ஞாயிறு, ஜூன் 24, 2012

என் தமிழுக்கு வித்திட்டவர்...



        என்னுடைய தமிழின் தரம் படிப்படியாய் உயர்ந்து வருவதாய் ஓர் எண்ணம்! என்னுடைய படைப்புகள் கூட அடுத்த நிலை தரத்தை அடைந்திருப்பதாய் ஓர் உணர்வு; நான் தானே என்னுடைய படைப்புகளின் முதல் "இரசிகனாய்" இருந்திட முடியும்! அப்படியெனில், என்னுடைய படைப்புகளின் தரம் உயர்வதை எளிதில் உணரமுடியும் தானே? அந்த நம்பிக்கையின் அடிப்படையில், நான் பல நாட்களுக்கு முன்பே எழுதிட நினைத்திட்ட தலையங்கத்தை இந்த வாரம் எடுத்திருக்கிறேன். அது! என்னுடைய தமிழுக்கு வித்திட்டவர் யார் என்பதைப் பற்றி!! அவர் எப்படி என்னுள் தமிழ்-தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதைப் பற்றி!!! என்னுடைய பள்ளி நாட்கள் துவங்கி, எப்படி என்னுள் இந்த விதையை விதைத்தார் என்பதைப் பற்றி எங்கனம் எழுதிட மறந்திட முடியும்? அவர் எத்தனை கடினமான மனநிலையில் இருப்பினும், எவ்விதமான தாக்குதலுக்கு உட்பட்ட சூழ்நிலையில் இருப்பினும் - நான் எப்போது வேண்டுமானாலும் - அவரிடம் என்னுடைய சந்தேகங்களை, என் கற்பனைகளை விவாதிக்க முடியும். இரு வாரங்களுக்கு முன் கூட என் கவிதையில் ஓர் "சொல்" குறித்து விவாதித்து என் சந்தேகத்தைத் தீர்த்துக்கொண்டேன். உண்மையில், மற்ற விசயங்களில் எப்படியோ?! இந்த விதத்தில் நான் மிகவும் கொடுத்து வைத்தவன் என்றே சொல்லவேண்டும். என் தமிழுக்கு வித்திட்டு அதை இன்றளவும் தேவையின்போது தண்ணீர் ஊற்றி வளர்த்து வருபவர் - என்னப்பன் புலவர். இளமுருகு அண்ணாமலை. ஆம்! என் உயிருக்கு வித்திட்டவரே, என் (தமிழ்)உணர்வுக்கும் வித்திட்டவர். 
   
      பொதுவாய், என் வாழ்க்கையை செம்மைப்படுத்த அவர் செய்த செயல்களை முன்பு "கும்பிடறேன்பா" என்ற தலையங்கத்தில் விவரித்திருந்தேன். அத்தலையங்கத்தில் விவரித்திட்ட அதே அடிப்படையில், என் தமிழறிவு வளர்வதில் கூட அவர் எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை; மாறாய், என் பள்ளியின் சூழல் அதற்கு உதவியாய் இருக்கவேண்டும் என்பதற்காய் என் "பத்தாவது" வயதில் என் பள்ளியையே மாற்றினார். ஆனால், நான் என்னுடைய விருப்பின் பால் - என் தந்தையின் பெருமை காத்திட வேண்டி - நானே தான் விரும்பி தமிழை நேசிக்க ஆரம்பித்தேன். நான் படித்த தமிழிலக்கணம், இப்போது எனக்கு பெரிதாய் வழக்கத்தில் இல்லை! ஒவ்வொரு முறையும் விடுப்பில் இந்தியா செல்லும் போது, இலக்கணம் பற்றி என் தந்தையிடம் (மீண்டும்) கற்றிட வேண்டும் என முனைந்து நேரமின்மை காரணமாய் அது செயலாக்கபடாமல் தள்ளிக்கொண்டே போகிறது. இன்னும் ஓர் வாரத்தில், என் மகளின் பிறந்த நாளுக்காய் விடுப்பில் செல்கிறேன்; பார்ப்போம்! இந்த முறையாவது இலக்கணம் ஏதேனும் கற்க முடிகிறதா என்று!! அவருக்கும் வயது கடந்து கொண்டே போகிறது!!! அவரிருக்கும் போதே என் இலக்கண அறிவுக்கும் "பிள்ளையார் சுழி" போட ஆசைப்படுகிறேன்; அது அவருக்கு பெருத்த ஆனந்தத்தையும், கர்வத்தையும் கூட கொடுக்கக்கூடும். பெருந்தகையின் "மகன் தந்தைக்காற்றும் உதவி…" எனும் "குறள்" போல், இதை அவருக்காய் செய்திடல் வேண்டும். இந்த முறை செய்திடுவேன் என்ற நம்பிக்கை மிகுந்தே உள்ளது.

          என் பள்ளிக்காலத்தில், என் தந்தை தான் எனக்கு தமிழ் மற்றும் வகுப்பாசிரியர்; எத்தனை பேருக்கு வாய்க்கும் இந்த வாய்ப்பு எனத் தெரியவில்லை! எனக்கு வாய்த்தது. எங்கள் (உயர்)பள்ளியில் (எட்டு முதல் பத்து வரையிலான வகுப்புகள் கொண்டது), காலை "கடவுள் வாழ்த்து/ தேசிய கீதம்" முடித்த பின் தினமும் ஒரு "திருக்குறள்" சொல்லவேண்டும் என்ற நியதி; "திருக்குறள்" என்றுரைத்ததும் - முன் வருவோர் - எவர் வேண்டுமானாலும் சொல்லலாம்; எந்த கட்டுப்பாடும் இல்லை. இது, என்னுடைய "எட்டாவது" வகுப்பில் துவங்கியது; முதல் ஓராண்டு "மூத்த மாணவி" ஒருவர் இருந்தார்; அவருக்கும் எனக்கு கடினமான போட்டி இருக்கும்! இதற்காகவே, இருவரும் முதல் வரிசையிலேயே நின்றிருப்போம் - ஓடி சென்று முதல் ஆளாய் சொல்ல!! உண்மையில், எவர் அதிகமான நாட்கள் சொன்னோம் என்று தெரியவில்லை; ஆனால், எங்கள் இருவர் தவிர யாரும் அதற்கு போட்டி போடுவதில்லை. நான் அடுத்த ஆண்டு சென்றபோது, அவர் பள்ளி இறுதியாண்டு முடித்து வேறு பள்ளிக்கு சென்று விட்டார்; அத்துடன், எனக்கு இருந்த ஒரே போட்டியும் இல்லாமல் போனது!!! ஆயினும், என் ஆர்வம் குறையவே இல்லை; வேறெவருக்கும் அந்த வாய்ப்பை எளிதில் விட்டுக்கொடுத்ததில்லை (ஓரிரு நாட்கள் தவிர). காலையில், உணவு உண்ணும் போதோ அல்லது பள்ளிக்கு கிளம்பும் போதோ தான் என் தந்தையிடம் ஓர் திருக்குறள் மற்றும் அதன் விளக்கமும் சொல்லக் கேட்பேன். அவர், பொதுவான விளக்கம் சொல்வதோடு அல்லாது, அவரின் பார்வையிலான விளக்கத்தையும் சொல்லிக்கொடுப்பார்.

             அவரின் பார்வை கலந்த விளக்கம் தான் என்னைப் பலவழியில் பன்படச் செய்தது. அவரின் பார்வையில், என்னை மிகவும் கவர்ந்த திருக்குறள் "இளைதாக முள்மரம் கொள்க…" என்பது. முதலில், முள்மரம் பற்றி கூறி, பின் அதற்கு அவர் சொல்லிய விளக்கம் "நாமும், நம் தவறுகளை சிறிய வயதிலயே களைந்து விடவேண்டும்; இல்லையேல், பின்னாளில் அதை களைவது மிக்க சிரமமாய் இருக்கும்" என்பது தான். இங்கே தான், வள்ளுவனையும் எனக்கு மிகவும் பிடிக்கும்; "ஐந்தில் வளையாதது..." என்பதில் இருந்த மாறுபட்ட வள்ளுவனின் கருத்து. சிரமம் எனினும், எப்போதும் எதுவும் சாத்தியம் என்ற வள்ளுவன் வாக்கு! அதன் அடிப்படையில் தான் "ஐந்தில் வளையாதது" என்ற என் புதுக்கவிதையை எழுதினேன். பெருந்தகையும், எந்தந்தையும் கலந்து ஊட்டிய தமிழ் இது!! திருக்குறளுக்கு பின், என் தந்தைக்காய் நான் செய்தது; எந்த பள்ளியில் "தமிழ் மன்ற தேர்வு" நடப்பினும் அதில் கலந்து கொண்டு  முடிந்த அளவில் "முதல் பரிசு" வாங்கச் செய்தது; எத்தனை தேர்வுகள் வென்றேன் என்று உண்மையில் எனக்கு நினைவில்லை; அதற்கான ஆதாரங்கள் எதுவும் இப்போது கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை. அதன் பின், பள்ளி கலைவிழாக்களில் கலந்து கொண்டு  பேசுவது! அத்தனை உணர்ச்சிகளையும், என் தந்தை எனக்கு சொல்லிக் கொடுப்பார். நான் பேசி, முடிந்ததும் என் தந்தையையும் முந்திக்கொண்டு என்னையும், என்னப்பனையும் பாராட்டிய ஆசிரியர்கள் நிறைய பேர். இது தற்பெருமை அல்ல; மாறாய், என் "தமிழ் ஆசான்" பற்றி விளக்கும் செயல்.

           இப்படியாய், பல விசயங்களை பற்றி கூறிக்கொண்டே செல்லலாம்; ஆயினும், சுருங்கச் சொல்ல வேண்டும் என்பதால், இவ்வலைப்பதிவிற்காய் நான் எழுதிய ஓர் புதுக்கவிதையில் எழுந்த சந்தேகம் பற்றி கூறுகிறேன். அது "கணினி" என்ற புதுக்கவிதை; அதில் "கணி நீ" என்று ஓர் சொற்றொடரை எழுதியிருந்தேன். பின், "கணி" என்ற சொல் "தனித்து" நின்று நான் எதிர்ப்பார்த்த பொருளை கொடுக்குமா என்று ஓர் சந்தேகம். உடனே, என் என்னப்பனை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டேன். அவர் சிறிது யோசித்து விட்டு, அவ்வாறு வரலாம்; அதில் தவறில்லை என்றார்! மேலும், தமிழ் இலக்கிய மரபு எப்போதும் "புதிய சொல்லாக்கத்தை" ஆதரிக்கும் என்றார்!! அது எனக்கு புதிய தகவல்; அது தான் என் தமிழறிவுக்கு முக்கியம். வேறெவரும் இந்த சொல்லாக்கத்தை கையாண்டிருக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை!!! ஆனால், உண்மையில் நான் இத்தகைய தந்தை கிடைத்ததற்காய் பெருமகிழ்ச்சி அடைந்தேன். இது போல், பல நேரங்களில் அவரின் உதவி கோரியிருக்கிறேன். இவ்வாறாய், என்னப்பன் வித்திட்டதன் மூலம் என் "கன்னி புதுக்கவிதையை" நான் எழுதிய ஆண்டு 1996. அது "பணம்" எனும் புதுக்கவிதை; அவ்வாறாய், நான் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட புதுக்கவிதைகளை கொண்ட "ஏடு" தொலைந்துவிட்டது. என் வீட்டார் எவரும், பழைய தாட்கள் வாங்குபவரிடம் கூட விற்றிருக்கக் கூடும். எனினும், இந்த வலைப்பதிவை ஆரம்பித்த பின் ஒருசில புதுக்கவிதைகள் எனக்கு நினைவுக்கு வந்தன; அதில் "பணம்" எனும் என் முதல் புதுக்கவிதையும் ஒன்று; அதை, சிறு மாற்றம் செய்து இவ்வலைப்பதிவின் முதல் வார பதிப்பிலேயே பதித்துவிட்டேன். இப்படியாய், என்னப்பன் வித்திட்ட இந்த தமிழுணர்வு மென்மேலும்…

செழிக்கும் என்பதில் எந்த ஐயமும் எனக்கில்லை!!!

பின்குறிப்பு: என் தந்தையின் தமிழறிவும், திறனும் அசாதாரணம்! இதை உணர்ந்தோர்க்கு தெரியும் என் கூற்று மிகையல்ல என்பது!! ஏனோ, சூழ்நிலை காரணமாய் அவரால் ஓர் எல்லை தாண்டி விரிவடைய இயலவில்லை; விரிவடைந்திருப்பின், தமிழ் வளர்ச்சிக்கு அவரின் பங்கு பெரிதாய் இருந்திருக்கும். அதற்கு, மிகச்சிறிய உதாரணம் - இவ்வலைப்பதிவில் "என்னப்பனின் பார்வை" என்ற பிரிவில் வெளியிட்டிருக்கும் அவரின் முதல் கவிதை; அது, முதல் பரிசும் பெற்ற "கோதுமை தந்த குணம்" என்ற ஈற்றடி வெண்பா. அதை எழுதும்போது அவருக்கு "இருபத்தைந்து" அகவை; எத்தனை அரசியல் ஞானம், அந்த வயதில் இருந்திருப்பின், அத்தகைய "வெண்பாவை" எழுதி இருக்க முடியும்? என் மகளுக்காய் அவர் எழுதிய பாக்களில் கூட அவரின் "அரசியல் கோபம்" வெளிப்பட்டிருக்கும்; வாய்ப்பும், விருப்பும் இருப்பின் அவைகளை ஓர் முறை படித்துப் பாருங்கள். ஏனோ! அவரை பெரிய அளவிற்கு வளரவிடாது அவர் சூழல் தடுத்துவிட்டது. என் தமிழறிவு, அவரைக்காட்டிலும் "மிகச்சிறியது" எனினும், என்னுடைய பங்களிப்பை எந்த தடையையும் தகர்த்து தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பது தான் என் திண்ணமான எண்ணம்!!! எப்போதும் போல், என்னுடைய "தமிழுணர்வு" சார்ந்த இந்த புரிதலுக்கும் அவரின் வாழ்க்கையே எனக்கு பாடமாய் அமைந்திருப்பது கூட எனக்கு கிடைத்திட்ட வரமோ???                                     
    

ஒப்பிடுதலும், வாழ்க்கையும்...



ஒப்பிடுதலே - வாழ்க்கை
ஓட்டத்தின் பாதையை
நிர்ணயம் செய்கிறதோ?
நிர்ணயித்து; பாதையின்
திசையை வரையறுக்கிறதோ??
திசைதிருப்பவும் செய்கிறதோ???
ஒப்பிடுதல் எப்போது;
ஒவ்வாமை ஆவது?...

குழந்தையை குழப்பமாய்;
கருவணு கொடுத்த,
கருவை தாங்கிய,
கல்லறைவரை தொடர்கிற -
பெற்றோர் முகத்துடன்
பெருமையாய்; ஒப்பிடுதல்
தோன்றி - வாழ்க்கை
தொடர்கிறது ஒப்பிடுதலோடு!

ஐந்து விரல்கள்
ஐயம் கொள்வதில்லை;
வித்தியாசத்தை நினைத்து!
விந்தையாய்; அவைகளின்
வித்தியாசமே ஒருசேர
வித்தையை உருவாக்கிடும்!!
வாழ்க்கையும்; வித்தியாச,
விந்தைகளின் தொகுப்பே!!!

ஒப்பிடுதல் இருக்கட்டும்…
ஒவ்வொன்றுக்கும் அல்லாது!
ஒப்புக்கொள்ளும் அளவோடு!!
ஒருவரையும் காயப்படுத்தாது!!!
ஒப்பிடுதல் இருக்கட்டும்…
ஒழுக்கத்துடன் சேர்ந்து!
ஒற்றுமையை குலைக்காது!!
ஓருயிரையும் அவமதிக்காது!!!

ஒப்பிடுதல் விலகின்…
ஓடிடும் இன்னல்கள்!
ஒழிந்திடும் (தீய)எண்ணங்கள்!!
ஒலித்திடும் "மன"க்குரல்!!!
ஒப்பிடுதல் விலகின்…
ஒழுக்கம் பெருகும்!
ஒருவரும் எதிரியாவார்!!
ஒளிர்ந்திடும் வாழ்க்கை!!!

கற்பும், கண்ணகியும்...



கணவனைக் காப்பதும்
கற்பை காப்பதுவே!
கண்ணகி "கற்புக்கரசி"யானது;
கற்பை காத்ததுடன்,
"கள்ளக்காதலை"யும் மன்னித்து!!
கணவனைக் காத்ததாலே!!!

பெண்ணும், மனைவியும்...



காதலனுக்காய் பெற்றோரை
கதறவிட்டோடும் பெண்ணை;
கலங்கடிக்கும் சமுதாயமே!
பெற்றோருக்காய் - கணவனை
பிரிந்தோடும் மனைவிக்காய்;
பரிந்து பேசுவதேன்???

நட்பில் பிரிவு...


நிலையில்லாது, பிரியும்
நட்பின் வேதனை!
நெஞ்சை பிளந்து
நிகழ்த்தும் சோதனை!!
நிலை கொள்ளுங்கள்;
நட்பு கொளும்முன்!!!

ஞாயிறு, ஜூன் 17, 2012

பாடலை எப்படி வரையறுப்பது???



        சில மாதங்களுக்கு முன் தமிழ்த்திரைப்பட பாடல் ஒன்று - திரைப்படம் வெளியாவதற்கு முன்பே - இணையதளத்தில் வெளியாகி குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை அடைந்தது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஏதோ ஓர் புரட்சித்-தீ போல் அப்பாடல் பரவிற்று என்றால் கூட மிகையல்ல! அதிக அளவில் ஆதரவாளர்களை கொண்டது மட்டுமல்லாமல், அப்பாடலுக்கு பெருத்த எதிர்ப்பும் இருந்தது. எதிர்த்தவர்கள் அனைவரும் பெரும்பான்மையாய் சொல்லிய காரணம் அந்த பாடலில் இருந்தது அனைத்தும் ஆங்கில வார்த்தைகள் (ஓரிரு தமிழ் வார்த்தைகள் தவிர) என்ற குற்றச்சாட்டு! அப்பாடல் தமிழுக்கும், தமிழ்த்திரைப்படத் துறைக்கும் பெருத்த அவமானத்தை உருவாக்கியதை போல் கோபப்பட்டார்கள்!! இதற்கு முன், பல தமிழ்த் திரைப்பட பாடல்களில் ஆங்கிலம் பெருத்த அளவில் கலந்து இருந்திருக்கிறது; இன்னமும் இருந்து கொண்டு வருகிறது என்பதை எவர் மறுக்க முடியும்? இத்தலையங்கத்தை படிப்போர், ஓர் கணம் சிந்தியுங்கள்; எத்தனை தமிழ்த்திரைப்பாடல்களில் "எவருக்கும் விளங்கா வண்ணம்" ஆங்கிலச் சொற்களைக் கொண்டு  இடையிடையே பாடுவார்கள் என்று!!! என்ன வார்த்தை, என்ன சொல்ல வருகிறார்கள் என்று அவர்களுக்காவது விளங்கி இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை? ஆனால், இங்கே விவாதத்திற்கு எடுத்துக் கொண்டிருக்கும் பாடலில் வரும் அனைத்து ஆங்கில வார்த்தைகளையும் தெளிவாய் கேட்கமுடியும்; மேலும், அதை பாடியவரும் தெளிவான உச்சரிப்பில் நிதானமாய் பாடுவார். 

       அப்பாடல் இத்தனை அளவில் கவனிக்கப்பட, தெளிவான உச்சரிப்பு கூட காரணமாய் இருக்குமோ? ஏன் பல பேர் இந்தப்பாடலை எதிர்த்தனர் என்று யோசித்தபோது, அவர்கள் அனைவரும் விளம்பரத்தை நாடியே செய்ததாய் எனக்கு விளங்கியது. இத்தலையங்கம் கூட விளம்பர-முயற்சியாய் உணரப்படக்கூடாது என்பதற்காய் தான் இத்தனை காலம் கடந்து எழுதுகிறேன்; அந்த பரவசங்கள் அனைத்தும் அடங்குவதற்காய் காத்திருந்தேன். அதனால் தான் ஓர் நடிகையைப் பற்றி ஏன் எவரும் கவலைப்படவில்லை என்ற தலையங்கத்தை கூட காலம் கடந்து எழுதினேன். என்னுடைய பார்வையும், இந்த வலைப்பதிவும்  விளம்பரத்திற்காய் அல்ல; விளங்குவதற்காய்/ விளக்குவதற்காய். நான் அப்பாடலை வேறொரு பரிமாணத்தில் இருந்து பார்க்க முயற்சித்திருக்கிறேன். அதற்கு முன், ஓர் முக்கியமான எதிர்ப்பு பற்றி கூற விரும்புகிறேன். அப்பாடல் குறித்து, இந்த ஆண்டு தேசிய விருது வாங்கிய ஓர் கவிஞரிடன் நிருபர் ஒருவர் கருத்து கேட்கிறார்; அதற்கு அந்த கவிஞர் எந்த பதிலும் கூறாமல், அதற்கு பதிலளிப்பது "அவமரியாதை" என்பது போன்ற ஒரு கருத்தை கூறினார். இதில் முக்கியமானது, அவருக்கு தேசிய விருது கிடைத்த பாடலின் முதல் வரியின் இரண்டாவது வார்த்தை "ஆங்கிலம்"; மேலும் அதிக அளவில் "கொச்சைத் தமிழ்" போன்ற வார்த்தைகள் இருக்கும்; அதையும் பெரும்பாலோர் இரசித்ததனால் தானே விருதும் கிடைத்தது? எனவே, இரசிகர்கள் அனைத்தையும் இரசிக்கின்றனர் என்பதே உண்மை. எனவே, இங்கு தமிழுணர்வு பற்றி வீண்-விவாதம் செய்யாது அந்த முயற்சியை பாராட்டவேண்டும்.

     இவ்விதமான எதிர்ப்புகளுக்கும் மேலாய், அந்த பாடல் வெகுவாய் பலரையும் கவர்ந்தது; அந்தப்பாடலை தழுவி பலபாடல்கள் வந்தன; அந்தப்பாடலை பலர் பலவிதமாய் பாடினர்; அந்தப்பாடல் (கிட்டத்திட்ட) இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது; உலக அளவில் கூட பிரசித்திபெற்றது. ஓர் வெளிநாட்டவர் அப்பாடலை "கித்தார்" இசைக்கருவியில் எப்படி வாசிப்பது என்று ஓர் வகுப்பே எடுத்து இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். இதை கவனிக்க வேண்டாமா? ஓர் தமிழன் இதை சாதித்திருப்பதை எண்ணி பெருமைப்படவேன்டாமா?? ஆங்கில வார்த்தைகள்  இருக்கும் ஒரே காரணத்திற்காய் அதை எவ்வாறு இப்படி தூற்றமுடிகிறது??? அப்படியாயின் அவ்வாறே மேற்கூறிய வண்ணம் பல பாடல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் போதெல்லாம் இவர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்? சமீபத்தில் நடந்த பெரிதும்-கவனிக்கப்படும் "கிரிக்கெட் தொடரில்" வடமாநிலத்தில் நடந்த ஓர் போட்டியின் போது (இடைவெளியில்) அந்த பாட்டு ஒளிபரப்பப்பட்டது; பலரை கவர்ந்ததால் தானே இது சாத்தியம் ஆயிற்று?  இதற்கெல்லாம் உச்சமாய் "இலங்கைத்தமிழர்" ஒருவர் இந்த பாடலை வேறொரு விதத்தில் தமிழைப் போற்றும் விதமாய் கொடுத்திருந்தார். வாய்ப்பு கிடைப்பின், அதைப் பார்க்காதோர் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். தமிழின்/ தமிழனின் பெருமையை உணர்த்தும் விதமாய் ஓர் பாடல் உருவாக காரணமாய் இருந்ததற்காய் பெருமைப்படவேன்டாமா? ஒருவேளை, இந்த தமிழ்ப்பாடலை கூட அவர்கள் விவாதத்திற்குட்பட்ட பாடலின் சாயல் என்பதால் வெறுத்து எதிர்ப்பார்களோ?? ஏன் இவர்களுக்கு இந்த "விளம்பர வெறி???". 
         
           பலரைக்கவர்ந்து அதன் தாக்கமாய் பல வடிவத்தில் பல திறமைகளை உணர காரணமாயிருந்த ஓர் பாடலை ஏன் எந்த காரணமும் இன்றி வெறுக்கவேண்டும்? உண்மையில், அந்த பாடலின் பால் எனக்கு "பெரிய ஈர்ப்போ" "அல்லது "சிறிய வெறுப்போ" இல்லை. அந்த பாடல் பற்றி இங்கிருக்கும் தமிழன்பர்கள் பலமுறை சொல்லியும் கூட நான் அதை பார்க்க முயற்சிக்கவில்லை. என்னவள் கூட பலமுறை அப்பாடல் குறித்து கூறினாள்; அப்போதும் கூட நான் அந்த பாடலை பார்க்கவில்லை. ஓர் நாள் - என் மகள் (அப்போது, இரண்டரை வயதுக்கு சற்று குறைவு) அந்தப்பாடலை முணுமுணுத்தது கண்டதும், அந்த பாடலை உடனடியாய் பார்த்தேன்; அப்போது கூட அந்தப்பாடல் குறித்து பெரிய அபிமானம் தோன்றவில்லை! "என்ன வாழ்க்கை இது?" என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டது போல், என் மகளுக்காய் நான் சேகரித்த பாடல்கள், "கேலிச்சித்திர" படங்கள் அனைத்தும் அவளை வெகுவாய் கவர்ந்தது எனினும், அவளாய் விரும்பிட்ட முதல் பாடல் எனும்போது அப்பாடல் மேல் ஓர் அபிமானம் தோன்றிற்று. ஓர் சிறுமியை கவர்வதை காட்டிலும் ஒரு பாடலைப் பற்றி பாராட்ட வேறு என்ன காரணம் வேண்டும்? எந்த தடையும் தேவையில்லை என்று தோன்றுகிறது; இது ஓர் உதாரணம் தான், அப்பாடல் கவர்ந்த பில்லைச்செல்வங்கள் ஏராளம். நான் சில மாதங்களாய் "கித்தார்" இசைக்கருவி வாசிக்கப்பழகி வருகிறேன்; என்னுடைய இப்போதைய இலக்கு, என் மகள் அந்த பாடலிலிருந்து கேட்கும் குறிப்பிட்ட வரியை இசைத்து காண்பிப்பது; கூடிய விரைவில் இதை நிறைவேற்றவேண்டும்.

            தேவையில்லாமால் அப்பாடலை பற்றி குறை கூற வேண்டாம் என தோன்றுகிறது; அப்பாடலை போற்றமுடியாது போயினும், குறைந்தபட்சம் தூற்றாமலாவது இருக்கலாம். இதை விட இன்னொரு விசயம், உண்மையில் அந்த திரைப்படத்தில் மற்ற அனைத்து பாடல்களும் கூட அருமை. ஒரு பாடலில் - மீண்டும் ஆங்கில வார்த்தைகள் அதிகம் எனினும் - ஆழமான கருத்துகள் மிக எளிய வகையில் கூறப்பட்டிருக்கிறது. விவாதத்திற்கு உண்டான பாடலின் அதீத விளம்பரம் மற்றும் புகழால் கூட இந்த பாடல்(கள்) அதிகம் கவனிக்கப்படாது போயிருக்கக்கூடும்; வாய்ப்பு கிடைப்பின், மற்ற பாடல்களை கூட கேட்டு இரசியுங்கள். நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காய், அதிகம் கவனிக்கப்பட்ட, விரும்பப்பட்ட ஓர் பாடலை பற்றி தவறாய் விமர்சிப்பது எந்த விதத்திலும் நியாயமாக இருக்க முடியாது என்பது என் எண்ணம். மேலும், தமிழ் வளர்வதற்கு அல்லது தமிழைப் பறைசாற்ற வேறு பல வழிகள் உள்ளன என்பதை நான் தொடர்ந்து தலையங்கம் மூலமாயும், கவிதை மூலமாயும் வலியுறுத்தி வருகிறேன். பிற மொழிக்கலப்பால் எந்த மொழியும் அழிந்ததாய் அல்லது சிறப்பு குறைந்ததாய் இங்கே எந்த சான்றும் இல்லை. குறிப்பாய்,  தமிழ் போன்ற ஓர் "செம்மொழியை" எந்த மொழியும் எந்த விகிதத்தில் கலப்பினும் ஒன்றும் செய்து விடமுடியாது. எனவே, இம்மாதிரி தேவையில்லாத விமர்சனங்களை தவிர்த்து, அந்த பாடலையும், அதனால் உண்டான நல்ல-விளைவுகளை (மேற்குறிப்பிட்ட வண்ணம்) எண்ணி போற்ற முயல்வோம். எனவே, ஓர் பாடலை - அதன் புதுமுயர்ச்சியை அதன் தாக்கத்தை பாராட்ட மறுத்து…

மொழியை முன்னிறுத்தி விமர்சிக்கத் தேவையில்லை!!!                              

தெளிவுகொள் தமிழா...




தமிழை தவறின்றி
தெளிவாய்; பேசத்
தெரியாததை - தெம்பாய்; 
தம்பட்டம் அடித்து
திரியும் தமிழா!!!
தெளிவு ஏனில்லை,
தெளிந்திட வழியென்னவென;
தெரிந்திட முயல்வோமா?

ஊதியத்திற்கும், உயர்விற்கும்
ஊறு விளைவிக்கிறது -
என்பதற்காய்; சிரமம்
எத்தனையாயினும், சகலரும்
உன்னை இகழ்ந்தபோதும்;
உன்தாய் மொழிமறந்து,
அறவே தமிழ்கலவாத
ஆங்கிலத்தில் பேசுகிறாயே!

தாய்மொழி தமிழில்(மட்டும்)
தடுமாறி பேசுவதேன்?
தடுமாற்றம் தவறென;
தெரியாது இருப்பதேன்??
தெரிந்தது பலவாயினும்;
தாய்மொழியில் தான்
சிந்தனை வருமென்ற
சித்தாந்தம் மறந்ததேன்??

சிந்திப்பதே உந்தன்
செந்தமிழ் தாய்மொழியில்;
வந்திப்பது எவரெதுவாயினும்!
வார்த்தை தெரியாதென்பது;
எங்கனம் சாத்தியம்?
எங்கேயிதில் சத்தியம்??
பொய்யை மறைக்க;
பொய்மேல் பொய்யோ???

தெளிவுகொள் தமிழா...
தமிழும், தமிழுணர்வும்;
நிர்ப்பந்தத்தால் வருவதல்ல;
நின்பந்தத்தால் விளைவதென!
எந்த தேசத்தில்
எப்படியிருப்பினும்; உந்தன்
உயிரென!! உயிருடன்;
உணர்வும் கலந்ததென!

தெளிவுகொள் தமிழா…
தெளிவாய் எவன்மொழியோ
பேசும், உன்னால்;
பரணியெங்கும் பரந்த!
மொழியனைத்திலும் சிறந்த!!
மெய்(தாய்)மொழியாம் - தமிழில்;
இலக்கியம்சேர் கவிகூட
இயற்றிட கூடுமென்று!!

தெளிவுகொள் தமிழா…
தாய்மொழி கூட;
தானாய் அமைந்திட்ட
தாய்-தந்தை போலவென்று!
பெற்றோரிடம் பிணைப்பு;
பிறப்பிலேயே வருவது!!
ஆங்கே; தமிழு(ணர்வு)ம்
அதுவாய் வந்திடல்வேண்டும்!!!

நட்பின் வலிமை...


நட்பின் வலிமை;
நண்பர்களின் எண்ணிக்கையிலல்ல!
நண்பர்கள் இருவரேயாயினும்;
நீடித்த நட்பிலிலுள்ளது!!

சுயநலமும், பொதுநலமும்...


சுயநலத்தில் பொதுமையும்,
பொதுநலத்தில் சுயமும்;
இணையும் கலவையிலுள்ளது
இரண்டின் வலிமையையும்!!!

பிரிவின் வலி…



பாரபட்சமின்றி  எந்தவொரு,
புவியிலிருக்கும் உறவிலும்;  
பிரிவை முதலில்
பரிந்துரைப்பவரை விட;
பிரிவை எதிர்பாராதவர்க்கே
"பிரிவின்"வலி அதிகம்!!!

உண்மையும், பொய்யும்...

பொய்யினால் பெருகலாம்
பொருளும், புகழும்;
ஆயின்…
உறவும், உலகமும்
உயிர்த்திருப்பது உண்மையாலே!!!