செவ்வாய், ஜூலை 05, 2016

இரண்டாமாண்டு இரமதான் நோன்பு...


            "இளங்கோவும் இஃப்தாரும்" என்ற தலையங்கத்தில் சொல்லியிருந்தது போல், சென்றாண்டு முதன்முதலில் இரமதான் நோன்பு இருந்தேன். அதை இந்த ஆண்டும், இனி வரும் ஆண்டுகளிலும் தொடரவேண்டும் என்று ஒரு ஆவல்; உள்மனமும் அதை வலியுறுத்தியது. அதுபோலவே, இந்த ஆண்டும் இரண்டாவது முறையாய் நோன்பு இருக்கிறேன். இறையருளின் துணையுடன், இன்றிரவு நோன்பு நிறைவுபெறுகிறது. இதுவரை எந்த சிரமும் இல்லை; எனக்கு, இந்த நோன்பு இருக்கும் முறை பிடித்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட தலையங்கத்தில் சொல்லியிருந்தது போல்; என் நோன்பு-குரு காதர் எனும் நண்பன், இந்த ஆண்டும் என் சந்தேகங்களை உடனுக்குடன் நீக்கி; எனக்கு துணை புரிந்தான். அதுபோலவே, எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவிலும் - பயனுள்ள இஸ்லாமியச் சிந்தனைகளைப் பகிர்ந்தான். எனக்கு மட்டுமல்ல; மற்ற நண்பர்களுக்கும் அந்த சிந்தனைகள் நல்ல புரிதல்களை உருவாக்கியது. ஒவ்வொரு ஆண்டு, இந்த நோன்பு தொடரும்...

           என்ற நம்பிக்கை நிறைந்திருக்கிறது. நோன்பிருத்தல் நல்ல விடயம்; உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஓய்வையளிக்கிறது நோன்பு. அதனால் தான், வேறுபாடு ஏதுமின்றி - தங்கள் நம்பிக்கைக்கு ஏற்ற வகையிலும்; தங்கள் வாழ்வியலுக்கு ஏற்ற வகையிலும் - எல்லா மதங்களும் நோன்பை வலியுறுத்துகிறது. உடல் உறுப்புகளை மட்டுமல்ல; மனதைக் கட்டுப்படுத்தவும் - நோன்பு உபயோகமாய் இருக்கிறது. மனது தன் கட்டுப்பாட்டிற்குள் வரும்போது, நல்ல சிந்தனைகள் எளிதில் சாத்தியமாகும். இந்த நல்ல சிந்தனைகள் - நாம் செய்யும் தவறுகளையும், நமக்குத் தெளிவாய் உணர்த்துகின்றன. பெரும்பாலான தவறுகள், உடனுக்குடன் திருத்தப்படும். வைராக்கியத்துடன் முயன்றால், எல்லா தவறுகளும் திருத்தப்படும். உடலையும், மனதையும் கட்டுப்படுத்தி - வாழ்வியலை நன்முறையில் அனுபவிப்பதே நோன்பின் அடிப்படையாகப் பார்க்கிறேன். இந்த அடிப்படையில் தான், இரமதான் நோன்பையும் அணுகுகிறேன். வள்ளுவப் பெருந்தகையின் 

      "செவிக்குண வில்லாத போழ்து" எனும் குறளும் இதைத்தான் வலியுறுத்துகிறது. இந்தக் குறளின் நேரடிப் பொருள் "கற்றல் எனும் செவிக்குண்டான உணவு இல்லாத வேளையில், வயிற்றுக்குண்டான உணவை அளிக்கவேண்டும்" என்பதே. இதையே சற்று எதிர்வினையா(ய்/ல்) யோசித்தால்; வயிறுமுட்ட உண்டால், செவிக்குண்டான உணவான கற்றலை சரிவர மேற்கொள்ள முடியாது என்பது(ம்) விளங்கும். தேடல் துவங்கி, கற்பனை/சிந்தனை வரையான பலவும் கற்றல் எனும் பிரிவில் வருபவையே. எனவே, நோன்பு என்ற வரையறை மூலம் வயிறுமுட்ட உண்ணாமல், வயிற்றைக் காலியாக வைத்திருந்தால் - தேடல் துவங்கி கற்பனை/சிந்தனை அனைத்தும் எளிதில் சாத்தியப்படும் என்பதே இக்குறள் விளக்கும் மற்றொரு பொருள். இதை என் அனுபவத்தில் நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். அந்த அனுபவத்தைத்தான் "உணவும் கற்பனையும்" என்ற கவிதையில் வெளிப்படுத்தி இருந்தேன்; இதுதான் என் இரமதான் நோன்பின் அடிப்படை.

      மற்றபடி, என் நோன்பிருக்கும் நிலைப்பாட்டில் மதம் சார்ந்த விடயம் ஏதுமில்லை! ஏதோ இரட்டைக் குதிரையில் சவாரி செய்ய நினைப்பதாய் தோன்றக்கூடும். ஆனால், என் நோக்கமோ/விருப்பமோ அதுவல்ல. வேண்டுமானால், இரண்டு குதிரைகளை வைத்துக் கொண்டு "மனிதம் எனும் வண்டியில்" நான் பயணிக்க முனைவதாய் சொல்லலாம். அதில், எந்த தவறும் இல்லை. ஒற்றைக் குதிரையில் செய்யும் பயணத்தை விட; இரட்டைக் குதிரைகளைக் கொண்டு வண்டியில் செய்யும் பயணம் - அதிசுகமாய் இருக்கும். ஆனால், இரண்டு குதிரைகளையும் சரியான விதத்தில் கடத்தும் திறன் வேண்டும்; எனக்கு அந்த திறம் இருப்பதாக பெரிதாய் நம்புகிறேன். மேலும், இங்கே என்னுடைய கவனம் எந்தக் குதிரையின் மேலும் இல்லை! என் முழுக்கவனமும், மனிதத்தை அடிப்படையாகக் கொண்ட என் பயணத்தில் தானிருக்கிறது. அந்தக் கவனம் இருக்கும் வரை - இரண்டு குதிரைகள் மட்டுமல்ல! இரண்டுக்கும் மேற்பட்ட குதிரைகளைச் சேர்ப்பினும்...

          என் பயணம் செவ்வனே தொடரும் என்ற நம்பிக்கை மிகுந்திருக்கிறது. மேலும், மதம் என்றால் என்னவென்பதை; என் பார்வையில் முன்பே மதமும்... "மாதா"வே!!! என்ற மனதங்கத்தில் விளக்கி இருக்கிறேன். எனவே, என்னுடைய குறிக்கோள் - மிக்கது தெளிவாய் மனிதமெனும் வண்டியைச் செலுத்துவதில் முனைப்பாக இருக்கிறது. எனவே, நோன்பிருத்தல் ஒரு மிகப்பெரிய வாழ்வியல் அனுபவம் என்பதை உணரவேண்டும். எந்த நோன்பு பிடித்தமான இருக்கிறதோ - அந்த நோன்பில் கவனமாய் இருப்பதே முக்கியம்; கார்த்திகை மாத விரதத்தையும் தொடர்ந்து மேற்கொள்கிறேன். அதுபோல், ஒன்றுக்கு மேற்பட்ட நோன்பைக் கூட கடைப்பிடிக்கலாம்! ஆனால், நோன்பின் இயல்பான/அடிப்படையான - உடம்பை/சிந்தனையை தெளிவாக வைத்திருப்பதில் கவனம் இருக்கவேண்டும். நல்ல உடல்நிலையும்/நற்சிந்தனைகளும் - நல்ல மனிதத்தை உருவாக்கும் என்பது, என் அனுபவப்பூர்வமான புரிதல். மனிதம் கற்கும்/காக்கும் என் முனைப்பில்...

இரண்டாமாண்டு இரமதான் நோன்பும்... 
இறையருளுடன் இன்று நன்முறையில் நிறைவடையும்!!!               

திங்கள், ஜூலை 04, 2016

குறள் எண்: 0337 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 034 - நிலையாமைகுறள் எண்: 0337}

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல

விழியப்பன் விளக்கம்: எந்நிலையிலும் வாழ்வியலின் நிலையாமையை பகுத்தறியாதோரே; கோடியை கடந்த எண்ணிக்கையில், கற்பனை செய்வர்.
(அது போல்...)
எவ்வகையிலும் சமூகத்தின் வலிமையை உணராதவர்களே; எல்லையைக் கடந்த வகையில், அரசை குறைகூறுவர்.

ஊடகங்களின் இரட்டை நிலைப்பாடு...


     சமீபத்தில், நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் நடந்த கொலை தொடர்பாக - ஊடகங்களின் தரமற்ற/தர்மமற்ற அடாவடித்தனத்தை ஒரு தலையங்கமாய் நேற்று எழுதி இருந்தேன். அதில், குற்றத்தில் ஈடுபட்டவரின் குடும்பத்தார் மற்றும் அவரின் சுற்றத்தாரை எப்படி கீழ்த்தரமான கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள் என்பதையும்; அவர்களின் பலவகைப் புகைப்படங்களை எப்படி வெளியிடுகிறார்கள் என்பதையும் குறிப்பிட்டிருந்தேன். அதே ஊடகங்கள், கொல்லப்பட்டவரோ அல்லது கொன்றவர்/விபத்தைச் செய்தவர் "அதிக பணபலமோ/அரசியல் பலமோ - அல்லது இரண்டும் சேர்ந்த படைபலமோ" இருப்பின் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தவே இத்தலையங்கம். எடுத்துக்கொண்டிருக்கும் செய்தி என்னவென்று உங்களில் பலருக்கும் புரிந்திருக்கும். ஆம், சென்னை தரமணி அருகே நடந்த ஒரு சாலை விபத்தில், திருவான்மியூரைச் சேர்ந்த தொழிலாளர் கொல்லப்பட்டது...

   அனைவருக்கும் தெரிந்ததே! விபத்தை ஏற்படுத்தியது சென்னையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகள் என்பது செய்தி. அதிலும், மதுவருந்திவிட்டு மகிழ்வுந்தை ஓட்டியிருப்பதாய் செய்திகள் சொல்கின்றன. இந்த சம்பவம் நடந்து சில தினங்கள் ஆகின்றன. விபத்தைச் செய்த பெண்ணைக் கைது செய்திருப்பதாகவும் செய்தி வந்துள்ளது. எல்லா ஊடகங்களும், விபத்தில் இறந்த அந்த தொழிலாளியின் புகைப்படத்தையே தொடர்ந்து வெளியிட்டன; ஆனால், அந்தப் பெண்ணின் புகைப்படமோ அல்லது தொழிலதிபரின் புகைப்படமோ - எந்த ஊடகத்திலும் வெளியிடப்படவில்லை! இந்த தலையங்கத்தின் முதல் வடிவத்தை நேற்று காலை எழுதியபின், நேற்றிரவு தான் - ஒரேயொரு தொலைக்காட்சி மட்டும் அப்பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டிருப்பதாய் - முகநூல் மூலம் அறிந்தேன். உண்மையில், இதே அடிப்படையில் - இந்த எல்லையில் இருந்தே - ஊடகங்கள் செய்திகளை வெளியிடவேண்டும்...

          என்பதே மேற்குறிப்பிட்ட என் நேற்றைய தலையங்கத்தின் பார்வையும். அதவாது, சர்வாதிகார நாடுகள் மற்றும் அதிகட்டுப்பாடு கொண்ட நாடுகளில் இருப்பது போல் - ஒரு குற்றம் நடந்தால், அந்த குற்றச் செய்தியை மட்டும் வெளியிட்டால் போதுமானது. குற்றம் செய்தவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் - இவர்களின் எவரைப் பற்றிய எந்த செய்தியையும் வெளியிடக்கூடாது என்பதே என் விருப்பமாகவும்/நிலைப்பாடாகவும் இருக்கிறது. அந்த வகையில் - ஒரு தொழிலபதிபரின் மகள் செய்த விபத்து பற்றிய செய்திகளை வெளியி(டுவ/ட்ட)தில் - ஊடக செயல்பாடு சரியானதே! ஆனால், இந்த தலையங்கத்தில் பார்வை - இதேமாதிரியான அடிப்படையில் நுங்கம்பாக்கத்தில் நடந்த கொலையில் - ஏன் இந்த ஊடகங்கள் செய்திகளை வெளியிடவில்லை?!  என்பதே. அதிலும், அப்பெண்ணின் பல்வகை புகைப்படங்கள் வெளியிடுவதில் துவங்கி பல்வேறு அடாவடித்தனங்கள். அந்த இளைஞர் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருப்பதைக்கூட...

      அடிக்கடி காட்சிப்படுத்தும் இந்த கேடுகெட்ட ஊடகங்கள் - இந்த தொழிலதிபர் மகளின் பெயரைக் கூட ஏன் இதுவரை வெளியிடவில்லை?! அந்த இளைஞரின் குடும்பத்தார் அனைவரின் புகைப்படத்தையும் வெளியிட்ட ஊடகங்கள்; ஏன், குறைந்தது அந்த தொழிலதிபரின் புகைப்படத்தைக்கூட வெளியிடவில்லை?! சம்பவம் நடந்து, இத்தனை நாட்கள் ஆகியும் ஏன் இது செயல்படுத்தப் படவில்லை? ஆனால், நுங்கம்பாக்கம் சம்பவத்தைப் பற்றி மட்டும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம், சொன்ன செய்திகளையே கொஞ்சம் கூட வெட்கம் இன்றி; திரும்ப திரும்ப வெளியிடுகின்றன! இத்தலையங்கத்தின் இரண்டாம் வடிவத்தை இன்று காலை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட; அந்த இளைஞரை சென்னைக்கு கொண்டுவரப்பட்டதை காண்பித்து; அவர் எந்த அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்; அவர் அனுமதிக்கப்பட்டு இருக்கும் "வார்டு எண்" முதற்கொண்டு சொல்கின்றன. அதுமட்டுமல்ல!...

         அந்த இளைஞருக்கு 8 என்ற எண் இராசியில்லை என்றும் - பல எண்ணியல் அடிப்படையில் விரிவாய் சொல்கிறார்கள்! இவர்களுக்கு கொஞ்சம் கூட சமுதாய அக்கறையோ; சமூகம் பற்றிய பகுத்தறிவோ இல்லையா? இல்லை... பணம்தான் ஒரு குற்றத்தை விரிவாய் சொல்லவும்; அல்லது ஏதும் சொல்லாமல் மறைக்கவும் - முக்கிய காரணமாகிறதா?! அப்படியெனில், பல நன்னெறி நூல்களும் சொல்லும் "அறம் என்பது என்ன?!". இதே ஊடகங்கள், தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் "ஊடக-தர்மம் மற்றும் ஜனநாயக தர்மம்" பற்றி வாய்கிழிய பேசுகின்றனவே?! இப்படிப்பட்ட "இரட்டை நிலைப்பாட்டை"க் கொண்டிருக்கும் இவர்களுக்கு ஊடக-தர்மம் மற்றும் ஜனநாயக தர்மம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? இம்மாதிரியான இரட்டை நிலைப்பாட்டின் போது, இவர்களின் "ஊடக தர்மம்" பணத்தின் பின்னே சென்று ஒளிந்து கொள்கிறதா?! இங்கே எனக்கு இரண்டு காரணிகள் கவனத்திற்கு வருகின்றன: 1) இவர்கள் அந்த தொழிலதிபரிடம்...

          பணம் பெற்றிருக்க வேண்டும்! அல்லது 2) அவரின் பணபலத்தைக் கண்டு பயந்து பின்வாங்கி இருக்கவேண்டும். இரண்டில் எது காரணம் எனினும் அல்லது இவையல்லாத வேறொன்று காரணம் எனினும்; ஒரு சாமான்யன் கொலையைப் பற்றி சாட்சி சொல்ல முன்வராததை - விமர்சிக்கும் அருகதையை இவர்கள் இழக்கிறார்கள். அதனால் தான், ஒரு சாமான்யனுக்கு எந்த ஊடகத்தின் மேலும் "பெருத்த நம்பிக்கை" வருவதில்லை. இந்த இருட்டடிப்பை ஊடகங்கள் "தங்கள் மனசாட்சிக்கு தெரிந்தே; மனசாட்சியைக் கொன்றுவிட்டே" செய்கின்றன என்பது - பேர் அபத்தம்! சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து பல பதிவுகள் வருகின்றன. அவை கண்டிப்பாக அவர்கள் கவனத்திற்கு சென்றிருக்கும். அதையும் தாண்டி, இன்னமும் இவர்கள் அந்த விபத்தைப் பற்றி எந்த அடிப்படை செய்தியையும் வெளியிடாமல்; மறுபக்கம் நுங்கம்பாக்கம் கொலையை செய்த இளைஞர் எந்த வார்டில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார் என்பதை இந்த நொடிவரை...

   காட்சியாகவும்/செய்தியாகவும் வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இவ்வளவு வெளிப்படையாய் தெரிந்த பின்னும்; எப்படி இவர்களால் "இரட்டை நிலைப்பாடு" கொண்டு செயல்பட முடிகிறது. ஒரு சாமான்யனைப் போல், அவர்களுக்கும் பயம் இருக்கும் என்பதை நான் மறுக்கவில்லை! அப்படி இருப்பின், அந்த பயத்தை நான் ஏற்கிறேன். ஆனால், மனசாட்சி சார்ந்த பயமும் - மற்றொரு குற்றம் பற்றிய செய்தியில் இருக்கவேண்டும் அல்லவா? அதற்காகத்தான், மேற்குறிப்பிட்டபடி பல நாடுகளில் இருப்பது போல் "ஊடக தர்மத்துடன்" - எந்த குற்றமாக இருந்தாலும் - அடிப்படைத் தகவல்களை மட்டும் கொடுத்தால் போதும் என்கிறேன். குற்றம் செய்தவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் - இவர்களில் எவரின் பெயரும் கூட தேவையில்லை! மிகமுக்கியமாய், அவர்களின் புகைப்படங்களோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களின் புகைப்படங்களோ தேவையில்லை. சுருக்கமாகச் சொன்னால்...

     மேற்குறிப்பிட்ட விபத்தை இவர்கள் கையாள்வது போல்! இருக்கவேண்டும். செல்வாக்கிற்கு அல்லது சன்மானத்திற்கு அடிபணிந்து - இவர்கள் மாறுபட்ட நிலைப்பாட்டோடு செயல்படக் கூடாது! ஊடகம் என்பது மிகப்பெரிய வலிமை கொண்ட, சமுதாயத்தின் நலனைக் காக்கும் கருவிகளில்/காரணிகளில் முக்கியமானது. இக்கடமை அவர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய கொடை; அதை அவர்கள் சரியான நிலைப்பாட்டோடு அணுகவேண்டும். இல்லையேல்... அவர்கள் இந்தக் கடமையை செய்யாமல் இருப்பது நல்லது. இந்த "இரட்டை நிலைப்பாட்டால்" தான், ஒரு சாமான்யன் - துரதிஷ்ட்டவசமான ஒரு கொலையைப் பார்த்தும்; சாட்சி சொல்ல முடியாமல் "உள்ளுக்குள்ளே இறந்து கொண்டிருக்கிறான்" போலும்! ஒருவேளை, அந்த தொடர்வண்டி நிலையத்தில் ஒரு பெரிய அரசியல்வாதியோ அல்லது ஒரு பெரிய தொழிலதிபரோ இருந்திருப்பின் - சாட்சி சொல்லியிருப்பர்! ஏனெனில், அவர்களின் விவரம் வெளியில் தெரியாது!

என்னவிதமான "கீழ்த்தரமான இரட்டை நிலைப்பாடு" இது???

பல்வகை உறவுகளிருந்தும் அனாதை!!!


ஞாயிறு, ஜூலை 03, 2016

குறள் எண்: 0336 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 034 - நிலையாமைகுறள் எண்: 0336}

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு

விழியப்பன் விளக்கம்: "நேற்று உயிருடன் இருந்தவர், இன்று உயிரோடு இல்லை!" - என்று நிலையாமையை அனுதினமும் உணர்த்தும், உயர்வினைக் கொண்டது இவ்வுலகம்.
(அது போல்...)
"முன்பு பகையுடன் இருந்தோர், இப்போது பகையுடன் இல்லை!" - என்று வாழ்வியலை தொடர்ந்து கற்பிக்கும், உறவுகளை உடையது வாழ்க்கை.

ஊடக-தர்மம் என்பது என்ன???


        சமீபத்தில் நடந்த ஓர் இளம்பெண் கொலையை பலரும் பார்த்திருப்பினும்; அதைத் தடுக்க/தவிர்க்க ஏன் ஒருவரும் முன்வரவில்லை?! என்ற கேள்வியை; ஒரு சாமான்யனின் பார்வையைத் தாண்டி - அந்த தயக்கத்திற்குப் "பின்னிருக்கும் பயத்தை" விளக்கி ஒரு தலையங்கத்தை நேற்று எழுதி இருந்தேன். அதைப் பலரும் படித்திருக்கக் கூடும்; அதில் சொல்லப்படட "காவல்துறை/நீதித்துறை" பயத்தைத் தாண்டி - வேறோர் பயமும் "அடுத்த கட்டமாய்" ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது. அது, ஊடகங்கள் தங்களுடைய "தர்மம் மற்றும் உரிமை" என்ற தவறான புரிதலில் செய்யும் அத்துமீறல்கள் தான் - என்பதை மறுப்பதற்கில்லை. அதைத்தான் இப்படியோர் பதிவாய் எழுதவேண்டும் என்று தோன்றியது. இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போதே, மேற்குறிப்பிட்ட கொலையின், கொலையாளி பிடிபட்டதாய் செய்திகள் வெளிவந்தது. இதை ஓர் உதாரணமாகக் கொண்டே, ஊடகங்களின் அடாவடித்தன்மையை உணரமுடிந்தது.

       இதுவரை வெளிவந்திருக்கும் செய்திகளின் அடிப்படையில், கொலையாளி தன்னை மறந்த/இழந்த நிலையில்தான் அந்தக் கொலையைச் செய்ததாய் தெரிகிறது. வரும் தினங்களில், அந்த இளைஞர் முற்கூட்டியே திட்டம் செய்து இந்தக் கொலையை செய்ததாய் கூட நிரூபணம் ஆகக்கூடும். அந்த இளைஞருக்கு கொலை செய்வது பழக்கமான செயலாய் கூட இருக்கட்டும். ஆனால், அந்த இளைஞரின் குடும்பத்தைப் படம் பிடித்தும்/காணொளியாய் காண்பிக்க - ஊடகங்களுக்கு எவர் அதிகாரம் கொடுத்தது?! அவருக்கு - இத்தனை உடன்பிறப்புகள் இருக்கிறார்கள்/அவரின் பெற்றோர் இவர் என்று வெளிச்சம் போட்டு காட்டும் அதிகாரத்தை இவர்களுக்கு எவர் கொடுத்தது?! அவர்களுக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம்? அந்த இளைஞர் செய்த தவறுக்கு - அவரின் குடும்பத்தார் என்ன செய்வர்? அவர்களின் வாழ்வியல் பாதிக்காதா? இது அந்த இளைஞரின் செயலை நியாயப்படுத்தும் முயற்சி அல்ல!

     மாறாய், இப்படி முறையற்ற வகையில் - அவரைச் சார்ந்தவர்களையும் குற்றவாளி போல் சித்தரிக்கக் கூடாது என்பதே இந்த தலையங்கத்தின் பார்வை. அதுபோல், அந்த இளைஞரின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரிடம் - விசாரணை போன்ற தோரணையில் பற்பல கேள்விகள் கேட்கின்றன ஊடகங்கள்! அதில், வழக்கைத் திசைதிருப்பும் வகையில் கூட பல தவறான கேள்விகள் இருக்கின்றன - இவர்களுக்கு யார் அப்படி கேள்விகள் கேட்க அதிகாரம் கொடுத்தது? பின், காவல்துறை எதற்கு இருக்கிறது? என்னவிதமான மனநிலை இது? என்ன கீழ்த்தரமான விளம்பரத் தேடல் இது? இவர்களின் ஊடகம் "நம்பர் 1" என்று காண்பிக்க; இவ்வளவு தரம் தாழ்ந்து போகவேண்டுமா?!  மேலும், அதை நேற்று ஆரம்பித்தது முதல் இன்றுவரை - மீண்டும், மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டே இருக்கின்றனர். செய்தி(யை/யாய்) சொல்லலாம்! ஆனால், அதை சுருங்க சொல்லி - அதையும் அவர்கள் சொல்லும் "ஊடக தர்மத்தின்" வரையறைக்கு...

    உட்பட்டு தானே இருக்கவேண்டும்? இதுபோன்ற, தேவையற்ற/நியாயமற்ற வகையில் - விசாரணை போன்ற தோரணையில் ஊடகங்களின் அராஜகம் - ஒரு தனிமனிதனை இம்மாதிரியான துரதிஷ்ட்டமான கொலையில், சாட்சி சொல்ல தடுக்கிறது என்பது என் பார்வை. அதுபோல், சில கேடுகெட்ட ஊடகங்கள் கொலையான பெண்ணின் பல்வேறு வகையான புகைப்படங்களை வெளியிடுகின்றன. சமூக வலைதளங்களிலும் இந்த அடாவடிகள் தொடர்கின்றன. அந்தப் பெண்ணின் புகைப்படத்தைப் பகிரும் அதிகாரத்தை இவர்களுக்கு எவர் கொடுத்தது? மேற்குறிப்பிட்ட, நேற்றைய தலையங்கமும் இந்த கொலையோடு தொடர்புடையதே! எல்லோரும் செய்கிறார்கள் என்றெண்ணி - நானும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கலாம்! ஆனால், அந்தப் பெண்ணின் பெயரைக் கூட நான் குறிப்பிடவில்லை! அதுபோல், அந்த இளைஞரின் பெயரைக் கூட நான் குறிப்பிடவில்லை! அது இங்கே முக்கியமில்லை - அது என் நோக்கமும் இல்லை!

     அந்த தலையங்கத்தில் வெளியிட்ட புகைப்படம் கூட இணையத்தில் இருந்து எடுத்ததே! உண்மையில், அந்தப் புகைப்படத்தில் ஒரு புகைவண்டியின் பின்புறமும்; அதில் தொடர்வண்டித் துறை ஊழியர் ஒருவரின் உருவமும் இருந்தது. அதைக்கூட வெளியிட நான் விரும்பவில்லை - எனக்கு அந்த உரிமையும் இல்லை! அதைக் கத்தரித்து விட்டுத்தான் அந்தப் புகைப்படத்தையே வெளியிட்டேன். இது ஏன், பிரபல ஊடகங்களுக்கு தெரிவதில்லை?! வளைகுடா மற்றும் அமீரக நாடுகளில் - ஒரு குற்றச் செய்தி வருகிறது என்றால் - அது சம்பந்தப்பட்டவர் புகைப்படம் எதையும் பார்ப்பது அரிது! செய்தியில் கூட, சம்பந்தப்பட்டவர் பெயர் - குற்றத்தின் தன்மையைப் பொறுத்தே குறிப்பிடப்படும். பல குற்றங்களுக்கும் - இந்த நாட்டைச் சேர்ந்தவர், இந்த வயதுக்காரர் - என்பதைத் தாண்டி பல செய்திகளில் மேற்கொண்டு விவரம் இருக்காது. தேவையற்ற விவரங்களைத் தெரிந்துகொள்வது தனிமனிதனுக்கு தேவையற்றது! என்ற ஊடக-தர்மம் அவர்களுக்கு...

      தெரிந்திருக்கிறது! பல நாடுகளில், பெரிய குற்றங்கள்/விபத்துகள் - அந்நாட்டு ஊடகங்களில் கூட வெளிவராது; நம்மூர் செய்திகள் உடனடியாய் உலகளவில் தெரிகிறது. சர்வாதிகாரம் எனினும் - அந்நாடுகளின் செயல் நியாயமாகவே தெரிகிறது. ஒரு தனிமனிதனாய் - எனக்கு, ஒரு கொலை நடந்தது; கொல்லப்பட்டது ஒரு பெண், இன்ன வயது போன்ற அத்தியாவசிய விவரங்களைத் தாண்டி - அந்த பெண்ணின் புகைப்படமோ; அதிலும் குறிப்பாய், அந்த பெண்ணின் பலவிதமான புகைப்படங்களோ தேவையற்றது! செய்திதான் முக்கியம் - அதுபோல், இனி வேறொரு சம்பவம் நடைபெறக் கூடாது - என்ற சமூக அக்கறை தான் முக்கியம். அது போலவே, அந்த இளைஞர் பற்றிய தேவையற்ற தகவல்களும் தேவையில்லை. குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய - தேவையற்ற தகவல்கள் தேவையில்லை எனும்போது; கொலை செய்தவரின் பக்கத்து வீட்டுக்காரர் பற்றிய தகவல்கள் எனக்கெதற்கு? காவல்துறை போன்றவர்களுக்கு அத்தகவல்கள்...

        அத்தியாவசியமானது! அதை ஏன், இந்த ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டவேண்டும்?! வியாபாரம் எனும் மூன்றாம் தர சிந்தனை; இப்படியெல்லாம் செய்யத் தூண்டுமா? இதுவா, இவர்கள் கோரும் ஊடக சுதந்திரம்? இதுவா, ஒரு ஜனநாயக சுதந்திரம்? இறந்தது ஊடகக்காரர்களின் உறவென்றால், இப்படித்தான் செய்வார்களா? அதுபோல்... அந்தப் பெண் நமக்கு உறவென்றால் - நாம் இப்படித்தான் ஆர்வம் காட்டி - அந்தப் பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்வோமா? இம்மாதிரியான "அடாவடித்தனமான" செயல்கள்தான் - ஒரு தனிமனிதனை "நமக்கேன் வம்பு?!" என்று ஒதுங்கி இருக்கச் செய்கிறது! ஊடங்கங்கள் போலவே, நாமும் - சமூக வலைத்தளங்களில், நம் அடாவடித்த தனத்தை செய்துவிட்டு; மிக எளிதாய் காவல்துறை/நீதித்துறை மற்றும் அரசைக் கேள்வி கேட்கிறோம்! இப்படி பொறுப்பில்லாமல், இந்த ஊடகங்களும்; நாமும் சமூக வலைதளம் மூலம் தேவையற்ற விடயங்களை "புரளியாய் பரப்பும்" வரை...

குற்றத்தை நேரில் பார்த்த மனிதர்கள் எப்படி சாட்சி சொல்ல வருவர்???

நவீனமும், பாரம்பரியமும்...


       மேலுள்ள புகைப்படம், சமீபத்திய "நீயா? நானா?" நிகழ்வின் போது எடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், இந்த சம்பவத்தைக் கண்டிருக்கக் கூடும். நவீன-மயமான இந்த தலைமுறை பெண்ணுக்கும்; பாரம்பரியத்தை மதிக்கும் சென்ற தலைமுறை ஆணுக்கும் இடையே "உரையாடலே இல்லாமல்" நடந்த ஒரு மெளன-நாடகம் அது. மிக சுவராஸ்யமான நாடகம் அது; இந்தப் பதிவு - எவரையும் குறை கூறவோ; அல்லது உயர்த்தி சொல்லவோ - முயற்சிப்பது அல்ல. மாறாய், அவர்களின் இயல்பை விவரிக்கும் ஒரு மனதங்கம். படத்தில் இருக்கும் அந்த பெண், மூன்றாவது சிறப்பு விருந்தினராய் - சிறிது நேரம் கழித்து வந்தார். அவருக்கு அந்த இருக்கையின் ஓரத்தில் தான் இடமிருந்தது; அந்த இருக்கையின் இடப்படக்கம் சிறிது இடமிருந்தும் - அந்த இரு ஆண்களும் தள்ளி உட்காரவில்லை! அது, அவர்களின் தவறும் அல்ல; ஏனெனில், அவர்கள் நிகழ்ச்சியோடு ஒன்றி  இருந்தனர். எனவே, அந்தப் பெண் இருந்த/கிடைத்த இடத்தில்...

     வெகு-இயல்போடு அமர்ந்தார்; அதே இயல்போடு, கால்மேல் கால் போட்டு அமர்ந்தார்! அருகிலிருந்த அந்த ஆணுக்கு ஏதோ ஒரு இயல்பற்ற உணர்வு - அது உடனடியாய் தெரிந்தது. அவர் அந்த பெண்ணின் காலை "பார்த்தும் பார்க்காதவாறு" பார்த்தார். ஆனால், அந்த பெண்ணிற்கு இதுபற்றிய எந்த உணர்வும் இல்லை - ஏனெனில், அவர் அமரும்போது அந்த ஆடவர்கள் இருந்த - அதே இயல்போடு அவரும் நிகழ்சசியோடு ஒன்றியிருந்தார். ஓரிரு நிமிடங்கள் கடந்தன - அந்த இடைவெளியில், அந்த ஆடவர் தன் "அசைவது தெரியாமல் அசைந்து" பார்த்தார். பின் ஒருவழியாக, எவரின் கவனத்தையும் சிதைக்காத வண்ணம் அவர் தள்ளி உட்கார்ந்துவிட்டார்; அவர் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது. இங்கே - எவரின் மேலும் தவறில்லை! என் வசதிக்கேற்ப அமர்வதே சிறந்தது - என்ற சிந்தனையில் ஒரு தலைமுறை; அடடே... இது எனக்கு பொருந்தாத விடயமாயிற்றே?! என்ற சிந்தனையில் ஒரு தலைமுறை. ஆனால், அவர்களில்... 

           எவரும் அடுத்தவர் - சுதந்திரத்தில் தலையிடவில்லை! ஆனால், இருவரும் தத்தம் இயல்போடு இருந்தனர். அடுத்த காட்சியில் - அந்த பெண் இரண்டு கால்களையும் கீழூன்றி அமர்ந்திருந்தார். இடையில் என்ன நடந்தது என்பது தெரியாது - அது அவசியமும் இல்லை. காலில் ஒருவித வலி வந்து - மீண்டும் தன் இயல்போடு கூட அந்தப் பெண் அப்படி அமர்ந்திருக்கலாம்! ஆனால், அதுவொரு சுவராஸ்யமான நாடகம் - எந்த வசனமும் இல்லாமல், எவரின் இயல்பும் கெடாமல் "நவீன தலைமுறைக்கும்; பாரம்பரிய தலைமுறைக்கும்" இடையே நடந்த அற்புதமான நாடகம். இப்படித்தான், தலைமுறை இடைவெளிகள் அணுகப்படவேண்டும். எனக்கும், இம்மாதிரியான உணர்வு உண்டு; எனக்கும், இம்மாதிரியான நிகழ்வுகள் நேர்ந்ததுண்டு - அடுத்தவரின் கால் என் மேல் பட்டுவிடுமோ (அப்படி பட்டால் தான் என்ன? என்ற உணர்வு அப்போது வருவதில்லை!) என்ற எண்ணத்தில் தள்ளி அமர்ந்திருக்கிறேன். ஆனால், ஒருபோதும் - பிறரிடம் என் இயலாமையைச் சொல்வதில்லை! சொன்னால்... என் இயலாமை அவருக்கு கடத்தப்படும். இம்மாதிரி...

தலைமுறை இடைவெளிக்குள் நடக்கும்; இயல்பான நிகழ்வுகள் - அற்புதமானவை!!!

சனி, ஜூலை 02, 2016

குறள் எண்: 0335 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 034 - நிலையாமைகுறள் எண்: 0335}

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்

விழியப்பன் விளக்கம்: நாவையடக்கி - "விக்கல் போல்", நிலையில்லாத உயிர்; உடம்பிலிருந்து மேலே எழும்முன்னே - காலம் தாழ்த்தாது, நற்செயல்களை செய்யவேண்டும்.
(அது போல்...)
நம்மையடக்கி - "குரங்கு போல்", ஓய்வில்லாத மனது; தேடலிலிருந்து தாவி விலகும்முன் -  பருவம் கடத்தாமல், புரிதல்களை அடையவேண்டும்.

ஒரு கொலையைத் தடுக்க/தவிர்க்க மறுப்பதன் பின்னணி என்ன???


      சமீபத்தில், சென்னையில் ஓர் இளம்பெண் பகலில் கொல்லப்பட்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே! வழக்கம் போல், அந்த பெண்ணின் நடத்தைப் பற்றி - சில புல்லுருவிகலும்; நடந்த கொலைக்கு "சாதிச் சாயம்" பூச - சில புல்லுருவிகளும் - முயன்று கொண்டிருக்கும் அவலங்கள் ஒருபுறம் இருக்கட்டும். காரணம் என்னவென்பது முக்கியமே இல்லை; காரணத்தைக் கண்டுபிடிப்பதால் - அந்தப் பெண் திரும்ப வரப்போவது இல்லை. அதுபோல், ஒரு சகமனிதனை கொலை செய்வது நியாயமா? என்ற அறம்சார்ந்த விடயத்திற்கு உள்ளேயும் நான் போக விரும்பவில்லை. ஒரு விலங்கைக் கொல்வது கூட தவறு என நம் வள்ளுவப் பெருந்தகை "புலால் மறுத்தல்" என்ற அதிகாரத்தில் சொன்ன கருத்து சார்ந்த ஓர் விவாதத்தை, நேற்று தான் ஒரு தலையங்கமாய் எழுதி இருந்தேன். இந்த தலையங்கத்தில் - என்னுடைய பார்வை, தொடர்வண்டி நிலையம் போன்ற - பொதுமக்கள் பலரும் கூட்டமாகப் புழங்கும் ஓரிடத்தில்...

       "ஒரு தனிமனிதன் எப்படி இப்படியோர் கொலையைச் செய்துவிட்டு மிக எளிதாய் பலரின் முன்னிலையில் தப்பிச் செல்லமுடிகிறது?" என்பதே. வெகுநிச்சயமாய் "அங்கு கூடியிருந்த ஒருவருக்கு கூட மனிதமே இல்லை!!!" என்ற கூற்றை நான் அறவே மறுக்கிறேன். அந்த அளவில் மனிதம் மரித்துவிட்டதாய் நான் உணரவில்லை! ஏனெனில், அத்தனை கூட்டம் இருந்ததாய் சொல்லப்படும் ஒரு சூழலில் - கூலிப்படை அல்லாத ஒரு சாதாரண தனிமனிதனை - தடுத்து நிறுத்துவது ஒரு பெரிய விடயமே அல்ல! அப்படி எனில், ஏன் அந்தக் கொலை தடுத்து நிறுத்தப்படவில்லை! பலரையும் போல் "அங்கு கூடியிருந்தோரைக் குறை கூறும் மனநிலை எனக்கும் இருக்கிறது; அதுபோல், பலரையும் போல் நான் அங்கு இருந்தால் நிச்சயம் ஏதேனும் செய்திருப்பேன்!!" என்ற எண்ண ஓட்டமும் இருக்கிறது. அப்படியோர் சூழலில், நான் என்ன செய்திருப்பேன்? என்பதை அப்படியோர் சூழல் வரும்போதுதான் சரியாய்... 

    கணிக்கமுடியும். அதுவரை, நான் அதைத் தடுக்க முயன்றிருப்பேன்! என்ற நம்பிக்கை தொடரட்டும். அம்மாதிரி ஓர் சூழலே வராத சமுதாயம் உருவாகவேண்டும் என்பதே, என் விருப்பமாகவும் இருக்கிறது. ஆனால், அப்படி ஒருவேளை நடந்தால்... என்ன செய்யவேண்டும்?! ஏன் செய்யமுடியவில்லை?! என்பதை அலசவே இந்தப் பதிவு. ஏனெனில், இதை நாம் ஒவ்வொரு தனிமனிதனாய், நம் கடமையாய் எண்ணி செய்யாதவரை "குற்றமற்ற சமுதாயம்" உருவாகவேண்டும் என்பது ஒரு கனவாகவே தொடரும். சடடம்/ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது என்ற "அரசியல் ஆதாயம் தேடும் சிலரைப்போல்" நான் இந்தக் கொலையை காவல்-துறையைக் கண்டித்து; ஆளும்-கட்சியை விமர்சிக்க விரும்பவில்லை. அப்படியெனில், ஆயிரமாயிரம் பொதுமக்கள் நிம்மதியாய்/சுதந்திரமாய் இப்படி இன்னமும் வீட்டுக்கு வெளியே உலவிக்கொண்டு இருக்கமுடியாது. சட்டம்-ஒழுங்கு 100 விழுக்காடு சரியாய் இருக்கிறது என்பது(ம்)...

           என்னுடைய வாதம் அல்ல! அதுபோல், மிகக் கடுமையான சட்டதிட்டங்கள் உள்ள நாடுகளில் கூட, இம்மாதிரியான குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன! இருப்பினும், காவல்துறை மேல் பொதுமக்களுக்கு இருக்கும் "பயத்தை" நான் மறுக்க விரும்பவில்லை. காவல்துறை மேல் இருக்கும் பயம், மற்றும் நீதிமன்றத்துக்கு அலையவேண்டி இருக்கும் என்ற கவலை காரணமாகத்தான் - இப்படி ஓர் கொலை தடுக்க/தவிர்க்க மறுக்கப்படுகிறது! என்பதை நான் உணர்கிறேன். சரி, இந்த பயங்களுக்கு என்ன காரணம்? நடைமுறை வாழ்வில், எத்தனை சாமான்யர்கள் - இதுமாதிரி காவல்துறை/நீதித்துறையால் அலைக்கழிக்கப் படுகிறார்கள்?! என்றால்; இங்கே, நூற்றில் ஒருவருக்கு கூட அந்த அனுபவம் இருக்காது! ஏன், நம் சுற்றத்தில் அப்படி எவரும் ஆராய்ந்தால் கூட - நம்மில் பலருக்கும் - ஒரு அனுபவம் சார்ந்த உண்மை தெரியாது. ஆனால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் - இந்த பயம் இருக்கத்தான் செய்கிறது.

      பின்னெப்படி இந்த பயங்கள் விதைக்கப்பட்டன?! என்று யோசித்தால் மூன்று விடயங்கள் முதன்மை வகிக்கின்றன. 1) எவரோ ஒருவர் தன் அனுபவித்ததை - பிறருக்கு இயல்பாய் சொல்ல; அது, மனித இயல்புகளில் ஒன்றான "புரளியா(ய்/ல்)" பன்மடங்கு உயர்ந்து மற்றவரை அடைவது ஒருவகை. 2) அளவுக்கதிகமான கற்பனைகள் அடங்கிய, குற்றவியல் சார்ந்த நாவல்கள் இரண்டாம் இடத்தில் இருப்பதாய் உணர்கிறேன். 3) இது தான் மிகமுக்கியமாய் படுகிறது: திரைப்படம் போன்ற காணொளி ஊடகங்கள்! இவற்றில், மிகப்பெரும்பான்மையான மிகைப்படுத்தல் காடசியமைக்கப் படுகிறது. இதைப் பலரும் உணர்வதேயில்லை! எனவே தான், எல்லோரும் பாராட்டிய "விசாரணை" என்ற தமிழ்த் திரைப்படம் என்னை சிறிதும் கவரவில்லை! அந்தப்படத்தைப் பற்றி ஓர் விமர்சனம் எழுதவேண்டும் என்று நினைத்தது; நேரமின்மையால் அதை இன்றுவரை செய்யவில்லை. என்னளவில், விசாரணை என்ற அந்த திரைப்படம் - சமுதாயத்தின்...

         தன்மையைக் குலைக்கும் - ஓர் குப்பை! அதில் உண்மையே இல்லை எனவில்லை! ஆனால் - இரண்டு மாநிலங்களில் இருக்கும் எல்லா காவல் நிலையங்களில் இருக்கும் எல்லாக் காவலர்களும் தீயவர்கள்!; நட்சத்திர அந்தஸ்த்துள்ள ஒரேயொரு நடிகர் தான் உண்மையான காவலர்! என்ற காடசியமைப்பு - மிகப்பெரிய சமூக அநீதி. திரைப்படம் என்ற மாபெரும் சக்தியின் மகிமையை உணர்ந்தவர்கள், இம்மாதிரி சமூக அக்கறையில்லாமல் - காவல்துறையை களங்கப்படுத்துவது பேர்கொடுமை! அந்தப் படத்தைப்  பலரும் கொண்டாடியதே - "எந்தவொரு சொந்த நடைமுறை அனுபவமும் இல்லாமல்" - பலரும் காவல்துறை மேல் பயத்தில் இருப்பதற்கு ஒரு சான்று. நாம் ஒவ்வொருவரும், நம் கிராமம்/நகரம்/பெருநகரம் இவற்றில் இருக்கும் காவல்-நிலையத்தை பல நாட்கள் கடந்தே செல்கிறோம். அப்படி எல்லா காவல் நிலையங்களும், தினம் தினம் அப்பாவிகளை அலைக்கழிப்பதாய் நமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை! ஆனால்...

     காவல் நிலையத்தைக் காண்பதைக் கூட தவிர்த்து நடப்போரே நம்மில் அதிகம்! காவல் நிலையத்தின் வாசலை மிதிப்பதைக் கூட குற்றமாய் பார்க்கும் மனநிலையே நம்மில் பலருக்கும் இருக்கிறது! அதனால் தான், அப்படி எவரும் காவல் நிலையம் சென்றுவந்தால் - அவரை, இந்த சமுதாயம் குற்றவாளி போல் பார்க்கிறது. எந்தவொரு நடைமுறை அனுபவமும்; சரியான கேள்வி-அறிவும் இல்லாமல், இந்த பயம் எப்படி சாத்தியமானது? சரி, இதை எப்படி களைவது? மற்றவர் மேல் பழி போடுவதை விட்டுவிட்டு; நாம் ஒவ்வொருவரும் தனிமனிதனாய் இல்லாமல் போனாலும்; கூட்டமாக சேர்ந்தாவது இந்த பயத்தை அழிக்கவேண்டும்! எவருக்குமே விருப்பம் இல்லை எனினும், இம்மாதிரியான துரதிஷ்ட்டவசமான சம்பவங்கள் நேர்ந்தால், நாம் கூட்டமாய் சேர்ந்து தடுக்க முனையவேண்டும். அப்போது, காவல்துறையோ/நீதித்துறையை எந்த அநீதியையும் இழைக்க முடியாது! அதைத்தான், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில்...

     "அரசியல் ஆதாயம் தேடும் கயவர்கள்" மற்றும் சாதி/மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் கீழ்த்தரமானவர்கள் செய்கிறார்கள். ஒரு தனி மனிதனின் பயம் - பல தனிமனிதர்கள் சேரும்போது - உயர்-சக்தியாய் உருப்பெறும் - என்பதற்கு தவறானவர்கள் எனினும், அவர்களே சான்றாகிறார்கள். சரி, இதை எவர் செய்வது? எவர் முதலில் வருவது? - நல்ல கேள்விதான்! நம் ஒவ்வொருவருக்கும் "ஹீரோவாய்/ஹீரோயினாய்" ஆகவேண்டும் என்ற கனவு நிச்சயம் இருக்கும். இம்மாதிரியான துரதிஷ்ட்டமான நிகழ்வுகளின் போது - அதை நிஜமாக்க முனையவேண்டும். எவரோ முன்வருவர்... நாம் பின்தொடரலாம் என்பதை விட்டுவிட்டு - நாமே முன் செல்லவேண்டும்! எவர்பின்னேயும் நாம் தொடர காத்திருக்காமல்; நாம் முன்சென்றால் பலர் பின்வருவர் என்ற எண்ணம் வரும். இந்த தயக்கத்தால் தான், அரசியலில் கூட வேறெவரோ வந்து அதிசயம் நிகழ்த்துவர் என்று எதிர்பார்த்து/ஏமாற்றமடைந்து காத்திருக்கிறோம்! குறைந்தது, இம்மாதிரியான சூழலிலாவது...

         நாம் முதல் அடியெடுத்து வைக்கவேண்டும்! இல்லையேல்... அரசியல்வாதிகள் போல்; நாமும் மற்றவர்களைக் குறை கூறிக்கொண்டுதான் இருக்கப் போகிறோம். உணர்வுப்பூர்வமான கேள்வி எனினும், பின்வருவதைக் கேட்கத்தான் வேண்டும்: நமக்கோ அல்லது நம்மைச் சார்ந்தவருக்கோ - இப்படியோர் நிலை வந்தால் - நாம் ஒரு சிறு-துரும்பையாவது அசைக்கமாட்டோமா?! நாம் அப்படி செய்யவில்லை எனில்; நாமில்லாத போது, நம்மைச் சார்ந்த ஒருவருக்கு இந்நிலை வந்தாலும் - பலரும் மவுனித்துதான் இருப்பர். இதைத்தான் கிராமத்தில் கூட வழக்குமொழியாய் "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்; தன்பிள்ளை தானே வளரும்!" என்று சொல்வர். அந்த வழக்குமொழியின் அடிப்படை இதுதான்: நாம் முன்னடி எடுத்து வைத்து, நமக்கு சம்மந்தமே இல்லாதவர் (அதாவது ஊரார்) ஒருவரின் கொலையைத் தடுத்தால்; நமக்கு வேண்டியவர் (தன்பிள்ளை) ஒருவருக்கு அப்படி நேர்ந்தால் இன்னொருவர் (ஊரார்) முன்னடி எடுத்து வைப்பர்.

பிறரையே (குற்றம்சாட்டி/எதிர்பார்த்து) கொண்டிருக்காமல்...
நம்மால் இயன்றதை முதலில் செய்வோம்!!!    

வெள்ளி, ஜூலை 01, 2016

குறள் எண்: 0334 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 034 - நிலையாமைகுறள் எண்: 0334}

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்

விழியப்பன் விளக்கம்: வாழ்க்கையை ஆழ்ந்து உணர்ந்தோர்க்கு; நாள் என்ற அளவுகோல் - உயிரை உடம்பிலிருந்து அறுக்கும் வாள் - என்பது தெரியும்.
(அது போல்...)
தேடலைத் தேடி அலைந்தோர்க்கு; அறியாமை கொண்ட நம்பிக்கை; புரிதலைப் பகுத்தறிவிலிருந்து கழிக்கும் கணிப்பான் - என்பது விளங்கும்.

"கொல்லாமை" என்ன சொல்கிறது???


           சமீபத்தில், திருக்குறளுக்கான விளக்கவுரை எழுதும் பணியில் "கொல்லாமை" அதிகாரத்தை எழுதினேன். முன்பே பலமுறை குறிப்பிட்டு இருப்பது போல் "குறளும் வாழ்வியலும்" என்ற வாட்ஸ்-ஆப் குழுவில் ஒவ்வொரு குறளுக்கான விளக்கவுரையும் பகிர்ந்தபோது - வழக்கம்போல், நட்புகளிடையே அதுசார்ந்த விவாதம் எழுந்தது. விவாதம் வலுப்பெற்றபோது, சில கருத்து வேறுபாடுகள் எழுந்தது வருத்தம் எனினும் - பொதுவில், அது ஓர் ஆரோக்கியமான வாதமே. அந்த அதிகாரத்தின் ஆரம்பம் முதலே, சிறுசிறு வாதமான கருத்துக்கள் எழுந்தன எனினும்; "தன்னுயிர் நீப்பினும் செய்யற்க" என்ற குறள் எண் 0327-இற்கான விளக்கவுரையின் போதுதான், விவாதம் உச்சகடடத்தை அடைந்தது. அந்த குறளுக்கான விளக்கவுரையைப் பார்த்தால், அதில் காந்தியடிகள் சொன்ன ஒரு கருத்துப்படம் வெளியிட்டிருப்பதைப் பார்க்கலாம். அந்த வாசகத்தில் இருக்கும் கருத்தையொட்டிதான், முதல் கடுமையான விவாதம் எழுந்தது.

           எங்களுடைய வாதங்கள் பற்றி இங்கே நான் ஏதும் எழுதப்போவதில்லை! அது முறையானதும் அல்ல. மாறாய், ஏன் கொல்லாமை என்ற இந்த அதிகாரத்தைப் பற்றி மட்டும்; இப்படியோர் வாதம் என்ற யோசனையின் பின்னணியே - இந்த தலையங்கம். என்னளவில், கொல்லாமை மற்றும் அதனைச் சார்ந்த புலால் மறுத்தல் இரண்டும் - என் நடப்புகளுக்கு ஒருவித குற்ற-உணர்வைக் கொடுத்திருப்பதை அறிந்தேன். இதே அடிப்படையில் "பிறன்மனை விழையாமை" போன்ற அதிகாரங்கள் எழுதும் போதும் எழும். ஆனால், கொல்லாமை சார்ந்து கடுமையான வாதங்களை வைத்தபோது தான் - அவர்களுக்குள் ஓர் குற்ற உணர்வு இருப்பதை உணர்ந்தேன். மற்ற அதிகாரங்களில் இருக்கும் குறளுக்கான விவாதத்தின் போது சொன்னது போல் - கொல்லாமை அதிகாரத்தையும் அறம்சார்ந்து சொல்லப்பட்டு இருப்பதாய்தான் பார்க்கவேண்டும். நம் பெருந்தகையின் பொதுமறை முழுக்கமுழுக்க அறம்சார்ந்த அறவுரையே ஆகும்... 

        என்பதை நாம் எந்நிலையிலும் மறக்கக்கூடாது! நமக்கு ஓர் அறம் பிடித்திருந்தால்; அதைப் பழக முயலவேண்டும். அதுதான் திருக்குறள் எனும் பொதுமறையின் அடிப்படை; மாறாய், நம்மால் ஒன்றைக் கடைபிடிக்க முடியவில்லை என்ற காழ்ப்புணர்வில்/குற்ற-உணர்வில் வாதிடுதல் முறையல்ல. இந்த அறங்கள், மதநூல்களில் இருக்கும் வரையறைகள்/நீதிக்கதைகள் போன்றவை. என்னதான் நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு மதம் சார்ந்திருப்பினும் - எல்லா வரையறைகளையும்/நீதிக்கதைகளையும் நாம் பின்பற்றுவதில்லை. நமக்கு சாதகமாய் பல விடயங்களை, நமக்கு பிடித்தவண்ணம் மாறுபட்ட விதத்தில் சொல்லி; நம்மை நாமே சமாதானப் படுத்திக்கொண்டுதான் வாழ்கிறோம். எல்லா மதம் சார்ந்த மனிதர்களும், இந்த விதிவிலக்கை எல்லோரும் கடைப்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நம்மால் இயன்ற நல்லறங்களை செய்வதில்தான் நம் எல்லோரின் முனைப்பும் இருக்கிறது. அதை மறந்து, ஏதோ ஒரு அறநூலில் சொல்லியிருக்கும்...

        மாறுபட்ட கோணத்தில் விவாதிக்கும்போது தான், சிக்கல்கள் எழுகின்றன. இது தேவையே இல்லை! மதம் சொல்லும் விடயமோ அல்லது பொதுமறையான திருக்குறள் போன்றவை சொல்லும் விடயங்களோ - இயன்றவரை பின்பற்றும் முனைப்பு இருக்கவேண்டும். அடிப்படையில், எல்லாவற்றையும் பின்பற்றுவதே சிறந்தது! அப்படித்தான் மனித(ன்/ம்) இருக்கவேண்டும்; ஆனால், மேற்குறிப்பிட்ட மதநூல் உதாரணம்போல் - விதிவிலக்குகளையும் "ஓர் மனிதனே" வரையறுக்க முனைகிறான். அதுபோல், திருக்குறள் போன்ற பொதுமறையில் சொல்லப்பட்டு இருக்கும் விடயங்களில் கூட மறுப்புகள் - எழக்கூடும்! எழலாம்!! - மறுப்புகளில் தவறேயில்லை! ஆனால், அவற்றைத் தேவையற்று விமர்சிக்கும்போது தான் பிரச்சனைகள் எழுகின்றன! என் நட்புகளின் வாதம் - எப்படி குற்ற-உணர்வாய் பார்க்கப்படுகிறது என்பதை இப்போது விளக்குகிறேன். மாமிசம் சாப்பிடாமல் அல்லது எந்த உயிரையும் கொல்லாமல் இருக்கமுடியுமா?...

          என்ற வாதத்தில் தவறேதுமில்லை! ஆனால், நம் இரத்தத்தில் உயிரணுக்கள் இருக்கின்றன; எனவே, நமக்கு புண் ஏற்பட்டு சீழாய் வடியும்போது - நாம் எந்த மருந்தையும் உட்கொள்ளக் கூடாது! அப்படி உண்பதால், நாம் பல நுண்ணுயிர்களைக் கொல்கிறோம். எனவே, ஒவ்வொருவரும் பல உயிர்களைக் கொல்பவர் தானே? என்பது போன்றோ (அல்லது) தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது?! அதையும் தான் எல்லோரும் கொல்கின்றனர்! "கேக்" போன்ற தின்பண்டங்களில் "மறைமுகமாய் முட்டை அல்லது பிற உயிரினங்கள் சார்ந்த" உட்பொருட்கள் இருக்கின்றன. எனவே, இங்கே கொலை செய்யாதவர் யாரும் இல்லை; அந்த அடிப்படையில், காந்தியே கூட பல உயிரைக் கொன்றவர் தான்! வள்ளுவரும், இப்படி பல உயிரைக் கொன்றவர் தான்; சைவம் சாப்பிடுகிறோம் என்று சொல்லும் பலரும் அப்படியே! அவர்களும் பல உயிர்களைக் கொல்பவர் தானே?! என்பன போன்ற கேள்விகளையே, காழ்ப்புணர்வின்/குற்ற-உணர்வின்...

        அடிப்படையாய் பார்க்கிறேன். இதை மிக எளிதாய், அவர்களுக்கு கீழ்க்காணும் உதாரணம் மூலம் விளக்கி இருக்கமுடியும். ஆனால், விவாதம் சற்றும் எதிர்பாராத திசையில் செல்ல ஆரம்பித்ததும் - நான் அமைதியாகி விட்டேன். சில நாட்கள் கடந்தும், அதைச் சார்ந்த கருத்துகள் எழுந்தன. நான் ஏதும் அங்கே சொல்லவில்லை; மாறாய் இங்கே விளக்க விரும்புகிறேன். அவர்கள் கேட்டதன் அடிப்படையிலேயே; சளி-மருந்து துவங்கி பல்வகை மருந்துகளில் "ஆல்கஹால்" இருக்கிறது. அப்படிப்படட மருந்துகளை அருந்தாமல், உயிருடன் இருப்பவர் இங்கே யாரும் இல்லை! ஏன், நம் குழந்தைகள் பிறந்தது முதல் - நாமே அவர்களுக்கு அவ்வகை மருந்துகளை, நம் கையாலேயே கொடுத்து இருக்கிறோம்! எனவே, இந்த உலகில் "ஒவ்வொருவரும் குடிகாரரே!" என்று நான் வாதிட்டால் - அது எவ்வளவு பெரிய அபத்தமாய் இருக்கும்?! அந்த மருந்தில் இருப்பதும்/சாராயத்தில் இருப்பதும் ஆல்கஹால் தானே?!...

     என்று வாதிட்டால்; நான் "குடிக்காதவன் தெரியுமா?!" என்று மார்தட்டும் பலரும் என்ன சொல்வர்/செய்வர்? அவ்வாதம் தவறாய்தானே பார்க்கப்படும்? தாவரங்கள் போன்ற உயிர்கள்/உணவுகள் - மருந்தில் இருக்கும் ஆல்கஹால் போன்றதே! எப்படி மருந்தில் இருக்கும் ஆல்கஹால், நம் உயிருக்கு அடிப்படையான ஒன்றோ; அதுபோல், தாவர உணவான சைவமும் நமக்கு அடிப்படையான ஒன்று! எப்படி, சாராயம் போன்ற வஸ்த்துவில் இருக்கும் ஆல்கஹால் - தேவையற்ற/முறையற்ற ஒன்றோ; அதுபோல், பிற உயிரிங்களைக் கொன்று - இயற்கையைச் சிதைத்து - மாமிசம் போன்றவற்றை உண்பதும் தேவையற்றது/முறையற்றது! இந்த அறத்தைதான் "கொல்லாமை" எனும் அதிகாரம், அறமாய் போதிக்கிறது. அதை விடுத்து, சாராயம் குடிப்பது கேடானது எனச் சொல்லி, அவர்களைக் குடிகாரர்கள் என வரையறுத்துக் கொண்டே; மறுபுறம், மாமிசம் மனிதனுக்காகப் படைக்கப்பட்டது! என்ற வாதத்தில் அறமோ/நியாயமோ இல்லை.

"சாராயம் குடிப்பது நல்லது! அது, மனிதனின் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்!!"
என்றோ... அல்லது
"மாமிசம் உண்பது நல்லது! அவை, மனிதனுக்காய் படைக்கப்படடவை!!"

என்றோ - வாதிடுவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேர்வு/விருப்பம்!
ஆனால்...

அறம் என்பது நம் தனிப்பட்ட தேர்வோ/விருப்பமோ அல்ல! 
அறம் என்பது அறம்... அவ்வளவே!!