"தாய்க்கு பின் தாரம்" என்ற வழக்கு நெடுங்காலமாய் இருந்து வருகிறது. அது சரியாய் புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறதா? தாயும்/தாரமும் அதை ஒருமனதாய் சரியாய் புரிந்துகொண்டார்களா? என்பதில் பல விவாதங்கள் இருக்கலாம். ஆனால், அப்படியொரு வழக்கு நெடுங்காலமாய் இருந்து வருகிறது. அதை மேலும் புரிந்து கொள்ளவே "தாய்க்கு பின் தாரம்; தந்தைக்கு பின் யாராம்???" என்றொரு தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதியிருந்தேன். மேலும், ஆண் எப்போதும் ஏதேனும் ஒரு பெண் உறவை சார்ந்தே இருப்பவன் என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குறிப்பிட்டும் இருக்கிறேன். அம்மா எனும் உன்னத-உறவில் ஆரம்பிக்கும் அந்த சார்ந்திருத்தல் தங்கை/தமக்கை என்று மாறி பின்னர் காதலி/மனைவி என்று உருமாறுகிறது. அதனால் தான் "தாய்க்கு பின் தாரம்" என்று சொல்லப்பட்டது. தாய் என்ற உறவில் துவங்கி தாரம் வரை குறிப்பிடப்பட்ட இந்த சார்ந்திருத்தல், அதன் பின்னர் எவர்? என்று திடமாய் சொல்லப்பட்டு இருப்பதாய் தெரியவில்லை.
என்னளவில் "மனைவிக்கு பின் மகள்" என்பதே சரியான ஒன்று! மகள் பற்றியும் தந்தை-மகள் உறவைப் பற்றியும் பலமுறை எழுதி இருக்கிறேன் எனினும், "மனைவிக்கு பின் மகள்" என்ற தலைப்பில் பல பாகங்களாய் மனதங்கம் எழுதவேண்டும் என்று தோன்றியது. இது மிகப்பெரிய உறவுப்பாலம்; மிக அழுத்தமான/ஆழமான உறவு என்பதால் - இந்த தலைப்பிற்கே ஒரு முன்னுரை எழுதவேண்டும் என்று தோன்றியது. "மனைவிக்கு பின் மகள்" என்பதை உணர்த்தும் பல நிகழ்வுகளை நான் சந்தித்திருக்கிறேன். அவைகளை, ஓரிரு வரிகளாய் ஆங்காங்கே குறிப்பிட்டு இருப்பினும் - இப்படி விவரித்து எழுதியதில்லை. அப்படி எழுதுவது அவசியம் என்று தோன்றியது; அதனால் தான் இந்த மனதங்க தொடர். இதை சிறப்பாய் செய்திட என் மகளின் பல செயல்கள் பேருதவியாய் இருக்கும். விருப்பமிருப்போர், உங்கள் அனுபவங்களை பின்னூட்டமாய் அனுப்பலாம். வாருங்கள்! நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து...
"மனைவிக்கு பின் மகள்" என்பதை வலியுறுத்துவோம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக