வெள்ளி, செப்டம்பர் 11, 2015

குறள் எண்: 0040 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 004 - அறன் வலியுறுத்தல்; குறள் எண்: 0040}


செயற்பால தோரும் அறனே ஒருவற்கு 
உயற்பால தோரும் பழி

விழியப்பன் விளக்கம்: ஒருவர் பகுத்தறிந்து செய்யத்தக்கது அறச்செயல்களாகும்; அதுபோல், ஆராய்ந்துணர்ந்து ஒழிக்கத்தக்கது பழிச்செயலகளாகும்.

(அதுபோல்...)

ஓர்கட்சி அறமுணர்ந்து தொடரக்கூடியது பொதுநலமாகும்; அதுபோல், உண்மையறிந்து   நிறுத்தவேண்டியது சுயநலமாகும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், செப்டம்பர் 10, 2015

மெளனம் - இயலாமையா? ஆளுமையா??


{ முன்குறிப்பு: மெளனத்தைப் புரியவைத்தல் அத்தனை எளிதல்ல! என்பதால்; இங்கே விரிவாய் எழுதவேண்டிய நிர்ப்பந்தம்!! அதனால், தலையங்கத்தின் நீளம் அதிகமானது!!! }


            இன்று காலை என் முகநூல் நட்பொருவரின் \\\\மௌனம் என்பது தனி மொழி அல்ல. எல்லா மொழிகளிலும் இருக்கும் இயலாமை//// என்ற பதிவிற்கு நான் கீழ்வருவம் இரண்டு கருத்துகள் இட்டேன்: 1. நன்று. ஆனால், அது இயலாமை மட்டுமல்ல அண்ணாச்சி. சரியாயன இடத்தில், முறையாய் பயன்படுத்தப்பட்டால், அது மிகப்பெரிய ஆளுமை! {எனக்கு சில மெளனங்கள் நிறையக் கற்றுக் கொடுத்திருக்கின்றன!} 2. அதுபோல், பல மெளனங்கள் - களைக்கப்பட வேண்டும் என்பதும் உண்மை! என்னை முதன்முதலில் மெளனத்தால் புரட்டிப்போட்டவள் என்னவள்! அவளின் மெளனம் தான்; மெளனம்-சார்ந்த என் பல புரிதல்களுக்கு அடிப்படை! அவளின் மெளனங்கள் எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்ததோடு; என்னையும், மெளனம் பயில வைத்திருக்கிறது. என்னுடைய பதிவுகள்/விவாதங்கள்-இன் அடிப்படியில் நான் அதிகம் பேசக்கூடியவன் என்ற தவறான புரிதல் இருக்கக்கூடும். என்னுடைய குடும்பத்தாருடன் பேசினால் சொல்வார்கள்; நான்...

          எப்படிப்பட்ட மெளனவாதி! என்று - முக்கியமாய், என் தமக்கை. "ஏண்டா, எதுக்கேட்டாலும் - சாமியார் மாதிரியே அமைதியா இருக்க?!" என்று அடிக்கடி கேட்பார். அதற்கும் மெளனம் தான் பதிலாய் கிடக்கும் என்பது வேறு விடயம்; ஆனால், தொடர்ந்து கேட்பார். நான் இங்கு விளக்கியிருக்கும் புரிதலின் அடிப்படையில், என் குடும்பத்தாரிடம் மெளனம் கடைப்பிடிக்கவில்லை. ஏனோ, அவர்களிடம் நிறையப் பேசவேண்டும் என்று எனக்குத் தோன்றியதே இல்லை. அது, எனக்கே தெரியாமல்/புரியாமல் கடைபிடிக்கப்பட்ட மெளனம். நான் இங்கே சொல்ல முனைவது, என் சுய-சிந்தனையால், எனக்கு தெரிந்த/புரிந்த - மெளனம்! மேற்குறிப்பிட்ட பதிவையும்; என் பதிலையும் அடிப்படையாகக் கொண்டு, இத்தலையங்கத்திற்கு "மெளனம் - இயலாமையா? ஆளுமையா??" என்று தலைப்பிட்டேன்! இதுதான், பொருத்தமானது என்று நம்புகிறேன். என் புரிதலின் மூலம், மெளனத்தை கீழ்வருவது போல், வகைப்பிரிக்க விரும்புகிறேன்:


இயலாமை-மெளனம்

    இயலாமையின் கீழ் வரும் மெளனத்தை, 2 உட்பிரிவுகளாய் வகுத்துள்ளேன். இவற்றை "இயலாமை" என்று சொல்லக் காரணம் - இவையனைத்தும் - சொற்ப வார்த்தைகளைக் கொண்டு மெளனம் களை(ந்/த்)து, பேச்சால் விளக்கக்கப்படக் கூடியவையே! ஆயினும், சிலர் காக்கும் இவ்வகை மெளனத்தால் - அவர்கள் வேண்டுமானால் நிம்மதியாய் இருக்கலாம். ஆனால், அவர்களின் மெளனம் மற்றவர்களை ஆரோக்கியமற்ற சூழலுக்கு உட்படுத்துகிறது என்பதை உணரவேண்டும். இதைத் தெரிந்தும் செய்பவர்கள் இருக்கிறார்கள்! தெரியாமல் செய்பவரும் இருக்கிறார்கள்!! இவ்வகை மெளனங்கள், அவர்களின் ""இயலாமை"யை உணர்த்துகிறது.   

சரியான-இயலாமை:
  • நாம் பேசுவதை, சரியான விதத்தில் - அதிலுள்ள மெய்ப்பொருளை மற்றவர்கள் உணரவில்லையே?! என்ற ஆதங்கத்தில் ஏற்படும் மெளனம். அதை மேற்கொண்டு எப்படி விளக்கவேண்டும் என்று தெரியாத இயலாமையால் நிகழும் மெளனம்.
  • நம் பேச்சு, ஒருவரை தவறென்று சுட்டிக்காட்டி வரை வருத்தக்கூடுமே என்பதால் விளையும் மெளனம். பேசாததால், வேறொருவர் வருத்தம் அடைவார் எனினும் "பொய்மையும் வாய்மை இடத்த" என்பது போல், இதை சரியான இயலாமை-மெளனமாக ஏற்கலாம்.
தவறான-இயலாமை:
  • நாம் சொல்லும் உண்மையால் - ஒரு ஆரோக்கியமற்ற சூழல், அறவே களையப்படும் என்று தெரிந்தும், எவரையும் காயப்படுத்த வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் காக்கப்படும் மெளனம். அது மற்ற பலரையும் கலவரத்திற்கு உட்படுத்துவதால், தவறான-இயலாமை ஆகிறது.
  • மனைவி போன்ற உறவுகள் இடத்தே; நாம் ஏதாவது சொன்னால் - பிரச்சனையாய் ஆகிவிடுமோ?! என்றஞ்சி காக்கும் மெளனம். இது ஒரு சுயநலம்-ஆன மெளனம் என்பதால், இதை தவறான-மெளனம் என்கிறேன்.
  • ஒரு குழுவில் இருக்கும்போது; ஒருவருடன் தனிப்பட்ட முறையில் இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாய் (எக்காரணம் ஆனாலும்!) நேரடியான உரையாடலில், காக்கப்படும் மெளனம்.
  • கருத்து சார்ந்து ஒரு பிரச்சனை உருவாகி, அப்பிரச்சனையின் தடமே மறைந்த பின்னரும்; நாம் சார்ந்த உறவு/நட்பு - இடையில் கடைப்படிக்கும் மெளனம். 

ஆளுமை-மெளனம்

         சில மெளனங்கள் நாம் எதிர்பார்த்த பலனை, நமக்கு கொடுப்பதோடு மட்டுமல்லாமல் - நம் மெளனத்தைச் சந்தித்தவருக்கும் பல புரிதல்களை கொடுக்கும். செயல்படுத்தும் விதத்தில்/கடைப்பிடிக்கும் பொறுமையில் - அவர்களின் மெளனத்தில், ஆளுமை இருக்கும். இதை சரியாய்-உணர்வது மிக-மிக கடினமானது; ஏனெனில், அதற்கு நிறைய இழப்புகளை சந்திக்க வேண்டும்! பல தியாகங்களை செய்யவேண்டும். அவற்றை, விரைவில் உணர்தல் இன்னும் சிறப்பானது - ஆனால், அது கிட்டத்திட்ட சாத்தியம் இல்லாதது. சரி, ஆளுமையான மெளனங்கள் எவை?
  • நான் சந்தித்த முதல் ஆளுமை-கொண்ட மெளனம், என்னவள் காட்டியது! அவளின் பல மெளனங்கள் என்னை திகைக்க வைத்தன; இன்னமும் திகைக்க வைக்கின்றன! ஒருவரின் மெளனத்தை உற்று கவனிக்கவேண்டும் என்ற புரிதலை என்னுள் விதைத்தவள் அவளே. இதைக் கண்டிப்பாக நானே சுயமாய் உணரவேண்டும் என்று அவள், தெரிந்தே செய்திருக்க வேண்டும். இயல்பாய், அது எனக்கு கைகூடவும் செய்தது.
  • ஆளுமையான-மெளனங்களை; சரியா? தவறா?? என்ற அடிப்படையில் அணுகவே கூடாது. அப்படிப்பட்ட மெளனங்களில் வெகுநிச்சயமாக இரண்டும் கலந்தே இருக்கும். ஆனால்,  தவறுகளையும் தாண்டி; குறிப்பிட்ட அந்த உறவை மட்டும் (மைய/முதன்மை)ப்படுத்தி பார்ப்பது அவசியம். அப்படிப் பார்த்தால், அதில் இருக்கும் தவறுகள் மன்னிக்கப்படலாம் என்பது புரியும். ஆனால், அது அத்தனை எளிதல்ல! மேற்குறிப்பிட்டது போல், பல இழப்புகளைச் சந்தித்து, தியாகங்களையும் செய்வது மிகவும் அவசியம்.
  • இதுவரை நான் சந்தித்த ஆளுமை-மெளனங்களில்; என்னளவில் "உயர்ந்த/அசாத்திய ஆளுமை" என்றால் அது 6-வயதான என்மகள் காட்டியதே!!! ஆம், படிக்கும்போது அவள் கடைப்பிடிக்கும் மெளனம். அவள் படிப்பின் மீது ஆர்வமில்லாமல் அதைச் செய்யவில்லை; மாறாய், படிக்கும் முறை அவளுக்கு பிடிக்கவில்லை என்பது வெகு-நிச்சயமாய் எனக்கு தெரியும். இப்போதைக்கு, எங்களுக்கு, வேறு வழியில்லை! அவள் இந்த படிப்பு-முறையைக் கடைப்பிடித்து தான் ஆகவேண்டும். சென்றமுறை விடுப்பில் சென்றபோது, அப்படியொரு படிக்கும் சந்தர்ப்பத்தில் - அவளை முதுகில் ஒருமுறை அடித்தும் விட்டேன். ஆம்! ஆளுமையான் மெளனங்கள் நம்மை, இப்படித்தான் தடம்புரட்டும்! என் ஆற்றாமை பெருகுகிறது; ஆனால், அவள் மெளனத்தை சிறிதும் களையவில்லை! என் ஆற்றாமை உச்சத்தைத் தொட்டது; மீண்டும் "வேறு வழியே இல்லாமல்" நானே, என் இயல்பு நிலைக்கு திரும்பினேன். சிரித்து அவளை சமாதானம் செய்ய எத்தனித்தேன். ஆனால், அவளோ, அப்போதும் சிலை-போல் மெளனித்தே இருந்தேன். "சாரிம்மா! அப்பாவை மன்னிச்சுடு!!" என்பது போன்று பலவற்றையும் செய்த பின்தான் அவளின் மெளனத்தைக் களைத்தாள். அவ்வளவு-அதிகமாய் பேசக்கூடியவள் மெளனம் காக்கிறாள் என்றால், தெரிந்தே தான் செய்கிறாள் - என்று அர்த்தம்! எனவே, என்னளவில், இதுவரை நான் சந்தித்த மெளனங்களில், அவளின் மெளனம் தான் ஆளுமையின்-உச்சம்!
  • மீண்டும் எச்சரிக்கிறேன்! ஆளுமையான-மெளனங்கள், நம்மை எளிதில் தடம்புரளச் செய்யும்! அப்படிப் தடம் புரண்டதால் தான் - நான் என்மகளை அடித்தேன். இதுவே, வேறொரு உறவாய் இருந்திருப்பின்; அல்லது, என்மகளே 20 வயதானவள் என்றிருந்தால் - அது பெரிய-பிரச்சனைக்கு ஆரம்பமாய் இருந்திருக்கக்கூடும். எனவே, அப்படிப்பட்ட ஆளுமைகளை அணுகுவதில் பெரும்-எச்சரிக்கையும்/பொறுமையும் தேவை. 
       எப்படிப்பட்ட மெளனங்களை எதிர்கொள்கிறீர்கள் என்பதும், அவற்றை எப்படி வகைப்பிரித்து அணுகுகிறீர்கள் என்பதும் உங்கள் புரிதலில் இருக்கிறது! அதுபோலவே, எப்படிப்பட்ட ஆளுமைகளை கையாளவேண்டும் என்பதற்கும், உங்களின் புரிதலே அடிப்படை. பெரும்பாலும், நான் இயலாமை-மெளனத்தைக் கடைப்பிடிப்பதில்லை. அதுபோல், இதுவரை இரண்டே முறைதான் ஆளுமையான-மெளனத்தைக் கடைப்பிடித்து இருக்கிறேன். 1. அவரே "தன் வளர்ச்சிக்கு என்னையே முழுக்காரணம்!" என்று சொன்ன ஒருவரை, நானே விலக்கி வைக்கவேண்டிய சூழலால் நிகழ்ந்தது. அந்த நட்பை என்னுடைய எண்ணத்தில்-இருந்தே விலக்கிவிட்டேன். 2. இப்போது, இன்னுமோர் நட்பிடம் அப்படிப்பட்ட ஆளுமையான-மெளனத்தைக் கடைப்பிடித்து வருகிறேன். மிக-மோசமான வார்த்தைகள் கொண்டு என்னைப்-பலமுறை விமர்சித்தும் - என் மெளனம், இதுவரைக் களைக்கப்படவில்லை! இந்த நட்பை(யும்) முழுதாய் விலக்குவதும்/மீண்டு(ம்) ஏற்பதும் - அந்த நட்பு என் மெளனத்தை சரியான-விதத்தில் எதிர்கொண்டு; தன் குறைகளைக் களைவதில் இருக்கிறது.

எதிர்கொள்ளும் மெளனத்தையும்; காட்டவேண்டிய மெளனத்தையும் - வகைப்படுத்துதல்... 
நம் கடனே! நம் கடனே!! நம் கடனே!!!

குறள் எண்: 0039 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 004 - அறன் வலியுறுத்தல்; குறள் எண்: 0039}



அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழு மில

விழியப்பன் விளக்கம்: அறத்தின் வழியால் கிடைப்பவையே இன்பம்; மற்றவை எல்லாம் துன்பங்களாகும், அது புகழாய் இருப்பினும் கூட.

(அது போல்...)

ஊழலற்ற வழியில் சம்பாதிப்பவையே மனநிறைவைத் தரும்; மற்றவை எல்லாம் இன்னல்கள், அது மாளிகையே ஆயினும் கூட.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், செப்டம்பர் 09, 2015

சுயம் என்பது எது? எப்படி வரையறுப்பது??



     கோபம் எப்படி வெளிப்படும்...??? என்ற தலையங்கத்தை எழுதிய பின் என்னுள் பல யோசனைகள். அங்கே குறிப்பிட்டது போல், உணர்வுக்கேற்ப குரல்-ஒலியை மாற்றிப் பேசுவது; பலரையும் நான் கோபப்படுவதாய் நினைக்கத் தூண்டுகிறது. என் குரலின்-ஒலி அதிகமாக இருப்பது என்னுடைய சுயம். ஆனால், என்னுடைய பேச்சின் நோக்கம் சரியாய் புரிந்து கொள்ளப்படாததால்; என்னுடைய பேச்சையே குறைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். மனதில் பட்டதை வெளிப்படையாய் பேசுவதும் - என் சுயம். பல விடயங்களில், என் வெளிப்படையான பேச்சே எனக்கு எதிராய் திரும்பி; அதனால் பல பிரச்சனைகள் எழுந்திருப்பினும் - வெளிப்படையாய் பேசுவதை நான் மாற்ற முனைந்தது இல்லை. ஏனெனில், "என் சுயத்தை" எவர்-மாற்றுவதிலும் எனக்கு உடன்பாடில்லை. என்-மூத்த ஆராய்ச்சியாளரின் ஒரு-ஆசான், ஆய்வுக்கட்டுரையைத் திருத்தும் போது; மற்றவரின் சுயம் மாறாமால் திருத்தம் செய்வார் என்பதை நானறிவேன்.

         எனக்கு மிகவும் பிடித்த செயல் என்பதால், நானும் எவரின் ஆய்வுக்கட்டுரையை (அல்லது வேறேதேனும் ஆவணங்கள்) திருத்தினாலும் - சம்பந்தப்பட்டவரின் சுயத்தை மா(ற்)றாமல் காப்பேன். அது ஒரு கலை! அந்த கவனம் என்-சுயத்தின் மீதும் இருப்பதால்; வெளிப்படையாய் பேசும் என் சுயத்தை; நான் மாற்ற முயல்வதில்லை. ஆனால், குரலின்-ஒலி தவறான புரிதலைக் கொடுப்பதால், என் பேச்சைக் குறைத்து; அதே சமயம், என் மனதில் தோன்றுவதை எழுத்து-வடிவில் பிரதிபலிக்க துவங்கினேன். எழுத்தால் உரையாடுவது - அதிலும், அலைபேசியில் தட்டச்சு செய்வது - பெருத்த சிரமம் எனினும், அதை சிறிது நாட்களாக கடைப்பிடித்து வருகிறேன். இதைத் தொடர்ந்து கவனித்த நட்பொன்று "ஏன், இப்போதெல்லாம் பேசுவதே இல்லை?" என்று கேட்டது. நான் எடுத்திருக்கும் நிலைப்பாட்டைக் கூறி; என் கருத்துகள் தவறாய் புரிந்து கொள்ளப்படுவதில், வருத்தம் மட்டுமல்ல; அதில் எனக்கு உடன்பாடும் இல்லை! 

       இது, நானே விரும்பாத என் சுயத்திற்கு எதிரானது; எனத் தெரிந்தாலும் என் கருத்துகள் உ(ய)ரிய பலனளிக்க வேண்டும் என்பதால், இப்படி செய்வது - இங்கே முக்கியம் என உணர்கிறேன்" என்று பதிலளித்தேன். அந்த நட்பு உன் சுயத்தை நிச்சயம் நீ காக்கவேண்டும். அதே வேளையில், மற்றவர்களின் சுயத்தை காக்க; அவர்களின் தவறுகளை "உடனடியாக" சுட்டிக்காட்டுவதை(யும்) தவிர்க்கவும் என்றது. என் எழுத்தும்-தவறாய் புரிந்து கொ(ல்ல/ள்ள)ப்பட்டதையும் கடந்து, ஒருவரின் தவறை சுட்டிக்காட்டுதல் எப்படி அவரின் சுயத்தை மாற்றும் செயலாகும்? என்ற வருத்தமே மிகுதியானது. ஆனால், அதைப்பற்றி விவாதிக்கவில்லை. என் கருத்து தவறாய் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதே, இங்கே முக்கியமான விடயம். கருத்தையும் தாண்டி; என் குரல்-ஒலி பிரதானமாகப் பார்க்கப்படுகிறது என்பதே முக்கியம்! வேடிக்கையாய் "அடப்பவிகளா! எழுத்தில் சொல்லியுமாடா, கன்ஃபியூஷன்?! ஸ்ஸ்ஸ்ஸ்... யெப்பா!" என்றேன். 

          என் தற்-பெருமையாய் சொல்லவில்லை! எனக்கு - எவர் எப்படிப் பேசினாலும்; அவர்களின் பேச்சை/அந்த வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு - அதன் பொருளை மட்டும் உள்வாங்கும்/கவனிக்கும்-திறன் - இருப்பதாய் நம்புகிறேன். இதை எல்லோரும் செய்யவேண்டும் என எதிர்பார்ப்பதோ/நிர்ப்பந்திப்பதோ - தவறு என்பது(ம்) எனக்குத் தெரியும். ஆனால், எல்லோரும் அப்படி செய்தல், அது ஒரு ஆரோக்கியமான உறவையும்/நட்பையும் வள(ர்)க்கும். "பலவகையான சுயங்கள் ஒவ்வொருவருக்கும் இருப்பதால்; சுயம் என்பதற்கு பொதுவான விளக்கம் கொடுப்பது சிரமம் என உணர்கிறேன். எனவே, குறைந்தது, இந்த "விடயத்திலாவது சுயம் என்றால் என்ன? என்பதை (எனக்கு தெரிந்த வகையில்) வரையறுக்க வேண்டும் என்பதற்கே - இத்தலையங்கம். சரி, இது போன்று எழுதுவதா சுயம்? என்றால், இல்லை! அது வேலை/கடமை ஆகிறது. ஆனால், இது போன்ற பதிவுகள் எழுதிட, தொடர்ந்து யோசிக்கிறேன் அல்லவா?

        அந்த யோசிக்கும்-செயல் ஒருவரின் சுயம் ஆகும். தொடர்ந்து யோசித்து ஒரு புரிதலை நோக்கி பயணிக்க; மேலும், தொடர்ந்து யோசிப்பதைக் கடைப்பிடிப்பதும்  ஒருவரின் சுயம். நம் கருத்துகளில், பலரின் பங்களிப்பு இருக்கும்; நாம் செய்யும் விடயங்களிலும் பலரின் பங்களிப்பு இருக்கும். அதுபோல, நம்மைச் சிந்திக்கவைக்க கூட, சிலரின் தூண்டுதல் காரணமாய் அமையக்கூடும். ஆனால், நம் சிந்தனை - அது நம் சுயம்! நாம் யோசிக்கும் விதம் - நம் சுயம்!! ஒரு மாறுபட்ட கோணத்தில் இருந்து பார்ப்பது - நம் சுயாமாகும்; அதனால் தான் "விழியப்பன் பார்வை" என்று என் வலைப்பதிவுக்கு தலைப்பிட்டேன். நம் புரிதல் பிறரைச் சென்றடைய வேண்டும் என்று நினைப்பதும் ஒரு-சுயம். அதுபோல், நம் புரிதலில் இருக்கும் தவறுகளைத் திருத்திக் கொள்ள இல்லையெனில், நம் சுயம் தவறாகிவிடும்; அதனால் தான், என் வலைப்பதிவின் தலைப்பின் கீழ்  "என் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும்... 

         பாண்டிய மன்னர்களுக்கும்; குறைகளைச் சுட்டிக் காட்டும் நக்கீரர்களுக்கும் நன்றிகள் பல!!!" என்று கொடுத்தேன். ஏனெனில், நம் சிந்தனயில் - அதவாது "சுயத்தில்" - உள்ள குறைகளை எவரும் சுட்டிக்காட்டினால், அதை ஏற்றுக்கொள்வது மிக-முக்கியம். இல்லையெனில், சுயத்தின் அடிப்படை சிதைந்துபோகும்! சுயத்தின் நோக்கமும் - அதவாது புரிதலைப் பகிர்வது - சிதைக்கப்படும்!! தவறான விமர்சனங்களும்; தவறாக சுட்டிக்காட்டப் படும் குறைகளும் இருக்கும் - தவறில்லை! அவற்றையும் நம் சுயத்தால் (சிந்தனையால்)ஆய்ந்தறிந்து தெளியலாம். இங்கே, சுயம் சார்ந்த - கீழ்வரும் சில காரணிகளை வலியுறுத்த விரும்புகிறேன்: 
  • நம் எழுத்தை(சிந்தனையை) எவரும் "குறையாய்"விமர்சிக்கவே கூடாதென்பதும்; அக்குறைகளை, நம் சுயத்தை(சிந்தனையை) தொடுவதாய் எண்ணுவதும் பெரும்-தவறு!! 
  • குறை இல்லாதவர் எவருமில்லை; குறைகளை எடுத்துரைப்பது/களைவது - இவ்விரண்டும் அறமே! எனவே, குறை இருப்பதையே; பெரிய-குறையாய் எண்ணி வருந்தத் தேவையில்லை.
  • நம் சிந்தனையில் உள்ள குறைகளை எவரும் சுட்டிக்காட்டினால், அதை பரிசீலித்து திருத்திக்கொள்ளவேண்டும். நம் சிந்தனையையே தவறென்றால் - அது மறுக்கப்படவேண்டும்! 
  • குறைகளை - இடமும்/சூழ்நிலையும் சரிபார்த்து - சுட்டிக்காட்டுதல் நலம். இல்லையெனில், தவறாக புரிந்துகொள்ளப்படும்; அப்படி சில தவறுகள் நான் செய்து, அனுபவித்ததுண்டு.
  • சுட்டிக்காட்டப்படும் குறைகளின் மேல் கவனம் செலுத்துதலே அவசியம். அதை விடுத்து சுட்டிக்காட்டும் நபரைத் தனிப்பட்ட முறையில் கவனிப்பது(??!!) நியாயமற்றது.
  • தொடர்ந்து குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டும் ஒருவரிடம் எச்சரிக்கையாய் இருப்பது மட்டுமல்ல; நாமும் அதுபோன்று செய்யகூடாது என்ற எச்சரிக்கையும் தேவை. 
  • நம் குறைகளை எல்லோரும் சுட்டிக்காட்ட மாட்டார்கள். நம் நலனில் அக்கறை உள்ளவர்கள் மட்டுமே; அதே அக்கறையுடன் சுட்டிக்காட்டுவர் - எனவே, கவனம் தேவை.


தவறுகளை - சுட்டிக்காட்டுதல் மட்டுமல்ல; திருத்திக்கொள்வதும் - "நம் சுயமே"!!!      

குறள் எண்: 0038 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 004 - அறன் வலியுறுத்தல்; குறள் எண்: 0038}



வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் 
வாழ்நாள் வழியடைக்கும் கல்

விழியப்பன் விளக்கம்: வீணான நாளொன்றே இல்லாமல் நல்லது செய்தால்; அதுவே, ஒருவனின் மறுபிறப்பின் பாதையை அடைக்கும் கல்லாகும்.

(அது போல்...)

ஒருநாளும் தவறாமல் உடற்பயிற்சி செய்தால்; அதுவே, ஒருவரை முதுமை-நோய்களில் இருந்து காக்கும் மருந்தாகும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், செப்டம்பர் 08, 2015

சகோதரிகளை அழகென்னும் அசிங்கம்...



     மேலுள்ள படத்தைப் பார்த்ததும்; உங்களில் பலருக்கும் அது என்ன திரைப்படம்/என்ன நகைச்சுவை என்பது புரிந்திருக்கும். இது நகைச்சுவை எனினும், என்னளவில் "ஒலகத்துலயே; சொந்த அக்காவை ஃபிகர்னு சொன்ன ஒரே கேடுகெட்ட தம்பி நீதான்!" எனும் வசனம் தான் பிரதானமாகத் தெரியும். இப்படிப்பட்ட காட்சியை/இந்த வசனத்தை - மிகவும் உணர்வுபூர்மாய்/அழுத்தமான கதைக்களத்தில் கையாளப்பட்டிருக்க வேண்டும். அப்படி சொல்லப்பட்டு இருந்தால்; இந்த வசனம் வெறும்-நகைச்சுவையாய்(மட்டும்) பார்க்கப்பட்டிருக்காது என நினைக்கிறேன். நகைச்சுவையாய் காட்சியிலும் - இப்படியொரு கருத்தை சொல்லப்பட்டு இருப்பது சிறப்பெனினும்; இம்மாதிரியான ஆழமான-கருத்துகள் நகைச்சுவையால் மறைக்கப்பதுவதும் வேதனையான உண்மை! இப்படி கருத்துகள் மறைக்கப்படுவது போல் தான், எவ்வளவு அற்புதமான கருத்துகளை வெளிப்படுத்தினாலும் என்.எஸ்.கே./கவுண்டமணி/விவேக் போன்ற சிலர் தவிர...

       பெரும்பான்மையில், நகைச்சுவை நடிகர்கள் அதிகம் போற்றப்படுவதில்லை. நகைச்சுவை என்பது சிரிப்பதற்கு மட்டும் என்ற நம் தவறான-புரிதலும் கூடுதல் காரணம். எனவே தான், என்.எஸ்.கே. போன்றவர்கள் அடிக்கடி "இது சிரிக்க மட்டுமல்ல! சிந்திக்கவும் தான்!!" என்பதை வலியுறுத்த வேண்டியதாயிற்று. சரி, இத்தலையங்கத்தின் மையக்கருத்துக்கு வருவோம்; இந்த நகைச்சுவைக் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் "சகோதரிகளை அழகென்னும் அசிங்கம்!!!" பற்றிய சிந்தனைதான் மேலோங்கும். இதுபோன்ற அசிங்கத்தை முக-நூலில் அடிக்கடிப் பார்க்க நேர்கிறது. பல பெண்களின் புகைப்பட-பதிவிற்கு "Very beautiful sister!" என கருத்திடப்படுவதைப் பார்க்க முடிகிறது; பெண்களும் "லைக்"கிவிட்டு; மகிழ்ச்சியுடன்-நன்றியும் தெரிவிக்கிறார்கள். இதில் என்ன தவறு? என்று என்னாலும் எதிர்-வாதிட முடியும்! ஆனால், என்மனதில் உடனே எழும் கேள்வி "என் வீட்டுப் பெண்களின் பதிவுகளில் எவரேனும் அப்படி கருத்திட்டால்...

        எப்படி இருக்கும்?" என்பதே. முதலில், அதுபோன்ற புகைப்படத்தை சமூக-வலைதளத்தில் பதிய அனுமதிப்பதே?! இயலாத விடயம். வெகுநிச்சயமாய் "புகைப்படத்தை வெளியிடுவது ஒரு பெண்ணின் சுதந்திரம்!" என்பதில் எனக்கு(ம்) எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! என்னுடைய பார்வை; அப்படியொரு புகைப்படத்தை ஒரு பெண் வெளியிடலாமா?! வேண்டாமா??!! என்பதல்ல! அப்பதிவுகளுக்கு; மேற்குறிப்பிட்டது-போன்ற பின்னூட்டங்கள் சரியா?! தவறா??!! நம் வீட்டுப் பெண்களை அப்படி அனுகுவோமா? என்பதே! எனவே, அருள்கூர்ந்து இத்தலையங்கத்தின் மையக்கருவை சரியாய் புரிந்து கொள்ளுங்கள்! இல்லையேல், என்-கருத்துகளும் மேற்குறிப்பிட்ட நகைச்சுவைக் காட்சி போல் ஆகிவிடும்! "ஒரு சிலர்; You look very hot sister!!!"என்று கருத்திடுவதைக்-கூடப் பார்க்க முடிகிறது; அது அசிங்கத்தின் உச்சம்! சரி இதற்கு என்ன செய்யலாம்? என்றால்; கண்டிப்பாக, சம்பந்தப்பட்ட பெண் அப்படிப்பட்ட கருத்துகளை...

        நீக்கவேண்டும்! அதை ஒருபோதும் "பாராட்டாய்" ஏற்றுக்கொள்ளக் கூடாது! தீய எண்ணம்  ஏதும் இல்லாத பின்னூட்டங்கள் இருக்கும் என்பதில் எனக்கு(ம்) உடன்பாடுண்டு. மேற்குறிப்பிட்ட "நம் வீட்டுப் பெண்கள்" பற்றிய கேள்வியும் எழுகிறதே?! நான் மிக-நெருங்கிய உறவுகள்/நட்புகள் தவிர; பிறரின் புகைப்படத்திற்கு "லைக்" கூட இடுவதில்லை. "Sister" என்ற சொல்லை நீக்கிவிட்டு; அப்படி கருத்திடுவதில் எந்த மறுப்பும் இல்லை! ஆனால், அப்படி பலரும் செய்யமாட்டார்கள்! அப்படி செய்தால், கண்டிப்பாக பல பெண்கள் உடனே அக்கருத்துகளை நீக்கிடுவர்! உண்மைதானே?! அப்படியெனில், இப்படிப்பட்ட கருத்துகளில் ஒரு போலித்தன்மை இருப்பது மெய்ப்பிக்கப் படுகிறது தானே?! ஏனிந்த போலித்தன்மை? எவருக்காய் இந்த இரட்டை-நிலை? சரி, இதற்கு என்ன செய்யலாம்? என்றால், என்னளவில் கீழ்வருவதே சரியானது: முதலில் "Sister" என்ற வார்த்தையை சேர்த்து அப்படியொரு கருத்திடக் கூடாது. தங்கை என்பதையே ஒரு புதுக்கவிதையில்...

      தனித்து வரையறுத்தவன் நான்!!! சகோதரி-என அழைக்கப்பட்ட ஒருவரின் புகைப்படம் அழகாய் இருக்கிறது என்று தோன்றினால்; என்னை மன்னித்து விடு பெண்ணே! "என் சகோதரி அழகாய் இருக்கிறாள்!" என்று சொல்வதை/பார்ப்பதைக் காட்டிலும் "என் நண்பி அழகாய் இருக்கிறாள்!" என்று சொல்ல/பார்க்கவே ஆசைப்படுகிறேன் என்று கூறிவிட்டு; என் கருத்தை இடுவேன்.  அப்படி சொல்லலாமா? மற்றவர்கள் புரளி பேசக்கூடுமே?! கேள்விகள் எழும். அப்படியா? சரி, சந்தர்ப்பம் கிடைக்கும் போது தனியாய் சொல்லலாம். மீண்டும்... அப்படி சொல்லலாமா?! அந்த பெண்ணின் மனது காயமடையக் கூடுமே?! வெகுநிச்சயமாய்! ஆனால், நம் மனதில் இருக்கும் அழுக்கை, அந்தப் பெண்ணே தெரிந்துகொள்ளும் போது; ஏற்படும் துயரமும்/ஆற்றாமையும் - இதை விட, பன்மடங்கு பெரிதாய் இருக்கும். அந்தப் பெண் நம், பொது நட்புகளிடம் புலம்புவாளே?! அவர்கள் நம்மை இழிவாகப் பேசுவார்களே?! கேள்விகள் தொடரும்... 

         அதுவும் நிச்சயம்தான்! நம் உறவுகள் கூட அதுபற்றி விவாதித்து பிரச்சனைகள் ஏற்படுமே? ஆம், அதுவும் நிச்சயம் நடந்தேறும்! ஆனால், மனதில் இருக்கும் அழுக்கை விட; அதொன்றும் பெரிய பிரச்சனை இல்லை. மேலும், உண்மையாய் இருப்பது மிகவும் அவசியம்! மிக-மிக அவசியம்!! அப்படி நேரடியாய் சொல்லப்படுவதால்; அந்தப் பெண்ணின் புலம்பலும் சிறிது காலத்திற்கே இருக்கும்! பின், அந்த உறவேக்கூட துண்டிக்கப்படும். அப்படியொரு பொய்த்தன்மை இறுதிவரை இருந்து; ஒருவர் மனதைத் தொடர்ந்து காயப்படுத்துவதோடு மட்டுமல்ல! அந்த உறயையே அது கொச்சையாய் ஆக்கக்கூடும். உண்மை-இல்லாத எந்த உறவும் நீடிப்பது சாத்தியம் இல்லை! நீடிக்கவும் கூடாது!! எப்படிப் பார்ப்பினும், அந்த உறவு நீடிப்பது தவறே! ஒருவேளை, உண்மையைப் பகிர்ந்தும்,  "நட்பெனும் வட்டத்தில்" நீடிக்குமேயானால் - வெகநிச்சயமாக, அந்த உறவு, மிகவும் உன்னதமாய் இருக்கும்! மேற்குறிப்பிட்டது போன்ற கருத்துகளை - நாகரிக-அடையாளம்;

        சிறந்த மேலை-நாட்டு வழக்கம் - என்று நியாயப்படுத்த முயலாதீர்கள்! உடையில் துவங்கி, உணவு வரை; நம் சுயத்தை விட்டு, மேலை நாட்டு மோகத்தில் - அவற்றை பின்பற்றுவது; ஆரம்பத்தில் வேண்டுமானால், பெருத்த சந்தோசத்தைக் கொடுக்கலாம். ஆனால், அது நம் சுயத்தை அழித்துவிடும்! பின், அது பல அழிவுகளுக்கும் வித்திடும். தேவையானவற்றில் மட்டும் மேலை-நாட்டு மோகம் இருக்கட்டும். எந்த நிலையிலும்; வேறொருவரை அண்ணனென அழைக்காத/தன்னையும் எவரும் தங்கை-என "எளிதில்" அழைக்க அனுமதிக்காத பெண்களை நானறிவேன். அவர்களுடன், நான் வாதம்-கூட செய்திருக்கிறேன்; ஆனால், இப்போது யோசிக்கும்போது - அவர்களின் நிலைப்பாட்டில் உள்ள "போலித்தன்மை" குறித்த பயம் புரிகிறது. உண்மையும்/சுயமும் தான் ஒரு மனிதனின் அடிப்படை! அதை மறுத்து/மறைத்து; நாம் செய்யும் எதுவும் பாதகத்தையே விளைவிக்கும். இது என்னுடைய பார்வை மட்டுமே...

மாறாய்; இது - அ"றி"வுரை இல்லை! அ"ற"வுரையும்(கூட) இல்லை!!

குறள் எண்: 0037 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 004 - அறன் வலியுறுத்தல்; குறள் எண்: 0037}



அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

விழியப்பன் விளக்கம்: பல்லக்கைத் தூக்குவோர் மற்றும் அதில் பயணிப்போரை ஒப்பிட்டு - இதுதான் அறவழி என வரையறுப்பது வேண்டாம்.

(அது போல்...)

தண்டனைப் பெறுவோர் மற்றும் தண்டனையை அளிப்போரை ஒப்பிட்டு - இதுதான் சரியென என நிர்ணயித்தல் தவறானது.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், செப்டம்பர் 07, 2015

குறள் எண்: 0036 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 004 - அறன் வலியுறுத்தல்; குறள் எண்: 0036}


அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது 
பொன்றுங்கால் பொன்றாத் துணை

விழியப்பன் விளக்கம்: நாளை ஆலோசித்து செய்யலாம் என்றெண்ணாமல், இன்றே செய்யும் அறமே; நாம் இறக்கும் காலத்தில், இறவாத் துணையாகும்.

(அது போல்...)

முதிர்ச்சிக்காக காத்திராது, நம் குழந்தைகளின் குறைகளை அவ்வப்போது களைதலே; அவர்களின் வருங்காலத்தை வளமாக்கிட உதவும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, செப்டம்பர் 06, 2015

குறள் எண்: 0035 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 004 - அறன் வலியுறுத்தல்; குறள் எண்: 0035}



அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
இழுக்கா இயன்றது அறம்

விழியப்பன் விளக்கம்: பொறாமை, பேராசை, கோபம், தீய-வார்த்தைகள் - இவை நான்கையும்; கடினப்பட்டு விலக்கிவைப்பதே அறமாகும்.

(அது போல்...)

மண், பொன், மது, மாது - இந்நான்கு ஆசைகளையும்; சிரமப்பட்டு விலக்கிவைப்பதே, மனிதத்தை நிலைநிறுத்தும் வழியாகும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, செப்டம்பர் 05, 2015

குறள் எண்: 0034 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 004 - அறன் வலியுறுத்தல்; குறள் எண்: 0034}


மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் 
ஆகுல நீர பிற

விழியப்பன் விளக்கம்: எல்லாவற்றிலும் அறத்துடன் இருப்பதால் மட்டுமே உள்ளத்தூய்மை அடையமுடியும்; மற்றவை ஆரவாரத் தன்மையுடையவை.

(அது போல்...)

எந்தநிலையிலும் நீதி/நேர்மை கடைபிடிப்பவர்களே சிறந்த ஆட்சியாளர்கள் ஆவர்; மற்றவர்கள்  வாய்ச்சொல் வீரர்களாவர்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, செப்டம்பர் 04, 2015

குறள் எண்: 0033 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 004 - அறன் வலியுறுத்தல்; குறள் எண்: 0033}

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்

விழியப்பன் விளக்கம்: செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும், காரணமேதும் கற்பிக்காமல்; இயன்ற அளவில், தவறாமல் அறச்செயல்களைச் செய்யவேண்டும்.
(அதுபோல்...)
இருக்கும் உறவுகள் அனைத்திலும், குறைகளேதும் சொல்லிடாமல்; முடிந்த மட்டும், தவறாமல் அன்பைப் பேணவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை