ஞாயிறு, மார்ச் 29, 2015

செல்வ-மகள் சேமிப்பு திட்டம் (Sukanya Samridhi Account)


   உங்களில் பலருக்கும் செல்வ-மகள் சேமிப்பு திட்டம் எனும் மத்திய அரசின் Sukanya Samridhi Account பற்றி தெரிந்திருக்கும். இது இந்த ஆண்டு சனவரி 22-ஆம் தேதி துவங்கப்பட்டது. இது தபால்-துறை மூலம் இயக்கப்படும் ஒரு திட்டம். சில தினங்களுக்கு முன்னர் இத்திட்டம் தமிழகம் மற்றும் புதுவையில் இது துவங்கப்பட்டது; இத்திட்டத்தை பற்றிய பல கேள்விகள்/சந்தேகங்கள் பலருக்கும் இருக்கிறது. இது சம்பந்தமாய், மார்ச்சு 28-ஆம் தேதியன்று "தந்தி டி.வி." யில் இந்திய நேரப்படி 15:00 மணியளவில் சென்னை மண்டல "போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்" திரு. மேர்வின் அலெக்சாண்டர் அவர்களுடன் ஒரு நேர்காணல் நடந்தது. அந்த நிகழ்ச்சி மூலம் நான் அறிந்த விசயங்களை இப்படியொரு தலையங்கமாய் எழுதினால், பலருக்கும் உதவியாய் இருக்கும் என்று எண்ணினேன். எந்தவொரு தவறான தகவலோ/விளக்கமோ இங்கே கொடுத்துவிடக்கூடாது என்பதில் மிகத்தெளிவாய் இருக்கிறேன். இருப்பினும்... அப்படி ஏதேனும் தகவல் அறிந்தால், அது என் புரியாமையால் என்பதை அருள்கூர்ந்து உணர்ந்து கொள்ளுங்கள். அப்படி ஏதும் இருப்பின், எனக்கு தெரிவிக்கவும்.     

நிபந்தனைகளும்/ விதிமுறைகளும்:
  • செல்வ-மகள் சேமிப்பு திட்டம் (சுருக்கமாய்: செமசேதி) கண்டிப்பாக பெண் குழந்தைகளுக்கு மட்டுமானது; ஒரு குறிப்பிட்ட குழந்தையின் பெயரில் ஒரேயொரு கணக்கு மட்டுமே துவங்கமுடியும்; ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருப்பது தெரியவந்தால் - சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், எவ்விதமான நடவடிக்கைகள் என்பது பற்றிய அறிதல் எனக்கில்லை.
  • ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியும். இருப்பினும், 2-ஆவது பிரசவத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பெண் குழந்கைகள் பிறப்பின், அவர்கள் அனைவரும் முன்பே ஒரு பெண் குழந்தை இருப்பினும், அக்குழந்தையோடு சேர்த்தே தகுதி ஆகிறார்கள். ஆயினும், முதல் பிரசவத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பிறப்பின்; அதன் பின்னர் பிறக்கும் பெண் குழந்தைகள் இத்திட்டத்திற்கு தகுதியாவதில்லை. 
  • "செமசேதி" கணக்கில் ஆண்டொன்றுக்கு குறைந்தது 1000 இந்திய-உரூபாய்கள் செலுத்தப்படலாம்; அதிகபட்சமாய், 1,50,000 இந்திய-உரூபாய்கள் வரை ஆண்டொன்றுக்கு செலுத்தப்படலாம்.  "செமசேதி"யோடு சம்பந்தப்பட்ட ஆண்டென்பது "நிதி ஆண்டை" குறிக்கிறது; அதாவது ஏப்ரல் மாதம் முதல் மார்ச்சு மாதம் வரை. இன்று மார்ச்சு 29 என்பதால், இந்த நிதியாண்டு முடிய இன்னும் 2 நாட்களே உள்ளன. ஒருவர் விரும்பினால், அதிக பட்ச தொகையை கூட இந்த 2 நாட்களில் முதலாண்டு தொகையாய் செலுத்திக்கொள்ளலாம். 
  • அதிகபட்ச காலமாய் 14 ஆண்டுகள் வரை வைப்பு தொகை செலுத்தப்படலாம். அதன் பின்னர், 7 ஆண்டுகள் எதுவும் செலுத்தாமல், இந்த கணக்கு நிலுவையில் இருக்கவேண்டும். அதாவது, இந்த "செமசேதி" திட்டத்தின் மொத்த ஆயுட்காலம் 21 ஆண்டுகள். இருப்பினும், தேவையிருப்பின், எந்த ஒரு நிலையிலும், இக்கணக்கை முடித்துக்கொள்ளலாம்; "முதிர்வு" தொகை அந்த காலத்திற்கு ஏற்ப கணக்கிடப்படும்.  
  • ஆண்டொன்றுக்கு இவ்வளவு கட்டவேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை! அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் கட்டப்படும் தொகையும் "நிலையானதாய்" இருக்கவேண்டும் என்ற நிபந்தனையும் இல்லை. ஒவ்வொரு ஆண்டுக்கும், கட்டப்படும் தொகை வேறுபடலாம்; ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாய் 1,50,000 இந்திய-உரூபாய்கள் தான் செலுத்தப்படவேண்டும் என்பதே ஒரேயொரு நிபந்தனை. வைப்பு தொகை மொத்தமாகவும் கட்டப்படலாம்; 12 தவணைகளிலும் கட்டப்படலாம்.
  • "செமசேதி" கணக்கு துவங்கியதில் இருந்து, வைப்பு தொகை அதிகபட்சமாய் 14 ஆண்டுகள் வரை செலுத்தப்படலாம். அல்லது அந்த பெண் குழந்தை திருமணம் ஆகும் வரை வைப்பு தொகை செலுத்தப்படலாம்; முதலில் எது நிகழ்கிறதோ அது கணக்கில் கொள்ளப்படும். 14 ஆண்டுகள் நிறைவுற்ற பின்னர், மேற்கொண்டு எத்தொகையும் செலுத்த முடியாது.
  • பெண்ணிற்கு திருமணமாகும் பட்சத்தில், மேற்கொண்டு எந்த வைப்பு தொகையும் செலுத்த முடியாது. இருபினும், அந்த கணக்கை முழு ஆயுட்காலம் வரையில் (அதாவது, 21 ஆண்டுகள்) நிலுவையில் வைத்து; கட்டிய தொகைக்கு ஏற்ப "முதிர்வு"தொகை பெறமுடியும்.  
  • ஏதேனும் ஒரு காரணத்திற்காய், ஒன்று அல்லது மேற்பட்ட ஆண்டுகள் வைப்பு தொகை செலுத்த முடியாது போனால், ஆண்டுக்கு 50 இந்திய-உரூபாய்கள் வீதம் விடுபட்ட ஆண்டுகளுக்கு அபராதம் செலுத்தி புதுப்பித்துகொள்ளலாம். ஆனால், இப்படிப்பட்ட குறைவான அபராதம் மக்களை மெத்தனமாய் இருக்க வைக்கும் என்பதால், இந்த வழிமுறையில் எனக்கு உடன்பாடில்லை; இருப்பினும், இது என் கருத்து மட்டுமே. 
தேவையான தகுதி:
  • தற்போது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்கு ("செமசேதி" கணக்கு துவங்கும் நாளன்று) உட்பட்ட எந்த ஒரு பெண் குழந்தையும் "செமசேதி" திட்டத்திற்கு தகுதியானவர்கள். இருப்பினும், அறிமுக-ஆண்டு என்ற முறையில், ஓராண்டு உச்ச-வயது வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2 திசம்பர் 2015 அன்று அல்லது அதற்கு முன்னர் 11 வயதை பூர்த்தி செய்திருக்கக் கூடாது! அப்படி இருக்கும் எந்த பெண் குழந்தையும் தகுதி அடைகிறார்கள். குறைந்தது, இப்போதிருக்கும் நிலையிலாவது, அடுத்த ஆண்டிற்கு இந்த வயது நீட்டிப்பு செல்லாது என்றே தெரிகிறது. 
பயன்களும்/ முதிர்வும்:
  • இத்திட்டத்தில் செலுத்தப்படும் எந்த தொகைக்கும் "வருமான வரி" விலக்கு உண்டு. மேலும் விவரங்கள் "வருமான வரி துறை" மூலம் பெறப்படலாம். 
  • அதிக பட்ச தொகையான 1,50,000 இந்திய-உரூபாய்கள் 14 ஆண்டுகள் செலுத்தப்பட்டு, மேலும் 7 ஆண்டுகளுக்கு அந்த கணக்கு நிலுவையில் வைக்கப்பட்டால் - மொத்த "முதிர்வு"தொகையாய் 79,00,000 இந்திய-உரூபாய்கள் கிடைக்கும் என்று தெரிகிறது. அதாவது, "செமசேதி" கணக்கு துவங்கி 21 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு. 
  • அதிகபட்ச தொகைக்கு கீழே செலுத்தப்படும் தொகைக்கு, செலுத்தப்பட்ட தொகைக்கு ஏற்ப "முதிர்வு" தொகை கிடைக்கும். 
  • 21 ஆண்டுகள் நிறைவு பெரும் முன்னர், செலுத்தப்பட்ட தொகையில் 50 விழுக்காடு வரை பெண் குழந்தையின் உயர்கல்வி/திருமணம் இவற்றில் ஏதேனும் ஒரு காரணத்திற்காய் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. இருப்பினும், இந்த 50 விழுக்காடு மொத்த "முதிர்வு" தொகையில் சரிபாதியா? என்பது தெளிவாய் விளக்கப்படவில்லை. 
"செமசேதி" கணக்கு துவங்குதலும், பராமரிப்பும்:
  • பெற்றோர்/இயற்கையான பாதுகாப்பாளர்/சட்டபூர்வமான பாதுகாப்பாளர் - இவர்களில் எவரேனும் ஒருவர் சம்பந்தப்பட்ட பெண் குழந்தைக்காய் "செமசேதி" கணக்கை துவங்க முடியும். பெற்றோர்/இயற்கையான பாதுகாப்பாளர்/சட்டபூர்வமான பாதுகாப்பாளர் - இவர்களில் கணக்கை துவங்குவோரது புகைப்படம் மற்றும் முகவரியுடன் கூடிய "ஆதார்" போன்ற ஆவணத்துடன் "செமசேதி" கணக்கை துவங்க முடியும். சில தபால் அலுவலகங்கள் பெண் குழந்தையின் புகைப்படத்தை கேட்பதாய் தெரிகிறது; ஆனால், இது கட்டாயம் அல்ல
  • கணக்கு துவங்கிய பின்னர், எவர் வேண்டுமானாலும் அதில் வைப்பு தொகையை செலுத்தலாம்.
  • 10 வயது நிரம்பிய பெண் குழந்தை, தபால் அலுவலத்திற்கு சென்று தன் கையொப்பத்தை இட்டு தானே வைப்பு தொகையை செலுத்திக் கொள்ள இயலும். 
  • ஆயினும் 18 வயது நிரம்பிய பின்னர், சம்பந்தப்பட்ட பெண் குழந்தையே "செமசேதி" கணக்கை பராமரிக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது. அதேபோல், 18 வயது நிரம்பிய பின்னர், சம்பந்தப்பட்ட பெண்ணின் புகைப்படமும், முகவரியுடன் கூடிய ஆவணமும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது. 
எங்கே விண்ணப்பிப்பது?:
  • தற்போதைய நிலையில், "செமசேதி" கணக்குகள் தபால் அலுவலகங்களில் மட்டுமே துவங்குதல் சாத்தியம். இருப்பினும், பிற்காலத்தில் இந்த கணக்குகள் வங்கிகள் அல்லது இணையதளம் மூலம் துவங்கப்படுதல் சாத்தியம் ஆகக்கூடும்.
  • வைப்பு தொகையை கூட்டுதலும் தற்போதைய நிலையில் தபால் அலுவலகங்களில் மட்டுமே செய்தல் சாத்தியம். இருப்பினும், இணையதளம் மூலம் செலுத்துதல் போன்ற பல வழிவகைகள் பிற்காலத்தில் சத்தியமாகக்கூடும் என்று தெரிகிறது. 
தொடர்புகள்:
  • மேலும் பல விபரங்கள் கீழ்க்கண்ட தொடர்பு எண்கள் மூலம் பெறப்படலாம்: +91 44 28594745 and +91 94430 48028. இரண்டு எண்களும் சென்னை மண்டலத்தோடு தொடர்புடையவை; மற்ற தொடர்புகள் என்னிடம் இல்லை. 
  • இந்த http://www.indiapost.gov.in/SukanyaSamriddhi.aspx இணைப்பு மூலம் மேலும் பல தகவல்களை அறியலாம். 
ஆண் குழந்தை:
  • ஆண் குழந்தைகளுக்கு ஏதும் இல்லையா? என்று எவரும் வியப்பின் - ஏற்கனவே "Public Provident Fund (PPF)" என்ற திட்டம் ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தைகள் இருபாலருக்கும் நடைமுறையில் உள்ளது என்பதை அறிக. "செமசேதி" திட்டம் 9.1 விழுக்காடு வட்டி கொடுக்கிறது; மாறாய், PPF திட்டம் 8.7 விழுக்காடு மட்டுமே வட்டி கொடுக்கிறது. எந்த ஒரு நாட்டுக்கும் பெண் குழந்தைகளே விளைமதிப்பற்றவர்கள் என்பதால் மட்டுமே, இந்த 0.4 விழுக்காடு அதிக வட்டி கொடுக்கப்படுகிறது. 
பின்குறிப்பு: இத்தலையங்கம் பயனுள்ளதாய் நீங்கள் உணர்ந்தால், அருள்கூர்ந்து இதை உங்கள் சுற்றத்தில் பகிரவும். அனைத்து பெண் குழந்தைகளும் இத்திட்டத்தால் பயனடையட்டும்.

ஆங்கில வடிவம்: http://vizhiyappan-en.blogspot.ae/2015/03/sukanya-samridhi-account.html

ஞாயிறு, மார்ச் 08, 2015

மனித-தொடர்பு (Human Interaction) என்றால் என்ன?



   மேலுள்ள புகைப்படம் Whatsapp-இல் என்னுடைய குழு ஒன்றில் பகிரப்பட்டது. இதைப் பார்த்தவுடன் என்னுள் பல கருத்துகள்/விவாதங்கள். உடனே அதை ஒரு தலையங்கமாய் எழுதவேண்டும் என்று தோன்றியது; அதனால், இதை அங்கே விவாதிக்கவில்லை, பின்னர் இணைப்பை அங்கே கொடுத்துவிடலாம் என்று தோன்றியது. உள்-புகைப்படங்களில் சொல்லி இருப்பது போல், இன்று பலரும் உடனிருப்போருடன் உரையாடாமல் தத்தம் நவீன-அலைபேசியில் வேறொருவருடன் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர். உண்மையில், நாம் ஒவ்வொருவரும் ஒருமுறையாவது அப்படி செய்திருப்போம்! எனவே, அப்படி நடக்கவில்லை என்பதல்ல என் வாதம். ஆனால், மேதகு ஐன்ஸ்டீன் சொன்னதாய் ஊகிக்கப்பட்ட "மனித-தொடர்புகளை ஒருநாள் தொழில்நுட்பம் கடந்து நிற்கும். இவ்வுலகம் அறிவிலிகளை கொண்டிருக்கும்" சொற்றொடருடன் ஒப்பிடுவதைத் தான் மறுக்கிறேன். 

      இத்தலையங்கத்தின் ஆங்கில வடிவத்தை என் நண்பனுக்கு பிழை-திருத்துவதற்காய் அனுப்பிய போது, அவன் ஐன்ஸ்டீனின் கருத்துதானா என்று பரிசோதிக்க சொன்னான். என்ன அதிசயம்?! அப்படி முயன்றபோது, இது உலகின் புகழ்பெற்ற 7 "பொய்யான" சொற்றோடர்களுள் ஒன்றானது என்ற தகவல் கிடைத்தது. மேலும், பல தகவல்களை கூகுளில் தேடுவதன் மூலம் அறியலாம்.  முதலில், என்னால் நம் நட்பு/சுற்றம்/உறவு இப்படி எவருடனும் இணைந்திருப்பதை "மனித-தொடர்பு (Human Interaction)" என்றே அழைக்கமுடிவில்லை. அப்படியெனில், அந்த உள்-புகைப்படங்களில் இருக்கும் ஒவ்வொருவரும் இவ்வுலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவருடன் தொடர்பு கொண்டிருக்கிறார் என்றே அர்த்தம். நவீன-அலைபேசி கொண்டு அவர்கள் Whatsapp/Facebook மூலம் உரையாடுகிறார்கள் என்பதால் மட்டும், அவர்கள் மனித-தொடர்புகளை அறுத்துவிட்டார்கள் என்பதில் எந்த நியாயமும் இல்லை!

  மேலும், மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருப்பது மட்டுமே "மனித-தொடர்பு" என்றால், மேலுள்ளவர்கள் தொழில்நுட்பம் மூலம் அப்படி செய்வதும் மனித-தொடர்பே, அல்லவா? மேலுள்ள புகைப்படங்களில் இருக்கும் ஒரு குழு ஒரே நிறுவனத்திற்கு/ஒரே துறையில்/ஒரே-நிலையில் பணிபுரிவோர் என்று வைத்துக்கொள்வோம். மனதில் இருந்து சொல்லுங்கள்: அவர்களுள் ஒரு ஆத்மார்த்தமான மனித-தொடர்பு இருக்குமா? நிச்சயமாய், உங்கள் பதில் இல்லையென்றே இருக்கும் அல்லவா?! ஏனெனில், நம்மில் எவரும் அப்படி நாம் சார்ந்த நிறுவனத்திற்காய் ஒன்றுபட்டு செயல்பட விரும்புவதில்லை. அதை நான் தவறென்றும் சொல்லவில்லை; இங்கே, வலியதே எஞ்சும்! எனவே, நாம் கூடியிருக்கும்போது பொழுதுபோக்கு/விளையாட்டு/அரசியல் அல்லது அதுபோன்ற பொதுத்துறை பற்றியே உரையாடல் இருக்கும். நாம் சார்ந்த நிறுவனத்தில் இருக்கும் பிரச்சனைகளை பற்றி வேண்டுமானால் ஒன்றுபட்டு பேசுவோம்/போராடுவோம்!

   ஆனால், நிறுவனத்தின் முன்னேற்றம் என்று வந்துவிட்டால், ஒவ்வொருவரும் நம்மால் அது நடக்கவேண்டும் என்றே நினைப்போம். மேலுள்ள புகைப்படங்களில் உள்ளோர் அன்பெனும் உயர்ந்த பண்பை கூட பரிமாறிக் கொண்டிருக்கலாம். எனவே, மேலுள்ள உதாரணங்கள் மனித-தொடர்பே அல்ல. பின், மனித-தொடர்பு என்றால் என்ன? என்ற கேள்வி எழும்; என்னுள்ளும் எழுந்தது. என்னளவில் மனித-தொடர்பு என்பது அறிவு/அனுபவம் இவை போன்றவற்றின் பரிமாற்றமாய்; சமுதாயத்திற்கு பயனுள்ளதாய் இருக்கவேண்டும். தெரியாத மனிதர்களிடையேயும் நடக்கலாம். நிச்சயமாய், கடற்கரையில் அமர்ந்து கூத்தடிப்பது/உணவகங்களில் குடிப்பது/சாப்பிடுவது இதுபோன்ற கேளிக்கைகளில் இல்லை! இந்த உதாரணத்தை கவனியுங்கள்: எங்கள் விவசாய நிலத்தில் பலர் பல்வேறு வேலைகளை செய்வதை கண்டவன் நான்; அவர்களுடன் நானும் தொடர்புகொண்டு சில நுணுக்கமான விசயங்களை கற்றவன்.

      சில மணித்துளிகளே எனினும், அவர்களுடன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன். அவர்களுக்கு இடையேயும் பல தொடர்புகள் இருந்தன; அவர்கள் எல்லோரும் விவசாய முன்னேற்றம் என்ற ஒன்றை நோக்கி ஒருங்கிணைந்து பணியாற்றினார். பின்னர் தொழில்நுட்பம் "Tractor" என்ற ஒன்றின் மூலம் வந்தது. மெல்ல, மெல்ல அவர்கள் அனைவரும் வேலையற்று; பல்வேறு இடங்களில் பிரிந்து வேலை செய்ய ஆரம்பித்தனர். அவர்களுள், ஒரு சிறு-உரையாடல் கூட இல்லாமல் போனது. இன்று பயிரிடுவது துவங்கி அறுவடை வரை அனைத்திற்கும் தொழில்நுட்பம் வழி செய்துவிட்டது; ஆனால், மனித-தொடர்பு? என்னளவில், இது ஒரு சிறந்த உதாரணம். மேலும் சொல்லவேண்டுமானால்: மாணாக்கர்-ஆசிரியர் தொடர்பு அறுபட்டதற்கு முதற்காரணம் தொழில்நுட்பம். இன்று, மேலாண்மைக்கும் - பணியாளர்களுக்கும் நேரடித் தொடர்பு அறவேயில்லை. எல்லாம், மின்னணு-கோப்பைகளில் பரிமாறப்படுகின்றன.

       அந்த கோப்பைகளால் மனித உணர்வு/தொடர்பு போன்றவற்றை பரிமாற்ற முடியாது. சமீபத்தில், அமெரிக்காவின் அலபாமா மாகானத்தில் நடந்த சம்பவத்தை நினைவுகூருங்கள். அந்த காவலர்க்கு அறிமுகமற்ற ஒரு மனிதருடன் தொடர்பு கொள்ளவே தெரியவில்லை. அது, அவரின் பாதுகாப்பு உணர்வினால் விளைந்தது என்று ஆயிரம் காரணங்கள் சொல்லப்படலாம்; ஆனால், அங்கே மனித-தொடர்பே இல்லை என்பதே அப்பட்டமான உண்மை. அது அந்த காவலரின் தவறில்லை! அல்லது அவரின் தவறு மட்டுமில்லை! தன்னைத்தானே உலகின் வல்லரசு என்று கூறிக்கொள்ளும் ஒரு நாடு அணு/உயிரியல் ஆயுதங்களுக்காய் மிகப்பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்கிறது. என்னவொரு அவலம்? அவர்கள் "போர்க்களத்தில்" கூட நேரடியாக மனிதர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை! இம்மாதிரியான அவலமான/அதீதமான மனித-தொடர்பு மீறல்களைப் பற்றி நாம் உணர்வதே இல்லை.  

     ஆனால், மேலுள்ளது போல் நகைச்சுவையான புகைப்படங்களை  மட்டும் வைத்துக்கொண்டு மனித-தொடர்புகள் மீறப்படுகின்றன/அழிக்கப்பட்டுவிட்டன என்று வாதிட்டுக்கொண்டு இருப்போம். உண்மையான மனித-தொடர்பு மீறல்கள்/அழித்தல்கள் ஆயிரமாயிரம் நடந்தேரிக்கொண்டே இருக்கின்றன. இப்புகைப்படங்களில் இருப்பது தான் உண்மையான மனித-தொடர்புகள் எனில், பல காலங்களாய் பேச்சு கூட இல்லாத நம் நட்பு/சுற்றம்/உறவு இவைகளை மீண்டும் நம்முடன் கொண்டு வந்து சேர்த்ததற்கு தொழில்நுட்பத்தை (நவீன அலைபேசி) நாம் பாராட்டிட வேண்டாமா? இருப்பினும், இதை நான் மனித-தொடர்பு என்பதாய் கருதவே இல்லை. அதனால் தான், என்னுடைய வாதங்களில் நான் திடமாய் இருக்கிறேன்; அதனால் தான், மனித-தொடர்பு என்பது இதுவல்ல என்று ஆணித்தரமாய் கூறமுடிகிறது. கண்டிப்பாக என்னுடைய புரிதல்கள், உங்களை உடன்பட செய்திருக்கும் என்று உறுதியாய் நம்புகிறேன்.
 
முதலில் மனித-தொடர்பு என்றால் என்னவென்று நாம் தெளிவாய் உணரவேண்டும்!!!     

பின்குறிப்பு: ஐன்ஸ்டீன் அவர்களின் ஊகிக்கப்பட்ட கருத்தாக இருப்பினும், அவருடன் ஒப்பிடுகையில் "மிகச்சிறு" இயற்பியலாளன் என்ற முறையில், அவருடன் தொடர்பு படுத்தி இத்தலையங்கத்தை எழுதும் வாய்ப்பு கிடைத்ததற்காய் பெருமிதம் கொள்கிறேன்.

ஆங்கில வடிவம்: http://vizhiyappan-en.blogspot.ae/2015/03/what-is-human-interaction.html

மனைவிக்கு பின் மகள் - முன்னுரை



     "தாய்க்கு பின் தாரம்" என்ற வழக்கு நெடுங்காலமாய் இருந்து வருகிறது. அது சரியாய் புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறதா? தாயும்/தாரமும் அதை ஒருமனதாய் சரியாய் புரிந்துகொண்டார்களா? என்பதில் பல விவாதங்கள் இருக்கலாம். ஆனால், அப்படியொரு வழக்கு நெடுங்காலமாய் இருந்து வருகிறது. அதை மேலும் புரிந்து கொள்ளவே "தாய்க்கு பின் தாரம்; தந்தைக்கு பின் யாராம்???" என்றொரு தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதியிருந்தேன். மேலும், ஆண் எப்போதும் ஏதேனும் ஒரு பெண் உறவை சார்ந்தே இருப்பவன் என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குறிப்பிட்டும் இருக்கிறேன். அம்மா எனும் உன்னத-உறவில் ஆரம்பிக்கும் அந்த சார்ந்திருத்தல் தங்கை/தமக்கை என்று மாறி பின்னர் காதலி/மனைவி என்று உருமாறுகிறது. அதனால் தான் "தாய்க்கு பின் தாரம்" என்று சொல்லப்பட்டது. தாய் என்ற உறவில் துவங்கி தாரம் வரை குறிப்பிடப்பட்ட இந்த சார்ந்திருத்தல், அதன் பின்னர் எவர்? என்று திடமாய் சொல்லப்பட்டு இருப்பதாய் தெரியவில்லை.

     என்னளவில் "மனைவிக்கு பின் மகள்" என்பதே சரியான ஒன்று! மகள் பற்றியும் தந்தை-மகள் உறவைப் பற்றியும் பலமுறை எழுதி இருக்கிறேன் எனினும், "மனைவிக்கு பின் மகள்" என்ற தலைப்பில் பல பாகங்களாய் மனதங்கம் எழுதவேண்டும் என்று தோன்றியது. இது மிகப்பெரிய உறவுப்பாலம்; மிக அழுத்தமான/ஆழமான உறவு என்பதால் - இந்த தலைப்பிற்கே ஒரு முன்னுரை எழுதவேண்டும் என்று தோன்றியது. "மனைவிக்கு பின் மகள்" என்பதை உணர்த்தும் பல நிகழ்வுகளை நான் சந்தித்திருக்கிறேன். அவைகளை, ஓரிரு வரிகளாய் ஆங்காங்கே குறிப்பிட்டு இருப்பினும் - இப்படி விவரித்து எழுதியதில்லை. அப்படி எழுதுவது அவசியம் என்று தோன்றியது; அதனால் தான் இந்த மனதங்க தொடர். இதை சிறப்பாய் செய்திட என் மகளின் பல செயல்கள் பேருதவியாய் இருக்கும். விருப்பமிருப்போர், உங்கள் அனுபவங்களை பின்னூட்டமாய் அனுப்பலாம். வாருங்கள்! நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து...

"மனைவிக்கு பின் மகள்" என்பதை வலியுறுத்துவோம்!!!