ஞாயிறு, செப்டம்பர் 21, 2014

திகைக்கவைத்த "பர்த் டே" கேக்...


 
            01.07.2014 அன்று கடலூரில் இருந்து சேலம் செல்லும் அரசு பேருந்தில், கடலூர் மஞ்சகுப்பம் பேருந்து நிறுத்தத்தில் ஏறினேன். பட்டாம்பாக்கத்தில் உள்ள என்தமக்கை வீட்டிற்கு செல்வதற்காய். பேருந்து சிறிது தூரம் சென்ற பின் திடீரென்று என் இருக்கைக்கு பக்க-எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த இளம்பெண் ஒருத்தி ஒரு பெட்டியை நீட்டி "எனக்கு பர்த்டே சார்! கேக் எடுத்துக்கோங்க!" என்றாள். எனக்கு சில நிமிடத்துளிகள் ஒரு அதிர்ச்சி; அந்த நிமிடத்துளிகளுள் என்னுள் "அந்த கேக்கில் ஏதாவது இருந்தால் என்ன ஆவது?"; "அந்த கேக்கை எடுப்பது முறையா?"; "ஏன் முன்-பின் தெரியாதவருக்கு கேக் கொடுக்கிறாள்?" என்று பல கேள்விகள். அந்த பெண் எளிமையாய்/வெகுளியாய் இருந்தாள்; பிறந்த-நாள் என்ற மகிழ்ச்சி மட்டுமே அவள் கண்ணில் தெரிந்தது. சரியென்று ஒரு-துண்டை எடுத்துக்கொண்டு "மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் மா!" என்று வாழ்த்தினேன். இப்போது மீண்டும் அந்த கேள்விகளுள் ஒன்று: ஏதேனும் இருந்தால் என்ன ஆவது? 

          பின்னர், அந்த பெண் அவள் அருகில் இருந்த, ஒரு பெண்-காவலுருக்கு கொடுக்க, அவரும் அதை உண்டுகொண்டு இருந்தார். சிறிய தைரியம் வந்தது! பின்னர் என் மனசாட்சி: "ஒரு சக-மனுஷி கொடுத்த தின்பண்டத்தை தின்பதற்கு ஏன் இவ்வளவு யோசனை? இதற்கு எடுக்காமலேயே இருந்திருக்கலாமே?" என்றது. இந்த கேள்வி வந்தவுடன் எல்லா-சிந்தனைகளையும் ஒதுக்கி விட்டு அதை உண்டேன். பேருந்து சென்றுகொண்டிருந்தது; இன்னமும், ஒரு அவநம்பிக்கை என் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. பின்னர், ஒருவாறாய் என் என்ன அலைகள் ஓய்ந்து இயல்பு நிலைக்கு திரும்பினேன். நான், இறங்க வேண்டிய நிறுத்தம் வரும் முன், அந்த பெண்ணை அழைத்து முழுமனதோடு "அவளிடம் ஒரு தொகையை கொடுத்து, உனக்கு பிடித்த ஏதாவது ஒன்றை வாங்கிக்கொள்ளம்மா!" என்றேன். அவள் தயங்கினாள்; மீண்டும் வாங்கிக்கொள்ளம்மா என்றேன். அந்த பெண் வாங்கிக்கொண்டாள்; அதன் பின் நான், ஆத்மதிருப்தியோடு அந்த பெண்ணை வாழ்த்தினேன். இயல்பான விசயத்தில் கூட...

நமக்கு சக-மனிதர்கள் மீதான நம் அவநம்பிக்கை அதிகரித்துவிட்டதா???

ஆணின் கற்பு...


அரசனென்று எவரையும்
அறிவிக்கவில்லை எனினும்;
ஆணுக்கும் உண்டிங்கே...
"அழிந்துபோகும்" கற்பு!

வியாழன், செப்டம்பர் 18, 2014

ஐ-யும், இந்தியனும்...



    ஐ-படத்தின் புகைப்படங்களைப் பார்த்து, விக்ரமைப் பற்றி என்னுள் பிரமிப்பாய் உணர்ந்து கொண்டிருந்த போது; எனக்கு இந்தியன் திரைப்படத்தைப் பற்றிய கீழ்வரும் அனுபவம் நினைவுக்கு வந்தது:

     இந்தியன் திரைப்படத்தை திருச்சி-பாலக்கரையில் ஒரு திரையரங்கில் நான் என்-நெருங்கிய நண்பர்களுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அனைவரும் கமலின் அபிமானிகள். திடீரென்று நண்பன் ஒருவன் அருமையான காட்சியின் போது

"மாப்ளே! தாத்தா வேடம் சூப்பருல்ல?; பார்த்தா கமல் மாதிரியே தெரியலல்ல??"

என்றான். நானும் உணர்ச்சி பொங்க "ஆமாம், மாப்ளே" என்றேன். அடுத்து ஒன்னு கேட்டான் பாருங்க; நான் அப்படியே "மெரசல்"ஆயிட்டேன். அவன் கேட்டது:

      அப்புறம் எதுக்கு மாப்ளே கமல் இவ்வளோ கஷ்டப்பட்டு நடிக்கணும்? யாராவது ஒரு தாத்தாவை வச்சு எடுத்திருக்கலாம்ல?!

     என் நண்பனின் அருமையான நகைச்சுவை உணர்வு அது; ஆனால், அந்த நேரத்தில் என்னால் இரசிக்க முடியவில்லை :(. நீங்களா இருந்த எப்படி "ரியாக்ட்" பண்ணி இருப்பீங்க?

மீ... "ஙே" ;)  

திங்கள், செப்டம்பர் 08, 2014

இழந்த நம்பிக்கை...



It is "Very Easy" to gain the trust of a person who loves us. But, it is "Highly Impossible" to regain the "Lost Trust (Even Once)" from the same person.

P.S.: "The height of pain" is when the trust is lost without "Valid Reasons".

*********

நம்மை விரும்பும் ஒருவரின் நம்பிக்கையை பெறுவது "மிகவும் எளிது". ஆனால், "இழந்த நம்பிக்கையை (ஒருமுறையே ஆயினும்)" அதே நபரிடம் இருந்து மீண்டும்-பெறுவது "அதீத இயலாதது".

பின்குறிப்பு: "நியாயமான காரணங்கள்" ஏதும் இல்லாதபோது இழக்கப்படும் நம்பிக்கை "வலியின் உச்சம்"

ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014

விழியப்பனோடு விவாதிப்போம் (23082014)




விழியப்பனோடு விவாதிப்போம் (23082014):

நேற்று "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கம்" என்ற குறள் பற்றி ஓர் சிந்தனை எழுந்தது! உடனொரு விவாதமும் வந்தது.

அறத்துப்பாலில் "மக்கட் பேறு" எனும் அந்த 7-ஆம் அதிக்காரத்தில் மேற்குறிப்பிட்ட குறள் (எண் 69) மற்றும் "தந்தை மகற்காற்றும் உதவி"{எண் 67; பெரும்பான்மையில் இது மகன் என்றே பார்க்கப்படுகிறது!}; "மகன் தந்தைக்காற்றும் உதவி" (எண் 70) என்று நம் வள்ளுவப் பெருந்தகை "ஆண்"பாலை குறிப்பிட்டு சொல்ல என்ன காரணம்? என்பதே அந்த சிந்தனை.

"குழலினிது யாழினிது என்பர்தம்..." உட்பட மீதமுள்ள 7 குறள்களிலும் உள்ளது போல்; "மக்கள்"என்று பொதுப்பாலில் ஏன் கூறவில்லை?! என்பதே அந்த வாதம்.

அந்த காலகட்டத்தில் ஆணாதிக்கம் உயர்ந்திருந்ததாய் வரலாறு கூறுகிறது. "ஜான் பிள்ளையானாலும்; ஆண் பிள்ளை" போன்ற கூறுகளும் பல்கிபெருகி இருந்த காலம் என்பதால் - "சில செயல்களில் மட்டும்" இப்படி "ஆண்"என்று குறிப்பிட்டு சொல்லப்பட்டதா?! என்றோர் ஐயம் வந்தது. ஆனால், நம் பெருந்தகை அப்படி எண்ணியிருக்க வாய்ப்பேயில்லை என்பதும் திண்ணமாய் புரிந்தது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வாங்களேன்... விவாதிப்போம்!!!

காதலியும்! மனைவியும்!!


ஓர் ஆணுக்கு பிடித்த "இளம்"பெண்களை மட்டும்; அந்த பொண்ணு(ங்க) சரியில்லை என்று, அவர்களைப் பற்றி குறை கூறிக்கொண்டே இருந்தால் - அந்த பெண் "காதலி".

ஓர் ஆணுக்கு பிடித்த "வயதான"பெண்மணிகளையும் "சேர்த்தே" - அந்த பெண்மணி(கள்) சரியில்லை என்று, அவர்களைப் பற்றி குறை கூறிக்கொண்டே இருந்தால் - அந்த பெண் "மனைவி".

- என்ன நாஞ்சொல்றது?! :)

(நல்லா/அழகா) இருக்கீங்க...



           நான் பெரும்பாலும் உடைக்கும்; ஒப்பனைக்கும் - அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், தேவையான போது (அல்லது) குறிப்பிட்ட நாட்களில் இவைகளை கருத்தில் கொள்வதுண்டு. ஓஹோன்னு இல்லைன்னாலும்; ஓரளவிற்கு "இந்த 2 சென்ஸ்"-உம் உண்டு.

  என் பிறந்த-நாள் அன்று (ஆகஸ்ட் 11) "தாடியை நன்றாக"மழித்துவிட்டு; நல்ல உடை அணிந்திருந்தேன். எப்போதும் வணக்கம் பரிமாறிக்கொள்ளும் ஒரு-செக்யூரிட்டி இன்று "Nice dress! You looking good!!" என்றார். புன்முறுவலுடன் அதை ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவித்துவிட்டு வந்தேன். 

      "உண்மையோ?! பொய்யோ??!!" - நம்மைப் பார்த்து எவரேனும் நீங்க "(நல்லா/அழகா) இருக்கீங்க" என்று சொல்லக்கேட்பது ஒரு சந்தோசத்தைக் கொடுக்கத்தான் செய்கிறது!!!

42-இல் நான்...



       I have completed 42 on August 11th. I am not sure as how many I am going to count more; and I do not want to count on that.

       But - Both the "Almighty"; and "All-mighty" wishes of you have definitely played a huge role in what I have counted so far.

       Thank you ALL.

*******

      ஆகஸ்ட் 11-ஆம் தேதியன்று நான் 42-ஐ கடந்து இருக்கிறேன். இன்னமும் "எண்ண" எத்தனை இருக்கிறதென்று தெரியவில்லை; அதைப் பற்றிய எண்ணமும் எனக்கில்லை.

      ஆனால், "எல்லாம் வல்ல" அந்த இறையும்; "எல்லாம் வெல்லும்" உங்கள் வாழ்த்துகளும் - இந்த எண்ணிக்கையில் "வெகு நிச்சயமாய்"பெரும் பங்கு வகித்திருக்கிறது.

        அனைவருக்கும் நன்றிகள்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்...



      "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்" என்ற குறளை ஆழ்ந்து பார்த்தால்; நம் வள்ளுவப் பெருந்தகை "உவகையின் உச்சமாய்" தாய் ஒரு-குழந்தையை ஈனும் தருணத்தை பார்த்திருப்பது புலப்படும். அதனால் தான், தன்-மகன் சான்றோன் என்று அழைக்கப்படும் போது கிடைக்கும் உவகையை; அந்த நிகழ்வோடு ஒப்பிட்டு இருக்கிறார்.

          - இன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான பெண்கள்; அத்தகைய உயரிய "உவகையை" ஒருமுறை (ஒரே குழந்தை!) அனுபவிப்பதோடு போதும் என்று நினைப்பதை என்னவென்று சொல்வது?! 

{ஈதலின் போது ஒரு தாய் அடையும் வழியையும்/வேதனையையும் உணராதவர் அல்ல வள்ளுவர்! ஆனால், அந்த சில கணங்கள் அடையும் "அழுகை"யை விட; அதன் பின் அந்த நிகழ்வு பற்பல ஆண்டுகள் தரும் "உவகை"யை உயர்வாய் பார்த்திருக்கிறார் என்பதே பேருண்மை!!!}  

சனி, ஆகஸ்ட் 23, 2014

என்னுடைய உணர்வில் - அப்பெருமகள்...

{பாவேந்தர் பாரதிதாசனின் இளைய-மகளும்; என்னவளின்-பாட்டியுமான 
திருமதி. வசந்தா அவர்கள் 13.08.2014 அன்று இயற்கை எய்தினார்.
இன்றும் (23.08.2014), நாளையும் அவரின் இறுதிக் காரியங்கள் நிகழவுள்ளன. 
என்னுடைய உணர்வில் அவர்...
குறிப்பு: இடது புகைப்படம் என் கரங்களால் எடுக்கப்பட்டது;
வலது புகைப்படம் என்-திருமணத்தின் போது எடுக்கப்பட்டது}    

*******

பெருமகளாம்! தமிழ்தனையும் சுவாசம் கொண்ட;
       திருமகளாம்! அகவையின்ஓர் அரசன் என்னும்
பெருமகன்;நம் "பாரதி"தாசனின் மகளும் ஆம்!நாம்
       கருத்தினில்கொள் மறந்தசீர்பெண்; "வசந்தா" என்னும்
திருமகளை இயற்கையும்;தன் வசத்தே ஈர்த்து
       சுருக்கிசேர்த்து கணக்கையும்-நேர் முடித்தும்; இன்னும்
இருக்குமே!பார் மறைந்துதான்போய் விடினும் அத்தாய்
       கருத்துணர்ந்து தமிழ்வளர்த்த செயலும் என்றும்!       

குறள்கொடுத்த பெருந்தகையும், இயம்பும் - அப்பேர்
       சிறப்புகொள்-"ஈன் றபொழுதி"னை அறியேன்! ஆயின்,
அறம்நிறைந்த உனதரும்இன் முகத்தைப் பார்த்தென் 
      பிறப்பினையும் முழுமைசெய்த "பொழுதை" நன்றாய்!
இறப்பெனக்கும், துணை-உனக்காய் நிகழும் வண்ணம்
      பிறந்திடும்;வன் எமனவனின் விதியும் என்றேல்?!...
திறந்துவைத்த மனதுடன்,நல் சிரிப்பும் கூத்தும்;
      சிறப்புசேர்த்தே கரம்இரண்டும் வணங்கி ஏற்பேன்!

தமிழ்பயின்ற சிறியனிவன் கொடுத்த வாக்கும்
     குமிழ்அதுவாய் எனதுதொண்டை இடையில்! ஆம்;உன்
"தமிழச்சியின் கத்தி"உரையை கரங்கள் கொண்டு
     அமிழ்தமாய்-சீர் செதுக்கியேஎன் இடம்ஓர் நன்னாள்
     சிமிழ்விளக்காய் அனுதினமும் எரியும் என்னுள்,
தமிழ்ததும்பும் செயலதுவும் விரைந்தே செய்வேன்;
     தமிழ்எனக்கும் அளித்தஓர்நன் பரிசும் என்பேன்!

இறுதியாம்உன் நிகழ்ச்சியில்நான் இணையும் வாய்ப்பும்;
      உறுதியாய்பல் முயற்சிகளால் இணைத்தே பார்த்தும்,
சிறியனும்நான் கொடுத்துவைக்க இலையே; தாயே!
      மறுப்பெதுவும் இருப்பதுவும் முறையோ?! உந்தன்
பிறப்பதுவும்!; இறப்பதையும் இறக்கக் செய்தே;
      பறப்பதுவும், நடப்பதுவும் - நிலைக்கச் செய்தல்?!
பிறகெதற்காய் இறுதியென்றாய் நினைக்க வேண்டும்?
      பறந்துவிடும் அனைத்துலகில் புகழ்பேர் அன்றோ??

இயற்கையின்மேல் உனக்கிருக்கும் இமயம் ஒத்த
      செயற்கையற்ற சுயஒழுக்கம்; அதன்பால் சேரும்
இயற்கையையும் படைத்தவன்-என் இறையின் அருளும்
      செயற்கறியா வகையிலுமாய் கலந்தே உந்தன்
வியத்தகுப்பேர் புகழ்பரப்பும் செயலும்; யார்க்கும்
      பயத்தகும்ஓர் நெறிவழியால் நடக்கும் ஓர்நாள்
சுயம்எதுவும் கலந்திடாமல் திடமாய் நானும்;
      ஈயத்தையும்போல் - சிறியதாய்ஓர் துளையும் காப்பேன்!!!    


                           -          "விழியப்பன்" எனும் இளங்கோவன் இளமுருகு
                                                       மற்றும் குடும்பத்தினர்
                             {வேனில் பாண்டியன்; விழியமுதினி வேனில் இளங்கோவன்}

ஞாயிறு, ஆகஸ்ட் 10, 2014

இறைவன் இருக்கிறாரா? இல்லையா?? (பாகம் - 2)...




        கடந்த சில மாதங்களாகவே "இறைவன் இருக்கிறாரா? இல்லையா??" என்ற தலையங்கத்தின் இரண்டாம் பாகம் எழுத யோசித்தும்; என்ன காரணத்தினாலோ தள்ளிக்கொண்டே சென்றது. சில தினங்களுக்கு முன், முகநூலில் ஒருவர் "இப்படியொரு விபத்து, அப்படியொரு கற்பழிப்பு, சின்னஞ்சிறு குழந்தைகள் என்ன செய்தது, இன்னும் பிற..." காரணங்களைக் கூறிவிட்டு; பிறகு என்ன "...."க்கு நீ கடவுள்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். உண்மையில், அவர் கேட்டிருந்த கேள்விகள் என்னையும் பாதித்திருக்கிறது எனினும், என்னுடைய பார்வை வேறு மாதிரியாய் இருக்கிறது. என்ன "...."க்கு என்ற கேள்வி என்னை வியப்படையச் செய்ததுடன்; வெறுப்படையவும் செய்தது. உடனே, மேற்குறிப்பிட்ட தலையங்கத்தின் இரண்டாம் பாகம் எழுதவேண்டிய தருணம் வந்துவிட்டதாய் தோன்றியது; அதுதான் இத்தலையங்கம். என்னுடைய காமெண்ட்டாய் கொடுத்த பதில்களை இங்கே சுருங்க சொல்லி இருக்கிறேன். இங்கே இருப்பது என்போன்றோர் நம்பிக்கை என்பதை நினைவில் கொள்க. 

        நன் முதலில் கேட்டது இதுதான்: இவையெல்லாம் நடக்கும்போதே "இறைவன்" அல்லது "உயர் சக்தி" என்ற ஒன்றின் மேல் நம்பிக்கை வரவில்லையே?!...அது ஏன்? தவறுகள் நடக்கக்கூடாது என்பதால் தான் மனிதனுக்கு "ஆறாம் அறிவு"கொடுக்கப்பட்டு இருக்கிறது. அப்படி இருந்தும்... என்ன "-----"க்கு சட்டமும்/நீதிமன்றங்களும்?... எதற்கு சிறைச்சாலையும்/காவல் துறையும்?? இதுபோல் இன்னும் பலவும்! மிக முக்கியமாய் "முதியோர் இல்லங்கள்"பெருகியதற்கு எவர்/என்ன காரணம்? என்றேன். அவர் கேள்விகளுக்கான நேரடியான பதில்களாய் நான் அங்கே கொடுத்தவை கீழே: 
  1. பாலியல் தொல்லைகள்: "காமம்" என்பது என்னவென்று ஒரு பாடமாய் கற்பிக்கப்படும் வரை இம்மாதிரியான கயவர்கள் "அந்த இழிசெயலை" செய்யத்தான் நினைப்பார். இது தனி-மனித ஒழுக்கமின்மை. 
  2. விபத்து: இத்தனை ஆர்.டி.ஓ அலுவலகங்கள் இருந்தும்; முறையான-ஓட்டுனர் உரிமமின்றி; ஒரு-சிறிய சாலை விதி கூட தெரியாமல்/ஒரு-சிறிய விதியை கூட மதிக்காமல்; மது அருந்திவிட்டு ஓட்டுவது யார்? தூக்கம் வந்தால், தூங்கி-எழுந்து ஓட்டவேண்டும் என்ற உணர்வில்லாதது எவர் தவறு?
  3. உணவில்லாது போனது: எல்லா விளை-நிலங்களையும் அழித்து; "பிளாட்"போட ஆரம்பித்தது யார்? முன்பெல்லாம் "கூழ்/கஞ்சி" என்று இருந்தாலும், அனைவருக்கும் எளிதாய் கிடைத்த உணவு இன்று கிடைக்காமல் போனதற்கு யார் காரணம்? எவரின் பேராசை காரணம்? ஓசோன்-ஓட்டை விழுந்து நீர்-குறைந்து விவசாயம் அழிந்ததற்கு யார் காரணம்?
  4. பாதுகாப்பின்மை: தீயவர்களை எதிர்க்க துணியாத; எதற்கெடுத்தாலும் "நமக்கென்ன" என்று நம்-போன்றே எல்லோரும் இருப்பதற்கு என்ன/எவர் காரணம்?
  5. மரணம் அறியாத சிறார்களின் மரணம்: மரணத்தை என்னவென்று நன்கறிந்த "பெற்றோர்களை"தனியே தவிக்கவிட்டு; இறக்கவைபப்து - எவர் செய்வது???
            நீதிமன்றங்கள்/நீதிபதிகள் இருந்தும்; பல குற்றவாளிகள் சுதந்திரமாய் திரிவதைப் பார்த்து என்ன "----"க்கு நீதிமன்றங்கள் என்று நாம் கொதித்தேழுவதே இல்லை! இன்னமும் நம்புகிறோம்... இறைவன் இருக்கிறார் என்பது(ம்) அம்மாதிரியான "வெறும்-நம்பிக்கையாய்" இருக்கவேண்டும். எல்லாமும் "கடவும் பார்த்துப்பார்" என்பதும்; எல்லாவற்றையும் கடவும் ஏன் பார்த்துக்கொள்ளவில்லை? என்று கேட்பதும் - தவறான எண்ணம். நாம் கடவுள்/ஒரு-உறவின் மேல் நம்பிக்கை வைக்கிறோம் என்றால்; அது வெறும்-நம்பிக்கையாய், எந்த பிரதிபலனும் இல்லாத நம்பிக்கையாய் இருக்கவேண்டும். அதுதான் நம்பிக்கை; பிரதிபலன் கிடைத்தால் ஏற்றுக்கொள்ளவும்; இல்லையெனில் பொறுத்துக்கொள்ளவும் வேண்டும். வயாதான பின்னும் "நம் பெற்றோர்களால்"இன்னமும் ஆதாயம் இருந்தால், அவர்களை நன்றாய் கவனித்துக் கொள்வது; இல்லையெனில் அவர்களை அனாதையாய் விட்டுவிடுவது - போன்றே "இறைவனையும்"நாம் பார்ப்பது - ஆறாம்-அறிவுள்ளோருக்கு அழகன்று.

         நான் அங்கே இதையும் சொன்னேன்: மனிதனும்/மனிதமும் முழுமைப் பெற்றுவிட்டால் - இறைவன் என்ற நம்பிக்கை(கூட) அறுந்துபோகும். அதை நோக்கி நம்மை இட்டுசெல்வதற்காய் கூட இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கலாம். என்ன...?! அதை நாம் ஒவ்வொருவரும்; ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு செயல் மூலமும் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும். இது மாத்திரம் சாத்தியம் ஆயின், இறைவன் என்ற சொல்லே மறைந்துவிடும். பின் எங்கே அப்படியொருவர் இருக்கிறாரா? இல்லையா?? என்ற வாதம் வருவது என்றேன். அவர் \\\குற்றங்களை தடுக்க நீதி மன்றங்கள் நிறைய இருக்குதான், ஆனா உண்மைல தடுக்குதா.. ஒரு நாள் கோர்ட்டுக்கு போய் பார்த்தா தெரிஞ்சுடும்... நிதி இருந்தா நீதி கிடைக்கும் நிலைதான் இருக்கு இங்க. உண்மைல கடவுள் சக்தின்னு ஒன்னு இருந்தா தப்பு பண்ண அனைவரையும் தண்டிக்க வேண்டாம், நூறு பேர் நூறே பேர் ஊரறிய தண்டிக்கப்பட்டாவே போதும்.. நீதிமன்றங்களின் தேவையே இருக்காதே...//// என்றோர் கேள்வியை கேட்டார். 

      என் பதில்: இது என்னங்க நியாயம்? "கரெண்டு"வரைக்கும் கண்டுபிடிச்சாச்சே?!... பின்ன ஏன் "ஸ்விட்ச்" போட்டா தான் அனைத்தும் வேலை செய்யவேண்டும்? அது பாட்டுக்கும் வேலை செய்துவிட்டு; அதுபாட்டுக்கும் "ஆஃப்" ஆகவேண்டியது தானே?!-ங்கறது போல இருக்கு! உங்கள் கூற்று என்றேன். இதுபோல், வேறு சில வாதங்களும் எங்களுக்குள் நிகழ்ந்தது. அதை மேற்கொடுத்துள்ள இணைப்பில் காணலாம். நான் இறுதியாய் "சவுதி, அரபு மற்றும் அது போன்ற" நாடுகள் நம்மை விட "அதீத-இறைபக்தி" கொண்டுள்ளன. அந்த நாடுகளில் அந்த பதிவர் கேட்டிருந்தது போல அனைத்து குற்றங்களும் மிக-மிக குறைந்த அளவிற்கு (இல்லை என்றும் சொல்லும் அளவில் கூட!) இருக்கிறதே; அதற்கு என்ன காரணம்?! என்றேன். அதற்கு நீங்கள் சொல்லும் பதிலே; உங்கள் கேள்விகளுக்கான விடைகள் என்றேன். ஏனோ, மீண்டும் ஓர்முறை நினைவு படுத்தியும் அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை. சரி... அதை இந்த பதிவில் விளக்கிவிடலாம் என்று நானும் விட்டுவிட்டேன்.

        நம் நாட்டில் இம்மாதிரியான செயல்களுக்கு; இறைவன் தன் கடமையை செய்யாதது தான் காரணம் எனின் - இந்த நாடுகளில் குற்றங்கள் மிகப்பெருமளவில் குறைந்திருப்பது "அவர்களின் அதீத-பக்தி"தான் காரணம் என்று கூறுவதே நியாயம். அதாவது, அந்த அதீதத்தால் இறைவன் அனைத்தும் செய்கிறார்! கண்டிப்பாய்... அவர்கள் அப்படி சொல்லப்போவதில்லை; அப்படி சொல்லிவிட்டால் "கடவுள் இருக்கிறார்" என்று ஒப்புக்கொண்டதாகிவிடும்; நாம் அனைவரும் பக்தியுடன் இல்லை என்பதே காரணம் என்றாகி விடும். இன்னொரு காரணம் (நியாயமான காரணம் கூட!) - இந்த நாடுகளில் இருக்கும் "தனி-மனித"ஒழுக்கம். கடவுள் இருக்கிறார் என்ற ஒழுக்கத்தைப் போலவே; இது தவறு - இதை செய்யக்கூடாது என்றால் செய்யமாட்டார்கள். அப்படி செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றால் - தண்டிக்கப்பட்டே ஆவார்கள். அதை செய்யவேண்டிய அலுவலர்களும் தனி-மனித ஒழுங்குடனே இருப்பர். தண்டனை கடுமையானது மட்டுமல்ல; விரைவிலும் நிறைவேற்றப்படும். 

           நம் நாட்டில் கடவுள் நம்பிக்கையும் "உண்மையாய்" இல்லை. மனிதனும்/மனிதமும், உண்மையாய் இல்லை. சாமி-கண்ணைக் குத்திவிடும் என்றால்; ஓ! நமக்கு மேல் ஒரு உயர்-சக்தி உள்ளது - அது தண்டிக்கும் என்று நம்பவேண்டும்; அப்படி நம்பினால் உண்மை அதிகமாகும் என்பதுதான் அடிப்படை. நம் கடனை சரியாய் செய்யாது; நம் தவறை பிறரின்-தவறாய் எளிதாய் சுட்டிக்காட்டிவிட்டு தப்பிவிடும் "நம் எதார்த்த இயல்பை" போலவே - "இதெல்லாம்; கடவுள் செய்ய தவறியதால்"விளைந்தது; அதனால், கடவுள் இல்லை; பின் என்ன "----"நீ கடவுள் என்று கேட்கிறோம். நம் தவறை - நாம் உணராமலேயே தொடர்ந்து பயனப்பட்டதன் விளைவு. மூன்றவதாய் - மேற்குறிப்பிட்ட நாடுகளில் மன்னராட்சி உள்ளது; அதனால் தான் - அவை எல்லாம் சாத்தியம் என்றும் ஒரு வாதம் வரும். ஆனால், அப்படி மன்னராட்சி வேண்டாம் என்று போரிட்டு மனித-உரிமையை கோரியதும் நாம் தானே?! ஒரு-குடும்ப அரசியலையே நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை; பின் எங்கே மன்னராட்சியை அனுமதிப்போம்?!...

        இவையனைத்தையும் பார்த்துணர்ந்து தான் இறைவனை நம்புவோர் "அரசன் அன்றே கொல்வான்! தெய்வம் நின்று கொல்வான்!!" என்றனர். அரசன் என்னவென்பதை நாம் உணர்ந்து/அனுபவித்து விட்டோம்; அது வேண்டாம் என்று ஒழித்தும் விட்டோம். சரி... அப்படியே உடனடியாய் தண்டிக்காமல் இருக்கட்டும் என்றால், நின்று-கொல்லும் தெய்வமும் வேண்டாம் என்கிறோம். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருந்து "தண்டிக்க வேண்டிய; நீதி/காவல் துறைகளையும்" அவர்களின் கடனை செய்யமுடியாமல்; "கையூட்டால்" கை-கட்டி போட்டு விடுகிறோம். பின், என்ன தான்யா வேண்டும்?!... அரசனோ/அரசோ/இறைவனோ - எது வேண்டும்; எது நம் நம்பிக்கை - என்பதெல்லாம் இருக்கட்டும். முதலில், நாம் ஏதாவது ஒன்றுக்கு கட்டுப்படும் மனத்தை பழக வேண்டும்! அது மனிதனையும்/மனிதத்தையும் மேம்படுத்தும். பின்னர் தான், நாம் எதன் மீதும் (அல்லது) ஏதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை கொண்டு; நம் செயல்களை நாமே நெறிப்படுத்துதல் சாத்தியமாகும். அதுவரை...


என்போன்றோர் நம்பிக்கையில்; இறைவன் இருக்கிறார்!!!

பின்குறிப்பு: அறிவும்/அறிவியலும் - இதுவரை உள்ளவற்றை(மட்டும்) கண்டுபிடித்து; அதை அறியும் முயற்சியில் மட்டுமே இருக்கிறது. ஆனால், இவை எல்லாமே இந்த வையகத்தில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய் இருந்து வருபவை. இன்றைய காலகத்தில், மிக வேகமாய் வளர்ந்து வரும் அறிவியல்-தொழில்நுட்பம் பலதையும் வேகமாய் கண்டுபிடிக்கிறது எனினும் - அது, இன்னமும் எதையும் உருவாக்கவில்லை! இந்த பிரபஞ்சத்திற்கு இணையான; இன்னுமோர் பிரபஞ்சத்தை - மனிதன் உருவாக்கும் வரை; நமக்கும் மேலான உயர்-சக்தி இருக்கிறது என்பதை நாம் மறுக்கமுடியாது. உங்கள் அகராதியில் எப்படியோ?!... என்னுடைய அகராதியில் அதற்கு பெயர் "இறைவன்". இந்த தலைப்பில் மேலும் சில பாகங்கள் தொடரும்...