ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

தமிழ் அடுத்தாண்டு வாழ்த்து...



     இவ்வலைப்பதிவை பின்பற்றும் அன்பர்களுக்கும் மற்ற தமிழ் அன்பர்களுக்கும் என்னுடைய உளம் கனிந்த "தமிழ் அடுத்தாண்டு வாழ்த்துக்கள்". எல்லோரும், எல்லா வளமும் பெற்று இந்த ஆண்டு முழுதும் (மட்டுமல்லாது; எப்போதும்) இன்பமுடன் இருக்க, அதற்கான முயற்சிகளும் - செய்கைகளும் சரியாய் அமைய, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இந்த ஆண்டு துவங்கும் முதல் நாள் மட்டுமல்ல; எல்லா நாட்களிலும் இதே புத்துணர்ச்சியும், உணர்வும் - உறவுகள் துவங்கி அனைவர் இடத்திலும் தொடர்ந்திட என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். என்னுடைய நெருங்கிய வட்டத்திற்கு தெரியும்; நான் பல ஆண்டுகளாய் அடுத்து வரும் ஆண்டை "புத்தாண்டு" என்று அழைப்பதில்லை என்பது. புதியதாய், எந்த ஆண்டிலும் ஏதும் இல்லை என்பதே என் எண்ணம். நாம் எப்படி கடந்த ஆண்டுகளை "பழைய ஆண்டு" என்று அழைப்பதில்லையோ, அவ்வாரே வருகிற ஆண்டையும் "புத்தாண்டு" என்று அழைப்பதில் எந்த அர்த்தமும் இருப்பதாய் எனக்கு படவில்லை. வருகிற எந்த ஆண்டிலும், நாம் முன்பே பழகிய நாட்கள் (தேதிகள்) தான் வரப்போகின்றன; அனுபவம் கண்டிப்பாய் மாறுபடும்; அதற்காய் இதை "புத்தாண்டு" என்றழைக்கவேண்டியதில்லை. அப்படி பார்ப்பின், ஒவ்வொரு "நிமிடத்துளி" கூட புதியது தான். மேலும் வரப்போகிற நாளுக்கான வேலையை முன் கூட்டியே முடிவு செய்யும் நாம், அதை ஏன் புதியதாய் பார்க்கவேண்டும். இந்த எண்ணம் மாறினாலேயே, ஆண்டின் துவக்க நாளில் தோன்றும் ஒழுக்கமும், புத்துணர்ச்சியும் என்றென்றும் தொடரும் என்று தோன்றுகிறது.

        இந்த மகிழ்ச்சியான நேரத்தில், "ஆண்டு துவக்கத்தை" விளம்பர நோக்காய் பார்க்கும் சில அரசியல்வாதிகள் பற்றியும் குறிப்பிடுதல் அவசியம் என்று படுகிறது. தமிழில் துவங்கும் ஆண்டு மட்டுமல்ல; வேறு எந்த மொழி அல்லது மதம் சார்ந்த ஆண்டும் துவங்குவது, அம்மொழியில் உள்ள படி, முதல் மாதத்தின் முதல் நாள் தான். இது தான் காலம் காலமாய் பின்பற்றப்பட்டு வரும் ஒன்று. இதை ஏனோ, தன்னை "பகுத்தறிவு வாதி" என்று (தானே)அழைத்துக்கொள்ளும் ஓர் அரசியல்வாதி "பகுத்துணராது" தை மாதம் முதல் தேதியை ஆண்டின் துவக்கமாய் அறிவித்து மிகப்பெரிய குழப்பத்தை உருவாக்கினார். அதை சட்டமாய் அறிவித்து, அனைவரையும் அவ்வாறே பழகவும் கட்டளையிட்டார். அதற்கு அவர் கூறிய காரணம், எப்போதும் போல் - தமிழும், தமிழனும். அதாவது, தமிழர் திருநாள் தான் ஆண்டின் துவக்கமாய் வேண்டுமாம். எவர் கேட்பது? தமிழ் என்று சொல்லிக்கொண்டு இது மாதிரி செய்யப்படும்  தேவையில்லாத செய்கைகளை?? நமக்கு முன் எத்தனையோ சந்ததிகள் தொடர்ந்து செய்து வந்த ஒரு விசயத்தை மாற்றும் அதிகாரத்தை, யார் அவருக்கு கொடுத்தது??? இதை, அந்த கட்சியின் பிரதான எதிர்கட்சி மட்டும் எதிர்த்தது! பெரும்பாலோனார்களால் அதை எதிர்க்க முடியவில்லை; அல்லது எதிர்க்க அனுமதிக்கப்படவில்லை. ஏன் இந்த விளம்பர எண்ணமும், குழப்பமும்? இதை பெரும்பாலோனோர் பின்பற்றவில்லை என்பது உண்மை தான்; இருப்பினும், ஏன் இந்த தேவை இல்லாத மாற்றம்??

           இந்த ஆண்டு, ஆட்சிக்கு வந்த அந்த பிரதான எதிர்கட்சி அந்த சட்டத்தை மாற்றி மீண்டும் முதல் மாத முதல் நாளான, "சித்திரை முதல் நாளை" ஆண்டின் துவக்கம் என்று அறிவித்தார். முன்பு ஓர் அரசியல்வாதி தவறான மாற்றம் செய்தபோது குரல் கொடுக்காதவர்கள் கூட, இப்போது ஏன் மீண்டும் மாற்றி அமைக்கவேண்டும் என்று வாதிடுகின்றனர். பின் மாற்றாமல் என்ன செய்வது! ஏதும் செய்ய இயலாத என்னைப்போன்றோர் பலரின் எண்ணத்தை எவர் எப்படி நிறைவேற்றுவது? இவ்விரு கட்சிகளும், பல்வேறு விசயங்களில் இது மாதிரி ஆட்சி மாற்றம் வந்ததும், முந்தைய அரசு செய்ததை மாற்றுவதை தொடர்ந்து செய்து வருவது மறுக்கமுடியாத உண்மை! ஆனால், தமிழ் ஆண்டு துவக்கத்தை மற்ற விசயங்களைப் போல், அவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது; இது நம்முடைய உணர்வு, பழக்கம், பாரம்பரியம்!!! இந்த நல்ல சட்ட மாற்றத்தை அரசியல் சாயம் கொண்டு பார்ப்பது நிச்சயம் தவறு! என்னைப்போல் அரசியல் சாராத ஒருவருக்கு இதன் உண்மை நிச்சயம் தெரியும். மேலும், இதை மீண்டும் மாற்றியமைத்த அரசியல் வாதி "சித்திரை முதல் நாள்" தான் ஆண்டின் முதல் துவக்கம் என்பதை வரலாறு மற்றும் தமிழ்க் காவியங்கள் கொண்டு சான்றுகள் கொடுத்து வேறு விளக்கியுள்ளார். முதலில், முதல் சட்ட மாற்றமே தேவை இல்லாத ஒன்று; அதற்கு இம்மாதிரி சான்றுகள் காட்டி வேறு, ஒருவர் விளக்க வேண்டி இருக்கிறது. எனவே, எல்லா மொழிகளிலும் மதங்களிலும் இருப்பது போல் தமிழ் ஆண்டும், முதல் மாதம் முதல் நாள் துவங்குவது தான் சிறந்தது; அது தான் நியாயமும் கூட. எனவே,

சித்திரை முதல் நாளே, ஆண்டின் துவக்க நாளே!!!                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக