ஞாயிறு, மே 06, 2012

கல்வி என்பது என்ன???...




     மீண்டும் நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்ட இன்னுமொரு தலையங்கம்! கல்வி என்பது வெறும் மனனம் செய்து ஒப்பித்தல் அல்ல - அதிக மதிப்பெண் (மட்டுமே) வாங்குவது அல்ல; மாறாய், படிப்பதை தெளிவாய் புரிந்து நடைமுறை அறிவை (Practical Knowledge) வளர்க்க உதவியாய் இருக்கவேண்டும். மதிப்பெண் வாங்குவதை மட்டுமே உயர்வாய் பள்ளிகளும், பெற்றோர்களும், ஊடகங்களும் எண்ணுவதையும், பறைசாற்றுவதையும் மாற்றிக்கொள்ளவேண்டும் என்று என்னுடைய முந்தைய தலையங்கத்தில் எழுதி இருந்தேன். அதைப்பற்றிய ஓர் திரைப்படம் கூட சமீபத்தில் வெளிவந்தது; நல்லவேலையாய் என்னுடைய தலையங்கத்தை நான் முன்பே வெளியிட்டிருந்தேன்;  இல்லை எனில், என்னுடைய கருத்துகளும், எண்ணங்களும் அதிகம் கவனிக்கப்படாது போயிருக்கக்கூடும். "திரைப்படம்" எனும் ஊடகத்தின் வலிமை அது. அதன் பின்னர், இந்த கருத்து சார்ந்து உரையாடும் போது என்னவளிடம் கூட அத்திரைப்படம் பற்றி குறிப்பிட்டு - கல்வி குறித்து ஒரு சமுதாய மாற்றமும் விழிப்பும் வரத் துவங்கி இருக்கிறது என்று வாதிட்டேன். எனக்கு அவ்வாறு தான் தோன்றுகிறது; எல்லா புரட்சிகளும், மாற்றங்களும் எல்லை தாண்டும் போது தான் (வேறு வழி இல்லாமல் கூட) தோன்றுகிறது. கல்வி மீதான எண்ணமும் எல்லையை அடைந்து விட்டது என்பதை தான் சென்ற வாரம் நான் படித்த செய்தி விளக்கியது; உண்மையில் கல்வி மீதான இத்தகைய தவறான அணுகுமுறை என்னை (மட்டுமல்ல; எல்லோரையும்) கலவரப்படுத்துகிறது.

          நாளிதழில் வந்த செய்தி இதுதான்; பொதுத் தேர்வில் மாணவர்கள் அனைவரும் "நூறு விழுக்காடு" தேர்ச்சி அடையவேண்டும் என்பதற்காய் ஓர் பள்ளியின் நிர்வாகமே ஆசிரியர்கள் உதவியுடன் (மாறாய் ஆசிரியர்களை வற்புறுத்தி என்று இருக்கவேண்டும்) மாணவர்களுக்கு "விடைத்தாள்" நகல் கொடுக்கும் போது, கல்வித்துறையை சார்ந்த கண்காணிப்பாளர்கள் அதை கையும் களவுமாய் பிடித்து தடுத்திருக்கின்றனர். மேலும், அந்த பள்ளியின் உரிமையை இரத்து செய்து பள்ளியை மூடவும் கல்வித்துறைக்கு பரிந்துரை செய்துள்ளனர். நான், முன்பே என்னுடைய தலையங்கத்தில் மனனம் செய்து, வெறுமனே அதிக மதிப்பெண்கள் எடுப்பதால் எந்த பயனும் இல்லை என்பதை தெளிவாய் எழுதி இருந்தேன். ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் மதிப்பெண் எடுக்கும் ஓர் மாணவியோ/ மாணவனோ அடுத்ததாய் "என்ன சாதித்தனர்" என்று வினவி இருந்தேன்!!! மதிப்பெண் முக்கியம் "இல்லை" என்று கூறவில்லை; அது தேர்ச்சி பெறுவதற்கான ஓர் அளவுகோலாய், வரைமுறையாய் இருக்கட்டும்; பள்ளி தாண்டிய பின் கல்லூரிகளில் (குறிப்பாய், தொழில்முறை படிப்பு சார்ந்தவைகளில்) மாணவர் பட்டியலை கொடுப்பதற்கு இது உதவுகிறது என்ற வாதத்தில் எல்லாம் எந்த உண்மையும் இல்லை. எனவே, இந்த மதிப்பெண் என்ற முறை மாறவேண்டும்; பின் மதிப்பெண் மீதானா பெற்றோர், சமுதாயம் மற்றும் பள்ளியின் பார்வை கண்டிப்பாய் மாற வேண்டும். இது சார்ந்த என் பார்வையை தான் என்னுடைய மேற்குறிப்பிட்ட தலையங்கத்தில் எழுதி இருந்தேன்.

           இந்த மதிப்பெண் குறித்தான, அது சார்ந்த தேர்ச்சி என்பது குறித்துமான ஓர் கவலையில் "பள்ளி" நிர்வாகம் எந்த எல்லைக்கு சென்றிருக்கிறது என்று உணர்ந்து பாருங்கள். இது குறித்தான குற்றச்சாட்டுகள் நெடுங்காலமாகவே வந்து கொண்டிருக்கிறது; ஆனால், எந்த ஒரு பள்ளியும் இவ்வாறு கையும் களவுமாய் பிடிபட்டதில்லை என்பதே கசப்பான உண்மை; இது மாதிரி இன்னமும் பிடிபடாத பள்ளிகள் மேலும் நிறைய உள்ளன என்பது இன்னமும் கசப்பான உண்மை. சரி, நாம் நம் கலந்தாய்விற்கு வருவோம். ஓர் மாணவனின் திறமையை சோதித்து அடுத்த நிலைக்கு தேர்ச்சி பெற்றவனா என்பதை அறிய தான் "தேர்வு" என்பதே உள்ளது. அந்த திறமையை வளர்க்கத் தான் பள்ளிகள் உள்ளன; ஒவ்வொரு மாணவனும் தேர்ச்சி பெற உதவத்தான் (கல்வி கற்றுவித்து!!! தேர்வில், விடைத்தாள் கொடுத்து அல்ல) பள்ளிகள் உள்ளன. அத்தகைய பள்ளிகள், இந்த மாதிரியான இழிசெயல்கள் செய்ய என்ன காரணம்? அவர்கள், பெற்றோர்களை ஒரு குறையாய் கூறுவர்; அதில் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. பெரும்பான்மையான கல்விக்கூடங்கள் "வியாபாரக்கூடமாய்" மாறிவிட்ட இந்த தருணத்தில், சிறந்த பள்ளியில் சேர்ந்தால் தான் என் "மக்கள்" வெற்றி பெறுவர் - நல்ல மதிப்பெண் பெறுவர் என்ற பெற்றோர் எண்ணத்தில் ஒரு-பகுதி காரணம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. மதிப்பெண் குறித்த அவர்களின் சிந்தனை மற்றுமல்ல; எல்லோரின் சிந்தனையும் மாறினால் தான் "கல்வி சார்ந்த' இது மாதிரியான பல பிரச்சனைகளை அடியோடு களைய முடியும். 

       இந்த மாதிரி தவறான முறையில், ஒரு மாணவனை தேர்ச்சி பெற வைப்பதும் அல்லது எதையும் புரிந்து கொள்ளாது "மனனம்" செய்து படித்து அதிக மதிப்பெண் எடுப்பதும், ஒரு மாணவனை சிறந்தவனாய் ஆக்கிட எந்த வகையிலும் உதவாது. "வல்லரசு" என்ற கனவை அடைய, ஓர் நாடு அதிக அளவில் "அணு ஆயுதங்களையும்", "பண ஆலைகளையும்" கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை; அது நிரந்தரமும் இல்லை. மாறாய், ஒவ்வொரு மாணவனுக்கும் சரியான கல்வி கொடுப்பதில் உள்ளது; சரியான கல்வி என்பது "புரிதலை" வரவைப்பது; படிப்பதை புரிந்து கொள்ளுதல் மட்டுமல்ல - வாழ்க்கையை புரிந்து கொள்வதும் அவசியம். அதாவது, "மனிதத்தை" வளர்ப்பது மிகவும் அவசியம்; இது கண்டிப்பாய் சரியான கல்வி முறையால் தான் கொண்டு வர முடியும்! இது தான் நம் மொழியில் உள்ள "அம்மா இங்கே வா வா" போன்ற பாடல்களில் உள்ளது. ஆனால், நாம் "Jack and Jill went up to the hill" என்பதை அதிகம் படிப்பதை எண்ணி தான் பெருமைப்பட்டுக்கொள்கிறோம். "Jack and Jill" எதற்கு "தண்ணீர் எடுக்க" மலைக்கு சென்றார்கள் என்பதை அவர்கள் யோசித்து,  கேள்வி கேட்கும் போதே  "அப்படி எல்லாம் கேட்கக்கூடாது" என்று அதட்டி அடக்கி விடுகிறோம்; ஏனெனில், நமக்கு அதற்கு விடை தெரியாது! நாமும் அதை அப்படியே படித்து "சிந்தனையை இழந்து" வளர்ந்தவர்கள் தானே!! நாம் முன்பே அது பற்றி சிந்தித்திருந்தால் தானே, அந்த சிந்தனை எழும் ஓர் "இளங்குருத்தை" நாம் அறிந்து கொள்ளள முடியும்?. சிறார்களின் கற்பனை சக்தி அடியோடு அழிக்கப்படுதலின் ஆரம்பம் அங்கே தான் துவங்குகிறது!

     நம்முடைய புரிதலில் உள்ள தவறினாலும் "நூறு விழுக்காடு" எனும் பள்ளியை நாம் அனுகவதாலும், இந்த மாதிரி பள்ளிகள் தவறு செய்ய நாமும் ஓரளவிற்கு துணை செல்கிறோம் என்பதும் உண்மை. ஆனால், பள்ளிகளின் பங்கு இதில் பெரும்பகுதி உள்ளது; பெரும்பணம் செலவழித்து பல பள்ளிகள் இந்த சேவையை... இல்லையில்லை! அவர்கள் மொழியில் இலாபமுள்ள வியாபரமாய் செய்கிறீர்கள்!! ஆனால், அதற்கு பிரதி பலனாய் கல்வி கொடுக்கவேண்டும் என்பது உங்கள் கடமை அல்லவா?? அதை நியாயமாய் செய்து தானே, நீங்கள் இந்த "நூறு விழுக்காட்டை" பெற வேண்டும்??? ஏற்கனவே, "வெறும் மதிப்பெண்" என்ற அடிப்படையில் புரியாது படிப்பதால் "மாணவச்செல்வங்கள்" இழப்பதையும், அதனால் ஓர் நாட்டுக்கு ஏற்படும் இழைப்பையும் மேலே கோடிட்டு காட்டியுள்ளேன். இதிலே, நீங்கள் செய்யும் இது போன்ற தவறுகளால் "விளைவு இன்னமும் விபரீதம்" ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு மாணவனை உங்களால், உண்மையான வழியில், தேர்ச்சி பெறவைக்க முடியவில்லை என்றால், நீங்கள் தகுதியானவர் இல்லை என்பதை உணரவேண்டும்!  ஏனோ, என் மகள் அவளின் செல்ல-மொழியில் இரண்டு நாட்கள் முன் - மீண்டும் ஓர் முறை - சொன்ன "கற்க கசடற கற்பவை..." என்ற வள்ளுவப்பெருந்தகையின் குறள் நினைவுக்கு வருகிறது. கல்வி என்பது உங்களுக்கு (பள்ளிகளுக்கு) வேண்டுமானால் வியாபராமாய் இருக்கலாம். ஒரு மாணவனுக்கு கல்விதான் சகலமும். எனவே, கல்வி என்பது...

மதிப்பெண்ணும், தேர்ச்சியும் மட்டுமல்ல!!! 

பின்குறிப்பு: இத்தலையங்கம் முடிக்கும் முன், கல்வித்துறை அதிகரி ஒருவர் சொன்னதாய் நாளிதழில் வந்த செய்தியை குறிப்பிட விரும்புகிறேன். வழக்கமாய், அதிகாரிகள் பள்ளியின் அங்கீகாரத்தை இரத்து செய்வதாய் சொல்வார்களாம்; ஆனால், செய்ய மாட்டார்களாம். ஆனால், இந்த முறை கண்டிப்பாய் செய்து விடுவார்களாம். இது, என்ன விளக்கம் அல்லது நியாயம் ஐய்யா? இது போன்ற தவறு செய்யும் பள்ளிகளை முதலிலேயே தெரிந்தும் தண்டிக்காமல் விட்டுள்ளீர்களா?? இது தவறு இல்லையா??? குழந்தை செய்யும் தவறை, முதலில் பெற்றோர்கள் களைய வேண்டும்; அவர்களால் முழுதும் களைதல் இயலாது என்பதால் அந்த "பணியை" பள்ளிகள் ஏற்கின்றன. அந்த பள்ளிகள் தவறு செய்யாது காத்தல் தான் உங்கள் துரையின் "சிறப்பு" மற்றும் அதன் "தர்மம்".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக