{திருமணமாகி, வேலைக்கும் செல்லும் பெண்கள் பலர் செய்யும் செயல் பற்றி!}
துப்பு இருக்குதா? - ஒரு வீடு வாங்க துப்பு இருக்குதா?! ஒரு கார் வாங்க துப்பு இருக்குதா??!!அப்பப்போ நகைகள் வாங்கிக் கொடுக்க துப்பு இருக்குதா???!!! போன்ற கேள்விகளை மனைவி மூலமாய் எதிர்கொள்ளாத கணவர்கள் மிகச்சிலரே என்றால், அது மிகையன்று. இப்படிப்பட்ட பேர்-வசதிகள் இல்லாத பொருளாதார நிலை கொண்ட பெற்றோர்களுக்கு பிறந்து வளர்ந்தவர்கள் தான் நம்மில் பலரும். எனவே, திருமணமான உடனே வீடு வாங்குதல் என்பது பலருக்கு இயலாத காரியம். அதிலும், வீடு வாங்குவதால் உருவாகும் கடன் தொல்லை/பிரச்சனையால் இன்றைய வாழ்வை வாழ்தல் சாத்தியமன்று என்பதாலேயே - சிலர் வீடு வாங்குதலை தள்ளிப் போடவும் செய்கின்றனர். வாங்க முடிந்தும் தள்ளி போடுகின்றனரா? அல்லது வாங்க "துப்பு" இல்லையா?? என்ற விவாதம் (இப்போதைக்கு)ஒருபுறம் இருக்கட்டும். இப்போதைக்கு, என்னுடைய பார்வை...
- எல்லாவற்றிலும் சம-உரிமை கேட்டு; பலவற்றில் பெற்றுவிட்ட பின்னரும் - அதென்ன?! வீடு போன்ற பெருஞ்செலவு ஆகும் விசயங்களில் மட்டும் "ஆண் தனித்து நின்றே" துப்பு காட்ட வேண்டி இருக்கிறது? இத்தனை சம-உரிமை இல்லாத காலக்கட்டத்தில், வேலைக்கு சென்ற பெண்கள் கூட; கணவனிடம் தாம் ஈட்டியதையும் கொடுத்து தானே பெற்றனர்?
- பெரும்பாலான பெண்கள் நினைப்பது, அவரவர் பெற்றோர் அவர்களுக்கு அளித்திட்ட சொத்தில் வீடும் இருக்கிறது என்ற பெருமிதம் தான். இருக்கட்டும்! அதேபோல் தானே, ஆணுக்கும் அவரவர் பெற்றோர் கொடுத்த நிலமோ? மற்ற சொத்தோ?! ஏன், அங்கு மட்டும் "அது அவர்கள் கொடுத்தது; நீங்கள் என்ன செஞ்சு கிழிச்சீங்க?! என்ற ஏளனப்பேச்சும்; துப்புக்கெட்டவன் என்ற தூற்றுதலும்??"
- "உத்தியோகம் புருஷ இலட்சணம்" என்பதை மாற்றக்கோரி எத்தனை பாடுபட்டீர்கள் பெண்களே? உத்தியோகம் புருஷ இலட்சணம் என்றிருப்போர் "வீடு வாங்க துப்பு இல்லையா?!" என்று கேட்பதில் கூட ஒரு நியாயம் இருக்கிறது! "உத்தியோகம் தங்கள் இலட்சணமும்" என்போர்க்கு துப்பில்-தப்பாது பங்குண்டு தானே?
- சில கணவர்களுக்கு பெற்றோர் மூலம் வீட்டு-மனை கிடைக்கும். அதில் சிறிது சிறிதாய், வீட்டை அவர்களால் கட்டிவிடமுடியும். ஆனால், எல்லாவற்றிற்கும் தன் சம்பாத்தியமே மூலாதாரம் என்றிருக்கும் (இன்றைய பெரும்பான்மை)கணவர்களால் என்ன செய்ய முடியும்?! "துப்பு இல்லையா?!" என்று திரும்ப, திரும்ப கேட்டால் - ஆமாம்! துப்பில்லை என்று சொல்வதை விட வேறென்ன செய்ய முடியும்?!
- கண்டிப்பாக எல்லா கணவர்களும் இன்று தெளிந்த முடிவோடு தான் இருக்கிறார்கள். தம் பிள்ளைகளுக்கு என்று தனி-வங்கி கணக்கு, வைப்பு நிதி, அவ்வப்போது பொன்-நகைகள் வாங்கி சேர்ப்பது - போன்ற பல வழிகளில் "கடன் ஏதுமின்றி" சேமித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் தன் சம்பாத்தியத்தை மட்டும் கொண்டுதான் செய்கின்றனர்; மனைவியின் சம்பாத்தியத்தை பெறுவதில்லை. இன்னும், வேறென்ன செய்ய முடியும்/வேண்டும்? எப்படி சம்பாதித்தாலும் பரவாயில்லை என்றால்; முயற்சித்து பார்க்கலாம்!!
- இப்படி எல்லாவற்றையும் தன் குடும்பத்திற்காகவும்; தான் சார்ந்த குடும்பத்திற்காகவும் செய்யும் ஒரு ஆண்-மகனுக்கு எப்படி உடனடியாய் "வீடும் வாங்க"துப்பு இருக்கும்? வங்கிகள் தானே-முன்வந்து கடன் கொடுக்கின்றன என்பதற்காய் ஒரு வீட்டை வாங்கி; எவருக்கோ வாடகை விடுவதா புத்திசாலித்தனம்? நாம் வசிப்பதற்காய் இருப்பினும் பரவாயில்லை!
- மிகுந்த சம-உரிமை கொண்ட இக்காலக்கட்டத்திலும், அதென்ன ஆணுக்கு மட்டும் வேண்டி இருக்கிறது அந்த "துப்புக்கெட்ட"துப்பு? ஏன் இக்காலப் பெண்கள் நாம் எதற்கு "துப்பு"ஆகிவிட்டோம் என்று, தங்களைக் கேட்டுக் கொள்வதில்லை? எவர் வகுத்த நியதி இது? நீங்கள் வேண்டுமானால் உங்கள் "துப்பை காட்டி" உங்கள் சம்பாத்தியத்தில் வீடு வாங்குங்கள்; உங்கள் கணவர்கள் எந்த சலனமும் இன்றி வந்து குடும்பம் நடத்துவர்!!!
பொதுக்குறிப்பு: வீடு வாங்கக்கூடாது என்பது என் வாதமல்ல! ஆனால், அதற்காய் ஒரு வங்கியிடம் "பெரிதாய்" கடன்பட்டு; எவருக்கோ வாடகைக்கு விடவேண்டாம் என்பதே என் வாதம். தாம் வசிப்பதற்கு எனினும், தகுந்த சூழ்நிலையில்/குறைந்த கடனுடன் வாங்குவதே சிறந்தது என்பதே என் வாதம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக