செவ்வாய், மே 23, 2017

அதிகாரம் 066: வினைத்தூய்மை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 066 - வினைத்தூய்மை

0651.  துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
           வேண்டிய எல்லாம் தரும்

           விழியப்பன் விளக்கம்: உடனிருப்போரின் தூய்மையான துணை, செல்வத்தை அளிப்பது
           போல்; அமைச்சர்களின் தூய்மையான வினைகள், வேண்டியவை அனைத்தையும்
           அளிக்கும்.
(அது போல்...)
           அன்பிருப்போரின் வலிமையான வாழ்த்து, வாழ்வை வலுப்படுத்துவது போல்;
           குடும்பத்தினரின் வலிமையான உறவுகள், நற்சிந்தனைகள் அனைத்தையும் வளர்க்கும்.
      
0652.  என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
           நன்றி பயவா வினை

           விழியப்பன் விளக்கம்: புகழோடு இணைந்து நன்மையையும் அளிக்காத வினைகளை; எந்த
           சூழ்நிலையிலும், தவிர்த்தல் வேண்டும்.
(அது போல்...)
           அன்போடு சேர்த்து பொருளையும் பகிராத உறவுகளை; எல்லா வகையிலும், பரிசீலிக்க
           வேண்டும்.
           
0653.  ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
           ஆஅதும் என்னு மவர்

           விழியப்பன் விளக்கம்: தொடர்ந்து வளரவேண்டும் என்ற முனைப்புடையோர்; தமது புகழ்
           அழிவதற்கு காரணமான, செயல்களைச் செய்வதைக் கைவிட வேண்டும்.
(அது போல்...)
           உயர்ந்து வாழவேண்டும் என்ற எண்ணமுடையோர்; தமது சுற்றம் தாழ்வதற்கு வழிவகுக்கும்,
           பிரிவினைகளை வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

0654.  இடுக்கண் உடினும் இளிவந்த செய்யார்
          நடுக்கற்ற காட்சி யவர்

           விழியப்பன் விளக்கம்: குழப்பமில்லாமல் பகுத்தறியும் ஆற்றல் உடையோர்; தமக்கு இன்னல்
           நேர்ந்தாலும், தரக்குறைவான செயல்களைச் செய்ய மாட்டார்கள்.
(அது போல்...)
           குறையில்லாமல் உரிமையைப் பகிரும் தலைவர்கள்; தமக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும்,
           குடிமக்களை அவமதிப்பதை அனுமதிக்க மாட்டார்கள்.

0655.  எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
           மற்றுஅன்ன செய்யாமை நன்று

           விழியப்பன் விளக்கம்: “அய்யகோ… இப்படி செய்துவிட்டோமே!” என்று கவலையடையச்
           செய்யும் செயல்களைச் செய்யக்கூடாது; அப்படி செய்ய நேர்ந்தாலும், மீண்டும்
           அப்படியோர் செயலைச் செய்யாதது நன்று.
(அது போல்...)
           “அடடே… தேவையின்றி பிரிந்துவிட்டோமே!” என்று ஏக்கமடைய வைக்கும் உறவுகளைப்
           பிரியக்கூடாது; அப்படி பிரிய நேர்ந்தாலும், மீண்டும் அப்படியோர் உறவைப் பிரியாதது
           சிறப்பு.

0656.  ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
           சான்றோர் பழிக்கும் வினை

           விழியப்பன் விளக்கம்: நம்மைப் பெற்றவள், பசியின் கொடுமையை அனுபவிக்க
           நேர்ந்தாலும்; சான்றோர்கள் தூற்றும், பழியை அளிக்கும் செயல்களைச் செய்யக்கூடாது.
(அது போல்...)
           நமக்குப் பிறந்தவர்கள், கல்லாமையின் விளைவை சந்திக்க நேர்ந்தாலும்; கற்றவர்கள்
           வெறுக்கும், இலஞ்சத்தால் கல்வியைப் பெறுவதைச் செய்யக்கூடாது.

0657.  பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
           கழிநல் குரவே தலை

           விழியப்பன் விளக்கம்: பழி தரும் வினைகளைச் செய்து, அடையும் செல்வத்தை விட;
           தூய்மையான வினைகளைச் செய்து, அடையும் சான்றோர்களின் கொடிய வறுமையே
           உயர்ந்ததாகும்.
(அது போல்...)
           அறவழி மீறிய உறவுகள் மூலம், கிடைக்கும் மகிழ்ச்சியை விட; முறையான உறவுகள் மூலம்,
           கிடைக்கும் இல்லறத்தின் சிக்கலான வாழ்வியலே சிறந்ததாகும்.

0658.  கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்
           முடிந்தாலும் பீழை தரும்

           விழியப்பன் விளக்கம்: சான்றோர்கள் ஒதுக்கிய தீய வினைகளை, ஒதுக்கி வாழத்
           தவறியோர்க்கு; அவ்வினைகள் முடிவுற்றாலும், தீமையையே அளிக்கும்.
(அது போல்...)
           முன்னோர்கள் தவிர்த்த தகாத உறவுகளை, தவிர்த்து வாழ முயலாதோர்க்கு; அவ்வுறவுகள்
           கைகூடினாலும், மனவுளைச்சலையே தரும்.

0659.  அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
           பிற்பயக்கும் நற்பா லவை

           விழியப்பன் விளக்கம்: பிறர் கண்ணீர் சிந்த பெற்றவற்றை, நாம் கண்ணீர் சிந்த இழப்போம்;
           தூய்மையான வினைகளால் பெற்றவற்றை இழப்பினும், அவை மீண்டும் பலனளிக்கும்.
(அது போல்...)
           பிறர் உரிமையை அழித்து வெல்வதை, நம் உரிமை அழிய தோற்போம்; உண்மையான
           உரிமைப்பகிர்வால் வெல்வதைத் தோற்பினும், அவை மீண்டும் வந்தடையும்.

0660.  சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண்
           கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று

           விழியப்பன் விளக்கம்: வஞ்சம் நிறைந்த தீவினைகளால், பொருட்களைச் சேர்த்துப்
           பாதுகாப்பது; ஈரமண்ணால் செய்த பாத்திரத்தில், நீரை நிரப்பி சேமிக்க எண்ணுவதைப்
           போன்றதாகும்.
(அது போல்...)
           குழப்பம் நிறைந்த மனதில், சிந்தனைகளைக் கோர்க்கத் திட்டமிடுவது; கற்பனையால்
           வரைந்த ஓவியத்தில், ஆன்மாவைப் புகுத்தி உயிர்ப்பிக்க நினைப்பதைப் போன்றதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக