திங்கள், ஜூலை 27, 2015

உறவும் உடைசலும்...




       சென்ற சூலை-16 ஆம் தேதியன்று இரவு மேலுள்ள படத்தில் உள்ள சிறு-தட்டு உடைந்து விட்டது. 2 ஆண்டுகளுக்கும் மேலாய்... என்னுடன் இருந்தது! எனக்கு, என்னவளுக்கு, என்மகளுக்கு என்று - மூன்று, மூன்றாய் வாங்கிய பொருட்களுள் ஒன்று. அன்றே மூன்று முறை தவறியது; கீழே விழாமல் பிடித்துவிட்டேன். ஆனால், நான்காவது முறை தவறிவிட்டது. சரி... அதற்கென்ன?! என்கிறீர்களா; இதோ, வருகிறேன்:
  • நாம் ஒவ்வொருவரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறவுகளை இப்படி உடைந்து/விரிசல் விடுவதை கடந்து வந்திருப்போம். ஆனால், எத்தனை முறை அப்படி உடையக்கூடாது  என்ற கவனத்துடன் செயல்பட்டிருப்போம்?! ஒருமுறை? இரண்டுமுறை??
  • மேற்சொன்னது போல் அன்றே முதல் மூன்று முறை நான் கவனமாய்; உடைந்து விடுமோ?! என்ற ஐயத்தால்; உடைந்து விடக்கூடாதே! என்ற ஆதங்கத்துடன் இருந்ததால் - அதை தடுத்து காப்பாற்றி/பத்திரப்படுத்த முடிந்தது.
  • ஆனால், நான்காவது முறை எனக்கு அந்த ஐயமும்/ஆதங்கமும் இல்லை; அல்லது... அதுபற்றிய கவனம் இல்லை. ஒரு அலட்சியம்  இருந்திருக்கிறது; அதனால், அந்த பொருளை பத்திரப்படுத்த  முடியாமல் போய்விட்டது. 
  • அதுபோலவே, நாம் ஒவ்வொரு உறவும் உடையும் நிலை வரும்போதெல்லாம் சில/பல நேரங்களில் "கவனமாய்"தடுத்திருப்பினும்; ஏதோவொரு ஒருமுறை கவனக்குறைவால் தவறவிட்டு அந்த உறவை உடைத்து விட்டிருப்போம்.
  • சரி... உடைந்ததை (மேலுள்ள தட்டு போல்) ஒட்டவைப்பது சாத்தியம் அன்றுதான்! ஆனால் "தவற விட்ட தவறை" எண்ணி; அதற்காய் வருந்த வேண்டும்! கண்டிப்பாக பழையவாறே அந்த உறவை(தட்டை) மீட்டிடுதல் சாத்தியமில்லை. ஆனால் "சிறு-தழும்புடன்" அதை பழைய-நிலைக்கு மிக-அண்மையான நிலைக்கு மீட்டிடுதல் சாத்தியமே!
  • குறைந்தபட்சம் - அதற்கான முயற்சியையாவது நாம் செய்யவேண்டும்! அந்த முயற்சி கூட செய்யவில்லை எனில் "தவற விட்ட தவறு";  பின் குற்றமாகிவிடுகிறது! குற்றம் என்று தெரிந்தபின் வரும் அந்த குற்ற-உணர்வு பெருவலி கொண்டது. எனவே, உடைந்த உறவுகளை சரிசெய்திட... 
சிறு-முயற்சியாவது செய்வோம்! குற்ற-உணர்வின்றி இருப்போம்!!

செஞ்சுருவேன் - மாரி



     சமீபத்துல வெளிவந்த மாரி-படத்துல தனுஷ்; அடிக்கடி கையை ஸ்டையிலா(?!) ஆட்டி, ஆட்டி "செஞ்சுருவேன்"ன்னு மொட்டையா சொல்லுவாரு.

     சரி... என்ன செஞ்சுருவேன்னு சொல்லு(ங்க)ய்யா! மொட்டையா செஞ்சுருவேன்னா; அதுல "பலானா, பலானா" அர்த்தம் கூட வருதில்ல?!

   அதுல வேற... எப்ப பார்த்தாலும் "ஒரு ஆம்பளைய பார்த்து; இன்னொரு ஆம்பளை" செஞ்சுருவேன்னு சொல்றாங்க!! அட... அப்ரசுன்ட்டுகளா!... பார்த்து பேசுங்கப்பா!!

{காக்கா-முட்டை போன்ற படங்களை தயாரிச்சா மட்டும்; போதாதுங்கறேன்...!!!}  

பின்குறிப்பு: அப்புறம் தனுஷு! ஒருத்தரு "ஒரு விரலை ஆட்டி ஆட்டி" பேசுனதுக்கே இரசிகப்-பெருமக்கள் நல்லா செஞ்சுட்டாங்க! நீங்க 2 விரலை காட்டுறீங்க; பார்த்து... உங்களுக்கு "மொத்தமா"செஞ்சுறப் போறாங்க!!!



முக்கிய கட்சிகளின் பெயர்கள்...


இதை கவனித்து இருக்கிறீர்களா?!

      இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான கட்சிகளின் தமிழ் பெயர்கள் "கழகம்/கட்சி" என்ற பெயரில் தான் முடிகின்றன! இவற்றின் "சுருக்கெழுத்து" பெயர்கள் "க" என்ற குரிளுடன் தான் முடிகின்றன. அதாவது "பாஜக/திக/திமுக/அதிமுக/மதிமுக/தேமுதிக/..." என்பன போன்று.

ஆனால்...

பேச்சு வழக்கில் பாஜ"கா"/தி"கா"/திமு"கா"/அதிமு"கா"/... என்று "கா" என்ற நெடிலோடு தான் "சொல்லவோ/கேட்கவோ" செய்கிறோம்.

இதை "எவரேனும்" கவனித்து இருக்கிறீர்களா?!   

ஞாயிறு, ஜூலை 26, 2015

இறை-நம்பிக்கையில் ஓர் பகுத்தறிவு...



           இறைவன் இருக்கிறாரா? இல்லையா?? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இரண்டு தலையங்கள் இறை-நம்பிக்கையூனூடே "ஒரு பகுத்தறிவு(வும்)" இருப்பதை வெளிப்படுத்தும். பாகம்-1 இல் "இறைவழிபாட்டில் அபத்தங்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை; எந்த ஓர் நம்பிக்கையும் வரைமுறை தாண்டி அதிகமாகும் போது "மூட நம்பிக்கை" உருவாவதை தடுக்க முடியாது; அது அளவு கடந்த நம்பிக்கையின் பால் விளையும் ஒரு விளைவு. அம்மாதிரியான மூட-நம்பிக்கைகளில் எனக்கும் உடன்பாடில்லை" என்ற பின்குறிப்பை இட்டிருப்பேன். ஆம்! இறைவழிபாட்டில் "மூட-நம்பிக்கை(யும்)" இருக்கிறது என்ற என்-ஒப்புதல் இன்றும் அப்படியேத்தான் இருக்கிறது. அதனால் தான் "சுவாமியே சரணம் ஐயப்பா" என்ற தலைப்பில் ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் முறை பற்றி எழுதிய என்னால் "இறைவழிபாட்டில் நேர விரயம் தேவையா?..." என்றும் எழுத முடிந்தது. மற்ற விசயங்களைப்  போல் இறை-நம்பிக்கையையும் பகுத்தறிந்து பார்க்க விரும்பிகிறேன். 

      அதனால் இறைவன் (/இயற்கை/உயர்-சக்தி) மேல் இருக்கும் என் "அடிப்படை நம்பிக்கை" மாறவில்லை. பாகம்-2 இன் பின்குறிப்பில் சொல்லி இருந்த வண்ணம் "இந்த பிரபஞ்சத்திற்கு இணையான; இன்னுமோர் பிரபஞ்சத்தை - மனிதன் உருவாக்கும் வரை; நமக்கும் மேலான உயர்-சக்தி இருக்கிறது என்பதை நாம் மறுக்கமுடியாது". அப்படி ஒரு பிரபஞ்சம் உருவானால், இறைநம்பிக்கையில் உள்ள என் மேற்கூறிய "அடிப்படை நம்பிக்கை" கூட மாறும். அப்படி மாற்றிக்கொள்ள எனக்கு எந்த தயக்கமும் இருக்காது. வாட்ஸ்-ஆப்பில், என்-நட்பு வட்டத்தில் திருக்குறள் பற்றி பேசிக்கொண்டிருந்த போது, நட்பொன்று என்னை ஒரு திருக்குறள் சொல்ல சொல்லிற்று. நான் என்னப்பன் அடிக்கடி சொல்லும் "ஊழிற் பெருவலி யாவுள?..." என்ற குறளை சொன்னேன். விளக்கம் கேட்க, அதையும் சொன்னேன். உடனே, "அப்படியானால், எல்லாவற்றையும் விதி என்று ஏற்கவேண்டுமா?" என்றொரு விவாதம் துவங்கியது.

        "காரணம் ஏதுமின்றி, என்மீது எந்த குற்றமும் இல்லாமல் - நான் தண்டிக்கப்படும்போது" அதை விதி என்று நான் ஏற்றுக்கொள்வேன் என்றேன். வேறென்ன செய்வது? என் மனம் அமைதி கொள்ள எனக்கொரு காரணம் தேவைப்படுகிறது. அதற்காய் எல்லாவற்றிற்கும் "விதியே காரணம்" என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றேன். அப்போது ஒருவரின் விதி கடவுளால் அவர் பிறக்கும்போதே விதிக்கப்படுவது என்ற வாதம் வந்தது; எனக்கு அதில் உடன்பாடில்லை என்றேன். என் இறை-நம்பிக்கை என்பது வேறு! எல்லாவற்றையும் இறைவனோடு தொடர்புபடுத்துவது என்பது வேறு. எவரேனும் என்னிடம் "கடவுளை காட்டு!" என்றால் நான் உடனே சரணடைந்துவிடுவேன்; இல்லையப்பா! நான் கடவுளைப் பார்த்தது கிடையாது! எனவே என்னால் காட்டமுடியாது; ஆனால், அவர் இருக்கிறார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்பேன். "தூணிலும் இருக்கிறார்! துரும்பிலும் இருக்கிறார்!!" என்றால் "காற்றில் உமிழ்வது" கடவுளின் மேல் உமிழ்வதாய் ஆகிவிடும். 

     மற்றவரை திட்டினால் "அது கடவுளை திட்டுவதாய்" ஆகிவிடும். "அஹம் பிரம்மாஸ்மி (நான் கடவுள்)!" என்பது உண்மையாகிவிடும்; ஏனெனில் எனக்குள்ளும் தானே கடவுள் இருக்கிறார்? புலால் உண்ணுதலை "கொன்றால் பாவம்! தின்றால் தீரும்" என்று நியாயப்படுத்த முடியாது; ஏனினில், ஒவ்வொரு உயிரும் கடவுளே! கடவுளுக்கு "உயிர் பலி" கொடுத்தல் கூடாது. இப்படி பலவற்றை உதாரணம் காட்டி கேள்வி கேட்கமுடியும்.  அது போலவே "அவனின்றி ஓரணுவும் அசையாது!" என்பதும். அப்படியானால் பிறந்து ஒரு-மாதமே ஆன ஒரு குழந்தை "கடுமையான நோயால்" பாதிக்கப்படுவது; அப்படி பாதிக்கப்பட்டு இறக்காமலும் சித்திரவதை அனுபவிப்பதற்கும் கடவுள் பொறுப்பேற்கவேண்டும்! அல்லவா? அப்போது, கடவுள் ஏன் இப்படி செய்கிறார் என்ற கேள்வுக்கும் பதில் சொல்ல நாம் கடமைப்பட்டு இருக்கவேண்டும்! மாறாய்... அதெல்லாம் கடவுள் ஏற்கனவே எழுதிய விதி என்று சொல்லி தப்பித்தல் நல்லதன்று. 

      தொடர்ந்த விவாதத்தின் போது இன்னொரு நண்பர் "நம்பிக்கை+வினை+விதி+முற்பிறவி+கர்மா+மற்றும்பல = சக்தி/கடவுள்" என்றார். அந்த விளக்கத்தில் எனக்கு முழு உடன்பாடு இருக்கிறது; ஆம், பலதும் சேர்ந்ததன் கலவை தான் "கடவுள்". எனவே, கடவுளே எல்லாவற்றிற்கும் காரணம் என்பது சரியல்ல. இந்த கருத்தை படித்தவுடன் எனக்குள் கீழ்வரும் உவமானமும்/விளக்கமும் வந்தது. உலகம் என்பதை "ஒரு கார்ப்பரேட்" நிறுவனம் என்றும், கடவுள் என்பதை அந்த நிறுவனத்தின் "நிர்வாக இயக்குனர்" என்றும்  வைத்துக் கொள்வோம். பொதுவான பார்வையில் நிர்வாக இயக்குனர்(கடவுள்)-தான் எல்லாவற்றையும் செய்வதாய் தோன்றும். ஆனால், அது உண்மையல்ல... அவர் எல்லாவற்றையும் மேற்பார்வை பார்ப்பவர். அவரின் முக்கிய-வேலை கம்பெனி நடப்பதற்கு தேவையான பணம்/பொருள் போன்றவற்றை கொடுப்பது; அது கிடைக்க வழி வகுப்பது. அதாவது, கடவுள் - மனிதனையும்/மற்ற உயிரனம் போன்றவற்றை படைத்தது போல்!

       நிர்வாக இயக்குனர்(கடவுள்) என்பவர் தனக்கு கீழே "நம்பிக்கை+வினை+விதி+முற்பிறவி+கர்மா+மற்றும்பல" போன்று பல துறைகளை அமைக்கிறார்! அதன் பின்னர் அவருக்கு அங்கே பெரிய வேலையில்லை. ஏனெனில், அவற்றை கவனிக்க தகுதியான ஆட்கள் உள்ளனர். வேறொரு துறையில் உள்ள ஒருவர் செய்யும் தவறுக்கு நிர்வாக இயக்குனர்(கடவுள்) பொறுப்பாவாரா?! ஒரு உதாரணம்: கழிவறை சரியாக சுத்தம் செய்யப்படவில்லை என்றால், அதற்கு நிர்வாக இயக்குனர்(கடவுள்) பொறுப்பாவாரா?! இல்லையே! கழிவறையை சுத்தம் செய்யும் வேலையை கண்காணித்து, பராமரிக்கும் துறை தான் அதற்கு காரணம்; அத்துறை தலைவர் கூட நேரடியாய் பொறுப்பாக மாட்டார். ஏனெனில், ஒவ்வொரு துறையும் பல்வேறு ஊழியர்களை கொண்டிருக்கிறது; ஒவ்வொரு ஊழியரும், ஒவ்வொரு "தனி" செயல்/வினைக்கு காரணம். எனவே, ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு செயலுக்கும்/வினைக்கும் ஆன சாதக/பாதகங்கள் உள்ளன.

     அப்படிதான் கடவுள் என்பவரும்! எல்லாவற்றிற்கும் கடவுள் (நிர்வாக இயக்குனர்) என்ற ஒருவரையே காரணம் காட்டுதலோ/சாடுதலோ முறையன்று. இவை எல்லாம் தனித்தனி நிகழ்வுகள்(துறைகள்); இவற்றிற்குள் ஒரு தொடர்பு இருக்கலாம்! இவை எல்லாம் சேர்ந்த தொகுப்பாய் கடவுள் இருக்கலாம். ஆனால், எல்லாவற்றிற்கும் கடவுள் மட்டுமே காரணம் அல்ல; அதை கடவுளே(கூட)ஏற்கமாட்டார். மேலும், உலகம் என்பது "இல்லம்" என்று கொண்டால்... அந்த இல்லத்தில் ஒவ்வொருவரின் பங்கும் முக்கியமாகிறது; குடும்பத் தலைவர் தான் இல்லத்தின் எல்லா விசயங்களுக்கும் காரணம் என்றால் சரியாகுமா?! அங்கே மனைவி/கணவன்/மகன்/மகள்/பெற்றோர் என்ற பல உறவுகளின் பங்களிப்பு உள்ளது. இதில் எவரது பங்களிப்பு உயர்ந்தது என்ற கேள்விக்கே இடமில்லை! எல்லாவற்றையும் சேர்த்த கலவை தான் அந்த இல்லம். கடவுளே என்றாலும்... ஒரு குடும்பத்தை அவரால் மட்டுமே நடத்துதல் சாத்தியம் இல்லை. ஒருவேளை...

  ஆண்தான் ஒரு குடும்பத்தின் எல்லாவற்றிற்கும் ஆதாரம்!
    என்ற தவறான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் மனோநிலை தான்... 
            உலகின் எல்லாவற்றிற்கும் கடவுள்தான் ஆதாரம் என்று சொல்ல வைத்ததோ???!!!                        

பகுத்தறிவு எப்போது உருவானது???



          "இறை-நம்பிக்கையில் ஓர் பகுத்தறிவு" என்ற இந்த வார தலையங்கத்தை படித்திருப்பீர்கள். அந்த விவாதத்தின் போது என் நட்புகளிடம் "எனக்கும் இறை-நம்பிக்கை உள்ளது; ஆனால், அந்த நம்பிக்கையையும் நான் பகுத்தறிய விரும்புகிறேன்" என்றேன். அவர்கள் நான் கடவுள்-மறுப்பாளன் என்ற ரீதியில் அடிக்கடி; கடவுள் இருக்கிறார் - தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்பன போன்ற பொது-விவாதங்களை வைக்க ஆரம்பித்தனர். அவர்கள் இறை-நம்பிக்கையில் பகுத்தறிவது தவறு என்ற அடிப்படையில் பேசியதாய் தோன்றியது. அப்போது, நட்பொன்று என்னைப் பார்த்து "பகுத்தறிவு எப்போது உருவானது?!" என்றொரு கேள்வியை கேட்டது. நான் சற்றும் யோசிக்கவில்லை! இப்படி பதிலளித்தேன்: ஆதாம் - ஏவாள் என்பவர்களை கடவுள் படைத்தார் என்பதில் பெரும்பான்மையில் எல்லா மதங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. அப்படியெனில், ஏவாள் ஆப்பிளை உண்டபோதே பகுத்தறிவு உருவாகிவிட்டது என்றேன். 

       ஆம்! கடவுள் அந்த பழத்தை உண்ணவேண்டாம் என்று கூறியும், அதை ஏவாள் உண்டாள் என்றால்... அங்கே "ஏன்? உண்டால் என்ன?" என்றொரு கேள்வி எழுந்திருக்கிறது. அந்த கேள்விதான் பகுத்தறிவின் பிறப்பிடம் என்று நான் பார்க்கிறேன். இங்கு இன்னொன்றையும் கவனிக்கவேண்டும்; கடவுள் நேரடியாக "இந்த ஆப்பிளை உண்!" என்று கட்டளை இட்டிருக்க முடியும். ஆனால், அப்படி செய்யாது "உண்ண வேண்டாம்" என்றார்; அப்படி எனில், பகுத்தறிவை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதைக் கடவுளே, மனிதனிடமே விட்டு விட்டதாய் தெரிகிறது. மனிதன் தானாகவே "பகுத்தறிய வேண்டும்" என்பதே கடவுளின் விருப்பமாய் இருந்திருக்க வேண்டும்; உனக்கு பகுத்தறிவை கொடுத்ததோடு என் கடன் முடிந்துவிட்டது. இனி, உன் பகுத்தறிவை உண்மையாய்/உரிமையாய் உபயோகிப்பது உன் கடமையடா மனிதா! என்று அவர் விட்டிருக்கவேண்டும். எனவே, என்னளவில் - பகுத்தறிவு என்பது...

ஏன் இந்த பழத்தை சாப்பிடக்கூடாது? - என்ற கேள்வியில் பிறந்திருக்கவேண்டும்!!!      

சனி, ஜூலை 25, 2015

பூர்விகா ஆடி-சேல்...



"பூர்விகாவுல ஆடி சேலு! என்ன வேணுமோ கேளு!!"

வேணாம்...

ஏதாவது ஏடாகூடமா கேக்கறதுக்குள்ள ஓடிடு!! ;)

புதன், ஜூலை 22, 2015

கொசமட்டம் ஃபைனான்ஸ்...


கொசமட்டம் "கோல்டு"லோன்னா... (நகை)உங்க வீட்டுல இருக்கற மாதிரி!
அய்...
அப்புறம் ஏன்யா "வட்டி" வாங்கறீங்க?! wink emoticon

திங்கள், ஜூலை 20, 2015

வியாழன், ஜூலை 16, 2015

எளிய முறையில் "அயர்ன்" செய்ய...



    எளியமுறையில் துணிகளை "அயர்ன்" செய்யவேண்டுமா?! இதோ... ஒரு உபயோகமான/வெற்றிகரமான வழிமுறை. முதல் படத்தில் காட்டியுள்ளது போல்; முதலில், துணிகளை ஒழுங்காய் மடித்து உங்கள் படுக்கையின் மேல் சரியாய் அடுக்குங்கள். பின்னர், இரண்டாவது படத்தில் உள்ளது போல், படுக்கை-விரிப்பை அதன் மீது சரியாய் விரித்து; வழக்கம்போல் உறங்குங்கள். ஓரிரு தினங்களில் துணிகள் நன்றாக "அயர்ன்"  செய்யப்பட்டிருக்கும். உடல் எடையைப் பொறுத்து "அயர்ன்" செய்யப்படும் நேரம் மாறுபடும் (சிரிக்காமல்... சிந்தியுங்கள்!). 

கவனிக்க வேண்டியவை: 
  1. மின்சார செலவு மிச்சம்.
  2. நிறைய துணிகளை அடுக்கக்கூடாது; முதுகு-வலி ஏற்படும்.
  3. அயர்ன்-மூலம் ஏற்படும் வெப்பம் இல்லாததால், துணிகள் விரைவில் வீணாகாது.
  4. இலவச முதுகு-மஸ்ஸாஜ் கிடைக்கும். மனைவியையோ அல்லது வேறோருவரையோ நாடத் தேவையில்லை (நோ சிரிப்பு! சிந்தனை...!).
  5. ப்ளானிங் ரொம்ப முக்கியம்! சோம்பல் கூடாது (ஹா... ஹா... ஹா...); 2 நாட்களுக்கு பின் அணியவேண்டிய துணிகளை இன்றிரவே படுக்கையில் அடுக்கவேண்டும்.

புதன், ஜூலை 15, 2015

சென்ற தலைமுறை அப்பாக்கள்...

 


    சவாலான-சம்பளத்துடன், வாழ்க்கை ஓட்டத்தில் "மிக வேகமாய்/மிக விவேகமாய்/மிக சிரத்தையாய்" ஓடிய சென்ற-தலைமுறை அப்பாக்கள் - வாழ்க்கை சூழலால் தங்கள் பிள்ளைகளுக்கு செய்ய-மறந்த/செய்ய-முடியாத பலவற்றை; தங்களின் "பெயரன்/பெயர்த்தி" இவர்களுக்கு செய்வதன் மூலமாய் நிவர்த்தி செய்துகொள்கிறார்கள்.

இந்த விசயத்தில்; சென்ற-தலைமுறை அப்பாக்கள் பேரதிஷ்ட்டக்காரர்கள்!!!

செவ்வாய், ஜூலை 14, 2015

ரோமியோ ஜூலியட்...



          நேற்றிரவு இணையத்தில் "ரோமியோ  ஜூலியட்" தமிழ் திரைப்படம் பார்த்தேன். அருமையான கரு கொண்ட கதைக்களம். என்னளவில்... விட்டுவிட்டுப்போன-அந்த காதலியை; "உண்மையாகவே" காதலன் வெறுத்து அவளை ஏற்றுக்கொள்ளாமல் முடித்திருக்க வேண்டிய படம். ஆனால்... "காமடி"; மற்றும் எவர் வகுத்தது என்றே தெரியாத "கமர்ஷியல்" படமாகவேண்டும் என்ற கோட்பாடு - இவையிரண்டும் பின்பாதியை வீணடித்து கருவையும் "அபார்ஷன்" செய்துவிட்டார்கள். இறுதியில்... கமர்ஷியலாகவும் அந்த படம் எதையும் சாதிக்கவில்லை! மட்டமான படங்களின் பட்டியலில்; இணைந்திருக்கும் இன்னுமொரு படம் என்ற சாதனையைத்தவிர!!

பொதுக்குறிப்பு: கமர்ஷியலாக படமெடுக்கிறேன் என்ற டுபாக்கூர்-கோட்பாட்டுடன் இப்படி அருமையான "கருவை" அபார்ஷன் செய்யும் அபத்தத்தை இன்னும் எத்தனை நாளைக்கு தான் கடைபிடிக்கப் போகிறார்களோ?!