ஞாயிறு, நவம்பர் 25, 2012

உலகம் அழியப்போகிறதா(மே)???!!!



      சமீபத்திய தகவலின் படி, உலகம் "2012 ஆம் ஆண்டு, திசம்பர் மாதம், 21 ஆம் நாள்" அன்று அழியப்போகிறதாய் சொல்கிறார்கள். இதை சிலர் நம்புகின்றனர்; சிலர் நம்புவதில்லை; மற்றும் சிலர் அது பற்றிய எண்ணமே இல்லாது இருக்கின்றனர். பல்வேறு சமூக-வலைதளங்களில் கூட இது குறித்தான விவாதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள், உலக-அழிவு பற்றி வெளியான திரைப்படங்களை தொடர்ந்து காண்பித்துக்கொண்டிருக்கின்றன; அதிலும், சில பிரபலமான படங்களை குறுகிய கால இடைவெளியில் மீண்டும்-மீண்டும் காண்பிக்கின்றன. இவ்வாறு பலதரப்பட்ட மக்களும், பலதரப்பட்ட ஊடகங்களும் பல்வேறு விதத்தில் உலக-அழிவு பற்றி செயல்பட்டுக்கொண்டிருக்கும் போது - அது குறித்தான என்னுடைய பார்வையை பதிவது அவசியம் என்று உணர்ந்தேன். இன்னமும், உலகம் உண்மையில் அழியப்போகிறதா அல்லது எவ்வாறு அழியப்போகிறது என்பது குறித்தான நம்பகமான தகவல்கள் இல்லை! எப்படி இருக்கமுடியும்? என்னைப்பொறுத்த வரை உலக-அழிவு என்பது கூட மனிதர்களின் மரணம் போல தான்!! மரணத்தைப் போல் உலகம் என்பது கூட ஓர் நாள் அழியக்கூடும், அழியவேண்டும்; இங்கே அழிவில்லாதது என்ற ஒன்று இருப்பதாய் எனக்கு தெரியவில்லை!!! அதிக ஆயுட்காலம் உடையது என்று வேண்டுமானால் இருக்கலாமே தவிற, அழிவில்லாதது என்ற ஒன்று இருக்க வாய்ப்பில்லை. எனவே, உலகம் ஓர் நாள் அழியும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை!

         "புலி-வருகிறது" என்ற கதையை போல் இந்த உலக-அழிவு குறித்தான காலக்கெடுவும் தொடர்ந்து குறித்து வரப்பட்டு; பின் வெறும் கதை என்று நிரூபிக்கப்பட்டுக்கொண்டே வரப்படுகிறது. திடீரென்று ஓர் நாள் (புலிபோல்) உலக-அழிவு கூட வரலாம்! இந்த உலக அழிவு குறித்து - என்னறிவுக்கு எட்டிய வகையில் நடைபெறும் நிகழ்வுகளை இங்கே விளக்கலாம் என்று தோன்றுகிறது!! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு - நண்பர் ஒருவரின் வீட்டில் விருந்து முடித்துவிட்டு இது பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்; அப்போது - தம் வருமானத்தில் மிகப்-பெரும்பகுதியை சேமிக்கும் ஓர் தம்பதியர் - இந்த உலக அழிவு மட்டும் வெகு-நிச்சயம் என்று தெரிந்துவிட்டால், நாங்கள் சேமித்து வைத்திருக்கும் அனைத்தையும் "மிக-மகிழ்ச்சியாய்" செலவிட்டுவிட்டு உலக-அழிவை எதிர்கொள்வோம் என்றனர்!!! எனக்கு, பெருத்த-சிரிப்பு வந்தது; ஆயினும், அதை வெளிக்காட்டாது மறைத்துவிட்டேன். இது தான், நம் பிரச்சனை - குறிப்பாய் இந்தியர்கள்! சேமிப்பு வேண்டியது தான்; இல்லையெனவில்லை! ஆயினும், நிகழ்-கால வாழ்க்கையை வாழாது, சேமித்து என்ன பயன்? மரணத்தை ஏற்காததுதான், உலகம்-அழியுமெனின் மகிழ்ச்சியாய் செலவிடவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்தது!! மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும், எவருக்கு வேண்டுமானாலும் நிகழலாம்; நமக்கு முன்னாள் பிறந்தோரும், நம்முடன் பிறந்தோரும், நமக்கு பின் பிறந்தோரும் இறப்பதை தொடர்ந்து பார்த்துகொண்டு தான் இருக்கிறோம். மரணம் உறுதி என்பது மட்டுமல்ல; எப்போதென்று எவராலும் கணிக்க(வும்)முடியாதது!

         புகழ்-பெற்ற மருத்துவர் கூட உடலின் நிலையை வைத்து மரணத்தை ஓரளவிற்கு கணிக்க-முடியுமே ஒழிய, மரணத்-தேதியை "மிகச்சரியாய்" கணிக்க முடியாது. விபத்தால் இறப்பவரை எப்படி கண்டறிவது! கொலை செய்யப்பட போவதை முன்னரே எப்படி அறிவது!! மரணம் எந்த உருவில் வரும் என்று கூட எவரும் மிக-நிச்சயமாய் கூறமுடியாது. மரணம்-பற்றிய பயம் அனைவருக்கும் உண்டெனினும், மரணம் நிரந்தரமானது என்ற நம்பிக்கை இல்லை! அதனால் தான், வாழ்க்கையை வாழாது எப்போதும் பொன், பொருள், பதவி என்ற ஆசையில் அலைந்து கொண்டிருக்கிறோம். ஆனால், உலக-அழிவு - ஓர் பேரழிவு, எல்லோருக்கும் பொதுவானது என்றறியும் போது பதறுகிறோம்; வாழ்க்கையை வாழ்ந்துவிட துடிக்கிறோம். பலருக்கும் உலக-அழிவிற்கு முன், தாம் அனுபவிக்காததை - அனுபவித்து விட வேண்டும்; இல்லாத தீய-பழக்கத்தை பழகவேண்டும்; அல்லது நிறுத்தி-வைத்திருக்கும் தீய-பழக்கத்தை ஆரம்பிக்கவேண்டும் போன்ற எண்ணங்கள் தான் உள்ளன. இந்த நிலையில் கூட, இருப்பதில் ஒரு பகுதியை-யாவது (உலகம் அழியாவிட்டால், பிறகு என்ன செய்வது?) எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு சாகலாம் என்ற "நல்லெண்ணம்" உருவாவதில்லை!! அது ஓர் நாளில் நிகழ்ந்து விடப்போகிறது; நடந்த பின் எதுவும் தெரியப்போவதில்லை; அந்த நிலையிலாவது - "சிறிது நல்லெண்ணங்களையும், நற்செயலல்களையும்" செய்ய பழகலாமே!!! ஒருவேளை, உலகம் அழியவில்லையெனில் - ஓர் புதிய-மனிதனாய் வாழ்வை துவங்கிட அது வழிவகுக்குமே!

     இரண்டு நாட்களுக்கு முன் இது குறித்தான செய்தி ஒன்றை படித்தேன். அதில், "பிரான்ஸ்" நாட்டிலுள்ள "புகாரச்" என்ற கிராமத்தில் உள்ள ஒரு மலை பிளக்குமாம்; அதிலிருந்து வேற்றுக்கிரக விண்கலன் ஒன்று வருமாம் - அதில் ஏறிக்கொள்வோர் மட்டும் உயிர் தப்புவராம் (திரைப்படங்களின் பாதிப்பு போலும்). இதை கேள்விப்பட்டு, அங்கே சென்ற எண்ணற்றவரை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினரை இப்போதே அனுப்பிவிட்டனாறாம். அடப்பாவிகளா!!! உலகம் அழியப்போகிறதோ இல்லையோ! ஆனால், இங்கு குவியும் மக்களால், ஓர் பேரழிவு துவக்கப்பட்டுவிடும் போல் தெரிகிறதே!!! மரணம் எப்படி நிகழும் என்பது தெரியாதது போல், உலக-அழிவும் இப்படிக் கூட இப்படித்தான் துவங்குமோ? எப்படியோ, அப்படி ஓர் அழிவு வந்து - உலகம் அழிந்து மீண்டும் பிறக்குமேயானால், நல்லதுதான்! இங்கே, பொய்யர்களும் - கயவர்களும் அதிகமாகி விட்டனர்; மீண்டும், ஓர் மனித இனம் உருவாகினால் நல்லது தான் என்று எண்ணத்தோன்றுகிறது!! கடைசியாய் கொடுக்கப்பட்ட நாளிற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே உள்ளாதால் - இன்னும் என்னென்ன கதைகள் எல்லாம் கிளம்பப்போகிறதோ? இன்னும், எத்தனை பகுதிகள் இது மாதிரி முற்றுகை இடப்பட போகிறதோ?? என்னென்ன, குற்றங்கள் அதிகரிக்கப்போகிறதோ??? ஒரு முறை "தண்ணி அடித்துப்" பார்க்கலாம் என்பது போல் - பலரும் ஓர் முறை "கொலை செய்து" பார்க்கலாம் என்று துவங்கிவிடுவரோ? அதன்பின், இது மாதிரி நம்முடைய செயல்களே(தான்) உலக-அழிவிற்கு வித்திடுமோ??

           எனக்கு இதில் துளியும் நம்பிக்கையில்லை; சிறிய விசயத்திற்கு கூட பலவாறு யோசிக்கும் நான் - இந்த "உலக-அழிவு" குறித்து எந்த கவலையும் அடையவில்லை! மரணத்திற்கு பின் என்ன என்பதற்கே எனக்கு விடை தெரியவில்லை! மரணம் என்பது "உண்மை; இறுதியானது" என்பது உணர்ந்ததாலே, என்னால் அதற்கு பின் என்ன என்று யோசிக்க முடிந்ததாய் தோன்றுகிறது. எனவே, உலக-அழிவால் என் மரணம் நிகழ்வதைப் பற்றி எனக்கு கவலை(யே) இல்லை; இன்னமும் கூட என் சிந்தனை அதற்கு பிறகு என்ன என்பதாய்-தான் இருக்கிறது. ஒருவேளை, எல்லோரும் தானே இறக்கப்போகிரார்கள் என்பதாலா? என் உறவும், நட்பும், சுற்றமும் எல்லாரும் தான் அழியப்போகிறோம்! பின் எதற்கு கவலை வரவேண்டும்?? நான் இல்லையென்றால், என் மகள் என்ன செய்வாள்? என்ற கேள்வி தான் என்னை வதைக்கமுடியும்! அவளும் இருக்கமாட்டாள் எனும்போது நான் ஏன் கவலை கொள்ளவேண்டும்?  என்று கூட இருக்கலாம். இருப்பினும், எனக்கும் ஓர் ஆசை உள்ளது (நானும் மனிதன் தானே)! அதை என்னவென்று பின்குறிப்பாய் எழுதியிருக்கிறேன். எனக்கு இப்போதிருக்கும் எண்ணமெல்லாம் ஒன்று தான்; கண்டிப்பாய் அழியக்கூடும் என்று நான் நம்புவதால், அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டதால் - முன்பை விட, நான் இன்னமும் உண்மையாய் இருக்கவேண்டும் - எல்லோரையும் அரவணைத்து செல்லவேண்டும் என்பதே. நான் இறுதியாய் கூற விரும்புவது எல்லாம்; உலக-அழிவை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வளர்த்து, நாம் நம்முடைய எண்ணங்களை, செயல்களை, மேலும்…

உண்மையானதாய், உயர்வானதாய் ஆக்கிட முயல்வோம்!!!

என்னுடைய ஆசை (பின்குறிப்பு): ஒன்றே-ஒன்றுதான்; அது, இந்த உலகம் அழியும்போது நான் என்மகளுடன் இருக்கவேண்டும் என்பதே! மூன்று வயதானவளுக்கு மரணம் என்பது என்னவென்று தெரியாவிட்டாலும், அந்த அழிவு நடக்கும்போது பயம் எழும்!! அந்த சமயம் கண்டிப்பாய் "அப்பா" என்று அழைப்பாள்!!! அப்படி அழைக்கும்போது அவளுடன் இருந்து "நானிருக்கிறேன் மகளே! என்று கூறி - அவளை என்நெஞ்சோடு அனைத்து, அவளுக்கு அத்தனை தைரியத்தையும் கொடுத்து - இருவரும் ஒருசேர உயிர் துறக்கவேண்டும்!!!" இப்போது 'நாளை உலகம் இல்லை என்றானால்…" என்ற  பாடலை கேளுங்கள்; அந்த பாடல், ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்!                    

தந்தையுமானவள்...




தடுமாறும் போதெல்லாம்!
தவறாது-தன் செயலால்,
நினைவால்; வாழ்வை
நிலைப்படுத்தி!! தெளிவை -
எனக்களிக்கும், "தாயான"
என்மகள் "தந்தையுமானவள்"!!!

இறப்பின் முன்னுரை ஏனில்லை???


பிறப்பின் முன்னுரையை!
பாகுபாடின்றி, எல்லோர்க்கும்;
அறிவிக்கும், இறையே!!
இறப்பின், முன்னுரையை;
எவர்க்கும் - அறிவிக்காததேன்???

பாதுகாத்து, பயனென்ன???



புரியாது புறந்தள்ளிய!
"புருஷனிடம்" பெற்ற;
'பொருள்' பரிசை(மட்டும்);
பாதுகாத்து, பயனென்ன???

மரணிக்கும் நாள் தெரிந்தால்???




மரணத்தை ஏற்கும்;
மனப்பக்குவம்  வந்திடின்!
மரணிக்கும் நாளை;
மறுப்பின்றி தெரிந்து!!
மகிழ்ச்சியாய் வாழ(வும்)முடியும்!!!

மனது-வலிக்கிறது, தமிழா!!!




"மொழியால்" மட்டுமல்ல!
மதத்தால், சாதியால்-கூட;
"மமதையாய்" பிரிந்திருக்கிறாயே!!
மனது-வலிக்கிறது தமிழா!!!

ஞாயிறு, நவம்பர் 18, 2012

தீபாவளியும், பட்டாசும்…



(இந்த ஆண்டும், கடந்த ஆண்டுகளிலும் "பட்டாசு-விபத்தால்" இறந்த குழந்தைகள் உட்பட அனைவருக்கும் சமர்ப்பணம்)

      தீபாவளி என்றாளே - பெற்றோருக்கும், குழநதைகளுக்கும் - முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான்! பெற்றோருக்கு எப்படி பொருளாதாரத்தை சமாளித்து பட்டாசுகளை குழந்தைகளுக்கு வாங்கித் தருவது என்ற "கவலையான" சிந்தனைகள்!! குழந்தைகளுக்கு, எந்த மாதிரியான பட்டாசுகளை வாங்குவது, எவருடன் சேர்ந்து வெடிப்பது என்ற "சந்தோசமான" சிந்தனைகள்!!! எது எப்படியாயினும், எல்லோருக்கும் பரவலாய் நினைவுக்கு வருவது "பட்டாசாய்"த்தான் இருக்கமுடியும். வழக்கமாய், ஒவ்வொரு ஆண்டும் இந்த தீபாவளி பண்டிகையின் போது - "வெடிவிபத்துகள்" தவிர்க்கமுடியாததாய் இருந்து வருகிறது. பட்டாசு உற்பத்தி செய்யும் கிடங்குகளில் அல்லது பெரிய-கடைகளில் - இது தொடர்ந்து நடந்தவண்ணமே வருகிறது. இதில் பெரும்பாலும், பலியாகுவது குழந்தைத் தொழிலாளர்கலான சிறுவர்கள் தான்; இது கண்டிப்பாய் வருந்தத்தக்க, கண்ணீரை-வரவைக்கும் நிகழ்வு தான்! இது, கண்டிப்பாய் கட்டுப்படுத்தவேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! ஆனால், அதற்காய் என்னென்ன காரணங்களை மற்றும் ஆலோசனைகளை, சமூக-சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள் என்பதையும் - அவைகளின் மீதான என்னுடைய பார்வையையும் இங்கே விளக்கியுள்ளேன். என்னுடைய சிந்தனைகள் இந்த விபத்துக்களை பெருமளவில் குறைக்கும் என்று நம்புகிறேன். ஆனால், வழக்கம்போல், இதை எவர் நடைமுறைப்படுத்துவது? எவர் இதை முதலில் துவக்குவது என்ற கேள்விகளே இதற்கும் முட்டுக்கட்டையாய் இருக்கக்கூடும். 

      முதலில், இதில் பல உயிர்கள் பலியாகிறது என்பதற்காய் - பட்டாசு வெடிப்பதையே தடுக்கலாம் என்று பலர் வாதிடுகின்றனர். மேலே, குறிப்பிட்டது போல் - உயிர் இழப்புகள் தவிர்க்கப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! ஆனால், பட்டாசு வெடிப்பதை ஏன் தவிர்க்கவேண்டும்? விபத்துக்களை தடுக்க என்னென்ன விதமான பாதுகாப்பு-செய்முறைகளை அதிகப்படுத்துவது என்று தான் யோசிக்கவேண்டும்; அது தான் முக்கியம்! எல்லா, செயல்களிலும் உயிர்-பலி என்பது இருந்து கொண்டு தான் வருகிறது! மீன்-பிடிக்க செல்லும் மீனவர்கள் எல்லையை தாண்டினார்கள் என்பதற்காய் (உண்மையாகவோ, பொய்க்காரணம் காட்டியோ) கொல்லப்படுவது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது; அதனால், மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று எவரும் வாதிடுவதில்லை; அது தொழிலாகிறது! அடிக்கடி குழந்தைகள் பயிலும் பள்ளியிலோ அல்லது வாகனத்திலோ விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படினும் - எவரும் பள்ளிகளோ, வாகனங்களோ வேண்டாம் என்று வாதிடுவதில்லை; அது தேவையாகிறது!! விளையாட்டு மைதானங்களில் விபத்து ஏற்பட்டு உயிரழப்புகள் ஏற்படுவதால் - எவரும் மைதானமும், விளையாட்டும் வேண்டாம் என்று வாதிடுவதில்லை; அது திறமையாகிறது!!! அது போல் தான், தீபாவளியின் போது - பட்டாசு வெடிப்பது என்பது பாரம்பரியமாகிறது; மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளின் போது - எங்கனம் எல்லோரும் பாதுகாப்பு அதிகமாக்கப்படவேண்டும் என்று வாதிடுகின்றனரோ - அது போல் தான், இங்கும் பாதுகாப்பு அதிகமாக்குவதை பற்றி பேசவேண்டும்!

   அடுத்ததாய், சமூக ஆர்வலர்கள் பலரும் வாதிடுவது - சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்பது! மறுப்பேதுமில்லாமால், இதை ஒப்புக்கொள்ளவேண்டும்! ஆயினும், இது ஆண்டுக்கு ஓர் முறை - சில தினங்கள் - நடைபெறும் செயல்; வாகனங்களின் புகை ஏற்படுத்தும் மாசு-பற்றி பல அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் அறியப்படினும், நாள்தோறும் ஓர் புதுவாகனம் உருவாகிக் கொண்டு தான் வருகிறது (சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வாகனங்கள் வந்திடினும், அவற்றின் விலை எல்லோருக்கும் உகந்தது அல்ல); தொடர்ந்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு தான் வருகிறது!! தினந்தோறும் வெளியேற்றப்படும் இந்த அளவுக்கு அதிகமான "வாகனக்-கழிவுகள்" ஏற்படுத்தும் மாசை கட்டுப்படுத்த என்ன செய்கிறோம்? எத்தனை வாகனங்கள், அதற்குரிய பரிசோதனையை முழுதுமாய், முறையாய் செய்து இயங்குகின்றன?? ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியேறி ஆங்காங்கே தேங்கி நிற்கும் சாக்கடை-கழிவுகளை கட்டுப்படுத்த என்ன செய்கிறோம்? ஒவ்வொரு தொழிற்சாலையும் வெளியேற்றும் "வேதியியல்-கழிவுகளை" கட்டுப்படுத்த என்ன செய்கிறோம்? இந்த கழிவுகள் அனைத்தும் குளங்களையும், ஆறுகளையும், கடலையும் சென்று சேர்கிறதே; அதற்கு என்ன செய்தோம்? அவை விலை-நிலங்களையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகின்றனவே; அதற்கு என்ன செய்தோம்/ செய்கிறோம்? இது போன்று - எத்தனை, எத்தனை காரணிகள், தினந்தோறும் - சுற்றுச்சூழலை மாசு படுத்துகின்றன?? இவையாவும், உடனடியாய் தடுத்து நிருத்தப்படவேண்டியவை அல்லவா???

     முதலில், இந்த மாதிரியான மிகமுக்கியமான, சிக்கலான காரணிகளை சரிசெய்ய முயலுவோம்; இதை செய்தாலே, இன்னமும் பல தலைமுறைகளுக்கு சுற்றுச்சூழல் மாசு குறித்து எந்த கவலையும் தேவை இராது! அப்படி செய்தும், இன்னமும் தேவைப்படின் - பட்டாசு வெடிப்பதை/ விற்பனையை தடை செய்வது குறித்து ஆலோசிக்கலாம்!! இத்தனை தலைமுறைகள், கொண்டாடிய "தீபாவளி" எனும் ஓர்   திருநாளை - அதன் சிறப்பம்சமான "பட்டாசு-வெடிப்பதை" - மேற்கூறிய அல்லது வேறு பல காரணங்களுக்காய் எப்படி திடீரென விட்டுவிட முடியும்? பட்டாசு வெடிப்பதை நிறுத்தி/ அந்த எண்ணமே அற்றுப்போய் பல ஆண்டுகள் ஆயினும் - என் 3 வயது மகள் பட்டாசை பார்த்து காட்டிய பரவசத்தால் என்னுடைய நினைவுகள் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றனவே! அது எத்தனை முக்கியம்; அந்த நினைவுகள் எத்தனை அதிசயமானது? இந்த நினைவுகள் என்னுடைய மகளுடன் - சில ஆண்டுகள் கழித்து பரிமாறப்படும்போது - இன்னும் எத்தனை பெரிய நினைவாய் மாறும்? இந்த மாதிரியான நினைவுகள் தானே, நம்முடைய வாழ்க்கையின் மைல்கற்களில் ஒன்றாய் இருக்க முடியும்? அதை எப்படி, இழந்து விடமுடியும்?? மாறாய், இதை எப்படி சமாளிப்பது அல்லது கட்டுப்படுத்துவது என்றல்லவா யோசிக்க வேண்டும்??? அதை விடுத்து, பண்டிகையின் சிறப்பம்சத்தையே மாற்றவேண்டுமெனில் - அது அந்த பண்டிகையையே சிதைத்து விடாதா? மேலும், இது மாதிரி யோசிக்க ஆரம்பிப்பின் - ஒவ்வொரு பண்டிகையும் கூட மாற்றம் கண்டு அழிந்துவிடாதா??

      பட்டாசு வெடிப்பதை தடுக்க முயல்வதை விட்டுவிட்டு பாதுகாப்பு குறித்த செயல்களை எவ்வாறு  அதிகப்படுத்துவது, என்று யோசிக்கவேண்டும். ஏன், தீபாவளி நேரத்தின் போது மட்டும் - அத்தனை தொழிற்சாலைகளும்  அவசரம், அவசரமாய் - பட்டாசு உற்பத்தியை செய்ய/அதிகரிக்க வேண்டும்? தேவைக்கேற்ப, முன்பே தயாரித்து அதை பல ஊர்களில், பல இடங்களில் பிரித்து வைத்து பாதுகாக்கலாமே? ஆட்கள் குறைவாய் (அதுவும், கிடங்கின் வெளியில்) இருந்து பாதுகாக்கும்போது - விபத்து ஏற்பட்டால், உயிர்ச்சேதம் அறவே இராதே? விற்பனையை ஏன் வழக்காமான - இறுக்கமான சூழல் உள்ள, மக்கள் அதிகம் புழங்கும் - இடங்களில்/கடைகளில் செய்யவேண்டும்? ஊருக்கு வெளியே, தனித்தனி (ஒரே இடமென்றால், விபத்துகள் பெருத்த சேதத்தை உருவாக்கும்) இடங்களில் தீபாவளிக்-கால தற்காலிக-கடைகள் அமைத்து விற்கலாமே? உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், பல்வேறு இடங்களில் (குறிப்பாய், இம்மாதிரி காலங்களில்) கிளைகளை உருவாக்கி உற்பத்தி செய்யலாமே? அவ்வாறு செய்யும்போது, போக்குவரத்து மூலம் நிகழும் விபத்துகளையும் தவிர்க்கலாமே? இம்மாதிரி, பல காரணங்கள் உள்ளன - விபத்துகளை அறவே தடுக்க; அல்லது, மிகக்குறைந்த அளவில் விபத்துகள் நடக்கும் வண்ணம் பார்த்துக்கொள்ள! விபத்தே இல்லாத எந்த நிகழ்வும் சாத்தியம் இல்லை; நடந்து செல்லும்போது இடறி-விழுவது கூட விபத்துதான்!! நடைபாதையில் நடப்பவர்கள்/இருப்பவர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்துகள் நிகழ்கின்றன!!! என்னுடைய பார்வையில், தீபாவளியும் - பட்டாசும்…

பிரிக்க-முடியாதவை; பிரிக்க-வேண்டாதவை!!!


பின்குறிப்பு: சில கிராமங்கள் பட்டாசு வெடிப்பதால் தங்கள் ஊரிலுள்ள பறவைகள் சிரமப்படுகின்றன என்றும், மேலும் சில காரனகளுக்காகவும் - தீபாவளி காலங்களில் கூட பட்டாசு வெடிப்பதில்லை என்ற செய்திகளை படித்திருக்கிறேன்; அவர்களுக்கு என்னுடைய மதிப்பு கலந்த வணக்கங்கள்! பெருத்த கட்டுப்பாடு வேண்டுமானால், இதை சாத்தியப்படுத்தியிருக்கலாம்!! ஆனால் - அந்த ஊர்களில் இருக்கும் சிறார்களின் ஆசைகள்/மன-உளைச்சல்கள் பற்றி ஏதும் தகவல்கள் இல்லையே???                                          

பணமெனும் நஞ்சு.




தீப்பெட்டி அட்டை!
புளியம்பழ கொட்டை!!
கோலிகுண்டு ஆட்டம்!!!
எல்லாம் மாற்றி…

"பணப்பந்தயம்" என்று;
பணமெனும் நஞ்சை;
பாலகர் நெஞ்சில்…
பாய்ச்சியது எவர்-குற்றம்???

இறை-நம்பிக்கை...




நம்பிக்கை வளர்த்திட!
நம்மால் உரு-கண்டு;
எண்ணிக்கை அதிகமாகி!!
எல்லோரையும் குழுப்படுத்தி;
இடர்களை அதிகரித்ததும்!!!
"இறைவனின்" திருவிளையாடலோ???

அழுகையும், அழகும்…




"அசிங்கம்" கலவாது!
அழகாய் இருக்கும்;
"அழுகை" - எல்லாமும்,
அசத்தியம் ஆனது!!!

உயர்ந்த குணம்...



இழிவானோர் செய்யும்!
ஈன-செயல்களை பொறுப்பதும்;
அவைகளை மறப்பதும்(கூட);
உயர்ந்த குணமே!!!