புதன், மே 10, 2017

குறள் எண்: 0647 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0647}

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

விழியப்பன் விளக்கம்: சொல்வன்மை உடையோர், சோர்வின்றியும்/அச்சமின்றியும் இருப்பர்; அவர்களை எதிர்த்து வெல்லுதல், எவர்க்கும் அரிதானது ஆகும்!
(அது போல்...)
குடும்பத்தைக் காதலிப்போர், சுயநலமின்றியும்/பொறாமையின்றியும் இருப்பர்; அவர்களை வெறுத்து ஒதுக்குதல், எவர்க்கும் எளிதானது அன்று!

செவ்வாய், மே 09, 2017

குறள் எண்: 0646 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0646}

வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்

விழியப்பன் விளக்கம்: கேட்போர் விரும்பும் வண்ணம் தாம் பேசுவதும், பிறர் பேசும் சொற்களிலுள்ள நன்மைகளை ஆராய்வதும் - பகுத்தறிந்த சான்றோர்களின் சிறந்த கோட்பாடாகும்.
(அது போல்...)
மக்கள் ஆதரிக்கும் வண்ணம் தாம் அரசாள்வதும், எதிர்கட்சிகள் செய்யும் செயல்களிலுள்ள பொதுநலத்தை வரவேற்பதும் - கர்மமுணர்ந்த தலைவர்களின் உன்னத இயல்பாகும்.

திங்கள், மே 08, 2017

குறள் எண்: 0645 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0645}

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

விழியப்பன் விளக்கம்: நாம் சொல்லும் சொல்லை விட, வேறொரு சிறந்த  சொல் இல்லை என்பதை உறுதியாய் அறிந்த பின்பே; அச்சொல்லை சொல்ல வேண்டும்.
(அது போல்...)
நாம் சிந்திக்கும் சிந்தனையை விட, வேறொரு உயர்ந்த சிந்தனை இல்லை என்பதை ஆழமாய் உணர்ந்த பின்னரே; அச்சிந்தனையை மேற்கொள்ள வேண்டும்.

ஞாயிறு, மே 07, 2017

குறள் எண்: 0644 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0644}

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்

விழியப்பன் விளக்கம்: பேசும் சொற்களின் திறனறிந்து, சொல்வன்மை கொண்டு பேசவேண்டும்; அதனை விட உயரிய, அறமும்/செல்வமும் வேறேதும் இல்லை!
(அது போல்...)
செய்யும் உதவிகளின் பலனுணர்ந்து, உதவிக்கரம் நீட்டி வாழவேண்டும்; அதை விட சிறந்த, நட்பும்/உறவும் வேறொன்றும் இல்லை!

சனி, மே 06, 2017

குறள் எண்: 0643 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0643}

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்

விழியப்பன் விளக்கம்: கேட்டவர் மகிழும் வண்ணமும், கேட்காதவர் கேட்க விரும்பும் வண்ணமும்; தன்மையுடன் பேசுவதே, சொல்வன்மை எனப்படும்.
(அது போல்...)
உறவிலிருப்போர் பெருமிதம் கொள்ளவும், இல்லாதோர் உறவில் இணைய விரும்பவும்; அன்புடன் உறவாடுவதே, உறவுப்பாலம் ஆகும்.

வெள்ளி, மே 05, 2017

குறள் எண்: 0642 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0642}

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு

விழியப்பன் விளக்கம்: வளர்ச்சியும்/அழிவும், பேசும் சொற்களில் விளைவதால்; உணர்ச்சியால் உந்தப்படாமல், பேசும் சொற்களில் நிதானத்தைக் கடைப்பிடித்துப் பழகவேண்டும்.
(அது போல்...)
உறவும்/பகையும், இருப்பதைப் பகிர்வதில் விளைவதால்; தனதென்ற கர்வமில்லாமல், பகிரும் உடைமைகளில் தர்மத்தை நிலைநாட்டி வாழவேண்டும்.

வியாழன், மே 04, 2017

குறள் எண்: 0641 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0641}

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று

விழியப்பன் விளக்கம்: சொற்களை கையாளும் சொல்வன்மை எனும் வளம்ஒருவகை உடைமையாகும்அந்த சொல்வளம்வேறெவ்வகை வளங்களிலும் இருப்பது அல்ல!
(அது போல்...)
உறவுகளைப் பேணும் விருந்தோம்பல் எனும் ஒழுக்கம்ஒருவகை அறமாகும்அந்த அறவொழுக்கம் வேறெவ்வகை ஒழுக்கங்களிலும் இருப்பது அல்ல!

புதன், மே 03, 2017

அதிகாரம் 064: அமைச்சு (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 064 - அமைச்சு

0631.  கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
           அருவினையும் ஆண்டது அமைச்சு

           விழியப்பன் விளக்கம்: செய்தற்கரிய செயல்கள் அனைத்திலும் - முக்கிய கருவிகளுடன்,
           சரியான நேரத்தில், நேர்த்தியான செயல்முறையுடன் - ஆள்வதே அமைச்சரவை ஆகும்.
(அது போல்...)
           கிடைக்கற்கரிய உறவுகள் எல்லாவற்றிலும் - பரஸ்பர புரிதலுடன், சரியான விகிதத்தில்,
           முறையான ஒழுக்கத்துடன் - அன்பைப் பரிமாறுவதே வாழ்வியல் ஆகும்.
      
0632.  வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடு
           ஐந்துடன் மாண்டது அமைச்சு

           விழியப்பன் விளக்கம்: அச்சமற்ற கண்கள், குடிமக்களைக் காத்தல், அறம் கற்றல்,
           கற்றவற்றை ஆய்ந்தறிதல், வினைகளை முடித்தல் - ஆகிய ஐவகை காரணிகளுடன்
           இருப்பதே அமைச்சரவை ஆகும்.
 (அது போல்...)
           குற்றமற்ற எண்ணங்கள், பிள்ளைகளை வளர்த்தல், பெற்றோரைப் போற்றுதல்,
           போற்றியவரைப் பேணுதல், பாரம்பரியம் காத்தல் - ஆகிய ஐந்து இயல்புகளுடன் வாழ்வதே
           இல்லறம் ஆகும்.
           
0633.  பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
           பொருத்தலும் வல்லது அமைச்சு

           விழியப்பன் விளக்கம்: படைகளைப் பிரித்தாள்வது, பெரியோரைப் பேணித்
           துணைக்கொள்வது மற்றும் பிரிந்து சென்றோரைப் பொருத்தருளி ஏற்பது - இவற்றில்
           சிறந்ததே அமைச்சரவை ஆகும்.
(அது போல்...)
           உரிமைகளைப் பகிர்ந்தளிப்பது, முதியோரிடம் பயின்று கற்றுக்கொள்வது மற்றும் பிரிந்த
           உறவுகளைப் புறங்கூறாமல் இருப்பது - இவற்றில் உயர்ந்ததே இல்லறம் ஆகும்.

0634.  தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
           சொல்லலும் வல்லது அமைச்சு

           விழியப்பன் விளக்கம்: வினைகளை ஆராய்ந்து அறிவது/வினைகளைத் தெளிவுடன்
           செய்வது/ இரட்டைச் சாத்தியங்களை ஒதுக்கி; வினைகளை ஒருமுகமாய் விவரித்தல் -
           இவை அனைத்திலும் சிறந்ததே அமைச்சரவை ஆகும்.
(அது போல்...)
           விதிகளை அறிந்து ஏற்பது/அறமுடன் விதிகளை மேற்கொள்வது/அதிகார
           முறைகேடுகளைத் தவிர்த்து; விதிகளை சமமாய் பகிர்வது - இவை அனைத்திலும் சிறந்ததே
           சமுதாயம் ஆகும்.

0635.  அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
           திறனறிந்தான் தேர்ச்சித் துணை

           விழியப்பன் விளக்கம்: அறவினைகளை அறிந்து, அறிவார்ந்து பேசும் இயல்போடு;
           எக்காலத்திலும் செயல்திறனும் உடையவரின் பண்புகள் - அமைச்சர்களுக்கு
           துணையாகும்.
(அது போல்...)
           நல்லுறவுகளைக் கொண்டு, அன்பைப் பகிரும் அடிப்படையோடு; எந்நிலையிலும் உறவைக்
           கைவிடாதோரின் இயல்புகள் - சந்ததியர்க்கு சிறப்பாகும்.

0636.  மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
           யாவுள முன்னிற் பவை

           விழியப்பன் விளக்கம்: நூல்களின் மூலம் கற்பதுடன், நுண்ணிய சிந்தனை அறிவையும்
           உடைய அமைச்சர்களை; எதிர்த்து நின்று வீழ்த்தும், நுண்ணிய சூழ்ச்சிகள் எவை
           உள்ளன?
(அது போல்...)
           உறவுகளின் அடிப்படையில் உதவுவதுடன், வலிமையான மனிதமெனும் உணர்வையும்
           கொண்டு உதவிடுவோரை; விலகிச் சென்று அழிக்கும், வலிமையான எதிரிகள் எவர்
           உள்ளனர்?

0637.  செயற்கை யறிந்தக் கடைத்தும் உலகத்து
           இயற்கை அறிந்து செயல்

           விழியப்பன் விளக்கம்: நூல்களின் வழியே, செயல்களை செய்யும் செய்முறைகளை
           அறிந்திருப்பினும்; குடிமக்களின் இயல்பை அறிந்து செய்வதே, அமைச்சரவை ஆகும்.
(அது போல்...)
           உறவுகளின் வழியே, இல்லறத்தை நடத்தும் நடைமுறையை அறிந்திருப்பினும்;
           குடும்பத்தாரின் இயல்பை அறிந்து வாழ்வதே, குடும்பம் ஆகும்.

0638.  அறிகொன்று அறியான் எனினும் உறுதி
           உழையிருந்தான் கூறல் கடன்

           விழியப்பன் விளக்கம்: அரசாள்வோர், அமைச்சர்கள் அறிந்தவைகளை அறியமாட்டார்கள்
           எனினும்; அவைகளை உறுதியாய் எடுத்துரைப்பது, அருகிலிருக்கும் அமைச்சரின்
           கடமையாகும்.
(அது போல்...)
           முதியவர்கள், இளைஞர்களின் வேகத்தோடு வரமாட்டார்கள் எனினும்;
           தொழில்நுட்பங்களை பொறுமையாய் கற்பிப்பது, உறவிலிருக்கும் இளைஞர்களின்
           கடமையாகும்.

0639.  பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
           எழுபது கோடி உறும்

           விழியப்பன் விளக்கம்: அறமல்லாத விடயங்களைச் சிந்திக்கும், அமைச்சரவை
           அருகிலிருப்பது; எழுபது கோடி பகைவர்கள், பக்கத்தில் இருப்பதற்கு ஒப்பானதாகும்.
(அது போல்...)
           முறையில்லாத உறவுகளைக் கொண்டிருக்கும், மனிதர்கள் நட்பிலிருப்பது; எழுபது கோடி
           துன்பங்கள், வாழ்க்கையில் இருப்பதற்கு இணையாகும்.

0640.  முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
           திறப்பாடு இலாஅ தவர்

           விழியப்பன் விளக்கம்: செயல்திட்டங்களை, முறையான வகையில் வகுத்திருப்பினும்;
           தேவையான செயல்திறம் இல்லாத அமைச்சர்கள், முழுமையாகாத செயல்களையே
           செய்வர்.
(அது போல்...)
           தொழில்நுட்பங்களை, பயனுள்ள வகையில் உருவாக்கியிருப்பினும்; இயல்பான
           சிந்தனைத்திறன் இல்லாத மனிதர்கள், தர்மமில்லாத வழியிலேயே உபயோகிப்பர்.

குறள் எண்: 0640 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 064 - அமைச்சு; குறள் எண்: 0640}

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்

விழியப்பன் விளக்கம்: செயல்திட்டங்களை, முறையான வகையில் வகுத்திருப்பினும்; தேவையான செயல்திறம் இல்லாத அமைச்சர்கள், முழுமையாகாத செயல்களையே செய்வர்.
(அது போல்...)
தொழில்நுட்பங்களை, பயனுள்ள வகையில் உருவாக்கியிருப்பினும்; இயல்பான சிந்தனைத்திறன் இல்லாத மனிதர்கள், தர்மமில்லாத வழியிலேயே உபயோகிப்பர்.

செவ்வாய், மே 02, 2017

குறள் எண்: 0639 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 064 - அமைச்சு; குறள் எண்: 0639}

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்

விழியப்பன் விளக்கம்: அறமல்லாத விடயங்களைச் சிந்திக்கும், அமைச்சரவை அருகிலிருப்பது; எழுபது கோடி பகைவர்கள், பக்கத்தில் இருப்பதற்கு ஒப்பானதாகும்.
(அது போல்...)
முறையில்லாத உறவுகளைக் கொண்டிருக்கும், மனிதர்கள் நட்பிலிருப்பது; எழுபது கோடி துன்பங்கள், வாழ்க்கையில் இருப்பதற்கு இணையாகும்.

திங்கள், மே 01, 2017

குறள் எண்: 0638 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 064 - அமைச்சு; குறள் எண்: 0638}


அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்

விழியப்பன் விளக்கம்: அரசாள்வோர், அமைச்சர்கள் அறிந்தவைகளை அறியமாட்டார்கள் எனினும்; அவைகளை உறுதியாய் எடுத்துரைப்பது, அருகிலிருக்கும் அமைச்சரின் கடமையாகும்.
(அது போல்...)
முதியவர்கள், இளைஞர்களின் வேகத்தோடு வரமாட்டார்கள் எனினும்; தொழில்நுட்பங்களை பொறுமையாய் கற்பிப்பது, உறவிலிருக்கும் இளைஞர்களின் கடமையாகும்.