*******
"கும்பிடறேன்பா" - என் நெருங்கிய உறவு மற்றும் நட்பு வட்டாரத்திற்கு இதன் முழு அர்த்தமும் தெரியும்; அவர்கள், இந்த தலைப்பை படித்தவுடன் கண்டிப்பாய் சிரி(த்திரு)ப்பார்கள். இதில், நான் செய்த (கண்டிக்கத்தக்க) தவறுகளையும் (சேட்டைகள்), அதனால் என் தந்தை என்னிடம் கடுமையாய் நடந்த தருணங்களையும் "நடுநிலையோடு" விளக்கியிருக்கிறேன். இது என் தந்தை தவறானவர் என்றோ, அல்லது நான் போக்கிரி என்றோ சொல்வதற்காய் அல்ல. ஒரு மகன் (/மகள்) அளவுக்கதிகமான சேட்டை செய்யவும் கூடாது; அதே போல் தந்தையும் (எக்காரணம் கொண்டும்) தன்னிலை தவறக் கூடாது என்பதை உணர்த்தவே. இப்போது நான் ஒரு தந்தை; என் மகள் அவள் வயதிற்கே உரிய (உரிமையான) சேட்டைகளை செய்து கொண்டிருக்கிறாள். அவளை, நான் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை எனக்கு நானே சொல்லிக்கொள்வதற்கும்(கூட) இந்த முயற்சி. என்னப்பன் என்னை அடிக்கும் போது கைகூப்பி செய்கையால் மட்டுமல்லாது, வாய் திறந்தும் சொல்லும் தாரக மந்திரம் (அழுகை கலந்த அலறல்!!!) தான் "கும்பிடறேன்பா" - மூன்று, நான்கு முறை தொடர்ச்சியாய் சொல்வேன்; எப்படி நம்ம மந்திரம்? நன்றாக இருக்கிறதா?? முதலில், "வலி" பொறுக்க முடியாதாதால் "கும்பிட" ஆரம்பித்து, பிறகு பாதி அடி விழும்போது "கும்பிட" ஆரம்பித்து, முடிவில் அவர் அடிப்பதற்கு முன்பாகவே "கும்பிட" ஆரம்பித்தேன். அவரும், முதலில் "கும்பிட" ஆரம்பித்ததும் விடாமல் அவர் "கை" வலிக்கும் போது அடியை குறைக்க ஆரம்பித்து, பிறகு போனால் போகட்டும் என்று பாதியில் விட்டு, முடிவில் "கும்பிட்டவுடன்" அடிக்காமலே விட்ட நிகழ்ச்சியும் உண்டு.நான் முதலில் "கும்பிட" ஆரம்பித்தது கிணற்றில் சென்று குளித்ததற்காய் நிகழ்ந்தது என்று நினைக்கிறேன். குளிப்பது என்றால், சாதா குளியல் அல்ல; "எருமை குளியல்" என்பார்களே! அது போல் மணிக்கணக்கில் தான் (ஊறிக்)குளிப்பது வழக்கம். ஒவ்வொரு முறையும் அடி வாங்கிக் கொண்டு "இனிமேல், போகமாட்டேன்" என்று அவசர வாக்குறுதி கொடுத்து சில முறைகள் சென்றது. பின், என் தந்தையின் பலகீனத்தை உணர்ந்து (எப்படி எல்லாம் அந்த வயதிலேயே யோசித்திருக்கிறேன்!) ஒரு நாள் "அம்மா மேல் சத்தியமா" இனிமேல் போகமாட்டேன் என்றேன்; அடி விழுவது நின்றது. இது சில நாட்கள் தான் பலித்தது. இந்நிலையில், ஒரு வழியாய் நான் கண்டுபிடித்தது (வேறெவரும் செய்திருந்தால், "காப்புரிமையை" பகிர்ந்து கொள்ளலாம்) தான் "கும்பிடறேன்பா". இது ஓரளவுக்கு அல்ல; மிகவும் அதிகமாகவே எனக்கு உதவியது. மிகக் குறைந்த (?!) நிகழ்வுகளை உங்களுக்கு சொல்கிறேன். ஒரு முறை நானும், என் அம்மாவும் "மாடியில்" வற்றல் வார்த்துக் கொண்டிருக்கும்போது, எதற்கோ அவரை அறைந்துவிட்டேன்; அவரின் தங்க "தோடு" அறுந்துவிட்டது. எனக்கு என் அப்பாவின் "உதை" தான் நியாபகத்திற்கு வந்தது; உடனே, என் அம்மாவிடம் திருமணமாகி 15 வருடங்கள் ஆகிவிட்டது; அதனால் தான் அது மக்கிவிட்டது (என்னுடைய அன்றைய அறிவின் படி "தங்கம்" மக்கும்) என்றேன். அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது! அவரும் சிரித்துக்கொண்டே இந்த நிகழ்ச்சியை என் தந்தையிடம் சொன்னதால், ஒரு "கும்பிடறேன்பா" மீதமாகிவிட்டது. ஆனால், என் அம்மாவை "நான் அறைந்தது தவறு" என்ற கோணத்தில் எவரும் அந்த நிகழ்ச்சியை பார்த்ததாய் தெரியவில்லை!
ஒரு முறை, என் அம்மாவை ஒரு "அசிங்கமான" சொல், சொல்லி திட்டிவிட்டேன்; அது "பொங்கல்" பண்டிகை நேரம்; என் தந்தை தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு அப்போது தான் வீட்டிற்கு வந்தார். என் அம்மா வாசலில் வைத்தே, நிகழ்ந்ததை சொல்லிவிட்டார்; உடனே, மாட்டிற்கு வாங்கி வந்த "மூக்கணாங் கயிறால்" விழுந்தது அடி. மறுகணம், மூக்கணாங் கயிறு என் "முதுகுக்கயிறாய்"! ஆம் "தடமாய்"; அப்புறம், "கும்பிடறேன்பா" மந்திரம்! - ஒரு வழியாய் விட்டுவிட்டார். அதன் பின், அவர் என் முதுகை தடவி கொடுத்து, "எண்ணெய்" தடவி, நீவிவிட்டது வேறு விசயம்! ஆனாலும், "மூக்கணாங் கயிறு" அடி மிகவும் கொடியது. பின் ஒரு சமயம், நானும் என் அண்ணனும் "ஏலம் விடப்பட்ட" ஒரு குட்டையில் மீன் பிடிக்க சென்றுவிட்டோம். என் பாட்டனார் (என்னப்பனின் அப்பன்) சுற்றிலும் இருந்த கிராமங்களுக்கு எல்லாம் "மனியக்காரர்"; அதனால், மீன் பிடித்தது தவறு/ அவமானம் என்பதாய் எண்ணி என் தந்தை "பின்னி" எடுத்துவிட்டார். இந்த முறை "கௌரவப்" பிரச்சனையால் கும்பிடவில்லை! ஆம்!! என் அண்ணன் கும்பிடாத போது, நான் ஏன் கும்பிட வேண்டும்?. பிறகு ஒரு நாள், பள்ளியில் (அதை ஏன் கேட்கிறீர்கள்? அங்கும் அவர் தான் வகுப்பாசிரியர்; பாருங்கள் என் சோகத்தை!) நானும், என் நண்பனும் குடத்தில் தண்ணீர் எடுத்து வர சென்றிருந்தோம் (அன்று எங்கள் முறை). நூறடி தூரம் உள்ள குழாயில் இருந்து தண்ணீர் கொண்டு வர, ஒரு மணி நேரமாகிவிட்டது; பின்னே? "கோலி-விளையாட்டு" ஆடிவிட்டு வரவேண்டாமா? அவ்வளவு தான், என்னப்பன் "ருத்ர தாண்டவம்" ஆடி விட்டார்; என் நண்பனை, ஒரு அடியோடு விட்டுவிட்டு, என்னை முட்டிப் போடவைத்து அடித்தது மட்டுமல்லாமல், "செங்கல்" எடுத்து அடிக்க வந்துவிட்டார். ஒரு வழியாய், உடனிருந்த ஆசிரியர்கள் "கும்பிடாத" குறையாய் அவரை சமாதானம் செய்துவிட்டனர். நல்லவேளை, செங்கல்(???) சிதறாமல் தப்பித்தது!
வேறொரு முறை (தவறு என்னவென்று நினைவில்லை), விறகு வெட்டிக்கொண்டிருந்தவர் அதே "கோடறி"யால் என்னை வெட்ட வந்துவிட்டார்; "மரண" பயத்தில் எங்கே "கும்பிடுவது?". எப்படியோ, அருகிலிருந்த என் தாய் "கும்பிட்டு" (உண்மையாய்) என்னைக் காப்பாற்றி விட்டார். பாருங்கள்! நான் மட்டுமல்லாது எத்தனை பேர் கும்பிட்டு என்னைக் காப்பாற்றி இருக்கிறார்கள்! இவை எல்லாம், நடந்த பின் தான், என்னப்பன் அடிக்கும் முன்னே "கும்பிடு போட்டு" அடிக்காமல் வைத்த நிகழ்ச்சி நடந்தது. நான் பத்தாம் வகுப்பு முடித்தவுடன், என் தந்தைக்கு பனி மாற்றம் கிடைத்து "செங்கல்பட்டு" நகருக்கு சென்றோம் அனைவரும். அங்கு சென்ற புதிதில், என் அம்மா என்னை கடைக்கு சென்று ஏதோ வாங்கி வரச் சொன்னார்; நான் மிதிவண்டி எடுத்துக்கொண்டு வாங்கி வரப்போனவன், அருகில் இருந்த மைதானத்தில் "கிரிக்கெட்" ஆடுவதை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். எவ்வளவு நேரம் ஆனது என்றே தெரியவில்லை; வீடு வந்தால், என் தாயும், தமக்கையும் அழுது கொண்டிருக்கிறார்கள். என்னவென்றால், புதிய ஊரில் நான் தொலைந்துவிட்டதாய் எண்ணி/ நம்பி அழுது கொண்டிருக்கிறார்கள்; எனக்கு அதிர்ச்சி! அதைவிட பேரதிர்ச்சி!! என் தந்தை (மிகக் கோபமாய்) உடன் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருடன் என்னை தேடிச் சென்றிருப்பதாயும், அவர் வந்தால் என்னை தொலைத்துவிடுவார் என்றும் கூறினர். எனக்கு (அவர்களுக்கும் தான்) என்ன செய்வது என்று தெரியாமல் என் தந்தையின் வருகைக்காய் "மிரட்சியோடு" காத்திருந்தோம்.
என் தந்தை உள்ளே நுழைந்தவுடன் பேரொலியுடன் "கும்பிடறேன்பா" என்று ஆரம்பித்து, கும்பிடுவதை நிறுத்தவே இல்லை!!!. என் தந்தை அடிக்கவில்லை; மாறாய், அழுதுவிட்டார்; என் தந்தை அடிக்காமலேயே நானும் அழுதுவிட்டேன் - என் தாயும், தமக்கையும் கூட அழுதுவிட்டனர். என் தந்தை, நான் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் அழுதிருக்கிறார்; அவர் என் மேல் வைத்திருந்த பாசத்தின் "உச்சபட்ச" வெளிப்பாடு அது. அதன் பின், நான் "கும்பிடறேன்பா" என்பதை சொன்னதே இல்லை!; அது மாதிரி சொல்வதற்கு வாய்ப்பும் வரவில்லை. அதன் பின் பள்ளி இறுதியாண்டு, கல்லூரி என்று நானும் என் வளர்ச்சிக்கான பாதையில் செல்ல ஆரம்பித்துவிட்டேன். நான், ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல் இதை என் தந்தையைப் பற்றி குறை கூறுவதற்காய் எழுதவில்லை. "தந்தை மகற்காற்றும் உதவி" எனும் "குறள்" போல் நான் இந்த உயரம் அடைவதற்கு அவரே "ஏணியாய்" இருந்தார். நான், முனைவர் பட்டம் பெற எவ்வளவோ ஆண்டுகள் (வீணாக)ஆனது; நான் எந்த ஒரு "ஊக்கத்தொகையும்" இல்லாமல் தான் அந்த இலக்கை அடைந்தேன்! ஒரு நாள் கூட "இப்படி படித்துக்கொண்டே இருக்கிறாயே, எப்போது வேலைக்கு செல்வாய்?" என்று கேட்டதில்லை. பல மாதங்கள், அவரின் மொத்த சம்பளத்தையும் அதை அவர் வாங்கி வந்த சம்பள "உறை"யுடன் வாங்கி சென்றிருக்கிறேன். அவர், எப்படி குடும்ப செலவை சமாளிப்பார் என்று எப்போதும் யோசித்ததில்லை; அதில், ஒரு பகுதியை தவறான காரியங்களுக்கும் பயன்படுத்தி இருக்கிறேன்!.
எப்படிப்பட்ட பொருளாதாரப் பிரச்சனை இருந்தும், எங்கள் மூன்று பேரையும் அவர் எந்த குறைவின்றியும் தான் வளர்த்தார். அதனால், அவரை குறை கூறவில்லை/ கூறவும் முடியாது. அது, அவர் நான் "நன்றாக வர வேண்டும்" என்ற அக்கரையில் செய்தது என்று உணர முடிகிறது. நான் சொல்ல முனைவது, அதுதான் அம்மாதிரி செயல்கள் செய்வதற்கு சரியான வயது என்று வாதிட்டால், என் தந்தை ஏன் அத்துணை கோபம் அடைந்தார்? ஏன் அவ்வளவும் மோசமாய் தண்டித்தார்??. அதிலும், ஒரு நாள் கூட "படி" என்று கட்டாயப் படுத்தாத தந்தை; அவர் சொன்னதெல்லாம் "நீ நன்றாக படித்தால், நாளை நன்றாக இருப்பாய்" என்பது மட்டும் தான். இத்தனை முற்போக்கு சிந்தனை கொண்ட அவர், ஏன் அவ்வாறு செய்தார்? என்று எண்ணுகையில் எனக்கு ஒன்று விளங்குகிறது. அவர் என் மேல், மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்திருக்கிறார். ஆனால், என்னுடைய செய்கைகளைக் கண்டு எங்கே நான் அந்த நம்பிக்கையை வீனடித்துவிடுவேனோ என்று பயந்திருக்கிறார் என்று புரிகிறது; என்னுடைய சில செயல்கள் என் உயிரை முடித்துவிடும் அளவுக்கு கூட இருந்திருக்கின்றன - அது கூட அவருக்கு பயத்தையும், தன்னிலை தவறும் சூழ்நிலையையும் கொடுத்திருக்கக் கூடும். ஒரு போதும் அவர் என்னை அடித்ததற்கு பின், என்னைத் தடவிக் கொடுத்து சமாதானம் செய்யத் தவறியதே இல்லை; நானும், உடனே சமாதானமாய் சென்றிருக்கிறேன். ஒரு நாள் கூட, கோபத்தால் என் தந்தையிடம் பேசாது இருந்ததில்லை!; அவ்வாறு இருக்கவும் முடியாது!!. இது, எங்களுக்குள் - எங்களுக்கே தெரியாமல் இருந்த ஒரு "உறவு வலிமையை" உணர்த்துவதாய் படுகிறது.
எனக்கு இப்போது இருக்கும் கவலை எல்லாம், என் மகளை அவளின் வயதில் இருந்து அவளைப் பார்த்து, அவள் செய்யும் சேட்டைகளை பொறுத்தல் வேண்டும் என்பது தான். வேதனையான விசயம் என்னவென்றால், நான் என் மகளை அவளுக்கு "இரண்டு" வயது முடிவதற்குள்ளேயே, "இரண்டு முறை" அவள் கன்னத்தில் அறைந்திருக்கிறேன் என்பது தான். முதலில், அவள் எப்போதும் "தொலைபேசியின்" இணைப்பை துண்டிக்கிறாள் என்ற அற்ப விசயத்திற்காய் அறைந்தேன்; அதன் பின் அவள் தொலைபேசியின் அருகே சென்றது கூட இல்லை. இரண்டாவது, ஒரு நாள் "குழந்தைகள் பகல் காப்பகத்தில் (creche)" இருந்து அவளை அழைத்து வரும்போது நடந்தது. ஒரு நாள் அவள் காப்பகத்தில் இருந்த "விளையாட்டு பொருளை" எடுத்துக்கொண்டு வருவேன் என்று அடம்பிடித்தாள்; அவ்வாறு ஏற்கனவே நடந்து, பின் அடுத்த நாள் திரும்ப கொடுத்திருக்கிறோம். ஆனால், அன்றிருந்த நிர்வாகி அதை கோபமுடன் பிடுங்க முயன்றார்; இதைக்கண்டு வெறுப்புற்ற/ பதட்டமடைந்த நான் செய்வதறியாது, என் மகளை அறைந்துவிட்டேன்! எத்துனை "முட்டாள்-தனமான" செய்கைகள் இவை. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்காய் என்னை "மன்னித்து விடு, மகளே!"; இனி, இத்தவறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன். இக்கட்டுரையை முடிக்கும்போது, அடுத்த முறை என்னப்பனிடம் பேசும்போது "அவரப்பன்" அவரை எப்படி அணுகினார் என்று வினவவேண்டும் என்று தோன்றியது; ஏனோ, இதுவரை அவரிடம் இது பற்றி விவாதித்ததில்லை.
பின்குறிப்பு: இறைவன் அல்லது இயற்கையின் நிந்தனையா என்று தெரியவில்லை!; என் மகள் மழலை-மொழி பேசும்போதே நான் (மட்டுமல்ல; எவரேனும்) கடிந்து கொண்டால் "ச்சாச்சி" என்று சொல்லப் பழகிக் கொண்டாள்; அதாவது, அவளின் மொழியில் "சாரி (SORRY)" என்று சொல்லப் பழகிக்கொண்டாள்; இப்போது, இன்னமும் தெளிவாய் சொல்கிறாள். ஒருவேளை, நான் அவள் "கும்பிட" ஆரம்பிக்கும் முன்பே என்னை சரி செய்து கொள்ள வேண்டும் என எண்ணுவது போல், அவளும் எனக்கு "அடிக்கும்" எண்ணம் வரும் முன்னே அவளை சரி செய்து கொள்ள முயன்று கொண்டு இருக்கிறாளோ???