வியாழன், ஆகஸ்ட் 10, 2017

குறள் எண்: 0739 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0739}

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரும் நாடு

விழியப்பன் விளக்கம்: பெரு முயற்சியால், செயற்கையான வளங்களைப் பெறும் நாடு உயர்ந்தது அல்ல! பெரு முயற்சியின்றி, இயற்கையான வளங்களைப் பெற்றிருக்கும் நாடே உயர்ந்தது ஆகும்!
(அது போல்...)
உணர்ச்சி வயப்பட்டு, பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் கட்சி சிறந்தது அல்ல! உணர்ச்சி வயப்படாமல், உண்மையான வாக்குறுதிகளை அளிக்கும் கட்சியே சிறந்தது ஆகும்!

புதன், ஆகஸ்ட் 09, 2017

குறள் எண்: 0738 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0738}

பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து

விழியப்பன் விளக்கம்: உயிரழிக்கும் நோய் இல்லாமை/பல்வகைச் செல்வங்கள்/குறையாத விளைச்சல்/இயல்பான இன்பம்/வலிமையான காவல் - இவை ஐந்தும், நாட்டை அலங்கரிக்கும் அணிகலன்கள் ஆகும்.
(அது போல்...)
உணர்வழிக்கும் மூர்க்கம் இல்லாமை/பல்வேறு நற்குணங்கள்/பரஸ்பர புரிதல்/புனிதமான உறவு/உண்மையான ஒழுக்கம் - இவை ஐந்தும், வாழ்வை சிறப்பிக்கும் காரணிகள் ஆகும்.

செவ்வாய், ஆகஸ்ட் 08, 2017

குறள் எண்: 0737 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0737}

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு

விழியப்பன் விளக்கம்: நிலத்தடி-நீர் மற்றும் நிலப்பரப்பு-நீர்/நீண்டு உயர்ந்த மலைத்தொடர்கள்/மலையிலிருந்து வழியும் நீர்/வலிமையான கோட்டை - இவையாவும், ஓர் நாட்டின் முக்கியமான உறுப்புகளாகும்.
(அது போல்...)
அனுபவ-அறிவு மற்றும் கேள்வி-அறிவு/ஆழ்ந்து உணர்ந்த அறநெறிகள்/அறநெறியிலிருந்து கிடைக்கும் அறிவு/உறுதியான சுயவொழுக்கம் - இவையாவும், ஓர் மனிதனின் உயர்வான அம்சங்களாகும்.

திங்கள், ஆகஸ்ட் 07, 2017

குறள் எண்: 0736 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0736}

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடுஎன்ப நாட்டின் தலை

விழியப்பன் விளக்கம்: பகைவர்களால் அழிவைச் சந்திக்காமல், அழிவேதும் நிகழ்ந்தாலும்; எவ்வித வளத்திலும் குறையாத நாடே, எல்லா நாடுகளிலும் தலையானது எனப்படும்.
(அது போல்...)
உணர்வுகளால் பாதிப்புக்கு உள்ளாகாமல், பாதிப்பேதும் அடைந்தாலும்; எவ்வித உணர்ச்சியாலும் வெளிப்படுத்தாத மனிதரே, எல்லா மனிதரிலும் புனிதர் எனப்படுவர்.

ஞாயிறு, ஆகஸ்ட் 06, 2017

குறள் எண்: 0735 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0735}

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு

விழியப்பன் விளக்கம்: பல்வகைப் பிரிவினைகள்/பொதுநலத்தைப் பாழாக்கும் உட்பகை/அரசை அலைக்கழிக்கும் துணை அரசாங்கம் - இவையேதும் இல்லாதிருப்பதே நாடாகும்.
(அது போல்...)
பல்வேறு விரிசல்கள்/இல்லறத்தைப் பாதிக்கும் தனிப்பகை/சுற்றத்தை அழிக்கும் குடும்ப உறவுகள் - இவையாவும் இல்லாததே வம்சமாகும்.

சனி, ஆகஸ்ட் 05, 2017

குறள் எண்: 0734 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0734}

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு

விழியப்பன் விளக்கம்: அதீத பசி/தீராத நோய்/அண்டை நாட்டுப் பகை - இவை மூன்றும்; தன்னைச் சேராது, காக்க முயல்வதே நாடாகும்.
(அது போல்...)
அதீத மோகம்/குறையாத மனவுளைச்சல்/உறவை வஞ்சிக்கும் தீக்குணம் - இவை மூன்றும்; தனக்கு இல்லாமல், வாழ முயற்சிப்பதே ஒழுக்கமாகும்.

வெள்ளி, ஆகஸ்ட் 04, 2017

குறள் எண்: 0733 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0733}

பொறையொருங்கு மேல்வரும்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு

விழியப்பன் விளக்கம்: பல்வகை சுமைகள் ஒருங்கிணைந்து, தம்மேல் சுமத்தப்படும் போது; அவற்றைத் தாங்கி அரசாள்பவரோடு ஒருங்கிணைந்து, அரசுக்குத் துணை நிற்பதே நாடாகும்.
(அது போல்...)
பல்வேறு குழப்பங்கள் ஒருசேர, தம்முள் அழுத்தும் போது; அவற்றைக் களைந்து உறவுகளோடு ஒன்றுசேர்ந்து, இன்பத்திற்கு வழி வகுப்பதே இல்லறமாகும்.

வியாழன், ஆகஸ்ட் 03, 2017

குறள் எண்: 0732 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0732}

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அரும்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு

விழியப்பன் விளக்கம்: அளவுகடந்த பொருள் வளத்தால், எல்லோரின் விருப்பத்திற்கும் உள்ளாகி; எவ்வித கேடுகளும் இல்லாமல், அளவற்ற விளைச்சலைக் கொண்டிருப்பதே நாடாகும்.
(அது போல்...)
குறையற்ற சமுதாயப் பயனால், அனைவரின் ஆதரவையும் பெற்று; இயற்கைக்கு பாதகம் ஏதுமின்றி, எண்ணற்ற தொழில்நுட்பங்களை உருவாக்குவதே வளர்ச்சியாகும்.

புதன், ஆகஸ்ட் 02, 2017

குறள் எண்: 0731 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0731}

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு

விழியப்பன் விளக்கம்: உற்பத்தியை நிறுத்தாத விவசாயிகள்/அறத்தை மறக்காத சான்றோர்/எதற்கும் தாழ்ச்சியடையாத செல்வந்தர் - இவர்கள் சேர்ந்ததே நாடாகும்.
(அது போல்...)
அறத்தை மீறாத பெற்றோர்/நீதியைச் சிதைக்காத ஆட்சியர்/எதிலும் குறைவில்லாத முன்னோர் - இவர்களை உள்ளடக்கியதே சமுதாயமாகும்.

செவ்வாய், ஆகஸ்ட் 01, 2017

அதிகாரம் 073: அவையஞ்சாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 073 - அவையஞ்சாமை

0721.  வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
           தொகையறிந்த தூய்மை யவர்

           விழியப்பன் விளக்கம்: சொற்களின் வினைப்பொருளை அறிந்த, குழப்பமற்ற தூய
           அறிவுடையோர்; வல்லவர் அவை என்பதறிந்து அஞ்சி, வாய் தவறியும் பிழையாய்
           பேசமாட்டார்கள்.
(அது போல்...)
           உறவுகளின் வரையறையை உணர்ந்த, கள்ளமற்ற இனிய இல்லறத்தார்; பணக்கார வம்சம்
           என்ற செருக்கில், தன்னிலை மறந்தும் இச்சையை நாடமாட்டார்கள்.
      
0722.  கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
           கற்ற செலச்சொல்லு வார்

           விழியப்பன் விளக்கம்: அவையச்சம் இன்றி கற்றறிந்தோர் அவையில், தாம் கற்றவற்றை
           அவையோர் ஒப்ப சொல்லும் திறமுடையோர்; கற்றவர்களுள் "முழுமையாய் கற்றவர்"
           எனப்படுவர்.
(அது போல்...)
           குறையேதும் இன்றி வம்சத்தினர் முன்னிலையில், தம் வாழ்வியலை வம்சத்தினர் போற்ற
           வாழும் இயல்புடையோர்; வாழ்ந்தவர்களில் "சிறப்பாய் வாழ்ந்தவர்" எனப்படுவர்.
           
0723.  பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
           அவையகத்து அஞ்சா தவர்

           விழியப்பன் விளக்கம்: பகைவர்கள் சூழ்ந்த களத்தில், அச்சமின்றி வீரமரணம்
           எய்துவோரைக் காண்பது எளிது! சான்றோர்கள் நிறைந்த அவையில், அச்சமின்றி
           சொற்பொழிவு ஆற்றுவோரைக் காண்பது அரிது!
(அது போல்...)
           சிக்கல்கள் நிறைந்த உறவில், குற்றவுணர்வின்றி துரோகம் செய்வோரை எளிதில்
           காணலாம்! மகிழ்ச்சி நிறைந்த உறவில், குற்றவுணர்வின்றி துரோகம் செய்வோரைக்
           காண்பது அரிதானது!

0724.  கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
           மிக்காருள் மிக்க கொளல்

           விழியப்பன் விளக்கம்: கற்றறிந்தோர் அவையில் நாம் கற்றதை, அச்சமின்றி அவர்கள் ஒப்பப்
           பகிர்ந்து; நம்மை விட அதிகம் கற்றவர்களிடம் இருந்து, சிறந்ததைக் கற்றுக்கொள்ள
           வேண்டும்.
(அது போல்...)
           வாழ்ந்துணர்ந்த முதியோரிடம் நம் வாழ்க்கையை, தயக்கமின்றி அவர்கள் வாழ்த்த
           உரைத்து; நம்மை விட சிறந்து வாழ்ந்தவர்களிடம் இருந்து, அரிதானதைத்
           தெரிந்துகொள்ள வேண்டும்.

0725.  ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
           மாற்றம் கொடுத்தற் பொருட்டு

           விழியப்பன் விளக்கம்: சான்றோர்கள் நிறைந்த அவையில், அவையச்சம் ஏதுமின்றி பதில்
           சொல்லும் பொருட்டு; வாழ்வியல் நெறிகளை, தேவையான அளவயறிந்து கற்கவேண்டும்.
(அது போல்...)
           ஒழுக்கமானோர் நிறைந்த வம்சத்தில், குறையொழுக்கம் ஏதுமின்றி வாழ்ந்து காட்டும்
           பொருட்டு; முன்னோரின் வரலாற்றை, அவசியமான அளவுக்கு அறியவேண்டும்.

0726.  வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்
           நுண்ணவை அஞ்சு பவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: வலிமையான வீரர் அல்லாதவர்க்கு, வாளுடன் என்ன தொடர்பு?
           நுண்ணறிவு உடையோர் அவையைக் கண்டு அஞ்சுவோர்க்கு, நூலுடன் என்ன தொடர்பு?
(அது போல்...)
           இயல்பான அன்பு இல்லாதவர்க்கு, உறவுடன் என்ன தொடர்பு? சுயவொழுக்கம் நிறைந்த
           கட்சியை விமர்சனம் செய்வோர்க்கு, பொதுநலத்துடன் என்ன தொடர்பு?

0727.  பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
           அஞ்சும் அவன்கற்ற நூல்

           விழியப்பன் விளக்கம்: அறிவார்ந்த அவையினர் முன், பேசுவதற்கு அஞ்சுவோர் கற்ற நூல்;
           அச்சுறுத்தும் பகைவர்கள் முன், கோழையின் கையிலிருக்கும் வாளைப் போன்றதாகும்.
(அது போல்...)
           தேர்ந்தெடுத்த மக்கள் முன், தோன்றுவதற்கு பயப்படுவோர் பெற்ற வாக்குகள்; கொடிய
           விலங்குகள் முன், பயிற்சியற்றோர் கொண்டிருக்கும் கூண்டைப் போன்றதாகும்.

0728.  பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
           நன்கு செலச்செல்லா தார்

           விழியப்பன் விளக்கம்: நல்லறிவு கொண்ட அவையினர் மத்தியில், அச்சமின்றி
           நன்முறையில் எடுத்துரைக்க முடியாதோர்; பல்வகைப் பாடங்களைக் கற்றிருந்தும்,
           பயனற்றவரே ஆவர்.
(அது போல்...)
           முழுப்பலம் உடைய ஆட்சியினர் முன், தயக்கமின்றிக் குறைகளை இடித்துரைக்க
           இயலாதது; பல்வகை வசதிகளைக் கொண்டிருக்கும், பிணவறையைப் போன்றதாகும்.

0729.  கல்லா தவரின் கடைஎன்ப கற்றறிந்தும்
           நல்லார் அவையஞ்சு வார்

           விழியப்பன் விளக்கம்: பலவற்றைக் கற்றறிந்து இருப்பினும், நல்லறிவு கொண்டோர்
           அவைக்கு அஞ்சுவோர்; கல்வியறிவு இல்லாதவரை விட, அடுத்த நிலையிலேயே
           வைக்கப்படுவர்.
(அது போல்...)
           பல்வகை உறவுகள் இருப்பினும், ஈன்றெடுத்தப் பெற்றோரை விலக்கி வைத்திருப்போர்;
           உறவேதும் இல்லாதவரை விட, அதிகமானத் துன்பத்தையே சந்திப்பர்.

0730.  உளரெனினும் இல்லாரோடு ஒப்பர் களனஞ்சிக்
           கற்ற செலச்சொல்லா தார்

           விழியப்பன் விளக்கம்: அவையைக் கண்டு அஞ்சி, தாம் கற்றதை நன்முறையில்
           எடுத்துரைக்க இயலாதோர்; உயிருடன் இருப்பினும், இறந்தவருக்கு இணையாவர்.
(அது போல்...)
           பகைவரைப் பார்த்து பயந்து, தம் வலிமையை முழுமையாய் வெளிப்படுத்த முடியாதோர்;
           வீரராய் இருப்பினும், கோழைக்கு ஒப்பாவர்.

குறள் எண்: 0730 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 073 - அவையஞ்சாமை; குறள் எண்: 0730}

உளரெனினும் இல்லாரோடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்

விழியப்பன் விளக்கம்: அவையைக் கண்டு அஞ்சி, தாம் கற்றதை நன்முறையில் எடுத்துரைக்க இயலாதோர்; உயிருடன் இருப்பினும், இறந்தவருக்கு இணையாவர்.
(அது போல்...)
பகைவரைப் பார்த்து பயந்து, தம் வலிமையை முழுமையாய் வெளிப்படுத்த முடியாதோர்; வீரராய் இருப்பினும், கோழைக்கு ஒப்பாவர்.