சனி, அக்டோபர் 15, 2016

குறள் எண்: 0440 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0440}

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்

விழியப்பன் விளக்கம்: ஆசை சார்ந்த செயல்களை, ஆசை வெளியே தெரியாமல் செய்பவரை; பகையுணர்வு கொண்ட, பகைவர்களின் எண்ணம் சிதைக்காது.
(அது போல்...)
எதிர்க்க வேண்டிய விடயங்களில், எதிர்ப்பை மையப்படுத்தாமல் கருத்தை முன்வைப்பவரை; விமர்சிக்கும் எண்ணமுள்ள, எவரின் விமர்சனமும் பாதிக்காது.

வெள்ளி, அக்டோபர் 14, 2016

குறள் எண்: 0439 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0439}

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை

விழியப்பன் விளக்கம்: எந்த நிலையிலும், தன்னை உயர்வாய் எண்ணி வியக்கக்கூடாது; அதுபோல், நல்வினை அளிக்காத செயல்களை விரும்பக்கூடாது.
(அது போல்...)
எந்த நோக்கத்திலும், நம்மைப் பொய்யாய் சித்தரித்துச் சொல்லக்கூடாது; அதுபோல், நமக்குத் தகுதியற்ற ஒன்றை வாங்கக்கூடாது.

வியாழன், அக்டோபர் 13, 2016

குறள் எண்: 0438 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0438}

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று

விழியப்பன் விளக்கம்: பேராசையால், செலவிட வேண்டியதற்கு செலவிடாத தன்மை; இருக்கும் குற்றங்களில், ஒன்றாக கணக்கிட முடியாத தனிக்குற்றமாகும்.
(அது போல்...)
அகந்தையால், நியாயமான உரிமையை மறுக்கும் குரூரம்; இருக்கும் தீவிரவாதங்களில், ஒன்றென பட்டியலிட முடியாத தனித்தீவிரமாகும்.

புதன், அக்டோபர் 12, 2016

சேவாக்கின் தனித்தன்மை...

குறள் எண்: 0437 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0437}

செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது இன்றிக் கெடும்

விழியப்பன் விளக்கம்: செய்யவேண்டிய செலவுகளைச் செய்யாமல்; சொத்துகளைச் சேர்ப்போரின் செல்வம், இருக்கக்கூடிய தன்மையில்லாமல் அழியும்.
(அது போல்...)
சிந்திக்கவேண்டிய விடயங்களைச் சிந்திக்காமல்; இலக்கின்றி வாழ்வோரின் நேரம், பயனளிக்கும் திறனின்றி விரயமாகும்.

செவ்வாய், அக்டோபர் 11, 2016

குறள் எண்: 0436 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0436}

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு

விழியப்பன் விளக்கம்: நிகழ்வதற்கு முன்பாகவே, தன் குற்றத்தைக் களைந்து; பிறர் குற்றத்தையும் களையும் வல்லமையான தலைவனுக்கு, எது குற்றமாக ஆகமுடியும்?
(அது போல்...)
அனுபவிப்பதற்கு முன்பாகவே, தன் சிற்றின்பத்தைத் தவிர்த்து; பிறர் சிற்றின்பத்தைத் தவிர்க்கும் திறமையான நட்புக்கு, எது சிற்றின்பமாக அமையும்?
*****

மனவேதனையும் காலுறை-கிழிசலும்...

திங்கள், அக்டோபர் 10, 2016

குறள் எண்: 0435 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0435}

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்

விழியப்பன் விளக்கம்: குற்றம் நிகழும் முன்பே, அதைப் பகுத்தறியும் சிந்தனையுடன் தடுக்காதோர் வாழ்க்கை; பெருநெருப்புக்கு அருகிலிருக்கும், வைக்கோற்போர் போல் அழியும்.
(அது போல்...)
உறவைப் பிரியும் முன்பே, அதை அன்பெனும் கருவியுடன் தவிர்க்காதோர் நிலைமை; சூறாவளியில் அகப்பட்ட, பொருட்கள் போல் தடம்புரளும்.
*****

ஞாயிறு, அக்டோபர் 09, 2016

குறள் எண்: 0434 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0434}

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை

விழியப்பன் விளக்கம்: குற்றமே அழிவுக்கு வித்திடும் பகை என்பதால்; குற்றச்செயல்களில் இருந்து தற்காத்துக் கொள்வதை, கடமையாகக் கருதவேண்டும்.
(அது போல்...)
சிற்றின்பமே பிறவிப்பயனை அழிக்கும் நஞ்சு என்பதால்; சிற்றின்பங்களில் இருந்து விலகி இருப்பதை, வைராக்கியமாய் பழகவேண்டும்.
*****

சனி, அக்டோபர் 08, 2016

குடும்ப வாழ்வின் புகழ்...

குறள் எண்: 0433 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0433}

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்

விழியப்பன் விளக்கம்: பழிக்கு அஞ்சுவோர், தினையளவு குற்றம் விளைவிக்கும் செயலையும்; பனையளவாய் நினைத்து, குற்றங்களைக் களைவர்.
(அது போல்...)
மக்களை மதிப்போர், துளியளவு ஊழல் நடக்கும் துறையையும்; கடலளவாய் எண்ணி, காரணிகளை அலசுவர்.
*****