செவ்வாய், பிப்ரவரி 06, 2018

குறள் எண்: 0919 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 092 -  வரைவின் மகளிர்; குறள் எண்: 0919}

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு

விழியப்பன் விளக்கம்: வரையறையின்றி, பொருளளிக்கும் யாருடனும் உறவாடும் விலைமகளிரின் மெல்லிய தோள்; சிறப்படையும் தகுதியற்ற மக்கள் புதையும், நரகம் ஆகும்!
(அது போல்...)
கொள்கையின்றி, பதவியளிக்கும் எவருடனும் கூடும் சாதிவெறியரின் சிறிய கட்சி; அறமுணரும் தகுதியற்றத் தொண்டர்கள் தஞ்சமடையும், கல்லறை ஆகும்!

திங்கள், பிப்ரவரி 05, 2018

குறள் எண்: 0918 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 092 -  வரைவின் மகளிர்; குறள் எண்: 0918}

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு

விழியப்பன் விளக்கம்: அறத்தன்மையை ஆய்ந்தறியும் அறிவுடையவர் அல்லாதவர்க்கு; மாயை நிறைந்த விலைமகளிரின் தழுவலைத் தேடுமளவு, மோகினியின் தாக்கமுண்டு என்பர்!
(அது போல்...)
மக்களாட்சியை வெளிப்படுத்தும் வைராக்கியம் இல்லாதவர்க்கு; தீமை மிகுந்த குண்டர்களின் ஆதரவை நாடுமளவு, பேராசையின் ஆதிக்கமுண்டு என்பர்!

ஞாயிறு, பிப்ரவரி 04, 2018

குறள் எண்: 0917 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 092 -  வரைவின் மகளிர்; குறள் எண்: 0917}

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்

விழியப்பன் விளக்கம்: அறவழிக்குப் புறம்பானவற்றை மனதில் விரும்பி, பலருடன் உடலால் உறவாடும் விலைமகளிரின் தோளை; வைராக்கியமான மனதில்லாதவரே தீண்டுவர்!
(அது போல்...)
மக்களாட்சிக்கு எதிராய் இயங்கும் கட்சிகளோடு, மாறிமாறிக் கூட்டணி அமைக்கும் சாதிக்கட்சிகளின் வேட்பாளரை; ஊழலழிக்கும் கடமையறியாரே ஏற்பர்!

சனி, பிப்ரவரி 03, 2018

குறள் எண்: 0916 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 092 -  வரைவின் மகளிர்; குறள் எண்: 0916}

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்

விழியப்பன் விளக்கம்: அழகு போன்ற விடயங்களால் செருக்கடைந்து, அற்ப சுகத்தைப் பரப்பும் விலைமகளிரின் தோளை; தன்நலனை பொதுநலனாய் பரப்புவோர், தீண்டமாட்டார்கள்!
(அது போல்...)
சொத்து போன்ற விடயங்களால் ஆணவமுற்று, அற்ப செயலைச் செய்யும் சிறுமக்களின் உறவை; தன்சொத்தைப் பொதுசொத்தாய் எண்ணுவோர், ஏற்கமாட்டார்கள்!

வெள்ளி, பிப்ரவரி 02, 2018

குறள் எண்: 0915 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 092 -  வரைவின் மகளிர்; குறள் எண்: 0915}

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்

விழியப்பன் விளக்கம்: மதியின் தன்மையால், புகழ்பெற்ற அறிவினைப் பெற்றவர்; பொருளளிக்கும் யார்க்கும் பொதுவாகும் தன்மையுடைய விலைமகளிரின், அற்ப சுகத்தைத் தீண்டார்!
(அது போல்...)
அன்பின் அடிப்படையால், உயர்ந்த வாழ்வியலைக் கற்றவர்; பதவியளிக்கும் எவர்க்கும் அடிபணியும் அடிப்படையுடைய அரசியலாரின், தீய ஒழுக்கத்தை விரும்பார்!

வியாழன், பிப்ரவரி 01, 2018

குறள் எண்: 0914 (விழியப்பன் விளக்கவுரை

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 092 -  வரைவின் மகளிர்; குறள் எண்: 0914}

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்

விழியப்பன் விளக்கம்: பொருளை மட்டும் பொருட்படுத்தும் விலைமகளிரின், அற்ப சுகத்தை; அருளை மட்டும் பொருளாக உணரும் பகுத்தறிவுவாதிகள், தீண்டமாட்டார்கள்!
(அது போல்...)
சுயநலத்தை மட்டும் மேம்படுத்தும் அரசியலாரின், குடும்ப அரசியலை; பொதுநலத்தை மட்டும் சுயநலமாக உணரும் தொடர்கள், ஆதரிக்கமாட்டார்கள்!

புதன், ஜனவரி 31, 2018

குறள் எண்: 0913 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 092 -  வரைவின் மகளிர்; குறள் எண்: 0913}

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று

விழியப்பன் விளக்கம்: பொருளைப் பொருட்படுத்தும் விலைமகளிரோடு, கொள்ளும் பொய்யானத் தழுவல்; இருட்டறையில், உணர்வேதும் இல்லாதப் பிணத்தைத் தழுவுவதற்கு இணையாகும்!
(அது போல்...)
ஊழலை வளர்த்திடும் அரசியலரோடு, கைகோர்க்கும் ஆபத்தான வளர்ச்சி; வயற்பரப்பில், பயனேதும் இல்லாத முற்செடியை வளர்ப்பதற்கு ஒப்பாகும்!

செவ்வாய், ஜனவரி 30, 2018

குறள் எண்: 0912 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 092 -  வரைவின் மகளிர்; குறள் எண்: 0912}

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்

விழியப்பன் விளக்கம்: பயனை அளவிட்டு, பொய்யாய் பண்புடன் பேசும்; பண்பற்ற விலைமகளரின் தரத்தை அளவிட்டு, அவர்களைச் சேராது விலகவேண்டும்!
(அது போல்...)
பதவியை மதிப்பிட்டு, பொய்யாய் பொதுநலம் பேசும்; பொதுநலமற்ற அரசியலாரின் சுயத்தை மதிப்பிட்டு, அவர்களைத் தொடராது ஒதுக்கவேண்டும்!

திங்கள், ஜனவரி 29, 2018

குறள் எண்: 0911 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 092 -  வரைவின் மகளிர்; குறள் எண்: 0911}

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்

விழியப்பன் விளக்கம்: அன்பு சார்ந்த உணர்வுகளை நாடாமல், பணம் சார்ந்த உடைமைகளை நாடும் விலை-மகளிரின்; இனிமையான சொற்கள், கெடுதலையே விளைவிக்கும்!
(அது போல்...)
அறம் சார்ந்த கொள்கைகளைத் தொடராமல், ஊழல் சார்ந்த கட்சிகளைத் தொடரும் அரசியல்-வியாபாரிகளின்; எழுச்சியான உரைகள், ஏமாற்றத்தையே அளிக்கும்!

புதன், ஜனவரி 24, 2018

குறள் எண்: 0906 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 091 - பெண்வழிச் சேறல்; குறள் எண்: 0906}

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்

விழியப்பன் விளக்கம்: மனைவியின் அழகில் மயங்கி, மூங்கில் போன்ற அவள் தோளுக்குப் பயப்படுவோர்; தேவர்களுக்கு இணையாய் வாழ்ந்தாலும், புகழ் இல்லாதவரே!
(அது போல்...)
அரசியலாரின் ஊழலில் பங்கிட்டு, சேவகர் போன்ற அவர்களிடம் அடிபணியும் அதிகாரிகள்; மன்னர்களுக்கு இணையாய் வாழ்ந்தாலும், சுயம் இல்லாதோரே!

செவ்வாய், ஜனவரி 23, 2018

குறள் எண்: 0905 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 091 - பெண்வழிச் சேறல்; குறள் எண்: 0905}

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்

விழியப்பன் விளக்கம்: பரஸ்பர உணர்வுப் பகிர்தல் இல்லாததால், மனைவிக்கு அஞ்சும் கணவன்; எந்நாளும், நல்லோர்க்கு நல்லவற்றை செய்ய அஞ்சுவர்.
(அது போல்...)
ஆழ்ந்த மக்களாட்சிப் புரிதல் இல்லாததால், மக்களுக்குத் துரோகம் செய்வோர்; எந்நிலையிலும், நம்பியோர்க்குத் துரோகம் செய்யத் தயங்கார்.