ஞாயிறு, மே 27, 2012

இதை எவர் (தன்மையாய் கூட) கண்டிப்பது???



     சில மாதங்களுக்கு முன் "வட-மொழி" திரைப்படம் ஒன்று, தென்னிந்தியாவில் (தமிழகத்தில்) வாழ்ந்து-மறைந்த ஓர் "(கவர்ச்சி)நடிகை"-யின் வாழ்க்கைப்பதிவு என்ற அடிப்படையில் வெளிவந்திருந்தது. அந்த திரைப்படத்தின் நோக்கமும், அதன் திரைக்கதையும் பெருந்தவறு என்பதையும் தாண்டி - அந்த படம் அமோக வெற்றிப்பெற்றதாய் அறிவிக்கப்பட்டது. இதை தவறான கண்ணோட்டத்தில் வியாபரமாய் ஆக்கியது - கண்டனத்துக்குரியது! என்ற உண்மை இருந்தும் கூட, ஏன் எந்த ஓர் அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று விளங்கவே இல்லை. குறைந்தபட்சம், எந்த ஓர் நடிகர் சங்கமோ அல்லது இயக்குனர் சங்கமோ கூட ஏன் இதை எதிர்க்கவில்லை? ஏன் எந்த ஓர் நடிகையும், இதைப் பற்றி ஓர் விமர்சனம் கூட செய்யவில்லை?? இதை எதிர்க்கவில்லை எனில், அதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் உண்மை; அது மாதிரி தான் அந்த நடிகையும் இருந்தார் - இன்னும் பல நடிகைகளும் இருக்கின்றனர் என்று "ஒப்புக்கொள்வதாய்" ஆகிவிடாதா??? இதை ஏன் எவரும் (தன்மையாய் கூட) தட்டிக் கேட்கவில்லை என்று யோசிக்க ஆரம்பித்தேன். அதைப் பற்றி எவரும் விமர்சிப்பதை கூட எனக்கு தெரியவில்லை; எனவே, என் மனதை உறுத்திய - இந்த நிகழ்வை பதியவேண்டும் என்று உணர்ந்து தான் இந்த தலையைங்கத்தை எழுதியுள்ளேன். இதைப் படிப்பவர்கள் இத்தலையங்கத்தின் உண்மைப்பொருள் உணர்வார்கள் என்ற நம்பிக்கை மிகுந்துள்ளது. 

       இந்த திரைப்படம் ஆபாசம் இல்லை என்று கிட்டத்திட்ட அனைவரும் ஒப்புக்கொண்டதை என்னால் சீரணிக்க முடியவில்லை. ஆபாசம் என்பது "நிர்வாணத்தில் இல்லை" என்பதை முதலில் அனைவரும் உணரவேண்டும்; அது ஓர் கலைவடிவம் - அதனால் தான் நம் கோவில்களில் பெரும்பான்மையான சிலைகளும் அவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில், ஒருவரின் "பாலியல்" உணர்வை "நிர்வாணம்" தூண்டுவதில்லை; மாறாய் "அரைகுறை உடையும்", "காமம்-மிகு பார்வையும்" தான் அந்த உணர்வை அதிக அளவில் தூண்டும். அதைத் தான் இந்த திரைப்படம் செய்துள்ளது; பார்ப்பவரின் கற்பனையையும் தூண்டியுள்ளது; இந்த உண்மையை பலரும் உணர்ந்ததாய்  எனக்கு தெரியவில்லை. எனக்கு மிகவும் பிடித்த ஒரு எழுத்தாளர் ஓர் படைப்பில் கதாநாயகன், கதாநாயகியின் உடைகளை களைந்து அவளை நிர்வாணமாய் ஆக்கி மல்லாக்க கிடத்தினான் என்று நேரிடையாய் (இன்னும் சில சொற்கள் கொண்டு) எழுதி இருப்பார்; இதை, ஆபாசம் என்று வர்ணித்தவர்கள் பலருண்டு; ஆனால், அதே காலகட்டத்தில், ஓர் எழுத்தாளர் "அவள் வெள்ளை நிற மேல்-சட்டை அணிந்திருந்தாள்; அதன் மேல், BOOM என்ற வார்த்தை எழுதியிருந்தது; இரண்டு "O"க்களும் இருக்கவேண்டிய இடத்தில் இருந்தன;...." என்று தொடர்ந்து வர்ணித்துக்கொண்டே செல்வார். அதை எவரும் எதிர்க்கவில்லை; குறைந்த பட்சம், அது பாலியல் உணர்வை தூண்டுகிறது (குறிப்பாய், இளைஞர்களின் உணர்வுகள்) என்று பலரும் உணரவே இல்லை. அதே போல் தான் இந்த திரைப்படமும் உள்ளது; இது அந்த இயக்குனரின் திறமையாய் கூட கருதலாம்/ வாதிடலாம்; ஆனால், இங்கே கொச்சைப்படுத்தப்பட்டது "மறைந்த ஓர் நடிகை" என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
     
      அது எப்படி, அந்த நடிகை "பல நபர்களுடன்" உடலுறவு, அதுவும் பணத்திற்காய், கொண்டதாய் அத்தனை நிச்சயமாய் "உடனிருந்து பார்த்தவர்" போன்று அந்த இயக்குனரால் கூற முடிந்தது? அவரிடம் என்ன சாட்சியம் இருக்கக் கூடும்? அப்படி சாட்சிகள் இருப்பின், படத்தில் வரும் அந்த "உயர்ந்த நடிகர்" யார், அவரின் தம்பியாய் வருபவர் யார்?? மற்ற காட்சிகளில் வரும் நபர்கள் யார் என்பதையும் குறிப்பிட வேண்டியது தானே??? ஒரு காட்சியில் ஒருவர் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் காத்திருப்பாராம்; நடிகை உள்ளே செல்வாராம்; உடனே கதவு சாத்தப்பட்டுவிடுமாம் - என்ன சொல்ல வருகிறார் இவர்? - இது என்ன என்பது எவருக்கும் தெரியாதா?? இது ஆபாசம் இல்லையா???அவருக்கு இது மாதிரி "ஆபாசப்படம்" எடுக்கவேண்டுமெனில் மறைந்த அந்த நடிகையின் பெயர் சொல்லாமால் எடுக்க வேண்டியது தானே? வியாபாரத்திற்காய் ஏன் மறைந்த ஓர் பெண்மணியை கலங்கப்படுத்தவேண்டும்?? இது தான் வியாபார உத்தி; இதை விட "மிக ஆபாசமாய்" சில கதாநாயகிகளே  நடிப்பது அந்த இயக்குனருக்கு வெகு நிச்சயமாய் தெரியும்;  எனவே, இரசிகர்களை ஈர்க்க ஒரு காரணம் தேவைப்பட்டிருக்கும்; அதற்கு, "நடிகையின் கதை" என்ற போர்வை தேவைப்பட்டிருக்கிறது. எப்போதும் நமக்கு "கிசு கிசுவின்" மேல், குறிப்பாய் திரைப்பட நாயகிகளை குறித்து ஓர் ஆர்வம் இருக்கும். எந்த உண்மையும் தெரியாது "அந்த நடிகைக்கு, ஓர் இரவிற்கு இத்தனை இலட்சமாம்" என்று "கிசு கிசுவை" படித்துவிட்டு நாம் பேசுவதுண்டு; உண்மையில், நானும் அந்த மாதிரி பேசியவன் தான் - என்பதை உணர்ந்து இப்போது வெட்கப்படுகிறேன். இதை ஒப்புக்கொள்வதில், எனக்கு எந்த மனக்கசப்பும் இல்லை; ஆனால், இதை உணரும் மனப்பக்குவம் வந்ததற்காய் மகிழ்ச்சி கொள்கிறேன்.
       
        "கற்பு" பற்றி தன் கருத்தை கூறியதற்காய் ஒரு நடிகையை - அந்த கேள்வியை கேட்ட நிருபரைக் குறித்து விமர்சனமேதும் செய்யாது - "கீழ்த்தரமாய்" விமர்சித்த அமைப்புகளை கொண்ட சமுதாயம் தானே இது? வார்த்தையாய் பேசியதற்கே ஒரு நடிகையை அத்தனை எதிர்த்தவர்கள் இன்று "தமிழ் திரைப்பட நடிகை" பற்றி இத்தனை அசிங்கமான காட்சியமைப்புகள் கொண்டு கான்பித்திருந்தும் ஏன் விமர்சிக்க மறந்துவிட்டது? ஏனெனில், இங்கே அனைத்தும் வியாபார நோக்கில் பார்க்கப்படுகிறது; அந்த நடிகையை விமர்சித்ததால், அவர்களுக்கு விளம்பரம் கிடைத்தது. மாறாய், இறந்த ஒரு நடிகைக்கு "பரிந்து பேசுவதால்" அவர்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது?   அந்த நடிகையின் குடும்ப உறுப்பினர்கள் கூட (தம்பி ஒருவர் இருப்பதாய் அறிந்தேன்) எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை?? ஒருவேளை, இதில் சம்பந்தப்பட்டிருப்பவர் "கவர்ச்சி நடிகை" என்பதாலா??? இல்லை என்றே தோன்றுகிறது, ஏனெனில் - இந்த படத்தை தொடர்ந்து "இதே கதையம்சம் கொண்டு" கதாநாயகி ஒருவர் இந்த மாதிரி பல நபர்களுடன் உறவாடியதாய் ஓர் திரைப்படம் வந்தது. "கவர்ச்சி நடிகை" பற்றிய படம் தமிழில் மொழி பெயர்த்து வந்த போதும், அது பற்றி எவருக்கும் வருத்தம் இல்லை; ஒரு கதாநாயகி அவ்வாறு செய்ததாய் ஒரு தமிழ்த்திரைப்படம் வந்த போதும் எவருக்கும் வருத்தம் இல்லை. இப்போது, நடிகையை பொது இடங்களில் ஆபாச எண்ணத்தோடு தொடும் ஆண்கள் (நடிகர்கள் உட்பட) அதிகமாகி விட்டதற்கு இந்த "எதிர்ப்பின்மை" கூட காரணமாய் இருக்கலாம்.  இப்போதாவது, சம்பத்தப்பட்டவர்களும், அதிகாரம் கொண்டவர்களும் - இம்மாதிரி விசயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்; எனக்கு இதில் சம்மந்தமில்லை எனினும் - எனக்கு எந்த அதிகாரம் இல்லை எனினும், என் "மனசாட்சியை" பதிவு செய்துவிட்டேன்.

           இந்த மாதிரி "ஆபாசப்படங்கள்" வருவதை தவிர்க்கமுடியாது என்பது எனக்கு நன்றாய் தெரியும்; அது என் நோக்கமும் அல்ல. ஆனால், உண்மை தெரியாது - ஓர் நடிகைப் பற்றி தவறான பார்வையை திரைப்படம் போன்ற ஊடகங்கள் செய்யக்கூடாது என்பதே என் தீர்மானம். உண்மை தெரிந்தே இறுப்பினும் - இது மாதிரி ஓர் திரைப்படம் எடுப்பது "தனி நபர் சாடல்" தான்; இதை எக்காரணம் கொண்டும் ஊக்குவிக்கக்கூடாது.  எனவே எல்லா நடிகைகளும்...

மற்றவர்களைப்போல் ஓர் "பெண்ணென்பதை" உணர்வோம்!!!   

    பின்குறிப்பு: சமீபத்தில், நம் அண்டை மாநிலத்தில் இந்த திரைப்படத்தை "மறு பதிப்பு" செய்யப்போவதாய் செய்தி வந்தது. இதுவே தவறு எனும்போது, அந்த இயக்குனர் கீழ்க்காணுமாறு சொல்லி இருக்கிறார்: "அசல்-படத்தில் வந்தததை விட அந்த நடிகையைப் பற்றி அதிக உண்மை செய்தி இருக்குமாம்". மன்னித்துவிடுங்கள்; இதை படித்தவுடன், இந்த இயக்குனர் அந்த நடிகையை இன்னும் நெருக்கமாய் இருந்து பார்த்து இருப்பாரோ என்று கோபமாய் கேள்வி எழுந்தது!!!                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக