எல்லாமும், எப்போதும் செய்திட்ட நம் அம்மாவுக்காய் அதைத்தான் நாம் செய்திடுதல் வேண்டும். நான், என் தாயிடம் எத்தனையோ முறை எத்தனையோ விசயங்களுக்காய் சண்டையிட்டு இருக்கிறேன்; வெகு நிச்சயமாய், எனக்காய்/ என்-மகிழ்ச்சிக்காய் என் அம்மாவிடம் எப்போதும் சண்டையிட்டதில்லை. சிறுவயதில், அறியாமல் அவரை அடித்திருக்கிறேன் என்று கூட ஓர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளேன்; ஆனால், அம்மா என்ற உறவு என்னவென்று எனக்கு எல்லாமும் விள(ங்/க்)கிய பிறகு எப்போதும் அவ்வாறு நடந்ததில்லை. 

       என் மற்ற உறவுகளுக்காய் இப்போது கூட என் அம்மாவிடம் சண்டை போடுவதுண்டு; ஆனாலும், என் அம்மாவை நான் ஒரு போதும் வெறுத்ததில்லை. வாலிபத்-திமிறில் என் அம்மா பற்றி நானே தவறாய் மற்றவரிடம் (மற்ற உறவுகள் சார்ந்த நிகழ்வுகளால்) சொல்ல ஆரம்பித்தபோது - சரியான நேரத்தில் நண்பனாய் கிடைத்தான், நான் எப்போதும் உயர்வாய் குறிப்பிடும் என் நண்பன். எங்கள் உறவின் பலத்திற்கு "அவனின் அம்மா" ஓர் பெரிய வரம்; உரம்.  அதனால் தான், அந்த-அம்மாவை என் இரண்டாம் தாய் என்று சொல்வேன். அவர்கள் இருவரின் உறவைப் பார்த்து வியந்து, சிந்தித்து தான் என் அம்மாவின் மேலிருந்த என் பிணைப்பும்/பாசமும் அதிகமாயிற்று. அந்த அம்மாவை மிகநெருங்கி பழக ஆரம்பித்தபின் எந்த வாதமும் இல்லாது என் அம்மாவை, அப்படியே ஏற்க ஆரம்பித்தேன். அந்த தாய் என்னை எப்போதும் பிரித்து பார்த்ததில்லை - அவரின் ஆரத்தழுவும் குணம் பற்றி முன்பே ஓர் தலையங்கத்தில் விளக்கி இருக்கிறேன். என் நண்பனுக்கு அவன் அம்மாவிடம் இருக்கும் உறவுப்பாசத்தை பொறாமையாய்(கூட) பார்ப்பதுண்டு! இங்கே, அம்மா என்ற உறவை மட்டும் தான் எந்த பிரச்சனையும் இன்றி பகிர்ந்து கொள்ள முடியும் என்று கூறிட தோன்றுகிறது! "உங்க அம்மா, உனக்கு மட்டுமா அம்மாவா இருந்தாங்க? ஊருக்கே அம்மாவை இருந்தாங்க..." என்று எளிதில் கூறிவிட முடியும்!! ஆனால், தந்தை என்ற உறவையோ அல்லது மகள் என்ற உறவையோ அல்லது வேறு எந்த உறவையோ அப்படி எளிதில் கூறிவிட முடியாது!!! அம்மா என்ற உறவுக்கு நாம் கொடுக்கும் அங்கீகாரம் அது!!!!

      "மறந்துவிடாதே, என் அம்மா!!!" என்ற என்-கவிதையை பலரும் படித்திருப்பீர்! அந்த கவிதையையும் தாண்டி அதில் மறைந்திட்ட/மறைத்துவிட்ட உண்மை ஒன்றிருக்கிறது!! என் அம்மா, எத்தனையோ முறை அழைத்தும் நான் இருக்கும்/இருந்த எந்த வெளிநாட்டிற்கும் இதுவரை வந்ததே இல்லை!!! அதனால், அவர்கள் வராத கோபத்தால்/ஆதங்கத்தால் அவர்களை பலமுறை சாடியிருக்கிறேன். அந்த கோபமும், வருத்தமும் இன்னமும் எனக்கு இருக்கிறது. அவர் எனக்கு தெரிந்து பெங்களூர் சென்றிருக்கிறார்; திருப்பதி சென்றிருக்கிறார்; வேறு எந்த மாநிலமும் சென்றதில்லை! ஏன், தமிழகத்தில் காணாத நகரங்களே பலவுண்டு. 16 வயதில் திருமணம் நடந்து ஓர் சிறிய கிராமத்தில் இருந்து - அதைவிட "சற்று பெரிதான ஓர் சிறிய-கிராமத்தில்" வாழ்க்கையை ஆரம்பித்தவர். அவருக்கு, இரண்டாவது கிராமம்(தான்) இரண்டாவது உலகம்! அவரை எப்படியாவது இம்மாதிரி இடங்களுக்கு கூட்டிவந்து காண்பிக்கவேண்டும் என்று எவ்வளவோ முயன்றும் (என் மகள் பிறந்த போதும் கூட) இயலாமல் போய்விட்டது. ஆனாலும், அந்த எல்லா கோபத்தையும் தாண்டி என்னுள் நானே அவர் இங்கு வந்தால் என்னென்ன செய்திருப்பார் - நான் எப்படி, எப்படி அவரை கடிந்துகொண்டிருப்பேன் என்று என்னுள்-எழுந்திட்ட கற்பனை-காட்சிகளின் தொகுப்பு அது! அவர் "காலனி" கூட அணிவதில்லை; பல ஆண்டுகளுக்கு முன்பே அதை அணிவதை தவிர்த்துவிட்டார்;  அப்படிப்பட்ட அவரின் செயல்கள் எப்படி இருக்கும் என்ற கற்பனை_கவிதை - அவர் மீதிருந்த அன்பினால் விளைந்தது!

     இங்கே இன்னுமொன்றை கூற கடமைப்பட்டிருக்கிறேன்; அது நாம், நம் அம்மாவை நேசிப்பது/மதிப்பது போல் மற்றவர் அம்மாவையும் - நிகராய் நடத்திடுதல் வேண்டும். நான், பெரும்பாலும் வேறொருவரின் அம்மாவை தவறாய் விமர்சிப்பது இல்லை. ஆனால், சூழல் காரணமாய் - என்னுடைய பிரச்சனைகள் காரணமாய் - ஓர்சமயத்தில் என் "மரு-தாயை" மற்றவரிடம் தவறாய் விமர்சித்து விட்டேன். அது,  சமீபத்தில் அவருக்கு(ம்) தெரிந்துவிட்டது! அது தெரிந்த பின் அவரால் என்னிடம் இயல்பாய் இருக்கமுடியவில்லை; என்னாலும்தான்!! 2 நாட்கள் கடினப்பட்டு தான் இயல்பானோம்! என் அம்மாவை விமர்சிக்கவே எனக்கு உரிமையில்லை எனும்போது - எனக்கு மனைவி ஆகிவிட்ட காரணத்தால் - அவளின் அம்மாவை எதற்காகவும் விமர்சிக்க எனக்கு எந்த உரிமையும் இல்லை! விருமாண்டி படத்தில் ஓர் வசனம் வரும்: "மன்னிக்கத் தெரிந்தவன் மனுஷன்; மன்னிப்பு கேட்கத் தெரிந்தவன் பெரிய-மனுஷன்..." என்று! தவறு என்று தெரிந்துவிட்டால் - மன்னிப்பு கோர நான் தயங்கியதே இல்லை என்பதை ஓர் தலையங்கத்தில் கூட வெளிப்படுத்தி இருந்தேன். என் செயலை எந்த காரணம் கூறியும் நியாயப்படுத்த விரும்பவில்லை - அவர்களிடம் மானசீகமாய் மன்னிப்பு கோருகிறேன்!!! இப்போது புரிகிறதா! ஆரம்பத்தில் சொன்னது எத்தனை உண்மை என்று?! இத்தலையங்கத்தில் நான் பெரிதாய் எந்த செயலையும்/நிகழ்ச்சியையும் எடுத்துக் கொள்ளவில்லை! ஆனால், "அம்மா" என்ற ஓர் வார்த்தை இவ்வளவு எழுத வைத்துவிட்டது; இன்னமும் எழுதமுடியும் - ஆனால், அது அவசியமில்லை. ஏனெனில்...

"…ஓர் சொல்லில் ஓர் உலகம்; அம்மா! அம்மா!! - 
உலகெங்கும் ஓர் சொல்லே, அம்மா!!!…"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக