வியாழன், ஆகஸ்ட் 23, 2018

குறள் எண்: 1117 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1117}

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து

விழியப்பன் விளக்கம்: மறைந்து மீண்டும் தோன்றும் நிலவில் இருக்கும், ஒளிவு குறைந்த இருள் போல்; என்னவளின் ஒளிமிக்க முகத்தில், களங்கம் ஏதுமுண்டோ?... இல்லையே!
(அது போல்...)
ஆவியாகி மீண்டும் பரவும் கடலில் இருக்கும், உப்பு மிகுந்த நீர் போல்; என்னம்மையின் ஒப்பற்ற அன்பில், குறை ஏதுமுண்டோ?... இல்லையே!

புதன், ஆகஸ்ட் 22, 2018

குறள் எண்: 1116 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1116}

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்

விழியப்பன் விளக்கம்: ஒளிமிக்க என்னவளின் முகத்தில், மதிமயக்கம் கொண்ட விண்மீன்கள்; நிலவுக்கும்/பெண்முகத்திற்கும் வித்தியாசம் அறியாமல், தன்னிலை மறந்து அலைகின்றன!
(அது போல்...)
புகழ்மிக்க எந்தலைவனின் கடமையில், சித்தம் கலங்கிய எதிர்க்கட்சிகள்; குடும்பத்திற்கும்/மக்களாட்சிக்கும் வித்தியாசம் அறியாமல், தன்கடமை மறந்து இருக்கின்றன!

செவ்வாய், ஆகஸ்ட் 21, 2018

குறள் எண்: 1115 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1115}

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை

விழியப்பன் விளக்கம்: தன் மென்மையை உணராமல், காம்பு களையாத அனிச்சம் பூவைச்  சூடியதால்; ஒடிந்த என்னவளின் இடுப்புக்காக, மங்களமற்ற இசை ஒலிக்கும்!
(அது போல்...)
தன் கடமையைச் செய்யாமல், ஊழல் கலையாது அரசியல் ஆதாயம் தேடியதால்; இழந்த மக்களின் ஆட்சிக்காக, அறமற்ற தண்டனை கிடைக்கும்!

திங்கள், ஆகஸ்ட் 20, 2018

குறள் எண்: 1114 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1114}

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று

விழியப்பன் விளக்கம்: அழகிய குவளை மலர், என்னவளைக் கண்டால்; சிறந்த அணிகலனாகிய அவள் கண்ணுக்கு ஒப்பமாட்டேன் எனவுணர்ந்து, தலைகுனிந்து நிலம் நோக்கும்!
(அது போல்...)
தேர்ந்த அரசியல் விமர்சகர், நற்தலைவரைக் கண்டால்; உயர்ந்த குணமாகிய அவர் வாய்மைக்கு ஒப்பமாட்டேன் என்றறிந்து, வழிவிட்டு விலகி நிற்பர்!

ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2018

குறள் எண்: 1113 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1113}

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு

விழியப்பன் விளக்கம்: மூங்கில் போன்ற தோளை உடையவளுக்கு - மேனி, இளந்தளிருக்கும்; பல், முத்துக்கும்; உடல்மணம், நறுமணத்திற்கும்; மைதீட்டிய கண், வேலுக்கும் - இணையாகும்!
(அது போல்...)
வைரம் போன்ற சிந்தனை உடையோருக்கு - செயல், உயிர்மூச்சுக்கும்; சொல், குருதிக்கும்; உடல்வலிமை, மனவலிமைக்கும்; பண்பட்ட மனம், அரணுக்கும் - இணையாகும்!

சனி, ஆகஸ்ட் 18, 2018

குறள் எண்: 1112 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1112}

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று

விழியப்பன் விளக்கம்: மலர்களைக் கண்டால், மயங்கும் நெஞ்சமே! இவளின் கண்களும், பலர் கண்டு வியக்கும் பூக்களுக்கு இணையாகும், என்றெண்ணி தான் மயங்குகிறாயோ?
(அது போல்...)
உறவுகளைக் கண்டால், உருகும் மனிதமே! இயற்கையால் பாதிக்கப்பட்டோரும், பலர் உறவாடி உருகும் உறவுகளுக்கு இணையாவர், என்றெண்ணி தான் உருகுகிறாயோ?

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2018

குறள் எண்: 1111 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1111}

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்

விழியப்பன் விளக்கம்: அதிமென்மை கொண்ட அனிச்சம் பூவே! நீ வாழ்வாய்! ஆனால், நான் விரும்பும் என்னவள்; உன்னினும் மென்மையானவள் என்பதையும் உணர்வாயாக!
(அது போல்...)
அதிவலிமை கொண்ட பூமித் தாயே! நீ சிறப்பாய்! ஆனால், நான் வணங்கும் என்னம்மை; உன்னினும் வலிமையானவள் என்பதையும் ஏற்பாயாக!

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2018

ஒரு தந்தையின் உண்மையான மேன்மை...


ஒரு பெண்ணின் உண்மையான கொடை...


குறள் எண்: 1097 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 110 - குறிப்பு அறிதல்; குறள் எண்: 1097}

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு

விழியப்பன் விளக்கம்: பகையற்ற சிறுமையான பேச்சும்/பகைவர் போன்ற பார்வையும் - வேண்டாதவர் போல் தோன்றும், நட்புடையோரின் அன்பின் குறிப்புகளாகும்!
(அது போல்...)
வெறுப்பற்ற கோபமான கண்டிப்பும்/சர்வாதிகாரி போன்ற நடத்தையும் - மாற்றார் போல் தோன்றும், பெற்றோரின் கடமையின் குறிப்புகளாகும்!

திங்கள், ஜூலை 02, 2018

இரட்டையிலக்க வயதடைந்தவளுக்கு வாழ்த்துகள்...

{பாவேந்தரின் மகளின் திருக்கரங்களில் - என்மகள்}

ஒன்பதாம் ஆண்டின் சூலை2இல் பிறந்தமகளின்று;
ஒற்றையிலக்கம் கடந்து இரட்டையிலக்க வயதினுள்!
எப்படி வாழ்த்துவது? வளமுடன் வாழ்கவென்றா?
எஞ்ஞான்றும் வாழ்கவென்றா? பல்லாண்டு வாழ்கவென்றா?

“குடும்பவிளக்கு படைத்திட்ட பாவேந்தரின் மகள்வழி”
குடும்பத்தில் நுழைந்திட்ட பொன்மகளை வாழ்த்துவதில்;
புதுமையுடன் பொதுமையும் கலந்திட வேண்டுமென்றே
புலமையைப் பொலிவூட்டியே கண்டேன் கவியொன்றும்!

குடும்பஉறவு காப்பாய் மகளே! பாவேந்தர்
கொடுத்திட்ட புகழையும் காப்பாய் மகளே!
குடும்பத்தை ஒளியூட்ட விளக்காவாய் மகளே!
குணத்தை மெருகூட்ட நெருப்பாவாய் மகளே!

உறவுகள் வளர உணர்வுகள் வளரும்!
உணர்வுகள் வளர உரிமைகள் வளரும்!
உரிமைகள் வளர உள்ளங்கள் வளரும்!
உள்ளங்கள் வளர உறவுகள் வளரும்!

உலகமோர் சுழற்சி! உறவுகளில் ஆரம்பித்து,
உறவுகளிலே முடியும்; அதிசயமான சுழற்சி!
உறவுகள் உதிர்ந்தால், உலகமே உதிரும்!
உறவுகள் காப்பாய், உலகையும் காப்பாய்!