வெள்ளி, நவம்பர் 11, 2011

எம்மகள் (அவள் பெயரும்) தோன்றிய கதை...

("எம்மகள்" என்னவளின் கருவில்)
*******

     என் மகள், எல்லாத் தந்தையையும் போல் என்னையும் ஒரு "ஆனந்தத் திமிருடன்" நடக்கச் செய்தவள்; பிறந்தது முதல் மட்டுமல்ல; என்னவளின் கருப்பையில் கருவுற்றது முதலே. மேலே காணப்படும் புகைப்படங்கள் அவள் கருவாய் என் மனைவி (என்னவள்) "வேனில்"-இன் கருவறையில் இருந்த போது எடுக்கப்பட்டவை. எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது அந்த நாள், 2009 ஆம் ஆண்டு, "பிப்ரவரி" மாதம் 25 ஆம் நாள். எங்களுக்கு பிறக்கப் போகும் உயிர் ஒரு "பெண்" என உணர்ந்த நாள். என்னவள் இன்னுமொரு "தாயை" இந்த உலகுக்கு ஈயப் போகிறாள் என்று உணர்ந்த நாள். இந்திய நேரப் படி சுமார் 17:40 மணி இருக்கும் - நாங்கள் அதை உணர்ந்த நேரம். அந்த கருவின் உறுப்புகள் சரியாக இருக்கிறதா என சரிபார்க்க மருத்துவர் "எம்மகளின்" கால்களை ஒரு மருத்துவக் கருவி கொண்டு, மெதுவாய்(தான்!!!) தட்டுகிறார், உணர்ச்சிப் பெறச்செய்து அவைகளின் செயல்பாட்டை சரிபார்க்க! அவள் கால்களை அசைத்த இன்ப-வலி தந்த அனுபவத்தில் என்னவள் மகிழ்ச்சியுடன் சிணுங்குகிறாள்!! நானோ மருத்துவர் எங்கள் மகளின் கால்களை அடிக்கிறாரே என்ற உணர்ச்சி கலந்த மிரட்ச்சியில் கண் கலங்குகிறேன் (அது ஒரு சோதனை என்பது தெளிவாய் தெரிந்திருந்தும்). நம்புங்கள்!!! இதை மீண்டும் நினைவு படுத்தி எழுதும் போது என் கண்கள் இப்போதும் கலங்குகின்றன. வழிந்து வரும் கண்ணீரைத் துடைத்தபடி தான் இதை "தட்டச்சு" செய்கிறேன்.

         மனித-இனம் மிக அதிசயமான உணர்ச்சிகளை தன்னுள் கொண்டிருக்கும் உயிரினம். அதிலும் நான் எளிதில் உணர்ச்சி வயப்படக் கூடியவன் என்பதால், இப்போதும் அந்த நிகழ்வு என்னை கண்கலங்கச் செய்துவிட்டது! இது என்னுடையை மகிழ்ச்சியின் அடையாளமாய், அதன் வெளிப்பாடாய் கூட இருக்கலாம். அது தான் எம்மகளின் "இருதயம்" துடிக்கும் ஓசையை தெளிவாய் கேட்ட தினமும்!! ஓரிரு நிமிடத் துளிகள் என் இருதயத்துடிப்பு நின்றுவிட்டதாய் உணர்ந்த தருணம். என்னவள், ஒரு தாய் என்பதால் அவள் மிகவும் கொடுத்து வைத்தவள்! ஏனெனில் இதை அவள் உடல்-ரீதியாகவும் உணர்ந்தாள்; எனக்கு கிடைத்தது இதை உணர்வு பூர்வமாய் உணர மட்டும் தான். இது இயற்கை தானெனும், சில சமயங்களில் இதன் பால் என்னவள் மீது பொறாமைப்பட்டது கூட உண்டு. பரிசோதனை முடிந்து, பரிசோதனைக் கூடத்தை விட்டு வெளியில் வரும் போது இந்திய நேரப்படி சுமார் 18:00 மணி. வெளியில் வந்தவுடன், நான் எதிர்ப்பார்த்தது போல் ஒரு பெண் குழந்தையை கருவுற்றிருக்கும் என் மனைவியை கட்டியணைத்து  நன்றி சொன்னேன் (வார்த்தையற்று தான்!). உடனே, நாங்கள் இருவும் இந்தியாவில் இருந்த/ இருக்கும் எங்களிருவரின் தாய்-தந்தையர்க்கு இம்மகிழ்ச்சியான செய்தியை சொன்னோம்; அவர்களின் சந்தோசமும் எங்களை சேர்ந்து கொள்ள, நாங்கள் இருவரும் "அதி-மகிழ்ச்சி" யாய் இருந்த தருணங்களில்  ஒன்று அது.


       இதற்கு முன் - கருதரித்த மூன்றாவது மாதத்திலேயே, நானும் என்னவளும் குழந்தைக்கு என்ன  பெயர் வைப்பதென விவாதிக்க ஆரம்பித்து விட்டோம்! நான் கருவிலிருப்பது "மகள்" என்றும், அவள் இல்லை "மகன்" என்ற அடிப்படியிலும் விவாதிக்க ஆரம்பித்தோம். பின், யார் பெயரை தேர்ந்தெடுப்பது என்ற உணர்ச்சிப் (உரிமைப்) போராட்டம் எங்களுக்குள் ஆரம்பித்தது!! ஒரு வழியாய், மகள் பிறந்தால் நான் பெயர் வைப்பது எனவும், மகன் பிறந்தால் அவள் பெயர் வைப்பது எனவும் முடிவு செய்தோம். இது பற்றி, ஒருவருக்கொருவர் எங்களுக்கு பிடித்த புதுமையான பெயர்களை பரிமாறி அடுத்தவரின் ஆலோசனை கேட்க ஆரம்பித்தோம். இவ்வாறு ஓரிரு தினங்கள் கடந்த பின், என்னவள், கருவிலிருப்பது மகள் தான்; நீங்களே முடிவு செய்யுங்கள் என்றாள். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டாலும், எனக்கு வியப்பாக (இன்னமும் தான்) இருந்தது. இந்த நிகழ்வு நடந்து இரண்டு மாதம் கழிந்த பின் தான் எங்களுக்கு கருவிலிருப்பது, மகள் என்றே (மேற்கூறியவாறு) உறுதியாயிற்று. அப்படியாயின், எப்படியவள் அவ்வளவு தீர்க்கமாய் சொன்னாள்? ஒரு வேலை சுமந்தது அவளாதலால், அவளுக்கு உணர்த்தப் பட்டிருக்குமோ என்னவோ! இது கண்டிப்பாய் அவள் எனக்கு விட்டுக் கொடுத்த பல செய்கைகளில் தலையாயமானது. உணர்வுப் பூர்வமாய் உணரும் எனக்கே பெயர் வைக்கவேண்டும் என துடிக்கும் போது (பெண்ணோ, ஆணோ! அது பிறகு), அதை உடல்-ரீதியாயும் உணர்ந்த அவள் எப்படி விட்டுக் கொடுத்தாள்?!. 

       இதை நான் எப்படி அவளுக்கு திருப்பி தருவேன்? நன்றி எனும் வார்த்தை மூலமா?? அது அவள் செய்ததற்கு இணையாகி விடுமா??? அல்லது இணையாகத் தான் ஏதும் செய்து விட முடியுமா???? என்னால் முடிந்த ஒரு சிறு பரியுபகாரமாய் ஒன்று செய்தேன்; என்னவென்று பின்னால் சொல்கிறேன். ஆனால், இந்த அனுமதிக்கு பின்னால் ஒரு நிபந்தனையை வைத்தாள்; அது அடுத்து "மகன்" பிறப்பின் (நினைவில் கொள்க; அந்த தருணத்தில் எங்களுக்கு அப்போது கருவிலிருந்தது என்ன பாலினம் என்றே தெரியாது) நான் தான் பெயர் வைப்பேன் என்றனள். சரி என்று முதலில் ஒப்புக் கொண்டு, பின் அவளை சீண்டினேன்; அப்படியாயின், அடுத்ததும் மகளே இருந்தால் மீண்டும் நான் தான் பெயர் வைப்பேன் என்றேன். வெகுந்தெழுந்துவிட்டாள் (விளையாட்டாய் தான்!), பின் தன் கருத்தை திருத்தி சொன்னாள்; அடுத்தது எந்த குழந்தை பிறப்பினும் நான் தான் பெயர் வைப்பேன் என்றாள்; சரி என்று நான் ஒப்புக் கொண்டேன். இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்! அது என்னவள், அவளின் உரிமைகளை எவர்க்கும் விட்டுக் கொடுக்க மாட்டாள் என்பது! அது நான் என்றல்ல; எங்கள் மகளே ஆனாலும் கூட!!. ஆனால், இதை காலம் கடந்து தான் உணர ஆரம்பித்து இருக்கிறேன்; இன்னமும் முழுமையாய்  உணர்ந்து என்னுள் வாங்கிக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்; ஆனால், அதற்கு எனக்கு சில இழப்புகள் தேவைப்பட்டன. பரவாயில்லை! இனி வரும் இழப்பையாவது தடுக்கலாம் அல்லவா? "உரிமை" என்பதின் முழு அர்த்தத்தையும் எனக்கு உணர்த்தியவள்.   

           தினமும் ஒரு சில பெயர்களை கலந்தாலோசிக்கச் செய்தோம். ஒரு எண்ணம் வந்தது எனக்கு! தீர்க்கமாயும் வந்தது!! அதன் பால், நான் என்னவளிடம் இரண்டு நிபந்தனைகளை சொன்னேன், பெயரை தீர்மானிக்க! முதலில், தமிழின் சிறப்பு எழுத்துக்களாம் "ழ" கரமும், "ய" கரமும் (அல்லது அவைகளின் துணை எழுத்துக்கள்) இருக்க வேண்டும் என்பது. இரண்டாவது, இதுவரை எவர்க்கும் சூட்டப்படாத பெயராய்  இருக்க வேண்டும் என்பது. இருவரும் பொறுப்பின் சுமை அதிகமானதை உணர்ந்தோம்; நான் என்னவளின் உதவியை கோரினேன். அவள் உதவி செய்வதாய் ஒப்புக் கொண்டாள்; எனினும், மீண்டும் அவளை சீண்டினேன்; நானும் அடுத்தக் குழந்தைக்கு பெயர் வைப்பது உதவி செய்வேன் என்றேன். மீண்டும் வெகுந்தெழுந்தாள் (இந்த முறை விளையாட்டாய் தானா? என தெரியவில்லை!!!). இன்னமும் பாலினம் தெரியாத நிலையில், மகள் என்று இருவரும் மனமொப்ப எண்ணி பெண்(பெயராய்) பெயரை சிந்திக்க ஆரம்பித்தோம். அவள் சொன்னவை எனக்கும், நான் சொன்னவை அவளுக்கும் - ஒரு முதலீர்ப்பை அளிக்காததால் மீண்டும், மீண்டும் சிந்திக்கலானோம். ஒரு வாராய், ஒரு நாள் எனக்கு உதித்தது அந்த புதுப்பெயர்; மற்றும் புகழ்ப்பெயர். சிந்தித்ததும், என்னால் முடிந்த அளவிற்கு இணைய தளத்தில் துழாவினேன்; அந்த பெயர் உபயோகத்தில் இருப்பதாய் எந்த சான்றும் எனக்கு கிடைக்கவில்லை; என் அறிவுக்கு எட்டிய வரையில் "அப்பெயர்" எங்கள் மகளுக்கு சூட்டும் வரையில் எவர்க்கும் சூட்டப்படவில்லை; அதன் பின் (இது வரை) எவராவது சூட்டியுள்ளனரா எனவும் தெரியவில்லை!.

           அந்த அற்புதமான, அமிழ்தினும் இனிய பெயர் "விழியமுதினி". அன்றிரவு (வேலை முடித்து வீடு வந்தபின்) என்னவளிடம் இதை தெரிவித்தேன்; அவள் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் - பிரமாதம்!  என்றாள். இதனிடையில், இந்த பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது சற்று நீளம் என்பதால், வேறு ஒரு பரிமாணத்தில் அந்த பெயரை யோசித்தேன்; அது "விழியினி"; இதுவும் நன்றாக இருப்பினும், (சரியாக நினைவில்லை) ஏதோ ஒரு பழந்தமிழ் பாடலில் "விழியில் நீர்போல்" எனப்பொருள் படும்படியாய் "விழியிநீ ர்போல்" என்று வருவதை அறிந்தேன். இரண்டும் ஒன்றல்ல என தெளிவு பெரினும், அதை வேண்டாம் என முடிவெடுத்தேன். இப்படிதான் எங்கள் மகளின் அற்புதமான பெயர் தோன்றிற்று. இதை, முதன் முதலில் நான் தமிழில் எழுதிப் பார்த்தபோது அடைந்த சந்தோசம் சொல்லில் விளக்கமுடியாது. உடனடியாய், என் மகளைச் சுமந்து கொண்டிருப்பவள், அவளை சுமந்தவரிடம் கூறினாள்; எங்கள் சந்தோசம் அவர்களையும் சூழ்ந்து கொண்டது. எங்களின் இன்னுமொரு "அதி-மகிழ்ச்சி" யான தருணம் அது. சரி! பெயர் முடிவாயிற்று; பின் வந்து தொற்றிக் கொண்டது அந்த பயம் எங்களை; அதுவும் (வழக்கம் போல்) முதலில் என்னை தான் - அது பிறப்பது பெண் இல்லையெனில் என்னாவது? ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டு, நாட்களை கடத்திக் கொண்டு இருந்தோம், இறுதியாண்டு தேர்வெழுதிவிட்டு முடிவுக்காய் காத்திருக்கும் மாணாக்கர்கள் போல்! எங்களின் மனமொத்த கருத்து போல், அந்த முடிவு (மகிழ்ச்சியாய்) வந்ததது,  முதல் பத்தியில் விளக்கியது போல்.

          சரி, பெயரின் சிறப்பு பற்றி இப்போது பார்ப்போம். என் மகளின் பெயரை, உருவாக்கியவன் என்ற முறையில், நான் கொடுத்த விளக்கம் "இனிமையான அமிழ்தைப் போன்ற கண்கள்" என்பது. "விழியமுதினி" என்ற பெயரை உற்று நோக்குங்கள்! அதில் "ய" கரம் தவிர அனைத்து எழுத்துக்களும் "கொம்புடன்" கூடிய துணை எழுத்துக்கள்! எனக்கு தெரிந்து ஒரு பெயரில் இவ்வளவு அதிகமான சதவிகிதத்தில் "கொம்புடன்" கூடிய துணை எழுத்துக்களை நான் கண்டதில்லை; இன்னும் "விழியினி" என்று வைத்திருப்பின், இது நூறு  சதவிகிதமாய் இருந்திருக்கும். இதை, என்னப்பனிடம் (அவர் ஒரு தமிழ் புலவர்) தெரிவித்தேன்; அவரின் விதை தான் நான் எனினும் அவர் அளவளாவிய மகிழ்ச்சியடைந்து என்னை பாராட்டினார். அதைக் கேட்டு "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்..." என்ற குறள் போல், என் மகள் "கருவான பொழுதினும் பெரிதுவந்தேன்"! இப்பெயர் உருவாக்கியதற்காய் எனக்கு கிடைத்த அடுத்த நிலை அங்கீகாரம் இது! இதற்கெல்லாம் உச்சமாய் எனக்கு கிடைத்த அங்கீகாரம், பின் வருவது.  "பாவேந்தர்" பாரதிதாசன் "விழி" என்ற வார்த்தையை மிகவும் நேசித்திருப்பதை(தாய்) அவரின் படைப்புகள் மூலம் உணர்ந்தேன். என்னவள் "பாவேந்தர்" பாரதிதாசனின் "மகள் வயிற்றுப் பெயர்த்தி", அதாவது "கொள்ளுப் பெயர்த்தி". ஆகையால், என் மகள் "பாவேந்தர்" பாரதிதாசனின் "எள்ளுப் பெயர்த்தி". இது எப்படி ஒன்றி வந்தது என தெரியவில்லை! பெயர் வைத்து கிட்டத்திட்ட ஓராண்டு கழித்து என் கவனத்திற்கு வந்தது இது.

         சரி, இறுதியாய் நான் என்னவளுக்கு செய்த அந்த பரியுபகாரம் பற்றி கூறி முடிக்க விரும்புகிறேன். அது! எங்கள் மகளை "பத்து மாதங்கள்" சுமந்த என்னவளின் பெயரை எம்மகள் "வாழ் நாள் முழுதும்" சுமக்கும் ஒரு சிறிய காரியத்தை செய்தேன். என் மகளின் பிறப்புச் சான்றிதழில் அவளின்  முழுப்பெயராய் கொடுத்தது "விழியமுதினி வேனில் இளங்கோவன்". இதை நிறைய கனவான்கள் செய்திருக்கிறார்கள்/ செய்கிறார்கள் எனினும், நான் என்னவளுக்கு என்னால் முடிந்த ஒரு சிறு பிரதிபலனாய் (மனப்பூர்வமாய்) எண்ணி செய்தது இது!. சரி! நான் ஏன் எங்கள் மகள் பிறந்த அந்த அற்புத நாளைப் பற்றி ஏன் எழுதவில்லை என வினவத் தோணும்! அது ஓர் தனி சகாப்தம்!! எங்கள் மகளைப் பற்றி ஒரு "தலையங்கத்தோடு" எழுதி முடித்து விட முடியாது. அதை மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில், தனி "தலையங்கமாய்" எழுதுகிறேன். மேலும், அந்த அற்புதமான நாளை சந்தோசம் மட்டும் காட்டி/ கொண்டு விளக்கிடுதல் முடியாது! எங்கள் மகள் பிறந்த நேரத்திற்கு சரியாக "ஒரு மணி, முப்பத்தெட்டு நிமிடங்கள்" முன்னாள், திடமான நெஞ்சுறுதி கொண்ட என்னவள் எழுப்பிய (அதுவும் முதன் முதலாய்) அந்த "அலறல்" இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதையும் கண்டிப்பாய் பகிர்ந்திட வேண்டுமாதலால், இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அந்த நிகழ்வுகளுடன்/ நினைவுகளுடன் உங்களை சந்திக்கிறேன். என்னுடைய முதல் தலையங்கத்தை "என் மகள்" பற்றிய செய்தியிலிருந்து தொடங்கியது, மிகப் பொருத்தமானதாக படுகிறது. 


விழியமுதினி வேனில் இளங்கோவன்!!!

பின்குறிப்பு: காரணப் பெயராய் வந்தது போல், எங்கள் உயிரான மகளின் "கண்கள்" ஒரு இனிமையான, அமிழ்தைப் போன்ற "விழி"கள் தான். அதை இந்த வலைதளத்தின் முத்திரையாய் (LOGO) கொடுக்கப்பட்ட படத்தில் காணலாம்/ உணரலாம்; ஆம்! அது எங்கள் "விழி"யின் "விழிகள் தான்". 

6 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. அருமை, தமிழ் ஆசிரியரின் மகன், பாவேந்தர் பாரதிதாசன் வாரிசு உங்கள் பாதி சொத்து என்பதால் இவ்வளவு அழகாக சம்பவங்களை உணர்சிகளை பதிவு செய்து படிப்பவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளீர்கள்.நானும் எனது முதல் பெண் குழந்தைக்கு பிறந்த பிறகு என் மனைவியுடன் சேர்ந்து எனது numerology அறிவு கொண்டு பெயரை தேர்வு செய்து என் மனைவியின் ஒப்புதல் பெற்று அபரஞ்சி என்று வைத்தோம்.ஆ,இ,உ,எ என்ற முதல் எழுத்தில் பெயர் வைக்க வேண்டும் என்ற ஜோதிட குறிப்பின் உதவியுடன் 3 பெயர்கள் தேர்ந்து எடுத்து அவற்றில் abaranji, abharanji என்ற 2 பெயர்களை தேர்வு செய்து H எழுத்து பெயரில் இருக்கட்டும் என்று என் மாமனாரும் சொன்னதால் A.ABHARANJI என்ற பெயர் முடிவு செய்யப்பட்டது.ஆனந்த் என்ற என் பெயரின் முதல் எழுத்து initial உடன்.அப்பொழுது என் மனைவி அவள் பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து A.R.ABHARANJI என்று எழுதி கொண்டு சொல்லிக்கொண்டு இருந்தாள் .தொட்டியம் பஞ்சாயத்தில் நான் எழுதிக்கொடுக்கும் போது என் மனைவி சொன்னது பெயரை முடிவு செய்தபின், numerology பார்க்காமல் மற்றவர்கள் ஒப்புதல் பெறாமல் அவள் கூறிக்கொண்டு இருந்ததால் பஞ்சாயத்தில் எழுதிக்கொடுக்கும் போது ஞாபகம் இல்லாததாலும் a.abharanji என்று பதிவு ஆனது. இனிய அனுபவம்.
    இங்கு குழந்தை எந்த பாலினம் என்பது பிரசவதிற்குமுன் தெரிவிக்க மாட்டார்கள்.

    என் இரண்டாவது பெண் குழந்தைக்கு ல,லி,லு.லோ என்ற வரிசையில் பெயர் வைக்க வேண்டும் என்று ஜோதிட குறிப்பு இருந்தது.அப்பொழுது எனக்கு அய்யா செந்தமிழ் வேள்வி சதுரர் மு.பெ.சத்திய வேல் முருகனார் அவர்கள் புத்தகங்கள் நிறைய படித்ததில் முதல் எழுத்து இந்த வரிசையில் தான் இருக்க வேண்டும் என்று ஆரியர்கள் சொன்ன கருத்து ஏற்புடையது அல்ல என்று கூறியிருந்தார்.எனக்கு குழப்பம் அதிக மானது.ஏனென்றால் ஏற்கனவே ஒரு numerology புத்தகத்தில் முதல் எழுத்து ல வரிசையில் இருந்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து எழுதியிருந்ததால் என்னால் உறுதியாக என்ன பெயர் என்று முடிவெடுக்க முடியாமல் அய்யா மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களிடமே phone மூலமாகவும், வள்ளி மலை கிரி வலத்தின் போது நேரிலும் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்று பின் பெயர் வைக்க வேண்டினேன்.அய்யா அவர்களும் உலக நாயகி,லோக ரஞ்சனி,லோக நாயகி என பின்னர் phoneல் பரிந்துரை செய்தார்.என் மனைவி முடியவே முடியாது என் தோழி உலக நாயகி என்று இருந்தாள் நல்ல அழகு,அறிவு ஆனால் திமிர் பிடித்தவள் அவளை எனக்கு பிடிக்காது.அதனால் வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.அதனால் ஸ்ரீ ரெடியப்பட்டி சுவாமிகள் அவர்களின் சென்னை தியாகராய நகரில் உள்ள நூலகம்,மற்றும் கோயில் கட்டிக்கொண்டிருந்த iyer குடும்பத்தவர்கள் நல்ல பழக்கம் என்பதாலும் நானும் ரெடியப்பட்டி சுவாமிகளை பின் பற்றியதாலும் அவர்களிடம் பெயர் வைக்க அருள் சக்தி அன்னை ஆஷ்ரமம்,பிள்ளையார் குப்பம் சென்று பூஜை செய்து வழிபட்டு சென்னை திரும்பி வரும் பொழுது வேண்டினேன்.அவர்கள் லட்சுமி என்று வைக்கலாம். மிக நல்ல பெயர் என்று பரிந்துரைத்தனர்.என் மனைவி மிக பழைய பெயர் நல்லா இல்லை என்று மறுத்தாள். நான் பெயர் பரிந்துரை செய்பவர்கள் மிக சக்தி வாய்ந்தவர்கள்.நல்ல ஆன்மிக அனுபவம் உள்ளவர்கள் என்று அவர்களின் பெருமைகளை சொன்னேன்.ஆனால் என் மனைவி ஏற்றுக்கொள்ள வில்லை.ஆகையால் ஒரு ஜோதிடரின் ஆலோசனை படி சிவரஞ்சனி என்று என் பெற்றோர்கள்,மனைவி,உறவினர்கள் நானும் உடன்பட்டு முடிவு எடுத்து பெயர் சூட்டு விழாவில் சிவரஞ்சனி என்று வைத்து தேன் என் மகளின் நாக்கில் வைத்து,காதில் சிவரஞ்சனி,சிவரஞ்சனி என்று ஒவ்வொருவராக சென்று பெயர் சொல்லி வைத்தனர்.பின் என் மனைவி லோசனா என்ற பெயர் மாடர்ன் ஆக உள்ளது என்று அந்த பெயரை பரிந்துரைத்து அதையே வைத்தாள்.என் முதல் பெண்ணும் அம்மாவிற்கே சப்போர்ட் செய்ததால் certificateல் a.loshana என்ற பெயர் பதிவு ஆனது.
    நீங்கள் பெயர் வைத்துள்ளது அருமை.பதிவு அருமை.நன்றி.

    பதிலளிநீக்கு
  3. என் உணர்வுகளை, சம்பவங்களை எழுதும் பொழுது கமா,புள்ளி வைத்தல், வாக்கியங்களை அழகாக அமைத்தல் போன்றவை இல்லை. படிக்க சிரமமாக இருக்கும். சம்பவங்களை தெளிவாக,அழகாக எழுத வேண்டும்.படிப்பவர்களுக்கு சிரமம் தராமல் எழுத வேண்டும். முயற்சி செய்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாக்கியங்களும், வார்த்தைகளும் எப்படி இருக்கின்றன என்பவை முக்கியமே இல்லை, ஆனந்த்! உங்களின் உணர்வு எனக்கு தெளிவாய் புரிகிறது!! அது தான் முக்கியம் என்று நான் கருதுகிறேன்.

      நீக்கு
  4. மனித உணர்வுகளுக்கு வரி வடிவமும் ,ஒளி வடிவமும் கொடுக்கும் சிந்தனைகள் கொண்டவர்கள் மற்றும் மனித உயிர்களை உலகிற்கு உயிர்தளிக்கும் தாய்மை கொண்ட பெண்ணவளும் இறைவனே!!! (படைப்பவன்)..........

    உங்கள் உளம் நிறைத்த தாய்மை உணர்வுகளை உள்ளபடியே, உற்றவர்கள் உணர கொடுத்த உங்கள் வரிகள், விழியமுதினியின் உயிர்கருவை ஊட்டமளித்து, உயிர்கொடுத்து நாமனைவரும் மகிழக்கொடுத்த "பாவேந்தன் பேத்தியின் " தாய்மைக்கு இணையாக நிரம்பக்காண்கிறேன்!!!.........

    நான் தினமும் வணங்கி மகிழும் என் தலைவன் "முண்டாசு கவிஞன்" பால் பேரன்பு கொண்ட "பாவேந்தனின்" உயிர்கருவை உணர கொடுத்த உமது தாய்மை வரிகளுக்கு எமது அன்பு வணக்கத்தை உரித்தாக்குகிறேன்!!!..............

    பேரன்புடன்,
    சுடர் பாலா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுடர் பாலா,

      நன்றிகள் பல! அருமையான விமர்சனம். உங்களைப் போன்ற விமரசகர்கள் இருக்கும் வரையில் என்னுடைய எழுத்துப்பணி தொடரும் என்ற நம்பிக்கை நிறைந்து இருக்கிறது!!

      நீக்கு